நல்குரவு என்னும் நசை

0 comment

செல்லப் பிராணிகளை வளர்ப்பது பிடித்தவொன்று என்றாலும் அவற்றை வீட்டிற்குள், கூண்டிற்குள், தொட்டிக்குள் வளர்ப்பதில் ஒவ்வாமை உண்டு. மகள்கள் அவ்வப்போது வளர்க்கக் கேட்பார்கள். அழகழக்குப் பிராணிகளின் சேட்டைகளை, மனங்கவரும் இயல்புகளைக் காணொளியில் காட்டி என்னுள் விழைவைத் தூண்டுவார்கள். ‘ஏதேனும் செல்லப் பிராணிகளை வளர்க்கும் ஆசை இருந்தால் என்னை அப்படி பாவித்து வளருங்கள்’ என்று நைச்சியமாக நகர்ந்துவிடுவேன். ஆனாலும் பிற உயிரினங்களின் அண்மை எங்களுக்குப் பிடித்திருந்தது. நமது உள்ளத்து அன்பை, கரிசனத்தை, கருணையை வளர்த்தெடுக்க பிற பிராணிகளைப் பராமரிப்பது உகந்தது. அன்பு எந்த வகையிலும் எவ்வுயிரிலும் பகிரப்படுவது அருமையானதும் அற்புதமானதும்தான். அதற்கென்றே வீட்டைச் சுற்றி காணப்படும் காகம், மைனா, குருவிகள், அணில், பூனை, தெருவாழ் நாய்கள் போன்றவற்றிற்கு உணவிடுவதை வழக்கமாக்கிக்கொண்டிருந்தோம். அவ்வவ் உயிரினத்திற்கெனப் பிரத்தியேகமாகப் பல்வேறு உணவு வகைகள் அடுப்பங்கரையில் வாங்கிச் சேகரப்பட்டன. 

பிறந்தநாளுக்குப் பரிசென வந்திருந்த பூங்கொத்து ஒன்றின் அடிப்பாகத்தில் கண்ணாடி ஜாடிக்கோளம் ஒன்று கிடைத்தது. சும்மா இருக்கிறதே என்று அண்மை செல்லப்பிராணிகள் விற்கும் கடையில் விசாரிக்க ‘ஃபைடர்’ மீன்களில் ஆணினம் தனித்தே வாழும். இணை விட்டால் சண்டையிட்டு மடியும் என்ற விற்பனை செய்யும் பெண்மணியின் ஆலோசனையின் பேரில் எழிலார்ந்த வாலும் துடுப்புகளும் கொண்ட மீனொன்றைப் பெற்று வந்தேன். பெட்டா ஸ்ப்ளெண்டென்ஸ் (Betta Splendens) எனும் உயிரியல் பெயர் கொண்டது. தாய்லாந்து இதன் பூர்வீகமாம். சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அதன் வண்ணக்கோலத்தால் உலகளவில் செல்லப் பிராணியாக்கப்பட்டதாம். மலாய் மொழியில் பெட்டா என்றால் போராளி. தன் சுவாசச் செவுள்கள் மட்டுமன்றி அதன் புறயிழைகள் காற்றிலிருந்து நேரடியாகப் பிராணவாயுவைக் கிரகித்துக்கொள்வது கண்ணாடித் தொட்டிக்குள் வாழ்வதில் கூடுதல் சாதகம். செயற்கைக் காற்றூட்டம் தேவையில்லை.

வீடே உற்சாகம் கொண்டது. அதற்குத் தினமும் உணவிடுவது, இரண்டு மூன்று நாட்களுக்கு ஒருமுறை நீர் மாற்றுவது என அவ்வழகுச் சிற்றுயிருடன் அருகமர்ந்து பேசுவது, சாப்பிடுவது எனக் குறுமகிழ்ச்சி கிடைத்தது. பெரிய மகளுக்கு நாய்கள் மேல் கொள்ளைப் பிரியம். எப்படியோ வாங்காமல் சமாளித்துக்கொண்டு வந்தேன். இந்த மீனை வைத்து ஒப்பேற்றிக்கொள் என்று கூறி வைத்தேன். உண்மையிலேயே வீட்டில் வேறொரு உயிரினம் நம்முடன் வாழ்வது பாக்கியமாய் உணர்த்தியது. நம்மை நோக்கி வருவது, விலகிப் போவது, உற்றறிவது எல்லாமே அற்புதமாய் உணரப் பண்ணியது. அதன் துடுப்புகளும் வாலும் தழைத்து நீரலையில் அலைந்து அலைவது அதியழகு. உணவு உருண்டைகளைக் குறிப்பிட்ட நேரத்திற்கு அளிக்கும்போது அச்சிற்றுயிர் பரபரத்ததுத் துடிப்புற்றது. குறிப்பிட்ட உணவு நேரம் வருகையில் அதிக சுறுசுறுப்பும் உற்சாகமும் அடைந்தது. அருகில் சென்றாலே பரபரப்பு காட்டியது. அளவில் மிகச் சிறிதாயினும் உயிர்களுக்கு உணவின் மேலுள்ள பெரும்பற்று புரியவைத்தது. வாலை நளினமாக ஆட்டியாட்டி நடனமிட்டது. 

