வசீலி கிராஸ்மேன்: இருபதாம் நூற்றாண்டின் தல்ஸ்தோய் – ஆரோன் லேக் ஸ்மித்

0 comment

சோவியத் ஒன்றியம் உதிரி எழுத்தாளர்களாலும் இதழாசிரியர்களாலும் நிறுவப்பட்ட அரசாங்கம் என்றே நினைவுகூரப்பட வேண்டும். வேறு சொல்லில் அதைக் கொடுங்கனவு என்றும் குறிப்பிடலாம். துண்டுப் பிரசுரர்கள், தன்னிச்சையான கொள்கையாளர்கள், விமர்சகர்கள், சிறு பத்திரிகை வெளியீட்டாளர்கள், கவன ஈர்ப்புக்காகக் கருத்திடுபவர்கள், திருட்டுக் கலைஞர்கள், தம்மைத் தாமே தொழிலாளர் ஒருங்கிணைப்பாளர்கள் என்று அழைத்துக்கொண்ட தோல்வியடைந்த கவிஞர்கள் – ஒருவரோடு ஒருவர் உரசி நித்தியமாகப் போரிட்டபடி இருக்கும் முழு முற்றான இலக்கியவாதிகள் ஆகியோர் அதன் பங்களிப்பாளர்கள். 

தொடக்க கால சோவியத் ஒன்றியத்தை நாம் உச்சநிலை பதிப்பு நிறுவனம் என்று – அதாவது ஒரு காலமுறை இதழ் என்றோ நவயுக ஊடக அமைப்பு என்றோ – கற்பனை செய்தால், லெனின் அதன் நிறுவனராகவும் இதழாசிரியராகவும் இருக்க, ட்ராட்ஸ்கி துணை ஆசிரியராக இருக்க, ஸ்டாலினோ பார்க்கப் பணிவான மேலாண்மை ஆசிரியர் என்று கொள்ளலாம். பதிப்புத்துறையில் இருந்த அனைவருக்கும், மேலாண்மை ஆசிரியரே மிகக் கடுமையாகப் பணியாற்றக்கூடியவர் என்பது தெரியும். அவர்களே காலக்கெடுக்களைக் கச்சிதமாகப் பின்தொடர்ந்து ரயில் சரியான நேரத்திற்கு கிளம்புவதை உறுதிசெய்பவர்கள். அவர்களே வேறு எவரைக் காட்டிலும் நம்பகத்திற்குரியவர். இந்தக் குறிப்பிட்ட மேலாண்மை ஆசிரியர் எந்தவித விடுப்புகளும் எடுப்பதில்லை, நகரத்தை விட்டு அகல்வதே இல்லை. நிறுவனம், நிறுவனர் இரண்டின் நோக்கத்திற்கும் அநேகமாக அல்லும் பகலுமாகப் பாடுபடும் செயலாளராகிய இவர், தன் கடன் பணி செய்வதே என்று வாழ்கிறார். 

பதிப்பாளருக்கு உடல்நலம் குன்றும்போது, இந்த மேலாண்மை ஆசிரியரே அவரை நேரில் சென்று சந்தித்து, ஊக்கமளித்து, சிரிக்கவைத்து அவருடைய அறிவுரைகளைக் கேட்டுப் பெற்று வருபவர். தன் தலைவரின் மேல்நிலை அறிவுரைகளைப் பெற்று வருவதாலேயே, இந்தத் தனிப்பட்ட உறவுமுறையைத் தனக்காகப் பயன்படுத்தி அந்நிறுவனத்தில் தனது அதிகாரத்தை வலுப்படுத்துவார். போல்ஷ்விக் அதிகாரப் படிநிலையில் ஸ்டாலினுடைய முன்னேற்றம் படுவேகமாக நிகழ்ந்ததன் பின்னணியைக் காண்பது அத்துனை சிரமமானதல்ல. நாம் இந்த நபரை இதற்கு முன்னும் பார்த்ததுண்டு. பதிப்பாளர் இறக்கும் போது, அந்நிறுவனத்தைக் கைக்கொள்வதற்கு மேலாண்மை ஆசிரியர் முனைவிருப்பு கொண்டிருக்கலாம் என்று எவருக்கும் சந்தேகம் எழுவதில்லை. ஆனால் உண்மையில் நிறுவனத்தின் தினசரி நடவடிக்கைகளை வேறு எவரால் நன்கு புரிந்துகொள்ள முடியும், வேறு எவரால் பொறுப்பேற்கக் கூடும்?

ஸ்டாலின் ஒரு நிறைவான ஆசிரியர். மெளனமாகப் பின்னணியில் பணியாற்றியவாறே உலகைத் தம் நோக்கத்திற்கேற்ப வடிவமைப்பதற்குத் தன் அகங்காரத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்பதை அவர் நன்கு அறிந்திருந்தார். நல்ல ஆசிரியர்களுக்குத்தான் தன்னைக் கரப்பில் வைத்திருக்க வேண்டும் என்று தெரிந்திருக்கும். பிற எழுத்தாளர்களைப் போல் கவிதைத் தாள்கள், இலக்கிய சஞ்சிகைகள் ஆகியவற்றை மட்டும் தணிக்கை செய்வதோடு நில்லாமல், ஒவ்வொருவரது வாழ்க்கையிலும் புகுந்து தணிக்கை செய்தது ஸ்டாலினுடைய பென்சில். 1931ம் ஆண்டு வெளியான ஆந்த்ரேய் பிளாட்டனோவின் லாபம் என்ற குறும்புதினத்தின் ஓரங்களில் ’முட்டாள்,’ ’வேசி மகன்,’ ’பொறுக்கி’ என்றெல்லாம் அவர் குறிப்பெழுதி பிளாட்டனோவின் எழுத்துத் தொழிலைச் சிதைத்தார். அக்டோபர் புரட்சியின் முக்கியக் காரணகர்த்தாவும் அதன் ஆசிரியருமான கார்ல் ராடெக்குக்குச் சில ஆண்டுகளுக்கு முன் மரண தண்டனை உத்தரவிட்டிருந்தார். அவரைப் போலத் தோற்றமளித்த நிர்வாணமான ஒரு ஆணுடைய படத்தின் மீது ’ராடெக், அழுகிய வேசி மகனே, நீ மட்டும் எதிர்காற்றில் சிறுநீர் கழிக்காமல் இருந்திருந்தால், இத்தனை மோசமாக நடக்காமல் இருந்திருந்தால், இன்னும் உயிருடன் இருந்திருப்பாய்,’ என்று கிறுக்கினார். இன்னொரு படத்தின் மீது ’நீ வேலை செய்தாக வேண்டும், சுய மைதுனம் செய்யக்கூடாது’ என்று எழுதினார். ஊடகத்தின் தொகுப்புப் பணியின் செல்வாக்குடன் வாழ்வையும் மரணத்தையும் நிர்ணயிக்கும் திறனும் ஒன்று சேர்ந்த போது, அபத்தமான நம்பமுடியாத நிலைமைகள் உருவாயின. ஒரு முறை ஸ்டாலினுடைய பழைய தோழர் நிகோலாய் புக்காரின் ஸ்டாலினால் அடைக்கப்பட்டு சிறையில் இருந்த போது ஸ்டாலினுக்குக் கடிதமெழுதி தன் இறுதி நூலுக்கு முன்னுரை எழுதக் கோரி மன்றாடினார்: “இந்தப் படைப்பை அழித்துவிடாமல் காக்குமாறு உம்மை உள்ளத்தின் ஆழத்தில் இருந்து இரந்து கேட்கிறேன்… இது என் தனிப்பட்ட தலைவிதியில் இருந்து முற்றிலும் வேறுபட்டது… கருணை காட்டுக, என் மீது அல்ல, என் படைப்பின் மீது!

வசீலி கிராஸ்மேன் (Vasily Grossman)

எல்லாத் தணிக்கை ஆசிரியர்களையும் போல ஸ்டாலினுக்கும் இரட்டை மனநிலை இருந்திருக்கக்கூடும். சோவியத்தின் மகா எழுத்தாளர் வசீலி கிராஸ்மேன் தன் மகளிடம், ‘என் மீது ஸ்டாலின் தனித்துவமான மனோபாவம் கொண்டிருந்தார்’ என்று சொன்னார். ‘அவர் என்னை வதைமுகாம்களுக்கு அனுப்பவில்லை, ஆனால் எனக்கு ஒருபோதும் பரிசளித்ததும் இல்லை.’ பலமுறை கிராஸ்மேனுடைய போற்றப்பட்ட நாவல்களுக்குப் பெருமிதத்திற்குரிய ஸ்டாலின் விருது கிடைக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டு அது கிடைக்காமல் போனது. யாவிட் மையத்தில் ஹிலாரி கூடத்தில் வெற்றி விழா கொண்டாட நிகழ்ச்சி திட்டமிட்ட பிறகெல்லாம், கடைசி நிமிடங்களில், மர்மமான முறையில் கிராஸ்மேனின் பெயர் ஒவ்வொரு முறையும் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. 

