ஆண்டன் செகாவ் – சிறுகதை முதல்வர்

0 comment

1

உலக அளவில் புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளர்களின் பட்டியலில் தல்ஸ்தோய்க்கும் தஸ்தாயேவ்ஸ்கிக்கும் அடுத்திருப்பவர் ஆண்டன் செகாவ். முந்தைய இருவரும் நாவல்களில் செய்திருக்கும் சாதனைக்கு நிகராக செகாவ் சிறுகதைகளில் நிகழ்த்தியிருக்கிறார். 

தமிழில் அன்னா கரீனினா, புத்துயிர்ப்பு, போரும் அமைதியும், கரமசோவ் சகோதரர்கள், குற்றமும் தண்டனையும் என பெரும் நாவல்கள் மொழிபெயர்க்கப்பட்ட அளவுக்கு தீவிரமான மொழியாக்கங்கள் செகாவின் கதைகளுக்கு இல்லை. 

ரஷ்யாவின் அன்றைய எழுத்தாளர்களின் அரசியல் நிலைக்கு எதிரான ஒரு நிலைப்பாட்டை செகாவ் கொண்டிருந்ததே அதற்குக் காரணமாக இருக்கமுடியும். இலக்கிய விமர்சனத்தைப் பெருமளவில் அரசியல் நிலைப்பாடுகளே தீர்மானித்திருந்த காலகட்டத்தில், ஒரு படைப்பு சமூகத்துக்குத் தரும் ‘செய்தி’யைக் கொண்டே அளவிடப்பட்டது. அந்த எழுத்தால் பொது மக்களுக்கு என்ன பயன் என்ற கேள்வி முதன்மையாக முன்வைக்கப்பட்டது. எழுத்தாளன் பிரச்சினைகளுக்கான தீர்வைச் சுட்டுபவனாகவும் சமூக நீதிக்கான போராட்டத்தில் பங்கெடுப்பவனாகவும் இருக்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. அவனது படைப்பு ‘வாழ்க்கைக்கு உண்மையாக’வும் சமூக அறம் சார்ந்த துலக்கமான ஒரு செய்தியைக் கொண்டிருப்பதாகவும் இருக்கவேண்டும் என்று சொல்லப்பட்டது. இந்த நிலையில்தான் செகாவ் ‘அன்யுதா’ வையும் ‘ஈஸ்டர் இர‘வையும் எழுதினார். ‘ஒரு நல்ல சிறுகதையென்பது அரசியல், சமூக, பொருளாதாரம் குறித்த நீண்ட பிரசங்கங்களைக் கொண்டிருக்கக்கூடாது’ என்பதை வரையறையாகக் கொண்டிருக்கும் ஒருவரைப் பற்றி எப்படி மதிப்பிடுவார்கள்? செகாவின் கருத்து ‘கலை கலைக்காக’ என்பதாகவும் எழுத்தாளனின் சமூகக் கடமையை மறுப்பதாகவும் கலையின் பயன்பாட்டு மதிப்பை வலியுறுத்தும் மரபை மீறுவதாகவும் விமர்சிக்கப்பட்டது. 

மரபான கதைசொல்லல் முறைக்கு மாறாக புதிய வகையான கதைகளை உருவாக்கியதோடு மட்டுமல்லாமல் எழுத்தாளனைப் பற்றிய புதிய வலுவான எண்ணத்தையும் ஏற்படுத்தினார். எழுத்தாளன் என்பவன் ஒதுங்கி நின்று கவனிப்பவன், மிகையாக உணர்ச்சிவசப்படாமல் கட்டுப்பாடுடனும் பணிவுடனும் கொள்கை சார்ந்த அதிகப்பிரசங்கித்தனங்களையும் அறம் சார்ந்த தீர்வுகளை முன்வைக்கும் ஆவலையும் அபாரமான எண்ணங்களை உருவாக்கும் தற்பெருமையையும் தவிர்த்து, தன் எழுத்தை நம்பகத்தன்மையுடனும் துல்லியத்துடனும் கட்டமைக்கும் ஒரு தொழில்நுட்ப நிபுணன் என்னும் புதிய சித்திரத்தை அவர் அளித்தார். பெரும்பாலும் அவரும் அப்படித்தான் இருந்தார், இருக்கவும் விரும்பினார். கொள்கை சார்ந்த விஷயங்களில் தனக்கு இருக்கும் போதாமையைக் குறித்த தெளிவு அவருக்கிருந்தது. “அரசியல், மதம், தத்துவம் சார்ந்த உலகளாவிய பார்வை என்னிடம் இல்லை. அவ்வப்போது அவற்றை நான் மாற்றிக்கொள்கிறேன். எனவே, என்னுடைய கதாபாத்திரங்கள் எவ்விதம் காதலிக்கிறார்கள், மணந்துகொள்கிறார்கள், குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள், மாண்டு போகிறார்கள், எப்படிப் பேசுவார்கள் என்பதோடு அவர்களைப் பற்றிய விவரிப்புகளை நான் நிறுத்திக்கொள்கிறேன்” என்று நண்பர் ஒருவருக்கு எழுதினார். அதுதான் எழுத்தாளனின் வேலை என்றும் அதுவே போதுமானது என்றும் கருதினார். 

“ஒரு கலைஞன் தனக்குப் புரிந்த ஒன்றைக் குறித்து மட்டுமே கருத்து சொல்ல முடியும். வேறெந்த ஒரு துறை நிபுணனுக்கும் இருப்பதுபோல எழுத்தாளனுடைய எல்லைகளும் மிகக் குறுகியவை. அதைத்தான் நான் திரும்பத் திரும்ப வலியுறுத்துகிறேன். எழுத்தும் கலையும் அனைத்துக்குமான பதில்களைக் கொண்டது, அங்கு கேள்விகளுக்கு இடமில்லை என்று யாரேனும் சொல்வார்களென்றால் அவர் ஒரு வரியைக்கூட எழுதியிருக்க முடியாது அல்லது கற்பனையைக் குறித்த எளிய அறிவும்கூட அவருக்கு இருக்காது என்று உறுதியாகச் சொல்லலாம். கலைஞன் ஊன்றி கவனிக்கிறான், வேண்டியதைத் தேர்ந்தெடுக்கிறான், ஊகிக்கிறான், பிறகு எல்லாவற்றையும் ஒன்றிணைக்கிறான். ஒரு எழுத்தாளனுக்குத் தான் என்ன செய்கிறோம் என்பதைப் பற்றிய தெளிவு இருக்கவேண்டும் என்று எண்ணுவதில் தவறில்லை. ஆனால், கேள்விகளுக்கான பதில்களைச் சொல்வதை விடவும் கேள்விகளைச் சரியான முறையில் முன்வைப்பதுதான் அவனது முக்கியமான வேலை.”

