இம்முறை நாற்காலி கிரீச்சிடும் ஒலி எஸ்.ஐ. அறையிலிருந்து பலமாகக் கேட்டது. நான் திரும்பி ஹெட் கான்ஸ்டபிள் நடராஜனைப் பார்த்தேன். “கொட்ட வீங்குன நாய் மாதிரியாக்கும் இப்ப அவரு நெலம. ஒரு இடத்துல உக்கார விடாது பாத்துக்க” என்றார். காற்று உப்பிய பலூன் போல சுருக்கங்கள் மறைந்து முகம் சிரித்துத் தெளிவடைந்தது. கண்முன்னே மேலதிகாரி சிக்கலில் மாட்டித் தவிக்கும் தருணம் அவரின் நாற்பதாண்டு கால அனுபவத்தில் அதிகம் வாய்த்திருக்காது. வெறும் ஆறு மாத காலப் பணியிலேயே அதன் அருமை எனக்குப் புரிந்தது. உள்ளூர நானும் அந்த நிலைமையை அனுபவித்துக்கொண்டிருந்தேன்.

அறையின் துணித்திரையை விலக்கிக்கொண்டு எஸ்.ஐ வெளியில் வந்தார். ஒருமுறை வாசலின் வெளியே எட்டிப் பார்த்துவிட்டு சுவரோரமாய் இருந்தவர்களிடம் சொன்னார். “கடேசியாக் கேக்கேன், எவென் களவாண்டதுன்னு ஒழுக்க மயிரா சொல்லிடுங்க. லத்தி எடுத்து விளாருனா ஒவ்வொருத்தன் கொட்டையும் கலங்கிப் போவும்.”

குளிர்காலத்தில் கோழி கூவுவது போல குரல் கரகரத்திருந்தது. விட்டால் கெஞ்சிவிடுவாரோ என்றுகூடத் தோன்றியது. ஆட்களைப் பிடித்து வந்து மூன்று நாட்களாகி விட்டன. காலையில் தனஸ்ரீ ஜீவல்லர்ஸ் கடையிலிருந்து போன் வந்துவிட்டது. கணேசலிங்கச் செட்டியார் எந்த நேரமும் வந்துவிடுவார்.

மற்ற கைதிகள் என்றால் இந்த நேரம் கருக்கம்பு விளாசலில் உண்மை வந்திருக்கும். ஆனால் இவர்களை ஒன்றும் செய்ய முடியாது. 

திருட்டு நடந்த அன்று மாலையில் ஆத்திரத்துடன் வேகமாகத்தான் எஸ்.ஐ வந்தார். சிதறிய தீக்குச்சிகளைப் போல் கலைசலாக நின்றிருந்தவர்களைப் பார்த்துவிட்டு ஒருகணம் நின்றுவிட்டார். மெல்ல அருகில் வந்த ஹெட் கான்ஸ்டபிள் நடராஜன் சார் நிதானமாக, “அடிமட்டி வகையறா சார்” என்றார். 

சுள்ளிகள் போன்றிருந்த கைகளும் கால்களுமான ஒரு கூட்டம் அவர் முன் நின்றிருந்தது. மொத்தம் பதிமூன்று பேர். முதல் பார்வைக்குக் கேலிச்சித்திர மனித உருவங்கள் போலவே அவர்கள் தோன்றினர். ஒவ்வொருவரின் உடலிலும் அந்தக் கேலி இருந்தது. சிலருக்குச் சூம்பிப்போன கைகளாக, சிலருக்கு வளைந்த கால்களாக. மூட்டில்லாத அவை அவர்களின் ஒவ்வொரு அசைவிற்கும் தங்கள் போக்குக்கு ஆடிக்கொண்டிருந்தன. திமிறும் குழந்தைகளை அடக்க முயலும் பெரியவர்களைப் போல உடலைக் குறுக்கி அவற்றைத் தங்களுடன் சேர்த்துக்கொண்டனர்.

