மனவிழிப்புநிலை தியான ஆசிரியருக்கான இரண்டரை ஆண்டுப் பயிற்சியில் சமூகத்தின் பன்முகத்தன்மை, சமத்துவம், யாவரையும் உள்ளடக்கல், யாவருக்குமான வளப் பயன்பாடு எனச் சில கூடுதல் பயிற்சிகள் வகுப்புகளில் கற்றுக் கொடுக்கப்பட்டன. அமெரிக்காவில் இனப்பாகுபாட்டின் உச்ச இழிவுகளைப் பற்றியும் அதே போன்று இந்தியாவில் சாதி சார்ந்த கீழ்மைகளையும் அணுகுவது பற்றிய வகுப்புகள்.
தியானப் பயிற்சிக்காக வரும் மாணவர்கள் பல திறத்தவராய் இருப்பார்கள். முற்றான மெய்யறிவுத் தேடல் தாண்டி அவர்களது அன்றாட உடல், மனம் சார்ந்த அகப் புறப் பிரச்சினைகள் பெரும் தடைகளாக இருக்கக்கூடும். அவற்றுடன் சமூகம் சார்ந்த பிரிவினைகள், பேதங்கள், அல்லல்கள் என அங்கலாய்ப்பும் துயரமும் மண்டியிருக்கும். பிணி, மூப்பு, சாக்காடு, பிழைப்பு போன்ற இருத்தலியல் சவால்களைக் கடந்து வாழ்ந்துகொண்டிருக்கும் இச்சமூகத்தில் அதன் கட்டுமானம் தொடுக்கும் நிர்பந்தங்களும் தொல்லைகளும் மனிதர்களை அலைக்கழித்த வண்ணமுள்ளன.
உயிருடலை மூடியிருக்கும் மிகப்பெரிய உறுப்பான மனிதத்தோலில் காணப்படும் ‘மெலனின்’ நிறமிகளின் அடர்த்திப் பண்புகளைக் கொண்டு இனப் பிரிவினையையும் வெறுப்பையும் அவர்கள் மேல் பூசும் மனித மனங்களின் கீழ்மைகள் இன்னும் உலகத் தேசங்களின் மாந்தர்களை விரட்டிக்கொண்டே உள்ளன. என்னதான் அறிவியல், சமூக மேம்பாடு என்று பீற்றிக்கொண்டாலும் இவ்வேற்றுமை காட்டும் மனிதப்பண்பு கொடிதாய் உலகமுழுதும் கிளைத்துப் படர்ந்துள்ளது. அது போன்றே இன்னும் பற்பல காரணிகள், வேற்றுமைக்கும் பிரிவினைக்கும் அழித்தொழிப்புக்குமென காழ்ப்புடன் கையெடுக்கப்படுகின்றன. உடலமைப்பு, அங்கப்பிசகு, பிறப்பு, வாழிடம், கல்விநிலை, பொருள்நிலை, மொழி என ஏராளமான வேற்றுமைகளை மனிதமனம் பிரித்தறிந்து எக்காலமும் பிரிவினை செய்தபடியே உள்ளது.
இவற்றால் அல்லலுறும் மாணவர்களுக்கு அதுபோன்ற சந்தர்ப்பச் சூழ்நிலைகளைக் கையாள மட்டுமல்லாது முதலில் அவற்றை அடையாளம் காணும் அறிவுத் திறனையும் வளர்த்துக்கொள்ள வேண்டியதாகிறது. மனித மனங்களின் மறதிக்குள் அவ்வேற்றுமைகள் ஆழ வேரூன்றி உள்ளன. உடலமைப்பு, உடை, பிறப்பு, பாலினம் சார்ந்த நுட்பமான பிரிவினைகளைப் பாதிக்கப்படுபவரே சமூக ரீதியாக மௌனத்துடன் ஏற்றுக்கொண்டு கடந்துசெல்லும் நிலை உள்ளது. எனினும் அவற்றைத் தன்னிலும் பிறரிலும் சமூகத்திலும் அடையாளங்கண்டு அறிவதும் கையாள்வதும் தேவைப்படின் குரலெடுப்பதும் மாற்றியமைக்க முனைவதும் மெய்யறிவுத் தேடலினூடான துணைக் கலன்களாகும் என்றும் கற்றுத் தரப்படுகிறது.
