பிரான்சிஸ் கிருபாவின் மும்பை நகரத்து வாழ்க்கை

0 comment

எண்பதுகளின் முற்பகுதியில் மும்பையிலிருந்து ‘காரை.பிரான்சிஸ்’ என்ற பெயரில் புதுக்கவிதைகள், கட்டுரைகள் ஆகியவற்றை இங்குள்ள இதழ்களில் எழுதிவந்தார். 1991ம் ஆண்டு கவிஞர் ஆறாவயல் பெரியய்யா அவர்கள் பிரான்சிஸை என் வீட்டுக்கு அழைத்துவந்து அறிமுகப்படுத்தினார்கள். அன்றிலிருந்துதான் பிரான்சிஸுக்கும் எனக்குமான நட்பு ஆரம்பமானது. அவர் பிறந்த ஊர் திருநெல்வேலியில் இருந்து நாகர்கோயில் போகும் தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் மூன்றடைப்பு என்ற ஊருக்குக் கிழக்கே ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பத்தினிபாறை. அவர் அம்மா பிறந்தது எனது ஊர்ப்பக்கம் (இறைப்புவாரி) இருக்கும் காராங்காடு. அவர் காராங்காடு தூய அந்தோணியார் நடுநிலைப் பள்ளியில்தான் எட்டாம் வகுப்புவரை படித்தார். படிப்பு முடிந்ததும் அவரது அக்காவோடு மும்பை வந்தார். அவரது அக்காள் கணவர் ஒரு தனியார் கம்பெனியில் கேண்டீன் நடத்திக்கொண்டிருந்தார். அதன் பக்கத்திலே உள்ள ஒரு லேத் கம்பெனியில் வேலை கற்றுக்கொள்ள கடைநிலை ஊழியராக அவர் அத்தான் கிருபாவைச் சேர்த்துவிட்டார்.

வேலையில் கவனம் செலுத்தி மிகக் குறுகிய காலத்தில் தொழிலைக் கற்றுக்கொண்டார். அக்காவும் அத்தானும் கொடுத்த பொருளாதார உதவியினால் ஒரு லேத் மிசின் போட்டு தொழில் தொடங்கி இருக்கிறார். பொருளாதார உதவியென்றால் சீட்டுப் பணம் நடத்துபவரிடம் முதல் சீட்டுக்கான பொறுப்பைத் தாங்கள் ஏற்றுக்கொண்டு அதைக் கிருபாவுக்கு வாங்கிக்கொடுத்திருக்கிறார்கள். பின்பு மாதா மாதம் அந்தச் சீட்டுப் பணத்தைப் பிரான்சிஸ் தொழில்செய்து கட்ட வேண்டும். முதலில் கொஞ்சநாள் நன்றாகத் தொழில்செய்து கடனை அடைத்திருக்கிறார். அதற்குப்பின் ஒழுங்காக வேலை செய்யாமல் தொழில்கூடத்தை அடைத்துவிட்டு திரைப்படம் பார்க்க அல்லது இலக்கியக் கூட்டங்களில் கலந்துகொள்ள என்று போய்விடுவார். இதனால் சீட்டை ஒழுங்காகக் கட்ட முடியவில்லை. அக்கா கட்டிய சீட்டு என்பதால் அந்தக் கடன் அடைக்கும்வரை மட்டும் தொழிலை நடத்தியிருக்கிறார். சீட்டுப் பணம் கட்டி முடித்ததும், ’நான் சென்னையில் போய் கம்பெனி வைக்கப் போகிறேன்’ என்று அக்காவிடமும் அத்தானிடமும் சொல்லியிருக்கிறார். உண்மையில் திரைக்கனவே அவரைச் சென்னைக்குக் கட்டி இழுத்துச் சென்றது.

இரும்புக் கடைசல் தொழிலிலும் தனித்துவமாக விளங்கி இருக்கிறார். கலாப்பூர்வமான, கடினமான வேலை என்றால் அதைச் சவால் எடுத்து செய்துகொடுப்பாராம். அதற்காகவே கலாப்பூர்வமான வேலையையும் சிக்கலான வேலையையும் லேத் மிசின் வைத்திருக்கும் முதலாளிகள் அவரிடம் கொடுப்பார்களாம். அவரிடம் வேலை கொடுத்து வாங்கிய சில முதலாளிகள் இன்றும் அவரைக் குறித்து புகழும் அளவுக்கு அவரின் தொழில் நேர்த்தி இருந்திருக்கிறது.

தனியாக லேத் மிசின் போட்டதும் பிரான்சிஸ் கிருபா செய்த முதல் வேலை ஒரு மெழுகுவர்த்தியைச் செய்ததுதான். அந்த மெழுகுவர்த்தியை அதி உன்னத கலாப்பூர்வமான நேர்த்தியுடன் கடைந்திருக்கிறார். அதிலும் மெழுகுவர்த்தி கரைந்து வடிவது போலக் கடைந்து தன்னிறைவு அடைந்திருக்கிறார். அதைப் பெருமையாகப் பலமுறை என்னிடமே சொல்லியிருக்கிறார். அந்த அளவுக்கு இரும்புக் கடைசலிலும் அவருள்ளிருந்த கலை வெளிப்பட்டிருந்திருக்கிறது என்று நாம் எடுத்துக்கொள்ளலாம். இரும்பையும் தன் எண்ணங்களால் கரைத்து கண்ணீராய் ஒழுகவிட்டிருக்கிறார். பொருளாதாரத்தில் சாதிக்க வேண்டும் என்பதைவிடவும் கலைத்துறையே அவரை மிகவும் ஈர்த்திருக்கிறது.