சதையில்லாத மெலிந்த உடல்கள். பல்லிக் கண்கள் அவ்வுடலை மீறிப் புடைத்து நின்றிருந்தன. என்ன செய்வதென்று தெரியாமல் எஸ்.ஐ தளர்ந்து நின்றிருந்தார். அடித்து உண்மையை வெளிக்கொணர முடியாது. ஒரு அடி தவறாகப் பட்டாலும் உயிர் போய்விடும் அபாயம் கொண்டவர்கள். அவரிடம் ஒரே ஆயுதம்தான் இருந்தது. வயித்தைக் காயப்போடுவது. 

மறுநாள் மதியம் வரை அவர்களுக்கு எதுவும் தரப்படவில்லை. நான் கொஞ்சம் தயக்கத்துடன் ஹெட் கான்ஸ்டபிளடம் கேட்டேன்.

“சார் ஏதாவது கொஞ்சம் சாப்புடக் குடுக்கலாம் சார். செத்துடப் போறானுக.”

“யாரு இவனுகளா? பட்டினி என்ன இவெங்களுக்குப் புதுசா? வெளிய இருந்தாலே ஒருவேளதான் சாப்பிடுவானுக.”

“காசில்லாமையா?”

“காசுக்குப் பிரச்சினையில்லை. உண்மையச் சொல்லணும்னா பஜாருல இவனுகளுக்கு கிராக்கி ஜாஸ்தி. எல்லாக் கடை மொதலாளிக்கும் இப்படி ஒருத்தன் இருந்தா வசதிதான்.“

“அப்படியா?”

“ஆமா. இவனுகளுக்கு வீடுன்னு ஒன்னு கெடையாதுல்ல? ராக்காவலா கடைவாசல் முன்னாடி கெடப்பானுக. எளவெடுத்தவனுகளுக்கு தூக்கம்னு ஒன்னு வராது. விடியவெள்ளன நாலு மணிக்கு பூ மார்கெட் லோடும் காய்கறி லோடும் வரும்போது கடைய தெறந்து மூடுவானுக. அந்த கடை மொதலாளிகளும் கேக்குற காசா குடுத்துடுவாங்க. ஆனா கைசேருற காசெல்லாம் கஞ்சாவா கரைஞ்சி போயிடும்.”

“ஏன்?”

“ஆளப் பாத்தாத் தெரியல. நரம்பனுங்களா இருக்குறது எதனாலங்குற? அத்தனை பயலும் வயித்து ரோகம் கொண்டவனுக. பிடி சோறு தாண்டி உள்ள இறங்காது. மீறி தின்னா வாந்தியெடுத்துவானுக. உள்ளுக்குள்ள ஒரு கை அத்தனையையும் வெளிய தள்ளிக்கிட்டிருக்கு.”

“கஞ்சாவாலயா?”

“கஞ்சா, பான்பராக். சின்ன வயசுல பட்டினி எல்லாந்தான். பட்டினிக்காக கஞ்சா இழுத்து அதனால வயிறு இன்னும் கெட்டுருக்கும்.”

கொஞ்சம் நிதானித்து மெதுவாகச் சொன்னார். “வயிறுதான் மனுஷனோட உண்டியலு பாத்துக்க. அவனோட சம்பாத்திய வேகமெல்லாம் அங்கயிருந்துதான் ஆரம்பிக்குது. மொதோ வயித்து ருசி. அதிலருந்து பொண்ணு ருசி, உடுப்பு ருசின்னு எல்லாம் வளருது. ஆனா இவனுக உண்டியல் கண்ணு எப்பவோ அடைச்சுப் போச்சு.”

திரும்பி நான் அவர்களைப் பாத்தேன். ஆமாம், தீக்குச்சிகள் போலத்தான் இருந்தனர். மண்டை மட்டும் பெருத்து வற்றிய உடல் கொண்ட தீக்குச்சி. உடல் வளைந்த சுள்ளி போல இருந்தது. அவர்கள் அனைவரும் ஒன்றிலிருந்து உடைந்து சிதறியவர்களாக இருந்தனர். அரைக்கண்ணில் பார்த்தால் எவரையும் தனித்து அடையாளம் காண முடியாது. ஈர்க்குச்சியில் படிந்த நூலாம்படையாக அவர்களின் தொளதொளத்த சட்டை காற்றுக்கு அசைந்துகொண்டிருந்தது.

