நீர்மேல் ஆடிய வேட்டை நாடகம்: ஹெர்மன் மெல்வில்லின் “Moby Dick”

0 comment

ஹெர்மன் மெல்வில் (1819-1891), அவருடைய முப்பத்தியிரண்டாம் வயதில், அமெரிக்க இலக்கியத்தின் மூலப்படைப்புகளுள் ஒன்று எனச் சொல்லப்படும், மோபி-டிக் அல்லது திமிங்கலம் எனும் அவரது மூன்றாவது நாவலை அவர் பிறந்த நூற்றாண்டின் நடு ஆண்டில் எழுதிப் பதிப்பித்தார். இந்நாவலை இப்போது எல்லோருமே, அதன் கவித்துவம் ததும்பும் பக்கங்களில் ஒன்றைக்கூட வாசித்திராதவர்களும்கூட, ஒரு செவ்வியல் படைப்பு என்று ஏற்கிறார்கள். 

மோபி-டிக் எனும் திமிங்கலத்தால் தனது ஒரு காலை இழந்துவிட்ட திமிங்கல வேட்டைக்காரனான ஏஹாப், அதனைப் பழிவாங்கச் சென்று தனது உயிரையும் இழக்கிறான். இதுவே மோபி-டிக் எனும் கிட்டத்தட்ட அறுநூற்றி ஐம்பது பக்க நாவலின் கதை. ஒரு நாவலுக்கு கதை தேவையா? ஆம். ஒரு நாவல் கதை இல்லாமலும் இருக்கலாமா? இருக்கலாம். அதுவே நாவல் கலையின் இரட்டைத்தன்மை. எனினும், செவ்வியல் படைப்புகளை யாரும் கதைகளைத் தெரிந்துகொள்வதற்காக வாசிப்பதில்லை. செவ்வியல் படைப்புகளிடமிருந்து நாம் வெகுதூரம் விலகியிருந்தாலும், நமது நினைவின் புத்தகப் பைகளில் அவை பெருமிதத்தோடே சுமக்கப்பட்டு வருகின்றன. நூலகங்களில், வீடுகளில் அலங்கரித்து வைக்கப்பட்டிருக்கும் புத்தக அலமாரிகளில் மனித விரல்களின் மெலிதான அழுக்குச் சேராமல் பத்திரமாக இருக்கும் செவ்வியல் படைப்புகள் புத்தக அங்காடிகளில் அதிகம் விற்பனையாகின்றன.

#herman melville from A Work

யாராவது செவ்வியல் படைப்புகளை வாசிக்கிறேன் என்று சொன்னால், நாம் அவரைப் பார்த்து வயதாகிவிட்டதா எனக் கேட்போம். யாராவது செவ்வியல் படைப்புகளில் ஒன்றைக்கூட வாசிக்காதவராக இருந்தால், இதுகூட வாசித்ததில்லையா எனக் கேட்போம். ஒரு செவ்வியல் படைப்பின் வயது, அதனை வாசிப்பவரது வயதோடு தொடர்பற்றதாக இருந்தாலும், ஒவ்வொரு செவ்வியல் படைப்பை வாசித்து முடித்த பிறகும் அதனை வாசிப்பவரது வயது கூடியிருப்பதன் தர்க்கத்தை நம்மால் எளிதாக விவரிக்க முடிவதில்லை. இந்த முரண்பாடுகளில் சிக்குண்ட பல செவ்வியல் படைப்புகளில் மோபி-டிக்கும் ஒன்று. 

அமெரிக்கா, எல்லையற்ற (பொருளியல்) சுதந்திரத்தை இலட்சியமாகக் கொண்ட ஒரு தொழில்நுட்பக்  கனவு. அதன் காற்றில் பாஸ்டன் தேயிலைத் தூளின் மணமும், கட்டைத் துப்பாக்கிகளின் குழலில் புகைந்த கந்தகப் புகையும் இன்னுமே கலைந்திராத நாட்களில் மெல்வில், அவருடைய காலத்தில் தோல்வியடைந்த இந்நாவலை ஒரு பண்ணை வீட்டில் எழுதினார். அவரது நூற்றாண்டை ஒட்டி, மீள் வாசிப்பிற்க்கு உள்ளாகி, நாவலும், அதன் ஆசிரியரும் அடைந்த புகழ், இன்றுவரையிலும் நீடித்திருப்பதிற்கு, ஜோர்ஜ் லூயி போர்ஹேஸ் சொல்வதைப் போல அதன் முடிவின்மையே காரணமாக இருக்கலாம்.  

‘1851ஆம் ஆண்டின் குளிர்காலத்தில், அவருக்கு புகழ் சேர்த்த முடிவில்லா நாவலான மோபி-டிக்கை மெல்வில் பதிப்பித்தார்` – (நெட்டெழுத்தாளர் பார்ட்லெபை முன்னுரையில்)

Being infinite is one of the properties of anything that contains multitude and anything finite is flat. நாம் இந்நாவலை ஒரு புதிர்நெறிக்கூடம்  என அழைப்பது இன்னும் பொருத்தமாக இருக்கும். துரதிர்ஷடவசமாக இந்தப் புதிர்நெறிக்கூடத்தின் நுழைவாயில் கடலின் மீது அமைந்திருக்கிறது. அதன் நீர்ப்படிக்கட்டுகளில் கீழிறங்கிச் சென்றால் நாம், ஆழத்தில் புதைந்து ஒன்றோடொன்று கலந்திருக்கும், மனிதர்களின், பொருட்களின் எலும்புகளால் நிரம்பிய ஒழுங்கமைக்கப்படாத கடலடி நூலகத்தை அடைவோம். அதைக் கண்டு மீண்ட ஒரு குரல் நம்மிடம் மோபி-டிக் வேட்டைக் கதையைச் சொல்கிறது. அந்தக் குரலுக்குச் சொந்தக்காரன், இஸ்மயீல்.  

என்னை இஸ்மயீல் என்று அழையுங்கள்.

இவ்வாறு தன்னை அறிமுகம் செய்கிறது இந்நாவலின் குரல். விவிலிய இஸ்மயீலீன் தந்தை- ஆபிரகாம், தாய்- அவனுடைய வேலைக்காரியான ஹகார். ஆபிரகாமின் மனைவி சாராள் இருவரையும் பாலைவனத்திற்கு விரட்டுகிறாள். பாலைவனச் சுடுமணலில் அலையும் இஸ்மயீல், அரபிகளின் மூலத்தந்தையாகிறான்.  

`எப்போதேல்லாம் நான் கிளர்ச்சியற்றவனாக, தூறும் நவம்பரும், ஈரமும் என் ஆன்மாவில் நிரம்ப, சவப்பெட்டி கிடங்குகளின் முன் தயங்கி நிற்பதோடு, நான் சந்திக்கும் ஒவ்வொரு இறுதி ஊர்வலத்தின் பின்னேயும் என்னை இணைக்கிறேனோ, எப்போதெல்லாம் என்னுடைய சூம்படைவுக் கோளாறு என் மீது ஆதிக்கம் செலுத்துகிறதோ, வேண்டுமென்றே வீதியில் இறங்கி மக்களின் தொப்பிகளை முறைவைத்து தட்டிவிடுவதிலிருந்து என்னைத் தடுக்க ஓர் அறவுணர்வு தேவைப்படுகிறதோ, எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாகக் கடலுக்குச் செல்வதற்கான நேரம் அதுவே. அதுதான் பிஸ்டலுக்கும், பீரங்கிக் குண்டிற்குமான எனது பதிலி` – (பகுதி 1)

Call me Ishmael

சூம்படைவுக் கோளாறால் பாதிக்கப்பட்டிருப்பதாக நம்பும் இஸ்மயீல், நிலத்தை அஞ்சுகிறான். எல்லாப் பாதைகளும், முனைகளும் கடலில் முடியும் மன்ஹாட்டன் நகரத்தில் கையில் சொற்பப் பணத்தை மட்டுமே வைத்திருக்கும் அவன், திமிங்கல வேட்டைக் கப்பலில் ஏறி கடலுக்குச் செல்வதின் மூலம் தனது மண்ணீரலைக் குணப்படுத்தி தற்கொலையிலிருந்து தப்பிக்க முடியுமென்ற முடிவை எடுக்கிறான்.  

`மெய்யியல் செழுமையோடு காட்டோ அவனுடைய வாளின் மீது தன்னையே எறிந்துகொண்டான், நான் அமைதியாகக் கப்பலுக்குச் செல்கிறேன்`. – (பகுதி 1)

இஸ்மயீலுக்கு நிலமும் பாலை, நீரும் பாலை. அதன் பயங்கரங்களை அவன் நன்கு அறிந்திருந்தாலும், அவனை அழைக்கும் தூரத்தின் குரலுக்குச் செவிமடுக்காமல், காதுகளைப் பொத்திக்கொள்ள முடிவதில்லை. அவ்வப்போது அவனுடைய சட்டைப் பையில் நங்கூரமிடம் விரல்களுக்குத் தட்டுப்படும் மதிப்புக் குறைவான சில்லறைகளைக் கொண்டு நிலத்தைப் பழிப்புக் காட்ட முடியாமல், கடலின் கைவிடப்பட்டதன்மையோடு தனக்கு ஏற்கனவே இருக்கும் அறிமுகத்தின் நம்பிக்கையால், அமைதியாக மன்ஹாட்டனில் இருந்து விடைபெறுகிறான்.   

`பள்ளி ஆசிரியராக இருந்து, ஒரு மாலுமியாக மாற்றமடைவதற்கு, அந்த மாற்றத்தை பற்களைக் கடித்துக்கொண்டு தாங்குவதற்கு, செனகாவும், ஸ்டாயிக்குகளும் கலந்த ஒரு கசாயம் தேவைப்படும். காலப்போக்கில் அதுவும் செயல் இழந்து போகும்` – (பகுதி 1)

கீழைத்தேய பெயர் ஒன்றை மெல்வில் ஏன் அவனுக்கு வழங்குகிறார்? அவன் ஓர் அமெரிக்க வெள்ளைக் கிறித்தவன் என நமக்குத் தெரிய வந்தாலும், அவனை இஸ்மயீல் என்றே அழையுங்கள் எனக் கேட்கிறான். உயிர்வாழ்வின் அனாதைத்தன்மைக்கு, மண்ணிலே விழுந்து குன்றிப்போன மேன்மைகளின் புலம்பலைச் சொல்ல, நிர்வாண அவமானத்தை மட்டுமே சுமக்கும் குடியொதுக்கப்பட்ட ஒருவனைக் காட்டிலும் வேறு யாரும் பொருத்தமாக இருக்க மாட்டார்கள் என மெல்வில் கருதியிருக்கலாம்.

‘என் உள்ளார்ந்த ஆன்மாவில், இரண்டிரண்டாக மிதக்கும் திமிங்கலங்களின் முடிவேயில்லாத அணிவகுப்பின் நடுவே, ஒரு மாபெரும் கூன்விழுந்த ஆவியுரு, காற்றிலே மிதக்கும் பனிமலையைப் போல் இருக்கிறது`- (பகுதி 1)

பயங்கரத்தை எளிதில் அடையாளம் கண்டு, அதனோடு உடனே நெருக்கமாகிவிடும் இஸ்மயீல், திமிங்கல வேட்டைக் கப்பலுக்குச் செல்லும் முடிவை அவனது சுதந்திர விருப்புறுதியின் திடமான நிலத்தின் மீது நின்று எடுத்ததாக நம்பினாலும், அம்முடிவு ஊழின் மும்மலர்களால் (Fates) எடுக்கப்பட்டதாகவும் இருக்கலாம் என ஐயுறுகிறான். நாவலின் ஆயிரம் இழைகளில் ஒன்று, முதற்பகுதியிலேயே தன்னை நூற்கத் துவங்குகிறது. 

இஸ்மயீல் தனது கண்ணாடிப் பிம்பத்தின் ஆழத்தில் கடலையே காண்கிறான். கடல் அவனது அகப்பரப்பின் பிரதிபலிப்பு. பிம்பத்தின் உள்ளிருக்கும் மற்றொரு விரிவான பிம்பம்.

இஸ்மயீலை, நாம் யோப்பின் கடைசிப் பணியாள் என அழைப்போம். ஒருவர் பின் ஒருவராக யோப்பிடம் வந்து அவனது பேரிழப்புகளைச் சொல்லிச் செல்லும் பணியாட்களைப் போல, மொத்த மனித இனத்தையே யோப்பாகக் கற்பித்துக்கொண்டு, இழப்பின் நாடகம் ஒன்றைச் சொல்கிறான் இஸ்மயீல். அவனே நிலத்தில் ஆதரவற்று அலையும் வாழ்வையும், மேற்பரப்பில் தத்தளிப்பும், ஆழத்தில் இருளும் நிரம்பியிருக்கும் கடலின் பயங்கரங்களையும் ஒருசேர அறிந்தவனாகவும் இருக்கிறான்.  

`நான் ஒருவன் மாத்திரம் தப்பி, இதை உமக்கு அறிவுக்கும் படி வந்தேன்` – யோப்

ஏஹாப் எனும் இறவா மனிதன்:

இறவாத்தன்மையுடைய புனைவுப் பாத்திரங்களை மாளுந்தன்மையுடைய மனிதர்கள் படைத்தார்கள். புனைவின் உச்சிக் கோபுரத்திலே வானுக்கு அருகே நின்று மண்ணைப் பார்க்கும் பாத்திரங்களில் ஒன்றாக ஏஹாப், தனது தந்தக் காலை முடிவற்ற ஆழத்திலே ஊன்ற முயன்று தள்ளாடி நிற்கிறான். இறவாத்தன்மையுடைய புனைவுப் பாத்திரத்தின் அடிப்படைப் பண்புகளில் ஒன்று காலப் பொருத்தம். ஏஹாப் ஒவ்வொரு காலத்திலும் தன்னைப் புதுப்பிக்கக் கூடியவனாகவும், குறிப்பிட்ட காலகட்டத்தின் போக்குகளை உருவப்படுத்திக் காட்டுகிற ஒருவனாகவும் இருக்கிறான். கதையிலிருந்து வெளியே குதித்து, உலகின் நடுவே தனது கட்டைக் கால் ஒலியெழுப்ப நடக்கும் கதாபாத்திரம். சற்று முன் நமது தெருவில் அவனது நடை ஒலியைக் கேட்டிருப்போம். 

‘வழுக்கும் இந்த உலகில் ஊன்றி நிற்க முடிகிற ஒன்றை உணர விரும்புகிறேன்` – (பகுதி 108)

ஏஹாப் யார்? விவிலியத்தின்படி கொடுங்கோன்மை புரிந்த அரசர்களில் ஒருவன். எனினும் அவனது இரத்தத்தை நாய் நக்கும்படி விழுந்து பட்டவன். யேசபேல் எனும் பாகன் பெண்ணொருத்தியை மணந்ததால் துவங்குகிற அவனுடைய அழிவு, நபோத் எனும் அப்பாவி ஒருவனைக் கொன்றதில் முடிவை எட்டுகிறது. தீர்க்கதரிசி எலியாவின் வழியாகக் கர்த்தர் சொல்கிறார்:

`நாய்கள் நாபோத்தின் இரத்தத்தை நக்கின ஸ்தலத்திலே உன்னுடைய இரத்தத்தையும் நாய்கள் நக்கும்` – (இராஜக்கள் 21:19)

திமிங்கல வேட்டைக் கப்பலில் தன்னை இணைக்கச் செல்லும் இஸ்மயீல், பெலக்கிடம் இதனையே ஏஹாப்பைக் குறித்த கேலியாகச் சொல்கிறான். ஏஹாப் இஸ்ரேலிய அரசனைப் போலல்லாமல், கல்லூரியில் படித்தவன், உயர்வழக்கங்கள் உடையவன் எனினும், திமிங்கலம் அவன் காலைத் துண்டித்த பிறகு கொஞ்சம் சிடுசிடுப்பானவனாக ஆகிவிட்டான் என்கிறான் பெலக். ஏஹாப் தனது கால் ஒன்றை மோபி-டிக்கிடம் பறிகொடுப்பது, அவனுடைய ஐம்பத்தி எட்டு ஆண்டுகால வாழ்வின் சுழல்மையப் புள்ளியாக மாறிவிடுகிறது. ஏஹாப் அந்த விபத்தின் அபத்தத்திலிருந்து வெளியேற முடியாமல் இருப்பதோடு, மோபி-டிக் எனும் அந்த அல்பைனோ விந்துத் திமிங்கலத்தைக் கொன்று பழிதீர்ப்பதன் மூலமாகத் தன்னை அமைதிப்படுத்திவிட முடியுமென்று நம்புகிறான். 

