கன்னி – காலத்தில் நிலைத்த தேவ மலர்

0 comment

‘மெசியாவின் காயங்கள்’ என்ற உக்கிரமான தலைப்புடன் ஜெ.பிரான்சிஸ் கிருபா தமிழ்க் கவிதையுலகுக்கு அறிமுகமானது தமிழ்ப் புனைவுலகின் நற்பேறு. அதுவரையிலான தமிழ்க் கவிதையின் மொழியிலிருந்தும் கூறுகளிலிருந்தும் கிருபாவின் கவிதைகள் முற்றிலும் தனித்துவமாக அமைந்திருந்தன. கவித்துவத்தின் உச்ச கணங்களை மிக அநாயசமாக எளிய சொற்களின் வழியே அவை சாதித்திருந்தன. வேதாகமத்தின் மொழி அழகைக் கவிதைக்குள் பொருத்தியிருந்த நேர்த்தி திரும்பிப் பார்க்கச் செய்தது. 

‘வலியோடு முறியும் மின்னல்’, ‘நிழலன்றி ஏதுமற்றவன்’ என அடுத்தடுத்து வெளியான அவரது கவிதைத் தொகுப்புகளும் அவற்றில் இடம்பெற்றிருந்த கவிதைகளும் தமிழ்க் கவிதையுலகில் கிருபாவுக்கென ஈடற்ற ஒரு தனித்த இடத்தை உறுதிசெய்தன. 

நவீனத் தமிழ் நாவல்களின் ஒரு பெரும் திசைமாற்றம் 2000த்தில் நிகழ்ந்தது. நாவலைப் பற்றிய புரிதலும் அதன் வடிவச் சாத்தியங்களைக் குறித்த தெளிவும் கொண்ட புதிய புதினங்கள் எழுதப்பட்டன. அந்த வரிசையில் 2006ம் ஆண்டு வெளியாகி பெரும் கவனத்தை ஈர்த்த நாவல் ஜெ.பிரான்சிஸ் கிருபாவின் ‘கன்னி’. 

‘கன்னி’ தமிழின் முதல் நவீனக் காதல் நாவல். ‘தீக்குள் விரலை வைத்த காதல் இன்பம் இப்புதினம்’ எனும் அதன் பின்னட்டைக் குறிப்பு பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. 

‘காதல் நாவல்’ என்றவுடனே சிறியதொரு இளக்காரம் மனத்துள் மின்னலிட்டு மறைவுது இயல்பு. தமிழில் அதுவரையிலான காதல் கதைகளும் புதினங்களும் தந்திருந்த அனுபவம். காதலைப் பற்றி இனி எழுத என்ன இருக்கிறது? சங்கமும் நவீனக் கவிதைகளும் திகட்டத் திகட்டச் சொல்லியாகிவிட்டது என்ற அலட்சியம். போதாக்குறைக்கு சினிமா முடிந்தவரை அதை வெவ்வேறு கோணங்களில் விதவிதமாக அலசி ஆராய்ந்த அலுப்பு. 

இத்தனை இருப்பினும் ‘காதல்’ என்ற சொல் ஏற்படுத்தும் ஈர்ப்பின் விசை என்றும் குறையாத ஒன்று. அதுவே இந்த நாவலுக்கான திறப்பாகவும் அமைந்தது. 

புகைப்படம்: றாம் சந்தோஷ்

ஆனால், இந்த நாவலை வாசிக்கத் தொடங்கியபோது அதுவரையிலான அத்தனை முன்முடிவுகளையும் அது நொறுக்கியது. தொடக்கத்தில் இது காதல் நாவல்தானா என்ற கேள்வி பதற்றத்துடன் எழுந்தது. நாவலின் ஆரம்பத்திலிருந்த சில அத்தியாயங்களில் விரிந்த ஒரு உலகம் தந்த நடுக்கத்தை இன்றும் நினைவுகூர முடிகிறது.  

‘கால்களைப் பிணைத்துக் கட்டிப்போட்டிருக்கும் பன்றியைப் போல உடை மரத்தடியில் சுருண்டு ஒருக்களித்துப் படுத்திருந்தான் பாண்டி’ என்ற வரிகளும் அதன் பிறகு விரிந்த காட்சி தந்த அதிர்ச்சியிலிருந்து மீள நேரம் பிடித்தது. அதற்கடுத்த சில பக்கங்களில் பிரமாதமான ஒரு தேவதைக் கதை. கடல் கன்னியும் கிழவனும் உலவுகிறார்கள். மீன்கள் துள்ளி மறிகின்றன. ‘கடல் கன்னி முத்தமிட்டதும் கடலின் இரண்டு அலைகள் திராட்சை ரசமாக மாறின’ என்ற வரிகளைப் படித்ததும் நாவலை மூடிவைக்க வேண்டியிருந்தது. என்ன நடக்கிறது என்ற வியப்புடன் மீண்டும் அந்தப் பகுதியைப் படித்தேன். 