அவர்களில் இருந்து கண்களை என்னால் விலக்க முடியவில்லை. பார்க்கும் போதே புகையாகக் கரைந்து மறைந்துவிடுவார்கள் என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன். வேலைக்குச் சேர்ந்த இந்த ஆறு மாதக் காலத்தில இவர்கள் எவரையும் நான் பார்த்த நினைவே இல்லை. இத்தனைக்கும் திருட்டு நடந்த பஜாரின் நடுவில்தான் எங்கள் ஸ்டேஷனே இருந்தது. எங்கள் காவல் நிலையம் பெயரே “பஜார் ஸ்டேஷன்”தான்.

பஜாரை முழுக்கத் தெரியும் என்கிற நினைப்பில் இருந்தேன். தினமும் ஒருமுறையாவது பஜாரை ரோந்து வரவேண்டும். அதை விரும்பி செய்தேன். கூரைக் கடையில் மூணரை மணிக்கு பால்பன் போட்டால் எத்தனை மணிக்கு அங்கு கூட்டம் சேரும் என்பது தெரியும். செல்வராணி கட்பீஸ் செண்டரில் அரைமணி நேரம் முன்னாடியே சீரியல் பல்புகளை முகப்பில் எரியவிடுவதற்கும் அடுத்த வாரத்தின் தொடர் முகூர்த்தங்களுக்கும் இருக்கும் இணைப்பு என்ன என்பதை என்னால் கண்டுகொள்ள முடிந்தது. தொழில் என்பது மக்களின் புலன்களை நிரப்புவதுதான். மணமாகவோ, காட்சியாகவோ, ஒலியாகவோ! அதை வெற்றிகரமாகச் செய்பவன் சிறந்த முதலாளி ஆகிவிடுகிறான் என்பது புரிந்தது.

ஆனால் இவர்கள் என் நினைவில் இல்லை. முந்தைய நாள் நடராஜன் சாருடன் நானும் இவர்களைப் பிடித்து வரப்போனேன். வீதிகளில் பாம்பு பிடிப்பவன் மகுடி ஊத எங்கெங்கோ இருந்து வெளிப்படும் பாம்புகள் போலத்தான் இருந்தது. நினைத்திராத இடங்களில் இருந்தெல்லாம் வெளிவந்தனர். நடராஜன் சாரிடம் கேட்டதற்கு, “அது அப்படித்தான். பஜாருக்கு வர்ற மக்களெல்லாம் பரபரத்துக்கிட்டே இருக்கிறவன்க. அந்தத் துடிப்பத்தான் நாம ஒடம்பாக பாக்குறோம். இவனுக துடிப்பில்லாதவனுக. பில்டிங் மாதிரி கடை சாமாங்க மாதிரி அசைவில்லாம இருக்குறதுனால நம்ம கண்ணுகள்ல நிக்கிறதில்ல” என்றார். 

ஒரு முழு நாளும் பட்டினி இருந்தவர்களைப் பார்த்தேன். அமைதியாகக் குறுக்கி அமர்ந்திருந்தனர். கிழித்த கரிக்கோடுகள் போன்ற உடல்கள். பக்கவாட்டில் திருப்பி நிறுத்தினால் ஜெயில் கம்பிகளோடு கம்பிகளாக்கி விடலாம்.

அடிமட்டி வகையறாதான். சாக்கடையில் அடிவண்டலாகப் படிந்திருக்கும் மட்டிச்சேறு. எவரும் அணுக முடியாது. தொட்டால் ஒட்டிக்கொள்ளுமென்றும் அடித்தால் மேல் தெறிக்குமென்றும் பயம். ஆகவே பட்டினியாக்கி காயப்போடுகிறார்கள். ஈரம் உலர்ந்து இறுகினால் அணுக முடியும். அப்புறம் அதை ஈட்டியால் குத்திச் சிதைக்கலாம் என்கிற எண்ணம். ஆனால் எவனும் வாய் திறக்கவில்லை. இன்று காலையுடன் மூன்றாவது நாளாகிவிட்டது.

