குறித்த நேரத்துக்குப் பத்து நிமிடங்கள் முன்னரே சென்னையிலிருந்து பெங்களூருக்கு வந்து சேர்ந்துவிட்டோம். பெங்களூருவிலிருந்து கோவாவுக்குச் செல்ல வேண்டிய விமானம் இரண்டு மணி நேரம் தாமதமாகிவிட்டது. என்னுடைய முதல் கோவா பயணம். இதுவும்கூட அலுவலக ரீதியான ஒன்று. கூடவே துணைக்கு மணீஷ் ராவ். நாங்கள் வேலை பார்க்கும் நிறுவனம் சென்னைக்கு அருகில் ஓரகடத்திலிருக்கிறது. சாலைகள் அமைப்பது, பாலம் கட்டுவது போன்ற பெரிய பெரிய கட்டிட வேலைகளுக்குப் பயன்படும் கனரக வாகனங்கள் இங்கே உற்பத்தி செய்யப்படுகின்றன. அவ்வாகனங்கள் தயாரிப்புக்குப் போகும் முன் அவற்றை வடிவமைப்பு செய்யும் பிரிவில் எங்கள் இருவருக்கும் வேலை. 

கோவாவைத் தலைமையகமாகக்கொண்டு செயல்படும் ஒரு கட்டிடப் பொறியியல் நிறுவனம் தங்களுடைய பிரத்தியேக உபயோகத்துக்காக இரண்டு வாகனங்களை வடிவமைக்கச் சொல்லிக் கேட்டிருக்கிறார்கள். அவர்களின் தேவையை அறிந்து வரவே இப்பயணம். 

“சார், இரண்டு மணி நேரத்துலயாவது பிளைட்ட எடுத்துடுவானா?” என்றேன்.

“போர்ட்ல ரெண்டு மணி நேர டிலேதான் போட்ருக்கான். இது கோவாலருந்து கிளம்பி இங்க வந்து ரிட்டன் போக வேண்டிய ஃபிளைட். இப்போ அங்க ஏதோ மழையாம். அதான் டிலே. கூகுள் சொல்லுடும் எல்லாத்தையும்” என்று சொல்லிவிட்டுச் சிரித்தார்.

மணீஷ் ராவுடைய பூர்விகம் இன்றைய தெலுங்கானாவின் ஹைத்ராபாத் பக்கம் ஒரு கிராமம். இரண்டு தலைமுறைக்கு முன்பாகவே அவருடைய குடும்பம் சென்னையில் குடியேறிவிட்டது. என்னைவிடக் கிட்டத்தட்ட ஆறு வயது மூத்தவர். மெக்கானிக்கல் டிப்ளமோ முடித்து உள்ளே வந்தவர். இன்ஜினியரிங் முடித்த எனக்குக் கீழே வேலை பார்க்கிறார். விஷய ஞானம்  உள்ளவர்களிடம் அலுவலகப் படிநிலைகளை அத்தனை உறுதியாக அனுசரிப்பது என் வழக்கமில்லை.

“ராவ் சார், டிபனை இங்கயே முடிச்சுடுவோமா?”

“வேணாம் சார். கோவாலயே பாத்துக்கலாம். இவன்கள் கொள்ளையடிக்கிறாங்கள். ஒரு டீ நூத்தம்பது ரூபாயாம். என்னா நீ ஒட்டகப் பால்லயா டீ போட்டுக் கொடுக்கிற?”

“இல்ல சார் அங்க போய்ச் சேர முன்னே பின்னே ஆயிடும். அந்த நேரத்துல அங்கே என்ன கிடைக்கும்னு தெரியாது.”

“அட.. போற வளியில ஒரு பிரெட் பாக்கெட்டோ இரண்டு வாளப் பளமோ கிடச்சாப் போறுமே சார்” என்றார்.

எனக்குப் பசித்தது. நல்ல வேளையாக விமானம் அதற்கு மேல் தாமதமாகவில்லை. 

*

இரவு ஒன்பது மணிக்கு வந்துசேர்ந்திருக்க வேண்டிய நாங்கள் கோவா விமான நிலையத்தை அடைந்தபோது இரவு பதினொன்றரை ஆகியிருந்தது. எங்களைக் கூட்டிப்போக வந்திருந்த டிரைவரின் மொபைலுக்கு அழைத்தேன். பாதி தூக்கத்திலிருந்தார். 

