அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்

3 comments

ஜெ.பிரான்சிஸ் கிருபாவின் கன்னி தமிழின் ஆகச்சிறந்த நாவல்களுள் ஒன்று. இது பல எழுத்தாளர்களும் வாசகர்களும் ஏற்கெனவே ஏற்றுக்கொண்ட விஷயம்தான். பல்வேறு நேர்காணல்களில் கன்னி நாவல் தனது சொந்த அனுபவம் என்றே கிருபா குறிப்பிட்டுள்ளார். அவரது இயற்பெயர் பிரான்சிஸ். கிருபா என்பது அவர் பம்பாயில் இருந்தபோது நெருங்கிய நண்பனாக இருந்தவரது பெயர். அவர் சிறுவயதிலேயே இறந்துவிட்டதாகவும் அவர் நினைவாக இந்தப் பெயரைப் பின்னொட்டாக வைத்துக்கொண்டதாகவும் கூறியுள்ளார்.

ஏற்கெனவே முகநூலில் முதன்முதலாகக் கன்னி நாவல் வாசித்தபோது ஏற்பட்ட பரவசத்தில் ஒரு பதிவு இட்டிருந்தேன். ஆனால் அது சுருக்கமான வாசக அனுபவம் மட்டுமே. இந்தக் கட்டுரைக்காக நிதானமாகவும் ஆழமாகவும் திரும்ப வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

சந்தன பாண்டியைக் கவனிக்கும்தோறும் அவனுள் எளிதில் காயம்படக்கூடிய, சிறிய விசயங்களுக்கும் அதீதமாய் உணர்ச்சிவசப்படக்கூடிய, மீச்சிறு புள்ளியில் ஒரு பிரபஞ்சத்தைச் சிருஷ்டித்து மகிழும் ஒரு கவிஞனை நாவல் முழுவதும் பார்க்கிறோம். ஓர் உளவியல் மருத்துவர், நரம்பியல் நிபுணர் இந்த நாவலை வாசித்தால் பல இடங்களில் இதை அவர் நோய்க்கூறாகவே காணும் சாத்தியமுண்டு. தன்னை முழுக்கவே உணர்ச்சிக்கு ஆட்பட அனுமதித்துக்கொள்ளும் ஒருவனை இந்தச் சமூகம் ஏற்பதில்லை. கெடுபேறாக கவிஞர்களின் ஆதாரக் குணமாக அதுவே இருக்கிறது. இந்த நாவலில் ஓரிடத்தில் அமலாகூட இதையேதான் சொல்கிறாள்.

“எதுக்கு இவ்வளவு ஹைபர்-சென்சிடிவா இருக்க? இதுல கவிதை வேற. எல்லாத்தையும் ஊதி ஊதி பலூன் மாதிரி பெருசாக்கி பறக்க விட்டுக்கிட்டேயிருந்தா எப்படி? நிலத்துல நில்லு.”

சொற்களுக்குச் செறிவூட்டுவதும், செறிவான சொற்களைக் கண்டடைவதும் நவீன கவிஞர்களின் உள்ளார்ந்த தன்மையாக இருக்கிறது. கிருபாவின் கவிதைகள் இவற்றில் விதிவிலக்கானவை. அது பாடிப் பாடித் தன்னை உணர்த்தும் குயிலைப்போல வஞ்சகமின்றி வார்த்தைகளைத் தெளிப்பவை. அவரது கவிதைகளின் பேசுபொருளான காதலும் அதற்கு முற்றாக இயைந்த தொனியைக் கொடுத்துள்ளது. ஒரு கவிஞர் பிரக்ஞைப்பூர்வமாகத் தனக்குள் கண்டடைந்த கவிதை மொழி இயங்கும் இலயம் வேறு. கிருபாவே சொல்வதுபோல கொந்தளிப்பான நேரத்தில் அதைக் கொட்டித் தீர்ப்பதுடன் முடிந்து போகக்கூடியது வேறு. இதைச் சற்று நீர்க்கச் செய்தால் அல்லது மனதுள் அசைபோட்டால் அதை ஒரு சிறுகதையாக விரிக்க முடியும். அந்தளவே ஒரு கவிதைப்பரப்பு கைகொடுக்கக்கூடியது. நாவல் அப்படியானதல்ல. அது உரைநடை வடிவம். பரந்த அகவயமான காலகட்டத்தைக் கோருவது. கிருபாவிடம் இயல்பாகப் பொங்கிப் பெருகும் வார்த்தைகள் நாவல் மூலம் கச்சிதமாகத் தன் இடத்தைக் கண்டடைந்துவிட்டதென்றே சொல்லலாம். மனதுள் நிழலாடும் நினைவுகளைக் கோர்த்து, ஒளிச்சலன நாட்டியமாக்கி, கவித்துவத்துடன் வரிகள் விழுகின்றன. ஒரு கவிஞரின் புதினம் மிகச்சிறந்த வாசிப்பனுபவத்தைக் கொடுக்கக்கூடிய ஒன்று.

பாண்டியின் உலகமே ஒரு கோவிலைப்போல உள்ளது. அங்கு கிட்டத்தட்ட எல்லாக் குற்றங்களும் மன்னிக்கப்பட்டுவிடுகின்றன அல்லது எங்கோ மறதிக்குள் போய்விடுகின்றன. மிகப் புனிதமான பாதங்களை நெஞ்சில் ஏந்தி பாண்டி அவற்றை ஆராதிக்கிறான். மேலும் மேலும் என்று முக்தி வேண்டி தவம் கிடக்கும் முனிவனைப்போல விளைவுகளைக் கண்டு அஞ்சாது சென்றபடியே இருக்கிறான். வாழ்க்கை ஒரு பக்கம் புழு போல ஓடிக்கொண்டிருக்கிறது. காதலில் விழுந்தவருக்கும், விழுந்து எழுந்தவருக்கும் கன்னி ஓர் அற்புத அனுபவம்.