மிகுந்த கவனத்துடன் ஒவ்வொரு வரியாக ஒவ்வொரு சொல்லாகப் படிக்கும் முனைப்பைக் கோரியது நாவல். நாவலின் அடுக்குகளைப் புரிந்துகொள்ள நேரம் பிடித்தது. படித்து முடித்த பின்னும் மறுபடி அந்தக் கேள்வி இன்னும் தீவிரத்துடன் ஒலித்தது ‘இது காதல் கதைதானா?’

நாவலை வாசித்து முடித்த பின்பு அது தந்த வியப்பு வெகுநாட்கள் விலகவேயில்லை. ஒரு நாவலை முழுக்க முழுக்க கவிதைகளைக் கொண்டே எழுதுவது சாத்தியமா? சிறிதும் திகட்டாமல், வலிந்து திணிக்கப்பட்ட உணர்வைத் தராமல், நாவலின் பகுதியாக, கதாபாத்திரங்களின் குரல்களாக அவற்றை ஒலிக்கச் செய்திருக்கும் மாயத்தைக் குறித்து யோசித்தபடியே இருந்தேன். இது காதல் கதைதான், ஆனால் வெறும் காதல் மட்டுமே கொண்ட கதையல்ல. காதலுக்கும் அப்பால் பெண்ணின்மேல் ஏற்படும் தூய சரணடைதலை மிக நுட்பமாகவும் செறிவாகவும் சித்தரித்திருக்கும் நிகரற்ற புனைவு என்பதை உணர்ந்தேன். பக்கங்களெங்கும் அடிக்கோடுகள். ஓரங்களில் ஒன்றிரண்டு சொற்களில் ஏராளமான குறிப்புகள். இறுதி அத்தியாயத்தைப் படித்து முடித்தபோது ஏற்பட்ட ஜூரம் தணிய வெகுநேரமானது. ‘கன்னி’ தமிழ்ப் புனைகதையில் கனிந்த அபூர்வமான நிகழ்வு என்று திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டேயிருந்தேன். இப்போதும் அதை இன்னும் உரக்கச் சொல்ல முடியும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. 

*

இந்த நாவலைப் புரிந்துகொள்வதில் பெரும் சவாலாக அமைந்திருப்பது இதன் வடிவமைப்பு. 

இதுவொரு மகத்தான காதலைச் சொல்லும் நாவல். ஆனால் இது தொடங்குவது ஏலான ஆசாரியின் அகால மரணத்தில். கதை நாயகன் அறிமுகமாகும் போதே தன்னிலை இழந்து பித்தனாகிக் கட்டி வைக்கப்பட்டிருக்கிறான். மனிதன் இருக்கக்கூடாத ஆகக் கீழ்மையான நிலையில் இருப்பவனின் விடுதலைக்கான வழிகள் ஆராயப்படுகின்றன. தாயத்துகள் கட்டப்படுகின்றன. சரியாகும் வழியில்லையென்றால் ‘சோத்துல விஷம் வெக்க வேண்டிதுதான்’ என்று பெற்றவள் வெறித்த பார்வையுடன் சொல்கிறாள். 

நாவலின் ஆரம்பப் பக்கங்கள் கொண்டிருக்கும் இந்தப் பதற்றமும் தீவிரமுமே பிற காதல் நாவல்களிலிருந்து ‘கன்னி’யை வேறுபடுத்தும் முதல் காரணி. 

பதற்றத்தைத் தணிக்கும் விதத்தில் ‘சுனை’ பகுதியில் அமலா சிறுமியாக இருந்த காலம் முதல் அவள் கன்னியாஸ்திரீ ஆவதற்காகக் கன்னியாகுமரி செல்லும் வரையிலான பருவம் களங்கமற்ற நாட்களின் ஒளியுடனும் குறும்புகளுடனும் சிறுவர்களுக்கேயுரிய துள்ளல்களுடனும் சித்தரிக்கப்படும்போது மனம் சற்றே ஆசுவாசம் கொள்கிறது. 

‘அருவி’ பகுதியில் உள்ளுக்குள் ஊற்றெடுத்த வியப்பும் போற்றுதலும் பெருகி நிறையும் தருணங்கள், சொற்கள் மௌனத்துக்குத் திரும்பும் கவிதைகள், வெவ்வேறு பெண்களின் வழியாக ஏற்படும் இளமையின் தடுமாற்றங்கள், கன்னியாகுமரியிலும் நெல்லையிலும் கிருஷ்ணாபுரத்திலும் திருச்செந்தூரிலும் மணப்பாடிலும் இருவருக்கு நடுவிலும் வளரும் புரிதல், தெளிவுற்று நெருங்கி பின் இரக்கமின்றித் தரப்படும் பிரிவை ஒப்புக்கொண்டு புனிதச் சிலுவையை ஏற்று பம்பாய்க்குச் செல்லும் முடிவு என அபாரமான காவியத்தின் அதிஅழகான பக்கங்கள் விரிந்து விரைகின்றன.

