நான் ஒரு பராமரிப்பாளர். செயிண்ட்.பெனடிக்ட் கதிரியக்கப் பொருட்கள் கட்டுப்பாட்டு மையத்தைப் பராமரிக்கிறேன். கடினப்படுத்தப்பட்ட கண்ணாடி வழியாகவே நான் வெளியுலகத்தைக் காண்கிறேன். எனது சுற்றுப்புறம் உயிர்ப்பற்றது என்றாலும் வசதியானது. எனக்கு விருப்பமான எதை வேண்டுமானாலும் – தேவையோ சொகுசோ – கூட்டாட்சி நிலைத்தன்மை திட்டத்திடம் கேட்டு நான் பெற்றுக்கொள்ளலாம். நான் கோரிய பொருட்கள் ஒரு சரக்கு வண்டியின் வாயிலாகக் கொணரப்பட்டு நச்சுநீக்கம் செய்கிற பெட்டிக்குள் வைக்கப்படும். காற்றிலிருக்கிற நச்சினைக்கூட அதனால் நீக்க முடியும். வெளியுலகின் நச்சுத்தன்மையிலிருந்து என்னைக் காப்பதல்ல இந்த ஏற்பாட்டின் நோக்கம், என்னிடமிருந்து வெளியுலகைக் காப்பதே ஆகும்.
ஆழமாக நிரந்தரமாகப் புதைக்கப்பட வேண்டிய பொருட்களைச் சேகரித்து வைக்கும் ஒரு தற்காலிக மையம்தான் செயிண்ட்.பெனடிக்ட். நிரந்தரமாக ஒரு இடத்தை இதற்கென அமைப்பது குறித்து பொதுமக்களுக்கு இருக்கிற அச்சம் காரணமாக அது சாத்தியமாகத் தாமதமாவதால், இந்த இடத்திற்கான தேவை இன்னும் எத்தனை நாட்களுக்கு இருக்கும் என்பதை யாரும் அறியமாட்டார்கள். பாதுகாப்புக் கிடங்கின் உள்ளேயும் சுற்றிலும் உள்ள நச்சுத்தன்மையின் அளவினைக் கவனித்து அதுகுறித்து நிலைத்தன்மைத் திட்டத்திற்கு அறிக்கைகள் சமர்ப்பிப்பதே எனது வேலையாகும். ”நான் மகிழ்ச்சியற்றவளாக இருந்திருக்கிறேன், ஆனால் இப்போது அர்த்தமுள்ள ஒரு வேலையைச் செய்வதனால் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது” என உளவியல் குழுவிற்குச் சமீபமாகக் கடிதம் அனுப்பினேன். வழக்கம் போலவே உளவியல் குழு எனக்கு மிகச்சிறந்த மதிப்பெண்கள் அளித்தது. நான் முன்மாதிரிப் பணியாளராகக் கருதப்பட்டேன்.
பராமரிப்பாளராகப் பணியமர்த்தப்படும் முன்பு நான் ஆறு தேர்வுகளை எதிர்கொண்டேன். அவர்கள் குறிப்பிடுகிறபடி, நான் “தற்கொலைக்கு முனைபவள்” அல்ல என்பதை அவர்கள் உறுதிசெய்துகொள்ள வேண்டியிருந்தது. “நீங்கள் மிகக்கடினமான காலங்களைக் கடந்து வந்திருக்கிறீர்கள் என்பதை நாங்கள் அறிவோம்” என ஒரு மருத்துவர் என்னிடம் வெளிப்படையாகக் குறிப்பிட்டார். பின்பு நான் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு எனது “தியாகத்திற்காக” அவர் எனக்கு நன்றி கூறினார்.
என் முதுகுப்புறத் தோலுக்கடியில் உணரிகள் பொருத்தப்பட்டுள்ளன. சுற்றுப்புற நச்சுத்தன்மையின் அளவில் ஏதேனும் ஒரு மாறுபாடு தோன்றினால் அந்த நொடியே என்னால் அதனை உணர முடியும். அந்த மாற்றத்தின் அளவு, அது ஏற்பட்டுள்ள இடம், அதற்குக் கவனம் செலுத்தவோ நடவடிக்கை எடுக்கவோ வேண்டுமா என அனைத்தையும் அறிந்துகொள்ள முடியும். அது ஆறாம் அறிவைப் போன்றது. கொஞ்சம்கூட வலியே இல்லை, தரவுகளைச் சேகரித்து பின் புரிந்துகொள்வதைவிட வெகு திறன்வாய்ந்தது. என்றாலும், உடம்பிற்குள் கருவிகள் பொருத்தப்படுவதைப் பெரும்பாலானோர் வரவேற்பதில்லை என்பதை நான் அறிவேன். அவர்கள் உன்னை ஒரு சைபோர்க் ஆக மாற்றிவிட்டனர்! என்று எனக்கு என் நெருங்கிய தோழி எழுதினாள். அந்தரங்கமாக, காயமுற்ற தோழி என நான் அழைக்கிற அவள் இப்போதும் என்னைப் பார்வையிட வருவதுண்டு.