தன்னுடைய பேக்கை என்னிடம் ஒப்படைத்துவிட்டு பாத்ரூம் போய்த் திரும்பிய ராவ், “சார், இன்னாமா வச்சிருக்கான் பாத்ரூமை. கோலர் கம்பெனிக்காரன் எடுத்துப் பண்ணியிருக்கான் போல. பளபளன்னு ஷோக்கா இருக்கு. ஒருக்கா உள்ள போய்ப் பாருங்க.”

“இல்ல எனக்கு வரல.”

“ப்ச்ச்.. அட என்னா சார் நீங்க.” 

“சரி சரி, மாஸ்க்கைச் சரியாப் போடுங்க.”

கோவா மக்கள் ரொம்பவும் பண்பானவர்கள் என்று ராவ் வரும் வழியில் சொல்லிக்கொண்டிருந்தார். அதிகமும் சுற்றுலாவை நம்பியிருக்கும் மாநிலம். எனவே விருந்தோம்பலின் பொருட்டு அவர்களின் இயல்பே அப்படியாகியிருக்கலாம் என்றே நினைத்தேன். அதிதி தேவோ பவ!

வெளியே வந்தோம். வாசலிலிருந்த ஒரே ஒரு டீக்கடை தவிர வேறு கடைகள் இல்லை. டிரைவருக்கு எழுபது வயதிருக்கும். கண்ணெல்லாம் சிவந்திருந்தது. எனக்கு இந்தி அவ்வளவாகத் தெரியாது. நடுவில் ஓரிரு மாதங்கள் புனேவிலும் இந்தூரிலும் இருந்ததால் கொஞ்சம் புரிந்துகொள்வேன். கித்னா, கைசே, கீமத் கியா ஹை, ஜில்தி, தோடா கம் கரானா என்று சந்தைக்குச் சென்று திரும்புமளவுக்குத் தெரியும். மணீஷ் ராவ் ஓரளவுக்கு நன்றாகவே பேசுவார்.

கோவாவின் தலைநகரான பனாஜியில் ஓயோ ஓட்டல் ஒன்றில் ரூம் போட்டிருந்தார்கள். நாங்கள் போன நேரத்துக்கு ஒரு கடைகூடத் திறந்திருக்கவில்லை. ஒரு மாநிலத் தலைநகருக்கான தடயங்களே இல்லை. வழியில் ஏதாவது சாப்பிடக் கிடைக்குமா என டிரைவரைக் கேட்கலாம் என்றால் அவர் விழித்துக்கொண்டுதான் வண்டி ஓட்டுகிறாரா என்பதை உறுதிசெய்வதிலேயே என் பசி பாதி போய்விட்டது. கார் கிளம்பி காற்று உள்ளே வந்ததும் மணீஷ் ராவ் தூங்க ஆரம்பித்துவிட்டார். அவர் விழித்தபோது நாங்கள் ஓயோவுக்கு வந்துவிட்டோம். 

பார்ப்பதற்கு ஆறு வீடுகள் கொண்ட அப்பார்ட்மண்ட் போல இருந்தது. சுற்றிலும் வீடுகள்தான் இருந்தன. மாடிப்படிக்கு அடியிலிருந்த இடத்தை மேசை நாற்காலி போட்டு ரிசப்ஷனாக மாற்றியிருந்தார்கள். அந்தக் காரை எங்களிடம் ஒப்படைத்துவிட்டு டிரைவர் கிளம்பிவிட்டார். வேலை முடிந்து சென்னை திரும்பும்போது இங்கு வந்து எங்களை ஏற்றிக்கொண்டு விமான நிலையத்தில் இறக்கிவிட்டுவிட்டு அவரே காரை எடுத்துச் செல்வதாக ஏற்பாடு. நாங்கள் போக வேண்டிய நிறுவனத்தின் அலுவலகம் வடக்கு கோவாவிலிருந்தது. கட்டுமானம் நடைபெறும் இடம் தெற்கு கோவா. இரண்டு நாட்கள் இவ்விரு இடங்களுக்கும் மாற்றி மாற்றிப் போக வேண்டியிருக்கும். எங்கள் இருவருக்குமே கார் ஓட்டத் தெரியும் என்பதாலும் நேரம் கிடைத்தால் ஊரையும் சுற்றிப்பார்க்க ஏதுவாக இருக்கும் என்பதாலும் நாங்களும் அந்த ஏற்பாட்டுக்கு ஒத்துக்கொண்டோம்.