அவற்றைப் பற்றிய விழிப்புணர்வும் புரிந்துணர்வும் தாண்டி இன்னொன்றும் தோன்றுகிறது. பிரிவினை என்பது மனித இயல்பு மட்டுமல்ல, உயிர்களின் இயல்புமென்றும் தோன்றுகிறது. சமூக உயிரினமென கருதப்படும் சிற்றெறும்புக் கூட்டம் ஒன்று தன்னையொத்த இன்னொரு செவ்வெறும்புக் கூட்டத்தை எதிர்த்துப் படையெடுத்துப் போரிட்டு ஒரு புற்றையே நாசம் செய்கிறது. ஒரேயொரு எறும்பைக்கூட விடாமல் கொன்று போடுகிறது. புற்றுக்குள் இருக்கும் எறும்புக் குஞ்சுகளையும் முட்டைகளையும் தின்று அழிக்கிறது. அக்கூட்டத்தின் வம்ச விருத்திக்கான ராணி எறும்பைப் பிடித்துக் கடித்து அதன் கால்களைப் பிய்த்துப்போட்டு பின் கொன்றழிக்கிறது. அத்தனை வன்மத்தை அச்சிறு பூச்சியினம் உணர்ந்தது எப்படி? அதுவும் தன் இனத்தின் இன்னொரு கூட்டத்தின் மீதே அவ்வெறுப்பைக் காண்பிக்கச் செய்தது எது? அது எப்படிச் சாத்தியப்படுகிறது?
அச்சிற்றுயிருக்கு உள்ளேயே இத்தனை அதிதீவிர பேதமும் ஆத்திரமும் மூள்கிறதென்றால் பெரிய விலங்குகளின், குறிப்பாக மனித இனத்தின், மூர்க்கமும் ஆதிக்க உணர்வும் அதிகார வெறியும் எப்பேற்பட்டதாய் இருக்கக்கூடும்? வியப்புறுத்தும் இந்நிகழ்ச்சி உயிரினங்களுக்குள்ளான பகை வேட்கையை, பிரிவினையைத் தொட்டுக் காட்டுகிறது. ஒருவேளை இவ்வெல்லாப் பிரிவினையையும் மனித மனதிலிருந்து அழித்துவிட்டாலும் வேறு மாதிரியான பிரிவினைகள் அம்மனங்களுக்குள் வந்தேறிக் கொள்ளுமோ என்று அச்சம் மூள்கிறது. அறிஞர், அறிவியலாளர், இலக்கியவாதி என்று புதிய வேற்றுமைகள் புகுந்து பிரிக்குமோ என்று. அது சாத்தியம்தானே? இப்போதே அவை முளைத்துத்தான் கிடக்கின்றன.
மெய்மையை மறைக்கும் அனைத்துத் திரைகளையும் களைந்தபடியே பயணிப்பதுதான் மெய்யறிவு போலும். ‘உள்ளபடி யாதுமென உற்றுணர்ந்தேன், அக்கணமே கள்ளமானம் போனவழி காணேன் பராபரமே’ என்பதும் உள்ளதை முழுதாய் அறிவதும் மெய்யறிவுதானே? தவமும் தியானமும் மனங்களின் சமூகத்தின் மானுடத்தின் மாயாபேதத் தொன்மங்களைத் தாண்டி அபேதமுறுதலும்தானே!
தொடர்ந்த வகுப்புகளில் இன, சாதிப் பாகுபாடு சார்ந்த சில சமூகங்களுக்கென உள்ள சிறப்புச் சலுகைகள் பற்றியும் பேசப்பட்டது. பாலினம், வயது, கல்வி, செல்வம் என அவரவருக்கெனச் சமூக நிலைத்தானம் உள்ளது, வறியவரிலிருந்து செல்வந்தர் வரையில். என்றாலும் அவ்வத் தகுதிகளை வளர்த்துக்கொள்வதன் மூலம் அந்த நிலைத்தானம் மாறக்கூடும். நாளைய உணவு குளிரூட்டும் பெட்டியில் தயாராக உள்ளது. நல்குடிநீரும்கூட மேசையில் இருக்கிறது. அலமாரியில் நாளைக்கான தூய ஆடைகள் உள்ளன. படுத்து உறங்கினால் கதகதப்புக்குப் போர்த்திக்கொள்வதற்குப் போர்வையும் சொகுசுக்குத் தலையணையும் பாதுகாப்புக்கு வீட்டின் மேல் கூரையும் உள்ளன. அச்சலுகைகள் உலகில் இருபது சதவீதத்தினருக்கு மட்டுமே கிடைக்கின்றன. மிச்சமுள்ளவர்கள் அவையின்றி, இயலாமலும் குறைபாடுமாகவே வாழ்கின்றனர். என்றாலும் பாலினம், வர்க்கம், இனம் எனும் மாறாக் காரணிகள் இருக்கத்தான் செய்கின்றன என்று பேசப்பட்டது.
