பெரும்பாலான சமயங்களில், வரலாறு நிகழும்போது, அதைச் சமூகம் உணர்ந்து கொண்டாடுவதில்லை. காலம் கடந்து பின்னோக்கிப் பார்க்கையில்தான், அது புரிபடுகிறது. கடந்த 40 ஆண்டுகளாக நிகழ்ந்த இந்தியப் பொருளாதார வளர்ச்சி அப்படிச் சமகாலத்தில் கொண்டாடப்படாத வரலாறு.
ஆங்கிலேயர் வருவதற்கு முன்னால், இந்தியா உலகின் மிக வலுவான பொருளாதாரங்களுள் ஒன்றாக இருந்தது. வேளாண்மை, கைவினைத் தொழில், ஜவுளி போன்ற துறைகளில் மிக முன்னேறிய நாடாக இருந்தது. உலகப் பொருளாதாரத்தில், இந்தியாவின் பங்கு 24% ஆக இருந்தது. ஆனால், பல நூறு சிற்றரசுகள் இணைந்து, முகலாயப் பேரரசுக்கோ அல்லது மராத்திய அரசுக்கோ கப்பம் கட்டிக்கொண்டிருந்தன. அன்று இந்தியா என ஒன்றிணைந்த நாடாக இருக்கவில்லை.
250 ஆண்டுகள் கழித்து, ஆங்கிலேயர் வெளியேறுகையில், உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கு வெறும் 4% ஆகச் சிறுத்திருந்தது. ஆங்கிலேயேர் அடித்த கொள்ளையைப் பற்றி தாதா பாய் நௌரோஜி துவங்கிப் பல பொருளாதார அறிஞர்கள் எழுதியுள்ளார்கள். வையத்து நாட்டிலெல்லாம் தாழ்வுற்று, வறுமை மிஞ்சி, விடுதலை தவறிக் கெட்டுப் பாழ்பட்ட நாடாகத்தான் பாரதம் விடுதலை பெற்றது.
1900- 1952 வரை, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, 0.5% முதல் 1% ஆக இருந்தது. விடுதலை பெற்ற காலத்தில், இந்தியா 90% ஏழைகளையும், கல்வியறிவில்லாதவர்களையும் கொண்டிருந்தது. பெரும் பஞ்சங்களால், உலகில் உணவுக்காகக் கையேந்தும் பிச்சைக்கார நாடாக மாறியிருந்தது.
முதல் 20 ஆண்டுகள் நமக்கான உணவுத் தன்னிறைவை அடையப் போராடினோம். அதன் பின்னர் 3 போர்களையும், 5-6 வறட்சி ஆண்டுகளையும் சந்தித்தோம்.
அவையனைத்தும், பழங்கனவாய் மாறி, 1980 ஆண்டு துவங்கி, அடுத்த 40 ஆண்டுகள், இந்தியா மிக வேகமாக வளர்ந்தது. இந்தப் பொருளாதார வரலாறைப் பேசும் புத்தகம்தான், மாண்டேக் சிங் அலுவாலியா எழுதிய, ‘Backstage’.
நாம் தமிழ் மொழியில் அரசியல் திரைப்படங்களைப் பார்த்திருக்கிறோம். அதில் வழக்கமான கதாபாத்திரங்கள் யார்? ஊழலில் திளைக்கும் அரசியல்வாதி, அவருக்குத் துணைபோகும் சஃபாரி சூட் போட்ட அரசு ஊழியர், அதற்கடுத்து அரசியல்வாதியின் மகன்கள் செய்யும் அநியாயத்துக்குத் துணையாக இருக்கும் போலீஸ் அதிகாரிகள், போலிச் சாமியார். தெலுகுப் படமாக இருந்தால் மசாலா கொஞ்சம் தூக்கலாக இருக்கும்.
இப்படி மனிதர்கள் இருப்பது இயல்புதானே என்றுதான் நமக்கும் தோன்றும். எத்தனை ஊழல் அரசியல்வாதிகள் மாட்டிக்கொள்வதை நாம் தொலைக்காட்சிகளில் பார்க்கிறோம், பத்திரிகைகளில் படிக்கிறோம். எனவே அரசாங்கம் எனும் இயந்திரம் மீதும், அரசு அதிகாரிகள், நிர்வாகிகள் மீதும் சமூகத்தில் பெரிய மதிப்பு இல்லை. ஆனால், இது முழுமையான சித்திரம் அல்ல.
அரசின் ஒரு பகுதி, கொள்கைகளை வகுப்பதிலும், திட்டங்களை வடிவமைப்பதிலும், அவற்றைச் செயல்படுத்துவதிலும் திறமையாகச் செயலாற்றுகிறது. ஆனால், அவற்றைத் தினமும் ஊடகங்கள் முழுவதுமாக வெளியிட்டால், எவருமே அவற்றைப் பார்க்கவோ படிக்கவோ மட்டார்கள். எனவேதான், ஊடகங்கள் மக்களைக் கவர்வதற்காக, “exceptional” ரிப்போர்டிங் செய்கிறார்கள். நாய் மனிதனைக் கடிப்பது செய்தி அல்ல, மனிதன் நாயைக் கடித்தால்தான் செய்தி. அதிலும் பல ஊடகங்களுக்குச் சாய்வுகள் உண்டு. ஒரு க்ரைம் வார இதழைத் தொடர்ந்து படித்தால், தமிழகத்தில் க்ரைம் மட்டுமேதான் முழு நேரமும் நடக்கிறது எனத் தோன்றும். ஒரு அரசியல் பகடி இதழைப் படித்தால், இந்தியாவில் ஊழல் மட்டுமேதான் நடக்கிறது என்று தோன்றும்.
இந்தியாவில், குறிப்பாகத் தமிழ்ச் சமூகத்தில், பொதுவெளியில் மிக அதிகம் பேசப்படாதவை பொருளாதாரமும் அரசு நிர்வாகமும். சமூகத்தில் பல துறைகளில் நிபுணர்களாக, பிரபலங்களாக இருப்பவர்களுக்கு, இவை பற்றிய அடிப்படை அறிவு இல்லை என்பதுதான் சோகமான உண்மை. அதனால்தான், பெரும் பிரபலங்கள்கூட கவர்ச்சிக்காக, தடாலடியாகச் செய்யப்படும் விஷயங்களை, புரிதல் இல்லாமலேயே வரவேற்றுக் கொண்டாடும் அவலநிலையைக் காண்கிறோம். அதைப் பண மதிப்பிழப்புச் சமயத்தில் பார்த்தோம்.
பொருளாதாரம் என்றாலே அலுப்பூட்டும் ஒரு துறை என்பதாக மற்ற துறைகளில் இருப்பவர்களிடையே ஒரு கருத்து நிலவுவதையும் காணலாம். இந்தப் புத்தகம், அந்தக் குறையை நீக்கும் ஒரு முயற்சி என்று சொல்வேன். எளிமையான, ஆங்கில வார இதழ் நடையில் எழுதியுள்ளார் மாண்டேக் சிங் அலுவாலியா. இது ரூபா (Rupa) என்னும் புகழ்பெற்ற இந்தியப் புத்தக வெளியீட்டு நிறுவனம் வெளியிட்டுள்ள புத்தகம். விலை 350 ரூபாய்.
மாண்டேக் சிங் அலுவாலியா ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் எம்.ஏ, எம்ஃபில் படித்தவர். உலக வங்கியில் சில காலம் பணியாற்றியவர். அவருக்கு இந்திய அரசின் பொருளாதாரத் துறையில பணிபுரிய 1979-ல் அழைப்பு வந்தது. 1979-ல் பணியில் சேர்ந்த அவர், 2014ஆம் ஆண்டு வரை, 35 ஆண்டுகாலம் இந்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளை வடிவமைத்தல், திட்டங்களை வகுத்தல், செயலாக்கம் எனப் பல தளங்களில் பணியாற்றியவர்.
