முற்றத்துக்குள் நுழைந்த கோவேறு கழுதை – வில்லியம் ஃபாக்னர்

by கார்குழலி
0 comment

ஜனவரி மாத இறுதியில் ஒரு சாம்பல்நிற நாள் அது. மூடுபனியாக இருந்ததால் குளிர் தெரியவில்லை. ஏழைகளுக்காக அரசாங்கம் நடத்திய தங்கும் விடுதியில் இருந்து வெளியே வந்தாள் முதியவள் ஹெட். உரத்த குரலில் மகிழ்ச்சி ததும்பப் பேசிக்கொண்டே கூடத்தின் வழியாகச் சமையலறைக்கு ஓடினாள். எழுபது வயதிருக்கலாம். என்றாலும் ஊரில் உள்ள மணமுடிக்கும் வயதான பெண்கள் முதல் கிழவிகள் வரையில் எல்லோரையும் பிறந்தது முதல் நான்தான் வளர்த்தெடுத்தேன் என்னும் அவளுடைய கணக்குப்படி பார்த்தால் நூறு வயதிருக்கும், கூடவே ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று குழந்தைகளில் ஒருத்தியாக இருக்க வேண்டும். உயரமான ஒல்லியான தேகம். நெருக்கமாகப் பாசிமணி அலங்காரம் செய்யப்பட்ட தலைமுடி. கித்தான் துணியால் செய்யப்பட்ட காலணிகள். எலியின் நிறத்தில் இருந்த நீண்ட பழைய அங்கியை அணிந்திருந்தாள். நாற்பது அல்லது ஐம்பது வருடங்களுக்கு முன்னால் புதியதாக இருந்தபோது அதன் ஓரங்களை விலங்கின் மென்முடியால் அலங்கரித்திருப்பார்கள் போல. தலையில் முக்காடிட்டு முடிந்திருந்த துணியின்மீது இருந்த ஊதா நிறப் புதுப்பாணி தொப்பி கொஞ்சம் பழையதாகிவிட்டிருந்தது. கையில் பொருட்கள் வாங்கக் கொண்டுபோகும் பெரிய பையை வைத்திருந்தாள். (ஒரு காலத்தில் அடர்த்தியான வடிவங்கள் நெய்யப்பட்ட கனமான தரைவிரிப்புத் துணியாலான அந்தப் பையை எடுத்துக்கொண்டு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சமையலறையாகப் போவாள். பத்து செண்ட் கடைகள் வந்தபிறகு வாடிக்கையாளர்களுக்கு சில செண்ட் விலையில் விற்கப்படும் பழுப்பு நிறக் காகிதப் பையாக அது மாறிவிட்டது) ஒரு குழந்தையைப் போலக் குதூகலத்துடன் கத்திக்கொண்டே சமையலறைக்குள் ஓடினாள். “செல்வி மேனி! முற்றத்துக்குள் கோவேறு கழுதை நுழைந்துவிட்டது!”

கீழே குனிந்து அடுப்பில் கனன்றுகொண்டிருந்த நிலக்கரியை வாளியில் எடுத்துக்கொண்டு இருந்த திருமதி ஹய்ட் வெடுக்கென மேலே நிமிர்ந்தாள். வாளியைக் கையில் பிடித்தபடியே முதியவள் ஹெட்டை வெறித்துப் பார்த்தாள். கடுமையான குரலில் சடாரெனப் பேசினாள். “சிறுக்கி மகன்கள்”. வாளியைக் கையில் பிடித்தபடியே கோபத்துடன் சமையலறையில் இருந்து ஓட்டமும் நடையுமாக வெளியே வந்தாள். சிறிய உருவம், வயது நாற்பத்து சொச்சம் இருக்கும். துக்கத்தில் இருந்து கொஞ்சம் ஆசுவாசமடைந்தவளைப் போல இருந்தாலும் அதிலிருந்து இன்னும் முழுமையாக வெளிவரவில்லை. அவளை இந்த விதவைக்கோலத்தில் தள்ளியது ஒரு பெண் என்பதைப் போலவும் அதுவும் கொஞ்சமும் மதிப்பில்லாத பெண் என்பது போன்ற மனப்போக்கையும் கொண்டிருந்தாள். 

ஒரு பக்கம் மட்டும் அச்சடிப்பக்கப்பட்ட பருத்தித் துணியாலான மேலங்கியும் கம்பளிக் கோட்டும் ஆண்கள் அணிந்துகொள்ளும் வெல்வெட்டுத் தொப்பியும் அணிந்திருந்தாள். பத்து வருடங்களுக்கு முன்னால் இறந்துபோன அவளுடைய கணவனுடைய தொப்பி என்பது ஊரில் இருக்கும் எல்லோருக்கும் தெரியும். ஆனால் ஆண்கள் அணிந்துகொள்வதைப் போன்ற அந்தக் காலணிகள் அவனுடையது இல்லை. உயரமான பொத்தான் உள்ள வகை, விரல் பகுதி சிறிய ட்யூலிப் மலர்களைப் போல உருண்டையாக இருந்தது. அவற்றைத் தனக்கெனப் புதிதாக வாங்கிக்கொண்டாள் என்பதும் ஊருக்கே தெரியும்.

அவளும் முதியவள் ஹெட்டும் சமையலறைப் படிக்கட்டுகளில் இறங்கி மூடுபனிக்குள் ஓடினார்கள். இருண்ட மூடிய அறைகளுக்குள் உறங்கிக்கொண்டும் விழித்தபடியும் கிடந்த நகரத்தின் ஏக்கப் பெருமூச்சு அந்த நீண்ட பனிக்கால இரவில் நிலத்துக்கும் பனிமூட்டத்துக்கும் நடுவே சிறைப்பட்டுக் கிடந்த காரணத்தால் குளிரவில்லை போலும். மீண்டும் மீண்டும் இயங்கிக்கொண்டே இருந்த காரணத்தால் வெப்பமூட்டும் கருவிகள் முடைநாற்றம் வீசின. அடித்தள அறைக்குப் போகும் படிக்கட்டிலும் மர நுழைவாயிலிலும் முற்றத்தின் மூலையில் இருந்த கொட்டகைக்குப் போகும் குறுகிய மரப்பலகை இணைப்பின் மீதும் குளிர்ந்த மசகு எண்ணெயைக் கசடைப் போலப் படியச் செய்திருந்தது மூடுபனி. அந்தப் பலகைகளின்மீது கனன்றுகொண்டிருந்த நிலக்கரி நிறைந்த வாளியைத் தூக்கிக்கொண்டு அச்சமூட்டும் வகையில் சறுக்கிக்கொண்டே ஓடினாள் திருமதி ஹய்ட். 

“கவனம்!” இரப்பர் அடிப்பாகம்கொண்ட காலணி அணிந்திருந்த கால்களைக் கவனமாக எடுத்துவைத்தபடி உற்சாகத்தோடு கத்தினாள் முதியவள் ஹெட். “முன்னால் இருக்கிறது!”

திருமதி ஹய்ட் கீழே விழவில்லை. கொஞ்சமும் நிற்கவில்லை. கண்முன் தெரிந்த காட்சியை வெறித்த பார்வையின் மூலம் உள்வாங்கிக்கொண்டு மீண்டும் ஓடத் துவங்கினாள். மூடுபனிக்குள் இருந்து அவர்களின் கண்முன்னால் இப்போது பிறப்பெடுத்தது போல ஒரு கோவேறு கழுதை வீட்டின் மூலையில் தோன்றியதைப் பார்த்தாள். ஓர் ஒட்டைச்சிவிங்கியைவிடவும் உயரமாக இருந்தது. நீளமான தலைக்கும் கத்திரிக்கோல் போன்ற காதுகளுக்கும் நடுவே வடிகயிறு காற்றில் அலைந்தது. அவர்களின்மீது திடீரெனப் பேயைப் போல ஆக்ரோஷத்துடன் பாய்ந்தது. 

“அங்கே இருக்கிறது,” என்று முதியவள் ஹெட் பையை ஆட்டிக் காண்பித்தாள்.

“ஷ்ஷூ” என்றபடி திருமதி ஹய்ட் வேகமாகச் சுழன்றாள். கோவேறு கழுதைக்கு இணையாக அந்த வழுக்கலான மரப்பலகைகளின் மீது ஆவேசத்துடன் சறுக்கிக்கொண்டே கொட்டகையை நோக்கிப் பாய்ந்தாள். கொட்டகையின் திறந்த வாயிலின் வழியாக நடப்பதையெல்லாம் ஆச்சரியத்தோடு அசையாமல் பார்த்தபடி நின்றுகொண்டிருந்த பசுமாட்டின் முகம் தெரிந்தது. மூடுபனிக்கு நடுவே திடீரெனத் தோன்றிய கோவேறு கழுதை ஒட்டைச்சிவிங்கியைவிடவும் உயரமான வேறு ஏதோ ஒன்றைப் போலத் தோன்றியது அதற்கு. கொட்டகை என்னமோ வைக்கோலால் ஆனது என்றோ வெறும் கானல்நீர் என்றோ நினைத்துக்கொண்டது போல அதன் நடுவே பாய்ந்து செல்ல முடிவுசெய்தது கோவேறு கழுதை. அதைப் பொறுத்தவரை பசுமாட்டின் தலையை நிலையற்ற தன்மையும் திடீரெனத் தோன்றிய அசாதாரணமான ஒன்றெனவும் நினைத்துக்கொண்டது போல. 