அவனுக்கு இந்த உலகு தனது பிம்பமாகவே தெரிகிறது. இது ஒரு மூலாதார உணர்வு. அவன் இந்த உலகிலிருந்து தன்னைப் பிரித்துக்கொண்டவனாக அல்லாமல் (தனிமனிதன்) இந்த உலகின் ஒட்டுமொத்தமாகத் தன்னையே பார்க்கிறான். வெள்ளைத் திமிங்கலத்தைக் கண்டு சொல்பவர்களுக்குத் தங்க நாணயத்தைப் (டப்ளூன்) பரிசாக அளிப்பதாகச் சொல்லும் ஏஹாப், அந்த நாணயத்தில் தன்னையே பார்க்கிறான். ஏஹாப் பரிசளிப்பவனாகவும், பரிசாகவும், அந்தப் பரிசைத் தானே பெற்றுக்கொள்பவனாகவும் இருக்கிறான். அவனது பழிதீர்க்கும் எண்ணம் நான்டெக்கட் சந்தைக்குத் திமிங்கல எண்ணெயை நிரப்பிச் செல்லாது என அவனோடு வாதிடும் ஸ்டார்பக்கிடம் சொல்கிறான்:

`நான்டெக்கட் சந்தை! ஃப்பூ!…என்னுடைய பழிதீர்க்கும் எண்ணம் பெரும் பரிசலைக் கொணரும்`. – (பகுதி 36)

சாவையும், இழப்பையும் பரிசலாகக் கருத முடியுமா? ஏஹாப் தன்னை ஓர் அரசனாகக் கருதிக்கொள்கிறான். தன்னுடைய இரத்தத்தாலும், தனது இரகசிய நிழல்களைப் போன்ற பாகன்களின் இரத்தத்தாலும் நீராட்டுச் செய்யப்படும் அவனுடைய குத்தீட்டியைச் செங்கோலாகத் தாங்கி நிற்கிறான். ஏஹாப் பாகன்களோடு கலந்துவிட்ட அமெரிக்க வெள்ளைக்கார கிறித்தவன். எலியாவின் தீர்க்கதரிசனம் இரண்டாம் முறையும் பலித்துவிடுகிறது.  

தன்னையொரு அரசனாகவே கருதிக்கொள்ளும் ஏஹாப், தன்னைச் சுற்றியே தனது சதுரங்கச் சேனையும் சுற்றும் எனக் கருதுகிறான். உண்மையில் எதிர்ப்புணர்வுள்ள அவனுடைய சக மாலுமிகளும்கூட அவனுடைய இறுமாப்பின் அதிகாரத்திடம் சரணடைகிறார்கள். ஒருவகையில் அதுதான் ஏஹாப் அவர்களுக்கு வழங்க நினைத்த பரிசலின் மேலுறையாக இருக்கலாம். அவனோடு சேர்ந்து இறவாத் திமிங்கலமொன்றை வேட்டையாடச் சென்று தங்கள் உயிரை ஈந்தவர்கள், அவனைப் போலவே இந்த முற்றுப்பெறாத வேட்டைக் கதையில் நித்தியத்துவம் பெறுகிறார்கள். அதனைக் காட்டிலும் வெறும் திமிங்கல எண்ணெய் வேட்டைக்காரர்களின் இழிவான வாழ்க்கையின் புகைக்கருமையைத் துடைப்பதற்கு வேறொரு வழியுமில்லை. 

எனினும் ஏஹாப் சில சமயம் இஸ்மயீலைப் போலவே இந்த உலகின் இரட்டைத்தன்மையைக் குறித்து அச்சமும் ஐயமும் கொள்கிறான். கடலின் பேரமைதியில் மொட்டவிழும் தாமிர நிறத்தாலான பிரபஞ்ச மலரின் அழகை அவன் நாற்பதாண்டுகளாகக் கண்டிருக்கும் போதும் இருள் நிரம்பிய அவனது ஆன்மாவின் குளிர் நிறைந்த பகுதியில் விறைத்துக் கிடக்கிறான். தன்னையே நூற்றுக்கொள்ளும் நாவலின் ஓராயிரம் இழைகளில் ஓரிழையில் ஏஹாப் தன்னையும் இணைத்துக்கொள்கிறான். அது ஊழின் இழை. 

அழிந்த நலமும், இன்னல்களும், புயற்பொழுதுகளும்:

அசரீரி: இன்றியமையாமையை நடத்துவது யார்?

புரோமீதியஸ்: ஊழின் மும்மலர்களும், (எவற்றையும்) மறக்கவே மறக்காத பழிஆவித் தெய்வங்களும்.

அசரீரி: ஜீயஸ் இவற்றை விடவும் வலிமை குறைந்தவரா?

புரோமீதியஸ்: பகுத்துக் கொடுக்கப்பட்ட இவற்றை அவர் முற்றிலும் விலக்க முடியாது.

அசரீரி: இந்த ஊழ் என்பதுதான் என்ன?

புரோமீதியஸ்: இதற்கு மேல் கேட்டால், அது விளங்கா மெய்மைக்கு இட்டுச்செல்லும்.

சுதந்திரம் பெற்றுவிட்ட அறிவின் காலத்தில் மனித வாழ்வில் ஊழின் பங்கு என்ன? இன்றியமையாமை / தற்செயல், ஊழ் / விறுப்புறுதி எனும் இரு இரட்டைக் கோட்பாடுகளுக்கு இடையே, நமது வாழ்வு அல்லாடுவதைப் பார்க்கிறோம். உலகின் ஒவ்வொரு ஆற்றங்கரையிலும் தோன்றிய நாகரிகங்களிலும் இவற்றைச் சிந்தித்தவர்கள் இருக்கிறார்கள். மூளை சூடேற அவர்கள் சிந்தித்துக் கண்டவைகளின் மீது இன்றும்கூட ஐயம் தனது நங்கூரத்தைப் பாய்ச்சி நிற்கிறது. இருப்பு, மாற்றம், வினை, சிந்தனை இவற்றின் உள்ளோடுவதாக நாம் மேற்சொன்ன இரண்டு கோட்பாடுகளின் பங்கை விவாதிக்கிறோம். மெல்வில்லின் அமெரிக்காவிற்கு ஐரோப்பாவைப் போல பழைய கிரேக்க விவாதங்களோடும், விவிலியத்தோடும் தொடர்புகள் ஏதுமில்லை. ஒருவகையில், சிந்தனையின், பார்வைகளின் மூலகங்களிடமிருந்து தொலைதூரமிருந்ததால், அமெரிக்கா தக்கையைப் போல இலகுவாக மிதக்கிறது. ஐரோப்பாவைப் பொறுத்தவரையில் எவையெல்லாம் புதிதாகப் பிறக்கின்றனவோ, அவை தொல்பழமையின் புதைப்படிமங்களிலும் பிரிதிபலிப்பவையாக இருக்க, அமெரிக்கா, தான் யாரென்பதை எதிர்காலத்தில் தேடிக்கொண்டிருந்தது.  

சிந்தனையின் ஆற்றலைக் கொண்டு உயிர்வாழ்தலின் அனைத்துக் கூறுகளின் தலைகளின் மீதும் காலை வைத்துவிட முடியுமென்று அதீதமாக நம்பும் மனிதனுக்கு, அவனது வாழ்வு, தனது ஆளுகைக்கு உட்பட்ட ஆற்றல்களினால் அல்லாமல் பெளதீகப் பிரபஞ்சத்தில் நிலைபெற்றுள்ள ஆற்றல்களின் இடையீடுகளினால் உந்தப்படுவதாக- மாற்றத்திற்கு உள்ளாவதாகக்- கருதுவதையும் அச்சிந்தனையைக் கைவிட முடியாதிருப்பதன் முரணையும் எளிதாக நீக்கிவிட முடியாது. வாழ்வை, தனது விறுப்புறுதியின் விளையாட்டுத் திடலாகக் கருதும் மனிதன், எப்போதேனும் நிகழும் ஊழின் வரவை, விளையாட்டின் முடிவை மாற்றும் மழையாக எதிர்கொள்கிறான் (ஊழின் டக்வொர்த் லூயிஸ் விதிகள் பெரும்பாலும் மனிதனுக்கு எதிராகவே அமைகின்றன). ஊழ், எதிர்மறையாகவே வாழ்வில் குறுக்கிடுகிறது. ஒரு விபத்து, நட்டம், உறவுப் பிரிவு என ஒரு மனிதனால் மீள முடியாத, சட்டென அவன் வாழ்வின் அச்சாணியாக மாறிவிடுகிற நிகழ்வை நாம் ஊழின் இடையீடு எனக் கருதுகிறோம். 

சுதந்திரமும், ஜனநாயகமும் மேலெழுந்து வந்த அதே வேளையில், எந்தச் சமூகமும் தன்னைக் கடவுளால் சபிக்கப்பட்டதாக உணர்ந்து முன்பொருமுறை எகிப்திய பாலைவனத்திலிருந்து சென்றதைப் போல புதிய மோசஸ்களின் பின்னே செல்லவில்லை (நம்மை வழிநடத்தியவர்கள் மோசஸா அல்லது ஏஹாப்பா என்பது ஓர் அரசியல் விவாதம்). ஆனால் விநோதம் என்னவென்றால், பேரலகான சமூகம் சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் பெற்றுவிட்டதாகக் கருதும் அதே வேளையில், அந்தச் சமூகத்தின் நுண் அலகான தனிமனிதன் அவனுடைய வாழ்வு ஊழின், விறுப்புறுதியின் துடுப்புகளால் செலுத்தப்படுவதாக நம்புகிறான். மெய்யியலாளர்கள் தற்செயலுக்குப் பதிலாகச் சுதந்திரத்தை இன்றியமையாமையின் எதிரிணையாக வைத்துப் பார்க்க வலியுறுத்தத் துவங்கினர் (இன்றியமையாமை / சுதந்திரம்). சுதந்திரம், விறுப்புறுதியைப் பதிலீடு செய்கிறது. புற நிர்பந்தங்களும், அகச் சுதந்திரமும் மோதிக்கொள்ளத் துவங்குகின்றன. அகப்பரப்பில் ஒரு மனிதன் தனக்கு இருப்பதாக நம்பும் சுதந்திரமோ புற நிர்பந்தங்களிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு, தனது விடுதலையை எட்டிவிட விரும்புகிறது. தற்செயலுக்கு நோக்கம் என்பதே இல்லை. அது எதனை நோக்கியும் எதனையும் நகர்த்துவதும் இல்லை. ஆனால் இன்றியமையாமைக்கு ஒரு நோக்கம் இருக்கிறது. வாழ்வைத் தற்செயல்களின் தொடர்ச்சியாக நாம் காண முடிந்தாலும், இரு தற்செயல்கள் ஒருங்கிணைக்கப்பட்டவையே அன்றி, மெய்யியலாளர் ஹுயும் சொல்வதின்படி, தொடர்புடையவை அல்ல (contingencies are conjoined, but not connected).  இது ஒரு சார்பு. 

தன் மீது ஆதிக்கம் செலுத்தும் அனைத்து ஆற்றல்களின் மொத்த உருவாக ஊழைப் பார்க்கும் மனிதன், இரு வகைகளில் அதனோடு உறவாடுகிறான். ஒன்று அதனோடு சரணடைந்து, மற்றொன்று அதனை எதிர்த்து. இஸ்மயீல் தனது ஊழின் பயணத்தை அறிவதற்காக கடலுக்குச் செல்கிறான். ஆனால் ஏஹாப் தனது ஊழோடு சமரிடுவதற்காகச் செல்கிறான். 

`கண்ணால் காண முடிகிற அனைத்தும், அட்டையாலான முகமூடிகள். ஆனால் ஒவ்வொரு நிகழ்விலும் – நிகழ்வதிலும், சந்தேகத்திற்கு இடமேயில்லாமல் அங்கே நிகழ்பவற்றிலும், அறிய முடியாத, அதே சமயம் புரிந்துகொள்ள முடிகிற ஏதோவொன்று, தனது தோற்றங்களின் வார்ப்படங்களை, மெய்யுணர்வுகளின் வரம்புக்கு மீறிய முகமூடிகளின் பின்னிருந்தே முன்வைக்கிறது. மனிதன் தாக்குதல் நடத்தினால், அந்த முகமூடியின் வழியாகவே நடத்துகிறான். சுவரின் வழியாகத் தன்னை உந்தித் தள்ளாமல் எவ்வாறு ஒரு கைதியால் வெளியுலகை அடைய முடியும்? என்னைப் பொறுத்தவரையில் என்னருகே நெருக்கப்பட்ட வெள்ளைத் திமிங்கலமே அந்தச் சுவர்… முழுதும் மர்மமான அதையே நான் வெறுக்கிறேன்; வெள்ளைத் திமிங்கிலம் ஏஜெண்டாக இருந்தாலும் சரி அல்லது மூலக்காரணமாக இருந்தாலும் சரி, எனது சீரழிவை அதன் மீது இறக்குவேன்… சூரியனே என்னை அவமானப்படுத்தினாலும் அதனைத் தாக்குவேன். சூரியனால் அதனைச் செய்ய முடியுமென்றால், என்னாலும் அதனைச் செய்ய முடியும். என்றைக்கு இது ஒரு போட்டியாக மாறியதோ, அன்றிலிருந்து பொறாமையே அனைத்து உயிரினங்களையும் ஆட்சி செய்கிறது`. (பகுதி 36).  

நாவலின் உள்ளோட்டமான மெய்யியல் சொற்றொடர்களில் இதுவும் ஒன்று. ஏஹாப்பின் ஊழ், மோபி-டிக் அவனது காலைத் துண்டிப்பதிலிருந்து அதன் பயணத்தைத் துவங்குகிறது.  முக்கால் கிழவனான ஏஹாப் அதுவரையிலும் ஊழின் இடையீடு இல்லாதவனாகத் தன் வாழ்வைக் காண்கிறான். கல்லூரியில் படித்தவன் அவன், திமிங்கல வேட்டைக் கப்பலின் வெற்றிகரமான மீகானாக இருந்திருக்கிறான். நாவலின் அற்புதமான பகுதிகளில் ஒன்றான `சிம்பொனி` எனும் பகுதியில், தான் வெறித்துப் பார்க்கவே, நீரில் மூழ்கும் அவனுடைய நிழலைக் கவனிக்கும் ஏஹாப், ஸ்டார்பக்கிடம் சொல்கிறான்:

`ஸ்டார்பக்! மெல்லிய, மெல்லிய தென்றலும், மென்மையாகத் தென்படும் வானுமாக இருக்கிறது. இதைப் போன்ற ஒரு நாளில்தான் பதினெட்டு வயதே ஆகியிருந்த, குத்தீட்டி எறிபவனாக என்னுடைய முதல் திமிங்கிலத்தைத் தாக்கினேன்… நாற்பது ஆண்டுகளாக அழிந்த நலமும், இன்னல்களும், புயற்பொழுதுகளும்! கருணையற்ற கடலில் நாற்பது ஆண்டுகள்! ஆழத்தின் பயங்கரங்களின் மீதான நாற்பது ஆண்டுகாலப் போருக்காக, அமைதியான நிலத்தை ஏஹாப் கைவிட்டு நாற்பது ஆண்டுகளாயிற்று!… நான் வழிநடத்திய இந்த வாழ்வைப் பற்றி யோசித்தால், தனிமையின் பாழ் நிரம்பியதாக இருக்கிறது, பசுந்தேசத்தின் பரிவுக்குச் சிறிய நுழைவாயிலையே அனுமதிக்கும், நன்கு பூசப்பட்ட சுவர்களைக் கொண்ட நகரமான மீகான்களின் விலக்கம்… ஆணையிடும் தனிகட்டையின் கினியா கடற்கரை அடிமைத்தனம்… இதுவே என ஆன்மாவின் உலர்ந்த ஊட்டத்தின் முத்திரைச் சின்னமாக இருக்கிறது.` 

`ஆதாமே நான்தான் என்பதைப் போல சாவை ஒத்த களைப்போடு, தலைகுனிந்தும், கூனனாகவும் இருக்கிறேன்.… ஸ்டார்பக், என்னை ஒரு மனிதனின் கண்களைக் காண விடு, அது கடலை அல்லது வானைக் கூர்ந்து நோக்குவதைக் காட்டிலும் சிறந்தது, கடவுளைக் கூர்ந்து நோக்குவதைக் காட்டிலும் சிறந்தது.` – (பகுதி 132) 

மனிதனின் கண்கள் என்ன இருக்கிறது? பிரக்ஞையின் வரலாறு அதில் ஒளிந்திருக்கிறது. மூலகங்களின் (origins) மீது அவ்வப்போது நிலைகுத்தி நின்றுவிடும் பார்வையும். ஏஹாப் ஒரு மனிதனின் கண்களின் வழியாக மூலங்களைக் காண விழைகிறான். எடெர்னிட்டிக்கான நமது வேட்கை ஒருவகையில் மூலகங்களை அடைந்துவிடும் விருப்பமே. மூலகங்களில் வேற்றுமையும், தனியொருமையும் இல்லை (Difference and Individuality). இந்த வாழ்வின் சுமையை உணரும் ஆதாமாக அவன் தன்னைக் காண்கிறான். மொத்த மானுடச் சுமையும் ஆதாமின் முதுகிலே வேதாளமாகத் தொங்குகிறது. ஆதாமே உலகின் வலிமைமிக்க பொதிக்கழுதை. ஏஹாப், ஆதாமியத் துயரத்திலிருந்து விடுபட நினைக்கிறான். ஆனால், கிறித்தவ மன்னிப்பின் வழியாக அன்றி பாகனிய பழிதீர்க்கும் எண்ணத்தின் வழியாகவே அவனுடைய விடுதலையை அடைய முடியுமென்று நம்புகிறான். கிறித்தவ மென்மையோ, பாகனீய குரூரமோ உலகின் அடியாழத்தில் இயங்கும் ஆற்றலின் முன்னே பொருளற்றவை மட்டுமல்ல, சம மதிப்பையே பெறுகின்றன என்பதே இந்நாவலின் ஒரு வாதம்.

