இளம் பெண்ணொருத்தியின் ஒப்புதல் வாக்குமூலம் – மார்சல் ப்ரூஸ்ட்

by எஸ்.கயல்
0 comment

“உணர்வுகள் இங்குமங்குமாக நம்மை அலைக்கழிக்கின்றன. ஆனால் அந்தத் தருணம் முடிந்ததும் நம்மிடம் என்ன மிஞ்சியிருக்கிறது? கழிவிரக்கமும் ஆன்மீகத்தில் வீணாய்க் கழிந்த நேரமும்தான். களிப்புடன் கிளம்பிச் செல்லும் நாம் பெரும்பாலும் சோகத்துடனேயே திரும்புகிறோம். அந்தியின் மகிழ்ச்சி விடியலின் மீது ஒரு இருளைப் பூசியது போலாகிவிடுகிறது. ஆக, உணர்ச்சிகளால் எழும் களிப்பு முதலில் நம்மைத் தற்பெருமை கொள்ள வைத்தாலும் இறுதியில் அது நம்மைக் காயப்படுத்திக் கொன்றுபோட்டுவிடும்.”

-தாமஸ் ஏ கெம்பிஸ்: இமிடேஷன் ஆஃப் தி க்ரைஸ்ட், நூல் 1, அத்தியாயம் 18.

“சுயநினைவற்ற நிலையில் பொய்யான சந்தோஷங்களை நாம் தேடுகிறோம், வெண்ணிறப் பூங்கொத்துகளின் இனிமையும் துயரமுமான நறுமணம் நம் போதை வஸ்துகளுக்கு இடையே மிகுந்த தூய்மையுடன் திரும்பவும் மிதக்கிறது.”

– Henri de Régnier: Sites, Poem 8 (1887)

இறுதியில் எனக்கான மீட்சி என்னை நோக்கி வந்துகொண்டிருக்கிறது. நான் உண்மையில் விகாரமாக இருக்கிறேன். என் குறிக்கோள் மோசமாக இருக்கிறது. என்னை நான் இழந்துவிட்டேன். முதல் தாக்குதலில் இறந்துபோவதே நல்லது. ஆனால் இறுதியில் துப்பாக்கிக் குண்டை வெளியே எடுக்க முடியவில்லை. அதற்குள் என் இதய சம்பந்தமான கோளாறுகள் தொடங்கிவிட்டன. இதற்கு மேல் அதிக நேரம் எடுக்காது. ஆனால் முழுதாக ஒரு வாரகாலம்! அந்த முழு ஒரு வாரகாலத்திலும் இதற்கு முன் நடந்த பயங்கரமான தொடர் சம்பவங்களை நினைவுக்குக் கொண்டுவந்து துயரப்படுவதைத் தவிர நான் வேறெதுவும் செய்ய முடியாது. இந்தளவு களைப்பு இல்லாமலிருந்து, எனக்குச் சிறிதளவாவது மன உறுதி இருந்திருந்தால் இங்கிருந்து உடனே கிளம்பி லெ ஓப்லிஸ் பூங்காவுக்குச் சென்று, அங்கு உயிரை விடுவேன். எனக்குப் பதினைந்து வயதாகும் வரை நான் என் கோடைக் காலத்தை அங்குதான் கழித்தேன். வேறெந்த இடமும் என் அம்மாவின் இருப்பை இவ்வளவு ஆழமாக ஊடுருவி நினைவுப்படுத்தியதில்லை. அந்த இடத்தில் அவள் இருந்ததைவிட, இப்போது அவள் இல்லாதபோது, இன்னும் ஆழமாக அவளது இருப்பு அந்த இடமெங்கும் பரவியிருந்தது. நேசிக்கிற ஒருவருக்கு தாம் நேசிப்பவரின் இன்மைதானே அவர்களுடைய இருப்பின் உறுதியான, மிகப் பயனுள்ள, அதி நித்தியமான, அழிக்க முடியாத மிக நம்பிக்கைக்குரிய விஷயமாக உள்ளது?

என்னுடைய அம்மா எப்போதும் லெ ஓப்லிசுக்கு ஏப்ரல் மாத இறுதியில் என்னை அழைத்துச் செல்வார். அதன் பிறகு இரண்டு நாட்கள் கழித்து அங்கிருந்து கிளம்பிவிடுவார். மே மாதத்தின் இடையே இரண்டு நாட்கள் என்னை வந்து பார்ப்பார். ஜூன் மாதத்தின் இறுதி வாரத்தில் என்னை வீட்டுக்கு அழைத்துச் செல்வதற்காக மறுபடியும் வருவார். இந்தக் குறுகிய காலச் சந்திப்புகளே எனக்கு இந்த உலகின் மிக இனிமையான, அதே சமயம், வேதனையான விஷயம். வழக்கமாக எதிலும் எச்சரிக்கையாக இருப்பவள், என்னைப் பழக்குவதற்காகவும் நோய் உணர்ந்தறியும் என் திறனைத் தணிப்பதற்காகவும் இந்த இரு நாட்களில் என் மீது அன்பைப் பொழிவாள். இரவில் என் படுக்கையருகே வந்து நல்லிரவு என்று சொல்லும் பழக்கத்தை மற்ற நாட்களில் அவள் ஒழித்துக் கட்டியிருந்தாள். ஆனால் லெ ஓப்லிசில் தங்கியிருக்கும் அந்த இரண்டு நாட்களிலும் மாலை நேரத்தில் என் படுக்கையருகே வந்து அவள் நல்லிரவு என்று சொல்வது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் வேதனையையும் ஒருசேரத் தந்தது. ஏனெனில் அவள் நல்லிரவு என்று சொன்ன பிறகு உறங்குவதற்குப் பதில் அவள் அதை மீண்டும் கூற வேண்டும் என்கிற உணர்ச்சிப்பூர்வமான தேவையே எனக்கிருக்கும். ஆனாலும் நானே அச்சப்பட்டு நிறுத்தும்வரை அவளை மீண்டும் மீண்டும் அழைத்தபடி இருப்பேன். என் தலையணையில் நெருப்பு பிடித்துக்கொண்டது, என் பாதங்கள் விறைத்துப் போய்விட்டன என்பதெல்லாம் இதை முறியடிக்க நான் கண்டுபிடித்த புதிய உத்திகள். ஏனெனில் அவளால்தான் என் பாதங்களைத் தேய்த்துக் கதகதப்பாக்க முடியும்.

