கடலாகத் துணிந்தவன்

by மானசீகன்
0 comment

தமிழில் ‘நாவல்’ என்கிற குழந்தை பிறந்து நூறாண்டுகளைத் தாண்டிவிட்டது. விதவிதமான வடிவங்களில், வெவ்வேறு மொழி பேசி, ஒவ்வொரு கணத்திலும் சிந்தனையால் தன்னை உருமாற்றிக்கொண்டு, ‘இது இப்படித்தான்’ என்று வகைப்படுத்திவிட முடியாதபடி, ‘அந்தக் குழந்தை’ படிக்கட்டுகளில் ஏறியும் இறங்கியும், நதி போல் பொங்கியும், கடல் போல் கொந்தளித்தும், மாட்டுவண்டிச் சாலையாய் குறுகியும், நெடுஞ்சாலை கருப்பு வழுக்கலாய் விரிந்தும், புகைவண்டிப் பாதையாய்த் தடதடத்தும், ஆகாய விமானத்தைப் போல் காற்றில் மிதந்தும், கைகளில் சிக்கிவிட்ட மீனின் குறுகுறுப்பைப் போல் பிடிநழுவியும், காலத்தில் அமர்ந்து, காலத்தில் திரும்பி, நிகழாத காலத்தை நிகழும் சொற்களில் படைத்துக் காட்டி, ஒற்றை வானில் விரிந்து கிடக்கும் ஓராயிரம் வண்ணங்களோடு மொழியைப் பார்த்து ‘ஆகுக’ என்று உத்தரவிட்டு வேறொரு உலகத்தைச் சமைத்திருக்கிறது.

அந்தக் குழந்தை வளர்ந்து, பூரித்த உடல்கொண்டு, அங்கங்களில் நிரம்பி வழியும் ஓராயிரம் கனவுகளோடும் இமை மூடினாலும் விழிகளை விட்டகலாத அபூர்வமான பேதைமையோடும் கொந்தளித்து ஓய்ந்த பேரலைகளின் நடுவே கன்னியாக மலர்ந்து காலத்தை உறைய வைக்கும் அதிசயம் பிரான்சிஸ் கிருபாவாலேயே தமிழில் நிகழ்ந்திருக்கிறது.

இந்த நாவலை நீள் கவிதையாகக்கூட உருவகித்து வாசிக்க முடியும். அதே நேரத்தில் மிகத் தெளிவான குணச்சித்திரங்கள் கொண்ட இரத்தமும் சதையுமான மனிதர்கள் இதற்குள்ளே தங்கள் வாழ்க்கையை முடிவற்று நிகழ்த்திக்கொண்டிருக்கிறார்கள். ஆகாயத்தைத் துளாவும் கரங்களோடு காற்றில் பறக்கிற மரத்தின் வேர்கள் அதிசயமாய் பூமியைவிட்டு விலகவேயில்லை. யதார்த்தத்தை ஓடுகளமாக்கி தடதடத்துக் கடந்த பிறகுதான் கனவுகளின் சீறலோடு நாவல் விண்ணில் பறக்கத் தொடங்குகிறது. மனம் பிறழ்ந்த ஒரு மனிதனின் அக உலகை, சற்றும் பிறழாத கூர்மொழி கொண்டு மயனின் இலாவகத்தோடு நம் மனதில் வடித்துவிடுகிறது. ஒரு பிரளயத்தைச் சித்தரிக்கிற அதே நேரத்தில், கடற்கரை மரத்தில் கூட்டுக்குள் தூங்கும் குஞ்சுக் குருவிக்கு அன்னை இடும் முத்தத்தையும், சிந்திக் கிடக்கும் தானிய மணிகளின் அழகையும் பிரான்சிஸ் கிருபாவால் காட்டிவிட முடிகிறது. உக்கிரத்தோடு பெருகி ஓடும் கனவுகளுக்கு மத்தியிலும் உரையாடல்களில் தர்க்கமோ, சமநிலையோ அறுபடுவதே இல்லை. மௌனியும் கோணங்கியும் மனதில் மட்டும் கண்டு மொழியில் தோற்ற இடத்தில் பிரான்ஸிஸ் கிருபா இன்னும் நூறாண்டுகளுக்கு தானே வனமாகிவிட்ட குறிஞ்சிப்பூவாய் நின்று சிரித்துக்கொண்டிருக்கிறார்.

இந்த நாவல் கதையால் மட்டுமே ஆனதல்ல. ஆனால் ஒரு கதையைச் சாக்காக வைத்துக்கொண்டுதான் இந்த நாவல் தன்னளவிலும், வாசிப்பவர் அகத்திலும் நிகழத் தொடங்குகிறது. சந்தனப் பாண்டியின் கதையே இந்த நாவல் அன்று. சந்தனப் பாண்டி வெட்டவெளியில் நிற்கிற ஆடியாக நம் கண்ணைப் பறிக்கிறான். நம் மனதிலிருந்து பறக்கும் குருவிகள் தன் சாயலில் எதையோ கண்டு முத்தமிடும் பிம்பமே நமக்குள் நாவலாய் நிரம்புகிறது.

பிரான்சிஸின் மொழி:

தமிழ்ப் புனைவுகளில் ‘மொழியின் உச்சம்’ என்று தயக்கமே இல்லாமல் ‘கன்னியைக்’ குறிப்பிடலாம். அவரே ஓரிடத்தில் ‘அருவியாகத் தமிழ் கொட்டிக்கொண்டிருக்க இவர்கள் ஏன் கட்டாந்தரையில் ஊற்று தோண்டிக்கொண்டிருக்கிறார்கள்?’ என்று எழுதியிருக்கிறார். நவீன இலக்கியத்தின் மொழிப் போதாமை மீதான பிரான்ஸிஸ் கிருபாவின் விமர்சனமாகவும்கூட அந்த வரிகளை எடுத்துக்கொள்ளலாம். ஆனால் பிரான்சிஸின் மொழி கடலாகக் கொந்தளித்து, சுனையாகப் பெருகி, அருவியாக வழிந்து, காட்டாறாக ஆர்ப்பரித்து, கார்முகிலாகி நீர்மையால் திரண்டு,  நம் ஆழ்மனதை அபூர்வமான சொல்லாட்சிகளாலும் இரண்டாயிரம் ஆண்டுகளாய்த் தமிழ் தேக்கி வைத்திருக்கும் படிமங்களாலும் பெருமழையென நிறைத்துவிடுகிறது. சந்தனப் பாண்டியின் அகம் அடைகிற மாற்றத்தின் உருவகம் என்பதையும் தாண்டி, மொழி சார்ந்த கோணத்திலும்கூட நாவலின் பகுப்பை அணுக முடியும்.

ஒரு மீன் துள்ளி எழுந்து கடலில் பாய்கிற காட்சியைத் ‘தண்ணீரில் விழுந்தால் கண்ணாடி உடையாது. கண்ணாடி விழுந்தால் தண்ணீர் உடையாது’ என்றுதான் கிருபாவால் சொல்ல முடிகிறது. பழைய கறுப்பு வெள்ளைப் புகைப்படத்தில் ஒடிசலாக நிற்கும் இளைஞர்களைக் காட்டி, ‘தோசக்கரண்டியை நிக்கவும் உக்காரவும் வைத்தது போல’ என்றெழுதுகிறார். புதுப்புனலில் மொழியைக் குளிப்பாட்டிய பிறகுதான் பிரான்சிஸ் பேனாவையே தொடுகிறார். அமானுஷ்யம் நிரம்பிய இடத்தை வர்ணிக்கும்போது, மொழியிலும்கூட உறுத்தாத அமானுஷ்யத்தைக் கொண்டுவந்து விடுகிறார். ‘அந்த மேஜை பறந்துவிடாமலிருக்க அதன் மேல் ஒரு புத்தகத்தை வைத்திருந்தார்கள்’ என்று விசித்திரமாக யோசிப்பதே பிரான்சிஸின் தனித்தன்மை. ஒரேயொரு நெற்றிப்பொட்டுக்கு விதவிதமான காரணங்களைக் கண்டறிந்து நாம் கண்கொள்ளாமல் பார்த்து இரசிக்க மொழியில் பரப்பி வைக்கிறார். மழை வந்தவுடன், ‘நீரில் வனைந்த பாத்திரத்திலிருந்து இந்நாளை இன்னொரு பாத்திரத்தில் ஊற்றி மாற்றுவது போல் கொட்டத் தொடங்குகிறது மழை’ என்று சொற்களின் மேகம் நாவலுக்குள் திறந்துவிடுகிறது.