தீக்குச்சியின் சுவாலை அணைவது போலத் திடீரெனக் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்துபோனது. ஆனால் அது கொட்டகைக்குள் நுழைந்து மறைந்துபோனது என்பது அறிவுக்குத் தெரிந்தது. அதை உண்மையாக்குவது போலக் கொட்டகைக்கு உள்ளே இருந்து வார்த்தையில் விவரிக்க முடியாத கொட்டகையும் விலங்கும் ஒன்றாக இணைந்து எழுப்பிய அதிர்ச்சியும் அச்சமும் தரும் ஓசை கேட்டது. யாழ் கருவியில் எழுப்பிய ஆழ்ந்த ஒற்றை ஒலிக்குறிப்பைப் போல இருந்தது அது. கோவேறு கழுதையும் மனிதனும் இருக்கும் உலகில் பெண்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது அவசியமென்பது போல ஓசை வந்த திசையை நோக்கி அனிச்சையாகப் பாய்ந்தோடினாள் திருமதி ஹய்ட். அவளும் கோவேறு கழுதையும் கொட்டகையை நோக்கி ஒரே நேரத்தில் பாய்ந்தார்கள். கையில் இருந்த கனமான வாளியை எப்போது வேண்டுமானாலும் எறிவதற்கு வாகாக இலகுவாகப் பிடித்திருந்ததாள். இதெல்லாம் நடந்து முடிக்க அதிக நேரம் பிடிக்கவில்லை. சொல்லப்போனால் கோவேறு கழுதைதான் இந்த ஆட்டம் வேண்டாமென்று முடிவுசெய்தது.

“அங்கே இருக்கிறது, அங்கே இருக்கிறது!” முதியவள் ஹெட் இன்னமும் உரக்கக் கத்திக்கொண்டு இருந்தபோது அது அப்படியே தடம் மாறி அவளை நோக்கிப் பாய்ந்து வந்தது. புகைப்போக்கியைப் போல அசையாமல் நின்றுகொண்டு கையில் இருந்த பையை அதை நோக்கி வீசினாள். அது அவளைத் தாண்டி ஓடி வீட்டின் இன்னொரு திருப்பத்தில் மறைந்துபோனது அதை உருவாக்கி வெளிக்கொணர்ந்த மூடுபனிக்குள்ளேயே மீண்டும் உறிஞ்சப்பட்டது போல இருந்தது. அந்த நிகழ்வு முழுமையாகவும் உடனடியாகவும் எந்தவிதமான ஓசையும் இன்றி நடந்து முடிந்தது. 

திருமதி ஹய்ட் அதே நிதானத்துடன் திரும்பிவந்து நிலவறையின் வாயிலில் இருந்த செங்கல் சுவரின்மீது வாளியை வைத்தாள். அவளும் முதியவள் ஹெட்டும் வீட்டின் மூலையில் ஒன்றாகத் திரும்பியபோது பிசாசைப் போன்ற உருவம்கொண்ட கோவேறு கழுதையின் பாதை வீட்டின் கீழே இருந்து வெளியே வந்த கோபமுற்ற சேவல் மற்றும் எட்டு ரோட் ஐலண்ட் வகைக் கோழிகளின் பாதையோடு இணைந்தது.  

அடுத்த நொடியில் கோவேறு கழுதை முன்னேற்றம் பெற்று தெய்வ நிலைக்கு உயர்வதற்குண்டான தோற்றத்தையும் சாத்தியத்தையும் அடைந்தது. நரகத்தில் பிறந்து நரகத்துக்குத் திரும்பிச்செல்வது போலவும் மூடுபனிக்குள் முழுவதுமாகக் கரைந்துவிடும் முயற்சியில் இருப்பது போலவும் சூரியனற்ற பரிமாணமற்ற ஓர் ஊடகத்தில் சின்ன சிறகுகளைக் கொண்ட கெட்ட பூதங்களால் வான்வழியே தூக்கிச்செல்லப்படுவதைப் போலவும் மேலே எழுந்து மறைந்தது.

“முன்னால் ஒரு கூட்டமே இருக்கிறது,” முதியவள் ஹெட் கத்தினாள்.

“சிறுக்கி மகன்கள்,” என்று நடக்கப்போவதை முன்கூட்டியே சொல்லும் துயரமுற்ற தொனியில் வெறுப்போ கோபமோ இன்றிச் சொன்னாள் திருமதி ஹய்ட். அவள் சொன்னது கோவேறு கழுதைகளைப் பற்றியோ அவற்றின் எஜமானனைப் பற்றியோ அல்ல. ஊருக்குச் சற்று வெளியே அவளுடைய வீட்டின் அருகேயிருந்த இருப்புப்பாதையின் குருட்டுத் திருப்பத்திலிருந்து ஐந்து கோவேறு கழுதைகளின் சின்னாபின்னமாகிப் போன உடல்களையும் திருவாளர் ஹய்ட்டின் மிச்சமீதியையும் பல அடி நீளமுள்ள புதிய சணல்கயிறையும் எடுத்துவந்த அந்த ஏப்ரல் மாத விடியலின்போது தொடங்கிய இந்த நகரில் வசிக்கும் அவளுடைய வாழ்க்கை பற்றியது. அவை அவளுடைய துயரத்தின் கூறுகள். அந்தக் கோவேறு கழுதைகள், அவளுடைய இறந்துபோன கணவன், கூடவே அவற்றின் எஜமானனும்.

அவன் பெயர் ஸ்நோப்ஸ். ஊரில் எல்லோருக்கும் அவனைப் பற்றித் தெரியும். மெம்ஃபிஸ் சந்தையில் பொருட்களை வாங்கி ஜெஃபர்சனுக்குக் எடுத்து வருவான். விவசாயிகளுக்கும் விதவைகளுக்கும் அனாதைகளில் கறுப்பினத்தவர்கள், வெள்ளைக்காரர்கள் என எல்லோருக்கும் அவனுக்குத் தோன்றும் விலைக்கு விற்பான். ஒவ்வொரு உறைபனிக்காலத்திலும் அவனுடைய வேலியிட்ட மேய்ச்சல் நிலத்தில் இருந்து விலங்குகள் தப்பித்துவிடும். புத்தம்புதிய சணல் கயிற்றினால் (அடுத்த விபத்து ஈட்டுறுதிக் கோரிக்கையில் அதைச் சேர்த்துவிடுவான்) ஒன்றின் கால்கள் மற்றொன்றோடு பிணைக்கப்பட்ட அந்த விலங்குகள் ஹய்ட் இறந்துபோன அதே குருட்டுத் திருப்பத்தில் சரக்கு ரயில்கள் மோதி இறந்துபோகும். ஒருமுறை யாரோ ஒரு குறும்புக்காரன் அந்தப் பகுதிக்கான அச்சிட்ட இரயில் அட்டவணையை அவனுக்குத் தபால் மூலம் அனுப்பி வைத்திருந்தான். 

குட்டையாக வெளுத்துப்போய் இருந்தான். எந்தக் காலத்திலும் கழுத்துப்பட்டை அணிந்ததில்லை. எப்போதும் சோர்ந்துபோன கவலை தோய்ந்த முகத்தோடு இருப்பான். அமைதியாகத் தூங்கிவழியும் அந்த ஊரின் வாழ்க்கையைக் கலைத்துப்போடுவது போலக் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் இப்படியும் அப்படியுமாகப் புழுதியும் ஓசையும் எழுப்பியபடி கடந்து செல்வான். அவனுடைய வருகை கத்தல்களோடும் கூக்குரல்களோடும் அறிவிக்கப்பட்டது. அப்படிக் கடந்துசெல்கையில் ஒரு பெரிய மஞ்சள் நிற மேகத்துக்கு நடுவே வெட்டி அசையும் கூஜா வடிவத் தலைகளும் சத்தமெழுப்பும் குளம்புகளும் தெரியும். கூடவே மந்தையை ஓட்டிச் செல்பவர்களின் துயரம்தோய்ந்த உறுதியான குரல்களும் கேட்கும். இவை எல்லாவற்றுக்கும் பின்னால் முக்கியமாக அந்தப் புழுதியைவிட்டு வெகு பின்னால் ஓட்டமும் நடையுமாக ஸ்நோப்ஸ் மூச்சு வாங்கியபடி போவான். அத்தனை சாமர்த்தியமாக விற்பனை செய்யும் அந்த விலங்குகளைக் கண்டாலே அவனுக்குப் பயம் என்று ஊருக்குள் பேசிக்கொண்டார்கள்.

