எல்.கே.ஜி

3 comments

“ஒழுக்கம்தான் சார் ஃபர்ஸ்ட்டு, ஒழுக்கமில்லாத பசங்க இந்த ஸ்கூலுக்குத் தேவையில்ல, நீங்க ஒங்க பையன கூட்டிட்டுப் போயிருங்க சார். இவன வச்சிட்டு எங்களால முடியல,” தலைமை ஆசிரியரின் கோபத் தெறிப்பு அவரது அறையையும் தாண்டி வெளிவந்தது. 

தொடர்ந்து அந்தத் தகப்பனின் கெஞ்சல்களும் தலைமை ஆசிரியரின் கறாரான பதிலுமெனச் சில நிமிடங்கள் சென்றன. சலிப்பும் வருத்தமுமாகத் அந்தத் தகப்பன் வெளியேற அவரைப் பின்தொடர்ந்து தலையைக் குனிந்தபடி வந்தான் ஒரு சிறுவன். என்ன, ஒரு பத்து வயது இருக்கும். இந்த வயதில் அப்படி என்ன ஒழுக்கக்கேடு செய்திருப்பான் என நான் யோசித்திருந்த போது பள்ளியின் அனுபவமிக்க ஆசிரியர்கள் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக வந்து என்னை வணங்கியபடி அடுத்து உள்ளே செல்வதற்காகக் காத்திருந்தனர். 

உள்ளிருந்து இருமுறை மணியடிக்க, பரபரக்க ஓடிவந்த உதவியாளர், “எக்ஸ்கியூஸ் மீ மேம்,” என்றபடி உள்ளே சென்றார். 

“பீக் டைம்ல எங்கயும் போகாதீங்கன்னு எத்தன தடவ சொல்றது ஒங்களுக்கு? ஒருத்தரும் சரியில்ல? காலங்காத்தாலயே எத்தன பஞ்சாயத்து! ச்சை, நாயக் குளுப்பாட்டி நடுவீட்ல வச்சா என்ன செய்யும், சவத்த…” 

“சாரி மேம், சீனியர் டீச்சர்ஸ வரச் சொல்லிருந்தீங்க, அதான் கூப்புடப் போய்ட்டேன்.”

“ஓ, ஒன்னு பண்ணும், அடுத்த தடவ கூப்புடப் போகும்போ ஆளுக்கொரு மாலையும் வாங்கிட்டுப் போவும், என்ன?”

“சரி மேம், சாரி மேம். சாரி மேம்.”

“நீரு வேற என் உயிர எடுக்காதேரும். என்ன, எல்லா பெரியவாளும் வந்தாச்சா?” 

“எஸ் மேம். வெளியதான் வெயிட் பண்ணிட்ருக்காங்க. வரச் சொல்லவா மேம்?”

“ம்‌ம்.. பத்து நிமிசம் கழிச்சி எல்லாருக்கும் டீ கொண்டு வரச் சொல்லிருங்க. ஆமா, ஹெச்.ஆர வரச் சொல்லிருந்தேனே, வந்துட்டாரா?”

“ஆமா மேம், சார் வந்து பத்து நிமிசம் இருக்கும்.”

“அட வெவரங்கெட்டவனே.. இவ்ளோ நேரம் அதச் சொல்லாம… கண்ணாடி போட்ட ரூம் ரெடி பண்ணுங்கன்னு சொல்லி அஞ்சு மாசமாச்சி. என்ன மேனேஜ்மெண்ட்டோ! என்ன எழவோ! நமக்கு வேற வெண்கலத் தொண்ட.. சரி, சரி ஹெச்.ஆர் சார கெஸ்ட் ரூம்ல உட்காரச் சொல்லும். மத்தவங்கள உள்ள அனுப்பும்.”

“எஸ் மேம், ஓகே மேம்.”

“அப்றம். அந்தப் பொண்ணயும் வரச் சொல்லும்.”

“மேம்?”

“அதான்யா, அந்தப் பிள்ள, தியா வா? ரியா வா? எல்.கே.ஜில?”

“எஸ் மேம். ஓகே மேம்.”