பொருளாதாரத் தளத்தில், இந்தியா எப்போதுமே மிகப்பெரும் மேதைகளைக் கண்டிருக்கிறது. அவர்களில் தலையாயவர்கள் அம்பேத்கரும், ஜே.சி.குமரப்பாவும். இதற்கடுத்த காலகட்டத்தில் அமர்த்தியா சென், ஜக்தீஷ் பகவதி, மன்மோகன் சிங் என்னும் உலகின் மிகச்சிறந்த பொருளியல் அறிஞர்கள் உருவாகி வந்தார்கள். இப்படிப்பட்ட அறிஞர்களை உருவாக்க, பேராசிரியர் வி.கே.ஆர்.வி. ராவ், தில்லிப் பொருளாதாரப் பள்ளி என்னும் ஒரு கல்வி நிறுவனத்தை உருவாக்கினார். அங்கே உலகின் மிக முக்கியமான பொருளியல் மேதைகள் ஜாக் ட்ரெஸ், மில்டன் ஃப்ரீட்மென், ஜோசஃப் ஸ்டிக்லிஸ், ஜான் நாஷ் போன்றவர்கள் வருகை தரும் பேராசிரியர்களாகக் கல்வி கற்பித்திருக்கிறார்கள்.
இந்தப் பாரம்பரியத்தில் வந்தவர்தான் மாண்டேக் சிங் அலுவாலியா. இவர் தில்லியில் உள்ள செயிண்ட் ஸ்டீஃபன்ஸ் கல்லூரியில் பிஏ பொருளாதாரம் படித்து, பின்னர் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் முதுநிலை, எம்ஃபில் பட்டத்தைப் பெறுகிறார்.
இவர் பணிக்குச் சேர்ந்த அடுத்த ஆண்டு, இந்திரா காந்தி தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமராகிறார். அரசின் சார்பாக, அவர் வெளியிட்ட தொழிற்துறை அறிக்கை வழக்கம் போலப் பொதுத்துறை நிறுவனங்களை முன்னிறுத்தியது. ஆனால், அதில் ஒரு இளக்கம் இருந்தது. எல்லாத் தொழிற்சாலைகளுக்கும் லைசென்ஸ் வாங்க வேண்டும் என்னும் விதி, ஏற்றுமதி நிறுவனங்களுக்கு லைசென்ஸ் தேவையில்லை என மாறியது. அதே போல, சில முக்கியமான துறைகளில் இயங்கும் தொழில்கள், வருடா வருடம் லைசென்ஸ் பெறாமலேயே தங்கள் கொள்ளளவை அதிகரித்துக்கொள்ளலாம் எனவும் விதி இளகுகிறது. ஆனாலும் லைசென்ஸ் முறை நீடித்து வருகிறது.
இந்தக் காலகட்டத்தில்தான் நவீன அந்நியத் தொழில்நுட்ப உதவியோடு, அரசு கார் தயாரிக்கத் தொடங்குகிறது. மோட்டார் சைக்கிள்களைத் தயாரிப்பதற்குத் தனியாருக்கு அந்நியத் தொழில்நுட்பம் பெற அனுமதி அளிக்கப்படுகிறது. இவை இரண்டும் மிக முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகள். அந்த முடிவின் பலனாக உருவாகிவந்த மாருதி, இன்றும் இந்தியச் சந்தையின் மிக முக்கியமான கார் உற்பத்தியாளர். உலகில் முதல் இடம் பிடித்திருக்கும் மோட்டார் சைக்கிள் உற்பத்தி மையம் இந்தியா. மாருதி தன் கார் நிறுவனத்துக்கான தொழில்நுட்பக் கூட்டாளியைத் தேர்ந்தெடுப்பது முதல், அதன் கொள்ளளவை நிர்ணயிப்பது வரை முடிவுகளைச் சுதந்திரமாக எடுக்க அதன் தலைவர் வி.கிருஷ்ணமூர்த்திக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது. இது இந்திரா காந்தி எடுத்த மிக முக்கியமான கொள்கை முடிவாகும்.
இந்தக் காலகட்டத்தில் எடுக்கப்பட்ட இன்னொரு முக்கியமான முடிவு இந்திய ரூபாயின் மதிப்பை competitive-ஆக வைத்திருப்பது என்பது. பொதுவெளியில், டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைவாக இருப்பதுதான் இந்தியாவின் வலிமை என்னும் ஒரு மூடநம்பிக்கை நிலவுகிறது, டாலருக்கு எதிரான இந்தியா ரூபாயின் மதிப்பு அதிகரித்தால், இந்தியாவின் வலிமை குறைந்து போகும் என. ஆனால் உண்மை அதுவல்ல. எடுத்துக்காட்டாக, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்றைக்கு (18/9/2021) 73.70 ரூபாய். டாலருக்கு எதிரான ஜப்பானிய கரன்சியான யென் மதிப்பு 109.93. எனில், ஜப்பான் இந்தியாவைவிட வலிமை குறைந்த பொருளாதார நாடு என்று அர்த்தமில்லை.
டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரியான அளவில் இருக்கும் வரையில், இந்திய உற்பத்திக்குச் சரியான விலை கிடைக்கும். ரூபாய் டாலருக்கு எதிராக வலுவான விலைநிலையில் இருந்தால் ஏற்றுமதி விலை கிடைக்காது. அதனால் ஏற்றுமதி பாதிக்கப்படும்.
இந்தியா போன்ற வளரும் நாடுகளின் கரன்சிகளின் மதிப்பு ஓரளவு வரை குறைவாக இருப்பது ஏற்றுமதியை ஊக்கப்படுத்தும். எனவே, இதை அரசியல் முடிவு போல ஆக்காமல், நிர்வாக முடிவாக, தினமும் ரிசர்வ் வங்கியே முடிவெடுக்கும் வகையில் ஒரு தீர்வை உண்டாக்குகிறார் அலுவாலியா. டாலர், பவுண்டு, டாய்ச் மார்க், யென் என உலகின் முக்கியமான கரன்சிகளின் மதிப்புக்கு ஏற்றாற் போல, இந்திய ரூபாயின் மதிப்பு தினமும் மாறுதலுக்குள்ளானது. இதை அலுவாலியா, தனது சீனியரும், அன்றைய ரிசர்வ் வங்கியின் கவர்னருமாக இருந்த மன்மோகன் சிங்கிடம் பேசிச் செயல்படுத்துகிறார். இந்த முறையில், வெளியில் அதிகம் தெரியாமல், ஒவ்வொரு நாளும், ரூபாயின் மதிப்பு உலக நாணயங்களின் மதிப்பிற்கேற்ப மாறி, 3 வருடங்களில், 24% குறைகிறது. இது ஏற்றுமதியாளர்களுக்குக் கிடைத்த மறைமுக ஆதரவு. இந்தக் காலகட்டத்தில்தான், இந்தியாவில் வேளாண் பொருள் ஏற்றுமதியும், ஜவுளி ஏற்றுமதியும் பெருகத் தொடங்கியது நினைவிருக்கலாம். திருப்பூர் எழுந்ததன் பின்னே இந்தக் கொள்கையும் ஒரு சிறு பங்கை வகித்தது.
இந்தக் காலகட்டத்திலேயே, பொருளாதாரச் சீர்திருத்தம் தேவை என்னும் குரல் கேட்க ஆரம்பித்துவிட்டது. ஆனால், அதை வெளிப்படையாகச் செய்ய பெரும் அரசியல் எதிர்ப்புகள் இருந்தன. எனவே, இதுபோன்ற சிறு கொள்கை இளக்கங்கள் மெல்ல மெல்லச் செய்யப்பட்டன. இதை “reforms by stealth” எனச் சொல்கிறார்கள். வெளியே தெரியாமல், ஆனால் மெல்ல மெல்லச் செய்யப்பட்ட சீர்திருத்தம்.
1984ஆம் ஆண்டு, இந்திரா காந்தி கொல்லப்பட்டு, ராஜீவ் காந்தி பிரதமராகும் போது, அவர் அலுவாலியாவைத் தன் துணைச்செயலராக நியமித்துக்கொள்கிறார். பிரதமரின் அலுவலகத்தில் அருண் சிங், மணி ஷங்கர் ஐயர், செர்ளா க்ரெவால், கோபி அரோரா, ரோனன் சென் என ஒரு இளம் குழு அமைக்கப்படுகிறது.