எஸ்.ஐ அருகிலிருந்த நாற்காலியை இழுத்துப்போட்டு அமர்ந்துகொண்டார். அவரின் எடை அதிக நேரம் நிற்க விடாது. கனத்த தொடைகள் உரசாமல் இருக்க கால்களை அகட்டிக்கொண்டுதான் அமர்வார். அப்போது பார்ப்பதற்கு விரை வீங்கிய ஆள் போலத்தான் இருந்தார். சிரிப்பை அடக்கிக்கொண்டு ஹெட்கான்ஸ்டபிளைப் பார்க்க அவர் தீவிரமான முகத்துடன் வேண்டாமெனத் தலையசைத்தார்.

எதிர்ப்பக்கமிருந்த டீக்கடையிலிருந்து வத்தலு பையன் ஒவ்வொருக்கும் வந்து டீ தந்தான். எஸ்.ஐ ஆமை வடையைப் பிய்த்து ஆவிபறக்க வாயில் போட்டு சூடு ஆற உள்ளேயே உருட்டினார்.

சுவரோரமாக நின்றிருந்தவர்களிடம் சென்றவன் தனியாகக் கொண்டுவந்திருந்த பிளாஸ்டிக் கவரிலிருந்து டீயை சிறிய பேப்பர் கப்புகளில் ஊற்ற அவர்கள் எடுத்துக்கொண்டனர். கப்பின் விளிம்பில் உதடைத் தயக்கத்துடன் பொறுத்தி ஒரு நொடி மட்டும் உறிஞ்சி வெளியெடுத்தனர். தீக்கங்கை வருடுவது போல இருந்தது அவர்களின் செயல். தொட்டெடுத்து மெதுவாக டீயைக் குடித்தனர். அநேகமாக இன்றைக்கான ஒரே உணவு அதுவாகத்தான் இருக்கும்.

ரைட்டர் பூபாலனை அழைத்து, “சிசிடிவி பூட்டேஜை வாங்கியாச்சா?” என எஸ்.ஐ. கேட்டார். முனங்கிக்கொண்டே வந்தவன், “அவென் என்ன பண்ணுவான்? இதுக்கு மேலேன்னா அவனே ஆளு வெச்சு திருடித்தான் காமிக்கணும்” என்றார்.

“என்ன?” எரிச்சலுடன் கேட்டார்.

“இல்ல சார், எல்லாக் கேமரா பூட்டேஜையும் பாத்துட்டாரு சார். எதுலயுமே தெரியல.”

“என்னய்யா, அவ்வளவு பெரிய கடை. எப்படியா விட்டுப்போச்சு?”

“சார், கொஞ்ச நஞ்ச கூட்டமா? மொத்த ஊருமில்ல கடைக்குள்ள இருந்திருக்கு. ஆளுக மொகத்தப் பாக்கணுமே? அருள் வந்தவங்களாட்டம்”

கான்ஸ்டெபிள் வெங்கடேசனும் இணைந்துகொண்டார்.

“பின்னே? செட்டியார் இந்த ஊர் கடவுளு மாதிரிதான? பத்து வருஷம் முன்னாடி ஒன்னுமில்லாம இருந்த இந்த வீதியில மொதோக் கடைய ஆரம்பிச்சாரு. இன்னைக்கு இது மெயின் பஜார். தெக்க சங்கரன்கோவில் வரையக்கூட ஆளுக வந்து நகை வாங்கிட்டுப் போறாக.”

அவர்கள் சொல்வது உண்மைதான். டவுனின் மையமாகிவிட்டது இந்தக் கடைவீதி. இங்கு ஆரம்பித்தவர் தமிழ்நாடு முழுவதும் பரவிவிட்டார். தொலைக்காட்சியில் பத்து நிமிடங்களுக்கு ஒருமுறை கடையின் விளம்பரம் வருகிறது.

கடைத்திறப்பிற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே எங்களுக்குப் பஜாரில் கண்காணிப்புப் பணி போடப்பட்டது. பகல் வேளைகளிலும் ஆட்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். அனைத்துக் கடைகளுக்கு முன்பும் மக்கள் குழுமியிருந்தனர். சிரிப்பும் பேச்சுமாக அவர்களின் ஓசை காற்றை நிறைத்திருந்தது. பொங்கிய பால் நுரை விளிம்பைத் தொட்டு  ததும்பிக்கொண்டிருப்பதைப் போலத் தோன்றியது கடைத்தெரு.

