அதை மற்றுமொரு சாதாரணப் பயணம் என்றுதான் நம்பியிருந்தேன். விமானி தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டதும் எல்லோரும் சற்று நிமிர்ந்து உட்கார்ந்தார்கள். டெல்லி சென்றடைய எவ்வளவு நேரம் ஆகும், தலைநகரின் அன்றைய உஷ்ணநிலை எப்படி இருக்கிறது என்பதையெல்லாம் அவள் சொல்லிக்கொண்டிருந்தாள். பெண் எனினும் குரல் சற்று கரகரப்பாக இருந்தது. ஆண்களே செய்துவந்த பணிகளில் நுழையும் பெண்கள் இப்படியாக குரலை வலிந்து திரிக்கிறார்களோவென எனக்கோர் ஐயப்பாடு. 

ஒலிப்பெருக்கிக்குரல் ஓய்வதற்காகவே காத்திருந்ததைப் போல, நானும் பக்கத்து இருக்கைப் பெண்ணும் ஒருவரையொருவரைப் பார்த்து முறுவலித்துக்கொண்டோம். மிதமிஞ்சிய ஒப்பனைகளுக்குள் ஒளிந்திருக்கும் இருப்பத்தைந்து வயது முகம்.

“பெண் விமானி..” ஏதோ சொல்ல வேண்டுமே என்பதைப் போலத்தான் இதைச் சொன்னேன்.

‘அதற்கென்ன?’ என்பதைப் போல தோள்களை இறுக்கினாள். எனக்குமே ஏன் அதைச் சொன்னேன் என்றுதான் இருந்தது. இடவலமாகத் தலையசைத்து முடித்துக்கொண்டேன்.

இரசிப்பதற்கு ஒன்றுமேயில்லையெனினும் விமானம் உயர எழுவதை சம்பிரதாயமாக வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அந்தப் பெண்ணும் சற்று எக்கிக்கொண்டிருப்பதாகப் பக்கவாட்டில் தெரிய, சற்று பின்னால் ஒதுங்கிப் புன்னகைத்தேன். அந்தக் கோணம் – அவள் முகத்தில் தெரிந்த பரிச்சயம் – எனக்கு என்னவோ போலிருந்தது. மனக்கண்ணிலிருக்கும் குழந்தையின் முகத்தில் நெற்றி மூக்கு கன்னங்கள் காதுகளைக் கொஞ்சமே கொஞ்ச அங்குலத்திற்கு இழுத்து வரைந்தால் வந்துநிற்கும் முகவெட்டு. இன்னும் திருத்தமாக அவள் முகத்தை உற்றுப் பார்த்தேன், அப்படியே இருந்தது. அந்தக் குழந்தையின் பெயரென்ன என்பதைக்கூட என்னால் உடனடியாக நினைவில் கொண்டுவர முடியவில்லை. இத்தனைக்கும் கிட்டத்தட்ட இருபது வருடங்களாக என்னை விரட்டிக்கொண்டிருக்கும் பெயர். 

இடுப்புப்பட்டியைத் தளர்த்திக்கொள்ளும் சமயம் வந்ததும், அவளிடமே கேட்டுவிடலாம் என்று தோன்றியது. எந்த ஊரிலிருந்து வருகிறாளென்று கேட்டேன். தொடுபுழா. கழுத்தில் மிகச்சிறிய சிலுவை டாலர். மெலிண்டா என்ற பெயர் சட்டென மனதில் வந்துவிட்டது. பெயர் அதுதானா என்று கேட்டுவிடலாமா? எத்தனை பெரிய அசட்டுத்தனம்.

“பல வருடங்களுக்கு முன் பார்த்த ஒரு சிறுமியை எனக்கு நீங்கள் நினைவுப்படுத்துகிறீர்கள்”. பொறுக்கமாட்டாமல் சொல்லிவிட்டேன்.

நிச்சயம் அவள் வியக்கவில்லை; மிகத் தட்டையான பாவனையுடன் “அப்படியா?” என்றாள் – மேற்கொண்டு அறிய விருப்பம் இல்லாத தொனி. விலக்கத்தை வெளிப்படையாகக் காட்டிவிட்டதாலோ என்னவோ கொஞ்சம் இடைவெளி விட்டு அவளே கேட்டாள், “அந்தச் சிறுமியிடம் ஏதேனும் சிறப்பு உண்டா? அல்லது வெறும் முகவெட்டு என்ற அளவில் சொன்னீர்களா?”

“உங்கள் பெயர் மெலிண்டாவா? இல்லைதானே?” 

வினோதமாகப் பார்த்தாள். “சோனியா.. சோனியா ஜார்ஜ்” – கண்களில் மட்டும் சிரிப்பு இருந்தது. 

“ஆனால் ஏன் இத்தனை பதற்றமாக இருக்கிறீர்கள்? என்ன பெயர் சொன்னீர்கள்? மெலிண்டாவா?” முகமலர்ச்சியுடன்தான் கேட்டாள். எனக்கு இன்னும் இன்னும் அதிகமாக மெலிண்டாவுடன் இவளது முகம் ஒத்துப்போவதாகவே தெரிந்தது. 

“ஒன்றுமில்லை.. உருவ ஒற்றுமையில் சற்று குழம்பிவிட்டேன்.. அவளுக்கும் இந்நேரம் உங்கள் வயதுதான் இருக்கவேண்டும்..”

புருவத்தைச் சுருக்கினாள். ஆம் என்பதைப் போல தலையசைத்தேன்.

“உங்களுக்கு எவ்விதத்தில் அச்சிறுமி உறவு? மன்னிக்கவும்..”

‘பரவாயில்லை’ என்பதைப் போல கையை உயர்த்தினேன். “அவள் என்னுடைய நோயாளி..”

மெல்ல தலையசைத்தவள், “ஏதோ ஓர் உள்ளுணர்வு.. உங்களை மருத்துவரென்று முன்னரே கணித்துவிட்டேன்..”

