அது தாத்தா இறந்திருந்த நேரம். அம்மாவின் அப்பா. திடீரென்று ஹார்ட் அட்டாக்கில் இறந்துவிட்டார். காரியம் எல்லாம் முடிந்த கையோடு அம்மாவின் அம்மா சோகத்தில் இருந்து தன்னைத் தேற்றிக்கொள்ள என்னுடைய மிலிட்டரி தாய்மாமாவோடு சிக்கிம் மாநிலத்திற்குச் சென்றுவிட்டார். திடீரென்று அந்த வீடு காலியானது. அப்பாவுக்கு மின்சார வாரியத்தில் வேலை. அந்த மாதம் முழுவதும் அவருக்கு இரவுப் பணி. அம்மா பயமற்றவள். அவளுக்கு வீட்டில் இரவில் தனியாக இருப்பது என்பது ஒரு பெரிய விஷயமே அல்ல. அவருடன் ஆறு வயது குழந்தை நான் இருந்ததால் இன்னும்கூட அது எளிதான காரியமாக அவருக்குப் பட்டது. பாம்பைக் கண்டால்கூட பயப்படாத குணம் அம்மாவுக்கு. இருட்டு எல்லாம் ஒரு பொருட்டே அல்ல. கிட்டத்தட்ட முக்கால் பகுத்தறிவுவாதி. அன்றும் அப்படித்தான் அப்பா இரவுப் பணிக்கு கிளம்பியதும் சாப்பிட்டு முடித்துவிட்டு, பக்கத்து வீட்டுக்காரர்களுடன் பேசிவிட்டு வந்து உறங்கச் சென்றுவிட்டோம். திடீரென்று நள்ளிரவில் யாரோ வீட்டிற்குள் கதவைச் சத்தமாகத் திறந்துவரும் சத்தம். கூடவே ஷூ சத்தம் வேறு. இரவு ஒரு மணி இருக்கும்.
சுற்றிலும் முற்றிலும் ஒரு ஈ, காக்காகூட அந்தப் பகுதியில் விழித்துக்கொண்டிருக்கவில்லை. அந்தத் தெருவே நிசப்தமாக இருந்தது. அம்மா யாரோ வீட்டிற்குள் நுழைந்துவிட்டார்கள் என்று பயந்து போய் என்னையும் எழுப்பிவிட்டார். கொஞ்ச நேரத்தில் கிச்சனுக்குப் பக்கத்தில் ஒரு நடுத்தர வயது ஆண் இருமுகிற சத்தம் கேட்டது. பின்பு குடத்தில் இருந்து தண்ணீர் மொண்டு குடிக்கும் சத்தம். இந்த முறை அம்மா விருட்டென்று எழுந்து டுயூப் லைட் சுவிட்சைப் போட்டாள். வீடு ஒளிர்ந்தது. கதவு மூடி இருந்தது, கிச்சனில் யாரும் இல்லை. வீட்டின் எந்தப் பகுதியிலும் யாருமே இல்லை. அம்மா ஒரு ஜெபமாலையை என் கழுத்தில் மாட்டிவிட்டு, சிலுவை அடையாளத்தைத் தனக்குப் போட்டுக்கொண்டு, என்னைச் சுற்றி நாலாபுறமும் “அச்சிஷ்ட சிலுவை அடையாளத்தாலே” என்று சிலுவை வடிவை வரைந்துவிட்டு உறங்கிப் போனாள். எனக்குத் தூக்கத்தில் ஒன்றும் பெரிதாகப் புரியவில்லை. மறுநாளும் இதே நிலை. ஆனால் இந்த முறை கிச்சனில் இருக்கும் பாத்திரங்களை எல்லாம் உருட்டும் சத்தம். சாப்பாடு தேடுவதைப் போல.
இப்படியே தொடர்ச்சியாக ஐந்து நாட்கள். பயமில்லாத அம்மாவுக்கும் பயம் வந்தது. ஆறாம் நாள் இரவு அப்பா கிளம்பியதும் அம்மா மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து, வீடு முழுதும் சாம்பிராணி போட்டு, சாமிப் படம் அனைத்தையும் முத்தமிட்ட பின், இருவரும் உறங்கப் போனோம். நடு இரவில் மீண்டும் அதே சத்தம். இந்த முறை அம்மா டக்கென்று எழுந்து வீட்டில் இருந்த லைட்டை எல்லாம் போட்டதும் சத்தம் நின்றது. அம்மா சாமிப் படம் முன்பு போய் நின்று மெழுகுவர்த்தியை ஏற்றிச் சொன்னாள், “அப்பா உனக்கு என்னை ரொம்ப புடிக்கும்னு தெரியும்பா. நீ செத்தது எனக்கு கஷ்டம்பா. எனக்கு நீதான் துணையா இருந்தே. உனக்கு என் மேல எவ்ளோ பாசம் இருந்தாலும், இப்படி நீ வர்றது பயமா இருக்குப்பா. நான் டெயிலி உனக்கு மெழுகுவர்த்தி ஏத்துறேன். உன் பேர்ல எல்லாருக்கும் சாப்பாடு குடுக்குறேன். நீ போய்டுப்பா. சின்ன கொழந்த இருக்குப்பா. அது பயப்படும்”. சொல்லிவிட்டு மாதா படத்தைப் பார்த்து ஒரு சிறு ஜெபத்தை முணுமுணுத்துவிட்டு தூங்கச் சென்றாள். அன்றைய இரவிலிருந்து அந்த வீட்டில் நாங்கள் இருந்த கடைசி நாள் வரை எங்களுக்கு எந்தச் சத்தமும் கேட்கவில்லை. எந்தப் பயமுமில்லை .
எனக்கு அமானுஷ்யங்களின் மேல் நம்பிக்கை இல்லை. ஆனால் நிறைய பேய், ஆவி படங்களைப் பார்த்திருக்கிறேன். அவற்றில் எதிலுமே என் அம்மா ஆத்மாக்களை அணுகிய விதம் போல் பார்த்ததில்லை. இதற்கு அமானுஷ்யம், உளவியல் என்று பல காரணங்களைச் சொல்லலாம். ஆனால் எந்தக் காரணமாக இருந்தாலும் இளம் பெண்ணாக இருந்துகொண்டு அம்மா அதைக் கையாண்ட விதம் இன்று வரை பிரமிப்பாகவே இருக்கிறது .
நான் ஏன் இதை மிகப்பெரிய விஷயமாகப் பார்க்கிறேன் என்பதற்குப் பின்னால் அந்தக் காலத்தில் இருந்த சமூக நிலை ஒரு முக்கியக் காரணம். தொண்ணூறுகளின் தொடக்கம் அது. எங்கள் ஊரில், அதாவது வடசென்னையின் அந்தக் குறிப்பிட்ட பகுதியில், முப்பது வீட்டிற்கு ஒரு வீட்டில்தான் தொலைக்காட்சி இருக்கும். கேபிள் எல்லாம் இல்லை. மின்சாரமும் பணமுள்ளவர்கள் வீட்டில் மட்டுமே இருக்கும். உழைக்கும் வர்க்க மக்கள் வீட்டில் சிம்னி விளக்கின் வெளிச்சம் மட்டுமே. இருள் நிறைந்த குறுகிய சந்துகள். தெருவிளக்கு சில இடங்களில்தான் எரியும். அப்படிப்பட்ட சூழலில் அமானுஷ்யங்கள் குறித்த பயம் அதிகமாகவே இருந்தது. காரிய வீட்டின் முன்பு வந்து நின்று இறந்தவர்கள் சாப்பாடு கேட்டார்கள், கசப்புத் தலை (காரியத்தின் மறுநாள்) அன்று வீட்டில் செய்த மாமிச மீன் உணவுகளை நடுவீட்டுப் படையலில் இருந்து இறந்துபோனவர்களின் ஆவி எடுத்துச் சாப்பிட்டது, தற்கொலை செய்துகொண்டவர்கள் தங்கள் வீட்டிற்குப் பக்கத்தில் இருக்கும் அரசுப் பள்ளிக்கூடங்களின் கழிவறைகளில் அழுதுகொண்டிருக்கிறார்கள், இரவு பத்து மணிக்கு மாம்பழம் தின்றுவிட்டுப் படுத்தவர்களைப் பேய் அமுக்கியது, பொதுக் கழிப்பிடத்தில் கிழவியின் ஆவி ஒன்று சுருட்டு பிடித்துக்கொண்டிருக்கிறது என்பது போன்ற பயங்கரமான விஷயங்களைச் சதா பேசிக்கொண்டே இருப்பார்கள்.