கதைகளுக்கான கருவைத் தீர்மானிக்கும் தற்செயல் தன்மைக்கு அவர் தந்திருக்கும் இடமும் நுட்பமான விபரங்களை கதையில் அடுக்கியிருக்கும் விதமும் முழுமையை ஒன்றிணைக்கும் பொதுவான அம்சம் என்று எதுவும் இல்லாதிருப்பதும்தான் அவருடைய தனித்தன்மையாகக் கருதப்படுகிறது. ஒரு கலைஞனாக அவருடைய பெரும் குறையும் அதுவேதான்.

செகாவின் மீது பெரும் மரியாதையைக் கொண்டிருந்தார் தல்ஸ்தோய். இருவருக்குமிடையே நல்ல நட்பு இருந்தது. ஆகஸ்டு 1895ம் ஆண்டு, அவருடைய இல்லத்துக்கு செகாவ் முதன்முறையாக வந்துசென்ற பிறகு, தன் நாட்குறிப்பில் இவ்வாறு எழுதியிருக்கிறார்: “மிகவும் ஆசிர்வதிக்கப்பட்ட ஒருவர். நல்ல மனம் கொண்டவராய்த் தெரிகிறார். ஆனால் இதுவரையிலும் அவருக்கென்று தீர்க்கமான ஒரு பார்வை இல்லை.” ஒரு நாடக ஆசிரியராகச் செகாவின் மீது அவருக்கு நல்ல மதிப்பு இல்லை. அவரது நாடகங்களில் எதுவுமே நிகழ்வதில்லை என்றும் அறம் சார்ந்த தெளிவின்றி இருப்பதாகவும் தல்ஸ்தோய் நம்பினார். ஆனால் செகாவின் சிறுகதைகள் அவருக்குப் பிடித்திருந்தன. அனைத்துக்கும் மேலாக செகாவ் எனும் மனிதரை அவர் நேசித்தார். ‘செகாவை எனக்குப் பிடித்திருக்கிறது என்பதை நினைத்து நான் மகிழ்கிறேன்’ என்று தன் நாட்குறிப்பில் தல்ஸ்தோய் எழுதியிருக்கிறார்.

ஆனால் அவருடைய காலத்தின் முக்கியமான விமர்சகராக இருந்த நிகோலாய் மிகைலோவ்ஸ்கி “அசலான தன் ஆற்றலை செகாவ் வீணடிக்கிறார்” என்று செகாவின் மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருந்தார்.

செகாவ் தன் மீது தொடுக்கப்பட்ட விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் விதமாக நண்பர் ஒருவருக்கு எழுதியுள்ள கடிதத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “நான் எழுதியுள்ள வரிகளுக்கு நடுவில் பொதுப்போக்குக்கு எதிரான அம்சங்களைத் தேடிக் கண்டுபிடித்து என்னை ஒரு தாராளவாதியாகவோ அல்லது பழமைவாதியாகவோ நிறுவ முனைபவர்களைக் கண்டுதான் அஞ்சுகிறேன். நான் தாராளவாதியோ பழமைவாதியோ அல்லது படித்தவனோ முற்றும் துறந்தவனோ அல்லது அலட்சியப்போக்கு கொண்டவனோ அல்ல. சுதந்திரமான கலைஞனாகவே இருக்க விரும்புகிறேன், வேறொன்றுமில்லை. இதில் யாரேனும் ஒன்றாக இருப்பதற்கான ஆற்றலை ஆண்டவன் எனக்குத் தரவில்லை என்று வருந்துகிறேன்.”

விமர்சகர்களின் மீது அவருக்கு மரியாதை இருந்ததில்லை. “நானும் எனது கதைகளின் விமர்சனங்களைத் தொடர்ந்து படித்து வருகிறேன். ஒருமுறைகூட உருப்படியான கருத்தையோ அல்லது நுட்பமான விமர்சனத்தையோ எவரும் எழுதியதில்லை. உழுதுகொண்டிருக்கும் குதிரையை அனாவசியமாக தொல்லைப்படுத்தும் ஈயைப் போலத்தான் விமர்சகர்கள் இருக்கிறார்கள்” என்று எழுதியுள்ளார். 

வேறெந்த எழுத்தாளர்களை விடவும் கூடுதலான கருணையுள்ளம் கொண்டவர் செகாவ். ஆனால் அவரது கதைகள் வேறெவர் எழுதியதைவிடவும் இரக்கமற்றவையாக அமைந்திருப்பது வேடிக்கையான முரண். அவர் தன் எழுத்தில் தொடர்ந்து தன்னை வெளிப்படுத்திக்கொண்ட அதே நேரத்தில் தொடர்ந்து தன்னை விலக்கியும் வந்திருக்கிறார். 

பெரும் மோதல்கள் எதுவுமற்ற வெகு சாதாரண சூழ்நிலைகளின் பின்னணியில், இயல்பான கதாபாத்திரங்களைக்கொண்டு ரஷ்ய வாழ்வை நம்பகத்தன்மையுடன் காட்ட முயல்கின்றன செகாவின் கதைகள். யதார்த்தவாதியான செகாவ் தனது கதாபாத்திரங்களின் மேல் விலகலுடன்கூடிய விசித்திரமானதோர் அனுதாபத்தைக் காட்டுகிறார். கருணையையும் மன்னிக்கும் குணத்தையும் கொண்ட அவர் எதிலும் கடுமை காட்டியதில்லை. கோட்பாடுகளை அடியொற்றி யாரையும் தண்டிக்கவும் முனைந்ததில்லை. 

தனது கதாபாத்திரங்களின் மன உணர்வுகளுக்கு அதிக அழுத்தத்தைத் தந்தவர் செகாவ். கதாபாத்திரங்களை விரிவாகச் சித்தரிப்பதற்கான இடத்தைச் சிறுகதைகள் அனுமதிப்பதில்லை என்பதைத் தெளிவாக உணர்ந்திருந்த செகாவ், வாசகரின் மனத்தில் நுட்பமான சலனங்களை ஏற்படுத்தி அவற்றின் வழியாக கதாபாத்திரங்களைப் பதியச் செய்தார். இதற்கு அவர் உரையாடல்களை மிகச் சாமர்த்தியமாகப் பயன்படுத்தினார். சம்பவங்களை விவரிப்பதற்குப் பதிலாக உரையாடல்களின் வழியாக நிகழ்த்திக் காட்டும் இந்த நுட்பத்தை செகாவின் பல கதைகளிலும் காணமுடியும். 