எந்தத் துறை, எங்கே பணி செய்தேன், அரசாங்கப் பணி ஓய்வுக்குப் பிறகுமான கெளரவப் பேராசிரியர் பொறுப்பு அனைத்தையும் அவளிடம் சொல்லிக்கொண்டு வந்தேன். சமீப வருடங்களில் இதையெல்லாம் இப்படி விலாவாரியாக எல்லோரிடமும் அங்கலாய்க்க எனக்குப் பிடித்திருக்கிறது போலும். அவளும் மிகுந்த சிரத்தையுடன்தான் கேட்டுக்கொண்டிருப்பதாகத் தெரிந்தாள். சுருக்கமாகத் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டாள்; பகிர்ந்துகொள்ள நீண்ட கடந்தகாலம் இல்லாத வயது.

“அந்தச் சிறுமியைப் பற்றி சொல்ல வந்தீர்கள்..” 

“ஆம்.. ஆம்.. மெலிண்டா..” அவளிடம் கேட்கும் குறுகுறுப்பு தெரியாவிடினும் நிச்சயம் அது குறித்துப் பேசிவிட வேண்டுமென எனக்கொரு தாவல் இருந்துகொண்டிருந்தது. “இரண்டு வயதில்.. சரியாக நினைவிருக்கும் பட்சத்தில் 1998 ஆம் வருடம்.. மூளைக்காய்ச்சல் வந்து என்னிடம் அனுமதிக்கப்பட்டிருந்தாள். சிகிச்சை பத்து பதினைந்து நாட்கள் பிடித்திருக்கும். அந்த வயதிற்கு ரொம்பவே மோசமான வியாதி அது.. காசக்கிருமி தாக்கம்.. ஆனால் சிகிச்சை முடிவில் நன்றாகவே தேறித்தான் வீட்டுக்குப் போனாள்.”

“அந்நாட்களில் பெரிய வசதிகள் எதுவும் இருந்திருக்காது அல்லவா?”

“அப்படியெல்லாம் இல்லை.. உங்கள் தலைமுறை தொண்ணூறுகளையே ஏதோ கற்காலம் போல பாவிக்கிறீர்கள்.”

நாணத்துடன் மறுத்தாள். “பிறகு என்ன ஆயிற்று?”

“மூன்றே நாட்களில் சுயநினைவற்ற நிலையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டாள்..” உறக்கத்தின் இலட்சணம்கூடிய அந்த முகம் – அப்படியே ஒரு புகைப்படம் போல மனதில் இருக்கிறது. அப்படியே அதை எதிரில் இருப்பவளோடு பொருத்திப் பார்த்தேன். “கொண்டுவந்து சேர்க்கும்போது உடலில் எந்தவொரு அசைவுமில்லை.” 

“ஹா.. என்ன அது? மீண்டும் காய்ச்சலா?”

“அப்படியில்லை.. அது புலி வாலைப் பிடித்த கதைதான்.. முந்தைய காய்ச்சலின் விளைவால் மூளையில் நீர் கோர்த்துக்கொண்டது..”

“ஹைட்ரோகெஃபலஸ்.. அதுவா?”

சற்று வியப்புடன் அவளைப் பார்த்தேன்.

“கேள்விப்பட்டிருக்கிறேன்..” மிகச் சாவதானமாகச் சொன்னாள். நான் அவளைக் குழப்பமாகப் பார்த்துக்கொண்டிருக்க, “என்ன செய்தீர்கள் பிறகு?” என்றாள். அதே முகம்தான்.

“ஒன்றுமில்லை, ஓர் அறுவை சிகிச்சை.. மூளையையும் வயிற்றையும் இணைக்குமாறு தோலுக்கு அடியில் ஒரு குழாயைப் பொறுத்திவிடுவோம்..” அந்தக் குழாய் எப்படிப் போகும் என்பதை என் காதுக்கு பின்னாலிருந்து கழுத்து நடுவே மார் வழியாக வயிறு வரை ஒரு கோடு போல விரலால் வரைந்து காட்டினேன்.

“ஓ அருமை.. மீண்டுவிட்டாளா?”

“அதில் மீண்டுவிட்டாள்..” அந்தச் சிலுவை டாலருக்குக் கீழே எதுவும் குழாய்க்கான தடம் தெரிகிறதா என்றுதான் பார்த்துக்கொண்டே பதிலளித்தேன்.. “ஆனால் அதற்குப் பின்னால் வரும் நாட்களுக்கான துரதிர்ஷ்ட கதவு அன்றுதான் அவளுக்குத் திறந்துகொடுத்தது..”

பார்வையில் எவ்விதப் புதிரும் இல்லாமல் அவள் கேட்டுக்கொண்டிருப்பதுதான் என்னை ரொம்பவே தொந்தரவு செய்தது.

“ஆண்டுக்கு ஒரு முறையேனும் அந்தக் குழாய் சம்பந்தமான ஏதோவொரு சிக்கல் அவளுக்கு வந்துகொண்டே இருந்தது.. இரண்டு முறை கிருமித் தொற்று காரணமாக மாற்றவேண்டியிருந்தது.. ஒரு முறை அடைப்பு காரணமாக மாற்றினேன்.. ஒரு முறை குழாயின் அடிமுனை குடல் திரைகளுக்குள் சிக்கிக்கொண்டு அதை விடுவிக்கவேண்டியிருந்தது.. ஒரு முறை எந்தவிதச் சிக்கலும் இல்லை, ஆனால் நீர் மூளையில் ஒரு பக்கமாகத் தேங்க ஆரம்பித்தது.. அதற்காக இடது பக்கமும் இன்னொரு குழாயைப் பொருத்தினேன்..” சட்டென ஏதோ தோன்ற என் பார்வையிலிருந்த அவளது இடது காதுக்குப் பின்னே பார்த்தேன். சுருள் சுருளான கேசம் எதையும் அனுமதிக்கவில்லை.