அதுவும் இரவில்தான் இந்தக் கதைகளைப் பேச ஆரம்பிப்பார்கள். ஆனால் சினிமாவில் காண்பிப்பது போல் எந்தப் பேயும் கொலை செய்யாது. அமுக்கிவிட்டுப் போகும். பேய் அமுக்கும் உளவியல் பற்றி யாராவது ஆராய்ச்சி செய்திருக்கிறார்களா என்று தெரியவில்லை. உண்மையிலேயே இதில் முக்கால்வாசி மனிதப் பிறவிகளின் சேஷ்டைகள் என்பதுதான் உண்மை. ஆனால் அப்போது இருந்த சமூகச் சூழல் அவர்களை இப்படியாகச் சிந்திக்க வைத்தது. சினிமா தியேட்டரில் பேய் இருந்த கதைகளைக்கூட கேட்டிருக்கிறேன். மனிதனை இயக்குவதில் பயம் என்கிற உணர்வுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது. அது அவர்களது கலாச்சாரத்தையும் வாழ்வியலையும் எவ்வாறு பாதிக்கிறது என்பதனை உணர்வது முக்கியம். குறிப்பாக, உழைக்கும் மக்களைப் பொறுத்தவரை இருட்டு, பேய், பிசாசு போன்றவற்றைப் பற்றிய கற்பனைகளும் பயங்களும் அதிகமிருந்தாலும், அவர்களின் தினசரி வாழ்க்கையை அது பாதிக்காதபடி அவர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். அவர்களின் பிழைப்பு அப்படி, அவர்களின் கலாச்சாரம் அப்படி. பேய்க்கோ பிசாசுக்கோ பயந்து பொதுவெளியில் இரவுகளில் நடமாடாமல் அவர்களால் இருக்க முடியாது. ஆகவே அவைகளுக்கு எதிரான நடவடிக்கைகள் அதிகமாக இருக்கும்.
அனைத்து மத வழிபாடு என்பது உழைக்கும் வர்க்க மக்களுக்கு மிக இயல்பான விஷயம். குறிப்பாக ஊரில் இருந்த கிறிஸ்தவர்கள் தீய சக்திகளிடம் இருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்ள ஜெபமாலையை அதிகம் நம்பினார்கள். எல்லோர் கழுத்திலும் ஜெபமாலை, உத்திரியம் இருக்கும். உத்திரியம் என்பது ஒரு கருப்புக் கயிற்றில் இரு பக்கமும் இணைக்கப்பட்ட துணியிலான சாமிப் படம். அதில் இலத்தீன் மொழியில் மந்திரங்கள் பொறிக்கப்பட்டிருக்கும். நெஞ்சுப் பக்கம் ஒரு துணி, முதுகுப்பக்கம் இன்னொரு துணி. எல்லாப் பக்கமும் பாதுகாப்பு. பின்னே சிலுவை அடையாளம் இடுதல். மிக்கேல் சம்மனசு என்பவர் பேய்களை ஓட்டுபவர் என்கிற நம்பிக்கையின் அடிப்படையில் அவரின் பெயரைச் சொல்லி சிலுவை அடையாளத்தைக் காற்றில் வரைவார்கள். சம்மனசு என்றால் வெள்ளை உடை அணிந்து சினிமாவில் பாரதிராஜா படங்களில் வருபவர் அல்ல. போர்ப்படை வீரரைப் போல் உடையணிந்து, கால்களில் பூட்ஸ் அணிந்து, கையில் போர்வாள் வைத்திருப்பார். இரண்டு பக்கமும் சிறகுகள். கிட்டத்தட்ட தமிழகத்தின் காவல் தெய்வங்களைப் போல. கருப்பு, முனியாண்டி, அய்யனார் போல. ஆனால் வெள்ளை நிறம். யோசித்துப் பாருங்கள், தமிழகத்தில் கிறிஸ்தவம் இரண்டாவது பெரிய மதம். அதில் 64 சதவிகிதம் தலித்துகள். 25 சதவிகிதம் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள். ஏற்கனவே நாடார் தெய்வ வழிபாட்டில் இருந்தவர்களுக்கு அவர்களின் நம்பிக்கைகளைப் பாதிக்காத அளவில் அதே உருவ அமைப்பில், அதே செயல்களை புரிந்த கிறிஸ்தவப் புனிதர்களையும் சம்மனசுகளையும் ஏற்றுக்கொள்ளுவது மிகவும் எளிதான ஒன்றாகவே இருந்தது.
பேய் ஓட்டுவதற்கென்று மிக்கேல் சம்மனசை முழுவதுமாக நம்பினார்கள் தமிழகக் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள். கிறிஸ்தவ வீடுகளில் இரவுகளில் “குட்நயீட்டை”விட “மிக்கேல் அதிதூதரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்” என்கிற ஜெபமே அதிகமாகக் கேட்கும். அவருக்கு அடுத்தபடியாக அந்தோனியார். அந்தோனியார் ஐரோப்பிய நாடான போர்ச்சுகலில் பன்னிரண்டாம் நூற்றாண்டு பிறந்து வளர்ந்து, இறைப்பணி செய்து புனிதரானவர். அந்த அந்தோனியார் இங்கே புளியந்தோப்பில் காதல் தோல்வியில் கிருஷ்ணாயில் ஊற்றிக்கொண்டு செத்துப்போன புஷ்பாவின் ஆவியை ஓட்டக்கூடிய வல்லமை கொண்டிருப்பதாக நம்பினார்கள். தமிழ் எழுத்துகள் பதிக்கப்பட்ட பழங்காலத்து அந்தோனியார் ஜெப மந்திரப் பட்டயங்களை வீட்டின் முன் மாட்டினார்கள். அதற்குப் பெயர் அந்தோனியார் சக்கரம். நான்கு பக்கங்களில் பௌத்தத்தில் இருப்பது போல் மண்டலாக்கள் பொறிக்கப்பட்ட அந்தப் பட்டயங்களுக்கு உரித்தாக்கப் பாடல் ஒன்றும் இருக்கிறது.
“காயனா
சேசுனாயகா
கயானா
மநுதூயகா”
தமிழ் கத்தோலிக்கர்கள் நினைப்பது போல் இது பேயோட்ட மட்டுமல்ல, மனிதர்களுள் தோன்றும் வீணான ஆசை, மயக்கம், தவறான சிந்தனைகளை ஓட்டவும் பயன்படுவதாகத் தமிழகக் கிறிஸ்தவ இறைப்பணியாளர்கள் கருதுகிறார்கள். இதிலிருந்து தமிழகத்தின் பூர்வகுடி மக்கள் கிறிஸ்தவத்தைப் பெரும்பாலும் பௌத்த முறையில் பேணி வந்தது புலப்படுகிறது.