2

செகாவின் எழுத்து வாழ்க்கையை மூன்று முக்கியக் காலகட்டங்களாகப் பிரித்துப் பார்க்க முடியும். ஆரம்பகாலத்தில் தனது கல்விக்காகவும் அன்றாடத் தேவைகளுக்காகவும் பிரபல பத்திரிகைகளில் சுவாரஸ்யமான வாழ்வியல் சம்பவங்கள், விநோதமான மனிதர்கள் என்பதுபோல நிறைய எழுதினார். அவற்றில் பெரும்பாலானவை நகைச்சுவை உணர்வு ததும்புபவை. மேலோட்டமானவை. 1880 முதல் 1887 வரையிலான இந்த முதல் காலகட்டத்தில் எழுதப்பட்டவை அத்தனை முக்கியமற்றவை என்றபோதும் அவற்றில் சுருக்கமான தொடக்கம், நுட்பமான விவரணைகளின் வழியாக கதாபாத்திரத்தைச் செறிவுடன் வார்ப்பது, மனமோதல்கள், எதிர்பாராத முடிவு போன்ற செகாவின் தனித்துவமான அடையாளங்கள் பலவும் இடம்பெற்றிருந்தன. 1884ம் ஆண்டு வெளியான செகாவின் முதல் சிறுகதைத் தொகுப்பான Tales of Melpomene-வில் இடம்பெற்றிருந்த கதைகள் பலவற்றிலும் இத்தன்மைகளைக் காணமுடியும். ‘குறும்புக்காரச் சிறுவன்’, ‘ஒரு எழுத்தரின் மரணம்’, ‘மெலிந்தவனும் பருத்தவனும்’, ‘பச்சோந்தி’, ‘வேட்டைக்காரன்’ ஆகியவை இந்தக் காலகட்டத்தில் எழுதப்பட்டவை. 235 கதைகள் இந்தச் சமயத்தில் எழுதப்பட்டவை என்று குறிப்புகள் உள்ளன.

1888 முதல் 1893 வரையிலான இரண்டாவது காலகட்டத்தில் ஒழுக்கம், தீமையை எதிர்ப்பது, நற்பண்புகள் ஆகியவற்றை முன்வைத்த தல்ஸ்தோயின் ஒழுக்கம் சார்ந்த கொள்கையினால் பெரிதும் ஆட்கொள்ளப்பட்டிருந்தார் செகாவ். இந்த இரண்டாவது காலகட்டத்தில் எழுத்து முறையிலும் கதைகளில் கையாளும் கருப்பொருட்களிலும் பரீட்சார்த்தமான சிலவற்றை முயன்றார். வெறுப்பு, அற்பத்தனம், மரணம் ஆகியவற்றுக்கு மாறான வாழ்வின் அழகையும் உணர்வு நிலையையும் அணுகிப் பார்க்கும் விதத்தில் கதைகளை எழுதிப் பார்த்தார். 1890ம் ஆண்டு கிழக்கு சைபீரியாவில் சகலின் என்ற இடத்திலிருந்த வதைமுகாமைச் சென்று பார்த்த பின்பு மனித வாழ்வின் துயரங்களுக்குத் தல்ஸ்தோயின் கொள்கைகளால் பலனில்லை என்பதை உணர்ந்தார். இந்தச் சமயத்தில் அவருக்குள் நிகழ்ந்த உளமாற்றம் அவரது மூன்றாவது காலகட்டத்தைத் தீர்மானித்தது. ‘ஸ்டெப்பி’, ‘பந்தயம்’, ‘முதியவனின் நாட்குறிப்பிலிருந்து…’, ‘குடியானவப் பெண்கள்’, ‘மனைவி’, ‘அண்டைவீட்டார்’, ‘ஆறாவது வார்டு’ ஆகியவை இந்தக் காலகட்டத்தில் எழுதப்பட்டவை.

1894ம் ஆண்டிலிருந்து அவரது இறுதிக் காலம் வரைக்குமான மூன்றாவது பருவத்தில்தான் மிகவும் சிக்கலான தனித்துவம்கொண்ட சிறுகதைகளையும் நாடகங்களையும் அவர் எழுதினார். ‘கருந்துறவி’, ‘ரோத்சிடின் பிடில்’, ‘கழுத்தில் அன்னா’, ‘மாடவீடு’, ‘நெல்லிக்கனிகள்’, ‘நாய்க்காரச் சீமாட்டி’, ‘பேராயர்’, ‘மணமகள்’ ஆகியவை இந்தக் காலத்தில் எழுதப்பட்டவை. 

நாற்பத்தி நான்கு ஆண்டுகள் வாழ்ந்த செகாவ் மொத்தமாக 568 கதைகள் எழுதியுள்ளார். இவை பதிமூன்று தொகுதிகளாக வெளிவந்துள்ளன. இவை தவிர அவருடைய கடிதங்களும் நாட்குறிப்புகளும் தனியாகத் தொகுக்கப்பட்டுள்ளன. 

மாப்பசானின் கதைகளிலிருந்து எடுத்துக்கொண்ட சிக்கனத்தையும் செறிவையும், கவித்துவம் குறிப்புணர்த்தும் தன்மை ஆகிய இரண்டுடனும் இணைத்து புதிய கதைகளை அவர் உருவாக்கினார். குறிப்பாக கதைகளே இல்லாத கதைகள். அவருடைய கதைகள் பல குழந்தைகளின் பார்வையில் சொல்லப்பட்டுள்ளன. இன்னும் சில குழந்தைப் பருவத்தின் நினைவுகளாக அமைந்துள்ளன. குழந்தைப் பருவத்தின் கனவுகளையும்கூட கதைகளில் அவர் கையாண்டிருக்கிறார். பெண்களுக்கான இடம் குறித்த கேள்விகளை எழுப்பும் நுட்பமான கதைகளை எழுதியுள்ள அவரது கடைசிக் கதையான ‘மணமகள்’ பெண் சுதந்திரம் குறித்த முக்கியமான ஒன்று. கிறித்துவ மதம், தேவாலயங்களின் பல்வேறு வழிபாட்டுச் சடங்குகள், பாதிரியார்கள் மதகுருக்கள் பேராயர்களின் அகவுணர்வுகள் ஆகியவற்றைக் குறித்த நுட்பமான பல கதைகளையும் செகாவ் எழுதியுள்ளார். 