நாங்கள் போன நேரத்தில் அந்த மாடிப்படி ரிசப்ஷனில் யாருமில்லை. எங்களுக்கு வந்திருந்த குறுஞ்செய்தியிலிருந்த எண்களுக்குத் திரும்பத் திரும்பக் கூப்பிட்டோம். நான்கு ஐந்து அழைப்புகளுக்குப் பதிலே இல்லை. அர்த்த ராத்திரியில் பசி வேறு ஒரு பக்கம். ஆள் தெரியாத இடத்தில் கையில் பைகளோடு யாருமற்று வாசலில் நிற்பதற்கு எனக்கு எரிச்சலாக இருந்தது. 

மணீஷ் ராவ் இது எதையுமே பொருட்படுத்தாமல் அங்கேயிருந்த தெரு நாய் ஒன்றின் தலையைத் தடவிக்கொடுத்துக்கொண்டிருந்தார். 

ஏழாவது அழைப்பில் போன் எடுக்கப்பட்டது. ராவ்தான் வாங்கிப் பேசினார். அவரே மேலே எங்கேயோ ஏறிப்போய் சாவி வாங்கி வந்தார். தரைதளத்திலேயே ஓர் அறையை ஒதுக்கியிருந்தார்கள். வெளியிலிருந்து பார்த்த அளவுக்கு மோசமில்லை. சுத்தமாகவும் அறை பெரிதாகவும் இருந்தது. நல்ல குளிர் இருந்ததால் ஏ.சி.கூடத் தேவைப்படவில்லை. முன்பே வாங்கி வைத்திருந்த பிஸ்கட் பாக்கெட் ஒன்றைப் பிரித்துச் சாப்பிட்டேன். ராவ், தனக்கு இப்போது வேண்டாம் காலையில் சாப்பிட்டுக் கொள்வதாய்க் கூறி மறுத்துவிட்டார். 

*

புது இடமாக இருந்தபோதும் முந்தைய நாளின் பயணக் களைப்பில் நன்றாகத் தூங்கிவிட்டேன். காலையில் ராவ்தான் ஒரு பிளாஸ்கில் காபியோடு வந்து எழுப்பினார். அப்போதே அவர் குளித்துக் கிளம்பியிருந்தார். நானும் தயாராகி வெளியே கிளம்பும்போது ரிசப்ஷனில் அவனைப் பார்த்தேன். பார்ப்பதற்கு இளமையான ஷாரூக் கான் ஜாடையிலிருந்தான். ஆறடி உயரம். ஜிம்முக்குப் போவான் போல. உடலை மட்டும் நன்றாக மெருகேற்றி வைத்திருந்தான். சட்டையின் முதல் இரு பட்டன்கள் போடப்படவில்லை. தலை சீப்பைப் பார்த்தச் சுவடே தெரியவில்லை. சின்னப் பையன். இருபது வயது இருக்கலாம். சுருக்கி உயர்த்தப்பட்ட புருவமும் கூர்மையான கண்களும் அவன் முகத்துக்கு இயல்பாகவே அலட்சியத் தோரணையைக் கொடுத்தன. 

ராவ் என்னை ரிசப்ஷனில் சற்று நேரம் இருக்கச் சொல்லிவிட்டு முந்தைய நாள் நான் மிச்சம் வைத்திருந்த பிஸ்கட் பாக்கெட்டை எடுத்துக்கொண்டுவந்து அந்தப் பக்கமிருந்த நாய்கள் இரண்டுக்குப் போட்டுக்கொண்டிருந்தார்.

ரிசப்ஷனிலிருந்தவன் முந்தைய நாள் அழைப்புகளை எடுக்காததற்கு ஒரு பேச்சுக்காவது மன்னிப்புக் கேட்பான் என்று எதிர்பார்த்தேன். இல்லை. அவன் அதைப் பொருட்படுத்தியது போல் தெரியவில்லை. தலையைக் குனிந்தபடி மொபைலை நோண்டிக்கொண்டிருந்தான். மாஸ்க் போடவில்லை. 

“காலையில் ரொம்ப நேரமாக சுடு தண்ணீர் வரவில்லை” என்றேன் ஆங்கிலத்தில். 

மொபைலிலிருந்து கண்ணையெடுத்து என்னை நிமிர்ந்து பார்த்து, “அது சூரிய வெப்பத்தில் செயல்படுகிறது. நேற்று மழை என்பதால் இன்று சரியாக வந்திருக்காது. நாளை சரியாகிவிடும்.” என்று அட்சர சுத்தமான ஆங்கிலத்தில் பதில் சொல்லிவிட்டு மறுபடியும் மொபைலைப் பார்க்க ஆரம்பித்தான். 

எனக்கு எரிச்சலாக வந்தது. “அது பரவாயில்லை, தயவுசெய்து மாஸ்க்கைப் போடுங்கள்” என்றேன். 

