The People vs. O.J.Simpson
ஓ.ஜே.சிம்ப்சன் அமெரிக்காவின் புகழ்பெற்ற கால்பந்தாட்டக்காரர். கறுப்பினத்தவர். தன்னுடைய முன்னாள் மனைவியையும் அவருடைய காதலனையும் கொலை செய்ததற்கான வலுவான முகாந்திரங்கள் இருந்ததன் அடிப்படையில் கைது செய்யப்பட்டார். நீண்ட காலம் இழுத்தடிக்கப்பட்ட இந்த வழக்கை அடிப்படையாகக் கொண்டு The People vs. OJ. Simpson என்ற பெயரில் தொலைக்காட்சித் தொடரும் வெளியானது.
ஓ.ஜே.சிம்ப்ஸன் வழக்கே அதீத பரபரப்புடன்தான் தொடங்குகிறது. கொலை நிகழ்ந்த வீட்டிலிருந்து அவரைக் காவல்துறையினர் துரத்த, அவர் காரில் ஏறித் தப்பியோடும் காட்சி நேரலையாக ஒளிபரப்பட்டது. அவரைப் பிடித்து, சந்தேகத்தின் பொருட்டு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படும் போது, சிம்ப்சனின் கைகளில் விலங்கு பூட்டப்படும் புகைப்படம் வெளியாகி பெரும் சர்ச்சைக்குள்ளாகிறது. அப்போதிருந்தே இதுவொரு ‘ஹை ப்ரொபைல்’ வழக்காக மாறிவிட்டது.
கறுப்பினத்தவர் என்பதால்தான் சிம்ப்சன் அவமதிக்கப்பட்டார் என்றும் குற்றம் நிரூபணமாவதற்கு முன்னமே காவல் துறையினர் நிறவெறி சார்ந்த முன்முடிவுகளுடன் செயல்படுவதாகவும் விவாதங்கள் சூடுபிடிக்கின்றன. வெகு விரைவிலேயே கொலைகளும் அதற்கான காரணிகளும் பின்னகர்ந்து குற்ற விசாரணையே சமூக அவலமாகத் திரிக்கப்படுகிறது. சிம்ப்சன் ‘விக்டிம்’ ஆகிறார். ஒரு கறுப்பின வக்கீல்தான் சிம்ப்சனுக்கு ஆதரவாக வாதாடுகிறார். தன் இனம் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருவதன் முதன்மை அடையாளமாக சிம்ப்சனை முன்னிறுத்துகிறார்.

சாட்சியங்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் ஆதாரங்களின் அடிப்படையில் முடிவெடுக்க வேண்டிய ஜுரியில் இடம்பெற்றிருக்கும் நபர்களும் மன சஞ்சலங்களுக்கு உள்ளாகிறார்கள். ஊடகத் தாக்கங்களினாலும் பொது விவாதப் போக்குகளினாலும் பாதிக்கப்பட்டு இறுதித் தீர்ப்பை எட்டிவிடக் கூடாதென்பதற்காக அவர்கள் கூட்டாகத் தங்கியிருக்கும் விடுதியில் தொலைக்காட்சி பார்ப்பதற்கும் செய்தித்தாள்கள் வாசிப்பதற்கும் தடை விதிக்கப்படுகிறது.
சிம்ப்ஸனை விசாரித்த காவல் அதிகாரி, மிக ஆணித்தரமான ஆதாரங்களை (இரத்தம் தோய்ந்த கையுறை, கொலை நடந்த இடத்தில் இருந்த கால்தடம், இன்னபிற) சமர்ப்பித்திருந்தாலும், அவர் எப்போதோ குடிபோதையில் கறுப்பின மக்களை இன ரீதியாகத் தாக்கிப் பேசியதன் குரல் பதிவு, டிஃபன்ஸ் தரப்பிற்குத் தொக்காக மாட்டியது. அவர் பயந்து போய் சாட்சி சொல்வதிலிருந்து பின்வாங்கி விடுகிறார். வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கையிலேயே எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பின்படி பெரும்பாலான கறுப்பினத்தவர்கள் சிம்ப்சனே குற்றவாளி என அறுதியிட்டு நம்பியதும் வெள்ளைக்காரர்கள் சிம்ப்சனை நிரபராதி என்று கருதியதும் நகைமுரண்.
இந்த முடிவுகளை எட்டுவதன் ஊடாக இரு தரப்பிற்குமே வேறு நோக்கங்களை நிரூபிக்க வேண்டிய அவசியமிருந்தது என்பது தெளிவாகிறது. கறுப்பினத்தவர்களுக்குத் தாங்கள் தத்தம் சுய விருப்பங்களுக்கும் மனச் சாய்வுகளுக்கும் ஆட்படாத கனவான்கள் என்று காட்டிக்கொள்ளக் கிடைத்த அரிய சந்தர்ப்பம். வெள்ளையர்களுக்கோ நிறவெறியைக் ‘கடந்துவிட்ட’ மேலானவர்களாக நிலைபெற்றுவிட அமைந்த பொன்னான வாய்ப்பு.