‘என்னைப் பொறுத்தவரையிலும் கதையை எழுதி முடித்த பிறகு கதையின் ஆரம்பத்தையும் முடிவையும் நீக்கிவிடவேண்டும். ஏனெனில் எழுத்தாளர்களாகிய நாம் பெரும்பாலும் பொய் சொல்வது அந்த இடங்களில்தான்’ என்று செகாவ் சொல்வது மிக முக்கியமான ஒன்று. 

செகாவின் பல கதைகளின் முடிவுகளுமே பல்வேறு திறப்புகளைக் கொண்டவையாகவே அமைந்திருப்பதைக் கவனிக்கலாம். வாழ்வின் ஆழத்தினுள் செறிவாகவும் சுருக்கமாகவும் துல்லியமாகவும் தேடித் திளைத்தவை அவை. கதாபாத்திரங்களின் உள்ளார்ந்த விருப்பங்களை அப்பட்டமாகத் திறந்து காட்டியவர் செகாவ். சிக்கலான கதைக் களங்களையோ தெளிவான முடிவுகளையோ கொண்டவையல்ல அவருடைய கதைகள். அனைவருக்கும் தெரிந்த மிகச் சாதாரணமானவற்றின் மீது கவனத்தை ஈர்த்து அதன் மூலமாக விசேஷமான சூழலை உருவாக்கி அதைக் கவிதையைப் போலவோ அல்லது மனத்தை உலுக்குவது போலவோ மாற்றிவிட வல்லவை அக்கதைகள். 

ஒரு நல்ல சிறுகதையின் குணாம்சங்கள் என ஆறு விஷயங்களைச் சொல்கிறார் செகாவ். ஒன்று, அரசியல் சமூக பொருளாதார இயல்புகளைக் குறித்த நீண்ட பிரசங்கங்கள் கதையில் இருக்கக்கூடாது. இரண்டாவது, கதை முற்றிலும் புறவயமான அணுகுமுறையைக் கொண்டிருக்க வேண்டும். மூன்றாவதாக கதாபாத்திரங்களையும் பொருட்களையும் உள்ளது உள்ளவாறு சித்தரிக்க வேண்டும். நான்காவது, கதை செறிவான அமைப்பில் எழுதப்பட்டிருக்க வேண்டும். ஐந்தாவதாக, துணிச்சலான வெளிப்பாட்டை அசலாக இருப்பதோடு அவை ஒரேமாதிரியாக இல்லாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். கடைசியாக, கதை பரிவுணர்வை வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும். எழுத்தின் மீதான செகாவின் அணுகுமுறையை மிகச்சரியாக வரையறுப்பவை இந்த விதிகள். அவரது கதைகளில் ஆசிரியனது குரல் முற்றிலும் தவிர்க்கப்படவில்லை என்றாலும், மிகக் குறைவான அளவிலேயே ஒலித்திருப்பதைக் கவனிக்கலாம். மிகச் சாதாரணமான சம்பவங்கள், கவனிக்கத் தேவையற்ற விவரணைகள், மிகக் குறைந்த உரையாடல்கள் வழியாக கதைக்கரு என்று ஒன்று இல்லாமல், ஏதேனுமொரு தனிப்பட்ட தருணத்தின் மேல் பார்வையைக் குவித்து, மிகச் சில தனித்தன்மைகளை மட்டும் சுட்டிக்காட்டி, துல்லியமானதும் தனித்துவமானதுமான ஒரு மனோநிலையை உருவாக்கித் தருவதுதான் செகாவின் தனித்துவமான சிறுகதைத் திறனாக அமைந்திருக்கிறது.

3

அந்தோன் பாவ்லோவிச் செகாவ், ஜனவரி 29, 1860ல் ரஷ்யாவிலுள்ள அஸோவ் கடற்கரையிலுள்ள Taganrog-இல் பிறந்தார். ஜுலை 15ம் தேதி 1904ல் ஜெர்மனியிலுள்ள பாதன்வெயிலரில் மறைந்தார். உலகிலேயே ஆழமற்ற கடல் என்று கருதப்படுவது அஸோவ் கடல். கருங்கடலையொட்டியுள்ள இதைச் செயற்கைக்கோள்களின் வழியாகப் பார்க்கும்போது கருங்கடலின் ஆழ்ந்த நீலத்துக்கு மாறாக கலங்கிய சாம்பல் நிறத்தில் காணப்படுகிறது. செகாவின் கதைகளில் காணும் மங்கலான நிறங்களுக்கு இதுவே காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. நபகோவ் “புராதன வேலியின் நிறத்துக்கும் வானில் கீழிறங்கித் தவழும் மேகத்தின் வண்ணத்துக்கும் இடைப்பட்ட ஒரு கலவை” என்று இதைத்தான் குறிப்பிடுகிறார். 