இனிமையான இத்தகைய தருணங்கள் மேலும் இனிமையாகக் காரணம் அந்த நேரத்தில்தான் என் அம்மா தன்னுடைய சுயத்துடன் இருந்தாள் என்பதும், வழக்கமாக வெளிப்படும் அவளுடைய அன்பற்ற சுபாவத்திற்காக அவள் கடுமையாக முயன்றிருப்பாள் என்பதையும் என்னால் உணர முடிந்தது. என்னை விட்டு அவள் பிரிந்து சென்ற துயர் மிகுந்த நாளன்று, அவள் ரயிலைப் பிடிக்கச் சென்ற வழி முழுதும் என்னைப் பாரீசுக்கு அழைத்துச் சென்றுவிடச் சொல்லிக் கெஞ்சியபடி அவளுடைய உடையுடன் ஒட்டிக்கொண்டு உடன் சென்றேன். அவள் ஒப்புக்கு நடித்தாலும் அவளுடைய உண்மை நிலையை என்னால் மிகச் சுலபமாகக் கண்டறிய முடிந்தது. தன்னுடைய மொத்த மகிழ்ச்சியையும் பாதிக்கும் துயரத்திலிருந்து வெளியேறியபடி, மிகுந்த எரிச்சலூட்டும் என்னுடைய “கேலிக்குரிய, முட்டாள்தனமான” துக்கத்தை எப்படிக் கட்டுப்படுத்துவது என்று அவள் எனக்குக் கற்பிக்க முயன்றாள். ஆனால் அவளாலேயே அது இயலவில்லை. நான் அவளை நேசித்தது போல, அதைவிட இன்னும் அதிகமாக அவள் என்னை நேசித்ததை நான் கண்டுபிடித்தபோது அவள் என்னைப் பிரிந்து சென்றுவிட்டாள். அப்போது எனக்கேற்பட்ட மனக் குழப்பத்தை இப்போதும் என்னால் உணர முடிந்தது. (ஆனால் இன்றுள்ளதோ வலி தோய்ந்த நினைவுகளுடன் கலந்துவிடாத முழுமையான மனக்குழப்பம் மட்டுமே) என்னுடைய அந்தக் கண்டுபிடிப்பு மற்ற எல்லாக் கண்டுபிடிப்புகளையும் போல முன்கூட்டி அறியக்கூடிய பல அறிகுறிகளைக் காட்டினாலும், நிறைய உண்மைகள் அதற்கு நேரெதிராக இருப்பதைப் போல் தோன்றின.

என்னுடைய உடல்நலக் குறைவின் காரணமாக லெ ஓப்லிசுக்கு அவள் வரவழைக்கப்பட்ட நாட்களே வருடத்தின் மிக இனிய நினைவுகளாக என்னுள் எஞ்சியிருக்கின்றன. வழக்கத்தைவிட கூடுதலான முறை அவள் என்னை வந்து சந்திப்பது என்பது என்னால் நம்ப முடியாத ஒன்று. அது மட்டுமில்லாமல் எந்தப் பாசாங்கும் கட்டுப்பாடுகளும் இன்றி இனிமையையும் பரிவையும் என் மீது தொடர்ந்து பொழிந்தபடியே இருந்தாள். அவளுடைய இனிமையும் கனிவும் ஒரு நாள் இல்லாமல் போகலாம் என்கிற சிந்தனை முழுதும் கனிந்திராத அந்தச் சமயத்திலேயே, அவள் எனக்கு மிக முக்கியமானவளாக ஆகிவிட்டிருந்தாள். ஆகவே, அவள் குணமடைவதற்கு ஆகும் காலம் குறித்த மகிழ்வான செய்திகூட இறப்பைப் போன்ற துயரத்தையே எப்போதும் எனக்குத் தந்தது. என் அம்மாவை இங்கிருந்து கிளம்பச் செய்யுமளவு நான் முழுதுமாக குணமடையும் நாள் விரைவில் என்னை எதிர்நோக்கி இருக்கிறது. தன்னுடைய கடுமை, கண்டிப்பற்ற நியாயம்- இவற்றுக்கு அவள் உயிரூட்டுமளவுக்கு என் உடல்நிலை அவ்வளவு மோசமாக அதுவரை மாறாதிருக்கும்.

லெ ஓப்லிசில் நான் தங்கியிருந்த என் மாமா வீட்டினர் என் அம்மாவின் வருகையை ஒருமுறை என்னிடம் தெரிவிக்காமல் விட்டுவிட்டனர். அன்று என்னுடைய மாமாவின் மகன் என்னுடன் சிறிது நேரம் பேசிக்கொண்டிருப்பதற்காக அங்கு வந்திருந்தான். என் அம்மாவின் வருகை குறித்து எனக்கு முன்பே தெரிந்துவிட்டால் அவளை எதிர்பார்த்துக் காத்திருக்கும் துயரார்ந்த மகிழ்ச்சியில் நான் அவனைக் கண்டுகொள்ள மாட்டேன் என்ற பயத்தால் அவர்கள் இதை என்னிடம் மறைத்துவிட்டனர். என் வயதொத்த, ஆனால் என்னிலும் முதிர்ச்சி குறைவான மற்றவர்களின் மனதுக்குள் இருந்த அந்தச் சூழ்ச்சியே, மன உறுதியின் பிடியில் இல்லாத எல்லாத் தீய நடத்தைக்கும் துணை நிற்கிறது என்பதை முதன்முதலில் எனக்கு உணர்த்திய சூழல்களில் அதுவும் ஒன்று. பதினைந்து வயதுடைய என்னுடைய மாமாவின் மகன் (எனக்குப் பதினான்கு வயது) ஏற்கனவே அதிமோசமான நடத்தை கொண்டவனாக இருந்தான். கழிவிரக்கம் தரக்கூடிய சிலிர்ப்பையும் அதனோடு சேர்த்து உடனடிக் களிப்பேற்படுத்தும் சில விஷயங்களையும் அவன் எனக்குக் கற்றுத் தந்தான். அவன் பேசுவதைக் கவனித்துக்கொண்டு அவன் கைகள் என் கைகளை வருடுவதை அனுமதித்தபடி, தொடக்கப் புள்ளியே நஞ்சாக இருக்கக்கூடிய ஒரு மகிழ்வில் நான் ஆழ்ந்திருந்தேன். விரைவிலேயே என்னுடைய பலத்தைத் திரட்டிக்கொண்டு என்னுடைய அம்மாவை உடனே பார்க்க வேண்டும் என்கிற அதிதீவிரமான தேவையுடன் பூங்காவுக்கு ஓடிப்போனேன். ஆனால் அவள் அங்கில்லை, பாரீசில் இருக்கிறாள் என்பது தெரிந்தும் தோட்டத்திற்குப் போகும் வழித்தடம் முழுக்க என் விருப்பத்துக்கு எதிராக நான் அவளைக் கூவி அழைத்தபடியே இருந்தேன்.

கொடிகள் பற்றிப் படர்ந்து உருவாகும் நிழல் தரும் வளைவு ஒன்றை வேகமாகக் கடந்தபோது, ஒரு பெஞ்சில் அவள் அமர்ந்திருப்பதைப் பார்த்தேன். புன்னகையுடன் என்னை நோக்கித் தன் கைகளை நீட்டினாள். தன்னுடைய முக்காடை நீக்கி என்னை முத்தமிட்டாள். நான் பாய்ந்து சென்று அவளுடைய கன்னத்தின் மீது என் முகத்தை வைத்து வெடித்து அழுதேன். என்னுடைய அந்த வயதுக்கு நானறியக் கூடியதோ பேசவோ தகாத எல்லா மோசமான விஷயங்களையும் அவளிடம் சொல்லி அழுதுகொண்டே இருந்தேன். அவற்றைப் புரிந்துகொள்வதில் தோல்வியுற்றாலும் அவற்றைப் புனிதமான ரீதியில் எப்படிக் கவனிப்பது என்று அவளுக்குத் தெரிந்திருந்தது. இந்த நல்லியல்பின் காரணமாக நான் பேசிய விஷயங்களின் முக்கியத்துவம் குறைக்கப்பட்டு, அது என் மனசாட்சியின் பாரத்தை இலகுவாக்கியது. இந்தப் பாரம் மேலும் மேலும் இலகுவாகி, கழுத்து நெறிக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்ட என் ஆன்மாவின் கனம் மெல்ல குறையத் தொடங்கி, மென்மேலும் சக்தி பெற்று, பிறகு பொங்கிவழியத் தொடங்கியது. பிறகு நான் ஆன்மாவாகவே மாறிப்போனேன்.