இங்கே எந்த மதமும் தனித்தனியாகச் செழிக்கவில்லை. எல்லாமே ஒன்றுக்கொன்று பிணைந்திருந்தன. தமிழன் இந்து என்று அழைக்கப்பட்டாலும் கிறிஸ்தவ மதம் மாறினாலும் இஸ்லாமியனாக இருந்தாலும் தமிழனாகவே உணர்ந்தான், வாழ்ந்தான்.
தேர் எடுப்பதில் இருந்து, தேவாலயங்களில் முளைப்பாரி வைத்து வணங்குவது, மாதாவுக்கும் அந்தோனியாருக்கும் கிடா வெட்டி பொங்கல் வைப்பது, முடி காணிக்கையாகக் கொடுப்பது, நோய் வந்து சரியானால் வேண்டிக்கொண்ட புனிதர் சிலையின் முன்பு உப்பும் மிளகும் வைப்பது என்று தமிழ்க் கிறிஸ்தவத்தில் தமிழ்ப் பண்பாட்டு அதிகமாக நிறைந்துள்ளது. உடனே முடி எடுப்பது இந்து கலாச்சாரம் என்று நினைப்போம். ஆனால் உண்மையில் அது பௌத்தப் பண்பாடு. தமிழ் பௌத்தத்தின் பல தொன்மங்கள் தமிழ்க் கிறிஸ்தவத்தில் நிறைந்திருக்கின்றன என்பதே உண்மை.
வடசென்னையைப் பொறுத்தவரையில் சென்னை ஜார்ஜ் டவுனில் இருக்கும் அர்மேனியன் தெரு அந்தோனியார் கோயில் மிகப் பிரசித்தம். அதுவும் செவ்வாய்க் கிழமைகளில் கிறிஸ்தவர்களைவிட அங்கே வேற்று மதத்தினரே அதிகமாக இருப்பார்கள். அங்கே ஒரு அறையில் பேய் பிடித்தவர்களுக்கு அண்மைக் காலம் வரை ஒரு பாதிரியார் பேய் ஓட்டிக்கொண்டிருந்தார் .
இங்கேதான் ஒரு விசித்திரமான விஷயத்தைப் பகிர்ந்துகொள்ள வேண்டும். இதே ஜார்ஜ் டவுனில் இன்னொரு “அந்தோனியாரும்” இருந்தார். அவர் ஒரு நடுத்தர வயது மனிதர். டக்-இன் பண்ணிய பேண்ட் சட்டை, ஷூ, கோல்ட் பிரேம் கண்ணாடி, வாட்ச் என்று பார்ப்பதற்கு அரசு அதிகாரியைப் போல் இருப்பார். எங்கள் ஊரில் யாருக்குப் பேய் பிடித்தாலும் அவரிடம் அழைத்துப் போவார்கள். பேய் பிடித்தவரை அமைதியான முறையில் மந்திரித்து, ஜெபித்து, கையில் கறுப்புக் கயிறு, மந்திரித்த முழுத் தேங்காய், முட்டை கொடுத்து அனுப்புவார். கயிறை நாம் அணிந்துகொள்ள வேண்டும். தேங்காயை வீட்டின் முன் கட்டிவிட வேண்டும். பின்பு முட்டையை விடியற்காலையில் எங்கேயாவது மைதானத்தில் போய் பேய் பிடித்தவர் தலையைச் சுற்றிப் போட்டுவிட்டு வர வேண்டும். வீட்டில் பில்லி, சூனியம், ஏவல் போன்ற சந்தேகங்கள் இருந்தால் அதையும் அவரே நிவர்த்தி பண்ணுவார். கிறிஸ்தவத்தில் இதுபோன்ற முறைகளே இல்லை. ஆனால் இவர் நல்ல காசு பார்த்தார் என்பது உண்மை .
இன்னும் முற்றிய பேய்களுக்குப் பாண்டிச்சேரி பக்கத்தில் இருக்கும் வில்லியனூர் மாதா கோவில் வரை போய் வருவார்கள். இந்து மதத்தைச் சார்ந்தவர்களுக்குப் பேய் பிடித்தால் பக்கத்தில் இருக்கும் ஏதாவது கோயிலுக்குப் போனால் போதும். இல்லையென்றால் தர்காவில் போய் துடைப்பக்கட்டையில் அடி வாங்கிவிட்டு வருவார்கள். இதுபோல, பேய் ஓட்டுவதற்கு ஏராளமான வழிகள் இருந்தன.
ஆனால் யாருமே என் அம்மா போல ஆன்மாக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியது இல்லை.
இத்தகைய பயத்தோடு வாழ்ந்துகொண்டிருந்த காலத்தில்தான் அந்தப் பாடல் தினமும் காலை ஐந்து மணிக்கு ஊரில் இருந்த அந்தோனியார் கோயிலின் ஒலிபெருக்கியில் ஒலிக்கத் தொடங்கியது.
“ஆவியானவரே … அன்பின் ஆவியானவரே …
மீட்பர் வாரும் இறங்கி வாரும்
இந்த வேளையிலே ….”
எட்டு மணிக்கு முன்பாக சர்ச் கதவே திறக்காத இடத்தில் ஐந்து மணிக்கே ஆண்டவரை அலாரம் வைத்து எழுப்பிக்கொண்டிருந்ததற்குப் பின்னால் இன்னொரு பயம் இருந்தது. தொண்ணூறுகளில் பெந்தகொஸ்தே சபைகள் தமிழகத்தில் அசுர வேகத்தில் வளர ஆரம்பித்திருந்த காலம் அது. எப்படி தொண்ணூறுகளில் தலித் அரசியல் எழுச்சி அபரிமிதமாக இருந்ததோ அதே பாணியில் தலித்துகளின் மதமாற்றம் மறுமலர்ச்சி நிலையை வந்தடைந்தது. அநேகமான தமிழக தலித்துகளும் பிற ஒடுக்கப்பட்ட மக்களும் புதிதாகத் தொடங்கி இருந்த பெந்தகொஸ்தே சபைகளில் தங்களை சரசரவென இணைத்துக்கொள்ள ஆரம்பித்தார்கள். வடசென்னையில் எங்கே பார்த்தாலும் சபைகள் முளைக்கத் தொடங்கின. ‘கல்வாரி மலை ஊழியம்’, ‘வாழ்வு தரும் அப்பம் ஜெப வீடு’, ‘நேசரின் கரங்கள் ஆலயம்’, ‘சீயோனின் ஜெப வீடு ஊழியம்’ என்று வீட்டுக்கு வீடு மொட்டை மாடியில் ஜெபக் கூட்டங்கள் நடைபெற ஆரம்பித்தன. கட்சி ஆட்கள் தேர்தல் நேரத்தில் வேலை செய்வது போல் அவர்கள் தீவிரமாக வேலை செய்தார்கள். எல்லாச் சேரிகளுக்குள்ளும் சென்றார்கள், எல்லா ஊர்த் தெருக்களுக்குள்ளும் நுழைந்தார்கள். அவர்கள் ஒரு இராணுவத்தைப் போல் கட்டுப்பாட்டுடனும் தீவிரத்துடனும் செயல்பட்டார்கள்.