”கவிதை காதலுடனும் மெய்(மை)யியலுடனும் தொடர்புடையது. உரைநடையோ உலகியல் சார்ந்தது. கவிதையை உரைநடைக்குக் கொண்டுவருவதில் பிரச்சினைக்குள்ளாகிற ஒரு மனிதனின் தவறிவிழுந்துவிட்ட பாதைதான் ’குடி’ என்பேன்” என்கிறார் கவிஞர் தேவதேவன்.

கன்னி நாவலை முதன்முதலாக வாசித்தபோது ஐயோ நாவல் முடியப்போகிறதே என்று ஏக்கத்துடன் மெதுமெதுவாகத் தயங்கிக் கடந்ததாக, நான் மட்டுமல்ல, பலரும் சொல்லியிருக்கிறார்கள். கன்னி போன்ற ஒரு நாவல் எந்த எழுத்தாளருக்கும் ஓர் உச்சம். இத்தனை இளம் வயதில் இப்படியோர் உச்சத்தைத் தொட்டதில் சற்று வருத்தம்தான். பிரான்சிஸ் கிருபா என்ற கலைஞன் மிச்சமீதியின்றித் தன் ஆன்மாவை இதில் கொட்டியிருக்கிறான். இதுபோலொன்றை அவனே நினைத்தாலும் திரும்ப உருவாக்குவது சந்தேகம்தான். உச்சத்தை அடைந்தபின் மிச்சம் ஏதுமிருப்பதில்லை. உச்சம் என்பது நின்று கொண்டிருக்கக்கூடிய இடமும் அல்ல. ஒன்று ஏறிக்கொண்டிருக்கிறோம் அல்லது இறங்கிக்கொண்டிருக்கிறோம். எல்லோரும் “கிருபா குடிக்காமல் இருந்திருந்தால்?” என்ற கேள்வியை வைத்து என்னென்னவோ பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஏசு தன் இரத்தத்தை முழுக்கவும் சிந்தியபின்பும் அவன் இன்னும் அந்தக் காயங்களோடு இருந்திருக்கலாமே என்று கேட்பது போலிருக்கிறது.

ஒரு மனிதனின் வாழ்க்கை மீது ஏன் இப்படி கருத்து சொல்கிறோம்? நம்முடைய வாழ்க்கையைத் தாண்டி நமக்கு எதுவும் யோசிக்கத் தெரியாது என்பதுதான் காரணமாகத் தோன்றுகிறது. யாரையும், எதையும் நியாயப்படுத்துவதல்ல எனது நோக்கம். ஒரு கலைஞனின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து எதற்கு அபிப்பிராயம் சொல்ல வேண்டும்? தன்னால் முடிந்த பங்களிப்பை எந்தக் குறையுமின்றி ஒருவன் முழுமையாகத் தன்னை ஒப்புவித்துக் கொடுத்திருக்கிறான். தன் வாழ்வின் மிகப்பெரிய சாதனையைச் செய்தவன். அதற்காக அவன் அனுபவித்த வதைகளையும், இழிவுகளையும் பற்றிப் பேசவோ, அறிவுரை சொல்லவோ வேண்டியதில்லை. நிச்சயம் இழப்புதான். வருத்தம்தான். அதை அவரது படைப்புகளை வாசித்தும், கொண்டாடியும்தான் வெளிப்படுத்த வேண்டும். ஒரு பேட்டியில் அவர் வாங்கிய விருதுகள், அப்போது அடைந்த மகிழ்ச்சி, மறக்க முடியாத சம்பவங்கள் குறித்துக் கேட்டபோது, அதெல்லாம் தனக்குப் பெரிய விசயமில்லை, எழுதி முடித்தவுடன் கிடைக்கும் நிறைவே தனக்குக் கிடைக்கும் பெரிய வெகுமதி என்று சொல்கிறார். If only you could stand on others shoes…

வரிகள் கவித்துவத்தால் நிறைந்து தளும்புகின்றன. உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்கள் நிறைந்த ஒரு காப்பியமாகவே கன்னி உள்ளது. வேறு வகையில் ஓர் இசை நாடகமென்றும் சொல்லலாம். ஒரு காட்சி விவரிக்கப்படுகிறது. அது நகர்ந்து ஒரு புள்ளியில் முடியும்போது அந்தத் தருணத்தில் தொக்கி நிற்கும் உணர்வுநிலை கவிதையாக வடிக்கப்படுகிறது. சில அத்தியாயங்களில் சூழலுக்கு ஏற்ப ஒன்றுக்கு மேற்பட்ட கவிதைகள்.

கன்னி நீராலானது. கடற்கோள், சுனை, அருவி, காட்டாறு, கார்முகில், மழை என்று பாகங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. கால வரிசைப்படி கடற்கோள் கடைசியாக வரவேண்டியது. அற்புதமான வாசிப்பனுபவம் கிட்டும் வண்ணம் நாவலைக் கலைத்து அடுக்கியிருக்கிறார் கிருபா. அதிலும் மழை என்ற பாகம் கருவி மாமழை. வெடிக்கிற குண்டு வெகு தூரத்தில்தான் போய்விழும் என்பதுபோல், மழையும் கடற்கோளும் தூரமாய்ப் பிரிந்து கிடக்கின்றன. நாவலின் தொடக்கத்தில் பிற்சேர்க்கை 2 ஆக ஏலான ஆசாரியின் இறப்புவரை சொல்லப்படுகிறது. கன்னி நாவலும்கூட சந்தன பாண்டிக்கு கை, கால்களில் மாட்டுவதற்கு விலங்கு செய்துதரும் ஏலான ஆசாரியின் நினைவுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. இப்படி நாவல் பாத்திரத்துக்கு வேறு யாரும் சமர்ப்பணம் செய்திருக்கிறார்களா என்று தெரியவில்லை. விலங்கு மாட்டும்போது அவரைச் சந்தன பாண்டி நெஞ்சில் ஓங்கி மிதிக்கிறான். சில நாட்களில் அவர் மாரடைப்பில் இறந்துபோகிறார். ஊரிலும் பாண்டியின் உடலுக்குள் இருக்கும் சத்ராதிதான் காவு வாங்கிவிட்டதாகப் பேசிக்கொள்கிறார்கள். நாவல் சொந்த அனுபவம் என்று கிருபா சொல்வதை வைத்துப் பார்க்கையில் அறியாமல் செய்த (செய்யாத?) பிழைக்கு அவர்கோரும் பாவமன்னிப்பாகவும் இந்தச் சமர்ப்பணம் உள்ளது.