ஒரு கொலைக் குற்றத்தை கறுப்பு வெள்ளையாக அணுகுவதில் இருந்த மனத்தடைகளை நினைத்தாலே மலைப்பாக உள்ளது. அப்புறம் என்ன? ஒவ்வொரு சாட்சியத்தையும் சுளுவாக உடைத்து சிம்ப்சனை வெளியில் கொண்டு வந்துவிட்டார்கள். ஆக, குட்டையைக் குழப்பும் நிபுணர்கள் உலகெங்கும் பொதுவானவர்கள். செலக்டிவ் முற்போக்காளர்களும் போலி அறிவுஜீவிகளும் குற்ற நிகழ்வுகளுக்கு வரலாற்றுக் காரணங்கள் கற்பித்து தத்துவச் சாயம் பூச முற்படுவது அபத்தமானது. ஆபத்தானதும்கூட.
தீவிரமான குற்றங்களில் ஈடுபடுவோரில் பெரும்பாலானவர்கள் அந்தப் பழக்கத்திற்கு அடிமையாகி சிக்குண்டவர்கள். திருட்டு, பாலியல் வன்முறை குற்றவாளிகள் முதல் தடவையிலேயே பிடிபடுவதுமில்லை. சாதி, மதம், வர்க்கம், பாலினம், நிறம் என எந்தக் காரணியும் குற்றங்களிலிருந்து தப்பிப்பதற்கான ‘லேபிள்’களும் அல்ல. இந்தக் கொலை வழக்கிலிருந்து சிம்ப்சன் விடுதலை செய்யப்பட்டாலும் மீண்டும் மீண்டும் வெவ்வேறு குற்றங்களுக்காகக் கைதானவாறே இருந்தார். ஆள் கடத்தல், ஆயுதங்கள் வைத்திருத்தல், தனிநபர்கள் மீதான தாக்குதல்கள் போன்றவை அவற்றுள் சில. இந்த முறை சிம்ப்சனுக்கு முப்பத்து மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைத்தது.
How less biased we are, the more ethical we will be.
*
An Officer and a Spy
“The truth is on the march, and nothing shall stop it.”
ஃபிரெஞ்சு எழுத்தாளரான எமில் ஸோலா (Emile Zola) ஐம்பது நாவல்களையாவது எழுதியிருப்பார். அவற்றுள் ஜெர்மினல், நானா ஆகிய இரு நாவல்களை மட்டும் வாசித்திருக்கிறேன். பால்சாக்கின் தொடர்ச்சி என வரையறுக்கலாம். அவருடைய La Bête Humaine நாவல் புகழ்பெற்றது. அதைத் தழுவி எடுக்கப்பட்ட இரண்டு படங்களைப் பார்த்திருக்கிறேன். 1938ம் ஆண்டு வெளியான படத்தை இயக்கியவர் ரெனவர். மற்றொன்றின் இயக்குநர் ஃபிரிட்ஸ் லாங்.
எமில் என்கிற பெயரை வைத்து பெண் எழுத்தாளர் என்றே முதலில் எண்ணியிருந்தேன். அட்டைப் படத்தில் அவரது புகைப்படமோ நூலில் ஆசிரியர் பற்றின குறிப்போ இருக்கவில்லை. பிரமாதமாக எழுதியிருக்கிறாரே என ஆச்சரியமாக இருந்தது. நீண்ட நாட்கள் கழித்து அவர் ஓர் ஆண் என்பது தெரிந்ததும் அதிர்ச்சி ஏதும் ஏற்படவில்லை. புகழின் உச்சியில் இருக்கும்போதே திடீரென இறந்துவிட்டவர். அவரது மரணத்தில் இன்னமும் தீர்க்கப்படாத மர்மங்கள் உள்ளன. கொலையா என்பது நிரூபணமாகவில்லை எனினும் அவரது யூத ஆதரவு காரணமாகக் கொலை செய்யப்பட்டிருக்கவே வாய்ப்புகள் அதிகம். காரணம், ஒரு வழக்கு!

ஃபிரெஞ்சு சரித்திரத்தில் த்ரெய்ஃபுஸ் வழக்கு (Dreyfus affair) தவிர்க்க முடியாதது. ரோமன் பொலன்ஸ்கியின் சமீபத்திய ஆக்கமான An Officer and a Spy படத்தைப் பார்த்திருந்தால் அதன் முக்கியத்துவம் குறித்த அறிமுகம் கிடைக்கும். படமாக நன்றாக இல்லை. சவட்டி எடுத்துவிட்டார்கள். நாட்டையே இரண்டாகப் பிளவுபடுத்திய வழக்கில் ஓர் எழுத்தாளராக எமிலின் பங்களிப்பு என்ன என்பதும் சரியான முறையில் பதிவுசெய்யப்படவில்லை. ஒரு துணைக் கதாபாத்திரத்திற்கு வழங்கப்பட்டிருக்க வேண்டிய இடத்தைக்கூட தராமல் இருட்டடிப்பு செய்துவிட்டார்கள் என்றே சொல்வேன். எப்பேர்ப்பட்ட மாபெரும் பிழை.
