ஊழ்அடி முட்டம்

4 comments

அண்ணன் பிரான்சிஸை நான் நேரில் சந்தித்தது வெண்ணிலா கபடிக்குழு திரைப்பட அலுவலகத்தில். 2008ம் ஆண்டு வாக்கில். அவரது கவிதைகளைச் செரித்துப் பித்தேறிக் கனன்றுகொண்டிருந்த காலகட்டத்தில் அவரையே சந்தித்த அந்த முதல்கணத்தின் உன்மத்தம் இன்றளவும் வடியவில்லை. வடியாது. எனது தோளில் கைவைத்து அமரச் சொன்னார். எப்போதும் அனந்தர் நடுக்கத்தில் இருந்த எனக்கு அந்தத் தொடுகை ஈன்றளித்த நடுக்கம் எத்தன்மையது என்பதை இன்றளவும் அறியேன். என்னைப் பற்றி, எனது ஊர் பற்றி விசாரித்தார். எனது தோள்பை நன்றாக இருப்பதாகச் சொல்லி வாங்கிப் பார்த்தார். கையடக்கமான சிறு ஜோல்னா பை. பையினுள்ளிருந்த புத்தகங்களை எடுத்து அவரிடம் காட்டினேன். உள்ளங்கையில் அடங்கிவிடக்கூடிய திருக்குறளும், பாரதியார் கவிதைத் தொகுப்பும், பிரான்சிஸின் மெசியாவின் காயங்களும் பையில் இருந்தன. வள்ளுவரின் மீச்சிறு புத்தக வடிவைக் கண்டு உவகையுற்றார். “வள்ளுவனை எடுத்துக்கொள்ளட்டுமா?” என்று கேட்டார். பையை அவரிடமே தந்துவிட்டு அவரையே வியந்தவாறு இருந்தேன். “சிகரெட் புகைக்கலாமா?” என்றார். அலுவலகத்தை விட்டு வெளியே வந்தோம். அதன் பிறகு நிகழ்ந்ததெல்லாம் அற்புதமே! அற்புதமே!

சிகரெட் புகைத்து முடித்தும் அங்கேயே பேசாமல் நின்றோம். மௌனத்தைக் கலைத்து “மது அருந்தலாமா?” என்றார். பிறகு ஏதோ சிந்தித்தவர் போல “மதுப்பழக்கம் உண்டா?” என்றார். வாய்விட்டுச் சிரித்துவிட்டேன். எனக்கிருந்த ஒரே பழக்கம் அதுவொன்றுதானே! இருவரும் காலாற நடந்து வளசரவாக்கம் சாலையில் இருந்த ‘ஜில் ஜில்’ ஒயின்ஸில் அமர்ந்தோம். நடப்பதெல்லாம் கனவோ என்ற மிதப்பு எனக்கு. முதல் கோப்பை முடிந்தது. அப்போது அவரது முகத்தில் ஏதோ விலகி முழுமையாக ஆட்கொண்ட கனிவைப் பார்த்தேன். ஒருகணம் என்னைப் பார்த்தவர் தேவதேவன் கவிதை ஒன்றை நினைவிலிருந்து அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சொன்னார். அடுத்த கோப்பையிலிருந்து தேவதேவன் அவர்களின் “மின்னற்பொழுதே தூரம்” என்ற தலைப்பே எங்களுக்கு அன்றைய சைட் டிஷ். கவித்துவமான தலைப்புகள் கொண்ட புத்தகங்களின் பட்டியலை நினைவிலிருந்து மீட்டுக்கொண்டே இருந்தோம். எனக்குப் போதை ஏறவே இல்லை. பிரான்சிஸின் நா குழறத் தொடங்கியது.

இருவருமாக வெளியே வந்தோம். நான் அம்பத்தூரில் அப்போது வசித்து வந்தேன். பிரான்சிஸிடம் எங்கே விடவேண்டும் என்று கேட்டேன். போவதற்கு இடமில்லை என்றார். அருகிலிருந்த லாட்ஜில் அறையெடுத்து அன்று முழுவதும் குடித்தோம். மறுநாள் காலை அவரை வெண்ணிலா கபடிக்குழு அலுவலகத்தில் விட்டுவிட்டு நான் அம்பத்தூர் கிளம்பினேன். அதன்பிறகு ஒவ்வொரு நாளும் அம்பத்தூரிலிருந்து பிரான்சிஸ் வரை என்றானது.

போதையில் வளர்ந்து

போதையில் வாய்ப்புகள் தேடி

போதையில் உண்டு கழித்து

போதையில் அன்பெய்தி

போதைக்கே வாழ்வெடுத்த எனக்கு

பிரான்சியின் கோளாறுகள் குறித்த எந்தப் புகாரும் இதுவரை இல்லை. 

என்னிடம் இருந்த குணக்கோளாறுகளில் கொஞ்சமே கொஞ்சம்தான் அவரிடமிருந்தது.

குழந்தைகளின் மேல் மிகுந்த அன்பு கொண்டவர் பிரான்சி. எனக்குத் தெரிந்து அவர் வியந்ததும் குழந்தைகளைத்தான். குடித்துவிட்டு இருவருமாக இறங்கி நடக்கும் தெருக்களில் விளையாடும் குழந்தைகளை வாரியெடுத்துக் கொஞ்சுவார். குழந்தைத் திருடர்கள் என்று எங்களைக் கண்டு அஞ்சியவர்களும் இருந்தார்கள். ஒரு தீபாவளி நாள். சென்னையே வெறிச்சோடி இருந்தது. கண்ணில் தெரிந்த மதுவிடுதியின் உள்சென்று குடித்துவிட்டுப் பெருநகர வீதிகளில் சுற்றியலைந்தோம். நாங்கள் வழக்கமாக உணவு உண்ணும் கோடம்பாக்கம் அம்பேத்கர் சிலை ‘அம்மா உணவகச்’ சேவகி ஒருவரை அவரது குழந்தையுடன் வழியில் எதிர்கொண்டோம். வேகமாக ஓடி தூரத்தில் திறந்திருந்த பெட்டிக்கடையிலிருந்து சாக்லெட்டுகள் கைநிறைய வாங்கிவந்து குழந்தையின் கையில் வைத்தார் பிரான்சி. அந்த அக்கா வேண்டாம் என்று சொன்னதைக் கேட்காமல் விலகிப் போய்க்கொண்டிருந்தோம். அதன்பிறகு பிரான்சி மறந்தாலும் குடிக்கச் செல்லுந்தோறும் பாக்கெட் நிறைய சாக்லெட்டுகளை வாங்கி நிரப்பிக்கொள்வேன். குழந்தைகளுக்குத் தந்தது போக மீதி சாக்லெட்கள் இருந்தால் அவை எங்களுக்கான சைட்டிஷ்ஷாக ஆகியிருக்கும்.

