இயற்கையில் அவ்வளவு அழகு நிரம்பியதாக, தூய இதயத்தின் குறியீடாக, களங்கமற்றதாக, அன்பையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்துவதாக, ஒரு சின்னஞ்சிறிய மலரைவிட வேறு எது இருந்திட முடியும்? மகத்தான தெய்வீக அழகை, அன்பை, இசைவை எளிய ஒரு மலர்ப்படுகையை விட வேறு எது பிரதிபலிக்கும்? மலர்களின் புத்தொளிர்வும், சீர்மையும், மென்மையும் எப்படி மனிதர்களின் ஆழத்தை ஈர்க்கின்றன, எவ்வாறு உயிர்ப்பை அளிக்கின்றன! அத்தகைய மலர் கிழக்குலகைக் கவர்ந்ததில் ஏதும் வியப்புண்டா? இதற்கு இங்கு அளிக்கப்படும் இடம் எவ்விதத்திலும் மிகையானதன்று. மலர்கள் இங்குள்ளவனின் இன்பங்களிலும், மதத்திலும், தத்துவத்திலும் ஆழக் கலந்துள்ளன, கிழக்கின் குறியீட்டியலில் ஒரு குறிப்பிடத்தகுந்த இடத்தை வகிக்கின்றன. மலரில் இருந்தே ஒரு இந்தியன் தானடைந்த மகத்தான உண்மைகளை விவரிக்கத் தலைப்படுவான். மலர்கள் இல்லாமல் இங்கு எச்சடங்கும் நிகழாது. அவற்றைக் கொண்டு தன் அப்பன் ஆரூரனை அலங்கரிப்பதில் மகிழும் அவன் அலங்கரித்த பின் தம்மக்களை அழைத்துச் சொல்வான்:
சித்தந் தெளிவீர்காள்
அத்தனாரூரனை
பத்திமலர் தூவ
முத்தியாகுமே.
’வடிவம், வண்ணம், மணம்’ ஆகிய மூன்று பண்புகளைக் கொண்ட ஒரு மலர் அவனுக்கு ‘சத், சித், ஆனந்தம்’ என்றாகிய ஒன்றின் பருவடிவமாகும்:
பூவண்ணம் பூவின்மணம் போல மெய்ப்போதவின்ப
மாவண்ண மெய்க்கொண்டவன்
“பூ, அதன் வண்ணம், அதன் மணம் ஆகியவை போன்றவர் சத், சித், ஆனந்தமாகிய இறைவன்” எனத் திருவிளையாடல் புராணத்தின் ஆசிரியர் கூறுகிறார். (திருவிளையாடல் புராணம் அதன் அழகிய நடைக்காகவும் தெளிவான விளக்கத்திற்காகவும் குறிப்பிடத்தகுந்த நூல்.)
இந்த தெய்வீக வடிவை அப்பர் இவ்வாறு குறிப்பிடுகிறார்:
ஆவாகி ஆவினில் ஐந்து மாகி
அறிவாகி அழலாகி அவியு மாகி
நாவாகி நாவுக்கோர் உரையு மாகி
நாதனாய் வேதத்தி னுள்ளோ னாகிப்
பூவாகிப் பூவுக்கோர் நாற்ற மாகிப்
பூக்குளால் வாசமாய் நின்றா னாகித்
தேவாகித் தேவர் முதலு மாகிச்
செழுஞ்சுடராய்ச் சென்றடிகள் நின்ற வாறே.
“பசுவாகி, பசு தரும் ஐந்து பொருள்களுமாகி, அறிவாகி, அனலாகி, அவியுமாகி, நாவாகி, நாவினில் வரும் சொல்லுமாகி, நான்கு வேதத்தினுள்ளும் உறைபவனாகி, பூவாகி, பூவினுள் உறையும் நறுமணமாகி, மனத்தளைகள் அறுத்தவர்களின் உள்ளத்தில் வீசும் வாசமாகி, தேவனாகி, தேவாதி தேவனாகி, செழுஞ்சுடராகி இருப்பவனே.”
மாணிக்கவாசகர் மலருக்கும் அதன் நறுமணத்திற்கும் உள்ள நுட்பமான இணைப்பை வேறொரு கோணத்தில் உருவகப்படுத்துகிறார்:
பூவினாற்றம் போன்றுயர்ந்தெங்கு
மோழிவறநிறைந்து மேவியபெருமை
“பூவினுள் நறுமணம் போன்று அனைத்திலும் உறைந்து அண்டமெங்கும் நிறைந்திருப்பது அவரின் பெருமை.”