யூதரான த்ரெய்ஃபுஸ் தன் நாட்டு இராணுவ இரகசியங்களை ஜெர்மனிக்கு விற்றார் என்பது வழக்கு. இக்குற்றத்திற்கான தண்டனையாக அவர் தனித்தீவிற்கு நாடு கடத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். இட்டுக்கட்டப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையிலும் யூத வெறுப்பின் காரணமாகவுமே த்ரெய்ஃபுஸ் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது என்பதைக் கண்டறியும் இராணுவ ஜெனரல் பிக்கா (Picquart), தன் மனசாட்சிக்கு நேர்மையாக இருக்கும் பொருட்டு இவ்விஷயத்தை மேலதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டுசெல்கிறார். உண்மையான குற்றவாளியைக் கண்டுபிடிக்கிறார். நீதி பரிபாலனங்கள் அனைத்தும் மனச்சாய்வுகளுக்கு உட்பட்டவை அல்லவா? ஓர் யூதன் குற்றவாளியல்ல என்பதை எப்படி ஏற்றுக்கொள்வார்கள்?
நிரபராதியைக் கைது செய்தது உலகிற்குத் தெரிந்தால் ஃபிரெஞ்சு இறையாண்மைக்கே இழுக்கு. முற்போக்கில் முன்மாதிரி எனப் பெயரெடுத்ததெல்லாம் படுகுழிக்குப் போய்விடும். இனவெறிக் காழ்ப்புகள் அம்பலப்பட்டால் தலைகுனிய நேரிடும். அதனால் இந்தத் துப்பறிகிற வேலையை இதோடு நிறுத்திக் கொள்ளுமாறு பிக்கா அறிவுறுத்தப்படுகிறார். மிரட்டப்படுகிறார். இதற்கெல்லாம் அஞ்சாது நெஞ்சுறுதியுடன் போராட முனைகிற பிக்காவையும் இராணுவம் கைது செய்கிறது.

ஓர் இராணுவத் தளபதியின் சொல்லுக்கு இல்லாத மதிப்பு அங்கே ஓர் எழுத்தாளனுக்கு உண்டு. பிக்காவிற்கு ஆதரவாக இராணுவ மந்திரிகளையும் உயரதிகாரிகளையும் கடுமையாகச் சாடி குடியரசுத் தலைவருக்கு எழுதப்பட்ட எமிலுடைய கடிதம் பத்திரிக்கைகளில் வெளியாகி பெரும் பரபரப்பாகிறது. அவரைத் தேசத்துரோகி என முத்திரை குத்துகிறார்கள். யூத ஆதரவாளன் என அவரை வசைபாடுகிறார்கள். எமில் மீது அவதூறு வழக்குகள் பதிவாகின்றன. பத்திரிகைகளும் புத்தகங்களும் கொளுத்தப்படுகின்றன. எதிரணிக்கு நிகராக ஆதரவாளர்களும் திரள்கிறார்கள்.
த்ரெய்ஃபுஸோ பிக்காவோ எமிலின் நண்பர்களல்ல. த்ரெய்ஃபுஸை அவர் நேரில் சந்தித்ததும் இல்லை. ஓர் அநீதிக்கு எதிராக அவரைக் கிளர்ந்தெழச் செய்தது எந்தவோர் எழுத்தாளனுக்கும் இருக்க வேண்டிய அறவுணர்வு மட்டுமே. இத்தனைக்கும் அந்தச் சமயத்தில் அவர் தனது படைப்பாற்றலின் முழு வீச்சுடன் எழுதிக்கொண்டிருந்தார். உருப்படியானதும் பாதுகாப்பானதுமான வேலையை விட்டுவிட்டு கூர்வாளுக்குத் தலையை வெட்டக் கொடுப்பானேன்? அதுவும் தான் நேரடியாக அறியாத ஓர் அந்நியனுக்காக, தனக்குப் பரிச்சயமில்லாத ஒரு சாமானியனுக்காக.
எமில் எழுதின கடிதத்திலுள்ள தீவிரம் எவரையும் அசைத்துப் பார்க்கக்கூடியது. தன்னுடைய தேசத்தின் பாவங்களுள் ஒன்றாக குற்றமற்றவனின் சாபம் படிவதை தான் விரும்பவில்லை என்கிறார். இதைப் பொறுத்துக் கொள்வோர் எவருக்கும் இரத்தக்கறையில் பங்குண்டு. அக்கடிதம் ஓர் உந்துசக்தியாக அமைந்தது. எத்தனையோ நபர்களை தெருவில் இறங்கி போராட வைத்தது. இன வெறுப்பிற்கு எதிரான அறைகூவலாகக் கட்டியங்கூறியது.

ஆனாலும் அவ்வழக்கின் தீர்ப்பு அதிகாரங்களின் இசைவுக்கேற்பவே தீர்மானிக்கப்பட்டது. எமிலுக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும் அபராதமும் விதித்தார்கள். அவர் இங்கிலாந்துக்குத் தப்பிச்சென்று தலைமறைவானார். மீண்டும் மேல்முறையீடு செய்யப்பட்ட போது ஃபிரான்ஸ் திரும்பினார். மேலும் மேலும் அலைக்கழிப்பட்டார். தூற்றப்பட்டார். எண்ணற்ற இன்னல்களுக்கு ஆளானார். அவற்றிலிருந்து மீண்டெழ இறுதிவரைக்குமே அவரால் இயலவில்லை.
