தஸ்தாயேவ்ஸ்கியின் நான்கு மாஸ்டர்பீஸ் நாவல்களான குற்றமும் தண்டனையும், அசடன், டெவில்ஸ் (The Devils), கரமசோவ் சகோதரர்கள் போன்றவற்றின் சிறப்பம்சம் அந்த நாவல்களில் உள்ள கடவுளின் இருப்பு சார்ந்த தேடல்கள்தான். இந்த நாவல்களில் உள்ள கடவுளின் இருப்பு சார்ந்த தேடல்கள் தஸ்தாயேவ்ஸ்கியின் உள்ளார்ந்த தொந்தரவைப் பிரதிபலிக்கின்றன, அதிலுள்ள கதாபாத்திரங்கள் அந்தத் தேடலை விவாதப்பொருளாக ஆக்குகின்றன. அது மட்டுமல்ல, அவரது நான்கு முக்கிய நாவல்களுமே கடவுளின் இருப்பு சார்ந்த கேள்வியின் உள்ளார்ந்த வலியிலிருந்துதான் உருவானவை, அந்த ஒரு கேள்வியின் தீவிரத்தால்தான் அவை வாழ்கின்றன. தஸ்தாயேவ்ஸ்கியின் ஆளுமை மட்டுமல்ல, அவருக்கு இயல்பாகவே உள்ள மேதைமை, கற்பனைத்திறன், சொற்தேர்ச்சி போன்ற அனைத்தும் ’கடவுளால் பாதிக்கப்பட்டு‘ அந்தப் பாதிப்பின் கடுமையால்தான் செயல்படுகின்றன.
நிறைய நாவல்கள் அடிப்படைக் கேள்விகளைக் கையாண்டு இருக்கின்றன. அவை அடிப்படைக் கேள்விகளை வெற்றிகரமாக, கலைத்தன்மையுடன் கையாண்டு இருக்கின்றனவா என்று ஆராய்வதற்கெல்லாம் அப்பால் அந்த நாவல்களின் வடிவம், கதாபாத்திரப் படைப்பு போன்ற மற்ற விஷயங்களை ஆராய முடியும், அவற்றை இரசிக்க முடியும். வடிவரீதியாக வெற்றியடைந்த நாவல்களில் அவை கையாண்ட மையக்கேள்வி என்பது அந்த நாவல்களின் ஒரு முக்கியமான அம்சம், அவ்வளவுதான். ஆனால் தஸ்தாயேவ்ஸ்கியின் நாவல்களைப் பொறுத்தவரை அதிலுள்ள கடவுளின் இருப்பு சார்ந்த கேள்வியை நாம் அப்படி அணுக முடியாது. அந்தக் கேள்வியைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் அவரது நாவல்களில் வடிவம் போன்ற வேறெந்த அம்சமும் தனியாக எஞ்சுவதில்லை. தஸ்தாயேவ்ஸ்கியின் கலைத்தன்மையும் அவரது நாவல்கள் கையாண்ட அடிப்படைக் கேள்விகளும் வேறுவேறானவை அல்ல என்று சுருக்கமாகச் சொல்லலாம்.
தஸ்தாயேவ்ஸ்கியின் கதாபாத்திரங்கள் கருத்துருவங்களின் பருவடிவங்கள் மட்டும்தான். அந்தப் பருவடிவங்கள் ஒன்றோடொன்று மோதிக்கொள்ளும்போது உருவாகும் இக்கட்டுதான் தஸ்தாயேவ்ஸ்கியின் படைப்புலகம். மையக்கேள்வியின் தீர்க்க முடியாத தன்மை அளிக்கும் நெருக்கடியும், அந்தக் கேள்வியின் உள்ளார்ந்த சரடான கருத்துருவங்களின் ஒத்திசைவின்மையும், மோதலும்தான் அவரது நாவல்களின் பேசுபொருள். அவரது கருத்துலகம் தாளமுடியாத தீவிரம் கொண்டது. அவரது கருத்துலகத்தில் உள்ள அடிப்படைக் கேள்விகளைத் தத்துவவாதிகளால் அல்லது இறையியலாளர்களால் மட்டும்தான் கையாளவோ, விவாதிக்கவோ முடியும். ‘மானுடம்’ சார்ந்த என்றென்றைக்குமான அடிப்படைக் கேள்விகள் மனிதர்களின் அன்றாட வாழ்க்கையின் பிரச்சினைகளில் ஒன்றல்ல. ஆனால், அந்தக் கேள்விகள் தஸ்தாயேவ்ஸ்கியின் படைப்புகளில் தொந்தரவிற்குள்ளாக்கும் உயிர்த்துடிப்பை அடைந்து வாசகரை நடுங்க வைக்கின்றன, அவர்களைச் சிந்தனைரீதியாக வதைக்கின்றன. தஸ்தாயேவ்ஸ்கியின் நாவல்களில் மையக் கேள்விகளும், கருத்துகளும் கண்கூச வைக்கும் உச்சிவெயில் சூரியனைப் போல, காட்டுத்தீயின் பொறுத்துக்கொள்ள முடியாத வெம்மை போல கனன்றபடியே இருக்கின்றன. தஸ்தாயேவ்ஸ்கியின் நாவல்களுடன் அறிமுகம் இல்லாத வாசகர்களால் அடிப்படைக் கேள்விகள் கொந்தளிப்பான தனி இருப்பை அடைய முடியும் என்பதை, பூதம் பிசாசு போல, கடவுளைப் போல தொந்தரவு செய்யக்கூடிய உருவை அவற்றிற்கு அளிக்க முடியும் என்பதை நம்பக்கூட முடியாது.
இந்த விசித்திரமான செயல்பாட்டைப் பற்றி விவாதிப்பதற்கு முன் தஸ்தாயேவ்ஸ்கியின் நாவல்களின் கட்டமைப்பைப் பற்றி சில விஷயங்கள் தெரிந்திருக்க வேண்டும். தஸ்தாயேவ்ஸ்கியின் நாவல்கள் கடவுளின் இருப்பை உறுதிப்படுத்த, கடவுளின் மகிமையை வெளிப்படுத்த முயல்பவை என்று சொன்னவுடன் பக்தி இலக்கியங்களைப் போல அவரது நாவல்கள் கடவுள் நம்பிக்கை மட்டுமே நிறைந்ததாக இருக்கும் என்று பிழையாகப் புரிந்துகொள்ளப்படலாம். நம்பிக்கையாளன் கடவுளின் மகிமைகளைத் துதிப்பது சாதாரணமானதுதான். சிறந்த கலைப்படைப்புகளில் பெரும்பாலானவை பக்தியால் உந்தப்பட்டவை என்பது சந்தேகத்திற்கே இடமில்லாத தரவு. ஆனால் தஸ்தாயேவ்ஸ்கியின் நாவல்களில் கடவுளின் இருப்பு பற்றிய தேடல்கள் பக்தி இலக்கியங்களின் பாணியில் அமைந்தவை அல்ல. தஸ்தாயேவ்ஸ்கியின் நாவல்களின் பேசுபொருள் கடவுளின் மகிமை அல்ல, மாறாக கடவுள் இருக்கிறாரா என்பதுதான். அங்கு இயல்பாகவே நன்மை தீமை சார்ந்த கேள்விகள் இருக்கும். கூடவே, மனித வாழ்க்கையின் அர்த்தம் என்ன, அதன் அவசியமென்ன போன்ற கேள்விகளும் கடந்துவரும். ஏனெனில் கடவுள் என்ற கருத்துரு பெரும்பாலும் நன்மை தீமை பற்றிய, வாழ்க்கையின் இலக்கு பற்றிய அறுதியான விளக்கங்களைச் சார்ந்ததுதான். அப்படி தஸ்தாயேவ்ஸ்கியின் படைப்புலகம் என்கிற நாடக அரங்கில் நன்மை என்ற கருத்தின் வகைமாதிரிகளும், தீமையின் அடிப்படை அம்சங்களும் கதாபாத்திரங்களாக நிறைவகுத்து நிற்கிறார்கள். இங்கு நன்மைக்கும் தீமைக்குமான தத்துவார்த்தமான மோதல் இரண்டு மனிதர்களுக்கிடையேயான மோதல்களின் வடிவில் இருக்கலாம். நன்மை, தீமை இரண்டையுமே நிகரான அளவு கொண்ட ஒரு கதாபாத்திரம் தனக்குள்ளேயே நடத்தும் அகப்போராட்டமாக இருக்கலாம். ஆனால் அந்தக் களம் எப்போதுமே மோதல் நிறைந்ததாக, உணர்வுப்பூர்வமான தீவிரம் கொண்டதாகத்தான் இருக்கிறது.
தஸ்தாயேவ்ஸ்கியின் கலைத்தன்மையின் அடையாளங்கள் என, அவரின் தனித்திறன் என இரண்டு விஷயங்களைச் சொல்லலாம். ஒன்று, அடிப்படைக் கருத்துருவங்கள் நேருக்கு நேராக எதிர்கொள்ளும் நிலையைத் துவந்த யுத்தம் போல நெருக்கடி நிறைந்ததாக, குருதிவேகம் கொண்டதாக, உத்வேகமானதாக ஆக்கியிருக்கிறார். இரண்டு, அன்றாட வாழ்க்கையுடன் நேரடித்தொடர்பே இல்லாத அடிப்படைக் கேள்விகளை அன்றாட வாழ்க்கையின் மிக முக்கியமான பிரச்சினை என்பதுபோல அவற்றை உணர்வுப்பூர்வமானதாக ஆக்கும் திறன். தஸ்தாயேவ்ஸ்கியின் இந்தத் திறன்கள் இலக்கிய வாசகரில் பல கேள்விகளை எழுப்புகின்றன. இயல்பான உந்துதல் (instinct), தனித்திறன் இவற்றின் அடிப்படையில் பார்த்தால் தஸ்தாயேவ்ஸ்கி ஒரு நாவலாசிரியர்தான். பொதுவாக நாவல்களால் அணுக இயலாத, பதிலளிக்கச் சாத்தியமேயில்லாத அடிப்படைக் கேள்வியை ஏன் தன் பேசுபொருளாகத் தேர்ந்தெடுத்தார்? அவர் தேர்ந்தெடுத்த அந்த அருவமான அடிப்படைக் கேள்விக்கும் அதோடு தொடர்புடைய தூய கருத்துகளின் வரிசைக்கும் கலை வழியாக உயிரூட்டத் துணிந்தவர் தஸ்தாயேவ்ஸ்கி. அடிப்படைக் கேள்விக்கு அச்சமூட்டும் தீவிர உணர்வெழுச்சித்தன்மையை ஏற்படுத்த தஸ்தாயேவ்ஸ்கியால் எப்படி முடிந்தது? இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டுமென்றால் கலைப்படைப்பிற்குக் காரணமான உந்துதலைப் பற்றி பொதுவாக சில விஷயங்களை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.