“இத்தனையையும் அவள் தாங்கினாளா?” முதன்முறையாக அந்தக் குரலில் ஒரு மெல்லிய ஆச்சரியம் தெரிந்தது.

“ஆமாம்.. எங்களுக்கே அது கொஞ்சம் வியப்புதான்.. ஒவ்வொரு முறையும் எந்தச் சிக்கலுமின்றி தேறி வருவாள்.. அவளுடைய அப்பாவைப் பற்றிச் சொல்லவேண்டும்.. கொஞ்சமும் சுணங்காமல் நம்பிக்கையை விடாமல் ஒவ்வொரு முறையும் போராடுவார்..” அவளிடம் எதுவும் ததும்பல் இருக்கிறதாவென அளக்கத்தான் இதைச் சொன்னேன். 

“குழந்தை என்றால் எல்லோருமே கூடியவரை போராடத்தானே செய்வார்கள்.. ஒரு மாதிரியான கடன் அது.. செய்தே ஆகவேண்டும் என்பதைப் போல..” இத்தனை உணர்வற்றவளாக அவள் காட்டிக்கொள்வது ஏகநேரத்தில் ஏமாற்றமாகவும் புதிராகவும் இருந்தது.

“எப்படித்தான் அவளுக்குத் தீர்வு கிடைத்தது?” 

“தீர்வுதான்.. நிரந்தரத் தீர்வு.. அவள் இறந்துவிட்டாள்.” 

கண்கள் அகல விரிந்தன.. நான் சொல்லியதை உள்வாங்க அவளுக்குச் சில வினாடிகள் ஆனது கண்கூடு. பதிலுக்கு அவளிடமிருந்து அலட்சிய பாவனையாலான விசாரிப்பு எதுவுமில்லாதது எனக்குச் சற்று திருப்தியாக இருந்தது. முகம் நொடியில் களையிழந்தது.

நானுமே பேசுவதை நிறுத்திக்கொண்டேன். ஏன் அந்தக் கதையை இப்போது எடுத்துச் சொல்ல ஆரம்பித்தேன் என்பதே எனக்குத் தெளிவில்லாமல் இருந்தது. இறந்துபோன சிறுமியுடன் இவளைக் குழப்பிக்கொண்டதில் யாதொரு தர்க்கமும் இருக்கவில்லை. அவளுடைய இரட்டையா இவள்? திரைப்படங்களில் வருவதைப் போல இந்தப் பயணம் எதுவும் அரங்கேற்றப்பட்ட ஒன்றா? முட்டாள்தனமாக யோசிப்பது ஏன் இப்படி சங்கிலித்தொடராக நீள்கிறது? கண்களை மூடிக்கொண்டு சாய்ந்துவிட்டேன். உறக்கமெல்லாம் இல்லை. அருகிலிருப்பவள் என்ன நினைத்திருப்பாள் என யோசித்துக்கொண்டிருந்தேன்.

எனக்கான உணவுப் பெட்டியைப் பணிப்பெண்ணிடமிருந்து வாங்கி என்னிடம் நீட்டினாள். அதே முகம்.

“சொல்லிக்கொண்டிருந்தீர்கள்.. அப்படியே விட்டுவிட்டோம்..” 

நிதானமடைந்து பார்வையைத் தவிர்த்துக்கொண்டேன்.

“என்னிடம் ஒரு தழும்பை விட்டுச்சென்ற மரணம் அது..”

“ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?” குரலின் தீவிரத்தைக் குறைத்து தொடர்ந்தாள், “இல்லை.. உங்களால் ஆனதை முயன்றுவிட்டீர்கள்.. பிறகு ஏன்..”

“அவளுக்கு ஒன்பது பத்து வயது இருக்கும் சமயம்..” அந்த நாளைப் பற்றிச் சொல்லலாமா என உள்ளுக்குள் தயங்கிக்கொண்டிருந்தேன். “வலிப்பு வந்ததால் ஓரிரவு மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டாள்..”

அவள் என் வார்த்தைகளுக்காகக் காத்திருப்பதும் தெரிந்தது.

“நான் அப்போது என் நண்பர்களோடு சேர்ந்து ஒரு பயணத்திற்காக ஆயத்தமாகிக்கொண்டிருந்தேன். நீண்ட நாட்களாகத் திட்டமிடப்பட்டு இரத்தாகி ஒத்திப்போய் ஒருவழியாக அன்று நிகழவிருந்த பயணம். அப்போதுதான் மருத்துவமனையிலிருந்து அந்த அழைப்பு வந்தது.”

நான் சற்று இடைவெளிவிட்டு தொடரும்வரை அவள் குறுக்கிட்டு எதுவும் கேட்காமல் பொறுத்திருந்தாள்.  

“மூளையில் இரண்டு குழாய்கள் இருப்பதால் அவள் வலிப்பு மாத்திரைகள் தொடர்ந்து எடுக்கவேண்டும்.. வீட்டில் எதாவது ஒரு வேளை கொடுக்கத் தவறவிட்டிருப்பார்கள், ஊசி மூலம் மருந்து செலுத்திவிட்டு, தேறியதும் வீட்டிற்கு அனுப்புமாறு சொல்லிவிட்டு, பயண வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தேன்.”

“எப்படி அவர்கள் தவறியிருப்பார்கள் என்று நீங்களே ஊகித்துக்கொண்டீர்கள்?”

குற்றம்சாட்டும் அழுத்தத்துடன் அக்கேள்வி கேட்கப்படவில்லையெனினும் சுருக்கென்றுதான் இருந்தது. குழந்தைகளின் சிகிச்சை விஷயத்தில் இப்படியான அலட்சியம் அபூர்வமெனினும், அப்போதைய என் நிலைக்குச் சாதகமான காரணமாக இருந்ததால் மனம் அப்படி வசதியாக ஊகித்திருக்க வேண்டும்.