எனக்குத் தெரிந்து தினமும் ஒரு துண்டுச் சீட்டு எங்கள் வீட்டுத் தாழ்வாரத்தில் மாலை நான்கு மணிக்குச் சரியாக வந்து விழும். அந்தத் துண்டுப் பிரசுரங்களின் முதல் பக்கத்தில் பயங்கரமான பேய் உருவங்களும் அடுத்த பத்தியில் ஏசுவும் இருப்பார்கள். “மனம் திரும்புங்கள்”, “ஏசு வருகிறார்”, “நரகத்தின் அக்கினியில் இருந்து தப்புங்கள்”, “பாவத்தில் இருந்து விடுதலை பெற்று சாத்தானை நசுக்குங்கள்” என்று அதிபயங்கரமான சொல்லாடல்கள், மனிதர்களைக் குற்ற உணர்ச்சிக்கு உள்ளாக்கி, பயத்தை ஏற்படுத்தக்கூடிய விவிலிய வசனங்கள் என்று கையில் எடுத்தாலே கரண்ட் அடித்தது போல் இருக்கும். பேய் பயத்தைவிட மனிதன் செய்த பாவங்கள் குறித்தான பயம் மிகப் பெரியது. அது அவர்களைத் துரிதமான சில விஷயங்களைச் செய்யத் தூண்டியது. அவர்கள் தாங்கள் செய்துகொண்டிருந்த எல்லாவற்றையும் விட்டுவிட்டு கையில் பைபிளைத் தூக்கிக்கொண்டு மொட்டைமாடி ஜெப வீடுகளுக்குச் சென்றார்கள். “அல்லேலூயா … அல்லேலூயா” என்று கண்ணீர்விட்டுக் கதறி ஏசப்பாவைத் தொழுதார்கள்.
பெந்தகொஸ்தே சபைகளில் முதலில் அதிகளவில் ஐக்கியமானவர்கள் உழைக்கும் ஒடுக்கப்பட்ட மக்களே. அவர்களைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு விடுதலையும் ஆறுதலும் கொண்டாட்டமும் தரக்கூடிய எதுவாக இருந்தாலும் ஓடோடிச் சென்று பற்றிக்கொள்வார்கள். அது பாடலாக இருந்தாலும் சரி, நடனமாக இருந்தாலும் சரி, விளையாட்டாக இருந்தாலும் சரி, அதை மிகப் பலமாகப் பற்றிக்கொள்வார்கள். அவர்களின் வாழ்வில் கானா இசை, கால்பந்து, குத்துச்சண்டை போன்ற கலைவடிவங்கள் அவர்கள் அனுபவித்து வரும் ஒடுக்குமுறையில் இருந்து எழும் மன அழுத்தங்களில் இருந்து அவர்களை விடுவித்து அவர்களுக்கு நல்ல வடிகாலாக இருந்தன. ஆனால் பெந்தகொஸ்தே சபைகள் இந்த மக்களுக்கு வெறும் மன அழுத்தத்தில் இருந்து மட்டும் விடுதலை தரவில்லை. மாறாக, சமூகத்தில் ஒரு மேன்மையான வாழ்வியலை அவர்களுக்குப் பெற்றுத் தந்தது.
முதலில் மன அழுத்தத்தைப் பற்றிப் பேசுவோம். சாமியாடுதல், பேய் பிடித்தல் போன்றவை தொடர்ச்சியான மனச்சிக்கல்கள், மனம் சார்ந்த நோய்களில் இருந்து எழுவது என்று அறிவியல் சொல்லுகிறது. குறிப்பாக, பெண்களுக்குச் சமூகத்தாலும், வீட்டில் இருக்கும் ஆணாதிக்கத்தாலும் பிரச்சினைகள் வரும்போது பலர் அதை மனதிலேயே வைத்துக்கொண்டு மன உளைச்சலுக்கு ஆளாவது வழக்கம். ஆனால் ஒடுக்கப்பட்ட சமூகத்துப் பெண்கள் தங்களுக்கு ஏற்படும் சமூக அழுத்தங்களால் மன அழுத்தம் கொண்டாலும் அடுத்த நொடியே அவர்களின் ஆழ்மனம் அவர்களை அதிலிருந்து எப்படி மீட்பது என்று வேலை செய்ய ஆரம்பிக்கிறது. பெண்களுக்கு ஏன் அதிகமாக சாமி வருகிறது, அதிலும் ஒடுக்கப்பட்ட சமூகத்துப் பெண்களுக்கு மட்டும் ஏன் சாமி வருகிறது என்கிற கேள்விக்குப் பதில் இதுதான். இது அவர்களின் நேர்த்தியான “escape mechanism”. ஆனால் சாமியாடுவதை இந்தச் சமூகம் எப்படிப் பார்க்கிறது? பெந்தகொஸ்தே சபைகளில் வாத்தியங்களின் இசைக்கு ஏற்றபடி குதித்துக் குதித்து ஆடலாம், கைகளைச் சத்தமாகத் தட்டலாம், உடலை எப்படி வேண்டுமானாலும் நெளிக்கலாம், விதவிதமான சப்தங்களை எழுப்பலாம். யாரும் அவமானமாக நினைக்க மாட்டார்கள். “ஏசப்பாவின் அன்பு அவளை நிறைச்சு ஆட வைக்குது” என்றுதான் சொல்லுவார்கள்.
உலகெங்கும் உள்ள பழங்குடி மக்களை எடுத்துக்கொள்ளுங்கள், அது ஆப்பிரிக்காவின் மாசாய் பழங்குடியினராக இருக்கட்டும், இல்லை ஆஸ்திரேலியாவின் அபார்ஜின் மக்களாக இருக்கட்டும். இதைத்தானே அவர்களும் செய்கிறார்கள்? உலகெங்கும் இப்படித்தானே தங்களை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள்? ஆனால் அங்கே எல்லாம் இரு பாலினத்திற்கும் அது பொருந்தும். இங்கே பெண்கள் சாமியாடி விடலாம், ஆனால் ஆண்கள் பூசாரியாக இல்லாமல் சாமியாடுவது எல்லாம் முடியாது. அப்படியானால் ஆண்களின் மன அழுத்தம் எப்படிக் குறையும்? அங்கேதான் பெந்தகொஸ்தே சபைகள் உதவிக்கு வந்தன. ஆண் பெண் வித்தியாசம் இல்லாமல் “praise the lord”, “அல்லேலூயா” என்று குதித்துக் குதித்துக் கொண்டாடினார்கள்.
“குதூகலம் கொண்டாட்டமே, ஏசுவின் சன்னிதானத்தில்
ஆனந்தம் ஆனந்தமே, என் அன்பரின் திருப்பாதத்தில்”
எவ்வளவு அழகான தமிழ் பாருங்கள்! அவனுக்குத் தெரிந்த தமிழில் அவனுடைய இறைவனைக் கொஞ்சுகிறான். கடவுளை ‘அன்பர்’ என்கிறான். “நீயென்னைத் தீட்டு என்று சொல்லுகிறாய், போடா கடவுளே என் பக்கம் என்கிறேன் நான்”. பெந்தகொஸ்தே கூட்டம் அவனுக்கு அரசியல் கட்சி மாநாடாய்த் தெரிகிறது.
அமெரிக்காவில் இருந்து இங்கே பரவிய பெந்தகொஸ்தே சபைகள் முழுக்க முழுக்க அமெரிக்க அரசியல் பிரச்சார மேடைகளைப் போலவே வடிவமைக்கப்பட்டன. இந்தியாவில் அதன் தொடர்ச்சி இருந்தது.