பைத்தியத்துக்கு ஓதிப்பார்க்கும் வைத்தியர் வருகிறபோது கிருபாவின் மொழி அர்த்தங்களை உதிர்த்த மந்திரமாகத் தன்னை உருமாற்றிக்கொள்வதால் பித்தனின் சொற்கள் காலவெளியில் எச்சிலைப் போல் தெறித்து விழுகின்றன. “இருபத்தாறு எழுத்தும் என் எழுத்து. படிச்சிட்டு என்கிட்ட தந்திரணும்”. ஆங்கிலம் கற்றுத்தரும் ஜாய் அக்கா பெரிய மனுஷியின் சொற்களைக் குழந்தைத் தொண்டையில் பேசுகிற போது பிரான்சிஸ் குழந்தைகளின் மொழியைப் பம்பரம் போல் தூக்கிவந்து நம் கைகளில் வைத்துச் சுற்ற விடுகிறார். புகைப்படம் எடுத்துக்கொள்வதற்கு முன் சாப்பிடலாமா என்று பாண்டியின் குழந்தை மனம் யோசிக்கிறது. ஏனென்றால் அவன் அப்போதுதான் பூரிக்கிழங்கைச் சாப்பிட்டிருக்கிறான். ‘ஏசு சாமி ஃபோட்டோ எடுத்தபோது அவர் நெஞ்சுக்குள் பந்தாகத் திரண்டு எரிந்துகொண்டிருந்த பரிசுத்த ஆவி ஃபோட்டோவில் வந்துவிட்டது போல் பூரிக்குழங்கும் வந்துவிட்டால் என்ன செய்வது?’ என்று பாண்டி வெள்ளை மனதோடு கவலை கொள்கிறான். மொழி குழந்தையாக உருமாறிப் பரலோக சாம்ராஜ்யத்தின் கதவைத் தட்டி இயேசுவையே சோதித்துப் பார்க்கும் தருணத்தைப் பிரான்சிஸ் எழுத்தில் நிகழ்த்திப் பார்த்திருக்கிறார்.

பூ வைத்த அமலா அக்காவிற்குப் பின்னே நிற்கிற பாண்டியின் மனமே கடலாக விரிந்து கிடப்பதைச் சொல்ல முயலும்போது, ‘கடல் மணத்தது. அலைகள் ஏறி வந்தன. சூரியன் பின்னிருந்து முதுகைத் தழுவினான். கூச்சம் வெம்மையில் கிளர்ச்சியாய் மலர்ந்தது’ என்ற வரிகளில் கூட்டுப்புழு அறுபட்டு பட்டாம்பூச்சி பறக்கத் தொடங்குகிறது.

தண்டவாளத்தில் நடக்கிற போது ரயிலை நோக்கிப் பேசும் பைத்தியக்காரத்தனமான உளறலில் மொழி, பைத்தியத்தின் நடையோடு குழந்தைமையை அணைத்துக்கொள்கிறது. சிலுவையைத் தூக்கிவந்த ஆமையின் முதுகில் குறிபோட்ட சவேரியாரையும் குகைக்குள் இருந்த வெள்ளை மனிதருக்கு எங்கிருந்தோ ரொட்டி கொண்டுவந்த கறுப்பு காக்காவையும் பாண்டியப் படையை மிரண்டோட வைத்த சிலுவையையும் காலங்களால் கட்டி உருவாக்கப்பட்ட கதைக்குவியலில் இருந்து பூத்துரை அண்ணாச்சி தூக்கி வரும்போது பிரான்சிஸின் மொழிக்குள் இருந்து ஒரு கதைசொல்லியின் வாய் மீனின் மூச்சாய் அசைகிறது. விஜிலாவின் நிராசையும் சந்தனப் பாண்டியின் மன்றாடலும் எண்ணங்களில் இருந்து எழுத்து வடிவத்திற்கு உருமாறுகிற போது நேர்கிற அபத்தத்தையும் அந்த அபத்தங்களின் சிலுவையிலிருந்தே கசியும் பேரன்பையும் நிஜமான கடித மொழியின் வழி துல்லியமாகப் பிரான்சிஸ் படைத்திருக்கிறார்.

நீண்டுகொண்டே போகும் ஏலான் ஆசாரியின் கை, அந்தரத்தில் நிற்கும் மௌலவியின் தோள் துண்டு, குளியலறை வாளியின் அடியில் இருக்கிற கரும்புள்ளியில் இருந்து நீருக்குள் எழுந்து வரும் பிரம்மாண்டமான கருநாகம், மார்பில் சாய்ந்து புலன்களைக் குவித்து உற்றுக் கேட்கும் பித்தனிடம் அவனுக்கு மட்டுமே கேட்கும் இரகசியக் குரலில், ‘உன் உதட்டில் சுடர்ந்த உயிரின் இளவெயிலை உறிஞ்சிக் குடித்து சூரியனானேன்’ என்று சொல்லும் சாரா வடிவில் அமைந்த பெண் சிலை, ஊஞ்சலில் அமர்ந்து பாண்டியை விசாரணை செய்த பின் கொம்பு முளைத்த கழுதையாகத் திரும்பிப் போகும் பரிதாபகரமான மான் என்று நீளும் காட்சிகளில் பிரான்சிஸின் மொழி அமானுஷ்யத்தைப் பூசிக்கொள்கிறது. அந்த அமானுஷ்யம் பயமூட்டும் கொம்புகளை அணிந்து, கரி பூசிக்கொண்ட முகத்தோடும் கோரம் நிறைந்த பற்களோடும் அச்சுறுத்தாமல் குழந்தையின் சாயலிலேயே நகையோடு வந்து நிற்கிறது. சுடுகாட்டில் நடந்துசெல்கிற போதும் பிரிவுத் துயரின் புல்லாங்குழலே நாவலெங்கும் மிகைத்து நிற்கிறது.

மூன்று கன்னிகள்:

இந்த நாவலில் மூன்று உணர்வுகள் பேசப்படுகின்றன. நாவலில் மூன்று கன்னிகள் வருகிறார்கள். அதில் அமலா மிக முக்கியமானவள். தமிழ்ப் புனைவுலகம் கண்டடைந்த பெண் பாத்திரங்களில் அமலா யாரோடும் ஒப்பிடவே முடியாத அளவுக்குத் தனித்துவமானவள். அவளைப் பிரான்சிஸ் கிருபா புனிதப்படுத்தவில்லை என்றாலும் வாசித்தவர்களின் கண்களில் ஒட்டிக்கொண்டு காலத்துக்கும் அவர்களின் மனதைத் தொந்தரவு செய்கிற அரிதான பாத்திரம் அது. அவளுடைய குணச்சித்திரம் கொஞ்சம் கொஞ்சமாக ஆளுமை கொள்கிற விதமும், அவளது அதீத புத்திசாலித்தனமும் உணர்வுகளில் ஊஞ்சலாடிக்கொண்டிருக்கும் போதே காற்றை நிறுத்தும் திறன்கொண்ட சமநிலையும் அந்தக் கதாபாத்திரத்தின் மீது எவருக்கும் காதல் வர வைத்துவிடும். ஆனால் அமலா மீது பாண்டிக்கு இருப்பது கண்டிப்பாகக் காதல் அல்ல. அவனுக்குள்ளிருக்கும் காமம்கூட‌ நாவலில் வேறு தருணங்களில் பேசப்பட்டிருக்கிறது. ‘ஜூலி அவனுக்குள் குளித்துக்கொண்டேயிருந்தாள். விஜிலா தாமிரவருணியைப் போல் ஓடிக்கொண்டேயிருந்தாள்’ என்று நாவலில் ஒரு வரி வருகிறது. பிரேமா ராணியின் தொடுகை அவனைத் தேர்வறை வரைக்கும் வந்து குழப்பி, ‘மதிப்பெண்களை மாடு மேய்க்க அனுப்பி விடுகிறது.’ இந்த மூன்று பெண்களிடமும் அவன் காமத்தையே உணர்கிறான்.