புனிதத்துவம் பொருந்திய ஒரு இனிமை என் அம்மாவிடமிருந்தும், மீண்டுவிட்ட என் அப்பாவித்தனத்தில் இருந்தும் வெளிப்பட்டுக்கொண்டிருந்தது. அதற்கு இணையான புதிய தூய்மையான ஒரு வாசனை விரைவிலேயே என் நாசித் துவாரங்களுக்குள் நுழைந்தது. அது என் அம்மாவின் நிழற்குடை மறைத்துக்கொண்டிருந்த லைலக் புதரின் கிளையில் பாதி மலர்ந்திருந்த ஒரு லைலக் பூவில் இருந்து வந்தது. அது கண்ணுக்குத் தெரியாத நறுமணத்தைக் காற்றில் பரப்பியது. மர உச்சியில் இருந்த பறவைகள் தங்கள் முழு சக்தியுடன் பாடிக்கொண்டிருந்தன. பசுமை போர்த்திக் கிடந்த அவற்றின் இடையே தெரிந்த வானம் ஆழ்நீல நிறத்துடன் இருந்தது. அது நாம் ஒருக்காலும் பிரியவே விரும்பாத சொர்க்கத்தின் வாசலைப் போலத் தெரிந்தது. நான் என் அம்மாவை முத்தமிட்டேன். அந்த முத்தத்தின் இனிமையை அதன் பிறகு நான் மறுபடி அடையவே இல்லை. அடுத்த நாள் அவள் அங்கிருந்து கிளம்பிவிட்டாள். இந்தப் பிரிவு அதற்கு முந்தைய அனைத்துப் பிரிவையும்விடக் குரூரமாக இருந்தது. ஒருமுறை பாவம் செய்துவிட்ட என்னை, மகிழ்ச்சி மட்டுமின்றி, எனக்கு மிகத் தேவையான பலமும் ஆதரவும்கூடக் கைவிட்டுவிட்டன.

தவிர்க்க இயலாது, என்றாவது ஒரு நாள் நிகழ்ந்தே தீர வேண்டிய ஒரு பிரிவுக்கு இந்தப் பிரிவுகள் யாவும் என்னைத் தயார்செய்து கொண்டிருந்தன. என் அம்மா இல்லாமல் நான் உயிர் வாழக்கூடிய ஒரு நிலையை நான் எப்போதும் தீவிரமாக நினைத்துப் பார்த்ததே இல்லை. அவள் இறந்த அடுத்த நொடியே நான் தற்கொலை செய்துகொள்ள முடிவுசெய்திருந்தேன். ஒரு விஷயத்தின் இன்மைக்கு நாம் பழகிக்கொள்கிறோம். சுயத்தைப் பெருமளவு குறைப்பதும் மிக அவமானகரமான சித்திரவதையும் எது எனில் ஒரு கட்டத்துக்கு மேல் நாம் இன்மையால் வதைக்கப்படுவதில்லை என்பதுதான். இந்த மிகக் கசப்பான பாடங்களை இன்மை சில காலத்திற்குப் பிறகு எனக்குக் கற்பித்தது. ஆனாலும் பிற்பாடு எண்ணிப் பார்க்கையில் இந்தப் பாடங்கள் முரண்பட்டதாகத் தோன்றக் கூடியவை.

எண்ணற்ற மலர்ச் செடிகளுக்கு நடுவே அமர்ந்து என் அம்மாவுடன் காலை உணவருந்திய அந்தச் சிறிய தோட்டத்தை நான் இப்போது அடிக்கடி நினைத்துப் பார்க்கிறேன். அந்த மலர்ச்செடிகள் அடையாளச் சின்னங்களிடம் காணப்படுவது போன்ற ஒரு சிறு சோகத்துடனேயே எப்போதும் இருந்தன. ஆனால் மென்மையாக, மெத்து மெத்தென்று, சில நேரங்களில் மங்கிய ஊதா நிறத்துடன், சில சமயங்களில் அடர் ஊதா நிறத்தில், கிட்டத்தட்ட கறுப்பாக, வசீகரமும் மர்மமும் கொண்ட மஞ்சள் வடிவங்களுடனும் அவை இருந்தன. அவற்றுள் சில முழு வெண்மையாகவும் ஒரு மெல்லிய அப்பாவித்தனத்துடனும் இருந்தன. அந்த செங்கரு நீலப்பூக்கள் அனைத்தையும் நான் இப்போது என் நினைவுகளின் வழியே பறித்தேன். தாம் புரிந்துகொள்ளப்பட்டமையால் அவற்றின் சோகம் அதிகரித்திருந்தது. மெத்து மெத்தென்ற அவற்றின் இனிமை இப்போது ஒரேயடியாக மறைந்துபோய்விட்டது.

இவ்வளவு தூய்மையாக இருந்த என் நினைவுகள் யாவும், இப்போது மாசடைந்ததாக மாறிப்போயிருக்கும் என் ஆன்மாவின் வழியே, அழுக்கடையாமல் மறுபடி எப்படிப் பீறிட்டு எழ இயலும்? முடை நாற்றமடிக்கும் இத்தனை நீர்த்திரள்களைக் கடந்தும் அவற்றோடு கலந்து தன் நறுமணத்தை இழக்காமலிருக்க இந்த அதிகாலை ஊதா நிறப் பூவிடம் அப்படியென்ன மேன்மையான குணம் இருக்கிறது? ஐயோ! பதினான்கு வயதான என் ஆன்மா எனக்கு உள்ளே மட்டுமின்றி வெகு தொலைவில், என்னைக் கடந்தும், உயிர்பெற்று எழுகிறது. இதற்குப் பிறகு அது என் ஆன்மா இல்லை என்பதும் என் ஆன்மாவாக மீண்டும் மாறுவதற்கு அதற்கு என் உதவி தேவையில்லை என்பதும் எனக்குத் தெரியும். ஆனால் பிற்காலத்தில் அதனுடைய இழப்பு குறித்து நான் வருந்துவேன் என்பது அப்போது எனக்குத் தோன்றவேயில்லை. அதில்  தூய்மை மட்டுமே இருந்தது. நான் அதை வலுப்படுத்தி எதிர்காலத்தில் மிக உயர்வான செயல்களைச் செய்ய அதனை இணக்கமாக்க வேண்டியிருந்தது. லெ ஓப்லிசில் கடும் வெயில் அடிக்கும் சமயங்களில் சூரிய வெளிச்சம் பரவி மினுங்குகிற மீன்கள் கொண்ட குளத்தைப் பார்வையிடவோ அல்லது காலையும் மாலையும் வயல் வெளிகளில் நடைபயில்வதற்கோ நானும் என் அம்மாவும் செல்வோம். என்னுடைய எதிர்காலத்தைப் பற்றி நம்பிக்கையோடு நான் கண்ட கனவுகள் எதுவுமே அவளுடைய அன்புக்கும், அவளை மகிழ்விக்கும் என் ஆசைக்கும் நிகரான அழகுடன் ஒருபோதும் இருந்ததில்லை. என்னுடைய மனவுறுதி, அல்லது என் கற்பனை, என்னுள் கிளர்ந்தெழுந்த உணர்ச்சிகளின் ஆற்றல், இவை யாவும் இணைந்து என் கனவுகளை மெய்ப்பிக்க வாய்ப்பு தரும் விதியை ஆரவாரத்துடன் அழைத்து, என் இதயத்தைத் திறந்து, என்னில் இருந்து வெளியேறி வேகமாய் நிஜ வாழ்வுக்குள் நுழைந்துவிடுவது போல் என் இதயத்தின் சுவரை மீண்டும் மீண்டும் மோதியபடி இருந்தன.