1894ம் ஆண்டு முதல் 1906ம் ஆண்டு வரை நடைபெற்ற வழக்கில், 12 வருட சிறைவாசத்திற்குப் பிறகு, ஒருவகையான சமரசத்தின் பேரில் த்ரெய்ஃபுஸ் விடுதலை செய்யப்பட்டார். அதைக் காண எமில் உயிருடன் இல்லை. அவர் நான்காண்டுகளுக்கு முன்பே கொல்லப்பட்டு விட்டார்.
*
மன்னிப்பு.
1989ம் ஆண்டு நியூயார்க் நகரில் செண்ட்ரல் பார்க் அருகே ஜாகிங் சென்ற பெண் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகி பலத்த காயங்கள் காரணமாகச் சுயநினைவை இழந்து கோமா நிலைக்குச் சென்றுவிடுகிறார். குற்றம் நிகழ்ந்த நேரத்தில் அங்கே திரண்டிருந்த கறுப்பினத்தவர்களைச் சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறை கைது செய்கிறது. எல்லோரும் 14 முதல் 16 வயதுள்ள பதின்பருவத்தினர். இச்சம்பவம் நகரத்தையே உலுக்குகிறது. அத்தனை ஊடகங்களிலும் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது. வழக்கை விரைந்து முடிக்க வேண்டிய அழுத்தம் காரணமாகவும் இனவெறி சார்ந்த கண்மூடித்தனமான முன்முடிவுகளாலும் அவர்களுள் ஐந்து நபர்களை மிரட்டியும் துன்புறுத்தியும் பொய்யான வாக்குமூலங்களைப் பெற்றுவிடுகிறார்கள்.
இவ்வழக்கின் விசாரணையின் போதே எண்பத்து ஐயாயிரம் டாலர்கள் செலவழித்து ஒரு விளம்பரத்தை வெளியிடுகிறார் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப். அதில் அந்தச் ஐந்து சிறுவர்களைத் தூக்கிலிட வேண்டுமென்றும் வலிமைமிக்க காவல்துறையை மீட்டெடுக்க வேண்டுமென்றும் அறைகூவல் விடுக்கிறார். அந்த விளம்பரத்தின் தாக்கம் நீதிமன்றத்திலும் ஜூரி ஆட்களிடமும் எதிரொலிக்கிறது.
ஒரு வன்புணர்வு வழக்கிற்குத் தேவைப்படக்கூடிய எந்தவிதமான அடிப்படை ஆதாரமும் காவல்துறைக்குக் கிடைக்கவில்லை. ஆனால், முறையான விசாரணை ஏதுமின்றி அவர்கள் கறுப்பினத்தவர்கள் என்பதாலேயே தண்டிக்கப்படுகிறார்கள். நால்வருக்கு ஏழாண்டுகள் சிறைத்தண்டனையும் ஒருவருக்குப் பதிமூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையும் கிடைக்கிறது. இதன் மூலம் தன் அரசியல் கணக்குகளில் ட்ரம்ப் இலாபம் பார்த்துவிட்டார் என்றே சொல்ல வேண்டும்.

தண்டனைக் காலம் முடிந்து அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்ட பின்னர் வேறொரு குற்றத்திற்காக ஒரு வெள்ளையனை 2001ம் ஆண்டு கைது செய்கிறார்கள். பன்னிரண்டு வருடங்களுக்கு முன்பு செண்ட்ரல் பார்க்கில் ஓடிக்கொண்டிருந்த பெண்ணைத் தாக்கியது அவன்தான் எனக் கண்டுபிடிக்கப்படுகிறது. குற்றத்தை ஒப்புக்கொண்டு அவன் ஒப்புதல் வாக்குமூலமும் அளிக்கிறான்.
இதைச் சுட்டிக்காட்டி இனப்பாகுபாடு காரணமாகவே தாங்கள் வஞ்சிக்கப்பட்டோம் என ஐவரும் வழக்கு தொடுக்கிறார்கள். பதிமூன்று ஆண்டுகால நீண்ட போராட்டத்திற்குப் பிறகு அனைவருக்கும் சேர்த்து நாற்பது மில்லியன் டாலர்கள் நஷ்ட ஈடு கிடைக்கிறது. ட்ரம்பின் இனவெறியைத் தூண்டும் விளம்பரம் காரணமாகவே அப்பாவிகள் பாதிக்கப்பட்டார்கள் என்பதால் ட்ரம்ப் டவர் முன்பு கறுப்பினத்தவர்கள் பலரும் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டுமென வலியுறுத்தி ஊர்வலமும் சென்றார்கள்.
‘நீங்கள் மன்னிப்பு கேட்கப் போகிறீர்களா?’ எனப் பத்திரிகையாளர்கள் கேட்ட போது தோள்களைக் குலுக்கியவாறே ட்ரம்ப் சொன்னார்.