அம்மீன் தனித்து இருக்கிறதே என்று பெரிய மகள் தனது கைபேசியில் அம்மீனினத்துப் பெண் மீனின் காணொளியை மிக அருகில் கண்ணாடி வழியே காண்பித்தாள். எப்பேர்ப்பட்ட குதூகலம் அதற்கு, எதிர்பார்க்கவில்லை அப்படியொரு உத்வேகத்தையும் பரவசத்தையும். புளகாங்கிதம் அடைந்து காணொளிக் காட்சியில் தெரியும் தன் இணையின் ஈர்ப்பில் மதிகெட்டு உயிராற்றல் திரண்டு வயமிழந்து மீண்டும் மீண்டும் கண்ணாடிச் சுவரைத் தொட்டுப் போனது. அதைத் தொடுவதற்குத் தடை என்ன குறுக்கே என்று புரியாது குழம்பிச் சென்றது.  

வீடு வந்து முதன்முதலாக நீர் மாற்றுகையில் மீண்டும் அதன் தவிப்பைக் கண்டுணர முடிந்தது. அப்படியொரு பதற்றம். சின்ன வலைக்குள் சிக்காமல் கண்ணாடி ஜாடிக்குள்ளேயே அடியில் சுழன்று திரும்பி தன்னுயிரைப் பாதுகாக்கும் தீவிர முனைப்பில் தவித்தது. சில நீர் மாற்றங்களுக்குப் பிறகு ஜாடியைக் கையால் தூக்கும்போதே பதைபதைத்து நீருக்குள் அடியில் சுழலத் தொடங்கிவிடும். அது மரணப் பீடிப்பைத் தவிர்க்கும் அச்சம். ஊனுடலுக்குள் உறைந்திருக்கும் உயிரச்சம். தற்பாதுகாப்புக்கான எச்சரிக்கையும் முனைப்பும் உண்டு பண்ணும் உயிரியல் ஊக்கம். அதன் தன்னிருப்புக்கான அடிப்படை ஆழ்மனப் போராட்டங்களைப் புரிந்துகொள்ள முடிந்தது. அத்தனை எளிதாக அவ்வீர்ப்பிலிருந்து விலகவோ தவிர்க்கவோ உயிரினங்களுக்கு இயலுமா என்ற சந்தேகமே நிறைந்திருந்தது. 

உயிரினங்களில் ஊன் வளர்க்க உணவிலும் சந்ததி தழைக்க எதிர்பாலினத்தின் மீதான தீராப் பற்றுதலையும் கவர்ச்சியையும் காமத்தையும் பார்க்கையில் மனிதர்களின் நிலை சமூகக் கட்டுமானங்களையும் ஒழுக்க விதிமுறைகளையும் தாண்டி பரிதாபகரமான தோற்றம் கொண்டிலங்குவது புலப்பட்டது. காதலும் காமமும் மலைபோல மனிதர்களை ஆட்கொண்டு அழுத்துவது ஏன் என்று உணர முடிந்தது. உயிரியல் கட்டுமானம் தாண்டி தன்னிலை உணர்ந்து கிட்டத்தட்ட வாழ்நாள் முழுக்கவே தன்னைக் கட்டுப்படுத்துவதே மானுடர்க்கு எத்தனை சுமையாகவும் போராட்டமாகவும் இருக்கிறது! 

உயிர் நீட்சியின் சூத்திரம் மிக மிக எளிமையானது. உயிரியல் தேவை மரபணுக்குள் மறைபொதிவாய் அமிழ்ந்து கிடக்கிறது. காதல் புரிந்து காமம் ஈடேறிக் கழிந்து போகிறது. களிக்கக் களிக்கக் காதலும் அதனூடான காமமும் பொங்கி நுரைத்து வடிந்து பின் மீண்டும் பற்றி எரியத் தொடங்கிவிடுகிறது. சுவைத்து நிறைந்த பின் மீண்டும் பசி உடலை ஆட்கொள்கிறது. ஆபத்துகள் நீங்கி நிதானிக்க பின் மீண்டும் புதிய ஆபத்துகள் மேலேறி அழுத்தி உயிரச்சத்தை மரண பயத்தை இடையறாது உள்ளாழத்தில் உறுத்திக்கொண்டே இருக்கிறது. உற்ற உறவும் சுகித்துத் திளைத்து அன்பும் அக்கறையாய் பெருகிப் பின் ஏமாற்றமும் ஆதங்கமுமாய் முடிகிறது. இன்மையின் பேரச்சமும் உயிர்ப்பற்றுதலும் சுலபமாய்த் தளர்த்தி விடுவித்துக்கொள்ள முடிவதில்லை. 