சிறுவயதில் தன் அக்கா வீட்டில் வாங்கி பின்னர் தன் வீட்டில் வளர்ந்துவந்த ஜிம்மி நாய் பாண்டிக்குக் காவலாகவும் தோழனாகவும் இருக்கிறது. ஆனால் விலங்கிடப்பட்டுக் கிடக்கும் நிலையில் அவன் ‘ஜிம்மிக்கு சோறு வச்சியா?’ என்று கேட்கும்போது அவன் அம்மா திகைக்கிறாள். அது ஏதோ அவனாகக் கற்பனை செய்துகொண்ட ஒன்று என்று நினைக்கிறாள். இந்த மயக்கம் அப்படியே ஒரு புகைமூட்டத்தைச் சித்திரமாக வரைந்தது போலிருக்கிறது. இல்லாத நாயோடு காட்சிகளை உருவாக்கிக்கொள்கிறானோ? ஏலான ஆசாரியின் இறுதி நேரத்தில்கூட நாய் அவர்மீது பாய்வதாக வருகிறது. 

பிற்சேர்க்கைக்கு அடுத்தபடியாக கடற்கோள். இதன் முக்கியப் பகுதியாக கடலுக்கும் கிழவனுக்கும் இடையில் நடப்பவற்றைச் சொல்லலாம். தத்துவார்த்தமான உரையாடல் மூலம் கவித்துவத்தைச் சாதித்துக் காட்டியிருக்கிறார். நீரை திராட்சை இரசமாக மாற்றும் அந்தத் தாடிக்காரரின் திறமையைக் கேள்விப்பட்டு, உவர்த்துக் கிடக்கும் கடல் தன்னை முத்தமிட்டு இரண்டேயிரண்டு அலைகளை மட்டும் இனிப்புச் சுவையும், இன்ப போதையும் ததும்பும் திராட்சை இரசமாக நிரப்பச் சொல்கிறது. தாடிக்காரர் மறுக்க, கன்னிக் கடல் வருந்த அது புயலாய்ப் பெருக்கெடுக்கிறது. கடலிலாடும் தோணிகள் தத்தளிக்கின்றன. தோணியிலுள்ளவர்களைக் காப்பாற்ற தாடிக்காரர் கடலை முத்தமிடுகிறார். “தாடிக்காரன் தட்டுத்தடுமாறிக் கடவுளான தருணங்களில் மிக முக்கியமானது உப்புக்கடலைத் திராட்சை ரசமாக்கியது”. அந்த இரசத்தைப் பருகுவதற்காக கிழவர் கரையிலேயே காத்திருக்கிறார். என்றாவது கரிக்கும் கடலலையொன்று அந்தத் திராட்சை இரச அலையை வீசிவிடாதா? அந்த அலை பேரலையாயிருக்கும். முழுக் கடலும் கதி கலங்கிப் போகும். அது கடற்கோள். கடற்கோளுக்காக, அந்நாளில் தித்திக்கும் அலைநீரைப் பருகக் கரையில் காத்திருக்கும் கிழவன். அதுவே தன் பிறவிப் பயனாகக் காத்துக்கொண்டிருக்கிறான். அதுதான் மரணம் என்றாலும்.

அத்தையும் அத்தை மகளும் இந்தப் பாகத்தின் ஓர் அத்தியாயத்தில் வருகிறார்கள். அழகு, கவர்ச்சி, காமம் இவற்றால் பொங்கியபடி ஒரு பட்டாம்பூச்சிபோல சில கணங்கள் அங்கே படபடத்துப் பறக்கிறான் பாண்டி. அத்தை வீட்டுப் புறவாசல் பக்கத்துத் தோட்டம். அங்கே ஊஞ்சலில் படுத்திருக்கிறாள் அத்தை மகள். அவள் நெற்றியில் நீர்த்துளி பொட்டு விட்டிருக்கிறது.

“மழை வந்திருக்குமோ,

மழை வருகிறதே என்று அவள் வானத்தை முகம் நிமிர்த்தி பார்த்திருப்பாளோ,

அப்போது மழையின் முதற் துளி நெற்றிப் பொட்டில் விழுந்திருக்குமோ,

‘ஐயோ இவள் நனைந்து போவாளே, துளிகளின் தொடர் தெறிப்பில் உடல் கன்றிப் போவாளே’

என்று இந்த முதற் துளி அலறிக் குரல் கொடுத்திருக்குமோ,

அதைக் கேட்டு வானம் இரக்கப்பட்டு ஒரு துளியோடு மழை பொழிவதை நிறுத்தியிருக்குமோ,

ஒரு முழு மழையின் ஏக்கத்தை இந்தத் தனித்துளி தாங்கி நிற்கிறதா…’

உள்ளிருந்து ஆணுக்குள் ஒரு வாசம் எழ வேண்டியிருக்கிறது. அந்த வாசத்தில் அவன் தன்னை மறந்து முகிழ்க்க ஆனந்திக்க வேண்டியிருக்கிறது. பருவத்தே வெடித்துத் திறக்கும் அந்தப் பூவின் மணத்தை அறியாதவருண்டோ? ஆயினும் கவனிக்காததுபோல, சட்டை செய்யாததுபோல, நடிக்கப் பழகியிருக்கிறோம். இந்த அத்தியாயத்தில் பல இடங்கள் சாண்டில்யனின் வர்ணனையைப் போல இருக்கின்றன. ‘மார் மொட்டுகள்’ என்ற பிரயோகத்தையும் கையாள்கிறார். ஆனால் அந்த மூன்றாம்தரமான வர்ணனையை வேறு தளத்துக்கு நகர்த்தும்படி அடுத்தடுத்த வரிகளும் வந்து விழுகின்றன. கிருபா வார்த்தைகள் எதையும் விலக்குவதில்லை. ஒரு காட்டாறுபோல் ஓடும் நாவலில் வார்த்தைகள் மிதந்து செல்கின்றன.

