நல்லாற்றின் நின்ற துணை

by ஹரீஷ் கணபதி
3 comments

“நீ என்ன பெரிய மயிருன்னு மனசுல நெனப்பாடா? என் பொண்ணு இன்னும் வாழணும்னு சொல்றாளேங்கற ஒரே காரணத்துக்காகத்தான் உங்கிட்ட பொறுமையா பேசிட்ருக்கேன். இல்லன்னா ஊர் சைடுல ஆள் சொல்லிவிட்டு தூக்கறதுக்கு ரொம்ப நேரமாவாது. மினிமம் கைய காலையாவது ஒடச்சு வீட்ல படுக்க வச்சிருவேன். பாக்கறியா?”

திரைப்படங்களில் பார்த்தும் கதைகளில் படித்தும் மட்டுமே பழகியிருந்த இதுபோன்ற வார்த்தைகள் என்னை நோக்கிச் சொல்லப்படுவதன், அதுவும் இந்த மாதிரி வார்த்தைகளோடு என்னால் எந்தச் சந்தர்ப்பத்திலும் தொடர்புபடுத்திப் பார்க்க முடியாத சராசரி மென்மையான ஒருத்தர் சொன்னதன் ஆகப்பெரும் அதிர்ச்சி என்னை இன்னமும் தாக்கிக்கொண்டிருந்தது. உள்ளங்கைகள் வியர்த்து ஃபோன் நழுவுவது போல் இருந்தது. அதற்குப் பிறகு அவர் பேசிய எதுவும் பெரிதாகக் காதில் விழவில்லை. கடைசியாக, “ஜாக்கிரதை” என்று எச்சரித்துவிட்டு அவர் ஃபோனை வைத்ததும்தான் சுய உணர்வுக்கு வந்தேன்.

அப்பாவுக்கு அழைத்து விவரத்தைச் சொல்லி, அங்கே போய் அம்மாவின் புகைப்படங்களை எடுப்பது இப்போதைக்கு முடியாதென்றும், அம்மாவின் வேறொரு புகைப்படத்தை ஃப்ரேம் போட்டு வைக்கும்படியும், நேரில் சந்திக்கும்போது வாங்கிக்கொள்வதாகவும் சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தேன். இதை முதலிலேயே செய்திருக்கலாம் என்று தோன்றியது.

இல்லை, அங்கிருக்கும் புகைப்படம்தான் வேண்டுமென்றால் வக்கீல் சொன்னபடியாவது செய்திருக்கலாம். வக்கீல் என்றதும் ஞாபகம் வந்தது. இது மாதிரி ஏதேனும் நடந்தால் உடனே தகவல் சொல்லச் சொல்லியிருந்தார். அழைத்தேன். ஒரு குழந்தை எடுத்தது. அதைத் தொடர்ந்து கசமுசவென்று சத்தம். பின், “ஷ்ஷ்… உள்ள போய் விளையாடு போ. அம்மா வரேன்” என்று சொல்லி ஃபோனை வாங்கிக்கொண்டு, “சொல்லுங்க சார். என்னாச்சு?” என்றார். சொன்னேன். இப்படித்தான் நடக்கும் என்று முன்பே எதிர்பார்த்திருந்தது போல, “நான்தான் சொன்னேனே சார்? அட்லீஸ்ட், என் ஸ்டாஃப் யாரையாச்சும் கூட்டிட்டு நேர்லயே போய் எடுத்துட்டாவது வந்திருக்கலாம்” என்றார். அமைதியாக இருந்தேன்.

“சரி.. அவர் பேசினதெல்லாம் ரெகார்ட் பண்ணீங்களா?”

இது மாதிரி அச்சுறுத்தல்கள், தவறான பேச்சுகள் ஏதேனும் நடந்தால் அதைப் பதிவுசெய்து வைக்குமாறு அவர் சொல்லியிருந்தது அப்போதுதான் நினைவுக்கு வந்தது. அப்போதிருந்த பதற்றத்தில் அவ்வுரையாடலைப் பதிவுசெய்ய மறந்துவிட்டிருந்தேன். சொன்னேன். அடுத்துவந்த சில நொடிகளின் அமைதி அவரது சலிப்புக்கான இடைவெளி என்று தோன்றியது. “சரி அவர் எக்ஸாக்டா என்ன சொன்னார்னாவது சொல்லுங்க” என்றார். முடிந்தவரை நினைவிலிருந்து கிரகித்துச் சொன்னேன். சொல்லிவிட்டு, “ஏன் அதை குறிப்பா கேக்கறீங்கன்னு தெரிஞ்சிக்கலாமா?” என்றேன். “சார், நானே அடிச்சிடுவேன், கொன்னுடுவேன், கால உடைச்சிடுவேன்னு பேசற வரைக்கும் பெரிய பிரச்சினையில்ல. அது உணர்ச்சிவசத்துல பேசறது. ஆனா இந்த மாதிரி ஆள் வெச்சு பண்றேன்னு சொல்றதெல்லாம்  ஜஸ்ட் லைக் தட் வராது. ஏதானும் ப்ளான் இருக்கறதுக்கு வாய்ப்பிருக்கு” என்றார். இனம்புரியாத மெலிதான அச்சம் பரவியது. “பரவால்ல பாத்துக்கலாம் விடுங்க. பெருசா ஒன்னும் பண்ணிட முடியாது. எதுக்கும் நீங்க கொஞ்சம் கேர்ஃபுல்லா இருங்க” என்றார்.