ஒரு மாதிரியாகச் சிரித்துக்கொண்டே டேபிளுக்குக் கீழே குனிந்து தேட ஆரம்பித்தான். போக வேண்டிய இடங்களை கூகுள் மேப்பில் ‘பின்’ செய்துவிட்டு நானே வண்டியை எடுத்தேன். காரைக் கிளப்பி, ராவை சீட் பெல்ட் போடச் சொல்லிவிட்டு ரிசப்ஷனை எட்டிப் பார்த்தேன். அவன் மாஸ்க் போட்டிருக்கவில்லை.

*

கார் நன்றாகப் பராமரிக்கப்பட்டிருந்தது. நாங்கள் தங்கியிருந்த ஓட்டல் சாலையிலிருந்து ரொம்பவும் உள்ளே தள்ளி ஒரு சாதாரணத் தெருவிலிருந்ததுபோல் தெரிந்தது. அத்தெருவின் இரு பக்கமும் தோட்டம் வைத்த பெரிய பெரிய வீடுகள் இருந்தன. சென்னையின் புறநகர்ப் பகுதியின் உள்ளேகூட சாலைகள் இதைவிட விரிவாகவும் நன்றாகவுமிருக்கும். அதுவும் குறிப்பாக ஓட்டலிலிருந்து வெளியே திரும்பும் இடம் மிகவும் குறுகலாக ஒரு வாகனம் மட்டுமே ஒரு நேரத்தில் செல்லும்படி இருந்தது. வேறு பாதைகள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. ஹார்ன் அடிக்கவும் கூச வைக்கும் அமைதி. 

அந்தச் சாலையைத் தாண்டிய சிறிது தூரத்தில் பிரதான சாலை வந்துவிட்டது. அந்த நகரத்தின் அமைப்பே வித்தியாசமாக இருந்தது.

“இங்க பக்கத்திலே ஒரு மலையாளக் கடை உண்டாம். அங்கே சாப்பிட நன்றாக இருக்குமாம். ராகுல் சோட்டு சொன்னான்” என்றார் ராவ்.

“யார் ராகுல்?”

“அதான் சார். அந்த ரிசப்ஷன்ல இருந்தானே அவன்தாம்.”

“ஓ, அவனா!”

“ஆமாமா, அவன் ரொம்பப் பாவம் சார். இப்போ இங்க ரிசப்ஷன்ல இருக்கான்ல அந்த இடமே அவன்துதான் ஒரு காலத்திலே. இப்போ அவனோட பெரியப்பா பையன் ஒருத்தன் வச்சிர்க்கான். இவன் அங்கயே தங்கி வேலை பாக்கரான். சின்னப் பிள்ளைல கொஞ்சம் வசதியா இருந்திர்க்காங்க. இவங்க அப்பாவுக்கு ஏதோ தொழில் நஷ்டமாகி தன் அண்ணன்கிட்டயே கடன் வாங்கிர்க்கார். அவர் அண்ணன் ஏதோ லோக்கல் கட்சியில இருக்கார் போல. கடனைத் திரும்பத் தர முடியல. அப்பாவும் இறந்துட்டார். சொத்து கை மாறிச்சு. அப்போக்கூட இதை நல்ல விலைக்கு கேட்டிருக்காங்க மத்தவங்கலாம். இவங்க அப்பா தன் அண்ணங்கிட்ட கொட்த்துட்டார். ஓவர் நைட்லே ஓனர்லருந்து ரிசப்ஷனிஸ்ட் ஆயிட்டான். இவனோட பெரியப்பா குடும்பம் மட்டும் விவரமா இங்கயிருந்து இடம் மாறி போயிடுச்சு.” 

“ஏனாம்?” 

“எல்லா இடத்துலயும் இருக்கிறதுதான் சார். சுத்தி இருக்கிறதெல்லாம் வேற ஆளுங்க.”

அவர் ஏன் இதையெல்லாம் தெரிந்து வைத்திருக்கிறார்? எப்போது இவ்வளவும் அவனிடம் பேசினார்? என்னுடைய கவலையெல்லாம் இவர்கள் இருவருமே மாஸ்க் போட்டிருந்திருக்க மாட்டார்கள் என்பதில்தான் இருந்தது.