உதவியாளர் வெளிவந்து கைக்குட்டையால் முகத்தைத் துடைத்தபடி ஆசிரியர்களை உள்ளே போகுமாறு சொல்லிவிட்டு என்னருகே வந்து வணங்கினார். 

“என்ன, ரொம்ப சந்தோசமா வெளிய வறீங்க? மேடம் எதாவது குட் நியூஸ் சொன்னாங்களோ?” என்று சிரித்தவாறு அவரது கைகளைப் பிடித்தபடி கேட்டேன். 

“மெதுவா பேசுங்க சார், அந்தம்மாவுக்கு சொவரெல்லாம் காது. இதுல எவன் எங்கப் போயி என்னத்தப் போட்டுக் குடுக்கான்னு வேற தெரியல. நீங்க கெஸ்ட் ரூம்ல வெயிட் பண்ணணுமாம் சார். அடுத்த பஞ்சாயத்து என்னன்னு தெரியல, பெரிய குரூப்பே உள்ள போகுது. நீங்க வேற வந்துருக்கீங்க! யாருக்கு சீட் கிழியப் போகுதோ!”

“ஏம்ப்பா, நா வந்தாலே சீட்டக் கிழிக்கத்தானா? நீயே போதும் போலயே, நம்மள ஏதோ வில்லன் மாதி ஆக்கிருவ, என்னா?”

“அட இல்ல சார், நான் ஏதோ பொலம்புவேன், கண்டுக்காதீங்க. வறீங்களா, கெஸ்ட் ரூமத் தொறந்து விட்டுட்டு எல்.கே.ஜிக்கு ஓடணும்.”

“பரவால்லண்ணே. நா இங்கேயே இருக்கேன். நல்ல காத்தோட்டமா இருக்கே!” என்று சிரித்தேன். 

“சரி சார்,” என்றபடி தன் கைக்கடிகாரத்தைப் பார்த்தவர், ஓட ஆரம்பித்தார்.

தலைமை ஆசிரியர் அறையிலிருந்து மீண்டும் மணியடித்தது. 

“எங்க போயி தொலஞ்சாரோ, சரி, விசயத்துக்கு வருவோம். என்ன நெனைக்கிறீங்க நீங்க எல்லாரும்? ஒவ்வொருத்தரா சொல்லுங்க,” என்றார் தலைமை ஆசிரியர். 

சற்று நேரம் அமைதி. 

“என்னப்பா, சீனியர்ஸ் நீங்களே இப்பிடி அமைதியா இருந்தா எப்படி? டீம் மீட்டிங்லதான் யாரும் பேச மாட்டீங்கன்னா இங்கயுமா? எனக்கு ஒங்க ஒப்பினியன் தெரியணும் ஃபர்ஸ்ட்டு, அப்றமா என் முடிவ நான் சொல்றேன். சோ, ரிலாக்ஸ் நவ் அண்ட் ஸ்பீக் அப்.”

மீண்டும் சில நிமிடங்கள் அமைதி நீடித்தது. தலைமை ஆசிரியர் தொடர்ந்தார். “லிசன், எதுக்கு நீங்கல்லாம் இவ்ளோ தயங்குறீங்கன்னு புரியுது. கூட வேல செய்ற ஆளப் பத்தி அவர் இல்லாதப்போ பேசுறது சரியில்லதான். ஆனா, என்ன நடந்ததுன்னு தெரியணும்னா பேசித்தான ஆகணும்? கம் ஆன். ஹெச்.ஆர் வேற வெயிட் பண்ணுறார்.”

பணிப்பெண் ஒருவர் கதவின் அருகே சென்று தயங்கியபடி நின்றார். கையில் ஒரு தட்டில் தேநீர் குடுவையும் தம்ளர்களும். 

“யாருப்பா அங்க?” என்று கேட்டார் தலைமை ஆசிரியர். 

அந்தப் பெண் கதவைத் தள்ளிக்கொண்டு உள் நுழைய, “ஏம்மா எத்தன தடவ சொல்லிருக்கேன், எக்ஸ்கியூஸ் மீ கேட்டுட்டு வாங்கன்னு, நானா வந்து கதவத் தொறக்க முடியும்? சரி சரி, டீயக் குடுங்க, பிஸ்கட் கொண்டு வரலயாக்கும்?” என்று கத்தினார் தலைமை ஆசிரியர். 