கலைப்படைப்பு என்பது ஆன்ம வெளிப்பாடுதான் இல்லையா? மகத்தான கலைஞர்களின் விஷயத்தில் இந்த ஆன்ம வெளிப்பாட்டுடன் கூடவே இன்னொரு விஷயத்தையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். கலைஞன் தன் ஆத்மாவில் உணரும் ஒருவகையான தவிப்புதான் அழகியல் வெளிப்பாடு என்ற சிரமமான விஷயத்தைச் செய்ய அவனை உந்துகிறது. கலைஞனைப் பொறுத்தவரை கலை என்பது தன்னிலிருந்து தப்பித்துக்கொள்வதுதான். கலைஞன் என்பவன் அசாதாரணமான தன்னுணர்வும், வியப்பூட்டும் நுண்ணுணர்வும் கொண்டவன் அல்லவா? கலைஞனின் ஆன்மாவில் இந்த இரண்டு உணர்வுகளும் நிரந்தரமாக, வலுவாகச் செயல்படுவதன் விளைவாக அவனது ஆன்மாவின் எளிமையான ஒத்திசைவில் (harmony) ஒத்திசைவின்மையை ஏற்படுத்தக்கூடிய புது அம்சங்கள் உருவாகின்றன. இந்த இரண்டு உணர்நிலைகளுக்கு இடையே உள்ள அலைக்கழிப்பால் கலைஞனின் ஆன்மா அமைதியின்மை கொண்டதாக ஆகின்றது. கலைஞனின் ஆகப்பெரிய வரப்பிரசாதம் என்பது அவனது ’முழுமையுணர்வு’தான். பிறப்பிலிருந்தே அவனால் பிசிறுகளை, ஒத்திசைவின்மையைச் சகித்துக்கொள்ளவே முடியாது. பிழையின் இருப்பு பற்றிய போதத்தால் அவனால் இயல்பான மனச்செயல்பாடுகளைக்கூடச் செய்ய முடியாது, இதுதான் கலைஞனின் முக்கியமான பலவீனம்.
இது அபாயகரமான நிலை. ஏனெனில் தன் சொந்த மேதைமையின் மற்றொரு பகுதியான தன்னுணர்வு அவனது ஆன்மாவின் அடுக்குகளைக் குலைத்து ’பிழை நிகழ்ந்ததுவிட்டது’ என அவனை அறிவுறுத்தியபடியே இருக்கிறது; ஒத்திசைவின்மைகளை அதில் செலுத்திக்கொண்டே இருக்கிறது. அதனால் சரியான வகையில் ஒரு புதிய ஒத்திசைவில் தன் ஆன்மாவை நிறுத்தவேண்டிய கட்டாயம் கலைஞனுக்கு உருவாகிவிடுகிறது. ஆனால் ஆன்மாவின் உள்ளே இருக்கும் இந்த ஒத்திசைவின்மையைத் தர்க்கப்பூர்வமான சிந்தனையாலோ, செயல்பாடுகள் கொண்டோ சரிசெய்ய முடியாது. அப்படி சொந்த ஆன்மாவின் சரிசெய்ய முடியாத நிம்மதியின்மையிலிருந்து கலைஞன் தப்பிக்கும் வழிதான் கலைப்படைப்பு. தன் சிதைந்த ஆன்மாவைக் கலைப்படைப்பு வழியாக அவன் வெளிப்படுத்துகிறான். அந்த கலைப்படைப்பு அவனது ஆன்மாவின் பதிலிவடிவம் தான். ஆனால் சொந்த ஆன்மாவிற்கு இல்லாத அளவுக்கு வடிவ கச்சிதத்தையும் ஒத்திசைவையும் அவன் தன் கலைப்படைப்பில் உருவாக்குகிறான். வேறொரு வகையில் சொல்ல வேண்டுமென்றால் சொந்த ஆன்மாவின் அமைதியின்மையை இல்லாமலாக்க கலைஞன் தானே உருவாக்கிக்கொண்ட ஒத்திசைவு என்ற மாயைதான் கலை. இதயத்தில் சீழ்கட்டியபடி வீங்கி வலியை ஏற்படுத்தும் பிழையின் சிதிலங்களை, அழுக்குகளை வெளியேற்றி ஆன்ம நிம்மதியைப் பெறுவதற்கான வழிதான் கலைப்படைப்பு. கலையின் வரலாற்றில் மகத்தான படைப்புகளை எடுத்துக்கொண்டு அவை ஒவ்வொன்றின் படைப்பாக்கத்திற்கான தூண்டுதலின் கதையைச் சொல்ல ஆரம்பித்தால் பொதுவாக அந்தக் கதைகளெல்லாம் ஒரே மாதிரிதான் இருக்கும்.
ஒரு இலக்கியப் படைப்பைக் கலாப்பூர்வமானதாக ஆக்குவது அதிலுள்ள உணர்வுப்பூர்வமான அம்சங்கள்தான். அந்த உணர்வுப்பூர்வமான அம்சங்களுக்கு கலைஞனின் ஆளுமையுடன் தொடர்பு இருக்கிறது. காவியங்களில் இனிய காதல் நிறைவை உணர்வெழுச்சியுடன், உயிர்த்துடிப்புடன் எழுதியவர்கள் நிஜ வாழ்க்கையில் காதல் நிறைவேறிய அதிர்ஷ்டசாலிகள் அல்ல. இழப்புணர்வின் வலியால் அகங்காரம் புண்பட்ட அந்தத் துரதிஷ்டசாலிகளால் மட்டும்தான் மகிழ்ச்சியான முடிவுகொண்ட காதல் கதையை உணர்வெழுச்சியுடன் எழுத முடியும். நிறைவேறாத எதிர்பார்ப்புகளால் அவனது தனிவாழ்க்கையை வதைக்கும் விழைவுதான் அவனது எழுத்தை உணர்வெழுச்சிகொண்ட கலைப்படைப்பாக ஆக்குகிறது. சொந்த வாழ்க்கையில் அடைந்த ஏமாற்றத்தின் தீவிரம், கனவு மட்டுமாக ஆகிப்போன ’நிறைவேறிய காதல்’ என்ற மாயைக்கு உண்மையான அனுபவத்தில் இல்லாத, ஒருவேளை உண்மையான அனுபவத்தில் சாத்தியமே இல்லாத தீவிரத்தையும், உயிர்த்துடிப்பையும் உருவாக்கிவிடுகிறது. மகத்தான கலைப்படைப்பு- அதன் பேசுபொருளும் நேரடியான உணர்வுத்தளமும் என்னவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும்- அதில் புனித துக்கம் கொஞ்சம் எஞ்சுவதற்கான காரணம் வேறொன்றுமல்ல, மென்னகை தவழும் அணங்கைப் போல கலைப்படைப்புகளில் உள்ள ’நிறைவேறிய ஆசை’ என்ற அம்சம் கலைஞனின் சொந்த வாழ்க்கையில் இறந்துவிட்ட எதிர்பார்ப்பின் எலும்புகளிலிருந்து தோண்டியெடுக்கப்பட்டவைதான். உன்னதமான கலைப்படைப்பிற்கு வாழ்க்கையின் யதார்த்தமான அனுபவத்தைவிட ஏமாற்றத்தின் சுவை கலந்த விழைவுடன்தான் கூடுதலாக உறவு இருக்கிறது. ஆன்ம வெளிப்பாடு வழியாக அடையப்படும் ஆன்ம சுத்திகரணம்தான் ஒரு கலைஞனைப் படைப்பாக்கத்திற்காக உந்தும் விசை. ஒரு கலைப்படைப்பு வாசகரின் ஆன்மாவைச் சுத்தீகரிக்கும் தகுதியை அடைவதற்கான காரணம் இதுதான்.
தஸ்தாயேவ்ஸ்கியின் படைப்புலகிலுள்ள ‘குற்றம்’ என்ற அம்சம் மிக முக்கியமானது. தஸ்தாயேவ்ஸ்கியின் படைப்புகளில் ’குற்றம்’ நுழைந்த முறை பற்றி, நாவலின் பேசுபொருளில் ஒரு அம்சம் மட்டும்தான் என்ற நிலையைத் தாண்டி ’குற்றம்’ என்றென்றைக்குமான உணர்வுநிலையாக எப்படி உருமாறியது, அந்த மாற்றம் அவரது நாவல்களுக்கு எப்படி புதிய மறைபிரதித்தன்மையை ஏற்படுத்தியது என்பதை ’கலைமனதில் உயிர்த்தெழும் வாழ்க்கை அனுபவம்’ என்ற கட்டுரையில் விவாதித்திருக்கிறேன். தஸ்தாயேவ்ஸ்கியின் சிதிலமடைந்த சிக்கலான ஆளுமையில் கடவுளின் இருப்பு சார்ந்த கேள்விகள் இணைந்தவுடன் அவரது புனைவுலகம் இன்னும் பெரிய மாற்றத்திற்கு உள்ளானது. அவரது புனைவுலகில் ’குற்றம்’ உட்பட மற்ற எல்லா அம்சங்களும் இந்தப் புதிய பேசுபொருளான கடவுளின் இருப்பு சார்ந்த கேள்வியைச் சார்ந்து, அதன் ஆணைக்கு கீழ்ப்படிந்து செயல்பட வேண்டிய நிலை வந்தது.
