ராஜமய்யர், அ.மாதவையா, புதுமைப்பித்தன், மௌனி, கு.ப.ராஜகோபாலன், சி.சு.செல்லப்பா, க.நா.சுப்ரமண்யம், தி.ஜானகிராமன், லா.ச.ராமாமிருதம், கு.அழகிரிசாமி, சுந்தர ராமசாமி, கி.ராஜநாராயணன், கிருத்திகா, பிரமிள், ஜெயமோகன், சு.வேணுகோபால் என்ற வகையில் ஒரு புனைகதை எழுத்தாளர் குழு முன்னணியில் வைக்கப்படுவதுண்டு. இவர்களது பெரும்பாலான படைப்புகளை உயர்நிலையில் வைத்து மதிப்பிடுவார்கள்.
நகுலன், ப.சிங்காரம், ஜி.நாகராஜன், சம்பத், தஞ்சை பிரகாஷ், சாரு நிவேதிதா என்ற வரிசையையும் உண்டாக்கலாம். இவர்கள் மீறலும் ஒதுக்குதலும் மிகைப்படுத்தலும் பெற்றவர்கள்.
சங்கரராம், ந.பிச்சமூர்த்தி, ந.சிதம்பரசுப்ரமணியன், ஆர்.ஷண்முகசுந்தரம், ரகுநாதன், ஜெயகாந்தன், கரிச்சான்குஞ்சு, எம்.வி.வெங்கட்ராம், கிருஷ்ணன்நம்பி, நீல.பத்மநாபன், அம்பை, அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி, நாஞ்சில்நாடன், பூமணி, வண்ணதாசன், எஸ்.ராமகிருஷ்ணன் என்ற ஒரு நீண்ட வகையினத்தையும் தனிப்படுத்திப் பார்க்கலாம். சில படைப்புகள் வழியாக நினைக்கவும் மதிக்கவும் படுபவர்கள் இவர்கள்.
தி.ஜானகிராமன், கரிச்சான்குஞ்சு, எம்.வி.வெங்கட்ராம், சாமிநாத ஆத்ரேயன் இவர்கள் கு.ப.ரா.வின் பாரம்பரியத்தில் வந்தவர்கள். க.நா.சு, கு.அழகிரிசாமி, ரகுநாதன் இவர்கள் புதுமைப்பித்தன் வழிவருபவர்கள். சிட்டி, செல்லப்பா போன்றோர் வ.ரா. பள்ளி.
எனவே எம்.வி.வெங்கட்ராம், அவரது சில சிறுகதைகளுக்காகவும் ஒருசில நாவல்களுக்காகவும் நினைவுகூரப்படுபவர் என்றும் கு.ப.ரா.வின் வழியில் வந்தவர் என்றும், ஒருவித வகைப்படுத்தலைச் செய்து பார்க்கலாம்.
2
எம்.வி.வெங்கட்ராம் (1920-2000) தமிழ் இலக்கிய வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்த எழுத்தாளர். கும்பகோணத்து எழுத்தாளர்களில் ஒருவர். கும்பகோணத்திலேயே வாழ்ந்து, எழுதி, மறைந்தவர். பொருளாதாரத்தில் பி.ஏ. பட்டம் பெற்ற இவர், 1940-46 காலப்பகுதியில் கலாமோகினி, கிராம ஊழியன், சிவாஜி ஆகிய இலக்கியப் பத்திரிகைகளில் எழுதி வந்தவர். தம் வாழ்வையும் வருமானத்தையும் ஆகுதியாகப் படைத்து, 1948ல் தேனீ என்ற இலக்கிய இதழை நடத்தியிருக்கிறார். மிக வசதியான வாழ்க்கையை வாழ்ந்தவர், 1965-1970 காலகட்டத்தில் தனது வியாபார வாழ்க்கைச் சரிவால் பட்டுச்சரிகை வணிகத்தைக் கைவிட்டு எழுதியே பொருளீட்ட வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறார். (இந்தக் காலத்தில் எழுதியதுதான் வேள்வித்தீ நாவலும்). 16வது வயதில் இவர் எழுதிய ‘சிட்டுக்குருவி’ என்ற சிறுகதை மணிக்கொடியில் வெளியானது என்பார்கள். 1993ஆம் ஆண்டில் இவர் எழுதிய ‘காதுகள்’ என்ற நாவலுக்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்தது. இவரது சிறுகதைகள் முழுத்தொகுப்பாக எம்.வி. வெங்கட்ராம் கதைகள் என்ற பெயரில் தற்போது காலச்சுவடு பதிப்பாக அவரது நெருங்கிய நண்பரும் அபிமானியுமான ரவி சுப்ரமணியத்தால் வெளியிடப்பட்டுள்ளது. நாற்பது பதிப்புகளுக்கும் மேற்பட்டு வந்துள்ள நாட்டுக்கு உழைத்த நல்லவர் என்ற மாணவர்களுக்கான நூல் வரிசையில் 87 நூல்களை பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகத்துக்காகக் கூலிக்காக எழுதியிருக்கிறார். (இது தொடர்பாக ஜெயமோகனின் அறம் கதைத்தொகுதியில் வரும் எழுத்தாளர் இவர்தான்) மணிக்கொடி எழுத்தாளர் என்ற புகழ், அதன் கடைசிகட்டத்தில் ஒருசில மட்டும் எழுதிய க.நா.சுப்ரமண்யம், தி.ஜானகிராமன், லா.சா.ராமாமிருதம் போன்றவர்களுக்குக் கிடைக்காத பெயர், இவரது எழுத்தாள நண்பர்களுள் இவருக்கு மட்டுமே உண்டு. இந்தி, ஆங்கிலம் படித்தவர் (சௌராஷ்டிரமும்) என்பதால் மொழிபெயர்ப்புகள் செய்ய வசதி ஏற்பட்டது.