இன்று வாழ்வும் ஊழும் (Life and Fate) புதினம் மூலமாக நன்கு அறியப்பட்டவர் கிராஸ்மேன். அப்புதினம் இருபதாம் நூற்றாண்டின்போரும் அமைதியும் என்று அழைக்கப்படுகிறது. பல்வண்ணக் காட்சிக்குழல் போல் கொந்தளிக்கும் உணர்ச்சிகளால் நிறைந்த, ஆயிரம் பக்கங்கள் கொண்ட இப்புதினத்தில் மத்திய வர்க்க ஷபோஸ்னிகோவ் குடும்பம் இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தைக் கடப்பது பற்றியது. அது, கொள்கைகளின் கண்மூடித்தனத்தின் மீதான குற்றச்சாட்டாகவும், ஸ்டாலினிய கொடூரங்களின் மீதான அப்பட்டமான விமர்சனமாகவும் உள்ளது. கதை விவரிப்பில் குலாக்களுக்கு நடந்த மாபெரும் வன்முறை, ஜெர்மானிய முகாம்கள், 1950களில் ஸ்டாலின் நடத்திய செமிடிக் இனத்திற்கு எதிரான பிரச்சாரங்கள் ஆகியவை  மானுடாபிமானம் அற்ற சோவியத், நாசி ஆகிய ஆட்சிமுறைகள் ஒன்றுக்கொன்று ஆடிப்பிம்பமாய் செயல்படுவதை உணர்த்துகிறது.

முக்கியத் தருணமொன்றில் ‘சர்வாதிகார அடுப்பில் வறுத்தெடுப்பதால் மானுட குணம் மாற்றம் பெறுமா? தன் உள்ளார்ந்த விடுதலை வேட்கையை மனிதன் இழந்திடுவானா?’ என்று கேட்கிறார் கிராஸ்மேன். ’இந்தக் கேள்விக்கான விடையிலேயே சர்வாதிகார தேசத்தின் ஊழும் தனிமனிதனின் ஊழும் கலந்திருக்கிறது.’ இந்த நூல் மிக அபாயகரமானதாகக் கருதப்பட்டு இதன் அனைத்து பிரதிகளும் கைப்பற்றப்பட்டு கே.ஜி.பி.யால் 1961ல் முடக்கப்பட்டது. இந்தப் பாடு கிராஸ்மேனை உடல்ரீதியாகவும் ஆன்மரீதியாகவும் தளர்த்தியது. அவர், ‘அவர்கள் என்னை இருண்ட மூலைக்குத் தள்ளி நெருக்கினர்’ என்று சொன்னார். அவரது மரணத்திற்குப் பிறகு, தன் பழைய நண்பரிடம் தந்து கரந்து வைத்திருந்த ஒரு பிரதியை நுண்படலச் சுருளில் நகலெடுத்து ரஷ்யாவிலிருந்து கடத்திச் சென்று மேற்குலகில் 1980ல் பிரசுரித்தனர். ரஷ்யாவில் கிளாஸ்னோஸ்ட் காலத்திலேயே அது வெளியானது. 

அதிலிருந்து அவரது வாழ்க்கைக் கதை ஒரு நீதிக்கதையாக நிலைபெற்றது. தீரமிக்க மாபெரும் மானுடவாதி, வரம்பற்ற அதிகாரமுடைய ஒரு ஆட்சிக்கெதிராக நின்ற கதை. ஆனால் இரு புதிய நூல்கள் கிராஸ்மேனை இன்னும் குழப்பமான ஒரு நபராகக் காட்டுகின்றன. வாழ்வும் ஊழும் புதினத்தை ஆங்கிலத்திற்கு முதலில் மொழிபெயர்த்த ராபர்ட் சாண்ட்லர் (Robert Chandler), தனது மனைவி எலிசபெத்துடன் சேர்ந்து மறக்கப்பட்ட அந்நாவலின் முன்வரலாற்றுப் புனைவான ஸ்டாலின்கிராடை (Stalingrad) மொழிபெயர்த்தார். வாழ்வும் ஊழும் புதினமானது ஒழுக்கச் சீர்கேடுகளின் முன் நிற்கும் மயங்கிய வரலாற்று விழிகளைச் சுட்டும் போது, ஸ்டாலின்கிராட் புதினமோ சோவியத் திட்டத்தின் நீண்ட அணிவகுப்பின் மீதான நம்பிக்கையையும் உறுதிப்பாட்டையும் முன்வைக்கிறது. இன்னும் சொல்லப் போனால், அது ஃபாசிஸத்திற்கு எதிரான போரில் திரண்ட சோவியத் மக்களின் பலத்தைப் பாடும் போற்றிப் பண். நெடுங்காலமாக, குன்றிய ஊக்கத்துடன், சமூகவுடைமை யதார்த்தத்தைப் பேசும் புதினமாகப் புறக்கணிக்கப்பட்டு வந்த இந்நூல், பிடிவாதமான பனிப்போர் சிந்தனையால் அநீதியாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்று சாண்ட்லர் சுட்டுகிறார். ஸ்டாலினுடைய ஆட்சியின் உச்சத்தில், இவருடைய நூல் பிரசுரமாவது நல்லதாக இருக்காது என்ற முன்முடிவு நிலைத்திருந்ததே காரணம். 

சர்வ லட்சணம் பொருந்திய புதினம் என்றில்லாத போதும், ஸ்டாலின்கிராட் ஒரு வெற்றிகரமான வரலாற்றுப் போர்ப்புதினம். வாழ்வும் ஊழும் எப்படி ஷபோஸ்னிகோவ் குடும்பத்தினை விவரித்துப் பேசுகிறதோ, அவ்வாறே இதன் விரிவும் குறிப்பிடத்தக்கது. பத்துப் பன்னிரண்டு கோணங்களுக்கிடையே இப்புதினம் ஊடாடுகிறது. முக்கியக் கதாபாத்திரங்களின் பட்டியலே இந்நூலின் பிற்சேர்க்கையில் பத்து பக்கங்கள் வரை நீண்டிருக்கிறது. ஆயினும் சாண்ட்லர் சுட்டியதைப் போலவே, ’சமமான பண்புடனும் மரியாதையுடனும்… செம்படையின் முதுநிலைத் தளபதி, புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சிப்பாய், பீதியில் உறைந்த இல்லத்தரசி ஆகிய மூவரும் விவரிக்கப்பட்டுள்ளனர்.’ (அதுமட்டுமின்றி, ‘திகைப்பேற்படுத்தும் அளவுக்கான பகுதியை, நாய்கள், பூனைகள், ஒட்டகங்கள், எலிகள், பறவைகள், மீன்கள், சுற்றியுள்ள ஸ்டெப்பி புல்வெளிப் பூச்சிகள் ஆகியவற்றின் மீது ஸ்டாலின்கிராட் போர் எத்தகைய விளைவை உருவாக்கியது என்பதைச் சொல்வதற்காகவே கிராஸ்மேன் ஒதுக்கியுள்ளார்.’) போருக்கு முந்தைய பொதுவுடைமைவாதம், 1917க்கு முந்தைய ஐரோப்பிய விடுதிகள், கழுத்துப்பட்டைகள் போன்றவற்றையும் அகழ்ந்து முன்வைக்கிறது. மேலும் ஃபாசிஸத்தின் கொள்ளை பற்றிய நீண்ட விவாதங்களையும் இடையிடையே பின்னியபடி செல்கிறது:

‘மெயின் காம்ப்பில் ஹிட்லர், சமத்துவம் மெலிந்தோருக்கு மட்டுமே பயனளிக்கிறது. இயற்கைத் தேர்வின் அழிவாற்றல் வாயிலாகவே, உலகில் முன்னேற்றம் என்பதை எய்த இயலும். எனவே இனத்தேர்வின் – குறிப்பிட்ட இனத்தின் ஆதிக்கத்தின் மூலமாகவே – மானுடத்தின் வளர்ச்சி அமையும். அவர் வலிமை, வன்முறை இரண்டு கருத்துகளையும் குழப்பினார். ஒரு கேடான நம்பிக்கையின் பாதையை வலிமையாகக் கண்டார். சுதந்திர மனித தொழிலாளர் ஆற்றலைக் கணக்கிடத் தவறினார். பரந்து விரிந்த கோதுமை வயலை உழும் ஒரு மனிதனைவிட, அவன் தலையில் சுத்தியலால் அடிக்கும் குண்டனைப் பெரிய ஆளாகக் கருதினார். குருட்டு நம்பிக்கையில் வீழ்ந்த ஒருவர், தன்னால் தொழிலின் மூலமாக எதையும் சாதிக்கும் திராணியில்லாது போகும் போது, இன்னும் தன்னிடம் மீதமிருக்கும் வலிமையான மனத்தையும், வெறியாற்றலையும், எரியும் நோக்கத்தையும் முன்வைக்கும் தத்துவமே இது.’