பிரான்சிஸ் கிருபா பாண்டியைக் காமம் கடந்த தெய்வீகக் காதலனாகவெல்லாம் அடையாளப்படுத்தவில்லை. அவன் சாதாரண ஆண்மகனின் சகல பதற்றங்களோடும் உலா வருகிறான். விஜிலாவையும் மரிய புஷ்பத்தையும் திருமணம் செய்யாமல் தவறவிட்டு விட்டோமோ என்றுகூட ஒரு தடவை யோசிக்கிறான். ஆனால் அமலாவைப் பற்றிய அவன் நினைவுகளிலோ அவர்களின் சந்திப்புகள் குறித்த வர்ணணைகளிலோ அவள் உடல் காட்சிப்படுத்தப்படுவதே இல்லை. ‘மோகமுள்’ நாவலில் யமுனா மீது பாபுவுக்குத் தோன்றும் உணர்வைப் போன்றதல்ல இது. இங்கு முள்ளே இல்லை. அப்படியே இருந்தாலும் பிரான்சிஸ் பெருக்கிக் காட்டும் கடல் அதை விழுங்கி மீனின் வயிற்றில் சேர்த்திவிடும். அப்போது அது எவரையும் குத்தாது. ‘உடலின் மீதான தவிப்பை ஒரு கலைஞன் உபாசனையாக உருவகப்படுத்திய பின் கடைசியில் நிகழும் தோல்வியே’ மோகமுள் நாவல். இறுதிக்காட்சியே மொத்த நாவலையும் முடியைப் பற்றி இழுத்துச் செல்கிறது. ஆனால் பாண்டியின் உணர்வு வேறு மாதிரியானது. அந்த உறவுக்கு ஏதாவது பெயர் வைக்க வேண்டும் என்றால் ‘வழிபாட்டுணர்வு’ என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம்.

தனக்குள் முளைக்கிற எல்லாப் பரவசங்களுக்கும் அவள் இருப்பே மையமாக இருப்பதைப் பாண்டி உணர்கிறான். அறிய முடியாததை அறிய முயன்று தோற்றவன் தலைசாய்ந்து அழ அவனுக்கோர் பாதம் தேவை. அந்தப் பாதம்தான் ‘அமலா’ என்கிற பெண்ணுரு கொண்டு நிற்கிறது. ஒரே ஒரு தடவை குழந்தை சில்வியாவால் அவன் கரம் அவளின் மார்புத் துடிப்பை அறிகிறது. அமலாதான் துடிக்கிறாள். அந்தப் பரவசத்தையும் தூக்கிக்கொண்டு போய் பாண்டி கவிதையில் மட்டுமே கரைக்கிறான். அதற்குப் பிறகும்கூட அவன் உணர்வு வேறொரு திசைநோக்கித் தடம் மாறவேயில்லை. அவனுடைய நோக்கம் அவளைக் காதலிப்பதோ உடலுறவு கொள்வதோ திருமணம் முடித்து பிள்ளை பெறுவதோ அல்ல. அவளை வெறுமனே பார்த்துக்கொண்டிருக்க வேண்டும். இடையீடுகள் இல்லாமல் அவளுடன் பேசிக்கொண்டேயிருக்க வேண்டும். அவள் கன்னியாஸ்திரி ஆகப்போவதற்கு எதிராக அவன் சிந்திப்பதுகூட அவளுக்காக மட்டுமே. ‘அம்பாள் அறியாத அர்ச்சனையா?’ என்று அவளும் அவன் ஆராதனையை உவந்து ஏற்றுக்கொள்கிறாள். ‘இந்த உணர்வால் பாண்டியின் வாழ்க்கை சீரழிகிறதே’ என்பது மட்டும்தான் அவள் கவலை. ‘இது என் சாந்தாகுருஸ்’ என்று சொல்லி அவள் மார்புகள் உரசிய சிலுவையைத் தர மறுக்கும் பாண்டி, அந்தச் சிலுவையில் தன்னைத்தானே அறைந்துகொள்கிறான்.

இந்த அளவுக்கு உணர்வுகளின் குவியலாய் மையம்கொண்டிருக்கும் நாவலில் எந்தப் பாத்திரமும் அதன் யதார்த்தத் தன்மையிலிருந்து விலகவே இல்லை என்பது முக்கியமானது. தேவியின் சாயலாகவே பாண்டி தொழுதேத்தும் அமலா, படைப்பாளனின் பார்வையில் வெறும் பெண்தான். அவளுக்கும் எல்லாப் பெண்களையும் போல் பொறாமையும், சோம்பலும், எரிச்சலும் வந்துபோகிறது. சாப்பிட்ட தட்டைக்கூடக் கழுவாமல் கட்டிலுக்கு அடியில் வைத்துவிடுகிறாள். சராசரிப் பெண்களுக்கான எல்லாக் குணங்களும் உடல்மொழிகளும் கொண்டவளாகவே அவள் படைப்பாளனால் படைக்கப்பட்டு நமக்குக் காட்டப்படுகிறாள். அவள் தேவியின் அம்சமாவது பாண்டியின் கண்களில் மட்டும்தான். பக்தனின் நிபந்தனையற்ற பேரன்பால் தெய்வமாக உருக்கொள்ளும் கல் வெறும் கல்லாகவே இருக்கும் தருணங்களையும் பிரான்சிஸ் நம் கண்களில் காட்டிவிடுகிறார். சாரா அவன் கண்களின் வழியாக மட்டுமே காட்டப்பட்டிருப்பதால் தனித்திருக்கும் பொழுதுகளில் அவள் யார் என்பதை அறிய முடிவதில்லை. ஆனால் சாராவும் அமலா மாதிரிதான் என்று ஊகித்துவிடுகிற கோணத்திலேயே அவர் நாவலைப் படைத்திருக்கிறார். கனவுகளை உயர உயரப் பறக்கவிட்டு யதார்த்தத்தின் சித்திரத்தை மிகையில்லாமல் அப்படியே காட்டுவது இந்த நாவலின் தனித்தன்மைகளில் முக்கியமானது‌.

அமலாவின் நீட்சிதான் சாரா என்றாலும் அதில் காதலின் தடங்கள் தெளிவாக இருக்கின்றன. அமலா ‘இறை மைந்தனின் உடலாகிய அப்பத்தை இரகசியமாய்த் திருடி அவனுக்கு ஊட்டி விடுகிறவள்’. அதே அப்பத்திற்காக அவன் வரிசையில் நிற்கும் போது சாராவால்தான் அது தவறி கீழே விழுகிறது. இந்த இரு காட்சிகளும் அவன் மனதில் அவர்கள் இருவரும் என்னவாயிருக்கிறார்கள் என்பதற்கான குறியீடாகவே இடம்பெற்றிருக்கிறது. சாராவை நினைத்துக் கிளர்ச்சியடையும் உடலை விலகி நின்று பார்த்துக்கொண்டே அவள் மீதான மனதின் ஆராதனையைப் பாண்டி உணர்கிற இடம் நாவலில் வருகிறது. அமலாவைப் பற்றி அவன் ஒருபோதும் அப்படி யோசிப்பதில்லை. அமலாவிடம் அவன் எப்போதும் ஊடலே கொள்வதில்லை. தென்றலாய், புயலாய், சுவாசமாய் அவள் தொட்டாலும் விலக்கினாலும் கீழே தள்ளினாலும் அவனுள் ஊடுருவிக் கலந்தாலும் அவன் சகலத்தையும் நிகழ அனுமதித்து மௌனமாய் இரசிக்கிறான். சாராவிடம் பேசாத போதே பார்வைகளாலேயே ஊடலும், கூடலும், மன்னிப்பும், கோபமும், விலகலும், ஏற்றுக்கொள்ளலும் நிகழ்ந்துவிடுகின்றன.

