சோர்பா என்ற கிரேக்கன் – நீகாஸ் கசந்த்சாகீஸ்

2 comments

நாங்கள் குடிலுக்கு வந்து சேர்ந்ததும் சேராததுமாக மஞ்சத்தில் விழுந்தோம். சோர்பா தன் உள்ளங்கைகளைத் திருப்தியுடன் தேய்த்தார்.

’இன்று நல்ல நாளாக அமைந்தது தலைவா. நான் “நல்லது” என்று எதைக் குறிப்பிடுகிறேன் என்று நீங்கள் கேட்க விரும்புவீர்கள். அப்படித்தானே? நான் முழுமையான நாள் என்ற பொருளிலேயே அப்படிக் குறிப்பிடுகிறேன். கொஞ்சம் சிந்தியுங்கள். இன்று காலை பல மைல்கள் தொலைவில் இருக்கும் மடாலயத்தில் மதகுருவிடம் வியாபாரத்தைச் சிறப்பாகச் செய்து முடித்தோம். அவர் நிச்சயம் நம்மைச் சபித்திருப்பார்! அதன்பிறகு கீழிறங்கி நம் குடிசைக்கு வந்து ஹார்டென்ஸ் கிழவியைப் பார்த்த பிறகு எனக்கு மணநிச்சயம் நடந்தது. இதோ பாருங்கள் மோதிரத்தை! ஆடகப் பொன். ஆங்கிலேயத் தளபதி அவளுக்கு அளித்த, சென்ற நூற்றாண்டின் இறுதியில் செய்யப்பட்ட இரண்டு பதக்கங்களைத் தனது ஈமச்சடங்கிற்கு வைத்திருப்பதாக அவள் என்னிடம் சொன்னதுண்டு. இப்போது பாருங்கள் – அவளிடம்  காலன் கனிவாக நடந்துகொள்ளட்டும் – அதை உருக்கி நிச்சயதார்த்த மோதிரமாக மாற்றப் பொற்கொல்லனிடம் சென்றிருக்கிறாள். மானுடம் எத்தகைய மர்மம்!’

‘உறங்குங்கள் சோர்பா’ என்றேன். ‘அமைதி காத்திருங்கள். ஒரு நாளுக்கு இதுவே போதும். நாளை நமது கம்பிவடத்திற்காக முதல் மரத்தூணை நட்ட வேண்டிய பெரிய நிகழ்ச்சி இருக்கிறது. தந்தை ஸ்டிபனோஸை வரவழைத்திருக்கிறேன்.’

‘நீங்கள் நல்ல வேலை செய்தீர்கள் தலைவா. நிச்சயம் அது மோசமான யோசனை அல்ல. அந்தப் பாதிரியார் வரட்டும். ஆட்டுத்தாடிக் கிழவர்! அவரைப் போலவே கிராமத்துப் பெரியவர்களும் வரட்டும். எல்லோருக்கும் சிறு மெழுகுவத்திகளைத் தந்து ஒளியேற்றச் சொல்வோம். அதுதான் நம் பணிக்கு நல்ல தோற்றத்தை ஏற்படுத்துவதற்கான வழிமுறை. அது தொழிலுக்கு நிச்சயம் நன்மை பயக்கும். நாளை நான் என்ன செய்கிறேன் என்பதை எல்லாம் கவனித்து பெரிதுபடுத்த வேண்டாம். எனக்கென்று தனித்தனியாகக் கடவுளும் சாத்தானும் உண்டு. ஆனால் பிறருக்கோ அப்படியில்லையே.’

அவர் சிரிக்கத் தொடங்கினார். அவரால் தூங்க முடியவில்லை. அவரது மூளை கொந்தளிப்பில் இருந்தது. 