தன் உயிரியல் இனப்பெருக்க உணர்வில் ஊக்கமுற்று குவி வாய்வழி எச்சில் சுரந்து நீர் முட்டைகளாக்கி ஜாடி நீர்மேற் பரப்பில் தாமரை இலையெனப் படரவிட்டிருந்தது. தான் இணையொன்றைக் கலந்து புணர்ந்து குடும்பத்தை அமைக்கும் திறனும் தகுதியும் கொண்டவனென்று எச்சில் குமிழால் கூடமைத்து நிரூபித்துக்கொண்டிருந்தது. உருவங்களை அடையாளம் காண்கிறது. சிறியவர்களான மகள்களிடம் மேலதிக நட்பும் நெருக்கமும் பாராட்டுகிறது. பொதுவிலேயே விலங்குகள் குழந்தைகளிடம் எளிதாகப் பழகி விடுகின்றன. நீருக்குள் ஊடுருவிப் பாய்ந்து அதிர்வூட்டும் அமுங்கிய மனிதக் குரலொலிகள் மூலம் எங்களை அடையாளங் காண்கிறது. பரிச்சயப்பட்ட குரல்களுக்கு நெருங்கி வருகிறது. கரிசனத்தைத் தூண்டி நட்பைப் பெருக்குகிறது. அருகில் உற்று நோக்கும் அதன் பார்வை மேலும் நெருக்கமாக உணரவைக்கிறது.

ஒரு மாத காலப் பரிச்சயத்தில் அவ்வுயிர் இவ்வீட்டு மனிதர்களை என்னவெனக் கண்ணுறுகிறது? அதைப் பொறுத்தவரையில் நாங்கள் யார்? என்ன மாதிரியானவர்களாக அவனுக்குத் தெரிகிறோம்? யாரென எங்களை உணர்கிறது? பதிலற்று புதிராகத்தான் தோன்றுகிறது. என்றாலும் அதன் பரஸ்பர எதிர்வினையில் ஒருவித நட்பை உணர முடிந்தது. ஏதோவொரு வகையில் எங்களுடன் தொடர்புகொள்ளப் பார்க்கிறது. உறவை வளர்க்க அதனுள் சுரக்கும் விழைவு எங்களுக்குள்ளும் சுரப்பது தெரிந்தது. உயிர்களுடன் உறவுகொள்வதும் ஓர் உயிரியல் தூண்டல்தான் என்று தோன்றியது. உறவை உருவாக்குவதற்கான உயிரியல் விழைவு இருத்தலின் இன்றியமையா அம்சமென அச்சிறு மீன் உணர்த்தியது.

உயிர் தரித்திருக்கவெனத் தீராது நீளும் சிற்றின்பச் சுவை. தேடிச் சோறு நித்தம் தின்று நீளும் நசை. மீண்டும் மீண்டும் தின்று போதாமையால் மட்டுமே அனுபவிப்பது நல்குரவு. உயிரியல் சுபாவம் எத்தனை மகத்தானதும் துயரானதுமாய் ஒரே நேரத்தில் நம்முள் பரிணமிக்கிறது என்பதை எண்ணி ஆச்சரியம் மேலிட்டது. ஊனுடலுக்கு உணவும் காமமும் எத்தனை சந்தோஷத்தையும் இருப்பின் நிறைவையும் அளிக்கிறது. அவை இல்லாமல், போதாமல் இருக்கையில் இருப்பு எத்தனை துயரார்ந்தும் வலியுற்றும் கிடக்கிறது. உணவையும் பிணையையும் தேடிப் பற்றுவது உயிர்களின் பிரதான கால ஓட்டமாக உள்ளது. 