அதனால்? நான் பதில் எழுதினேன். நமது காலிற்கடியில் இருக்கும் பூமியும், இயற்கையின் பொருண்மை வடிவம் என நாம் கருதுகிற மண்ணும்கூட காற்றாலும் நீராலும் தாதுக்களாலும் கனிமப்பொருட்களாலும் ஆனதுதானே என நான் அவளுக்கு நினைவூட்டினேன். நமது அன்னையாகிய பூமியும்கூட ஒரு சைபோர்க்தான். நான் மேலும் சொன்னேன்- உண்மையைச் சொன்னால், ஒவ்வொன்றும் எவ்வளவு நச்சடைந்திருக்கிறது என்பதை அறிவது எனக்கு மிகவும் வசதியாய் இருக்கிறது. எது சரி எது தவறு என்பது பற்றி நான் மிகக்கச்சிதமாக அறிந்திருக்கிறேன். சரியான தீர்வுகள் பற்றி எப்போதும் என்னால் முடிவெடுக்க முடிகிறது. என்னுடைய உணரிகள் விநோதமானவைதான், ஆனால் அவை எனக்கு ஒரு நீதித்திசைகாட்டியைப் போலச் செயல்படுகின்றன.
என்னுடைய இந்த இருபது ஏக்கர் கண்ணாடி அடைப்பிற்குள், எனது இந்த அழகான சிறிய வீட்டிற்குள், தலையணைகளாலும் பொன்னிற விளக்குகளாலும் மென்மையாக்கப்பட்டுள்ள இந்தப் படுக்கை அறைக்குள் நான் அணு யுகத்தின் உதயம் பற்றி வாசித்துக்கொண்டிருக்கிறேன். இளம் இயற்பியலாளர்களது துணிச்சலும் ஆர்வமும் என்னை நெகிழச் செய்கிறது. மென்மையான, சற்றே குழந்தைத்தனமான நீல்ஸ் போரின் மண்டை ஓடு. என்ரிகோ ஃபெர்மியின் பளிச்சென்ற துக்கம்படிந்த பார்வை. ப்ளூடோனியத்தைக் கண்டறிந்ததற்காக நோபல் பரிசு வழங்கப்பெற்ற க்ளென் ஸீபொர்க், “நான் ஒரு 28 வயது குழந்தையாய் இருந்த போதும் அதைப் பற்றிச் சிந்திப்பதை நிறுத்தவில்லை” என்றார். இந்தச் சிறுபிள்ளைத்தனம் பல விஞ்ஞானிகளது மனோபாவமாக இருந்திருப்பதாகத் தோன்றுகிறது, மனித முன்னேற்றங்களது அடிப்படையும் இக்குணாதிசயம்தான் என்று சொல்லலாம். பார்வை பற்றிய ஆராய்ச்சியின் பொருட்டு நியூட்டன் தன் கண்ணில் ஊசியைச் செருகிக்கொண்டார். மருத்துவர்கள் டொனால்ட் ப்ளாக்லாக்கும் ஸௌல் அட்லரும் சிம்பன்ஸியின் இரத்தத்தைத் தம் உடலில் செலுத்திக்கொண்டனர்.
எனது விளக்கொளி பாலைவனத்தின் குறுக்காக மென்மையாகப் பாய்கிறது. பூச்சிகள் அதை நோக்கி ஈர்க்கப்பட்டுப் பின் கண்ணாடித்தடுப்பில் மோதுகின்றன. எந்த மனித இடையூறு பற்றியும் எனக்கு அச்சமில்லை. எனது ஆசிரமம் எல்லாத் திசைகளிலும் மண்டையோடாலும் X வடிட எலும்புச் சின்னங்களாலும் சூழப்பட்டுள்ளது.
அணு இயற்பியலின் வரலாறானது ஒரு பிரம்மாண்ட காதல் காவியம். அதில் எல்லாமும் இருக்கிறது. வேட்கை, வெற்றி, துரோகம். பராமரிப்பாளர்களாகச் செயல்படும் எங்களிடம் அதன் சிசுக்கள் கையளிக்கப்பட்டுள்ளன என்றும் சொல்லலாம். ப்ளூடோனியம்-239ன் அரை ஆயுளானது 24,100 ஆண்டுகள்.
“முன்பொரு காலத்தில் சில இளைஞர்கள் ஒரு தனிமத்தைக் கண்டறிந்தனர்” என்பதாகக் கதை தொடங்குகிறது. அதனால் எல்லையற்ற ஆற்றலை வழங்க முடியும் என்பதை அவர்கள் விரைவிலேயே அறிந்துகொண்டனர். அதன் சாத்தியங்கள் முடிவற்றவையாக இருந்தன, எதிர்காலம் பிரகாசமாய் இருந்தது. ஒரே ஒரு பிரச்சினை- அத்தனிமம் நச்சுத்தன்மை கொண்டதாய் இருந்தது.