சற்று நேரத்திற்குப் பிறகு ‘ஓ தாத்தா, உங்கள் எலும்புகளின் மீது கடவுளின் ஆசி பொழியட்டும்!’ என்று சொன்னார். ‘என்னைப் போலவே என் தாத்தாவும் ஒரு குறும்புக்காரர். ஆனால் அந்தக் கிழட்டு கள்ளன் புனிதக் கல்லறைக்குப் புனிதப்பயணம் சென்று வந்து ஹாஜியாகிவிட்டார். எதற்குச் சென்றார் என்பது கடவுளுக்கே வெளிச்சம்! அவர் கிராமத்திற்கு மீளத் திரும்பியபோது தன் வாழ்நாளில் உருப்படியான காரியம் எதையுமே செய்யாத அவருடைய கூட்டாளியான ஒரு ஆட்டுத்திருடன், அவரிடம் வந்து “நண்பா, எனக்காகப் புனிதக் கல்லறையில் இருந்து புனிதச் சிலுவையின் துண்டு ஒன்றை எடுத்து வந்தாயா இல்லையா?” என்று கேட்டான். “கொண்டு வந்தாயா என்று கேட்கிறாயே, என்னைப் பற்றி என்ன நினைத்தாய்?” என்று கபடமாக என் தாத்தா பதிலளித்தார். “உன்னை மறப்பேன் என்று நினைத்தாயோ? இன்றிரவு சாமியாரை அழைத்துக்கொண்டு என் இல்லத்திற்கு வா, அதை உன்னிடம் தருகிறேன். கூடவே வறுத்த இளம் பன்றிக்கறியையும் கொஞ்சம் மதுவையும் எடுத்து வா. அது நமக்கு நல்லூழ் தரும்!”

’அன்று மாலை எனது தாத்தா வீட்டிற்குச் சென்று தனது செல்லரித்தக் கதவின் இடுக்கிலிருந்து நெல்மணியை விட சற்றே பெரிய ஒரு மரத்துண்டினை வெட்டி எடுத்தார். ஒரு தாயத்துக்குள் வைத்து உறையிட்டு அதில் ஓரிரு துளி எண்ணெய் விட்டுக் காத்திருந்தார். சற்று நேரம் கழித்து அவரது நண்பன் சாமியாருடன் அங்கு வந்து சேர்ந்தான். மறக்காமல் இளம் பன்றிக்கறியையும் ஒயினையும் எடுத்து வந்திருந்தான். சாமியார் தனது சிலுவையை நீட்டி அதை மந்திரித்தார். இந்த விலைமதிப்பற்ற மரத்துண்டைக் கையளிப்பதற்கான விரிவான சடங்குகளைத் தாத்தா செய்தார். அதன் பிறகு மூவரும் சேர்ந்து இளம்பன்றியைத் தின்றனர். சொன்னால் நம்பமாட்டீர்கள் தலைவா, அந்தச் சிறு மரத்துண்டின் முன் தலைதாழ்த்திப் பணிந்து வணங்கி அதை எடுத்துத் தன் கழுத்தைச் சுற்றிக் கட்டிக்கொண்டான் அந்த ஆட்டுத்திருடன். அன்று முதல் அவன் முற்றிலும் வேறொருவனாக மாறிப்போனான். மலைகள் ஏறி ஆர்மடோல்களுடனும் கிலெப்டுகளுடனும் இராணுவத்தில் சேர்ந்து துருக்கிய கிராமங்களைக் கொளுத்தினான். தோட்டாமழை பொழியும் களங்களில் கூட அச்சமின்றி அநாயசமாக ஓடினான். அவன் ஏன் அஞ்ச வேண்டும்? புனிதக் கல்லறையில் இருந்த புனிதசிலுவையின் ஒரு பகுதி அவன் கழுத்தில் பாதுகாப்பாக உள்ளதே. அவனை ஒரு தோட்டாவும் துளைக்க முடியாது.’

சோர்பா குலுங்கிச் சிரித்தார்.

‘மனமே எல்லாம்’ என்றார் சோர்பா. ‘உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா? ஆமெனில் பழைய கதவின் இடுக்கில் இருந்து வெட்டிய மரத்துண்டு ஆற்றல்மிக்கப் புனிதச் சின்னமாகி விடும். உங்களுக்கு நம்பிக்கை இல்லையா? புனிதச் சிலுவையே கூட வெறுமையான நசிந்த கட்டையாகிவிடும்.’

அதீதத் தன்னம்பிக்கையுடனும் துணிவுடனும் வேலை செய்யும் இந்த மனிதனின் மூளையைக் கண்டு வியந்தேன். அதை எங்கு தீண்டினாலும் தீப்பிழம்புதான்.