3
“என் கதைகளில் என்னையே தேடினேன். நான் கேட்டதையும் பார்த்ததையும் பேசியதையும் சுவைத்ததையும் தொட்டதையும் விட்டதையும் அறிந்ததையும் சிந்தை செய்ததையும்தான் எழுதினேன்” என்று கூறியவர் எம்.வி.வெங்கட்ராம்.
தேனீயில் மௌனியின் இரு கதைகளை வெளியிட்டபோதும், எழுத்து இதழில் ஒரு கதை வந்தபோதும், மௌனியின் கதைளுக்குத் தலைப்பும் இலக்கணப் பிழை, எழுத்துப்பிழை, சந்திப்பிழைகளைத் திருத்தியிருக்கலாம். ஆனால் மௌனியின் தனித்தன்மையை அவரால் திருத்தியமைத்திருக்க முடியாது. அதற்கான சில அடிப்படைகள் அவரிடம் போதாது. பயத்துடன்தான் அவரிடம் பழகியுள்ளார். மௌனியை எடிட் செய்தவர் என்ற அவரது தற்பெருமையையும் மௌனியைக் குறைத்து மதிப்பிடும் அளவுக்கான தகுதியையும் வெங்கட்ராமுக்கு அளிக்க முடியாது.
சிறுகதைகளை மட்டும் எழுதாமல் நாவல்களையும் எழுதிப் பெயர்பெற்றவர்களை எந்த முகாந்திரமும் இல்லாமல் இவர் நாவல்களைவிட சிறுகதைகளில்தான் சாதனை படைத்திருக்கிறார் என்று சொல்வது நம்மிடமுள்ள ஒரு வழக்கமான பாணி. தி.ஜா., ல.சா.ரா., அசோகமித்திரன், ஜெயகாந்தன், போன்றவர்களை இப்படிக் குறைத்து மதிப்பிடுவார்கள். சிறுகதைகளை மட்டுமே எழுதியவர்கள் இந்தக் கூற்றிலிருந்து நல்லவேளையாகத் தப்பித்திருக்கிறார்கள். சிறுகதைகளில் சாதனை ஏதும் புரியாத ஆர்.ஷண்முகசுந்தரம், க.நா.சு., கிருத்திகா, நகுலன் போன்றவர்களும் தப்பிப் பிழைத்தார்கள். ஒன்றிரண்டு நாவல்கள் எழுதியும் சிறுகதைகளை மட்டுமே உருப்படியாக எழுதிய கு. அழகிரிசாமி போன்றவர்களும் இதிலிருந்து தப்பி நிற்கிறார்கள். ஆனால் நாவல், சிறுகதை இரண்டையும் படைத்தும் அவைகளை மிகமிக உயர்வாகச் சொல்ல முடியாமலும் குறிப்பிடத் தகுந்தவைதாம் என்று தயங்கும் நிலை ஏற்படும் போதும், சிறுகதைகளுக்கே முன்னுரிமை கொடுத்துப் பாராட்டுவார்கள். வெங்கட்ராம் மூன்று குறிப்பிடத்தக்க நாவல்களையும் பத்துக்கும் மேற்பட்ட மிகச் சிறந்த சிறுகதைகளையும் எழுதியவர் என்பதால் இவ்விதக் கூற்றுமுறைக்கு இலக்காகலாம்.
பைத்தியகாரப் பிள்ளை, வியாசர் படைத்த (13) பெண்மணிகளில் குந்தி, திலோத்தமை, மேனகை, ஊர்வசி என்பவை நினைவில் நிற்கும் காத்திரமான சிறுகதைகள். நித்யகன்னி, வேள்வித்தீ, காதுகள் ஆகிய மூன்று நாவல்களும் வெங்கட்ராமை நினைவில் நிறுத்துபவை.