என்னருகே இருந்த நாற்காலியில் வந்து துள்ளியேறி உட்கார்ந்தாள் ஒரு சிறுமி. அதுதான் எல்.கே.ஜி ரியாவாகவோ தியாவாகவோ இருக்கும். உட்கார்ந்தவள் ஏதோ தூரத்தில் நிற்கும் யாரையோ பார்த்துக் கையசைப்பதைப் போல என்னைப் பார்த்துக் கையசைத்துச் சிரித்தாள். 

நான் திரும்பிப் பின்புறம் பார்க்க, “அய்யோ அய்யோ, நான் உங்களப் பாத்துதான் ஹாய் சொன்னேன், நீங்க அங்கத் திரும்பிப் பாக்கீங்க?” என்றபடி சத்தமாகச் சிரித்தாள் அவள். 

“ஓ, ஹாய். உங்க பேரு என்ன செல்லம்?” என்று அவளது கையைப் பிடித்தபடி கேட்டேன். 

“சொல்லமாட்டேன். நீங்க எதுக்கு என் கையப் புடிச்சீங்க? குட் டச், பேட் டச்லாம் உங்க மிஸ் சொல்லிக் குடுக்கல்லியா? அய்யோ அய்யோ!” என்றபடித் தன் கையை உருவிக்கொண்டே சிரித்தாள். 

“ஓ சாரி, சாரி,” என்று நான் என்ன சொல்லவெனத் திணறியபடி இருக்க, மீண்டும் துள்ளிக் குதித்து அங்கிருந்த தொட்டிச் செடிகளின் அருகே போய் நின்றாள். 

உள்ளிருந்து குரல்கள் வர, நான் சாய்ந்து உட்கார்ந்தபடி கவனித்தேன். 

“மேம், இதொன்னும் ஃபர்ஸ்ட் டைம் கெடயாது. அவரு ஜாயின் பண்ணதுலேந்தே இப்பிடித்தான் இருக்காரு. நெறைய பேரு சொல்லியாச்சு. ஆனாலும் மாத்தமில்ல,” என்றது கரகரப்பான ஒரு குரல். கணக்கு ஆசிரியராக இருக்கும். 

“ம்‌ம், எனக்கும் தகவல் அப்பிடித்தான் கெடச்சிது. சரி, என்ன பண்ணலாம்னு நீங்க நெனைக்கீங்க சார்?” என்று கேட்டார் தலைமை ஆசிரியர். 

“அது வந்து… மேம், மத்தவங்களும் சொல்லட்டும்.”

“எஸ், எல்லாரும் பேசுங்க. சயின்ஸ் மிஸ், நீங்க என்ன சொல்றீங்க?”

“மேம். எஸ் மேம். பி.டி. சார் ரொம்ப நல்ல டைப் மேம். அவரு தப்பான எண்ணத்தோட எதுவும் செஞ்சிருக்க மாட்டாருன்னு நான் நெனைக்கேன். அஞ்சு வருசமா இங்க இருக்காரு. பிள்ளைங்க எல்லாருக்கும் அவருன்னா ரொம்பப் புடிக்கும் மேம். கூப்ட்டு பேசிப் பாக்கலாம்னு தோணுது. ஆக்சன்லாம் வேண்டாம் மேம்,” என்று உறுதியாகச் சொன்னார் அறிவியல் ஆசிரியை. 

“ஓ, இண்டரெஸ்ட்டிங். ஆனா, கொழந்தைங்க வழியா பேரெண்ட்ஸ் வரைக்கும் போயிருக்கே, அதுக்கு என்ன சொல்றீங்க? தப்பான எண்ணம் இல்லன்னே வச்சுக்குவோம். அதுக்காக வீட்ல இருக்க மாதிரி எல்லாமே பண்ண முடியுமா? அப்றம் ஸ்கூல் எதுக்கு, நாமெல்லாம் எதுக்கு?”