‘சோர்பா நீங்கள் எப்போதேனும் போருக்குச் சென்றதுண்டா?’

’எனக்கென்ன தெரியும்?’ என்று புருவத்தை உயர்த்தினார். ‘எனக்கொன்றும் நினைவில்லை. என்ன.. போரா?’

‘எப்போதேனும் உங்கள் நாட்டுக்காகச் சண்டையிட்டிருக்கிறீர்களா என்று கேட்டேன்.’

‘வேறெதையாவது பற்றிப் பேசலாமா? அந்த மடத்தனத்தையெல்லாம் மறந்து பல காலம் ஆயிற்று.’

‘அதை மடத்தனம் என்றா சொல்வீர்கள்? சோர்பா உங்களுக்குத் தாய்நாட்டைப் பற்றி இளக்காரமாகப் பேசக் கூசவில்லையா?’

சோர்பா தன் தலையை உயர்த்தி என்னைப் பார்த்தார். நான் மஞ்சத்தில் படுத்திருந்தேன். என் தலைக்கு மேல் எரிந்த எண்ணெய் விளக்கு என் முகத்தில் வெளிச்சமிட்டது. சற்று நேரம் என்னையே கூர்ந்து பார்த்த பிறகு தனது மீசையை இறுகப் பற்றியபடி பேசத் தொடங்கினார். 

‘நீங்கள் சொன்னது அரைவேக்காட்டுத்தனமானது. பள்ளி ஆசிரியரிடம் இருந்து வேறென்ன எதிர்பார்க்க முடியும்? என் பேச்சு உங்களுக்குப் புரிவதால் நான் அவ்வளவுதான் என்று எண்ணாதீர்கள்; என்னால் பாடலே பாட முடியும் தலைவா. உங்களுக்கு அதைக் கேட்கச் செவியுண்டா என்பதே கேள்வி.’

‘என்ன?’ நான் எதிர்த்தேன். ‘என்னால் எதையும் புரிந்துகொள்ள முடியும் சோர்பா, மறந்துவிடாதீர்கள்.’

‘ஆம். நீங்கள் மூளையால் புரிந்துகொள்வீர்கள். நீங்கள் “இது சரி, அது தவறு; இது உண்மை, அது பொய்; அவன் நல்லவன், இன்னொருவன் சரியில்லை…” என்றெல்லாம் சொல்வீர்கள். ஆனால் அவற்றால் கிடைக்கும் பலன்தான் என்ன? நீங்கள் பேசும்போது உங்கள் கைகளையும் மார்பையும் நான் கவனிப்பேன். அவை என்ன செய்யும் தெரியுமா? அமைதியாக இருக்கும். ஒரு சொல்லும் பகராது. அவற்றுக்கு ரத்த ஒட்டமே நின்றுபோனது போலிருக்கும். அதை வைத்து என்ன புரிந்துகொள்ள முடியும் என்று நினைக்கிறீர்கள்? உங்கள் தலையை வைத்து? ம்…?’

‘எனக்குப் பதில் தாருங்கள் சோர்பா. கேள்வியில் இருந்து தப்ப முயலாதீர்கள்!’ என்று அவரைத் தூண்டினேன். ‘உங்கள் தாய்நாட்டைப் பற்றி நீங்கள் பெரிதாக ஏதும் சிந்திப்பதில்லை என்பது உண்மைதானே?’

சினமுற்ற அவர் கன்னெய்க் கலன்கள் மீது முட்டியால் ஓங்கிக் குத்தினார். 

‘உங்கள் முன்பு நிற்கிறானே இந்த மனிதன், இவன் ஒருமுறை புனித சோஃபியாவின் சுருவத்தைத் தன் தலைமயிரை நூலாகக்கொண்டு பூந்தையல் செய்து சட்டை அணிந்தவன். அந்த உடையை எப்போதும் மார்பில் அணிந்துகொண்டு பீடுநடை போட்டவன். என் பெரிய கைகளாலேயே அதைப் பூந்தையலிட்டேன். அப்போது என் தலைமயிருக்குக் காகக் கருமை. பாவ்லோக்களுடனும் மேலாக்களுடனும் சேர்ந்து மேசிடோனியாவின் மலைகளில் ஏறி அலைந்த காலம் அது. இந்தக் குடிசையை விட உயரமாக இருந்த நான் நீள் சராய், சிவப்புத் துருக்கித் தொப்பி, வெள்ளி ஆபரணங்கள், வளையங்கள், வாள், தோட்டாக்கள், துப்பாக்கிகள் அனைத்தையும் கைவசம் வைத்திருக்கும் உதவியாளனாக இருந்தேன். எஃகுக் கவசமும் வெள்ளியும் அணிந்திருந்தேன். நான் நடந்து சென்ற பகுதியில் ஒரு படையே தெருவில் அணிவகுத்துச் செல்வதைப்போல் தடதடப்பும் மணிச்சத்தமும் எழும். இங்கே பார்! இதோ! அங்கே பார்!’