இருப்புப்பாதை நிலையத்தில் இருந்து அவனுடைய மேய்ச்சல் நிலத்துக்குச் செல்லும் பாதை ஊருக்கு வெளியே ஹய்ட்டின் வீட்டுக்குப் பக்கத்தில் போனது. ஹய்ட்டும் அவன் மனைவியும் அந்த வீட்டுக்கு வந்து ஒரு வாரம்தான் ஆகியிருந்தது. ஒரு நாள் காலையில் கண்விழித்ததும் வீட்டைச் சுற்றிலும் கோவேறு கழுதைகள் நாலுகால் பாய்ச்சலில் குதிபோட்டுக்கொண்டு இருந்தன. அவற்றை ஓட்டிச் செல்பவர்களின் கத்தலும் கூச்சலும் காற்றில் கலந்துவந்தது. ஆனால் சில வருடங்கள் கழித்து அந்த ஏப்ரல் மாதத்து அதிகாலையில் நிகழ்வு நடந்த இடத்துக்கு வந்த ஊர்மக்கள் சின்னாபின்னாமாகிக் கிடந்த கோவேறு கழுதைகளுக்கும் சிதைந்த புதுக்கயிற்றின் துண்டுகளுக்கும் நடுவே வேறு ஏதோ வித்தியாசமான ஒன்றும் கிடப்பதைப் பார்க்கும் வரையிலும் ஹய்ட்டுக்கும் ஸ்நோப்ஸூக்கும் கோவேறு கழுதைகளுக்கும் இடையே நெருங்கிய உறவு இருக்கும் என்பது குறித்துச் சந்தேகமில்லை. அவ்வப்போது தன் வீட்டு முற்றத்தில் வந்து நிற்கும் கோவேறு கழுதைகளைத் துரத்துவதற்கு ஹய்ட் உதவுவதைத் தவிர வேறு எதையும் யாரும் பார்த்ததில்லை. அந்த நிகழ்வுக்குப் பிறகு தங்களுக்கு எல்லாம் தெரியும் என்று நினைத்தார்கள். அதற்கடுத்த மூன்று நாட்களும் ஹய்ட்டின் பெயரைச் சொல்லி ஸ்நோப்ஸ் வசூல்செய்வானா என்பதையும் ஆவலோடும் ஆச்சரியத்தோடும் உற்றுக் கவனித்தார்கள்.

ஆனால் காப்பீட்டு நிறுவனத்தின் பிரதிநிதி ஒருவர் திருமதி ஹய்ட்டைச் சந்தித்தார் என்பதையும் சில நாட்களுக்குப் பின்னர் அவள் எட்டாயிரத்து ஐநூறு டாலருக்கான காசோலையை வங்கியில் செலுத்தினாள் என்பதையும் தெரிந்துகொண்டார்கள். பழைய அமைதியான கட்டுப்பாடில்லாத நாட்களில் நடந்த சம்பவம் என்பதால் நிறுவனங்கள் தெற்கு மாகாணக் கிளைகளையம் பிரிவுகளையும் அவற்றுக்கு அருகில் வசித்தவர்களின் சட்டப்பூர்வமான இரையாகவே பார்த்தன. பணத்தைப் பெற்றுக்கொண்ட அன்று கம்பளிக் கோட்டையும் உயிரிழந்த நாளன்று ஹய்ட் அணிந்திருந்த தொப்பியையும் அணிந்திருந்தாள். வங்கிப் பொறுப்பாளர் பணத்தை எண்ணிக்கொண்டிருந்த போது வங்கியின் தலைவரும் காசாளரும் பணத்தைப் பத்திரத்தில் சேமிப்பாகப் போட்டுவைப்பதில் இருக்கும் நன்மைகளைப் பற்றி விளக்குவதை உணர்ச்சியற்ற முகத்தோடு அமைதியாகக் கேட்டுக்கொண்டு இருந்தாள். அடுத்து சேமிப்புக் கணக்குத் துவங்குவது பற்றியும் தினசரி பணப்பரிமாற்றத்துக்கான கணக்கைப் பற்றியும் விளக்கினார்கள். எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்துவிட்டுப் பணத்தை மேலங்கிக்குக் கீழே அணிந்திருந்த சின்னச் சாக்குப்பையில் வைத்துக்கொண்டு கிளம்பினாள். கொஞ்ச நாளைக்குப் பிறகு வீட்டுக்கு வண்ணம் பூசினாள். இருப்புப்பாதை நிலையத்துக்குப் பூசியிருந்த காலத்தை வென்று நிற்கக்கூடிய எளிதில் பூசக்கூடிய அதே வண்ணத்தைத் தேர்ந்தெடுத்தாள். உணர்ச்சிப்பூர்வமான தொடர்பினால் அதைத் தேர்ந்தெடுத்தாள் என்றும்  நன்றியுணர்வினால் அப்படிச் செய்தாள் என்றும் பேசிக்கொண்டார்கள்.

காப்பீட்டு நிறுவனத்தின் பிரதிநிதி ஸ்நோப்ஸையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்தார். அது நடந்து முடிந்ததும் இன்னும் அதிகமாகத் துயரமுற்றவனைப் போன்ற தோற்றத்தோடு வெளியே வந்தான். அதற்குப் பிறகு அந்தத் திகிலடைந்த கலக்கமுற்ற உணர்ச்சி அவன் முகத்தை விட்டு அகலவேயில்லை. அன்றுமுதல் இரவு நேரத்தில் அவனுடைய மேய்ச்சல் நிலத்தின் வேலி காரணமில்லாமல் உடைந்துபோவதும் அதன் உள்ளேயிருந்த நீளமான கயிற்றால் மூன்று நான்காகப் பிணைக்கப்பட்ட கோவேறு கழுதைகளின் மீது விழுவதும் நின்றது. மெம்ஃபிஸ் சதுக்கத்தில் ஏலத்துக்காக வடிகயிற்றால் கட்டப்பட்டு நின்றபோதும் அவன் அவற்றைப் பார்த்துப் பயப்படுவதைப் புரிந்துகொண்டது போலவே இப்போதும் நிலைமையைப் புரிந்துகொண்டு நடந்தன கோவேறு கழுதைகள். 

இப்போதெல்லாம் வருடத்திற்கு மூன்று நான்கு முறை தீய சக்திகளின் ஒப்புதலோடு நடப்பது போல அவற்றை வண்டியில் இருந்து அவிழ்த்துவிட்டதும் இப்படி நடக்கிறது. அவை எழுப்பும் புழுதி மேகம் உள்ளார்ந்த துயரமும் கவலையும் கொண்ட குரல்களால் நிறையும். மேலும் கீழும் நகரும் பிசாசைப் போன்ற உருவங்கள் திடீரென மாறுபட்ட அடக்கமுடியாத வன்முறை வெடிக்கும் ஒரே உருவமாக மாறிவிடும். காலம், இடம், நிலம் என எவற்றோடும் தொடர்பே இல்லாமல் அமைதியும் ஆச்சரியமும் கொண்ட அந்த நகரின் குறுக்கே கடந்துசெல்லும் போதும் திருமதி ஹய்ட்டின் கொல்லைப்புறத்துக்குள்ளும் அவை நுழையும். மகிழ்ச்சியும் நம்பிக்கையும் இழந்த அந்த நொடியில் அவை தன்னைத் தாக்கிவிடுமோ என்ற பயத்தையும் மீறி வீட்டைச் சுற்றிலும் இடி இடிப்பது போன்ற ஓசை எழுப்பியபடி குதித்தபடி சுற்றும் உருவங்களைச் சிரமத்தோடு தாண்டிச்செல்வான் ஸ்நோப்ஸ். அந்த வீட்டின் கரையாத வண்ணத்துக்கு அவன்தான் காசு கொடுத்திருந்ததாக நம்பினான். வீட்டின் உள்ளே வசிப்பவள் மகாராணி மாதிரி சோம்பித் திரியும் வாழ்க்கை வாழ்வதற்குக் காரணம் அவனால் கிடைத்த பணம் என்று நம்பினான். 

அந்தக் குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்தவர்கள் திரைச்சீலையிட்ட ஜன்னல்களின் வழியாகவும் தடுப்புத் திரையிட்ட தாழ்வாரங்களின் வழியாகவும் எட்டிப்பார்த்தனர். தெருவிலே போய்க்கொண்டிருந்தவர்கள் நடைபாதைகளில் நின்றபடியும் வண்டிகளையும் கார்களையும் நிறுத்திவிட்டும் வேடிக்கைப் பார்த்தனர். இரவுநேர மேலங்கியும் தொப்பியும் அணிந்த பெண்களும் பள்ளிக்குப் போகும் குழந்தைகளும் அந்தப் பக்கம் எதேச்சையாக வந்த கறுப்பின மக்களும் வெள்ளையர்களும் அமைதியாக நின்று வேடிக்கைப் பார்த்தனர்.