நானும் நடராஜன் சாரும் பேசிக்கொண்டே நகைக்கடைக்கு முன் வந்தோம். ஐந்தடுக்கு மாடியுடன் நின்றிருந்த கடையின் உடலெங்கும் வண்ணச் சர விளக்குகள் படர்ந்திருந்தன. அதன் உச்சியில் பிரம்மாண்டமான வினைல் போர்டு தட்டி கோட்டைக்கொடி போல நின்றிருந்தது. இடுப்பில் கை வைத்து கட்டடத்தைப் பார்த்துக்கொண்டிருந்தவர், “பிரம்மாண்டமான சக்கரக்கட்டி” என்றார். அதைச் சுற்றி மக்கள் சுழித்துச் சென்றுகொண்டிருந்தனர். “எறும்புகளால அதைத் தவிர்க்க முடியாது. அதைத் தாண்டிப் போகவும் முடியாது” என்றார்.

ஸ்டேஷன் முன்னால் கார் வந்து நின்றது. தனஸ்ரீ ஜீவல்லர்ஸ் முதலாளி கணேசலிங்கம் செட்டியார் இறங்கி உள்ளே வந்தார். நிதானமான நடை. தண்ணீரில் நடப்பது போன்ற பாவனையில் வந்தார். அதுவரை பரபரப்பாய் இருந்த ஸ்டேஷன் அமைதியானது. அவரிடம் இருந்த அமைதி பரவி மொத்த அறையை நிரப்பியது போல இருந்தது. செட்டியாருக்கு அதிகம் வயதாகிவிடவில்லை. ஆனால் தன் வயதைவிடப் பத்து வயது அதிகமாகத் தெரியும்படி உடை அணிந்திருந்தார். அது அவரை இன்னும் மதிப்பு மிக்கவராய் காட்டியது.

என்னைக் கடந்துசெல்கையில் அவரது உடலில் இருந்து நறுமணம் எழுந்தது. அவர் உபயோகிக்கும் வாசனைத் திரவியமும் அவரது உடல் மணமும் இணைந்து அதை எழுப்பியது. அவர் நாற்காலியில் அமர அவசர நடையில் எஸ்.ஐ அருகில் வந்தார். “விசாரிச்சிட்டு இருக்கோம் சார். எப்படியும் இன்னைக்கு தெரிஞ்சுரும் சார்.”

கேட்டு மெலிதாகத் தலையசைத்துக்கொண்டார். ஒரு வாரமாக வெளியூரில் இருந்தவர் இன்றுதான் வந்திருக்கிறார். அவரின் உள்ளே என்ன ஓடுகிறது என்பதை அறிய முடியவில்லை. ஆனால் உள்ளே ததும்பிக்கொண்டிருந்தார். அதிவேக ரயில் கடந்து செல்கையில் அதிரும் செடி நுடியைப் போல. வெளிப்படையாகக் கண்ணில் தெரியவில்லையென்றாலும் அதை உணர முடிந்தது. 

“ஒருத்தரை விடாம அத்தனை பேரையும் பிடிச்சிட்டு வந்திருக்கோம் சார்.” எஸ்.ஐ சுட்டிக்காட்டிய திசையில் கணேசலிங்கம் பார்த்தார். அவரின் முகத்தில் வெளிப்படையாகவே ஆச்சரியம் தெரிந்தது. “இவனுகளா?” என்றார்.

“ஆமா சார். இந்தக் கும்பல்ல எவனோ ஒருத்தன்தான்”. தீர்மானமாகக் கூறினார்.

வளைந்த கைகால்களைத் தங்களுடன் சேர்த்துக்கொண்டு அனைவரும் உடல் ஒட்டி நின்றுகொண்டனர். கிழித்த கரிக்கோடுகள் போல நின்றிருந்த அவர்களைக் கண்ணெடுக்காமல் செட்டியார் பார்த்துக்கொண்டிருந்தார்.

தெளிவுபடுத்தும் பொருட்டு அவரின் அருகில் சென்று கூறினேன். “வழக்கமா திருடுற ஆட்கள் இதத் திருடல சார். மண்டை கூறுள்ளவன் எவனும் பெரியாளுக கடையில கைவெக்க மாட்டானுக சார்.”