எத்தனையோ முறை அமலாவுடன் யாருமற்ற தனிமையில் இருக்கும்போதும் அவன் கவிஞனாகவும் அழகின் உபாசகனாகவுமே அவளை விலகி நின்று இரசித்துக்கொண்டிருக்கிறான். ஆனால் சில நிமிடங்கள் வாய்க்கும் தனிமையிலேயே பாண்டி சாராவின் உடலால் கிளர்ச்சியடைந்து அவளோடு இரண்டறக் கலந்துவிடுகிறான். சுனையும் அருவியும் தண்ணீர் தன் போக்கில் பயணிக்க அனுமதிப்பவை. ஆனால் கார்முகில் கருக்கொள்வதே மழைக்காகத்தானே? அதே தண்ணீர் இங்கு வேறொன்றாக உருக்கொள்கிறது. அமலா, சாரா ஆகியோர் இடம்பெறும் பகுதிகளின் தலைப்பும் உட்பொருளுமேகூட இந்த வேறுபாட்டையே உணர்த்துகின்றன. அமலாவின் உடலை வர்ணிக்காத பாண்டியின் மனம் சாராவை உருகி உருகி வர்ணிக்கிறது. பாதம் அதுவேதான், கொண்டாட விழையும் மனமும் ஒன்றுதான். ஆனால் பாதத்தை எடுத்து சென்னியில் சூடுவதற்கும் மோகத்தில் தரை நோக்கித் தவழ்ந்து முத்தமிடுவதற்கும் வேறுபாடு உண்டல்லவா? ஒற்றைப் பாதத்திடம் சரணடையும் பாண்டி இருவேறு முகங்களைத் தனித்தனியே தரிசிக்கிறான்.

இந்த நாவலில் மூன்றாவதாக ஒரு பெண் பாத்திரம் உண்டு. அந்தப் பெண் பாண்டியின் அத்தை. அவர் நாவலில் உயிருடன் வருவதில்லை. ஒரே ஒரு காட்சியில் கனவுச் சித்திரமாக வருகிறாள். அங்கும் அத்தையின் பாதம்தான் உறங்கிக்கொண்டிருக்கும் விரல்களின் கனவாகக் கண்களில் படுகிறது. சாராவைப் பற்றி நினைப்பது போலவே அத்தையையும் மணலில் ஓவியமாக வரைய நினைக்கிறான். அத்தையின் சாயலில் சாரா இருப்பதாகப் பாட்டி சொல்வதைப் பாண்டியின் மனம் ஏன் ஏற்றுக்கொண்டது என்பதை யோசிக்க வேண்டும். அந்தக் கனவில்கூட அத்தையின் மகளாகவே சாரா வருகிறாள். உண்மையில் அவள் அமலாவின் வேறொரு அம்சம் என்று பாண்டிக்கு உள்ளுக்குள் தெரியும். ஆனால் அதை மனதிற்குள் யோசிக்கும், வெளியில் சொல்லும் ஒரு காட்சிகூட நாவலில் இல்லை‌. அவ்வாறு யோசிப்பதே அமலா பற்றிய தன் உருவகத்தைச் சிறுமைப்படுத்தி விடும் என்று பாண்டியின் ஆழ்மனம் நினைத்திருக்கலாம். பாட்டியின் ‘ஜாடை கண்டுபிடிப்பை’ அவன் தன் ஆழ்மனப் போராட்டத்திற்குரிய தீர்வாகக் கண்டறிந்திருக்கலாம். அவள் அமலாவின் வேறொரு வடிவம்தான். ஆனால் அது வெளிப்படையாகச் சொல்லப்படாமல் அவ்வாறு இருப்பதாலேயே அந்தக் காதலுக்கு ஒரு காவியத் தன்மை வந்துவிடுகிறது.

அத்தை மீதான அவன் ஏக்கத்திற்கும் அமலாவே மறைமுகக் காரணமாய் இருக்கலாம். மூன்று அக்காள்கள், அம்மா, பாட்டி என்று சகலராலும் அமலா கொஞ்சப்பட்டுக் கொண்டேயிருப்பதை பாண்டி பார்த்துக்கொண்டேயிருக்கிறான். அவன் அம்மா ஏற்கனவே ஆண் பிள்ளைகளைப் பெற்றுச் சலித்தவள். அண்ணன்களெல்லாம் அவன் மீது எரிச்சலில் இருக்கிறவர்கள். முதிர்ந்த பாட்டி மட்டுமே அவனை அவ்வப்போது கொஞ்சுகிறாள். ஓர் இளம்பெண்ணின் வசீகரமான அணைப்புக்குள் குழந்தையாகிக் கிடக்க அவன் ஏங்கியிருக்கலாம்‌. அந்த ஏக்கமே பாட்டியின் சொற்களால் செத்துப்போன அத்தை மீது தாவுகிறது. அதன் நீட்சியே சாரா மீதான காதல் என்று நம்பிக்கொள்கிறான்.

குழந்தையாக்கி கைகளில் ஏந்தி அணைத்துக்கொள்ள, ஆராதனை செய்ய முனையும் சொற்களுக்கு முன் சிலையுருவம் கொள்ள, பாதத்தில் நாயாகி முத்தமிட்ட பின் உடல் நெகிழ்ந்து ஏந்திக்கொள்ள என்று பாண்டியின் மனம் மூன்று பெண்களை விழைகிறது. அந்த மூவருமே கன்னிகளாக இருப்பது தற்செயல் மட்டுமே. அந்தத் தற்செயல் ஒற்றுமையே அலையாகி எழுந்து பாண்டியைக் கிளிஞ்சலைப் போல் தூக்கிச் சுமந்து, வீசியெறிந்து, பாத தரிசனம் தந்து மண்ணுக்குள் அழுத்தி மூச்சுமுட்ட வைக்கிறது.

கிறிஸ்தவப் பின்னணி:

நாவலில் கிறிஸ்தவப் பின்னணி நிகழ்ச்சிகளாகவும், படிமங்களாகவும் பொருத்தமாக இணைக்கப்பட்டிருக்கிறது. கிறிஸ்துமஸ் நட்சத்திரத்தை வீடுகளில் தொங்க விடுதல், கிறிஸ்து திருப்பலி, புது நன்மை, நற்கருணை எடுத்தல், அப்பத்தை வரிசையில் நின்று வாங்குதல், அமலோற்பவ அன்னைக்கான பத்து நாள் கொடியேற்ற நிகழ்ச்சிகள், மண்டியிட்டுச் செய்யும் பிரார்த்தனைகள் என்று பல நிகழ்வுகளை நாவல் முழுவதும் காணலாம்‌. கத்தோலிக்கக் கிறிஸ்தவம் இந்த மண்ணின் மரபான அடையாளங்களில் இருந்து சுவீகரித்துக்கொண்ட திருவிழாக் கொண்டாட்டங்கள், தேரில் மாதாவையும் பிற அருளாளர்களையும் உருவங்களாக உட்கார வைத்து இழுத்து வருதல், திருமணச் சடங்குகள் ஆகியவை இயல்பு மாறாமல் சித்தரிக்கப்பட்டுள்ளன. பாண்டி மனப்பிறழ்வு கொள்ளும் போது அவனைத் தங்க வைத்துப் பராமரிக்கிற அருட்தந்தையும் பிற ஊழியர்களும் கருணை நிரம்பியவர்களாகவே படைக்கப்பட்டுள்ளனர். மேற்குலகம் கிறிஸ்துவை விமர்சன நோக்கில் துவைத்துக் காயப்போடுவதைப் பிரான்சிஸ் எதிர்நிலையில் நின்றே அணுகுகிறார். அதற்கு நேர்மாறாக விசுவாசிகளின் பணத்திமிரைப் பறைசாற்றுகிற ஏலமெடுக்கும் நிகழ்ச்சியைக் கிண்டலான தொனியில் எழுதியிருக்கிறார். ஒன்னே கால் ரூபாய்கூட பெறாத முட்டை 200 ரூபாய்க்கு ஏலமெடுக்கப்பட்ட பின் உடைந்து கீழே கிடக்கும் காட்சி பிரான்சிஸ் கிருபாவின் நுட்பமான பகடிக்குச் சான்றாகும்.

நாவலில் இயேசு கிறிஸ்து இரண்டு இடங்களில் வருகிறார். வயோதிகராக வரும் இயேசு சீடர்களோ விருந்து உபசரனைக்கான நாற்காலிகளோ இல்லாத சிறிய குடிசையில் தொண்டை வரளப் பிரசங்கிக்காமல் பாண்டி உண்பதற்காக மிளகு- காரம் தூக்கலாகப் பால் நண்டு சமைத்து வைத்து கடலில், ‘செந்நீர் குறி தெரிந்தால் தகவல் கொடுக்குமாறு’ வேண்டிக்கொள்கிறார். பரதவ குலத்தில் பிறந்த பாண்டியின் இயேசு அவனைப் போலவே பரதவராகவே வந்து பாதியிலேயே கடலைத் தூக்கிச் சென்றுவிடுகிறார்.