இலக்கியம் படைத்தளித்த பெரும் ஆளுமைகளின் நித்திய வடிங்களில் ஒன்றாகத் திகழும் ஏஹாப் இங்கே மட்டுமே, திருமணத் தலையணைகள் வியர்வையால் நைந்து சுருங்குவதற்கு முன்பாகவே தனது இளம் மனைவியை, குழந்தையைப் பிரிந்ததன் இழப்பைப் பேசுகிறான். ஏஹாப்பை நன்கு அறிந்தவர்களான நாம், அது அவன் மீதே கொள்ளும் இரக்கமன்றி அவனது குடும்பத்தினர் மீது கொள்ளும் இரக்கம் அல்லவென்று அறிவோம். ஆனால் ஏஹாப்பின் சொற்களை நம்பி அவனை நாம் அணுக முடியாது. தனது கழிவிரக்கத்தை அழுத்தமாகத் துடைத்துக்கொள்ளும், சற்று முன்பே தன்னைக் கூனன் என்று வரையறுத்த ஏஹாப், மோபி-டிக் வேட்டையின் முதலாம் நாள் சொல்கிறான்: 

`சகுனம், சகுனம்? – இந்த அகராதிகள்! கடவுள்கள் மனிதனோடு தீர்க்கமாகப் பேச நினைத்தால், மதிக்கத்தக்க வகையில் தீர்க்கமாகப் பேசுவார்கள்; அவர்களது தலைகளைக் குலுக்கவோ, கிழட்டு மனைவியின் இருட்டில் வழங்கப்படும் குறிப்பையோ அளிக்க மாட்டார்கள்… போகட்டும்! நீங்கள் இருவரும் எதிரெதிர் துருவங்கள்; ஸ்டார்பக், ஸ்டப்பின் மறுதலை, ஸ்டப்பும் ஸ்டார்பக்கும் ஒன்றே, நீங்கள் இருவருமே மொத்த மானுடம்; ஏஹாப் புவியில் வாழும் இலட்சக்கணக்கான மக்களின் மத்தியில் கடவுள்களும், மனிதர்களும் அவனுடைய அண்டைவீட்டாராக இல்லாமல், தனித்து நிற்கிறான்`. –  (பகுதி 133)

தன்னோடு சேர்த்து மொத்தமாக முப்பது மனிதர்களை, வெல்ல முடியாத ஆபத்தை நோக்கிச் செலுத்தும் ஏஹாப், அனைவரது – முக்கியமாக ஸ்டார்பக்கின்- அறிவுரைகளின் ஒரு சொல்லையும் கவனத்தில் கொள்ளாது புறக்கணிப்பின் குப்பைத் தொட்டியில் எறியும் ஏஹாப், மோபி-டிக் வேட்டையின் இரண்டாம் நாள் சொல்கிறான்:

`ஏஹாப், ஏஹாப்பிற்காக மட்டுமே, இந்த மொத்த வினையும் மாற்ற முடியாத ஆணையாக இருக்கிறது. இந்தக் கடல் சுருள்வதற்கு நூறு கோடி வருடங்கள் முன்பே உன்னாலும் என்னாலும் ஒத்திகை பார்க்கப்பட்டதே இது…. முட்டாளே நான்தான் ஊழின் லெஃப்டினண்ட்.. இது ஏஹாப்பினுடைய உடலின் ஓர் அங்கம்; ஏஹாப்பின் ஆன்மாவோ நூறு கால்களால் நகரும் பூரான்`. – (பகுதி 134)

வேட்டையின் விறுவிறுப்பில், சாவிற்கும், தப்பிப்பிதற்கும், அடைவதற்கும், இழப்பதற்கும் இடையேயான அதிவேகப் பெண்டுல அசைவில், தன் கண் முன்னே எழுந்து எழுந்து மறையும் அந்த வெண்ணிற பயங்கரத்தைத் துரத்தும் அட்ரினல் பெருக்கத்தின் உச்சத்தில், மரணத்தின் ஆர்கஸமிக் தருணத்தை அடையும் அவசரத்தில், இங்கே தலைமீது பறக்கும் பறவைகளின் கீச்சொலிகளை உடையச் செய்யும் உரத்த குரலில் மோபி-டிக் வேட்டையின் மூன்றாம் நாள் ஏஹாப் சொல்கிறான்:

`தனிமை நிரம்பிய வாழ்வின் தனிமை நிரம்பிய மரணமே, என்னுடைய உச்சபட்ச மேன்மை என்னுடைய உச்சபட்ச துயரத்திலேதான் இருக்கிறதென உணர்கிறேன்.` –  (பகுதி 135)

மரக்கலன்களில் நிரம்பியிருக்கும் விந்துத் திமிங்கலத்தின் எண்ணெய், முதலீட்டாளர்களின் கனவுகள், பிளாட்டோவாக, ஸ்பினோசாவாகத் தொங்கும் முன்னாட்களில் வேட்டையாடப்பட்ட திமிங்கலங்களின் தலைகளோடும், வேட்டை ஆயுதங்களோடும், பல்வேறு இனக்குழுக்களின் மாதிரி உருக்களோடும், கப்பலேறியவர்களின் கரையில் பிணைந்திருக்கும் வாழ்வின் இறுதியோடும் மொத்தமாக மூழ்கும் கப்பலின் வசீகரமான மீகான், இவ்வாறாகத் தனது ஊழோடு இறுதிச்சமர் புரிந்து மரிக்கிறான்.  

இந்த வெண்ணிற வேட்டையின் பொருள் ஒருவாறாக நமக்கு விளங்குகிறது. 

பெளதீக ஆற்றல்களின் வெண்ணிற உருவும், மானுடக் கற்பனையின் அதிநம்பிக்கையும்

வாழ்வு நம்மைத் தாக்கிவிட்டதாகக் கருதும் வேளையில் நமது எதிர்த்தாக்குதலை எதன் மீது நிகழ்த்துவோம்? 

மோபி-டிக் எனும் வயதான அல்பைனோ விந்துத் திமிங்கலம் புவி வாழ் உயிரினங்களில் மிகப் பெரிய வகையைச் சேர்ந்தது. விவிலியம் அதனை லெவியாத்தான் எனப் பெயரிடுகிறது. மெல்வில், விஷ்ணுவின் மச்சாவதாரம் திமிங்கலத்தைப் பற்றிய ஆதிக்குறிப்பு என இந்நாவலில் எழுதுகிறார். கூடவே விஷ்ணுவை ஒரு திமிங்கல மனிதனென அழைக்க முடியாதா எனவும் கேட்கிறார் (பகுதி 82). மனிதன் புவி வாழ் உயிரினங்களில் தலையாயவனாகத் தன்னைக் கருதிக்கொள்கிறான். பகுத்தறிவும் எதிர்கால உணர்வும் அவனது இருப்பின் உடலோடு ஒட்டிப் பிறந்த கவசங்கள். மோபி-டிக்கை மெல்வில் பெளதீக ஆற்றல்களின் குறியீடாக இந்நாவலில் பயன்படுத்தியிருக்கிறாரா? இருக்கலாம். வெறுமனே எளிமையாகச் சொல்லப்பட்டிருக்க வேண்டிய ஒரு வேட்டைக் கதையை ஏன் இவ்வளவு மெய்யியல் விவாதங்களோடு அவர் எழுதியிருக்க வேண்டும்? இந்நாவலை ஒரு புதிர்ப்பாதை என நாம் சொல்வதற்கு இருக்கும் பல காரணங்களில் இதுவும் ஒன்று.  

– இந்நாவல் அமெரிக்கச் சுதந்திர உணர்வு எல்லையற்று நீண்டு விடக்கூடிய விருப்பத்தின் விளைவு. 

– அல்லது சுதந்திர அமெரிக்கா, உலகை ஒரு நாள் தனது ஆளுகைக்கு உட்படுத்த முனையும் எனும் தீர்க்கதரிசனம், அதனால் உண்டாகப் போகும் அழிவின் துயரக்காட்சிகள்.

– அல்லது மானுடச் சுதந்திரத்தின் பிரக்ஞைப்பூர்வ வளர்ச்சியின் எல்லை எதுவென்று ஆராய முற்பட்டதின் இலக்கிய வடிவம்.

– அல்லது பல்வேறு ஆற்றல்களின் ஓயாத மோதலின் முடிவில் ஊழ் தனது அழிப்பாட்டத்தை மறுபடியும் மறுபடியும் நிகழ்த்தும் என நீட்ஷேவிற்கு முந்தைய அவரது `eternal recurrence’ கருதுகோளின் உருத்திரளாத மூல வடிவம்.

– அல்லது பழைய ஏற்பாட்டின் ஒரு சில கதைகளை வேறொரு தளத்தில் நிகழ்த்திக் காட்டும் முனைப்பு.

– அல்லது ஹெரால்ட் புளூம் குறிப்பிடுவதைப் போல ஷேக்ஸ்பியரை வேறு சொற்களால் எழுதும் இரண்டாம் ஆசிரியராக ஆகும் விருப்பம்.

என நாம் பல முனைகளில் இருந்தும் ஒவ்வொரு பத்தியாக எடுத்து விவாதிக்கக் கூடிய வகையில் மெல்வில், கதையாடலை அதன் விதிமுறைகளின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்க முனைந்திருக்கிறார். இந்நாவலை அரசியல் பிரதியாகவும், சூழலியல் பிரதியாகவும் வாசிக்கும் சாத்தியமும் உண்டு. ஒரு செவ்வியல் படைப்பு அதன் இறுதியை எப்போதோ அடைந்துவிட்ட ஒன்றாக இல்லாமல் ஒவ்வொரு காலகட்டத்திலும் வளரக்கூடிய சாத்தியத்தைக் கொண்டது என்பதை மோபி-டிக்கும் உறுதி செய்கிறது.

ஆனால் என்னுடைய தனிப்பட்ட வாசிப்பில், ஒன்றுக்கொன்று ஆதிக்கம் செலுத்த விரும்பும் இரு ஆற்றல்களினுடைய வேட்கையின் வடிவத்தை, வரம்புகளை விவாதிக்கும் நாவலாகவே இதனைக் காண்கிறேன். முன்பே சொன்னதைப் போல சுதந்திர உணர்வினால் உந்தப்பட்ட காலகட்டத்து மனிதன் இந்த உலகை அவனுடைய சுதந்திரத்தின் வலிமையோடு எதிர்கொண்டு தன்னைக் கட்டுப்படுத்தும் பல ஆற்றல்களின் தலைகளின் மீது கால் வைத்துவிட முடியுமென்று நம்பியிருக்கிறான். ஊனமாக்கப்பட்ட ஏஹாப்பின் உடல், அவனுடைய ஆன்மாவை ஊனமாக்குகிறது. இயற்கையினின்று பிரிந்து தனது முதுகெலும்பை நிமிர்த்திவிட்ட ஓர் உயிரிக்கும், பிறழா ஒழுங்கில் ஆழக்கடல்களை வளையவரும், இடத்திற்கு இடம் மாறுபடும் தட்பவெப்பத்தை தனது உள்ளார்ந்த அறிவாகக் கொண்டிருக்கும் மாபெரும் உடலைக் கொண்ட கடல் வாழ் உயிரிக்கும் இடையேயான மோதலை இந்நாவல் ஏஹாப்பிற்கும், மோபி-டிக்கிற்குமான மோதலாக உருவகித்திருக்கிறது. செங்குத்தாக நிமிர்ந்துவிட்ட முதுகெலும்பிற்கும், கிடைமட்டமாக நீண்டிருக்கும் மற்றொரு முதுகெலும்பிற்கும் இடையேயான மோதல். எலும்புகள் மோதிக்கொள்ளும் ஓசை, கடலின் தத்தளிப்பு மிகுந்த மேற்பரப்பில் ஓங்கி ஒலித்து, அமைதியும், அழுத்தமும், இருளும் நிறைந்த ஆழத்தில் தன்னை இழக்கிறது. மனிதர்களை நிலத்தின் எஜமானர்களாக முன்வைக்கும் மெல்வில், கடற்பரப்பை ஆளும் திமிங்கலத்தை அவனுக்கு இணையாக வைக்கிறார். தன்னிகரற்ற ஆற்றலை விரும்பும் ஏஹாப், ஒரு வகையில் மோபி-டிக்கின் மானுட வடிவம். தனது ஊழ் கண் திறந்த கடற்பரப்பிலேயே எதனால் அவனுடைய ஊழ் கண் திறந்ததோ அதனை எதிர்கொள்ள அதனிடத்திற்கே ஏஹாப் தேடிச் செல்கிறான்.

மோபி-டிக்கின் நினைவில் ஏஹாப் யார்? அதற்கு நினைவுகளே இருப்பதில்லை, இயற்கையோடு இயைந்த ஒழுங்கு மட்டுமே இருக்கிறது. தனது அறையில் ஊஞ்சலாடும் விளக்கின் கீழே ஏஹாப் பல வரைபடங்களைக் கொண்டு மோபி-டிக்கைக் கண்டுபிடித்து அதனைக் கொன்றுவிட முடியுமென்று நம்பி பல இரவுகளைக் கழிக்கிறான். இரவெல்லாம் எரியும் அவனது விளக்கை ஏற்கனவே கொல்லப்பட்டுவிட்ட திமிங்கலம் ஒன்று தனது எண்ணெயால் நிரப்பியிருக்கிறது. இயற்கையின் ஒழுங்கை அறிவதின் வழியாகவே அவனுடைய நோக்கம் நிறைவேறும் என்பதை ஏஹாப் உணர்ந்திருக்கிறான். அவன் (மனிதர்கள்) தன்னை இயற்கையின் சங்கிலியால் பூட்டப்பட்டவனாக ஒப்புக்கொண்டாலும், அதன் இயல்பை அறிந்து எங்கே அதனை உடைக்க முடியுமென்று புரிந்து வைத்திருக்கிறான். ஆனால் மரணம் இயற்கையின் இறுதிப் பேராயுதமாக அதன் கைகளில் எப்போதுமே ஏவப்படத் தயாராக இருப்பதை அவன் அறிந்தே இருந்தாலும் அந்த இறுதிப் பேராயுதத்தை எதிர்கொள்வதின் வழியாகவே இறவா நிலையை எட்டுவதெனத் தனது நிலத்தின் மீது அறைந்து தனக்குத்தானே சபதமேற்றிருக்கிறான். எடெர்னிட்டியை அடைவதே சுதந்திரத்தின் முழுமை. மரணத்தை வெல்ல முடியாமல் போனால் சுதந்திரத்தின் பயன்தான் என்ன? மனித ஆற்றலால் வெல்லப்பட முடியாத, அதன் சுதந்திரத்தின் மாபெரும் புதிர் நிறைந்த எதிரியான மரணத்தோடு அவன் ஆடும் விதிமுறைகளற்ற விளையாட்டே, அவ்வப்போது இடம்பெயர்ந்துவிடும் கதையாடலாகவும் மோபி-டிக் எழுதப்பட்டிருக்கிறது.   விதிமுறைகளற்ற விளையாட்டின் விதிமுறைகளற்ற கதையாடல். 