நாவலை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம். சந்தனபாண்டியின் பெரியம்மா மகள் அமலா கன்னியாஸ்திரியாகும் வரை ஒன்று. தேரித்துறை அமலோற்பவத் திருவிழாவில் சாராவுடனான காதலும் கைவிடப்படலும் இரண்டாவது. மூன்றாவது பைத்தியநிலை. அமலா கன்னியாஸ்திரியாக மாறும்போதே பாண்டியிடம் பித்துநிலைக் கூறுகள் தென்படத் தொடங்குகின்றன. கற்பனையான காட்சிகள் இலேசாய் எட்டிப் பார்க்கின்றன. அதன்பின் அவன் பம்பாய் சென்றுவிடுகிறான். வருடந்தோறும் அமலோற்பவத் திருவிழாவுக்கும் அச்சமயம் ஊருக்கும் வந்து செல்வதோடு சரி. சாராவைத் தனது சிறுவயதில் இறந்துபோன மகளைப் போல இருக்கிறாள் என்று அவனது பாட்டி சொல்லும்போது, “அத்தை போல இருந்தால் என்ன, அக்கா போல இருந்தால்தான் என்ன” என்று ஓரிடத்தில் தனக்குத்தானே கேட்டுக்கொள்கிறான். இதைத் தவிர்த்து இரண்டாம் பகுதியில் அமலா என்ற பெயர்கூட உச்சரிக்கப்படுவதில்லை. பாண்டிக்கு மனநிலை தவறிய நிலை அமலாவுக்குத் தெரியுமா? அவள் வந்து பார்த்தாளா? அவள் கடைசியாக அவனிடம் ஒரு கடிதம் கொடுத்தாளே, அதில் என்ன எழுதியிருந்தது? இவை மௌனமாக்கப்பட்டுள்ளன. இந்தக் கேள்விகளுக்குப் பதிலும் தேவையில்லைதான். அவை மௌனித்திருப்பதே துயரார்ந்த வரிகள்தான்.

பித்துநிலையை அந்த நிலையை எட்டிப்பிடிக்காமல் எழுத முடியாது. மனநிலை பிறழ்ந்த நிலையை, அந்த மனக்காட்சிகளை, மனவோட்டங்களை தத்ரூபமாக வார்த்தைப்படுத்தியிருக்கிறார் கிருபா. மனப்பிறழ்வின்போது எத்தனைதான் குரூரமாக அவன் நடந்துகொண்டாலும் விரும்பியது கிடைக்காமல் ஏங்கியழும், வீம்பு செய்யும் குழந்தையின் கோபத்தைத் தாண்டி அதில் எதுவுமிருப்பதில்லை. நாவல் முழுவதிலும் மூன்று மையப் பாத்திரங்களான சந்தனபாண்டி, அமலா, சாரா மூவரும் அகத்தூய்மை உடையவர்களாக இருக்கிறார்கள். உளப்பிறழ்வுக் காட்சியாக விரியும்போது வரும் அத்தை, அத்தை மகள், தனது பால்ய காலத்திலும் கல்லூரியிலும் இடையில் வரும் மெல்கி, விஜிலா, பிரேமா ராணி அக்காள், ஜூலி என்று எந்த நிகழ்வுகளும் இந்தப் புனிதத்தைக் கலைத்துவிடுவதில்லை. அவன் திசைமாறாமலிருக்கும் கலங்கரை விளக்காக அமலா இருக்கிறாள். எக்காரணம் கொண்டும் காதலிக்கவே கூடாது என்ற வைராக்கியமும் கல்லூரியில் படிக்கும்போது அவனிடம் இருக்கிறது. தனக்குப் பிடித்திருந்தாலும் கல்லூரியில் உடன் படிக்கும் விஜிலாவைக்கூட விலக்குகிறான். பாண்டி சாராவுக்கு எழுதும் கடிதத்தில் குறிப்பிடுவதுபோல, அல்லது அமலாவின் அக்கா அவனைக் கிண்டல் செய்வதுபோல, ஒரு நாய்க்குட்டியாகவே தன்னை முழுக்க ஒப்புக்கொடுத்துப் பின்தொடரக் கூடியவனாக இருக்கிறான்.

’சுனை’ பகுதியில் ’மெசியாவின் காயங்கள்’ தலைப்பில் வரும் கவிதையும், ‘அலை வளையல்’ அத்தியாயத்தில் வரும் கள்ளன் போலீஸ் என்ற நீள்கவிதையும் அற்புதமானவை.

உயிர் பிரியும் கணத்தில்

தம் காயங்களை

கடைசியாய் பார்வையிட்ட

மெசியாவின் கண்களை

பல நூற்றாண்டுகள் கழித்து

இன்று சந்தித்தேன்

கடற்கரையில்

மடித்த கைப்பைகளுடன்

சூழ்ந்து நின்ற மனிதர்களுக்கு

மத்தியில் மல்லாத்தியிட்டு

தன் வயிற்றில் இறங்கி முழு

வட்டமடித்த கத்தியைத்

தலை தூக்கி எட்டிப் பார்த்தது

ஆமை

இந்த நாவலில் பல கவிதைகள் அவரது கவிதைத் தொகுப்புகளிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளன. அவை உண்மையிலேயே அந்தக் கணங்களில் எழுதப்பட்டவை எனும்படி மிகக் கச்சிதமாக நாவல் தருணங்களோடு பொருந்திப் போகின்றன.