பாண்டுப் (Bhandup) பகுதியிலிருந்த ஒரு வாசக சாலையிலேதான் எப்போதும் தன் பொழுதைக் கழித்திருக்கிறார். தொழில்கூடத்தில் வேலையும் வேலை கொடுத்தவரும் காத்திருக்க, இவர் வாசக சாலையே பழியெனக் கிடந்ததால் தொழில் நடத்த முடியாமல் சிறுகச் சிறுகத் தொழில் கையை விட்டுப்போனது. குறித்த நேரத்திற்கு வாடிக்கையாளர்களுக்கு சப்ளை செய்யாமல் போனதே தொழில்கூடத்தை இழுத்து மூடுவதற்குப் பெருங்காரணமாக இருந்திருக்கிறது. பொருளாதாரத்தில் போண்டியாகி இலக்கிய வீதிக்கு வந்தார். பட்டிமன்றத் தொன்மை வடிவத்தோடு கெட்டிப்பட்டு இயங்கிக்கொண்டிருந்தது மும்பை இலக்கிய உலகம். இவரோ அழிஞ்சக்குளத்தில் மீன் பிடிக்கும் மும்பை எழுத்தாளர்களோடு வந்துசேர்ந்தார். 

அவரின் அம்மா பிறந்த ஊர் என்பதாலும் அவர் காராங்காட்டுப் பள்ளியில் படித்ததாலும் முதலில் காரை.பிரான்சிஸ் என்ற பெயரில் கவிதைகள் எழுதினார். நான் தாராவியில் வசித்து வந்தேன். அப்போது அவர் பாண்டுப் பகுதியில் இருந்தார். பாண்டுப்பிற்கும் தாராவிக்கும் இடையே இருபது கிலோ மீட்டர் இருக்கும். ஆனாலும் கவிதை குறித்துப் பேசவும் புத்தகங்கள் வாங்கவும் அடிக்கடி தாராவிக்கு வேலை முடிந்து இரவு வருவார். அவர் என்னைப் பார்க்க வரும்போதும் கம்பெனி நடத்திக்கொண்டுதான் இருந்தார். சனிக்கிழமையானால் நான்கு அல்லது ஐந்து மணிக்கெல்லாம் எனது அச்சகத்துக்கு வந்துவிடுவார். நான் அப்போது ஸ்கிரீன் பிரிண்ட்டிங் அச்சகம் நடத்திக்கொண்டிருந்தேன். வேலையாட்களெல்லாம் சென்ற பின் நானும் அவரும் உட்கார்ந்து நீண்ட நேரம் பேசிக்கொண்டிருப்போம். சில அவசர வேலைகள் இருந்தால் நான் பிரிண்ட் செய்ய அவர் தட்டில் எடுத்து அடுக்குவார். விடியகாலை நான்கு மணி வரை பேசிக்கொண்டும் வேலை செய்துகொண்டும் இருப்போம். சிலநாள் அவருடன் அச்சகத்திலேயே உறங்கிவிட்டு காலையில் எழுந்து இருவரும் தேநீர் அருந்திவிட்டு வீட்டுக்குச் செல்வோம். எல்லா இளைஞர்களையும் போலவே எதாவது துறையில் புகழ்பெற வேண்டும் என்ற கொந்தளிப்பில் இருந்தார். அவரே ஒருமுறை சொல்லியிருக்கிறார். “எனக்குக் கிரிக்கெட் வீரராக வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அது முடியாது என்று தெரிந்த பின்தான் இலக்கியத் துறைக்கு வந்தேன்” என்றார். 

அந்தக் காலகட்டத்திலே மும்பையிலுள்ள சங்கங்கள் நடத்தும் சிறுகதைப் போட்டி, கவிதைப் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகள் வாங்கினார். 1991ம் ஆண்டு தாராவியிலுள்ள காமராஜர் பள்ளியில் அந்தேரி தமிழ்ச் சங்கம் நடத்திய ஆண்டு விழா கவியரங்கப் போட்டியில் முதல் பரிசு பெற்றார். ஜெரிமெரி தமிழ்ச் சங்கம் நடத்திய சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றார். அதற்கடுத்த ஆண்டு ஜெரிமெரி தமிழ்ச் சங்கம் நடத்திய கவிதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றார். மும்பையிலிருந்து வெளிவரும் மராத்திய முரசு, போல்டு இந்தியா, தமிழ் நியூஸ் நாளிதழ்களில் கவிதைகளும் கட்டுரைகளும் எழுதினார். சில பட்டிமன்ற மேடைகளிலும் பங்கேற்றார். இந்த இலக்கியப் போதை அவருள் புது தேடலுக்கான வெளியை ஏற்படுத்திக் கொடுத்தது. 