முதியவள் ஹெட் பின்தொடர திருமதி ஹய்ட் தேய்ந்துபோன துடைப்பத்தோடு ஓடிவந்து அடுத்த வளைவில் திரும்பி முற்றம் என்று சொல்லப்படும் கைக்குட்டை அகலம் இருந்த நிலத்துக்குள் ஓடியபோது அவர்கள் எல்லோரும் அப்படித்தான் வேடிக்கைப் பார்த்தார்கள். அது மிகச் சிறிய இடம். ஒரு எட்டில் மூன்று அடி தூரத்தைக் கடக்கும் எந்த விலங்கும் அதை இரண்டே எட்டில் கடந்துவிடலாம். ஆனால் அந்த நொடியில், பார்வையை மறைத்து உருவங்களைச் சிதறடிக்கும் பனிமூட்டத்தினாலோ என்னவோ, நுண்ணோக்கியின் வழியாகப் பார்க்கும் தண்ணீர்த் துளிக்குள் தெரியும் நுண்ணியிரிகள் போல, துள்ளித்துடிக்கும் அத்தனை உயிர்கள் இருப்பது போலத் தெரிந்தது.

இந்த முறையும் அவள் தடுமாறவில்லை. கையில் துடைப்பத்தைப் பிடித்தபடி தன்னை விஞ்ச யாருமில்லை என்ற உள்ளார்ந்த நம்பிக்கையோடு வடிகயிறு பூட்டப்பட்ட அந்தக் கோவேறு கழுதையைத் துரத்தினாள். அதுவோ பிசாசைப் போலப் பனிமூட்டத்துக்குள் மறைந்துபோனதால் கண்ணுக்குத் தெரியவில்லை. மோட்டார் வாகனத்தின் இயந்திர விசிறி வேகமாகச் சுழலும்போது சிதறும் காகிதத் துண்டுகளைப்போல நாலாப் பக்கமும் சிதறி ஓடிய அந்த ஒன்பது கோழிகளைப் பார்த்தபோதும் அதன் பாதையிலிருந்து விலகிச்செல்லும் முயற்சியில் பைத்தியம் பிடித்தவனைப் போல ஓடிக்கொண்டிருந்த அந்த மனிதனைப் பார்க்கும்போதும்தான் அதன் இருப்பு தெரிய வந்தது. ஸ்நோப்ஸ்தான் அந்த மனிதன் முகத்தில் முத்துமுத்தாக வியர்வை பூத்திருந்தது. தொண்டை கிழியக் கத்தியதில் முகம் சிவந்திருந்தது. சவரம் செய்யப்பட்ட நேர்த்தியான தாடியில் வருடக்கணக்கில் பயன்படுத்திய புகையிலைத் தூள் வண்டல் மண்ணைப் போலத் தேங்கியிருந்தது.  “அடக்கடவுளே, திருமதி ஹய்ட். என்னால் முடிந்ததை எல்லாம் செய்துவிட்டேன்,” என்று அவளைப் பார்த்துக் கத்தினான். அவளோ அவனைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை.

“கடிவாளம் போடப்பட்ட அந்தப் பெரியதைப் பிடியுங்கள்,” என்று மூச்சு வாங்கியபடியே சொன்னாள். “அங்கே இருக்கும் அந்தப் பெரியதைப் பிடியுங்கள்.”

“ஷ்ஷ்ஷோ..” ஸ்நோப்ஸ் அலறினான். “அவை வேண்டிய மட்டும் நேரம் எடுத்துக்கொள்ளட்டும். அவற்றைப் பரபரப்படையச் செய்யாதீர்கள்.”

“அங்கே பாருங்கள்! அது மீண்டும் இங்கேதான் வருகிறது,” முதியவள் ஹெட் கத்தினாள். 

“கயிறை எடுங்கள்,” மீண்டும் ஓடிக்கொண்டே சொன்னாள் திருமதி ஹய்ட். ஸ்நோப்ஸ் முதியவள் ஹெட்டைப் பார்த்து முறைத்தான்.

“அடக்கடவுளே! கயிறு எங்கே?” கத்தினான்.

“நிலவறையில் இருக்கிறது!” உடனே பதிலுக்குக் கத்தினாள் முதியவள் ஹெட். “அந்தப் பக்கம் சுற்றிப்போய் அவற்றைப் பிடியுங்கள்.” 

அவளும் திருமதி ஹய்ட்டும் வளைவில் திரும்பியபோது கண்பார்வையில் இருந்து மறைந்துகொண்டிருந்த வடிகயிறு பூட்டப்பட்ட கோவேறு கழுதையைச் சரியான நேரத்தில் பார்த்தார்கள். கோழிகள் சூழ்ந்த மேகத்தின்மீது மிதந்து போய்க்கொண்டு இருந்தது. கோழிகள் வீட்டுக்குக் கீழே நுழைந்து வெளியே வந்தன. கோவேறு கழுதை அரைவட்ட வடிவில் சுற்றிவந்து அவற்றோடு மீண்டும் இணைந்துகொண்டது. அடுத்த வளைவைத் தாண்டியதும் இரண்டும் பின்புறக் கொல்லையில் நின்றுகொண்டிருந்தன.

“கடவுளே! அது பசுவின்மீது முட்டப்போகிறது.”

கோவேறு கழுதை நின்றுவிட்டிருந்ததால் அதை எட்டிப் பிடித்தார்கள். 

உண்மையில் அந்த வளைவில் திரும்பியதும் அங்கே அரங்கேறிக்கொண்டிருந்த நாடகக் காட்சியைப் பார்த்தனர். பசு இப்போது முற்றத்தின் நடுவில் நின்றுகொண்டிருந்தது. பசுவும் கோவேறு கழுதையும் ஒன்றையொன்று பார்த்தபடி நின்றன. இரண்டுக்கும் இடையே இருந்த இடைவெளி சில அடி தூரம் மட்டுமே. அசைவில்லாமல் தலையைக் குனிந்தபடி முன்னங்கால்களைத் தயார்நிலையில் வைத்திருந்தன. பார்க்க இரண்டு ஜோடி நூல் அடுக்கத்தில் இருந்து பிரித்து எடுக்கப்பட்டு ஜோடி சேர்க்கப்பட்ட முற்றிலும் மாறுபட்ட இரண்டு நூல் அடுக்கம் போல இருந்தன. கிராமப்புறக் கலாச்சாரத்தைப் பற்றி அதிகம் தெரியாத ஒருவர் வாங்கிய கலைப்பொருளை ஒரு குழந்தை எங்கிருந்தோ தேடியெடுத்து வந்து நேரெதிராகச் சும்மா நிற்கவைத்துவிட்டு மறந்துபோனதைப் போல இருந்தது. நிலவறையின் சாய்வான வாசலுக்கு மேலே ஸ்நோப்ஸின் தலையும் தோள்களும் மட்டும் தெரிந்தது, பார்ப்பதற்கு என்னவோ உடன்கட்டை ஏறுவதைப்போல இருந்தது. நிலக்கரி வாளியும் அங்கேதான் இருந்தது.

அடுத்த முறை இத்தனை நேரம் எடுக்கவில்லை. நாடகக் காட்சி அளவுக்கு இல்லை என்றாலும் பின்னர் நினைவுபடுத்திப் பார்க்கும்போதுகூட உறுதியாகச் சொல்லமுடியாத ஒன்று நிகழ்ந்தது. இந்த முறை அடுத்தடுத்து மனிதனும் பசுவும் கோவேறு கழுதையும் அடுத்த வளைவில் காணாமல் போயினர். இப்போது கையில் கயிறை வைத்திருந்த ஸ்நோப்ஸ் முன்னிலை வகித்தார். பின்னாடியே பசு வாலை விறைத்துக்கொண்டு படகின் துடுப்பைப் போல அப்படியும் இப்படியும் ஆட்டிக்கொண்டே வந்தது. திருமதி ஹய்ட்டும் முதியவள் ஹெட்டும் திறந்துகிடந்த நிலவறையையும் அதில் சேர்ந்துகிடந்த மனித வாழ்க்கைக்கும் விதவையான பெண்ணுக்கும் தேவையான பொருட்களையும் தாண்டி ஓடினார்கள். தீ மூட்டத் தேவையான மரப்பெட்டிகள், பழைய தினசரிகளும் பத்திரிகைகளும், எந்தப் பெண்ணும் தூக்கி எறியாத உடைந்து பழையதாகிப் போன நாற்காலிகள், பாத்திரங்கள், குவியலாகக் கிடந்த நிலக்கரியும் நெருப்பெரிக்கத் தேவையான பைன் மரத்தூளும் என எல்லாவற்றையும் தாண்டி ஓடினார்கள். அடுத்த வளைவைத் தாண்டும்போது மனிதனும் பசுவும் கோவேறு கழுதையும் அந்த மேகக்கூட்டத்துக்குள் மீண்டும் மறைந்துபோனார்கள். எல்லா இடத்திலும் நிறைந்திருக்கும் கோழிக்குஞ்சுகளோ மீண்டும் வீட்டுக்குக் கீழே புகுந்து வெளியே வந்தன. சலனமற்ற முடிவற்ற அமைதியோடு திருமதி ஹய்ட்டும் ஒரு குழந்தையைப் போன்ற ஆவலும் மகிழ்ச்சியும் ஆச்சரியமும் பொங்க முதியவள் ஹெட்டும் ஓடிக்கொண்டே இருந்தார்கள். மீண்டும் முந்தி வந்தபோது ஸ்நோப்ஸை மட்டும்தான் பார்த்தார்கள். தலைகுப்புற விழுந்து கிடந்தான். கை இரண்டையும் நீட்டிக்கொண்டு கிடந்ததால் தலையும் தோளும் மேலே தூக்கியது போல இருந்தது. அணிந்திருந்த கோட்டின் கீழ்ப்பகுதி மேலேறித் தலைமீது விழுந்துகிடந்தது. ஆச்சரியத்தில் வாய் திறந்திருந்தது. மொத்தத்தில் பார்க்க அமைதி தவழும் கன்னியாஸ்திரீயின் முகத்தைப் போல இருந்தது.