தாயாருடன் கிராஸ்மேன்

ஸ்டாலின்கிராடுக்குப் பக்கம் வைத்து, அலெக்ஸாண்ட்ரா போபோஃப் (Alexandra Popoff) எழுதிய வசீலி கிராஸ்மேனும் சோவியத் நூற்றாண்டும் (Vasily Grossman and the Soviet Century) என்ற புதிய வாழ்க்கை வரலாற்று நூலைப் பார்க்கும் போது, கிராஸ்மேனின் வாழ்வை நீதிச்சமரசத்தில் இருந்து வாழ்வும் ஊழும் வரையிலான உண்மைக்கான பயணமாகக் கொள்ள முடியும். (வாழ்வும் ஊழும் பற்றிய அத்தியாயம் ‘புதினம் (The Novel)’ என்றே தலைப்பிடப்பட்டுள்ளது) இரு நூல்களும் கிராஸ்மேன் எந்த அளவிற்கு சோவியத் இலக்கிய இயக்கத்தின் உற்பத்திப் பொருளாக இருந்திருக்கிறார் என்பதைப் புலப்படுத்துகின்றன. தன் நூல்களும் கட்டுரைகளும் வெளியிடப்பட வேண்டும் என்பதற்காக அவர் பட்டறிந்த இன்னல்களும், சமரசங்களும், தணிக்கையை அவர் ஏற்ற விதங்களும் அதைச் செவ்வனே காட்டுகின்றன. அவரது சினமும் மனச்சிதைவும் உண்மையைச் சொல்ல வேண்டும் என்ற இச்சையும் இந்த அமைப்பில் நெடுங்காலம் பங்கேற்ற பிறகே மெல்ல வளர்ந்து வந்திருக்கிறது. பெரும் பயங்கரத்தின் உச்சகட்டத்தில், அவர் இன்னும் என்.கே.வி.டி.யின் தலைவருக்குக் கடிதம் எழுதிக்கொண்டிருந்தார்: ‘நான் அடைந்த அனைத்திற்காகவும் – என் கல்வி, எழுத்தாளனாக நான் பெற்ற வெற்றி, என் எண்ணங்களையும் உணர்வுகளையும் சோவியத் வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வதற்கான வாய்ப்பு – இந்த சோவியத் அரசாங்கத்திற்குக் கடமைப்பட்டுள்ளேன்.’ வாழ்வும் ஊழும் புதினத்தில் மட்டுமே அவர் அனைத்து பாசாங்கையும் முற்றிலும் களைந்துவிட்டு, விளைவுகளைப் பொருட்படுத்தாமல் தான் விரும்பியதை மட்டுமே எழுதினார். 

1905ல் உக்ரெய்னில் ஒரு யூத நடுத்தர வர்க்கக் குடும்பத்தில் பிறந்த கிராஸ்மேன், தன் இளம் பருவத்தில் டான்பாஸில் இருந்த கொடிய சுரங்கங்களில் காற்றை அளவிடும் ஆய்வாளராகப் பணியாற்றினார். அவருடைய உடல்நலம் சிறப்பானதாக இருக்கவில்லை. கிராமத்தின் ஒற்றை மதிநலவாதியாக இருந்ததால் கடுந்தனிமையையும் அனுபவித்தார். ஆயினும் அவற்றைத் தன் முதல் புதினம் – க்ளூகாஃப்பை (Glückauf) – எழுதுவதற்கான கச்சாப்பொருளாகப் பயன்படுத்தினார். சமூகவுடைமை எதார்த்தவாத வகைமையின் கீழ் வரும் இந்த நூலில் டான்பாஸ் சுரங்கத் தொழிலாலர்களைச் சோவியத் வாழ்வின் முதன்மையான பாட்டாளி வர்க்கத்தினராகக் குறிப்பிட்டிருந்தார். ஆனால், அந்நூலின் வெளிப்படையான மதுப்பழக்கம் பற்றிய குறிப்புகளாலும், சுரங்கக் குமுகத்தினரிடையே நிகழும் வன்முறையாலும் பிரசுரமாவதில் நிறைய சிக்கல்களைச் சந்திக்க நேர்ந்தது. பிரசுரமான உடனேயே தடையும் செய்யப்பட்டது.  

தன் தலைமுறையின் பல எழுத்தாளர்களைப் போல கிராஸ்மேனின் எழுத்துப் பிரவேசமும் சோவியத் இலக்கியத்தின் மேசினாஸ் (Maecenas) ஆகிய மாக்சிம் கார்க்கியாலேயே சாத்தியமானது. வசீகரமான, ஜானஸ் போல இரட்டை முகமுடைய கடிதங்கள் எழுதும் கார்க்கி, தன் எழுத்தாளர்களின் போக்கின் மீது – குறிப்பாக யூத எழுத்தாளர்கள் வாழ்வின் மீது – மிகக் கவனமும் ஆர்வமும் கொண்டிருந்தார். அதே சமயம் சோவியத் எதிரிகள் மீதான அவருடைய கடுமையான விவாதத் திறன் மிக்க கட்டுரைகளும், கட்டாயத் தொழில் முகாம்களுக்கு அவர் எழுதிய போற்றுரைகளும் ஸ்டாலினுடைய கொடுமைகளை உறையிட்டு மறைத்தன. க்ளூகாஃப்க்குப் பதிப்பாசிரியரைக் கண்டடையும் போராட்டத்தில் கிராஸ்மேன் நேரடியாகவே கார்க்கியிடம் சென்று – அவருடைய ஆசி கிட்டலாம் என்ற நம்பிக்கையுடன் – மேல்முறையீடு செய்தார். (அதன்பின் அவர் தன் வாழ்வில் எப்போதுமே பதிப்பு நிறுவனத்தின் உச்சியில் இருப்பவரைச் சந்தித்து முறையிடுவதையே தன் உத்தியாகத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தார்.) கார்க்கிக்கு எழுதிய மடலில் ‘நான் உண்மையைதான் எழுதினேன்’ என்று நேரடியாகக் குறிப்பிட்டார். ‘ஒருவேளை அது கசப்பான உண்மையாக இருக்கலாம். ஆனால் உண்மை ஒருபோதும் புரட்சிக்கு எதிரானதாக இருக்க முடியாது.’ அந்தக் கடிதத்திற்குக் கார்க்கி எழுதிய எரிச்சலான பதில் கிராஸ்மேனின் இருதலைக்கொள்ளி எறும்பு வாழ்வைச் சுட்டுகிறது. எப்போதும் உண்மையைச் சொல்வதற்கும் தன் படைப்பு பிரசுரமாவதற்கும் இடையிலான போராட்டம் தொடக்கம் முதலே கிராஸ்மேனுக்கு இருந்தது. 

கார்க்கியின் மறுமொழி: ‘நான் உண்மையைதான் எழுதினேன்’ என்று சொல்வது போதுமானதல்ல. எழுத்தாளர் தனக்குத்தானே இரு கேள்விகளைக் கேட்டுக்கொள்ள வேண்டும்: ‘முதலில் எந்த உண்மை? இரண்டாவது ஏன் அவ்வுண்மையைச் சொல்லியாக வேண்டும்?’ இரண்டு உண்மைகள் உண்டென்பதை நாமறிவோம், நம் உலகில் கடந்தகாலத்தின் இழிவான, அசுத்தமான உண்மைகள் நம் முன் திரண்டு நிற்கின்றன… நான் ஏன் எழுதுகிறேன்? எந்த உண்மையை நான் உறுதி செய்கிறேன்? எந்த உண்மையை நான் வென்றளிக்க விரும்புகிறேன்?