இதற்கு முன் மும்பையிலிருந்து சினிமா ஆசையில் சென்னை சென்ற செம்பூர் ஜெயராஜ், காமராஜ் திரைப்பட இயக்குநர் அ.பாலகிருஷ்ணன், விஜய் டி.வி. “நீயா? நானா?” நிகழ்ச்சியின் இயக்குநர் அந்தோணி ஆகியோருடன் சேர்ந்து திரையுலகத்தில் சாதித்துப் புகழடையவே கிருபாவும் சென்னை சென்றார். இவர்கள் மூன்று பேரும் திருநெல்வேலிக்காரர்கள். “தமிழ்நாடே அண்ணாந்து பார்க்கும் அளவுக்குப் படம் எடுப்பேன், தினத்தந்தி நாளிதழில் கடைசிப் பக்கம் முழுவதும் எனது சினிமா விளம்பரம் வரும். கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கம் ‘காரை.பிரான்சிஸ்’ என்று வரும் என வழியனுப்பப் போன என்னிடம் சொல்லிச் சென்றவர். திரைப்படத்திற்குப் பாடல்கள் எழுதுகிறார் என்று கேள்விப்பட்டதும் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இனி அவர் காலம் கண்விழித்து விட்டதென்று நினைத்தேன். ஆனால் இன்று அவரின் இறப்புச் செய்திதான் தினத்தந்தியில் சின்னச் செய்தியாகக் கடைசிப் பக்கத்தில் வந்திருக்கிறது. 

மும்பையில் அவருக்குத் தெரிந்தவர்கள் ஆயிரம் பேர் இருந்தாலும் நெருங்கிய நண்பர்கள் என்று பத்து பேர்கூட தேற மாட்டார்கள். இலக்கியவாதிகளுடன் மனம்விட்டுப் பேசவே கூச்சப்படுவார். இலக்கியம் பேசும் போது மட்டுமே அவர் தன் உள்ளத்தைத் திறந்து நம்மோடு ஒன்றாதலை உணர முடியும். மற்ற செய்திகள் பேசினால் கொஞ்சம் விலகியே நிற்பதைப் போலத் தெரியும். இதுதான் அவரைத் தொழில்துறையிலும் குடவண்டி தூக்கிப்போட்டது. தனக்குள்ளே தடம் தேடி, தன் நிழலிலேயே இளைப்பாறி, தன்னைத் தின்றே பசியாறியவன் பிரான்சிஸ் கிருபா.

பாண்டுப்பில் வசிக்கும் போது வீட்டில் யாருடனும் ஒட்டாமலேயே வாழ்ந்தார். ஒரு மூலையில் யாரும் பார்க்காதபடி அசை கட்டி, துணி போட்டு, மறைத்துப் படிப்பதும் எழுதுவதுமாக இருந்தார். ஒருமுறை அவர் வீட்டுக்குப் போன நான், “என்ன பிரான்சிஸ்.. இப்படி அடைச்சிக்கிட்டு இருக்கீங்க? இப்படி இருந்தா பைத்தியம் புடுச்சிடுமே?’ என்றேன். அதற்கு அவர், ‘இல்லை இறை.ச. பொங்கல் வீட்டில் இருக்கிறதால படிக்கவும் எழுதவும் தொந்தரவா இருக்கு. அதுக்குத்தான் இந்த மறைப்பு’ என்றார். சென்னைக்குச் சென்றதும் இந்தத் திரையை மனதிலும் போட்டுக்கொண்டார். உள்ளுக்குள் மனிதம் கசிந்தாலும் அது பாதாளத்தில் பாறைக்குள் ஓடும் நீரூற்றாகவே இருந்தது. நெருங்கி கிணறு வெட்டினால் மட்டுமே அவருடைய மனிதத்தை அறிந்துணர முடியும்.

அடங்க மறுக்கும் மும்பையும் அடங்கிக் கிடக்கும் நள்ளிரவில் இலக்கியம், சினிமா, காமம் குறித்துப் பேசிச் சிரித்த சிரிப்பில் அன்று பெய்த நடுங்கும் பனியும் குளிர்காய்ந்தது. ஏழ்மை குறித்துப் பேசும் போது கலாப்பிரியாவின் கவிதை ஒன்றை எடுத்து அலசிய வார்த்தைகளைக் கேட்ட அதே பனி அழுது தெருவை நனைத்துவிட்டுப் போனது. 

என்னை வீடு தேடிவந்து பழக்கமில்லாத குழந்தையைப் போல் விலகி நின்று, ‘இந்தக் கவிதை தேறுமா இறை.ச?’ எனக் கேட்ட பிரான்சிஸ் கிருபாவை இன்று தமிழ் நவீன இலக்கிய உலகம் உச்சி முகர்ந்து மெய் சிலிர்த்துக் கொண்டாடுவதைப் பார்க்கும் போது உள்ளம் பேருவகை கொள்கிறது.