4
அரும்பு மிக அதிகப் பக்கங்கள் கொண்ட நாவல். அதற்கு அடுத்து நிறையப் பக்கங்கள் கொண்டது ஒரு பெண் போராடுகிறாள் நாவல் (தலைப்பே ஒரு மாதிரியாக இருக்கிறதா?). ஆனால் இவை கவனம் பெறத்தக்கவையாய் அமையவில்லை. பக்கக்குறைவான நாவல்களே வெங்கட்ராமின் தனித்தன்மையைக் காட்டுபவையாகின்றன. சிறுகதையாகத் தொடங்கி நாவலாக மாறிய நித்யகன்னி நாவலைத் தயங்காமல் உயர்ந்த படைப்பாக ஒப்புக்கொள்பவர்கள், வேள்வித்தீ, காதுகள் என்ற அவரது பிற இரண்டு முக்கியமான நாவல்களைப் பற்றி ஒரேயடியாக உயர்த்திச் சொல்லத் தயங்கி மழுப்புகிறார்கள்.
நித்யகன்னி அவரின் உயிர்ப்புள்ள படைப்புக் காலகட்டத்தில் உருவானது. அவரது படைப்பின் உச்சமாக நித்யகன்னியே விளங்கிவருகிறது. இன்றைய பெண்ணிய விமர்சனங்கள் இன்னும் அதன்மேல் எழவில்லை என்பதையும் இங்கு நினைவில் இருத்திக்கொள்ள வேண்டும். அதன்மீது மித்திக்கல் ஃபேண்டசி என்பதற்கான விமர்சனமும் இன்னும் செய்யப்படவில்லை. வெறும் இரசனை விமர்சனம் மட்டுமே செய்யப்பட்டுள்ளது.
கடைசிக் காலகட்டத்தில் எழுந்ததும் தன் அநுபவம் என்ற அத்திவாரத்தில் நின்றதுமான காதுகள் நாவலின் ஆன்மீகத் தளம் பற்றியும் விமர்சனங்கள் பிறக்கலாம். இருளும் ஒளியும் என்ற நூலில் இடம்பெற்ற உயிரின் யாத்திரை, இருட்டு என்ற குறுநாவல்களின் அக்கல்ட் ஆன்மீகத்திலிருந்து காதுகள் வேறுபட்டது. சிறுதெய்வங்கள் என்று தவறாக அழைக்கப்படும் நாட்டுப்புற தெய்வம் ஒன்று, தெருக்கூத்தில் வரும் எல்லாவற்றையும் விமர்சிக்கும் கட்டியங்காரன் (கோமாளி) பாத்திரத்தைப் போன்று இதில் செயல்படுகிறது. சைவத்துடன் தொடர்புடைய சாக்த தெய்வம் எதிர்நிலையில் பொருத்தப்படுகிறது. கருப்போ காளியோ இரண்டும் தாந்திரீகத்துடன் தொடர்புடையவை. கதை நடத்துபவரின் வைணவத் தெய்வம் இராமசாமியாக உதவிக்கு வருகிறது. சைவத்துக்கும் சாக்தத்துக்கும் மகனாகவும் வைணவத்துக்கு மருமகனாகவும் உறவுபெற்ற முருகன், திருவிளையாடல் புரிகிறான். விட்டோடிவிட்டானா மறைந்திருந்து அருள் பாலிக்கிறான தெரியவில்லை. ஒரு விசித்திர அத்வைத நிலை. பக்திமார்க்கமும் பக்திக்கு அளவாக கர்ம மார்க்கம் இருந்தாலும் ஞானமார்க்கம் இங்கே இல்லை. இந்திய ஆன்மீக மரபோ மேலை ஆன்மீக மரபோ தீவிரம் கொள்ளாத ஒரு பக்திச் சரணாகதி நிலை ‘காதுகள்’ நாவலில் உள்ளது.
வேள்வித்தீ நாவல் வெங்கட்ராமின் இரண்டாவது காலகட்டத்தில் எழுந்தது. அவரது சௌராஷ்டிர பிராமண இனத்தின் சரிகைப்பட்டு நெசவு வாழ்வை அடிப்படையாகக் கொண்டது. அவர் சென்னை சென்று முழுநேர எழுத்தாளராகி, பதிப்பகங்களையும் பத்திரிகைகளையும் நாடி, வருமானத்துக்காக ஏராளமாக எழுதிக் குவிக்க ஆரம்பிக்கும் நிலையில் படைக்கப்பட்டது. (அந்தச் சமயத்தில்தான் அவரது பழைய நூல்களும் எழுத்துகளும் பல பதிப்பகங்களில் மறுபிரசுரம் பெறுகின்றன. ரஜினி பாமிதத்தின் இன்றைய இந்தியா போன்ற முக்கியமான மொழிபெயர்ப்புகளும் வருகின்றன. ஆரம்பத்தில் மூல ஆசிரியரின் பெயரோடு வந்தவை போகப்போக (பதிப்பாளர் நெருக்குதலும் தனது அவசரமும் அவசியமும் காரணமாயிருக்கலாம்) அவரது பெயரிலேயே வருகின்றன. கூலிக்கு மாரடித்தாலும் தன் தரத்தை விட்டுக்கொடுக்கவில்லை என்று அவர் பின்பு சொன்னதை அவரது மொழிபெயர்ப்புகளும் தழுவல் நாவல்களும் சிறுவருக்கான வாழ்க்கை வரலாறுகளும் சரியாக நிரூபிக்கவில்லை என்றாலும், வேள்வித்தீ அந்த விட்டுக்கொடுக்காத தரத்தைப் பேணிக் காத்திருக்கிறது என்றே தெரிகிறது.