மாஸ்கோவில் இருந்த சாக்கோ – வான்செட்டி பென்சில் பணிமனையில் (Sacco and Vanzetti Pencil Factory) பணிபுரிந்த நாட்களில், கார்க்கி பரிந்துரை செய்த மாற்றங்களையும் நீக்கங்களையும் தனது நெடுங்காலம் பாதிக்கப்பட்ட நூலின் மீது செய்து, பொது இரசனையை உருவாக்குபவரின் அணியில் கிராஸ்மேன் அதிகாரப்பூர்வமாகச் சேர்ந்துகொண்டார். 

க்ளூகாஃப் பெருவெற்றி பெற்றது. டான்பாஸ் சுரங்கத்துத் தொழிலாளர்களின் வாழ்வை விவரித்த விதத்திற்காக எழுத்தாளர் ஐசக் பேபல் அதைப் பாராட்டினார். இலக்கியப் பணிக்காக, சோவியத் ஒன்றியத்தில் நல்லூதியம் கிடைக்கப் பெறக்கூடிய ஒரு துறையான, பொறியிலைக் கைவிட்டவர் கிராஸ்மேன். அவருக்கான கதவுகள் திறந்தன. கார்க்கிக்கு உகந்த எழுத்தாளராக இருந்தமையால், அவர் பாதுகாப்பு வளையத்திற்குள் இருந்தார். அமைப்புக்குள் இருந்தவாறு எது சாத்தியமோ அந்த எல்லை வரையிலான படைப்புகளை அவரால் பதிப்பிக்க இயலும். ‘பெர்டிசேவ் நகரத்தில்’ (In the town of Berdichev) போன்ற கதைகளிலும் ‘ஸ்டீபன் கோல்சுகின்’ (Stepan Kolchugin) போன்ற புதினங்களிலும் போல்ஷ்விக் உயர்நிலை அதிகாரிகள் வாழ்வில் சம்பவிக்கும் பெண்வெறுப்பு, பேறுகாலம் போன்ற சர்ச்சைக்குரிய கதைப்பொருட்களை கிராஸ்மேன் ஆராய்ந்தார். சமூகப் புரட்சியாளர்கள், மென்ஷ்விக்குகள் போன்ற அரசியல் பிரிவுகளிடையே நிகழும் சீற்றங்களை அவர் மனிதாபிமான பார்வையில் முன்வைத்தார்.

மகளுடனும் தாயாருடனும்

ஒருபுறம் அவருடைய எழுத்து வாழ்க்கையைச் சாத்தியமாக்கிட அனுமதித்த தேசம், மறுபுறம் அவருடைய நண்பர்களையும் குடும்பத்தினரையும் குற்றம் சாட்டியது. மாபெரும் பயங்கரங்கள் தொடங்கியபோது கிராஸ்மேனின் உதவியாளரான நாத்யா, அவள் ட்ராஸ்கிய எழுத்தாளரான விக்டர் செர்ஜேயுடன் கொண்டிருந்த நட்பின் காரணமாக நாடு கடத்தப்பட்டாள். முன்னாள் மென்ஷ்விகான கிராஸ்மேனின் தந்தை குலாக்கைத் தவிர்க்கும் பொருட்டு தன்னைத்தானே சுயவெளியேற்றம் செய்துகொண்டு கஜகஸ்தானின் புற எல்லையின் உறைந்த நிலங்களுக்குள் கிராஸ்மேன் சென்றார். கிராஸ்மேனின் மனைவியை அவளது முந்தைய – தேசத்துரோகியுடனான – மண உறவின் காரணமாகச் சோவியத் அரசாங்கம் சிறைக்கு அனுப்பிய போது உடனடியாக அவளது குழந்தையைத் தத்தெடுத்துக்கொண்ட கிராஸ்மேன், அவளுடைய விடுதலைக்கும் முயன்றார். என்.கே.வி.டி.யில் இருந்து வெளியேற்றப்பட்ட தலைவர் நிகோலாய் யேசோவுடன் தொடர்புகொண்டிருந்ததன் காரணமாக பேபல் சுட்டுக்கொல்லப்பட்ட பின்பு, தன் இலக்கியச் சுற்றத்தினர் பலரும் அதிகாரத்தின் மீது மயக்கம் கொண்டதைச் சொல்லிப் புலம்பினார். ஒரு நண்பரிடம், ‘அவனுடைய மனசாட்சி சோரம் போய்விட்டதா? யேசோவ்களுடன் சேர்ந்து புத்தாண்டைக் கொண்டாட எப்படி அவனால் முடிகிறது? ஏன் இத்தகைய விசித்திரமான மனிதர்கள் – அவன், மாயகோவ்ஸ்கி, உன் நண்பன் பாக்ரிட்ஸ்கி – ஏன் என்.கே.வி.டி. மீது இத்தனை ஈர்க்கப்படுகிறார்கள்?’ என்று வருந்தினார்.

1941ல் ஜெர்மானிய படையெடுப்புக்குப் பின், செம்படையின் அதிகாரப்பூர்வமான நாளேடான சிவப்பு நட்சத்திரத்தின் முதன்மைத் தாளாளர்களுள் ஒருவராக கிராஸ்மேன் இருந்தார். அவரிடம் போர் செய்தியாளருக்கான ஒரு இலக்கணமும் இல்லை. அவர் அதிகப்படியான எடைமிக்கவராகவும், மனவழுத்தம் உடையவராகவும், தொலைநோக்குப் பார்வையற்றவராகவும் இருந்ததோடு ஊன்றுகோல் பிடித்தும் நடந்தார். அவருக்கு விரிநிலப்பீதி (Agoraphobia) இருந்தது. கூட்டங்களையும் பொதுப் போக்குவரத்தையும் தவிர்த்தார். அவர் ஒருபோதும் வானூர்தியில் பறந்ததில்லை, ஒருபோதும் துப்பாக்கியால் சுட்டதில்லை. ஆனால் அவரது உணர்ச்சிக் கூர்மை, சகமனிதர்கள் மீது கொண்டிருந்த மாளா ஆர்வம், போர்க்களத்தில் அஞ்சாமை ஆகியவை எல்லாம் சேர்ந்து மிகச்சிறந்த போர் நிருபராக அவரைத் தனித்துக்காட்டியது. அவருடைய கட்டுகள் யாவும் சட்டப்படங்களாலும், வரலாற்று ஆவணங்களாலும் அவர் சென்று வந்திருந்த இடங்களைக் குறிக்கும் ஆவணங்களாலும் நிரம்பியிருந்தன. அவை மட்டுமின்றி, தனது மெய்யியல் சிந்தனைக் குறிப்புகள், ஸ்டாலின்கிராட், வாழ்வும் ஊழும் ஆகிய புதினங்களுக்கான செப்பனிடப்படாத வரைவுகளும்கூட அதில் இருந்தன. கிராஸ்மேன் தனது மாபெரும் போர்க்காலக் குறிப்பேடுகளில் இருந்தே ஸ்டாலின்கிராடை எழுதினார். 

கிராஸ்மேன் தொடக்கம் முதல் இறுதி வரை போர்க்களத்தில் இருந்தார். எதிரிகளிடம் சிக்குவதில் இருந்து மயிரிழையில் பலமுறை தப்பினார். வோல்கா நதியின் வலது கரையில், ஸ்டாலின்கிராடின் மிக மோசமான பகுதியில் மூன்று மாதங்கள் வரை வாழ்ந்தார். அவ்விடம் ‘பிணக்கிடங்குக்கும் கொல்லன்பட்டறைக்கும் இடையிலான வாசனையைக்’ கொண்டது என்று எழுதினார். அதன் பின் அவர் செம்படையில் இணைந்தார். அப்படை உக்ரெய்ன், பெலாரஸ் ஆகியவற்றின் ஆக்கிரமிப்புப் பகுதிகளைக் கைப்பற்றியபோது, யூதர்கள் அதிகம் வாழ்ந்த பகுதியான பெர்டிச்சேவினையும் சேர்த்துக் கைப்பற்றியது. அது குறித்து, ’யூதர்கள் அற்ற உக்ரெய்ன்’ என்ற தலைப்பில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளின் ஷோவா (Shoah) பற்றி மனமுருகும் கட்டுரை ஒன்றை கிராஸ்மேன் எழுதினார். பெர்டிச்சேவ், கிராஸ்மேனின் சொந்த ஊர். அந்நகரில்தான் உடல் செயலிழந்த நிலையில் அவரது தாயார் வசித்து வந்தார். தடயமின்றி அழிந்துபோன இலட்சக்கணக்கான யூதர்களுக்காக மனமுடைந்து குமுறும் கிராஸ்மேன், காணாமல் போன தன் தாயாருக்கு முக்கியத்துவம் அளித்து தனியாக ஏதும் குறிப்பிடவில்லை என்பதால் அக்கட்டுரை இதயத்தைப் பிளக்கக்கூடியதாக இருந்தது: ‘இந்நிலம் முழுவதும், வடக்கு டோனெட்ஸ் முதல் டெனிபெர் வரை நடைபயணம் செய்தேன், டான்பாஸின் வோரோஷிலோவ்கிராடில் இருந்து டெஸ்னாவின் செர்நிகோவ் வரையும் நடந்தேன்; டெனிபெரில் நான் நடந்த போது கெய்வைப் பார்த்தேன். இந்தப் பயணம் முழுவதும் நான் சந்தித்தது ஒரேயொரு யூதரை மட்டுமே.