கள்ளன் போலீஸ்      

நம் இருவருக்கான பிரத்தியேக விளையாட்டில் எப்போதுமே நீதான் போலீஸ்

நான்தான் கள்ளன்

குற்றங்களும் தண்டனைகளும் நம்மிடையே மலையெனக் குவிந்து கிடந்தன

பால்ய பருவங்களின் தொலை தூரங்கள் வரை செறிந்த கூந்தலாடும் மரத்தடி நிழல்களில் உனக்காக நான்தான் வரைந்து தருவேன் எனக்கான சிறைச்சாலைகளை

தண்டிப்பதற்கும் நான்தான் தயாரித்து வருவேன் உறுதியான பிரம்பும், கொடிப் பிரண்டை கை விலங்கும்

தண்டனைகளை மட்டுமே நீ கொண்டுவந்து தருவாய்

அடைக்க உதவுகின்ற உடைக்க முடியாத பூட்டுகள் உன் பார்வைகளின் பரணிலிருக்கும்

சாவிக்கொத்துகள் உன் ஈரச்சொற்களில் தொங்கியாடும்

குட்டிக்குட்டி கொலைகள் செய்வது, கொஞ்சநஞ்சமாய் கொள்ளையடிப்பது, கிழிக்க முடியாத பொய்களைத் தைப்பதென விதவிதமான குற்றங்கள் புரிந்தேன்

அனைத்தையும் கண்டுபிடித்தாய்

மன்னிப்பின்றி அத்தனைக்கும் வகை வகையான தண்டனைகள் அளித்தாய்

ஒரு மழைக்காலத்தின் முதல் நாளில் மலர்களைச் சுமந்து வந்த காகிதக் கப்பலைக் கடத்திவிட்டேன்

வானம் ஓயும் முன் துப்புத்துலக்கி குற்றவாளியைக் கைது செய்துவிட்டாய்

சிறைச்சாலைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு விட்டதால் அம்மழைக்காலம் முடிய எனக்கு வீட்டுக்காவல் விதித்தாய்

இரவும் பகலும் தூக்கத்திலும் விழிப்பிலும் என்னைக் கண்காணித்த வண்ணமிருந்தன சிறை மதில் சுழல் விளக்குகளாக உன் விழிகள்

மழை வெயில் குளிரென காலவாரியாக தரமான தண்டனைகளைத் தந்த வண்ணமிருந்தாய்

கனவுகளில்கூட சிறைகளில் மகிழ்ந்து வாடினேன்

விதிப்பாட்டின் முரணாக, விளையாட்டின் முடிவாக, தோழிகள் புடைசூழ தோள்மாலையோடு மணமேடையில் புதுமாப்பிள்ளை முதுகில் ஒளிந்து மறைந்து பதுங்கிப் புன்னகை கசிந்து, ஊதி ஊதி உதடுகளில் நீயுன் உயிராற்றி நின்றிந்து, அப்போது நானும் கண்டுபிடித்தேன் ஒரு குற்றத்தை

கண்டும் பயனென்ன?

எப்போதுமே நம் விளையாட்டில் நீதான் போலீஸ்

நான்தான் கள்ளன்

அமலாவுடனான உறவைக் காதல் என்று சொல்லிவிட முடியாது. அது அத்தனை புனிதமாக வடிக்கப்பட்டுள்ளது. மேலேயுள்ள கள்ளன் போலீஸ் கவிதைகூட சக்தி வழிபாடு போன்ற ஓர் ஆராதனைதான். எப்போதும் தன்னைத் தகுதியற்ற நிலையில் வைத்துக்கொண்டு, எல்லாம் அறிந்த தெய்வாம்சம் பொருந்தியவளாக மனத்திலிருப்பவளை உருவகிப்பது. பெருவாரியான ஆண்கள் காதலின்போது சரணாகதியடைந்து விடுகிறார்கள். என்றென்றைக்குமாகத் தேடித்திரிந்த அடைக்கலம் அதுதான் என்பதுபோல. எக்காரணம் கொண்டும் அதில் தனக்கு இடம் கிடைக்காமல் போய்விடக்கூடாது என்ற அதீதப் பதற்றம் தொற்றிக்கொள்கிறது. சிறு கோபமும் பெருத்த இரணமாய் வலிக்கிறது. தல்ஸ்தோய் எழுதிய கசாக்குகள் என்ற நாவலில் ஓர் ஆதிவாசிப் பெண்ணிடம் மையல் கொள்ளும் அரசு அதிகாரி, அந்தக் காதல் பித்தில் தன் மனதுக்குள் சொல்வதாக ஐந்தாறு பக்கங்களுக்குமேல் விரியும் காதலின் தகிப்பு இந்தக் கள்ளன் போலீஸ் கவிதையில் வெளிப்படுகிறது.

பாதிரியார் கேட்டுக்கொண்டதற்கு இணங்க பக்திப் பாடல்களை எழுதித் தருகிறான் பாண்டி. அவை இசையமைத்துப் பாடப்பட்டு சி.டி.யாக வெளிவருகிறது. தலைப்பு ‘அன்பில் உண்டோ ரகசியம்’. இதை நுணுக்கமாக கிருபா அமைத்திருக்கிறார். அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்ற குறளிலிருந்து இந்த வரியை அவர் பெற்றிருக்கக்கூடும். இந்த வரி இந்த அத்தியாயத்தில் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. அமலாவும் பாண்டியும் முதன்முதலாகக் கன்னியாகுமரி செல்கிறார்கள். யாருக்கும் தெரியாது. வழியில் அருள் பெரியப்பாவைப் பார்த்ததும் அவர் பார்த்துவிடக்கூடாது என்று பதற்றத்தில் நழுவியோடுகிறான் பாண்டி. ‘பாட்டுக்குப் பரிசு வேண்டாமாடா’ என்று கேட்டு அவனுக்குத் தான் அணிந்திருக்கும் சிலுவை டாலர் கொண்ட தங்கச் செயினைப் பரிசளிக்கிறாள். பாண்டி மறுக்கிறான், ‘இல்ல. ஊர்ல போட முடியாது. வேற எங்கயும் பாதுகாப்பா வைக்க முடியாது.’ பின் செயினை எடுத்துக்கொண்டு அந்தச் ’சிலுவையை’ மட்டும் அவனுக்குப் பரிசளிக்கிறாள். பாண்டி தன்னை மறந்து இயல்பான வாழ்க்கை வாழ வேண்டுமென்பதற்காக அவள் கன்னியாஸ்திரியாகப் போகும் சில நாட்களுக்கு முன்பாக இந்தச் சிலுவையைத்தான் திருப்பிக் கேட்டு வாங்குகிறாள். அதைக் கடலில் எறியப்போகும்போது பாண்டி தடுக்கிறான். ‘அது எனது சாந்தாகுருஸ்’. சாந்தாகுருஸ் என்பது புனிதச் சிலுவையைக் குறிப்பது.