நாய்களின் மேலும் பேரன்பு இருந்தது. பெரும்பாலும் குடித்துவிட்டு நிற்க முடியாத போதையில் இருவரும் எங்கேனும் கட்டிக்கொண்டிருக்கும் புதுக்கட்டிடங்களின் முன்னே குவிக்கப்பட்டிருக்கும் மணல்மேடுகளில் சென்று புதைந்துவிடுவோம். எங்கள் தோழர்களாக நாய்களும் வந்து உறங்கிச் செல்வார்கள். பிரான்சியின் கைகளில் தவழும் நாய்கள் ஏசுவின் கைகளில் தவழும் ஆட்டுக்குட்டிகளாக அன்பை உணர்ந்து வாலடித்து விளையாடும். மதுவிடுதிகளில் வளரும் பூனைகளும் எங்கள் உறவுகளே. வடபழனி நூறடிச் சாலையில் அப்போது இயங்கிவந்த மதுவிடுதியில் இரண்டு பூனைகள் வளர்ந்தன. அதில் ஒரு பூனைக்குத் தொல்காப்பியன் என்று நான் பெயர் வைத்தேன். மற்றொரு பூனைக்கு ஷெல்லி என்று பிரான்சி பெயர் வைத்தார். தன்னிடமிருக்கும் வறுத்த மீனைத் தொல்காப்பியனுக்கும் ஷெல்லிக்கும் வைத்துவிட்டு என்னிடம் இருக்கும் மீனை நாங்களிருவரும் மாற்றி மாற்றி ஊட்டிக்கொண்டதுண்டு.

நண்பர்களின் அறையில் தங்கியிருப்பார் அல்லது நண்பர்களின் உதவியால் வாடகைக்கு அறையெடுத்துத் தங்கியிருப்பார். அதிகப்படியாக ஒரு மாதம்தான் ஓர் அறை. எனக்குத் தெரிந்து ஐம்பதுக்கும் மேல் அறைகள் மாறியிருக்கிறார். மாற்றப்பட்டிருக்கிறார்‌ என்றே சொல்ல வேண்டும். அவர் தங்கிய எந்த அறையிலும் முகம் பார்க்கும் கண்ணாடி இருந்ததில்லை. அவர் வாங்கி வைத்துக்கொண்டதுமில்லை. அதைப் பற்றி எப்போது கேட்டாலும், “நான் எப்படி இருப்பேன்னு எனக்குத்தான் துல்லியமா தெரியுமே?” என்பார். ஒருசில நாட்கள் குளியலறை பக்கெட்டில் தண்ணீர் நிரப்பி அந்தத் தண்ணீரில் முகம் கண்டு தலைவாரிக்கொண்டு இருவரும் குடிக்கச் சென்றிருக்கிறோம். சிலநாட்கள் செல்லும் வழியில் தென்படும் சலூன் கடைகளில் முகம் பார்த்துச் சென்றிருக்கிறோம். அவர் இருந்த பெரும்பாலான அறைகள் அவரும் அவரது நிழலும் புழங்கும் அளவேயான அறைகள்தாம். அவரது நிழலாகச் சிலகாலம் நான் தங்கியிருந்திருக்கிறேன். அது எனக்கு மகிழ்ச்சியே.

எந்தத் திசையில் பிரான்சி உதிப்பார் என்று பிரான்சிக்கே தெரியாத சூழலே எப்போதும் இருந்தது. என்னாலும் பெரிதாக அவருக்கு உதவமுடியாத நிலைதான். குடும்பத்தார் எனக்கு அனுப்பும் தொகை எனது குடிக்குப் போக பிரான்சிக்கும் சிறிது ஈயப்பட்டு வந்தது. அந்தச் சமயத்தில் அம்பத்தூரை விட்டு சூளைமேடு பகுதிக்குக் குடிபெயர்ந்தேன். என் ஒருவனுக்காக எடுத்திருந்த தனியறையில் யார் கண்ணிலும் படாமல் பிரான்சியையும் தங்க வைத்தேன். இரண்டு மாதங்கள் ஏமாற்ற முடிந்தது. பிறகு கண்டுபிடித்து இருவரையும் விரட்டிவிட்டார்கள்.

போதையின் காரணமாக மனநோய் இருவரிடமும் நுண்ணிய கதியில் வளர்ந்து வந்தது. எனக்குள் auditory hallucinations வளரத் தொடங்கியது. பிரான்சிக்குள் visual hallucinations வளரத் தொடங்கியது. ஓரளவிற்கு அதை இருவருமே உணரத்தொடங்கினோம். பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. தான் கண்ட இல்லாத காட்சிகளைக் குறித்து அவர் சொல்வதைக் கேட்டு நான் சிரிப்பேன். இல்லாத குரலின் பதிவுகளை நான் சொல்வதைக் கேட்டு அவர் சிரிப்பார். போதைக்கு முன்னால் எதுதான் பெரிது? வழி இருப்பது போன்று தெரியும், ஆனால் வழியிருக்காது என்ற நிலையைக் குறிஞ்சிப்பாட்டில் கபிலர் “ஊழடி முட்டம்” என்கிறார். நாங்களிருவரும் ஊழடி முட்டத்தில் உழன்றுகொண்டிருந்தோம்.

*

எனக்குப் பணம் அனுப்புவதில் சில கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்தனர் பெற்றோர். சினிமா வாய்ப்புகள் பெரிதாக இல்லை. அதற்கான முயற்சியே இல்லை. எங்கே குடிப்பது? எப்படிக் குடிப்பது? குடிப்பதற்கான தொகையை எங்கிருந்து பெறுவது? இப்படியே ஒவ்வொரு நாளும் சென்றது. எப்படியோ பணம் கிடைக்கும். போதை தலைக்கேறிப் புத்தி பிசகும் வரை இருவரும் நல்லூழின் வசம் இருப்போம். பிறகு மனம் வேறுபட்டுப் பிரிந்துவிடுவோம். அடுத்த போதை கிடைத்துவிட்டால் சண்டையெல்லாம் மறைந்துவிடும். கவிதைகள் குறித்துப் பேசுவது குறையத் தொடங்கியது. சுத்தமாக வாசிப்பு இல்லாமல் போனது. பிரான்சி எனக்கு முன்பே வாசிப்பை நிறுத்தியிருந்தார். போதையின் பெரும் வாய்க்கு இருவருமே இரையானோம். நினைவுகளை அரித்துச் சலித்து ஆவியாக்கிக்கொண்டிருந்தது மது. பிரான்சிக்கு அதுகுறித்த எந்தப் பயமும் வலியும் இல்லை. ஆனால் எனக்கு எங்கோ மனதின் ஒரு மூலையில் குற்றவுணர்வு அரும்பி விரியத்தொடங்கியது. ஆனாலும் மதுப்பழக்கம் எங்களை விடவில்லை. 