சரி என்று சொல்லிவிட்டு ஃபோனை வைத்தேன். பிஜி பொறுப்பாளர் வந்து கதவைத் தட்டி உணவு தயாராகிவிட்டதாகச் சொல்லிவிட்டுப் போனார். சாப்பிட வேண்டுமென்ற நினைப்பே ஆயாசமாக இருந்தது. அப்படியே மெல்லக் கட்டிலில் அமர்ந்து சரிந்தேன். இந்தக் கட்டில் அவ்வளவாய் வசதியாயில்லை. ஆனால் சென்றமுறை தங்கியிருந்த விடுதிக்கு இது பரவாயில்லை என்று தோன்றியது. யோசனைகள் அப்படியே நூல் பிடித்து வீட்டைப் பற்றி நினைவுகூர்வதில் போய் நின்றன. கிரகப்பிரவேசம் செய்துமுடித்த சில நாட்களுக்குப் பின் நண்பர்களை வீட்டுக்கு அழைத்துக் கொண்டாடித் தீர்த்து, அவர்களெல்லாம் நடு இரவுக்குச் சற்று முன் கிளம்பிச் சென்றபின் மீண்டும் ஒரு பியரைக் கையில் வைத்துக்கொண்டு எனக்கே எனக்கென்று வாங்கியிருந்த அந்தப் பிரம்மாண்டக் கட்டிலில், மெலிதான ஏசியில், பிடித்த திரைப்படத்தைத் தொலைக்காட்சியின் பெரிய திரையில் ஓடவிட்டபடியே தூங்கிப் போனது நினைவில்வந்து சின்னப் புன்னகையொன்று உதட்டோரத்தில் தோன்றியது.

திருமணமாகி நான்கு ஆண்டுகளில் அந்தப் படுக்கையில் மனைவியுடன் உறங்கிய எத்தனையோ இரவுகளிருக்க, அவற்றில் ஒன்றுகூட சட்டென்று நினைவில் எழுந்து வராமல் இந்தக் குறிப்பிட்ட இரவு நினைவில் வந்தது ஆச்சரியமாய் இருந்தது. மாறாக, திருமணம் பற்றி எண்ணியவுடனே சரம்சரமாய் நினைவுகள் தொடர்ந்து, விருப்பத்திற்கு மாறாய்ச் சென்று பொம்மை போல் அமர்ந்திருந்த எத்தனையோ விழாக்கள், விருப்பமின்மையைத் தெரிவித்த போதெல்லாம் வெடித்த பிரச்சினைகள், என்னைப் பாதிக்கும் விஷயங்களில் என்னைக் கேட்காமல் தன்னிச்சையாய் எடுக்கப்பட்ட முடிவுகள் என்று நீண்டன. 

அடக்கி வைக்கப்பட்ட உரசல்கள் கொஞ்சம் கொஞ்சமாய்ப் பெருத்து, கூடலுக்கு இணங்காத இரவொன்றில் படுக்கையறையிலிருந்து ஹாலுக்கு அலறியபடி வந்து, அவளின் அம்மா அப்பாவையும் வரவழைத்து, “கூப்பிட்டா வர மாட்டேங்கிறான்மா இவன்” என்று அவள் கத்திய ஒரு இரவில், வீட்டைவிட்டுக் கிளம்பி, முதுகின் பின் கதவு மென்மையாய் அறைந்து சாத்தப்பட, எப்போது திரும்பி வருவேனென்று தெரியாமல் வெளியேறிய காட்சி படமாய்க் கண்முன் ஓடியது. பொறுப்பாளர் மீண்டும் ஒருமுறை வந்து மென்மையாகக் கதவைத் தட்டினார். தலையசைத்துப் பத்து நிமிடத்தில் வருவதாகச் செய்கை காட்டி அனுப்பி வைத்தேன். அவரைப் பார்த்ததும் ஏனோ முதன்முதலில் இந்த வக்கீலைச் சந்தித்தது ஞாபகம் வந்தது.