நம் தலைமுறையின் காலகட்டம் வந்துவிட்டது என்னும் ஒரு நம்பிக்கை பிறந்தது என அந்தக் காலத்தைக் குறிக்கிறார் அலுவாலியா. ராஜீவ் காந்தி இந்தியன் ஏர்லைன்ஸ் விமானியாக இருந்தவர் என்பதால், நவீனத் தொழில்நுட்பத்தின் மீது பெரும் காதல் கொண்டவராகவும், அதன் சாத்தியங்களை உணர்ந்தவராகவும் இருந்தார். அவரின் அந்த ஆர்வம், அரசு இயந்திரங்கள் வேலை செய்யும் விதத்தை மிக நவீனமாக மாற்றியமைத்தது என்கிறார் அலுவாலியா.
உதாரணமாக, ரயில்வே பட்ஜெட் தொடர்பாக விவாதிக்க, மாதவ் ராவ் சிந்தியா தன் செயலர்களுடன் வருகிறார். ரயில் பட்ஜெட் என்பதில் முக்கிய விவாதம், சரக்கு ரயில் கட்டணம், போக்குவரத்துக் கட்டணம் முதலியவை. எடுத்துக்காட்டாக, சரக்கு ரயில் கட்டணத்தை 1% ஏற்றிவிட்டு, இரண்டாம் வகுப்புப் பயணிகள் கட்டணத்தை 3% குறைத்தால், என்ன ஆகும் எனக் கேட்டால், உடனே வந்திருக்கும் அதிகாரிகள் கால்குலேட்டரை எடுத்து கணக்குப் போடுவார்கள். அந்தக் கணக்கைப் பின்னர் சரி பார்ப்பார்கள். ஒவ்வொரு ஐடியாவின் நிதிநிலை விளைவுகளை அறிந்துகொள்ள பல மணி நேரம் ஆகும்.
“மாதவ்.. இதை இப்படிச் செய்வது நேர விரயம். நாம் ஏன் கம்ப்யூட்டர் ஸ்ப்ரெட் ஷீட் (இன்றைய எக்ஸல்ஷீட்டின் முன்னோடி) உபயோகிக்கக் கூடாது?” எனக் கேட்டுவிட்டு, அன்று புதிதாக வந்திருந்த லோட்டஸ் 1-2-3 மென்பொருளை வாங்கி, ரயில்வே அதிகாரிகளுக்குப் பயிற்சி கொடுத்து, பட்ஜெட் முறையை கணிணிமயமாக்கினார். பட்ஜெட் வேலை ஜெட் வேகத்தில் நடந்தது. இன்று அரசு பட்ஜெட் முழுக்க முழுக்கக் கணிணியில் மிக விரைவாக உருவாக்கபடுகிறது. இந்தக் கதையைச் சொன்னால், இன்றைய தலைமுறை நம்பவே நம்பாது.
ஜவஹர்லால் நேரு, பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் நவீன இந்தியத் தொழில்துறைக்கான அடிப்படைக் கட்டமைப்பை உருவாக்கி இந்தியாவைத் தொழில்மயமாக்கும் ஒரு தொலைநோக்குப் பார்வையைக் கொண்டிருந்தார். அவரைப் போலவே, நவீனத் தொழில்நுட்பத்தின் மூலம் இந்தியாவை உலக நாடுகளுக்கு இணையான தொழில்நுட்பச் சமூகமாக மாற்றும் ஒரு தொலைநோக்கைக் கொண்டிருந்தார் ராஜீவ் என்கிறார் அலுவாலியா.
ராஜீவ், தனது நண்பரும் தொழில்நுட்ப வல்லுநருமான சாம் பிட்ரோடாவின் உதவியோடு, தொலைபேசித் துறையைச் சீரமைத்தார். சிறு கிராமங்களுக்கும் எளிதில் தொலைபேசி இணைப்புகள் கொடுக்கும் வண்ணம் தொழில்நுட்பத்தை மாற்றியமைத்தார். தொலைபேசித் தொடர்புத் தேவைகளைச் சமாளிக்க, ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், பொது இடங்களில் பொதுத் தொலைபேசி வசதிகளை ஏற்படுத்தினார். வங்கிகள் கணிணி மயமாக்கம், ரயில்வே பயணப் பதிவு கணிணி மயமாக்கம், மின்னணு வாக்கு இயந்திரம், மென்பொருள் துறைக்கான செயற்கைக்கோள் இணைப்பு என, மிகச் சில ஆண்டுகளிலேயே, இந்தியா என்னும் தேசம் இயங்கும் விதத்தை மிக நவீனமாக்கும் முயற்சிகளை ராஜீவ் செய்துவிட்டுச் சென்றார் என்கிறார் அலுவாலியா.
ராஜீவ் காலத்தில் நிகழ்ந்த மிக முக்கியமான முன்னெடுப்புகளில் ஒன்று – வரிச் சீர்திருத்தங்கள். இது பொதுவெளியில் அதிகம் பேசப்படாத ஒன்று. அதே போல இவருக்கும் வி.பி.சிங்குக்கும் தொடக்கத்தில் இருந்த நட்பு. இருவரும் வெவ்வேறு பின்னணியில் இருந்து வந்தவர்கள். வி.பி.சிங் ஒரு ஆசாரமான மன்னர் பரம்பரையில் இருந்து வந்தவர். ராஜீவ் ஒரு நவீன வாழ்க்கைச் சூழலில் இருந்து வந்தவர். ஆனால், தொடக்கத்தில் பொருளாதார விதிகளை நவீனமாக்கி, வரிவிதிப்பை எளிதாக்க வேண்டும் என்னும் ஒரே குறிக்கோளுடன் இருவரும் மனமொத்துப் பணிபுரிந்தார்கள்.
வி.பி.சிங்கும் ராஜீவ் காந்தியும் முதலில் கொண்டுவந்த முதல் சீர்திருத்தம், கலால் (excise) வரிகளில் மதிப்புக்கூட்டு வரியை அறிமுகப்படுத்தியதாகும். எடுத்துக்காட்டாக, ஒரு தயாரிப்பு நிறுவனம் 70 ரூபாய் மதிப்புள்ள ஒரு பொருளை 30% கலால் வரி கொடுத்து வாங்குகிறது எனில், வாங்குபவரின் விலை ரூபாய் 91. அதை அவர் மதிப்புக் கூட்டி, 120 ரூபாய்க்கு விற்கிறார் என வைத்துக்கொள்வோம். அவருடைய லாபம் 21%. ஆனால், அவர் மதிப்புக் கூட்டிய பொருளின் விலை 30% கலால் வரியையும் சேர்த்து, வாங்குபவருக்கு 156 ரூபாய் ஆகிறது. இந்தப் பொருளுக்கு, அரசு பெற்ற கலால் வரி 57 ரூபாய். அதாவது, 156 ரூபாய் மதிப்புள்ள பொருளுக்கு வாங்கப்படும் கலால் வரி 57 ரூபாய். இந்த இரட்டை வரிவிதிப்பு முறையில், கலால் வரிகள் மிகவும் அதிகமாக இருந்ததால், இரண்டு எதிர்மறை விஷயங்கள் நடந்தன. ஒன்று, வரி ஏய்ப்பு. இன்னொன்று, நுகர்வோருக்கு மிக அதிக விலை. வி.பி.சிங் அறிமுகப்படுத்திய ‘மதிப்புக் கூட்டு வரிவிதிப்பு முறை’, ஒவ்வொரு தளத்திலும் கூட்டப்படும் மதிப்பு மீது மட்டுமே விதிக்கப்படும் வரியாக மாறியது. இதனால், வரி ஏய்ப்பு குறைந்தது. வரி வசூல் அதிகரித்தது.
இந்த வரிச் சீர்திருத்தம் பெரும் வெற்றியைப் பெற்றது. பின்னர், மாநில விற்பனை வரிகளிலும் இது அறிமுகப்படுத்தப்பட்டு தமிழகம் போன்ற மாநிலங்கள் வரலாறு காணாத வெற்றியைப் பெற்றன.