குற்றவுணர்வுடன் குடிக்கத்தொடங்கிய நாள்தொட்டு எனக்குள் சினமும் வன்மமும் வளரத்தொடங்கியது. கண்டவரையெல்லாம் ஏசத்தொடங்கினேன். கண்டதையெல்லாம் உடைத்துப் போட்டேன். முதல்முறையாக நான் பெரிதும் மதித்த, மனம் திறந்து காதலித்த எனது மூவர் முதலிகளில் (தேவதேவன், பிரமிள், பிரான்சிஸ் கிருபா) ஒருவரான பிரான்சியை ஒரு புத்தகக் கண்காட்சிக் கூட்டத்தின் மத்தியில் வைத்து ஓங்கி அறைந்துவிட்டேன். எந்தக் காரணமும் இல்லை அல்லது என்ன காரணமென்று தெரியவில்லை. பிறகு குற்றவுணர்வு அதிகமாகத் தொடங்கியது. பிரான்சியை ஏறிடும் தகுதியை இழந்தேன். அவர் எப்போதும் போலவே அழைத்தார். அது என்னை மேலும் குற்றவுணர்வின் குழிக்குள் தள்ளியது. அவரைச் சந்திப்பதைத் தவிர்த்தேன். எங்கேனும் சந்தித்தாலும் எதிர்கொள்ள முடிந்ததில்லை. கையில் பணமிருந்தால் அவரிடம் தந்துவிட்டு அங்கிருந்து மறைந்துவிடுவேன். அவர் ஒருபக்கம் நோயாளியாக வளர்ந்தார். நான் ஒருபக்கம் நோயாளியாக வளர்ந்தேன்.

ஒருநாள் அதிகமான மது போதையில் பிரான்சியைச் சந்திக்க வேண்டுமென்று அரித்தது. மன்னிப்பு கேட்காவிட்டால் மண்டை வெடித்துவிடும் என்ற நிலை. அவரது அலைபேசிக்கு அழைத்தேன். எப்போதும் போல அவரிடம் அலைபேசி இல்லை. அவரைச் சந்தித்துவிட வேண்டுமென்று அலைந்து திரிந்து வடபழனியில் ஒரு நண்பரின் அலுவலகத்தில் கண்டுபிடித்துவிட்டேன். பார்த்த வேகத்தில் அவரது கால்களில் விழுந்து அழுதேன். பதறிவிட்டார். நல்ல போதையில் மெல்லச் சிரித்தார். ஆறத் தழுவிக்கொண்டார். நான் அவரை அடித்ததே அவருக்கு நினைவில் இல்லை. அது இன்னும் என்னைக் குற்றவுணர்வுக்குள் தள்ளியது. சூழலை இலகுவாக்கினார் பிரான்சியின் நண்பர். கண்ணதாசன் பாடல் ஒலிக்கவிடப்பட்டது. பணம் சென்றது. மதுப்போத்தல்களாக வந்தன. குடி, குடி, குடி.

பிரான்சியிடம் பெருஞ்சினம் உண்டு. வெளிப்பாட்டில் அது வீரியம் இழந்தே வெளிப்பட்டது. பெருங்காமம் உண்டு. அணையும் உடல் இல்லாமல் அக்காமம் கழிவிரக்கக் கவிதைகளாக நிலைபெயர்ந்துவிட்டது. ஒரு மகாகவிஞனின் மேன்மையும் ஆகக்கீழான குடிநோயாளியின் கீழ்மையும் பிரான்சியிடம் எப்போதும் இருந்தது. அகமுரண் பிய்த்துக் குதறும் ஞானமலராகவே அவர் இருந்தார். உள்முரண் கொடையளித்த போதைக்குத் தன்னை ஒப்புக்கொடுத்து வாழ்ந்துவந்தவர் பிரான்சி.

பிரான்சி மூலம் எனக்கு அறிமுகமான மாமனிதர்களும் மகத்துவமான கவிஞர்களும் உண்டு. அன்பு அண்ணன் யூமா. வாசுகி, பேரன்பும் பெருங்கனிவும் கொண்ட காலம்சென்ற கவிஞர் கண்ணகன், தமிழினி பதிப்பாசிரியர் ஐயா வசந்தகுமார் அவர்கள் போன்றோர் குறிப்பிடத்தகுந்தவர்கள்.

கவிஞர் கண்ணகன் கும்பகோணத்தில் தமிழாசிரியராகப் பணியிலிருந்தார். தினமும் பிரான்சியிடம் அலைபேசியில் பேசுவார். மாதாமாதம் அவரிடமிருந்தும் அன்பு அண்ணன் விஜயராஜ் சோழனிடமிருந்தும் தேதி தவறாமல் பணம் பிரான்சிக்கு வந்துவிடும். கண்ணகனின் கவிதைகளடங்கிய கையெழுத்துப் பிரதி பிரான்சியிடம் இருந்தது. “பறவைக்குள் அடையும் கூடு” என்பது தலைப்பு. பிரான்சியின் மீது சொல்லொணா பற்றும் அன்பும் கொண்டிருந்தார் கண்ணகன். அன்றாடம் குடித்ததும் கண்ணகனின் கவிதைகளை ஒவ்வொன்றாக வாய்விட்டு வாசித்துக் காட்டுவது எனக்குப் பிடித்திருந்தது. அப்போது பிரான்சி தங்கியிருந்த ஏதோ ஓர் அறையில் கவிதை வாசிப்பு தொடர்ந்து நிகழ்ந்தது. வாசித்த கவிதையையே மீண்டும் மீண்டும் வாசித்து என்னைப் பிரான்சியும் பிரான்சியை நானும் கடித்துக்கொள்வோம். கண்ணகனுக்கு அலைபேசி செய்து விடிய விடிய பேசுவோம். ஒருநாள் போதையோடு போதையாகக் கண்ணகனிடம் பேசிவிட்டுக் கும்பகோணம் கிளம்பினோம்.