ஸ்டாலின்கிராட் பிரசுரமாவதற்காக கிராஸ்மேன் மூன்றாண்டுகள் நெடிய கடும் தணிக்கைச் செயலுக்கு ஆளானார். அந்நூல் பன்னிரண்டு வெவ்வேறு வடிவங்களில் இருக்கிறது எனில் எத்தனை கொடிய அவதியாகத் தணிக்கை இருந்திருக்கும் என்பது புலனாகிறது. இறுதியில் அவர் தன் பதிப்பாசிரிய கொடுமைக்காரர்களிடம், ‘எது முடிவான வடிவம் என்று தெரிந்ததும் எனக்குப் பதிலனுப்புங்கள்’ என்று இரந்து கோரினார். ஆரம்பத்தில் இருந்தே இத்தகைய இம்சைகளை எதிர்பார்த்திருந்தவர், ‘தார்மீக நோக்கத்திற்கான ஒரு புதினம், பதிப்பகங்களைக் கடந்து உருவான பாதையைப் பற்றிய குறிப்பேடு’ என்று ஒரு நாட்குறிப்பை எழுதி வைத்திருந்தார். அரசாங்கத்திற்கு அதிகாரப்பூர்வமாக ஒரு ‘சிவப்பு தல்ஸ்தோய்’ அவசரமாகத் தேவைப்பட்ட நிலையில், கிராஸ்மேன் அதற்காகத் தன்னை முன்வைக்க முடிவுசெய்ததோடு தன் இலக்கைக் கடியதாக அமைத்துக்கொண்டார். போர்க்காலம் முழுவதுமே அவர் வாசித்த ஒரே நூலான போரும் அமைதியும் புதினத்தையே தன் ஸ்டாலின்கிராட் புதினத்திற்கான ஒரு வடிவ முன்னோடியாக ஏற்றுக்கொண்டார். ஸ்டாலினையும் குருஷேவையும் பற்றி விவரிக்கும் இப்புதினம் கனக்கச்சிதமான வடிவ ஒழுங்கு கொண்டிருக்க வேண்டுமென எதிர்பார்க்கப்பட்டது. 

ஸ்டாலின்கிராட் இருபதாம் நூற்றாண்டுக்காக மேம்படுத்தப்பட்ட பத்தொன்பதாம் நூற்றாண்டுப் புதினம், சில நேரங்களில் சிறுவடிவ மாதிரி போலவும் அது தோற்றமளித்தது. பழமையான மலைப்படிவுகளை ஆராய்வதைப் போல, சுற்றி வளைத்துப் பேசும் தொனியில் இந்நூலில் நிறைந்துள்ள பல வேகம் குன்றிய அத்தியாயங்களில், கிராஸ்மேன் அவ்வப்போது ஏதோவொரு மூலையில் நின்றபடி முடிவேயில்லாத, போர்க்கால மானுட அம்சங்களை அணுகி ஆராய்ந்தபடி இருக்கிறார். ஆனால் கொள்கைகளின் நுணுக்கங்களையும் அழிந்த உலகின் சமூக, பொருளாதாரச் சிடுக்குகளையும் ஆவணப்படுத்தியவாறு செல்லும் வாழ்க்கைகளின் தொகுப்புறை என்றும் இதனைக் குறிப்பிட இயலும். ஸ்டாலினிய சமூகத்திலும் வர்க்க பேதங்கள் இருந்தன என்பதன் நினைவூட்டு இது. நகரத்தில் முதலாளிகளும் ஏழைக் குடியானவர்களும் இருந்தனர்; பொதுவுடைமைவாதிகளும் பொதுவுடமைக் கொள்கை மீது நம்பிக்கையற்றவர்களும் இருந்தனர்; போராளிகள், பழம் போல்ஷ்விக்குகள், சர்வதேச இடதுசாரி அதிகாரிகள் (Comintern – The Communist International) என எல்லோரும் இருந்தனர்; உரோம மேற்சட்டைகள், பியானோக்கள், சுரங்க நடையதர்கள், வானூர்திகள் எல்லாம் இருந்தன; படிநிலை முன்னேற்றம், முதுகில் குத்துதல், நோக்கங்களைச் செயல்படுத்துதல் என எல்லாம். அது ஒரு சிடுக்கான உலகம். “1984“-ன் அனைத்துவாதக் கொள்கையைக் கொண்டு சாம்பல் நிறமேற்றப்பட்ட, எளிதில் கண்டுணரக்கூடிய ஒரு உலகமாக அது இருந்தது. மேற்கத்திய இதழுக்காகப் போர்ச் செய்திகளை எழுதும் ஒரு நிருபருடைய தொனியையும் நோக்கத்தையும் ஒத்ததாக கிராஸ்மேனின் எழுத்து இருந்தது. சகலமும் அறிந்த ஆட்சியின் விவரிப்பு முறையினால் அவருடைய குரலே வெட்டப்பட்டது.  ஹிட்லர், முசோலினி முதலிய இராணுவ ஆட்சியாளர்கள் பற்றிய உலக வரலாற்று நூல்கள் நிறைந்திருக்க, இந்நூலின் தடித்த தொகுப்புகளோ, தமக்கு மீறிய சம்பவங்களால் நிலை தடுமாறித் தவித்திருக்கும் சாதாரண மக்கள்தம் தினசரி வாழ்க்கைச் செயல்பாடுகளால் நிரம்பியிருக்கிறது. 

ஸ்டாலின்கிராட் போரில் நாஜிப் படையினரால் சுட்டுக்கொல்லப்படும் யூதக் குடும்பம்

நேர்மையான, உறுதியான, முன்னாள் “Comintern” முகவராக இருக்கும் கிரிமோவ், அத்தகைய கதாபாத்திரம். அவர் தன்னைப் போரின் சந்தடிக்குள் தானாக முன்வந்து ஈடுபடுத்திக்கொள்கிறார். தென்மேற்குப் போர்முனையில் அரசியல் ஆசிரியராக இணைகிறார். சினம் ததும்பும் நகரமான மாஸ்கோவின் கோட்டையில் இருந்து அவர் வெளியேறத் தயாராகும் தருணத்தில் செஞ்சதுக்கத்தில் நின்று ஸ்டாலின் பேசுவதைக் கேட்கிறார். 

“இருளில் கிரிமோவால் அவர் முகத்தைச் சரிவர காண முடியவில்லை. ஆனால் அவரது வார்த்தைகள் மிகத் தெளிவாக இருந்தன. அவரது சொற்பொழிவின் முடிவில் சாதாரண சிப்பாயைப் போலத் தன் முகத்தில் படர்ந்திருந்த பனித்துகள்களை வழித்துவிட்டு, சதுக்கத்தின் அனைத்து புறங்களிலும் பார்த்துவிட்டு ‘ஜெர்மானிய துருப்புகளை நாம் தோற்கடிக்க முடியும் என்பதிலும் தோற்கடிக்க வேண்டும் என்பதிலும் யாரேனும் ஐயம் கொள்ள முடியுமா?’ என்றார்.

கிரிமோவ், உக்ரெய்னின் போர்க்களங்களின் குறுக்கே கடக்கும் போது, சோவியத் இராணுவத்தின் ஒழுங்கின்மையைக் கண்டு திகைப்புக்குள்ளாகிறார். தளபதிகளும் சிப்பாய்களும் பின்வாங்கும் மனநிலையால் ஆட்கொள்ளப்பட்டிருந்தனர். ‘வழக்கங்களிலும் செயல் ஒழுங்கிலும் பின்வாங்குதல் போக்கு அதிகரித்தது, அதுவே அங்கு வாழ்முறையாகவும் ஆனது.’ தன் நிலப்பகுதியைக் காப்பதற்குப் பதிலாக, எந்தவிதச் சேதமும் பின்விளைவுகளும் இன்றி சோவியத் ஒன்றியத்தின் உட்பகுதிக்குள் ஒதுங்கலாம் என்று செம்படையினர் அறிந்து வைத்திருந்தனர். 