“அவையெல்லாம் எங்கே?” என்று அவனைப் பார்த்துக் கத்தினாள் முதியவள் ஹெட். அவன் பதில் சொல்லவில்லை. “வட்டமாகச் சுற்றிக்கொண்டே இருக்கின்றன. மீண்டும் பின்புறத்துக்குப் போய்விட்டனவா?” என்றாள். உண்மையில் அவை அங்கேதான் இருந்தன. கொட்டகைக்குள் ஓடுவது போலப் பாவனை செய்த பசு, தான் என்னவோ அதிவேகமாக ஓடுகிறோம் என்று எண்ணிக்கொண்டு கடைசி நேரத்தில் வீரத்தைக் காட்ட முயல்வது போலச் சடாரென்று திரும்பியது. அவர்கள் யாரும் இதைக் கவனிக்கவில்லை. பசுவைத் தாண்டிச்செல்லும் முயற்சியில் இருந்த கோவேறு கழுதை ஒதுங்கிச்செல்ல முயன்றபோது திறந்திருந்த நிலவறைக் கதவின்மீது மோதிக்கொள்ளப் பார்த்து, பின் சுதாரித்துக்கொண்டதையும் கவனிக்கவில்லை. அவர்கள் வந்து சேர்ந்தபோது கோவேறு கழுதை அங்கே இல்லை.

நிலக்கரி வாளி இல்லை என்பதையும் அவர்கள் கவனிக்கவில்லை. பசு மீண்டும் முற்றத்தின் நடுவே நின்றுகொண்டிருப்பதைப் பார்த்தார்கள். மூச்சு வாங்கியபடி விறைத்துக்கொண்டு முன்னங்கால்களைத் தயார்நிலையில் வைத்தபடி எதையும் பார்க்காமல் தலையைக் குனிந்துகொண்டு நின்றது. குழந்தை திரும்பிவந்து புதிய யோசனையோடு நூல் அடுக்கத்தை நகர்த்தி வைத்ததைப் போல இருந்தது. எல்லோரும் ஓடினார்கள். திருமதி ஹய்ட் சிரமத்தோடு ஓடினாள். வாய் திறந்து, முகம் வெளுத்திருந்தது. ஒரு கையால் இடுப்பைப் பிடித்துக்கொண்டு இருந்தாள். இப்போது எல்லோரும் மெதுவாக ஓடினார்கள், எவ்வளவு மெதுவாக என்றால் மூன்றாவது சுற்றில் ஓடிக்கொண்டிருந்த கோவேறு கழுதை கொஞ்சமும் குறையாத வேகத்தில் இவர்களின் பின்னால் இருந்துவந்து முன்னால் சீறிப்பாய்ந்தது. பேய் இடியைப் போன்ற ஓசையும் நாசியைத் துளைக்கும் அதன் வியர்வை வாசமும் அவர்களைத் தாண்டிப் போனது. இருந்தாலும் அது அடுத்த திருப்பம் வரையிலும் விடாமல் ஓடி பனிமூட்டத்துக்குள் ஓடிச்சென்று மறைவதைப் பார்த்தார்கள். அதனுடைய குளம்பு, கல்பதித்த சாலையில் தாளம் போடுவதைப் போல ஒலிப்பது தேய்ந்து மறையும் வரையில் கேட்டுக்கொண்டு நின்றார்கள்.

“அப்பாடா!” ஓடுவதை நிறுத்திவிட்டு மூச்சு வாங்கியபடியே மகிழ்ச்சியோடு சொன்னாள் முதியவள் ஹெட். 

“உஷ், மக்களே! நாம்…” திடீரெனக் கல்லைப் போல உறைந்து நின்றாள். தலையைத் திருப்பி நாசித்துவாரங்களை விரித்து மூடினாள். கொஞ்சம் முன்னர் அவர்கள் கடந்துவந்த நிலவறையின் கதவு திறந்திருந்ததையும் நிலக்கரி வாளி இல்லாததையும் கவனித்தாள். “கடவுளே! புகைவது போல இருக்கிறதே! அம்மா குழந்தை, உள்ளே போய் உன்னுடைய பணத்தை எடுத்துக்கொண்டு வா,” என்றாள்.

அது நடந்தது காலையில், அப்போது மணி பத்துகூட ஆகவில்லை. பன்னிரண்டு மணிக்குள் வீடு முழுவதும் எரிந்து முடித்திருந்தது. ஸ்நோப்ஸ் வழக்கமாக விவசாயிகள் பொருட்களை வாங்கும் கடையில் அமர்ந்திருப்பான். அந்த நேரத்தில் அவனை அங்கே பார்த்ததாக நிறைய பேர் சொன்னார்கள். தீயணைப்பு வண்டியும் மக்கள் கூட்டமும் அங்கே வந்துசேர்ந்த போது உள்ளே இருந்து திருமதி ஹய்ட் குடையை எடுத்துக்கொண்டு புதிய சாம்பல் நிறக் கோட்டை அணிந்துகொண்டு வெளியே வந்ததைச் சொன்னார்கள். ஒரு சட்டைப்பையில் இருந்த கண்ணாடி ஜாடியில் நறுவிசாக சுருட்டி வைக்கப்பட்ட வங்கித்தாள்கள் இருந்தன, இன்னொரு சட்டைப்பையில் கனத்த நிக்கல் முலாம் பூசிய கைத்துப்பாக்கியை வைத்திருந்தாள் என்றும் சொன்னார்கள். பின்னாடியே தன்னுடைய பையைத் தூக்கிக்கொண்டு முதியவள் ஹெட் போனாள். இருவரும் தெருவுக்கு எதிர்ப்பக்கம் இருந்த வீட்டின் தாழ்வாரத்தில் இருந்த ஆடும் நாற்காலியில் உட்கார்ந்திருந்தார்கள். தீயணைப்பு வீரர்கள் கரகரத்த குரலில் உரத்துப் பேசியபடி சுறுசுறுப்பாக இயங்கினார்கள். அவளுடைய பாத்திரப் பண்டங்களையும் சாமான்களையும் படுக்கையையும் தெருவில் வீசி எறிவதை இன்னதென்று புரியாத இறுக்கமான முகத்துடன் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தாள் திருமதி ஹய்ட் என்று நடந்ததை எல்லாம் ஸ்நோப்ஸிடம் சொன்னார்கள்.

“இதையெல்லாம் எதற்காக என்னிடம் சொல்லுகிறீர்கள்?” என்றான் ஸ்நோப்ஸ். “தீக்கங்கு இருந்த வாளியை நானொன்றும் நிலவறைக்குள் தள்ளிவிடவில்லை. முதலில் தாண்டிச்சென்றது யாரோ அவர்கள்தான் உள்ளே தள்ளியிருப்பார்கள்.”

“நீதானே நிலவறைக் கதவைத் திறந்தாய்?”

“ஆமாம்… ஆனால் எதற்காக? கயிறை எடுப்பதற்காக. அவளுடைய கயிறு. அவள்தான் அங்கேயிருந்து எடுத்துவரச் சொன்னாள்.”

“அவளுடைய வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த உன்னுடைய கோவேறு கழுதையைப் பிடிக்கத்தானே உள்ளே போனாய்? இந்தத் தடவை நீ தப்பிக்க முடியாது. இந்த மாவட்டத்தைச் சேர்ந்த எந்த முறைகாண் ஆய உறுப்பினரும் அவளுக்காகப் பரிந்து பேசாமல் இருக்கமாட்டார்கள்.”

“நான் அப்படி நினைக்கவில்லை. அவள் ஒரு பெண் என்பதால் மட்டுமே அவர்கள் அதைச் செய்வார்கள். எல்லாமே அவள் ஒரு நாசமாகப்போன பெண் என்பதால் மட்டும்தான் நடக்கும். சரி. அவள் அந்த நாசமாகப் போன முறைகாண் ஆயத்திடம் போகட்டும். எனக்கும் பேசத் தெரியும். அவர்களிடம் நானும் சில விஷயங்களைச் சொல்லுவேன்…” என்று சொல்லிவிட்டு நிறுத்தினான்.