அவரது இளமை அவர் வக்கீல் என்று நம்பச் சற்று சிரமத்தைத் தந்தது. வேறு ஏதோவொரு வழக்கு சம்பந்தமாகப் பேசிக்கொண்டிருந்தவர், கண்ணாடி வழியே பார்த்துக் கண்களாலேயே காத்திருக்கும்படிச் சொன்னார். உள்ளே பெரும் வாக்குவாதம் போல் சத்தம் கேட்டது. சில நிமிடங்கள் கழிந்த பின் உள்ளே இருந்தவர்கள் வெளியே வந்ததும் எட்டிப் பார்த்தேன். அமரும்படிச் சைகையிலேயே கூறினார். அமர்ந்தேன். “சொல்லுங்க” என்று அவர் சொன்னதும்தான் முந்தைய வாக்குவாதத்தில் பெரும்பாலும் ஓங்கியிருந்தது அவருடைய குரல்தானென்று அடையாளம் தெரிந்தது. விஷயம் முழுவதையும் விளக்குகையில் கவனம் சிதறாமல் கேட்டுக்கொண்டார்.

பின் நிமிர்ந்து சோஃபாவில் சாய்ந்து வசதியாய் அமர்ந்துகொண்டு, “இதோ பாருங்க சார், என்கிட்ட வர்றவங்களுக்கு தப்பான நம்பிக்கை கொடுத்து எனக்கு பழக்கமில்லை. உங்ககிட்டயும் அதேதான் சொல்லப் போறேன். இங்க டைவர்ஸ் வேணும்னு கேட்ருக்கறது நீங்க. அவங்க மாட்டேங்கறாங்க. இந்த மாதிரி சந்தர்ப்பத்துல நமக்கு ரெண்டு ஆப்ஷன் இருக்குது. அவங்க கேக்கற மாதிரி காம்ப்ரமைஸோட திரும்ப சேர்ந்து வாழ முடியும்னு உங்களுக்கு தோனுச்சுன்னா தாராளமா பண்ணலாம். கேஸ்னு போக வேண்டியதில்ல. அப்படி இல்ல, இனிமே என்ன ஆனாலும் அவங்களோட சேர்ந்து வாழ முடியாதுன்னு தோனுச்சுன்னா ஃபைல் பண்ணலாம். ஆனா கேஸ் அவங்க சைட்லருந்து அவங்களா பாத்து எதுனா செய்யற வரைக்கும் நடந்தே தீரும். ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவைன்னு கோர்ட்டுக்கு அலைய முடியும்னா ஓகே. சில சமயம் ரொம்பப் பிடிவாதமா இருந்தாங்கன்னா கேஸ் பத்துப் பன்னிரண்டு வருஷம்கூட போவும். நீங்க முடிவெடுக்கறதைப் பொறுத்துதான்” என்று கூறிவிட்டு என் கண்களை உற்றுப் பார்த்தார்.

யோசிக்காமல், “ஃபைல் பண்ணிடலாங்க” என்றேன்.

மூடியிருந்த கண்களுக்குள் என்னென்னவோ தெளிவில்லாத உருவங்கள், குரல்கள், உரையாடல்கள். அம்மா வந்தாள். “என்னடா ரொம்ப கஷ்டமா இருக்கா?” என்றாள். சம்பந்தமே இல்லாமல் பல வருடங்களுக்கு முன் இறந்த நண்பன் வந்து, “கவலைப்படாத மச்சி. எல்லாம் சரியாயிடும்‌. பார் போலாம் வா” என்றான். வக்கீல் வந்து, “பதினஞ்சு வருஷம் சார். இப்படி மாட்டிக்கிட்டீங்களே” என்றார். மாமனாரின் வெள்ளைப் பேண்ட் சட்டை மட்டும் இரத்தக் கறையுடன் தெரிந்தது. 

மொபைல் அதிர்ந்து அழைக்கவும் சட்டென்று தலையை உதறிக்கொண்டு நிகழுக்கு வந்தேன். பிரபுதான் அழைத்திருந்தான். முதல் வேலையின் போது உண்டாகிப் பதினைந்து வருடங்களாகத் தொடரும் நட்பு. மூன்று வருடங்களுக்கு முன்தான் முதல்முறை பிரிந்து தற்போதைய அலுவலகத்திலிருந்து வேறு நிறுவனத்துக்கு மாறிப்போனவன். எடுத்தேன். வழக்கமான விசாரிப்புகளுக்குப் பின் சற்றே நிதானித்து, “கேஸ் என்னடா ஆச்சு?” என்றான். “போயிட்ருக்குடா, அப்படியே” என்றேன். 

பேச்சை மாற்றும் பொருட்டு, “ஆபிஸ்லாம் எப்படி போவுது? மத்தவங்கள்லாம் எப்படி இருக்காங்க?” என்றான் சகஜ பாவமாய். 

“நல்லாத்தான் இருக்காங்க. எங்கிட்டத்தான் யாரும் பேசறதில்ல” என்றேன்.

“ஏன்? என்ன ஆச்சு?” என்றான்.

சிரித்தேன். “நான் டைவர்ஸ் கேஸ் ஃபைல் பண்ணதுல என்னவோ இவனுங்க குடும்ப கௌரவம் பறிபோன மாதிரி ரியாக்ஷன் குடுக்கறானுக. என்கிட்ட பேசினா இவனுகள மத்தவங்க தப்பா நினைப்பாங்கன்னு பேசறதையே நிப்பாட்டிட்டானுக” என்றேன். என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் அமைதியாக இருந்தான். 