“அப்பப்போ அந்தப் பெரியப்பா பையன் மட்டும் வந்து பார்த்துப்பானாம். மத்தபடி இவந்தான் மொத்தமும் கவனிச்சிக்கிறான். இந்த இடம் இவங்ககிட்ட இருக்கிறது சுத்தியிருக்கிற அந்தப் பக்கத்துப் பெர்ய வீட்டு ஆட்களுக்கு பிடிக்கலே. அதுவும் இவங்க இந்த ஓயோ பில்டிங் கட்ட ஆரம்பிச்சதும் இன்னிம் அதிகமா தொல்லை பண்ணிருக்கான்க சார். டெய்லி இவங்க பில்டிங் வேலை நடக்கும்போது செருப்பா கொண்டுவந்து போடுவாங்களாம். ஸ்லிப்பர்ஸ் சார்! அதுவும் அசிங்கம் தொட்ட செருப்பு. கட்டிட வேலைக்கு வந்தவன்கூட அதை எடுத்துப் போட மாட்டேன் சொல்லிருக்கான் சார். அப்போ யோசிச்சுக்கோங்க. அதனாலதான் இப்பவும் வேற ஆளை நம்பாம இவனை வச்சே அண்ணங்காரன் பார்த்திட்டிருக்கான்.”

நான் அவரைத் திரும்பிப் பார்த்து, “ஓ கஷ்டம்தான்” என்றேன்.

என் முகபாவம் புரிந்திருக்க வேண்டும். அவரே தொடர்ந்தார், “காலையில அப்படியே பேசிட்டு அவன் கூடத்தான் டீ குடிக்கப் போனேன். அப்போதான் இதெல்லாம் சொல்ட்டு இருந்தான். நல்ல பையன்தான் சார்” என்றார்.

ராவ் அப்படித்தான். அவரால் எளிதில் எல்லோருடனும் பழகிவிட முடியும். ஆயிரக்கணக்கான ஆட்கள் வேலை பார்க்கும் எங்கள் நிறுவனத்தில் ராவைத் தெரியாதவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அதுவும் அவர் பேசுவதைப் பார்த்தால் பல வருடப் பழக்கம் போலிருக்கும். கேட்டால் காலையில்தான் அறிமுகமாயிருப்பார்கள். 

கோவா முழுவதும் ஆங்காங்கே கட்டிடப் பணிகள் நடைபெற்ற வண்ணமிருந்தன. பனாஜியையும் மர்கோவாவையும் இணைத்து விரைவுவழிச் சாலை அமைத்துக்கொண்டிருந்தார்கள். நாங்கள் பார்க்க வேண்டிய நிறுவனம் அதில் முக்கியமான ஓர் ஒப்பந்தத்தைக் கைப்பற்றியிருந்தது. வழியெங்கும் குறுகலான பாதைகள். பல இடங்களில் குறுக்கே கம்பு கட்டி மறித்துப் போட்டு மாற்று வழிக்கான தட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. 

நான் மனதில் நினைத்திருந்த கோவாவுக்கும் கண்ணில் கண்டதுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருந்தன. நான் ஒரு நகரமயமான கலகலப்பான சுற்றுலாத்தலத்தைக் கற்பனை செய்திருந்தேன். ஆனால், இதுவோ ஏற்றமும் இறக்கமும் வளைவுகளும் கொண்ட பாதைகள், வழியெங்கும் செறிந்திருந்த செடி கொடி மரங்கள், முந்தைய நாள் மழையால் ஈரம் தாங்கிய சாலைகள், பசுமை போர்த்திய வெளிகள் என்று அதிகமும் ஒரு கேரள நகரத்தையே பிரதிபலித்தது. 

உண்மையில் நாங்கள் தங்கியிருந்த ஓயோ ஓட்டல்கூட நகர மையத்துக்கு வெகு பக்கத்தில்தான் இருந்தது. காரில் சென்றால் பத்தே நிமிடங்களில் நகர மையத்துக்கு வந்துவிடலாம்.

இதைப் பற்றி ராவிடம் கேட்டேன். அவர் சிரித்துக்கொண்டே, “எல்லாத்துக்கும் எப்பவும் குறைஞ்ச பட்சம் இரண்டு லேயர் இருக்கு சார். ஐ மீன் இரண்டு ஃபேஸஸ். ஒன்னு பழைய ஆட்டோகேட், இன்னொன்னு புரொ-ஈன்னு வச்சுக்கோங்களேன். வெளியே தெரியறது ஒன்னு. உள்ளே உள்ளவங்களுக்கு மட்டுமே தெரிஞ்ச மத்தொன்னு. அதைப் பாக்கணும்ன்னா இரண்டு கண்ணு வேணும். கண்ணுன்னா கண்ணு இல்லே. அதான் எல்லாத்துக்கும் இரண்டு இருக்கே. ஆங், இரண்டு பார்வே வேணும். அப்போ கொஞ்சம் தெரியும். இங்கயே இன்னும் கொஞ்ச நாள் இருந்துட்டு பார்த்தா இன்னும் வேறலாம்கூடத் தெரியலாம்” என்று சொல்லிவிட்டு வெளியே பார்த்தபடி எதையோ யோசித்தார்.