பின்னடைவு செய்தவர்கள் அனைவரும் தன் பாதங்களுடன் போரையும் அழைத்து வந்தனர். கிழக்கில் இருக்கும் விரிநிலம் ஆபத்தான தூண்டில். முடிவற்று நீளும் ரஷ்ய ஸ்டெப்பிகள் புதிரானவை. அது தப்பிச் செல்வதற்கான வாய்ப்பை வழங்குவது போல உளமயக்கு தரும். துருப்புகள் எடைமிக்க விலங்குகளால் போருடன் பிணைக்கப்பட்டுள்ளன; இந்தப் பிணைப்பை எந்தப் பின்னடைவும் தகர்த்திட முடியாது. எத்தனை தூரம் பின்னடைவு செய்கிறார்களோ, விலங்குகள் அத்தனை எடைமிகும், அத்தனை இறுக்கமாக அவர்களைச் சுற்றி வளைக்கும்.

போர்வீரர்களுக்குப் பாடமெடுத்து, ‘எந்தப் பகுதியும் முழுமையின்றித் தனித்து இயங்க இயலாது’ என்ற தத்துவத்தைப் புரியவைக்க வேண்டுமெனக் கற்பனை செய்கிறார். பின்னடைவு மரண தண்டனைக்குரிய குற்றம் என்று ஸ்டாலின் குறிப்பிட்டிருக்கும் இகழார்ந்த ‘இன்னும் ஒரு அடிகூட பின்வாங்கல் கூடாது!’ என்ற கட்டளை தனக்குக் கையளிக்கப்பட்டபின், தன் அடிநிலை புரிதலுக்கு இணையான புரிதலை உச்சியில் இருப்பவரும் உணர்ந்திருப்பதை அறிந்து வியந்தார். ஸ்டாலினின் வியூகத்தைப் போற்றும் விதமான இந்தப் பகுதி, கிராஸ்மேனின் மீது திணிக்கப்பட்ட வலுக்கட்டாயமான வெட்டு வடிவங்களில் இல்லை.

கார்க்கியும் அவருடைய ‘பயன்பாட்டுத் தன்மை’ கொண்ட கலையை உருவாக்க வேண்டும் என்ற முந்தைய அறிவுரையின் தாக்கமும் ஸ்டாலின்கிராட், வாழ்வும் ஊழும் ஆகிய இரு புதினங்களிலும் தொடர்ந்து நிழலாடுகின்றன. ஸ்டாலின்கிராடில் வசிக்கும் ஆழ்ந்த பொதுவுடைமைவாதியான மருசியா, தன் தங்கை சென்யாவை, அவள் பிரச்சாரத் துண்டுப் பிரசுரங்களைத் தயாரிப்பதற்குப் பதிலாகப் படங்கள் வரைந்துகொண்டிருப்பதற்காகக் கடுமையாகத் திட்டுகிறாள். அதற்கு ‘யதார்த்தத்தின் வாய்மை ஒன்று உண்டு. அது கடந்தகாலத்தைத் தோற்கடிக்கும். நான் வாழ விரும்புவதோ இரண்டாவது வாய்மை, அதாவது வருங்காலத்தின் வாய்மை‘ என்று கார்க்கியின் சொற்களை அப்படியே பயன்படுத்துகிறாள். வாழ்வும் ஊழும் நாவலில், கிரிமோவ் போலி வாக்குமூலம் வாங்கும் பொருட்டு என்.கே.வி.டி.யால் கடுமையாகத் தாக்கப்படும்போதும் இந்தக் கார்க்கியை இணைத்துக்கொள்ளும் உரையாடல்கள் தொடர்கின்றன. அவருடைய மேசைக்கு மேல் இருக்கும் கார்க்கியின் படத்தைச் சுட்டிக்காட்டிய விசாரணையாளர், ‘இந்த மாபெரும் வர்க்கப் பேதத்திற்கு எதிரான எழுத்தாளர் மாக்சிம் கார்க்கி ஒருமுறை என்ன சொன்னார் தெரியுமா? எதிரி தளராத போது அவன் அழித்தொழிக்கப்பட வேண்டும்’ என்றார்.

இரண்டு நூல்களிலும் ஸ்டாலினுடைய பங்கு என்பது பழைய ஏற்பாட்டின் கடவுளைப் போன்றது. தொலைதூரத்தில் இருந்தபடி, எளிய இதயம் படைத்தவர்களை ஊக்குவிப்பதும், மக்கட்திரள் பேசாத இச்சைகளை எல்லாம் உரக்கச் சொல்வதும், கொடிய தண்டனைகளை வழங்குவதுமாக இருக்கிறார். நள்ளிரவில் ஒலிக்கும் தொலைபேசி மணிக்குப் பின் ‘உன் கடமைக்கான வெற்றி கிட்ட வாழ்த்துகிறேன்’ என்று ஆசியளித்து தன் ஆதரவைத் தருவதாக ஒலிக்கும் குரலும் அவருடையதே. கசாக் ஸ்டெப்பிகள் ஒருபுறமும் மாஸ்கோ வரை விரிந்த நிலம் மறுபுறமுமாக நசுக்கும் ஸ்டாலின்கிராட் நகரமே ஒரு முக்கியக் கதாபாத்திரமாக இருக்கிறது. ஸ்டாலின்கிராடிலிருந்து தப்பி ஓடுவதற்கு ஓரிடமும் இல்லை. ஒவ்வொரு கதாபாத்திரமும் இந்த உண்மையை உணர்ந்துகொள்கின்றது. 

முந்தைய தணிக்கை வெட்டுகள் பலவற்றை உள்ளடக்கி வெளிவந்த – சாண்ட்லர் மீட்டெடுத்த – வடிவத்தை வாசிக்கையில் ஸ்டாலின்கிராட் ஏன் இத்தனை சர்ச்சைக்குரியதாக இருந்தது என்று புரிந்துகொள்ள முடியவில்லை. (சோவியத் நாவலாசிரியர் மிக்கேல் ஷோலகோவ் அதை ‘ரஷ்ய மக்கள் மீது காறி உமிழ்ந்த படைப்பு’ என்று விமர்சித்தார்.) சோவியத் வெற்றி கோஷங்களை நீக்கம் செய்து, சாதாரண எஃகு தொழிலாளர்கள், கூட்டுப் பண்ணை விவசாயிகள், செம்படைச் சிப்பாய்கள் ஆகியோர் தம்மைத் தாய்நாட்டிற்காக முன் வந்து பலி தந்ததை இப்புதினம் விதந்தோதுகிறது.   

இத்தனை பெரிய நூலின் மையக் கதாபாத்திரமாக இருப்பதற்கு யூத அணுக்கரு இயற்பியலாளர் விக்டர் ஷுட்ரம் தகுதி வாய்ந்தவர் அல்ல என்று போபோஃப் கூறுகிறார். இது அதிகாரத்துவத்தையும் செமிடிக் எதிர்ப்பு மனநிலையையுமே குறிக்கிறது. கிராஸ்மேனின் ஆசிரியர்களும் நலம்விரும்பிகளும்கூட இந்த நூலைப் ‘பத்திரமாக’ வைத்திருப்பதற்குப் பதறினர். சிலர் அவரை ‘வாசிப்பதற்குக் கடினமான எழுத்தாளர் – பிடிவாதமும் பிரச்சினைகளும் கொண்ட மனநிலை உடையவர்’ என்றும் கருதுகின்றனர்.

கிராஸ்மேனின் ஆசிரியர்கள் ஷுட்ரமை நீக்கச் சொல்லி, பின் மீண்டும் அனுமதித்து தலைகீழ் நடனங்கள் ஆடினர். இதற்கெல்லாம் வெவ்வேறு நிறுவனங்களும் அமைப்புகளும் காரணம் என்று கைகாட்டினர். இறுதியில் பிரதி நடுவண் குழுவில் இருந்த ஒரு போட்டி எழுத்தாளரால் கண்டனம் செய்யப்பட்டது; அச்சடிப்பு நிறுத்தப்பட்டது. கிராஸ்மேனுடைய பதிப்பாசிரியர்கள் ஆல்கஹால் அருந்திவிட்டு அவர் பார்வையில் விழாமல் பதுங்கினர். ஆனால் கிராஸ்மேனோ தன் நூல் பிரசுரத் திரிசங்கில் சிக்கிக்கொண்டு முடிவுகள் ஏதுமின்றி தவிப்பதாகக் குறிப்பிட்டு நேரடியாக ஸ்டாலினுக்கே கடிதமெழுதினார். கடிதம் அனுப்பிய காலம் பொருத்தமானதாக இல்லை. கூட்டாட்சி தத்துவத்திற்கும் யூத தேசியத்திற்கும் எதிரான பிரச்சாரங்கள் வலுப்பெற்றிருந்த சமயம் அது. கிராஸ்மேன் முன்னர் அங்கம் வகித்திருந்த ஃபாசிஸத்திற்கு எதிரான யூதர்களின் குழுவும் இப்பிரச்சாரத்திலிருந்து தப்பியிருக்கவில்லை. ஆனால், ஷுட்ரமை நீக்கச் சொன்னபோது கிராஸ்மேன் பிடிவாதமாக மறுத்தார். ‘படைப்பிலக்கியத்தில் பன்னிரு மத்திய வயது நபர்கள் ஈடுபடும் போது அது குற்றுயிராகவே வெளிவரும்’ என்றார். ‘தணிக்கைக்கும் ஒரு எல்லை இருக்க வேண்டும்’ என்று எழுதினார்.