முதலில் எல்லாமே எளிமையாகத்தான் இருந்தது. பாஸ்டர்கள் வெள்ளைச் சட்டை, வெள்ளைப் பேண்ட் அணிந்தார்கள். கையில் விவிலியம் இருக்கும். “வேதாகமம்” என்கிற சனாதன மொழிபெயர்ப்பைக் கத்தோலிக்கர்கள் உபயோகித்த வேளையில் அதை விடுத்து “விவிலியம்” என்கிற வார்த்தையைப் பெந்தகொஸ்தே சபையினர் உபயோகிக்க ஆரம்பித்தார்கள். நிகழ்கால பெந்தகொஸ்தே சபைகளை நாம் எவ்வளவு கிண்டல் செய்தாலும் அவர்களின் பண்பாடும் கலாச்சாரமும் சனாதன எதிர்ப்பில் ஊறிப்போய் இருந்தது. குறிப்பாக, அலங்கார மறுப்பு, நெற்றிப் பொட்டு மறுப்பு, நகை மறுப்பு, தாலி மறுப்பு, பூஜை புனஸ்காரங்கள் – சடங்குகள் மறுப்பு, சனாதன கடவுள்களுக்குப் படைக்கப்பட்ட பிரசாதங்கள் மறுப்பு, சிலை வழிபாடு மறுப்பு போன்று மிகத் தீவிரமாக அவர்கள் பின்பற்றிய கொள்கைகளுக்குப் பின்னால் சாதி எதிர்ப்பும் பார்ப்பனீயச் சடங்கு எதிர்ப்பும் முழுமையாக இருந்தது.
“உன்னைத் தீண்டத்தகாதவன் என்று சொல்லி பூஜை செய்துவிட்டு, அதையே பிரசாதமாகக் கொடுத்தால் எப்படி உண்ண முடியும்?”
“நீ கோவிலுக்குள் வந்தால் தீட்டு” என்பது பார்ப்பனீயம், “உன் கோவிலுக்கு நான் வர மாட்டேன், வந்தால் எனக்கு அது கொடிய பாவம்” என்பது பெந்தகொஸ்தே. அப்படியே நேரெதிரான அரசியல். கிட்டத்தட்ட பெரியார் பேசிய அரசியல். “நீ என்னடா என்னை தீட்டுன்னு சொல்றது? நான் சொல்றேன்டா… நீ அசுத்தம்”. அவ்வளவுதான்.
இந்தியாவைப் பொறுத்தவரை கத்தோலிக்கக் கிறிஸ்தவம் மார்ட்டின் லூதர் கிங் என்றால், பெந்தகொஸ்தே சபைகள் மால்கம் எக்ஸ் எனலாம். சாதி ஒழிப்பு அவர்களின் முழு மூச்சாக இருந்தது. இந்தக் காலகட்டத்தில் இந்துக்கள் மட்டுமல்லாது, தேவாலயங்களில் ஜாதி ரீதியாகப் புறக்கணிக்கப்பட்ட பல கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களும் பெந்தகொஸ்தே சபைகளுக்கு மாறினார்கள். அவர்கள் ஒரே நாளில் பொட்டு, நகையை எல்லாம் எடுத்து, வீட்டில் ஒரு சாமி படம்கூட வைக்காமல், விவிலிய வசனத்தை மட்டும் வைத்து வழிபடலானார்கள்.
ஆண்டவருடைய வார்த்தை என்று சொல்லப்படுகிற விவிலிய வசனம்தான் அவர்களுக்கு எல்லாமே. கத்தோலிக்கர்கள் போல் பைபிளைக் கைகளிலே வைத்துக்கொள்ளாமல் நெஞ்சிலே அணைத்துக்கொண்டார்கள். கடவுள் அவர்களுக்கு மிக அருகில் இருப்பதாக உணர்ந்தார்கள். கிறிஸ்தவத்தின் அழகியலே அதுதான். நான் பிணம் எரிப்பவனாக இருக்கலாம், கறி வெட்டுபவனாக இருக்கலாம், தூய்மைப் பணியாளராக இருக்கலாம், என்னால் ஆலயத்திலுள்ள பலி பீடத்தின் நடுவில் இருக்கும் யேசுவையும் மாதாவையும் எல்லோரையும் போலத் தொட்டு முத்தி செய்து கும்பிட முடியும். மற்றவர்களால் முடியுமா? அவர்கள் ரொட்டிக்காகவும் பாலுக்காகவும் மதம் மாறவில்லை. ஒடுக்கப்பட்டவர்களால் கடவுளைத் தொட முடிந்தது. அதன் பொருட்டு மாறினார்கள்.
கத்தோலிக்கர்களைப் பொறுத்தவரை தேவாலயங்களில் பூசை வேளைகளில் விவிலியத்தில் இருந்து வசனங்களைப் படிப்பது பெரும்பாலும் பாதிரியார்களோ குறிப்பிட்ட குழுக்களோ மட்டுமே செய்யக்கூடிய விஷயம். ஆனால் பெந்தகொஸ்தே ஜெப வேளைகளிலோ அங்கே குழுமி இருக்கும் எல்லோரும் விவிலியத்தில் இருந்து வசனங்களைப் படிப்பதற்கு ஊக்குவிக்கப்பட்டார்கள். “லூக்கா இரண்டாம் அதிகாரம், அம்மா.. வசனம் என்ன சொல்லுகிறது?” என்று சொல்லிவிட்டு, உட்கார்ந்திருக்கும் கூட்டத்தைப் பார்ப்பார் பாஸ்டர். உடனே பெண்களில் யாரவது அந்த வசனத்தைச் சத்தமாக வாசிப்பார்கள். இந்த வசனங்களை வாசிப்பதற்குப் பெரிய போட்டியே நிலவும். அது ஒரு பெரும் தகுதியாகப் பார்க்கப்பட்டது. பைபிள் போட்டிகள் வைக்கப்பட்டன, பெண்கள் குழுவாக கூட்டங்களை நடத்தினார்கள். இதனால் அதுவரை கல்வி பெற்றிராத பெண்கள் விவிலியம் வாசிக்க வேண்டும் என்பதற்காகவே எழுதப் படிக்க கற்றுக்கொண்டார்கள். தொண்ணூறுகளில் நிகழ்ந்த மாபெரும் புரட்சி அது. வயதான பாட்டிகள்கூட தமிழ் படிப்பதற்குக் கற்றுக்கொண்டார்கள்.
இந்து மதத்தில் இருந்து பெந்தகொஸ்தேவுக்கு வந்த ஒடுக்கப்பட்ட சமூக மக்களுக்குப் பெரும் வாழ்வியல் மாற்றங்கள் ஏற்பட்டன. பாஸ்டர்களைப் போலவே சபைக்குச் செல்லும் ஆண்கள் டிப்-டாப்பாக உடையணிந்துகொண்டார்கள், பைபிளில் குறிப்பெழுத பேனா எடுத்துக்கொண்டார்கள், முழுக்கு ஞானஸ்நானம் வாங்கி பெயர்களை மாற்றிக்கொண்டார்கள்.
“சரளா நீ என்று முதல் சாரோனின் ரோஜா என்றழைக்கப்படுவாய்”.