“முன்பொரு காலத்தில் ஒரு இளைஞனும் இளைஞியும் காதலில் விழுந்தனர்” என்பதாக இன்னொரு கதை செல்கிறது. அந்தக் காதல் எல்லையற்ற ஆற்றலைப் பிரசவித்தது. அதன் சாத்தியங்கள் முடிவற்றவையாகவும் எதிர்காலம் பிரகாசமாகவும் இருந்தது. ஒரே ஒரு பிரச்சினை- அந்த இருவரில் ஒருவர் நச்சுத்தன்மை கொண்டிருந்தனர்.
காயமுற்ற என் தோழி என்னை மாதம் ஒருமுறை சந்திப்பாள். முன்பெல்லாம் ஒரு உதவியாளர் ஓட்டிவரும் வேனில் வருகிற அவள், இப்போது தனக்கென்று சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள காரில் அவளே வருகிறாள். ஊன்றுகோலின் துணையின்றியே எனது கண்ணாடிவரை அவளால் நடந்துவர முடிகிறது. “முன்னேற்றம்!” வறட்சியாகச் சொல்வாள். அவளுக்கு முன்னேற்றத்தின் மீது நம்பிக்கை இல்லை.
ஆற்றல் ஆய்வகம் ஒன்றில் பணிபுரிபவளாக, அங்கே முன்னேற்றத்தினைத் தினமும் காண்பதாக நம்புகிறவளாக, இதுகுறித்து நாங்கள் அடிக்கடி விவாதிப்பதுண்டு. காயமுற்ற எனது தோழி ஒரு நடனமாது. “நீ முன்னேறுகிறாய் என்பது உனக்குத் தெரியவில்லையா?” என நான் வினவினேன். “கடந்த ஆண்டு இருந்ததைவிட இப்போது நீ ஒரு சிறப்பான நாட்டியக்காரி என உனக்குத் தோன்றவில்லையா?” கூட்டமாய் இருந்த ஒரு உணவகத்தில் அமர்ந்திருந்தோம், நேரம் பார்ப்பதற்காக நான் என் கைபேசியைப் பார்த்தேன் என்பதை ஒப்புக்கொள்கிறேன். மதிய உணவிற்கு எனக்கு இன்னும் இருபது நிமிடங்களே இருந்தன. அதற்குள் உணவு சீக்கிரமாக வரவில்லையென்றால் நான் அங்கே சென்று அதை எடுக்க வேண்டும். நான் நிமிர்ந்தபோது, விரலால் உதட்டில் தட்டியபடி என் தோழி கூட்டத்திற்குள் நோக்கமற்று நோக்கிக்கொண்டிருந்தாள். “இல்லை” என்றாள் மெதுவாக. “எந்த அர்த்தமுள்ள வகையிலும் நான் முன்பைவிட சிறந்த நாட்டியக்காரி அல்ல. உன் கேள்வியில் ஏதோ பிழை இருக்கிறதென எனக்குத் தோன்றுகிறது.” அவள் எவ்வளவு ஒட்டுதலற்றவளாகவும் நிதர்சனமானவளாகவும் முன்பெல்லாம் இருந்தாள் என நான் அப்போது யோசித்தது நினைவிற்கு வருகிறது. ஆனால் அந்த விபத்திற்கும் காயத்திற்கும் பிறகு அவள் கிட்டத்தட்ட முழு வெளிப்படையானவளாக ஆகிவிட்டதோடு ஒப்பிட அதெல்லாம் ஒன்றுமே இல்லை.
சரி, நாம் இப்போது அந்த நச்சுத்தன்மை வாய்ந்த காதலர் பற்றிய கதைக்குத் திரும்புவோம். தான் நஞ்சடைந்திருக்கிறோம் என்பது பற்றி அவள் அறிந்திருக்கவே இல்லை. மாறாக, தான் அழகானவள், திறமையானவள், கனிவானவள், வாழ்வின் அனைத்துப் பரிமாணங்களிலும் வெற்றிபெறப் பிறந்தவள் என எண்ணினாள். அவளுக்கு நடந்தது எதுவும் இதற்கு முரண்படவில்லை. அடுத்தடுத்த வெற்றிகளோடு, விரைவிலேயே அவள் ஆற்றல் ஆய்வகம் ஒன்றில் பணிக்குச் சேர்ந்தாள், ஒரு அழகான அர்ப்பணிப்புமிக்க கணவன் (அவளது தோழிகள் அனைவரும் பொறாமை கொள்ளும்படி), அழகான சிறிய மகள், அதோடு நதிக்கருகே ஒரு வீடும். அவள் குறித்து நேர்மறையான அடைமொழிகள் தொடர்ந்து உச்சரிக்கப்பட்டன; நல்லூழின் நடுவே வாழ்வது போன்ற ஒரு வாழ்க்கை. பணியிடத்தில், ஆயுதப்போரில் எஞ்சிய ப்ளூடோனியத்தை ஆற்றல் மூலமாகப் பயன்பாட்டிற்குக் கொண்டுவருவதுதான் அவளது பொறுப்பாக இருந்தது. அப்பொருளின் தன்மை ரொம்பவும் நிலையற்றதென நிரூபணமாகி திட்டம் தோல்வியுற்றபோது, அவள் உடனடியாகத் தன் துறையை மாற்றிக்கொண்டு பாதுகாப்பு மையங்களின் உருவாக்கத்தில் இணைந்துகொண்டாள். புவியுடனான தங்களது பொறுப்புணர்வை உணர்த்த, அவளது அணி சிறிய பச்சை ஸ்டிக்கர்களைத் தயாரித்தது. அவளது கார் கதவின் மீது எல்லா இடத்திலும் அந்த ஸ்டிக்கர்களை அவளது மகள் ஒட்டிவைத்தாள். ”உன்னைக் குறித்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்” என்றான் அவள் கணவன். அவள் யோகப் பயிற்சிகள் செய்தாள், நதியைப் புகைப்படங்கள் எடுத்தாள். என்றாலும் ஏனோ தன் வாழ்வைச் சீரழித்துக்கொண்டாள்.