இந்த நூல் இறுதியில் வரிசையெண் இடப்பட்ட வடிவத்தில் வெளியாகி நன்கு விற்பனையானது. ஆனால் பல மாதங்களுக்குப் பிறகு ‘கொலைகார மருத்துவர்கள்’ கதை வெட்டவெளிக்கு வந்தது. யூத மருத்துவர்கள் ஸ்டாலினுக்கு விஷம் தரத் திட்டமிடுவதாக அதில் இருந்தது. கிராஸ்மேனுக்கும் அவருடைய நூலுக்கும் எதிராக நடந்த ஒரு கண்டன ஆர்ப்பாட்டம் பற்றி முக்கியச் செய்தித்தாள்களில் விபரம் வெளியானவுடன் அவருடைய பதிப்பாசிரியர்கள் அப்பிரதியைப் ‘பெரும் பிழை’ என்று குறிப்பிட்டு விரைவாக மீளப் பெறுமாறு கோரினர். 

இந்தக் கழுத்தை நெறிக்கும் சூழலில் கொலைகார மருத்துவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று எழுதிய விண்ணப்பத்தில் கையொப்பமிடுமாறு கிராஸ்மேனிடம் முக்கிய யூதர்கள் கோரினர். அப்படிச் செய்தால் நூலைக் காப்பாற்றலாம் என்ற எண்ணத்தில் அவரும் கையொப்பமிட்டார். ஆனால் உடனடியாக அச்செயலுக்காக வருந்தி, வோட்கா அருந்தி தெருவெல்லாம் தள்ளாடி வீடு சென்றார். குறியீட்டு ரீதியாக கையொப்பமிட்டது அவருக்கும் அவருடைய படைப்புக்கும் எதிரான ஆர்ப்பாட்டங்களைத் துளியும் நீர்க்கச் செய்யவில்லை. தன்னுடைய முன்னாள் நண்பர்களும் பதிப்பாசிரியர்களும் விலகித் தொலைவில் சென்றனர். தொலைபேசி மணிச்சத்தம் ஒலிப்பது நின்றது. ஸ்டாலின்கிராடில் அவர் ஆட்சியமைப்பை முற்றாகக் கைவிடவுமில்லை, சமரசங்கள் செய்துகொள்வதை நிறுத்தும் தீர்மானமும் மேற்கொள்ளவில்லை. வாழ்வும் ஊழும் புதினத்தில் ஷுட்ரூம் இதைப் போன்றதொரு கடிதத்தில் கையொப்பமிடுவதற்காகத் – தன் எழுத்து வாழ்வையும் சமூக அந்தஸ்தையும் காப்பாற்ற வேண்டிய நிர்பந்தம் இருப்பதால் – தன் முடிவை எடுக்கத் தடுமாறித் தவிப்பதைப் படைத்திருப்பார். 

சாட்சி, சம்பவங்களுக்கு நேர்மாறாக அப்போதும் வாழ்வும் ஊழும் புதினம் சமூகத்திற்குச் சென்று சேருமென்று நம்பிக்கொண்டிருந்தார். அடுத்து வரவிருக்கும் குருஷேவ் ஆட்சியின் கோரப் பிடிக்கு முன்பு பல்வேறு கொள்கைச் சிந்தனைகளுக்கு வரவேற்பு இருக்குமா? அவருடைய நண்பர் செமியான் லிப்கின், அந்நூலின் கையெழுத்துப் பிரதியை அனுப்பினால் கிராஸ்மேன் கைதுசெய்யப்படலாம் என்று எச்சரித்து அதைத் தவிர்க்க மன்றாடிய போது, கிராஸ்மேன் அதற்கு ‘நான் உன்னைப் போல ஒரு கோழை அல்ல, என் மேசை இழுப்பறையில் மறைத்து வைத்துக்கொள்வதற்காக ஒன்றும் நான் எழுதவில்லை’ என்று வெடித்துக் குமுறினார்.  

ஆனால் நல்ல விதமாக எதுவும் நடக்கவில்லை. கடந்தகாலத்தில் தனக்கு ஆதரவாகப் பேசியிருந்த ஒரு பதிப்பாசிரியரிடம் தன் கையெழுத்துப் பிரதியை அனுப்பிய போது, தணிக்கைக் கூட்டம் என்ற பெயரில் கிராஸ்மேனுடன் தீவிரமான அரசியல் விவாதம் செய்த பல எழுத்தாளர்களையும் சமாளிக்க வேண்டிய நிலைமைதான் உருவானது. கூட்டத்தில் கலந்துகொள்ள அவர் மறுத்த போதும் அவருக்குச் செய்தி தெளிவாகத் தெரிவிக்கப்பட்டது. அச்செய்தி, புதினம் ஒருவேளை 250 வருடங்களில் பதிப்பிக்கப்படலாம் என்பதே! ஒரு காதலர் தினத்தன்று, அவருடைய இல்லத்தில் இருந்தும் பல்வேறு பதிப்பக அலுவலகங்களில் இருந்தும் கிடைத்த அவரது அனைத்து கையெழுத்துப் பிரதிகளையும் கே.ஜி.பி. பறிமுதல் செய்து அழித்தது. 

டாக்டர் ஜிவாகோ நாவலை விடவும் பன்மடங்கு சேதம் தரும் ஒன்றாக இப்புதினம் அமைந்திருந்தது. போரிஸ் பாஸ்டெர்நாக்கின் சிலுவையேற்றத்தை மிகுந்த ஆர்வத்துடன் பார்த்திருந்தவர்களுள் கிராஸ்மேனும் ஒருவர். சி.ஐ.ஏ. அந்நூலைப் பண்பாட்டுக் கோணத்தில் பனிப்போரின் பிரச்சாரத்திற்காகப் பயன்படுத்தினர். கிராஸ்மேன் தன் நூலையும் வெளிநாட்டிற்கு அனுப்பிவிடக்கூடும் என்று அஞ்சியவரும் இருந்தனர்.  

ஆனால் பாஸ்டர்நாக்கின் பாதையைப் பின்தொடர்ந்து தானும் போராளி எழுத்தாளராக அறியப்பட கிராஸ்மேன் விரும்பவில்லை. சோவியத் வாசகர்களை இழப்பதற்கு அவ்வாறு தான் தரவிருக்கும் விலை மிக அதிகம் என்று கருதினார். போபோஃப், ‘அவர் அரசியல் மாற்றம் உள்ளிருந்து வரவேண்டும் என்று விரும்பினார்’ என்று எழுதுகிறார். மாறாக, கிராஸ்மேன் குருஷேவிடம் நேரடியாக முறையிட்டு தன் நாவலை வெளியிடக் கோரினார். ஆனால் குருஷேவோ அவரைப் பிரச்சார – கிளர்ச்சி துறைத்தலைவரான மிக்கைல் சுஸ்லோவிடம் அனுப்பினார். அந்தக் கூட்டக் குறிப்புகளில் இருந்து சுஸ்லோவின் அதிருப்தியைக் காண முடிகிறது: 

’உங்கள் நாவல் நம் எதிரிகளின் நன்மைகளை மட்டுமே பலப்படுத்துகிறது. பகைவன் நமக்கெதிராக உருவாக்கி வரும் அணுகுண்டில் உங்கள் நூலும் சேர்ந்துகொள்ள நாங்கள் எப்படி அனுமதிக்க முடியும்? நாங்கள் ஏன் உங்கள் நூலைப் பதிப்பித்து அதன் தொடர்ச்சியாக, மக்களுக்கு சோவியத் ஆட்சி தேவையா இல்லையா என்று பொது விவாதம் நடத்த வேண்டும்?