‘காட்டாறு’ அடித்து வரும்போது முற்றிலும் திசையிழக்க நேர்கிறது. பாண்டியின் மனப்போக்குகளும் எல்லையற்றுச் சுழலும் உன்மத்தத்தின் உச்சங்களும் பயங்கொள்ளச் செய்கின்றன. நிலைதடுமாறும் வரிகள் பல அடுத்தடுத்து நெருக்கியடித்து மூச்சுத் திணறச் செய்கின்றன. ‘சாரா’வைத் தேடும் ‘சாரோ’னாகி அவன் ஓடுகிறான். எங்கிருந்து வந்தாள் இந்தச் சாரா என்ற குழப்பமும் அலைக்கழிப்புமாக அதுவரையிலிருந்த ஒளியையும் சாந்தத்தையும் முற்றிலுமாகச் சிதைத்து மீண்டும் பெரும் பதற்றத்தை விதைக்கிறது. 

பிற்சேர்க்கையாக ஷெல்லியின் நீண்ட கவிதை. சொற்களும் இசையுமாய்த் துள்ளிச்செல்லும் ஓடையென மொழி தவழும் அற்புதமான மொழியாக்கம். 

‘கார்முகில்’ புதிய கதையைச் சொல்கிறது. தேரித்துறை திருவிழாவில் தன் அத்தைக்கன்னியின் உருவிலுள்ள சாராவைக் காண்பதும் காதல்கொள்வதும் ஊடலும் தேடலுமாக விரியும் அபாரமான தருணங்களைக் கொண்டது. எதிர்பாராச் சந்திப்பையும் அதன் பிறகான அதிர்ச்சியான தகவலுடனான பிரிவுடன் சற்றும் இரக்கமின்றி முடிகிறது. 

இறுதியாக ‘மழை’. தேர் பவனி நாளிரவில் கனிந்து கைகூடி கொஞ்சி நீளும் காதல் தருணங்களைக் கொண்டது. திருவிழாவின் எட்டாம் நாள் நிகழ்வான இதனை நாவலின் கடைசிப் பகுதியாக வைத்திருக்கும் நுட்பமே இப்பகுதியையும் நாவலையும் புனைவின் அபாரமான உச்சத்துக்குக் காரணமாகிறது. 

நாவலைப் படித்து முடித்த பிறகு உண்மையில் நாவல் எங்கு தொடங்கி எப்போது முடிகிறது என்னும் மயக்கம் நீடிக்கிறது. மெல்ல மெல்ல அதன் பக்கங்களுக்குள் மறைந்திருக்கும் மர்மங்களை விலக்கிப் போகும்போது தெளிவு கிட்டுகிறது. இந்தப் புதிர்வழிகளில் அங்கங்கே திசைகாட்டிகளாகவும் ஆசுவாசங்களாகவும் அமைந்திருப்பவை தமிழின் ஆகச் சிறந்த கவிதை வரிகள். இவற்றுக்கு நடுவே பழந்தமிழ்க் கவிதைகளின் அபாரமான பல வரிகளும் இணைந்து நாவலின் புதிர்வழிகளை ஒளிரச் செய்திருக்கின்றன. 

இந்த நாவலைக் கால வரிசைப்படி அடுக்கி ஒழுங்கமைத்து மீண்டும் வாசிக்க முடியும். அத்தியாய எண்களைக் கொண்டு அப்படி வாசிப்பது சாத்தியம்தான். ஆனால் அந்த வாசிப்பின்போது கிடைக்கும் அனுபவம் நாவலின் தற்போதைய வடிவில் கிடைக்கும் அனுபவத்துக்கு முற்றிலும் வேறானது. 

இப்போது பாண்டி என்னவானான் என்ற கேள்வி நியாயமாக நாவலின் கடைசிப் பக்கத்தை வாசித்து முடிக்கும்போது எழவேண்டும். ஆனால், அந்தக் கேள்விக்கான பதில் முதல் சில பக்கங்களுக்குள்ளாகவே சொல்லப்பட்டிருப்பதை மறந்துவிட்டு அவனை அவ்வாறு பித்துறச் செய்த அற்புதமான அந்த இரவின் ‘மழை’யில் ஆனந்தமாக அவன் நனைந்திருப்பதைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். 

கிறிஸ்துமஸ் நட்சத்திரங்களின் வண்ண வேறுபாடுகளின் வழியாகப் பாண்டியின், அமலாவின் சிறுவர் பருவத்தைச் சுட்டியிருக்கும் நுட்பமும், கடலலைகளில் தன் கை வளையல்களை அமலா கழற்றிப் போடும்போது மாறும் வண்ணங்களின் வழியாகக் காலத்தின் ஓட்டத்தைச் சுட்டும் நேர்த்தியும் கிருபாவின் புனைவு உத்திக்கான உதாரணங்கள்.