“இல்லை.. அது.. பொதுவான விஷயம்தான்.. அப்படித் தவறவிடுபவர்கள் அநேகம்..” வெளிப்படையாகப் பேசித் தொலைத்தால்தான் என்ன என உள்ளுக்குள் அல்லாட்டம் ஆரம்பித்தது. 

“ஓ.. சரி.. சரி..”

“இருந்தாலும் ரயில் நிலையத்தை அடைந்ததும் ஏதோ உள்ளுக்குள் குமைய சந்தேகத்தின் அடிப்படையில் சிடி ஸ்கேன் ஒன்று எடுக்கச் சொன்னேன்.. மருந்து கொடுத்ததில் வலிப்பு ஓய்ந்திருப்பதாக மருத்துவமனையிலிருந்து சொன்னார்கள்.. ஸ்கேன் எடுத்ததும் தகவல் தெரிவிக்குமாறு சொல்லிவிட்டு வண்டியேறினேன்..”

மேற்கொண்டு நடந்ததைத் தன்னால் ஊகிக்கமுடியும் என்பதைப் போல மெல்லிய பெருமூச்சுடன் நிமிர்ந்து உட்கார்ந்தாள்.

“நான் ரயிலிலிருக்கும்போது பதியப்படாத ஒரு எண்ணிலிருந்து எனக்கு அழைப்பு வந்தது. மெலிண்டாவின் தந்தை.”

மீண்டும் என் பக்கமாகத் திரும்பினாள்.

“வீட்டில் நிகழ்ந்தவற்றை விவரித்துச் சொன்னவர், ‘இங்கே மருத்துவமனையில் நீங்கள் ஊரிலில்லை என்று சொல்கிறார்களே அப்படியா?’ என்றார்.” அந்தக் குரலிலிருந்த தவிப்பு இப்போதும் எனக்கு நினைவிருக்கிறது. நேரில் பேசும்போது முற்றிலும் வேறு மாதிரியாக இருக்கும் குரல் அது. இன்றளவும் அறியாத எண்ணிலிருந்து யாரேனும் என்னை அழைத்துச் சில வினாடிகள் பேசாமல் இருந்தால் எதிர்முனையிலிருந்து அந்தக் குரல்தான் பேசப்போகிறதோ என்ற பதற்றம் தொற்றிக்கொள்ளும். “அருகில் அச்சிறுமியின் அம்மா பெருங்குரலில் அழுவது கேட்டுக்கொண்டிருந்தது”.

இரக்கப்படுவதைப் போல இலேசாக கீழுதட்டைத் துருத்தி, கண்களை மெல்ல மூடித் திறந்தாள்.

“ஆமாம்.. இப்போதுதான் புறப்பட்டிருக்கிறேன்.. மூன்று நாட்களில் திரும்பி வந்துவிடுவேன் என்றேன். சிறிதும் தயக்கமின்றி ‘உங்கள் பயணத்தை ரத்து செய்யமுடியுமா?’ என்றார்.”

“நீங்கள் என்ன சொன்னீர்கள்?”

“இல்லை நான் ஏற்கனவே புறப்பட்டுவிட்டேன்.. இது வெறும் வலிப்புதான்; ஏற்கனவே மருந்து கொடுத்து கட்டுப்படுத்தியாகிவிட்டது. நாளை காலை அவள் தெளிந்ததும் நீங்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்ல முடியும் என்றேன்..”

“நோயாளியை நேரில் பார்க்கமாலேயே இத்தனை திட்டவட்டமாகச் சொல்லிவிட முடியுமா?” தைப்பதைப் போலிருந்தாலும் இது போன்ற கேள்விகளை எதிர்கொண்டுதான் இதைப் பற்றி பேசமுடியும் என்று நிதானித்துக்கொண்டேன். அவளிடமிருந்து அக்கேள்விகள் எனக்கு அவசியப்பட்டன என்றுதான் சொல்லவேண்டும்.

“அது அப்படித்தான்.. அனுபவத்தில் ஓரளவு சொல்லிவிட முடியும்.. அதோடு அடுத்ததாக என்ன செய்யவேண்டும் என்றும் சொல்லியிருக்கிறேன்.. ஸ்கேனும் எடுக்கப்பட்டுவிட்டால் முற்றிலுமாகத் தெளிந்துவிடும்..”

“ஒருவேளை ஸ்கேனில் ஏதேனும் சிக்கலிருந்தால் என்ன செய்வீர்கள்?”

“அதுபோன்ற அவசர நிலைகளுக்கு என்னுடைய நண்பர் ஒருவரைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டுத்தான் பயணத்திற்கு ஆயத்தமாகியிருந்தேன்.. அதே ஊரில் இருக்கும் என்னுடைய துறை சார்ந்த மருத்துவர்தான் அவர்..”

கொஞ்சம் சமாதானப்பட்டதைப் போலத் தெரிந்தாள். இருந்தும் அடுத்த கேள்வி எதையோ யோசிப்பதைப் போல தெரிந்தது.

“அந்த மனிதர் அதோடு நிறுத்தவில்லை.. ‘எங்கிருந்தாலும் பரவாயில்லை, உடனே நீங்கள் திரும்பி வாருங்கள்’ என்றார்”

“ஓ..”

“அவரிடம் அவசரநிலைக்கு இன்னொரு மருத்துவரை ஏற்பாடு செய்திருப்பதைச் சொன்னேன். அவர் அதை ஏற்கும் நிலையில்கூட இல்லை. ‘நான் உங்களுக்காகத்தான், உங்கள் மீது இருக்கும் நம்பிக்கையில்தான் இந்த மருத்துவமனைக்கு அழைத்து வந்திருக்கிறேன்.. கிட்டத்தட்ட பத்து வருடங்களாக நீங்கள் பார்த்து வரும் குழந்தையை இந்தவொரு இக்கட்டான சூழ்நிலையில் எப்படி நான் இன்னொரு மருத்துவரிடம் காட்டுவது? தயவுசெய்து பயணத்தை ரத்து செய்யுங்கள்’ என விடாப்படியாக நின்றார்.”