சுற்றுச்சூழல் கோட்பாடுகளில் ஒன்றென ‘இகலாஜிகல் நிச்’ எனும் சூழியல் நிலைத்தானம் குறிப்பிடப்படும். இப்பூவுலகில் நுண்ணுயிரியான காளான், பாக்டீரியாவிலிருந்து யானை, திமிங்கலம் போன்ற பேருயிர்கள் வரை ஒரு குறிப்பிட்ட கணத்தில் அவ்வொவ்வொரு உயிருக்கும் ஓரிடம், நிலைத்தானம் இயற்கையிலேயே படைப்பின் உற்ற பண்பாக உள்ளது. உயிர் தரித்து இருக்கும் வரை அவ்வுயிருக்கான பிரத்யேகத் தளத்தை வேறு எவ்வொன்றாலும் ஆக்கிரமித்துக்கொள்ள முடியாது. அக்குறிப்பிட்ட தளம் குறிப்பிட்ட உயிரின் அமைவிடம். ஒரு வண்டு பூவில் அமரும் அந்நொடி போலவே, வானில் நிலைத்து வட்டமிடும் பருந்தொன்றுக்கு வளி வெளியில் குறிப்பிட்ட கணத்தின் அந்தர நிலை. அதுபோன்றதே மனிதத்தின் சமூக நிலைத்தானம் அவரவருக்கே உரித்தானது. அது இயற்கையாக மட்டுமன்றி சமூகக் கட்டுமானங்களால் நிர்பந்திக்கப்பட்டதுமாக இருக்கிறது.
கலிபோர்னியாவில் வாழ்ந்த ஒரு கறுப்பினப் பெண்மணி கல்வி கற்று லண்டனில் சில வருடங்கள் பணி நிமித்தம் தங்கியிருந்தார். அமெரிக்காவில் இனப்பாகுபாட்டால் அவதிக்கும் அவமதிப்புக்கும் உள்ளானவர் அப்பெண்மணி. ஆனால் லண்டனில் வாழ்ந்த மூன்று வருட காலத்தில் ஆப்பிரிக்காவிலிருந்து புலம்பெயர்ந்து லண்டனில் பிழைப்பு நடத்தும் பல கறுப்பினப் பெண்களிடம் நட்பு கொண்டார். அப்பெண்கள் அந்த அமெரிக்கப் பெண்மணியிடம் ‘நீ கொடுத்து வைத்தவள். நாங்கள்தான் சபிக்கப்பட்டவர்கள். கறுப்பினத்தவள் என்றாலும் அமெரிக்கப் பெண்ணான நீ சுதந்திரமாய்ப் பயணிக்கிறாய், சுயமாய்ச் சம்பாதிக்கிறாய். எங்களுக்கு அவை மறுக்கப்பட்டிருக்கின்றன’ என்று அங்கலாய்த்தனர். அந்த அமெரிக்கக் கறுப்பினப் பெண்மணி தன் நாட்டில் தான் அனுபவிக்கும் விகற்பங்களையும் இழிவுகளையும் எண்ணி, அதே சமயம் அப்பெண்களின் பாராட்டையும் கண்டு வியப்படைந்தாள். ஒரே காரணி வேறொரு நாட்டில் எங்ஙனம் வேறாய்ப் பார்க்கப்படுகிறது என்று சுட்டிக்காட்டினார். எனவே ஒருவரின் சமூக நிலைத்தானம் என்பது ‘ஃப்ளூயிடிடி’ எனும் நீர்மைத்தன்மை கொண்டது என்றார்.