எஸ்.ஐ சுவரருகில் நின்றிருந்தவர்களைக் காட்டி, “இவனுக பூரா போதைக் கேசு சார். எவனுக்கும் நிதானம் கெடையாது. சொல்லப்போனா திருட்டு நெனப்போட கூட கடைக்குள்ள நுழைஞ்சிருக்க மாட்டானுக. அந்த நேரத்துல புத்தி மளிங்கி எவனோ பண்ணிருக்கான். அப்புறம் வேறெவனுக்கும் அந்த இடுக்குக்குள்ள போற கை கெடையாது.”

அவரின் முகத்திலிருந்த உணர்வுகள் அவருக்கு இன்னும் முழுமையாக விவரம் தெரியவில்லை என்பதைக் காட்டியது. நான் விளக்கினேன்.

“கடை திறந்த அன்னைக்கு முகப்புக் கூடத்துலதான் கஜலட்சுமி சிலையை வெச்சிருந்தாங்க. திறப்பு விழாவுக்காக செஞ்சிருந்த பதக்க மாலைய சாமி கழுத்துல போட்டு வழக்கமா வெக்குற இடத்துல வெச்சாச்சு சார். வெச்சுட்டு கிரில் கதவைப் பூட்டுன பிறகுதான் காணாமப் போயிருக்கு.”

அதுவரை முடிச்சிட்டிருந்த புருவம் மெல்ல விடுபட்டது. “பூட்டுனதுக்கு அப்பறமா?”

“ஆமா சார். சாதாரணமா திருடுற பயக்க விரலு அதுல போகாது.”

“ம்ம்ம்..” என்றார். அந்தக் கிரில் கதவு அவரின் நினைவுக்கு வந்திருக்க வேண்டும். சிலையைச் சுற்றி நீள் கம்பிகளால் ஆன கதவு. ஒரு விரல் போகிற அளவுதான் இடைவெளி இருக்கும். கொஞ்சம் தசைப்பிடிப்புள்ள விரல்கள்கூட உள் நுழைய முடியாது. மண்ணுள்ளிப் பாம்பு போல உள்நுழைந்து தொட்டுச் சுருட்டி எடுத்தால்தான் சாத்தியம்.

கான்ஸ்டபிள் ஓடிவந்து நடராஜனிடம் பூட்டேஜ் வந்துவிட்டதாகக் கூறினான். அதைக் கேட்டுத் திரும்பிய செட்டியாரைப் பார்த்து அருகில் வந்து, “காமிராவிலையும் ஒன்னும் கெடைக்கலை சார்.”

எஸ்.ஐ தன் செல்போனில் வீடியோவை ஓடவிட்டார். சிலைக்குப் பக்கவாட்டுக் காமிராவில் பதிவான வீடியோ. “எளவெடுத்த மேனேஜரைச் சொல்லணும். கிப்ட் பாக்ஸை கொடுக்க வேற இடம் கிடைக்கலையா?” எனச் சலித்துக்கொண்டார். 

கடைத் திறப்பன்று முதல் நூறு பேருக்குப் பல்வேறு இனிப்புகள் கொண்ட பரிசுப் பெட்டிகள் வழங்கப்படுமென்று அறிவிக்கப்பட்டிருந்தது. மேனேஜர் பூஜை முடிந்ததும் கொடுக்க ஆரம்பித்தார். நேராக சிசிடீவிக்குக் கீழே மேடை போடப்பட்டு அதில் ஹோமம் நிகழ்ந்திருந்தது. விநியோகிக்க வசதியென்று மேனேஜர் அதில் ஏறிக் கொடுக்க, அனைவரும் அந்த மேடையைச் சூழ்ந்துகொண்டனர்.

செல்போன் திரையில் கருப்பு வெள்ளையாகத் தெரிந்த கஜலட்சுமி சிலையைத் திடீரெனப் பல நூறு கைகள் ஒன்றாகச் சேர்ந்து மறைத்தன. அத்தனை கைகளும் இனிப்புக்காக இறைஞ்சுவது தெரிந்தது. நெளியும் நாக்குகள் போல அனைத்து விரல்களும் அசைந்துகொண்டிருந்தன. எனக்கு எனக்கு என அவை தவித்துக்கொண்டிருந்தன. பொட்டலங்கள் கைகளின் வழியாக மிதந்து செல்வதும் அந்த இடத்தை புதுக்கைகள் நிரப்பதுவுமாக ஒரு இடைவிடாத இயக்கம் நிகழ்ந்துகொண்டிருந்தது.