மற்றொரு இடத்தில் இதை உடலுக்கும் உயிருக்குமான இணைப்புடன் ஒப்பிடுகிறார். மேலும் அவ்விரண்டையும் பரம்பொருளுடன் இணைத்து, அதேசமயம் அவற்றை வேறுபடுத்தியும் காட்டுகிறார்:
உற்ற வாக்கையி னுறுபொருள் நறுமல
ரெழுதரு நாற்றம்போல்
பற்ற லாவதோர் நிலையிலாப் பரம்பொருள்
அப்பொருள் பாராதே
பெற்றவா பெற்ற பயனது நுகர்ந்திடும்
பித்தர்சொற் றொளியாமே
யத்த னாண்டுதன் னடியரிற் கூட்டிய
அதிசயம் கண்டாமே
“உடலில் உறையும் உயிர் போல், மலரிலுள்ள மணம் போல், பரம்பொருள் அனைத்திலும் உறைந்தவர், அனைத்தையும் கடந்தவர். இவ்வுண்மையை அறிவிலிகள் உணர்வதில்லை. தங்களுடைய கர்மத்தின் கனிகளை புசிப்பதிலேயே அவர்கள் மகிழ்கின்றனர். இவர்களின் சொற்களைக் கேளாதிருக்க கற்பித்த என் அப்பன், எனையாண்டு தன் அடியவர்களிடம் சேர்த்த அதிசயம் கண்டேனே!”
இறைக்கும் நமக்குமான தொடர்பு உடலுக்கும் உயிருக்குமான தொடர்புடன் ஒப்பிடப்பட்டுள்ள போதிலும் எங்கும் நிறைந்திருக்கும் ஆன்மா (உயிர்) இங்கு உடலுக்குள் கட்டுப்பட்டே உள்ளது. இந்நிலையில் ஆன்மாவிற்குக் கிடைப்பதெல்லாம் தானே உருவகித்துக்கொள்ளும் இன்பம் மட்டுமே, உண்மையான என்றும் நிலைத்திருக்கும் ஒன்றல்ல. இதனாலேயே ஆன்மா அனைத்திலும் உறைந்துள்ள, முற்றும் கடந்த, அன்பும் ஆனந்தமுமேயாகிய பரம்பொருளிலிருந்து வேறுபடுகிறது. இப்பண்புகளுடன் பரம்பொருளைப் புரிந்துகொள்பவர்களுக்கே முழுமுதல் அன்பையும் ஆனந்தத்தையும் அவர் அளிக்கிறார். இந்த அயரா அன்பை ஒருவர் அடையும் அக்கணத்தில் “சிவத்தின் மணம் (அன்பு, ஆனந்தம்) ஜீவன் என்ற மலரினுள்ளே வீசத் தொடங்குகிறது”. திருமூலர் இதை “சீவனுக்குள்ளே சிவமணம் பூத்தது” என்கிறார்.
மகத்தான யோகியாகிய திருமூலர் மலர் உவமானத்தில் தேர்ந்தவர். அவர் இயற்றிய பல பாடல்களில் ஒன்றில் பரம்பொருளின் எங்கும் வியாபித்திருக்கும் தன்மையைத் தனது சொல் மலர்களை ஒன்றன்மேலொன்றாகக் குவித்து வெளிப்படுத்துகிறார்:
காலினூறும் கரும்பினிற் கட்டியும்
பாலினுள் நெய்யும், பழத்து ளிரதமும்
பூவினுள் நாற்றமும் போலுளன் எம்மிறை
காவல னெங்கும் கலந்து நின்றானே.
“காற்றினுள் உணர்வுபோல், கரும்பினுள் வெல்லம்போல், பாலினுள் நெய்போல், பழத்தினுள் இன்சாறுபோல், பூவினுள் நறுமணம் போல் என் இறை அரசனெனக் காவலாகி எங்கும் கலந்து நின்றானே.”
