செல்சுடர் வேளை

0 comment

கொல்லிப் பாவை

காமம் என்பது ஆதியெனில்

அது 

அகந்தையோ?

கன்மமோ?

மாயையோ?

பதிமை அறியாப்

பசுவோ?

பசுவில் கனக்கும்

பாழோ?

அழிபசியோ?

ஆனா நோயோ?

இரக்கம் மறந்த 

மூர்க்கமோ?

மிச்சம் நிற்கும் 

அச்சமோ?

ஒளிக்கும் முந்தைய 

குருடோ?

இருளின் நித்திய 

விரிவோ?

காமம் என்பது ஆதியெனில்

உதற முடியாத ஊழோ?

உள் சுரக்கும் நஞ்சோ?

உட்செறிந்த தீங்கோ?

ஆதியில் வந்தது காமமெனில்

நான் அற்பன் ஆனதில்

பிழையுளதோ?

*

அங்கதம்

பொறாமையுறும் முகத்தில்தான் 

என்னவொரு பிரகாசம்!

என்னவொரு நிறைவு!

என்னவொரு ஸ்திரம்!

என்னவொரு பிரக்ஞாபூர்வம்!

என்னவொரு தவக்கூர்மை!

எல்லாவற்றிற்கும் மேலாக

என்னவொரு கலப்பற்ற

தூயம்!

*

செல்சுடர் வேளை

இங்கிருந்த அந்தி எங்கே?

நேற்று

இதே வெளியில்

இதே காலத்தில்

இதே தனிமையில் 

நான் கண்ட அந்தி?

இப்போது பார்ப்பது 

அதே அந்தி இல்லை.

உறுதியிட்டுச் சொல்வேன்.

நேற்றுப் பார்த்த அந்தியின் கண்ணில்

கசியும் ஈரமில்லை.

அதன் கைகளில் வளைகள் இசைத்தன.

அதன் வனமார்பில்

பறவைகளின் ஆரம் இருந்தது.

அதன் அமைதியில் 

துயரை எழச்செய்யும் 

வித்துகள் இல்லை.

எல்லாவற்றையும்விட 

நேற்றுப் பார்த்த அந்தியின் கையில்

வாள் இல்லை.

*

இரை தேருதல்

நிழலைப் பாய்விரித்து

நின்றிருந்த மரத்தில்

சிறகின் முறத்தில் 

காற்றைப் புடைத்தவாறே

வந்தமர்ந்த கழுகு

பெருநகரக் கானலில்

ஒழுகி ஒழுகி ஓடும் மனிதர்களைப்

பார்த்திருந்தது.

வெளியின் பள்ளத்தை

வெகுநேரம் உற்றுநோக்கியது.

நிலம் அதிர 

காற்றதிர 

வெயிலதிர 

விரையும் இரைச்சலிலும் 

எழுந்து பறக்காத அது

அண்ணாந்து அலகு விரித்து 

அறிந்த அமைதியின் சிறுகணத்தைக் கவ்விக்கொண்டு பறந்தது.

*

திருநடனம்

வீறமைதியில் வீற்றிருந்த 

குளத்தைக் கண்டதும் 

கல்லெறியத் தோன்றியது.

சொல்லெறிந்தேன்.

திறந்து மூடியது நீர்க்கதவு.

திறந்து மூடிய இடைப்பொழுதில்

சொல் விழுந்த மையத்தில்

சுழன்றெழுந்த கண்ணொன்றில்

கண்டேன் கண்டேன் 

நிலையாமையின் திருநடனம்.

*

அண்ட விளக்கம்

காண்பவரைக் காணும் கணத்திலேயே

வியந்து விழியுள் நுழையும்

கதவின் சாவியைக் கேட்டேன்.

மன்னிக்கவும் நண்பரே,

எனக்குக் கதவை மட்டுமே 

செதுக்கத் தெரியும் என்றான்

தூயதச்சன்.

*

எழில் வாள்

உடல் மலரும்

உள்ளத்தேன் சுவறும்

கருணைப்பெரும் பெருக்கில்

முன்னிலை கரைந்து

எண்ணமும் அற்ற 

ஏகாந்தம் கொடையளித்த 

வாள் உண்டு.

எழில் வாள் அது.

மூகம் போலொரு ஒளி அது.

ஒளியின் ஊழ் அது.

நித்ய மின்னல்.

சத்தியம் மிளிரும்

ஒள்வாள் அது.

வாளே ஒளியாய் 

நாளும் திகழும்

நானொரு திகம்பரன்.

*

நுளைமகள்

மீன் நெய் வார்த்து வளர்த்த

சிறுசுடர் ஒளியில்

நுளைச்சியின் கண் பார்த்தான்

தலைவன்.

வேருற்ற மீனெனச் செதிலசைக்கும்

சுடரைப் பார்த்தாள் நுளைச்சி.

சிறுசுடரின் உயிருக்கு 

நெய் வார்க்கும் நாணம்.

சுறா வேட்டம் நடத்தும் 

சூர உடலென்றாலும்

பஞ்சென வாங்கிக்கொஞ்சும்

பரதவள் காமம்.

*

வெள்ளைத் துதிக்கை

மௌனமென்றறியாத 

மௌனமுற்று

மலையைச் செவியுற்றேன்

என்ன ஒரு இசை!

தூரத்து மலையில்

வெள்ளைத் துதிக்கையின்

நித்திய அசைவு.

அதை அருவியென்று 

நீங்கள் நம்பவைத்தாலும்

தூரத்தில் அசைவது 

எப்போதும் எனக்கு

ஐராவதத்தின் துதிக்கை.

*

எது சும்மா இருத்தல்?

வேருக்கு நீரளித்து

வளநிலம் இருக்கிறதே, அது.

உடலுக்குச் செயலளித்து

உறுகாமம் திகழ்கிறதே, அது.

பிள்ளைக்கு முலையளித்துப்

பெற்றமனம் உறுகிறதே, அது.