பெளத்த தியானத்திலும் போதனையிலும் வருடகாலப் பயிற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு அதையே வாழ்வியலாக அமைக்கப் பார்க்கும் அதே வேளையில் பிற தியான மரபுகளில் குறிப்பிடப்படும் தவப்பெரு நிலைகள் பற்றியும் அவற்றுக்கிடையிலான ஒப்புமைகளையும் உய்த்துணர்ந்தும், நாடித்திரிந்து கற்றுத் தெளிந்தும் வரும் எனக்கு அது மட்டுமா நீர்மை என்று தோன்றியது. உடல் நீர்மை. உள்ளமும் உலகும் நீர்மை. ‘உருவம் அலால் உடல் ஒன்றெனலாமோ’ என்று திருமந்திரப் பாடலொன்று கேள்வியாக்குவதும் இந்த நீரோட்டமான உடற்தொகுப்பைத்தான். இரத்தம், சதை, எலும்பு, சருமம், அழகு, அறிவு, விருத்தி என ஓர் உருவாய், தொகுப்பாய் நிற்பதை ஒன்றென்பது எப்படி என்பதாகக் கேள்வியைத் தொடுக்கிறது மந்திரப்பாட்டு.
நீர்மை பற்றி திருக்குறள் ‘நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி தான் நல்காதாகி விடின்’ என்கிறது. கனத்திரள் மேகம் பொழியாவிடின் விரிகடலும்கூட தன் நீர்மைப் பண்பை இழக்கக்கூடுமாம். நீர்மைதான் உலக உயிர்ப்பின் ஆதாரம். சொல்லப்போனால் இவ்வுலக உயிர்வாழ்வே நீர்மை கொண்டதுதான். நீரின்றி அமையாது இவ்வுலகு என்ற அர்த்தத்தில் மட்டுமல்ல. திரிநிலை வழி தண்ணீர் பண்பு. நீரின் நான்கியல் எனத் திட, திரவ, வாயுவுக்கு அடுத்ததாய் நீர்மைப் பண்பைக் குறிக்கிறார் வள்ளல் பெருமான். தன் நீர்மை என்பது தண்ணீருக்கு மட்டுமே உரித்தானதன்று. இந்த உயிர்ப்பே, வாழ்தலே நீர்மைப் பண்புடையதுதான் என்று தோன்றுகிறது.
நீர்மை என்பது நீரன்று. நீர் ஓர் உவமேயம். நீர்மை எனப்படுவது பாய்தல். ஊடேறக் கூடியது. சாத்தியங்களைக் கொணர்வது. பாய்ச்சல் போன்றது. ஓட்டமும்கூட. நீரோட்டம் கட்டற்றது. வடிவற்றது. அணுத்துகள்களின் இடையேயான வெளி அதிகம் இருப்பதாலேயே அப்பாய்ச்சலும் ஓட்டமும் சாத்தியப்படுகிறது. இங்கே குறிப்பிடப்படுவது நீர்மை எனும் பண்பு மாத்திரமே. உயிருடல்களின் செல் சுவர்கள் நீர்மை கொண்டவை என்பது அறுபதுகளிலேயே கண்டறியப்பட்டது. அது போன்றதே உளவியலில் ‘நியூரோ பிளாஸ்டிசிடி’ எனும் நரம்புக்கூறு நெகிழ்நிலை. நரம்பணுக்களைப் புதிப்பிக்கப் பண்ணுவது. அதுவே செல் வளர்ச்சிக்கு உகந்ததும்கூட. உயிர்கள் பல்கிப் பெருகுவதும் மரபணுப் பண்புகள் சந்ததிகளுக்குக் கடத்தப்படுவதும் புதிய குணாம்சங்கள் தோன்றியமைவதும், உயிரினங்கள் பரிணமிப்பதும் பரிணாமப்படுவதும் அந்நீர்மைப் பண்பைக் கொண்டே.