எல்லோரும் அவனையே கவனித்துக்கொண்டு இருந்தார்கள்.

“என்னது? முறைகாண் ஆயத்திடம் என்ன சொல்லுவாய்?”

“ஒன்றுமில்லை. ஏனென்றால் ஆய உறுப்பினர்கள்வரை அது போகாது. அவளுக்கும் எனக்கும் நடுவில் எதற்கு ஆயம் வரவேண்டும்? எனக்கும் மேனி ஹெய்ட்டுக்கும் நடுவில்? எதிர்பாராத விபத்து ஒன்றினால் அவள் எனக்குக் கஷ்டம் கொடுப்பாள் என்று நீங்கள் நினைப்பதில் இருந்தே உங்களுக்கு அவளைப் பற்றி ஒன்றுமே தெரியாது என்பது உறுதியாகிறது. திருமதி மேனி ஹய்ட்டைவிடவும் நியாயமான அருமையான பெண் இந்த மாவட்டத்திலேயே இருக்க முடியாது. அவளிடம் இதைச் சொல்ல எனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் நன்றாக இருக்கும்.” 

அதற்கான சந்தர்ப்பம் உடனே வந்தது. முதியவள் ஹெட் அவள் பின்னாடியே பையைத் தூக்கிக்கொண்டு வந்தாள். அங்கே இருந்தவர்கள் எல்லோரின் முகத்தையும் ஒருமுறை அமைதியாகப் பார்த்தாள் திருமதி ஹய்ட். எல்லோரும் முணுமுணுத்த குரலில் சொன்ன வணக்கத்துக்குப் பதில் சொல்லவில்லை அவள். ஸ்நோப்ஸை நீண்ட நேரம் பார்க்கவோ அவனிடம் பேசவோ செய்யவில்லை.

“அந்தக் கோவேறு கழுதையை விலைக்கு வாங்க வந்திருக்கிறேன்,” என்றாள்.

“எந்தக் கோவேறு கழுதையை?” எல்லோரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள். “நீ அந்தக் கோவேறு கழுதைக்கு எஜமானியாக வேண்டும் என்று நினைக்கிறாயா?” அவனைப் பார்த்தாள். “அதன் விலை நூற்றைம்பது, திருமதி மேனி.”

“டாலர்களா?”

“நானென்ன சில்லறைக் காசு என்றா சொன்னேன், திருமதி மேனி?”

“டாலர்கள். ஹய்ட்டின் காலத்தைவிடவும் இப்போது விலை அதிகமாகிவிட்டதே.”

“ஹய்ட்டின் காலத்தில் இருந்த நிறைய விஷயம் மாறிவிட்டதே. உன்னையும் என்னையும் சேர்த்துத்தான்.”

“நானும் அப்படித்தான் நினைக்கிறேன்,” என்றபடி அங்கிருந்து போனாள். ஒரு வார்த்தைகூடச் சொல்லாமல் முதியவள் ஹெட் பின்தொடர திரும்பிப் போனாள்.

“இன்றைக்குக் காலையில் நீ பார்த்தவற்றுள் ஒன்று உனக்குப் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்,” என்றான் ஸ்நோப்ஸ். அவள் பதில் சொல்லவில்லை. அதற்குப் பிறகு அவர்கள் அங்கிருந்து கிளம்பிவிட்டார்கள். 

“நான் அவளிடம் இப்படித்தான் பேசுவேனா என்று தெரியவில்லை,” என்று அங்கிருந்தவர்களுள் ஒருவர் சொன்னார்.

“எதற்காக? அந்தத் தீயோடு என்னைச் சம்பந்தப்படுத்தி நான் செய்தது சட்டப்படிக் குற்றம் என்று புகார் கொடுப்பதாக இருந்தால் கோவேறு கழுதைக்காகப் பணம் கொடுக்கிறேன் என்று சொல்வாளா?” என்றான் ஸ்நோப்ஸ். அது நடக்கும்போது ஒரு மணி இருக்கும். 

சுமார் நான்கு மணிக்குக் குறைந்தவிலை மளிகைக் கடையில் முண்டியடித்த கறுப்பின மக்களின் கூட்டத்துக்கு நடுவே நெட்டித்தள்ளி நுழைந்துக்கொண்டிருந்த போது யாரோ பெயர் சொல்லிக் கூப்பிடுவதுபோல இருந்தது. முதியவள் ஹெட்டின் தோளில் இருந்த பை புடைத்துக்கொண்டு இருந்தது. கையில் இருந்த காகிதப் பொட்டலத்தில் இருந்து வாழைப்பழத்தைச் சாப்பிட்டுக்கொண்டு இருந்தாள்.

“அடக்கடவுளே! இப்போதுதான் உன்னைத் தேடிக்கொண்டு இருந்தேன். பக்கத்தில் நின்றுகொண்டிருந்தவளிடம் வாழைப்பழத்தைக் கொடுத்துவிட்டுப் பைக்குள் கையைவிட்டுத் துழாவி ஒரு டாலர் நோட்டை எடுத்து நீட்டினாள். 

“திருமதி மேனி உன்னிடம் கொடுக்கச் சொன்னாள். உன் வீட்டுக்கு வந்து தரவேண்டும் என்று நினைத்தேன். இந்தாருங்கள்.” பணத்தை வாங்கிக்கொண்டான். 

“என்னது இது? திருமதி ஹய்ட்டா கொடுத்தாள்?”

“அந்தக் கோவேறு கழுதைக்காகத்தான்.” அது பத்து டாலர் தாள். “நீ ரசீது தரவேண்டாம். உன்னிடம் பணத்தைக் கொடுத்ததற்கு நான்தான் சாட்சியாக இருக்கிறேனே?”

“பத்து டாலரா? அந்தக் கோவேறு கழுதைக்கா? நான் நூற்றைம்பது டாலர் விலை சொன்னேனே?”

“அதையெல்லாம் அவளிடம்தான் நீ பேச வேண்டும். அவள் கோவேறு கழுதையைப் பிடித்துக்கொண்டு வரப்போயிருப்பதால் உன்னிடம் என்னைக் கொடுக்கச் சொன்னாள்.”

“பிடித்துக்கொண்டு வரப்போயிருக்கிறாளா? என்னுடைய மேய்ச்சல் நிலத்தில் இருந்து என்னுடைய கோவேறு கழுதையைப் பிடித்துக்கொண்டு வர அவளே போயிருக்கிறாளா?”

“தேவரே! குழந்தை, திருமதி மேனிக்குக் கோவேறு கழுதையைப் பார்த்துப் பயமேயில்லை என்பது உனக்குத் தெரியாதா?”

நேரமாகிவிட்டிருந்தது. பனிக்காலத்தில் பகல்பொழுதுகள் சுருங்கிவிடும். அந்தப் புகைப்போக்கிகள் அவள் கண்ணுக்குத் தெரிந்தபோது சூரியன் மறைந்துகொண்டிருந்தது. பசுக்கொட்டகையைச் சென்றுசேர்வதற்கு முன்னரே பன்றி இறைச்சி சமைக்கப்படும் நறுமணம் காற்றில் பரவியது. சுற்றிக்கொண்டு முன்புறத்துக்குச் செல்லும்வரை கண்ணுக்குப் புலப்படவில்லை. செங்கற்களை மூட்டி செய்யப்பட்ட அடுப்பின்மீது ஓர் இரும்பு வாணலி வைக்கப்பட்டு இருந்தது. பக்கத்திலேயே திருமதி ஹய்ட் பால் கறந்துகொண்டிருந்தாள். “நல்லது. எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்திவிட்டாய் போல இருக்கிறதே?” என்றாள் ஹெட் கிழவி.

கொட்டகைக்குள் எட்டிப் பார்த்தாள். கூட்டி ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது. நிலத்தில் புது வைக்கோல் பரப்பப்பட்டிருந்தது. பெட்டிக்குள் சுத்தமான புதிய விளக்கு எரிந்தது. பக்கத்திலேயே துணி விரிப்புகளைக் கொண்டு படுக்கை அமைக்கப்பட்டு இரவு படுப்பதற்காகத் தயார்நிலையில் இருந்தது. “அட, எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்திவிட்டாயே,” என்று திருப்தியும் ஆச்சரியமும் கலந்த குரலில் சொன்னாள். கதவுக்குப் பக்கத்தில் இருந்த நாற்காலியை இழுத்துப்போட்டுக்கொண்டு அடுப்புக்குப் பக்கத்தில் உட்கார்ந்தாள். புடைத்துக்கொண்டிருந்த பையைக் கீழே வைத்தாள்.

“நீ பாலைக் கறந்துவிட்டு வரும்வரையிலும் அடுப்பைப் பார்த்துக்கொள்கிறேன். நானே பால் கறந்து தருகிறேன் என்று சொல்வேன். ஆனால் நடந்ததையெல்லாம் பார்த்து கொஞ்சம் படபடப்பாக வருகிறது,” என்றபடியே சுற்றிலும் பார்த்தாள். “அந்தப் புதிதாக வாங்கிய கோவேறு கழுதையைக் காணவில்லையே.”