Sea of Azov

செகாவின் தாத்தா பண்ணையடிமையாக இருந்து தனது விடுதலையைத் தானே தேடிக்கொண்டவர். செகாவின் அப்பா பவுல் ஒரு மளிகைக் கடைக்காரர். அரிசி, காபி, பாரஃபின், எலிப்பொறிகள், அமோனியா, கத்தி, வோட்கா என்று நானாவிதப் பொருட்களையும் விற்பனை செய்தார். வாடிக்கையாளர்களை ஏமாற்றும் தந்திரம் கொண்டவர். ஒருமுறை சமையல் எண்ணெயில் செத்துப்போன எலி கிடந்திருக்கிறது. அது தெரிந்தவுடன் எண்ணெயை வெளியில் கொட்டுவதற்குப் பதிலாக, பாதிரியாரைக் கொண்டு அந்த எண்ணெயைப் ‘புனிதப்படுத்தி’ய பிறகு தொடர்ந்து விற்பனை செய்திருக்கிறார். அப்பாவின் இந்தக் குணம், தந்திரமும் மதம்சார்ந்த விஷயங்களில் கண்மூடித்தனமான ஈடுபாடும் கொண்ட, வாழ்வில் முழுமையாகத் தோல்வியடைந்த இந்தத் தன்மை செகாவின் கதாபாத்திரங்களில் பெரும் பாதிப்பை நிகழ்த்தியிருக்கிறது. பல கதைகளிலும் அப்பாவின் குணநலன்களைக்கொண்ட வெவ்வேறு கதாபாத்திரங்களை வெவ்வேறு பெயர்களில் காண முடியும். மூன்று சகோதரர்களையும் ஒரு சகோதரியும் கொண்ட பெரிய குடும்பம். அவருடைய பெற்றோர்கள் எளிமையானவர்கள், அவ்வளவாய் படிப்பறிவு கிடையாது. மிகுந்த பக்தி உண்டு. செகாவுக்கு அவர்கள் மீது மிகுந்த மரியாதையும் பாசமும் உண்டு. அவர்களிடமிருந்து எப்போதும் அவர் பிரிந்து வாழ்ந்ததில்லை. 1866-லிருந்து 1879 வரையிலும் தகன்ரோகிலுள்ள கிரேக்கப் பள்ளியில் சேர்ந்த அவர், மரபான மதம் சார்ந்த கல்வி கற்றார். அவரது வளர்ப்புமே மதரீதியானதாகவே அமைந்தது. அவரும் சகோதரர்களும் தேவாலயத்தில் தந்தையார் ஒருங்கிணைத்த இசைக்குழுவில் சேர்ந்து பாடினார்கள். தேவாலயங்களில் அவர்கள் விவிலிய வசனங்களையும் பாடல்களையும் வாசித்தனர். மணியொலிப்பவர்களாகவும் பூசனைகளுக்கு உதவுபவர்களாகவும் சேவையாற்றினர். 

1876ம் ஆண்டு அவருடைய தந்தையாருக்கு வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டு கடன்காரர்களிடமிருந்து தப்பிக்கவேண்டி, மாஸ்கோவில் படித்துக்கொண்டிருந்த மூத்த மகன் அலெக்ஸாண்டரிடம் சென்றடைந்தனர். அப்போது பதினாறு வயதேயான செகாவ் பள்ளிக்கல்வியைப் படித்து முடிக்கும்பொருட்டு தகன்ரோகிலேயே தனித்துவிடப்பட்டார். செலவுகளைச் சமாளிக்கவென வீடுகளில் மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக்கொடுத்தார். மிக ஏழ்மையான வாழ்க்கையைக் கழித்தார். 1879ல் கல்வியை முடித்ததும் மாஸ்கோவில் இருந்த குடும்பத்தினருடன் சேர்ந்துகொண்டார். மருத்துவம் பயிலத் தொடங்கினார்.

குடும்பத்துக்கு உதவவும் தன் கல்விச் செலவுக்காகவும் பிரபல பத்திரிகைகளில் நகைச்சுவைத் துணுக்குகளையும் சிறிய கதைகளையும் புனைப்பெயர்களில் எழுதத் தொடங்கினார் செகாவ். இந்த விஷயத்தில் செகாவ் தனது அண்ணன் அலெக்ஸாண்டரைப் பின்பற்றினார். பெரும்பாலான கதைகளைத் தகரோங்கிலிருந்தபோது அவருடைய ஆசிரியர் ஒருவர் சூட்டிய ‘அண்டோசா செகோந்தே’ என்ற பெயரிலேயே எழுதினார். 1884ம் ஆண்டு மருத்துவக் கல்வியை முடித்த அவர், இறுதிவரை தொழில்முறை மருத்துவராகப் பணியாற்றவில்லை. ஆனால், தான் கற்ற மருத்துவத்தின்மேல் பெரும் மரியாதை கொண்டிருந்தார். பிற அறிவுத்துறைகளைக் கற்பதற்கும் அறிவியல்பூர்வமான தன் அணுகுமுறைக்கும் மருத்துவக் கல்வியே காரணம் என்பதில் நம்பிக்கை கொண்டிருந்தார். மெலிகோவாவில் இருந்த நாட்களில் எண்ணற்ற மருத்துவ முகாம்களை ஒருங்கிணைத்து விவசாயிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் இலவச மருத்துவம் அளித்தார். 1891, 1892ம் ஆண்டுகளில் காலரா பரவியபோதும் அதே ஆண்டுகளில் பஞ்சம் வாட்டிய நேரத்திலும் தொண்டாற்றினார். மெலிகோவாவில் ஒரு பள்ளியையும் நிறுவினார் செகாவ். அங்குள்ளவர்களுக்குப் பயனளிக்கும் விதத்தில் அது சிறப்பாக அமைந்தபோது அண்டைய கிராமங்களில் மேலும் இரண்டு பள்ளிகளை உருவாக்கினார். கிராமத்திலிருந்த தேவாலயத்தில் மணிக்கூண்டு ஒன்றையும் கட்டித் தந்தார். தகரோங்கிலுள்ள நூலகத்துக்கு ஆயிரக்கணக்கான புத்தகங்களைக் கொடுத்த செகாவ், 1898ம் ஆண்டுக்குப் பிறகு தான் வசித்த யால்தாவில் கடல்சார் உயிரியில் ஆய்வகம் ஒன்றையும் நிறுவினார். இதுபோன்ற அன்றாட நடைமுறை விஷயங்களில் செகாவ் மிகுந்த ஈடுபாடு கொண்டவராகவும் ஓய்வின்றிச் செயலாற்றுபவராகவும் விளங்கினார். அதே நேரத்தில் இலக்கியப் பணியில் அவர் எப்போதும் தெளிவற்ற சோம்பலான மனநிலையிலேயே இருந்தார்.