அன்பில் உண்டோ ரகசியம்? வெளியுலகத்தாருக்குக் காட்ட வேண்டியதில்லை. அப்படி மறைப்பதால் அது இரகசியம் என்று பொருளில்லை. யாரிடம் அன்பு செலுத்துகிறோமோ அவரிடம் திறந்த இதயத்தோடு இருப்பதுதான் விசயம். பிளஸ் ஒன் அரையாண்டுத் தேர்வில் மதிப்பெண் குறைவாக பாண்டி வாங்கியிருக்கும்போது அமலா அது குறித்துக் கேட்கிறாள். மனசு சரியில்லை என்கிறான்.

“என்ன செய்யுது?”

”ரூபினா அக்கா கல்யாணத்தோட இருட்டுல யாருமில்லாத இடத்துல பிரேமா ராணியக்கா என்னிய கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுக்க வந்தாக்கா…” பாண்டி பதற்றத்தோடு சொல்லிவிட்டு குனிந்த தலை நிமிராமல் நின்றான்.

ஊஞ்சல் நின்றது. சிறிது நேர மௌனத்துக்குப் பிறகு தணிந்த குரலில் கேட்டாள், “நீ என்ன பண்ணுன?”

“நான் ஒன்னும் பண்ணல. சும்மா நின்னேன்” தலையை இலேசாக உயர்த்தினான்.

’சட்’டென்று அவன் கன்னத்தில் அறை விழுந்தது. நிலைகுலைந்து போனான். படிக்கட்டுகளில் கோபமாக இறங்கிப் போனாள். அந்த முறை அவனிடம் சொல்லாமலே நாகர்கோவிலுக்குப் போய்விட்டாள்.

பாண்டி அமலாதாசன் என்று புனைப்பெயர் வைத்துக் கொள்வது; அதை அமலா மாற்றச் சொல்வது;

கோட்டாறு சவேரியார் கோவிலுக்குப் போய் பாண்டியை ஏலம் விட்டு எடுத்துவரச் செல்லும்போது ஐநூற்றியோரு ரூபாய் கொடுத்து அமலா அவனை ஏலம் எடுப்பது;

விஜிலா நல்ல பெண் அவளை ஏற்றுக்கொள் என்று அமலா சொல்லும்போது பாண்டி, “என்னால முடியாது. இனி எப்பவுமே முடியுமான்னும் தெரியலை” என்று சொல்வது;

கிருஷ்ணாபுரம் கோவிலில் அமர்ந்திருக்கும்போது அமலா, “வளராமலே இருந்திருந்தா எவ்வளவு புண்ணியமா இருந்திருக்கும்! இல்லையாடா…” என்று சொல்வது;

ஒரு குழந்தைக்கு அமலா பெயர் வைக்கும்போது ‘பிரான்ஸிஸ் அமலாதாஸ்’ என்று பெயர் வைப்பது;

“அப்புறம் இன்னொரு விசயம். உனக்கு என்னப் பாக்குற போதெல்லாம் நேர்ந்துவிட்ட ஆடு மாதிரியே தோணுது. பாட்டி சொன்னாங்கிறதெல்லாம் எனக்கு ஒரு பொருட்டே இல்லை. எல்லாம் தெரிஞ்சு நானே தெளிவான முடிவோடதான் வார்த்தைப்பாடுக்குப் போறேன். நேற்று அந்த முடிவு இன்னும் ஸ்ட்ராங்காயிருச்சு. அறிவுப்பூர்வமாகூட இல்ல, விவேகத்தோட எடுத்த முடிவு. ஐ யம் நாட் ரிலிஜியஸ். சேர்டன்லி நாட். நீ இவ்வளவு படிச்சும் இன்னும் விவரம் புரியாதவனா இருக்கியேடா.”

“இப்படியே இருந்தாப் பைத்தியமாயிருவடா.”

“இல்லனா நான் சாகணும்.”

அன்பில் எங்கும் எதிலும் இரகசியமில்லை. களங்கமுற்ற அன்பு என்று ஒன்றில்லை.

பாண்டியைவிட அமலா ஒரு வயது மூத்தவள். அக்கா முறை வேறு. இருவருக்குமிடையில் இருக்கும் ஆழமான நேசம் சுனை, அருவி ஆகிய இரண்டு பாகங்களிலும் வெளிப்படுகிறது. அமலா தீவிர வாசகி. அவளுக்குக் கடவுள் பக்தியெல்லாம் இல்லை. பாட்டி சொன்னாள் என்பதற்காகக்கூட அவள் கன்னியாஸ்திரி ஆகவில்லை. கன்னியாஸ்திரியாகவில்லை என்றால் எல்லாரையும்போல் சாதாரணமாகக் கல்யாணம் பண்ணிக்கொண்டு வாழ வேண்டும். அது முடியாது. அவள் பாண்டிக்காகச் சுமக்கும் சிலுவை அது. மோகமுள் நாவலில் ‘இதற்குத்தானா?’ என்ற வார்த்தை நிகழுமிடம் அந்நாவலின் உச்சகட்டமாக அமைந்திருக்கும். அதைப்போல கன்னி நாவலின் இறுதி அத்தியாயத்தில் சாராவின் ‘மன்னிக்க’ என்று சொல்லுமிடம். ஆனால் இப்படி உச்சமாக அமையாவிட்டாலும் ஒரு நீண்ட துயர இசையாக அமலாவுடன் பாண்டியின் கடைசிநாள் அமைந்திருக்கிறது. ‘முழு விருப்பத்தோடதான் போறியாக்கா?’ என்று கேட்கிறான் பாண்டி. அவளால் அழத்தான் முடிகிறது. சொல்லாத சொற்கள் உதடுகளில் துடிக்கின்றன.