கடைசி வேட்டைக்குத் தயாராகும் ஏஹாப், அவனுக்காக ஒரு கட்டைக் காலைச் செதுக்கும் ஆசாரியிடம் சொல்கிறான்:

`வாழ்க்கை!… ஒரு கிரேக்கக் கடவுளாக பெருமிதத்தோடு இருக்கும் நான், ஊன்றி நிற்பதற்கான ஓர் எலும்பிற்காக, இந்த மரமண்டைக்குக் கடன்பட்டவனாக நிற்கிறேன். பேரேடுகள் இல்லாமல் பேணப்பட முடியாத, மாளுந்தன்மையுடைய கடன்படுதலைச் சபிக்கிறேன். நான் காற்றைப் போலச் சுதந்திரமானவனாக இருப்பினும், ஒட்டுமொத்த உலகின் புத்தகங்களில் வீழந்தவனாகவும் இருக்கிறேன்`. – (பகுதி 108)

ஏஹாப் மனித உறவுகளுக்கு இடையேயான கடன்படுதலை அவனுடைய சுதந்திரத்திற்கான தடையாகவே காண்கிறான். கடவுளுக்கும் மனிதர்களுக்கும் அருகேயில்லாதவனாகத் தன்னைக் குறிப்பிடும் ஏஹாப், தன்னைச் சொர்க்கத்திலிருந்து வீழந்த தேவதைகளில் ஒருவனாக உருவகிப்பானா? தரிக்கப்பட்ட கால் அவனுடைய ஊனமான சுதந்திரம். கிறித்தவ மெய்யியலில் தேவதைகள் கடவுளுக்கும் மனிதர்களும் இடையேயான உறவைப் பேணும், தாமஸ் அக்வினாஸின் கூற்றுப்படி, அறிவார்த்தமான இருப்புகள். கதைகளில் அவை பல்வேறு உருக்களை எடுக்கின்றன. மதக்கதைகளில் கடவுளால் விரட்டப்பட்டு புவியில் பிறக்கின்றன. புவி, விரட்டப்பட்டவர்களின் வேதனைக் கூடமாக, இடங்களின் படிநிலையில் கீழ்மட்டத்தில், மாளுந்தன்மை உடையவர்களின் இருப்புகள் ஒன்றுகொன்று உராயும் இடமாக இருக்கிறது. மேலோட்டமாகப் பார்த்தால் மகிழ்ச்சிகரமனதாக இருக்கும் வாழ்க்கை, ஆழ யோசிக்கையில் வாழத் தகுதியற்றதாகவும் இருக்கிறது. இதுதான் சொர்க்கத்திலிருந்து விரட்டப்பட்ட தேவதைகளுக்குப் பொருத்தமான இடம். பாகன்களின் இரத்தத்தால் தனது குத்தீட்டிக்கு நீராட்டு செய்யும் ஏஹாப் உண்மையில் ஒரு ஹெர்குலிஸாகவும் தோற்றம் பெறுகிறான். ஆச்சரியகரமாக, ஹெர்குலிஸையும் திமிங்கல-மனிதர்களின் வரிசையில் மெவ்லில் வைக்கிறார். 

‘பெர்சியஸ், புனித ஜார்ஜ், ஹெர்குலிஸ், யோனா, விஷ்ணு! – (பகுதி 82).

இந்த வரிசையில், ஏஹாப் இறுதியாக நிற்கிறான். அவன் இவ்வுலகை ஆழப் புரிந்து வைத்திருக்கிறான். போட்டியே உயிர்களுக்கு இடையேயான பொதுப் பண்பாகத் திகழ்வதையும் அறிந்திருக்கிறான். ஒத்திசைவைப் பற்றி குறைவான மதிப்பே உடையவனாகவும் இருக்கிறான். ஏஹாப்பின் கால் ஒன்றைத் துண்டித்து, மரணம் அதனுடைய அழிக்கவியலாத இருப்பை அவனுடைய உடலில் ஓர் எச்சரிக்கைச் சின்னமாக விட்டுச்சென்றிருக்கிறது. அதனைக் காணும் போதெல்லாம் ஏஹாப் சோர்வுறும் மனத்தோடு, தன்னுள் ஆழ்ந்து அவனது இருப்பின் குன்றிய வனப்பு சிதைவுற்ற உண்மையை எதிர்கொள்கிறான். யாருமே பார்க்காமல் கப்பலில் ஏறியிருக்கும் ஏஹாப் சில நாட்கள் கழித்தே தன்னுடைய அறையிலிருந்து அனைவரின் கண்பார்வைக்கு வருகிறான். பகற்பொழுதிலும் இருள் நிரம்பிய அறையில் ஏஹாப் மறுக்க முடியாத ஓர் உண்மையை தியானிக்கிறான். ஆயினும் அவனால் அதனிடம் சரணடைய முடிவதில்லை. ஏஹாப், ஏஹாப்தான். அவனே அவனது ஒற்றை எஜமானனாகவும் இருக்கிறான்.

`எல்லோரும் அவர்களுடைய கழுத்தைச் சுற்றிய தோல்வாரோடு பிறந்திருப்பினும், மரணத்தின் சடுதியான, திடீர் திருப்பத்தின் பிடியில் அகப்படும் போதுதான், வாழ்வின் எப்போதும் நிலைத்திருக்கும் அமைதியான, சூட்சுமமான பயங்கரங்களை மானுடர்கள் உணர்கிறார்கள்`. – (பகுதி 60)

உலகெனும் பெருங்கதையில் ஏஹாப் சுதந்திரத்தின் அதீத நம்பிக்கையின் மானுட வடிவமாகவும், மறைந்திருக்கும் ஆற்றல்களின் உயிரியல் வடிவமாக மோபி-டிக் எனும் திமிங்கலமும் வாசித்துத் தீராத ஓர் அத்தியாத்தில் எதிரெதிரே இடம்பெறுவார்கள். ஏஹாப், மோபி-டிக்கின் மூலமாக மெல்வில் சுதந்திரம் / மரணம் எனும் இரு ஆற்றல்களின் (ஒன்று சிந்தனைப்பூர்வமானது, மற்றொன்று பெளதீகமானது), வரம்புகளையும், மோதல்களையும் விவாதித்திருக்கிறார். 

திமிங்கலத்துடன் சமரிடும் ஏஹாப்

மோனோமேனியா: தன்முனைப்பின் நீர்ச்சுழலும் வேட்கையின் குருட்டுத்தனமும்

வெள்ளைத் திமிங்கலத்தைத் தேடிச்செல்லும் ஏஹாப், தன்னைப் போலவே மோபி-டிக்கிடம் தனது உடலின் அங்கமொன்றைப் பறிகொடுத்த மீகான் பூமெரைப் பார்க்கிறான். காலை இழந்த ஏஹாப்பும், கையை இழந்த மீகான் பூமெரும் இலண்டனைச் சேர்ந்த சாமுவெல் எண்டெர்பை எனப் பெயரிடப்பட்ட கப்பலின் ஆங்கிலேயப் பதாகை நிழலில் சந்திக்கிறார்கள். இருவரும் அவரவர் இழப்பையும், மோபி-டிக்கின் தந்திரங்களையும் குறித்து உரையாடுகிறார்கள் (பிரித்தானியப் பேரரசு கையை இழக்கப் போகிறது, அமெரிக்கப் பேரரசு காலை இழக்கப் போகிறது). ஏஹாப்பிடம் அளவிட முடியாத ஆர்வமும், அவசரமும் தெரிகிறது. தன்னுடையதைப் போன்ற  ஊழைச் சந்தித்த மற்றொருவனை அப்போதுதான் ஏஹாப் காண்கிறான். ஆனால் மீகான் பூமெர் அவனுக்கு நேர் எதிராக மோபி-டிக்கைக் கொல்வதிலோ, பழிதீர்ப்பதிலோ ஆர்வமற்றவராக இருக்கிறார். 

“இனியொருபோதும் (எனக்கு) வெள்ளைத் திமிங்கலங்கள் தேவையில்லை, அவனுக்காக ஒரேயொரு முறை படகைக் கீழே இறக்கினேன், அதுவே என்னைத் திருப்திப்படுத்தியது. அவனைக் கொல்வதில் பெரும் மேன்மையும், ஒரு கப்பலையே நிறைக்குமளவிற்கான அரிதான எண்ணையும் கிடைக்குமென எனக்குத் தெரிந்திருப்பினும், அவனைத் தனித்திருக்க விடுவதே சிறந்தது, நீங்கள் அப்படி நினைக்கவில்லையா?” – (பகுதி 100)

`…அவன் ஒரு காந்தம்`. ஏஹாப் இவ்வாறு அவனுக்கு பதில் அளிக்கிறான். 

எல்லா அச்சங்களையும், அறிவுரைகளையும் புறக்கணித்து, தனது இளம் மனைவியினுடைய உடலின் இளஞ்சூட்டையும், குழந்தைகளின் சிரிப்பையும் இழப்பதற்கும்கூட ஏஹாப் தயங்கவில்லை. அவன் வேட்கையால் குருடாக்கப்பட்டிருக்கிறான். பழிதீர்த்தலெனும் ஒற்றைப் புள்ளியில் குவிந்துவிட்ட அவனது வாழ்வின் மற்றக் கேட்புகளை அவனால் பார்க்க முடிவதில்லை.  

வெள்ளைத் திமிங்கலத்தைக் கண்டு அவனுக்கு அறிவிப்பவர்களுக்குப் பரிசாக அளிப்பதாக முன்பு சொல்லியிருந்த தங்க நாணயத்தின் முன் ஏஹாப் நிற்கிறான். REPUBLICA DEL ECUADOR: QUITO என ஒரு பக்கத்தில் எழுத்துகள் பொறிக்கப்பட்ட ஹிஸ்பானியாக் நாணயம். கபாலிஸ்டிக் குறியீடுகளும், சூரியன் துலாம் இராசியின் நுழைந்துவிட்ட நிலநடுக்கோட்டுப் புள்ளியுமாக மெல்வில் இந்த நாணயத்தை வசீகரமான மொழியில் விவரிக்கிறார். அதன் முன்னே ஏஹாப் நிற்கிறான். 

‘மலைமுகடுகளிலும், கோபுர உச்சிகளிலும், கம்பீரமான உயர் இடங்களிலும் எதுவோ ஒன்று தன்முனைப்போடு இருக்கிறது. இங்கே பார் – லூசிஃபர் அளவிற்கு பெருமிதம் மிக்க மூன்று உச்சிகள். உறுதியாக நிற்கும் கோபுரம், அதுவும் ஏஹாப், எரிமலை, அதுவும் ஏஹாப், தைரியமுள்ள, அஞ்சிப் பின்வாங்காத, வாகைசூடிய காட்டுக்கோழி, அதுவும் ஏஹாப்; அனைத்துமே ஏஹாப்தான். மாயாஜாலக்காரனின் கண்ணாடியைப் போல, ஒவ்வொரு முறை திருப்பும் போதும் ஒவ்வொரு மனிதனுக்கும் அவனுடைய பூடகம் நிறைந்த சுயத்தைக் காட்டும் இந்த வட்ட நாணயம், வட்டவடிவிலான இந்தப் புவியின் பிம்பம். தானே விடை கண்டிராத உலகிடம் தம்மை விடை காணச் செய்யக் கோருபர்களுக்கே மாபெரும் வலிகளும், மாபெரும் இலாபங்களும்…. கரடுமுரடான முகத்தை உடைய இந்தச் சூரியன் புயல்களின் இராசிச் சின்னத்திற்குள் நுழைகிறான். ஆனால் ஆறு மாதங்களுக்கு முன்புதான் மேஷ இராசியிலிருந்து வெளியே வந்தான். ஒரு புயலில் இருந்து மற்றொரு புயலுக்கு!..` – (பகுதி 99)

பிளாட்டோவிற்குச் செல்வோம். இந்த உலகைப் படைத்த ஒரு துணைநிலைக் கர்த்தா (demiurge), ஆகக் கச்சிதமான, ஆகச் சமநிலையை உடைய உருவான, கோள வடிவை அதற்கு அளித்தான் என்கிறார். ஆயினும் இது தீமை நிறைந்ததாகவே இருக்கிறது. உலகின் அனைத்துத் தொன்மங்களும் உலகைக் குறிக்க வட்ட வடிவத்தையே பயன்படுத்துகின்றன. இங்கே ஏஹாப் வட்ட வடிவான உலகின் கச்சிதமான பிம்பமாக இருக்கும் தங்க நாணயத்தின் முன் நின்று தன்னையே இந்த உலகாகக் காண்கிறான். தன்னுடைய வாழ்வின் புதிருக்கு விடை காண்பதன் மூலமாக உலகின் புதிருக்கும் விடை காண முடியுமென்ற இறுமாப்பின் காந்தப் புலத்தில் சிக்குண்டிருக்கும் அவனால், கப்பலில் அவனோடு உடன்வரும் ஒருவரின் வாழ்வையும் பார்க்க முடிவதில்லை. செவ்விந்தியனான டாஷ்டெகோவும், நரமாமிசம் உண்பவனான குவேகுவேக்கும், கருப்பனான டாகுவும், முதல்நிலை, இரண்டாம் நிலை மாலுமிகளான ஸ்டார்பக்கும், ஸ்டப்பும் ஏன் அந்த திமிங்கலக் கப்பலின் முதலீட்டாளர்களும்கூட அவனுக்குச் சமமாகவே தெரிகிறார்கள். இதன் பொருள், ஏஹாப் அனைவரையும் சமமாக நடத்துகிறான் என்பதல்ல, மாறாக அனைவரையும் சமமாக நிராகரிக்கிறான். அவனைப் பொறுத்தவரையில் தன்னுடைய மேன்மைமிக்க நோக்கத்தின் பற்சக்கரங்களாகவே அனைவரையும் பார்க்கிறான். தன்னுடைய அதிகாரம் வரம்பற்றதென்று நம்பும் ஏஹாப்பை, ஸ்டப்பை ஒரு கிழட்டு மொகலாயன் என்றே அழைக்கிறான். ஏஹாப்பை, மெல்வில் ஒரு மேனோமேனியாக் என்றே அறிமுகம் செய்கிறார். எல்லா மேனியாக்களும், மனோத்தத்துவத்தின் படி, தன்முனைப்பில் இயங்குகின்றன. ஏஹாப் தன்முனைப்பின் அதிரூபம்.  

`ஆண்களே, நீங்கள் தைரியமாக உணர்கிறீர்களா, தைரியமாக?`

`அச்சமில்லாத நெருப்பைப் போல`. ஸ்டப் கத்தினான்.