“சரிதான் மேம். ஆனாலும், எனக்கு உறுதியா தெரியும், இங்க அவருதான் நெறைய கொழந்தைங்களோட பெட், ஆதர்சம் எல்லாம். தப்பா ஏதும் பண்ணிருக்க வாய்ப்பேயில்ல. அவர் பொண்ணும் இங்கதான் படிக்கிறா மேம். மத்தவங்களும் சொல்லட்டும்.”

விசயம் என்னவாகயிருக்கும் என்பது ஓரளவிற்குப் புரிந்தாலும் சரியாக என்னவென்று தெரியாமல் கவனித்தபடியிருந்தேன். அந்த எல்.கே.ஜி சிறுமி பூக்களுடனும் சுவருடனும் பேசிக்கொண்டிருந்தாள்.   

“மேம், நீங்க அடிக்கடி சொல்றமாதி டிசிப்ளின்தான மேம் முக்கியம்? ஒரு சாரே இப்பிடி இருந்தா பசங்க எங்க வெளங்குவாங்க? அவரும் அவருக்க டிரெஸ்ஸும். மொதல்ல இந்த பனியன் நிக்கர் போடுறத மாத்த சொல்லுங்க மேம், பாக்க சகிக்கல,” என்றது மற்றொரு பெண் குரல். 

“என்ன மிஸ் பேசறீங்க? அவரு பி.டி சார், பேண்ட் ஷர்ட் போட்டுட்டா வெளயாட முடியும்? ஸ்போர்ட்ஸ்க்குன்னு ஒரு டிரஸ் கோடு இருக்கு மிஸ். இதெல்லாம் கொற சொல்லாதீங்க, கொஞ்சம் டூ மச். பிரச்சின என்னவோ அதப்பத்தி பேசுங்க,” என்று காட்டமாகப் பதிலளித்தார் அறிவியல் ஆசிரியை. 

சிறுமி ஒரு முறை என்னைப் பார்த்தாள். பின், எட்டி தலைமை ஆசிரியர் அறையைப் பார்த்துக் கண்ணைச் சிமிட்டியவாறு முகத்தைத் திருப்பினாள்.

“மேம், நம்ம பேசிக்ஸ் ட்ரெயினிங்க்ல என்ன சொல்லிக் குடுக்குறோம்? குழந்தைகளின் முன் உட்கார்ந்து தேநீரோ திண்பண்டங்களோ சாப்பிடாதீர்கள், ஒருபோதும் குழந்தைகளைத் தொட்டுப் பேசாதீர்கள், கொஞ்சும் வார்த்தைகளில் அவர்களை அழைக்காதீர்கள். எல்லா ரூல்சுமே எல்லாருக்கும் தெரியும்தானே? பொறவு அதையே செஞ்சா எப்பிடி? இந்த லட்சணத்துல ஸ்கூல் டிசிப்ளின் கமிட்டில வேற அவரு இருக்காரு. ஒன்னும் சரியில்ல, அவ்ளோதான் நான் சொல்வேன் பாத்துக்கோங்க,” என்று சலித்தது மற்றொரு ஆண் குரல். 

சிறுமி ஒரு சிறு செடியின் அருகே குத்தவைத்து உட்கார்ந்து அதன் இலைகளை ஒவ்வொன்றாக எண்ணி எண்களைச் சொல்லிக்கொண்டிருந்தாள். பிறகு ஒரு பூவைப் பறிக்கப் போவதைப் போல பாவனை செய்தபடி அந்தச் செடியைப் பயமுறுத்தினாள். பின் சிரித்தபடி, “சாரி, சாரி” என்றாள். தன் தலையில் வைத்திருந்த பூச்சரத்தை ஒருமுறை தொட்டுப் பார்த்துக்கொண்டாள். பிறகு மீண்டும் அந்தச் செடியுடன் பேச ஆரம்பித்தாள். 

“சரி, நாம நெனைக்கறது ஒரு பக்கம் இருக்கட்டும். ஹெச்.ஆர் மேனேஜரும் வந்துருக்காரு. அவர் என்ன சொல்றாருன்னு கேப்போம், தென், வீ வில் டிசைட், என்ன?” என்று சொல்லி முடிக்கவும் மணி அடித்தது. உதவியாளர் உள்ளே ஓடிய வேகத்தில் வெளியே வந்து என்னைப் பார்த்து சைகை செய்தார். 