சற்று இடைவெளிவிட்டு விட்ட இடத்திலிருந்து அவரே தொடர்ந்தார், “ஆனா நல்லா உத்துப் பாக்கணும். அப்படிப் பாக்கத் தெரியணும். கொஞ்சம் மெனக்கெடணும். இது இந்த ஒரு சிட்டிக்குன்னு இல்ல. வில்லேஜ், சிட்டி, கண்ட்ரின்னு எல்லா இடத்துக்கும் பொருந்தும். இடம்ன்னா இடம் மட்டுமில்லயே. மனுஷாலாம் சேர்ந்துதானே ஒரு இடம்? இடம் தெரிஞ்சாதானே மனுஷன் தெரியும். சமயங்கள்ல வைஸ் வெர்ஸா” என்றார்.

முதலில் சிக்னலைச் சரியாக கவனிக்கவில்லை. பின்பு சுதாரித்துச் சட்டென்று பிரேக் அழுத்தி நிறுத்தினேன். பேச்சு மாறிவிட்டது. 

அன்றும் மறுநாளும் வந்த வேலையே எங்களுக்குச் சரியாக இருந்தது. வேறெங்கும் போய் வர முடியவில்லை. மேப்பில் காட்டிய தூரத்தைப் பார்க்கும்போதெல்லாம் பார்க்க வேண்டிய இடங்கள் எல்லாம் சில கிலோமீட்டர்களுக்குள் இருப்பதுபோல் காட்டியதால் எப்படியும் முதல் ஒரு நாளில் வேலை முடிந்துவிட்டால் அவற்றில் சில இடங்களையாவது சுற்றிப் பார்த்துவிட்டு வரலாம் என்றே நினைத்திருந்தேன். மாறாக வேலை முழுதாக இரண்டு நாட்களை எடுத்துக்கொண்டது. வெளியே எங்கும் செல்ல இயலவில்லை. தொடர்ச்சியான அலைச்சலால் இரவு வந்து படுக்க மட்டுமே நேரமிருந்தது. 

மூன்றாவது நாள் மதியம் கோவாவிலிருந்து நேரடியாகச் சென்னைக்கு விமானம் புக் செய்யப்பட்டிருந்தது. ஓரளவுக்குக் கோவாவின் சாலைகளும் நெரிசலும் பரிச்சயமாகியிருந்ததால் காலையில் சற்று சீக்கிரம் கிளம்புவதே சரியாக இருக்கும் என்று முடிவுசெய்திருந்தோம். இவ்வளவு தூரம் வந்து அரபிக்கடலில் கால் நனைக்கக்கூட நேரமில்லாமல் கிளம்பிச் செல்லத் தயாராகிக்கொண்டிருந்தோம்.

ராவ் எழுந்து குளித்துக்கொண்டிருந்தார். நான் குளியலறைக்கு வெளியேயிருந்த கண்ணாடியில் முகச் சவரம் செய்துகொண்டிருந்தேன். திடீரென்று கதவுக்கு வெளியே யாரோ கத்துவதுபோல் சத்தம் கேட்டது. சற்று நேரத்தில் அது சண்டையென்று புரிந்தது. இரண்டு ஆண்கள் கத்துவதும் கூடவே பெண்ணொருத்தியின் கீச்சுக் குரலும் கேட்டது. ஏதாவது அசம்பாவிதமாகிவிட்டதோ என்று மனம் படபடத்தது. அப்படியே முகத்தைக் கழுவிவிட்டு வெளியே வந்து பார்த்தேன்.