அதே போல, வி.பி.சிங் இன்னுமொரு முக்கியமான குறுகிய மற்றும் நீண்டகால நிதிக் கொள்கையை உருவாக்கினார். அந்தச் செயல்திட்டம் பின்வருமாறு:
- அடுத்த 5 ஆண்டுகளுக்கு வருமான வரி உயர்த்தப்படாது என்னும் வாக்குறுதியை அரசு அளிப்பது.
- இறக்குமதி லைசென்ஸ் முறைகள் விலக்கப்பட்டு, இறக்குமதி வரிகள் என மாற்றம் செய்யப்படும் என அறிவித்தது. லைசென்ஸுக்காக, தில்லிக்குக் காவடி எடுக்கும் பழக்கத்தை மாற்றும் முதல் படி.
- அதிகபட்ச தனிமனித வருமான வரி 62.5% லிருந்து 50% ஆகக் குறைக்கப்பட்டது. அதே போல நிறுவன வரிகள் 55% லிருந்து 50% ஆகக் குறைக்கப்பட்டது. இது பொருளியல் அறிஞர்கள், தொழில்முனைவர்கள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரிடமும் இருந்து பெரும் வரவேற்பைப் பெற்றது.
இது போன்ற நடவடிக்கைகளால், மத்திய வர்க்கத்தில் மிகப் பிரபலமான நிதியமைச்சராக உருவாகினார் வி.பி.சிங். ஆனந்த விகடன் அவரைப் பேட்டி கண்டு, ஒரு கவர் ஸ்டோரியும் எழுதுமளவுக்கு மத்திய வர்க்கத்தின் செல்லப்பிள்ளை. 1990ம் ஆண்டு பிற்படுத்தப்பட்டவர்களுக்கான மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அறிமுகப்படுத்திய பின் தமிழகம் தவிர மற்ற மாநில மத்திய வர்க்கத்துக்கு வில்லனாகிப் போனார்.
1991– வரலாற்றுத்தருணம்..
1991ம் ஆண்டு பொதுத்தேர்தலுக்கு மத்தியில், ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்படுகிறார். காங்கிரஸ் 244 இடங்களை வென்று, தனிப் பெரும்பான்மையில்லாமல், ஆனால் தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கிறது. அரசியலில் இருந்து ஓய்வுபெறச் சென்றுகொண்டிருந்த பி.வி.நரசிம்ம ராவ் திரும்பவும் தில்லி வந்து பிரதமராகிறார்.
அந்தக் காலத்தில் இந்தியா பெரும் அந்நியச் செலாவணிச் சிக்கலில் மாட்டிக்கொண்டிருந்தது. 1990ஆம் ஆண்டு நடந்த வளைகுடாப் போர், பெட்ரோல் விலைகளை உயர்த்தியதும், ராஜீவ் காந்தியின் படுகொலையினால் விளைந்த அரசியல் குழப்பமும், பிரச்சினையை மேலும் சிக்கலாக்கியது. இந்தியாவின் கைகளில், 11 நாட்களுக்குப் போதுமான அந்நியச் செலாவணி மட்டுமே இருந்தது.
பதவியேற்புக்கு முந்தைய நாள், மாண்டேக் சிங், மன்மோகன் சிங், நிதிச்செயலர் சுக்லா, பொருளாதார ஆலோசகர் தீபக் நய்யார் என முக்கியமான பொருளியல் நிபுணர்களைக் கலந்தாலோசிக்கிறார் நரசிம்ம ராவ். “பொருளாதார நெருக்கடியை ஒரு பிரச்சினையாகப் பார்க்காமல், ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொண்டு, புதிய கொள்கைகளை வகுக்க வேண்டும். நம் எண்ணங்கள் மீது படிந்துள்ள ஒட்டடையை அகற்ற வேண்டும்” என முன்மொழிகிறார். அந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில், நரசிம்ம ராவ் மன்மோகனை நோக்கி, “இந்த ஆலோசனைகளை நாளை பதவியேற்ற பின் மக்களுக்கு ஆற்றும் உரையின் ஒரு பகுதியாகச் சேர்த்துவிடுங்கள்” எனச் சொல்கிறார். மாண்டேக் சிங்குக்கு அப்போதே தோன்றுகிறது- மன்மோகன் சிங் நிதியமைச்சராகப் போகிறார் என. பின்னர் அதுவே நிகழ்ந்தது. பிரணாப் முகர்ஜிதான் நிதியமைச்சராவார் என அனைவரும் நினைத்துக்கொண்டிருக்கையில், நரசிம்மராவ் மன்மோகன் சிங்கை நிதியமைச்சராக்குகிறார். மன்மோகன் சிங், நிதியமைச்சராவதற்குச் சில மாதங்களுக்கு முன்பு பெங்களூர் இந்திய மேலாண்மைக் கழகத்தில் பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்தினார். அதில், நெருக்கடியான காலத்தில், இந்தியா முன்னெடுக்க வேண்டிய பொருளாதாரச் சீர்திருத்தங்களைத் தெளிவாகப் பேசியிருந்தார். ஆனால், அப்போது யாருக்குமே தெரியாது, அவர்தான் இந்தியாவின் அடுத்த நிதியமைச்சர் ஆகப்போகிறார் என்று.
பதவியேற்ற பின் நரசிம்மராவ் மக்களுக்கு ஆற்றிய முதல் உரையில் சீர்திருத்தங்கள் பற்றிப் பெரிதாக எதுவும் பேசவில்லை. நாம் எதிர்கொள்ளும் சிக்கலைப் புதிய கொள்கைகள் மூலம் சரிசெய்ய வேண்டும் என அவர் பேசியது வழக்கமான அரசியல் பேச்சாகத்தான் அலுவாலியாவுக்குத் தோன்றியது.
பட்ஜெட்டுக்கு இன்னும் நான்கு வாரங்கள் இருந்தன. இந்தியாவின் அந்நியச் செலாவணி 1 பில்லியன் எனக் குறைந்திருந்தது. இந்தியா தனது அந்நியச் செலாவணிக் கடன்களைச் செலுத்துவது தடைபடலாம் என்னும் அச்சம் இந்திய / உலக நிதித்துறை வளாகங்களில் பேச்சாக இருந்தது.
இந்தக் காலகட்டத்தில், மன்மோகன் சிங்கை நிதியமைச்சராக நியமித்தது, உலக நிதித்துறை அரங்கில் ஓரளவு ஆசுவாசத்தை அளித்தது. மன்மோகன் சிங் உலகறிந்த ஒரு நிதி நிபுணராக இருந்தது அதற்கு மிக முக்கியக் காரணமாகும். பன்னாட்டு நிதி நிறுவனம், ரிசர்வ் வங்கியின் ஆளுநர், திட்டக்கமிஷனின் துணைத்தலைவர் உள்பட பல அரசுத்துறைகளில் நீண்ட காலம் வெற்றிகரமாகப் பணியாற்றிய அவருக்கு, அரசு என்னும் பிரம்மாண்டமான இயந்திரம் இயங்கும் விதமும், அவற்றின் உள்கட்டமைப்பும் மிகத் துல்லியமாகத் தெரியும்.
பட்ஜெட் தொடங்கும் முன்பே, டாலருக்கெதிரான இந்திய ரூபாயின் மதிப்பை 22% குறைத்தார். இதனால் பயன்பெற்ற வெளிநாடு வாழ் இந்தியர்கள் உடனடியாகத் தங்கள் சேமிப்பைத் தாயகம் அனுப்பத் தொடங்கினார்கள். பட்ஜெட் நாளன்று காலை தொழிற்துறையைத் தன்னிடம் வைத்திருந்த நரசிம்மராவ், புதிய தொழிற்கொள்கையை வெளியிட்டார். அதன் மீது விவாதங்கள் தொடங்கும் முன்பே, அன்று மாலை மன்மோகன் சிங் நிதி மற்றும் வணிகச் சீர்திருத்தங்களை பட்ஜெட்டில் வெளியிட்டார்.