எப்போதும் போல மதுவைக் குடிநீர்ப் போத்தல்களில் அடைத்துக்கொண்டு (குறைந்தது ஐந்து பாட்டில்கள் எனது சேமிப்பில் இருக்கும்) பேருந்தில் ஏறி அமர்ந்தோம். ஏற்கனவே அளவுக்கதிகமான போதையில் பிரான்சி இருந்தார். மதுவை அவரது உடல் எப்போதும் ஏற்றுக்கொண்டதில்லை. எனக்குக் குடித்துக் குடித்து Increased tolerance. குடித்துக்கொண்டே இருக்க வேண்டும். ஒருகட்டத்தில் blackout stage வந்தால்தான் குடிப்பதை நிறுத்த முடியும். அதனால் பிரான்சியை ஓரளவிற்கு என்னால் சமாளித்துப் பார்த்துக்கொள்ள முடிந்தது. பேருந்துப் பயணம் முழுக்கப் பாடிக்கொண்டும் பேசிக்கொண்டும் சென்றோம். யாரையும் பெரிய அளவில் சிரமப்படுத்தாத நிலையிலேயே பயணம் சென்றது. பிரான்சியின் இயல்பில் ஆங்காரமோ வெடித்தெழுந்து ஆர்ப்பரிப்பதோ எப்போதும் இருந்ததில்லை. எனக்குத்தான் வன்மம், சினம் என நிறைய கோளாறுகள் அளவுக்கதிமாகவே அந்நாட்களில் இருந்தன. ஜன்னலோர இருக்கைக்கு எழுந்து மாறி அமர்ந்துகொண்டு வானத்தையே பார்த்தவாறு வந்தார்.

நான் தண்ணீர்ப் பாட்டிலில் இருந்த மதுவை ஒரு மிடறு பருகிவிட்டு அவரிடம் நீட்டுவேன். அவர் பருகுவார். கலைந்து கலைந்து சேரும் மேகங்களைப் பார்த்தவாறே சென்றோம். இடையிடையில் அண்ணன் விஷ்ணுபுரம் சரவணனின் அலைபேசியிலிருந்து கண்ணகனும் விஷ்ணுபுரம் சரவணனும் எங்கள் வருகையை உறுதிப்படுத்திக்கொண்டிருந்தார்கள். வானத்தில் கரைந்துகொண்டிருந்த பிரான்சி திடுமெனத் திரும்பி என்னைப் பார்த்து, “இப்போது மரியா ஏசுவுக்கு பரமண்டலத்தில் முலையூட்டிக் கலைவாள், பார்” என்றார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. திரண்டுவந்த மேகக்கூட்டங்களைப் பார்க்குமாறு கண்களால் ஜாடை காட்டினார். அந்தக் கணத்தின் அவரது கண்களை எந்தநிலையிலும் என்னால் மறக்க முடியாது. வெறியாட்டயரும் அணங்குற்ற சூரர மகளின் பித்துக்கண்கள் அவை. ஒவ்வொன்றாக ஒன்றுகூடிய மேகங்கள் அச்சு அசலாக கைகளில் குழந்தையை ஏந்தியிருக்கும் ஒரு வெள்ளை உருவத்தை வரைந்து நிறுத்தின. எனக்குத் தூக்கிவாரிப்போட்டது. கும்பகோணம் வந்து இறங்கும்வரை என்னால் பேச முடியவில்லை. பிரான்சி வானத்தையே வெறித்தவாறு குமிழ்ச்சிரிப்பை ஏந்தியிருந்தார். இறங்கியதும் விஷ்ணுபுரம் சரவணன் விடுதி ஒன்றின் அறைக்கு அழைத்துச் சென்றார். கண்ணகனைக் கட்டித் தழுவினோம். அன்புருக அழுதோம். அரற்றினோம். என்பும் உருக இராப்பகல் ஏத்தினோம். எம் பொன்மணியை கண்ணகனை உச்சிமோந்தோம். திருத்தமுறக் களித்தோம். அங்கிருந்து கிளம்பி சென்னை வரும் வழியெங்கும் மரியாவைத் தேடிக் குழந்தை ஏசு கலைந்தும் திரண்டும் அலைவுற்றதைக் கண்டுகொண்டே வந்துசேர்ந்தோம்.

சென்னை வந்த சில நாட்கள் கழித்து, பம்பாயில் அவர் வாழ்ந்த நாட்கள் குறித்துப் பேசியவற்றிலிருந்து, அவரை மேலும் புரிந்துகொண்டேன். அபூர்வமான ஒரு நிலையில் பின்நடப்பவற்றை முன்னுணரும் ஓராற்றல் பிரான்சியிடம் இருந்தது. அதைப் பற்றி அவர் சொல்லும்போது எந்தவித வியப்பும் இல்லாமலேதான் சொல்வார். நண்பர்கள் மத்தியில் முதலில் இறப்பவர் பட்டியலில் முதல் ஆளாக நான்தான் இருந்தேன். கண்ணகனுக்குச் சாவே இல்லை என்றே நம்பினோம். ஆனால் அன்பு செய்வதில் முந்திக்கொண்ட கண்ணகன் அகாலத்தையும் முதல் ஆளாகத் தழுவிக்கொண்டார். 

யூமா வாசுகி அண்ணனும் வசந்தகுமார் ஐயாவும் பிரான்சிக்கும் எனக்கும் வழிகாட்ட வந்த நல்லுயிர்கள் என்றே நான் இன்றளவும் உணர்கிறேன். பிரான்சி ஊருக்குக் கவிஞனாக, எழுத்தாளுமையாக அறிமுகமானதும் நிலைபெற்றதும் இந்த இரண்டு பேருள்ளங்களால்தான்.

குடிப்பதற்குப் பணமில்லாத ஒருசில தருணங்களில் சேகரிப்பிலிருந்த புத்தகங்களை விற்றுக் குடித்திருக்கிறேன். அப்படியொரு முறை புத்தகங்களோடு எனது கவிதைகளடங்கிய கையெழுத்துப் பிரதியும் சென்றுவிட்டது. எப்போதோ என்றோ நான் கொடுத்திருந்த கவிதைகளைத் தமிழினி வசந்தகுமார் ஐயாவிடம் தந்து எனது இரண்டாவது கவிதைத் தொகுப்பான “தேனை ஊற்றித் தீயை அணைக்கிறான் திகம்பரன்” வெளிவரக் காரணமானவர் அண்ணன் யூமா வாசுகி. அதன்பிறகு தொடர்ச்சியாக என்னை ஊக்கப்படுத்தியும் வழிப்படுத்தியும் வழிகாட்டியும் வருபவர் ஐயா வசந்தகுமார். போதையை விட்டு நான் தள்ளியிருப்பதற்கான அடிப்படைக் காரணங்களில் இந்த இருவரின் பேரன்பும் இருக்கிறது. பிரான்சிக்கும் மீட்சிக்கான காரணங்கள் நிறைய இருந்தன. அவற்றையெல்லாம் உணர முடியாத திரைக்குப் பின்னால் அவர் சென்றுவிட்டிருந்தார் என்றே இப்போது உணர்கிறேன். யூமா அண்ணன் குறித்தும் வசந்தகுமார் ஐயா குறித்தும் நிறைய எழுத இருக்கிறது. எழுதுவேன்.