அவள் பொய் சொன்னாள். பணி முடித்து வீடு திரும்பும் வழியில் தனியாக மதுவருந்தச் சென்றாள். நகருக்கு வெளியில் இருந்த அருங்காட்சியகத்தை இரகசியமாகப் பார்வையிட்டாள். உடன்பணிபுரிகிற ஒருவருடன் காதலில் இருப்பதாக அவள் கற்பனை செய்துகொண்டாள் – மிக உன்னதமான, புனிதமான, உடல் தொடுகைகளுக்கான தேவையற்ற தூய்மையான காதல்- இவ்வுறவைக் குறுஞ்செய்திகள் மூலம் அவள் வளர்த்தெடுத்தாள். அப்போதுதான் தனக்குப் பதினாறு வயதாகியது போல் அவள் உணர்ந்தாள். வானொலியில் ஒலித்த மிக மோசமான பாடல்களும்கூட அவளை நடனமாடவும் மகிழ்ச்சியில் அழவைக்கவும் செய்தன. சமையலறையில் கைகழுவும் தொட்டிக்குக் கீழே வைத்திருந்த மதுவினை அருந்தியபடி இருளான வரவேற்பறையில் இரவுகளில் அவள் இந்த இரண்டையும் சப்தமின்றிச் செய்தாள்.
இந்த நடவடிக்கைகளெல்லாம், ஒரு விடுமுறையைப் போலப் பிரச்சினையற்றவையாகத்தான் தோன்றின. இவையனைத்தும் அவளது உலகை மேலும் பெரியதாகவும் மர்மமானதாகவும் ஆக்கின. எப்போது வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம்! குழந்தையுடன் முற்றத்தில் நடந்துகொண்டிருந்தபோது, தான் ’மாட்டிக்கொண்டோம்’ (அப்படித்தான் அவளது நெருங்கிய தோழி வார்த்தைப்படுத்தினாள்) என அவள் உணரவே இல்லை.
உண்மைதான், வழக்கமான கதைதான். அவளது கணவன் எல்லாவற்றையும் கண்டறிந்துவிட்டான். அந்தக் கற்பனைக் காதலனுக்கு அவள் அனுப்பிய குறுஞ்செய்திகள் அவளது கணவனைச் சிதைத்துவிட்டன. அழுத அவள், திருந்திவிடுவதாக அவனுக்குச் சத்தியம் செய்தாள். ஆனால் ஆச்சரியமாக, அவளுக்கு வாய்த்த எல்லா ஆசீர்வாதங்களையும், அவளது அறிவையும் குற்ற உணர்வையும் தாண்டி, அவளால் அப்படிச் செய்ய முடியவில்லை.
முன்னேற்றம்!
ஜெர்மன் வேதியியலாளர் மார்டின் க்லாப்ரத், பிச்ப்ளெண்ட் என்னும் தாதுவைப் பற்றிப் படித்துக்கொண்டிருந்தபோது 1789ல் யுரேனியத்தைக் கண்டறிந்தார். பஸ்டீல் சிறையுடைப்பு நிகழ்ந்ததும் (Storming of the Bastille) அதே ஆண்டுதான். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம். நூறாண்டுகளுக்குப் பிறகு, 1898ல் மேரி கியூரி பிச்ப்ளெண்டிலிருந்து ரேடியத்தையும் பொலோனியத்தையும் பிரித்தெடுத்தார். இன்று, மேரி கியூரியின் குறிப்பேடுகள் தொடக்கூடாத அளவிற்கு ஆபத்து நிறைந்ததாகக் கருதப்படுகின்றன. ஆனால் கதிரியக்க ஐசோடோப்புகள் புகை கண்டறிதலிலும், விவசாயத்திலும், மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகின்றன. பொருளாதாரப் பெருமந்த (Great Depression) சமயத்தில், யுரேனியத்தால் வண்ணம் தீட்டப்பட்ட பச்சைப் பீங்கான்கள் சினிமாக்களின் போது இலவசமாக வழங்கப்படும் அளவிற்கு மலிவாகின.
சாத்தியங்கள். எல்லையற்றவை.