“சரி வீட்டையாவது குடுக்கறேன்னானுகளா உன் மாமனார் வீட்ல?” என்றான்.

“குடுக்க மாட்டாங்கடா” என்றேன். “ஏன்? என்னவாம் பிரச்சினை அவனுகளுக்கு?” என்றான் உண்மையான அக்கறையில். “நீ என் பொண்ணைக் கல்யாணம் பண்ணி இந்த வீட்ல வாழத்தானே கூட்டிட்டு வந்த? அதனால அவ இந்த வீட்லதான் இருப்பா. உனக்கு உன் வீடு வேணும்னா என் பொண்ணோட வந்து வாழுங்கறாங்க” என்றேன். அமைதியாக இருந்தான். வீட்டின் மேலான என் ஆசைகளை அறிந்தவன் அவன். பின் பேச்சு மெல்ல மெல்ல அலுவலக அரசியல்கள், பதவி உயர்வு என்று எங்கெங்கோ சுற்றிவிட்டுக் கடைசியாக, “சரிடா. பாத்துக்கோ. முடிஞ்சா மீட் பண்ணலாம். நீ பாத்துட்டுச் சொல்லு” என்றான். 

“சொல்றேன். இந்த பிரச்சினையெல்லாம் கொஞ்சம் முடியட்டும். பாப்போம்.‌ எப்பன்னு தெரியல. பட், பாப்போம்” என்று கூறிவிட்டு ஃபோனை அணைத்தேன். பொறுப்பாளர் அழைத்துவிட்டுப் போனது ஞாபகம் வரவே, அளவாகச் சமைத்தது வீணாகிவிடக் கூடாதே என்று கொஞ்சமாய்க் கொறித்துவிட்டு வந்தேன். 

உறக்கம் வருவதே அசாத்தியமாகிவிட்ட நிலையில் கனவுகளற்ற நிச்சலனமான உறக்கத்துக்கெல்லாம் ஆசைப்படுவதுகூட நின்றுபோய்விட்டிருந்தது. பழகிக்கொண்டிருந்தும் உறக்கமற்ற நீண்ட இரவைக் கடப்பதென்பது ஆகப்பெரும் பொறுமையைக் கோருவதாக இருந்தது. கொஞ்சம் மொபைல், கொஞ்சம் புத்தகம் என ஏதோ ஒப்பேற்றியதில் எப்போதெனத் தெரியாமல் தூங்கிப் போயிருந்தேன்.

அடுத்த நாள் குளித்துக் கிளம்பி காரை எடுத்தேன். நகர்ப்பகுதியைத் தாண்டி ஊருக்கு வெளியே வந்ததும் எஃப்.எம்மை உயிர்ப்பித்தேன். எல்லாச் சேனல்களையும் ஒரு திருப்பு திருப்பிவிட்டு எதிலும் மனம் இலயிக்காமல் அணைத்தேன். அதற்குள் சாலையில் சிவப்பு விழுந்திருந்தது கண்டு நிறுத்தினேன். சிக்னலின் அருகிலிருந்த கடையிலிருந்து ஆவி பறக்கத் தேநீர் மணம் காற்றில் கலந்திருந்தது. சென்ற வருடம் இதேபோன்ற மேகமூட்டமான நாளொன்றில் பால்கனியில் அமர்ந்து தேநீர்க் கோப்பையைக் கையில் இறுகப் பிடித்தபடி முதன்முதலில் பிரிவதைப் பற்றிப் பேசியபோது என் மாமியார் சொன்னது நினைவுக்கு வந்தது. “என் பொண்ணுகிட்டதான் பிரச்சினைன்னே வச்சுக்கலாம். யார்கூட வேணா போங்க தம்பி. என்ன வேணா பண்ணுங்க. ஆனா பொண்டாட்டின்னு என் பொண்ணு இந்த வீட்ல இருக்கணும். அவ்ளோதான்”.

அவர்கள் இன்னும் அந்த வீட்டில்தான் இருக்கிறார்கள். நான்தான் அந்த வீட்டில் இல்லை. ஒவ்வொரு முறை மதுரைக்குப் போய்விட்டு‌ ஒரு மாதம் கழித்துச் சென்னைக்கு வரும்போதும் ஹாஸ்டல், பிஜி என்று தேடித் தேடி இடம் மாற்றித் தங்குவது பழகிப்போய்விட்டிருந்தது என்று சொல்வதைவிட மரத்துப்போய்விட்டிருந்தது.