அவரது அந்த வறுமைக்காலத் தழுவல் நாவல் படைப்பாக்கங்கள் பற்றி இன்று யாரும் பொருட்படுத்துவதில்லை. அவை பற்றி யாருக்கும் இன்று தெரியாது. அவற்றை நினைவூட்டுவது அநாவசியம் என்றும் நினைக்கிறார்கள். அது சரி என்றும் தோன்றுகிறது. தமிழ் நாவல்களின் இருண்ட காலமாகவே கருதப்படும் இடைக்காலத்தில் (1940க்கு முன்) மேலைநாட்டு துப்பறியும் மர்ம நாவல்களைத் தழுவி ஏராளமாகத் தமிழில் பலர் படைத்திருக்கிறார்கள். பின்பு பெரும் வணிகப் பத்திரிகைகளின் தீனிக்காக ஏராளமான ரொமான்ஸ் வகை சமூகக் கதைகள், வெகுஜனச் சரக்குகள், இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. பெரும்பாலும் காலத்தோடு காணாமல் போய்விட்டவைதாம் இவ்வகை எழுத்துகள். கல்கியோ பின்பு சுஜாதாவோ பத்திரிகைகளுக்காகத் திறத்துடன் செய்ததை, பதிப்பகங்களின் பசிக்காகச் செய்து வெங்கட்ராம் அவைகளைத் தொலைத்தார் எனலாம். ஆனால் அவரைத் தொகுத்தவர்கள் தம் எழுத்துகளையும் நூல்களையும் வெங்கட்ராம் பத்திரமாகப் பாதுகாத்து பட்டியலிட்டு வைத்திருந்ததாகச் சொல்கிறார்கள். நான் அவை வெளிவந்த காலத்தில் பெரும்பாலானவற்றையும் படித்துக் குறித்தும் வைத்திருக்கிறேன். அந்தப் பட்டியலைக் கட்டுரையின் பின் இணைப்பில் காணலாம். அவற்றில் ஆண்டவன் வந்தான் என்ற நாவல் சுவாரசியமாக இருந்த நினைவு இன்னும் உள்ளது. பின்புதான் அது Rider Haggard-ன் She, King Solomon’s Mines நாவல்களின் தழுவலாக இருக்கலாம் என்ற தெளிவு எட்டியது.
தமிழில் பதிப்புலகில் சாதனைகளைப் படைத்த வாசகர் வட்டம் என்ற லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தியின் புத்தகச் சங்கத்தில் ஆண்டுக்குச் சுமார் ஆறு நூல்கள் என்ற திட்டமிட்ட வழிமுறையில் சிட்டி என்ற மணிக்கொடி எழுத்தாளரின் பதிப்பாசிரியத்துவத்தில் புனைகதைகள் (இந்திய, தெலுங்கு, கன்னட, மலையாள மொழிபெயர்ப்புகளும், அக்கரைத்தமிழ் என்றும் தமிழில் புதிதாகப் படைக்கப்பட்டவை என்றும்), கவிதை, பயணம், வாழ்க்கை வரலாறு, அறிவியல், மருத்துவம், விவசாயம், மானுடவியல், அரசியல், தத்துவம் என்று பல துறைகளிலும் தமிழில் இதுவரை இல்லாத விதத்தில் நேர்த்தியான அச்சில் புத்தகங்கள் வெளிவந்தன. அன்று அந்தந்தத் துறைகளில் மிகச் சிறந்தவர்கள் என்று கருதப்பட்டவர்கள் பலரையும் புதியன படைக்கத் தூண்டிக் கெடுவிதித்து, முன்தொகையும் தந்து, திட்டமிட்டபடி கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இரண்டாவது ஆண்டிலேயே வெங்கட்ராமின் வேள்வித்தீ அந்த வரிசையில் புதிய நாவலாக வெளிவந்தது. (அதுவரை தொடர்களாக எழுதிவந்த தி.ஜா.வின் புதிய நாவல் அம்மா வந்தாள் புத்தகமாக நேரடியாக வந்தது. லா.ச.ரா.வின் முதல் நாவலான புத்ர, பின்பு அபிதா நாவல்களும் அப்படித்தான் வெளிவந்தன. வேரும் விழுதும், சாயாவனம் போன்ற புதியவர்களின் நாவல்களும் பிரசுரம் பெற்றன.)