“இது கொஞ்சம் தர்மசங்கடமான நிலைதான்..”

“ஒரு கட்டத்தில் அந்தப் பேச்சு இறைஞ்சலாக இல்லாமல் கண்டிப்பாக மாற ஆரம்பித்தது.. ‘நீங்கள் அடுத்த ஸ்டேஷனில் இறங்கிக்கொள்ளுங்கள்.. நான் காரில் வந்து உங்களை அழைத்துக்கொள்கிறேன்’ என நிர்பந்தித்தார். நான் மீண்டும் மீண்டும் ஒரே பதிலைச் சொல்லிக்கொண்டிருப்பதைப் பார்த்த நண்பர்கள் அமைதியிழக்க ஆரம்பித்தார்கள். ஒரு கட்டத்தில் ஒருவன் என் அலைபேசியைப் பறித்து அணைக்க முயன்றான்..” இவளிடம் இவற்றையெல்லாம் சொல்லிக்கொண்டிருக்கும்போது அன்றைய குரல்கள் அப்படியே உள்ளுக்குள் ஒலிக்க ஆரம்பித்தன.

“ஏன்டா நீயும் சொல்லிட்டே இருக்க.. யாரு அவன்.. புடிச்சா இருந்து பாக்க சொல்லு.. இல்லேன்னா வேற ஹாஸ்பிட்டல் கெளம்ப சொல்லு..

“இவனுக எல்லாருக்கும் ஒரு இது.. டாக்டர்ங்கறவனுக்குன்னு எதுவும் இருக்கக்கூடாது.. சோறு திங்கக்கூடாது, சினிமா பாக்கக்கூடாது, சிரிக்கக்கூட கூடாது.. எந்நேரமும் எழவ கட்டிக்கிட்டே இருக்கனும்..

“இப்ப என்னவாம் அவனுக்கு.. ஆல்ட்டர்னேட் அரேஞ்ச் பண்ணிருக்கேன்னு சொல்லிட்டு கட் பண்ணி விட்டுத்தொலைக்காம.. சும்மா வழவழன்னு எதுக்கு ஒக்காந்து நீயும் பதில் சொல்லிட்டிருக்க..

“பிறகு என்ன ஆனது?”

“ஒன்றரை மணி நேரம் கழித்து ஸ்கேன் எடுக்கப்பட்டதாகத் தகவல் வந்தது.. அப்போது எங்கே வாட்ஸப்பெல்லாம்? வேறொரு மருத்துவர் பார்த்து இடப்பக்க குழாயையொட்டி மூளையில் சலக்கட்டி ஒன்று இருப்பதாகவும், அதைச் சுற்றி வீக்கம் அதிகம் இருப்பதாகவும் சொன்னார். அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே இரண்டாம் அழைப்பில் அச்சிறுமியின் அப்பா வர ஆரம்பித்தார்.”

“அந்தக் கட்டிக்கு என்ன செய்யவேண்டும்? அதனால்தான் வலிப்பு வந்ததா?”

தயங்கித்தான் என்னால் ஆமோதிக்க முடிந்தது. அவளும் அது குறித்து எதிர்க்கேள்வி எதுவும் கேட்கவில்லை.

“வந்தவர் எடுத்த எடுப்பில் குரலை உச்சத்தில் நிறுத்தி கத்த ஆரம்பித்தார்.. அவரிடமும் அங்கு அந்தக் கட்டி குறித்துச் சொல்லப்பட்டிருக்கிறது. நான் ஏற்பாடு செய்திருந்த மருத்துவர் அவரிடம் அறுவை சிகிச்சைக்கான தேவையைச் சொல்லி ஏற்பாடுகளைத் தொடங்கியிருக்கிறார்..”

அந்த வார்த்தைகள் அப்படியே நினைவிருக்கின்றன – ‘நீங்க எங்க போறீங்கன்னு வரைக்கும் தெரியும் சார்.. கூத்தடிக்கத்தான போறீங்க.. இப்ப அந்த டூர கேன்சல் பண்ணிட்டு வர்றதுல என்ன ஒங்களுக்கு மொடையா போவபோது.. எப்ப வேணாலும் போவலாம்ல அதுக்கு.. வந்து இங்க போற உயிர புடிச்சு நிறுத்துங்க..’ இந்தப் புள்ளி வரை எனக்கே ஒரு சின்ன ஊசலாட்டம் இருந்ததுதான். இத்தனைக்கும் நான் இல்லையெனினும் அங்கு சிகிச்சையில் எந்தக் குறையும் இருக்கப்போவதில்லை என்று எனக்குத் தெரியும்; ஏற்பாட்டில் இருக்கும் மருத்துவ நண்பரும் தேர்ந்த அனுபவஸ்தர்; நிச்சயம் என்னால் கொடுக்கப்படக்கூடிய அதே சிகிச்சை எந்தக் குறையுமின்றி அவரால் வழங்கப்பட்டுவிடும்; இருந்தும் இத்தனை ஆண்டுகளாக நான் சிகிச்சையளித்து வந்த சிறுமி என்பதால், பயணத்திலிருந்து விலகி திரும்பிவிடலாமா என யோசித்தேன். அப்போதுதான் அந்தக் கேள்வி வந்து விழுந்தது – “ஒம் பொண்ணுக்கு இப்டி இருந்தா கெளம்பி போவியாய்யா..”