இதுதான் என முதலும் முடிவுமாய் இவ்வாழ்விதத்தில் எதையும் அறுதியிட்டுக் கூறிவிட முடியாது. ஏனெனில் இப்பிரபஞ்சத்தில் எவ்வொன்றும் நீர்மை கொண்டது. தற்கணத்தில் நாம் சுட்டும் ஏதொன்றின் பண்புகளும் மாற்றம் பெற்றபடியே உள்ளன. அவ்வக்கணத்தின் ஊக்கமிகு செயற்காரணிகளுக்கு இடையிலான பரிவர்த்தனைகளுக்கு ஏற்ப அடுத்த கணம் தன்மாற்றம் காண்கிறது. இப்படியே முடிவற்று எல்லை அமைத்தும் அதைத் தாண்டியும் நீள்கிறது இவ்விருப்பு. ஒன்றென இரண்டென ஒன்றிரண்டென இவை அன்றென விளங்கும் இவ்விருப்பு. இங்கே ஒன்றுமில்லை என்றோ சாரமற்றதென்றோகூட கூறிவிட இயலாது. ஒன்றுமில்லை என்று முடிப்பதற்குள் அது எல்லாமுமாகி விடுகிறது. சாரமற்றது என்பதற்குள் அனைத்தின் சாராம்சமுமாய் அது சும்மா கிடக்கும். இருப்பு என்ற ஒரேயொரு சொல்லே அனைத்து அர்த்தங்களையும் உள்ளடக்கிய பெரும்பொருளாய்த் தொக்கித் திகழ்கிறது.
முழு விழிப்பில் இயக்கம்கொண்டிருக்கிறது பிரபஞ்சம். பூரண நிர்வாணத்தில் செயலூக்கப்பட்டிருக்கிறது. தன்னுணர்வில் தழைத்து இப்பிரபஞ்சத் தொடர்பும் உய்த்துணர்ந்து நம்மிருப்பை நடத்திப்போவதுதான் தவப்பேறு. தவப்பெருநிலை. அதில் பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையிலான தற்காலிக விளையாட்டுத் திட்டத்தின் சூட்சுமச் சங்கதி புரிந்து போகும். அதுவொரு முக்குளிப்பு. பிறப்பில் முதல் குளிப்பு, இறப்பில் இறுதிக் குளிப்பு. இடையில் தியானப் பெருவெளியில் அமுதக் குளிப்பு. இங்கே தனியொருவருக்கான தன்னுணர்வு, தன்விழிப்பு, தன்நிர்வாணம் என்று பிறிதொன்றில்லை. உயிர்களின் அனுபவத் துடிப்பும் சுவைப்பும் பிரபஞ்சத்தின் அனுபவமும், சுவைப்புமாம். உயிரினங்களின் தவிப்பும் துயரமும்கூட. இவ்வாழ்விதத்தில் பேதம் மறந்து உய்யப் பண்ணும் அவ்வொரு சூழல் சொல் எது? அது எத்தனை பொருள் கொண்டது? அதை அடைதல் எங்ஙனம்? அந்நீர்மைத் தன்மையை அறிவியல் வழியாகவும் தியான மெய்யறிதல் மூலமும் அனுபவப்பட இயலும். பிரபஞ்ச உயிர்ப்பண்புகளும் நீர்மை கொண்டவையே.
சூழியல் கோட்பாட்டில் ஓருயிரின் வாழ்வு எனும் ஒரு சொல் தன்னுள் அடக்கியுள்ளது எல்லா உயிர்களின் தனிப்பட்ட, சார்புற்ற இருப்பை. சார்பு என்பது உயிர், சூழல், அண்டம் என அனைத்து ஊடேற்றங்களின் சிம்பனி. முழு பிரபஞ்சமே ‘ஆர்கெஸ்டரா’ எனும் ஒரு சேர்ந்திசை. தனித்தொரு சொல்லாய், ஓரிசைக் கருவியாய், அதன் நாதமாய், ஒலியாய் பார்க்கையில் ‘நானிலத்தில் சொல்லாய்க் கழிகின்றது’ என்றேயாகும். அப்பிரபஞ்ச ஆற்றல் அண்டசராசரங்களின் ஒருங்கமைவில் செயலூக்கமாய் இயங்கி வருகிறது. அண்டவெளியின் வானியல் ஒழுங்கமைவு காலமாய்த் திகழ்கிறது. பகலென்றும் இரவென்றும் ஆண்டென்றும் பவுர்ணமி, அமாவாசை, சந்திர சூரிய கிரகணம், கோள்களென்றும் கணக்காய் வகுக்க முடிகிறது. அதிநுட்பத் துல்லியம் கொண்டவை அக்கணக்கீடுகள். அவை புவிக்கோளத்தில் ‘இகலாஜிகல் ஹார்மனி’ எனும் சூழியல் ஒத்திசைவாக மிளிர்கின்றன. ‘சர்கார்டியன் ரிதம்’ எனும் காலக்கடிகாரம் அப்பிரபஞ்ச ஒழுக்கு சார்ந்தே உயிர்களுக்குள் அமையப் பெறுகிறது. அதிகாலை காகம் கரைவதும் பட்சிகள் தேசம்விட்டு தேசத்திற்கு வலசை புரிவதும் மலர்கள் மலர்வதும் இப்பிரபஞ்ச ஒழுக்கால்தான் நிகழ்கிறது. ‘செலஸ்டியல் ஆர்டர்’. அதுவே ‘யார் யார்க்கும் வான் இன்றி அமையாது ஒழுக்கு’. அது ‘வான் முகிற் சக்தியான மழைபொழி வித்துயிர் ஆனறக் காத்தருள் அருட்பெருஞ்சோதி’ என உயிருள் நிறைவைத் தருவது. நீர் இன்றி உலகு அமையாது என்பது போலவே பிரபஞ்ச வானியல் ஆற்றலின் ஒருங்கமைவின்றி எதுவும் விளங்காது.