யுனைடட் ரேடியம் தொழிற்சாலையில் கடிகார முகப்பில் பிரகாசமான வண்ணம் தீட்டும்போது ’ரேடியம் பெண்கள்’ (‘Radium Girls’) தங்களை நச்சுப்படுத்திக்கொண்டனர். அந்த வண்ணம் நஞ்சு என்பதை அறியாமல் வண்ணத்தூரிகைகளை அவர்கள் நாவில் தொட்டு மெல்லியதாக்கி சிறிய எண்களுக்கும் கோடுகளுக்கும் வடிவம் தந்தனர். இதனால் அவர்களது எலும்புகள் பின்னாளில் பூச்சி அரித்த துணி போலாகின. அவர்களது பற்கள் உதிர்ந்து விழுந்தன. தொழிற்சாலைப் பணியாளர்களாக இடையில் அவர்கள் சற்று மகிழ்ந்திருக்க விரும்பிய போது, தங்களது நகங்களையும், பற்களையும்கூட அழகான, பயங்கரமான, நின்றொளிர்கிற, நவீனமான நஞ்சினால் வண்ணம் தீட்டிக்கொண்டனர்.
சில சமயங்களில் நான் என் உடலையே கவனிப்பதுண்டு. நான் மேலும் மேலும் நச்சடைந்துகொண்டே வருவதை என்னால் உணர முடிகிறது. நானும் எப்போதாவது ரேடியம் பெண்களைப் போல ஒளிரத் தொடங்குவேனா? அவர்களில் ஒருத்தி, அவளது வழக்கறிஞரின் கூற்றுப்படி, பின்புறம் முழுக்க இடுப்புவரை ஒளிர்ந்திருக்கிறாள்.
ஆனால் எதற்காகப் பயப்பட வேண்டும்? திரும்பிச் செல்லுதல் என்கிற பேச்சுக்கே இடமில்லை. நாம் தினந்தோறும் கதிர்வீச்சுக்கு உட்படுகிறோம். சூரியன் நம்மைப் புற ஊதாக்கதிரினால் குளிப்பாட்டுகிறது. நாம் எல்லோருமே (நாம் என்று சொல்ல முடிவதில் மகிழ்ச்சி), நமது இன்றைய வாழ்க்கையின் ஒரு பண்பாகிவிட்ட நச்சுத்தன்மையைப் பகிர்ந்துகொள்கிறோம். இந்தச் சேமிப்புக் கிடங்கின் கீழ்ப்பகுதியில் வெற்று அறைகளில் ப்ளூட்டோனியம் குண்டுகள் தொங்குகிற புகைப்படத்தைப் பார்த்திருக்கிறேன். தத்தமது இதமான ஒளியில் அவை குளிர்காய்ந்துகொண்டிருக்கின்றன. கதிர்வீசியபடி.
நாம் எல்லோருமே நச்சுத்தன்மையுடையவர்கள்தான். நம்மில் சிலர் பிறரைவிட அதிகம் நச்சுத்தன்மை உடையவர்கள் என என் காயமுற்ற தோழிக்கு எழுதினேன்.
நகரத்திலிருக்கும் அவளது அடுக்ககத்திலிருந்து ஹா ஹா எனப் பதிலனுப்புகிறாள் அவள். அதாரின் பறவைகளின் கூடுகையை (Conference of the Birds) வாசித்துக்கொண்டிருப்பதாகச் சொல்கிறாள் அவள். எனது தோழி ஆன்மீகம், தத்துவம் சார்ந்த புத்தகங்களை ஆர்வமுடன் வாசிப்பவள். அவற்றை வாசித்து முடித்ததும் எனக்கும் தருவாள். அதாரின் தாக்கத்தால் அவள் ஒரு புதிய நடனத்தையும் பயிற்சிசெய்து வருகிறாள். அட்டகாசம்! எனப் பதில் அனுப்பினேன் நான். காயமடைந்த பிறகு அவள் இதுவரை நடனத்தில் ஈடுபடவே இல்லை. அந்த நடனம் முழுவதும் தன் விரல்நுனிகளில் இருப்பதாக எழுதுகிறாள். முன்னேற்றத்தின் மீது தான் நம்பிக்கை கொள்ளாதவள் என்பதை மறந்துவிட்டது போல, இதுதான் எனது அதிசிறந்த நிகழ்ச்சியாக இருக்கும் எனவும் சொல்கிறாள்.
முன்னேற்றம் பற்றிய அவளது பார்வையைச் சீண்ட நான் தவறியிருக்கவே செய்யாத காலம் ஒன்று இருந்தது. ஆனால் அதெல்லாம் இப்போதைய நுண்ணுணர்வை நான் அடையும் முன்பு, புவியின் காற்றின் பலவீனங்களை நான் உணரப்பழகும் முன்பு, தரையில் கிடந்து அழுகிற ஒருவளாக நான் மாறும் முன்பு. சீக்கிரம் ஆகட்டும் என்று மட்டும் பதில் எழுதினேன். காயமடைந்த என் தோழியை மருத்துவமனையில் நான் சந்தித்தபோது, அவள் ஒரு உடைந்த பச்சைக் கண்ணாடித்துண்டு போலத் தோற்றமளித்தாள். அவள் ஒருபோதும் மீண்டும் நடக்கப்போவதில்லை என்பதாகத்தான் இருந்தது நிலைமை. மிகவும் மகிழ்ச்சிகரமான ஒரு தினத்தில் தனது நடன மையத்திலிருந்து ஒயிலாக நடந்துவந்த அவள் வேண்டுமென்றே ஒரு காரின் பாதையில் குறுக்கிட்டிருக்கிறாள்.