அவரது நாவலோடு வெளிவந்த ஆர்.ஷண்முகசுந்தரத்தின் மாயத்தாகம் நாவலும் குறிப்பிடத்தகுந்தது. (ஷண்முகசுந்தரமும் மணிக்கொடி எழுத்தாளர்தான். வருமானத்துக்காக நூற்றுக்கணக்கான நாவல்களை மொழிபெயர்க்கும் தம் இரண்டாவது காலகட்டக் கட்டாயத்துக்கு வந்தவர்தான். ஆனால் அவரது மொழிபெயர்ப்புகள் மூல நூலாசிரியர்களின் பெயர்களுடனேயே வந்தன. இருபதுக்கும் மேற்பட்ட நாவல்களை எழுதிய ஷண்முகசுந்தரம் தமது முதல் நாவலான நாகம்மாள் மூலமே அறியப்படுகிறார். ஆனால் க.நா.சு.வின் தமிழின் சிறந்த நாவல் பட்டியலில் இடம்பெற்றது அது. தொடர்ந்து அவரை க.நா.சு நினைவுபடுத்திக்கொண்டே இருந்தார். வெங்கட்ராமின் நித்யகன்னியை அவர் முக்கிய நாவலாகக் கருதினாலும் நாகம்மாளை புரமோட் செய்ததுபோல் செய்யவில்லை. புதுமைப்பித்தன் பள்ளியைச் சேர்ந்த அவர், அதற்கு வெளியில் இருந்த கு.ப.ரா. பள்ளியை விமர்சனத்துடன் பார்த்தார் போலும். இத்தனைக்கும் கு.ப.ரா.வை மிக உயர்த்தியும் தி.ஜா.வைத் தனது பட்டியலில் தொடர்ந்து வைத்திருந்தும் பாராட்டியவர் க.நா.சு. அவருடைய இரசனைக்கு வெங்கட்ராம் எழுத்து நிறைந்த திருப்தியைத் தரவில்லை என்றே தெரிகிறது.) மாயத்தாகமும் ஒரு தறிக்காரன் வாழ்வைச் சொல்வதுதான். (உண்மையில் தனது ‘தறிக்காரன்’ என்ற சிறுகதையையே நாவலாக்கினார் ஷண்முகசுந்தரம். அவர் கொங்குநாட்டுக் கவுண்டர்களைப் பற்றி அதிகம் எழுதியவரானாலும், நெசவுத்தொழில் செய்யும் முதலியார் இனத்தில் பிறந்தவர் என்பதால், தன்னுடைய இனவரைவியலை இந்த நாவலில் மட்டுமே (தனிவழி என்ற குறுநாவலும் உண்டு) சித்தரித்திருக்கிறார். வழக்கம்போல் நன்றாக ஆரம்பித்து சவிஸ்தாரனமாக விவரித்து திடீரென்று முடித்துவிடும் அவரது பாணி இதிலும் தெரியும். அவரது சிறந்த நாவல் நான்கைந்தில் இது வராது என்றாலும் குறிப்பிடத்தகுந்த நாவல்.
ஒவ்வொரு நாவலையும் ஒவ்வொரு விதத்தில் எழுதும் வெங்கட்ராம், தனது சௌராஷ்டிர பிராமண இனப் பட்டுசரிகைத் தொழிலை வேள்வித்தீ நாவலில்தான் கதைக்களமாகக் கொள்கிறார். நெசவையும் தறியையும் பற்றி ஷண்முகசுந்தரமும் வெங்கட்ராமும் மட்டும் எழுதவில்லை. பஞ்சுமில் தொழிலாளிகளின் வாழ்க்கைப் போராட்டங்களை முற்போக்கு ரீதியில் ரகுநாதன் தன் பஞ்சும் பசியும் நாவலில் படைத்திருக்கிறார். கோவை மில் தொழில் பற்றிய சித்திரம் ஷண்முகசுந்தரத்தின் தனிவழி என்ற சிறுநாவலிலும் வருகிறது. நெசவுத்தொழிலில் ஈடுபட்ட இன்னொரு முக்கியமான பெரும் இனம் தேவாங்கர் குலம். திருப்பூரில் அவர்களின் நெசவுத் தொழில் வளர்ச்சி சர்வதேச அளவில் பெருகியது. (எனக்கு அருகில் இருக்கும் அந்தியூர் தவிட்டுப்பாளையத்தில் தேவாங்கச் செட்டியார் இனத்துத் தறித்தொழில் நிலையை நேரில் அறியும் சந்தர்ப்பம் எனக்கிருந்தது.). திருப்பூர் எழுத்தாளரான அந்த இனத்தில் பிறந்த சுப்ரபாரதிமணியன் நெசவுத் தொழிலைப் பற்றி பல நாவல்களில் சித்தரித்திருக்கிறார். அதே ஊரில் பிறந்த எம்.கோபாலகிருஷ்ணனும் அத்தொழில் பற்றி நாவலும் சிறுகதைகளும் எழுதியிருக்கிறார். (காலச்சுவடு வெளியிட்ட வேள்வித்தீ பதிப்பில் எம்.கோபாலகிருஷ்ணன் அறிமுக முன்னுரை எழுதியிருப்பதையும் இங்கு சுட்டிக்காட்டலாம். ஆய்வறிஞர் கோவைக்கிழார், பிரபல வெகுஜன எழுத்தாளர் ராஜேஷ்குமார், ‘எழுத்து’ பத்திரிகைக் காலக் கவிஞர் சி.மணி, தத்துவ அறிஞர் சேலம் ஆர்.குப்புசாமி என்று நமக்குத் தெரிந்த எழுத்தாளர்களும் தேவாங்கர் குலத்தைச் சேர்ந்தவர்கள்தாம்).