பிறப்பிலேயே தஸ்தாயேவ்ஸ்கியின் ஆளுமை என்பது ‘சாதாரணமான’ என்பதைத் தவிர்த்த வேறு ஏதோ ஒன்றுதான். அவரது மன அமைப்பின் இயல்பான இயங்குமுறை என்பது தீவிரமான, உணர்வெழுச்சி கொண்ட அனுபவங்களுக்கான தவிப்பு மட்டும்தான். அவர் சாமானியமான, அலட்சியமான எதிர்வினைகள் ஆற்றக்கூடிய திறனே இல்லாதவர். தஸ்தாயேவ்ஸ்கி மகிழ்ச்சியற்ற சிறுவன்; பின் வளர்ந்து மகிழ்ச்சியற்ற மனிதனாக ஆகின்றார். அவரின் மனதில் கீழ்மைகளைச் செய்யத்தூண்டும் விழைவு என்றுமே கட்டுப்பாடுகளற்று செயல்பட்டுக்கொண்டிருந்தது என்பது உறுதி. ஆனால், அந்த விழைவுடன் கூடவே சமானமான வலுவுள்ள மற்றொரு அம்சமும் தஸ்தாயேவ்ஸ்கியின் குணாதிசய அமைப்பில் இருந்தது- நன்மையைப் பற்றிய மதிப்பும், நன்மை செய்ய வேண்டும் என்ற ஆவலும். தஸ்தாயேவ்ஸ்கியின் வாழ்க்கையைப் பற்றி எழுதிய இ.எச்.கார் (E.H.Carr) தன் ஆய்வில் அவரின் மன அமைப்பை இவ்வாறு தொகுக்கிறார்:
“கீழான விஷயங்களைச் செய்வதற்கான தடுக்க முடியாத தவிப்பும், அதைச் செய்யும்போதே செய்த செயலின் தவறை தானே உணர நேரும் துரதிர்ஷ்டமான மனிதர்களில் ஒருவர்தான் தஸ்தாயேவ்ஸ்கி; குற்றச்செயலையும், குற்றவுணர்வின் வெம்மையையும் ஒரே சமயம் அனுபவிக்கும் நிம்மதியற்றவர்களில் ஒருவர்.”
தஸ்தாயேவ்ஸ்கியின் வரமும் சாபமும் அவரது மனதின் இந்த இரட்டை நிலைதான். ’கரமசோவ் சகோதரர்கள்’ நாவலை வாசிப்பவர்கள் ஒரே சமயத்தில் நன்மையின் வடிவமான அல்யோஷாவையும் (Alyosha) கீழ்மை நிறைந்த ஸ்மெர்டியாகோவையும் (Smerdyakov) துல்லியமான நம்பகத்தன்மையுடன் படைக்க இந்த மனிதனால் எப்படி முடிந்தது என வியப்படையாமல் இருக்கவே முடியாது. அன்புநிறைந்த புனிதத்தன்மையையும் குரோதத்தின் மனம்புரட்டும் அருவருப்பான இருப்பையும் ஒரே மூச்சில் அதுவும் ஒரே பக்கத்தில் இப்படிப் படைக்க ஒரு மனிதனால் முடிகிறது என்பதை மிதமான மொழியில் சொல்ல வேண்டுமென்றால் ஆச்சரியம்தான். ஆனால், தஸ்தாயேவ்ஸ்கியைப் பொறுத்தவரை அதில் அசாதாரணமாக ஒன்றுமில்லை. சாத்வீகமான உணர்வுநிலைகளை, இழிவானவற்றை, தீமைகளை சொந்த ஆன்மாவில் நிகரான அளவுகொண்ட ஒருவர்தான் தஸ்தாயேவ்ஸ்கி. அவற்றிக்கு இடையேயான மோதலால் தஸ்தாயேவ்ஸ்கியின் வாழ்க்கை குற்றவுணர்வின், இழிவுணர்வின் அக்னிக்குண்டமாக மாறியது. இந்த இரட்டை மனநிலையும், அதை அனுபவிக்கும் ஆன்மாவின் ஒத்திசைவின்மையும் வெம்மையும்தான் தஸ்தாயேவ்ஸ்கியின் கலையின் உறைவிடம்.
இன்று தஸ்தாயேவ்ஸ்கியின் வாழ்க்கை வரலாறு சார்ந்த பல தகவல்கள் தெளிவாகக் கிடைத்திருக்கின்றன. வறுமையின் பிடியிலிருந்த வாழ்க்கையின் ஆரம்பகாலம் முதல் பீட்டர்ஸ்பர்க்கின் தரம்தாழ்ந்த விபச்சார விடுதிகளின் நிரந்தர வாடிக்கையாளர்தான் தஸ்தாயேவ்ஸ்கி. அவர் அவ்வாறு நிரந்தர வாடிக்கையாளராக இருந்ததற்குக் காரணம் தன் காம விழைவிற்கு வேறெந்த வடிகாலும் இல்லை என்பது மட்டுமல்ல. முதலாவதாக, அவர் காமச்செயல்பாட்டில் பிறழ்வு அம்சம் கொண்டவர் (pervert. திருமண வாழ்க்கை உட்பட வாழ்க்கை முழுக்க அப்படித்தான்). உடலுறவு என்பதைவிட காமம் வழியாக மிகப் பிறழ்வான, ஆபாசமான வெளிப்பாடுகள் மூலம் மயிர்க்கூச்செறியும் அனுபவங்களில் மூழ்க வேண்டும் என்பது அவரின் இலக்காக இருந்திருக்கலாம். உடலுறவு என்ற உடல்சார்ந்த தேவைக்காக அல்ல, தன் செயல்பாட்டைப் பற்றிய இழிவுணர்ச்சியின் தாளமுடியாத வேதனையை அனுபவிக்கத்தான் ‘masochist’ ஆன தஸ்தாயேவ்ஸ்கி, விபச்சார விடுதிகளாக அலைந்து திரிந்தார். அவரது மனம் அசாதாரணமான ’sensation’ இல்லாமல் வாழ முடியாதது. தஸ்தாயேவ்ஸ்கிக்கு ஆரம்பகாலம் முதலே இருந்த சூதாட்ட வெறிக்கு கிட்டத்தட்ட இதே மனநிலைதான் காரணம். உணர்வுப்பூர்வமான அனுபவத்தைவிட அந்த அனுபவத்திற்குப்பின் அவர் அடையும் கழிவிரக்கத்தின், தாழ்வுணர்ச்சியின் வெம்மை இன்னும் வலுவானது. சுய இழிவால் ஒளிரும் கழிவிரக்கத்தின் வடிவாக மாறுகிறார் தஸ்தாயேவ்ஸ்கி.
தஸ்தாயேவ்ஸ்கியின் வாழ்க்கைப் பார்வை, மனித இயல்புகள் பற்றிய சிந்தனைகள் போன்றவையெல்லாம் இந்த இரட்டை மனநிலையால் வண்ணமேற்றப்பட்டதுதான். வலியால், அனுதாபத்தால் நதிப்பிரவாகம் போல கண்ணீர்விடக்கூடிய ’sadist’. குற்றவுணர்வின், பச்சாதாபத்தின் உமித்தீயில் உருகும் பிறழ்ந்த காமவிழைவு கொண்டவர்; ஒளிர்வூட்டும் தெய்வீக அம்சங்கள் நிறைந்த அருவருப்பூட்டும் சாத்தான் – இப்படிப் பல முகங்கள் கொண்ட தஸ்தாயேவ்ஸ்கியால் நீதி, அநீதி சார்ந்த சிந்தனைகளுக்குத் தர்க்கப்பூர்வமான அடிப்படையைக் கண்டுபிடிக்க முடியவில்லை. மனித நடவடிக்கைகளைத் தர்க்கபூர்வமாக வரையறுத்துவிட முடியாது என்பது மட்டுமல்ல, சுயநலமான விஷயங்களில்கூட மனதால் நிரந்தரமாக முழுமையாக ஈடுபட முடிவதில்லை என்பதைத் தஸ்தாயேவ்ஸ்கி கண்டுகொண்டார். தஸ்தாயேவ்ஸ்கியின் சிந்தனைமுறையில் மனிதன் என்பவன் எந்தத் தர்க்கமும் அற்ற ஆழ்மனம் சார்ந்த தற்செயலான தூண்டுதல்களால் ஆட்டிவிக்கப்படும் பாவைதான். மனிதன் என்பவன் பல கூறுகளின் கச்சிதமான இணைப்பு என்பதைவிட அவனது மனம் இசைவின்மைகளின், பிறழ்வுகளின் போர்க்களம். மனிதனின் மன அமைப்பு, இயல்புகள், நடவடிக்கைகள் இவற்றிற்குத் தர்க்கப்பூர்வமான வழிநடத்தும் அமைப்பு எதுவும் இல்லை என்ற கருதுகோளிலிருந்துதான் தஸ்தாயேவ்ஸ்கியின் கடவுளின் இருப்பு சார்ந்த சிந்தனை தொடங்குகிறது.
தஸ்தாயேவ்ஸ்கி ’கடவுள்’ என்ற கேள்வியை எதிர்கொள்வது அறிவார்ந்ததன்மை என்ற ஊன்றுகோலைப் பிடித்துக்கொண்டு அல்ல. இயல்பாகவே அது தஸ்தாயேவ்ஸ்கிக்கே உரித்தான பாணியில் (Dostoveskyan) நிகழ்கிறது. அரசியல் குற்றத்திற்காகக் கைதுசெய்யப்படும் தஸ்தாயேவ்ஸ்கி மரணதண்டனைக் களத்தில் கண்கள் கட்டப்பட்டு கில்லட்டின் (Guillotine) முன் நிறுத்தப்பட்டவர். மரணத்திற்குச் சில நிமிடங்களே எஞ்சியுள்ள நிலை என்பது எந்த மனிதனுக்கும் மறக்கமுடியாத வாழ்க்கை அனுபவம் ஆகும்; பின் மரணதண்டனை இரத்தாகி, தொடர்ந்து நான்கு வருடச் சிறைவாழ்க்கை. சொந்த வாழ்க்கையில் இந்தக் காலகட்டத்தைப் பற்றி தஸ்தாயேவ்ஸ்கி பின்பு இப்படி எழுதுகிறார்:
“அந்த நான்கு வருடங்களில் என் ஆன்மாவில், நம்பிக்கையில், மனதில் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டன என்பதை என்னால் சொல்ல முடியவில்லை. அந்த அனுபவம் இல்லையென்றால் ஒருமுறைகூட என் வாழ்க்கையை நானே கறாராக ஆராய்ந்து பார்த்திருக்க வாய்ப்பேயில்லை. சிறைவாழ்க்கையின் கட்டாய கடின உழைப்பு ஒருவனில் தாளமுடியாத இழப்புணர்வை உருவாக்குவது. அந்த இழப்புணர்விற்கிடையே புல் மழைத்துளிக்காக என்பது போல ஒருவன் நம்பிக்கைக்கான விழைவு கொண்டவனாக ஆகிவிடுகிறான்.”