இன்னொரு முறை குருதி கொப்பளிக்கும் காயங்களுடன் ‘மக்தலேன்.. மக்தலேன்’ என்று ஈனஸ்வரத்தில் முனங்கியபடி வருகிற இளம் இயேசு, ‘நெற்பாலாகி நாவில் இறங்கும் அமுத மணிகளை நிராகரித்து, ‘என்னோடு வா, என்னோடு வா’ என்று மணிமேகலையின் கையைப் பிடித்து இழுக்கிறார்.

இந்த இரண்டு சித்திரங்களுமே திருச்சபை கட்டமைத்திருக்கும் இயேசுவின் புனிதத் திருவுருவோடு பொருந்திப் போவதில்லை. மண் சார்ந்த படிமங்களோடு நிலத்தில் கால் பதித்திருக்கும் பரதவ கிறிஸ்துவையும் இரகசிய இயக்கத்தினர் பூசிக்கும் மக்தலேனாவின் காதலனான இயேசுவின் வேறொரு பரிமாணத்தையுமே கன்னி நாவலில் அறிய முடிகிறது.

இந்தப் பார்வையின் தொடர்ச்சியாகவே நாவலில் வருகிற ‘கன்னியாஸ்திரீ’ குறித்த சித்தரிப்புகளை உணர முடிகிறது. கன்னியாகத் தன்னைக் கடவுளுக்கு ஒப்புக்கொடுத்து உலக இன்பங்களைத் துறக்கும் கத்தோலிக்கக் கிறிஸ்தவ நெறிமுறையைப் பிரான்சிஸ் கடுமையாக விமர்சித்திருக்கிறார். நாவலில் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அமலாவின் அக்காள்மார்கள் ‘அமலாவைக் கன்னியாஸ்திரீயாக்கி விடுகிறேன்’ என்று ஆண்டவரிடம் வேண்டித் தொழுத பாட்டியை ஏசுகிறார்கள். பாண்டி அந்தச் சொல்லையே தீராத பகையாகக் கருதி வெறுக்கிறான். ஒவ்வொரு ஆபரணத்தையும் சுழற்றிச் சுழற்றிக் கடலில் போட்ட பின் ‘இனி நான்தான்டா கடலில் விழுகணும்’ என்று கூறும் அமலா அக்காவின் இயலாமை நிரம்பிய வார்த்தைகள், அவள் மனதையும் திரை விலக்கிக் காட்டுகின்றன. ஷெல்லியின் உயிர்த்தோழியான ‘எமிலியா விவியானி’ கன்னியாஸ்திரீ ஆகிறபோது அதை நினைத்து ஏக்கமும் தவிப்புமாக ஷெல்லி பாடிய பாடலைச் சாரா பாண்டிக்குப் பரிசளிக்கிறாள். பாதையில் படும் கன்னியாஸ்திரீகளைச் சாம்பல் பொம்மைகள் போலவே பாண்டி உணர்கிறான். சாரா ‘இம்மெர்சனுக்காகத்தான்’ இந்த ஊருக்கு வந்திருந்தாள் என்று பாண்டியிடம் புனிதா சொல்கிற போதுதான் அவன் தலையில் முதல் ஆணி இறங்குகிறது. உலகத்தின் பாவங்களை மீட்பர் சிலுவையாகச் சுமந்தார். இரண்டு பெண்கள் கன்னியாஸ்திரீகளாக்கப்பட்டதன் பாவச்சுமையைப் பாண்டி சிலுவையாகச் சுமக்கிறான் என்கிற பொருள் அந்த வரிகளுக்குள் புதைந்து கிடக்கிறது.

கன்னி படிமம்:

பிரான்சிஸ் கிருபா ‘கன்னி’ குறித்து வைக்கிற விமர்சனங்களுக்கு நேர்மாறாகவே நாவலுக்குள் ‘கன்னி’ குறித்த படிமம் மையம் கொண்டிருக்கிறது. ஒரு பெண்ணின் வாழ்வை, இளமையின் மலர்ச்சியைப் பலி கேட்கும் நடைமுறை வழக்கமான கன்னியாஸ்திரீ வாழ்க்கையைக் கோபத்தோடு விமர்சிக்கும் பிரான்சிஸ் கிருபா, அந்த வழக்கத்தின் ஆதாரப் படிமமான ‘கன்னியின்’ புனிதத்துக்குள் தன்னையுமறியாமல் சரணடைந்து கிடக்கிறார். பறவை என்பது சதைதான். நாம் இரசிப்பது அதன் சதையைத்தான் என்றாலும் அதே சதைக்காகப் பறவையைக் கசாப்புக் கடைக்குத் தூக்கிச்செல்லும் போது ஏற்படுகிற பதைபதைப்பே பிரான்சிஸூடையது. ‘கன்னியின் புனிதம்’ என்பதை நாவல் பெண்மையின் பூரணத்துவமாக அடையாளம் காண்கிறது. அதன் முழுமையில் தன்னை முற்றாகத் துறக்கும் ஆணின் பித்து நிரம்பிய காதலே இந்த நாவலில் மாபெரும் கடலாக விரிந்திருக்கிறது‌.

‘குமரியம்மன்’ என்கிற தொல் தெய்வ வழிபாடு தமிழ்க் கிறிஸ்தவத்தோடு இணைக்கப்பட்டிருப்பதையும் நாவல் நுட்பமாகச் சுட்டிக் காட்டுகிறது. ‘ப்யூரிட்டிக்கு ஒரு பவர் இருக்கு. எல்லா விதத்திலயும் வணங்கித்தான் ஆகணும். வேற வழியே இல்ல- குறிப்பா ஆண்களுக்கு. அதிலயும் தெய்வமாயிட்டா கேள்வியே இல்ல’ என்று அமலா சொல்கிறாள். மதத்தின் மீது சுத்தமாக நம்பிக்கை இல்லாத அமலா, பாட்டியின் வேண்டுதலை மறுப்பதற்கான சூழல் வீட்டில் இருக்கிற போதும் ஏன் கன்னியாஸ்திரீயானாள் என்கிற கேள்விக்கான விடை இதற்குள் ஒளிந்திருக்கிறது. ஜாய் அக்காவாலும், ஏன் பாண்டியாலும்கூட அறிய முடியாத அமலாவின் அகம் வான்வெளியில் ஒரு சுடராகி ஒளிரும் தருணம் இது மட்டும்தான். அவள் பாண்டியின் கவிதைகள் வந்து சரணடைகிற தேவியின் இடத்தில் இருப்பதையே தன் வாழ்வின் அர்த்தமாக உணர்கிறாள். அந்தச் சரணடைதலுக்கான தகுதி தன் அழகு மட்டுமேயல்ல, கன்னியாக இருப்பதாலேயே ஒளிரும் புனிதத்தின் முன்பே அவன் ஆத்மா மண்டியிடுவதாகப் புரிந்துகொள்கிறாள். அவனுடைய அர்ச்சனைக்கான தேவியாகக் காலாகாலமும் நிலைத்திருப்பதற்காகவே தன்னைத் தேவனின் கன்னியாக விருப்பமில்லாமலேயே ஒப்புக்கொடுக்கிறாள். தான் தெய்வமாக நிலைத்திருக்க வேண்டும் என்பதற்காகவே பக்தையாக நடிப்பவள் அமலா.

இதே உணர்வுதான் சாராவுக்கும் இருக்கிறது. ஆனால் பாண்டியின் அதீத சரணடைதல் தரும் வெப்பத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமல் அவன் காதலுக்குப் புனிதத்தையும் உண்ணக் கொடுப்பவள் சாரா. பாண்டியின் மனப்பிறழ்வுக்கு அவளால் நிகழும் பிரிவுத் துயர் மட்டுமே காரணமில்லை. அவள் கன்னியாஸ்திரீயாகப் போகிறாள் என்கிற அதிர்ச்சிதான் அவனைப் புரட்டிப் போடுகிறது. அவள் கன்னிமையின் புனிதத்தை அழித்துவிட்டதான குற்ற உணர்வே அவன் மனதின் சமநிலையை நிலைகுலையச் செய்கிறது. சிலையை அடைவதற்காகத் தெய்வத்தைக் கொன்றுவிட்ட பித்தனின் கதறலே பாண்டியுடையது.