ஒருவேளை நான் என் அம்மாவை ஆயிரம் முறை முத்தமிட்டு முழு பலத்துடன் துள்ளிக் குதித்து ஒரு சிறு நாய்க்குட்டி போல அவளுக்கு முன்னே நெடுந்தொலைவு வரை ஓடியிருப்பேன் அல்லது சந்தோஷக் கூச்சலிட்டபடி அவளுக்காகச் சோளமோ அல்லது செந்நிறக் காட்டுப் பூக்களோ பறித்து வருவதற்காக அவளை விட்டு ஓடி வெகு தூரம் பின்தங்கிவிட்டிருப்பேன். ஒருவேளை நான் இவற்றையெல்லாம் செய்திருந்தால் அது நிதானமாக நடந்து சென்று பூக்களைச் சேகரிப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சிக்காக இல்லை. மாறாக என்னுள் இருக்கும் அத்தனை மகிழ்ச்சியையும் வெளியே பொங்கிப் பிரவாகமெடுக்கும்படி நெடுந்தொலைவு பரப்பி, மிகக் கவர்ச்சியான காட்சிகளாகத் தொலைவில் தெரிகிற காடுகளையும் தொடுவானத்தையும் ஒற்றைத் தாவலில் அடைந்துவிட ஏங்கினேன்.

மணற்புற்களே, செந்நிறக் காட்டுப் பூக்களே, சோளக் கதிர்களே… உங்களை எல்லாம் நான் சுடர்விடும் கண்களுடனும் உடலதிர்கிற களிப்புடனும் என் கையில் ஏந்திச் சென்றேன், நீங்கள் என்னைச் சிரிக்கவும் அழவும் வைத்தீர்கள். இதற்கெல்லாம் காரணம் நான் என் மொத்த நம்பிக்கையையும் உங்களுடன் பிணைத்து வைத்திருந்ததுதான். பூக்களே, அந்த நம்பிக்கைகள் யாவும் இப்போது உங்களைப் போலவே மலராமலேயே உலர்ந்து மக்கிப் போய் மண்ணுக்குள் புதைத்துவிட்டன.

என்னுடைய உறுதியின்மைதான் என் அம்மாவைத் துயரத்திற்குள்ளாக்கியது. நான் எப்போதுமே என்னுடைய உள்ளுணர்வு என்ன சொல்கிறதோ அதன்படி நடந்துகொள்வேன். அந்த உள்ளுணர்வு என் புத்தியில், என் இதயத்தில் இருந்து வந்தவரை என் வாழ்க்கை மிகச் சிறந்ததாக இல்லாமல் போயிருந்தாலும் மோசமானதாக இல்லை. நானும் என் அம்மாவும் என் வேலைக்கான திட்டங்கள், மன அமைதி, இவற்றின் நடைமுறைச் சாத்தியங்கள் குறித்த தீவிரமான  சிந்தனைகளில் ஆழ்ந்திருந்தோம். அவளால் உருவாக்கப்பட்ட, பேணி வளர்க்கப்பட்ட மனவுறுதியால் மட்டுமே என் வாழ்வில் இவற்றையெல்லாம் நான் அடைந்ததாக, என்னால், எனக்குள் சில பிம்பங்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன என்பதைக் குழப்பத்துடனும் அதே சமயம் தீவிரமாகவும் நான் உணர்ந்தேன். இதில் அவள் என்னைவிடத் துலக்கமாக இருந்தாள். ஆனால் நான் எப்போதுமே அதை அடுத்த நாளுக்கானது என்று தள்ளிப்போட்டுக்கொண்டே இருந்தேன். நான் என்னைப் பற்றி யோசித்துப் பார்த்தேன். நேரம் கடந்துகொண்டிருப்பதை நான் சில சமயங்களில் துயரத்துடன் பார்த்துக்கொண்டிருப்பேன். ஆனாலும் என் முன் ஏகப்பட்ட நேரம் கொட்டிக் கிடந்தது. எனக்குச் சிறிது அச்சமாக இருந்தது. மன உறுதி இல்லாமல் செயல்படும் என் பழக்கம் வருடங்கள் செல்லச் செல்ல என்னை மென்மேலும் தீவிரமாக அழுத்தத் தொடங்கியது என்று எனக்குத் தெளிவின்றித் தோன்றியது. எதிர்பாராது நிகழக்கூடிய மாற்றங்களைப் பற்றி நான் சோகத்துடன் சந்தேகப்பட்டேன். என் வாழ்வை மேம்படுத்தி என் விருப்பத்தால் உருவாகக்கூடிய அற்புதமொன்று, எந்த முயற்சியும் இன்றி தானாகவே நிகழ்ந்துவிடும் என நான் நம்ப இயலாது. ஒரு விஷயத்திற்காக ஆசைப்படுவது மட்டுமே போதுமானதில்லை. அந்த விருப்பம் இல்லாமலேயே செயல்பட எனக்குத் துல்லியமாக ஒன்றே ஒன்று மட்டும்தான் தேவைப்பட்டிருக்கும். அதன் பெயர் மன உறுதி.

*

“காமக் கொடுங்காற்று நம் தசையினை ஒரு பழங்கொடி போலப் படபடக்கச் செய்யும்”.

-சார்லஸ் போடலேர்.

எனக்குப் பதினாறு வயதாகும்போது எனக்கு ஏற்பட்ட ஒரு நெருக்கடி என்னை நோய்க்குள் தள்ளிவிட்டது. என் கவனத்தைத் திசை திருப்புவதற்காக என் குடும்பத்தினர் என்னை இந்தச் சமூகத்திற்கு அறிமுகப்படுத்தினர். இளைஞர்கள் என்னைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவன் வக்கிரமும் போக்கிரித்தனமும் உடையவன். மென்மையான  ஒளிவுமறைவற்ற நடவடிக்கைகள் கொண்டிருந்த அவன் மீதுதான் நான் காதல் வயப்பட்டேன். என்னுடைய பெற்றோருக்கு இது தெரிந்துவிட்டாலும் நான் துயரடையக் கூடாது என்பதற்காக அவர்கள் இந்த விஷயத்தில் அவ்வளவு சீக்கிரத்தில் எதுவும் செய்யவில்லை. அவனைப் பார்க்காதபோது அவனைப் பற்றி யோசித்தே பொழுதைக் கழித்த நான், இறுதியில் அவனைப் போலவே செயல்பட்டு, என்னால் முடிந்த அளவுக்குத் தரம் தாழ்ந்துபோனேன். நானே வியக்குமளவு என்னைத் தந்திரமாக ஏமாற்றியவன், தவறான சிந்தனையில் ஈடுபடுவதற்கு என்னைப் பழக்கப்படுத்தினான். அதை எதிர்க்கும் உறுதி எனக்கில்லை. அந்தச் சிந்தனைகள் எங்கிருந்து தோன்றினவோ அதே கொடிய இருளுக்குள் மறுபடி அவற்றைத் துரத்திவிடும் ஆற்றலுடைய சக்தி மனவுறுதிக்கு மட்டுமே இருந்தது.