*

மாதாமாதம் திருவண்ணாமலை கிரிவலம் சென்றுவரும் பழக்கமிருந்தது அப்போது எனக்கு. போதையில் சென்று சிவனைக் காமுறுவது எனது பக்தி. பிரான்சிக்குச் சிவன் மேலும் ரமணர் மேலும் ஒருவகையான காதல் இருந்தது. ஒருநாள் தானும் திருவண்ணாமலை வருவதாக என்னிடம் சொன்னார். கோயம்பேட்டில் மது அருந்திவிட்டு அளவுக்கதிகமான போதையில் அங்கேயே உறங்கிவிட்டோம். கிரிவலம் செல்ல முடியவில்லை. அடுத்தொரு மாதம் மிதமாக அருந்திவிட்டு பாட்டிலில் மதுவைச் சேமித்துக்கொண்டு பேருந்தில் செல்லச் செல்லக் குடித்துக் கத்திக் கதறியதில் பாதி வழியிலேயே இறக்கிவிட்டார்கள். பிறகொரு கார்த்திகை மாதம். எப்படியும் சென்றுவிட வேண்டும் என்றே நினைத்தோம். மதுவிடுதியை விட்டே அன்று வெளியேற முடியாத போதையில் தடுமாறித் தடுமாறி வாசலில் விழுந்துகிடந்தோம். ஊரே கார்த்திகை தீப ஒளியில் மிதந்தது. இருவருக்கும் வெறி. சாலையை அளாவியவாறு வடபழனி சிவன் கோயிலின் உள் நுழைந்தோம். எங்களை வெளியே போகச் சொல்லிக் கூடியிருந்தவர்கள் கத்தினார்கள். கடைத்தெருவிலிருந்து விபூதி வாங்கிப் பட்டையடித்துக்கொண்டோம். மஞ்சள்நிற வேட்டிகளை வாங்கிக் கால்சராய்க்கு மேலேயே அணிந்துகொண்டோம். கைவிளக்குகள் வாங்கித் திரியிட்டு எண்ணெய் ஊற்றி இருவரும் உள்ளங்கையில் ஏந்திக்கொண்டு நெரிசல் மிகுந்த சிவன் கோயில் வாசலிலிருந்து வீதிக்குள் கரைந்தோம்.

குடிப்பதும் சண்டையிடுவதும் கண்ணதாசன் பாடல்களை வியப்பதும் என்றே நாட்கள் கழிந்தன. ஒருகட்டத்தில் குடியை விடவேண்டும் என்ற மனநிலை எனக்கு வந்தது. அதற்கான உதவிகளை வீட்டாரும் நண்பர்களும் மனமுவந்து செய்தார்கள். நான் மெல்ல மெல்ல மறுவாழ்வு மையங்கள், வாசிப்பு, மெய்யியல் புரிதல் என்று பாதையை மாற்றிக்கொண்டு முன்னகர்ந்தேன். பிரான்சியை என்னுடன் மறுவாழ்வு மையத்தில் தங்குமாறு பலமுறை பலவாறு வேண்டிப் பார்த்தேன். அவர் சம்மதிக்கவில்லை. அவர் தன்னைக் குடிநோயாளியாகக் கடைசிவரை ஏற்றுக்கொள்ளவில்லை. தன்னால் நினைத்த மாத்திரத்தில் குடியை விட்டுத்தொலைக்க முடியும் என்றே நம்பினார். ஆனால் வஞ்சகமான இந்தக் குடிநோய் பெருங்காதலுடன் கவிஞர்களையும் எழுத்தாளுமைகளையும் தந்திரமாக ஏமாற்றும் வித்தை அறிந்தது. அதன் முன்னால் நமது சவடால்கள் ஒன்றும் எடுபடாது. கொஞ்ச கொஞ்சமாகப் பிரான்சியைச் சந்திப்பது குறைந்தது. அவரைச் சந்திக்க நேரும்போதெல்லாம் சிகிச்சைக்கு வருமாறு வலியுறுத்துவேன். அவராக வளர்த்துக்கொண்ட பிரமைகளின் வெளிச்சத்தில் எங்கோ போய்க்கொண்டிருந்தார். முற்றுமாகப் பேசுவது நின்றுபோனது. அவரிடம் அலைபேசி நிரந்தரமாக இருந்ததே இல்லை. அவராக அழைத்தால் ஒழிய அவரைக் கேட்பதும் காண்பதும் முடியாதது. பல மாதங்கள் பேச்சே இல்லை.

“கொங்கு தேர் வாழ்க்கை – பகுதி 2” வெளிவந்திருந்த வேளை. பிரான்சியிடம் புத்தகத்தின் ஒரு பிரதியைத் தந்து என்னிடம் சேர்ப்பிக்கச் செய்தார் வசந்தகுமார் ஐயா. எனக்கே மறந்துபோன, நான் தொலைத்திருந்த கவிதைகளெல்லாம் கொங்குதேர் வாழ்க்கையில் நித்யமடைந்திருந்தன. அந்தச் சந்திப்பின்வழி மீண்டும் பிரான்சியுடனான உறவு தொடர்ந்தது. அப்போது பார்த்த பிரான்சி ஆழமாக இருண்டிருந்தார். அவரின் கண்களில் மிளிர்ந்து பரவும் தேவதையின் கீற்று மங்கியிருந்தது. உடலளவில் மிகவும் தளர்ந்திருந்தார். எனக்குள் குற்றவுணர்வு மேலோங்கியது. எனது சொந்த வாழ்க்கைக்காகப் பிரான்சியைவிட்டு விலகிவிட்டேனா என்று பதட்டமாக உணர்ந்தேன். பின்னொரு நாளில் வசந்தகுமார் ஐயாவிடம் இதைச் சொன்னபோது அவர், “உனது தவறொன்றும் இல்லை, போதையற்ற பாதையில் நீ முன்னேறு” என்றார். நானும் முன்னகர்ந்தேன். மறுவாழ்வு மையங்களின் பயிற்சிகள் பெரிதும் உதவவில்லை என்றாலும் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியின் பேச்சுகள் அடங்கிய புத்தகங்கள், ரமணரின் பதில்கள், திருமூலரின் “முன்னை அறிவு முடிகின்ற காலமும் என்னை அறியலுற்று இன்புற்றவாறே” முதலிய சூத்திரங்களும், மிக முக்கியமாகத் தாயுமானவரின் “சும்மா இருத்தல்” தத்துவமும் நிறையவே பயனளித்தன.