தியானத்தினூடான தவநிலையில் சுழுமுனைத் திருப்பம் நிகழ்கிறது. அது தனிப்பட்ட ஓருயிரின்றி அனைத்து உயிரின், உயிரற்றத்தின் பேரியக்கப் பெருவிளைவு. அனைத்தையும் தன்னுள் பொதிந்து வைத்துள்ள, தனித்தனியான ஆனால் ஒருங்கிணைந்த பேராற்றல். செயலாக்க உந்து விசை. அதில் பேதங்கள் ஏதுமில்லை. அதுவே நிர்குணம் என்றும் நிர்விகற்பம் என்றும் கூறப்படுகிறது. அண்டவெளி, ஆகாசத்திரள். அதில் மூளும் செயலூக்கம். அதன் முடிவற்ற சுழற்சி தவத்தில் புரிந்து போகிறது. பிறகு அது சகஜத்தில் திளைக்கிறது.
தியானத்தைப் பொறுத்தவரையில் அப்பிரபஞ்ச ஆற்றல் ஊனுடலில் ஆறு ஆதாரங்களை விசைகொள்ளச் செய்து உச்ச சிரசில் அமுதப் பேரூற்றாய்ச் சுரந்து அண்டச்சுவையை ஆன்ம நிறைவை உணவாக்கிப் போகிறது. அதைத் தருமாறு வள்ளல் பெருமான் ‘மற்றுள வமுத வகையெலா மெனக்கே உற்றுண வளித்தரு ளோங்குறத்தாயே’ என்று வேண்டுகிறார். அதுவே ‘ஆன கலசத்து அமிர்தை அறிந்துண்ணில் போனகம் வேண்டாமல் போம்’ என்கிறது ஒளவைக்குறள். எல்லையில்லா இன்னமிர்தமாம் அது. பெளத்த ஆழ்நிலை ரூப அரூப ஜான தியானத்தில் அச்சுரப்பு உணர்ந்தவர் ஓடையை அடைந்தவர் எனப்படுகிறார். அது தவப்பெரு நிலையில் நிர்வாணத்தின் முதற்படி.
ஊனுடலில் செழித்தூறும் அச்சுரப்பைக் குளமென்று குறிப்புணர்த்தி அது உச்சந்தலையின் அடியில் புருவ மத்தியின் உள்ளுக்குள் இருப்பதாய் திருமந்திரம் சொல்கிறது. ‘ஊறும் அருவி உயிர்வரை உச்சிமேல் ஆறின்றிப் பாயும் அருங்குளம் ஒன்றுண்டு. சேரின்றிப் பூத்த செழுங்கொடித் தாமரை பூவின்றிச் சூடான் புரிசடையோனே’ எனப் பாடுகிறது. திருவள்ளுவர் பகன்ற வான் சிறப்பின் செவ்விய அர்த்தத்தை ‘ஊனூறல் பாயும் உயிர்வரை உச்சிமேல் வானூறல் பாயும் வகையறி வாளர்க்குத் தேனூறல் உண்டு தெளியளுமாமே’ என்று விளக்கிப் பாடுகிறது திருமந்திரம். அச்சுவையில் திளைத்துப் பின் பிறருக்கும் பகிர்வதின் பொருட்டே இப்பிறப்பு என்பதனாலேயே திடம்பட மெய்ஞானம் சேரும்வண்ணம் ‘உடம்பினை யானிருந்து ஓம்புகின்றேனே’ என்று பாட முடிகிறது.