பொறுமையற்று வீடியோவை நகர்த்த முயன்றார் எஸ்.ஐ. அவரது கையைத் தடுத்து வேண்டாமெனக் கூறி அந்த வீடியோவையே பார்த்துக்கொண்டிருந்தார் செட்டியார். அருவி பொழிவது போல, ஆறு தவழ்வது போல, ஒரே செயல் மீண்டும் மீண்டும் நிகழ்ந்துகொண்டிருந்தது.

திரை விலகியது போல அனைத்துக் கைகளும் ஒரு கணத்தில் மொத்தமாகக் கீழிறங்க மீண்டும் கஜலக்ஷ்மியின் சிலை தெரிந்தது. கழுத்து மாலையிலிருந்த பதக்கத்தை மட்டும் காணவில்லை.

சற்று நேரம் செட்டியார் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார். அவருள் ஓடுவது என்ன என்பது கணிக்க முடியாததாக இருந்தது. ஒரு நீண்ட பெருமூச்சுடன் நிமிர்ந்து பார்த்தார். எதிரில் பதிமூன்று பேரும் மெலிந்த விரல்கள் கொண்ட கைகளைத் தொங்கவிட்டபடி சுவரை ஒட்டியவாறு நின்றிருந்தனர்.

“இவனுகள்ல எவென் அங்க இருந்திருந்தாலும் அந்த ஸ்வீட் பாக்ஸை வாங்க கை  தூக்கியிருக்க மாட்டானுக” என நடராஜன் சாரிடம் கூறினேன்.

அதிர்ந்து என்னைப் பார்த்தவர், “ஆமா” எனக் கூறித் தலையசைத்தார்.

எதுவும் பேசாமல் நாற்காலியிலிருந்து எழுந்தார் செட்டியார். பதறிய எஸ்.ஐ அருகில் சென்று, “எப்படியும் இன்னைக்குள்ள பதக்கத்தை மீட்டுறோம்” என்றார்.

அதைக் காதில் வாங்கிக்கொள்ளாதவராய் வாசலை நோக்கி நடந்தார். ஆனால் இப்போது நடையில் நிதானம் இருந்ததாய்த் தோன்றியது. கொஞ்சம் கேலியாகக்கூட அவரது அசைவு இருந்தது. 

மாலை அவரின் உதவியாளர் மட்டும் வந்து அவர்களை விடுவித்துவிடக் கூறினார். அதைக் கேட்டு திகைத்த எஸ்.ஐ.,“இல்ல சார், உறுதியா கண்டுபிடிச்சிடுறோம்” என்றார்.

“ஸ்டேஷன்ல இருந்து வந்த மொதலாளி வெரண்டால ஸ்டூல இழுத்துப் போட்டு ஒக்காந்து ரொம்ப நேரம் லெட்சுமி சிலையை கண்ணெடுக்காம பாத்துட்டிருந்தார். எப்பவும் நேரந் தவறாம சாப்பிட்டுறவரு இன்னைக்கு மதியம் ஒன்னும் சாப்பிடலை. பக்கத்துல போகவே யோசனையா இருந்தது. கொஞ்ச நேர முன்னாடிதான் அங்கயிருந்து எந்திருச்சார். நேரா வந்து என்கிட்ட எல்லாத்தையும் விட்டுறச் சொல்லுன்னு சொல்லிட்டு கெளம்பி வீட்டுக்குப் போயிட்டார்” என்றார் உதவியாளர்.

உடனே அனைவரையும் விடுவித்தோம். கேஸ் எதுவும் போடாததால் மேற்கொண்டு ஒன்றும் செய்ய வேண்டாமென எஸ்.ஐ சொல்லிவிட்டார். சத்தமின்றி பதிமூன்று பேரும் நகர்ந்து வெளியேறுவதைப் பார்த்துக்கொண்டிருந்தேன். வாசலைத் தாண்டி பஜாருக்குள் நுழைந்ததும் புகையாகக் கரைந்து மறைந்துவிடக்கூடும் என்றுதான் நினைத்தேன். எப்படி இதற்கு முன்பு கண்களுக்குப் படவில்லையோ அதே போல இனியும் தென்படமாட்டார்கள். 