அன்பு தீர்ந்தபிறகு பழக்கம் அதன் இடத்தை எடுத்துக்கொண்டது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்ள ஒழுக்கமற்ற இளைஞர்களுக்குக் குறைவே இல்லை. என்னுடைய பாவங்களுக்குத் துணையாக என்னுடைய மனசாட்சியை அவை நியாயப்படுத்தின. ஆரம்பத்தில் எனக்கு அதீத கழிவிரக்கம் இருந்தது. நான் கேட்ட பாவமன்னிப்பு மற்றவர்களால் புரிந்துகொள்ள முடியாததாக இருந்தது. என்னுடைய அப்பாவிடம் இது குறித்து நான் பேசுவதை என் நண்பர்கள்தான் தடுத்தனர். அவர்கள் எல்லாப் பெண்களும் இதையே செய்வதாகவும் என்னுடைய பெற்றோர் தங்களுக்கு இது தெரியாதது போலப் பாசாங்குதான் செய்கின்றனர் என்றும் அவர்கள் என்னை நம்ப வைத்தனர். நான் இடைவிடாது சொல்லக் கடமைப்பட்டிருந்த பொய்களைப் பொறுத்தவரை, விரைவிலேயே என் கற்பனை அவற்றை மௌனங்களாக மெருகூட்டின. தவிர்க்க முடியாதவையாக நான் அவற்றைத் தொடர வேண்டியதாயிற்று. இந்தக் காலகட்டத்தில் உண்மையில் நான் உயிர்ப்பற்றுப் போனாலும்கூட கனவு கண்டுகொண்டும், சிந்தித்துக்கொண்டுமிருந்தேன். எனக்கு உணர்வுகளும் இருந்தன.

இந்தத் துர் ஆசைகளை திசை திருப்பவும் வெளியேற்றவும் நான் தீவிரமாக எல்லோரிடமும் பழகத் தொடங்கினேன். மேட்டுக்குடியின் வறட்டுத்தனமான இன்பம் எப்போதும் ஆட்கள் சூழ இருப்பதற்கு என்னைப் பழக்கப்படுத்தியது. இயற்கையாலும் கலையாலும் இதற்கு முன் எனக்குக் கொடையளிக்கப்பட்ட இன்பங்களையும் தனிமையின் மீதான என் விருப்பத்தையும் இதனால் இழந்தேன். அதுவரை இல்லாத அளவுக்கு மிக அதிகமான இசை நிகழ்ச்சிகளுக்கு அந்தக் காலகட்டத்தில் நான் சென்றேன். அதற்கு முன்பு வரை நான் இசையை இவ்வளவு மேலோட்டமாகக் கேட்டதே இல்லை. நேர்த்தியான இசைக்கருவியால் ஈர்க்கப்பட முடியாத அளவுக்கு நான் வேட்கையில் திளைத்திருந்தேன். நான் எதையும் கவனிக்கவில்லை, என் காதில் எதுவும் விழவில்லை. எதையாவது நான் கேட்டிருந்தாலும்கூட இசை வெளிப்படுத்தக்கூடிய எதையும் என்னால் சுகிக்க இயலவில்லை. அது போலவே என் பயணங்கள் யாவும் உயிரற்றவையாக மாறின. புல்லை மஞ்சளாக்கும் ஒரு சிறு சூரியவொளி, ஈரமான இலைகளில் இருந்து எழும் இறுதி மழைத்துளியின் வாசம் என நாள் முழுவதும் என்னை மகிழ்ச்சியாக வைத்திருக்கப் போதுமானதாக இருந்த அத்தனையும் என்னைப் போலவே தம் இனிமையையும் கிளர்ச்சியையும் இழந்துவிட்டதைப் போலிருந்தது. காடுகள், வானம், நீர் என அனைத்துமே என்னை விட்டு விலகிப் போவதைப் போலிருந்தது. நான் அவற்றுடன் தனித்திருக்க நேர்ந்தால் அசௌகரியத்துடன் அவற்றின் முகத்துக்கு நேராகக் கேள்வி கேட்டேன். முன்னொரு காலத்தில் என்னைக் களிப்பூட்டிய தெளிவற்ற முணுமுணுப்பான பதில்களை இப்போதெல்லாம் அவை தருவதில்லை. நீர், இலைகள், வானம் ஆகியவற்றின் குரல் வழியே அறிவிக்கப்படும் தெய்வீக விருந்தினர்கள், தம் தகுதிக்குக் குறைந்தவர்களாக இருப்பினும் நன்னெறியால் தூய்மைப்படுத்தப்பட்ட இதயங்களைக் கொண்டவர்களுடன் மட்டுமே தம் சந்திப்பை நிகழ்த்துவர். 

நான் ஒரு நேரெதிர் தீர்வைத் தேடிக்கொண்டிருந்ததாலும், எனக்கு மிக அருகிலும், அதே சமயத்தில், தொலைதூரத்திலும் இருந்த உண்மையான தீர்வைத் தேடிக் கண்டடைய எனக்குத் துணிவில்லாததாலும், பாவம் நிறைந்த இன்பங்களுக்கு மீண்டும் நான் இடம் கொடுத்தேன். சமுதாயத்தால் அணைத்து ஒழிக்கப்பட்ட தீயை இதன் மூலமாக மறுபடி தூண்டிவிட முடியும் என்று நான் நம்பினேன். என்னுடைய முயற்சிகள் பலனளிக்கவில்லை. மற்றவரை மகிழ்விப்பதால் ஏற்படும் மகிழ்ச்சி காரணமாக நான் எடுக்க வேண்டிய இறுதி முடிவை, எனக்கான தேர்வை, விடுதலை தரும் செயலை, மகிழ்வூட்டும் தனிமை தரும் சுதந்திரத்தைத் தேர்ந்தெடுப்பதை நான் தினமும் தள்ளிப்போட்டுக்கொண்டே இருந்தேன். இந்த இரண்டு தீய ஒழுக்கங்களுக்கும் இடையே இருந்த தொடர்பை அறுக்காமல் அவை இரண்டையும் நான் இணைத்துவிட்டேன். நான் என்ன சொல்லிக்கொண்டிருக்கிறேன்? எல்லாத் தடைகளையும் தகர்த்து சிந்தனைகள், உணர்வுகள் ஆகியவை உள்நுழைவதால் தடைப்பட்டிருக்க வேண்டிய ஒழுக்கக் கேடு, ஒவ்வொரு ஒழுக்கக்கேட்டுக்கும் அழைப்பு விடுத்ததாகத் தோன்றியது. நான் ஒரு பாவத்தைச் செய்த பிறகு அமைதி கொள்ளவேண்டி சமுதாயத்தை நாடுவேன். அமைதியுற்ற அடுத்த கணமே மறுபடி பாவம் செய்வேன். 

நான் என் அப்பாவித்தனத்தை இழந்தபிறகு, என் வாழ்வில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நான் தகுதியிழந்த பிறகு, இப்படியான ஒரு மோசமான தருணத்தில்தான் என்னை எல்லோரும் மிக அதிகமாகப் பாராட்டினர். அறிவற்ற, போலிப் பகட்டு காட்டும் ஒரு பெண்ணாக இதற்கு முன் என்னை அலட்சியப்படுத்தினர். ஆனால் அதற்கு முற்றிலும் முரணாக என் கற்பனை உதிர்க்கிற சாம்பலால் ஈர்க்கப்பட்ட இச்சமூகம் இப்போது அதனால் ஆனந்தம் கொண்டாடுகிறது.