மெல்ல எழுந்து எனது குறிப்பேட்டையும் பேனாவையும் எடுத்துக்கொண்டு கணினிப் பையை அவரிடம் கொடுத்தேன். சீப்பை எடுத்து முடியைச் சீர்செய்தபடி உதவியாளரிடம் என்ன என்று கண்ணால் கேட்டேன். அவர் உள்ளங்கையை நெற்றியில் அடித்தபடி சிரித்தார். அந்தச் சிறுமி என்னைத் திரும்பிப் பார்த்தபடி நின்றுகொண்டிருந்தாள். நண்பகல் சூரிய ஒளி ஏதோ பாத்திரத்தில் பட்டு அவள் மீது விழ, கூசிய கண்களோடு ஒருவிதமாக முறைத்து நின்றாள். அவளுக்குப் பசித்திருக்க வேண்டும் என்று நினைத்தபடி தலைமை ஆசிரியர் அறைக் கதவருகே சென்றேன். 

“எக்ஸ்கியூஸ் மீ மேடம்.” 

கதவைத் தள்ளிக்கொண்டு நான் உள்நுழைய, “ப்ளீஸ் கம் இன் சார், ப்ளீஸ் கம் இன்..” என்றபடி என்னை நோக்கி கிட்டத்தட்ட ஓடியபடி வந்தார் தலைமை ஆசிரியர். 

“ஹலோ மேடம். எப்படி இருக்கீங்க? ரொம்ப நாளாச்சே பாத்து” என்றவாறு மற்றவர்களையும் பார்த்துப் புன்னகைத்தேன்.  

“அத ஏன் கேக்கறீங்க சார்? நிம்மதியா எங்க நம்ம வேலய செய்ய விடுறாங்க? நீங்க ஒக்காருங்க மொதல்ல, ப்ளீஸ்,” என்று சொல்லிக்கொண்டே ஒரு ஆசிரியரிடம் அவர் கண்காட்ட, அவர் தனது நாற்காலியைத் தூக்கி தலைமை ஆசிரியரின் நாற்காலியின் பக்கத்தில் கொண்டு போட்டுவிட்டு இன்னொரு நாற்காலியில் சென்று அமர்ந்தார்.

அவருக்கு நன்றி சொல்லியபடி உட்கார்ந்து, “அப்றம் மேடம், இந்த வாட்டி என்னாச்சு? டோண்ட் டெல் மீ, இட்ஸ் எகயின் போக்ஸோ!” என்று கேட்டேன். 

“தெரியல சார், டு பீ ஃபிராங்க். இத எந்த கேட்டகரில வைக்கன்னு எனக்கே தெரியல. நீங்கதான் சொல்லணும்,” என்றார் தலைமை ஆசிரியர்.

“எஸ் மேடம். சொல்லுங்க என்ன பிரச்சின? பை த வே, வெளிய ஒரு குட்டிப் பொண்ணு ரொம்ப நேரமா வெயிட் பண்ணுதே!” 

“அதான் சார் விசயமே. நம்ம பி‌.டி சார் இருக்காருல்லா, அவரு பொதுவா எல்லா பசங்க கிட்டயும் கொஞ்சம் நெருக்கமா பழகுற ஆளு. பிரச்சினன்னு ஒன்னும் பெருசா வந்ததில்ல. ஆனா, இப்ப ஒன்னு ரெண்டு டீச்சர்ஸ் மத்திலயும் பேரண்ட்ஸ் மூலமாவும் ஒரு சில கம்ப்ளெயிண்ட்ஸ் வந்திருக்கு.”

“அவர் மேலயா? நல்ல டாலெண்டட் ஆளாச்சே! என்ன செஞ்சாராம்?”

