விரைவில் வெளிவரும்
தோல்வியின் அறிவிப்பு
தோற்கப் போவது
இருவரில் ஒருவர்தான்
நீ பொய்யானாலும்
உன் கவிதைகள்
பொய்யறியாதவை
ஒழுங்கான பொய்களாக
உன் வார்த்தைகள்
அமைந்திருப்பினும்
ஒழுக்கமற்ற உண்மைகள்
உன் எழுத்துக்குள்
மின்னி மின்னிச் செல்கின்றன.
நம்பிக்கையின் நிறத்தை
நீ நிச்சயிக்கிறாய்
அவநம்பிக்கையின் நிறத்தை நான்.
கிளியிலிருந்து பச்சையெடுத்து
புல்லில் வந்து அமர்ந்ததும்
புல்லின் பச்சை கொத்தி
கிளியை நோக்கிப் பறந்ததும்
எதுவென்று தெரிந்துவிடும்.
*
உயரத்துப் பார்வையிலிருந்து…
இரவு வானத்தின் மேலே
கவிழ்ந்து படுத்துக்கொண்டு
யாரோ உற்றுப் பார்த்தபோது
நடுங்கிய உயிரின் சுருள்வில்
இன்னும் அதிர்கிறது
அருகருகே இமைக்காமல் திறந்திருந்த
இரு விழிகளில்
கூர்தீட்டி குறி தப்பாத பார்வைகள்
அச்சத்தின் முதுகில் தைத்த
பார்வையின் முதலாம் அஸ்திரத்தில்
பற்றியெரிந்தது அநாதை வன்மம்
இரண்டாம் அஸ்திரத்தில்
குருத்து மாமிச இச்சையோடு
அஸ்தமனச் சூரியனைத் துரத்தித் தோற்ற
வெறிநாயின் பசி
மூன்றாம் அஸ்திரத்தில்
தன்னை நோக்கி ஏந்திய பிச்சைப் பாத்திரத்தில்
வெற்றிலை எச்சில் துப்பி
நாச்சிவப்பை விசாரித்தவனின் ஆணவம்
நாலாம் அஸ்திரத்தில்
செத்துப் புழு வைத்த சின்னப்பன்றி நாற்றத்தை
உதட்டிலூட்டி உறக்கம் கலைக்கும்
துர்தேவதையின் காமம்
ஐந்தாம் அஸ்திரத்தில்
தோளில் பல்லக்கின் வடுவோடு பிறந்த இளவரசனை
பிரசவ மாடத்துக் கட்டிலில் கண்ட
அரசனின் கோபம்
ஆறாம் அஸ்திரத்தில்
மிஞ்சும் பறவையின் கதறலில்
காரிருள் மூடிய வனத்தைத்
தீயிட்டுத் திறந்து காட்டும்
மூங்கிலின் காட்டுமுத்தம்
ஏழாம் அஸ்திரத்தில்
அன்பின் முறை வந்தபோது
எழுந்தது சூரியன்.
*
போதும்
ஒரு துண்டு பூமி
இரண்டு துண்டு வானம்
சிறு கீற்று நிலவு
சில துளிகள் சூரியன்
ஒரு பிடி நட்சத்திரம்
கால்படிக் கடல்
ஒரு கிண்ணம் பகல்
ஒரு கிண்ணிப்பெட்டி இருள்
மரக்கூந்தல் காற்று
நூலளவு பசும் ஓடை
குடையளவு மேகம்
ஒரு கொத்து மழை
குட்டியாய் ஒரு சாத்தான்
குழந்தை மாதிரி கடவுள்
உடல் நிறைய உயிர்
மனம் புதைய காதல்
குருதி நனைய உள்ளொளி
இறவாத முத்தம்
என் உலகளவு எனக்கன்பு…
*
பாறையை உண்டு பசியாறியவன்
உறுதியின் அழகையெல்லாம்
குவித்து வைத்தாற்போல்
கம்பீரமாக முதிரும் இந்தப் பாறை
மண்ணில் குப்புறப் புதைந்து
அமிழும் மாபெரும் வீணையின்
குடம்போலத் தோன்றுகிறது
இது நிரந்தரமற்ற உண்மைக்கும்
தாற்காலிகப் பொய்க்குமான
காட்சி தர்க்கமாக மாறுகிறது
இது ஒருவகையில்
மாத்திரையின் நிறத்தைக் கண்டு
காய்ச்சலின் நிறத்தைக் கற்பனை செய்யும்
குழந்தைத்தனம்
பாறைகள் பேசி வாயாடி
கற்சதை குலுங்கச் சிரித்துப்
பார்த்ததுண்டா யாரேனும்?
பாறைகளெல்லாம் எப்போது
ஊமைகளாயின, யாருக்குத் தெரியும்?
உறக்கத்தில்கூட உளறாத
இந்தப் பாறையின் வெடித்த உதடுகளில்
அபூர்வமாகத் துளிர்த்த சொல்
மொழியைத் தொட்டு விலகிச்
செடியாக நிற்கிறது.
கனத்த மௌனத்தின் ரேகையாக
வேர்கள் ஆழ்ந்து எங்கே செல்கின்றன?
நாளை இது மரமாகும்போது
அதன் கிளைகளில்
கோடையின் ஒளித்துகில்கள் நழுவலாம்.
அதன் இலைகளில்
மார்கழி அமுதம் மதுவாக வழியலாம்.
அதன் மலர்களில்
காதல் புன்னகைக்கலாம்.
அதன் காய்களில் சாத்தான் புளிக்கலாம்.