பெண்களைப் பொறுத்தவரை செகாவ் அத்தனை விசுவாசமானவராக இருக்கவில்லை. அவர்மேல் காதல் கொண்ட பெண்கள் பலர். லிகா மிசினோவாவிடம் அவர் காதல் கொண்டுவிடும் நிலையில் இருந்தபோதும் 1894ம் ஆண்டு வெளிநாட்டுக்குச் செல்ல நேர்ந்த சமயத்தில், குறித்த நேரத்தில் அவரைச் சந்திக்க முடியாமல் போனது. அத்துடன் காதலும் முறிந்தது. 1897ல் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது அருகில் இருந்த லிடியா அவிலோவா எனும் நாவலாசிரியையும் அவரது காதலிகளில் ஒருவர். இருவருக்குமிடையிலான காதலைப் பற்றி மிகச் சில இடங்களில் சொல்லிச் சென்றிருக்கிறார். தனது கடிதங்களில் ‘நிச்சயிக்கப்பட்ட’ பெண்ணைப் பற்றி சொல்லியிருப்பது யாரைப் பற்றி என்பது தெரியவில்லை. அந்தப் பெண்ணின் ‘மிசூஸ்’ எனும் செல்லப் பெயரைத்தான் ‘மாடவீடு’ கதையில் வரும் தங்கைக்குப் பெயராக வைத்திருக்கிறார். 1899ம் ஆண்டில்தான் ஓல்கா நிப்பரைச் சந்திக்கிறார் செகாவ். மாஸ்கோ கலைக்கூடத்தில் நடித்துக்கொண்டிருந்த இளம் நடிகை. செகாவ் தன் இறுதி நாட்களில் எழுதிய ‘கடல்பறவை’ (Seagull) நாடகம் 1898ம் ஆண்டு அந்த நாடக அமைப்பினரால்தான் மேடையேற்றப்பட்டது. அடுத்த ஆண்டில் Uncle Vanya நாடகம் அரங்கேற்றப்பட்டது. இருவருக்கும் திருமணம் நடந்த 1901ம் ஆண்டில் வெற்றிகரமாக அமைந்த Three Sisters நாடகமும், 1904ம் ஆண்டில் அவரது மரணத்துக்குச் சில மாதங்களுக்கு முன்பாக பெரும் வெற்றியாக அமைந்த The Cherry Orchard நாடகமும் மேடையேற்றப்பட்டது. 

1897 ஆம் ஆண்டு மார்ச் இருபத்து இரண்டாம் தேதி மாலை, செகாவ் தனது நெருங்கிய நண்பரும் பதிப்பாளருமான அலெக்சி சுவோரினுடன் உணவகத்துக்குச் சென்றார். எப்போதும்போல நேர்த்தியாக உடையணிந்திருந்த செகாவ் சாப்பிட உட்கார்ந்த சிறிது நேரத்தில் இரத்த வாந்தி எடுத்தார். எலும்புருக்கி நோய் அவரைத் தாக்கியிருந்தது. சிகிச்சைக்காக பாதன்வெய்லெர் நகரத்துக்குச் சென்றார் செகாவ். அவரது மனைவி ஓல்கா நிப்பர் உடன்சென்றார். அவருக்குச் சிகிச்சையளித்த டாக்டர் ஸ்வோரர் செகாவின் எழுத்தை வெகுவாகப் பாராட்டினார். ஆனால் அவரைத் தாக்கியுள்ள நோயின் தீவிரத்தைக் குறித்து எதுவும் வெளிப்படையாகச் சொல்லவில்லை. ஆனால், செகாவுக்குத் தன் உடல்நிலை சரியாகிவிடும் என்ற நம்பிக்கை இருந்தது. இறப்பதற்கு மூன்று வாரங்களுக்கு முன்னால் தன் அம்மாவுக்கு எழுதிய கடிதத்தில் இன்னும் ஒரு வாரத்தில் குணமடைந்துவிடுவேன் என்று எழுதியுள்ளார். 

ஆனால் அவரால் எழுத முடியவில்லை. கடைசி நாடகமான The Cherry Orchard நாடகத்தை மிகவும் சிரமப்பட்டே எழுதி முடித்தார். 1904ம் ஆண்டு ஜூலை இரண்டாம் தேதி நள்ளிரவில் அவருடைய உடல்நிலை மோசமடைந்தது. மயக்கத்தில் இருந்த செகாவ் கடல் மாலுமிகளைப் பற்றியும் ஜப்பானியர்களைப் பற்றியும் பேசிக்கொண்டிருந்திருக்கிறார். அவரைப் பரிசோதித்த மருத்துவர் இனி செய்வதற்கு ஒன்றுமில்லை என்று தீர்மானித்திருந்தார். உடனடியாக, சாம்பெய்னை வரவழைத்து செகாவுக்குக் கொடுத்தார். “நான் ஷாம்பெய்ன் குடித்து பல நாட்களாகிவிட்டன” என்பதுதான் அவர் கடைசியாகச் சொன்னது. 

மாஸ்கோவுக்கு அவரது உடல் கொண்டுவரப்பட்டது. அவருடைய சவப்பெட்டியின் மேல் ‘கடல்சிப்பி’ என்று எழுதி ஒட்டப்பட்டிருக்கவே மீன்களைக் கொண்டுவரும் சரக்குப் பெட்டியில் அவரது உடல் கொண்டுவரப்பட்டது. அவருக்கு இறுதி மரியாதை செலுத்த ஆயிரக்கணக்கில் மக்கள் ரயில் நிலையத்தில் குவிந்திருந்தனர். அதே ரயிலில் போரில் மாண்ட ஜெனரல் கெல்லரின் உடலும் கொண்டுவரப்பட்டிருந்தது. அவரது சவப்பெட்டியை இராணுவத்தினரின் மரியாதையுடன் கொண்டுசென்றதைக் கண்ட பொதுமக்களில் பலர் அது செகாவின் சவப்பெட்டி என்று நினைத்துக்கொண்டு கெல்லரின் ஊர்வலத்தில் சென்றனர். செகாவ் என்ற மேதைக்கு அரசு இராணுவ மரியாதை செலுத்துகிறது என்று தவறுதலாக நினைத்துவிட்டனர். 

எனவே, செகாவின் சவ ஊர்வலத்தில் சில நூறு நபர்களே கலந்துகொண்டிருந்தனர். அவர்களுக்கு பின்னால் தன் குதிரையில் ஒரு இராணுவ அதிகாரியும் சவாரி செய்தார்.  கெல்லரின் ஊர்வலத்துக்குத் தாமதமாக வந்த அதிகாரியான அவர், செகாவின் சவ ஊர்வலத்தை இராணுவ அதிகாரியின் இறுதி ஊர்வலம் என்று எண்ணிக்கொண்டிருந்தார்.

செகாவின் இறுதி ஊர்வலம்கூட அவரது கதையின் அபத்த நாடகம் போலவே அமைந்துபோனது. 

