கந்து வட்டியும் சூப்பர் ஹீரோக்களும்!

by கிங் விஸ்வா
0 comment

கதை உருவான கதை: 2015ல் அமெரிக்காவில் இரண்டு விஷயங்கள் பெரிதாகப் பேசப்பட்டன. ஒன்று, வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு, அதைத் திரும்பக் கட்ட முடியாதவர்களிடம் இருந்து வசூலிக்கும் முறைகள். இரண்டாவது விஷயம், விக்கிலீக்ஸ். இந்த இரண்டையும் வைத்து, இளைய தலைமுறை காமிக்ஸ் படைப்பாளிகளான டோனியும் ஷாவும் ஒரு காமிக்ஸை உருவாக்க நினைத்தார்கள். அதே சமயம் சூப்பர் ஹீரோ காமிக்ஸ்களில் இருக்கும் சில விஷயங்களையும் பகடி செய்து உருவாக்கியதே இந்தக் காமிக்ஸ் தொடர். 

தலைப்பு: The Paybacks

கதாசிரியர்: டோனி கோட்ஸ் & எலியட் நஹால்

ஓவியர்: ஜெஃப் ஷா + லாரன் அஃபே

வெளியீடு: டார்க் ஹார்ஸ் காமிக்ஸ், 2016

விலை: 1, 344 ரூபாய், 192 வண்ணப் பக்கங்கள்.

மையக் கரு: நீதிக்காவலர்களாகப் போராட, கந்து வட்டிக்குப் பணம் வாங்கிய சூப்பர் ஹீரோக்கள்!

காமிக்ஸ் சூப்பர் ஹீரோவான பேட்மேனைப் பற்றி கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். அவரது வாகனம், துப்பாக்கிக் குண்டுகள் துளைக்காத அவரது உடை, அவரது விதவிதமான ஆயுதங்கள், அவரது மறைவிடம், அப்பப்பா..! இதையெல்லாம் தன்வசம் வைத்திருக்க, அவர் உலகிலேயே மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராக இருக்க வேண்டும். அதனால்தான் கதையில் அவரை மிகப்பெரிய செல்வந்தராகக் காட்டி இருப்பார்கள். 

ஆனால், உண்மையில் நீதிக்காவலனாக வேண்டும் என்று நினைப்பவர்களால் இதுபோன்ற விஷயங்களை (உடை, ஆயுதம், வாகனம்) போன்றவற்றைக் கனவில்கூட நினைத்துப் பார்க்க முடியாது. ஒருவேளை, பேட்மேன் போன்ற சூப்பர் ஹீரோக்களைப் பார்த்து, அவர்களது தீரச் செயல்களைப் பார்த்து கவரப்பட்டு தாங்களும் நீதிக் காவலர்களாக வேண்டும், சூப்பர் ஹீரோக்களாக வேண்டும் என்று நினைப்பவர்களும் உண்டு, இல்லையா? அப்படி சூப்பர் ஹீரோக்கள் ஆக வேண்டுமென்று நினைப்பவர்கள் பேட்மேனைப் போல செல்வந்தர்களாக இல்லையென்றால், என்ன செய்வார்கள்?

கரெக்ட். 

கடன் வாங்குவார்கள். இதுதான் கதையே. கந்து வட்டிக்காரர்களிடம் கடன் வாங்கி, ஒரு சூப்பர் ஹீரோவாக செயல்படுகிறார் நமது ஹீரோ. அவரொரு இரவுக் காவலன் (Night Knight). அப்படியே பேட்மேன் கதாபாத்திரத்தைப் பகடி செய்வது போலத்தான் இவர் உருவாக்கப்பட்டு இருக்கிறார். ஆர்ச்சிபால்ட் என்பது இவரது ஒரிஜினல் பெயர். மொட்டை மாடியில் அமர்ந்து, தான் செய்த சாகசங்களை நோட்புக்கில் குறித்து வைத்துக்கொண்டு இருக்கும்போது, நகர காவல் தலைவரிடமிருந்து (பேட்மேன் கதையில் வருவது போல) அவசர அழைப்பு விளக்கு எரிகிறது. ஆனால், அவர் செல்வதற்குள்ளாக, ஒட்டுமொத்த போலிஸ்காரர்களையும் கண்ணாடித் துண்டுகளால் குத்திக் கொன்றுவிடுகிறான் வில்லன் ஒருவன்.