ரிசப்ஷனிஸ்ட்டிடம்தான் நாற்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒருத்தனும் அவர் மனைவி போலிருந்த ஒருத்தியும் கத்திக் கத்தி சண்டை போட்டுக்கொண்டிருந்தனர். அந்த ஆள் கூலிங் கிளாஸ் போட்டு வெடவெடவென்று இருந்தான். அவள் நல்ல தாட்டியமாக இருந்தாள். அவர்கள் பேசிய வேகத்தில் அது இந்தியா கொங்கணியா என்று முதலில் எனக்குச் சரியாக விளங்கவில்லை. அவ்வப்போது காடி, மார்க் போன்ற வார்த்தைகள் வந்து விழுந்தன. முதலில் இருவரும் இங்கே தங்கியிருந்தவர்கள், அறையில் ஏதோ பிரச்சினையாகிவிட்டது என்றுதான் நினைத்தேன். ஆனால் வாசலில் ஒரு சுவிப்ஃட் அணைக்காமல் நிறுத்தப்பட்டிருந்தது. அப்போதுதான் அவர்கள் இங்கே தங்கியிருக்கவில்லை. இந்தப் பகுதி ஆட்கள் என்பது புரிந்தது. அந்த ஆள்கூட நான் பார்க்கும்போது சத்தம் போடாமல்தான் இருந்தான். அந்தப் பெண்தான் எகிறி எகிறி கீச்சுக்குரலில் திட்டிக்கொண்டிருந்தாள். காட்டுக் கூச்சல். மற்ற அறைகளில் தங்கியிருந்தவர்களும் வெளியே வந்து எட்டிப் பார்த்தனர். யாரும் தடுக்கவோ சமாதானப்படுத்தவோ முன்வரவில்லை. அந்தப் பெண்ணுடைய ஆக்ரோஷம் அத்தனை கடுமையாக இருந்தது.

ரிசப்ஷனிஸ்ட் பொறுக்காமல் அவன் ‘பார்ட்டி பார்ட்டி’ என்று ஏதோ சொன்னான். அதுவரை சும்மா இருந்த அந்த ஆள் ரிசப்ஷனிஸ்ட்டுடைய சட்டையைக் கொத்தாகப் பிடித்து அவனைத் தன் பக்கமாக இழுத்து பொளீர் பொளீரென்று இரண்டு மூன்று அடிகள் அடித்துவிட்டான். நல்ல அடி. மொத்த இடமும் ஒரு நிமிடம் அமைதியில் உறைந்துவிட்டது. அடித்துவிட்டு காரை எடுத்துக் கிளம்ப முற்பட்டவன் வாசலில் எதையோ காட்டி, “தும் ஜைஸா குத்தா ளோக் கோ அந்தர் சோடானா, ஒஹி கலத் ஹை” என்று கத்தியபடி மறுபடியும் உள்ள வந்து அவனுடைய செருப்பை எடுத்து ரிசப்ஷன் மேசைமேல் எறிந்தான். போகும்போது அதே வார்த்தைகளைத் திரும்பத் திரும்ப வாசல் வரை சத்தமாகச் சொல்லித் திட்டிக்கொண்டே போனான்.

ரிசப்ஷனிஸ்ட் எதுவும் பேசாமல் தலையைக் குனிந்தபடி அங்கேயே உட்கார்ந்தான். அங்கே வேலைபார்க்கும் வட கிழக்கிந்தியப் பெண் அவன் பக்கத்தில் வந்து அவனிடம் ஏதோ கிசுகிசுத்தாள். வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தவர்கள் ஒவ்வொருவரும் அவரவர் அறைக்குள் அடைந்தனர். நானும் எங்கள் அறைக்குள் நுழையவும் ராவ் குளித்துவிட்டு வெளியே வரவும் சரியாக இருந்தது. அவரிடம் நடந்த சம்பவத்தை விவரித்தேன். அவர் வேகமாக உடைமாற்றிவிட்டு வெளியேறினார். 

குளிக்கும்போது மனதுக்குள் இதுவே ஓடிக்கொண்டிருந்தது. இவன் ஆள்தான் அப்படி வளர்ந்திருக்கிறான். அந்த ஆள் அடித்தபோது பதிலுக்கு அடிக்க வேண்டாம், தடுக்கக்கூடவா தெரியாது? அவர்களுடைய பையன் வயதிருக்கும் இவனுக்கு. கொஞ்சம் இரக்கமோ நாகரிகமோ இல்லாமல் ஏன் இப்படி நடந்துகொண்டார்கள்? அதிலும் அந்தப் பெண்! 

நான் குளித்து முடித்து வெளியே வரும்போது ராவ் படுக்கையில் உட்கார்ந்திருந்தார்.

“என்னாச்சாம்?” என்றேன்.

“இங்க கார் ஓட்டல் வெளியே தெருவிலே நின்னுச்சாம். அவங்க கார் உள்ள வருதுக்கு இடம் கிடைக்கலே. அதுக்கத்தான் சண்ட.”

“என்ன சுத்த முட்டாள்தனமா இருக்கு. இதுக்குப் போயி ஒருத்தன் இவ்ளோ கத்துவானா? சண்டை போடுவானா? அடிக்கவேற ஆரம்பிச்சுட்டான். பாவம்! வழியிலே வண்டியிருக்குன்னு சொன்னா எடுத்து வச்சுடப் போறான். சரியான பைத்தியக்கார குடும்பமா இருப்பானுங்க போல. கோவாக்காரன்லாம் ஜெண்டில்மேன்னு சர்டிஃபிக்கேட் கொடுத்தீங்க!”