‘அப்போது எல்லோரும் அவர்களே குற்றவாளிகள் என நினைத்தார்கள். நான் மட்டும் எதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்?’
(இச்சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு When they see us எனும் தொடர் எடுக்கப்பட்டுள்ளது. நெட்ஃப்ளிக்ஸில் இருக்கிறது.)

*
ஆரூஷி, ருஸ்தம், இன்னபிற..
இந்திய நீதிமன்றங்களிலும் ஜுரி முறை வழக்கத்தில் இருந்திருக்கிறது. கே.எம்.நானாவதி (திரைப்படத்தில் ருஸ்தம்) வழக்குடன் அம்முறை ஒழிக்கப்பட்டது. பார்ஸி வகுப்பைச் சேர்ந்த கடற்படை அதிகாரியான ருஸ்தம், தனது மனைவியின் காதலனைச் சுட்டுக் கொன்றுவிட்டு காவல் நிலையத்தில் சரணடைகிறார். இதுவொரு எளிமையான open and shut case. ஆனால் ப்ளிட்ஸ் (Blitz) பத்திரிகை (திரைப்படத்தில் த ட்ரூத் என மாற்றி இருக்கிறார்கள்) கொலைகாரனான ருஸ்தமிற்குக் கதாநாயக அந்தஸ்தை வழங்குகிறது. வெகு விரைவிலேயே பார்ஸி vs. சிந்தி கலகமாக இவ்வழக்கு உருமாற்றப்படுகிறது.
பொதுஜனம் ஆர்வமாகிறது. ஆயிரக்கணக்கில் பத்திரிகைப் பிரதிகள் விற்றுத் தீர்கின்றன. பல வாரங்களுக்குப் ப்ளிட்ஸ் பத்திரிகையின் தலையங்கமே இந்தச் சாதாரண கொலை வழக்குதான். இந்த ஊடகத் தாக்கம் ஜுரியில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களிடையே தீவிரமான பாதிப்பைச் செலுத்துகிறது. (The People vs. O.J.Simpson வழக்கைப் போல) உண்மை X பொய் என இருமைக்குள் அடங்க வேண்டிய சம்பவம் திரிக்கப்பட்டு உண்மையே பல முகங்கள் கொண்டதெனக் குழப்பப்படுகிறது. நீதிபதியின் விருப்பத்திற்கு மாறாக ஜுரி உறுப்பினர்களின் முடிவின்படி ருஸ்தம் விடுதலையாகிறார். அரசாங்கம் ஜுரி முறையை ஒழிக்கிறது.
பிளிட்ஸிற்கு இதுவொன்றும் புதிதல்ல.
1.Nine hours to Rama என்றொரு நாவல் இந்தியாவில் தடைசெய்யப்பட்டது. காந்தி சுடப்பட்டு இறக்கும் தறுவாயில், ‘ஹே ராம்’ என்ற வார்த்தைகளைச் சொன்னதாக நம்பப்படுகிறது. அவர் அவற்றை உச்சரிப்பதற்கு ஒன்பது மணி நேரத்திற்கு முன்னால், நாதுராம் கோட்ஸே என்ன செய்துகொண்டிருந்தான் என்பதில் இருந்து தொடங்குகிறது இக்கதை.
காந்தி படுகொலையை ஒற்றைப்படையாக நியாயப்படுத்துவதாகக் கருதப்பட்டதாலும் கோட்ஸேவை அப்பாவியாகச் சித்தரிப்பதாலும் நாவலுக்கு நேரு அரசாங்கம் தடைவிதித்திருந்தது. ஆனால் அந்நாவலை அடிப்படையாகக் கொண்டு திரைப்படம் எடுக்க அனுமதி கோரப்பட்ட போது, விஷயம் தெரியாமல் இந்தியாவில் படத்தை வெளியிட ஒப்புதல் வழங்கிவிட்டார்கள். ராம் மனோகர் லோகியா லண்டனுக்குச் சென்ற போது ‘ராமா’ நாவலை வாசித்திருக்கிறார். ‘இதைப் படமா எடுக்கறாங்களே? இதுக்கு எப்படி நேரு அனுமதி வழங்கலாம்?’ என மூக்கு வியர்த்தவர், இந்தியா திரும்பியதும் இந்த விஷயத்தைக் க்வாஜா அகமது (இடதுசாரி எம்.பி) காதில் போட்டுவிடுகிறார்.
அகமது அலட்டிக்கொள்ளாமல், அப்படத்தில் காந்தியாக நடித்த காஷ்யபிடம் சென்று, ‘படத்தை எப்படி எடுத்திருக்கீங்க?’ என விசாரிக்கிறார். காஷ்யப் சற்றுப் பெருமையாக, ‘மூலநூலுக்கு பங்கம் வராம எடுத்திருக்கோம்’ என உளறிவிட்டார். அவ்வளவுதான். ப்ளிட்ஸ் பத்திரிகையில் வாராவாரம் இச்செய்தியை முன்னிலைப்படுத்தி நேருவைத் தரக்குறைவாக விமர்சிக்கிறார்கள்.