4

செகாவின் பாதிப்பைக் கொண்டிருந்த எழுத்தாளர்களில் முக்கியமானவர் ரேமண்ட் கார்வர். ‘அமெரிக்கன் செகாவ்’ என்றே அவரைச் சில விமர்சகர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். கார்வர் உயிருடன் இருக்கும்போது பதிப்பிக்கப்பட்ட கடைசித் தொகுப்பில் இடம்பெற்றுள்ள கடைசிக் கதை ‘Errand’, செகாவின் மரணத்தை விவரிக்கும் ஒன்று. ஆனால் செகாவுடனான அவரது முக்கியமான பிணைப்பு அவரைப் போலவே வெளிப்படையான அவ்வளவாய் முக்கியமற்ற விவரணைகளுக்குள் கதையின் அர்த்தத்தைச் சிதறடித்திருப்பது. செகாவைப் போலவே கார்வரின் கதைகளின் முடிவுகளும் ஒன்றுக்கும் மேற்பட்ட சாத்தியங்களைக் கொண்டிருப்பது. 

செகாவின் பாதிப்பை அவர்கள் அறியாமலே கொண்டிருப்பவர்கள் என்று கதரீன் மான்ஸ்ஃபீல்ட், ஷெர்புட் ஆண்டர்சன், எர்னெஸ்ட் ஹெமிங்வே, காதரின் அனா போர்டர், ஃபிளானரி ஓ கானர், ஜான் கீவர், ரேமண்ட் கார்வர், ஆலிஸ் மன்ரோ, யீயுன் லீ, ஜாய்ஸ் கரோல் ஓட்ஸ் ஆகிய சிறுகதையாளர்களைக் குறிப்பிடலாம். 

ஜார்ஜ் பெர்னார்ட் ஷாவின் Heartbreak House (1919) நாடகத்தில் செகாவின் The Cherry Orchard நாடகத்தின் பாதிப்பு உள்ளதாக விமர்சகர்கள் கருதுகிறார்கள். இன்னொரு பிரிட்டிஷ் நாடக ஆசிரியரான ஹெரால்ட் பிண்ட்டின் படைப்புகளிலும் அமெரிக்க நாடகாசிரியர்களான டென்னிஸ் வில்லியம்ஸ், ஆர்தர் மில்லர் ஆகியோரின் நாடகங்களிலும் செகாவின் பாதிப்பு மறைமுகமாக உள்ளதாகச் சொல்லப்படுகிறது.  

தமிழின் முதல் சிறுகதை ‘ஆறில் ஒரு பங்கு’ சுப்ரமணிய பாரதியாரால் 1913ம் ஆண்டு எழுதப்பட்டது. செகாவ் மறைந்து ஒன்பது ஆண்டுகள் கழித்தே தமிழில் தமிழ்ச் சிறுகதை பிறந்துள்ளது. சி.சு.செல்லப்பா உள்ளிட்ட தமிழின் முன்னோடி எழுத்தாளர்களில் தொடங்கி இன்றைய தலைமுறை எழுத்தாளர்கள் வரைக்கும் அவரது கதைகளை மொழிபெயர்த்திருக்கிறார்கள். 

‘அவருடைய கதைககளில் ஒன்றை நீங்கள் சொல்ல முயலும்போது சொல்வதற்கு எதுவுமேயில்லை என்பது தெரியவரும்’ என்று சாமர்செட் மாம் குறிப்பிட்டிருப்பதையும் கவனிக்கலாம்.

5

1985ம் ஆண்டு செகாவின் 125வது பிறந்த நாளைச் சிறப்பிக்கும் வகையில் அவரது படைப்புகள் அனைத்தையும், ஆங்கில மொழியாக்கத்தில், கால வரிசைப்படி ஐந்து தொகுதிகளாக ராதுகா பதிப்பகம் வெளியிட்டிருந்தது. 1989ம் ஆண்டு நவம்பர் மாதம் 5ம் தேதி திருப்பூரில் நான் பணியாற்றிய அலுவலகத்துக்கு வந்த என்.சி.பி.எச்.சின் விற்பனைப் பிரதிநிதியிடமிருந்து இருபத்து நான்கு ரூபாய்க்கு புத்தகமொன்றை வாங்கினேன். ஆண்டன் செகாவின் சிறுகதைத் தொகுதி வரிசையில் 1880 முதல் 1885 வரையில் எழுதப்பட்ட கதைகளைக் கொண்ட முதலாவது புத்தகம் அது. செகாவின் புகழ்பெற்ற கதைகளான ‘பச்சோந்தி’, ‘வேட்டைக்காரன்’ ஆகிய கதைகள் அதில் இடம்பெற்றிருந்தன. 

ஆண்டன் செகாவின் கதைகளை எனக்கு முதன்முதலாக அறிமுகப்படுத்திய புத்தகம் அதுதான். அதில் இடம்பெற்றுள்ள செகாவ் குறித்த மாக்ஸிம் கார்கியின் விரிவான கட்டுரை மிக முக்கியமான ஒன்று.

தீபம் இதழில் 1967ம் ஆண்டு ‘ஆண்டன் செஹாவ்’ என்ற தலைப்பில் அசோகமித்திரன் ஒரு கட்டுரையை எழுதியிருக்கிறார். தமிழ் வாசகர்களுக்கான சுருக்கமான செறிவான அறிமுகக் கட்டுரை அது. 

தமிழில் செகாவைக் குறித்த உரையாடல்களைத் தொடர்ந்து காணமுடிகிறது. எஸ்.ராமகிருஷ்ணனின் ‘செகாவின் மீது பனி பெய்கிறது’, ‘செகாவ் வாழ்கிறார்’ ஆகிய இரு நூல்களும் முக்கியமானவை. அதேபோல, ‘மனப்பிராந்தி’ தொகுப்புக்கு கோகுல் பிரசாத் எழுதியுள்ள ‘செகாவ்: சிறுகதைக் கலையின் மேதை’ என்ற முன்னுரையும் குறிப்பிடத்தக்கது. எஸ்.ஏ.பெருமாள் எழுதி செம்மலர் நவம்பர் 2010 இதழில் இடம்பெற்ற விரிவான கட்டுரை கீற்று இணைய இதழில் மறுபிரசுரம் செய்யப்பட்டுள்ளது.  