`அதே சமயம் இயந்திரத்தனமாக` – ஏஹாப் – (பகுதி 134)

மனித வாழ்வின் மற்றொரு துயர் நம்மில் பெரும்பாலானவர்கள், ஏஹாப்பைப் போன்றவர்களின் குருட்டுத்தனமான வேட்கைக்கும், அவர்களின் தன்முனைப்பிற்கும், இயந்திரத்தனமாக அச்சமின்றி நம்மையே பலிகொடுப்பவர்களாகவும் இருப்பது. இஸ்மயீல் முதல் பகுதியிலேயே சொல்லி விடுகிறான், இந்த உலகின் முஷ்டி எல்லோரது தோளையும் தட்டிச் செல்கிறதென்று. இஸ்மயீல், ஏஹாப்பின் தணிந்திருக்கும் வடிவம் (subdued form). இடையிடையே இஸ்மயீல் எனும் கதைசொல்லி காணாமலே போனாலும், ஏஹாப்பின் இறுதி நாளிலும், இந்த வேட்டுவக் கதையின் இறுதிக் காட்சியிலும் அவனோடு இருக்கிறான். இலட்சியத்திற்கும், வேட்கைக்கும் பாரிய வேறுபாடுகள் உள்ளன. இலட்சியமும் வேட்கையும் தன்னையும், தன்னைச் சார்ந்தோரையும் இழப்பிற்கு உள்ளாக்கும் சாத்தியம் உடையவை என்றாலும், வேட்கை அடையும் வெற்றி பெரும்பாலும் தனி ஒருவருடையதாக மாறிவிடுகிறது. இலட்சியத்தின் வெற்றிக்கு ஒரு கூட்டு முயற்சி தேவைப்படுகிறது. இலட்சியத்தைக் கையில் ஏந்திய பந்த நெருப்பு எனக் கொண்டால், தனது ஆடைகளில் தீப்பற்ற வைத்தே வேட்கை அதிவேகமாக ஓடுகிறது. ஏஹாப்பின் ஆடைகளில் அணைந்துவிடாத நெருப்பு பற்றியிருக்கிறது. அது மனித குலத்தின் விழிப்புணர்வு கண்விழித்த காலத்தில் கண்ட நெருப்பு. இருப்பின் மீது கொள்ளும் எரிச்சலால் தனது சூட்டைப் பெறும் நெருப்பு. தொட்டுணர முடியாத ஆழ்ந்த வெறுப்பு என மெல்வில் இந்த நிலைக்குப் பெயரிடுகிறார். 

ஏஹாப் நாவல் முழுதிலும், சிம்பொனி எனும் பகுதியில் மட்டும் சற்றே தளர்ந்தாலும், தனது புராணீகக் கடவுளின் பிம்பத்தின் மீது காமுறுவதிலிருந்து விடுபட முடியாதவனாக இருக்கிறான். அவன் தன்முனைப்பின் நீர்ச்சுழலில் சிக்குண்டிருக்கிறான். சுழலிலிருந்து மீள்வதென்பது அதன் ஆழத்தில் மூழ்குவது மட்டுமேயெனக் கருதுகிறான்.  

மோபி-டிக் ஆழத்தின் கதை. அனைத்தும் ஆழத்தில் ஒன்றாகக் கலந்திருக்கின்றன. வடிவமே வேற்றுமைகளைத் தோற்றுவிக்கிறது. தோற்றமே பெருங்குழப்பத்தின் தோற்றுவாயாக இருக்கிறதா? ஏஹாப் தன்னுடைய தன்முனைப்பிலிருந்து ஆழத்தைப் பார்க்கிறான். உலகின் ஆழத்திலும் அவனுடைய பிம்பமே பதிந்திருக்கிறது. ஏஹாப் அவனுக்கு மட்டுமே சொந்தமான பழிதீர்க்கும் எண்ணத்தோடு அழிவை நோக்கிச் செல்வதில்லை, மாறாக அனைத்து மானுடர்களினுடைய ஆதியுணர்வு ஒன்றின் பிரதிநிதியாகவே செல்கிறான். விழிப்புணர்வு பெற்றுவிட்ட ஒரு துணைநிலைக் கர்த்தா, தனது படைப்பின் அலங்கோலத்தைக் கண்டு அதனை அழிக்க விழைகிறான். மீண்டுமொருமுறை இங்கே வெள்ளம் சுருண்டு தணிந்து, மீண்டுமொருமுறை இங்கே உலகு மேல் எழும். ஆழத்தின் கதையென்பது அழிவின் கதையும்கூட. மேற்பரப்பின் சஞ்சலங்களை, தன்முனைப்பின் அலைக்கழிப்புகளை, வேறுபாட்டின் இடைமறிப்புகளை, படிநிலைகளின் அதிகார வரம்புகளை அழித்து ஒன்றோடு ஒன்று கலந்திடும் ஆழத்திற்குச் செல்லும் முனைப்பையே மெல்வில் ஒரு நாவலாக எழுதியிருக்கிறார். மோபி-டிக் அழிவின் கதையும்கூட. 

‘இஸ்மயீலாகிய நான்….. கட்டுமீறிய, பூடகமான ஒரு அனுதாப உணர்வு என்னுள் இருக்கிறது. ஏஹாபின் தணிக்க முடியாத குடிப்பகையை என்னுடையதாகக் காண்கிறேன்` – (பகுதி 41)

ஏஹாப்பின் பண்புகள் தொற்றுந்தன்மையுள்ளவை. தனது விலக்கத்தின், அதிகாரத்தின் தனிமையினுடைய அலங்கத்தில் நின்று அவன் பேசுவதைக் கொஞ்சமேனும் செவி மடுத்துக் கேட்பவர்கள், தாங்களும் ஏஹாப்பாக மாறியிருப்பதைத் தாமதமாகவேனும் உணர்வார்கள். அவனுடைய நோக்கத்தைக் கேள்வி கேட்பவர்களுமேகூட அவனுக்குப் பணிந்து போவதன் பின்னணியில் ஏஹாப்பின் வசீகரம் இருக்கிறது. அது, அவன் மூலம் பரவப் போகும் மேன்மையின் வசீகரம். அதற்கே அனைவரும் அவனிடம் சரணடைகிறார்கள். ஏஹாப்பில் பங்கு பெறுவதென்பது மேன்மையில் பங்குபெறுவது என அவர்கள் புரிந்துகொள்கிறார்கள். வறட்டு அதிகாரத்தின் உடையக்கூடிய மண் சுவர்களால் அல்ல, ஏஹாப் கட்டியெழுப்பி இருப்பது மேன்மையின் கற்களால் அடுக்கிய அதிகாரத்தின் உடைக்க முடியாத கோட்டை. ஏஹாப் ஒரு முகடு, மரணம் மற்றொரு முகடு. மோபி-டிக் இரண்டு முகடுகள் ஒன்றோடொன்று மோதிக்கொள்வதை விவரிக்கும் பிரதி. 

ஹெரால்ட் புளூம் ஏஹாப்பை ஒரு நாயகன் என்றே சொல்கிறார். வாழ்வின் அனைத்து எதிர்மறை அம்சங்களின் விடத்தை அருந்தியவனாக அவன் இருக்கிறான். வெறுப்பு, இழப்பின் அவமானம், அங்கச் சிதைவு, சார்ந்திருத்தலின் கடப்பாடுகள், அடங்கிப் போதல் எனப் பல உணர்வுகளின் கசப்புகளை ஏஹாப் அறிந்தே ஏற்கிறான். அவனுடைய தன்முனைப்பு அவனை ஒரு சர்வாதிகாரியாக மாற்றுகிறது. நாமெல்லோரும் அவன் முன்னே மண்டியிட்டு அவனை ஒரு நாயகனாக ஏற்கிறோம். 

‘பற்றியெரியும் நெருப்பில் தன்னைப் பலியிடும் புனிதத் தியாகியைப் போல அல்லது தன்னையே நுகரும் மனித வெறுப்பைப் போல, ஒருமுறை பற்றவைத்தால், இந்தத் திமிங்கலம் தன்னையே எண்ணெயாக்கி தனது உடலையே எரிக்கும்` – (பகுதி 96)

கொல்லப்பட்ட திமிங்கலம் ஒன்றை எரித்து எண்ணெய் உருக்கும் காட்சியை எழுதும் மெல்வில், கரும்புகை எழ எரியும் திமிங்கலத்தை ஏஹாப்பின் ஆன்மாவிற்கு இணையாகச் சொல்கிறார். 

`காட்டுமிராண்டிகளைச் சுமக்கும், நெருப்பின் பளுவேற்றப்பட்ட, விரைந்து செல்லும் பிகுவாட், ஒரு சடலத்தை எரித்த வண்ணம் இருளின் கருமையில் மூழ்குவதைப் பார்க்கையில், அதனை வழிநடத்தும் மோனோமேனியாக் கமாண்டரினுடைய ஆன்மாவின் பருப்பொருள் எதிரிணையாகத் தோன்றுகிறது` – (பகுதி 96)

மெல்வில்லால் சடல எரிப்பின் புகை நெடியை விரிவாகச் சொல்லிவிட முடிகிறது. ஏஹாப் தன்னுடைய உடலையே விறகாக்கி, ஆன்மாவின் தகன மேடையில் வெறுப்பின் சடலத்தை எரிக்கிறான். தீரா எண்ணெயோடு தனல் விட்டு எரியும் வெறுப்பு திசையெங்கும் வெப்பமெனப் பரவுகிறது. ஏஹாப்பின் நெருப்பில் நாமெல்லோரும் கருகுகிறோம். 

ஆயினும் ஏஹாப்பைத் தீமையின் உருவம் எனச் சொல்ல முடியுமா? டெரி ஈகிள்டன் விவரிப்பதன் படி தீமைக்கு ஒரு நோக்கமும் இல்லை. தீமை அதுவாகவே உள்ளது. வேறொன்றாக மாற்றம் பெறுவது இல்லை. ஏஹாப் தீமையின் உருவம் அல்ல. அவனுடைய வீர சாகசப் பயணத்திற்கென அவன் முன்பே தீர்மானம் செய்து வைத்திருக்கும் நோக்கம் இருக்கிறது. ஏஹாப்பை, தவறான வழியில் சென்று துயருரும் தேவதைக் கதைகளின் நாயகர்களுள் ஒருவராகச் சொல்லலாம். மோபி-டிக் எனும் வெண்ணிற தேவதைக் கதையின் நாயகனே அவன். திமிங்கலமும் அவனும் ஒருவரையொருவர் பிரதிபலிக்கவே, நாம் தீமையின் உருக்களாக அவர்களைக் கருதிக் குழம்பிவிடுகிறோம். 

‘அவர்கள் என்னைப் பைத்தியம் என்றே நினைக்கிறார்கள் – ஸ்டார்பக்கும்கூட. ஆனால் நான் அணங்கேறியவனாக இருக்கிறேன், நான் பைத்தியமாக்கப்பட்ட பைத்தியக்காரத்தனம். அதனைப் பற்றியே சிந்திப்பதால் மட்டுமே அமைதியுறும் கட்டுமீறிய பைத்தியக்காரத்தனம்` – (பகுதி 37)

தான் சிக்குண்டிருக்கும் பைத்தியக்காரத்தனத்தை நன்கு அறிந்திருக்கும் ஏஹாப் அதனிடமிருந்து விலக முடியாமல் போவதன் காரணம், பைத்தியக்காரத்தனத்தில் ஒளிந்திருக்கும் சாகச விளையாட்டின் ஈர்ப்பே.  

வரலாற்றின் எல்லாப் பைத்தியக்காரத்தனங்களிலும் இன்று மிச்சமிருப்பது பொருளியல் நாகரிகத்தின் (material civilization) வரம்பற்ற பொருளியல் வேட்கையெனும் பைத்தியக்காரத்தனமே. அமெரிக்கா, பொருளியல் நாகரிகத்தின் நிலம். ஏஹாப் எனும் குவாக்கர் (Quaker) கிறித்தவன் அன்றைய அமெரிக்காவின் (இன்றைக்கும்!) பொது மதமாக மாறியிருந்த பொருளியல் வளர்ச்சியைப் பின்பற்றியவன் என்கிறார் சி.எல்.ஆர். ஜேம்ஸ். 

‘பத்தொன்பதாம் நூற்றாண்டு அமெரிக்காவின் உண்மையான மகனான ஏஹாப், நெருப்பை வழிபட்டு, அதனாலேயே தாக்கப்பட்டான்`.

`நெருப்பு, அதிகாரம், பொருளியல் வளர்ச்சியின் நாகரிகம் ஆகியவை வலுவான படைப்பு விசைகளாக இருந்தன. ஆனால் அதன் படைப்பூக்கம் இயந்திரத்தனமானது` – (மாலுமிகள், மதமாறிகள், குடியொதுக்கப்பட்டவர்கள் – ஹெர்மன் மெல்வில்லின் கதையும் நாம் வாழும் உலகமும் நூலில்)

ஆனால் சி.எல்.ஆர். ஜேம்ஸ், ஏஹாப் அமெரிக்கப் பொருளியல் நாகரிகத்திடமிருந்து நாற்பது ஆண்டுகள் விலகியிருந்து, இறுதியில் அதனை முற்றிலுமாகப் புறந்தள்ளியவன் என்கிறார். இஸ்மயீல் இயந்திரத்தனமான பொருளியல் நாகரிகத்தின் ஓரங்களில் நிற்பவன். அதன் படிக்கட்டுகளில் ஏற முடியாத முடவன். இஸ்மயீலே ஏஹாப்பை ஒரு முடவனாகக் கற்பனை செய்கிறான். இருவரும் ஒரே நாகரிகத்தின் ஒதுக்கப்பட்டவர்களாக, அதன் மையக்கூறுகளின் மீது அதிருப்தியுற்றவர்களாக ஒரே திசையில் பயணிக்கிறார்கள். ஏஹாப், முற்றிலும் அழிந்து போவதற்குச் சாத்தியமே இல்லாதெனச் சொல்லப்படும் பொருளியல் தேட்டத்தினை அச்சாகக் கொண்ட ஒரு நாகரிகத்தின் முற்றுப்பெறாத குறியீடு. எந்த ஒரு சமூகத்தின் எந்த ஒரு காலகட்டத்திலும் ஏஹாப் தோன்றிவிடுவான். அவனுடைய மற்றொரு பட்டப்பெயர், `பழைய இடி`. 

நாவல் வெளியாவதற்கு நூறாண்டுகளுக்கு முன்பு, பெஞ்சமின் ஃபிராங்க்ளின் இடிதாங்கி ஒன்றை அமெரிக்க மண்ணில் நிறுவுகிறார். அமெரிக்கா, பேரழிவை உண்டுபண்ணக்கூடிய ஆற்றலின் மென்மயிர்க் கழுத்தை நீவிவிடத் தயாரான தருணம் அது. இடி, மின்னலின் மீதான விவிலியக் கால அச்சத்திலிருந்து மெல்ல விலகிய அமெரிக்காவின் உருவகமே ஏஹாப். இரயில் பாதைகள் அமெரிக்காவின் நெடுநிலத்தில் அமையப்பெறுகின்றன. அவற்றை மெல்வில், இரும்புத் திமிங்கலம் என்றே எழுதுகிறார். அறிவியலும், தொழில்நுட்பமும், சுதந்திரமும், பொருளியல் தேட்டமும், அதிகார விரிவும் ஒன்றுக்கொன்று பின்னி எழுந்த அமெரிக்கக் கனவே ஏஹாப் எனும் எந்த பெஞ்சமின் ஃபிராங்க்ளினாலும் வடக்கட்டுக்கு உள்ளாகாத `பழைய இடி`. எங்கோ ஓரிடத்தில் அமெரிக்கக் கனவு அசிங்கமான கோலங்களில் கருக்கலையத் துவங்கி, ஒரு கோரவுரு உயிரியாக மாறுவதை மெல்வில் தனது தீர்க்கதரிசன மூக்கால் முகர்ந்து அதனைப் பேராழியில் சுற்றும் கிழட்டுத் திமிங்கலமாகப் படைத்தார். 

‘ஓர் உயரிய படைப்பு, ஆனால் எப்படியோ துயரார்ந்திருக்கிறது! எல்லா உயரிய பொருட்களும் அதனால் தீண்டப்பட்டவையே – (பகுதி 16)

மெவ்லில், திமிங்கலக் கப்பலான பிகுவாட்டை, துயரார்த்தம் தீண்டிய உயர்படைப்பு எனச் சொல்கிறார். நாம் ஏஹாப்பை அவ்வாறே காண்கிறோம். உண்மையில் அழகும், உயர்வும், மேன்மையும் துயரார்த்தத்தில் நிலைபெற்றிருக்கின்றன. அழகை உற்று நோக்கினால், அதின் கடைசிப் படுகையில் துயரார்த்ததையே காண்கிறோம் என்பது நிச்சயமாகப் பார்வைக் கோளாறால் அல்ல.