’நான் உங்களுடைய ஸ்டீபன் கோல்சுகின் என்ற மரிக்காத தலைவனையும் தார்மீக நிமித்தம் என்ற நூலையும் மிகவும் மதிக்கிறேன். உங்களது முந்தைய எழுத்துப் பாணிக்கு நீங்கள் மீண்டும் செல்ல வேண்டுமென்றே நான் உறுதிபடச் சொல்கிறேன். அந்த நூல்களை எழுதும் போது உங்கள் மீதிருந்த தோற்றமே நல்லது என்றும் பரிந்துரைக்கிறேன்.’

ஒருமுறை கிராஸ்மேன் தன் மகளிடம், ‘அவர்கள் என்னைக் கொன்றிருந்தால்கூட சிறப்பாக இருந்திருக்கும்’ என்று சொன்னார். 

வாழ்வும் ஊழும் புதினம் தடைசெய்யப்பட்ட பிறகு சோவியத் அரசு கிராஸ்மேனுக்கு ஒரு பெரிய அர்மேனியப் புதினத்தை மொழிபெயர்க்குமாறு பணித்து அதிலேயே அவரது கவனம் ஊன்றும்படி திட்டமிட்டது. மாபெரும் படைப்பை எழுதி முடித்திருந்த அவருக்கு இந்தப் பணி சிறுமை செய்வது என்று எளிதில் புலப்பட்டாலும், அர்மேனியப் பயணம் சென்றது அவருக்கு நன்மை பயத்தது. அங்கு அவர் அர்மேனியக் கையேடு (An Armenian Sketchbook) என்ற நூலை எழுதினார். அதில் அவரது வாழ்வின் உணர்ச்சிகரமான எழுத்தும், தனிப்பட்ட வாழ்வின் எழுத்தும் தெளிந்து வந்தது. 

யேரேவான் தலைநகரத்தை நிமிர்ந்து பார்த்தவாறு நிற்கும் ஸ்டாலினுடைய மாபெரும் சிலையை வியப்பதில் தொடங்குகிறது இந்நூல். 

நெடுந்தொலைவில் இருக்கும் ஒரு கோளில் இருந்து ஒரு விண்வெளி வீரர் அர்மேனியாவின் தலைநகரான இந்நகரின் மாபெரும் வெண்கலச் சிலை நிமிர்ந்து உயர்ந்து நிற்பதைக் கண்டால், அவன் உடனேயே இது ஒரு மிகச்சிறந்த, பயங்கரமான ஒரு ஆட்சியாளரின் நினைவுச்சின்னம் என்று எளிதில் புரிந்துகொள்வான். கடவுளுக்கு மட்டுமே சாத்தியமான அளவு பரந்து விரிந்த ஆற்றலின் செல்வாக்கிற்கு நிகரான பாவனையை இவர் காட்டுகிறார்.

கிராஸ்மேன் தன் அர்மேனிய நாட்டவரிடம் இச்சிலையைப் பாராட்டும் போது அவர்கள் சங்கடம் கொள்கின்றனர்: 

பெரும் தொழிற்சாலைகளை நிர்மாணித்ததிலோ, போரின் போக்கிலோ, சோவியத்தை ஐக்கியப்படுத்தியதிலோ அவருடைய பங்கு துளியும் இல்லை, அனைத்துமே அவரை மீறியோ அவர் இல்லாமலோ சாதிக்கப்பட்டுள்ளன என்றால், என் அர்மேனிய நண்பர்கள் நிச்சயம் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அவர்களது சுய பார்வை இன்மை, என்னையும் தானாக ஸ்டாலினுக்கு ஆதரவாக நிற்கத் தூண்டக்கூடியது. ஸ்டாலின் மீது அவர்கள் கொண்டிருந்த வெறித்தனமான வழிபாடும் ஒட்டுமொத்தமாக நிபந்தனையற்று அவரை மறுக்கும் விதமும் ஒரே மண் என்பதால் வந்தது.” 

இத்தனை இன்னல்களைக் கடந்த பிறகும் தன் வாழ்வை நாசமாக்கி, தன் நண்பர்கள் பலரையும் குடும்பத்தினரையும் நாடு கடத்தியும் கொன்றும் அழித்தவர் மீது நடுவுநிலை தவறாது பார்வையை வைக்கும் திறன் கிராஸ்மேனுக்கு இருந்திருக்கிறது. ’இல்லை, இல்லை. அவருக்கு உரிய நல்விமர்சனத்தைத் தராமல் இருப்பது சாத்தியமில்லை. எண்ணற்ற மனிதத்தன்மையற்ற குற்றங்களுக்கெல்லாம் அடிப்படைக் காரணமாக இருந்த அவரே, இந்த மிகச்சிறந்த, பயங்கரமான ஒரு தேசத்தைக் கருணையின்றி உழைத்து உருவாக்கியவர்களின் தலைவராகவும் இருக்கிறார்.’ 

போர் முடிந்தது, அவருடைய பணிக்காலமும் முடிந்தது. அவர் போர்முனை பற்றி இனியும் பேசத் தேவையில்லாத நிலை உண்டானது. சோவியத் இலக்கிய உலகின் அங்கமாக இருப்பதற்காக ஏகப்பட்ட சமரசங்களையும் தியாகங்களையும் செய்த அவருக்கு, இறுதியில் அந்த அரசாட்சியின் கீழ் முழுமையாகக் கீழ்படிந்து வாழ மனம் ஒப்பவில்லை. ஆனால் நாடு கடத்தப்பட்ட பிறகு, தலையைச் சுற்றி வந்து நாசிமுனையைத் தொடுவது போல, தான் விரும்பியதை எழுதுவதற்கான சுதந்திரத்தை அடைந்தார். கிராஸ்மேனுக்கு விசுவாசமான சோவியத் குடிமகன் அல்லது போராளி என்றோ, குலாக் அல்லது கமிசார் என்றோ ஸ்டாலினை வழிபடுபவர் அல்லது ஸ்டாலின் வெறுப்பாளர் என்றோ, அங்கத்தவர் அல்லது வேற்று ஆள் என்றோ எந்த ஒரு மாறுபட்ட பட்டத்தையும் பொருத்தலாம். 

ஆனால் கிராஸ்மேனின் முதன்மையான எண்ணம் – தனக்குத் தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்த கனவான – விடுதலையாகவே இருந்தது. அர்மேனியக் கையேடு நூலில் அநேகமாக, தினந்தோறும் சிறையில் இருந்தபடி விழித்து, விடுதலைக்கு ஏங்கியபடி தவிக்கும் நிலை எப்படிப்பட்டது என்பது மிகச்சிறந்த பத்தியாக இருக்கிறது. 

எத்துனை வீரியம், எத்துனை பயங்கரம், எத்துனை அன்பானது இந்தப் பழக்கத்தின் ஆற்றல்! மக்கள், ஆழி, தென் விண்மீன், காதல், சிறைக் குழி, வதைமுகாமில் இருக்கும் மின் வேலி என்று, எதனோடும் பழக்கம் கொள்ளும் திறனுடையவர்கள்.

வேட்கை மிகுந்த முதல் இரவுக்கும் குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்பதற்காக நடக்கும் தளர்வேற்படுத்தும் நெடிய விவாதங்களுக்கும் இடையிலான விரிசல் எத்தகையது! முதல் முறை கடலைப் பார்த்து அடைந்த மனவெழுச்சிக்கும் கொடிய பிற்பகல் வெப்பத்தில் துள்ளியபடி ஞாபகார்த்தமாக ஒரு பொருளை வாங்கச் செல்வதற்கும் பொதுவான உணர்வு ஒன்றுமில்லை! விடுதலையை இழந்த ஒரு மனிதனுடைய மனத்தொய்வு எத்தனை கொடியது! அதன் பின் சிறையில் படுத்தபடி அன்றைய சிறை உணவு பார்லியா அல்லது முள்ளங்கியா என்று சிந்திக்கும் நிலை எத்தகையது? இந்தத் தாங்க ஒண்ணாத விரிசலை உருவாக்குவது பழக்கத்தின் ஆற்றலே. அதனாலேயே இவையாவும் எதையும் சிதைத்தழிக்கக் கூடிய வெடிகுண்டினைப் போல ஆற்றல்மிக்கதாகத் தோன்றுகிறது. வேட்கை, வெறுப்பு, துயரம், வலி என அனைத்தையும் பழக்கத்தால் சிதைத்து அழிக்க முடியும்.

*

ஆங்கில மூலம்: The Trials of Vasily Grossman: A twentieth century Tolstoy and his forgotten novel, Written by Aaron Lake Smith, Published in Harper’s Magazine, July 2019.