“அந்த மனிதன் என்னை ஒருமையில் அழைத்ததெல்லாம் என்னைக் காயப்படுத்தவில்லை. இப்படி உன் அம்மாவாக இருந்தால், உன் குழந்தையாக இருந்தால்.. என உணர்வுரீதியாக எவரும் என் பணிக்குள் என்னை நிர்பந்திப்பதை ஏனோ என்னால் ஏற்றுக்கொள்ளவே முடிவதில்லை. சாகப்போகும் விளிம்பிலிருக்கும் ஒவ்வொருவரையும் என் உறவாக நினைத்து வைத்தியம் பார்க்கச் சொல்லுவது மருத்துவன் என்பதைத் தாண்டி என் தனிமனித எல்லைக்குள் அத்துமீறுவதைப் போலத்தான் எனக்கிருக்கும். உங்கள் மகளுக்குத் தேவையான சிகிச்சை அங்கு கிடைக்கும் என்று சொல்லி அழைப்பைத் துண்டித்து அலைபேசியை அணைத்துவிட்டேன்”

அவள் சற்று விக்கித்ததைப் போலிருந்தது. அடுத்த வாக்கியத்தை மிகக் கவனமாகத் தொடுப்பதைப் போல நிறுத்தி துண்டுதுண்டாகப் பேசினாள்..

“ஆனால்.. யாராக இருந்தாலும்.. அவ்விடத்தில் சொல்லக்கூடிய.. அப்படித்தானே சொல்வார்கள்..?”

“இருக்கலாம்.. உங்களுக்கும் அதுதான் கேள்வி என்றால்.. அதற்கு நான் பதிலளிக்க வேண்டுமென்றால்.. ஆம்.. ஒரு தகப்பனாக உடனிருப்பேன்.. ஆனால் நிச்சயம் நானே சிகிச்சையளிக்க மாட்டேன்.. இன்னொரு மருத்துவரின் உதவியைத்தான் நாடியிருப்பேன்..”

பதிலில் திருப்தியின்றி அரைமனதாக ஏற்பதைப் போல கண்களை மூடி தலையசைத்தாள்.. வாதத்திற்காக நான் சமாளிப்பதாக அவளுக்குத் தோன்றியிருக்க வேண்டும்.

உணவுக் குப்பைகளைப் பெற்றுக்கொள்ளவந்த சிப்பந்திப்பெண் கடக்கும்வரை இருவரும் அமைதியாக இருந்தோம். அவளுக்கு மேற்கொண்டு அதை எப்படி நீட்டிப்பதென்று தெரியாமல் இருந்திருக்கலாம். 

“நண்பனின் அலைபேசியிலிருந்து மருத்துவமனைக்கு அழைத்து நிலவரத்தை விசாரித்தேன்.” 

காத்திருந்ததைப் போல ஆர்வமாக கேட்க ஆரம்பித்தாள்

“பெரிய அமளியே நடந்திருக்கிறது. அந்த மனிதர் என் மீதிருந்த அதிருப்தியில் அங்கிருந்த மருத்துவரை அவமானப்படுத்தும் விதத்தில் கூச்சல் போட்டிருக்கிறார். விருப்பமில்லையெனில் வேறு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல சொல்லப்பட்டிருக்கிறது.” அவளைப் பார்த்து என் இயலாமையைச் சுட்டும்விதமாகப் புருவத்தை உயர்த்தினேன்.. “நான் அங்கு வந்தே ஆகவேண்டும் என்று கலாட்டா செய்ய ஆரம்பித்திருக்கிறார்..”

“ம்ம்..”

“அப்படி என்னிடம் தெரிவிக்கப்பட்ட போது..” அழுத்தமான பெருமூச்சிற்குப் பிறகு சொன்னேன்..  “நிச்சயம் போகக்கூடாது என்று முடிவு செய்துவிட்டேன்.”

“இது ஒரு மாதிரியான வரட்டு பிடிவாதம்தான் இல்லையா?” தயக்கமில்லாமல் இதைக் கேட்டாள்.

“அந்த மனிதன் செய்ததா? என்னுடைய முடிவா?”

“இரண்டுமேதான்..” சற்று நிறுத்தி தொடர்ந்தாள்.. “அந்த மனிதரிடம் இருந்ததுகூட பரிதவிப்பினாலோ கையறுநிலையினாலோ உண்டான பிடிவாதம்.. ஆனால் உங்களிடமிருந்ததுதான் வம்படியான ஒன்றாகத் தெரிகிறது..”

அவளிடம் எதிர்த்து வாதிட எனக்கு நாவெழவில்லை.

“எனக்கென்னவோ நீங்கள் அத்தனை வீம்பாக இருந்திருக்கவேண்டாம் என்று தோன்றுகிறது..” மீண்டும் இதை அழுத்திச் சொன்னாள்.

“உங்கள் கூற்றின்படி நோய்க்குத் தேவையானதைவிட.. நோயாளியின் உறவினனின் உணர்ச்சிவசங்களுக்குத் தகுந்த சிகிச்சையைத்தான் ஒரு மருத்துவன் வழங்கவேண்டும்.. அப்படியா?” 

என் முகத்தில் ஏதோ காத்திரம் தெரிந்திருக்கவேண்டும். அவள் சங்கடப்படுவது தெரிய, “இல்லை.. தோன்றுவதைச் சொல்லுங்கள்” எனப் புன்னகைக்க முயன்றேன்.

“மேற்கொண்டு என்ன ஆனது?”

அவளிடம் அதற்குப் பதிலில்லை என்பது ஆறுதலாக இருந்தது. ஒருவேளை என்னைக் காயப்படுத்தவேண்டாம் எனத் தோன்றியதைச் சொல்லாமலிருக்கிறாளோ?

“ஒரு வழியாக நள்ளிரவில் வேறொரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுவிட்டார்கள்.. அதுவும் பக்கத்திலிருக்கும் பெரிய நகரத்திற்கு.”

அவளிடம் பதிலில்லை.

“இதைத்தான் வரட்டுப்பிடிவாதமாக நான் பார்க்கிறேன்..”

“அங்குதான் அவள் இறந்துவிட்டாளா?”