இப்படி உணவு, காதல், காமம், மரண பயம் என இருப்பின் உயிரியல் தேவைகள் தாண்டி சும்மா இருக்கும் பொழுதுகளும் அச்சிறு மீனுக்கு வாய்க்கத்தான் செய்கிறது. அப்படியானதொரு தருணத்தில் அம்மீனின் செயல்களை உற்றறியத் தூண்டியது. அது என் குடும்பத்தாருடன் ஒருவித நட்பை இயல்பாகப் பேணுவதை உணர முடிந்தது. ஜாடியில் விரல் பதித்தால் உட்பக்கமாகத் தீண்டிப் போனது. நீரின் மேற்புறத்தில் விரல் நீட்டினால் தன் முழு உடலை நீருக்குமேல் வீசித் துடித்து தொடர்புறுத்த முயன்றது. என்ன விதமான உறவை அச்சிற்றுயிர் நம்முடன் பேண விழைகிறது என்று புரியவில்லை. அன்புகூர்கிறதா நட்பு பாராட்டுகிறதா? சும்மா ஒருவித குதூகலமான வெளிப்பாடா? வெளியாட்கள் வந்தால் பதவிசாக நகர்ந்துவிடுகிறது. இப்படி உறவுபடும் அவ்வுணர்வும் உயிரியல் வாழ்வியல் தேவையா? எல்லா உயிரியல் தேவைகளைப் பூர்த்திசெய்யும் பொருட்டு ஒரு கணத்தில் தீவிர விழைவும் அதற்கான தேடலும் பற்றுதலும் அது தீர்ந்து போனதும் ஒருவித நிறை சுகமும் வெகுமதியாய்ப் பெறப்படுவதும் இயல்பாகிறது. அச்சூத்திரத்தில் விழைவும் தற்காலிகம். நிறைவும் தற்காலிகம். அத்தற்காலிகம் புரிந்துணர்ந்த மானுட அறிவு அதைச் சிற்றின்பமென்றும் நிறுவிக்கொண்டது. 

தாற்காலிகமாயினும் மனிதர்கள் புலன்வழி இன்பத் துய்ப்பில் திளைப்பதன் காரணமெனப் புத்தர் சொல்வது இதைத்தான். இவ்வாழ்வின் துய்த்தலில் இன்பம் இருக்கத்தான் செய்கிறது. அதன்பாற்பட்டே மனித விழைவு நீள்கிறது. இல்லாவிடில், இவ்வாழ்வை என்றோ மனிதர்கள் புறக்கணித்திருப்பர். உறங்குகையில் ஓய்வும் எழுந்த பிறகு உறக்கச் சுகமும் நிறைவாய் உணரப்படுகிறது. தியானச் சுகம் பழகும் போதும் அதன் பிறகும் நீளக்கூடியது. வாழ்நாளுக்கு விரியக்கூடியது.

பவுர்ணமிப் பொன்னொளியில் தண்ணெனத் தகிக்கும் நீள்விரி கடலைப் பார்க்கையில் கிளர்ந்து மூளும் பரவசமும், பனிமலைக் காட்டுப் பிரதேசப் பள்ளத்தாக்கின் பசுமைபடர் வெளியில் சுரந்தூறும் அமைதியும் சாந்தமும் இயற்கை நிகழ்வுகள் நம்மனத்துடன் விளைவிக்கும் நல்லுணர்வுகளே அச்சுகங்கள். தியானத்தின்பாலான சுகவெளியும் அவ்வாறே. உயிரினங்களின் நட்புறவுத் தொடர்புகளும் அவற்றுக்கான உயிரியல் விழைவுகளும் அவை தம்மை வெளிப்படுத்தும் விதத்தில் அனுபவப்படுகிறது. கொண்டாட்டமாகிறது. மனம் கொள்ளை போகும்படி அவை நம்முள் உறவு கொள்கின்றன. வீட்டிற்கு வாடிக்கையாய் வரும் பிளாக்கி கொஞ்சம் கூச்சம் கொண்டவன். பயந்து திரிபவன். தோல் செருப்பை யார் வீட்டில் கண்டாலும் குதறிப்போடும் வெளிர் பழுப்பு பிரவுனியோடு பின்மாலை நேரங்களில் கட்டிப்புரண்டு விளையாடி மகிழ்வான். மனிதர்களின் அண்மை அவனை அச்சமூட்டும். பெடிக்ரீ வைத்துவிட்டு நகர்ந்துவிட வேண்டும். அப்போதுதான் சாப்பிடுவான். இத்தனை ஆண்டுகள் பரிச்சயமுற்ற பிளாக்கியைவிடவும் அச்சிறு மீன் எங்களுடன் உறவு பாராட்டுவதில் பரவசப்படாமல் இருக்க முடியவில்லை. உறவு பாராட்டுவதில் உயிருள்ளதும் உயிரற்றதுமென்ற பேதமற்று ஒன்றறக் கலந்த பெருநிகழ்வே இவ்விருப்பின் வேர்த் தொகுப்பாக உள்ளது. அதன் மேலேயே இருத்தலுக்கான தேவைகளும் அர்த்தங்களும் அமைகின்றன. அதனாலேயே பூரணப்படுகிறது இருப்பு. உறவற்ற இருப்பு எப்படிப்பட்டதாக இருக்கும் என்று கற்பனை செய்யக்கூட முடியவில்லை. உறவற்று உயிர்களே இருக்க இயலாது என்பதே நிதர்சனம். 