பின்னாளில் அவள் என்னிடம் சொன்னாள்: நினைத்தே பார்க்க முடியவில்லை.
தான் ஏதோ ”சிக்க வைக்கப்பட்டது” போல உணர்ந்ததாக மருத்துவமனையில் அவள் என்னிடம் விளக்கினாள். ஒரு கதிர்வீச்சு நோயைப் போல இந்த உணர்வு கண்ணுக்குத் தெரியாமல் அவளுள் வளர்ந்தது. அது வெளியே நடந்தது ஒரு வகையில் ஆசுவாசம்தான் என்றாள் அவள். மருத்துவமனையின் படுக்கையில் அதனைக் காண முடிந்தது. அவளது தோல் முழுக்க அது இருந்தது, அவள் கண்களில் அது சுடர்விட்டது. வலியினால் அவள் எரிந்துகொண்டிருந்தாள். எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது, நான் அதை முன்பு கண்டதேயில்லை – ஆனால் நான் ஏற்கனவே சொன்னபடி அந்த நாட்களில் எனக்கு அதிகம் கூருணர்வு இருந்ததில்லை.
முப்பதுகளின் மலினமான பச்சைக் கண்ணாடி, “மந்தக் கண்ணாடி” என்றழைக்கப்படுவதை நான் நினைவுகூர்ந்தேன்.
எதிர்துருவ குணாதிசயங்களைக் கொண்டிருப்பவர்களாக, முற்றிலும் வெவ்வேறான துறைகளில் பிரகாசமடையும் திறன்களுடைய பதின்வயதினராக இருந்த நானும் என் தோழியும் இப்படி இறுதியில் ஒரே விதமான விதியினால் பிணைக்கப்பட்டிருப்பதுதான் எவ்வளவு விநோதம்! என்னைப் போலவே எனது காயமுற்ற தோழியும் தனது துறையை மாற்றிக்கொள்ள வேண்டியாகியது. இப்போது அவள் வீட்டிலிருந்தபடியே, விளம்பர வாசகங்கள் எழுதும் வேலை செய்கிறாள். அவள் தற்போது முயல்கிற புதிய நடனம் அதீத வலியைத் தருவதாக அவள் சொல்கிறாள். அத்தாரை மேற்கோள் சொல்கிறாள்: அன்பு கடினமான காரியங்களையே நேசிக்கிறது.
அப்பெண்ணின் கணவன்- எல்லாமே எளிதாக இருக்க வேண்டுமென நீ விரும்புகிறாய்.
அந்தப் பெண் மேலும் மேலும் பொய்கள் சொன்னாள். ஒவ்வொரு பொய்யும், மிகச்சிறிய ஒன்றுகூட, இன்னொரு பிரபஞ்சத்தைத் திறப்பதாக இருந்தது. நதியருகில் தன் குழந்தையுடன் நிற்கிற போது அவள் ஒரு இலையையோ தூக்கி வீசப்பட்ட மிட்டாய்த்தாளையோ வெறித்தபடி இருப்பாள். குழந்தை நீருக்குள் விழுந்துவிடாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும் என அவள் தனக்குத்தானே நினைவூட்டிக்கொள்ள வேண்டியிருந்தது.
ஒரு பொய்யின் அரை ஆயுள் எவ்வளவு? ஒவ்வொன்றும் ஒரு சங்கிலி விளைவை உண்டாக்கி, எல்லையற்ற ஆற்றலைப் பிரசவித்தது. சாத்தியங்கள் முடிவற்றவையாகவும், எதிர்காலம் அச்சமூட்டக்கூடியதாகவும் தோன்றியது. இறுதியாக விஷயங்கள் ஒரு பிரச்சினையாகத் திரண்டு நின்றன.
வீட்டின் அத்தனை பெட்டிகளையும் வரவேற்பறையில் தூக்கி எறிந்தான் அவள் கணவன். “வெளியே போ” என்றான். குழந்தை உறங்கிக்கொண்டிருந்ததால் அவன் அதை ஒரு இரகசியம் போன்ற குரலில் சொன்னான்.
முதல் அணுகுண்டுச் சோதனை வெடிப்பைப் பார்வையிட்ட இஸிதார் ஐசக் ரபி, “அது வெடித்தது; அது பாய்ந்தது; உங்களுக்குள் துளையிட்டு அது தன்னை நுழைத்தது” என்றார்.
அப்பெண் வீட்டிலிருந்து வெளியே நடந்தாள். தெருவினூடாக நடந்தாள். பரபரப்பான ஒரு சாலைக்கு வந்தாள். அதனூடே நடந்தபோது அவள் காயமுற்ற தன் தோழியை நினைத்துக்கொண்டாள். காற்றொலிப்பான்களும் ஹாரன்களும் அவள் மீது மோதி அறைந்தன. என்றாலும் அவள் சாலையின் மறுபுறம் வந்திருந்தாள். இன்னமும் மருத்துவமனையில் இருந்த தோழியிடம் அவள் இதைச் சொன்னபோது உறுமினாள் அவள்- “நினைத்துக்கூடப் பார்த்திடாதே.”