அப்படி வாழ்க்கையின் எல்லைக்கோட்டில் மரணத்தை நேருக்குநேராக எதிர்கொண்டு நடுநடுங்கிய நிலையில்தான் தஸ்தாயேவ்ஸ்கி கடவுளின் இருப்பு சார்ந்த கேள்வியை வந்தடைகிறார். அவர் அதை அறிவார்ந்த கேள்வி என்ற நிலையில் எதிர்கொள்ளவில்லை, மாறாக அந்தக் கேள்வியை மிகத்தீவிரமான வாழ்வாசையால்தான் எதிர்கொள்கிறார். தான் உட்பட மனித இனத்தின் இயல்புகளில் உள்ள தர்க்கமற்ற தன்மையை உணர்ந்துகொண்ட தஸ்தாயேவ்ஸ்கி மனித வாழ்க்கைக்குள்ள ஒரே பற்றுக்கோடு என்ற நிலையில் கடவுள் நம்பிக்கையின் அவசியத்தை உணர்ந்துகொண்டார். உடல்சார்ந்த அவசியம் என்பது போல கடவுளின் தரப்பைச் சேர்ந்த அவர் கடவுள் நம்பிக்கைக்காக ஏங்கினார்; கில்லட்டின் (Guillotine) முன் நின்று வாழ்க்கையைக் கடைசியாகப் பார்த்துவிட்டு கண்களை மூடிய தஸ்தாயேவ்ஸ்கியின் வாழ்வதற்கான விருப்புறுதி (The will to live) கடவுள் நம்பிக்கைக்கான தவிப்பாக மெல்லிய கேவல் போல அவரது ஆன்மாவில் ஒலித்திருக்க வேண்டும். மரண தண்டனை இரத்தான பிறகு காலில் பெரிய இரும்பு சங்கிலியுடன் குளிர்ந்து உறைந்த பனிப்பிரதேசத்தின் வழியாக ஸ்லெட்ஜ்ஜில் (Sledge) இரண்டு மாதம் பயணித்து சைபீரியச் சிறைக்குச் சென்ற களைத்துப்போன அந்தக் கைதி, வாழ்க்கை மேல் நம்பிக்கையை நிலைநிறுத்த வேண்டிய விழைவால் கடவுள் நம்பிக்கைக்காக தவித்திருக்க வேண்டும். குற்றவாளிகள் மட்டுமே நிறைந்த சிறையில் சாட்டையடிகளின் சத்தத்திற்கு இடையே நான்கு ஆண்டுகள் கடின உழைப்பு செய்த, குற்றம் செய்யாத அந்தக் குற்றவாளி கடவுள் நம்பிக்கைக்காகக் கதறியிருக்க வேண்டும்.
கூடவே தஸ்தாயேவ்ஸ்கியின் கடைசிக் காலம்வரை விடாமல் அவரைத் துன்புறுத்திய வலிப்பு நோய் ஆரம்பமாகிறது. பல சந்தர்ப்பங்களில் வலிப்பு தனக்கு கிடைத்த அருங்கொடை என்று தஸ்தாயேவ்ஸ்கி சொல்லியிருக்கிறார். ஆனால் அந்த அருங்கொடை தற்காலிகமான துர்மரணம். மரணமல்ல, துர்மரணம். வாயில் நுரையுடன் வெளியே தள்ளப்பட்ட நாக்கு, முழிப்பது போன்ற கண்கள், கைகால்கள் வளைந்து, முறுக்கிக் கட்டப்பட்ட கயிறு நிலத்தை அறைந்துகொண்டு அறுந்து விழுவது போலத் துடிக்கும் தற்காலிகமான துர்மரண நிலை தஸ்தாயேவ்ஸ்கி போன்ற ஒருவருக்கு ஒருவிதத்தில் அனுக்கிரகமாகத் தோன்றியிருக்கலாம். அந்தத் துர்மரணம் பல மணிநேரங்கள், சில சமயம் நாட்கணக்கில்கூட நீடிக்கும். இவ்வாறான இடையிடையே உள்ள இந்த மரண அரங்கேற்றத்திற்கு முன்பு சில நிமிடங்கள் கடவுளை உணர்வதுபோன்ற அனுபவத்தை அடைந்ததாகத் தஸ்தாயேவ்ஸ்கி பதிவுசெய்திருக்கிறார். இதயத்தில் வெளிப்பட்ட ஆனந்தத்தின் ஒளி நிறைந்து ததும்பி நிற்கும் அந்த ‘எக்ஸ்டஸிக்’ (ecstatic) நிலையை இன்னும் கொஞ்சம் நீட்டினால் அந்த ஆனந்த உன்மத்தத்தைத் தாள முடியாமல் நெஞ்சு வெடித்துவிடும் என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார். அந்தத் தருணத்தில் மெய்மைநிலையின் விளிம்பை நோக்கி தஸ்தாயேவ்ஸ்கியின் விரல்நுனி நீண்டிருக்கலாம். ஒருவேளை தொட்டே இருக்கலாம். பின்பு, தற்காலிகமான மரணம். அது முடிந்து மீண்டும் சாதாரண வாழ்க்கையில் கண் விழிக்கும் தஸ்தாயேவ்ஸ்கியின் ஆழ்மனதில் கடவுள் என்பதோ, மரணம் என்பதோ வெறும் உருவகங்கள் மட்டுமல்ல. அதற்கு அப்பால் அவை தங்கள் நிஜ உருவை உண்மைத்தன்மையுடன் அவருக்கு உணர்த்தியிருக்கலாம். தெளிந்த போதத்துடன் அப்பால் இருக்கும் அந்த நிழல்வடிவங்களைப் பிடிக்கத் தவிக்கும் விழைவு தஸ்தாயேவ்ஸ்கியில் நிரந்தமாக எஞ்சியிருக்கலாம்.
ஆனால் ஒரு சிக்கல் இருக்கிறது. கடவுள் நம்பிக்கையின் அவசியத்தை உணர்ந்துகொள்வதும், நிஜமாகவே கடவுளை நம்புவதும் இரண்டு வெவ்வேறான விஷயங்கள். கடவுள் நம்பிக்கை என்ற மனநிலைக்கு நம் அறிவார்ந்த செயல்பாடுகளுடன் எந்தத் தொடர்பும் இல்லை. கடவுள் நம்பிக்கையை இயல்பாகவே கொண்ட ஒருவனுக்கு அந்த நம்பிக்கை என்பது ஒரு தருணத்தில்கூட கேள்வியாகவே ஆவதில்லை. அவர்களின் ஆழ்மனதில் கடவுள் நம்பிக்கை என்பது ஒரு அடிப்படை உண்மை. அப்படி ஒரு உண்மையை, அதாவது அப்படி ஒரு கற்பிதத்தை, தாங்கள் ஏற்றுக்கொண்டோம் என்ற போதம்கூட நம்பிக்கையாளனுக்கு இருப்பதில்லை என்பதுதான் யதார்த்தமான கடவுள் நம்பிக்கையின் நிலை. மாறாக ஒருவன் அறிவார்ந்த முறையில் கடவுள் நம்பிக்கை வைத்தே ஆகவேண்டும் என்று எப்போது உணர்கிறானோ, அப்போதுதான் தன் மனதில் இறைமறுப்பு நிலை மிக வலுவாக வேரூன்றியிருக்கிறது என்பது தெள்ளத்தெளிவாகத் தெரியவரும். தஸ்தாயேவ்ஸ்கியின் விஷயத்தில் நடந்தது அதுதான். கரமசோவ் சகோதரர்கள் உட்பட உள்ள தன் நாவல்களையெல்லாம் எழுதித் தீர்த்துவிட்ட வயோதிகம் நிறைந்த தஸ்தாயேவ்ஸ்கி தன் நண்பர் ஒருவருக்கு எழுதிய தனிப்பட்ட கடிதத்தில் உள்ள வரிகளைக் கீழே கொடுத்திருக்கிறேன்:
“என்னைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் நான் இந்தக் காலகட்டத்தின் பிறவி- நம்பிக்கையின்மையின், சந்தேகங்களின் வாரிசு. என் வாழ்க்கையின் முடிவுவரை நான் அவ்வாறேதான் இருக்கப் போகிறேன் என்பதை என்னால் இன்று உணர முடிகிறது. ஆனால் கடவுளை நம்ப வேண்டும் என்ற ஆழமான விழைவு தாளமுடியாத, சித்திரவதையான அனுபவமாக இருக்கிறது. இன்றும்கூட. கடவுள் நம்பிக்கைக்கு எதிரான ஆதாரங்கள் எந்த அளவுக்கு வலுவானதாக இருக்கின்றனவோ, அந்த அளவுக்கு கடவுளை நம்ப வேண்டும் என்ற உள்ளார்ந்த விழைவால் உருவாகும் வலி அவ்வளவு தாளமுடியாததாக வளர்கிறது….”
