தாயின் மணிக்கொடி!

by எம்.கே.மணி
2 comments

“நான் உன்னைக் கூட்டிட்டுப் போறேன்!“ என்று கொஞ்சலாகச் சொல்லுகிறாள் லல்லி.

மேலே போட்டிருந்த முந்தானை சர்வ அலட்சியமாக விலகிக் கிடந்தது. 

அவளுடைய அம்மா வத்சலா அதைக் கவனிக்காதது போல இருப்பதை நான் பார்த்தேன். நான் பார்ப்பதைக் கவனித்ததும் அவள் என்னை நோக்கி வந்தாள். அக்காவின் தோழி. நான் இப்போது வேறு வேலையில் இருந்தாலும், முன்பு அறிமுகமாகி இருந்த ஜிகேவின் இந்த செண்டரில் லல்லியை ஒப்படைத்துவிட்டுப் போக வந்திருக்கிறார்கள். ஒருநாள் விடுமுறை எடுத்துக்கொண்டு அவர்களுக்கு உதவிசெய்ய வந்திருக்கிறேன். ஆனால் இன்னும் ஜிகே அலுவலகத்துக்கு வந்துசேரவில்லை. எப்படியும் கொஞ்ச நேரம் காக்க வைத்துவிட்டுத்தான் வருவார். அவர் எப்போதுமே தன்னை ஒரு பிசியான ஆளாக நம்பிக்கொள்வது வழக்கம். 

“எப்ப வருவாரு?“

“வந்துருவாரு!“

ஜிகே சாதாரண ஆளே இல்லை. ஒரு பிரச்சினையும் இல்லாதிருக்க, திடீர் என்று ஒருநாள், நானேகூட ஒரு விதமான பீதியால்தான் வேலையை உதறி, சிலுத்து வெளியேறி மறைந்தேன். ஜிகே என்றால் கோபால கிருஷ்ணன். பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்பு கோட்டயத்தில் இருந்து வந்தவர். பொதுவாக ,அவர் மக்களுக்கு ஏதாவது சேவை செய்ய விரும்பினார். அந்தத் தினுசில் அலைந்த மார்க்கத்தில் அவருக்கு மிஸ்டர் ஆதித்யன் அவர்களின் பழக்கம் கிட்டியது. ஒரு புரட்டாசி சனிக்கிழமை அவரது வீட்டில் புளியோதரையும், கீரை வடையும் சாப்பிட்டுக்கொண்டிருந்த போது அவருடைய அருளும் கிடைத்தது. ஆதித்யன், நகரத்தின் புறப்பகுதியில் தனது செண்டரை வைத்துக்கொண்டிருந்தார். ஆண்களும் பெண்களுமாகச் சுமார் முப்பது உருப்படிகள். ஆதரவற்ற முதியோர் என்கிற டைட்டிலுக்குக் கீழே வருபவர்கள். அது இல்லாமல் அனாதைப் பிள்ளைகளைப் பராமரிக்கும் பள்ளி ஒன்றும் இருந்தது. கொஞ்சம் இரகசியங்களை மனம்வீட்டுப் பேசின சில நாட்களுக்குள், எடுத்த எடுப்பில் ஜேகேவிற்கு இவற்றை நிர்வகிக்கும் பொறுப்பு கிடைத்தது.