*

இந்த நாவல் பெண்ணின் மீதான வியப்பை, போற்றுதலை, காதலைச் சொல்வது. அது தரும் உவகையை, மயக்கத்தை, வலியைச் சித்தரிப்பது என்று குறிப்பிடுவது நாவலுக்கும் அதன் பொருண்மைக்கும் நியாயம் செய்யாத ஒன்றாகும். இந்த நாவலில் அமைந்திருக்கும் போற்றுதலும் வலியும் அசாதாரணமானவையாக அமையக் காரணம் நாவல் அமைந்துள்ள பின்னணி. 

நாவலின் களமாக அமைந்திருப்பவை கடலோரத்தில் அமைந்த கிறித்துவ கிராமங்கள், ஊர்கள். கதாபாத்திரங்கள் அனைவரும் தூய அன்னையிடம் அடைக்கலம் தேடும் கிறிஸ்துவர்கள். காதலைத் தேவகுமாரன் சுமக்கும் சிலுவையாக, அவன் தலையில் சூட்டியிருக்கும் முள் கிரீடமாக இந்த நாவல் சித்தரிக்கும்போது அதன் வலியும் வாதையும் அர்த்தகனம் கூடுகிறது. ‘தேவனுக்காக நேர்ந்துவிடப்பட்ட’ கன்னியாஸ்த்ரீயை நேசிக்கும் ‘கோயில் பிள்ளை’ எனும் சரடு முக்கியமானது. 

அக்கா தம்பி என்ற உறவையும் மீறி இருவரின் மனத்திலும் கிளைக்கும் பேரன்பை, ஈர்ப்பை, பாராட்டுதல்களை ஒருவருக்கொருவர் மறைப்பதில்லை. சாத்தியம் இருக்கும் வரை அதைப் பேணி அது தரும் மன உணர்வுகளையும் அது நிரந்தரமல்ல எனும் வலிகளையும் அறிந்து கடைசியாக விலகும்போது ‘புனிதச் சிலுவை’யையும் பறித்துக்கொண்டு விலகும்போது கடலும் மௌனமுமே அவனுக்குத் துணையாகி நிற்கின்றன. ‘அக்கா’ என்றாலும் அவன் ‘அமல’தாசன். அவள் மீதுள்ள பேரன்புக்கு எந்தக் களங்கமும் வரலாகாது என்றே தனக்குச் சாத்தியமான பிற காதலிலிருந்தும் பெண்களிடமிருந்தும் விலகி ஓடுகிறான். பிரேமா ராணியும் ஜூலியும் அவனது இளமையைத் தீண்டி தடுமாறச் செய்யும்போதும், விஜிலா தன் காதலை வெளிப்படுத்தும்போதும் அவன் நிலைமாறுவதில்லை. அமலாவுக்கான இந்த நோன்பின் முடிவு என்னவென்று தெரிந்தும் அவன் மனம் அதிலிருந்து இம்மியும் விலகுவதில்லை. அவள் ‘வார்த்தைப்பாடு’க்குப் போக இவன் ‘சிலுவைப்பாடு’ அடைகிறான். 

அமலாவின் மீது பாண்டி கொண்டிருப்பதைக் காதல் என்று வகைப்படுத்த முடியாது. தன்னைவிட ஒரு வயது மூத்த அக்கா. சிறுவனாக இருந்த காலந்தொட்டு அவளைப் பார்த்து, வியந்து, பரவசப்பட்டு வளர்பவன் அவன். அவளது நிழலாகவே இருந்து ஒவ்வொரு நாளும் அவளையே நினைத்து அவளுக்காகவே கவிதைகள் எழுதி அவள் சொல்லையே வேத வாக்காக எடுத்துக்கொண்டு வாழ்பவன். அவள் மீதான அன்பின் தூய்மையைக் களங்கமாக்கும் எந்தவொன்றையும் அனுமதிக்காதவன். அவளை ஆராதிப்பதைத் தவிர அவனுக்கு வேறொன்றும் தெரியாது.

ஆனால், சாராவின் மேல் அவன் கொண்டிருப்பது காதல். அவளது தோற்றம் அமலாவை நினைவுபடுத்துகிறது. அதுவே அவளைத் தொடரச் செய்கிறது. கவிதைகளை அர்ப்பணித்து காதலிக்கச் செய்கிறது. 

ஒரு நாவலின் சிறப்பை மேலும் வலுவாக்குவது அதன் நிலம். அது வெறும் பெயரல்ல. அதன் வரலாறும் பண்பாடும் நாவலின் களத்துக்கும் அர்த்தத்துக்கும் கனம் சேர்க்கும் வகையில் அமைய வேண்டும். வரலாறும் பண்பாடும் பின்னணியில் அமையாத களங்களைக் கொண்டு எழுதப்படும் நாவல்கள் உறுதியாக ஊன்றிக்கொள்ள நிலமின்றி தள்ளாடி விழுந்துவிடக் கூடியவை. 