சங்கச் சாயலில் படிமங்கள்:

இந்த நாவலின் மிகப்பெரிய பலம் கதையில் நிகழும் சம்பவங்களுக்கும் பாண்டி மனப்பிறழ்வு கொள்கிற தருணத்தில் அவன் காணும் உலகத்திற்கும் இடையிலான தொடர்புதான். அவன் வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்களே தர்க்கப்பூர்வமற்று வேறொரு உலகத்தில் மறுபடியும் நிகழ்கின்றன. இந்த நாவலை எழுதுவதற்கு முன்னால் ‘தமிழினி’ வசந்தகுமார் பிரான்சிஸ் கிருபாவிடம் சிலப்பதிகாரம், மணிமேகலை, சங்க அக இலக்கியங்கள் ஆகியவற்றைத் தந்து படிக்கச் சொல்லியிருக்கிறார். பல இடங்களில் காதலின் தவிப்பை உணர்த்த கானல் வரிப் பாடல்கள் உதவியிருக்கின்றன. மணிமேகலை தொன்மத்தை நேர்த்தியாகக் கிறிஸ்தவத்தோடு இணைத்திருக்கிறார்.

ஆனால் இந்த நாவலில் இடம்பெற்றிருக்கிற படிம உலகிற்கான தரிசனத்தை அவர் சங்க இலக்கியங்களில் இருந்தே கண்டடைந்திருக்கிறார் என்பதை நுட்பமான வாசகர்கள் உணர முடியும். சங்க அக இலக்கியங்களில் இயற்கைச் சித்தரிப்பு என்பது வெறுமனே புறக்காட்சிகள் அல்ல. வேங்கை மரமும், யானையும், சுனை நீரும், மலை உச்சியிலிருந்து தாவும் குரங்கும், வேரில் பழுத்துக் காத்திருக்கும் பலாவும், குன்றை எரிக்கும் நள்ளிரவின் நிலாவும், கடற்கரையில் பூத்துக் கிடக்கும் விதவிதமான மலர்களும் வெறும் வர்ணனைப் பொருட்கள் அல்ல. அக மாந்தர்களின் மனமே அங்கே இயற்கையாகச் சித்தரிக்கப்பட்டிருக்கின்றது. மலையில், வனத்தில், பெரு நீர்ப்பரப்பின் நடுவில், விரிந்த கடலை வேடிக்கைப் பார்க்கும் கடற்கானலில், வெயில் முளைத்துக் கிடக்கும் கொடிய பாலையில் என்று நோக்குமிடமெல்லாம் காதலின் ஆலிங்கனமும் பிரிவின் தவிப்புமே கொட்டிக் கிடக்கிறது. ‘கன்னி’ நாவலை வாசிக்கிற போது நாம் அடைவது இதே உணர்வைத்தான். தானே அதுவாகி நிற்கும் பிரம்மத்திற்கு நிகராக காதலை வெளியெங்கும் உணர முயலும் தமிழ் மனதின் தரிசனமே இந்த நாவல்.

சங்கத் தமிழ்க் கவிஞன் கவிதையில் கண்டடைந்த உணர்வை, பிரான்சிஸ் கவித்துவத் தருணங்களால் முயங்கி நெகிழ்ந்த உரைநடையின் வழியே ஆலிங்கனம் செய்திருக்கிறார். ஒரு குருவியின் ஓசையை வளையல் ஓசையாக அடையாளம் கண்டு பின்தொடரும் பாண்டியின் அக உலகத்தைக் கன்னியாகுமரியில் அவனோடு சேர்ந்திருக்கும் போது ‘செம்பருத்திப் பூவாய் மிதக்காமல் சிவப்பு மின்னலாய் மின்னி மறைந்த’ வளையல்களோடு பொருத்திப் பார்க்கலாம். குருவி ஆடும் ஆலமர ஊஞ்சல் அமலா ஆடிய ஊஞ்சலின் வேறொரு வடிவமே. கடற்கரைக்கு வரிசையாய் தீபத்தை ஏந்தி வரும் பெண்களில் ஒருத்தியின் விளக்கு மட்டும் அணைந்து இருளாகி விடுகிற இடத்தில் சாராவும் அறை இருட்டும் நம் நினைவுக்கு வந்துவிடலாம். இரு பெண்களோடு பாண்டிக்கு நிகழ்ந்த விஷயங்களைப் பிரக்ஞைப்பூர்வமாகப் பிரான்சிஸ் மனப்பிறழ்வுலகில் மறுபதிவு செய்திருக்கிறார். அவன் காதலின் உச்சமும் தவிப்பும் அந்த உலகின் கடவுளாகிவிட, பாண்டி காற்றில் அசையும் தேவாலயத்தின் சுடர் போல் இலக்கின்றி அலைந்துகொண்டிருக்கிறான்.

கதாபாத்திரங்கள்:

நாவலில் வருகிற அனைத்து பாத்திரங்களும் பாண்டியின் மனப்பிறழ்வுலகச் சாயலின்றி யதார்த்தமான மனிதர்களாகவே வந்துபோகின்றனர். அவர்களின் உலகம் தர்க்கபூர்வமாக எழுதப்பட்டிருக்கிறது. பாண்டியும் அவன் கன்னிகளும் சேர்ந்தாடும் மாய ஊஞ்சலைப் பிற பாத்திரங்களே மரமாகத் தாங்கி மண்ணில் நிலைகொண்டிருக்கிறார்கள். ஒரே ஒரு காட்சியில் அமலாவுக்குப் பால் காளான் தந்துவிட்டு ‘பிரான்சிஸ் அமலாதாசன்’ என்கிற காவியப் பெயரோடு திரும்புகிற பூத்துரை அண்ணாச்சிகூட தனக்கான பிரத்யேக குணத்தோடு மனதில் நின்றுவிடுகிறார். ஒரு பத்தியில் வந்துவிட்டு உடனே மறைந்துவிடுகிற பருத்திக்காய் பன்னீரும் ஒரே ஒரு வரியில் தலைகாட்டிவிட்டுச் சடாரென விலகிவிடுகிற சாராயக்கடைத் தேவரும்கூட மின்னி மறையும் சிறு கணங்களில் தம் குணச்சித்திரத்தை முழுமையாகக் காட்டி விட்டே நம்மிடமிருந்து விடைபெறுகின்றனர். அஃறிணை உயிரினங்களும்கூட தங்கள் தனித்துவமான குணாதிசயத்தால், உரையாடல்களால் இதே அமரத்துவத்தைப் பெற்றுவிடுகின்றன.

அமலா என்கிற தூய ஒளியின் வாலாக வரும் நாய் ஜிம்மி, பாண்டிக்கும் அமலாவுக்கும் நடுவே முகிழ்த்திருக்கும் அபூர்வ உணர்வின் ஜீவ சாட்சியாய் உயிர்த்திருக்கிறது. தேவாலய உண்டியலில் கை வைத்து ஊரைவிட்டு ஓடிப்போய் சீமைத்துரையாகத் திரும்பிவந்து, நொண்டி இசக்கியின் கண் பார்வையால் கத்தியைத் தவறவிட்டு, பிரக்ஞை தப்பி, தன்னைவிட்டு ஓடிவிட்ட காலத்தைச் ‘சீத்தா பாத்தா கூத்திரு’ என்கிற அர்த்தமில்லாத சொற்களால் துரத்திப் பிடித்துக்கொண்டிருக்கும் சூசைமணிப் பாட்டையாவின் கிளைக்கதை அழகாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் அந்தக் கிறுக்குக்கும் பாண்டியின் பாட்டிக்கும் இடையிலிருக்கும் மர்மமான உறவின் திரை, கதையில் விலக்கிக் காட்டப்படவில்லை. பாட்டையாவின் ஜவ்வாது வாசத்தை நாய் போல் நுகர்ந்து நுகர்ந்து தேட விரும்புகிறவர்கள் அதைக் கண்டடைந்து கொள்ளட்டும் என்று பிரான்சிஸ் விலகிச்சென்றிருக்கிறார். பாண்டியின் பித்திற்கான விதை அங்கேகூட ஒளிந்திருக்கிறது என்கிற கோணத்தில் நாவலை வாசித்தால் அமானுஷ்யத்தின் கதவு திறந்துவிடக்கூடும். வெளியூர்களில் மட்டுமே பாண்டிக்கான ஸ்பெஷல் அப்பாவாக இருந்து, ஊர் வந்ததும் எல்லோருக்குமானவராக மாறிவிடும் லைன்மேன் காணிக்கை ராஜ், செத்தவளின் கண்களோடு, சங்கிலியால் கட்டப்பட்ட பாண்டிக்கு சோறு போட்டு, தான் கொண்ட பாசத்தால் அவன் ஏந்தியிருக்கும் மானசீகமான சிலுவைக்கு ஆணி அறைந்துகொண்டிருக்கும் அம்மா பரிமளம் என்று எல்லா குணச்சித்திரங்களையும் நுட்பமாகப் படைத்திருக்கிறார்.