கணக்கு ஆசிரியர் இடையில் புகுந்தபடி, “ரொம்ப மோசம் சார். அதென்ன, சின்னப் பிள்ளைங்கள தூக்கிப் போட்டு பிடிச்சி வெளையாடுறது? ஒன்னு கெடக்க ஒன்னு ஆயிட்டுன்னா என்ன பண்ணுறது? சரி, அதக்கூட விடுங்க, பிள்ளைங்க கன்னத்தப் பிடிச்சுக் கொஞ்சுறது, செல்லம், மக்ளேன்னு கூப்புடுறது, இதெல்லாம் ஓவரா இல்லயா? இதென்ன வீடா இல்ல பள்ளிக்கூடமா? டூ பேட்,” என்றார். 

“ஓ அப்படியா, எந்த கிளாஸ் பசங்க சார் அவங்க?” என்று அவரைக் கூர்ந்து பார்த்தபடி கேட்டேன். 

“அது, சின்னப் பசங்க சார். ஒன்னும் தெரியாத பசங்க.” 

“அதான் சார், எந்த கிளாஸ்ன்னு கேக்கேன்.”

“கிண்டர்கார்ட்டென், ஃபர்ஸ்ட்டு, செகண்டு.. அப்பிடி..”

தலைமை ஆசிரியர் கோபமாக, “எந்த கிளாஸ்ன்னா என்ன சார்? டீச்சர்ஸ் எப்பிடி பசங்களத் தொட்டு வெளையாடலாம்? நாளைக்கு ஏதும் பிரச்சின வந்தா யாரு போயி நிக்கறது? டிவி, பேப்பர்ன்னு நாறடிச்சிருவானுக,” என்றார். சொல்லிவிட்டு இறுகிய முகத்துடன் எதிரே மாட்டியிருந்த தனது கைப்பையை அவர் பார்க்க, இன்னொரு ஆசிரியர் எழுந்து அதிலிருந்து ஒரு தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொடுத்தார். தலைமை ஆசிரியர் என்னைக் கூர்ந்து பார்த்தபடி அதை வாங்கித் திறந்து குடித்தார். 

அறைக்குள் சற்று நேரம் மௌனம் நீடித்தது. ஆசிரியர்களில் இருவர் தங்கள் கடிகாரத்தைப் பார்த்தபடி நிமிர்ந்தனர். 

தலைமை ஆசிரியர் ஆசுவாசம் அடைந்தவராய், “அதெல்லாம் விடுங்க சார், இன்னும் சொன்னா நீங்களே கடுப்பாயிருவீங்க. பிள்ளைங்க கொண்டுவர சிப்ஸ், பிஸ்கட்லாம் புடுங்கித் திங்காரு சார். ஹவ் ரிடிக்குலஸ்!” என்றார். சொல்லிவிட்டு அவர் வாய்விட்டுச் சிரிக்க, ஆசிரியர்களில் சிலரும் சத்தமாகச் சிரித்தனர். சிரிக்காதவர்களின் முகத்தைப் பார்த்தபடி நான், “மேடம், சரியா சொல்லுங்க, புடுங்கி சாப்பிடுறாரா? இல்ல, பசங்களாவே அவருக்குக் குடுக்குறாங்களா?” என்று தலைமை ஆசிரியரிடம் கேட்டேன். 

தலைமை ஆசிரியர் சற்று திடுக்கிட்ட மாதிரியிருந்தது. ஒருகணம் மற்ற ஆசிரியர்களைப் பார்த்துப் பேச்சற்று இருந்தார். 

அறிவியல் ஆசிரியை அமைதியை விடுத்து, “சார், இதெல்லாம் கொஞ்சம் டூ மச் சார். அவரு அப்படி ஒரு பேசனேட் டீச்சர் சார். பசங்களுக்கு அவருன்னா உயிர். அவங்களே பிரேக் டைம்ல அவரத் தேடி ஓடுவாங்க. பசங்க பாசமா தங்களோட ஸ்நாக்ஸ கொடுக்கும்போது எப்பிடி வாங்கிச் சாப்பிடாம இருக்க முடியும்? இதெல்லாம் நாம டிஸ்கஸ் பண்ணுறதுதான் ரிடிக்குலஸ். ஒரு அருமையான ஆசிரியர ஒங்க ரூல்ஸ்னால அவமதிச்சிராதீங்க, ப்ளீஸ். எல்லாத்துக்கும் மேல, நாம எல்லாரும் எல்லா ரூல்ஸயும் கடைபிடிக்குறமா என்ன? அவர அவர் பாட்டுக்கு விட்டுருங்க சார். பசங்க நல்லாருப்பாங்க. அவ்ளோதான் நான் சொல்வேன்,” என்றுவிட்டு தலைகுனிந்து உட்கார்ந்துகொண்டார். 