அப்பெண் ஒரு உணவுவிடுதிக்குச் சென்றாள். இருளில் அமர்ந்தாள். அறையின் எதோ ஒரு இடத்தில் ஒரு விலங்கு சிறிய ஒலியெழுப்பிக்கொண்டே இருந்தது.
மீண்டும் ரபி- ”கண்ணால் மட்டும் பார்க்கப்பட்ட காட்சி அல்ல அது. என்றென்றைக்குமாக ஒட்டுமொத்தமாக அது உணரப்பட்டது.”
நான் நினைத்து ஏக்கமடைகிற சில விஷயங்கள் இருக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவற்றைப் பற்றி யோசிக்கவும்கூட என்னால் முடியாதுதான் என்றாலும், எப்போதேனும், ஒரு மீன்கொத்திப் பறவையின் குரலை என்னால் நினைவுகூர முடியும். அக்குரல் இரண்டு வகையிலானது. யாரோ ஒருமுறை என்னிடம் சொன்னார்கள்- அவற்றில் ஒன்று, “ஒரு வெறிபிடித்த பெண்ணின் சிரிப்பை ஒத்தது”. மற்றொன்று, “இவ்வுலகிலேயே துக்கமான ஒலி”. இதையும் அதே நபர்தான் சொன்னார். காடுகளைப் பின்னணியாகக்கொண்டு எடுக்கப்படும் படங்களில், வித்தியாசமான ஒலி தேவைப்படுகிற போது, மீன்கொத்திப் பறவையின் குரல்தான் அதிகமும் பயன்படுத்தப்படுகிறது. அது பொருத்தமற்று உபயோகப்படுத்தப்பட்டாலும், அதை அறிந்தவர் எவராலும் அதனை உணர்ந்துகொள்ள முடியும்.
சில சமயங்களில் எனக்கு அப்படித் தோன்றியிருக்கிறது. தவறான இடத்தில் செருகப்பட்ட ஒரு குரல். வெறிபிடித்த ஒரு பெண். முட்டாள்தனமானது. உலகிலேயே சோகமானது.
வனப்பகுதியின் மத்தியில் அமைந்துள்ள எனது இந்தப் பெரிய கண்ணாடிக்கூடானது, குறைந்தபட்சம், கூச்சலிடுவதற்கு ஒரு மகத்தான இடம்தான்.
பராமரிப்பாளர்கள்தான் இவ்வுலகின் ஆன்மாக்களுக்குப் பொறுப்பேற்றிருக்கிற புதிய மதகுருக்கள் என என் காயமுற்ற தோழிக்கு ஒரு கருத்து இருக்கிறது. அதுதான் இதன் உச்சபட்ச முரண்.
ஜே. ராபர்ட் ஓபன்ஹெய்மர்- ”இயற்பியலாளர்கள் பாவம் பற்றி அறிந்திருக்கிறார்கள்; இந்த அறிதலை அவர்களால் உதிர்க்க முடியாது.”
என்றாலும், என்னால் என்னை ஒரு மதகுருவாக நினைக்க முடியாவிட்டாலும், நான் குறைந்தபட்சம் ஒரு சாது. ஒரு பணிப்பெண். ஒரு நோயுற்ற தோழியின் படுக்கைக்கருகே அமர்ந்திருப்பது போலத்தான் நான் பூமியுடன் அமர்ந்திருக்கிறேன். நான் இப்போது ரொம்பவும் மென்மையாக இருக்கிறேன், புவியின் வலியை என் உடல் முழுவதும் என்னால் உணரமுடிகிறது. அடிக்கடி நான் என் கன்னம் தரையில் படும்படி படுத்துக்கொண்டு அழுகிறேன். இப்போதெல்லாம் எனக்கு அந்த இன்னொரு உலகத்தின் மீதான விருப்பமே இல்லாமல் போய்விட்டது. அவ்விருப்பத்தைப் புரிந்துகொள்ளவும்கூட முடிவதில்லை. அந்த வேட்கைதான் நிறைய அற்புதங்களையும் சாத்தான்களையும் தோற்றுவிக்கிறது, அதுதான் நஞ்சூட்டவும் பரிசுத்தப்படுத்தவும் செய்கிறது. இக்கதையில் இருக்கிற பெண்ணைப் போல, வேறு எந்த உலகமும் இல்லை என்பதை நானும் புரிந்துகொள்கிறேன். நாம் உருவாக்கிய இந்த ஒரு உலகம் மட்டும்தான் இருக்கிறது.
கருப்பராகிய மோசே- “உனது அறைக்குள் அமர்ந்திரு, உனது அறை உனக்குக் கற்றுத்தரும்.”