அவர் தனது திறமைகளைக் காட்டினார். குறிப்பாக, தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய பல்வேறு பிரைவேட் செண்டர்களில் இன்ஸ்பெக்சன் வரப்போகிறது என்றால் அவர்கள் இத்தனை உருப்படிகள் வேண்டுமென்று கேட்பார்கள். அதைப் பார்சல் பண்ணி, கொண்டுசேர்த்து, பணம் உண்டாக்குவதில் ஜிகே கில்லியாக இருந்தார். எங்கேயாவது பணியாத அரசு அதிகாரிகள் அபூர்வமாக இருக்கத்தானே செய்வார்கள்? அவர்களை வளைக்கவும் தேவைப்பட்டால் உடைக்கவும் அவருக்குத் தெரிந்திருந்தது. சமயத்தில் பெண்களைக்கூட சப்ளை பண்ண வேண்டி வரும். அதிலும் அந்த அரசு முண்டங்கள் எல்லாமே சொல்லி வைத்தாற் போல சீரியல் நடிகைகளைக் கேட்டன. அதில் ஒரு பொது அறிவு வேண்டுமென்பதற்காக இவர், பல மாமா பயல்களைத் தன்னைச் சுற்றிலும் வைத்துக்கொண்டார். இதெல்லாம் இருந்தாலே அரசியலின் சல்லிப் பயல்கள் மொய்க்க வருவார்களில்லையா? அப்படியாக ஜிகே என்பவர் தனி மரமில்லை, தோப்பு.

ஆதித்யா ஹாயாகவே இருந்தார்.

எப்போதேனும் அலுவலகத்துக்கு வருவார்.

அங்கிருந்த தவமணி என்கிற நடுத்தர வயதுப் பெண்மணியை உள்ளே அழைத்துப் பேசிக்கொண்டிருப்பார்.

ஒருநாள் வார இறுதியில் நானும் ஜிகேவும் கடற்கரைச் சாலையில் உள்ள குடி விடுதியில் ஜேங்கோ கெட்டப்பில் பியர் அருந்தினோம். துள்ளிக்கொண்டிருந்த செல்லாக் குட்டிகளை வெறித்துக்கொண்டிருந்தோம். நள்ளிரவாயிற்று. மெதுவாகப் படிக்கட்டுகள் ஏறி, வரிசையாக இருந்த கதவுகளில் ‘நாற்பது’ என்று போட்டிருந்த கதவைத் தட்ட, ஆதித்யா திறந்தார். ஜிகே தள்ளிக்கொண்டு உள்ளே செல்ல, நானும் புகுந்துகொண்டேன். படுக்கையில் போர்வை போர்த்திக்கொண்டு படுத்திருந்தவள் கிரண். தான் நடிக்கிற அத்தனை சீரியல்களிலும் அவள் குறும்புப் பெண்ணாகவே இருக்கவே, ஆதித்யாவின் மனசைக் கொள்ளை கொண்டுவிட்டாள். இப்போதுகூட அவர் அவளைப் பல குறும்புகள் செய்யச்சொல்லி அவளைப் பாராட்டியிருக்கக்கூடும். அது சம்பந்தமாக ஏதாவது தத்துவம் சொல்லியிருக்கக்கூடும். நாங்கள் யாரையும் கலவரப்படுத்த விரும்பவில்லை என்று சொன்ன ஜிகே, பையில் வைத்திருந்த லேப்டாப்பை ஆதித்யா பார்க்கத் திறந்து காட்டினார். அதில் ஆதித்யா மடியில் தவமணி முகம் புதைந்திருந்த காட்சி இருந்தது. 

“ ஓகேய்யா. எவ்ளோ கேக்கறே? “

அறை எண் நாற்பது என்பதால் ஜிகே நாற்பது இலட்சம் கேட்டார். பாண்டியில் இருக்கிற தாயின் மணிக்கொடி மனநல ஆஸ்ரமத்தைக் கொசுறாகக் கேட்டார். பாண்டி பக்கம் பிஸ்னஸ் பண்ண ஆதித்யா வரக்கூடாது என்றார்.