சபையை விட்டு வரும்போதே பெருமையாக வெளியே வருவார்கள். லாண்டரியில் போடப்பட்ட துணியைப் போல. எங்கள் ஊரைப் பொறுத்தவரையில் பெந்தகொஸ்தே சபை என்பது புனர்வாழ்வு மையம் போல ஆனது. கணவன் குடிக்கிறான், அடிக்கிறான், வேலைக்குச் செல்ல மாட்டேன் என்கிறான் என்றால் அந்த மனைவிகள் சபைக்குச் செல்ல ஆரம்பித்துவிடுவார்கள். பின்பு கணவர்கள் இணைந்துகொண்டு கொஞ்சம் கொஞ்சமாகத் தீய பழக்கத்தில் இருந்து வெளியேறுவார்கள். குறிப்பாக மது அருந்தாமை, தனிமனித ஒழுக்கம் இவைகளை இராணுவ முறையில் பெந்தகொஸ்தே நடைமுறைப்படுத்துவதால் அங்கே செல்லுபவர்கள் ஆண்டவரால் மீட்கப்பட்டார்கள் என்று நம்பி, கெட்ட பழக்க வழக்கங்களை விட்டு விலகுவதை நிறைய பார்த்திருக்கிறேன். ரவுடியிசங்களை எல்லாம் விட்டு கத்திக்குப் பதில் கையில் பைபிளைப் பிடித்து போதித்த பல “பிரதர்”களைப் பார்த்திருக்கிறேன். அதுமட்டுமல்ல, சமூகத்தால் “வாடா போடா” என்றழைக்கப்படுபவர்கள், சபைகளில் ஒருவருக்கொருவரை “பிரதர்”, “சிஸ்டர்” என்று அழைத்து தங்களை உயர்த்திக்கொண்டார்கள். அவர்களுக்கென்று ஒரு தனி சமூகக் குழுவை உண்டாக்கிக்கொண்டார்கள். பெண்களுக்கு சக பெண்களுடன் கூட்டாகச் சேர்ந்து செயல்படும் வாய்ப்புகள் கிடைத்தன. அவர்கள் தங்கள் வீட்டுப் பிரச்சினையைப் பகிர்ந்துகொண்டார்கள். தங்கள் கடன் சுமைகளைப் பகிர்ந்துகொண்டார்கள். தொழில் தொடங்கினார்கள். தலைமைப் பண்புகளை வளர்த்துக்கொண்டார்கள். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். ஆயிரம் குறைகளைச் சொன்னாலும் பெந்தகொஸ்தே தன் ஆரம்ப காலங்களில் ஒரு சமூக அரசியல் இயக்கமாகத்தான் இங்கே தொடங்கியது, வளர்ந்தது. ஆனால் அந்த நிலை நீடிக்கவில்லை.
பல விஷயங்களில் பெந்தகொஸ்தே சபைகள் முற்போக்காக இருந்தாலும் இங்கிருக்கும் மோசமான போக்குகளைக் கொஞ்சம் கொஞ்சமாக அவை உள்வாங்கிக்கொள்ள ஆரம்பித்தன. கிட்டத்தட்ட இருபத்தியோராம் நூற்றாண்டைத் தாண்டிய போது, அவர்கள் தங்களிடம் இருந்த அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். குறிப்பாக, பெருந்திரளான மக்கள் தாங்கள் சொல்லுவதைக் கேட்பதற்குத் தயாராக இருக்கிறார்கள் என்கிற போதை பாஸ்டர்களை ஆட்கொள்ள ஆரம்பித்தது. திருநெல்வேலி, தூத்துக்குடி போன்ற தென் மாவட்டங்களில் இருந்து ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த பாஸ்டர்கள் அதிக அளவில் உருவாகி அவர்கள் இந்தியா முழுவதும் படர ஆரம்பித்தனர். அவர்கள் அதை ஒரு முதலாளித்துவ வடிவமாக மாற்றினார்கள். அதை தொழில் போலச் செய்யத் தொடங்கினார்கள்.
எல்லா முதலாளித்துவ அமைப்புகளிலும் இருக்கும் ஆணாதிக்கம், பிற்போக்குத்தனம், பாகுபாடு, உழைப்புச் சுரண்டல், பணச் சுரண்டல் இதிலும் ஆரம்பமானது. இதற்கு விதை போட்டது டிஜிஎஸ் தினகரன். கண்ணை பிழிந்து பிழிந்து அழுவாரே, அவரேதான்.
பெண்களை முக்காடு போடச் சொல்லி கட்டாயப்படுத்துவது, ஆண்களையும் பெண்களையும் தனித்தனியாக உட்கார வைப்பது, பெண்களை “ஸ்த்ரீகள்” என்று சனாதன முறையில் அழைப்பது, பெண்களின் ஆடையை வைத்து அவர்களை அவமானப்படுத்துவது, பெண் தெய்வங்களை வழிபடுபவர்களைச் சாபமிடுவது (குறிப்பாக கத்தோலிக்கர்களை), மற்ற மதத்தினரை இழிவானவர்கள் போல் நடத்துவது, கலை- இலக்கியம், அரசியல், சமூகப் பணிகளில் இருந்து தள்ளி இருப்பது, அதில் இருப்பவர்களைத் தவறாகப் பேசுவது, சபைக்கு வருபவர்களையும் அவர்களின் குழந்தைகளையும் பொது அறிவே இல்லாத ஆட்டு மந்தை போல மாற்றி வைத்திருப்பது, காணிக்கை கொடுங்கள் என்று உயிரை எடுப்பது, அனீமியா வந்தவளைப் பார்த்து பேய் பிடித்திருக்கிறது என்று சொல்லுவது, நோய்களை ஜெபத்தில் குணப்படுத்துவேன் என்று ரீல் விடுவது என்று அவர்களின் தற்போதைய அட்டூழியங்கள் ஒன்றல்ல இரண்டல்ல. ப்ராட்டஸ்டண்ட் கிறிஸ்தவம் எவ்வளவு மறுமலர்ச்சியைக் கொண்டுவந்திருந்தாலும் அது முழுக்க முழுக்கப் பெண்ணடிமைத்தனத்தை உட்கொண்டதாகவே இருந்தது. அதை அவர்கள் மாதா எதிர்ப்பில் இருந்தே தொடங்கினார்கள்.
இயல்பான செக்ஸ் உணர்வைப் பாவம் என்று சொல்லி மக்களைப் பாடாய்ப்படுத்துவது எல்லாம் வேறு ரக டார்ச்சர். எதற்கெடுத்தாலும் “விபச்சாரத்தின் ஆவி” என்று சொல்லி குஞ்சைப் பிடிப்பது, நெஞ்சைப் பிடிப்பது, உபவாச ஜெபம் இருங்கள் என்று சொல்லி கணவன் மனைவியைப் பிரிப்பது போன்றவை இப்போதைய ஊழியங்களில் சகஜம்.
திரும்பத் திரும்ப ஊழியம் என்று சொல்லுகிறேனே, இந்த ஊழியம் என்கிற வார்த்தை எங்கிருந்து வந்தது தெரியுமா? திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த கன்னியாகுமரி போன்ற இடங்களில் வாழ்ந்துவந்த ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள், ஆவர்ணர்கள் ஆகியோர் பார்ப்பன முதலாளிகளுக்கு எந்தச் சம்பளமும் இல்லாமல் செய்யும் வேலைக்குத்தான் “ஊழியம்” என்று பெயர். பிறப்பின் அடிப்படையில் ஒருவர் மாடு மாதிரி எவ்வளவு உழைத்தாலும் அவருக்குச் சம்பளம் எதுவும் தர மாட்டார்கள். உயர்சாதி குடும்பங்களுக்கு குடும்பத்துடன் கொத்தடிமைகளாக இருக்க வேண்டும். இதுதான் “ஊழியம்”.
இந்தச் சூழலில்தான் இந்தியாவில் ப்ராட்டஸ்டண்ட் பிரிவினர் வர அனுமதி அளித்தார் மெக்காலே. அதன் பின்னே லண்டன் மிஷினரி சொசைட்டி, சர்ச் மிஷினரி சொசைட்டி என்கிற இரு ப்ராட்டஸ்டண்ட் இயக்கங்கள் இந்தியாவுக்கு வந்தனர். ஊழியம் என்கிற பெயரில் நடக்கும் அட்டூழியங்களைப் பார்த்து அவர்கள் இதை ஒழிப்பதற்குப் பாடுபட்டார்கள். இதற்கிடையில் 1810ஆம் ஆண்டு கர்னல் மன்றோ திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் திவானாகப் பணியமர்த்தப்பட்டார். இந்த மிஷினரி அமைப்புகள், மன்றோவின் தீரா முயற்சி ஆகியவற்றால் 1814ஆம் ஆண்டு “ஊழியம்” முறையை ஒழிப்பதற்குச் சட்டம் இயற்றப்பட்டது. அதன்பின் அங்கே பலர் கிறிஸ்தவத்திற்கு மதம் மாறினார்கள். குறிப்பாக, கொத்தடிமைகளாக இருந்து மீண்ட உழைக்கும் வர்க்கம்.
