சோதியே! சுடரே! சூழொளி விளக்கே!

2 comments

தீந்தெரிவை

அகக் கனல் தணிந்த ஞாயிறு

தண்ணொளி உமிழும் அந்தியில்

அம்மணமாகக் கண்ட உனது ஆகம்

எனது காமத்தைக் காட்டித்தந்த

காளாமணி விளக்கு.

முலைகளில் ஓடிய பைந்தடங்கள்

எனது பிறவி ஊன்றிநிற்கும்

வேர்க்கோடுகள்.

உனது செவ்விளமுலையின்

இரு கண்களுக்கு 

முப்போதும் எப்போதும் 

நான் துதி பாடும் கவிஞன்.

போதுமடி இதுவே நின் மடி துயில

தீந்தெரிவையே!

*

வீமப் பேரொளி

விசும்பில் 

பிளவற்ற ஒளிச்சுழல்வு.

ஒளிப்பெருங்காட்சியில்

தனியே காட்சி இல்லை.

புள்ளி இடைவெளி விடாது

நிறைந்து நிற்கும் ஒளிமண்டபம்

அங்கே வாசல் இல்லை

காலதர் இல்லை.

தன்னைத்தான் காமுற்றுச்

செழித்த தனையே ஈனும்

நவஒளிக் காமம்.

ஒளியிலிருந்து 

ஒளிக்குச் செல்லும் பறவை

ஒளிக்கே திரும்பும்.

ஒளிபடைத்த அகமே உணரும்

ஒளியின் மாமலை.

ஒளியின் மரம்.

ஒளியின் கூடு.

ஒளியின் முட்டை.

முட்டைக்குள்

ஒளியின் உயிரசைவு.

*

தன்னடைந்த திரு

தன்னடைந்த திருஒளியில்

காண்பதெல்லாம் 

நிகழும் ஒளிப்பிழப்பு.

உனது அத்தனை கபட வேடங்களையும்

ஊடுருவி

உனது அத்தனை விலங்குச் சலனங்களையும் 

கடந்து

உனது அத்தனை மமதைப் பாறைகளை உடைத்து 

தன்னடைந்த திருஒளியில்

காண்பது

உனது குழந்தைமையின் 

மாசற்ற ஒளியை மட்டுமே.

*

தாயும் சேயும்

இருள் என்பது

தாயின் உடலை 

முழுவதும் காணாத பிள்ளை.

ஒளி என்பது

பிள்ளையின் உடலை

முற்றாய்க் கண்ட தாய்.

தாய்க்கு நான் 

இருள்.

*

ஒளியெலாம் வழி

ஒளியெலாம்

பிள்ளை ஈன்ற அன்னையின்

பெருவுள்ளம் உருகி விரிதல்.

நோயுற்ற கணவனின் 

இரவுப் படுக்கையில்

தனியிருந்து மனைவி பற்றும்

இல்லறப் பிடிப்பு.

அழுத குழந்தைக்கு 

விரல் தந்து உறக்காட்டும்

வறள்முலைத்தாயின் இன்கருணை.

மனதின் இருட்பாறைகளை மீறி

விண்ணை ஏறிடும்

உயிர்ப்பின் செடி.

வழியெலாம் ஒளி

ஒளியெலாம் வழி.

*

ஈர்ஒளி

கம்மென்ற காடு போல

நின்றிருந்தது களிறு.

ஆட்டமில்லை

அசைவில்லை.

சிலபோது செடியசைவதாக

துதிக்கை அசைந்தது.

குன்றென நின்ற இருளங்கழியாம் 

களிற்றின் சிறுகண்ணில் மின்னிய 

ஈர்ஒளி

மறக்காது மறக்காது மகளே!

*

உஷை

உள்ளே

வந்துவிட்டாள் உஷா!

பொழுதற்ற கணத்தில்

அமுதுற்ற கணத்தில்

தெறல் எரிந்த கணத்தில்

விழுமம் கடந்த கணத்தில்

விழுப்பம் அடைந்த கணத்தில்

நினைவு கரைந்த கணத்தில்

புனைவு மறந்த கணத்தில்

இகல் முனிந்த கணத்தில்

ஒல்லை இழிந்த கணத்தில்

துரிசற்ற கணத்தில்

பரிசுற்ற கணத்தில். 

முரல முரல முயன்றும் 

வராத உஷா

ஏகபாதம் வைத்து

எளிய நடையில்

வந்துவிட்டாள் வந்தேவிட்டாள்!

*

ஒளிக்குஞ்சு

குருமௌனி கையளித்த முட்டைக்கு

ஆகத்தெள்ளிய வடிவு

ஞானப்பெரிய மௌனம்.

முட்டையை உடைத்தேன்

உள்ளே ஒளிக்குஞ்சு.

உடைத்த விசையில் 

சிறகடித்த ஒளிக்குஞ்சு

தத்தும் இடமெலாம் ஒளி

கத்தும் ஒலியெலாம் ஒளி

பற்றும் இருளெலாம் ஒளி.

அகத்தின் பசிக்கு

அண்டத்தளவு இரை.

பிண்டம் நிறைய இறை.

*

சக்தித் திருக்கோலம்

தொன்மையின் ஆழக் காலத்திலிருந்து

வந்தது சிறு மின்மினி.

ஒப்பற்ற அதன் ஒளியில்

அறிவறியா அலகெலாம் கண்டேன்.

மூடுண்ட வெளியினைப்

பறந்து பறந்து அது

திறந்தவாறே இருந்தது.

தன்னொளியைத் தாரைவார்த்து

வீழும் மழையை மிளிரச் செய்தது.

சிறுஒளிதான் என்றாலும்

தன்னலமற்ற ஒளிவழி

சென்று சேர்ந்தேன் பராபரையிடம்.

ஒளிர ஒளிர ஊறும் ஒளியில்

மலிர மலிரக் கண்ணுற்றேன்

சக்தித் திருக்கோலம்.

*

ஒளி எனது சிவம்

ஒளி எனக்குக் 

கள்ளுண்ட செருக்கு.

ஒளி எனக்கு

முலையுண்ணும் திளைப்பு.

ஒளி எனக்கு 

உறக்கநேர மறைப்பு.

ஒளி எனக்கு

விரிந்த மலர் விழிப்பு.

ஒளி எனக்குச்

சுரணை உறுத்தும் வெம்மை.

ஒளி எனக்குப்

போதம் கிளர்த்தும் மோனம்.

ஒளி எனக்கு 

மரபு ஈந்த பேரணு.

ஒளி எனது சிவம்.

நானை ஒழித்து

ஒளிந்துகொள்ள

ஒரே சேரிடம்

ஒளி.

2 comments

Geetha Karthik netha December 25, 2021 - 11:23 pm

ஒளி…

S Manoharan January 2, 2022 - 5:27 am

குறுந்தொகை பாரதி வள்ளலார் எல்லாம் இந்த ஒளியில் தெரிகிறது.

Comments are closed.