இப்போது ஜிகேக்குப் பல்வேறு டைட்டில்களில் பல்வேறு செண்டர்கள் பாண்டியில் இருக்கின்றன. காரணம் இருக்குமா என்பது தெரியாது. விடுமுறை நாட்கள் தவிர, தினமும் ஒருமுறை செக்ரட்ரியேட்டுக்குள் பூந்து வெளியே வருவார். இப்போதுகூட அங்கிருந்துதான் வருவதாகச் சொன்னார். லல்லிக்கு ஒரு கட்டில் கொடுக்கப்பட்டது. சேகர் அவளையும், மற்ற பேஷண்டுகளையுமாகப் புகைப்படம் எடுத்துக்கொண்டான். ஒரு உருப்படி கிடைத்திருக்கிறது அல்லவா? என்னிடம் காட்டினான். பணம் உண்டாக்குவதற்கான வாகில் தொழில்நுட்பத்தோடு இருந்தது. என்னவோ ஒரு விதமான இழப்புணர்வுடன் சிரித்து வைத்தேன். சேகர் இந்தப் பகுதியைச் சேர்ந்தவன்தான். முன்பு குடி நோயாளிகள் மறுவாழ்வு மையத்தில் வேலை செய்தவன். அவனுக்குப் பிரம்பை எடுத்து ஆட்களை விளாறுவதில் அவ்வளவு ஆசை. சதை பிய்த்துக்கொண்டு வந்து ஒரு நோயாளி வலி தாங்க முடியாமல் ஊளையிடும்போது அவன் புன்முறுவலித்துக் கொள்ளுவதைப் பார்க்க வேண்டும், அப்படிப் பழகிவிட்டது. வேலை இல்லையென்றால் வா என்று ஜிகே என்னுடைய கையைக் குலுக்கி வழியனுப்பி வைத்தார்.

வத்சலா குடும்பம் போண்டா டீ சாப்பிட்டுக் கிளம்பினார்கள். இரண்டு மிடறு டீ மட்டுமே குடித்த வத்சலா அதையும் வாந்தியெடுத்தாள். 

மகளை அங்கே விட்டுவிட்டு வந்தது சகிக்க முடியாமல் பெற்ற வயிறு புரட்டுகிறது போலும். கல்யாணம் நடக்குமா நடக்காதா என்று சுழிந்துகொள்ளுகிற வயதில் அவளுக்கு மேலும் ஒரு மகள் இருக்கிறாள். மகனுக்கு மனைவியாக வந்தவள் லல்லியை எப்போது நேரிட்டாலும் திடுக்கிட்டாள், அவளைப் பார்க்கும்போதெல்லாம் தன்னுடைய மண்டைக்குள்ளும் எதுவோ சுழலுவது போல இருப்பதாகவும் தூக்க மாத்திரை முழுங்கி, மயங்க ஆசை வருவதாகவும் சொல்லியவாறு இருந்தாள். வத்சலாவின் புருஷன் தனது சொந்த மகளை ஏறிட்டுப் பார்த்து வெகு காலமாகி விட்டது. காலத்துக்கும் நிமிர முடியாத பாரத்துடன் இருந்த வத்சலாவிற்கு எனது அக்காதான் இந்தத் தீர்வைச் சொல்லியிருக்கிறாள். அக்கம்பக்கத்து ஆட்கள், உறவினர், வெளியாட்கள் யாரும் ஏறி வராமல் அந்த வீடு முழ்கிக்கொண்டிருப்பதை நினைவுறுத்தினாள். அவர்களுக்கு உதவுமாறு அழுத்தம் கொடுத்தது எனக்குப் பிடிக்கவேயில்லை. அக்காவிடம் நான் என்னென்னவோ சொல்ல விரும்பினேன். உலகு வெகுளித்தனத்தில் திளைத்து தன் பாட்டிற்கு இருக்கிறது. அவர்கள் கடவுளை எதிர்பார்க்கிறார்கள். நன்மையை எதிர்பார்க்கிறார்கள். என்னுடைய மொழியை எவ்வளவு விரயம் செய்தாலும் அவர்களுக்கு உண்மை என்பது உடைந்த கண்ணாடிப் பாத்திரத்தின் பல்வேறு எதிரொளிப்புகள் என்பது புரியாது. 

ஏன் இப்படியெல்லாம் மனிதர்களுக்கு நடக்க வேண்டும்?