அலைகள் துள்ளியடிக்கும் ஆக்ரோஷமான ஆண்கடல் வலப்புறமும், அமைதியே உருவான பெண் கடல் இடப்புறமும் இருக்க நடுவில் அமைந்திருக்கும் சேவியர் குகை நாவலின் மையப் புள்ளி. ஆக்ரோஷத்தையும் அமைதியையும் ஒன்று கலக்கச் செய்து உப்புச் சுவை நீக்கிய சுனை நீரை ஊற்றெடுக்கச் செய்யும் அற்புதமான காதலின் வடிவம் அது. 

தென்திசை பார்த்து வீற்றிருக்கும் கன்னியாகுமரியின் முடிவற்ற தவமே ‘வார்த்தைப்பாடு’ ஏற்கும் கன்னியாஸ்திரீகளின் வாழ்வும். கை வளையல்களைப் போல, கழுத்துச் சங்கிலிகளைப் போல தத்தம் ஆசைகள், விருப்பங்கள் என அனைத்தையும் அவர்கள் துறவுக் கடலுக்கு அர்ப்பணிக்கிறார்கள், கடைசியில் அவர்களே அதற்குள் இறங்கிவிடுகிறார்கள். 

நாவலில் இடம்பெறும் எந்தவொரு இடமும் நாவலை விட்டு விலகுவதில்லை. திருச்சீரலைவாயும் சிற்பங்கள் சிறந்த கிருஷ்ணாபுரமும், பம்பாயின் அஜந்தா குகையும்கூட மனப்போக்குகளைப் பிரதிபலிக்கும் இடங்களாகவே அமைந்துள்ளன. நாவலெங்கும் இடம்பெறும் கடல், பாண்டியின் மனமன்றி வேறல்ல. அவனது மனப்போக்குகளும் கொந்தளிப்புகளும் தடுமாற்றங்களுமே கடலாகி உருமாறி அமைந்துள்ளன. கதைமாந்தர்களின் இயல்புகளையே புறக்காட்சிகள் வெளிப்படுத்துகின்றன. 

அதையடுத்து, காதலும் அதன் வலியும் ஏற்படுத்தும் மன அலைவுகள் இந்நாவலின் வெவ்வேறு பக்கங்களில் எண்ணற்ற சித்திரங்களாய், பிதற்றல்களாய், கவிதைகளாய் விரவிக் கிடக்கின்றன. தர்க்க அறிவினை மீறி கற்பனையின் தீவிர முடிச்சுகளைத் தொட்டு நிற்கின்றன. கனிந்துருகி பித்துற்று காற்றில் அலைந்து பறக்கின்றன. துயரத்தில் உறைந்த வலிகளை மீட்டுகின்றன. தேவதைக் கதைகளாகி உரையாடுகின்றன. பல இடங்களில் திசை தடுமாற நேரிடுகின்றன. கதை தன் தொடர்ச்சியை விட்டுவிட்டு தன்னிச்சையாகக் கிளைபாவி மனத்தின் பல்வேறு அடுக்குகளில் தாவியும் திரிந்தும் போக்கு காட்டுகிறது. அடுக்கடுக்கான வலுவான படிமங்கள் ஒவ்வொரு வரியிலும் முளைத்தெழுகின்றன. ஒரு நாவலின் கதைமாந்தர்களின் மன உணர்வுகளை இத்தனை வலுவாகவும் எழுச்சியுடனும் சித்தரித்திருக்கும் இன்னொரு நாவல் இல்லை. 

*

மனிதனின் இறைநம்பிக்கைகளுக்கு இணையாகவே ஆவிகளின் மேலும் தீய சக்திகளின் மீதுமான அச்சமும் குடிகொண்டுள்ளன. தேவனின் கிருபைகளுக்குச் சமமாகவே சாத்தான்களின் சாபங்களும் மனிதர்களை அலைக்கழிக்கின்றன. சாத்தான்களின், ஆவிகளின் ஆட்டங்களிலிருந்து தப்பித்திருக்கும் பொருட்டே மனிதர்கள் தேவனின் திருச்சபையை அடைகின்றனர். அன்பும் வன்மமும் கருணையும் குரூரமும் சிறுமையும் பெருந்தன்மையும் ஒளியும் இருளும் நிழலுமாக மனித இயல்பின் திரிபுகள். காத்து கருப்புகளும் பேய் பிசாசுகளும் யட்சிகளும் தாயத்துகளும் பூசைகளும் பரிகாரங்களும் அவ்வியல்புகளின் வெளிப்பாடுகள். 

பாண்டிக்கு இரும்புச் சங்கிலியைச் செய்து அவனை மரத்தில் கட்டி வைக்கும் ஏலான ஆசாரியைச் சத்ராதிதான் வீழ்த்தியிருக்கும் என்று தொடங்குகிறது நாவல். மனிதனுக்குள் தன்னை மீறிய தீய சக்திகளின் மீதிருக்கும் அச்சமும் அவற்றிலிருந்து தப்பியிருக்க வேண்டும் என்ற தவிப்பும் தர்க்கங்களுக்கு அப்பாற்பட்டவை. 