பிகுவாட்டின் கப்பல்

இனங்கள், நிறங்கள், திரும்ப வரும் அடையாளங்களின் பயங்கரம்:

மெல்வில், 1841ஆம் ஆண்டு ஒரு திமிங்கல வேட்டைக் கப்பலில் மசாசூசெட்ஸ் நகரிலிருந்து கடல் புகுந்தார். அவர் பயணம் செய்த கப்பல் 1842ஆம் ஆண்டு பசிபிக் தீவான நுகுஹெவாவை அடைய, அவர் அதிலிருந்து தனித்து விடப்படுகிறார். அதே ஆண்டின் பின்னாட்களில் இரண்டாம் முறை பயணம் செய்து தஹிதி தீவை அடைந்து ஃபிரெஞ்ச் காலனிய ஆதிக்கவாதிகளின் கொடுமைகளை நேரில் காண்கிறார். 1843ஆம் ஆண்டு சாண்ட்விட்ச் தீவுகள் என அழைக்கப்பட்ட ஹவாய் தீவுகளை அடைகிறார். மூன்றாம் கமெஹமெஹா எனும் பழங்குடி அரசினிடமிருந்து பிரித்தானியர்கள் இந்தத் தீவைக் கைப்பற்றுகிறார்கள். அமெரிக்கப் புராட்டஸ்டண்ட் கிறித்தவர்கள் ஹவாய் தீவுவாசிகளை மதமாற்றஞ் செய்ய நிகழ்த்திய அட்டூழியங்களைப் பார்க்கிறார். அதே ஆண்டு ஹானலூலுத் தீவில் பிரித்தானியக் கப்பல்களின் பீரங்கிகள் ஓயாது முழக்கமிடுவதற்கு நடுவே, யூனியன் ஜாக் கொடி இறக்கப்படுவதையும் காண்கிறார். அமெரிக்கா தனது நிலத்தின் மையத்திலும், எல்லைகளிலும் தனது நாகரிகத்தை நிலைநிறுத்த முனைவதோடு, கடலின் மீதும் ஆதிக்கம் கொள்ள விரும்புகிறது. மெல்வில் ஒரு நல்ல அமெரிக்கக் குடிமகனாக, பத்தொன்பதாம் நூற்றாண்டின் விளக்குகளை எரித்த திமிங்கல எண்ணெயை, வேறெந்த ஐரோப்பிய நாட்டினைக் காட்டிலும் அதிகம் உற்பத்தி செய்யும் நாடாக அமெரிக்கா திகழ்வதை, தல்ஸ்தோய்க்கு இரஷ்ய விவசாயத்தின் மீதிருந்த ஈர்ப்பிற்குக் குறையாமல்  அவருடைய நாவலில் எழுதியிருக்கிறார்.

`ஃபால்சம் குகையிலிருந்து இன்றுவரை அமெரிக்காவில் பிறந்த மனிதனின் மைய உண்மையாக இருப்பது வெளி (SPACE). இதை நான் பெரிய எழுத்துகளில் சொல்வதற்குக் காரணம் வெளியே இங்கே எல்லாவற்றிலும் பெரியதாக வருகிறது. பெரியது ஆனால் கருணையற்றது`, என எழுதுகிறார், கவிஞர் சார்லெஸ் ஆல்ஸன். `என்னை இஸ்மயீல் என அழையுங்கள்` எனும் அவருடைய நூல், ஒரு மெல்வில் வழிபாடு. 

அமெரிக்க, பிரித்தானிய காலனி ஆதிக்கத்தின் மலிந்த நகலாக மாறப் போவதை மெல்வில் தன் காலத்திய அதிபர் தேர்தலின் உயர் டெசிபல் கூப்பாடுகளில் இருந்து அறிந்திருக்கக்கூடும். காலனியம், மதமாற்றம், பொருளியல் தேட்டத்தின் சீரழிவு (வெள்ளை இன விபச்சாரிகள், கருப்பர்கள் தங்கள் உடலைத் தழுவ அனுமதிக்கும் துறைமுகக் காட்சியைக் கண்டவர் மெல்வில்) என மூன்று அழுத்தங்களின் கீழே நசுக்கப்படும் உலகின் ஓரங்களில் வசிப்பவர்கள் அடையும் துயரை தன்னுடைய இளம் வயதிலியே கண்ட மெல்வில், தன்னுடைய தனிப்பட்ட ஏற்பாட்டைப் (testament) போன்று ஒலிக்கும் மோபி-டிக் நாவலில் தனது காலத்தின் அதிகாரப் போக்கிற்கு எதிராக நின்று, தேச எல்லைகளையும், இன வரம்புகளையும் கடந்த ஒரு பிரதியை எழுத நினைத்திருக்கலாம். அதனால்தான் ஒரு வெள்ளைக் கிறித்தவனான இஸ்மயீல், புரியாத சங்கேதங்களை உடலெங்கும் பச்சை குத்திய, மனிதத் தலைகளைப் பாடம் செய்து விற்கும் நரமாமிசம் உண்பவனான குவெகுவெக்கைத் (Queequeg) தனது நண்பனாக ஏற்பதோடு, திமிங்கல வேட்டைக் கப்பலில் ஏறும் வரையில், பாலைநிலத்தில் தான் அனுபவிக்கும் தனிமையின் கொடுமையிலிருந்து தூக்கிவிட நீளும் கையாக அவனைக் கருதுகிறான் (கப்பல் ஏறியதும் கருணையே இல்லாமல் அவனை மறந்துவிடுகிறான்).

குவெகுவெக் ஒரு சாதாரணன் அல்ல, பழங்குடி அரச வம்சத்தைச் சேர்ந்தவன். கிறித்தவ உலகின்பாற் ஈர்ப்புடையவன். காய்ச்சலால் அவதியுறும் வேளையில், தனக்கென ஒரு சவப்பெட்டி செய்துகொள்ளும் குவெகுவெக், தான் கிறித்தவ முறைப்படி தகனம் செய்யப்பட வேண்டுமென விரும்புகிறான். கப்பலில் இருக்கும் ஈரானிய, இந்திய, மனிலாப் பகுதிகளைச் சேர்ந்தவர்களும் தத்தமது மதங்களை ஒன்றாகக் கலந்துவிடக் கூடியவர்களாக இருக்கிறார்கள். நெருப்பை வழிபடும் ஏஹாப்பையும், அவனுடைய நிழலேயான ஃபதேல்லாவையும் நாம் வாசிக்கிறோம். ஒரு குவாக்கர் கிறித்தவனின் நிழல் ஜோராஸ்டிரியனுடையதாக இருக்கிறது. பாதிரியார் மேப்பிலின் உரையைக் கேட்டபின் இஸ்மயீல் குவெகுவெக்கின் மீதான அச்சத்தைக் கைவிட்டு, பிஸ்கட் துகள்களை அவனுடைய கரிய நிறக் கடவுளான யோஜோவிற்குக் காணிக்கையாக்குகிறான். அதன் முன் மண்டியிட்டு வணங்கவும் செய்கிறான்.  

பாதிரியார் மேப்பில், சமய உரைமேடையில் (pulpit) நின்று ஆற்றும் ஞாயிற்றுக்கிழமை பிரசங்கம் கிறித்தவத்தைத் தாண்டிய உலகளாவிய மத ஒழுங்குகளின் மைய அடிப்படைகளைப் பேசுவதாகச் சொல்கிறார்கள், மோபி-டிக்கின் விமர்சகர்கள் பலரும். தீர்க்கதரிசி யோனா, திமிங்கல வயிற்றில் இருந்து விடுபட்ட கதையை விவரிக்கும் பாதிரியார் மேப்பில், அழகான பிரசங்கத்தின் வழியாக அடிப்படையான மனிதநேய உணர்வையே மதச்சடங்காக முன்வைக்கிறார். இது ஓர் எளிமையான அறவுணர்வு. 

‘நாம் கடவுளுக்குக் கீழ்ப்படிந்தால், நமக்குக் கீழ்ப்படிய மாட்டோம். நமக்குக் கீழ்ப்படியாமல் இருப்பதில்தான், கடவுளுக்குக் கீழ்ப்படிதலின் கடினத்தன்மை அடங்கியிருக்கிறது` – (பகுதி 9). இப்போது நிச்சயம் அலுப்பூட்டக்கூடிய இந்த வரிகள் பத்தொன்பதாம் நுற்றாண்டில் எழுதப்பட்டவை என்பதை நினைவில் கொள்க. 

குவெகுவெக் இந்த நாவலின் குறிப்பிடத்தக்க பாத்திரங்களில் ஒன்று. இந்த நாவலின் மையக் கதையாடலில் ஒரு பங்கையும் வகித்திராத அவன் நாவலின் முற்பகுதிகளின் பேசுபொருளாக இருக்கிறான். “Homosociality” எனும் சொல்லுக்கு நிகரான தமிழ்ச்சொல் இல்லை. பாலுறவின் அடிப்படையில் இல்லாத ஓர்பால் உறவைக் குறிக்கும் சொல். இதனை நட்பு என நாம் அழைக்க முடிவதில்லை. இஸ்மயீலும், குவெகுவெக்கும் ஒருவரையொருவர் கட்டியணைத்துத் தூங்கினாலும், அவர்கள் ஒருவகையில் மேற்சொன்ன homosociality-ஐ வெளிப்படுத்தும் உறவுநிலையிலேயே இருக்கிறார்கள்.

ஒரே படுக்கையில் குவெகுவெக்கும் இஸ்மயீலும்

`குவெகுவெக், நரமாமிசம் உண்பவர்களின் முறையில் வளர்க்கப்பட்ட ஜார்ஜ் வாஷிங்க்டன்` – (பகுதி 10) 

‘முதல் பார்வைக்கு அதிர்ச்சியூட்டுபவர்களாக இருந்தாலும், அவர்களுடைய எளிமையின் அமைதியான சுய-ஓர்மை சாக்ரடிசிய ஞானத்தைப் போலத் தெரிகிறது` – (பகுதி 10)

ஒரே படுக்கையில் உறங்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகும் ஒரு கிறித்தவனும், ஒரு நரமாமிசப் பட்சிணியும் நண்பர்களாகும் மாற்றத்திற்கு இஸ்மயீல், பாதிரியார் மேப்பிலின் பிரசங்கத்தைக் கேட்க வேண்டியிருக்கிறது. ஆனால் குவெகுவெக் அவனளவில் எவரையும் ஏற்றுக்கொள்ளும் தன்மையுடையவனாக இருப்பதற்கு அவன், நரமாமிசம் உண்பவர்களின் முறையில் வளர்க்கப்பட்ட சாக்ரடீஸாகவும் இருப்பதே காரணம். 

மெல்வில், ஜனநாயகத்தில் ஆர்வமுடையவர். இளம் அமெரிக்காவின் ஆற்றலுருவாக (Spirit) அதுவே இருப்பதை மெல்வில் சரியாகப் புரிந்துகொள்கிறார். ஜனநாயகம் பற்றி அவர் சொல்வதெல்லாம் அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தின் சாரம்சத்தை நாடகீயமாக விவரிப்பதைப் போலுள்ளது. 

‘எடெர்னல் ஜனநாயகம்` – (பகுதி 24)

`எங்கும் நிறைந்திருப்பவனான அவனுடைய மையமும், சுற்றளவுமான ஜனநாயகத்தில் இருக்கிறது நமது தெய்வீக சமத்துவம்` – (பகுதி 26)

`நீயே வல்லமைமிக்க ஜனநாயகக் கடவுள்` – (பகுதி 26)

ஆனால் பிகுவெட்டின் மீகானான ஏஹாப் ஒரு ஜனநாயகவாதியல்ல. அமெரிக்க ஜனநாயகத்தின் வளர்ச்சியில் வன்முறை ஒளிந்திருக்கும் வாய்ப்பை மெல்வில், அதனை அதனுடைய தொட்டிலில் கண்ட நாட்களிலேயே உணர்ந்திருக்கிறார். அமெரிக்கா பல்வேறு இனங்களின் கானான் தேசம். ஒருவகையில் பாகனியக் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கிறது. ஆனால் அது பொருளியல் வளர்ச்சியின் பாகனிய கலாச்சாரம். மெல்வில் அமெரிக்காவின் ஆற்றலுருவைத் தேடுகிறார். எமர்சன், வால்ட் விட்மன், எட்கர் ஆலன் போ, ஹென்றி டேவிட் தோரோவின் வரிசையில் அமெரிக்காவின் மையத்தை நோக்கிப் பயணம் செய்த சாகசக்காரராக மெல்வில் இருக்கிறார். எட்கர் ஆலன் போ, அமெரிக்காவை வீதிகளில் தேடியலைந்தவர், மெல்வில் கடலில். அப்படியொரு சுதந்திர சமூகத்தில் ஏஹாப் தோன்றிவிடும் வாய்ப்பையும் அவர் புரிந்து வைத்திருக்கிறார். ஒருவகையில் அவருடைய எழுத்தின் வாயிலாக அமெரிக்கர்களை அவர் எச்சரித்திருக்கிறார். ஜனநாயகம் எதையும் விளைவிக்காத நிரந்தர உழுதல். உண்மையில் உழுதலே அதன் விளைச்சலும்கூட. ஜனநாயகத்தில் எங்கும் விரவியிருக்கும் அசிங்கத்திற்கும், எதேச்சதிகாரத்தின் ஆபத்தான அழகிற்கும் இடையே நிற்கும் ஏஹாப், இந்த நீடித்த உரையாடலின் சத்தத்தைக் கேட்கப் பொறுமையற்றவனாக இருக்கிறான். ஓர் எச்சரிக்கை அறிவிப்புப் பலகையாகக்கூட.  

மேற்புறத்தில் விதவிதமான வேறுபாடுகள் கொண்டவர்களான நாம், ஆழத்தில் யாராக இருக்கிறோம்?

குவெகுவெக், இஸ்மயீலின் நெஞ்சம் நிறைந்த நண்பனாகும் வரை, மெல்வில் அவனுடைய உடலையும், பழக்க வழக்கங்களையும் ஓர் அந்நியனோடு கொள்ளும் நட்பின் ஆரம்பகட்ட உற்சாகம் குறையாமல் விவரிக்கிறார். திமிங்கலம் என்ற சொல்லுக்கு அடுத்ததாக மெல்வில் அதிகம் பயன்படுத்தும் சொல், ஆவியுரு (Phantom). எந்தவொரு அந்நியத் தோற்றமும் (strange appearances), நாவலில் ஆவியுரு என்றே அழைக்கப்படுகிறது.

‘ஆறுகளிலும், கடல்களிலும் நாம் பார்க்கும் அதே பிம்பம். வாழ்வின் பிடிபடாத ஆவியுருக்களின் பிம்பமே அது`- (பகுதி 1)

‘பலகணியைச் சுற்றி வளையமிடும் அந்தி நிழல்களும், ஆவியுருக்களும் அமைதியாக நம்மை உற்று நோக்கும்…` – (பகுதி 10)

`அந்த வெண்ணிற ஆவியுரு` – (பகுதி 42)

பிரதிபலிப்பைக் கண்டு காமுறுதல் நார்சிஸசின் காலத்திலே துவங்கியதென்றால், அதனைக் கண்டு அஞ்சுதல் அவனுக்கு முன்பே துவங்கியிருக்கும். உடல் நம்முடைய உண்மையான அடையாளம் அல்லவெனக் கருதும் மெல்வில், கண்ணை மூடிக் காணும் இருளே இருப்பின் சாராம்சமாக இருப்பதாக எழுதுகிறார். 