பாராளுமன்றத்தில் ஆளாளுக்கு அப்பத்திரிகையை கையில் ஏந்தி ‘போஸ்’ கொடுக்கிறார்கள். பொறுத்துப் பார்த்த நேரு, ஒரு கட்டத்தில், இந்தியாவில் படம் வெளியாவதற்குத் தடை விதிக்கிறார். பிரச்சினைகள் அனைத்தும் ஓய்ந்த பின்னர், நேருவிடம் கை குலுக்கிய க்வாஜா அகமது, சிரித்துக்கொண்டே, “இப்பத்தான்யா நீர் உண்மையான சோஷலிஸ்ட்டு” என்றாராம்.
2.அமெரிக்காவில் தனிநபர் ஆயுதம் வைத்திருப்பது தொடர்பாக எண்ணற்ற வழக்குகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட போதும் அவற்றின் தீர்ப்புகள் எப்போதும் ஆயுதத் தொழிற்சாலைகளின் பெரு முதலாளிகளுக்கு ஆதரவாகவே அமைந்திருக்கின்றன. அங்கு இன்னமும் ஜுரி நடைமுறை (இதன் நோக்கம் அத்தியாவசியமானது என்ற போதிலும்) வழக்கத்தில் உள்ளதும் ஒரு காரணம். தனிநபர் ஆயுதம் ஏந்துவதன் கோர விளைவுகளை உணர்ந்த பின்னரும் அது மனித உரிமை சார்ந்ததாகச் சுருக்கப்பட்டு விளங்கிக்கொள்ளப்படுவதில் ஊடகங்களில் எழுதும் / உரையாற்றும் ‘மனித உரிமைப் போராளிகளின்’ பங்கு அளப்பரியது.
ஜுரி உறுப்பினர்கள் விலைபோகிறார்கள் என்ற குற்றச்சாட்டை ஜான் க்ரிஷமின் ‘Runaway Jury’ நாவல் பகிரங்கமாகவே முன்வைக்கிறது. அமெரிக்க ஜுரி முறை செயல்படும் விதம் குறித்ததோர் அறிமுகச் சித்திரம் இந்த நாவலில் உண்டு. இது பின்னர் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது. (ரேச்சல் வெய்ஸ் அதில் அழகாக இருப்பார்)
சில வருடங்களுக்கு முன் நம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்திய அல்லது அவ்வாறு கட்டமைக்கப்பட்ட ஆருஷி கொலை வழக்கிலும் ஊடகங்களின் அத்துமீறல் சகித்துக்கொள்ள முடியாதது. வழக்கு விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதே பெற்றோர்தான் குற்றவாளி என்பது மக்கள் மனதில் அழுத்தமாக நிறுவப்பட்டது. எந்தவிதமான தார்மீகப் பொறுப்புணர்ச்சியுமின்றி ஊடகங்கள் செயல்பட்ட விதமானது அவ்வழக்கின் விசாரணை அதிகாரிகளுக்குப் பெரும் பாரமாகிறது. பெற்றோரே குற்றவாளி என நிலைபெற்றுவிட்ட மக்கள் விருப்பத்திற்கு மாறாகத் தீர்ப்பெழுதுவதற்கு அரசாங்கமே யோசிக்கும் அளவுக்கு விஸ்வரூபமெடுக்கிறது.

அவிரூக் சென்னின் ‘ஆருஷி’ (Avirook Sen’s Aarushi) எனும் நூல் இந்த வழக்கின் போக்குகள் குறித்து தீவிரமாக ஆராய்கிறது. இந்த வழக்கை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட Talvar படத்தையும் பார்த்திருக்கிறேன். படத்தில் இர்பான் கான் விசாரித்த கோணத்திலிருந்து முற்றாக விலகி, புதிதாக நியமனம் செய்யப்பட்ட மற்றொரு புதிய அதிகாரி வந்து, தனது சுய காழ்ப்பு, ‘இவன் சொன்னதை நான் என்னத்தை கேக்கறது?’ மனோபாவம், முன்முடிவுகள் ஆகியவற்றின் காரணமாகப் பெற்றோரையே குற்றவாளியாக்குவார். அந்த முடிவிற்குத்தான் மேலதிகக் கவர்ச்சியும் மீடியா ஆதரவும் உண்டு. மகள் வேலைக்காரனுடன் உறவுகொள்வதைப் பார்த்துவிட்ட தந்தை. மக்களிடையே அமோக வரவேற்பும் அதற்குத்தான். அவள் ‘அநியாயமாகக்’ கொல்லப்பட்டாள் எனத் தெரிந்தால் சுவாரஸ்யம் கெட்டு சப்பென்று ஆகிவிடாதா? ஆனால் இவ்வழக்கின் எதிர்நிலைகளைப் படத்தில் சரியாக கவனத்தில் கொள்ளவில்லை. அது ஆரம்பத்தில் இருந்தே பெற்றோர் மீதான மனச்சாய்வு மீது எழுப்பப்பட்ட திரைப்படம். சமூக நிலைகளை ஆராய்ந்து பின்னர் முடிவு நோக்கி நகர்ந்த படமல்ல.