இந்த முரண் அலுவாலியாவுக்குத் திகைப்பூட்டுகிறது. நரசிம்ம ராவ், நேரு கால சோஷலிஸ மனச்சாய்வு கொண்டவர் என நினைத்திருக்க, இப்படி மின்னல் வேகத்தில் செயல்புரிகிறாரே என. முதலில் நரசிம்ம ராவ் பிரதமரானதே ஆச்சர்யம்தான். கட்சியில் அவருக்குப் பெரிதான ஆதரவில்லை. காங்கிரஸ் கட்சியிடமும் அறுதிப் பெரும்பான்மை இல்லை. கூட்டணிக் கட்சிகளின் தயவில்தான் காலத்தை ஓட்டியாக வேண்டும். அதே சமயம், பொருளாதாரச் சிக்கலையும் சமாளித்தாக வேண்டும். அதற்குச் சீர்திருத்தங்களை முன்னெடுத்தேயாக வேண்டும்.
40 ஆண்டுகளாக சோஷலிசப் பாதையில் சென்றுகொண்டிருந்த நாட்டின் பொருளாதார, தொழிற்கொள்கைகளைத் தன் ஆட்சியின் முதல் மூன்று மாதத்திலேயே மாற்றியமைத்தார். இதுதான் நரசிம்ம ராவின் மிகப்பெரும் வெற்றி. ஆனால், அவர் முடிவெடுக்க பெரும் தாமதம் செய்வார் என மொத்த நாடும் அறிவுஜீவிகளும் நம்பினார்கள்.
நரசிம்ம ராவ் காலத்தில் புகழ்பெற்ற ஜோக் ஒன்று உண்டு. அவர் மகன் ரங்கராவுக்கு 45 வயது ஆகியும் திருமணமாகி இருக்கவில்லை. காரணம், 20 வயதான போது, ரங்கராவ், “நான் திருமணம் செய்து கொள்ளட்டுமா?” எனக் கேட்டார். நரசிம்ம ராவ் அதைப்பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை என்பதுதான் அது.
அதே காலகட்டத்தில், பொருளாதார, அரசியல் சீர்திருத்தத்தை முன்னெடுத்த சோவியத் ரஷ்யா, பல நாடுகளாக வெடித்துச் சிதறியது. மக்கள் ரொட்டிக்காக மணிக்கணக்கில் தெருவில் நின்றார்கள். ரஷ்யப் பெண்கள் தங்கள் வாழ்வாதாரத்தைத் தொலைத்து, இந்தியா போன்ற நாடுகளுக்கு வந்து பாலியல் தொழிலில் ஈடுபட்டார்கள். அர்ஜெண்டினா நாட்டிலும் இதே போன்ற பெரும் சமூக அவலம் உருவாகியது.
ஆனால், இந்தியாவில் இது நிகழவில்லை. காரணம், என்ன செய்ய வேண்டும் என்பதை மிகவும் நன்குணர்ந்த மன்மோகன் சிங், ப.சிதம்பரம் போன்ற இந்தியப் பொருளியல் நிர்வாகிகளும், உலகின் மிகச் சிறந்த அரசியல் நிர்வாகிகளும் இணைந்த ஒரு அணி. இந்த அணியைப் பாதுகாத்து, அரசியல் சுழல்களில் அரசு என்னும் கப்பல் சிக்கிக்கொள்ளாமல் செலுத்திய நரசிம்மராவ் என்னும் திறமையான, தொலைநோக்குப் பார்வைகொண்ட கேப்டன். இதில் இன்னுமொரு முக்கியக் காரணமும் உண்டு. வழமையான சந்தைப் பொருளாதாரச் சீர்திருத்தத்தை முன்னிறுத்தும் பொருளியல் நிபுணர்கள் பலரும் அறிவுறுத்தும் ஒரு விஷயத்தை நரசிம்மராவ் செய்யவே இல்லை. அதாவது வேளாண்மைக்கும் உணவுக்கும் கொடுக்கப்படும் மானியத்தை நிறுத்த வேண்டும் என்பதுதான் அது. மாறாக, அந்நியச் செலாவணி நெருக்கடி விலகத் தொடங்கிய 1993ஆம் ஆண்டு, தமிழகத்தின் மதிய உணவுத் திட்டத்தை நாடெங்கும் அறிமுகப்படுத்தினார் நரசிம்ம ராவ். 1982 ஆம் ஆண்டு, தமிழகத்தின் மதிய உணவுத் திட்டத்திற்காக அரசு அதிகமாகச் செலவு செய்கிறது எனத் திட்டக்கமிஷனின் துணைத்தலைவராக இருந்து எம்.ஜி.ஆரைக் கடிந்துகொண்ட அதே மன்மோகன் சிங் இதை அறிவித்ததுதான் நகைமுரண்.
தொழிற்துறைச் சீர்திருத்தங்களைப் பற்றிய வடிவமைப்பைக் கட்சியும் மந்திரிசபையும் ஒத்துக்கொண்டால்தான் அதை முன்னெடுக்க முடியும் என முடிவெடுத்தார் நரசிம்மராவ். அப்படிச் செய்யாமல், தன்னிச்சையாகச் சீர்திருத்தங்களை அறிவித்து, அது அரசியல் ரீதியாக எதிர்ப்புகளைச் சந்தித்தால், தன்னைக் கெடா வெட்டிவிடுவார்கள் என்பதை நன்குணர்ந்த அரசியல்வாதி அவர்.
எதிர்பார்த்தது போலவே, மந்திரிசபைக் கூட்டத்தில் பெரும் அமளி துமளி வெடித்தது. நரசிம்ம ராவின் அரசியல் எதிரிகள், அவரைக் குறிவைத்துத் தாக்கினர். அந்தக் கூட்டத்தின் முடிவில், தொழிற்கொள்கையைக் காங்கிரஸின் கொள்கைகளோடு இணைந்து செல்லும் திசையில் மாற்றியமைக்க முடிவெடுக்கப்பட்டது.
அதிர்ஷ்டவசமாக, ராஜீவ் காந்தியால் வடிவமைக்கப்பட்ட 1991ஆம் ஆண்டுத் தேர்தல் அறிக்கை, தொழிற்துறைச் சீர்திருத்தத்தைப் பேசியிருந்தது. தொழிற்துறைத் திட்ட வடிவமைப்பை மாற்றப் பொறுப்பேற்றிருந்த ஜெய்ராம் ரமேஷ், ஜவஹர்லால் நேருவும் இந்திரா காந்தியும் முன்னெடுத்த தொழிற்புரட்சியின் நீட்சியாக, மறைந்த காங்கிரசின் நம்பிக்கை நட்சத்திரம் ராஜீவ் காந்தியின் கனவு இந்தத் தொழிற்துறைச் சீர்திருத்தம் எனத் தொடங்கி, ஆங்காங்கே மானே தேனே பொன்மானே எல்லாம் போட்டு, அதே தொழிற்துறைச் சீர்திருத்தத்தை, அடிமாறாமல் மீண்டும் மந்திரி சபைக் கூட்டத்தில் சமர்ப்பித்தார். இம்முறை தொழிற்கொள்கை பலத்த கரகோஷத்துக்கிடையே ஏற்றுக்கொள்ளப்பட்டது. நான் சொன்ன இந்தக் கதையைக் கேட்ட உங்களுக்கு, கரகாட்டக்காரன் திரைப்படத்தின் வாழைப்பழம் காட்சி நினைவுக்கு வரலாம். வாழைப்பழம் அதேதான்.. ஆனால், “இதுதான் அந்த ரெண்டாவது வாழைப்பழம்” என்று எல்லோரையும் நம்ப வைத்தார் ஜெய்ராம் ரமேஷ்.