அருகிலிருந்த ஹெட் கான்ஸ்டபிள் நடராஜன் சார் சொன்னார். “அந்தப் பதக்கம் இனி எப்பவும் வெளிய வராது. இவனுகள்ல எவென் அதை எடுத்துருந்தாலும் தனக்குள்ளயே புதைச்சு வெச்சுக்குவானுக.” அப்பால் தெரிந்த கடைவீதியை நோக்கிக்கொண்டிருந்தவர் இடைவெளி விட்டு மீண்டும் சொன்னார், “அதுவும் சரித்தான். எல்லாப் பொருள்களும் விக்கிறதுக்காக தொறந்து வெச்சுருக்க பஜாருல ஒரு பொருளு மட்டும் உள்ளுக்குள்ள மறைஞ்சு கெடக்கட்டுமே.”

ஆறு மாதம் கழித்து என் அக்கா திருமணத்திற்காக நகைக்கடைக்குச் சென்றேன். உள் நுழைந்ததும் நடுவில் முழு அலங்காரத்துடன் அந்தச் சிலை இருந்தது. இம்முறை அதன் நாற்புறமும் கண்ணாடியால் சூழப்பட்டிருந்தது. அப்போதுதான் பூஜை முடிந்திருக்க வேண்டும். முன்னிருந்த மேடையில் தட்டு நிறைய புது மலர்கள் நிரப்பப்பட்டு அருகில் துளைகள் கொண்ட சிறிய தூபக்கூடு மெல்லிய புகையை வெளிவிட்டுக்கொண்டிருந்தது.

சிலைக்கு அருகில் சென்றேன். அதன் உதட்டில் சுழிப்பு போல ஒரு கோணல் சிரிப்பு இருந்தது. எந்தக் கணமும் வாய்திறந்து கெக்கலிப்பு காட்டிவிடக்கூடும் என நினைத்தேன். அதிரும் நெஞ்சுடன் என் கண்கள் விரைவாக கழுத்தைத் தேடின. அதே மாலைதான். புதிதாக வேறொரு பதக்கத்தை அதில் இணைத்திருந்தனர். மரகதப்பச்சை வண்ணம் கொண்ட பதக்கம்.

அன்று ஸ்டேஷனுக்கு வந்த உதவியாளர் என்னைப் பார்த்ததும் அருகில் வந்தார். செட்டியாரைப் பற்றி விசாரித்தேன். ஊரில் இருந்தால் தவறாமல் தினமும் வந்து கும்பிட்டுவிட்டுச் செல்வதாகக் கூறினார். பேச்சு சுற்றிச் சுற்றி வேறு வழியின்றி திருட்டுச் சம்பவத்தை வந்தடைந்தது. “எவ்வளவு சொல்லியும் மொதலாளி கேக்கலை. துட்டுக்கா கொறச்சல்? இருக்குற கடை நகைங்க அத்தனையும் அம்பாரியாக் குவிச்சா வாசலையே அடைச்சுறலாம். எல்லாம் கடையத் தொறந்த நேரமோ என்னமோ?”

“ஏன், என்னாச்சு?”

குரலைத் தாழ்த்திக் கூறினார். “உங்ககிட்ட சொல்ல என்ன? இப்போ சாமி கழுத்துல போட்டிருக்குறது மரகதப் பதக்கமில்ல. வெறும் கண்ணாடிக் கல்லு.”

4 comments

Kasturi G November 29, 2021 - 8:54 pm

Nicely written with a totally different level of story line.
Good luck
Thanks

manguni December 1, 2021 - 10:08 pm

என் சிறிய மூளைக்கு கதை புரியவில்லை. ஆனாலும் கதை நடை அருமை !!!

பதக்கம் பாலாஜி பிருத்விராஜ் | எழுத்தாளர் ஜெயமோகன் December 9, 2021 - 12:04 am

[…] பதக்கம் பாலாஜி பிருத்விராஜ் […]

kavignar Ara December 9, 2021 - 4:37 am

pathakkam is very nice way of story telling is attractive
Kavignar Ara

Comments are closed.