கூட்டுச் செயல்பாட்டில் மனச்சாய்வுகள் இன்றி ஈடுபடுவது சாத்தியமல்ல. சமரசங்கள், புறவய தாக்கங்கள் வழியாகவே உண்மையை நோக்கிய பயணம் நிகழ்கிறதெனில் அது மெய்மையைக் கண்டறியுமா என்பதே சந்தேகம். கண்டறிந்ததை மெய்மை எனச் சமாதானம் செய்துகொள்ள வேண்டியதுதான். அந்த வகையில் அவிரூக் சென்னின் நூல் ஆவணத்தன்மையைக் கொண்டிருக்கிறது. இதில் விசாரணையின் போது சிபிஐ அதிகாரிகளின் கவனமின்மையாலும் விட்டேற்றி மனோபாவத்தாலும் உண்டான குளறுபடிகளை ஆதாரங்களின் துணைகொண்டு அவிரூக் விவரிக்கிறார். ‘உண்மையிலேயே’ தல்வார் குடும்பம்தான் குற்றம் புரிந்ததா என அறிய முயல்கிறார். உள்ளடங்கிய நிழல் போல வழக்கின் திசைமாற்றங்களை அவதானித்தபடியே எவ்விதச் சார்புமின்றி நகர்வது பிடித்திருந்தது. இந்த அடங்கிய தொனியே வாசகருக்குப் பரபரப்பையும் மன உளைச்சலையும் அளிக்கிறது.
‘ஆருஷி’ நூலை வாசித்த போது நாம் காலடி எடுத்து வைக்காத இருண்ட பகுதிகள் (grey area) ஏராளமாக மிச்சமிருக்கின்றன எனத் தோன்றியது. தமிழ் இலக்கியம் இன்னும் ஆடு மேய்த்துக்கொண்டிருப்பது ஆரோக்கியமானதல்ல என்றும்.
*
House of Secrets: The Burari Deaths
உலகின் தலைசிறந்த துப்பறியும் கதைகள், விசாரணை வழக்குகள், தெருமரல் ஆக்கங்கள் போன்றவற்றை நினைவுபடுத்திப் பாருங்கள். அவை பெரும்பாலும் பகைக்குழுக்களுக்குள் நிகழ்ந்த வன்முறையாகவோ சமூகவெளியில் ஏற்பட்ட பூசலால் நிகழ்த்தப்பட்ட கொலைகளாகவோ இருக்காது. ஒரு குடும்பத்திற்குள் நடந்த குற்றமாகவோ அல்லது இரண்டு குடும்பங்கள் சம்பந்தப்பட்ட வழக்காகவோதான் இருக்கும். வெகுஜனக் கதைகளில் அகதா கிறிஸ்டியின் நாவல்களையும் இலக்கிய வகைமையில் தஸ்தாயேவ்ஸ்கியின் புதினங்களையும் மிகச்சிறந்த உதாரணங்களாகக் கொள்ளலாம். பொதுவெளியில் நிகழும் குற்றங்களின் பின்னணியை ஊகித்தறிவதும் தடயங்களைப் பின்தொடர்ந்து குற்றவாளிகளைக் கண்டறிவதும் எளிதானது. வெளி (Space) அதிகரிக்கும்தோறும் இறுக்கங்கள் தளர்கின்றன. முடிச்சுகள் இலகுவாகின்றன.
ஆனால், ஒரு குடும்பத்திற்குள் சொற்ப ஆட்களே வாழ்கிறார்கள். அவர்கள் கட்டுப்படுத்தப்பட்ட இடைவெளிகளுக்குள் (constrained space) புழங்குகிறார்கள். அதன் காரணமாகவே அந்த நான்கு சுவர்களுக்குள் நடக்கிற குற்றங்களின் வீரியம் பன்மடங்காகிறது. அழுத்தம் கூடுகிறது. அதிலுள்ள சிக்கல்களும் மர்மங்களும் நம்மைத் திகைப்படையச் செய்கின்றன. ஒரு பந்தை வானை நோக்கி வீசியெறிவதற்கும் அதே பந்தை சுவரில் வேகமாக எறிந்ததும் நம்மைத் திரும்ப வந்து தாக்கும் ஆற்றல் வாய்ந்த விசையைச் சந்திப்பதற்குமான வேறுபாடு.
சதுரங்க ஆட்டத்தின் தொடக்கத்தில் காய் நகர்த்தல்களின் சாத்தியங்களும் நிகழ்தகவுகளும் குறுகியவை. முதற்சில காய்களை எப்படி நகர்த்தினாலும் நாம் எந்த ஆட்டவிதியைப் பின்பற்ற உத்தேசிக்கிறோம் என்பது எதிராளிக்குத் தெரிந்துவிடும். ஆனால், ஆட்டத்தின் போக்கில் காய்களின் எண்ணிக்கை குறையக் குறைய நகர்தல் சாத்தியங்கள் அதிகரித்தபடியே இருக்கின்றன. திடீரென புதிர்பாதைக்குள் இறக்கிவிடப்பட்டதைப் போல புதுப்புது வழிகளைக் கண்டறிய நேரிடுகிறது. எந்தக் காய் எப்போது வழி தவறியது என்பதை மூளை மடிப்புகளுக்குள் உட்புகுந்து எப்படிக் கண்டுபிடிப்பது?