என் அம்மாவுக்கு எதிரான படுமோசமான பாவத்தை நான் தொடர்ந்து செய்துகொண்டிருக்கையில், அவளுடன் நான் கனிவாகவும் மரியாதையாகவும் நடந்துகொண்டதை வைத்து மக்கள் என்னை ஒரு உன்னதமான மகளாகவே நினைத்தனர். என் சுயசிந்தனைகள் அழிந்தபிறகு அவர்கள் என் புத்திக்கூர்மையைப் பாராட்டினர். அவர்கள் என் குற்றங்களைப் புறக்கணித்து கண்மண் தெரியாமல் என் அறிவைப் புகழ்ந்தனர். வறண்டுபோன என் கற்பனையும், நுண்ணறிவும், வாழ்க்கைக்கான பெரும் தாகத்துடனிருந்த மக்களுக்குப் போதுமானதாக இருந்தது. தம் தாகத்தைத் தணிப்பதாக அவர்கள் நம்பிய ஆதார ஊற்றைப் போலவே அவர்களுடைய தாகமும் செயற்கையாகவும் போலியாகவும் இருந்தது. ஆயினும் என்னுடைய வாழ்வில் இருந்த இரகசியமான பாவத்தைப் பற்றி யாருமே சந்தேகிக்கவில்லை. அனைவருமே என்னை உயர் சிறப்புடைய சிறுமியாகவே கருதினர். ஒருவேளை நான் தகுதி குறைந்தவளாக இருந்து, என்னைக் கருத்தில்கொள்ளும் துணிவு அவர்களுக்கு இருந்திருந்தால், அவர்களுடைய மகன்களுக்கு என்னைத் தவிர வேறெந்தப் பெண்ணும் மனைவியாக வருவதற்கு ஆசைப்பட மாட்டோம் என்று எத்தனையோ பெற்றோர் என் அம்மாவிடம் சொன்னார்கள். தகுதியற்ற இத்தகைய புகழ்ச்சிகளால் சிறு தடயமுமின்றி அழிக்கப்பட்ட என் மனசாட்சி, அதன் அடியாழத்தில் அவமானப்பட்டது. ஆனால் அந்த அவமானம் என் மனசாட்சியின் மேற்புறத்தை எட்டியதே இல்லை.

இழிவு பொருந்திய நான், பாவச் செயல்களை மீண்டும் செய்கிற அளவுக்கு மிகக் கீழ்த்தரமாக இறங்கினேன். அத்துடன் என் குற்றங்களுக்குத் துணை நின்றவர்களுடன் சேர்ந்து இவர்களைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தேன்.

*

“மீண்டும் அடையக்கூடிய ஒன்றை இழந்த போதும் அதை எவரும் திரும்பப் பெறுவதில்லை. ஒரு போதுமில்லை… ஒரு போதுமில்லை!”

-சார்லஸ் போடலேர்: “தி ஸ்வான்”(தி ஃப்ளவர்ஸ் ஆஃப் ஈவில்)

முன்னெப்போதும் ஆரோக்கியமாக இருந்திராத என்னுடைய அம்மாவின் உடல்நலம், என் இருபதாவது வயதின் குளிர்காலமொன்றில் மிக மோசமாக பாதிக்கப்பட்டது. அவளுடைய இதயம் பலவீனமாக இருந்ததையும், நிலைமை மோசமாக இல்லாத நேரத்தில் எவ்விதமான பரபரப்பையும் அவள் தவிர்க்க வேண்டும் என்பதையும் அறிந்தேன். என்னுடைய நெருங்கிய உறவினர்களில் ஒருவர் அம்மா என் திருமணத்தைப் பார்க்க விரும்புவதாகக் கூறினார். இப்படியாக எனக்கு ஒரு முக்கியமான வேலை கொடுக்கப்பட்டது. நான் அவளை எவ்வளவு நேசிக்கிறேன் என்பதை என்னால் அவளுக்கு இப்போது காட்ட முடியும். விருப்பத்தின் பேரில் இல்லாமல் தவிர்க்க முடியாத காரணத்தால் என் வாழ்க்கை மாறும் என்பதற்காக அவள் என் திருமணத்திற்காகச் சமர்ப்பித்த முதல் கோரிக்கையை நான் ஏற்றுக்கொண்டேன். எனக்கு நிச்சயிக்கப்பட்ட மணமகன், தன் அதிபுத்திசாலித்தனத்தாலும், மென்மைத்தன்மையாலும் பலத்தாலும் என் மீது சிறப்பாக ஆதிக்கம் செலுத்தக்கூடிய ஒரு இளைஞனாக இருந்தான். அத்துடன் நாங்கள் இருவரும் என் அம்மாவுடன் வசிக்க வேண்டும் என்பதில் அவன் உறுதியாக இருந்ததால் நான் என் அம்மாவிடமிருந்து பிரிய வேண்டிய சூழல் எழவில்லை. அப்படி நடந்திருந்தால் அது குரூரமான வலியைத் தந்திருக்கும்.

பாவ மன்னிப்பு அளிக்கும் அருட்தந்தையிடம் என் அனைத்துப் பாவங்களையும் ஒப்புக்கொள்ளும் துணிவு எனக்கு இப்போது வந்துவிட்டது. எனக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த மணமகனிடமும் இந்த உண்மைகளைச் சொல்லிவிட வேண்டிய கடமை எனக்கு இருக்கிறதா என்று அவரிடம் நான் கேட்டேன். அப்படிச் செய்வதிலிருந்து என்னைக் கருணையுடன் தடுத்துவிட்டாலும் ஒரு புதிய வாழ்வை மேற்கொள்வதாக அவர் என்னைச் சத்தியம் செய்யச் சொன்னார். அதற்குப் பிறகே எனக்குப் பாவமன்னிப்பு அளித்தார். இனப்பெருக்க ஆற்றலைத் தன்னகத்தே எப்போதும் கொண்டிருந்ததாக நான் கருதியிருந்த மகிழ்ச்சியின் பூக்கள் என் இதயத்துள் தாமதமாகப் பூத்துக் கனிந்தன. கடவுளின் கருணையாலும் எல்லாக் காயங்களையும் தன் உற்சாகத்தால் ஆற்றும் இளமைப் பருவத்துக்கேயுரிய கருணையாலும் நான் குணமடைந்தேன். ஒழுக்கநெறியுடன் இருப்பதைவிட அதை மீட்டெடுப்பது மிகக் கடினமான ஒன்று என்கிறார் புனித அகஸ்டின். அப்படியானால் அதைவிடக் கடினமான ஒரு நல்லொழுக்கத்தை நான் கண்டடைந்தே ஆகவேண்டும்.

முன்னைவிடப் பெருமதிப்பு பெற்ற ஒருத்தியாக எல்லோரும் என் மீது நம்பிக்கை கொண்டனர். யாருக்கும் எந்தச் சந்தேகமும் வரவில்லை. அம்மா தினமும் என் நெற்றியில் முத்தமிட்டாள். அது தூய்மையானது என்ற நம்பிக்கையை அவள் கைவிடவேயில்லை. அது மீட்டுருவானது என்பதை அவள் உணரவில்லை. அது மட்டுமின்றி என்னுடைய மறதி, அமைதி, சோர்வு ஆகியவற்றுக்காகச் சமூகம் என்னை அநியாயமாகக் கண்டித்தது. ஆனால் எனக்குக் கோபம் வரவில்லை. எனக்கும் திருப்தியடைந்த என் மனசாட்சிக்கும் இடையில் இருந்த இரகசியத்தை நினைத்து நான் மகிழ்ச்சியே அடைந்தேன். இப்போது (என்னுடைய அம்மாவின் முகத்துடன் தொடர்ந்து புன்னகைத்து, என்னுடைய வறண்ட கண்களை மிக மென்மையாக உற்றுப் பார்க்கும்) என்னுடைய ஆன்மா மற்றவரின் கவனத்தை ஈர்க்கக்கூடியதாகவும் மிக மெதுவாகவும் நோயிலிருந்து விடுபட்டுத் தேறிவந்தது. ஆம், என் ஆன்மா மீண்டும் உயிர்த்தது. நான் எப்படி என் ஆன்மாவை இரக்கமற்ற முறையில் நடத்தி, துன்புறுத்தி, அதைக் கொன்று போட்டிருக்கக்கூடும் என்பதை என்னாலேயே புரிந்துகொள்ள முடியவில்லை. அதைச் சரியான சமயத்தில் காப்பாற்றியதற்காக நான் உணர்ச்சிப்பெருக்கோடு கடவுளுக்கு நன்றி கூறினேன்.