அடைமொழியும் அடுக்குமொழியும் அமைப்பதில் இன்பம் காணும் தாயுமானவர் மிக இனிமையான சொற்களால் அன்புமலையை வேண்டுகிறார்:
ஆகார புவனமின் பாகார மாக
அங்ஙனே யொருமொழியால் அகண்டா கார
யோகானு பூதிபெற்ற அன்ப ராவிக்
குறுதுணையே என்னளவும் உகந்த நட்பே
வாகாரும் படிக்கிசைகிண் கிணிவா யென்ன
மலர்ந்தமல ரிடைவாசம் வயங்கு மாபோல்
தேகாதி யுலகமெங்கும் கலந்து தானே
திகழனந்தா னந்தமயத் தெய்வக் குன்றே
“பரந்து விரிந்த இப்புவனத்தை மகத்தான ஆனந்தமெனக் கண்டபோது உன் அன்பன், குருவாகிய நின் ஒரு சொல்லால் யோக அனுபூதி பெற துணையானவனே. அடியவனுக்கும் உற்ற நண்பனாகியவனே. மழலைப் பாதங்களில் இனிய ஓசையெழுப்பும் மணிகளின் அழகிய வாயென மலர்ந்த மலரின் வாசம் போல் அனைத்திலும் கலந்து உலகிலும் உயிர்களிலும் உறைந்து அவ்வனைத்தையும் ஒன்றினைக்கும் அன்புமலையாகியவனே!”
இனிய கூர்மிக்க வாசம் வீசும் சற்றே மொக்கு விரிந்த மலரை மழலைகளின் பாதங்களில் இன்னோசையெழுப்பும் சின்னஞ்சிறிய வாய்பிளந்த மணிகளுடன் ஒப்பிட்டிருப்பது மிகவும் இன்பம் பயப்பது.
நக்கீரநாயனார் இவ்வாறு பாடுகிறார்:
உரையும் பொருளும் உடலும் உயிரும்
விரையும் மலரும்போல் விம்மிப் -புரையின்றிச்
சென்றவா றோங்குந் திருக்கயிலை எம்பெருமான்
நின்றவா றெங்கும் நிறைந்து.
“சொல்லும் பொருளும் போல், உடலும் உயிரும் போல், மலரும் மணமும் போல் திருக்கயிலையின் எம்பெருமான் தன்னிகரற்று அனைத்திற்கும் மேலெனவெழுந்து எங்கும் நிறைந்துள்ளான்.”
நாம் தொடுக்கும் இம்மலர்க்காணிக்கையில் தர்மபுரம் ஆதீன ஸ்தாபகரின் சிவபோகசார தோட்டத்தின் ஒரு மலரையும் பறித்துக் கோர்க்கலாம். இந்தப் பாடல் அத்வைதம் என்பதன் பொருளைத் தெளிவாக விவரிக்கிறது:
இந்தனந்தில் அங்கி எரிஉறுநீர் தேனிரதங்
கந்தமலர்ப் போதுவான் காலொளிகண் – சந்ததமும்
அத்துவித மாவதுபோல் ஆன்மாவும் ஈசனுமாய்
முத்தியிலே நிற்கும் முறை.
“விறகும் அனலும், சுடுநீரும் வெப்பமும், தேனும் இனிப்பும், மலரும் மணமும், ஆகாயமும் காற்றும் அத்துவிதமாவது போல முக்தியில் ஆன்மாவும் ஈசனும் அத்துவிதமாகின்றன.”
பரம்பொருளின் அருளில்லாமலும் நம் ஆன்மாவில் தூய்மை நிரம்பாமலும் அடியவர்களாகிய நம்மாள் எதையும் நிகழ்த்த இயலாது. தன் அடியவர்களை என்றும் கைவிடாத மணம் கமழும் அவனின் தாமரை மலர்ப்பாதங்களில் இப்புனித மலர்களைத் தொடுத்து காணிக்கையாகச் சமர்ப்பித்து, முழு அன்புடனும் பணிவுடனும் வேண்டி எங்களின் எளிய செயல்களுக்கு வெற்றி சூடுகிறோம்.
*
ஆங்கில மூலம்: Flower and fragrance – A floral wreath, by J.M.Nalluswamy Pillai, Studies in Saiva Siddhanta.
குறிப்பு: ஜூன் 1897ல் வெளிவந்த சித்தாந்த தீபிகாவின் முதல் இதழின் முதல் கட்டுரை இது. தொடர்ந்து பதினான்கு வருடங்கள் வெளிவந்த இந்த இதழின் இம்முதல் கட்டுரையை இறைவனுக்கான ஒரு மலர்க்காணிக்கையாகச் சமர்ப்பித்திருக்கிறார் ஜெ.எம்.நல்லுசாமிப்பிள்ளை. சித்தாந்த தீபிகாவில் வெளிந்த அவரின் கட்டுரைகள் Studies in Saiva Siddhanta நூலில் தொகுப்பாக உள்ளன. ஜெ.எம்.நல்லுசாமிப்பிள்ளை பற்றி விரிவாகத் தெரிந்துகொள்ள எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய அறிமுகக் கட்டுரையை வாசிக்கலாம்.