இன்று காலை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் திறனை வளர்க்கும் பொருட்டு ‘ஒவ்வொரு குழந்தையும் அறிவியலாளர்’ எனும் திட்டமொன்று ம.சா. சுவாமிநாதன் மையத்தில் தொடங்கப்பட்டது. அதன் நிறுவனர் தொண்ணுற்றாறு வயதான பேராசிரியர் சுவாமிநாதன் தன் மூப்பின் இயலாமையிலும் சிறிதுநேரம் கலந்துகொண்டார். மூப்பு சார்ந்த மறதியும் குழறலும் மனதை நெருடியது. எத்தனை சர்வதேச அரங்குகளில் ஆர்ப்பாட்டமின்றி, ஆனால் தெளிவாகத் தன் கருத்துக்களை முன்வைத்துப் பேசியிருக்கிறார்! ‘அறிவியல் திறன் என்பது கேள்விகளின் மூலம் விடைகளை, அறிவியல் கூற்றுகளைச் சென்றடைவது. அறிவியல் மனப்பாங்கு குழந்தைப் பருவத்திலிருந்தே பேணப்பட வேண்டும். அது தாண்டி புனைவிலிருந்து கூற்றுகளை பிரித்தறிவதும் அறிவியல் திறன்’ என்று உரை முடித்தார்.
கூட்டம் முடிந்ததும் நெருங்கிப் பேசினோம். நினைவில் இல்லாததுபோல வெறுமையுடன் பார்த்தார். பெயரை உரக்கச் சொல்லிப் புரிய வைக்க தன் ஞாபக வெளியிலிருந்து சில தந்திகளை மீட்டு ஆளை அடையாளம் காண முயன்றார். சில நொடிகளுக்குப் பிறகு முறுவலித்தார். அவரின் ஞாபகங்கள் நீர்மையாய்ச் சுரந்து நினைவுகளை மீட்டெடுத்துத் தந்தன. அவரது குரலும் நீர்மை கொண்டிருந்தது. அதிலிருந்து வார்த்தைகளைப் பார்வையாளர்களின் விழிப்பு மீட்டெடுத்துக்கொண்டது. அவரோடு பணிசெய்து கடந்து வந்தவை யாவும் நினைவில் நீர்மைகொண்டு சுரந்து வந்தன. தூக்கி எடுத்து சக்கர நாற்காலியில் அமர்த்தி அவரைத் தள்ளிப் போயினர். வணங்கிப் பிரிந்தார். கண்ணியமிகு அவர் முகத்தில் எலும்புகள் முட்டித் தென்பட்டன. அவர்பால் அன்பும் மதிப்பும் கனிந்துருகி வழியனுப்பியோர் கண்களில் நீர்மை கட்டியிருந்தது. நீர்மை என்பது உள்ளத்தின் ஈரமும்தான். ஈரம் என்பது இரக்கம், கருணை, அன்பு. உலர்தல் இறப்பு. ஈரம் உயிர்ப்பு என்றும் உணர்த்தியது.
பிரபஞ்சத்து உறவு ஆழ்தியானத்தில் உள்ளூர உணரப்படும். அது இம்மானுடப் பிறவிக்கான கொடை. ‘வான் நின்று உலகம் வழங்கி வருதலால்தான் அமிழ்தம் என்று உணரற்பாற்பட்டு’. உலகில் அமிழ்தென ஒன்றை உணர முடிவது பிரபஞ்சத்தினின்று பெற்று உலகம் நமக்கு வழங்கி வருதலால்தான். அதை மழை என்று எடுத்துக்கொள்ளலாம். மழையன்ன பரவெளி அருட்சுடரென்றும், மெய்யறிவென்றும் எடுத்துக்கொள்ளலாம். இவ்வுலக வாழ்வின் பாற்பட்டு அப்பரவெளியின் பரமசுகம் உய்த்துணரலாம். அதுவே இவ்வுயிர்ப்பின் நீர்மை.
1 comment
Excellent interpretation. One is part of the nature and is not a separate identify. There is no discrimination in nature and all is seen as a part of the whole. The complex thought process of human mind creates disparity, division and deviates from the normal existence. Fluidity has been discussed in depth from different angles. Very well written.
Comments are closed.