ஒரு குழந்தை கண்ணாடியை நோக்கி ஓடிவருகிறாள். பாதுகாப்பான இடைவெளியில் நின்றபடி நீலமும் வெளிர்சிவப்புமான மேகங்கள் வரையப்பட்ட ஒரு சித்திரத்தை உயர்த்திக்காட்டுகிறாள். இப்படத்தில் என்ன இருக்கிறது? ஒரு ஸ்பூன் முழுக்க ஐஸ்கிரீமுடனான பிற்பகல் வாசிப்பாய் இருக்கலாம் அது. அல்லது, உறங்கும்முன் உலகுடன் நிகழ்த்துகிற விவாதமாய் இருக்கலாம். கண்ணாடிக்கு இப்புறம் இருக்கும் பெண், குழப்பங்கள் நிறைந்த தினசரி செயல்பாடுகளாலான உலகிலிருந்து பிரித்து வைக்கப்பட்டிருக்கிறாள். குழந்தை காட்டிய சித்திரம்தான் அவளுக்கு அந்த உலகின் மேற்பரப்பு. அக்காகிதம் குழந்தையின் வியர்வையினால் துவண்டிருக்கிறது. அந்த வேர்வை நீர், சர்க்கரை, உப்புக்கள், அமோனியா, தாமிரம் இரும்பு ஈயம் உள்ளிட்ட பிற தாதுக்களாலும் ஆகியிருக்கிறது.
குழந்தையின் சுவாசம் சற்றே நச்சுத்தன்மை கொண்டிருக்கலாம். அப்பெண் அதை ஆராயவில்லை; அவளால் தன் குழந்தையின் உடலை ஆராய முடியாது. “நான் உன்னை நேசிக்கிறேன்” எனக் குரல் எழுப்புகிறது குழந்தை. அவளது கண்கள் மறைக்கப்பட்டிருக்கின்றன. இது அவள் தன் அம்மாவைப் பார்வையிடும் வழக்கமான வருகைதான்; அதன்பிறகு அவள் குளத்திற்குச் செல்வாள்.
அப்பெண்ணின் காயமுற்ற தோழி கண்ணாடிக்கு மறுபுறமிருந்து சிரிக்கிறாள். வாக்களித்தபடி குழந்தையைக் குளத்திற்கு அழைத்துச்செல்லும் முன்பு, சில வலிமிக்க அழகான சைகைகளை மெதுவாகக் கைகளால் செய்துகாட்டுகிறாள். குழந்தையின் படத்தையும் ஒரு புத்தகத்தையும் கடத்தும் பெட்டியில் வைக்கிறாள். அது, பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த செருப்பு வியாபாரியான ஜேக்கப் பொஹிமே எழுதிய அரோரா புத்தகம். அவர் இறைமையின் வடிவத்தை ஈயப்பாத்திரத்தில் (pewter dish) பிரதிபலித்த ஒளியின் வழியாகக் கண்டார். அரோராவைப் பற்றிச் சொல்லுகையில் மாதாகோயில் மணியக்காரர் க்ரிகோரியஸ் ரிச்டர் பின்வருமாறு எழுதுகிறார். “இப்புத்தகத்தில் எவ்வளவு வரிகள் இருக்கின்றனவோ அவ்வளவு தெய்வநிந்தனை இருக்கிறது; செருப்புத் தயாரிப்பவனின் கீல் வாசனையையும் அருவருப்பையும் அது கொண்டிருக்கிறது”.
“பாருங்கள்”, பொஹீம் எழுதுகிறார், “மனித உடலில் பித்தப்பை இருக்கிறது, அது விஷம்தான். ஆனால் அது இல்லாமல் மனிதனால் வாழ முடியாது; உருவமற்ற ஆன்மாவினைச் செயல்படுவதாகவும் மகிழ்வதாகவும் வெற்றியடைவதாகவும் சிரிப்பதாகவும் அதுதான் வைத்திருக்கிறது. ஏனென்றால் அதுதான் மகிழ்ச்சியின் ஆதாரம்.”
பராமரிப்பாளராக ஆவதற்கு முன்பு நான் பனியை நேசித்தேன். எனது சுற்றுப்புறத்தை ஐரோப்பிய நகரம் போலத் தோன்றச் செய்த மழைக்கால ஜன்னல்களை நேசித்தேன். விளம்பர நடிகைகளின் படங்களை பத்திரிகைகளிலிருந்து கத்தரித்து வண்ணங்களின் அடிப்படையில் வரிசைப்படுத்தி நோட்டில் ஒட்டிவைத்திருக்கிறேன். அதிலிருந்த நீலவண்ணக் காட்சிகள் இரவில் நான் மேற்கொள்கிற இரயில் பயணங்கள் பற்றியும் மஞ்சள் வண்ணக்காட்சிகள் இடைக்காலப் பாலங்கள் பற்றியும் சிந்திக்கச் செய்தன. அடிக்கடி நான் இரண்டாம்நிலைக் கடைகளிலிருந்து ஆடைகள் வாங்கி அவற்றைத் துவைக்காமல் அணிந்துகொள்வேன். அப்போதுதானே என்னால் இன்னொருவர் போல உணரவும் கமழவும் முடியும்.
*
ஆங்கில மூலம்: Tender by Sofia Samatar, Published by Small Beer Press, May 2017.