சித்தியின் கொடுமை தாங்காமல் ஊரை விட்டு ஓடி சிலகாலம் கழித்துச் செல்வந்தனாகத் திரும்பிவந்து கோலாகலமாக மணம்முடிக்கும் சூசை மணியைப் பித்தனாக்கி ‘சீத்தா பாத்தா குத்துரு குத்துரு’ என்று பிதற்றியபடி அலையச் செய்கிறாள் நொண்டி இசக்கி. தலைமுடியைத் தாயத்தில் அடைத்து மனம் கவர்ந்த பெண்ணை வசியம் செய்து மணம் முடிக்கும் முனீர் சர்புதீன் மவுல்வி ‘பெண் தொடர்பு வகையில் சிக்கல்’ உண்டான பாண்டிக்குத் தாயத்து செய்து தருகிறார். 

சம்மனசுகள் சத்ராதிகளாகத் திரியும் மாயத் தருணங்கள் சுவாரஸ்யமானவை. அதிகமும் அறியாது நிகழ்பவை. அமலாவையும் சாராவையும் தேவனுக்கு அர்ப்பணிக்கச் செய்யும் உறவுகளின் மனத்தை அசைத்தவை சம்மனசுகளா? சத்ராதிகளா? சிறு களங்கமும் இல்லாது தூய ஆன்மாவாய் வளர்ந்த பாண்டியை உடைமரத்தில் சங்கிலி கொண்டு கட்டிவைக்கச் செய்த காதல் சம்மனசுகளின் ஆசியா அல்லது சத்ராதிகளின் சாபமா?

காதலை விதைக்கும் கன்னியர்கள் தூய்மையின் திருவுருவாகி தெய்வமென நிற்கும்போது கண்ணீர் மல்கி நெஞ்சுருகத் தொழும் காதலர்கள் அஞ்சி கைகட்டித் தொழுது நிற்க வேண்டும் அல்லது பித்துற்று அலைந்து தன்னிலையிழந்து அரையாடையுடன் மழையிலும் வெயிலிலும் உடைமரத்தடியில் ஒடுங்கிக் கிடக்க வேண்டும். 

இவற்றுக்கு நடுவில் இடம்பெற்றுள்ள கடல் கன்னியும் கிழவனும் சந்திக்கும் கதை, கடலில் பூக்கும் கருந்தாமரைகள், ஊஞ்சலாடும் மான் போன்ற பல்வேறு கதைகள் பைபிள் கதைகளின் தன்மையைக் கொண்டுள்ளன. கற்பனையின் உச்சபட்ச சாத்தியத்தையும் தர்க்கத்தை மீறி கவிதை தொட முனையும் தருணத்தையும் கொண்டிருக்கும் இக்கதைகள் நாவலின் மையத்தை இன்னும் நுட்பமாக ஆழத்துக்கு இட்டுச்செல்கின்றன. 

*

தேரித்துறை திருவிழாவின் தேரோட்ட நாளன்று இரவில் தனிமையில் பாண்டியும் சாராவும் சந்திக்கும் காட்சி தமிழ் நாவல்களில் இடம்பெற்றுள்ள காதல் காட்சிளில் ஆகச் சிறந்தது. இருவரும் தனிமையில் சந்திக்கும் ஒரே சந்தர்ப்பம். ஆர்வமும் அச்சமும் உரிமையும் கூடிய உணர்ச்சித் ததும்பல்கள் நிறைந்த சூழலும் அதற்கேற்ற உரையாடல்களுமாய் அமைந்துள்ளது இக்காட்சி. வெகு இயல்பாய்த் தொடங்கி மெல்ல மெல்ல அடுத்தடுத்த கட்டத்துக்குத் துடிப்புடன் நகரும் பாங்கும் இவ்வாறான தனிமையில் பொதுவில் ஆண்கள் கொள்ளும் அச்சத்தையும் பெண்களிடத்தில் கிளைக்கும் துணிச்சலையும் காட்சிப்படுத்தியிருக்கும் விதமும் அபூர்வமானவை. 

தேரோடும் இரவு. யாருமற்ற தனிமை. எந்த நேரத்திலும் யாரும் வரக்கூடும் என்ற அச்சம். அண்மை கிளர்த்தும் ஆர்வம். சீண்டல்கள், சிணுங்கல்களால் கனியும் வெம்மை. ‘கனவு நிஜமாகும்போது கிலிகொள்ளும் காதலைக்‘ காட்சிப்படுத்தியிருக்கும் அற்புதமான தருணம். 