இவ்வுயிரியல் ஊடேற்றங்களிலிருந்து மனிதர்கள் எவ்வாறு வித்தியாசம் கொண்டிருக்கின்றனர்? அவ்வடிப்படை இருத்தலியல் தேவைகளிலிருந்தும் கட்டாயங்களிலிருந்தும் தவிப்பிலிருந்தும் மானுடர் விடுபட இயலுமா? விடுதலை என்பது உண்மையில் என்ன? இவ்வுயிரியல் வேர்களிலிருந்து தன்னைத் துணித்துக்கொள்வதா? அது சாத்தியமா? தேவைதானா? உயிரியல் விடுதலைதான் வீடுபேறா? நிர்வாணமா? அதற்குத்தான் தவமும் தியானமுமா?  

எனக்கு நான் மனிதன். அது மீன். ஆனால் அச்சிற்றுயிரான மீனுக்கு நான் என்பது யாராகத் தெரிய வரும்? என்னைத் தவிர்த்து, அவ்வுயிருக்குத்தான் அது யார்? அக்காணொளியில் கண்டது தன்னினப் பெண்ணென்று புரியுமா? அல்லது வெறும் உயிர்வேதிப் புலனீர்ப்பு மட்டுந்தானா? அதன் பார்வையில் நான் யாராக, எப்படிப் புலப்படுவேன்?  தான் ஆணென அதற்குத் தெரியுமா?                                        

ஊனுடலில் உள்ளுறைவாய்த் தகித்துக் கிடைக்கும் அவா. ‘அவா என்ப எல்லாவுயிர்க்கும் எஞ்ஞான்றும் தவாஅப்பிறப்பு ஈனும் வித்து’ என்று அம்மீனும் சிந்திக்குமா? காமம் உழந்து வருந்தி, காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன் என்று மனிதர்களைப் போல காமத்தைக் கடந்து செல்ல அவ்வுயிர் விழையக் கூடுமா? காமத்தன்ஹா, அதாவது காமத்தாகம் என்கிறதே பெளத்தம். இவ்விழைவும் ஒருவகையில் அவா, இச்சை, காமமென்று கிளைக்கிறது என்பது அம்மீனுக்குப் புரியுமா? தாகம் என்றுகூட தெரியுமா என்பது சந்தேகம்தான். பூச்சியினங்களில் ஃபெரமோன் எனும் பெண் பூச்சிகளில் சுரக்கும் ஹார்மோன்களை ஆய்வகங்களில் பிரித்தெடுத்து வேதி மூலக்கூறுகளைக் கொண்டு செயற்கையாகத் தயாரிக்கப்படும். அத்திரவத்தை கண்ணாடிப் பேழைகளில் தடவிவிட, ஆண் பூச்சிகள் கூட்டமாய் அத்திரவத்தை மொய்த்து அதிலேயே மூழ்கித் திளைத்து மரித்தே போகும்.

அவா என்பது உயிர்ப்பிற்கான ஓர் உந்துவிசை. உயிர்களின் மரபணுக்களில் ஆழப்பொருந்தி உழற்றும் உயிர்விசை. மனிதர்களுக்குக் கூடுதலாக ஆகுதல், ஆகாதிருத்தல் எனும் பவ, விபாவத் தாகம். இப்படியாக வேண்டும் அல்லது எதுவுமே ஆக வேண்டியதில்லை எனும் நேரெதிர் விழைவு. அவா. எல்லா உயிரிலும் நீக்கமற உறைந்திருக்கும் உயிரியல் ஊக்கமெனும் மெய்மை. பேருண்மை. அவ்விசை தகிப்பதால்தான் இது தேகம். காய்வதால் காயம். உடற்றுவதால் உடல். 

‘உண்டதே உண்டு உடுத்ததே உடுத்தும், அடுத்தடுத்து உரைத்ததே உரைத்தும், கண்டதே கண்டும் கேட்டதே கேட்டும், கழிந்தன கடவுள் நாள் எல்லாம்’ என்று பட்டினத்தாரைப் போல அம்மீன் பாடுமோ? இயல் நாட்களை அது பரம்பொருள் நாட்களாய்க் கருதுமோ? இப்படியே போகுமோவென கேள்வியும் சலிப்பும் அடையுமோ? இச்சுழலிலிருந்து மீளத் துணிவுறுமோ?  தீவிர முனைப்புடன் பயிலுமோ?       