ஆழமும் தூய இன்பமும் இணைந்து அந்தத் தருணத்தில் வானத்தில் தோன்றிய அமைதியைப் போல, அனைத்தும் நிகழ்ந்தேறிய பிறகு அந்த நினைவுகளை அந்த அந்தி நேரத்தில் மனதுக்குள் சுவைத்தேன். எனக்கு நிச்சயிக்கப்பட்ட மணமகன் தன் தங்கையுடன் சில தினங்களைக் கழிப்பதற்காக அவளுடைய வீட்டிற்குச் சென்றிருந்தான். என் கடந்தகாலப் பாவங்களுக்குப் முழுப் பொறுப்புடைய இளைஞன் ஒருவனுடன் அன்றிரவு உணவை நான் உண்டேன். என் வருங்காலக் கணவன் இங்கு இல்லாததோ, இந்த இளைஞன் இங்கு இருந்ததோ, ஒளிபொருந்திய அந்த மே மாத மாலையின் சுவையை இம்மியளவும் குறைக்கவில்லை. வானத்தில் காணப்பட்ட எந்த மேகமும் என்னுடைய இதயத்தைத் துல்லியமாகப் பிரதிபலிக்கவில்லை. என் அம்மா என் பாவங்களை முழுமையாகப் புறக்கணித்தாலும்கூட எங்கள் இருவருக்கு இடையிலும் எதோ ஒரு ஒப்பரவு இருந்தாற்போல அவள் இப்போது கிட்டத்தட்ட குணமாகிவிட்டாள்.

மருத்துவர், “இரண்டு வாரங்களுக்கு மிகக் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். அதற்குப் பிறகு நோய் திரும்பத் தாக்குவதற்கான வாய்ப்பில்லை” என்று கூறியிருந்தார்.

மகிழ்ச்சியான எதிர்காலத்திற்குரிய ஒரு வாய்ப்பை இந்தச் சொற்கள் பெருமளவுக்கு உறுதியளிக்க, நான் வெடித்து அழுதேன். அன்று மாலை என் அம்மாவின் உடை, வழக்கத்தைவிட அதிக எழிலுடன் இருந்தது மட்டுமின்றி, என் அப்பா இறந்த பிறகான இந்தப் பத்து வருடங்களில் வழக்கமாக அவள் அணிகிற கறுப்பு நிறத்துடன் முதன் முறையாக ஒரு மெல்லிய ஊதா நிறம் கலந்திருந்தது. அவ்விதமான உடையைத் தன் இளமைக் காலத்தில் அணிவது அவளுக்கு மிகுந்த அவமானத்தையும் துயரத்தையும் அளித்தது. என்னுடைய மகிழ்ச்சிக்காகவும் என் சந்தோஷங்களைக் கொண்டாடவும்  தன் வலியையும் வேதனையையும் அவள் அலட்சியப்படுத்தினாள். ஒரு இளம் சிவப்பு நிற மலரை அவளுக்கு அளித்ததும் முதலில் மறுத்தவள், நான் தந்தேன் என்ற காரணத்துக்காக மெல்லிய தயக்கத்துடனும் சங்கடத்துடனும் அதை அணிந்துகொண்டாள்.

விருந்தினர்கள் தங்கள் உணவு மேஜையை நோக்கி நடந்தபோது நான் அவளை ஒரு ஜன்னலுக்கு அருகே இழுத்துச் சென்றேன். கடந்தகாலத் துயரங்களில் இருந்து மீண்டிருந்த அவளுடைய முகத்தில் மிகுந்த அன்புடன் முத்திட்டேன். லெ ஓப்லிசில் தரப்பட்ட அந்த முத்தத்தின் இனிமையை நான் திரும்ப அடையவேயில்லை என நான் முன்பு சொன்னது தவறு. இந்த மாலை நேரத்தில் தரப்பட்ட இந்த முத்தம் வேறெந்த முத்தத்தையும்விட இனிமையானதாக இருந்தது. மாறாக, லெ ஒப்லிசில் நிகழ்ந்த இதே போன்ற ஒரு தருணத்தின் நினைவால் தூண்டப்பட்டு அது உண்டாக்கிய கிளர்ச்சியில் இடப்பட்ட முத்தமாகவும் இருக்கலாம். அது எங்களுடைய கடந்தகாலத்தின் ஆழத்தில் இருந்து பைய நழுவி இப்போதும் தெளிவற்று வெளிறிக் கிடந்த என் அம்மாவின் கன்னங்களுக்கும் என் உதடுகளுக்கும் இடையே குடியேறியது.

என் திருமணம் நிச்சயமானதைக் கொண்டாடும் வகையில் அனைவரும் மதுக்கோப்பைகளை உயர்த்தினோம். மது என் நரம்புகளை அதிக பரபரப்படைய வைக்கும் என்பதால் தண்ணீரைத் தவிர நான் வேறெதுவும் அருந்தவில்லை. என்னுடைய மாமா இதுபோன்ற ஒரு தருணத்தில் மது அருந்துவதில் தவறில்லை என்றார். இந்த முட்டாள்தனமான சொற்களைக் கூறிய போது அவருடைய முகம் மகிழ்ச்சியுடன் இருந்தது எனக்குத் தெளிவாக நினைவிருக்கிறது. ஐயோ! கடவுளே! கடவுளே! நான் எவ்வளவு அமைதியாக எல்லாக் குற்றங்களையும் ஒப்புக்கொண்டு விட்டேன். நான் இத்தோடு நிறுத்திக்கொள்ள யாராவது என்னைக் கட்டாயப்படுத்துவார்களா? என்னால் எதையும் பார்க்க முடியவில்லை. இப்போது என்னால் பார்க்க முடிகிறது… என்னுடைய மாமா இத்தகைய ஒரு தருணத்தில் நீ மது அருந்துவதில் தவறில்லை என்று சொன்னார். அவர் அப்படிக் கூறிய போது என்னைப் பார்த்துச் சத்தமாகச் சிரித்தார். என்னுடைய அம்மாவை ஏறிட்டுப் பார்க்காமல் நான் வேகமாகக் குடித்தேன். ஒருவேளை அவளைப் பார்த்தால் நான் குடிப்பதை அவள் ஆட்சேபிப்பாள் என்று நான் பயந்தேன்.

அவள், “எப்போதுமே தீமைகளை நம் மனதின் மீச்சிறிய மூலையில்கூட நாம் அனுமதித்துவிடக் கூடாது” என்றாள்.

ஆனால் ஷேம்பெயின் மிகக் குளிர்ச்சியாக இருந்ததால் நான் அதற்கு மேலும் இரண்டு கோப்பைகளை அருந்தினேன். என் தலை பாரம் அதிகரித்தபடி இருந்தது. எனக்கு  ஓய்வு தேவைப்பட்டதுடன் நான் என் அதீத மன எழுச்சியைச் செலவழிக்க வேண்டியிருந்தது.  நாங்கள் மேஜையைவிட்டு எழுந்தபோது என்னை நோக்கி வந்த ஜேக்குவஸ் என்னை வெறித்துப் பார்த்தபடி, “என் கவிதைகள் சிலவற்றை உனக்குப் படித்துக் காட்ட விரும்புகிறேன். என்னோடு வருகிறாயா?” என்றான்.