ஆனால் அதே கன்னியாகுமரியில் இருந்து வந்த பாஸ்டர்கள் என்ன செய்தார்கள்? எந்தச் சமூகத்தை கிறிஸ்தவம் விடுதலை செய்ய வந்ததோ அதே கிறிஸ்தவத்தைப் பயன்படுத்தி “ஊழியம்” என்கிற வார்த்தையை மீண்டும் மறுபிறவி எடுக்கச் செய்தார்கள். கூடவே பார்ப்பன சிந்தனையையும். எந்தப் பலனையும் எதிர்பாராமல் “ஆண்டவருக்கு ஊழியம் செய்” என்று சொல்லி பாஸ்டர்களுக்கு ஊழியம் செய்ய வைத்தார்கள். பாஸ்டருக்குக் காணிக்கையை அள்ளிக்கொடுக்க வேண்டும். தேவனின் பெயரில்! என்னமோ ஆண்டவர் அந்தக் காணிக்கையை வாங்கி ஃபாரின் ட்ரிப் போவதைப் போல. “யோவ், தேவன்தான் எங்களுக்கு காசு தரணும், நான் ஏன் தேவனுக்குத் தரணும்?” என்று ‘ஊழியத்துக்கு’ வந்த ஒரு வாய்கூட கேள்வி கேட்க முடியாத சூழலை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள். கேள்வி கேட்காமல் சொன்னதைச் செய்து அடிமையாக வாழு என்பதற்காகவே ஊழியம் .
நான் எல்லாம் இப்படி அநேக ஊழியங்களுக்குச் சென்றிருக்கிறேன். வீதியில் விளையாடும் குழந்தைகளைத்தான் முதலில் ஜெபக் கூட்டங்களுக்கு ஆசை காட்டி அழைத்துச் செல்வார்கள். முதலில் போன ஜெபக்கூட்டம் கோயிந்தசாமி என்பவர் வீட்டில் நடந்தது. படுகட்டுக்கோப்பான இந்துக் குடும்பம் அது, சட்டென்று ஒரே நாளில் பெந்தகொஸ்தேவாக மாறினார்கள். அன்றுதான் முதல்முறையாக ஜெபக் கூட்டத்தில் எல்லோருக்கும் கேக்கும் சமோசாவும் இலவசமாக வழங்கப்பட்டது. அந்தோனியார் கோவிலில் செவ்வாய்க்கிழமை கொடுக்கும் பன்னுக்குப் பக்கத்தில் இது தேவாமிர்தமாய் தெரிந்தது. “உம்முடைய வார்த்தைகள் என் நாவுக்கு எவ்வளவு இனிமையானவைகள்; என் வாய்க்கு அவைகள் தேனிலும் மதுரமாயிருக்கும், சங்கீதம் 119:103”. பாஸ்டர் பைபிளில் இருந்து வசனத்தைப் படித்தார். இதுபோன்ற தேவ வசனங்களுக்கு சங்கீதம் என்று பெயர் வைத்தவன் நல்ல இரசிகனாக இருந்திருக்க வேண்டும். எவ்வளவு அழகான வார்த்தைகள் பாருங்கள். யாருமே மயங்கத்தானே செய்வார்கள்? ஜன சங்கம் சொல்லுவது போல காசு கொடுத்து எந்தப் பாஸ்டரும் மதமாற்றுவது இல்லை. அவர்கள் மிக சல்லிசாக நான்கு தேவ வசனங்களை வாசித்து மயக்கிவிடுகிறார்கள். இவ்வளவு அழகான வார்த்தைகளைப் பிரயோகப்படுத்தும் போது ஒரு கூலித்தொழிலாளி எவ்வளவு இலகுவாக உணர்வான்? “நான் உன்னை விட்டு விலகுவதில்லை, கண்மணி போல் உன்னைக் காப்பேன்” என்பதைக் கேட்டு ஒரு பாலியல் தொழிலாளி அன்பில் நனைந்து போவாள்தானே? அப்படி இறை அன்பில் நனைந்து போய்தானே மதம் மாறினார்கள்?
இப்படித்தான் நானும் அன்று பெந்தகொஸ்தேவுக்கு மாறி இருப்பேன். அப்போதுதான் பாஸ்டர் சூடான எண்ணெயில் போட்ட சீரகத்தைப் போல் துள்ள ஆரம்பித்தார். வாயில் இருந்து சூடான காற்றை வெளியேற்றினார், கூடவே ஏதேதோ பாஷையில் அவர் உளற, சுற்றியுள்ளவர்கள் கைகளைத் தட்டிக்கொண்டே அந்நிய பாஷையில் பேசத் தொடங்கினார்கள். அமைதிப் பூங்காவாக இருந்த இடம் அதீத சத்தத்தால் நிறைந்தது. எனக்கு கண்ணை இருட்டிக்கொண்டு பயமாய் வந்தது, சாப்பிட்ட சமோசாவும் கேக்கும் வாந்தியாய் வந்துவிடும் அபாயம் அதிகரித்தது. கொஞ்ச நேரத்தில் “உஷ் …உஷ்” என்று மூச்சுவிட்டுக்கொண்டே, எல்லோரும் அமைதியடைந்ததும், அங்கிருந்து தலைதெறிக்க ஓடினேன். மனதிற்குள், “அந்தோனியார் கோயில் பன்னே மேல்டா சாமி” என்று தோன்றியது.
பின்பு கொசப்பேட்டையில் ஒரு பாஸ்டர் பிரபலமாக ஆரம்பித்தார். அவர் பேயோட்டுவதில் வல்லுநர் என்று ஊரெல்லாம் பேசிக்கொள்வார்கள். நண்பர்களோடு நானும் ஒரு நாள் அவரின் கூட்டத்திற்குச் சென்றிருந்தேன். வசனம், கூச்சல், கூப்பாடு எல்லாம் முடிந்ததும் பாஸ்டர் எல்லோரது தலையின்மீது கை வைத்து ஜெபிக்க ஆரம்பித்தார். “அல்லேலூயா, ஸ்தோத்திரம் ஆண்டவரே… ஷார்லபால ….!!!” கொஞ்ச நேரத்தில் என் நெற்றிப் பொட்டில் கை வைத்து அழுத்தத்துடன் தள்ளினார். ஏற்கனவே மூன்று மணி நேரம் சோறு தண்ணீர் இல்லாமல் ஜெபம். ஒருவித மயக்கம் இருந்தது. கை தட்டித் தட்டி உடம்பெல்லாம் வெலவெலத்து போயிருந்த நான், பாஸ்டர் தள்ளியதும், “ச்ச… இவ்ளோ பெரிய மனுஷன் தள்ளி வுட்றான், விழலனா நல்ல இருக்காது” என்றெண்ணி டபால் என்று மயங்கி விழுந்தேன். சரசரவென்று மூன்று பேர் வந்து தாங்கிக்கொண்டார்கள். பாஸ்டர் சொன்னார், “இந்த பொண்ணுக்குள்ள தீய ஆவிக்குரிய கிரியைகள் இருக்கு, இந்த எண்ணெயை தண்ணில கலக்கி மூணு வேலை குடுங்க.. சரி ஆகிடும்”. பாஸ்டர் முகம் தேவ கிருபையால் ஜொலிப்பதாகப் பக்கத்துக்கு வீட்டுப் பெண் வீட்டிற்குத் திரும்பும் வழியில் பேசிக்கொண்டு வந்தாள்.