அச்சிறு மீனின் மெய்ஞானத் தேடல் என்னவாக இருக்கும்? பசிக்கு உணவும் காமத்திற்குப் புணர்வும் உயிருக்குப் பாதுகாப்பும் தாண்டி அதன் தேடல் வேறென்ன? தற்கணத்தில் இயல்பாகத் திகழ்ந்திருப்பது அம்மீனும் பிற உயிர்களும் தாவரங்களும் மலைகளும்தானே? அவற்றை உற்றுணர்ந்து மானுடம் கண்டடையும் மெய்ஞான சாத்தியங்கள் இருக்கத்தான் செய்கின்றன. 

சீன ஜென் ஆசிரியரான சிங்க் யுஆன் தான் உய்த்துணர்ந்த ஞானத்திரளை இவ்வாறாகக் கூறுகிறார். ‘ஜென் பயிற்சியைத் தொடங்குவதற்கு முப்பது வருடம் முன் இம்முது ஜென் துறவி மலைகளை மலைகளென்றும் நதிகளை நதிகளென்றும் கண்டிருந்தேன். தம்மத்தைப் பூரணமாகத் தெளிந்து அதன் வாசலை எனக்குக் காண்பித்த அருமையானதொரு ஜென் ஞானியைச் சந்தித்தபின் மலைகள் மலைகளாகவோ நதிகள் நதிகளாகவோ முற்றிலும் இல்லை என்றுணரத் தொடங்கினேன். தற்கணத்தின் ஏகாந்தத்திலும் நிறைவிலும், அனைத்தையும் உள்ளபடி காண்கிறேன், மலைகள் வெறும் மலைகளாக நதிகள் வெறும் நதிகளாக’.

மெய்ஞானப் பயிற்சிக்கு முன்னர் காணும் யாவும் அது அதுவாகத் தனித்துப் பிரிந்து தன்னளவில் தானாய் நின்றிருப்பதாய் அறியப்பட்டன. அதனாலேயே மலை மலையாகவும் நதி தன்னளவில் நதியாகவும் உணர்ந்தறியப்பட்டன. தவப்பேறின் மெய்யுணர்வில், அகவிழிப்பில், காண்பன யாவும் அவையாகத் தனித்துப் பொருள் தரவில்லை. அனைத்தும் ஒன்றனுள் ஒன்றென ஊடாடிக் கிடப்பது ஆழ்தியானத்தில் உய்த்துணரப்பட்டது. ஒன்றே தனித்தும் தொகுத்தும் பிரதிபலிப்பதை உள்ளதை உள்ளபடி காண்பதற்கு வாய்க்கக் கிடைத்தது. வழமையான மனக்கட்டுகள் உடைபட்டு யாவும் ஒன்றென, இரண்டென, அவையன்றென சூன்யமுமென உய்த்துணரப்பட்டன. அது ஒரே சமயத்தில் தானாகவும் தான் கடந்த யாவுமாகவும் திகழ்வதை உணர்ந்து பேறடைவது. பரவெளியின் பரமசுகம் ஊடேறித் திளைப்பு நிகழ்கிறது. உடைப்பின் வலியும் பரவசமும் தாண்டி தற்கணத்தில் எல்லையற்ற நித்திய வெளியாய் இருப்பு புரிந்துணரப்படுகிறது. தவச்சுவையும் அமிர்தமும் வாய்த்து நிறைவுற்று அமைதி சூழ்ந்து தவழ காடும் மலையும் நதியும் கடலும் மழையும் மேகமும் உயிர்ப்பும் இன்மையும் அவ்வவ்வாறு உணரப்படுகின்றன. நாம ரூபங்களின் நீட்சி புரிபட பெயர்க்காரணம் கொண்டு அது அதுவாய்ப் பேசப்படுகிறது. மெய்ஞானம் உணர்த்தும் உள்ளொளியும் தன்னர்த்தமும் முன்பும் பின்பும் வேறானது. அப்புரிந்துணர்வில் முன்னர் பின்னர் என்றுகூட இருப்பதில்லை என்பதே உண்மை. 

ஜென் ஆசிரியர், சாங் யுஆன் ஹ்சிங்ஸூ சாவோச்சீ எனும் மடாலயத்தில் பயின்று திரும்பி வந்த தனது மாணவன் ஷிடவ் ஹிஸ் சியனிடம் உரையாடுகிறார்.  

‘எங்கிருந்து வருகிறாய்?’ 

‘சாவோச்சீயிலிருந்து வருகிறேன்’.

‘சாவோச்சீயில் நீ பெற்றது என்ன?’

‘அங்கு செல்வதற்கு முன்னர் பெற்றுக்கொள்ளும்படி எக்குறையையும் நான் கொண்டிருக்கவில்லை’. 