சேசு மரியாயி பாட்டி, பெரியம்மா, நான்கு அக்காள்கள் என்று பெண்மையின் நுரை ததும்பிக் கிடக்கும் அவர்களின் வீட்டையும் பாத்திரங்களையும் மிக அழகாகப் பிரான்சிஸ் செதுக்கியிருக்கிறார். ஆண் பிள்ளைகளற்ற வீட்டின் பெண்கள் தூரத்து உறவான தம்பியிடம் காட்டும் கேலியும் கிண்டலுமான பிரியம், கனவுவெளிகளில் விரியும் யதார்த்தத்தைப் போல் அவ்வளவு அழகாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. கேரம் போர்டு விளையாடுகிற போது அம்முவை ரோஸ் காயினாகவும், அவள் பின்னாலேயே சுற்றிக்கொண்டிருக்கும் பாண்டியை ஒயிட் காயினாகவும் உருவகித்து அவர்கள் கேலிசெய்வது, தன்னைக் கூடுதலாகக் கிண்டல் செய்யும் ஜாய் அக்காவுக்கு மட்டும் தூரமாகச் சீட்டு போடும் பாண்டியை அமலாவிடம் காட்டி, ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்? நெருப்பாய் எரிகிறது.. உன் நிழலுக்கு என் மேல் என்னடி கோபம்? முள்ளாய் மாறியது..” என்று பாடி அவனை ‘நிழல்’ என்று ஓட்டுவது என்று அவர்களுடைய உறவின் சித்திரங்கள் நம் மனதிற்குள்ளும் அலையலையாக வந்துபோகின்றன.

கடலும் கன்னியும்:

‘கன்னி’ நாவலில் கடலே பிரதான பாத்திரம். இதற்கு முன் யதாரத்தவாத நாவல்களில் மனிதர்களின் அற்ப உணர்ச்சிகளைச் சிறுத்துப் போக வைக்கும் இயற்கையின் வல்லமையாய் கடல் காட்டப்பட்டிருக்கிறது. இந்த நாவலில் கடலே எல்லாமாக இருக்கிறது. கொந்தளிப்பும் சமநிலையும் ஒருசேர வாய்க்கப்பெற்ற மனித அகத்தின் குறியீடாகவே கடல் வருகிறது. கடல்கோளில் தொடங்கி மழையில் முடிவடையும் நாவலில் நீரின் ஒவ்வொரு பருவத்திலும் கடலும் சக பயணியாகக் கூடவே வருகிறது. உயிர்களின் காதலும், மோதலும், உக்கிரமும், பிரிவும், பிறப்பும், இறப்பும் உள்ளே நிகழ்ந்துகொண்டிருக்க, மெல்லியச் சலனமாக அலைகளையே நமக்குக் காட்டிக்கொண்டு கடல் அமைதியோடிருக்கிறது. காதலின் குணமும் அதுவேதான். பாண்டி கனவுலகில் மருந்து தேடிப்போகிற இறைத்தூதர்கூட நீரைத் தடிகொண்டு பிளந்து பயமில்லாமல் நடந்த மோசஸ்தான். கடிதங்களில் மட்டுமே இதயத்தால் பேசிய அமலா முதன்முதலாக நேரிலும் தன் இதயத்தை அவனிடம் திறந்து காட்டுவது கன்னியாகுமரி கடலில்தான். வேப்பாறில் பாண்டி கடல் பார்க்கும் இடமே அவன் அறிகிற முதல் அதிசயம். அமலாவுடனான இருப்பின் பரவசம் உருவாக்கிய பெரும் கனத்தால் தடுமாறுகிற பாண்டி, அவள் கூடவே சென்று மனதின் தீராத கனத்தைத் திருச்சீரலைவாய் கடலில் கரைத்துவிட்டுதான் இலேசாகிறான்.

மணப்பாட்டில் ஆண்கடலும் பெண்கடலும் ஒட்டிக்கொள்ளாமல் தவிப்புடன் விலகியிருக்க புனித சேவியர் தியானம் செய்த குகையில் ‘கன்னிமையின் தோளில் பட்டு நாணத்தின் கன்னத்தில் தெறித்த நிழலாய்’ அந்த இரசவாதம் நிகழ்கிறது. அமலாவைப் பிரியும் கடைசித் தருணத்தில் அலைகள் உள்வாங்கிய கடலின் மணல்மேட்டில் நின்றபடி அவன் தாகமாய்ப் பாரத்திருக்கிறான். ‘நண்பர்களே, தோழிகளே, துரோகிகளே, ஆறுதலுக்குப் பதில் ஓர் ஆயுதம் தாருங்கள். கடலைக் கப்பலின் சாலை என்று கற்பித்தவனைக் கொன்றுவிட்டுப் போகிறேன்’ என்று உலகை நோக்கிப் பாயும் இராட்சச அலையாகப் பாண்டி கொந்தளிக்கிறான். தேர் பவனி வரும் நள்ளிரவில் சாராவை நோக்கிப் பாண்டியைச் செலுத்துவதும் அதே கடல்தான். அவன் காதலும் பிரிவும் முன்னும் பின்னும் நகர்ந்து அலையாகி ஆக்கிரமிக்க, அவனுக்குள் நிகழும் கடல்கோளே இந்த நாவல். பிரான்சிஸ் கடலை விதவிதமாக வர்ணித்திருக்கிறார். அதற்கெல்லாம் சிகரமாக ‘கடுகு போட்டுத் தாளித்த மணம்’ கடலுக்கு இருப்பதாகக் கூறுகிறார்.

இயேசுவையும் கடலையும் இணைத்து பிரான்சிஸ் எழுதிச்செல்கிற கவித்துவமான பகுதிகள் புனைவின் உச்சம். வான்வெளியில் தேவனால் உயர்த்தப்பட்டவனாகவும் உலகத்தின் பாவங்களுக்காகச் சிலுவையேற்றவனாகவும் இரண்டு மதங்களால் நம்பப்படுகிற இறைமகன், கடலுக்குப் பக்கத்தில் குடிசை போட்டு சுவிசேசஷம் எழுதிய மாற்குவை வேறொரு வடிவத்திற்கு உருமாற்றி நூற்றாண்டுகளின் தனிமையில் நீந்திக்கொண்டிருக்கிறான். கடல் ஒரு கன்னியாகி வந்து ‘தண்ணீரைத் தொட்டு திராட்சை ரசமாக்கியது போல் உப்புப் படிந்து போயிருக்கும் தன் உடலில் இரு அலைகளையாவது ரசமாக்கும்படி’ வேண்டுகிறது. ‘அந்த அற்புதம் உனக்கெப்படித் தெரியும்?’ என்று இயேசு வினவுகிறார். ‘தண்ணீர் ரசமானால் முதலில் தெரிந்துகொள்வது தண்ணீராகத்தான் இருக்க முடியும்’ என்று கடல் பதிலுரைக்கிறது. இயேசு மறுக்கவே கடல் கொந்தளிக்கிறது. “தன் கூட்டாளிகளை ‘அற்ப விசுவாசிகளே’ என்று போலியாகச் சாடிவிட்டு உடல் நரம்புகள் முறுகக் காத்திருந்த கன்னியின் உதடுகளில் முத்தமிட்டான். புயல் தணிந்து அமைதி ஏற்பட்டது. கடலின் அலைகள் கூச்சத்தில் நெளிந்தன. முதலும் கடைசியுமாகத் தாடிக்காரன் வெட்கப்பட்டு முகம் சிவந்தான்” என்று பிரான்சிஸ் எழுதுகிறார். தேவாலயங்களையும் அருட்தந்தைகளையும் புறக்கணித்துவிட்டு இரு கன்னியர்களின் பாதத்தை முத்தமிட்டு பிரான்சிஸ் கடல் வழியாகக் கண்டடைந்த தரிசனம் ‘வெட்கத்தால் முகம் சிவந்த அபூர்வமான இயேசு.’