சமூகக் குற்றங்களில் ஒரு வகையான பொது உளவியல் செயல்படுவதால் அவற்றைப் பற்றின முன்முடிவுகளுக்கோ தீர்மானங்களுக்கோ வந்தடைவது சுலபமானதாக இருக்கிறது. தனிநபர் அந்தரங்கத்திற்கென அப்படியொரு வரையறுக்கப்பட்ட உளவியல் ஏதும் இல்லை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். ஒவ்வொன்றும் ஒவ்வொரு சிக்கலான முடிச்சு. இதனுடன் அமானுஷ்யமும் சேர்ந்துகொள்ளும் போது “என்ன இது? என்ன இது?” என மனம் அரற்றுவதைப் பிரமையுடன் வேடிக்கைப் பார்ப்பதைத் தவிர வேறு வழியில்லை. அந்தச் சமயத்தில் நம்முடைய கறாரான தர்க்கங்கள் அனைத்தும் தம் விறைப்பை இழக்கின்றன. மாயத்தின் பிடியில் சுருண்டு வீழ்கின்றன. அதுவரை நாமறிந்திராத பிரம்மாண்டமான விஷயங்கள் திகிலூட்டத் தொடங்குகின்றன.
புராரி வழக்கை, அது விசாரிக்கப்பட்ட காலத்திலேயே, ஆர்வத்துடன் கவனித்துக்கொண்டிருந்தேன். ஒரே வீட்டில் பத்து பேர் தங்களைத் தூக்கிலிட்டு மாய்த்துக்கொண்டிருந்தனர். அவ்வீட்டின் மூத்த உறுப்பினரான பாட்டி கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டிருந்தார். “நெருக்கமாகத் தொங்கிக்கொண்டிருக்கும் ஆலமர விழுதுகள் போல இருந்தனர்” எனச் செய்திகளில் வாசித்திருந்த ஒப்பீட்டு உவமை என்னை உலுக்கியிருந்தது. அந்த வழக்கின் விசாரணையை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆவணப்படம் எடுக்கப்பட்டுள்ளது. லீனா யாதவ் இயக்கியிருக்கிறார்.
இது இந்தியாவில் எடுக்கப்பட்ட சிறந்த ஆவணப்படங்களுள் ஒன்று. மர்மமான முறையில் இறந்துபோன குடும்பத்தின் உறவினர்கள், நண்பர்கள், இவ்வழக்கின் விசாரணை அதிகாரிகள், பத்திரிகையாளர்கள், மனோவியல் நிபுணர்கள் எனப் பலரையும் உள்ளடக்கி பரந்துபட்ட பார்வையை அளிக்கிறார்கள். மரணங்கள் நிகழ்ந்து மூன்று ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும் இன்று வரைக்குமே இவ்வழக்கின் பாதிப்பிலிருந்து தாங்கள் மீளவில்லை எனப் பீதியுடன் குறிப்பிடுகிறார்கள். சிலர் மனமுடைந்து அழுகிறார்கள். நிலைகுத்திட்ட பார்வையுடன் சிலர் வெறித்துப் பார்க்கிறார்கள். அப்போது நிலவுகிற அமைதி நம்மைப் பதற்றத்திற்குள்ளாக்குகிறது.

என்னைக் கவர்ந்தது இதிலுள்ள அமானுஷ்யத்தன்மையே. வெவ்வேறு கோணங்களும் அனுமானங்களும் முன்வைக்கப்படுகின்றதே ஒழிய எவராலும் எதையும் அறுதியிட்டுக் கூறமுடிவதில்லை. எல்லா அலசல்களுக்குப் பிறகும் நமக்குப் பிடிபடாத உண்மை இன்னமும் எங்கோ ஒளிந்திருக்கிறது என்றே படம் முடிந்ததும் தோன்றியது. ஆனாலும், கலைப்படைப்புக்குரிய உண்மை இதில் வெளிப்பட்டவாறு இருப்பதால் நம்மிடையே தீவிரமான பாதிப்பைச் செலுத்தத் தவறுவதில்லை. அமானுஷ்யம் என்பது நிகழ்வுகளிலா உள்ளது? அதில் தோய்ந்த மனங்களில் அல்லவா செயல்படுகிறது?
படத்தின் இறுதிக்காட்சியில் டெல்லி நகரத்து தீப்பெட்டி அடுக்கு வீடுகள் காட்டப்படுகின்றன. எத்தனை எத்தனை குடும்பங்கள்! அவற்றில் எத்தனை எத்தனை இரகசியங்கள்! திகிலூட்டுவது என்றால் இப்படி இருக்க வேண்டும்.
2 comments
அருமை
பிக்கா என்னவானார்?. கருப்பு, வெளுப்பு, அந்த இனம், இந்த இனம். எவ்ளோ பயித்தியம் இல்ல இந்த மனுசப் பசங்க. எல்லாரும் எப்படியும் சாவ தானே போறோம். ?
Comments are closed.