‘பின்னர் எதற்காக அங்கு சென்றாய்?’

‘சாவோச்சீ சென்றிருக்காவிடில் குறைவொன்றும் எனக்கில்லை என்பதை உணர்ந்திருக்க மாட்டேன்’. 

ஆழ்தியானத்தில் உய்த்துணர்த்த பிறகே அம்மெய்மை உயிருக்குள் எப்போதுமே பொதிந்துள்ளது என்பது புரிய வரும். அதையே குறியாக எடுத்தாண்டு பயில்வது ஒருவிதத்தில் சிரமமானது. புலனுகர்வு சார்ந்த உடல் மனக் கற்பிதங்கள் உள்ளொளியைத் துலங்கச் செய்வதில் மறைப்புகளையும் மாயங்களையும் விளைவிக்கும். அது உள்ளதை உள்ளபடி பார்ப்பதாகாது. அது மறைப்பென்றும் மாயை என்றும் புரிந்து தாண்ட வேண்டிய பயிற்சி. படைப்பூக்கப் பெருங்கணங்களில் அது உணரப்படுவதாயினும் ஞானப் பாதையில் சுரக்கப்படுவதாயினும் உயிர்நிலையில் உட்பொருளில் அம்மெய்யமுதச் சுவைப்பைத் தியானம் நல்கும், தொடர் பயிற்சியினூடே. அது ஒருவிதத்தில் ஊனுடலுக்கும் பிரபஞ்சத்திற்குமான அறிவியல். அவ்வமுது விண்ணாற்றல் காந்தப்புலம் ஊடாடும் உயிர்வேதி நெகிழ் நரம்புமண்டலத்தின் நிகழ்வு.

அக்காய்ப்பிலிருந்து கனிந்து விடுதலை பெற விழையும் மனம் மனிதருக்கானது. உயிர் நீட்சிக்கான தாகத்தின் உள்விசையை மனம் உய்த்துணர்ந்து ஆழ ஆழப் போக மெய்யறிவு சுடர்கிறது. ‘சுடச் சுடரும் பொன்போல ஒளிவிடும் துன்பம் சுடச்சுட நோற்கிற்பவர்க்கு’. அதுவே விபஸ்ஸனா. அமைதியும் உள்ளொளியுமாய் தெளிவுறுத்தும் தவம். உற்றறிவதையே நோண்பெனத் தியானிக்க ஐந்தன் புலத்தைத் தாண்டிய அகச்சுகப் பெருவெளிச் சுவை சுரக்கும். மெல்லப் பெருகும். புலன் வழிச் சுவை தாழுறும். எல்லாம் ஒவ்வொன்றாய் விடுபட்டுக் கழியும், அடக்கவோ விலக்கவோ அன்றி. வெறும் அறிந்துணர்வதின் மூலம்  தியானத்தையும் தவத்தையும்கூட தாண்டி, எதையும் சார்ந்திராத தவச்சுகமும் அதனாலான அமைதியும் மெய்யுணர்வும் கூடி உள்ளும் புறமும் ஒன்றென ஊடாடிக்கிடக்கும் மெய்ஞானம் உள்ளூறும். தவம் என்பது உயிர் விசையைத் தணித்து அவாவெனும் அவ்வுயிர் விசையைக் கொண்டே தன்னை விடுவித்துக்கொள்ளும் அமைதிப் பயணம். அம்மெய்வழிப் போய்ச் சேரும் வீடே மெய்வீடு. அவ்வீடுபேறுதான் ஜென் பெளத்தம் கூறும் ‘கோயிங் ஹோம்’. எக்காலத்திலும் எவ்வுயிர்ப்பிலும் நீக்கமற நிறைந்து திகழ்வது.

அப்பரவெளியில் தனியடையாளங்கள் இல்லை. அது யூனிவேர்சல் தனிச்சுவை. பார்க்கும் இடங்களிளெல்லாம், கேட்கும் ஒலிகளிலெல்லாம் அதை உணர்கிறார் பாரதி. பிறிதொன்றற்ற திரு அது. ‘என்னுடைய நிஜப் பெயரால் என்னை அழை’ என்று விளம்புகிறார் திக் நாட் ஹஞ். மனிதர்களின் அனைத்துயிர் நிலைகளின் நிஜப் பெயர்தான் யாது? பொதுமையில் உயிர்மெய்ப்பொருள்தானோ?   