நாவலின் இறுதிக் காட்சி:

அகக் கொந்தளிப்பும் கவித்துவ உச்சங்களும் நாடகீயமான தருணங்களும் உணர்வுகளின் மோதல்களும் நிறைந்த நாவல்கள் ஆழமான சோகத்துடனோ அபூர்வமான சமநிலையுடனோதான் முற்றுப்பெறும். அப்போதுதான் அந்த நாவல் முடிவடையாமல் நமக்குள் நிகழ்ந்துகொண்டேயிருக்கும். ‘காடு’ நாவலில் பூட்டிய அறையில் வேறு பெண்ணோடு கிரிதரனுக்கு நிகழும் கலவியின் சுமையைத் தாங்க முடியாமல் வனக்கன்னி கதவைத் தட்டுகிற இடம் அற்புதமான முடிவுதான். ஆனால் இந்த விஷயத்திலும்கூட பிரான்சிஸ் வித்தியாசமாகவே யோசித்திருக்கிறார். நாவலின் மிக இனிமையான தருணம் எதுவோ அதுவே இறுதிக்காட்சியாக வருகிறது. அவன் சிலுவைப்பாட்டின் துயரங்களைத் தொடக்கத்திலேயே சொல்லிவிடும் பிரான்சிஸ், அவன் வாழ்வில் கண்டடைந்த ஒற்றை ஒளியைக் கடைசியில் வைத்திருக்கிறார். ஆனால் ஆனந்தமான அந்த முடிவே நம்மைக் கூடுதலாக அழ வைக்கிறது. அது மழைதான் என்று இரசித்து நனைந்து அதன் பாதையில் போகிற போது மீண்டும் கடல் வந்துவிடுகிறதல்லவா? இன்பத்துக்குள் மறைந்திருக்கும் துன்பத்தின் சாயல்கள் நூற்றாண்டுகள் கண்ட ஆலமரத்தின் நிழலாய் நம் மீதும் படிகின்றன.

கன்னியும் காலமும்:

‘கன்னியின்’ மற்றொரு சிறப்பம்சம் அந்த நாவலில் பல இடங்களில் மனிதர்களும் உணர்வுகளும், ஏன் இடமும்கூட, உறைந்த நிலையில் இருக்க, காலம் மட்டும் முன்னோக்கி நகர்கிறது. பெரியக்கா கையில் குழந்தையாக இருக்கும் அமலாவை அண்ணாந்து பார்க்கும் பாண்டி அதே ஆச்சரியத்தோடு அப்படியே இருக்கிறான். அவர்கள் வீட்டு மொட்டை மாடியில் கிறிஸ்து பிறப்பை வரவேற்று ஒவ்வோர் ஆண்டும் தொங்கவிடப்பட்ட நட்சத்திரங்கள் நிறமாற்றத்துடன் அதே இடத்தில் தொங்கிக்கொண்டிருக்கின்றன. ஆனால் காலம் மட்டும் பன்னிரண்டு ஆண்டுகளைச் சுளையாகத் தூக்கிக்கொண்டு ஓடிவிடுகிறது. அதேபோல், கன்னியாகுமரியில் பாண்டியைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு அமலா வளையல்களை நீருக்குப் பரிசளித்துக்கொண்டேயிருக்கிறாள். தண்ணீரும் வளையல்களும் அவர்களோடு உறைந்து நின்றிருக்க, காலம் மிதந்து ஓடுகிறது. அதற்கு நேர்மாறாக, சாராவைச் சந்திக்கும் பத்து நாட்களில் காலம் மெதுவாக நகர்கிறது. காலத்தின் வேகத்தைக் கூட்டியும் குறைத்தும், ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாடு சொல்வது போல், மனித மனம் நிகழ்த்திவிடும் மாயைகளைப் பிரான்சிஸ் நுட்பமாகக் குறிப்புணர்த்தியிருக்கிறார்.

நிறைவாக:

மனிதர்கள் எவ்வளவு மாறினாலும் எதை எதையோ முயன்று படித்தாலும் விஞ்ஞானத்தின் புதுமைகளில் மூழ்கிப்போனாலும் அவன் அகத்தின் படிமங்கள் மொழியிலும் ஆன்மாவின் ஏக்கங்கள் அவன் ஆழ்மனதிலும் அதே புதுமையோடு அப்படியே உறைந்திருக்கின்றன. இந்த இரண்டையும் தொட்டுக்காட்டி மொழியின் உச்சத்தால் அதைச் சகலருக்குமான அனுபவமாக உருமாற்றி விடுகிற வித்தைதான் கன்னியை மகத்தான நாவலாக உருமாற்றுகிறது.

எவ்வளவு தேடிப் பார்த்தாலும் இந்த நாவலில் பலவீனங்களே இல்லை. கடலில் குறைகாண முயலும் நதிகளெல்லாம் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டு உப்பாகி விடுவதைப் போல் நாமும் மாறிவிடுகிறோம். விமர்சகர்களின் தீராத வியாதிக்கு இந்த நாவல் ஏதொரு மருந்தையும் கைவசம் வைத்திருக்கவில்லை.

சொல்லாட்சி, படிமங்களின் தனித்துவம், கூடவோ குறையவோ செய்யாமல் கதாபாத்திரங்களின் நாவுகளில் அந்தந்த கணத்தில் புகுந்து வெளியேறும் கூர்மையான உரையாடல்கள், தரிசனமாக உருமாறும் கவித்துவம், கலைத்துக் கலைத்து மீண்டும் அடுக்கும் போதெல்லாம் புதுப்பொலிவு வாய்த்துவிடும் அபூர்வமான காட்சிகள், உடலாக அன்றி ஆன்மாவாகவே கூடிப் பிரியும் கதாபாத்திரங்களின் தனித்துவம், மணலாக நீளும் ஒவ்வொரு வரியைக் கடக்கிற போதும் நம் உயிரில் கசிந்துவிடும் நீரூற்று என்று இந்த நாவலைப் பற்றிச் சொல்லிக்கொண்டே போகலாம். தமிழில் முன்னுதாரணமே இல்லாத பெரும் சாதனை இந்த நாவல். பிரான்சிஸ் ஒரு சுயம்புவைப் போல் கீழிறங்கி, தன்னைத்தானே சிலுவையில் அடித்து காயங்களைச் சிறகுகளாக்கி ஒரு பறவை செய்திருக்கிறார். சந்தனப் பாண்டியும் பிரான்சிஸூம் வேறல்ல. சந்தனப் பாண்டியின் வாழ்வும் அவன் அகத்தின் தேடல்களும் அவனுக்குள் பொங்கிப் பிரவாகமெடுத்த மொழியின் நீர்மையுமே இந்த அதிசயத்தை நிகழ்த்தியிருக்கிறது. அவன் எந்தப் பாதை வழியாகவும் நடக்கவில்லை. எந்த நதியிலிருந்தும் கிளை பிரியவில்லை. தானே முயன்று பறந்த பறவையின் பாதை கானகமாகிப் பூத்துக் குலுங்கி நம் விழிகளின் முன்னே கன்னியாகி விரிந்து நிற்கிறது.

திடீர்ச் சாவின் துயரம் தந்த சலுகைகளை உதிர்த்துவிட்டும் இதுவரை படித்ததை எல்லாம் கல்லாய் உருமாற்றி இந்தச் சிலிர்க்கும் பறவையை ஈவிரக்கமின்றி விரட்டிப் பார்த்தும் இன்றைக்கும் என்றைக்குமான கூற்றாக எனக்கும், என் போன்ற ஒரு சிலருக்கும் ‘கன்னி’தான் தமிழ் நாவலின் உச்சம் என்று தோன்றுகிறது. உணர்வுகளின் நடனத்தைக் கையமர்த்தி ஓரமாய் உட்கார வைத்துவிட்டு கல்நெஞ்சம் கொண்ட நீதிபதியின் பேனாவை இரவல் வாங்கி எழுதினாலும் இதுவே தோன்றுகிறது. இப்போதிருப்பவர்களும் இனிமேல் பிறக்கப் போகிற விமர்சகர்களும் கண்களில் பெருகிய நீரோடு ‘ஆமென்’ சொல்லும் காலமொன்று வரத்தான் போகிறது. ‘கன்னி’ எனும் பறவை பிரான்சிஸை இறகைப் போல் உதிர்த்துவிட்டு தமிழில் பிறந்து சாகப் போகும் கடைசி வாசகரின் தோளிலும் அமரத்தான் போகிறது.