“அப்படித்தான் பின்னர் கேள்விப்பட்டேன்.. என் மருத்துவமனை ஊழியர் ஒருவர் சொன்னார்.”

“அதன் பின்னர் அந்தச் சிறுமியின் அப்பா உங்களிடம் எதுவும் பிரச்சினை செய்தாரா..?”

“அந்த மனிதரை அதன் பின்னர் என் இதுவரையிலான வாழ்வில் சந்திக்கவேயில்லை.. கடைசியாக ஒரே ஒரு குறுஞ்செய்தி மட்டும் நான் பயணத்திலிருந்து திரும்பி வந்த நாளில் எனக்கு வந்திருந்தது – ‘உன்னைப்போல் ஒரு இரக்கமற்ற மிருகத்தை என் வாழ்வில் சந்தித்ததேயில்லை; நீ நிச்சயம் நரகத்திற்குத்தான் போவாய்..’ அவ்வளவுதான்.”

மெலிதாகப் புன்னகைத்து கண்களைத் தாழ்த்தி திரும்பிக்கொண்டாள்.

“உங்களுக்கு எதுவும் குற்றவுணர்ச்சி இருக்கிறதா?” சில நிமிடங்களுக்குப் பிறகு திடுமென இப்படி கேட்டாள்.

இந்தக் கேள்விக்கு நான் தயாராக இருக்கவில்லை. சுதாரிக்க அவகாசம் கோருவதைப் போல் கோப்பையிலிருந்த நீரை விழுங்கினேன். 

“மன்னிக்கவும்..” 

“இல்லை.. குற்றவுணர்ச்சி என்றில்லை; ஏனெனில் இதில் குற்றமென்று எதையும் என்னால் அடிக்கோடிட முடியவில்லை.. ஆனால் ஏதோ ஓர் உறுத்தல் இருக்கிறது.. அது இந்தத் தர்க்க விளக்கங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டதென நினைக்கிறேன்..”

“நீங்கள் அங்கு இருந்திருந்தால்.. அவள் பிழைத்திருக்கக்கூடும் என நினைக்கிறீர்களா?”

“நிச்சயம் அப்படியெல்லாம் இல்லை.. நானொன்றும் கடவுள் இல்லையே.. என்னுடைய சிகிச்சையிலும் மரணங்கள் நிகழத்தான் செய்திருக்கின்றன..” யோசிக்காமல் இப்படிச் சொன்னேன். இத்தனை ஆண்டுகளில் எனக்குள் இதை நான் பல நூறு முறை சொல்லிக்கொண்டிருக்கிறேன்..  

“இப்போது உங்களிடம் இருக்கும் உறுத்தல், அந்த மனிதர் உங்களைப் பற்றி உருவாக்கிக்கொண்ட பிம்பத்தினாலா? வருடக்கணக்கில் அச்சிறுமிக்கு அத்தனை சிகிச்சைகள் செய்தும் கடைசியில் இப்படியொரு பெயரையா அவரிடம் வாங்கவேண்டும் என்ற ஆற்றாமைதானே..”

வேறு என்னவாக இருக்கும் என்று யோசித்துப்பார்த்தேன்.. எதுவும் பிடிபடவில்லை..

“அப்படித்தான் இருக்கவேண்டும்.. அதோடு சேர்த்து அந்தக் குட்டிப்பெண்ணின் மரணம் ஒரு தோல்வியுணர்ச்சியைக் கொடுத்திருக்கிறது.. அதுதான் அவளுடைய சாயலுடைய உங்களைப் பார்த்ததும் இதையெல்லாம் சொல்லவேண்டும் போல இருந்திருக்கிறது..”

சட்டென மெளனமாகிவிட்டாள். எனக்குமே திடீரென மெலிண்டா உண்மையாகவே இறந்துவிட்டாளா இல்லை அது ஏதும் அரைவேக்காட்டுத் தகவலா என இத்தனை வருடங்களுக்குப் பிறகு திடீர் ஐயம் முளைத்தது. அபத்தம். அமைதியில் உறைந்திருந்த அவள் முகத்தை மீண்டும் ஏறிட்டேன். விமானம் தரையிறங்குவதற்கான அறிவிப்பு ஒலிக்க ஆரம்பித்தது. 

இடுப்புப்பட்டியைச் சரிசெய்துகொண்டே சொன்னாள், “சரி நான்தான் மெலிண்டா என்று வைத்துக்கொள்ளுங்கள்.” என் கண்களை நேருக்கு நேராகப் பார்த்து, “இதற்கு மேலேயும் இதைத் தூக்கிச் சுமக்கவேண்டாம்..” என்றாள். எனக்கு ஒரு மாதிரி வியர்த்துக்கொண்டு வந்தது. “நான் உங்களை மன்னித்துவிட்டேன் என்று வைத்துக்கொள்ளுங்கள்” என்று அகலமாகப் புன்னகைத்து தோள்களைக் குலுக்கினாள். எப்படி சட்டென அப்படிச் சொன்னாளெனத் தெரியவில்லை; அவளது பேச்சிலிருந்து இப்படியொன்றை நான் எதிர்நோக்கியிருக்கவில்லை. இன்னும் உற்று அவள் முகத்தைப் பார்த்தேன். அப்படியே ஒரு குழந்தையைப் போலிருந்தாள். ஆனால் எந்த விதத்திலும் இப்போது அதில் மெலிண்டாவின் சாயலே தெரியவில்லை.

விமானம் தரையிறங்கியது. அந்த மன்னிப்பு மீண்டும் மீண்டும் என் காதுக்குள் ஒலித்துக்கொண்டேயிருந்தது. சக்கரங்களின் கிரீச்சிடும் சத்தம் மண்டைக்குள் ஓடி அடங்கியது. எல்லோரும் எழுந்துகொள்ள ஆரம்பித்தார்கள். 