வீட்டைப் பற்றிய யோசனைகள் ஒரு பக்கம் ஓடினாலும் சாலையில் கவனமாய் மேம்பாலத்திலிருந்து கீழிறங்கி நெடுஞ்சாலையில் விரைந்தேன். தொழிற்சாலைக்குச் செல்ல என் வீடிருக்கும் பகுதியைத் தாண்டித்தான் செல்ல வேண்டும். முன்பெல்லாம் அந்த இடத்தைக் கடக்கும் போது சுய கழிவிரக்கமும் ஆற்றாமையும் பொங்கிப் பொங்கி வரும்.‌ இப்போதெல்லாம் அந்தத் திசையில் திரும்புவதுகூட அரிதாகிவிட்டது. இன்று ஏனோ பார்க்கத் தோன்றியது. அப்போதுதான் அவரைப் பார்த்தேன். என் காரை நிறுத்துமாறு சைகை காட்டிக்கொண்டிருந்தார்.

அவரை எனக்குத் தெரியும். பார்த்திருக்கிறேன். அவரும் நான் பணிபுரியும் தொழிற்சாலையில் பணிபுரிபவர்தான். தொழில்நுட்பப் பிரிவு. என் வீடிருந்த பகுதியில் அனைவருக்கும் ஓரளவுக்கு முகம் தெரிந்தவர். தலைவர்கள் பிறந்தநாள், நினைவுநாளுக்குத் தெருமுனையில் மேசை வைத்து, படம் வைத்து, அலங்காரம் செய்து பூப்போடுதல், கோவிலில் அன்னதானம் ஒழுங்கு செய்தல், சிறிய விசேஷங்களுக்கு நன்கொடை வசூல் செய்வதெனச் சின்னச் சின்னப் பொதுக் காரியங்கள் பார்ப்பவர். திருமணத்துக்கு முன் நான் தனியாக இருந்தபோது அவ்வளவாக என் வீட்டுப் பக்கம் வந்ததாக நினைவில்லை. திருமணம் முடிந்து மனைவி வந்தபின், குறிப்பாக மாமியார் இருக்கும் நாட்களில், அவர் தலை அதிகம் தென்படத் தொடங்கியது. அவர்களுக்குள் சில சங்கேத மொழிப் பரிமாற்றங்கள் நடந்தபடியிருக்கும். பெரும்பாலான உரையாடல்கள், “நமக்குள்ள என்னங்க? ஒன்னு மண்ணா இருக்கோம். நம்ம ஜனமில்லையா?” போன்ற சொல்லாடல்களிலேயே முடிவடையும். ஒன்றரை வருடங்களாக நான் அந்த வீட்டில் இல்லை என்பதும் அவருக்குத் தெரியும்.

அவரைப் பார்த்தது போல் காட்டிக்கொள்ளலாமா வேண்டாமா என்று முடிவுக்கு வரும் முன் வண்டியை ஓரம்கட்டி நிறுத்தியிருந்தேன். பரபரப்புடன் முன் கதவைத் திறந்து, “ரொம்ப தேங்க்ஸ் சார். ரொம்ப தேங்க்ஸ். பஸ்ஸை மிஸ் பண்ணிட்டேன். என்னடா பண்றதுன்னு யோசிச்சிட்டு இருந்தேன். நீங்க வந்துட்டீங்க கரெக்டா” என்றார். அவரிடம் எது பேசினாலும் மனைவியையும் அவளைச் சார்ந்தவர்களையும் தவிர்த்துப் பேசுவது அசாத்தியம் என்பதால் புன்னகைத்துத் தலையசைத்துவிட்டுச் சாலையில் கவனமாயிருந்தேன்.

அவருக்கும் அது தெரிந்தே இருந்தது. அலுவலக விஷயங்கள் எதையோ பேசியபடி வந்தார். அடுத்த நாளும் அவர் அதே இடத்தில் நின்றுகொண்டிருப்பதைப் பார்த்ததும் சுருக்கென்றது. “இன்னிக்குமா பஸ் மிஸ் பண்ணிட்டீங்க?” என்றேன். “இல்ல சார் கிளம்பினதே லேட்டுதான்” என்று சிரித்தார். இந்தப் பதிலை எப்படி எடுத்துக்கொள்வதென்று தெரியவில்லை. “சார் இப்ப எங்கிருந்து வரீங்க?” என்று அவர் கேட்டதும்தான் வேண்டுமென்றே பேருந்தைத் தவறவிட்டிருக்கிறார் என்பது புரிந்தது. 

முதல் ஹியரிங்குக்காக நீதிமன்றத்திற்கு போன போதுதான் அந்தச் சட்டச்சக்கரத்தின் பிரம்மாண்டம் புரிந்தது. அது ஏன் அசைந்து ஊர்ந்து நகர அவ்வளவு காலமெடுக்கிறது என்பதும் புரிந்தது. மலங்க மலங்க வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த போது வக்கீல் வந்தார். கோர்ட் வளாகத்தில் பார்க்க வித்தியாசமாய்த் தெரிந்தார். “இன்னிக்கு மோஸ்ட்லி வாய்தாதான் சார். அவங்க அவ்ளோ சீக்கிரமெல்லாம் வந்துட மாட்டாங்க. பாப்போம்” என்றார். எதையோ சொல்ல வந்து நிறுத்துகிறார் என்பது மட்டும் புரிந்தது. “ஓகே மேடம்” என்றேன். ஒரு நிமிடம் என்னை உற்றுப் பார்த்தவர், “உங்க மேல ஒன்பது பக்கத்துக்கு ஸ்டேட்மெண்ட் குடுத்திருக்காங்க சார். காப்பி அனுப்பறேன்” என்றார். 