‘ஏனெனில், உண்மையில் இருளே நம்முடைய சாராம்சத்தின் பிழையற்ற மூலப்பொருள் என்பதைப் போல எந்த மனிதனும் கண்களை மூடியிருக்காதவரை அவனுடைய சொந்த அடையாளத்தை சரியான முறையில் உணர முடிவதில்லை` – (பகுதி 11)

`நான் நினைக்கிறேன் நாம் வாழ்வையும் மரணத்தையும் தவறாகப் புரிந்து வைத்திருக்கிறோம் என்று. அவர்கள் நிழலென அழைக்கும் இந்த மண்ணின் மீது விழுவதே என்னுடைய மெய்யான சாராம்சமாக இருக்கிறது. என்னுடைய மேம்பட்ட இருப்பின் கழிசடைப் பகுதியே உடல்` – (பகுதி 7)

கடலில் அவன் கண்ட அவனுடைய நிழல் கரைவதைப் பார்த்த பிறகுதான் நம்மால் அணுக முடிகிற ஏஹாப், நாம் முன்பே சொன்ன, சிம்பொனி எனும் பகுதியில் வெளிப்படுகிறான். நிழல்களிலும், பிம்பங்களிலும், ஒளியும் இருளும் கலந்து வனையும் ஆவியுருக்களிலும் நமது சாராம்சத்தைக் காண்கிறோம். உலகின் சாராம்சமும் புலப்படாதிருக்கிறது. இந்தப் புலப்படாதவற்றின் ஆளுகையும் இடையீடும் நம்மை அச்சமுறச் செய்கிறது. நம்முடைய வெளிப்படையான அடையாளங்கள் கலைந்து மறைந்து, விழிப்புணர்வில் கவியும் இரவில் நம்மைக் கரைக்கிறோம். பிம்பங்கள் நம் வாழ்வின் பயங்கரங்களையும் நினைவூட்டுகின்றன. நீர் அளவிற்கு, வெளிப்படையான அடையாளங்களின் திரவத்தன்மையைக் கச்சிதமாகப் பிரதிபலிக்கும் வேறொரு பொருள் உலகில் இல்லை. மோபி-டிக் நீரின் காவியம். மொழிபெயர்ப்பில் பின்வரும் வாக்கியம் அதன் இசையை இழந்துவிடக் கூடும் என்பதால் தவிர்க்க முடியாமல் ஆங்கிலத்தில் தருகிறேன். 

‘but all in vain; those young Platonists have a notion that their vision is imperfect; they are short-sighted; what use, then, to strain the visual nerve? They have left their opera-glasses at home.’

‘but lulled into such an opium-like listlessness of vacant, unconscious reverie is this absentminded youth by the blending cadence of waves with thoughts that at last he loses his identity; takes the mystic ocean at his feat for the visible image of the deep, blue, bottomless soul pervading mankind and nature and every strange half seen, gliding, beautiful thing that elude him; every dimly-discovered, uprising fin of some undiscernible form, seems to him the embodiment of those elusive thoughts that only people the soul by continually flitting though it. In this enchanted mood, thy spirit ebbs away to whence it come; becomes diffused through time and space; like Wickliffe’s sprinkled Pantheistic ashes, forming at last a part of every shore the rough globe over..’

‘but while this sleep, this dream is on ye, move your foot or hand an inch, slip your hold at all; and your identity comes back in horror. Over Descartian vortices you hover` – (பகுதி 35)

மெல்வில்லால் மெய்யியலாளர்களைக் குறிப்பிடாமல் ஒரு பத்தியையும் எழுத முடியாது. பாய்மர உச்சியிலிருந்து கண்காணிப்புப் பணியின் போது இஸ்மயீல் மேற்கண்டவாறு சிந்திக்கிறான். சொல்லணிக் கலையின் ஈர்ப்பிற்கும், மெய்யியலின் கவித்துவ நிலைக்கும் இடையே நம்மை மிதக்கச் செய்யும் நாவலின் இந்தப் பகுதி நம்மைப் பலமுறை வாசிக்கச் செய்யும். நாம் அவனது நிலையைக் கற்பனை செய்கிறோம். மேலே நட்சத்திரங்களும், உயரத்தைத் தழுவும் இரவுக் காற்றும், அவ்வப்போது மின்னும் கடற்பரப்பில் நட்சத்திர ஜாலங்களைக் காட்டும் கடல் உயிரிகளும்…. கடல் மட்டுமே வழங்கச் சாத்தியமுள்ள காண்போன் இல்லாத கனவு. அப்படியொரு கனவிலே தோன்றும் நமது உருவங்களே நீரில், கண்ணாடிகளில் தம்மை வெளிப்படுத்துகின்றன. 

மோபி-டிக் : வெண்மையின் நாத்திகம் 

இந்தப் பெருங்கதையின் பருண்மை மையம் அதன் இறுதிப் பகுதியில்தான் வெளிப்படுகிறது. மோபி-டிக் எனும் அந்த அல்பைனோ வெள்ளைத் திமிங்கலத்தைக் காண நாம் ஐநூறு பக்கங்களைப் பொறுமையாகக் கடக்க வேண்டும். எனினும் நாவலின் எல்லாப் பக்கங்களும் மோபி-டிக்கை இலக்காகக் கொண்டே பயணிக்கின்றன. குத்தீட்டிகள் உடலில் சொருகியிருக்க, காயம்பட்ட அந்தக் கிழட்டு, கூன் விழுந்த திமிங்கலம் துணையற்றதாக, பெருங்கடல்களின் நெடும்பரப்பில், வானுக்கே சவால்விடும் நுரைபோன்ற புகையை வெளியேவிட்டு நீந்தித் திரிகிறது. 

–  பிளாட்டோவிய கருத்துருவான ஒரு துணைநிலைக் கடவுள் கச்சித்தமான வடிவிலும், துயரம் நிறைந்ததாகவும் படைத்த உலகின் உயிரியல் வடிவமா மோபி-டிக்?

– அல்லது ஒன்றுக்கொன்று வேற்றுமை பாராட்டாத, ஆழத்தில் ஒவ்வொன்றையும் இணைக்கும், அதே சமயம் ஒன்றுக்கொன்று ஈர்த்தும், விலக்கியும் இயங்கும் பெளதீக ஆற்றல்களின் உயிரியல் வடிவம்?

– அல்லது பிந்தைய நூற்றாண்டுகளில் வரப்போகும் பொருளியல் நாகரிகத்தினுடைய பேரழிவின் உயிரியல் வடிவம்?

– அல்லது இவற்றிற்கெல்லாம் தொடர்பே இல்லாத ஒரு கடல் உயிரி?

`மோபி-டிக்கின் ஆத்மீக மையநோக்கு பின்வருமாறு: நீண்டகாலம் நடத்தப்பட்ட அல்லது தவறான வழியில் நடத்தப்பட்ட தீமைக்கு எதிரான போர்` – இ. எம். ஃபார்ஸ்டெர், தீர்க்கதரிசனம் எனப் பொருத்தமாகப் பெயரிடப்பட்ட, `நாவலின் பண்புக்கூறுகள்` எனும் அவருடைய நூலின் பகுதியில் இவ்வாறு சொல்கிறார். ஆனால் போர்ஹேஸ் இதை இன்னும் விரிவாகவும், பொருத்தமாகவும் சொல்கிறார்.

‘நான் அதை ஒப்புக்கொள்கிறேன் எனினும், அண்டத்தின் பரந்து விரிந்த அமானுடத்தன்மையை, மிருகம்போன்ற அல்லது விசித்திரப் பொருள் கொண்ட முட்டாள்தனத்தை குறிப்பிடுவதைவிடவும், அண்டத்தை தீமை எனச் சொல்வதற்காகத் திமிங்கலத்தைக் குறியீடாகக் கொள்வது பொருத்தக் குறைவாகவே உள்ளது`. – (முன்னர் குறிப்பிட்ட கட்டுரை) 

ஒரு நீள் பிரதி, நீண்ட வாழ்வைப் போலவே பல்வேறு பொருள்விளக்கங்கள் தங்களுக்குப் போதுமான இடத்தைப் பெறுவதற்கான வெளியை தன்னகத்தே கொண்டது. எழுதியவனின் மனதிலிருந்தே எழுதப்பட்டவற்றின் ஆதியுருக்கள் தோன்றும் என்ற நம்பிக்கையுடன் இங்கே பொருள்விளக்கங்களைக் கைவிட்டு நாவலுக்குத் திரும்புவோம்.  

நாவல் அதன் நாற்பத்தி ஏழாவது பகுதியில் விரிவாக மோபி-டிக்கை அறிமுகம் செய்கிறது.  

‘அதனைத் துரத்தி அதனை நோக்கி ஈட்டியை நீட்டுவதென்பது மனிதர்களுக்கானதே அல்ல. அவ்வாறு முயல்வது தவிர்க்க முடியாமல் ஒரு விரைவான எடெர்னிடியாக பிளவுற்றுவிடும்`.

`அமரத்துவம் என்பதே காலத்தில் எங்கும் நிறைந்திருப்பதாக உள்ளதால் மோபி-டிக்கை எங்கும் நிறைந்திருப்பதாக மட்டுமல்ல, அமரத்துவம் வாய்ந்தததாகவும் அறிவிப்பது…`

`பாதி நுரையீரலோடும் பாதி இதயத்தோடும் வாழ அனுமதிக்கப்படும் வரை, ஆழ்ந்த மனிதர்களின், அவர்களையே உண்ணும் கெடுநோக்குள்ள முகமைகளின் மொத்த மோனோமேனியாக் திருப்பிறப்பாக அவர்களின் முன்னே நீந்துகிறது அந்த வெள்ளைத் திமிங்கலம்`.

`பித்துப்பிடித்த ஏஹாப்பிற்கு, கட்புலனாகத் தக்கவகையில் உருக்கொண்டிருக்கும் மொத்தத் தீமையும், எதார்த்தத்தில் மோபி-டிக்கில் தாக்குவதற்கு ஏற்றதாகவும் இருக்கிறது` – (பகுதி 41)

`தனியொருமையில் அழுகக் கூடியதாக இருந்தாலும், ஓர் உயிரினமாக திமிங்கலம் இறவாத்தன்மையுடையது. கண்டங்கள் நீரால் பிளவுறுவதற்கு முன்பாக கடல்களை நீந்திக் கடந்த அவன், கிரெம்ளின் மாளிகையும், வின்ட்ஸர் கோட்டையும், டுய்லெரின் தோட்டமும் இருந்த இடத்தின் மீதும் நீந்தியவன்….நெதர்லாந்தைப் போல, மீண்டுமொரு முறை உலகம் அதன் எலிகளைக் கொல்ல, வெள்ளத்தால் நிரம்பினாலும், எடெர்னலான திமிங்கலம் தப்பிப் பிழைத்து, நிலநடுக்கோட்டு வெள்ளைத்தின் வரைமுகட்டின் பின்பகுதியில், வானை நோக்கி அவனுடைய நுரையாலான அறைகூவலைப் பீறிடும்`. – (பகுதி 105)

`மோபி-டிக், சொர்க்கத்திலிருந்து வீழ்ந்த எல்லாத் தேவதைகளாலும் பீடிக்கப்பட்டிருப்பதைப் போலத் தெரிகிறது` (பகுதி 135). இங்கே ஏஹாப்பும், திமிங்கலமும், ஏன் இஸ்மயீலும்கூட ஒரே புள்ளியில் இணைகிறார்கள். 

கடல் உயிரின் மூலகம். ஆனால் அதுதான் படைப்பாற்றலின் உட்புறத்தில் ஒளிந்திருக்கும் அழிவாற்றலின் மூலகமும்கூட. எது வழங்கியதோ அதுவே எடுத்துக்கொள்கிறது எனும் மதக் கருதுகோளும், கடலின் இந்தப் பண்பிலிருந்தே தோன்றியிருக்கக் கூடும். கடல் உயிர்களின் மூலத்தோற்றங்களுக்கான இடம் மாத்திரமல்ல, கருதுகோள்களின் மூலத்தோற்றங்களுக்கான இடமாகவும் இருக்கிறது. மோபி-டிக் எனும் தனித்துத் திரியும் திமிங்கலம், கடலின் (இயற்கையின்/உலகின்) உட்புறத்தில் ஒளிந்திருக்கும் அழிவாற்றலின் குறியீடாக இருக்கிறது.

வெண்மையைப் புரிந்துகொள்ளாமல், நம்மால் மோபி-டிக்கைப் புரிந்துகொள்ள முடியாது. முதல் பார்வைக்கு, வெண்மை நம்மை ஏமாற்றமடையச் செய்கிறது. எந்த உணர்வுகளையும் தூண்ட முடியாத ஊமை நிறமான வெண்ணிறம், அனைத்து நிறங்களையும் பிரிதிபலித்து தனது அகத்தை எதுவுமற்றதாக வைத்திருக்கிறது. வெண்மை வேற்றுமைகளை அழித்து, ஒன்றோடும் கலவாமல் தனது நீடித்தத் தனிமையில் நிலைபெற்றிருக்கிறது. வெண்ணிறமன்றி தனிமையைச் சொல்வதற்குப் பொருத்தமான நிறம் வேறில்லை. ஒளியை நாம் வெண்ணிறத்திலேதான் உருவகிக்கிறோம்? அனைத்துக் கலாச்சாரங்களும் உலகம் தோன்றுவதைக் குறிக்க ஒளியைத்தான் பயன்படுத்துகின்றன. ஒளி தோன்றியதையே, உலகின் தோற்றமென அவை சொல்கின்றன. வெண்மை, தோற்றத்தைக் குறிக்கிறது. அது ஒருவகையில் விழிப்புணர்வின் தோற்றமும்கூட. 

மனிதன் கண்களைக் காண விரும்பும் ஏஹப்பிற்குத் தெரியும், `காலம் மனிதனோடு துவங்கியது` – (பகுதி 104) என. இதன் மற்றொரு பொருள் விழிப்புணர்வும் மனிதனோடு துவங்கியது என்பதே. வெண்மையை விழிப்புணர்வின் நிறம் எனக் கொண்டால், விழிப்புணர்வு தன்னைப் பிரசவித்துக்கொண்ட தருணத்தின் ஒப்பீடற்ற அசைவுகளின் பருண்மை வடிவமே மோபி-டிக். மோபி-டிக்கின் நிறம் வெண்ணிறம் என்பதற்கு எதிர்திசையிலிருந்து வந்தால், வெண்மையின் பருண்மை வடிவமே மோபி-டிக் எனும் கடலின் நீலப் பின்னணியில் நீந்தும் திமிங்கலம். 

வெண்மை அனைத்தையும் திரும்பக் கேட்கிறது. அனைத்தும் அதனிடம் திரும்புவதன் மூலம், ஓய்வு நிலையை, அமைதியை உணர முடியுமென்ற, கேட்க முடியாத அழைப்பு ஒன்றை ஓயாது உற்பத்தி செய்கிறது. வெண்மையில் ஒன்றிணைவதன் மூலமாக நாம் நம்மைக் கலைத்து விடுகிறோம். நம்மோடு, விழிப்புணர்வும், காலமும், பிரபஞ்சமும் தம்மைக் கலைத்து, மூலாதார வெண்மைக்குத் திரும்புகின்றன. பிரதிபலிப்பின் பங்களிப்பன்றி வெண்மையை, கருமையைப் புரிந்துகொள்ள முடியாது. நமது அனைத்து விழிப்புணர்வும் பிரதிபலிப்புகளைக் கலைத்து விடவே விரும்புகிறது. வெண்ணிறத்தின் நாத்திகம் நம்மை நம்பிக்கை இழக்கச் செய்யலாம், ஆனால் அது ஒருபோதும் அவநம்பிக்கை அல்ல. நம்பிக்கையை இன்றியமையாத ஒன்றாக ஆக்கும் இடத்திற்குச் செல்வதைக் காட்டிலும், நம்பிக்கை என்ற ஒன்றே தேவையற்ற இடத்திற்குச் செல்வது ஒருபோதும் குறைந்ததல்ல. நம்பிக்கை / அவநம்பிக்கையின் பாவுகளால் நெய்யப்பட்டதல்ல பிரபஞ்சம். வெண்மையை மெல்வில், “mystical cosmetic” (பகுதி 42) என்றே அழைக்கிறார். மோபி-டிக் இந்தப் பிரபஞ்சம் தனது முகத்தில் அணிந்திருக்கும் ஒப்பனைப் பொருட்களில் அசையக்கூடிய ஒன்று. மனிதர்களைத் தவிரவும், தான் வாழும் கோளத்தைப் பிரபஞ்சத்தின் முகமாகக் கண்டவர்களைப் பற்றி வேறொரு குறிப்பும் இதுவரையிலும் நமக்குக் கிடைக்கவில்லை. அனைத்துத் தோற்றங்களும் ஒப்பனைகளே. Cosmos எனும் சொல்தான் cosmetic எனும் சொல்லின் வேர்ச்சொல் எனப் போர்ஹேஸ் குறிப்பிடுவதை நினைவில் கொள்க.  