நெசவுத் தொழில் என்ற முறையில் இணைந்து தெரியும் இந்த இனங்கள், பண்பாட்டுச் சூழலில் வேறுபட்டவைதாம். எனவே இந்த இனவரைவியல் கூறுகள் தனித்தனியாகவும் ஒட்டுமொத்த மனித உணர்வுகள் ஒன்றாகவும், படைப்பாளியின் தனித்தன்மைகளால் வேற்று அமைப்பாக்கம் பெற்றும் புலப்படலாம்.
நான் இங்கு வேள்வித்தீ நாவலின் கதைச்சுருக்கத்தைச் சொல்லப்போவதில்லை. “திருமண பந்தத்தை மீறி, ஆணும் பெண்ணும் உடலுறவு கொள்வது பாவம் என்கிறார்கள். ஆனால் இந்த மாதிரி உடலுறவு, சோகத்தைச் சுகமாக்கும் சாதனமாகச் சிலருக்கு, பெண் ஆண் இருபாலாருக்கும் உதவுகிறது என்பதை என்பதை வேள்வித்தீ என்ற என் நாவலில் சுட்டிக்காட்டினேன். பட்டுநெசவாளர்களின் வாழ்க்கையை இந்த நாவல் வருணிக்கிறது. கல்வியறிவு உள்ளவர்களுக்கு விதிக்கப்படும் ஒழுக்கக் கட்டுப்பாடு, அறியாமை வயப்பட்ட மக்களுக்குப் பொருந்தாது என்பதையும் இந்த நாவல் வலியுறுத்துகிறது” என்று கூறியுள்ளார் வெங்கட்ராம். இது சரியான கதைக்கள விளக்கமாகத் தெரியவில்லை. வாசகர் தனக்கேற்ப பல விதங்களில் இந்தக் கதையைப் புரிந்துகொள்வார்.
கு.ப.ரா.வின் ஆண்பெண் உறவுச் சித்திரங்களுக்கும் தி.ஜானகிராமனின் பாலியல் சித்தரிப்புக்கும் கரிச்சான்குஞ்சுவின் காமவியல் சித்தரிப்புக்கும் வெங்கட்ராமன் காம உறவுச் சித்தரிப்புக்கும் மிக மிக வித்தியாசங்கள் உண்டு.