“என்னன்னு?” என்றேன். “நீங்க அவங்க கழுத்தைப் பிடிச்சு நெரிச்சு வாயில பாய்சன் ஊத்தப் பார்த்ததா எல்லாம் எழுதிருக்காங்க” என்றார். இதற்கு எப்படி எதிர்வினையாற்றுவதென்று தெரியவில்லை. குழப்பமாக இருந்தது. அதை அவரிடமே சொன்னேன். “எனக்கு புரியல. ஒருவேளை நான் அப்படியெல்லாம் பண்ணிருந்தாகூட அவங்கதானே டைவர்ஸ்ல ஆர்வமா இருக்கணும்? எதுக்கு தரமாட்டேன்னு பிடிவாதம் பிடிக்கறாங்க?” என்றேன்.

“இவ்வளவெல்லாம் பண்ணியும்கூட உங்களோட சேர்ந்து இருக்கத்தான் விரும்பறேன் அப்படின்னு ஸ்டேட்மெண்டை முடிச்சிருக்காங்க” என்றார். 

எதிர்பார்த்தது போலவே வாய்தாதான். முடிந்து கிளம்புகையில், “அப்புறம் சில விஷயம் சொல்லணும். அவங்க சைட்ல இருந்து நீங்க தங்கியிருக்கற இடத்துக்கு வந்து தகராறு பண்ண வாய்ப்பிருக்கு. அதனால இன்னும் கொஞ்ச நாளைக்கு அப்பப்ப இடம் மாறிக்கோங்க. ஃபிரண்ட்ஸாவே இருந்தாலும் நீங்க உங்க இடம், போக்குவரத்து பத்திலாம் பெருசா யார்கிட்டேயும் பேசிக்க வேணாம். கொஞ்ச நாளைக்கு. அவங்க கொஞ்சம் துள்ளி அடங்கற வரைக்கும்” என்று சொல்லிவிட்டுப் போனார் வக்கீல்.

“சார்… சார்…” என்ற குரல் கேட்டு நிகழுக்கு வந்தேன். தொழிற்சாலையை நெருங்கியிருந்தோம். “சார் இப்ப எங்கிருந்து வரீங்க?” என்றார். மனைவியின் குடும்பத்துக்கு என்னுடைய போக்குவரத்து, இருப்பைப் பற்றித் தொடர்ந்து தகவல் கொடுப்பவர்களில் இவரும் ஒருவர் என்று தெரிந்தது. அலுவலகத்திலும் ஊர் வழியே பொது நண்பர்களாயிருப்பவர்கள் சிலர் மேல் இந்தச் சந்தேகம் இருந்தது. இலேசாக ஒருமுறை திரும்பிப் பார்த்துவிட்டு, “அதெல்லாம் எதுக்கு இப்ப?” என்று சிரித்தபடியே மறுதலித்தேன். அதற்கு மேல் அவர் கேட்கவில்லை.

அடுத்த நாளும் அவர் அதே இடத்தில் நிற்கவும், ஒரு முடிவுக்கு வந்தவனாய் வண்டியை நிறுத்தி அவரை ஏற்றிக்கொண்டு, “இனிமேல் எனக்காக வெயிட் பண்ணாதீங்க. பஸ்ஸை மிஸ் பண்ணாதீங்க” என்று நிதானமாய், ஆனால் அழுத்தமாய், சிரித்துக்கொண்டே சொன்னேன். அவர் முகம இருண்டது தெரிந்தது. நிச்சயம் இந்தத் தகவலும் போய்ச்சேருமென்று தெரிந்தேதான் சொன்னேன். 

அடுத்த வாரம் ஊருக்குப் போயிருந்த போது அப்பா வந்து அவ்வப்போது எட்டிப் பார்த்துவிட்டு தொண்டையைச் செருமிக்கொண்டு போனார். அப்படியானால் அவர் என்னிடம் ஏதோ பேச விரும்புகிறார் என்று அர்த்தம். எங்கள் இருவருக்கும் இடையே இருந்த ஒரே தகவல் பரிமாற்றக் கருவியான அம்மா போய்விட்டபின், பெரும்பாலும் பேச்சுவார்த்தையற்றுத்தான் எனக்கான ஊரின் பொழுதுகள் கழிந்திருக்கின்றன. அப்படி என்னிடம் ஏதேனும் தகவல் சொல்ல வேண்டுமெனில் வீட்டுக்கு வரும் மாமா அத்தை அத்தாச்சிகளிடமோ அல்லது அவரது நண்பர்களிடமோ சொல்லித் தகவலைக் கடத்துவார்.