“கிறிஸ்துவும் உண்மையும் வேறு வேறு என்ற நிலை வந்தால் நான் உண்மையைப் புறக்கணித்துவிட்டு கிறிஸ்துவை எடுத்துக்கொள்வேன்” என்று சொன்னதற்கு அப்பால் கடவுள் நம்பிக்கையின் விஷயத்தில் வாழ்க்கையின் கடைசிவரை தஸ்தாயேவ்ஸ்கியால் முன்னேறவே முடியவில்லை. கிட்டத்தட்ட வேள்வியைப் போல தன்னையே அவியாக்கி கடவுளைத் தேடிய தஸ்தாயேவ்ஸ்கியால் கிறிஸ்துவும் உண்மையும் ஒன்றுதான் என்ற மறுக்க முடியாத நம்பிக்கைக்குச் சென்றுசேர முடியவில்லை என்று சுருக்கமாகச் சொல்லலாம். தஸ்தாயேவ்ஸ்கி தன் மன அமைப்பிற்கும் கடவுள் நம்பிக்கைக்கும் இடையே உள்ள பொருத்தமின்மையை மேலும் மேலும் உணர்கிறார். அதோடு கூடவே அவர் மனதில் கடவுள் நம்பிக்கை சார்ந்த எண்ணங்களும் நிரந்தரமானவை என்பது போல தாளமுடியாதபடி வளர்கின்றன.
“ ……… மற்றவர்களுக்கு இது எப்படி என்று எனக்குத் தெரியாது. ‘இந்த விஷயத்தில்’ அவர்களைப் போல ஆவது சாத்தியமில்லை என்று தோன்றுகிறது. எல்லோரும் ‘அது’ பற்றி சிந்திக்கிறார்கள்; இந்தச் சிந்தனையுடன் அவர்கள் வேறு விஷயங்களைத் தொடர்ந்து சிந்திக்கிறார்கள். மற்ற எதைப் பற்றியும் என்னால் சிந்திக்க முடியாது. எனது இந்த வாழ்க்கை முழுவதும் இந்த ஒரே ஒரு விஷயத்தை மட்டும்தான் நான் சிந்திக்கிறேன். கடவுள் என் ஆயுட்காலம் முழுவதும் பிடிவிடாமல் என்னை வதைத்துக்கொண்டிருக்கிறது……..”
இது ‘டெவில்ஸ்’ (Devils) நாவலில் கிறில்லோவ் (Kirillov) என்ற கதாபாத்திரத்தின் சொற்கள்.
”இந்த நாவலின் மையக்கேள்வி வாழ்க்கை முழுக்கவே என்னை வதைத்த அதே கேள்விதான் – கடவுளின் இருப்பு சார்ந்த கேள்வி.”
இது தன் கடைசி நாவலான கரமசோவ் சகோதரர்கள் நாவல் பற்றிய முன்னறிவிப்பை வெளிப்படுத்தும் தஸ்தாயேவ்ஸ்கியின் சொற்கள். நாம் மேலே கொடுத்திருக்கும் கிறில்லோவின் (Kirillov) சொற்களைத் தஸ்தாயேவ்ஸ்கியின் சொந்த நிலை பற்றிய சொற்களாகத்தான் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
“………. கடவுள் ஒரு அவசியம்தான்… அதனால் கடவுள் கண்டிப்பாக இருந்தே ஆக வேண்டும்…… ஆனால் எனக்குத் தெரியும் கடவுள் இல்லையென்று….. கண்டிப்பாக நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும், இம்மாதிரியான இரண்டு வெவ்வேறான கருத்துகளை ஒரே சமயம் கொண்ட ஒருவன் வாழ்க்கையைத் தொடர்வது சாத்தியமில்லை.”
இதுவும் ‘டெவில்ஸ்’ (The Devils) நாவலில் கிறில்லோவ் (Kirillov) சொல்வதுதான். தஸ்தாயேவ்ஸ்கியும் தன் மனநிலையைப் பற்றி இதைத் தவிர வேறொன்று சொல்ல வாய்ப்பில்லை. கடவுள் நம்பிக்கையால் மட்டுமே கிடைக்கும் மன அமைதிக்காக அவரது ஆன்மாவின் ஒவ்வொரு அணுவும் துடித்தது. ஆனால் அவரது மனஅமைப்பின் தனித்தன்மையால் அது ஒவ்வொரு முறையும் மறுக்கப்பட்டது.
தஸ்தாயேவ்ஸ்கியின் மனம் ஒவ்வொன்றையும் மிகமிக நுண்மையாக ஆராயக்கூடிய அளவு அறிவார்ந்தது, அறிவியல்பூர்வமானது. அவரது தர்க்கப்பூர்வமான ஆற்றலை அறிய கரமசோவ் சகோதரர்கள் நாவலில் மத விசாரணையாளருக்கும் (inquisitor) கிறிஸ்துவிற்கும் இடையே நடக்கும் உரையாடலையோ, நாவலின் கடைசிப் பகுதியில் உள்ள இவானுக்கும் (Ivan) சாத்தானுக்குமான உரையாடலையோ மட்டும் வாசித்தால் போதும். அவர் தன்னில் ஒரு பகுதியான தன் மன அமைப்பு உட்பட எதையும் இரக்கமற்ற புறவயத்தன்மையுடன் ஒவ்வொன்றாகப் பிரித்து ஆராயும் அசுரத்தனமான தன்னுசாவல் திறன் கொண்டவர். அதே போல, தஸ்தாயேவ்ஸ்கி அறிவியல்பூர்வமான மன அமைப்பு கொண்டவர்தான். தஸ்தாயேவ்ஸ்கி அளவுக்குப் பரந்துபட்ட, ஆழமான புத்தக அறிமுகம் கொண்ட வேறு ஒரு நாவலாசிரியர் இருப்பார் என்று தோன்றவில்லை. தஸ்தாயேவ்ஸ்கியின் கடவுள் நம்பிக்கை சார்ந்த பயணத்திற்குத் தடையாக இருந்தது இந்தத் தர்க்கப்பூர்வமாகச் சிந்திக்கும் ஆற்றலும் நுண்மையான, அறிவியல்பூர்வமான மனஅமைப்பும்தான். அவர் விழைவிற்கும், நிதர்சனத்திற்கும், இதயத்திற்கும், அறிவிற்கும் வாழ்கை முழுக்க ஊசலாடியவர். அவை தஸ்தாயேவ்ஸ்கி ஆழ்மனதில் ஒன்று மாற்றி ஒன்று எனத் தீவிரத்தன்மையுடன் என்றுமே இருந்தன. தஸ்தாயேவ்ஸ்கியின் கடவுளின் இருப்பு சார்ந்த கேள்வி அவரது அன்றாட வாழ்க்கையின் மிக நெருக்கடியான பிரச்சினை என்பது போல உடனடியாகத் தீர்த்தே ஆகவேண்டிய கேள்வி என்ற நிலையை எட்டியது.
மனதிற்கும் அறிவிற்குமான நிரந்தரமான மோதல் என்ற இருமைநிலை (Dualism) இயல்பாகவே சிதிலமான தஸ்தாயேவ்ஸ்கியின் ஆளுமைக்கு புதிய உணர்வுத்தளத்தையும் ஆழத்தையும் ஏற்படுத்தியது. மனதிற்கும் அறிவிற்குமான மோதல் மூலமாகத் தஸ்தாயேவ்ஸ்கியின் ஆளுமையில் மற்ற எல்லா இருமைநிலைகளும் மனம், அறிவு என்ற அடிப்படையான இருமைநிலைக்குக் கீழ்ப்படிந்து அதை சார்ந்துதான் செயல்பட்டன. அதிலிருந்து தஸ்தாயேவ்ஸ்கியின் இலக்கியப் படைப்புகள் கடவுளைத் தேடும் வேள்வியாக மாறுகின்றன. தஸ்தாயேவ்ஸ்கி, கலை வழியாக, தான் விழைந்தது நிறைவேறும்படியான வலுவான மாயையை உருவாக்கத் துடித்தவர். அவரது ஆன்மாவை நாளுக்குநாள் பலவீனப்படுத்தியபடியே இருக்கும் இந்த உள்ளார்ந்த மோதலுக்கு கலை வழியாக ஒரு இனிய முடிவை ஏற்படுத்த வேண்டும் என்ற யத்தனம்தான் அவரின் நான்கு மகத்தான நாவல்களும். அந்த நாவல்களின் படைப்பாக்கம் வழியாக, சொந்த அறிவாற்றலுடன் மனம் நடத்தும் போராட்டத்தில் மனதிற்கு வெற்றிப்பாதையை ஏற்படுத்திக்கொடுக்கலாம் என்று தஸ்தாயேவ்ஸ்கி போதபூர்வமாகவே கருதியிருக்கலாம். அவர் வாழ்க்கையில் எதையாவது விழைந்தாரா என்று கேட்டால் சந்தேகமே வேண்டாம், அவர் விழைந்தது இதை மட்டும்தான்.
தஸ்தாயேவ்ஸ்கியின் கடவுள் சார்ந்த தேடுதல் என்பது கிட்டத்தட்ட வேள்வி போன்றது. அது கடவுள் நம்பிக்கைக்கு ஒரு தர்க்கப்பூர்வமான வழியைக் கண்டுபிடிக்க முயலும் கிறுக்குத்தனமான தனிப்பட்ட தேடலின் சுவை கொண்டது. சொந்த ஆன்மாவின் சிதிலமான சித்திரத்தை அந்தச் சிதைவின் வலியிலிருந்து தப்பிக்க தஸ்தாயேவ்ஸ்கி கலையில் பிரதிசெய்தார். ஆன்மாவின் வெவ்வேறான உணர்வுநிலைகளைத் திட்டவட்டமான வடிவங்களாக ஆக்கி தன் சொந்த ஆணையில் செயல்படும் கதைக்களத்தில் அவற்றை நிரைவகுக்க வைத்தார். அவரது ஆன்மாவில் உள்ள உண்மையான போராட்டத்தைத் தன் புனைவில் வடிவமைத்த புதிய வடிவில் புதிய அரங்கில் அதேபோல நடிக்க அந்த வடிவங்களுக்கு ஆணைகளைப் பிறப்பித்தார். தானே உருவாக்கிய இந்த மாயப் போர்களத்தில் யுத்தம் நடக்கிறது. அந்த போர்க்களத்தின் அமைப்பில் தன்னுடைய விழைவு கடவுள் நம்பிக்கையின் பக்கம் இருப்பதால் இயல்பாகவே அந்தத் தரப்புதான் வெற்றிபெறும் என்று தஸ்தாயேவ்ஸ்கி எதிர்பார்த்திருப்பார்.
