மூத்திரத் திசை
மெதுவாக நடந்துசெல்லும்
எண்பதுகளின் தொடக்கத்தில் இருக்கும்
முதிய ஜோடி
கிழவருக்கு அவசரம்
தன் மனைவியிடம் சொல்லிவிட்டு
சாலையோரம் சென்று
நின்றபடியே
ஒன்றுக்கிருக்க ஆரம்பிக்கிறார்
அவருக்கு முதுகு காட்டிக்கொண்டு
நிற்கும் கிழவிக்கு
வெட்கப் புன்னகை
கிழவரின் மூத்திரத்துக்கும்
கிழவியின் வெட்கப் புன்னகைக்கும்
எதிரெதிர் திசை
எனினும்
ஈறில்லாத் தொலைவில்
ஒன்றையொன்று சந்தித்துக்கொள்ளும்
அது மறுபடியும் ஒரு
நிழற்சாலையாகத்தான் இருக்கும்.
*
முதியவளின் மூத்திரம் வெட்கமறியாது
கண்ணகிச் சிலைக்கு
எதிர்ப்புற நடைபாதை
ஓரத்தில் தடுப்புக் கம்பியைப்
பிடித்துக்கொண்டு
அந்த முதிய பெண்மணி
புடவையிலும்
கைப்பையிலும்
சற்றுப் பணக்காரத் தோற்றம்
புடவைக்குக் கீழே
நடைபாதையில்
சாலையை நோக்கிக்
கோடுபோட்டுச் செல்லும்
மூத்திரம்
முதியவளின் மூத்திரத்துக்கெதிராய்ப்
பூட்டு போட்டுக்கொண்ட
ஒரு நகரத்தின் மேனியில்
மெல்லப் படரவிடுகிறாள்
அந்தப் பெண்மணி தன் மூத்திரத்தை
பின்னே ஆசுவாசத்துடன்
தொடர்கிறது அவள் தளர் நடை
வழிந்துசென்று
சாலையோரம் தேங்கிய
அந்த மூத்திரச் சிறுகுட்டையைச்
சிறு கூச்சமுமின்றி
ஒரு ஒளிக்குச்சியை வைத்துத்
துழாவிப் பார்த்துச் சொல்கிறான் சூரியன்,
‘கவலைப்படாதே கிழவியே
உன் அவமானத்தை
என்னையன்றி யார் துடைப்பார்?’
*
பிஞ்சு இலையின் பிரத்யேக சீதோஷ்ணம்
மொட்டைமாடி நடை
வெயில் தொடங்கியிருக்க வேண்டிய
ஆனால்
இன்னும் தொடங்கியிராத வேளை
நடையினிடையே
தரையில் ஒரு பிஞ்சு பூவரச இலை
கொழுக்கட்டைக்குத் தேடியபோது
சுற்றுவட்டாரத்தில் எங்கும் காணாத
பூவரச மரம்
தன் சிரிப்பொன்றை
இங்கே அனுப்பிவைத்திருக்கிறது
அந்தப் பிஞ்சு இலையின் தங்கல்
மொட்டை மாடியின்
பிரத்யேக சீதோஷ்ணமாகியிருக்கிறது
அதற்கு மேல் கொண்டுசெல்ல
வலுவில்லாத காற்றின்
அல்லது பறவையொன்றின்
கவனக்குறைவு
சற்று நேரத்தில் தூறல்
தொடங்க
பிஞ்சு மழை
ஒவ்வொரு துளியின் நெடும் பயணமும்
தரையில் புள்ளியாகி
தாளில் ஊறிப் பரவும்
மைப்பொட்டாக மாறி மறையும்
மறைய மறைய
புதுப்புள்ளி புதுப்பொட்டு
பின் பொட்டெல்லாம் இணையுமொரு
ஈரப்படலம்
துளிகள் விழவிழ
மாடித்தோட்ட இலைகளில்
தனித்தனியாய்க் கேட்கும்
ஒலிப்புள்ளியெல்லாம் இணையுமொரு
ஒலிப்படலம்
தலைகீழ்ப் புல்வெளியில்
நான் தலைநேராக நடக்கிறேன்
இந்த உலகில் பிஞ்சு இலைகளுக்கும்
பிஞ்சு மழைக்கும் என்ன வேலையென்று
வியந்தபடி
யாரிடம் கேட்கலாம்
பிஞ்சு இலையே
பிஞ்சு இலையே
நீ தனித்து வந்தது
இக்காலை உனக்களிக்கும்
இரண்டு சொட்டு அமுதத்தை
உன் உடலையே கண்ணாக்கி
அள்ளிப்பருகத்தானே
அதில் நான் தெரியும்போது
என் மனது பச்சை நிறத்தில் இருக்கிறதா?
*
கண்கள் ஒன்றாகக் கலந்ததா?
இரவில் பெய்த மழை
இன்னும் வெயிலை
அனுமதிக்காத
காலை எட்டு முப்பது
அதன் இதநிலை குலைந்துவிடாமல்
சற்றே என்னைச் சூடேற்றிக்கொள்ள
இந்த டீக்கடையின் முன்னமர்ந்து
டீ குடிக்கும்போது
எங்கிருந்தோ வந்து
என் மூளையைக் கவ்விக்கொள்கிறது
‘கண்கள் ஒன்றாகக் கலந்ததா?’