மன்மோகன் சிங் சமர்ப்பித்த வரலாற்றுச் சிறப்புமிக்க 1991 பட்ஜெட்டைப் பற்றித் தனியே ஒரு கட்டுரையில்தான் பேச வேண்டும். அது நிதியமைச்சக இணையதளத்தில் உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் தரவிறக்கிப் படித்துப் பார்க்கலாம். செவ்வியல் இலக்கியம் போல இருக்கும். அன்று அந்நியச் செலாவணிச் சிக்கலில் தத்தளித்துக்கொண்டிருந்த நாட்டின் முன், அந்த பட்ஜெட் உரையை வைத்து, மன்மோகன் சிங் சொன்னார், “No Power can stop an idea whose time has come; I suggest to this august house that the emergence of India as a major economic power in the world happens to be one such idea“ என்று. இன்று நினைவுகூர்ந்தாலும் கண்களில் நீரை வரவழைக்கும் வரிகள். பின்னோக்கிப் பார்க்கையில், எவ்வளவு பெரும் தொலைநோக்குப் பார்வை கொண்ட மாமனிதர் இந்த மன்மோகன் சிங் என இந்தத் தருணத்தில் நினைத்துக்கொள்கிறேன்.
நரசிம்மராவ் ஆட்சிக்காலம் முடிந்த பின்னர், எதிர்பார்த்தது போலவே, காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரவில்லை. யாருக்கும் பெரும்பான்மை இல்லாத காலகட்டம். தமிழகத்தில் காங்கிரஸ் பிரிந்து, மத்தியில் கூட்டணி ஆட்சி வருகிறது. யாரும் எதிர்பாராத வண்ணம், தேவே கௌடா பிரதமராகிறார். கூட்டணி ஆட்சிக்கென, குறைந்தபட்ச செயல்திட்டம் ஒன்று உருவாக்கப்படுகிறது. அடுத்த 10 ஆண்டுகளுக்கு 7 சதம் வளர்ச்சி என இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. நாட்டின் கட்டமைப்பை உருவாக்குவதில் தனியார் துறை ஈடுபடுத்தப்படும் என்னும் ஒரு கொள்கை, கம்யூனிஸ்ட் கட்சிகள் இருந்தும், முதல் முறையாக உள்ளே நுழைந்தது ஆச்சரியமாக இருந்தது என்கிறார் அலுவாலியா. இதன் நீட்சியாக, தனியார் துறையின் பங்களிப்போடு, ஜெய்ப்பூரில் இருந்து கிஷன்கஞ்ச் நகர் வரையிலான 550 கிலோமீட்டர் நெடுஞ்சாலைத் திட்டம் உருவானது. இது பின்னர் வாஜ்பாய் காலத்தில், தங்க நாற்கரம் எனப் பெருமளவு முன்னெடுக்கப்பட்ட திட்டமாகும்.
தேவே கௌடா அமைச்சரவையில் ப.சிதம்பரம் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த முடிவு என்பது அலுவாலியாவின் கருத்து. இந்தக் காலகட்டத்தில், தனியார் நிறுவனங்களையும் மத்திய வர்க்க நுகர்வோர்களையும் ஊக்கப்படுத்தும் வகையில், வருமான வரிகளைப் பெருமளவில் சிதம்பரம் குறைத்தார். சிதம்பரத்தின் 1996-97 பட்ஜெட், ‘கனவு பட்ஜெட்’, எனச் சந்தைப் பொருளியல் ஆதரவாளர்களால் போற்றப்படுகிறது.
இந்தக் காலத்தில் சிதம்பரம் இறக்குமதி வரிகளைப் பெருமளவில் குறைத்தார். இதில் உணவு எண்ணெய் இறக்குமதி வரிகளைக் குறைத்தது, இந்திய எண்ணெய் வித்துத் துறையை அடுத்த பத்தாண்டுகளில் அழித்தது.
இந்தக் காலகட்டத்தில், கறுப்புப் பணம் வைத்திருப்பவர்களுக்கு, ஒருமுறை மன்னிப்பு என்னும் வகையில், ஒரு திட்டம் கொண்டுவந்தார் சிதம்பரம். இதில் தனக்கு ஒப்புதல் இல்லை எனினும் மிகவும் வெற்றிகரமான திட்டம் என்கிறார் அலுவாலியா.
ஆனால், இந்தக் கனவு பட்ஜெட்டுக்குப் பின் பொருளாதார வளர்ச்சி பல்வேறு காரணங்களால் 8%-லிருந்து 4.3% ஆகக் குறைந்தது. அந்த ஆண்டு, இந்தியாவில் வறட்சி நிலவியதும், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் நிகழ்ந்த பொருளாதார வீழ்ச்சியும் காரணம் எனச் சொல்கிறார் அலுவாலியா.
அதன் பின்னர் கூட்டணிக் கட்சிகளின் தயவுடன் ஆட்சிக்கு வந்த வாஜ்பாய் அரசும், 1991ஆம் ஆண்டு தொடங்கிய நவ தாராளமயக் கொள்கைகளைத் தொடர்ந்தது. ஆனால், முதல் ஆண்டில், சிதம்பரத்தின் கனவு பட்ஜெட் குறைத்த வரிகளினாலும், பொருளாதார வளர்ச்சி மந்தமடைந்த நிலையினாலும், வாஜ்பாய் ஆட்சிக்குப் பொருளாதார அழுத்தம் வந்தது. ஆனால், அதை நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா சாமர்த்தியமாகச் சமாளித்தார் என்கிறார் அலுவாலியா. பாஜகவின் ஆட்சியில், பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்கும் முக்கியமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. பால்கோ, மாருதி, வி.எஸ்.என்.எல், ஐ.பி.சி.எல் போன்ற முக்கியமான நிறுவனங்களில் இருந்து அரசு முற்றிலுமாக வெளியேறியது.
வாஜ்பாய் ஆட்சியின் மிக முக்கியமான திட்டம், தங்க நாற்கரம் என்னும் நெடுஞ்சாலைத் திட்டம். இது எதிர்க்கட்சித் தலைவர்களால், குறிப்பாக மன்மோகன் சிங்கினால், வரவேற்கப்பட்ட ஒன்றாகும். இதைத் தாண்டி, பிரதம மந்திரி கிராமப்புறச் சாலைத் திட்டம், புதிய தொலைத்தொடர்புத் திட்டம் போன்றவை, நாட்டின் தொலைத்தொடர்புக் கட்டமைப்பு, கிராமப்புறச் சாலைத் தொடர்பு முதலியவற்றைப் பெருமளவு மாற்றியமத்த திட்டங்களாகும்.
மாண்டேக் சிங்குக்கு, இந்தக் காலகட்டத்தில், பன்னாட்டு நிதிநிறுவனத்தில் பணிபுரிய ஒரு வாய்ப்பு கிடைத்து, அரசுப் பணியைத் துறந்து செல்கிறார்.
2004ஆம் ஆண்டு. நாட்டின் ஊடகங்களும் மத்திய தர வர்க்கமும் ஆவலோடு எதிர்பார்த்தது போல, தேர்தலில் பாஜக ஜெயிக்கவில்லை. மாறாக சோனியா காந்தி தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வெற்றி பெற்றது. சோனியா காந்தி, யாரும் எதிர்பாராத வண்ணம், மன்மோகன் சிங்கைப் பிரதமராக்கினார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, குறைந்தபட்சச் செயல் திட்டத்தை (Common Minimum Program) முன்வைத்தது.
அப்போது பன்னாட்டு நிதி நிறுவனத்திற்குப் பணிபுரியச் சென்றிருந்த மாண்டேக் சிங் அலுவாலியாவை அரசில் பணிபுரிய அழைத்தார் மன்மோகன் சிங். அரசின் எந்தத் துறையில் பங்களிக்க விரும்புகிறாய் எனக் கேட்க, திட்டக்கமிஷன் எனப் பதிலுரைக்கிறார் அலுவாலியா.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் குறைந்தபட்சச் செயல்திட்டம், பொருளாதாரம் 7-8% வளர வேண்டும் என ஒரு இலக்கை நிர்ணயித்தது. அதே சமயத்தில், பெருமளவு மக்கள் நலத்திட்டங்களை முன்வைக்க வேண்டும் என்பதும், உழவர்களுக்கான திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்பதும் குறைந்தபட்சச் செயல்திட்டத்தின் முக்கியக் கூறுகளாக இருந்தன.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முதல் ஐந்தாண்டுகளில், பொருளாதார வளர்ச்சி 8.4% ஆக உயர்ந்தது. திட்டமிட்டதைவிட அதிகமான வளர்ச்சி! 2009ஆம் ஆண்டு அமெரிக்க நிதிநிலை வீழ்ச்சி மட்டும் இல்லையெனில், வளர்ச்சி 9%-ஐத் தொட்டிருக்கும்.