கடவுளின் இருப்பு சார்ந்த ஒரே ஒரு கேள்வியைப் பற்றி தஸ்தாயேவ்ஸ்கி நான்கு நாவல்கள் எழுதியிருக்கிறார். அந்த நான்கு நாவல்களில் எந்த ஒரு நாவலையும் அதற்கு முன்னர் வெளிவந்த நாவலின் தொடர்ச்சி என்று எவ்வகையிலும் சொல்ல முடியாது. அவை ஒவ்வொன்றும் வெவ்வேறு வகையான நுட்பங்கள் கொண்ட கலைப்படைப்புகள்; அவை தஸ்தாயேவ்ஸ்கியின் ஆன்மாவிலுள்ள ஒரே வேதனையிலிருந்து தப்பிக்க மீண்டும் மீண்டும் செய்த முயற்சிகள். அவர் கடவுளைத் தேடும் முதல் முயற்சியின் வழியாக தர்க்கத்தின் ஆற்றலை ஏறக்குறைய உணர்ந்துகொண்டார். கடவுள் நம்பிக்கைக்கான விழைவு கொண்ட அவர், பித்தேறிய உத்வேகத்துடன் தர்க்கத்துடன் புதிய மற்போருக்குத் தயாராகிறார். ஆனால், தஸ்தாயேவ்ஸ்கியின் கலைப்படைப்புகளிலிருந்து எந்த ஒன்றும் எந்த ஒன்றையும் தோற்கடிக்காத என்றைக்குமான பயங்கரத்தின் சித்திரம் மட்டும்தான் வெளிப்பட்டது. நிகரான ஆற்றல்கொண்ட இருப்புகளுக்கு இடையேயான இந்த மோதல் அதில் ஈடுபட்டவர்கள் போலவே பார்வையாளர்களின் மூளையையும் குடைந்து வலிக்க வைக்கும் அளவு தீவிரமானது. ஆனால், நம்பிக்கையே உருவானவர்களின் வெற்றிக்காக அவர் உருவாக்கிய அந்தப் போர்க்களமானது அறிவாற்றல், தர்க்கப்பூர்வமாகச் சிந்திக்கும் திறன் போன்ற இருள்தெய்வங்களின் தோல்வியை இன்னும் தெளிவாக உணர்த்த மட்டும்தான் பயன்பட்டது.
இயல்பாகவே, தஸ்தாயேவ்ஸ்கி மீண்டும் அமைதியின்மை அடைகிறார். அவருக்கு கடவுள் நம்பிக்கையின் மேன்மையை மறுக்க முடியாதபடி நிலைநிறுத்த வேண்டும். ஆன்மாவின் அமைதிக்கு, நிம்மதியான வாழ்க்கைக்கு கடவுள் நம்பிக்கை அவசியமாக வேண்டும். குறைந்தபட்சம் தான் விழைந்தவை கைகூடும்படியான மாயையையாவது படைக்காமல் சபிக்கப்பட்ட அந்தத் துரதிர்ஷ்டசாலிக்கு நிம்மதி இல்லை. அதனால் அவர் மீண்டும் ஒரு புதிய நாவல் வழியாகப் புதிய யுத்தக்களத்தை உருவாக்குகிறார். கடவுளின் இருப்பு சார்ந்த தீர்க்க முடியாத இக்கட்டான கேள்விக்காக நன்மையின், தீமையின் படைகள் மீண்டும் வாழ்வா சாவா போராட்டத்திற்காக அணி திரள்கின்றன. இந்தக் கோணத்தில் யோசித்தால் தஸ்தாயேவ்ஸ்கியின் எல்லா மாஸ்டர்பீஸ் நாவல்களும் மீண்டும் மீண்டும் ஒன்றையே திரும்பத் திரும்பச் சொல்பவைதான்.
தஸ்தாயேவ்ஸ்கியின் பிரதானமான நாவல்களில் கதாபாத்திரங்களின் அமைப்பில்கூட பெரிய வித்தியாசம் இல்லை. ஒவ்வொரு நாவலிலும் ஏறக்குறைய ஒரே மாதிரிகள்தான் (models) திரும்பத் திரும்ப அரங்கேறுகின்றன. ஒன்றையே திரும்பத் திரும்ப நிகழ்த்தும் தஸ்தாயேவ்ஸ்கியின் இந்த முயற்சி வாசகரில் எந்தவிதமான சலிப்பையோ, சுவாரஸியமின்மையையோ ஏற்படுத்துவதில்லை என்பது இலக்கியத்தின் அற்புதங்களில் ஒன்று. ஒரு அர்த்தத்தில் அவருடைய நான்கு மாஸ்டர்பீஸ் நாவல்களும் வெறும் கூறியது கூறல் மட்டும்தான். அப்படிப் பார்த்தால் அவரின் முக்கியமான கதாபாத்திரங்களும் ஒரே மாதிரியின் (type) பதிலிகள்தான். ஆனால், தஸ்தாயேவ்ஸ்கியின் ஆன்மாவில் இன்னும் இன்னும் என முழுமையை நெருங்குவதற்கான தவிப்பும், யத்தனமும் இருப்பதால் ஒன்றே மீண்டும் மீண்டும் நிகழும்போதும் அவை தனக்கே ஆன உயிர்த்துடிப்பைக் கொண்டிருக்கின்றன. மற்ற எந்த நாவலாசிரியரிலும் இந்தக் கூறியது கூறல் தன்மை என்பது தற்கொலைக்கு நிகரான பலனை ஏற்படுத்தக்கூடியது. ஆனால் அதைத் தன் கலையின் பிரத்யேகத் தனித்தன்மையாக மாற்றியிருக்கிறார் தஸ்தாயேவ்ஸ்கி. அதற்கான காரணம் தெள்ளத்தெளிவானது. திரும்பத் திரும்ப ஒன்றே நிகழ்ந்தாலும் ஒவ்வொருமுறை நிகழும்போதும் அதைப் பிறப்பித்த அவரது ஆன்மாவின் வேதனை மேலும் அதிகமாகியிருக்கிறது என்றுதான் அர்த்தம். ஒவ்வொருமுறை வேதனை அதிகமாகும் போதும் இன்னும் வலுவான ஒரு சவாலை இன்னும் உறுதியுடன் அவரது கலைமனம் கையாண்டது.
தஸ்தாயேவ்ஸ்கியின் படைப்புகளில் இலக்கிய விமர்சகர்கள் வழிபாட்டுணர்வுடன், ஆச்சரியத்துடன் சுட்டிக்காட்டும் ஒரு அம்சத்தை இங்கு குறிப்பிட வேண்டும். அவரது நாவல்களின் வடிவம் என்பது பொதுவாக நாவல்களில் காணப்படும் ஒருமுகத்தன்மையை மனப்பூர்வமாக மறுப்பது. சாதாரணமாக, நாவல்களின் இயங்குமுறை என்பது அதன் எல்லா கூறுகளையும் ஒரே மைய ஒழுக்கில் இணைத்துக்கொண்டு ஒற்றை இலக்கு நோக்கிச் செல்வதுதான். ஆனால் தஸ்தாயேவ்ஸ்கியின் நாவல்களில் அப்படி நிகழ்வதில்லை. அவரது நாவல்களில் ஒருமுகத்தன்மை போன்ற கலையின் அடிப்படை விதிகள் சந்தேகத்திற்கு இடமில்லாதபடி புறக்கணிக்கப்பட்டிருக்கின்றன. அவரது நாவல்களில் ஒரு ஸ்வரத்தில் மற்ற எல்லா ஸ்வரங்களையும் இணைத்த திட்டவட்டமான வடிவம் கொண்ட ஒத்திசைவான (harmony) நாதத்தை வாசகர் கேட்பதில்லை. இயல்பாகவே நாவலில் உள்ள கதாபாத்திரங்கள் விரிவான ஒரு கட்டமைப்பின் பகுதிகளாக, அந்தக் கட்டமைப்பைச் சார்ந்தவையாக இருக்கும், அப்படி இருக்கவும் வேண்டும். ஒவ்வொரு கதாபாத்திரமும் முன்பே தீர்மானிக்கப்பட்ட முடிவின் கண்ணுக்குப் புலப்படாத தூண்டுதலுக்கு ஆட்பட்டுதான் புனைவுலகில் வாழ முடியும். எல்லாக் கதாபாத்திரங்களின் சலனங்களும் செயல்பாடுகளும் கண்ணுக்குத் தெரியாத ஒரு அச்சாணியில் சுழன்றுகொண்டிருக்கும். அப்படி இல்லாத கதாபாத்திரமோ சம்பவமோ புனைவின் வடிவத்திற்கு வெளியே தனியாக, அனாவசியமானதாக இருக்கும். கூடவே நன்கு வரையறுக்கப்பட்ட கலைவடிவத்தின் சட்டகத்திற்குள் அம்மாதிரியான கதாபாத்திரங்கள் அதிகாரப்பூர்வத் தன்மையை, நம்பகத்தன்மையை இழந்துவிடும்.