ஒருவகையில் அமலா கடவுளா காதலா என்பதில் காதலைத் தேர்வுசெய்கிறாள் எனலாம். அதுதான் அவளுக்கு இருக்கக்கூடிய சரியானதும் ஒரேயொரு வழியாகவும் இருக்கிறது. சாராவுக்கு இதே கேள்வி வரும்போது அவள் கடவுளைத் தேர்ந்தெடுக்கிறாள். இருவரையும் நேசித்த பாண்டி என்னும் கவிஞன் பைத்தியமாகிறான்.

’காட்டாறு’ பகுதியில் பம்பாயில் மனம்பிறழ்ந்து திரிந்த நாட்கள் வருகின்றன. நாவலெங்கும் கடலைத் தேடியபடியே இருக்கிறான் பாண்டி. பிறழ்ந்த மனதில் வெவ்வேறு காட்சிகள். இதில் கடலோடு, காடும் மலையும் சேர்ந்துகொள்கின்றன. மரங்கள் அடர்ந்த அருவி, நீர் விழும் தூரத்து மலை. அதை மட்டும் கொண்டுவந்துவிட்டால் சாரா தன்னிடம் வந்துவிடுவாள் என்ற தற்காட்சியில் நடந்தபடியே இருக்கிறான். மலை அங்கேயே இருக்கிறது. இந்தப் பித்துநிலையில் ஒரு மண்டபத்தை அடைகிறான். அங்கு சாராவைப் போல ஒரே மாதிரியான ஏழு சிற்பங்கள். அவை சூரியனும் நிலவும் ஒளியால் ஆசையோடு வடித்தவை. திடீரென்று அவனுக்கு இறகுகள் முளைக்கின்றன. வானில் பறவைகள் வெவ்வேறு வண்ணங்களில் கூடிப் பிரிந்து ஒரு முகத்தை வரைந்தன. இமைகளை வடிக்க அவை ஒன்றுகூடி சட்டென்று விலக விழி திறக்கிறது. ‘சாரா’ என்று அலறியபடி சிறகுகள் படபடக்க மேலே மேலே என்று அந்தப் பறவைகளை நோக்கிச் சென்றபடி இருக்கிறான். அவை ஒருசேர அவன்மேல் பாய்ந்து குதற, அந்தச் சிறகுகள் சிலுவைகளுக்குள் அறைபட்ட சிலுவைபோல் எலும்புக்கூடு மட்டும் மிஞ்சுகிறது.

இந்தப் பகுதி ஷெல்லியின் ‘ஸிசைகிடியான்’ என்ற கவிதையிலிருந்து உதித்த நினைவுச் சிதறல்களாகத் தோன்றுகிறது. ஐந்தரைப் பக்கம் நீளும் நீள்கவிதை அது. எமிலியா விவியானி தன் விருப்பத்துக்கு மாறாக கன்னியாஸ்திரி ஆக்கப்படுகிறாள். அவள் தோழனான ஷெல்லி அவளை விளித்துப் பாடுவதாக இது அமைந்துள்ளது. இந்தக் கவிதையில் ஒரு வரி இப்படி வருகிறது,

‘தன்னுடன் பிறந்தாள் தனக்கும் தன்னுடன் இணைந்தாள் தனக்கும்

தனித்தநல் சோபனமாக தழையின்பத் தில்லம் அஃதை’

இன்னொருவரி அப்படியே பாரதி பாடியது போலிருக்கிறது,

‘வாழ்வதும் மற்றுக் காதல் புரிவதும் ஒன்றேயாமென’

ஷெல்லி கவிதைகளடங்கிய புத்தகத்தை சாராதான் அவனுக்குப் பரிசளிக்கிறாள். அதுவும் குறிப்பாக இந்தக் கவிதையை வாசிக்கச் சொல்லிக் கொடுக்கிறாள். அந்தக் கவிதை தனது தோழியைத் தங்களுக்கென இருக்கும் யாருமற்ற ஒரு தனித்த தீவுக்கு தன்னோடு குடிபுக வரும்படி அழைக்கிறது. நிற்க.

கார்முகில், மழை ஆகிய இரண்டு பாகங்களும் சாராவுக்கு. மேலே குறிப்பிட்ட ஷெல்லியின் கவிதையுடன் கார்முகில் தொடங்குகிறது. அமலோற்பவ அன்னை ஆலயத்தில் நடக்கும் பத்துநாள் திருவிழாவும் ஒரு தேர்ந்த காமிராவைப் போலப் படம்பிடிக்கிறது. இந்தப் பகுதிகள் முழுவதும் கைதேர்ந்த திரைக்கதை ஆசிரியரைப் போல அல்லது ஒரு இசைக்கலைஞனின் சிம்பொனியைப் போல நிகழ்த்தப்படுகிறது. கார்முகில் முழுக்க பதினைந்து அத்தியாயங்களில் காதலெனும் சிந்தாநீரால் கனத்துப் போகிறது. “மழை” பகுதியில் பிற்சேர்க்கையாக வரும் 15அ என்ற ஒரே அத்தியாயத்தில் அப்படியே மிச்சமின்றிக் கொட்டித் தீர்க்கிறது. நடந்துமுடிந்த ஒரு பகுதியை வெகுகாலத்துக்குப்பின் திரும்பிப் பார்க்கும் ஒருவருக்கு அந்த நேரத்துக் கிறுக்குத்தனங்களும் தவிப்புகளும் இனிய நினைவுகளாக நிறைந்திருக்கும். அதை நினைவுகூறும்போது கூடவே ஒரு சுய எள்ளலையும் சேர்த்துக்கொள்கிறார். சமயங்களில் இந்த எள்ளல் இல்லாமல் இருந்திருந்தால் இன்னும் உணர்வுப்பூர்வமாக இருந்திருக்குமோ என்று தோன்றினாலும், அது மேலும் இரசிக்கத்தக்கதாகவே அமைந்திருக்கிறது. இந்தப் பின்நவீன யுகத்துடன் உரையாடும் சரியான மொழி இதுவாகவே இருக்கும் என்றும் தோன்றுகிறது.