இந்தப் பிரச்சினை தொடங்கியதிலிருந்து வெளியாட்கள் யாருக்கும் தெரிய வேண்டாமென்று முடிவுசெய்ததில் இது மாதிரி முறைகளைக் கையாளத் தொடங்கியிருந்தார். அடுத்த முறை அவர் திரும்ப அதையே செய்ததும் எழுந்து போய், “சொல்லுங்க” என்றேன் அவரெதிரில் நின்று எங்கோ பார்த்தபடி. இலேசாகக் தயங்கியவர், “இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே பொழப்பு ஓடுறது?” என்றார். “அவங்களா பாத்து எதுனா சொன்னாதான் உண்டு” என்று நிறுத்தினேன். வேறு எதையும் சொல்லி அவரைக் கலவரப்படுத்தி விடக்கூடாதென்று மிகக் கவனமாயிருந்தேன். “வேற வக்கீல்கிட்ட எதுக்கும் ஒரு தரம் கேட்டுப் பாக்கலாமா?” என்றார். பெரிதாக ஏதும் மாறிவிடுமென்று நம்பிக்கையில்லாவிடினும் எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்பது போல் எனக்குமே அது தோன்றிக்கொண்டுதான் இருந்தது. சென்னையில் முதல் வக்கீலைத் தேடிக் கண்டுபிடித்ததே பெருங்காரியமாயிருந்தததால் அதைச் சொந்த ஊரில் எப்படிச் செய்வதென யோசனையாயிருந்தது. மிகுந்த யோசனைக்குப் பிறகு விஷயம் தெரிந்த உள்ளூர் நண்பன் ஒருவனைத் தொடர்புகொண்டு கேட்டேன். சிறிது நேர மெனக்கெடலுக்குப் பிறகு அவன் ஒரு எண்ணைப் பகிர்ந்தான். “ஆள் கொஞ்சம் பெரிய கைடா. பாத்துக்க” என்றான்.

இரண்டு நாட்கள் ஆறப் போட்டுவிட்டு மூன்றாம் நாள் அவரை அழைத்து உறுதிப்படுத்திக்கொண்டு அடுத்த நாள் கிளம்பிச் சென்றேன். பெரும் மரங்களும் அவைகளைவிடப் பெரிய வீடுகளுமாய் அமைதியாயிருந்த அந்தப் பகுதியில் அவரது வீட்டைத் தட்டுத் தடுமாறித் தேடிக் கண்டுபிடித்து அந்தப் பிரம்மாண்ட கேட்டுக்குள் நுழைந்தேன். முன்னாலிருந்த புல்வெளியில் வரிசையாக நின்றிருந்த ஆட்களையும் வாசல் வழியில் நின்றிருந்த அவர்கள் வந்த கார்களையும் பார்த்த பின்தான் நண்பன் சொன்ன “பெரிய கை” என்பதன் அர்த்தம் விளங்கியது.

மெல்ல அவர்களைக் கடந்து உள்ளே வந்தேன். நான்கைந்து ஆட்களுடன் பேசிக்கொண்டிருந்தவர் உருவத்தை வைத்து உத்தேசமாய் நானாகத்தான் இருக்கக்கூடுமென்று அனுமானித்துக் கையசைத்து என் பின்னாலிருந்த சோபாவைக் கை காட்டி அமரச் சொன்னார். ஐந்து நிமிடங்களில் வந்தவர், “சரி தம்பி. சொல்லு, என்ன பிரச்சினை?” என்றார். எடுத்த எடுப்பில் ஒருமையில் ஆரம்பித்தது சற்றே திகைக்க வைத்தாலும் சுதாரித்துக்கொண்டு ஒருவாறாக விஷயத்தை விளக்கி முடித்தேன். 

“உன் லாயர் சொன்னது கரெக்டுதான். இந்த மாதிரி கேஸ் எவ்ளோ காஸ்ட்லி லாயர் வச்சு நடத்துனாலும் அது போற வேகத்துலதான் போகும் தம்பி” என்றவர், “சரி இதுல என்கிட்ட என்ன எதிர்பார்த்து வந்திருக்க?” என்றார். 

“இதை சீக்கிரமா முடிக்க…” என்று இழுத்தேன். முடிக்கும் முன்பே கேள்வியின் அபத்தம் புரிந்தது. சில வினாடிகள் என்னையே பார்த்தவர், “தம்பி இப்ப உனக்கு என்ன வயசு?” எனக் கேட்டார்.

“முப்பத்தி ஆறு ஆவுது” என்றேன்.

“உன் மாதிரி கேஸ்கள்ல பரவலா நடக்கறத சொல்றேன். இப்ப உன்னையே எடுத்துக்க. இப்ப டைவர்ஸ் குடுத்தாகூட நாளைக்கே நீ மனசு தேறி டக்குனு இன்னொரு கல்யாணம் பண்ணிட முடியும். ஆனா இதே உனக்கு நாப்பது தொட்ருச்சுன்னு வச்சுக்க. உனக்கே பொண்ணு தேடறதுல சுணக்கம் வந்துரும். அப்படியே ஏதோ தேத்திகிட்டு தேடினாலும் பொண்ணு அவ்ளோ சீக்கிரம் கிடைக்காது. அந்த மாதிரி ஒரு சிச்சுவேசன் வர வரைக்கும் கேஸை இழுத்துட்டு அதுக்கப்புறம் காம்ப்ரமைஸுக்கு இறங்கி வருவாங்கன்னு தோனுது” என்றார். 