தஸ்தாயேவ்ஸ்கியைப் போன்ற பாத்திரப் படைப்பை வேறு கலைஞர்கள் செய்ய முயன்றால் அது கிட்டத்தட்ட தற்கொலைக்கு நிகரான செயல் என்றுதான் சொல்ல வேண்டும். அது அவர்களுக்கு எந்தப் பலனையும் அளிக்காது. அதனால் பொதுவாக கலையின் அடிப்படை விதிகளான ஒருமுகத்தன்மை போன்றவற்றைப் புறக்கணிக்காத நாசூக்கு கலைஞனுக்கு அவசியம் இருக்க வேண்டும். ஆனால் தஸ்தாயேவ்ஸ்கியின் நாவல் வடிவமும் கதாபாத்திரப் படைப்பும் கலையின் விதிகளைக் கொஞ்சம்கூட கடைபிடிக்காமல் முழுமையாகவே புறக்கணிப்பவை. அவரது கதாபாத்திரங்கள் தங்களை இட்டுச்செல்லும் கருத்துநிலை, தங்கள் சொந்த விழைவாற்றல் இவற்றைத் தவிர்த்த வேறு எதற்கும் கட்டுப்படாமல் தானாகவே இயங்குபவை. அவரது கதாபாத்திரங்களின் செயல்பாடுகளுக்கும் உரையாடல்களுக்குமான ஒரே விளக்கம் அந்தக் கதாபாத்திரங்களின் சொந்த இயல்பு, வாழ்க்கைப் பார்வை இவை மட்டும்தான். எந்தக் கட்டுப்பாடுகளுமற்ற சுதந்திரமான சில மனிதர்கள் தங்கள் இஷ்டப்படி செயல்படும் வாழ்க்கைச் சித்திரத்திலிருந்து திட்டவட்டமான வடிவம் கொண்ட கலைப்படைப்பு பிறப்பதில்லை. இயல்பாகவே தஸ்தாயேவ்ஸ்கியின் நாவல்களைப் பல மையங்களைக் கொண்ட, ஏகப்பட்ட சம்பவங்கள் நிறைந்த, பல சுதந்திரமான மனிதர்கள் கொண்ட கூட்டான கலவையாகத்தான் நாம் வாசிப்பில் உணர்வோம். மிகத் தற்செயலாகத்தான் அவரது கதாபாத்திரங்கள் ஒரு சம்பவச்சுழியில் வந்து விழுந்து ஒருவரை ஒருவர் எதிர்கொள்கிறார்கள். அவரது புனைவுலகில் ஒரு சம்பவத்திற்கும் அதைத் தொடர்ந்துவரும் அடுத்த சம்பவத்திற்கும் காரணகாரிய உறவு இல்லை. மனிதர்கள் வந்தார்கள், தோன்றியது போல ஏதேதோ சொன்னார்கள், என்னென்னமோ செய்தார்கள்- இதுதான் அவரது நாவலின் நேரடியான வடிவத்திலிருந்து வாசகர் உருவாக்கிக்கொள்ளும் சித்திரம்.
கடவுள் நம்பிக்கையை மறுக்கமுடியாத வகையில் பிரகடனப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் எழுதப்படும் நூல்களில் கடவுள் நம்பிக்கை என்ற மைய இழையைச் சார்ந்துதான் நாவலின் மற்ற எல்லாக் கூறுகளும் இயங்க வேண்டும். இலக்கை உத்தேசித்த (purposeful) அந்த நாவல்களில் ’கடவுள் நம்பிக்கை’ என்ற மைய விசையுடன் மற்ற எல்லா எதிர்விசைகளும் முழு முற்றாகச் சார்ந்து இருந்தால் மட்டும்தான் அம்மாதிரியான நாவல்களில் கலைத்தன்மையும், வடிவ ஒழுங்கும் உருவாக முடியும். தன் கடவுள் நம்பிக்கைக்கான விழைவைத் தணிக்க கலைப்படைப்புகளை உருவாக்கிய தஸ்தாயேவ்ஸ்கியில் அதைத்தான் வாசகர்கள் எதிர்பார்ப்பார்கள். ஆனால் நிகழ்ந்தது வேறொன்று. அவரது நாவல்களில் நாம் எதிர்பார்த்ததுபோல ’கடவுள் நம்பிக்கை’ என்ற மைய விசையைச் சார்ந்து அதன் எதிர்விசைகள் இல்லை. அதற்குப் பதிலாக, தஸ்தாயேவ்ஸ்கியின் ’இருமையின்’ (dualism) மிக முக்கியமான கடைசிக் கண்ணியை இங்கு கண்டுகொள்கிறோம். அது தஸ்தாயேவ்ஸ்கி என்ற கலைஞனுக்கும் தஸ்தாயேவ்ஸ்கியின் தனி ஆளுமைக்கும் நடுவிலுள்ள சிதிலமான உறவு.
ஆன்மாவைத் தகிக்க வைக்கும் கடவுள் நம்பிக்கை என்ற சிக்கலைத் தீர்ப்பதற்காக தஸ்தாயேவ்ஸ்கி கலையை நோக்கி வந்தவர். அவர் விழைந்ததும் அவரின் இலக்கும் தெள்ளத்தெளிவானவை. கரமசோவ் சகோதரர்கள் நாவலின் நன்மையே உருவான ஃபாதர் சோஸிமாவின் (Father Zosima), அல்யோஷாவின் (Alyosha) வெற்றி முழக்கம் மற்ற எல்லா இரைச்சல்களையும் கைப்பற்றும் அளவுக்கு உரக்க முழக்க வேண்டும் என்பதுதான் தஸ்தாயேவ்ஸ்கியின் இலக்கு. தஸ்தாயேவ்ஸ்கிக்குத் தேவையாக இருந்தது டெவில்ஸ் (The Devils) நாவலில் ஸ்டவ்ரோஜின் (Stavrogin), வெர்கோவ்ன்ஸ்கி (Verkhovensky) போன்றவர்களின் அசுரத்தனமான இரைச்சல் ஷ்டோவின் (Shatov) மரண ஓலத்தால் இல்லாமலாகிவிட வேண்டும் என்பதுதான். மிஷ்கினுடைய (Prince Myshkin) அன்பின் பிரகாசத்தால் ரோகோசின் (Rogozhin) போன்றவர்களின் தீமையின் ஆற்றல் ஒளிமங்கிவிட வேண்டும் என்றுதான் தஸ்தாயேவ்ஸ்கி விழைந்தார். அந்த நாவல்கள் ஏன் எழுதப்பட்டன என்ற கேள்விக்கு தனிப்பட்ட முறையில் அவை தஸ்தாயேவ்ஸ்கிக்கு மிகமிகத் தேவை என்று மட்டும்தான் பதில் சொல்ல முடியும். ஆனால் டெவில்ஸ் (The Devils) நாவலில் வரும் அறிவார்ந்த தன்மையின், விருப்புறுதியின் (will) அச்சமூட்டும் மானுட வடிவமான ஸ்டவ்ரோஜின் (Stavrogin) போன்ற கதாபாத்திரங்கள் ஒருமுறை அரங்கிற்கு வந்துவிட்டால் தன்னைப் படைத்தவனிலிருந்து விடுவித்துக்கொண்டு சுதந்திரமானவர்களாக ஆகிவிடுகிறார்கள். கைவிடப்பட்ட வெறும் பார்வையாளனாக அந்தக் கதாபாத்திரங்களுக்குத் தஸ்தாயேவ்ஸ்கி வழி விட்டுத்தரும் காட்சியைத்தான் நாம் காண்கிறோம். தஸ்தாயேவ்ஸ்கிக்குத் தான் படைத்த கதாபாத்திரங்களின் மேல் இருக்கும் கட்டுப்பாட்டின் சரடுகள் அத்தனையும் ஒன்றுகூட மிச்சமில்லாமல் அறுந்துவிடுகின்றன.
கரமசோவ் சகோதரர்கள் நாவல் வாசிப்பவர்கள் கவனித்தால் ’மாபெரும் விசாரணையாளன்’ (the grand inquisitor) என்ற அத்தியாயத்தில் கம்பீரத் தோற்றம்கொண்ட மதவிசாரணையாளருக்கு (inquisitor) முன் நிற்கும் கிறிஸ்துவின் முகத்தில் அன்பின் ஒளிர்வுகூட மங்கிவிடும்படியான களைப்பு இருக்கும். அது சம்பவங்கள் தன் கட்டுப்பாடின்றி மத விசாரணையாளரின் வெல்ல முடியாத தர்க்கப்பூர்வமான ஒழுக்கில் சென்றுகொண்டிருக்கும் போது ’இனி என்ன செய்வது’ என்று தீர்மானிக்க முடியாமல் உறைந்து நிற்கும் பரிதாபமான தஸ்தாயேவ்ஸ்கியின் முகத்திலுள்ள களைப்புதான். தனக்கே உரித்தான உறுதியான நம்பிக்கையுடன் கம்பீரமாக உறுதியான குரலில் அந்த மத விசாரணையாளர் பேசுவது ஒரு சுயநலவாதியைப் போல, குற்றவாளியைப் போல கீழே பார்த்துக்கொண்டு அல்ல. அன்றாட வாழ்க்கையின் அலைக்கழிப்புகள் நிறைந்த, கைவிடப்பட்ட மனித இனத்தின் மேல் உள்ள கருணையால் அவனுக்காகத் தன் ஆன்மாவில் நெறியின்மையின் முள்முடியைச் சூடியிருப்பதாக, சொந்த நெறிசார்ந்த முழுமையில் பிடிவாதம் கொண்ட கிறிஸ்துவைவிடவும் தான் கருணை நிறைந்தவன் என்ற உறுதியான நம்பிக்கை அந்த வயதான மதவிசாரணையாளரின் குரலில் இருக்கிறது. தஸ்தாயேவ்ஸ்கியின் விழைவு இருக்கும்போதுகூட கிறிஸ்துவிற்கும் மத விசாரணையாளருக்குமான மோதலில் எந்த அனுகூலமும் கிடைக்கவில்லை. அரங்கு முடிந்தவுடன் நாத்திகனான மத விசாரணையாளரா, கிறிஸ்துவா- யார் அந்த மோதலில் வென்றார்கள் என்று ஒவ்வொரு வாசகரும் அவரவர் நோக்கில் தீர்மானிக்க வேண்டியதுதான்.