அவளேதான் அடுத்தடுத்த நிலைக்கு முதலடி வைக்கிறாள். நாடியைக் கையில் ஏந்தி கன்னத்தில் செல்லமாகத் தட்டிவிட்டுப் போகிறாள். அவன் எழுதிய கவிதைகளையே அவனுக்குப் பதிலாக்குகிறாள். விடைபெறும் கணத்தில் அவன் தாளமாட்டாமல் நிலைதடுமாறுகிறான். சாமம் முடிவற்று நீண்டுகொண்டேயிருக்க காதலின் பிடி மெல்ல மெல்ல இருவரையும் இறுக்குகிறது. அவன் காதலைச் சொல்லும்போது அவள் மௌனமாயிருக்கிறாள். ‘மன்னிக்க’வென அழைத்து வந்தவள் அடுத்தடுத்து  அவனைச் சிலுவை சுமக்கச் செய்கிறாள். பரிசாகக் கிடைப்பது ஷெல்லியின் கவிதைத் தொகுப்பு.

திருவிழா முடியும்போது அவன் காண்பது வேறொரு சாராவை. அவள் யாரென்று அறியும்போதுதான் மூளைக்குள் இறங்குகிறது முதல் ஆணி. 

நாவலின் அமைப்பில் இக்காட்சி ‘மழை’ என்ற தலைப்புடன் கடைசியாக இடம்பெற்றுள்ளது. நிகழ்வுகளின் வரிசைக்கேற்ப இதை அடுக்கியிருந்தால் இப்படியொரு அனுபவத்தை இது சாத்தியப்படுத்தியிருக்காது. ஒரு கவிதையில் ஒரு சொல்லை கடைசியாக மாற்றி வைக்கும்போது கிடைக்கும் அழுத்தமும் எழுச்சியும் இந்த இடமாற்றத்தில் கனிந்திருப்பது நாவலின் தீராச்சுவைக்கு ஒரு முக்கியக் காரணம். 

தமிழ் நாவல்களிலேயே தனித்துவமான, ஒப்புமையற்ற மொழியழகைக் கொண்டது கன்னி. இப்படியொரு மொழி உச்சத்துடன் இன்னொரு நாவல் அமைவது அசாத்தியம். கிருபாவின் கவிதை மொழி தன்னிச்சையானது. அபூர்வமான சொல்லிணைவுகளைக் கொண்டது. மொழியும் உன்மத்தமும் முயங்கும் பொழுதில் கிளைக்கும் விநோத நிறங்களையும் நடனங்களையும் சொற்களில் இசைக்கவல்லது. வாதையைச் சொல்லும்போது இதயத்தை நொறுக்கும் அது, காதலைச் சொல்லும்போது களிப்பேற்றி, கண்மூடித் தலையாட்ட வைக்கிறது. இந்த நாவலிலும் கிருபா அதே கவிதை மொழியைத்தான் கையாள்கிறார். அதில் இன்னும் சில மேன்மைகளைக் குழைத்து மெருகேற்றியிருக்கிறார். அரிச்சுவடிக்கு முன்பே அவருக்குள் வந்துவிட்டது பைபளின் மொழி. அதன் கதையாடல்களும் மொழியமைப்பும் கற்பனை நுட்பமும் இயல்பாகவே அவருக்கான மொழியின் ஒரு பகுதியாக அமைந்துவிட்டன. நாவலின் பல்வேறு இடங்களில் விரியும் கனவுகளும் மாயா உலகங்களும் புலன்களின் எல்லைகளையும் அறிவின் வரைகளையும் கடந்து தாவும் சித்தரிப்புகளையும் அது சாத்தியமாக்கியுள்ளது. கிருபாவின் பள்ளிக் கல்வி ஏழாம் வகுப்பு மட்டுமே. எனவே, ஏட்டுக்கல்வியின் வழியாக அவர் அடைந்திருக்கும் அறிவு எல்லைகள் கொண்டது. அதன் சுமைகள் அவரது மொழியில் ஏறவில்லை. ஆனால், தெளிவான தேர்ந்தெடுக்கப்பட்ட இலக்கிய வாசிப்பு கிருபாவின் எழுத்து மொழியைச் செழுமையடையச் செய்திருக்கிறது. வியப்பைத் தரும் அத்தகைய அடையாளங்களை இந்த நாவல் நெடுகக் கண்டுணர முடியும். திருக்குறளும், சிலம்பும், பரணியும், நற்றிணையும், குறுந்தொகையும் பொருத்தமான இடங்களில் ஒன்றிணைந்து இந்த நாவலின் உரைநடைக்கு எழிலூட்டியுள்ளன.  