ஏற்கனவே இருக்கும் கவலைகளைப் போக்க வழிதேடி அலைந்தவனுக்கு மேலும் புதுக் கவலைகளைத் தோளில் தூக்கிப் போட்டுக்கொண்டது போல இருந்தது. தலையாட்டினேன். “பாத்து போயிட்டு வா” என்றார். வெளியே வந்தேன். மொபைல் அதிர்ந்தது. எடுத்துப் பார்த்தேன்‌. “உங்கள் வீட்டுக் கடனுக்கான இந்த மாதத் தவணை இன்னும் இரண்டு நாட்களில் பிடித்தம் செய்யப்படும். கணக்கில் போதுமான பணம் வைத்திருக்கவும்” என்று வங்கியிலிருந்து வரும் வழக்கமான குறுஞ்செய்தி.

வானம் இருண்டிருந்தது. வழக்கு தொடங்கிய சில நாட்களில் சமரசத்திற்காக அவர்களின் வக்கீலுடன் பேசியதும் அவர் சொன்னதும் நினைவுக்கு வந்தது. “என்ன சார் பண்ண சொல்றீங்க? நீங்க சொல்றதெல்லாம் கரெக்ட்தான். இவளோ தூரம் ஸ்டேட்மெண்ட் எல்லாம் குடுத்தப்புறம் சேர்ந்து வாழ முடியாதுதான். காம்ப்ரமைஸுக்கும் கேட்டாச்சு. என்ன ஆனாலும் பரவால்ல. கேஸ் நடக்கட்டும்ங்கறாங்க. என் வேலையும் ஆவணுமில்ல சார்…”

காரில் ஏறிக் கிளம்பினேன். ஏற்கனவே உடல் வலு முழுவதும் உறிஞ்சப்பட்டு, கை கால்கள் நைந்து போய், தொண்டை வறண்டு கிடக்கும் நிலையில், எப்போது முடியும் என்பது தெரியாத அளவு நீண்டு கிடக்கும் வறண்ட பாலைவனத்தைப் போல் தோற்றமளித்தது சாலை.

வக்கீலிடமிருந்து அழைப்பு வந்தது. “சார் எப்படி இருக்கீங்க?” என்றார். சிரித்தேன். “ட்ரைவிங்ல இருக்கீங்களா? பேசலாமா?” என்றார். “பரவால்ல சொல்லுங்க” என்றேன். “ஒரு மேட்டர் சார். டைவர்ஸ் கேஸ் முடியற வரைக்கும் மாசம் பதினஞ்சாயிரம் மெயிண்டனன்ஸ் அவங்களுக்குக் குடுக்கணும்னு கோர்ட்ல மூவ் பண்ணுவாங்க போல தெரியுது” என்றார்.

அமைதியாக இருந்தேன். சமாதானமாய், “ஒன்னும் கவலைப்படாதீங்க. பாத்துக்கலாம்‌. தைரியமா இருங்க” என்றபடி அழைப்பைத் துண்டித்தார். மழை தூறத் தொடங்கியிருந்தது. ரியர் வியூ மிரரில் பார்த்தேன். ஒரு பைக் பின்னால் வந்துகொண்டிருந்தது. வலப்புறம் இண்டிகேட்டரைப் போட்டுத் திரும்பினேன். சிறிது தூரத்தில் கசகசவெனப் போக்குவரத்து நெரிசல். அதை மெல்ல ஊர்ந்து கடந்து விரையத் தொடங்குகையில் மீண்டும் பார்த்தேன். அந்தப் பைக் அப்போதும் தொடர்ந்துகொண்டிருந்தது. 

3 comments

asokraj September 28, 2021 - 3:32 pm

பெயரைப் பார்த்ததும் நம்ம ஹரீஷா என்று அவர் முக நூல் பக்கம் போய்ப் பார்த்தேன். ஹரீஷை எனக்கு ரொம்ப வருஷமாகத் தெரியும். அவர் கதைகள் சிலவற்றைப் படித்திருக்கிறேன்.

முன்பு படித்த ஹரீஷிற்கும், இந்த ஹரீஷிற்கும் நல்ல வித்தியாசம் தெரிகிறது. மொழி வசப்பட்டிருப்பதில் மகிழ்கிறேன். தொடர்ந்து எழுதுங்கள் ஹரீஷ்.

K Chitra October 5, 2021 - 2:13 pm

நல்லாற்றின் நின்ற துணை!. கொடுமை

Kasturi G October 16, 2021 - 2:06 pm

Exposure on rotting Institution of Marriage & Legal jurisprudence in India .
Well written . Good luck
Thanks

Comments are closed.