இவற்றையெல்லாம் பிரான்சியிடம் வாசிக்கத் தந்து வற்புறுத்தினேன். எனது குரலும் இருப்பும் உறைக்காத ஓங்கிய உயரத்தில் அவர் சஞ்சரித்துக்கொண்டிருந்தார். நானும் நடப்பவற்றை அவற்றின் போக்கில் ஏற்றுக்கொள்வதற்குப் பழகிவிட்டேன். பழகி வருகிறேன். விலகியிருந்து பார்ப்பவர்கள் பிரான்சியைப் பற்றற்றவர் என்றும் வெளிப்படையானவர் என்றும் இன்னும் அவரல்லாத ஒருவரை அவரென்று வரைந்துகொள்வதுண்டு. அவருடன் இத்தனை ஆண்டுகள் நெருங்கிப் பழகியிருந்ததில் ஓரளவு பிரான்சியின் இயல்புகளை, இயற்கையை உணர்ந்திருக்கிறேன் அல்லது புரிந்துகொண்டு வாழ்ந்திருக்கிறேன். 

பிரான்சியிடம் பொருட்பற்று உண்டு. உடைகளின் மீது அவருக்குத் தீராத காதல் இருந்தது. இஸ்திரி போடாமல் உடைகள் அணிந்தது அபூர்வம். ஊன்கறி மீதும் அவருக்குப் பெருவிருப்பம் இருந்தது. உடலும் குடலும் ஒத்துழைக்கவில்லை. அதுதான் விஷயம். திருமண விருப்பம் இருந்தது. அவரின் இயல்பு காரணமாக அவருக்குள் தேங்கித் தேங்கி நோயாக மாறிக்கொண்டிருந்த காமம், வெறியாகவோ வன்முறையாகவோ மாறவில்லை. பெரும் போதையிலேயே இருந்ததால் காமம் காமமாகவே இல்லையென்றும் சொல்லலாம். மனோரீதியாக ஒரு குடிநோயாளிக்கு இருக்கும் பயமும் சினமும் கழிவிரக்கமும் அகந்தையும் பொய்யும் வழுவும் என எல்லாமே இருந்தது. அது அவராக வளர்த்துக்கொண்டதில்லை. சாக்கடையில் விழுந்த மலர் சுயநிறம் கெடும். சுயமணம் கெடும். விழுந்தது எங்கே என்பதை உணர்ந்தால் அங்கிருந்து எழுந்துவிடலாம். உணர்ந்துகொள்வதற்கு உள்ளிருந்து உடைப்பு நிகழ வேண்டும். திறப்புகள் ஏற்பட வேண்டும்.

அடிப்படையில், குடியைப் பற்றுவதற்கு ஆயிரம் காரணம் இருந்துவிடுவது போல, குடியை விடுவதற்கான ஒரே ஒரு காரணம் ஆழமாக உள்ளிருந்து உதிக்க வேண்டும். அந்தக் காரணம் ஒரு பாவனையாகக்கூட இருக்கலாம். ஆனால் அது பேறான பாவனையாக நம்மை வெளியேற்றி உள்ளனுப்பும். உடைப்பும் திறப்பும் நிகழ்வதன் முன் பிரான்சி தன்னை மூடிக்கொண்டு விட்டார்.

கவிஞனாக பிரான்சி அடைந்திருக்கும் உயரத்தையும் கண்ட தரிசனங்களையும் வேறெவராலும் அடையவும் முடியாது காணவும் முடியாது. (கவிஞன் பிரான்சியைத் தன்மையில் உணர்வதால் ‘அவன்’ என்று ஒருமையில் எழுதுகிறேன்)

ஆண்டாளிடத்தில் உணர்ந்த அனுகாரத்தையும் அனுராகத்தையும் பிரான்சியிடத்திலும் துளியும் குன்றாது உணர்ந்திருக்கிறேன். இறுதி நாட்களில் வெளியான அவனது கவிதைகளில் அதிகமும் கழிவிரக்கமும், இயலாமையை ஏற்றுக்கொள்ளாத பழிபோடலும், தன்னுணர மறுத்துத் தப்பித்துச் செல்லலும் அதிகம் பதிவாகியிருப்பதாக உணர்கிறேன். ஆனால் கவிஞன் பிரான்சி கடைசி நாட்களில் வாழ்ந்தவன் இல்லை. இறுதிநாட்களில் இருந்தவன் வெறும் மனிதன். அகச்சிக்கல்களுக்குத் தன்னை இரை தந்த வெறும் ஒருவன். இனிவரும் காலங்களிலும் எல்லோர் மனதிலும் நின்று ஆளவிருப்பவன், நித்யமாகச் சஞ்சரிப்பவன் “ஏறக்குறைய இறைவனான” கவிஞன் பிரான்சிதான். நாம் உள்வாங்கிக்கொள்ள வேண்டியவனும் கற்றுக்கொள்ள வேண்டியவனும் பின்பற்ற வேண்டியவனும் மெய்நிகராகத் தனது கவிதைகளில் கிளர்ந்தெரிந்தவாறு இருக்கும் கவிஞர் பிரான்சிஸ் கிருபாதான். பிரான்சியின் கவிதைகளில் நான் தரிசித்த உள்ளொளிகளை வரும்காலங்களில் எழுதுவேன். பிரான்சியின் பேரிருப்பும் இறையாற்றலின் திருக்குறிப்பும் எனது பணிசெய்ய உதவும்.