*

‘கன்னி’ இன்றளவும் வாசிப்பின் அனைத்து சாத்தியங்களையும் சவால்களையும் விரித்துக்கொண்டே செல்லும் ஒரு புனைவு. இதன் வரிகள் பலவும் கவிதைகளே. இன்னும் சில கவிதைக்கு அணுக்கமாக நின்றொளிர்பவை. பெண்களைக் குறித்து வர்ணிக்கும் பல வரிகளில் உன்மத்தமும் பேரழகை ஆராதிக்கும் பக்தியும் குதூகலத்துடன் இணைந்து ஒலிக்கின்றன. இந்த உரைநடையைப் பகுத்துப் பார்த்து இதன் நுட்பத்தைக் கண்டுணர முயல்வது சவாலானது. கற்பனைக்கு மொழி எங்கே வளைந்து கொடுக்கிறது, மொழியைக் கற்பனை எந்த இடத்தில் தனக்கேற்ப திரித்துக் கொள்கிறது என்பதைப் புரிந்துகொள்வதும் எளிதல்ல. அதேபோல இதில் உள்ள பல்வேறு உபகதைகளையும் அவற்றின் உட்பொருளையும் தெளிந்துணர்வதும் சாதாரண காரியமல்ல. திரும்பத் திரும்ப வாசித்து தனித்தனியாகப் பிரித்துப் பார்க்கும் பொறுமையும் பக்குவமுமே உதவக்கூடும்.

*

நாவல் எனும் வடிவில் ‘கன்னி’ பல தனித்தன்மைகளைக் கொண்டது. இதுவொரு மீபுனைவு (meta fiction). பலகுரல் தன்மை (polyphony) கொண்டது. நாட்டார் கதை மரபின் சரட்டையும் பைபளின் உபகதைத் தன்மையையும் கையாண்டிருப்பது. மாய யதார்த்தத்தின் (magical realism) குணங்களைக் கொண்டிருப்பது. கன்னிமை குறித்து மானுட வாழ்வை நோக்கிய ஒரு தீவிரமான கேள்வியை எழுப்பும் விதத்தில் இந்த நாவல் செவ்வியல் (classic) அடையாளத்தைக் கொண்டது. பெண்களை இறைவனின் திருப்பணிக்குக் ‘கன்னியாஸ்த்ரீ’களாக ஒப்படைக்கும் வழக்கத்தின் மீதான கூர்மையான விமர்சனத்தை இந்த நாவல் எழுப்பியுள்ளது. புனித சேவியர் எந்தவொரு சிறு குகையிலிருந்து கிறித்துவ மதத்தைப் பரப்பத் தொடங்கினாரோ அதே குகையில் நிற்கும்போதுதான் பாண்டி அந்தக் கேள்வியை எழுப்புகிறான். அவள் பதில் சொல்லாமல் அழுகிறாள். சாராவுக்குள்ளும் இந்தக் கேள்வி இருந்திருக்கும். 

உலக இலக்கியத்தில் காதலின் உன்னதத்தையும் மேன்மையையும் சொன்ன ஜெர்மன் நாவல் கதேயின் ‘The sorrows of young Werther’. அந்த நாவலைக் ‘காதலின் துயரம்’ என்ற பெயரில் நான் மொழிபெயர்த்திருந்தேன். 1774ம் ஆண்டில் கதேயின் நாவல் வெளியானபோது உலக அளவில் இளைஞர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. காதல் தோல்விக்காகத் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு பலரும் தற்கொலை செய்துகொள்ள முனைந்தனர். கதேயின் மொழியும் மிக நுட்பமானது, கவிதையை நெருங்கி ஒலிப்பது. மொழிபெயர்ப்பில் பெரும் சவாலைத் தந்தது. கிருபாவின் ‘கன்னி’ இளம் வெர்தரின் துயரை ஒத்தது. தன்னிலை இழந்து பித்துற்று அலையும் வெர்தரும் மனம் பிறழ்ந்து இரும்புச் சங்கிலியில் கட்டுண்டு மழையிலும் வெயிலிலும் சிதைந்து கிடக்கும் பாண்டியும் ஒரே நோய்மையின் இரண்டு பலிகள். காதலியான லோதே தொட்டுத் தந்த துப்பாக்கியால் வெர்தர் தன்னை மாய்த்துக்கொள்ளும் போது பாண்டியோ நினைவுகளின் சிலுவையைச் சுமந்தபடி நிறைவேறாத காதலின் சாட்சியாக எஞ்சி நிற்கிறான். உலக இலக்கியத்தில் புகழ்பெற்ற பிற காதல் காவியங்களை வாசித்த அனுபவத்தின் அடிப்படையில் பார்க்கும்போது அவற்றில் பலவற்றையும்விட ‘கன்னி’ பல படிகள் மேலே நிற்கிறது என்பதைத் தயக்கமின்றிச் சொல்ல முடியும். 

*

‘கன்னி’ நாவல் தமிழின் செவ்வியல் நாவல்களில் தனித்தன்மை வாய்ந்த ஒன்று. ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும் இதன் பக்கங்களிலிருந்து துலங்கும் மர்மங்கள் நாவலைப் புதுமையாக்குகின்றன. காலம் கடந்தவொன்றாக மாற்றுகின்றன. அழியாத காலத்தில் ஒரு தேவமலரென அதன் பெயரை நிலைக்கச் செய்கின்றன. கூடவே ஜெ.பிரான்சிஸ் கிருபா எனும் மகா கலைஞனின் பெயரையும்.