அதன் கனிகளில் கடவுள்கூட இருக்கலாம்.
அவற்றுள் அடக்கமில்லை
இந்தப் பாறையின் ருசி.
பாறையை உண்டு பசியாறியவன் என்ற தகுதியில்
இதன் ருசியை என்னால் கூற முடியும்
அப்போது
நான் மீண்டும் பிறந்தால்..
அன்றும் இந்த மரம் இருந்தால்..
*
கட்டக் கடைசியாக
கடவுளிடம்
இரண்டு கனவுகள் எஞ்சின.
இரண்டையும்
யாரிடமாவது ஒப்படைக்கும்படி
இரண்டு கனவுகளும் கெஞ்சின.
சமபாதியாய் பங்கிட்ட
சமதர்மக் கடவுள்
ஒன்றைத் தம்மிடமே வைத்துக்கொண்டார்
மற்றொன்றை
ஒரு குருடனிடம் ஒப்படைத்தார்.
*
த்யானம்
ஒளித்தாரையின் தளிரெனத் துளிர்த்தெழுந்தது
விதியோடு கொடிவீசி விளையாடி
விருட்சமென வளர்ந்து
பூ துறந்து காய்க்காமல் கனியாமல்
கிளையொன்றுக்கும் வலிக்காமல்
இரவு பகல் பாராது முதிர்ந்து
அந்தரத்தில் மிதந்தபடி ஒரு பாறையென
மறைந்திருந்த மௌனம்
இக்கணத்தில் சருகாகி
மூச்சுக்காற்று சரசரக்க
உற்றுப் பார்க்கிறது
உள்ளே யாரும் உளரோயென்று.
*
அவரவருக்குப் பாத்தியப்பட்ட
அவரவருக்கான பாதைகளில்
அததற்கான சாத்தியங்களோடு
ஆங்காங்கே காத்திருக்கின்றன
அனைவருக்குமான
அறிமுகமற்ற விபத்துகள்.
அவனுக்கு இது ஒரு பயணம்
இவனுக்கு இது ஒரு யாத்திரை
எவனுக்கோ இது ஒரு பவனி
உனக்கோ இது ஒரு பறத்தல்
எனக்கோ இது ஒரு எச்சரிக்கை
எனக்கு மட்டும் ஏன் இப்படி?
*
என்ன ஆயிற்று இந்த இரவுக்கு?
முழிக்கும் முழியே சரியில்லையே!
அறைவிளக்கை எதற்கும்
அணைக்காமலே வைப்போம்.
பகலில் இது எங்கு போயிருக்கும்?
போன இடத்தில் என்ன நடந்திருக்கும்?
கடன்காரன் யாராவது
கண்டிப்பாகப் பேசியிருப்பானோ?
நாளைக்கு வேலைக்கு வரவேண்டாமென்று
மேலதிகாரி சொல்லியிருப்பானோ?
பழைய காதலி கீதலி எவளையாவது
எதேச்சையாகப் பார்த்துத் தொலைத்துவிட்டதா?
பந்தயக் குதிரைக்குக் கட்டிய பணம்
நொண்டியடித்துவிட்டதோ?
கைக்குழந்தையோடு கையேந்திய பிச்சைக்காரியைக்
கண்டும் காணாது நடக்கும்போது
சித்தம் கலங்கியிருக்குமோ?
குடை வாங்கினால் மழை இலவசமென்று
நடைபாதை வியாபாரி நயமாகப் பேசி
ஏமாற்றியிருப்பானோ?
ஓசிக்கண்ணாடியில் முகம் பார்த்ததற்காக
கார் முதலாளி கன்னத்தில் அறைந்திருப்பானோ?
எதுவாக இருந்தாலும்
விடியவிட்டு விசாரித்துக்கொள்ளலாம்
அதுவரை எரியட்டும் விளக்கு.
*
இப்படித்தான்
ஒரு நாள்
ஒரு தெருவில்
ஒரு சிறுமி
ஒரு பந்து
விளையாடிக்கொண்டிருந்தாள்.
தரையில் விட்ட பந்து
தாவித் தாவி
அவள் கைகளுக்கே
திரும்பி வந்துகொண்டிருந்தது.
ஒரு மாயக்கணத்தில்
பூமியே ஒரு பந்தாகித் துள்ளிற்று.
அதற்குள் அவளுக்கு
இருபத்தியொரு வயதாகிற்று.
*
அறிந்ததிலிருந்து யாரும்
விடுதலை
அடைந்ததாகத் தெரியவில்லை
அடைய முடியுமென்றுதான்
நம்புகிறோம் அனைவரும்.
*
பரிசுத்த ஆவி
இடுப்பில் இருந்தபடி
கோவிலை நோக்கி
குழந்தை கைநீட்ட
கோவிலை வாங்கித்தரச் சொல்லி
குழந்தை அடம்செய்யுமென்று அஞ்சி
அங்கிருந்து வெடுக்கென விலகுகிறாள் அம்மா
வா வாவெனத் தன்னிடம்
குழந்தையை அழைத்தபடி
அந்தரத்தில் குழைகின்றன
மாடப் புறாக்களைக் கோபுரத்தில் தூவும்
மாயக் கரங்கள்.
*
அகப்புறம்
நீ வேறு நான் வேறு
இருள் வேறு இரவு வேறு
இருள் ஒரு பொருள் போல
இரவோ இன்னொன்றின் மனம்
ஒளி வேறு பகல் வேறு
ஒளி ஒரு பொருள் போல
பகல் எதனொன்றின் உடல்?