*

திரைத்துறையில் பிரான்சியின் பங்களிப்பும் ஈடுபாடும் மிகக் குறைவே. அவரை வாசித்த சில திரைப்பட உதவி இயக்குநர்களின் கதை விவாதங்களில் கலந்துகொள்ளத் தொடங்கினார். கட்டற்ற பிரான்சிக்கு ஓர் ஒழுங்குக்குள் இயங்குவது பெரும் வேதனையாகவே இருந்தது. தொடக்கத்தில் வசனம் எழுதப் பணிக்கப்பட்டார். அதைச் சிரமமாகவே கருதினார். பிறகு பாடல் எழுத அழைக்கப்பட்டார். அது பிரான்சிக்கு இன்னும் கடினமாக இருந்தது. கட்டுக்குள் நின்றெரியாத அந்தச் சுடர் மெட்டுக்குள் திணறியது. பிரான்சிக்கு மரபிலக்கிய வாசிப்பு ஆழமாக இருந்ததில்லை. யாப்பை சீர் பிரித்து வாசிப்பது அவருக்கு ஆகாத ஒன்றாகவே இருந்தது. பாடலைக் கறாரற்ற யாப்பென்றே சொல்லலாம். இசையமைதியும் சொல்லமைதியும் இயைந்து செல்ல வேண்டும். ஓரளவிற்குச் செய்யுள் வாசிப்பு இருந்தாலே பிடிபடக் கூடியதுதான் என்றாலும் பிரான்சியின் இயல்புக்கு அதுவும் கடினமாகவே இருந்தது. என்னால் முடிந்த வழிமுறைகளை நான் பிரான்சியிடம் பகிர்ந்துகொண்டேன். திருக்குறளையும் சித்தர் பாடல்களையும் தந்து வாசிக்கச் சொல்லிக் கேட்டுக்கொண்டேன். அவற்றை வாசிக்க வாசிக்க ஆழ்மனதுக்குத் தாளம் பழக்கமாகும் என்றும் சொன்னேன்.

பிரான்சிக்கு வாசிப்பதிலும் நிறைய சிரமங்கள் இருந்தன. பம்பாயில் வசித்த நாட்களில் நிறைய வாசித்ததாக பிரான்சி சொல்வார். சென்னை வந்த பிறகு வாசிப்பு குறையத் தொடங்கியிருக்கிறது. நான் சந்தித்த நாளிலிருந்து அவர் வாசித்துக் கண்டதில்லை. ஒரு புத்தகத்தை முடிக்கவே மெனக்கெடுவார். சொன்ன நேரம் செல்ல வேண்டும். கேட்ட நேரத்தில் தரவேண்டும். நிறைவளிக்கும் வரை எழுதித் தரவேண்டும் எனத் திரைப்பாடல் விஷயங்களில் நிறைய இருக்கிறது. அவையெல்லாம் பிரான்சியின் இயல்புக்குச் சுத்தமாக ஒத்துவரவில்லை. தெரிந்த சில நண்பர்களின் படங்களில் வேலை பார்த்தார். வெளியாட்கள் அவரை அழைக்கும் சூழல் இருந்ததில்லை. ஆனால் பேரியற்கையின் பேராற்றல் பிரான்சிக்குக் கணம் கணம் உள்ளொளிகளின் தெறிப்புகளை அருளியவாறே இருந்தது. இறையருளை உள்வாங்கிக்கொள்ளும் உன்னத நிலையிலிருந்த வரை பிரான்சி ஆகச்சிறந்த படைப்புகளைப் படைத்தார். ஆகூழின் செல்லப்பிள்ளையான பிரான்சி உன்னத நிலையினின்று கீழிறங்கியது போகூழ் என்றே சொல்ல வேண்டும்.

பழைய ஹிந்திப் பாடல்கள் நிறைய பாடுவார். பாடலின் பொருளை எனக்கு விளக்கிச்சொல்லி வியப்பார். கண்ணதாசனை மானசீகமாகக் காதலித்தார். ஸ்வர்ணலதா பாடிய “என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்” பாடலை அலைபேசியில் ஒலிக்கவிட்டு சொல்லறுந்த பாழில் இருவருமாகத் திளைத்திருப்போம். “விழியே கதை எழுது” பாடலில் வரும் “மேகங்கள் போல் நெஞ்சில் ஓடும் வானத்தை யார் மூடக்கூடும்” என்ற வரிகளுக்குப் பதிலாக “வானத்தில் நீ வைத்த பாதம் எப்போது நிலவாக மாறும்” என்று தான் எழுதிய வரிகளைப் போட்டுப் பாடுவார். இன்றுவரையில் அந்தப் பாடலை நினைத்தாலோ கேட்டாலோ பிரான்சி சொன்ன வரிகளையே எனது மனம் முணுமுணுத்துக்கொள்ளும். “வானத்தில் நீ வைத்த பாதம் எப்போது நிலவாக மாறும்.”

இதுநாள் வரையான வாழ்வில் முக்கால்பங்கு போதையிலேயே கழித்தவன் நான். நினைவிலிருந்து மேலெழுந்து வந்தவற்றை முடிந்த வரை பகிர்ந்திருக்கிறேன். பிரான்சியும் நானும் போதையற்ற தெளிந்த நிலையில் சந்தித்துக்கொண்டது கடுகினும் சிறிதே. எனக்குத் தெரிந்து மூன்று மாத காலம் பிரான்சி மது அருந்தாமல் இருந்திருக்கிறார். நண்பர்களின் வற்புறுத்தலில் ஏதோ மறுவாழ்வு மையத்தில் சில நாட்கள் இருந்து வெளிவந்த பிறகான மூன்று மாதங்கள் அவை. எனக்குச் சொல்லொண்ணாத மகிழ்ச்சி. என்னால் முடியாத ஒன்றை எனது ஆசான் செய்துவிட்டார் என்ற பெருமிதம். ஆனால் நான் குடித்துக்கொண்டுதான் இருந்தேன். தோல்வியுற்ற ஒரு மறுவாழ்வு மைய வாசியாகிய நான் பெரிதும் அவரது மறுவாழ்வை வரவேற்றேன். அந்த மூன்று மாதங்களும் பிரான்சி பெருங்காதலுடன் உணவு உண்டார். காலை எழுந்ததும் பல் துலக்கி, குளித்து, துவைத்த உடைகளை அணிந்து நூலகம் சென்று வந்தார். கவனம் குவிவதில் பெரும் சிரமம் இருந்ததைச் சொன்னார்.

எனக்குப் பிரான்சி குடிக்காமலிருந்ததே போதுமென்று மகிழ்ந்தேன். படைப்புத் தேவதைகளின் கவிப்பிள்ளை மீண்டுவிட்டான் என்ற மகிழ்ச்சியில் நான் கண்மண் தெரியாமல் குடித்து வந்தேன். எனது சந்திப்பு அவரைக் குடிக்கத் தூண்டிவிடும் என்ற அச்சத்தில் அவருடன் அலைபேசியில் பேசிக்கொள்வதோடு நிறுத்திக்கொண்டேன். யாரேனும் நண்பர்களின் வழி என்னால் முடிந்த தொகையைத் தந்தனுப்புவேன். மூன்று மாதங்களுக்குப் பிறகு மீண்டும் பழைய பிரான்சி திரும்பிவிட்டார். நண்பர் சொன்னதைக் கேட்டுப் பதற்றமடைந்தேன். அவரது அறைக்குச் சென்று பார்த்தேன். அந்தச் சின்ன அறையில் உடையே இல்லாமல் கிடந்தார். படைப்புத் தேவதைகள் பிரான்சியைச் சூழநின்று மார்பில் அடித்துக்கொண்டு அழும் குரல் எனக்குக் கேட்டது. அங்கேயே ஓரமாக அமர்ந்துவிட்டேன்.

