என்னை மயில் கொத்தியது

by யூமா வாசுகி
0 comment

அமரர் ஓ.வி.விஜயனின் “கசாக்கின் இதிகாசம்” நாவலில் வரும் காட்சி. ஒரு சிறுமி தன் ஆசிரியருக்குச் சாப்பாடு எடுத்துக்கொண்டு வன வழியே செல்கிறாள். அவளை மயில் கூட்டம் சூழ்கிறது. அவள் மனம் மயங்கி அப்பதைப் பிய்த்து இரை போடுகிறாள். தின்று முடித்த மயிலொன்று பின்னரும் கேட்டுத் தொடர்ந்துவந்து அவளைக் கொத்திவிடுகிறது. அவளுக்கு வலிக்கிறது. ஆயினும் அவள் தன் நண்பர்களிடம் மிகப் பெருமையாகச் சொல்லிக்கொள்கிறாள்.

“என்னை மயில் கொத்தியது!”

உலகின் நிறமெலாம் கொண்ட பிரபஞ்சப் பெருமயில் பிரான்சிஸின் ஆன்மாவை மிக விழைகிறது. அது கவர்ந்ததால் ஏற்பட்ட காயங்கள் அவரில் அனேகமனேகம். ஆயினும் அவர் மாளாப் புன்னகையுடன், பரவசத்துடன் சொல்கிறார்.

“என்னை மயில் கொத்தியது!”

அவற்றிலிருந்து அவர் உருவாக்கிய தன் மூச்சை ஊதிவிடுகிறார். அவை உயிர்பெற்று வந்து நமக்குத் திசைகளை உருவாக்குகின்றன. 

என் நிலத்தில், மொழியில் இவர் நிகழ்கிறார் என்ற காரணத்தால் என்றும் நன்றி கொண்டிருப்பவனாவேன். எப்போதோ பெய்த மழையின் சொட்டுகளை இரகசியமாகக் காப்பாற்றி வைத்திருக்கும் மரமாக நான் ஆக வேண்டும் என்பது விருப்பம். நடைபொழுதில் நிழலணைய என்னருகே இவர் சற்று நின்றால், இந்தச் சுத்தச் சுயம்புவின் மீது பொழிந்து ஆறுதலடைவேன்.

(ஜெ.பிரான்சிஸ் கிருபாவின் “சம்மனசுக் காடு” நூலுக்கான முகப்புக் கவிதை)

*

கசங்கல் பிரதி

சற்று முன்பு 

இந்த இடத்தில் நின்றுகொண்டிருந்தவள் 

இப்போதெங்கே 

வலியின் மறுப்பின்றி நகங்களைக் கிழித்து 

அதன் உட்புறங் காட்ட முடிந்ததே அவனால் 

குருட்டுப் பிச்சைக்காரனின் பாடல் 

பிடித்துக்கொண்டு போனதா 

விற்பனைப் பிரதிநிதியின் சரக்குப் பெட்டி கனத்தைத் 

தலையிலெடுத்துக்கொண்டு உடன் சென்றானா 

வெயில் வயல் நடுமரத்தில் 

ஊஞ்சல் கட்டியாடும் ஆடுமேய்ப்புப் பெண்களிடம் 

தயவுடன் கேட்பானோ தனக்கும் ஒரு வாய்ப்பு 

எப்போதும் 

இடமறிந்து அமைந்துவிடுகிற 

வரைகோடாய் இருப்பதில்லை அவன் வருகை 

அவனை நிற்க வைத்துப் போய் பெற்று வந்த

கொலை நிபந்தனைக் கடனின் 

சொற்ப சிலாக்கியத்தைச் சேர்ப்பிப்பதெப்படி 

மெல்லிய உதடைசவுகளில் 

தயக்கத்துடன் சொன்னான் 

ஒன்றும் புரியாமல் அதை ஆமோதித்தேன் 

உரத்த குரலில் திரும்பச் சொல்லும்போது 

புரிந்ததினாலேயே புறக்கணிக்கிறேன் 

குறிப்பெழுதப் பயன்படுத்தி 

கிழித்தெறியப்படுகின்ற

துண்டுச் சீட்டுகளிலொருவன் 

கொஞ்சம் கசங்கியிருந்தால் என்ன 

எனும் சமாதானம்.

மனிதன் என்பதை 

மீற முயலவில்லை என்றழுதான்.

அவன் பேச்சைக் கோர்த்த மாலையிட்ட பிறகு 

அப்போதைக்குத் தெரிந்தது 

முற்றியதாக என் மூளிச் சிற்பம்.

வர வேண்டாம் என்று நினைத்திருப்பான்

வழக்கொழிந்தது வெளிப்பட்டு வென்றிருக்கும்.

காத்திருக்க வேண்டுமென்றுதான் நினைத்திருப்பான் 

அவன் உடுப்புக் கேவலம் 

உறுத்தியிருக்கும் யாருக்காவது.

எப்போதும் எவ்விடத்தும் 

தங்கலேற்காத பாதங்களை 

உள்ளறையில் ஓவியமாய் உண்டாக்கி வைப்பேன் 

அதுவொன்றே 

இயற்கைக் காட்சிகளின் 

இணை நகல்.

(ஜெ.பிரான்சிஸ் கிருபாவின் “மெசியாவின் காயங்கள்” தொகுப்பிற்கான முகப்புக் கவிதை)