அந்த வில்லனைத் தேடி, அவனது மறைவிடத்திற்குப் போகிறார் இரவுக் காவலர். வில்லனை நேருக்கு நேராகச் சந்தித்து மோதலுக்குத் தயாராகும்போது, அவரது செல்போனில் ஒரு அழைப்பு வருகிறது. அந்த அழைப்பை எடுத்துப்பேசிய இரவுக் காவலர், உடனடியாக வில்லனுடன் மோதுவதை விட்டுவிட்டு, அலறி அடித்துக்கொண்டு அவரது வீட்டிற்கு ஓடுகிறார். 

அங்கே, கந்து வட்டிக் கும்பல் இவருக்காகக் காத்திருக்கிறது. தனது சூப்பர் ஹீரோ அவதாரத்திற்காகக் கடன் வாங்கி, ஆயுதங்கள், உடைகளைத் தயாரித்து இருந்தார் ஆர்ச்சிபால்ட். ஆனால், மற்ற தொழில்களைப் போல சூப்பர் ஹீரோவாக இருந்தால், சம்பளமோ, தீபாவளி போனசோ கிடைப்பதில்லை அல்லவா? அதனால், வாங்கிய கடனைத் திருப்பித் தர முடியாமல், வட்டியும் கட்ட முடியாமல் இருந்தார். ஆகவே, அவரிடமிருந்து கடனைத் திரும்பப் பெற ஒரு சூப்பர் டீம் வந்திருக்கிறது.

கந்து வட்டி சூப்பர் டீம்: இந்தக் கந்து வட்டி சூப்பர் டீம்தான் இதுபோலக் கடன் வாங்கிவிட்டு, அதைத் திருப்பித் தராத சூப்பர் ஹீரோக்களிடம் இருந்து வசூல் செய்யும் குழு. இதில் நகைமுரண் என்னவென்றால், இந்தக் குழுவில் இருப்பவர்கள் அனைவருமே ஒருகாலத்தில் சூப்பர் ஹீரோக்களாக இருந்தவர்கள்தான். அதாவது, நமது ஹீரோ ஆர்ச்சிபால்டைப் போல சூப்பர் ஹீரோவாக ஆசைப்பட்டு, கடன் வாங்கிவிட்டு, திரும்பத் தரமுடியாத சூப்பர் ஹீரோக்கள் வேறு வழியில்லாமல், இப்படி கந்து வட்டி வசூலிக்கும் வசூல் ஏஜெண்ட்களாகச் செயல்பட நிர்பந்திக்கப்படுகிறார்கள். 

இப்படி ஆர்ச்சிபால்டிடமும் கடனை வசூலிக்க வர, அவரால் கடனைத் திரும்பத் தர முடியாததால், அவரும் வலுக்கட்டாயமாக இந்த வசூல் ராஜா குழுவில் சேர்க்கப்படுகிறார். பின்னர் அவரைத் தங்களது இரகசிய மறைவிடத்திற்கு அழைத்துச் செல்கிறார்கள். அங்கே அவரைப் போலவே, பல சூப்பர் ஹீரோக்கள் வசூல் ஏஜெண்ட்களாக சிறைபட்டிருப்பதைக் காண்கிறார். 

அதே சமயம், ஆன்லைனில் திடீரென்று முன்னாள் சூப்பர் ஹீரோக்கள், அவர்களது ஒரிஜினல் அடையாளங்கள், உண்மையான பெயர்கள் என்று அனைத்தும் விக்கிலீக்ஸ் போல அம்பலப்படுத்தப்படுகிறது. இந்தச் சதிவேலைக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது இரகசியமாக இருக்கிறது.

இப்போது வசூல் ஏஜெண்ட்கள் அம்பலப்படுத்தப்பட்ட சூப்பர் ஹீரோக்களைத் தேடிச் செல்ல, அவர்கள் ஒவ்வொருவராகக் கொல்லப்படுகின்றனர். ஒரு கட்டத்தில், இந்தச் சதிவேலைக்குப் பின்னால் இருப்பது யார், வசூல் ஏஜெண்ட்களை இயக்குவது யார் என்று பல விஷயங்களை முன்னெடுத்து கதை நகர்கிறது.