பல்வேறு நிறங்களின் பைத்தியக்காரத்தனமான உணர்ச்சிகள் வெண்ணிறத்தில் தம்மை இழக்கின்றன. வெண்ணிறப் பரப்பு ஒன்றைக் கண்டால் அதனில் நாம் அழுக்கையோ, வேறெந்த நிறத்தையாவது தீட்ட விரும்புவதோ எதனால்? நம்மால் இன்மையைப் பிரதிபலிக்கும் எதுவொன்றோடும் நட்பு பாராட்ட முடியாது. உயிரை நடுங்கச் செய்யும் நிறமே வெண்ணிறம். வெண்மை நம்மிடம் தூண்டும் அச்சவுணர்வு, எல்லையில்லா விடுதலையைக் கண்டு நாம் அடையும் அச்சமே. நாம் பல்வேறு நிறங்களின் சாதுர்யங்களை நிரந்தரமென வாழ்ந்து பழகியிருக்கிறோம். வெண்மை நமது சாதுர்யங்களை மதிப்பதேயில்லை. அது அனைத்தையும் ஏளனம் செய்வதோடு, நம்மை ஒரு பொருட்டேயில்லை எனவும் கருதுகிறது. அனைத்து நிறங்களோடும் மனிதர்களால் உறவாட முடிந்தால் வெண்ணிறம் மட்டுமே மனிதர்களோடு உறவாடுவதைத் தேர்ந்தெடுக்கிறது. ஒருவகையில் வெண்ணிறம் என்பது ஒரு பூனை.  

மெல்வில் மோபி-டிக்கை ஒரு கடல்வாழ் உயிரியாக மட்டுமே எழுத முனைந்திருந்தால் அதற்கு வெண்ணிறத்தை அளித்திருக்க மாட்டார். அவருக்கு முந்தைய கடல் நாவல்கள் எதிலும் திமிங்கல வேட்டை இவ்வளவு விரிவாகவும், குறியீட்டுத்தன்மையோடும் விவரிக்கப்பட்டதில்லை. ஒடிசியசின் நீண்ட கடற்பயணத்தில் அவன் ஒருபோதும் கடலின் பயங்கரங்களை எதிர்கொள்வதில்லை. அவனது பயங்கரங்கள் நிலத்திலேயே காத்திருந்தன. மோபி-டிக் அதனளவில் எதனையும் பிரதிபலிக்காமல், ஆனால் அவ்வாறு இருப்பதன் வாயிலாகவே அனைத்தையும் பிரதிபலிக்கிற ஒன்றாகவும் மாறிவிடக்கூடியது. நம்மால் மட்டுமல்ல, மெல்வில்லால்கூட இதை விரிவாக விவரிக்க முடியாது எனினும், நம்மைக் காட்டிலும் அதிக தூரம் ஓடக்கூடியவராக இருக்கிறார். 

மோபி-டிக் எனும் அந்தக் கிழட்டுத் திமிங்கலம், வெண்மையின் நாத்திகம். 

மெல்வில்:

தனது காலத்தில் பெரிதும் அறியப்படாதவராக இருந்திருக்கிறார் மெல்வில். போர்ஹேஸ் குறிப்பிடுவதைப் போல பிரித்தானிய கலைக்களைஞ்சியம் 1924 வரை அவரது பெயரையே சேர்த்திருக்கவில்லை. ஹங்கேரிய எழுத்தாளரான லாஸ்லோ கிராஸ்னஹோர்காய், புறக்கணிக்கப்பட்ட மெல்வில்லின் நிலைக்கான துவக்கத்தை மோபி-டிக் என்றே சொல்கிறார்.

`அமெரிக்க இலக்கியத்திலிருந்து விலக்கப்பட்டு, மெல்வில் நரகத்திற்குக் கீழிறங்கிச் சென்றது மோபி-டிக்கிலிருந்தே துவங்கியது` – (மன்ஹாட்டன் புராஜக்ட்)

தோல்வியடைந்த வியாபாரி ஒருவரின் மகனான மெல்வில், புனைவிலிருந்து தனது இறுதிக் காலங்களில் கவிதைக்குத் திரும்பியவர். இன்றோ அவருக்கென வழிபாட்டு மன்றங்கள் உலக இலக்கியத்தில் நிறுவப்பட்டுள்ளன. அவருடைய ரொமாண்டிசிச ஆங்கிலத்தின் பழந்தன்மையின் மீது எரிச்சல் எழுந்தாலும், மோபி-டிக்கின் கவித்துவத்தில் நம்மை இழக்காமல் இருப்பது கடினமே. கடலின் அமைதியை மெல்வில்லின் அளவிற்குத் துல்லியத்திற்கு அருகே சென்று எழுதியவரை நான் இன்னும் வாசித்திருக்கவில்லை.  

‘…an intense copper calm, like a universal yellow lotus, was more and more unfolding its noiseless measureless leaves upon the sea’ – (பகுதி 70)

அதே சமயம், மெல்வில் குறைந்த அளவிலேனும், மனித வெறுப்பை (misanthropy) இந்நாவலில் கையாண்டிருக்கிறார். எழுதி முடித்ததும், தன்னை இஸ்மயீலாகவும், ஏஹாப்பைத் தன்னுடைய தேவதைக் கதைகளின் நாயகனாகவும், மோபி-டிக்கைச் சீரழிவுமிக்க இந்த உலகாகவும் அவர் கண்டிருக்கக்கூடும். இரு இடங்களில் நம்மை நடுங்கச் செய்யும் வரிகளை எழுதுகிறார். 

`முன்னோர்களும், சமகாலத்தவர்களும், தேவையில்லாத நகல்களின் கும்பலாகவே (mob of unnecessary duplicates) தெரிகிறார்கள்`  – (பகுதி 107)

‘வெளிப்பார்வைக்கு இந்த உலகம் அதன் பல்வேறு பண்புகளில் அன்பினால் உருவானதாகத் தோன்றினாலும், புலப்படாத செயற்களங்கள் அனைத்தும் அச்சத்தினால் உருப்பெற்றிருக்கின்றன` – (பகுதி 42)

ஆம், நம்மில் பெரும்பகுதி அச்சத்திலேயும், வெறுப்பிலேயும்  இயங்குகிறது. மெல்வில் சொன்னது சரிதான், திகிலூட்டும் அச்சமே இந்த உலகின் அனைத்துக் கூறுகளிலும் நிலைபெற்றிருக்கிறது. அச்சமே வெறுப்பையும் தோற்றுவிக்கிறது. நமது புறவாழ்வின் பாதுகாப்புகள் அனைத்துமே நமது உள்ளார்ந்த அச்சத்தின் வெள்ளத்திற்கு அணைகட்டும் முயற்சிகளே. மெல்வில் இந்த அச்சத்தை விவிலியக் கதைகளுக்குச் செல்வதன் மூலம் தணிக்கப் பார்க்கிறார். நாவலில் ஓரிடத்திலும்கூட இயேசுவை அவர் குறிப்பிடுவதில்லை. பழைய ஏற்பாட்டின் கதைகளையே அவர் திரும்ப நிகழ்பவையாகக் காண்கிறார். கூடவே ஷேக்ஸ்பியரையும். கவிஞர் சார்லஸ் ஆல்ஸன், மெல்வில் அடிக்கோடிட்டுப் படித்த ஷேக்ஸ்பியர் நாடகப் புத்தகத்தை தேடிச்சென்று பார்த்தவர். இந்நாவலுக்காக மெல்வில் வாசித்தவற்றிலிருந்தே இந்நாவலும் எழுதப்பட்டுள்ளது. அமெரிக்காவில் பயணம் செய்த மாயாஜாலக்காரர் முதலாக, இலண்டன் துறைமுகத்தில் மாறுவேடமிட்டு பணிபுரிந்த ஜார் அரசன் வரையிலும், வானியல், சோதிடம், கடற்பயணக் கதைகள், விவிலியம், இந்தியத் தொன்மங்கள், புவியியல், அறிவியல், மெய்யியல் என இந்தப் பெரும்பிரதியில் கையாளாத துறைகளே இல்லை எனினும், இவையனைத்தும் சேர்ந்து கவிதைக்கே அழைத்துச் செல்கின்றன.  

நாவலில் தனக்கே சொல்லிக்கொள்வதைப் போல, எழுதுகிறார்:

`வல்லைமை வாய்ந்த ஒரு புத்தகத்தை உற்பத்தி செய்வதற்கு, வல்லமை வாய்ந்த கருப்பொருளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்` – (பகுதி 104)

ஆனால் மெல்வில், தன்னுடைய பிரதியில் சீரற்றவராகவே (inconsistent) இருக்கிறார். இஸ்மயீல், குவெகுவெக்கை மறந்ததைப் போல, திடீரென அவர் கதையையும் மறந்துவிடுகிறார். இந்தச் சீரற்ற தன்மை, எதார்த்தவாதத்திற்கும், நவீனத்துவத்திற்கும் முந்தைய அனைத்து நாவல்களின் பொதுவான அம்சமாக இருக்கிறது. மெல்வில், டிரிஸ்ட்ரம் ஷாண்டியின் “வாழ்வும் எண்ணங்களும்” நாவலை வாசித்திருக்கிறார் என்பதை அறிவதே நாவல் கட்டமைப்பின் சீரற்ற தன்மையைப் புரிந்துகொள்ள போதுமானதாக இருக்கிறது.

மெல்வில்லின் மேதைமை எதனையும் முன்வைக்காமல், திமிங்கல வேட்டைத் தொழிலைப் பற்றியும், அதன் இலாப, நட்டங்கள், திமிங்கல எண்ணெய் எவ்வாறெல்லாம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என வாசிப்பவரை சோர்வூட்டச் செய்யும் வகையில் எழுதப்பட்ட அசட்டுத்தனமான பகுதிகளுக்கு அருகேயே கவித்துவ வசீகரத்தின் கண்ணாடித் தொட்டிகளில் நீந்தும் மெய்யியல் மச்சங்களின் அசைவுகளைச் சொல்லும் பகுதிகளையும் அடுக்கியிருப்பதிலேயே செயலாற்றியிருக்கிறது.    

டி.எச்.லாரன்ஸ், மெல்வில்லை வளவளவென எழுதுபவர் என்பதோடு, சில சமயம் கோமாளியின் அசட்டுத்தனங்களும் அவருடைய எழுத்தில் நிரம்பியிருக்கிறது என்கிறார். வேட்டைக் கதையிலிருந்து தன்னை அவ்வப்போது விடுவித்துக்கொள்ளும் நாவலில், இஸ்மயீல் இடையிடையே மறைந்து போய், மெல்வில் திமிங்கல வேட்டை வணிகத்தின் அருமை பெருமைகளைப் பேசும் பகுதிகளில் நாம் உண்மையில் சோர்வடைகிறோம். சற்று முன்பு நம் முன்னே மொழியின் அற்புத உருவங்களைத் தனது விரல்களின் அசைவில் வரைந்து காட்டிய ஓவியன் ஒருவன், சட்டெனத் தனது ஆடைகளைக் கலைந்து பிட்டத்தைக் காட்டிக் கேலிசெய்யும் கோமாளியாக மாறிவிடுவதை நம்மால் எளிதில் நம்பமுடிவதில்லை. உதாரணத்திற்கு, திமிங்கலவியல் (Cetology), வழக்கறிஞர், வடிகலக் குப்பி எனும் பகுதிகள்..

`வழமையான கதையாடலின் மீது சலிப்படைவதிலிருந்து அவர்களுடைய மேன்மையை அடைந்த மாபெரும் நாவலாசிரியர்கள் சிலரை இலக்கிய வரலாறு காண்கிறது. ஒரு தன்னிலையோ அல்லது கதைக்கருவோ இல்லாமல் எழுத உறுதிபூண்டு விர்ஜீனியா வுல்ஃப், திருமதி. டால்லோவே எனும் நாவலை எழுதினார். எங்கிருந்தோ தனது கலையை எடுத்து ஊதித்தள்ளும் பிக்காசோவைப் போன்றே, ஜேம்ஸ் ஜாய்ஸ் கதையாடல் கலையின் மீது தாக்குதல் தொடுக்கும் முன்பு அக்கலையில் தன்னை நிரூபித்தவர்… மெல்வில்லின் மேதைமை இல்லா வேறொரு எழுத்தாளர் இந்நாவலை ஒரு குறுநாவலாகவே எழுதக் கருதியிருப்பார்`.

மோபி-டிக்கின் உருவாக்கம் எனும் கட்டுரையில் இ.எல். டாக்டரோவ் நாவலின் கட்டமைப்பைப் பற்றி மேற்குறிப்பட்டவாறு சொல்கிறார்.

ஒரேயொரு பக்க அளவிலும், பல பக்கங்களாகவும் மொத்தம் நூற்றி முப்பத்து ஐந்து பகுதிகளில் எழுதப்பட்ட இந்நாவல் தன் காலத்தின் வாசிப்பு முன்னுரிமைக்கும், எழுதும்போது வெளிப்படும் தவிர்க்க முடியாத வெளிப்பாடுகளுக்கும் இடம் கொடுத்தே எழுதப்பட்டதென்று கருதுகிறேன். மெல்வில்லின் காலத்தில் கடல் நாவல்களின் ஆயுள் ஏறக்குறைய முடிவை எட்டியிருந்தது. காலனிய ஆங்கிலப் பேரரசு உலகைத் தனது செஞ்சிறகுகளால் போர்த்தியிருந்தது. ஆச்சரியகரமாக மெல்வில் இந்திய காலனி ஆதிக்கம் பற்றி போகிற போக்கில் ஒன்றிரண்டு சொற்களையும் நாவலில் ஒலிக்க விடுகிறார். இந்நாவல் உலகின் மேற்குக் கரையில் வெளிவந்த அடுத்த ஆறு ஆண்டுகள் கழித்தே, வெடிமருந்தின் நெடியைக் காற்றில் பரவவிட்டு உலகின் தென்கிழக்குப் பகுதியில் முதல் இந்திய சுதந்திரப் போர் எழுகிறது. மெல்வில், ஜேம்ஸ் ஜாய்ஸைப் போலவே நாவல் எனும் வடிவத்தைக் கொல்லும் அரை உத்தேசத்தோடு கடல் நாவல்களின் கல்லறைப் பலகையாக தனது நாவல் அமைய வேண்டுமென்று மோபி-டிக்கை எழுதியிருக்கலாம். எவ்வளவு தீவிரமாக திமிங்கல வேட்டை வணிகத்தை ஆதரித்து அவர் எழுதியிருந்தாலும் இன்று வாசிக்கையில், டான் கிஹோத்தே வீரசாகச வாழ்வைப் பற்றிப் புலம்பியவற்றிற்கு ஒப்பாகவே அதனைப் பாரக்க முடிகிறது. ஆச்சரியகரமாக, மெல்வில் செர்வாண்டஸைப் பற்றியும் ஓரிடத்தில் குறிப்பிடுகிறார். ஹெர்மன் மெல்வில்லை, தயங்காமல், அமெரிக்காவின் செர்வாண்டஸ் என்றே சொல்வேன்.  

இந்நாவலில் குறிப்பிடப்படும் மெய்யியலாளர்களின் பட்டியல் நீண்டது. மெல்வில்லிற்கு கிரேக்கத்திலிருந்து துவங்கிய ஐரோப்பியத் தத்துவத்தின் வரலாறு மட்டுமல்ல, அது எவற்றையெல்லாம் விவாதித்திருக்கிறது எனவும் தெரிந்திருக்கிறது. ஸ்டாயிக்குகள், ஸ்பினோசா, தெகார்தே, பிளாட்டோ, பாஸ்கல் என அவர் குறிப்பிடும் மெய்யியலாளர்களின் பட்டியல் நீண்டது மட்டுமல்ல, மெல்வில்லின் இந்தப் பிரதியின் மெய்யியல் பங்களிப்பும் விரிவாகப் பேசத்தக்கது.  

‘ஐரோப்பிய நாகரிகத்தை விழுங்கிய மோபி-டிக்`கிலிருந்தே, அமெரிக்க இலக்கியம் துவங்குகிறது என்கிறார் இ.எல். டாக்டரோவ்.  

இருக்கலாம். என்னளவில் மோபி-டிக் அல்லது திமிங்கலம் எனும் இந்நாவலை, மெவ்லில் எனும் இளைஞன், மெய்யியலின் மீது மென்மையாக நிகழ்த்திய கவித்துவத் தாக்குதல் என்றோ அல்லது உலகின் மீது கவித்துவ ஆற்றலோடு நிகழ்த்திய மெய்யியல் தாக்குதல் (philosophical assault) என்றோ சொல்வேன்.