வேள்வித்தீ என்று ஏன் இந்த நாவலுக்குப் பெயரிட்டார்? வேதகாலத்து வேள்வித்தீக்கும் பாரதியில் ஏறும் வேள்வித்தீக்கும் இதற்கும் தொடர்புண்டோ? வாழ்க்கை வேள்வியின் தீயா? காமத்தின் தீயா? மோகத்தின் முள் இங்கு வேள்வியின் தீ என்று மாறாட்டம் செய்யப்படுகிறதோ? எவை இந்தத் தீயில் ஆகுதியாகப் படைக்கப்படுகின்றன? அவிர்ப்பாகமாக என்ன திரண்டெழுகிறது? ஷண்முகசுந்தரம் இதே போன்ற ஒரு இனவியல் கதைக்கு மாயத்தாகம் என்ற அப்ஸ்ட்ராக்ட் ஆன ஒரு தலைப்பை வைத்திருக்கும்போது, வெங்கட்ராம் ஏன் வைதீகமான தலைப்பைத் தேர்ந்தெடுத்தார்? அந்தச் சமயத்து வாழ்நிலைகள் அல்லது பாத்திர வளர்ச்சியின் வாழ்நிலைகள் ஆசிரியர்களின் மனநிலையில் பதிந்து வெளிப்பட்டுள்ளனவோ? (இருவரின் வாழ்க்கைப் பார்வையும் படைப்பு நோக்கமும் வேறுவேறு என்பதால். வெங்கட்ராம் பக்திமார்க்க ஆன்மீகவாதி. எனவே நம்பிக்கைவாதி. அவ்வளவு வாழ்வுத் திணறலிலும் சிரிக்க முடிந்தவர். கடைசிவரை முகத்தில் அந்தப் புன்னகையை வைத்திருந்தவர். ஷண்முகசுந்தரத்திடம் ஆன்மீக விஷயம் துளியும் இல்லை. பச்சை எதார்த்தவாதி. எனவே அவநம்பிக்கைவாதியாகவும் இருந்திருக்கிறார். கடைசிக் காலத்தின் விரக்தி வாழ்க்கை அவருக்கு விதிக்கப்பட்டிருந்தது.) வேள்வித்தீ என்றும் மாயத்தாகம் என்றும் தலைப்புகளைத் தேர்ந்தெடுக்கத் தூண்டியவை எவை? வியாசர் படைத்த பெண்களின் தொன்மத்தை நிகழ்கால நடப்பில் வேள்வித்தீயில் வரும் இரு பெண்களான கௌசலை, ஹேமா மூலம் பரிசீலித்தாரா வெங்கட்ராம்?
வெங்கட்ராம் ‘வேள்வித்தீ’ கதையைச் சரியான இடத்தில் சரியாகத் தொடங்கி நிறுத்திவிட்டு, பின்னோக்கித் தாவி முன் நடந்த சம்பவங்களை முதலில் கட்டுரையாகவும் (மூன்றாவது அத்தியாயம் சரியான கட்டுரையேதான்) பிறகு வாய்மொழிக் கதையாடலாகவும் சொல்லி நூலின் முக்கால் பங்கில்தான் மீண்டும் விட்ட கதைக்கு வருகிறார். (‘காதுகள்’ நாவலிலும் இதுதான் நடக்கும். ஷண்முகசுந்தரத்தின் மாயத்தாகத்திலும் இது சற்று யாந்திரீகமாகவே நீளும்.). இந்த பிளாஷ்பேக்கை சம்பவங்களாகச் சித்தரித்துக் காட்டியிருந்தால் நன்றாயிருந்திருக்கும். என்றாலும் கதையாடல் போகப்போகச் சம்பவங்களாக மாறுகின்றன என்பது ஒரு நிறைவு. ஒரு மழையில் தொடங்கி ஒரு மழையில் முடிகிறது கதை.
மழை ஒரு குறியீடாகவே மாறுகிறது. எனவே கதை மூன்றாவது பத்தியில் தொடங்கினாலும் அதற்கு முன் மழையின் பாயிரம் அமைகிறது. மழையின் சேதத்திலும் கண்ணனின் காமம் வழிகிறது. உடல்கட்டும் உடல்வனப்பும் சொந்தத் தறியும் சொந்த வீடும் உள்ளவன். கௌசலை என்ற குடும்பப் பாங்கான மனைவி. (ஓர் இல் ராமனின் அன்னை கோசலை பெயரை ஏன் இங்கே கோபியர் கொஞ்சும் கண்ணன் மனைவிக்கு வைத்தார்?) இரண்டாவது அத்தியாயத்திலேயே தறிக்காரன் வீட்டில் ‘தறிகெட்டவளான’ ஹேமா நுழைந்துவிடுகிறாள். (ஹேமா என்றால் பொன்னிறத்தாள், அழகியவள் என்று பொருள்). ‘சாக்கடையும் நாற்றமுமா நுழைந்து’விடுகிறது? கண்ணனுக்கு இருவருமே வேறுவேறுவிதத்தில் பெண் பிசாசுகளாகத்தான் தோன்றுகிறார்கள்.
இதே போலத்தான் கதையைத் திடீரென்று முடித்துக் கடையைக் கட்டுகிறார் ஆசிரியர். கௌசலையைக் குழந்தையுடன் குளத்தில் தற்கொலை செய்துகொள்ள வைத்து ஹேமாவின் இணைவுடன் கதையைச் சுபமாக முடித்துவிடுகிறார். அவ்வளவு எளிதாகத் தற்கொலை செய்துகொண்டு தப்பிப்பவளாகக் கௌசலையின் பாத்திர வார்ப்பு உருவாக்கப்படவில்லை. இரு பெண்களுக்கான வாழ்விடையில் ஏற்படும் உறவு மோதல்களையும் கண்ணனின் தவிப்பையும் எதிர்பார்த்த வாசகருக்கு ஆசிரியர் தீனி தரவில்லை. இனிதான் கதையே ஆரம்பிக்கப்போகிறது என்று சுறுசுறுப்படையும் நேரத்தில் பொக்கென்று அணைத்துவிடுகிறார்.