லலிதா என்கிற லல்லி உயர்நிலைப் பள்ளிக்குப் போனபோதே துண்டுபட ஆரம்பித்துவிட்டாள். அவளுடைய பற்கள் துருத்திக்கொண்டிருந்தன. அவளிடம் இசைவாக இருந்த தோழிகள், ஆசிரியைகள் எல்லோருமே அவளைப் ‘பல்லி’ என்றுதான் அழைத்துக்கொண்டிருந்தார்கள். அவள் அதற்கு எப்போதுமே சிரித்துக்கொண்டிருந்துவிட்டு, நள்ளிரவுகளில் கண்ணாடியில் தனது வாயையே மணிக்கணக்கில் பார்த்துக்கொண்டிருந்தாள். காது சரியாகக் கேட்காதது போல இருந்தது. கண்கள்கூட மங்கலடிக்கிறதோ? உட்கார்ந்த இடத்தில் இருந்து எழாமல், படுத்த இடத்தில் இருந்து எழுந்து உட்காராமல் கூன் போட்டவாறு இருந்தாள். பள்ளியில் சண்டைகள் வந்து, வீடே கதியாகிச் சுணங்கிய போது மார்பில் ஒரு கட்டி வந்தது. அது ஆளரவமற்ற மௌனத்தில் மெல்ல வேர் வைத்து உறுதிப்பட்டது. ஒரு மார்பு போன பிறகு, அவள் தன்னைப் பெண்ணாகக் கருதுவதில் இருந்து பின்வாங்கினாள். ஒரு கவலையும் கொதித்து மேலே எழுந்து வராத பால்யத்தில் மிதக்க ஆரம்பித்தாள்.

அதற்கு அப்புறம் அவளோடு இருந்தவர்கள் அத்தனை பேரும் நல்லவர்கள்தான். அவர்களோடு இழைந்து கண்ணைக் கட்டிக்கொண்டு வாய்விட்டுச் சிரித்தவாறு வருகிற லல்லி, தனது அறையை விட்டு ஹாலுக்கு வரும்போது தன்னைத் தொட்டுவிடுவாளோ என்று அனைவரும் அஞ்சினார்கள். அவள் விழுந்து விழுந்து சிரிக்கும்போதெல்லாம் சட்டியில் இருந்து வெளியே துள்ளும் மீன் என்ன? குடும்ப கௌரவம். ஆனால் எவ்வளவு குழந்தையாக இருந்த போதும் லல்லியின் கொஞ்சலை வத்சலா இவ்வளவு கேட்டதில்லை. அவளது அழைப்பில் மனசின் இறைச்சி மொத்தமும் உருகியது. அவளின் அணைப்பில் வத்சலா மெய் மறந்து நின்றதை அத்தனை பேரும் கண்டித்தார்கள். லல்லி அவ்வப்போது தான் இறந்துபோவதாகக் கனவு கண்டாள். அப்புறம் அவள் சென்று சேர்ந்த இடம் அத்தனை அழகானது. கண்கள் நட்டுக்கொள்ள, அவள் அதைச் சில்லுசில்லாக வர்ணித்தாள். அங்கே அழைத்துச் செல்லுவதாக அவள் தன்னுடைய அம்மாவிற்கு வாக்குறுதி கொடுத்திருக்கிறாள். 

நான் இதையெல்லாம் விளங்கிக்கொள்ள விரும்பவில்லை.

ஒரு அழகியைப் பார்த்துவிட்ட பதற்றத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமல், கிளாஸ் வாங்க வந்தவன் தடுமாறுவதை உணர்ந்துகொண்டு, அவளுடைய தங்கை ஒரு கள்ளப் புன்முறுவலைச் செய்துகொண்டிருப்பது அவ்வளவு அழகாக இருக்கிறது.

அவ்வளவுதான் எல்லாம். அவர்களை ஒரு பக்கம் அனுப்பிவிட்டு, நான் எனது கூட்டுக்கு வந்துசேர்ந்தேன். பின்னர் அவர்களைப் பற்றி நினைத்துப் பார்க்கவில்லை. நினைப்பு வந்தாலும் அதை அசட்டை செய்கிற தந்திரங்களை வாழ்க்கை எனக்குக் கற்பித்துவிட்டிருந்தது.