2013ம் ஆண்டில் செங்கதிருடன் சேர்ந்து ரேமண்ட் கார்வரின் சிறுகதைகளை மொழிபெயர்க்கும் பணியில் ஈடுபட்டிருந்த நாட்கள். கார்வரின் ‘Errand’ (சின்னஞ்சிறு வேலை) என்ற சிறுகதை செகாவின் இறுதி நாட்கள் பற்றிய ஒன்று. அபாரமான கதையான அதை வாசித்தபோது மீண்டும் செகாவின் மீது என் ஆர்வம் திரும்பியது. புகழ்பெற்ற சில கதைகளைத் தேடி வாசித்தேன். தனிப்பட்ட ஆர்வம் காரணமாக சில கதைகளை மொழிபெயர்த்தேன். 

பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு, கோவிட் ஊரடங்கு நாட்களின்போது மீண்டும் செகாவ் என் பார்வைக்குத் தட்டுப்பட்டார். நூல்வனம் மணிகண்டன் அனுப்பித் தந்திருந்த ‘ஆண்டன் செகாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள்’ புத்தகத்திலிருந்த கதைகளை வாசிக்கத் தொடங்கினேன். ரிச்சர்ட் பீவரும் லரிசா வோல்கொன்ஸ்கியும் தேர்ந்தெடுத்து மொழிபெயர்த்த முப்பது சிறுகதைகளைக் கொண்டது அந்தத் தொகுப்பு. தொடக்க காலம் முதல் இறுதிக் காலம் வரையிலான செகாவின் சிறந்த, ஆனால் பரவலாக அறியப்படாத, பல கதைகளை உள்ளடக்கியது. 

சில கதைகளை மொழிபெயர்க்கலாம் என்ற எண்ணம் வந்தபோது தமிழில் இதுவரையிலும் வெளிவராத கதைகளாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். இதுவரையிலும் வெளியிடப்பட்டுள்ள தொகுப்புகளைச் சேகரித்தேன். ஆனால், இன்று நமக்குக் கிடைக்கும் எந்தவொரு தொகுப்பிலும் மூலக்கதையைப் பற்றிய குறிப்போ விபரமோ தரப்படாமல் இருப்பது கதையைத் தெரிவுசெய்வதில் பெரும் சிக்கலை ஏற்படுத்தியது.

1952ம் ஆண்டு, டி.என்.ராமச்சந்திரன் மொழிபெயர்த்து நாகப்பட்டினம், இமயப் பதிப்பகம் பதிப்பித்திருக்கும் ‘காதலி’ என்ற தொகுப்பே செகாவை தமிழில் அறிமுகப்படுத்திய முதல் தொகுப்பாக இருக்கவேண்டும். இத்தொகுப்பில் ‘காதலி’, ‘துணைவி’, ’மூன்று ஆண்டுகளில்’ ஆகிய மூன்று கதைகளும், ‘காதலி’ கதையைக் குறித்த தல்ஸ்தோயின் விமர்சனமும் இடம்பெற்றுள்ளன. அடுத்து, ரா.கிருஷ்ணையா, பூ.சோமசுந்தரம் ஆகியோரின் மொழிபெயர்ப்பில் ராதுகா பதிப்பகம் முன்பு வெளிட்ட தொகுப்பு ‘அந்தோன் செகாவ் – சிறுகதைகளும் குறுநாவல்களும்’ முக்கியமானதும் தமிழில் பரவலாக செகாவை அறிமுகப்படுத்தியதும்கும். அடுத்தது, எம்.எஸ் அவர்களின் மொழியாக்கத்தில் வெளியான ‘அன்டன் செகோவ்-சிறுகதைகள்’, பாதரசம் வெளியீடு. மூன்றாவது, தமிழினி வெளியீடாக, க.ரத்னம் அவர்களின் மொழிபெயர்ப்பில் வெளிவந்த ‘மனப்பிராந்தி’. நான்காவதாக, ‘ஆன்டன் செக்காவ்-ஆகச் சிறந்த கதைகள்’, சு.ஆ.வெங்கட சுப்பராய நாயகர் மொழியாக்கத்தில் தடாகம் வெளியிட்ட தொகுப்பு. இவற்றிலுள்ள கதைகளை ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் செகாவின் ஐம்பது கதைகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. வேறு யாரும் மொழிபெயர்த்து, தொகுப்பில் இடம்பெறாமலோ அல்லது தொகுக்கப்படாமலோ இருப்பதைக் கணக்கில் கொள்ளவில்லை. 

இவற்றுள் ‘வான்கா’, ‘பச்சோந்தி’, ‘நாய்க்காரச் சீமாட்டி’, ‘ஆறாவது வார்டு’, ‘வேட்டைக்காரன்’, ‘பந்தயம்’, ‘நெல்லிக்காய்’ ஆகிய கதைகள் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுப்புகளில் இடம்பெற்றுள்ளன. தமிழில் அதிகமும் அறியப்பட்ட செகாவின் கதைகளும் இவையே. 

இந்தக் கதைகளைத் தவிர்த்து செகாவின் சிறுகதை மேதமையை வெளிப்படுத்தும், தமிழில் இதுவரை வெளிவராத கதைகளே இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இவை செகாவின் புகழ்பெற்ற கதைகள் இல்லை என்றாலும் அவ்வளவாய் அறியப்படாத கதைகளின் வழியாகப் பயணம் செய்யும்போது கதைசொல்லியாக செகாவ் ஏன் அத்தனை பெரிய பாதிப்பைச் செலுத்துகிறார் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். 

ஏற்கெனவே தமிழில் வெளிவந்திருக்கும் சில கதைகளைக்கொண்டும், இத்தொகுப்பில் உள்ள பனிரெண்டு கதைகளிலிருந்தும், ஐநூறுக்கும் மேற்பட்ட கதைகளை எழுதிய ஒரு மேதையின் சிறுகதையுலகையும் அவரது புனைவாற்றலையும் முழுமையாக நம்மால் புரிந்துகொள்வது கடினமான காரியம். ஆனால், இந்தக் கதைகளை வாசிக்கும் வாசகர்களை அவரது பிற கதைகளைத் தேடிப் படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தும். இன்னும் சில கதைகளை மொழிபெயர்க்கத் தூண்டும். சிறுகதை வடிவத்துக்குச் செகாவ் அளித்திருக்கும் பங்களிப்பு என்ன என்பதை விளங்கிக்கொள்வதற்கான சிறிய ஒரு சாளரத்தை இது திறக்கும். இத்தொகுப்பின் பின்னுள்ள நம்பிக்கை அதுதான்.

*

ஆண்டன் செகாவ் கதைகள், நூல்வனம் வெளியீடு தொகுப்பில் இடம் பெற்றுள்ள முன்னுரை.