பாடல் வரி
ஒவ்வொரு உறிஞ்சலுக்கும்
அதே வரி திரும்பத் திரும்ப
அடுத்த வரி எனக்குத் தெரிந்தும்
மூளையில் ஒலிக்கும் பாடல்
அடுத்த வரிக்குப் போகப்
பிடிவாதமாக மறுக்கிறது
வீட்டில் காலையில் கேட்கவில்லை
வரும் வழியில் எங்கும் கேட்டதாய் நினைவில்லை
டீக்கடையில் ஒலிக்கவில்லை
டீ மாஸ்டரும் முணுமுணுக்கவில்லை
சமீபத்திலும் கேட்டிருக்கவில்லை
ஆயினும் அதே வரி
மூளையின்
சிரமத்தை விடுவிக்க
உதடுகள் ஏந்திக்கொள்கின்றன
‘கண்கள் ஒன்றாகக் கலந்ததா?’
இத்தனைக்கும் எனக்குச்
சற்றும் பிடிக்காத பாடல் அது
அந்தப் பாடல் என்னுள் ஒலிக்க
எனக்கு என்ன தேவை
என்றும் தெரியவில்லை
ஆனாலென்ன
அந்தப் பாடலுக்குத்
தேவை இருந்திருக்கும் போல
அதற்குத் தேவை இருக்கும்போது
அதை எனக்குப் பிடித்திருந்தால் என்ன
பிடிக்காவிட்டால் என்ன
ஒலித்துத்தானே ஆக வேண்டும்
ஒரு பாடல் தான் விரும்பும்போதோ
ஒரு பாடல் தன்னை ஒருவர்
முற்றிலுமாக மறந்துவிடப் போகிறார்
அல்லது தன்னை ஒருவர்
முற்றிலுமாக வெறுக்கிறார்
என்று எண்ணும்போதோ
யாரும் எதிர்பாராத இடங்களில்
விழித்துக்கொள்ளும்போல
எனக்குப் பிடிக்க வேண்டும்
என்பதற்கு எந்தப் பிரயத்தனமும் இன்றி
இன்று காலை
என்னை ஆக்கிரமித்துக்கொள்பவளே
நீ தாராளமாய் ஒலித்துக்கொள்
என் கண்மணி
என் உதடுகளிலிருந்து புறப்பட்டு
எப்போதும் ஏதோ ஒரு பாடலுக்குத்
தயாராக இருப்பதுபோன்ற
ஆனால்
எந்தப் பாடலும் முணுமுணுக்கத்
தெரியாதது போன்ற
டீ ஆற்றும் மாஸ்டரின்
அந்த உதடுகளில் ஏறிக்கொள்
அடுப்புச் சூழலின் சூட்டுக்கெதிராய்
அவர் நடத்தும் நிரந்தர யுத்தத்தில்
இம்மியளவு குளிர்ச்சி
நீ ஏற்றினால்
அது போதும்
என் கண்மணி
(இசையின் ‘பரோட்டா மாஸ்டரின் கானம்’ கவிதைக்கு)
*
செத்த பாம்பிலிருந்து விடுபடுதல்
பாம்பின் மீது
வண்டியை ஏற்றிவிட்டோமோ
என்ற சந்தேகம்
வண்டியில் அமர்ந்தபடி
வண்டியைப் பின்தள்ளிக்கொண்டு வந்து
பார்த்தபோது தெரிந்தது
அது ஆங்கில ‘எஸ்’ போல
வளைந்துகிடக்கும்
துண்டு ஒயர்
அது பாம்பில்லைதான்
ஆனால் அது துடித்தது நிஜம்
இப்படி ஒயர்களை
விட்டுச்செல்பவர்களுக்குக்
குற்றவுணர்வே தோன்றுவதில்லையா
இப்படித் தாம்
பிறருடைய கண நேரக்
குற்றவுணர்வுக்குக் காரணமாவோம்
என்பது குறித்து
துடித்தடங்கிக் கிடந்த
ஒயரைப் பார்த்தாலும்
பாவமாகத்தான் இருந்தது
ஏனென்றால் அதற்கென்று
கண நேரம் கொள்ளப்பட்ட குற்றவுணர்வின்
காலத்தை நீட்டிக்க
அது இன்னும் மேலதிகம்
பாம்பாகவே
அதுவும் செத்த பாம்பாகவே
தோன்ற வேண்டிய துர்பாக்கியம்
அந்த ஒயரை
எதற்கும் பாத்யதை அற்றதாக
விட்டுச்செல்வதில்
எனக்கோர் நிம்மதி
துண்டு ஒயரே
யாருக்கேனும்
நொடி நேரம்
செத்த பாம்பாகத் தோன்றிக்கொண்டிரு
எனக்கு வேண்டாம்
எனக்கு இனி நீ
செத்த ஒயர்
*
பெருந்தொற்றிலிருந்து நீளும் இடக்கை
லிஃப்ட் கேட்டு நீளும் இடக்கை ஒன்று
விலகிக் கடக்கும்
பைக் ஒன்று
எத்தனையோ முதியவர்களையும்
ஏன் இளைஞர்களையும்கூட
ஏற்றிச் சென்ற
பைக்தான் அது
இப்போதோ
தன் முன்னே
நீள்வதெல்லாம்
பெருந்தொற்றின் இடக்கையாகத்
தெரிகிறது அதற்கு
முன்பு
ஒரு லாரியளவு இடமிருந்த
அந்த பைக்கின் இருக்கை
தற்போது
ஒரு ஊசிமுனையளவு
சுருங்கிப்போய்விட்டிருக்கிறது
அந்த ஊசிமுனையின்
உச்சியில்தான்
தன் பெண்டு தன் பிள்ளைகளை
உட்கார வைத்துக்கொண்டு
தானும் உட்கார்ந்து செல்கிறான்
அந்த பைக் ஓட்டி
இப்போது
ஊசிமுனை ஞானம்
இடையறாது கிடைக்கிறது
அவன் புட்டத்துக்கு
அது கழுமுனையாக
மாற ஆரம்பித்த நாளன்று
இரும்பு உள்ளாடை வாங்கப்
புறப்பட்டுச் செல்கிறான்
அவன்