அவர் எதுவும் பேசாமல் ஜன்னலை வெறித்தபடி உட்கார்ந்திருந்தார்.

“ஆனா, இந்தத் தெருவே குறுகல்தான். நானே அன்னைக்கு வண்டிய வளைக்க படாத பாடு பட்டேன். உள்ள வரவும் வெளியே போகவும் வேற வழியுமில்ல. சொல்லப் போனா ஊரே குறுகல்தான். இவனுக்கும் கொஞ்சமாவது அறிவு வேண்டாமா? தெரு குறுகல்ன்னு தெரியாதா? அப்போ வண்டிய பார்த்து ஓரமா நிப்பாட்டியிருக்கணும். அறிவு கெட்டவன். சரியான திமிர் பிடிச்சவன்” என்றேன்.

அவர் மெதுவாக என்னைப் பார்த்து, “வெளியே நின்னிட்டு இருந்தது நம்ம கார்” என்றார்.

*

எங்கள் பொருட்கள் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு அறையைப் பூட்டிவிட்டு வெளியே வந்தோம். அழைத்துப் போக அதே டிரைவர் வந்திருந்தார். ரிசப்ஷனில் ராகுல்தான் உட்கார்ந்திருந்தான். தலையைக் குனிந்தவாறு மொபைல் பார்த்துக்கொண்டிருந்தான். 

ராவ் சாவியைக் கொடுத்துவிட்டு முன் பணத்தைப் பேசி வாங்கிக்கொண்டிருந்தார். நான் வண்டிச் சாவியை டிரைவரிடம் ஒப்படைத்தேன். இடையில், ராவ் வண்டியை எடுத்து அந்தத் தெருவிலிருந்து வெளிப்பக்கம் கொண்டுவந்து ஓரமாக இடம்விட்டு நிறுத்தியிருந்தார். 

எல்லாவற்றையும் முடித்துவிட்டு ராவ் காருக்குள் வந்தார். நான் பின் சீட்டிலிருந்து ராகுலைப் பார்த்தேன். தலை குனிந்தபடியேதான் அமர்ந்திருந்தான். சுற்றி யாருமே இல்லை. ஆனாலும் மாஸ்க் போட்டிருந்தான். அந்தச் சம்பவத்துக்குப் பிறகு அவன் தன் மாஸ்கைக் கழற்றவேயில்லை.

பிரதான சாலையை அடையும் வரை யாரும் பேசிக்கொள்ளவில்லை. ராவ் வெளியே சாலையை வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்தார்.

ராவிடம் கேட்பதற்கு எனக்கு நிறைய கேள்விகள் இருந்தன. “ராவ், அவனுக்கு ஏதாவது காசு கைல கொடுத்தீங்களா?” என்றேன்.

“இல்லை.”

“ஏன், எதாவது கொஞ்சம் செலவுக்குக் கொடுத்துட்டு வந்திருக்கலாமே.”

என் பக்கமாகத் திரும்பி, “கொட்த்தாலும் அவன் வாங்க மாட்டான் சார்” என்று சொல்லிவிட்டுத் திரும்பவும் மேடு பள்ளமாகத் தோண்டிப் போடப்பட்டிருந்த சாலையைப் பார்த்தார். ஆனால், அவர் சாலையை மட்டும்தான் பார்த்தாரா என்று எனக்குச் சொல்லத் தெரியவில்லை. 

2 comments

SANKAR T A B January 31, 2022 - 12:18 pm

அலுவல் ரீதியான பயணங்களையும், அதன் அனுபவங்களையும் மிக நேர்த்தியாக பதிவு செய்த கதை. ரிசப்சனிஸ்டிடம் முதல் முறை மாஸ்க் அணிய சொன்னதற்கும் இரண்டாம் முறை சொன்னதற்கும் இடையில் எவ்வளவு வித்தியாசம்.. நல்ல நடை

P.Meganathan April 7, 2022 - 4:06 pm

கதையைப் படித்து முடித்த பின்னும் ராகுல் பையன் நீண்ட நேரமாக நினைவில் நின்றிருந்தான். சில வார்த்தைகளைக் கொண்டே அவனது சித்திரத்தைத் தீட்டி மனதில் பதியவைத்திருக்கிறார். அவன் சார்ந்த சம்பவங்கள் அழியா வண்ணங்களாக நிற்கின்றன.

Comments are closed.