இறைமறுப்பாளர்களை முழுமையான அளவு மறுத்து கடவுள் நம்பிக்கையின் வெற்றியைச் சந்தேகத்திற்கு இடமில்லாமல் உறுதியாகப் பிரகடனப்படுத்த வேண்டும் என்றுதான் தஸ்தாயேவ்ஸ்கி கரமசோவ் சகோதரர்கள் எழுதினார். ஆனால் இறைமறுப்பின் வடிவமான இவானை (Ivan) உருவாக்கி முடித்தவுடன் பித்துநிலைக்குச் செல்லாமலிருக்க தஸ்தாயேவ்ஸ்கியால் முடியவில்லை. இவான் தன் கருத்துகளை முழுமையாக வெளிப்படுத்தும் பகுதிகள் பிரசுரமாகி முடித்தவுடன் தஸ்தாயேவ்ஸ்கி பித்துபிடித்தவர் போல ஆகிவிட்டார். இவானின் வாதங்களைக் கேட்டு மலைத்துப் போக வேண்டாம், நாவலின் இனிவரும் பகுதிகளில் அவை அனைத்தையும் நான் சுக்குநூறாக ஆக்குவேன் என்று ஜார் அரண்மனையில் தன் பாதுகாவலர்களாக இருக்கும் நண்பர்களுக்குத் தஸ்தாயேவ்ஸ்கி கடிதங்கள் எழுதியிருக்கிறார். ஒரு அரபிக்கதையில் மீனவன் ஒருவன் செம்புக்குடம் ஒன்றைக் கண்டெடுப்பான். அதைத் திறந்தவுடன் அதிலிருந்து பூதம் வெளியே வரும். அந்தப் பூதத்தை என்ன செய்வது என்று தெரியாமல் திகைக்கும் மீனவன் போல தடுக்க முடியாத ஆற்றல் கொண்ட நாத்திகத்தின் மானுட வடிவான இவானைக் கண்டு தஸ்தாயேவ்ஸ்கியே நடுங்கினார் என்பது தஸ்தாயேவ்ஸ்கியின் வாழ்க்கை வரலாற்றில் மிக முக்கியமான தகவல். அவர் தனக்கே என இப்படி எழுதிக்கொண்டார்:
“இவான் ஆழமானவன். அவன் இன்றைய இறைமறுப்பாளர்களைப் போன்ற அற்பமான ஆளில்லை… இவானின் அவ்வளவு வலுவான, ஆழமான இறைமறுப்புநிலையை இந்த மரமண்டைகளால் (ரஷ்யாவின் நாத்திகவாதிகள்) கனவு காணமுடியுமா?”
தஸ்தாயேவ்ஸ்கி தன் நாவலை ஆவேசத்துடன் தொடர்கிறார்- கைவிடப்படத்தன்மையுடன்- கூடவே சிரத்தையுடன். இவானின் கோட்டை போன்ற நாத்திகவாத கருத்தியலைத் தகர்க்க வேண்டும். இவானைத் தோற்கடித்தே ஆகவேண்டும்! ஒரு எழுத்தாளன் என்ற நிலையில் தனக்கு இருக்கும் எல்லாத் திறன்களையும் பிரக்ஞாபூர்வமாகப் பயன்படுத்தி, சிரமப்பட்டு, கரமசோவ் சகோதரர்கள் நாவலைத் தஸ்தாயேவ்ஸ்கி தொடர்ந்தார். இது ஒரு நாவலாசிரியர் தன் கற்பனையில் படைத்த இரண்டு கதாபாத்திரங்களுக்கிடையே கதைக்களத்தில் நடக்கும் மோதல் என்பதைவிட இரண்டு சுதந்திர மனிதர்கள் தன்னிச்சையாக நடத்தும் உண்மையான வாழ்வா சாவா போராட்டம். அந்த மோதலில் வெற்றிபெற்றது யார்? இந்தக் கேள்விக்கு இன்றுகூட யாராலும் பதிலளிக்க முடியவில்லை. எந்தக் கேள்விக்கு விடைகாண தஸ்தாயேவ்ஸ்கி எழுதினாரோ, அந்தக் கேள்வி தஸ்தாயேவ்ஸ்கியின் நாவல்களில் அப்படியே எஞ்சுகிறது என்பதுதான் உண்மை. ’கடவுளின் இருப்பு’ என்ற கேள்வியை அடிப்படையாகக்கொண்ட மோதல் – இன்றும் என்றும் எஞ்சும் அந்த மோதல்- அதை மட்டும்தான் தஸ்தாயேவ்ஸ்கி வெளிப்படுத்தியிருக்கிறார். அந்த மோதலில் உள்ள ஒவ்வொரு அணுவும் வெல்ல முடியாதது, உணர்வுப்பூர்வமானது. காரணம், அந்த மோதல் பிறந்த ஆன்மாவில் அது தாளமுடியாமல் கனன்றுகொண்டிருந்த உண்மை என்பதுதான். தஸ்தாயேவ்ஸ்கியின் ஆன்மாவில் இருக்கும் அந்த ஒட்டுமொத்தமான உண்மையிலிருந்துதான் அடிப்படைக் கருத்துகள் நம்பகத்தன்மையை அடைகின்றன, உணர்வுப்பூர்வமாக ஆகின்றன.
நல்ல கலைஞனைப் பொறுத்தவரை அவன் தன் ஆன்மாவில் உணரும் உண்மை மட்டும்தான் ஒரே உண்மை. அவனைப் பொறுத்தவரை புறவயத்தன்மை (objective) கொண்டது அந்த உண்மை மட்டும்தான். ’டெவில்ஸ்’ (Devils) நாவலில் வரும் கிறில்லோவ் (Kirillov) என்ற கதாபாத்திரம் மனித வாழ்க்கைக்குப் பொருள் அளிக்கக்கூடிய கடவுள் நம்பிக்கை ஒரு மாயைதான் என்ற உணர்வில் தகிப்பவன். தன் சொந்த விழைவைச் செயல்படுத்துவதற்காக மட்டுமே தற்கொலை செய்துகொள்பவன். நம் நிஜ வாழ்க்கையில் அம்மாதிரியான ஒருவனைக் காண முடியாது. டெவில்ஸ் (The Devils) நாவலில் வரும் ஸ்டவ்ரோஜின் (Stavrogin) என்ற கதாபாத்திரம் நன்மை, தீமை இரண்டிலுமே நம்பிக்கையை இழந்து, நற்செயல்கள், தீமை செய்தல் என இரண்டிலுமே ஒரே போல சலிப்படைந்து, எந்தச் செயல்பாடும் ஒரே போல அர்த்தமின்மை கொண்டவைதான் என்ற ஒரே காரணத்தால் தற்கொலை செய்யாதவன். அவனையும் நாம் நிஜ வாழ்க்கையில் காண முடியாது.
கரமசோவ் சகோதரர்கள் நாவலில் உள்ள இவான் என்ற கதாபாத்திரம் மனிதன் சமூகமாக, தனிமனிதனாக நிலைநிற்க வேண்டுமென்றால் கடவுள் இருந்தே ஆகவேண்டும் என்ற விழைவு கொண்டவன், கூடவே தன் தர்க்கத்தின் ஆற்றலால் கடவுளே இல்லை என்ற முடிவுக்கு வருகிறான். ’கடவுள்’ என்பதை வாழ்க்கை முழுக்க கனன்றுகொண்டிருக்கும் ஒரு பிரச்சினையாக ஆக்கி கடைசியில் பைத்தியமாக ஆகும் அவனைப் போன்ற கதாபாத்திரத்தையும் நாம் நிஜ வாழ்க்கையில் காண முடியாது. ஆனால், அவை தஸ்தாயேவ்ஸ்கியின் சிதிலமான ஆழ்மனதிலுள்ள மிகப்பெரிய உண்மைகள். கலைஞன் தன் கலைத்தன்மையால் அங்கீகரிக்க முடியும் ஒரே உண்மை அவனது ஆழ்மனதில் உணரும் உண்மை மட்டும்தான். இந்த ஆழ்மன உண்மையுடன் உள்ள உறவுதான் தஸ்தாயேவ்ஸ்கியின் படைப்புகளில் கருத்துகளுக்கு திகைப்பூட்டும் வசீகரத்தையும் அச்சமூட்டும் உயிர்த்துடிப்பையும் ஏற்படுத்துகிறது. தஸ்தாயேவ்ஸ்கியின் நாவல்களில் தொடக்கத்தில் உள்ள கேள்வி நாவலின் கடைசியிலும் கேள்வியாகவே எஞ்சியிருப்பது அந்தக் கேள்விக்கு அவரது ஆழ்மன உண்மையுடன் உள்ள உறவுதான்.
கடவுளின் இருப்பை மறுக்க முடியாதபடி நிறுவுவதற்காகப் பைபிள் போன்ற படைப்பாக்கத்திற்குத் துணிகிறார் தஸ்தாயேவ்ஸ்கி. ஒருவிதத்தில் பார்த்தால் கடவுள் மறுப்புத்தன்மை கொண்ட தர்க்கப்பூர்வமான சிந்தனையின் வெல்ல முடியாமையைத் துலங்க வைத்த தீர்க்கதரிசிதான் தஸ்தாயேவ்ஸ்கி. நிச்சயமாக, இது ஒரு தீர்க்கதரிசி பெருமைப்படக்கூடிய நிலை இல்லை. ஆனால் தன் ஆன்மாவில் உணரும் உண்மையான மோதலை, தான் விழைந்த ‘கடவுள் நம்பிக்கை’ என்ற தரப்பில் நின்றுகொண்டு வெளிப்படுத்த முயன்று, தன் சொந்த மேதைமைக்கு (genius) இரையாகித் தோற்றுப் போகிறார். தீர்க்கதரிசியான தஸ்தாயேவ்ஸ்கியின் தோல்வி, தஸ்தாயேவ்ஸ்கி என்ற கலைஞனின் அபூர்வமான ஆற்றலைத்தான் நமக்குக் காட்டுகிறது. உலகம் கண்ட கலை மேதைகளிலேயே மகத்தான கலை மேதை தஸ்தாயேவ்ஸ்கி என்ற நாவலாசிரியர்- தானே உருவாக்கிய ’அறிவார்ந்ததன்மை’ என்ற பிரம்மராட்சசனைத் தாளமுடியாத வெறுப்புடன், பயத்துடன், வழிபாட்டுணர்வுடன், வியப்புடன் கண் இமைக்காமல் நேருக்கு நேர் எதிர்கொண்ட மனிதன்.