குறியீடுகள், உருவகங்கள், பகடிகள், ப்ளாக் ஹ்யூமர்: தொண்ணூறுகள், அதற்கு முந்தைய சூப்பர் ஹீரோ காமிக்ஸ் கதைகளைப் பகடி செய்யும்படியாகத்தான் இந்தக் கதைத் தொடர் உருவாக்கப்பட்டது. சூப்பர்மேன், ஸ்பைடர்மேன், எக்ஸ்-மென் என்று ஏறக்குறைய எல்லா சூப்பர் ஹீரோக்களையும் ஒவ்வொரு பக்கத்திலும் கிண்டல் செய்திருக்கிறார்கள். ஆனால், இந்தக் கிண்டல், உண்மைகளையும் தன்னகத்தே கொண்ட ப்ளாக் ஹ்யூமர் வகையானது. முதலில் சிரித்துவிட்டு, பின்னர் அதற்குப் பிறகு இருக்கும் சில உண்மைகளைப் புரிந்துகொண்டு, அதைப் பற்றிய சிந்தனை மேலோங்குவதைத் தவிர்க்கவே முடியாது. 

ஒரு கட்டத்தில், சூப்பர்மேன் போல இருக்கும் ஒரு குழுவிடம் வசூலிக்கச் செல்கிறார்கள் நமது வசூல் ஏஜெண்ட்கள். ஆனால், சூப்பர்மேன் போன்ற அந்த ஹீரோ, நமது குழுவை அடித்து, துவம்சம் செய்துவிடுகிறார். அப்போது வசூல் ஏஜெண்ட் குழுவைச் சேர்ந்த ஒரு பெண், “இப்போது நான் என்ன செய்கிறேன், பாருங்கள்” என்று சொல்லிவிட்டு, அவரை எதிர்கொள்கிறார். வழக்கம்போல இவரையும் அடித்து வீழ்த்துகிறார் அந்த சூப்பர் ஹீரோ. அப்போது அந்தப் பெண், இதை வீடியோவாக எடுக்கிறார். பிறகு அவர், “நான் இதை ஆன்லைனில் அப்லோட் செய்யவா? இதை சோஷியல் மீடியாவில் போட்டால் என்ன ஆகும் தெரியுமா? கடன் வசூலிக்க வந்த அபலைப் பெண்ணை, அடித்துத் துவைக்கும் சூப்பர் ஹீரோவின் அட்டூழியம்” என்று உன் இமேஜ் டேமேஜ் ஆகிவிடும் என்று பயமுறுத்த, சூப்பர் ஹீரோ அமைதியாகத் தோல்வியை ஒப்புக்கொள்கிறார். இப்படி பல காட்சிகள் இந்த கிராஃபிக் நாவலில் உள்ளன.

பே –பேக்: சூப்பர் ஹீரோக்களின் கடன்.

Donny Cotes

கதாசிரியர் டோனி கோட்ஸ்: ஓவியர் ஆவதற்காக இளங்கலை பட்டப்படிப்பு படித்துவிட்டு, மார்வல் காமிக்ஸில் இண்டர்ன்ஷிப் செய்யச் சென்றார், டோனி. அங்கிருந்த ஜாம்பவான்களுடன் பழகிய பிறகு, தனக்கான எதிர்காலம் எழுத்தில்தான் இருக்கிறது என்பதை உணர்ந்தார். 33 வயதான இந்த பூனைப்பிரியருக்கு வித்தியாசமான கதைகளைப் படைப்பதில்தான் ஆர்வம் அதிகம். 2014ல் சிறந்த கிராஃபிக் நாவல் படைப்பாளிக்கான விருதைப் பெற்றவர் இவர். 

Geoff Shaw

ஓவியர் ஜெஃப் ஷா: கதாசிரியர் டோனி கோட்ஸ்சும் இவரும் ஒன்றாக, ஒரே கல்லூரியில், ஒரே வகுப்பில் ஓவியக் கலையைப் பற்றிப் படித்தார்கள். டோனி மார்வலில் வேலைக்குச் சேர்ந்தபோது, இவர் ஓவியத்தில் பயிற்சி பெற்று முழுநேர காமிக்ஸ் ஓவியரானார். டோனியின் நான்கு காமிக்ஸ் தொடர்களுக்கு இவர்தான் ஓவியம் வரைந்துள்ளார்.