இவையெல்லாம் வேள்வித்தீ நாவலை முழுமையான நாவலாகக் கருதவைக்காமல் தடுப்பவை. ஆனால் கிடைத்தவரை லாபம் என்று வாசகர் திருப்திப்பட வேண்டியதுதான்.
*
நான் சேகரித்த சில புதிய தகவல்களுக்காக இந்தப் பட்டியல்:
சிறுகதைத் தொகுதி
- குமாரி, அப்பர் புத்தக நிலையம், தெற்குராஜவீதி, தஞ்சாவூர்.
- குயிலி, பாரிமகள் நிலையம், 1964.
- வரவும் செலவும், மல்லிகை பதிப்பகம், 1964.
- மாளிகை வாசம், கலைஞன் பதிப்பகம், 1964.
- மோஹினி, குயிலன் பதிப்பகம். 1965.
- வியாசர் படைத்த பெண்மணிகள், தமிழ்ப் புத்தகாலயம், 1966.
- (அகலிகை முதலிய அழகிகள், வானதி பதிப்பகம்,1969).
- உறங்காத கண்கள், கலைஞன் பதிப்பகம், 1968.
- இனி புதிதாய், சிலிக்குயில், 1992.
- எம்.வி. வெங்கட்ராம் சிறுகதைகள், கண்மணி கிரியேட்டிவ் வேவ்ஸ், 1992.
- முத்துக்கள் பத்து, அம்ருதா பதிப்பகம், 2007.
- பனிமுடி மீது கண்ணகி, காலச்சுவடு.
நாவல்கள்
- உயிரின் யாத்திரை, 1955.
- இருட்டு, 1966.
- இருளும் ஒளியும், மங்கள நூலகம், 1975. (இருட்டு & உயிரின் யாத்திரை)
- அரும்பு, தமிழ்ப் புத்தகாலயம், 1965 & மணிவாசகர் நூலகம் 1977. (700 பக்கம்)
- நித்யகன்னி, இமயம் பதிப்பகம் (மணியம் அட்டைப்படம்) & மணிவாசகர் நூலகம்.
- ஒரு பெண் போராடுகிறாள், மணிவாசகர் நூலகம், 1978. (549 பக்கம்)
- வேள்வித்தீ, வாசகர் வட்டம், 1966.
- காதுகள். (பாலம் தொடர்), அன்னம்.
- நானும் உன்னோடு மற்றும் 6 குறுநாவல்கள்
- நஞ்சு (ஆனந்த விகடன் தொடர்கதை, 1970)
கட்டுரை நூல்கள்
- என் இலக்கிய நண்பர்கள், சௌத் விஷன் & அழிசி 2021.
- இந்திராகாந்தி, சுதேசமித்திரன், 1966.
மொழிபெயர்ப்பு, தழுவல் நூல்கள்
- எல்லோரும் நல்லவரே, யதவேந்த்ர சந்திர, 1963.
- ஒன்றே குலம் (இந்தி), குருதத், கலைவாணி, 1966.
- முதலும் முடிவும் (இந்தி), சதுரசேன சாஸ்திரி, வைரம் பதிப்பகம்.
- அணையாச்சுடர், வைரம் பதிப்பகம், 1967.
- நாடோடி, அருணோதயம், 1967.
- அக்கரைப் பச்சை, அருணோதயம், 1968.
- மணமலர், அருணோதயம், 1968.
- இரு உள்ளங்கள், அருணோதயம், 1968.
- பூக்காரி, தேவி நிலையம், 1967.
- பொழுது புலர்ந்தது, தேவி நிலையம், 1968.
- நெஞ்சம் மறக்கவில்லை, தேவி நிலையம், 1968.
- ஆலயதரிசனம், தமிழ்ப் புத்தகாலயம், 1970.
- ஆண்டவன் வந்தான், குறள் நிலையம், 1974. (324 பக்கம்)
- இன்றைய இந்தியா (‘இந்தியா டுடே’), ரஜினி பாமிதத்.
- சுல்தானா (இந்தி), எ. ரஜாக், பழனியப்பா பிரதர்ஸ்.
- சுபத்திரா, ரமேஷ் சந்திர தத், வானதி பதிப்பகம்.
- மலர்களின் திருவிழா, அலெக்சாண்டர் டூமாஸ், வானதி பதிப்பகம்.
- மாணிக்கத் தீவு, வானதி பதிப்பகம்.
- டாக்டர் நிர்மலா.
நாட்டுக்கு உழைத்த நல்லவர் வரிசை (87 நூல்கள்), பழனியப்பா பிரதர்ஸ். (34 நூல்கள் இன்றும் 25ந்து பதிப்புக்குமேல் அச்சில் உள்ளன)
நேஷனல் புக் டிரஸ்டுக்காகச் சுமார் 10 நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார்.