கன்னி வாசிக்கும் யாராலும் அதை மோகமுள் நாவலுடன் ஒப்பிடாமல் இருக்க முடியாது. மோகமுள்ளில் யமுனா பாபுவை ஒரு காதலனாகப் பார்ப்பதில்லை. கடைசிவரை அப்படி அவள் வெளிக்காட்டியதுமில்லை. யமுனாவை ஆராதிக்கும் பாபுவுக்கு ஒரு கட்டத்தில் அவனது இசைப் பயணத்தில் வரும் தேக்கத்துக்கு யமுனா மீது கொண்ட பெருங்காமம் காரணமாயிருக்கிறது. அதை மனமுவந்து அளிப்பவளாகவே யமுனா இருக்கிறாள். ‘இதற்குத்தானா’. அவளுக்கு அது ஒன்றுமேயில்லை. அவனைவிடப் பத்து வயது மூத்தவள். முதிர்கன்னி. இந்தக் கட்டத்துக்குப் பிறகு (சிலநாள் உறவுக்குப்பின்) தனது இசைக்கனவை நோக்கித் திரும்பிவிடும் பாபு வடநாட்டுக்குக் கிளம்பிச் சென்றுவிடுகிறான். அத்தனை தூரம் மிக நீண்டு விரியும் இந்த நாவல், இந்த இடத்தைத் தொட்டவுடன் அவசர கோலத்தில் முடித்திருப்பது போல் இருக்கிறது, அப்படியில்லாமல் நிதானமாக எழுதப்பட்டிருக்கலாம் என்றொரு கருத்தை எழுத்தாளர் சு. வேணுகோபால் முன்வைக்கிறார். எனக்கு அப்படித் தோன்றவில்லை.

காமம் அடைபட்டுக் கிடக்கும் வரைதான் ஊகித்துப் பார்த்திராத சிக்கலாக, வாழ்வின் முடிச்சே அங்குதான் என்பது போலிருக்கிறது. அந்தத் திரை விலகியதும் எல்லாமே இலகுவாகிவிடுகிறது. நாவல் இந்த இடத்தில் வேகவேகமாய்த் தாண்டிச் செல்வதைப் பல விதங்களில் புரிந்துகொள்ள முடியும். மனம் என்னென்னவோ சித்திரங்களை, கற்பனைகளை வரைந்தபடியே இருக்கிறது. அந்தச் சித்திரங்கள் யதார்த்த அனுபவத்துடன் மோதும்போது வேறொன்றாய்ப் பரிணமிக்கிறது. ஏங்கியதெல்லாம் நிறைவேறும் அந்நேரத்திலும் இன்னொரு பக்கம் அதுவரையில் படர்ந்த சித்திரங்கள் அனைத்தும் நொறுங்கி விழுகின்றன. வெற்று உடல் சேர்க்கை வெறும் இயந்திரத்தனமானது. அதில் ஒன்றுமில்லை. காமம் மனதில் வாழும் ஓர் உயிரி. தலைகீழாய்க் கவிழ்த்த செம்பில் மிச்சம் ஏதுமிருப்பதில்லை. ஆனாலும் ‘இதற்குத்தானா’ என்பது ஒரு தரிசனம். மிக ஆழமான தேடல். மிகப் பெரிதாய் ஊதிய அழகான சோப்புநுரைக் குமிழி.

கன்னியில் வரும் காதல்கள் ஒருதலைக் காதலல்ல. இதில் பாண்டி, அமலா, சாரா மூவருமே பிரியத்தைக் காட்டவும் கொடுக்கவும் வழியின்றித் திணறுகின்றனர். கொடுக்கவும் காட்டவும் இருக்கும் ஒரே வழி இந்த உடல் மட்டும்தான். அதன் நிமித்தமே உடல்கள் இணைகின்றன. ஆசையையும், பிரியத்தையும், ஆராதனையையும் உடல்வழி கொட்டுகின்றன. கண்களில் வெளிக்காட்டுகின்றன. மோகமுள்ளில் ஏற்படும் ஒருவிதக் கிளர்ச்சியை சாராவுடனான உறவு ஏற்படுத்துவதில்லை. மன்னிக்க என்பது ஒரு பிரார்த்தனை போல, வாசிப்பவரே சாராவாகவும், பாண்டியாகவும் மாறிமாறி உணர்ந்து தன்னிலையழிக்கும் கட்டமது.

சாராவுக்கும் பாண்டிக்கும் மெல்லிதாய்த் துளிர்க்கும் காதலில் சிறு ஊடல் வருகிறது. மிகச் சிறிய நிகழ்வு அது. ஆனால் அவனை எப்படி ஆட்டிப்படைத்து விடுகிறது! எதற்கென்றே தெரியாமல் ஒரு மன்னிப்புக் கடிதம் எழுதி அவள் முன் வைத்துவிட்டுச் செல்கிறான். எதற்கென்று தெரியாமல் இருப்பதற்காகவும் மன்னிப்பு கேட்கிறான். அந்த இரக்கமற்றவள் கோபத்தோடு கசக்கி அவன் முதுகில் வீசிவிடுகிறாள். தற்செயலாய் கடற்கரையில் அவளிடம் சென்றுசேரும் அவன் கவிதைத் தாள்கள் அவளை உருக்கிவிடுகின்றன. திரும்ப அவள் முகத்தில் புன்னகையைக் காண்கிறான். அவன் கேட்ட மன்னிப்பை அவள் எப்படித்தான் வழங்குவாள்? மன்னிப்பை அனுபவிப்பது என்பதுதான் என்ன?

3 comments

கண்ணன் November 26, 2021 - 1:20 pm

நிறைவான கட்டுரை பாலா. வாழ்த்துக்களும் அன்பும் ❤️

பாலா கருப்பசாமி November 26, 2021 - 7:53 pm

நன்றி கண்ணன்.

நாகராஜன் November 27, 2021 - 7:58 pm

இதமான விமர்சனம் அல்லது பார்வை…பாபுவின் பிரியம் பெருங்காமம் தானா..பாண்டியின் பிரியம் போல பவித்ரமானது அல்லவா..எல்லாப் ப்ரியங்களுமே போற்றத்தக்கதுதான்.

Comments are closed.