அவனுடைய அழகிய கண்கள் மலர்ச்சியான கன்னங்களுக்கு மேல் ஒளிர்ந்தன. அவன் தன் மீசையை மெல்லத் திருகினான். இனி தப்பிக்க வழியில்லாததையும் மறுப்பு சொல்ல எனக்குத் திராணி இல்லை என்பதையும் நான் உணர்ந்தேன். 

நடுங்கும் குரலில், “ஓ! எனக்கு அதில் மிகுந்த விருப்பமுண்டு. உடனே வருகிறேன்” என்றேன்.

இந்தச் சொற்களை நான் சொன்னபோதுதான், இல்லை அதற்கு முன்பே, அதாவது இரண்டாவது குவளை ஷேம்பெயினைக் குடித்தபோதே, அந்த மோசமான, நான் முழுதும் பொறுப்பேற்க வேண்டிய செயலைச் செய்துவிட்டிருந்தேன். அதற்குப் பிறகு நடந்தவைகளை நிகழ நான் அனுமதித்தேன். நாங்கள் இரண்டு கதவுகளையும் தாழிட்டோம். அவன் என் கன்னங்களில் தன் மூச்சுக் காற்று படர என் உடலெங்கும் வருடியபடி என்னை அணைத்தான். அதன் பிறகு இன்பத்தின் பிடி மென்மேலும் இறுகியபோது என் மனதின் ஆழத்திலிருந்து துயரமும் வெறுமையும் உயிர்த்தெழுவதை உணர்ந்தேன். நான் என் அம்மாவின் ஆன்மாவை, கடவுளின் ஆன்மாவை, காவல் தேவதையின் ஆன்மாவை, அழ வைப்பது போல் தோன்றியது. விலங்குகளின் மீதும், தங்கள் மனைவி, குழந்தைகள் மீதும் வில்லன்கள் செலுத்தும் சித்திரவதைகளை வாசிக்கையில் நான் எப்போதும் திகிலில் நடுங்குவேன். இச்சை மிகுந்த ஒவ்வொரு செயலின்போதும், பாவச் செயலின்போதும் உடற்பாகங்களின் மீது நிகழ்த்தப்படுகிற அதே அளவு வன்முறை இன்பத்தில் திளைக்கையிலும் நிகழ்த்தப்படுகிறது. அத்துடன் நமக்குள் எவ்வளவுக்கு எவ்வளவு நல்ல எண்ணங்கள் உள்ளனவோ அதே அளவுக்கு நமக்குள் இருக்கும் தூய தேவதைகள் கதறி அழுகின்றன, கொல்லப்படுகின்றன என்கிற ஒரு குழப்பம் இப்போது என்னைத் திடீரெனத் தாக்கியது. 

என்னுடைய மாமன்கள் விரைவில் தங்கள் சீட்டு விளையாட்டை முடித்துத் திரும்பிவிடுவார்கள் என்பதால் அவர்களுடைய வருகையை எப்போது வேண்டுமானாலும் எதிர்பார்க்கலாம். மறுபடி நான் அதே தவறைச் செய்யக்கூடாது. இதுதான் இறுதி முறை… கணப்பு அடுப்புக்கு மேல் இருந்த கண்ணாடியில் நான் இப்போது என்னைப் பார்த்தேன்.  என்னுடைய ஆன்மாவின் மொத்த வேதனையும் என் முக இலட்சணத்தில் தீற்றப்பட்டிருக்கவில்ல. மாறாக ஒளிரும் என் கண்கள், தழற்போல் சிவந்த கன்னங்கள் என என் முகம் முழுதும் அது பரவியிருந்தது. விரிந்திருந்த என் உதடுகள் ஒரு முட்டாள்தனமான வெறிகொண்ட காம இன்பத்தை வெளிப்படுத்தியது. நான் சற்று நேரத்திற்கு முன்பு என் அம்மாவை வருத்தம் தோய மென்மையாக முத்தமிட்டதைப் பார்த்த யாராவது நான் இப்போது ஒரு மிருகமாக மாறிப்போனதைப் பார்த்துவிடக் கூடும் என்று நான் அச்சத்துடன் நினைத்தேன். ஆனால் இன்பத்தைச் சுகிக்கும் பெரும் ஆசையுடன் ஜேக்குவசின் வாய் என் முகத்தை நோக்கி மேலெழுவது கண்ணாடியில் தெரிந்தது. என்னுடைய உள்ளாழம் வரை நடுங்கியபடி நான் என் தலையை அவனை நோக்கிச் சாய்த்தபோது என் முன்னே என் அம்மா தெரிந்தாள். (ஆமாம், நடந்ததைத்தான் நான் சொல்கிறேன். நான் சொல்வதைக் கவனியுங்கள். ஏனெனில் என்னால் மட்டுமே இதை உங்களிடம் சொல்ல முடியும்) ஜன்னலுக்கு வெளியே இருந்த பலகணியில் நின்றிருந்தவள், அதிர்ச்சியுடன் வாய் திறந்தபடி என்னை உற்றுப் பார்ப்பது தெரிந்தது. அவள் சத்தம் போட்டு அழுதாளா என்பது எனக்குத் தெரியவில்லை. எனக்கு எதுவுமே கேட்கவில்லை. ஆனால் அவள் தன் தலையை இரண்டு கம்பிகளுக்கு இடையை வைத்தபடி பின்பக்கம் சரிந்தாள்.

இதை நான் உங்களுக்குச் சென்ற முறை சொல்லவில்லை. நான் என் இலக்கைக் கிட்டத்தட்ட தப்பவிட்டுவிட்டேன், நான் குறி பார்ப்பது சிறப்பாக இருக்கும், ஆனால் அது இலக்கைத் தாக்கும்போது அலங்கோலமாக இருக்கும் என்றும் நான் உங்களிடம் முன்பே சொல்லியிருக்கிறேன். ஆனால் துப்பாக்கிக் குண்டை வெளியே எடுக்க முடியவில்லை. என் இதயம் தொடர்பான பிரச்சினைகள் துவங்கிவிட்டன. இன்னும் ஒரு வாரத்திற்கு மேல் என்னால் இப்படியே இருக்க முடியும். இதன் தொடக்கப் புள்ளியையும் முடிவு குறித்தும் ஆழமாக சிந்தனை செய்யாமல் என்னால் இருக்க இயலாது. இப்போது நான் செய்த இந்தக் குற்றத்துடன் சேர்த்து என் அத்தனைக் குற்றங்களையும் என் அம்மா பார்த்திருப்பதைக்கூட என்னால் ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால் கண்ணாடி வழியே என் முகத்தில் தெரிந்த களிப்பான முகபாவனையை மட்டும் அவள் பார்த்திருக்கவே கூடாது. இல்லை, அவள் அதைப் பார்த்திருக்க முடியாது. அது தற்செயலாக நடந்தது. அவள் என்னைப் பார்ப்பதற்கு ஒரு நிமிடத்திற்கு முன்தான் அவளுக்குப் பக்கவாதம் ஏற்பட்டிருந்தது. அவள் என் சந்தோஷத்தைப் பார்க்கவில்லை. அவள் பார்த்தாளா என்ற கேள்விக்கே இடமில்லை! எல்லாம் அறிந்த இறை இதை விரும்பியிருக்க முடியாது.

*

ஆங்கில மூலம்: A Young Girl’s Confession by Marcel Proust, The Complete Stories of Marcel Proust, Cooper Square Publishers, 2003 Edition.