மேலடுக்கில் இருந்த பையை இறக்க கையை உயர்த்திக்கொண்டு அவள் நிற்பது பார்வையின் வலது விளிம்பில் தெரிந்தது. அவளது அடிவயிற்றின் வெந்நிறம் பளிச்சிட்டது. விழியை அந்தப் பக்கமாக உருட்டலாம்; ஐந்தாறு அறுவைகளுக்கான சின்னச் சின்னத் தழும்புகள் ஒருவேளை அந்தத் தொப்புளுக்கு மேலே இருக்கலாம். உடலே ஒரு கணம் மரத்துப்போனதைப் போலிருந்தது. வலுக்கட்டாயமாக ஜன்னலுக்கு வெளியே பார்வையைத் திருப்பிக்கொண்டேன்.

ஒலிப்பெருக்கியில், அந்நாள் இனிமையாக அமைய கரகரப்பான வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. எதிரழுத்தத்தால் அடைத்திருந்த காதை விரலைக் கொண்டு கொஞ்சம் விடுவித்தபோது, அந்த மன்னிப்பு சன்னமாக மீண்டுமொரு முறை ஒலித்து அடங்கியது.

8 comments

R. Balajawahar November 26, 2021 - 6:49 pm

//சாகப்போகும் விளிம்பிலிருக்கும் ஒவ்வொருவரையும் என் உறவாக நினைத்து வைத்தியம் பார்க்கச் சொல்லுவது மருத்துவன் என்பதைத் தாண்டி என் தனிமனித எல்லைக்குள் அத்துமீறுவதைப் போலத்தான் எனக்கிருக்கும். //
செம???

M.Ramasubramanian November 26, 2021 - 11:50 pm

அருமை

Pon Ratnabalan November 30, 2021 - 2:46 pm

வைத்தியசாலைக்கு வரும் நோயாளிகளில் சிலர் வைத்தியரின் மனதில் ஆழமாகப் பதிந்து விடுவது என்னவோ உண்மைதான். வேலை முடித்து சென்றாலும் வீட்டுலும் அதைப்பற்றிய நினைத்துக் கொண்டிருப்பார்கள். அப்படிப்பட்ட ஒரு வைத்தியரை மையமாக வைத்து யதார்த்தமாக கதையை நகர்த்துவது பிடித்து. வேறு மருத்துவர் அதே நோயாளியை பார்ப்பது உறவினர்களுக்குப் பிடிப்பதில்லை என்பதும் இன்று வைத்தியசாலைகளில் காண முடிகிறது. இறுதியாக, மெலிண்டாவை நினைத்து வைத்தியரின் மனதில் எழும் உணர்ச்சிப் போராட்டத்தை பிறரிடம் கூறுவதுபோன்று தத்ரூபமாக கதையை சமர்ப்பித்திருப்பது அருமை. எழுத்தாளருக்கு வாழ்த்துகள்

manguni December 1, 2021 - 12:24 am

அற்புதம். ஒவ்வொரு வரியும் அருமை. ரசித்து வாசித்தேன். கதைக்குள்ளே போய்விட்டேன். மயிலன் ஜி சின்னப்பன் பெயரையே இப்போதுதான் கேள்வி படுகிறேன். வாழ்த்துக்கள்

மனிதனின் மனபோராட்டத்தின் நடுவில் வாழ்வு சிக்குண்டு சீரழிகிறது. நிபந்தனை அற்ற மன்னிப்பு ஒரு ஆசுவாசம்.

Meena Hari December 2, 2021 - 7:51 pm

நாம் நிரபராதி என்ற வார்த்தையை அடிக்கடி கேள்விப் பட்டிருப்போம். அதாவது குற்றமற்றவர் என்று பொருள் படும். ஆனால் ‘நிரபராதம்’ என்ற இந்தத் தலைப்பே சற்று வித்தியாசமாக இருந்தது. இது எதைப்பற்றியது எனும் ஆவலைத் தூண்டி, , ஒரே மூச்சாக வாசித்து முடிக்க வைத்தது. நம்மில் பலரால் ஒரு நோயாளியாக மன உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடியும். மருத்துவராக புரிந்து கொள்ள முடியாது. சராசரி மனிதர்களின் வாழ்க்கையை விட அவர்களின் வாழ்க்கை போராட்டங்களும், சிக்கல்களும், சவால்களும் நிறைந்தது. சிறப்பான இக்கதையை எழுதிய மயிலன் அவர்களே சிறந்த மருத்துவருமாதலால் மிகவும் அழகாக அவ்வுணர்களை நம்முள் கடத்தி விடுகிறார். அவரின் மருத்துவத் தொண்டுகளினூடே, நல்லக் கதைகளையும் தொடர்ந்து நமக்குத் தந்து கொண்டிருப்பதற்கு அவருக்கு நன்றிகளும், வாழ்த்துக்களும் ?

ஜெ. பாஸ்கரன் December 10, 2021 - 2:02 pm

ஒரு மருத்துவனாக இந்தக் கதையின் சூழ்லைப் புரிந்து கொள்ள முடிகிறது. நேர்மையான, உண்மையான மருத்துவத்தில் குற்ற உணர்ச்டிகளுக்கிடமில்லை. குழந்தையின் தந்தை மனநிலையையும் குறை சொல்லிவிடமுடியாது. பாசம் மருத்துவ உண்மைகளை ஏற்றுக்கொள்ளாது. இதை உணர்ந்த அந்தப் பெண் கொடுக்கும் மன்னிப்பில், மனிதநேயமும், இயல்பான பார்வையும் தெரிகிறது. அருமையாக சொல்லப்பட்ட கதை… நடந்த உண்மையாகவும் இருக்கலாம். வாழ்த்துகள்!

Bhuvanesh waran December 13, 2021 - 12:51 pm

jambunathan December 25, 2021 - 7:08 pm

a beautiful story! is it a story or an experience! congats to the author!
jambunathan

Comments are closed.