கணக்கு ஆசிரியரும் இன்னும் இருவரும் இருக்கைகளை விட்டு எழுந்தேவிட்டனர். தலைமை ஆசிரியரின் முகம் கோபத்தில் இறுகிப் போயிருந்தது. அவர்களை உட்காரும்படி சைகை செய்தார். யாருக்கும் எதுவும் பேசத் தோன்றாததைப் போல சுவரையும் தரையையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டிருந்தனர். 

“சரி, ஒன்னு செய்யலாம். எல்லாரும் ஒவ்வொருத்தரா உங்க முடிவ சொல்லுங்க, கேப்போம். அதுக்குப் பிறகு நானும் மேடமும் முடிவு பண்ணுறோம். என்ன?” என்று எல்லோரது முகத்தையும் பார்த்தேன். மணி அதற்குள் ஒன்றை நெருங்கிவிட்டிருந்தது. அந்தச் சிறுமி போயிருப்பாளோ! 

“அவர ஸ்கூல விட்டு அனுப்பனும் சார்.”

“ஆமா, நானும் அதத்தான் சொல்ல வந்தேன்.”

“என்னைப் பொறுத்தவரைக்கும் அவர கூப்ட்டு பேசி கொஞ்சம் ஜாக்ரதயா இருக்கச் சொல்லலாம் சார்.”

“அவர் எந்தத் தப்பும் பண்ணல, இது சின்ன விசயம், அப்டியே விட்டுரலாம்.”

“ஆக்சன் எதுவும் எடுக்க வேண்டாம் சார்.”

“ஒரு மெமோ குடுக்கலாம் சார். வேலய விட்டுத் தூக்கல்லாம் வேண்டாம்.”

“நான் ஒன்னும் சொல்லல சார், மேம் என்ன செஞ்சாலும் சரியாதான் இருக்கும்.”

எல்லோரும் தங்கள் முடிவை சொல்லிவிட்ட பிறகு நான் தலைமை ஆசிரியரைப் பார்த்தேன். காலியான தன் தண்ணீர் பாட்டிலைக் கீழே வைத்தபடி, “ஓகே..” என்று அவர் பேசத் தொடங்கிய போது, அறைக் கதவைத் தள்ளிக்கொண்டு உள் நுழைந்தாள் அந்தச் சிறுமி. 

இரு கைகளையும் இடுப்பில் வைத்தபடி அங்கிருந்த எல்லோரையும் ஒரு சுற்று முறைத்துப் பார்த்தாள். 

நிமிர்ந்து எரிச்சலுடன், “ஏந்தான் இப்பிடி பேசிட்டே இருக்கீங்களோ? எப்பப் பாரு வளவளன்னு. கொஞ்ச நேரம்கூட சும்மா இருக்க முடியாதா? வெளிய ஒரே சத்தம். கிளாஸ் எடுக்காண்டாமா?” என்றாள். எனக்குச் சிரிப்பு பொத்துக்கொண்டு வர அடக்கியபடி மற்றவர்களைப் பார்த்தேன். 

“யாராவது சத்தம் போடுங்க, பி.டி சார்ட்ட அனுப்பிருவேன், ஜாக்ரத” என்று சொல்லிவிட்டுக் கைகளைப் பின்புறமாகக் கட்டிக்கொண்டு வெளியே சென்றாள். 

3 comments

Hanees November 28, 2021 - 11:51 am

எல்லாப் பாடசாலைகளிலும் ஏதோவொரு வகையில் நடைபெறும் அரசியலை எளிமையான முறையில் சிறுகதையாக மாற்றியிருக்கிறார் சுஷில்.

வாழ்த்துக்கள்.

Muthu Kannan November 29, 2021 - 2:12 pm

அற்புதம். கிளைமாக்ஸ் ரொம்ப பிடித்திருந்தது. வாழ்த்துகள்.

Comments are closed.