ஒரு தேனீ பூந்தோட்டத்திற்குள் நுழைகையிலேயே மின்காந்த அதிர்வுகளைத் தன் சுரப்பாடல்களால் பரப்புகிறது. பூக்கள் ஊக்கம் கொண்டு மேலதிக ஈர்ப்பு மணங்களையும் வண்ண நிறமிகளையும் இதழ் விரிவுகளையும் செறிவூட்டிப் பெருக்கி மகரந்தச் சேர்க்கைக்கென ஆயத்தப்படுகின்றன. அப்பூஞ்சோலைச் சூழலில் பூக்களும் தேனீக்களும் ஒன்றையொன்று சார்ந்து சுகப்பரவெளியில் நிறைவுற்றுத் திளைக்கின்றன. மகத்தானதொரு சூழியல் கொண்டாட்டம் அங்கு இயல்பாய் நடந்தேறுகிறது.

உயிர்கள் தன்னளவிலான நிஜப் பெயர் அடையாளத்தால் ஒரு குறிப்பிட்ட கணத்தில் அச்சிறு மீனும் நானும் ஒன்றென உள்ளுக்குள் உணர்தலானது. அச்சிறு மீன் என்னை நோக்கி நீந்தி வர நான் ஏன் பரவசம் கொள்கிறேன்? நட்பாக உணர்கிறேன்? அவ்வுயிரை என்னுயிராகப் போற்றிப் பராமரிக்க முனைகிறேன்? அவ்வுயிர் என்னுள்ளான உயிர்வழி கரிசனங்களின் திரவத்தைச் சுரக்கச் செய்து இயல்பில் நான் யாரென எனக்கு எடுத்துக் காட்டுகிறதோ? அதனுடனான எனது நேர்மறை பரிவர்த்தனைகளால் அதற்குள்ளும் சுரக்கிறதோ அக்கரிசனம்? அதன்வழி இதயத்திற்குள் நிஜ இயல்பு வெளிப்படுகிறதோ? நான் இதுவென வரையறுத்துக்கொண்டதைத் தாண்டி என்னியல்பைக் காட்ட தன்னையறியாமல் உதவுகிறதா அம்மீன்?   

தமிழ் நிலத்திணைகளில் ஐந்நிலங்கள் பேசப்படுகின்றன, மலை, காடு, வயல், கடல் என நான்கும் அவற்றில் சேராத பாலையென்றும். சூழியல் கோட்பாட்டில் அவை ஒவ்வொன்றும் ஒரு ‘இகோ-சிஸ்டம்’ எனும் சூழ்முறைத் தொகுப்பாகும். அது தன்னுள் தனித்து ஆனால் ஒன்றனுக்குள் ஒன்றென ஊடாடி இயங்கும் உயிரியல், உயிர்சாரா சிற்றியக்கங்களின் தொகுப்பு. 

ஒவ்வொரு சூழமைவுக்கும் அதற்கே உரித்தான, தனிச்சிறப்பு கொண்ட தகவுகள் பெற்ற தாவர, விலங்கினங்கள் வாழ்ந்திருக்கும். அதில் திகழும் அனைத்து உயிரியல், உயிர்ச்சாரா காரணிகளின் ஊடாட்டத்தில் உயிராற்றல் சமன்பட்டு சுழன்றிருக்கும். தாதுக்களும், வாயுக்களும் ஊட்டங்களெனச் சுழன்றூரும் உயிராற்றல் ஒன்றே ஆயினும் அவ்வமைவின் தாவர, விலங்கினங்கள் வேறுபட்டவை. ஆனால் இரண்டு சூழமைவுகள் இணையும் எல்லைகளில் அவ்விருமைச் சூழலில் தனிச்சிறப்பான உயிரும் தாவரங்களும் வாழ்ந்திருக்கும். மலையும் வயலும், கடலும் காடும் இணைந்திருக்கும் இடத்தில் அவ்விருமைச் சூழலுக்குத் தகவமையப் பெற்ற தனிச்சிறப்பான தாவர, உயிரினங்கள் காணக் கிடைக்கும். இதை ‘இகோடோன் எட்ஜ் எபெக்ட்’, அதாவது, சூழல் நீட்சி, விளிம்பு விளைவு என்பார்கள். இரு பக்கத்தின் சூழலமைப்பும் கலந்து உணர்ந்த நடுநிலை. அவ்விடம் ஒரே நேரத்தில் ஒன்றாகவும் இரண்டாகவும் வேறாகவும் புதிதாகவும் அமைந்திருக்கிறது. இருப்பின் நீட்சியாய் தவப்பேறின் விளைவாய் இருமை தாண்டிய பரவெளிப் பண்பாக இம்மையும் மறுமையும் தாண்டிய மெய்ஞான வெளியாக சுவைக்கிறது வீடு. இயற்கை உண்மையதாய் இயற்கை இன்பமுமாம் அயர்ப்பிலாச் சிற்சபையாக உள்ளுணர்வு பிரபஞ்ச வெளியில் தோய்ந்து திளைக்கிறது.