திருமதி ஹய்ட் ஓர் உறுமலோடு பசுவின் வயிற்றின்மீது தலையைச் சாய்த்தாள். அடுத்த நொடியே, “அவனிடம் பணத்தைக் கொடுத்தாயா?”என்று கேட்டாள்.

“உம்ம்ம்… கொடுத்துவிட்டேன். முதலில் ஆச்சரியப்பட்டான். அவனோடு நீ இவ்வளவு சீக்கிரம் வியாபாரம் பேசுவாய் என்று நினைத்திருக்க மாட்டான் போல. எல்லா விவரத்தையும் உன்னிடமே நேரிடையாகப் பேசிக்கொள்ளும்படிச் சொல்லிவிட்டேன். பணத்தை வாங்கிக்கொண்டான். இனி நீயும் அவனும்தான் பேசிக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.” திருமதி ஹய்ட் மீண்டும் உறுமினாள்.

முதியவள் ஹெட் வாணலியில் இருந்த இறைச்சியைத் திருப்பிப்போட்டாள். பக்கத்தில் இருந்த காபிப் பாத்திரம் கொதித்துப் பொங்கத் தொடங்கியது. “காபி அருமையாக மணக்கிறது,” என்றாள். “சில வருஷமாகச் சுத்தமாகப் பசிப்பதே இல்லை. சும்மாவேனும் கொறிப்பேன். நான் சாப்பிடுவது ஒரு பறவைக்குக்கூடக் காணாது. ஆனால் உன்னுடைய காப்பியின் மணத்தைக் கொஞ்சம் முகர்ந்தால் போதும், பசிக்க ஆரம்பித்துவிடும். அத்தோடு ஒரு சின்னத் துண்டு இறைச்சியும் சேர்த்துச் சாப்பிட்டால்… அடக்கடவுளே, உன்னைப் பார்க்க யாரோ வந்திருக்கிறார்களே!” கை வேலை முடியும் வரையில் திருமதி ஹய்ட் நிமிர்ந்துகூடப் பார்க்கவில்லை. பிறகு மேலே எழுந்திருக்காமல் வெறுமனே திரும்பிப் பார்த்தாள்.

“நானும் நீயும் கொஞ்சம் பேசினால் நல்லது என நினைக்கிறேன்,” என்றான் ஸ்நோப்ஸ். 

“உன்னுடைய பொருள் ஒன்று என்னிடம் இருக்கிறது. அதே போல என்னுடைய பொருள் ஒன்று உன்னிடம் இருக்கிறது.” கண்ணைச் சுழற்றி அந்த இடத்தை அளந்தான். முதியவள் ஹெட் அவனையே பார்த்தாள். 

அவளைப் பார்த்து, “கொஞ்சம் இங்கிருந்து போகிறீர்களா? இங்கேயே உட்கார்ந்துகொண்டு நாங்கள் பேசுவதையெல்லாம் கேட்கும் எண்ணமில்லை என நம்புகிறேன்.”

“தேவரே! கண்ணா, நீ என்னைக் கண்டுகொள்ளாதே. எனக்கு ஏற்கனவே பல பிரச்சினைகள் இருக்கின்றன. அடுத்தவர்களின் பிரச்சினையைக் கேட்டால் என் கவலை இன்னும் அதிகமாகிவிடும். நீ என்ன பேசவேண்டுமோ பேசு. நான் இங்கேயே உட்கார்ந்து இறைச்சியைச் சமைக்கிறேன்.”

ஸ்நோப்ஸ் திருமதி ஹய்ட்டை பார்த்தான். 

“அவளைப் போகச் சொல்லமாட்டாயா?”

“எதற்காக? நினைத்த நேரத்துக்கு விருப்பப்படி இந்த முற்றத்துக்கு வரவும் வேண்டும்வரை தங்கவும் செய்த முதல் ஆசாமி இல்லையே அவள்?” என்றாள் திருமதி ஹய்ட். தன் கவலையை வெளிக்காட்டும் செய்கையைச் செய்தான் ஸ்நோப்ஸ்.

“சரி, இருக்கட்டும். நீ என்னுடைய கோவேறு கழுதையை எடுத்துக்கொண்டு விட்டாயா?”

“நான்தான் அதற்கான பணத்தைக் கொடுத்துவிட்டேனே? அவள் கொடுத்திருப்பாளே?”

“பத்து டாலர். நூற்றைம்பது டாலருக்கு விற்கும் கோவேறு கழுதைக்குப் பத்து டாலர்.”

“நூற்றைம்பது டாலருக்கு விற்கும் கோவேறு கழுதை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. இருப்புப்பாதை நிறுவனம் கொடுப்பதுதான் தெரியும்.” ஒரு முழு கணம் அவளையே பார்த்தான் ஸ்நோப்ஸ். 

“என்ன சொல்ல வருகிறாய்?”

“இருப்புப்பாதை நிறுவனம் தலைக்கு அறுபது டாலர்தானே தரும்? நீயும் ஹய்ட்டும் அப்போது…”

“உஷ்ஷ்,” என்றபடி சட்டெனப் பின்னாடித் திரும்பிப் பார்த்தான் ஸ்நோப்ஸ். “சரி. அறுபது டாலர் என்றே வைத்துக்கொள். ஆனால் நீ எனக்குப் பத்து டாலர்தானே கொடுத்துவிட்டாய்.”

“நான் தரவேண்டியது அதுதானே? அந்த ஐந்து கோவேறு கழுதைகளையும் அங்கே…”

“உஷ்ஷ்,” என்று கத்தினான். “உஷ்ஷ்!” 

அவள் சலனமற்ற வெறுமையான குரலில் தொடர்ந்தாள்.

“உனக்கு உதவி செய்ததற்கு நீ ஒவ்வொரு முறையும் அவனுக்கு ஐம்பது டாலர்தானே கொடுத்தாய்? இருப்புப்பாதை நிறுவனம் தலைக்கு அறுபது டாலர் கணக்கல்லவா கொடுத்தது? என் கணக்கு சரிதானே?” 

அவளைப் பார்த்துக்கொண்டே நின்றான். “கடைசி தடவை நீ அவனுக்குப் பணமே கொடுக்கவில்லை. அதனால் அதற்குப் பதிலாகக் கோவேறு கழுதையை எடுத்துக்கொண்டேன். மீதிப் பணமான பத்து டாலரை உன்னிடம் கொடுத்துவிட்டேன்.”

“ஆமாம்,” என்று அமைதியான குரலில் அவன் சொன்னாலும் அதில் குழப்பம் தொனித்தது. திடீரென உரத்த குரலில் பேச ஆரம்பித்தான். “பார்! இங்கேதான் நீ தவறு செய்கிறாய். அதுதான் எங்களுக்கு இடையே இருந்த ஒப்பந்தம். நான் அவனுக்கு எப்போது பணம் கொடுப்பேன் என்று பேசினோம் தெரியுமா? கோவேறு கழுதைகள்…”

“உன் குரலைக் கொஞ்சம் தணித்துக்கொள்வது நல்லது,” என்றாள் திருமதி ஹய்ட்.

“… இரயிலில் அடிபடும் வரையில் நான் எதுவும் கொடுக்கவேண்டியதில்லை. இந்த முறை யாருக்கும் எதுவும் கொடுக்க வேண்டியதில்லை. ஏனென்றால் அடிபட்ட மனிதனுக்கு எதுவும் கொடுக்க வேண்டியதில்லை,” என்று வெற்றிக்களிப்போடு சொன்னான். “புரிந்ததா?”

பெட்டியின்மீது அசையாமல் உட்கார்ந்திருந்தாள் திருமதி ஹய்ட். தீவிரமான சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள். “உன்னுடைய பத்து டாலரை திருப்பி வாங்கிக்கொண்டு என்னுடைய கோவேறு கழுதை எங்கேயிருக்கிறது என்று சொல். நாம் முன்பு போலவே நல்ல நண்பர்களாக இருக்கலாம். கடவுள் சாட்சியாக அந்தத் தீ மூண்டது பற்றி எனக்கு நிரம்பவே வருத்தமாக இருக்கிறது.”

“கடவுளே! எப்படி எரிந்தது, இல்லை?” என்றாள் முதியவள் ஹெட்.

“இருப்புப்பாதை நிறுவனம் கொடுத்த பணம் இருக்கிறதே உன்னிடம்? எப்படியும் இங்கே ஒரு புதிய வீட்டை கட்டிகொள்ளலாம் என்ற திட்டத்தில்தானே இருந்தாய்? இந்தா, இதை வாங்கிக்கொள்,” என்று பணத்தை அவளிடம் கொடுத்தான். “என்னுடைய கோவேறு கழுதை எங்கே?” திருமதி ஹய்ட் கொஞ்சம்கூட அசையவில்லை.  

“என்னிடம் திருப்பிக்கொடுக்கப் போகிறாயா?” என்று கேட்டாள்.