2008ஆம் ஆண்டு அமெரிக்க நிதி நிறுவன ஊழலில், பெரும் பன்னாட்டு நிதிச் சிக்கல் உருவாகியது. 1929ஆம் ஆண்டு அமெரிக்காவில் உருவாகிய பெரும் பொருளாதார மந்தம், க்ரேட் டிப்ரஷன் என்னும் சிக்கலைப் போலவே, இதுவும் ஒரு பெரும் சிக்கல் என உலக நிதித்துறை பயந்தது. க்ரீஸ், ஐஸ்லாந்த் என்னும் இரண்டு நாடுகளின் பொருளாதாரம் சிதைந்தே போனது. அந்தச் சிக்கலை எதிர்கொள்வதற்காகப் பிரதமர், நிதி அமைச்சர் சிதம்பரம், அலுவாலியா, நிதிச் செயலர்கள் ஆகியோர் ஒன்றுகூடினர். 1991ஆம் ஆண்டு இந்தியா எதிர்கொண்ட அந்நியச் செலாவணிச் சிக்கலை வெற்றிகரமாகக் கையாண்ட அதே அணி. ஆனால், இன்று இந்தியா உலகின் 7ஆவது பெரும் பொருளாதாரமாக, உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாக இருந்தது. எனவே, இந்தச் சிக்கலை எப்படி எதிர்கொள்வது என யோசித்து, நிதித்துறைத் திட்டங்களும், ரிசர்வ் வங்கியின் விதிகளும் தளர்த்தப்பட்டு, பொருளாதார வளர்ச்சி குறைந்துவிடாமல் இருப்பதற்காகத் திட்டங்கள் தீட்டப்பட்டன. அப்படி இருந்தும், ஏற்றுமதி வீழ்ச்சியால், பொருளாதாரம் 9.4%-லிருந்து 6.9% ஆகக் குறைந்தது. அந்த ஆண்டுதான், உலகப் பெட்ரோல் விலைகளும் வெகுவாக உயர்ந்தன. ஆனால், பெட்ரோல் நிறுவனங்கள் அதில் ஒரு பகுதியைத் தாங்கிக்கொண்டன. ரயில்வே அத்தியாவசியப் பொருள்களுக்கான சரக்குப் போக்குவரத்து விலைகளை உயராமல் நிறுத்தி வைத்தது. இந்தியாவில் விலைவாசிகள் கூடின. ஆனாலும், ஏழை மக்களைப் பெரிதும் பாதிக்காமல் பார்த்துக்கொண்டது அரசு. அது, பொருளியல் நிர்வாகிகள் முன்பே எதிர்பார்த்து, தடுப்பு நடவடிக்கைகளை எடுத்ததால்தான் என்பதைத் தரவுகளுடன் எழுதுகிறார் அலுவாலியா.
2004 – 2014 காலகட்டம், இந்தியப் பொருளியல் வரலாற்றில் மிக முக்கியமான காலகட்டமாகும். பெருமளவில், மத்திய அரசு, மக்கள் நலத்திட்டங்களை ஒரு ஒத்திசைவான முறையில் செயல்படுத்தியது. மதிய உணவுத்திட்டம், பள்ளிக் கல்விக்கான நிதி, ஊரக வேலைவாய்ப்புத் திட்டம், ஊரகக் குடிநீர் திட்டம், தேசிய ஊரகச் சுகாதாரத் திட்டம், குழந்தைகள் நலவாழ்வுத் திட்டம், ஜவஹர்லால் நேரு நகர்ப்புற வளர்ச்சித் திட்டம், தகவல் அறியும் உரிமைச் சட்டம், திட்டங்களுக்காக நிலம் எடுத்துக்கொள்ளப்படும் போது அதற்கான சரியான இழப்பீடு வழங்கும் திட்டம், கல்வி உரிமைச் சட்டம், உணவுப் பாதுகாப்புச் சட்டம், பழங்குடிகளுக்கான வன உரிமைச் சட்டம் என மிக முக்கியமான சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தியப் பொருளாதாரம் வேகமாக வளர வேண்டுமானால், இதுவரை 2% மட்டுமே வளர்ந்திருந்த வேளாண் துறை 4% வளர வேண்டும் என்னும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. வேளாண் துறைக்கான திட்டங்கள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு, மொத்த ஒதுக்கீடும் மாநிலங்கள் கையில் கொடுக்கப்பட்டு, அதைப் பயன்படுத்திக்கொள்ளும் சுதந்திரம் கொடுக்கப்பட்டது.
இதில் மிக முக்கியமாக, ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தைப் பார்ப்போம்:
2005ம் ஆண்டு இந்தத் திட்டம், வருடத்துக்கு 100 நாட்கள் ஊரக மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதை ஒரு சட்டப்பூர்வமான உரிமையாக்க உருவாக்கப்பட்டது. இதன் முக்கிய அம்சங்கள்:
- இது கிராமப் பஞ்சாயத்துகள் மூலமாக நிறைவேற்றப்பட வேண்டும்.
- கட்டமைப்புகளை (ஏரி, குளம், கிணறு, மழை நீர் சேகரிப்பு போன்றவை) உருவாக்க இது பயன்படுத்தப்பட வேண்டும்.
- தனியார் ஒப்பந்ததாரர்கள் (காண்ட்ராக்டர்கள்) இதில் ஈடுபடுத்தப்பட மட்டார்கள்.
- குறைந்தது 30% வேலைகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும்.
- 33% வேலைகள் தாழ்த்தப்பட்டவர்கள் / பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட வேண்டும்.
- ஆண்/பெண் இருவருக்கும் ஒரே அளவு ஊதியம்.
2012ஆம் ஆண்டு இத்திட்டத்தை மீள் ஆய்வுசெய்த ஊரக முன்னேற்றத் துறை அமைச்சர் திரு.ஜெய்ராம் ரமேஷ் பகிர்ந்துகொண்ட முக்கியச் சாதனைகள் பின்வருமாறு:
- 2006ஆம் ஆண்டிலிருந்து 2011 வரை, 1.10 லட்சம் கோடி நிதி, இத்திட்டத்திற்குச் செலவழிக்கப்பட்டிருக்கிறது. 1200 கோடி மனித நாட்கள் வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. சராசரியாக வருடம் 5 கோடி மக்கள் பயன்பெறுகிறார்கள்.
- 80% பயனாளிகள் வங்கிக் (தபால் அலுவலகக்) கணக்கு மூலம் கூலி பெற்றிருக்கிறார்கள்.
- இதில் 51% தாழ்த்தப்பட்ட / பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள். 47% பெண்கள். (கேரளா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் 70% க்கும் அதிகமான பெண்கள் பயன்பெற்றார்கள்)
- 46 கோடி சிறு கட்டமைப்பு வேலைகள் தொடங்கப்பட்டு, அவற்றுள் 60% முடிக்கப்பட்டுவிட்டன.
இதன் விளைவாக, ஊரக வேளாண் கூலி சராசரியாக 6% (பண வீக்கம் தவிர்த்து) உயர்ந்தது எனப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
வேளாண் பொருளாதார உதவித் திட்டங்கள்:
- வேளாண்மைக்கான வங்கி நிதி உதவி 2003-4 ஆம் ஆண்டு 87000 கோடியாக இருந்தது. இது, 2014-15 ஆம் ஆண்டு 8 லட்சம் கோடியாக உயர்ந்தது.
- தேசிய தோட்டக்கலைத் துறைக்கான திட்டங்கள் (National Horticulture Mission), நிதி உதவிகள், 2004-05 ஆண்டு, 184 மில்லியன் ஹெக்டர் நிலப்பரப்பில் இருந்து, 2014-15 ஆண்டு 234 மில்லியன் ஹெக்டராக உயர்ந்தது. அதேபோல், உற்பத்தி 166 மில்லியன் டன்னில் இருந்து 281 மில்லியன் டன்னாக உயர்ந்தது. உற்பத்தித் திறன் 0.9 டன்னில் இருந்து 1.2 டன்னாக உயர்ந்தது.