அக்கா போன் அடித்தால் நான் எடுப்பதில்லை. அதற்கு எங்களுக்குள் நடந்த ஒரு குடும்பச் சண்டை பேருதவியாக இருந்தது.

நேற்று சுதந்திர தினம். ஜிகே மிகவும் வற்புறுத்தவே பாண்டிக்கு வந்தேன். பெரிய விழா. எனக்குப் பெயர் தெரியாத மாண்புமிகுக்கள் எல்லாம் மேடையில் இருந்தார்கள். பலரும் பல பரிசுகளை வாங்கிக்கொண்டிருந்தார்கள். மனிதக் கூட்டத்தில் பதற்றம் உருவாகிவிடாமல்  மனநலன்கள் பதப்படுவதற்கு வேண்டி உழைக்கிற தாயின் மணிக்கொடி நிறுவனமும் பரிசு வாங்கியது. அப்புறம், நாங்கள் ஒரு நட்சத்திர பாரில் பிராந்தி குடித்தோம். ஜிகே தன்னை மீறின உவகையில் ததும்பிக்கொண்டிருந்ததால், காரில் ஊரைச் சுற்றி வந்தோம். பின்னிரவு ஆனதும் தாயின் மணிக்கொடி அலுவலகத்தில் உட்கார்ந்து குடித்தோம். சிறுநீர் கழிக்க நான் கழிவறையைத் தேடிக்கொண்டிருந்த போது கொட்டடியில் எதோ சப்தம் கேட்டுக்கொண்டிருந்தது.

சென்று பார்த்ததும் திகைத்தேன்.

எதோ குட்டி கலாட்டா செய்துவிட்ட வத்சலாவைப் போட்டு சேகர் அடித்துக்கொண்டிருந்தான்.

விசாரித்தபோது, லல்லி இறந்து ஒரு வருடத்துக்கும் மேலாகிவிட்டது என்றார்கள். கொஞ்ச நாட்களுக்குள் இவளுக்கு இப்படி ஆகிவிட்டதாம். ஒருவேளை, இவளுடைய மரணச் செய்தியை அவர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கலாம்.

நான் யாரென்பது வத்சலாவிற்குப் பிடி கிடைத்ததாகத் தெரியவில்லை.

ஆனால் முன்னேறி வந்தாள்.

“வத்சலா அக்கா. என்னைத் தெரியல? பிரேமாவோட தம்பி?“

அவளுக்கு அது கேட்கவேயில்லை. 

நான் ஒன்றை எதிர்பார்த்தேன். அது தோன்றியதும் எனக்குக் கால்கள் நடுங்க ஆரம்பித்தன என்றே சொல்ல வேண்டும். அதுதான். இன்னும் வந்தாள். 

அந்த முகத்தில்தான் என்ன ஒரு பாந்தம்?

“நான் உன்னைக் கூட்டிட்டுப் போறேன்!“ என்று கொஞ்சலாகச் சொல்லுகிறாள் அவள்.

2 comments

Manguni December 9, 2021 - 7:17 pm

“ஒரு கவலையும் கொதித்து மேலே எழுந்து வராத பால்யத்தில் மிதக்க ஆரம்பித்தாள்” அருமையான வரி.

கதை அருமை. ஆனால் இப்படி பிழியும் சோகத்தை எழத வேண்டாமே !!!

Manguni December 9, 2021 - 7:19 pm

When the consciousness is lost, people gets into another world. Either it is hell or heaven – depends on our vasana (karma). The kindness of daughter and mother also expressed in one line. “நான் உன்னைக் கூட்டிட்டுப் போறேன்!“ They are taking us into their world. finally the mother agreed and went to the same world that the daughter dreamed off.

Such a poetic story. Only thing I didn’t like is it’s sarrow story.

Comments are closed.