“ஆமாம். இது நாள்வரை நாம் நண்பர்களாகத்தானே இருந்தோம்? இனி விட்ட இடத்தில் இருந்தே மறுபடியும் தொடங்குவோம். உன்னிடத்தில் எனக்கு எந்தவிதமான கோபமோ கடுமையான உணர்வோ இல்லை. நீயும் அதேபோல இருந்துவிடு. அந்தக் கோவேறு கழுதையை எங்கே ஒளித்துவைத்திருக்கிறாய்?” 

“ஸ்பில்மெருக்குப் பின்னாடி இருக்கும் குறுகலான மலையிடுக்கில் இருக்கிறது,” என்றாள்.

“ஓ, எனக்கு அந்த இடம் தெரியுமே! மறைவான பாதுகாப்பான இடம். உனக்குக் கொட்டகை வேறு இல்லையே? என்ன ஒன்று, மேய்ச்சல் நிலத்திலேயே விட்டுவைத்திருந்தால் அவ்வளவு தூரம் போகும் சிரமம் நம் இருவருக்குமே இருந்திருக்காது. அதுபற்றி நான் ஒன்றும் தவறாக நினைக்கவில்லை. சரி, நான் கிளம்புகிறேன். நீயும் ஒரு வழியாகத் தங்குமிடத்தை தயார்செய்து கொண்டுவிட்டாய். எப்படியோ, வீடு கட்டாவிட்டால் இன்னும் கொஞ்சம் பணத்தை மிச்சப்படுத்தலாம்.”

“நானும் அப்படித்தான் நினைக்கிறேன்,” என்றாள் திருமதி ஹய்ட். ஆனால் அதற்குள்ளாகப் போய்விட்டிருந்தான்.

“எதற்காகக் கோவேறு கழுதையை அத்தனை தூரத்தில் கொண்டுபோய்க் காட்டினாய்?” ஹெட் கிழவி கேட்டாள்.

 “அதிக தூரத்தில் இருக்கவேண்டும் என்றுதான்,” என்றாள் திருமதி ஹய்ட்.

“அதிக தூரமா?” திருமதி ஹய்ட் எழுந்துவந்து இரும்பு வாணலிக்குள் எட்டிப் பார்த்தாள். 

“இன்னொரு சின்னத் துண்டு பன்றி இறைச்சியைத் தின்னலாம் என்று சொன்னது நீயா, இல்லை நானா?” என்றாள் முதியவள் ஹெட். இரண்டு பேரும் சாப்பிட ஆரம்பித்தார்கள். இருட்டு இன்னும் முழுதாக விழவில்லை. 

ஸ்நோப்ஸ் திரும்பிவந்தான். வீட்டுக்குள் வந்து அமைதியாக நின்று குளிர் காய்பவனைப் போல நெருப்பில் கையைக் காட்டினான்.

யாரையும் பார்க்காமல் பேசினான். “நீ கொடுத்த பத்து டாலரை வாங்கிக்கொள்கிறேன்,” என்றான்.

“எந்தப் பத்து டாலர்?” என்று கேட்டாள் திருமதி ஹய்ட். நெருப்பைப் பார்த்தபடியே யோசித்தான். திருமதி ஹய்ட்டும் முதியவள் ஹெட்டும் சத்தமில்லாமல் மென்றுகொண்டிருந்தார்கள். கிழவி மட்டும் அவனையே பார்த்தாள்.

“நீ அதைத் திருப்பிக்கொடுக்க போவதில்லையா?” என்றான்.

“நீதானே முன்னர் தொடங்கிய இடத்தில் இருந்தே ஆரம்பிக்கலாம் என்றாய்?” என்றாள் திருமதி ஹய்ட்.

“கடவுள் சாட்சியாக நீதானே அதைச் சொன்னாய்?” என்றாள் முதியவள் ஹெட். 

ஸ்நோப்ஸ் நெருப்பைப் பார்த்துக்கொண்டே யோசித்தான். விரக்தியும் யோசனையும் தொனிக்கும் குரலில் பேசினான். “பல வருடங்களாகச் சிரமப்பட்டு இடர்ப்பாடுகளைத் துணிச்சலாக எதிர்கொண்டு எல்லாவற்றையும் செய்தாலும் எனக்குக் கிடைப்பது வெறும் அறுபது டாலர்தான். ஆனால் எந்தச் சிரமமும் இல்லாமல் எந்த இடர்ப்பாட்டையும் எதிர்கொள்ளாமல் உனக்குக் கிடைக்கப்போகிறது என்பதுகூடத் தெரியாமல் எட்டாயிரத்து ஐநூறு டாலர்களை அடித்துக்கொண்டு போய்விட்டாய். உனக்குக் கிடைத்தது பற்றி எனக்குப் பொறாமையில்லை. அப்படி நினைத்தேன் என்று யாரும் சொல்லவே முடியாது. அவன் உன்னிடம் வேலை செய்யவில்லை என்றாலும் அத்தனை பணமும் உனக்குக் கிடைத்தது கொஞ்சம் வினோதமானதுதான். சொல்லப்போனால் அவன் எங்கே போகிறான் என்ன செய்கிறான் என்பதுகூட உனக்குத் தெரியாது. அவனைத் திருமணம் செய்திருந்த ஒரே காரணத்தால்தான் உனக்கு அது கிடைத்தது. இந்தப் பத்து வருடமும் உனக்கு அது கிடைத்தது பற்றி நான் பொறாமையே பட்டதில்லை. இப்போது என்னுடைய கோவேறு கழுதைகளில் சிறந்ததை எடுத்துக்கொண்டு விட்டாய். அதற்கான பத்து டாலரைக்கூட கொடுக்க மாட்டேன் என்கிறாய். இது நியாயமில்லை. இது நீதியில்லை.”

“கோவேறு கழுதையைத்தான் திருப்பிக் கொடுத்தாயிற்றே? இன்னும் திருப்தி இல்லையா?” என்றாள் முதியவள் ஹெட். “உனக்கு என்னதான் வேண்டும்?” ஸ்நோப்ஸ் திருமதி ஹய்ட்டைப் பார்த்தான். 

“கடைசியாகக் கேட்கிறேன். அதைத் திருப்பித் தரமுடியுமா முடியாதா?”

“எதைத் திருப்பித் தரவேண்டும்?” என்றாள் திருமதி ஹய்ட். ஸ்நோப்ஸ் திரும்பினான். எதன்மீதோ தடுக்கினான். முதியவள் ஹெட்டின் பை. சுதாரித்துக்கொண்டு போனான். அவனுடைய உருவத்தின் நிழலைப் பார்த்தார்கள். மங்கிக்கொண்டிருந்த மேல் திசையில் இருந்த இரண்டு கருப்புநிறப் புகைப்போக்கிகளும் அவனுக்கு இரண்டு புறமும் கரைபோல இருந்தன. இரண்டு முஷ்டிகளையும் மேல் நோக்கி வீசுவதைப் பார்த்தார்கள். எல்லாவற்றையும் பொறுத்துக்கொள்ள வேண்டிய கையாலாகாத்தனத்தையும் விரக்தியையும் சுட்டும் சைகையாக இருந்தது அது. அவன் போய்விட்டிருந்தான். முதியவள் ஹெட் திருமதி ஹய்ட்டைப் பார்த்துக்கொண்டு இருந்தாள்.

“கண்ணே, அந்தக் கோவேறு கழுதையை என்ன செய்தாய்?” திருமதி ஹய்ட் முன்னே சாய்ந்தாள். அவளுடைய தட்டில் மட்கிப்போன பிஸ்கெட் ஒன்று இருந்தது. வாணலியைக் கையில் எடுத்து அதில் இருந்த இறைச்சி சமைத்த கொழுப்பை பிஸ்கெட்டின் மீது ஊற்றினாள். 

“அதைச் சுட்டுவிட்டேன்,” என்றாள்.

“என்ன செய்தாய்?” ஹெட் கிழவி கேட்டாள். 

திருமதி ஹய்ட் பிஸ்கெட்டைத் தின்னத் துவங்கினாள். 

“சரி, கோவேறு கழுதை வீட்டை எரித்தது, நீ அதைச் சுட்டுவிட்டாய். அதைத்தான் நீதி என்பார்கள்,” கிழவியின் குரலில் மகிழ்ச்சி தொனித்தது. 

இருட்டு சீக்கிரமாகக் கவியத் துவங்கியது. இன்னும் மூன்று மைல் தூரம் நடந்தால்தான் அவள் தங்கியிருந்த ஏழைகளுக்கான அரசாங்க விடுதிக்குப் போய்ச் சேரமுடியும். ஆனால் ஜனவரி மாதத்தில் நீண்ட நேரம் இருட்டாக இருக்கும். விடுதியும் அதே இடத்தில்தான் இருக்கும். அசதியாக இருந்தாலும் மகிழ்ச்சி ஒருவிதமான இளைப்பாறுதலைத் தந்தது. “மக்களே, அப்பாடா! என்னவொரு நாள் இது!”

*

ஆங்கில மூலம்: Mule in the Yard by William Faulkner, Selected Short Stories, Modern Library, 1993 Edition.