சில மணி நேரங்கள் கழித்து எழுந்தார். போதை கலையாத பிரான்சி என்னைப் பார்த்துக் கேட்டார். “கார்த்தி, நீ தாய்ப்பால் குடிச்சிருக்கியா?” நான் குடித்ததுண்டு என்று தலையாட்டினேன். பிரான்சி எனது கால்களைப் பிடித்துக்கொண்டு கண்களைப் பார்த்துச் சொன்னார்- “நான் தாய்ப்பாலே குடிச்சதில்லடா, தம்பி”. ஓங்கித் தரையில் அடித்துக்கொண்டு அழுதேன். பிரான்சியை முத்தமிட்டேன். யோசிக்கவே இல்லை. கடைக்குச் சென்றேன். மது வாங்கினேன். இருவருமாகக் குடித்தோம்.

எனது திருமணத்திற்குப் பிரான்சி வந்திருந்தார். “இப்டியே இரு, குடி உனக்குப் போதும்” என்று சொல்லிச் சென்றார். அதன்பிறகு மூன்று மாதங்கள் கழித்து பிரான்சியின் “சக்தியின் கூத்தில் ஒளி ஒரு தாளம்” கவிதைத் தொகுப்பு வெளியீட்டுக்கு மனைவியும் நானும் சென்று வந்தோம். எனது மனைவியை வாழ்த்தினார். என்னைப் பார்த்து அவருக்கே உரிய குமிழ்ச்சிரிப்பை உதிர்த்தார். அவரைக் கைதுசெய்தது, கொலைப்பழி சுமத்தியது எல்லாம் நீங்கா வலியை ஏற்படுத்தின. நாட்கள் சென்றன.

பிரான்சியைப் பிடிக்கவே முடியவில்லை. பிரான்சியின் நலனில் பெரிதும் அக்கறை செலுத்திவந்த தம்பி சையத், கவின் மலர் அக்காவிடமிருந்து அவ்வப்போது செய்திகளைப் பெற்றுவந்தேன். சில மாதங்களுக்கு முன் பெரிய விபத்து ஏற்பட்டு எலும்புகள் உடைந்து சிகிச்சைக்காகக் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிலநாட்கள் இருந்து வெளியில் வந்தார். மது அருந்துவதை அறவே விடவேண்டும் என்பதே மருத்துவரின் வேண்டுகோள், கட்டளை. ஆனால் பிரான்சியால் மதுவை விடமுடியவில்லை. ஒருநாள் புது எண்ணிலிருந்து எனக்கு அழைப்பு வந்தது. மனைவி எடுத்துப்பேசினார். குளித்துவிட்டு வந்த என்னிடம் பிரான்சி அழைத்ததைச் சொன்னார். அந்த எண்ணிற்கு அழைத்துப் பேசினேன். பிரான்சியின் குரல் உற்சாகமாக இருந்தது. என்னைப் பற்றியும் மனைவி பற்றியும் விசாரித்தார். குழந்தை பிறந்திருப்பதைச் சொன்னேன்.மௌனமாக இருந்தார். அந்த மௌனத்தின் பின்னால் அவரின் குறுநகையை உணர்ந்தேன். கோவிலம்பாக்கத்தில் தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும் அறையில் சில புத்தகங்களும் டிவியும் இருப்பதாகவும் சொன்னார். “குடிப்பழக்கம் குறைந்திருக்கிறதா?” என்று கேட்டேன். எதிர்முனையில் அதே மௌனமும் குமிழ்ச்சிரிப்பும். “உன்னைப் பார்க்க வேண்டும்” என்றார். உறுதியாக வரும் வாரம் வந்து சந்திப்பதாக உறுதியளித்தேன்.

பேசி முடித்த நான்காவது நாள் பிரான்சி இறந்த தகவல் வந்தது. இப்படிப் போயிருக்க வேண்டியதில்லை ஆசானே என்று நீண்ட மௌனத்தில் பெருமூச்சுவிட்டேன்.

எத்தனையோ கரங்கள்

உன்னைத் தழுவிச் சுமக்க நீண்டன.

எத்தனையோ கண்ணீர் 

உனது பிரமைகளைக் 

கழுவப் பெருகின.

எத்தனையோ உள்ளம் 

உன் நலனுக்காகத் துடித்தன.

ஒன்றுகூடவா உன் 

விழித்திருந்த உயிரை

வந்தடையவில்லை

பிரான்சி?

இத்தனை வருடங்களில் எத்தனையோ நடந்துவிட்டன. எத்தனையோ மாறிவிட்டன. இன்னும் நினைவைத் தூண்டிச் சொல்ல எத்தனையோ இருக்கிறது. ஆனால் யாராலும் நுழைய முடியாத தூயத் தனிமையில் நீண்டு குளிர்ந்துகிடந்த பிரான்சியின் கால்மாட்டில் ஏற்றிவைத்த சுடர், நான் தவறவிட்ட ஒரு சிவனைக் காட்டி அசைந்தது.

மேன்மையும் கீழ்மையும்

முரணிய மாமனத்தின்

கண்ணீர் விழைத்த

ஞானமலர் நீ பிரான்சி.

போய் வா. 

வருகிறேன்.

4 comments

panneerselvam September 29, 2021 - 10:04 am

இந்த கட்டுரை மனதை ஏதோ செய்கிறது. அருமை கார்த்திக்.

Velu Subramaniam September 29, 2021 - 10:07 am

தமிழில் முதன்மையான ஆத்மார்த்தமான ஒரு இரங்கல் பதிவு

Damodar Chandru September 29, 2021 - 12:09 pm

அருமையான பகிர்வு..

கணேஷ் பெருமாள் March 7, 2022 - 10:36 pm

பலவற்றை நீங்கிக் கடப்பவர்கள் நட்பை நீக்குதல் அரிது இருக்கை விட்டு போனவனை இருக்கை யிட்டு வைக்கச் சொல்லும் நீ உடுக்கை இழந்தவனின் கை

Comments are closed.