சில நாட்களுக்குத் தண்ணீரில் அந்த எண்ணெயைக் கலந்து குடித்து வந்தேன். வயிறு சுத்தமாகியது. பின்பு ஒரு நாள் பாஸ்டர் வட்டிக்கு விட்டு பிழைப்பு நடத்துவதாகவும் வட்டி செலுத்தாத ஒருவரைத் தகாத சொற்களால் அவர் வீட்டில் வைத்துத் திட்டியதாகவும் கேள்விப்பட்ட நாளில் இருந்து எண்ணெய் குடிப்பதையும் ஜெபக் கூட்டத்திற்குப் போவதையும் நிறுத்தினேன். பத்து வருடங்களுக்கு முன்பு காதல் தோல்வி ஒன்றில் சிக்கிக்கொண்டு சின்னாபின்னமாகி சில பல மாத்திரைகளை முழுங்கிய வேளையில் ‘இது பிசாசின் வேலையாகத்தான் இருக்கும்’ என்று உறவுக்காரர் ஒருவர் அரைகுறை பாஸ்டர் ஒருவரை வீட்டுக்கு அழைத்து வந்தார். தலையில் கைவைத்த அதே ஜெபம். அந்நிய பாஷையில் பேசத் தொடங்கினார். நான் அப்படியே எந்த அசைவும் இல்லாமல் உட்கார்ந்துகொண்டிருந்தேன். “இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்கிறாயா? ஏற்றுக்கொள்கிறாயா?” என்று என் மண்டையைப் பிடித்து பாஸ்டர் நசுக்க ஆரம்பித்தார். நான் அவரை ஏறிட்டுப் பார்த்தேன். தலையை நான்கு சுற்று சுற்றிவிட்டு பாஸ்டரின் கன்னத்தில் ஓங்கி அறைந்து, “நான்தான்டா இயேசு கிறிஸ்து!” என்று கத்திவிட்டு அறைக்குள் போய் கதவைச் சாத்திக்கொண்டேன். பாஸ்டர் அதீத பயத்துடன் மனைவியை பைக்கில் உட்கார வைத்து வீட்டுக்குத் தப்பித்துச் செல்லுவது ஜன்னல் வழியாகத் தெரிந்தது .
இப்படியாக எனக்கும் பாஸ்டர்களுக்கும் இரண்டாம் பொருத்தமாகப் போய்க்கொண்டிருந்த வேளையில்தான் அந்த அதிர்ச்சியான விஷயம் நடந்தது. ஒரு பெரிய பாஸ்டர் புரசைவாக்கம் பகுதியில் பிரசித்தம். குறிப்பாக, தீர்க்கதரிசன ஜெபக் கூட்டங்களுக்குப் பெயர் போனவர். அவரைப் பார்த்தே தீர வேண்டும் என்று எனக்குள் ஒரு அவா. அந்தக் காலகட்டம் அவ்வளவு மோசமாக இருந்தது. தொடர்ச்சியான காதல் தோல்விகள், தனிமை- இப்படியான நேரம். ஏழு கன்னிமாருக்கு பிளவுஸ் துணி எடுத்துக் கொடுத்து பூஜை, சூளை அங்காளம்மன் கோயிலில் பாம்புக்கு முட்டையும் பாலும் வைப்பது, வியாழக்கிழமை இரவுகளில் அண்ணாசாலை தர்கா என்று எதையுமே நான் விட்டுவைக்கவில்லை. சரி, கடைசியாக இவரையும் பார்த்துவிடலாம், ஒருவேளை குடும்ப சாபம் ஏதாவது இருக்கலாம் என்று தோன்றியது. நெருக்கடி நேரங்களில் நமக்கு எப்போது பகுத்தறிவு வேலை செய்திருக்கிறது? சராசரி மூளை போலத்தானே சிந்திக்க முடியும்? நாஷ்டா எதையும் விழுங்காமல் ஞாயிறு காலை ஓட்டேரியில் உள்ள அந்த ஜெபக் கூட்டத்திற்கு அம்மாவுடன் சென்றுவிட்டேன்.
ஆண்கள் தனியே, பெண்கள் தனியே என்று உட்கார வைத்தார்கள். பெண்கள் எல்லாரும் முக்காடு போட வேண்டும் என்ற அறிவிப்பு வந்தது. ஒரு வயதான பெண்மணி, வரிசையாக உட்கார்ந்திருக்கும் பெண்களின் துப்பட்டாவைச் சரி செய்துகொண்டே போனார். நான் துப்பட்டாவே போடவில்லை. இந்த அழகில் முக்காடு எப்படி? ஸ்லீவ்லெஸ் சுடிதார் வேறு. சபையே என்னை விரோதியைப் போல் பார்த்தது. எல்லோரையும் ஓங்கி ஒரு அறைவிட வேண்டுமென்று தோன்றியது. இரண்டு மணி நேரம் ஜெபக்கூட்டம் முடிந்ததும் பாஸ்டர் எல்லோரது தலையிலும் கை வைத்து ஜெபிக்க ஆரம்பித்தார். ஒவ்வொருவராக ஆட ஆரம்பித்தார்கள்.
“உன்மேல் சர்ப்பத்தின் ஆவி இருக்கிறது!!!” குண்டான அங்கிள் ஒருவர் பாம்பைப் போல் நெளிந்து நெளிந்து போனார். எனக்குச் சிரிப்பு வந்தது. அடுத்து ஒரு பெண். “சோம்பலின் பிசாசை உன் உடலில் இருந்து துரத்துகிறேன். இன் தி நேம் ஆப் ஜீசஸ் க்ரைஸ்ட்!” அந்தப் பெண் தன் உடலில் எறும்பு ஊறுவதைத் தேய்த்து விடுவதுபோல பரபரவென்று தேய்த்துக்கொண்டே ஓடினார். அரைமணி நேரத்தில் பலவிதமான “பேய்கள்” அங்கே ஜிங்குஜிங்கென்று ஆடி விடைபெற்றுக்கொண்டன. என் முறை வந்தது. என்னைப் பார்த்தார். அவரின் முகமும் குரலும் திடீரென்று மென்மையானது. இவ்வளவு நேரம் அங்கிருந்தவரைப் போல இல்லாமல் வேறு யாரோ போல இருந்தார். கண்களை மூடிக்கொண்டு, “ஐயோ மகளே… எவ்வளவுதான் அழுவாய்? ஊர் எல்லாம் உன்னைக் குற்றம் சொன்னதே? நீ யாரை எல்லாம் நேசித்தாயோ அவர்களை மனதின் ஆழத்தில் இருந்துதானே நேசித்தாய்? ஆனால் எல்லோரும் உன்னை வஞ்சித்தார்களே! இனி நீ காதலைத் தேடாதே… காதல் உன்னை வந்துசேரும். போ… நீ நேசிக்கப்படுவாய்” என்று சொல்லிவிட்டு சட்டென்று என்னிடத்தில் இருந்து விலகிவிட்டார். அங்கிருந்தவர்கள் பாஸ்டர் “காதல்” என்று சொன்னதை அதிர்ச்சியாகப் பார்த்தார்கள். அங்கிருந்த யாருக்கும் என்னைத் தெரியாது. பாஸ்டருக்கும் என்னைத் தெரியாது.
இந்த முறை உண்மையிலேயே தலைசுற்றியது.
4 comments
Nicely written .
Thanks
அருமை. முதல் முறையாக பெந்தேகோஸ்துவில் பெரியாரிசம் காண்கிறேன். இந்த கோணம் நிச்சயம் எனக்கு புதிது.
பெந்தகொஸ்தே பத்தி நல்ல அபிப்பிராயம் இருந்தது இல்லை. இத படிச்ச அப்புறம் தான் இவ்ளோ இருக்கானு தெரியுது.. அருமை..
♥️
Comments are closed.