- உணவு உற்பத்திக்கான நில அளவு குறைந்தும், உணவு உற்பத்தி, 2003-4 ஆம் ஆண்டில் 213 மில்லியன் டன்னில் இருந்து, 2013-14 ஆம் ஆண்டு 255 மில்லியன் டன்னாக உயர்ந்தது.
- உற்பத்திக்குச் சரியான ஆதரவு விலை (minimum support price) – எடுத்துக்காட்டாக, நெல்லுக்கு 2003-4 ல் குவிண்டாலுக்கு 550 ஆக இருந்த ஆதரவு விலை, 2008-9 ல் 900 ஆக உயர்த்தப்பட்டது. கோதுமைக்கு அதே போல், 630 லிருந்து, 1080 ஆக உயர்த்தப்பட்டது.
- வேளாண் பொருளாதாரம், முதல் ஐந்தாண்டுகளில் 3.1%-மும், அடுத்த ஐந்தாண்டுகளில் 4.3%-மும் உயர்ந்தது.
வறுமை ஒழிப்பு:
இதுதான் இந்தக் காலகட்டத்தின் மிகப் பெரும் சாதனை எனச் சொல்ல வேண்டும்.
2004 ஆம் ஆண்டுக்கு முந்தைய 10 ஆண்டுகளில், வறுமை 0.8% குறைந்தது. ஆனால், மக்கள் தொகை இதைவிட வேகமாக வளர்ந்ததால், மொத்த ஏழைகள் எண்ணிக்கை வருடம் 70 இலட்சம் அதிகரித்தது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில், வறுமை அளவு சராசரியாக 1.5% குறைந்தது. 2004 ஆம் ஆண்டு 37.2% ஆக இருந்த வறுமை, அடுத்த ஐந்தாண்டுகளில் 29.7% ஆக் குறைந்தது. இந்தக் காலகட்டத்தில், கிட்டத்தட்ட 14 கோடி ஏழை மக்கள் வறுமைக்கோட்டைத் தாண்டி வெளியே வந்தார்கள் என உலக வங்கியும் பாராட்டியுள்ளது.
இனி, இந்தப் புத்தகத்தின் மீதான சில விமர்சனங்கள்.
- மாண்டேக் சிங், ஒரு சுதந்திரச் சந்தை பொருளியல் நிபுணர். பொருளாதாரத்தில் சுதந்திரச் சந்தையை ஊக்குவித்து, வளர்ச்சியை ஊக்குவித்தால், நாடு முன்னேறும் என்னும் கொள்கையை உடையவர். ஆனால், அதனால் நிகழ்ந்த எதிர்மறை விளைவுகளைப் பேசாமல் தவிர்க்கும் ஒரு தன்மை இதில் உள்ளது. பல பெரும் திட்டங்கள் சுற்றுச்சூழலைப் பாதிக்கும் வகையிலானவை. அவற்றைப் பற்றி, எந்தக் குறிப்பும் இல்லை. வளர்ச்சி என்னும் பாதையில், எதையும் செய்யலாம் என்பது சொல்லாமல் சொல்லப்படுகிறது.
- பொருளாதாரத்தில் மாற்றுப் பார்வைகளின் முக்கியத்துவம். இது சற்றுக்கூட இல்லை. எடுத்துக்காட்டாக, 1989ஆம் ஆண்டு வி.பி.சிங்கின் ஆட்சிக்காலத்தில் எல்.சி.ஜெயின் முன்வைத்த வேலை வாய்ப்பைப் பெருக்கும் வளர்ச்சி என்பதைக் காலாவதியான கொள்கை என விமர்சிக்கிறார். பின்னால், அதுவே மகாத்மா காந்தி ஊரக வேளாண்மைத் திட்டமாகப் பெர வெற்றி பெற்றதன் பின்னணியை அவர் பேசுவதில்லை.
- பொருளாதாரச் சீர்திருத்தங்கள் வெற்றிகரமாக நிகழ்ந்த 1993-2004 வரையிலான காலகட்டத்தில் வறுமை 0.8% குறைந்தது. ஆனால், மக்கள் நலத்திட்டங்கள் மிக முக்கியமாக நிறைவேற்றப்பட்ட காலத்தில், வறுமை 1.5% குறைந்து, வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ள மக்கள் தொகை விடுதலைக்குப் பின் முதன்முறையாகக் குறைந்தது. இதிலிருந்து நமக்கு என்ன தெரிகிறது? சுதந்திரச் சந்தைப் பொருளாதாரம் மட்டுமே போதாது. அமர்த்தியா சென் முன்வைத்த சுதந்திரச் சந்தை + மக்கள் நல அரசு + வேளாண்மைக்கான மானியங்கள் என்னும் ஒரு கூட்டணிதான் இந்தியாவுக்குப் பெரும் நன்மையை விளைவித்திருக்கிறது. இதை அவர் முக்கியத்துவம் கொடுத்துப் பேசுவதில்லை.
- 2004-2014 ஆம் ஆண்டில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தேசிய ஆலோசனைக் குழு என்னும் ஒரு குழு அமைக்கப்பட்டிருந்தது. டாக்டர் ஏம்.எஸ்.ஸ்வாமிநாதன், தொழிலதிபர் அனு ஆகா, சமூக சேவகர் அருணா ராய், பொருளியலாளர் ஜான் ட்ரெஸ், தீப் ஜோஷி போன்ற ஆலோசகர்கள் கொண்ட இந்தக் குழுதான் தகவலறியும் சட்டம், ஊரக வேலைவாய்ப்புத் திட்டம், கட்டாயக் கல்விச் சட்டம், உணவுப் பாதுகாப்புச் சட்டம் போன்ற மக்கள் நலச்சட்டங்களின் வெற்றிகரமான உருவாக்கத்தின் பின்னணியில் இருந்தார்கள். இந்த ஆலோசனைக் குழுவின் சரியான பங்களிப்பை மாண்டேக் சிங் எழுதவில்லை.
நம் சூழலில், அரசு, பொருளாதாரக் கொள்கைகள், அவற்றின் முக்கியத்துவம் பற்றிப் பொதுவெளியில் பேசுதல் மிகக் குறைவாக இருக்கிறது. எடுத்துக்காட்டாக, மன்மோகன் சிங் ஆட்சியைப் பற்றிப் பேசச் சொன்னால், அவர் சோனியா காந்தியினால் தேர்ந்தெடுக்கப்பட்ட பொம்மை, 2 ஜி ஊழல், நிலக்கரி ஊழல் என்றுதான் பொதுவெளியில் ஊடகங்களும், நம் அறிவுஜீவிகளும் உரையாடுகிறார்கள். அதைத் தவறு எனச் சொல்லவில்லை. விமர்சனங்கள் மக்களாட்சிக்கு மிக முக்கியம். ஆனால், இந்தக் காலத்தில்தான், இந்தியப் பொருளாதாரம் நூற்றாண்டுகள் காணாத வளர்ச்சியைப் பெற்றது, வறுமை குறைந்தது என்னும் நேர்மறை விஷயங்களையும் பேச வேண்டுமல்லவா? அது எப்படி நிகழ்ந்தது என்பதைச் சமூகத்தின் முன் வைக்க வேண்டுமல்லவா? அந்த வகையில், இந்தப் புத்தகம் கடந்த 40 ஆண்டுகளின் இந்தியப் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் வளர்ச்சி பற்றிய ஒரு முக்கிய ஆவணம்.
3 comments
என்னைப் போன்ற தற்குறிக்கே ஒரளவு புரிகின்ற அளவு மிகத் தெளிவாகவும் எளிமையாகவும் விளக்கியுள்ளீர்கள். எப்பேர் பட்ட அறிவு ஜீவிகளையும் மேதைகளையும் நாம் அடைந்தும் மதிக்கத் தவறியதின் பலன் இன்று அனுபவிக்கிறோம்.
Good one
It’s good article bro keep it up
Comments are closed.