அவர் தன் சட்டையையும் கால்சராயையும் கழற்றினார்.

’அந்த விளக்கை எடுத்து வாருங்கள்!’ என்று ஆணையிட்டார்.

நான் விளக்கை அவருடைய மெலிந்த, பழுப்பு நிற உடலுக்கு அருகே கொண்டுவந்தேன். இதென்ன ஆழமான தழும்புகள், தோட்டாக்குறிகள், வாள்தடங்கள்? அவர் உடலே போர்க்களமாகக் காட்சியளித்தது.

‘இதோ இப்போது மறுபுறத்தைப் பாருங்கள்.’

அவர் திரும்பித் தன் பின்புறத்தைக் காட்டினார்.

‘ஒரு கீறல் கூட இல்லை. இப்போது புரிகிறதா? விளக்கை விலக்குங்கள்.’

அவருக்குச் சினம் பெருகியது. 

’அடிமுட்டாள்தனம்!’ அவர் வெறியில் கத்தினார். ‘வெறுப்பு ஏற்படுகிறது. ஆண்கள் எப்போதுதான் உண்மையிலேயே ஆண்களாக நடந்துகொள்வார்களோ? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? கால்சராய் எடுத்து அணிகிறோம். சட்டை, கழுத்துப்பட்டை, தொப்பி என எல்லாம் அணிந்தாலும் இன்னும் நாம் கழுதைகளாகவே இருக்கிறோம். அல்லது ஓநாய்களாக, நரிகளாக, பன்றிகளாக. கடவுளின் தோற்றத்தைப் பிரதிபலிக்கவே நாம் படைக்கப்பட்டதாகச் சொல்கிறோம். ஆனால் உண்மை என்ன? நாமா? கடவுளின் தோற்றமா? ஆமெனில் அந்தக் கருமம் பிடித்த தோற்றத்தின் மேல் காறி உமிழ்கிறேன்.’

கடும் அனுபவ ஞாபகங்கள் அவருக்குள் இருந்து கிளர்ந்தெழுவதை அறிய முடிந்தது. அவர் மேலும் மேலும் துயருற்றார். நறநறக்கும் பற்களின் வழியே அவரது பொருளற்ற சொற்கள் வெளிப்பட்டன.

அவர் எழுந்து குடிநீர் குவளையை எடுத்து, நெடுநேரம் அருந்தினார். சற்றுத் தணிந்ததும் புத்துணர்ச்சி பெற்றார்.

‘என்னை எங்கு தொட்டாலும் சரி நான் அலறுவேன்’ என்றார். ‘என் உடல் முழுவதும் தழும்புகளும் காயங்களும் கட்டிகளும் நிறைந்துள்ளன. நீங்கள் பெண்பித்து பற்றியும் அவர்களை இழிபிறவிகள் என்றும் என்ன பெரிய கதைகள் சொல்லிவிட்டீர்கள்? என்னைப் பரிகசிக்கிறீர்கள். அவற்றின் பொருள்தான் என்ன? நான் என்னை உண்மையான ஆண்பிள்ளையாக உணர்ந்த காலத்தில் அவர்களை நிமிர்ந்துகூடப் பார்த்ததில்லை. ஒரு கோழியைத் தொடுவதைப் போல அவர்களைப் போகிறபோக்கில் தொட்டுவிட்டு நீங்கிவிடுவேன். ”அழுக்குப் பிறவிகள்” என்று சொல்லிக்கொள்வேன். “என் பலம் அனைத்தையும் உறிஞ்சுவதற்கென்றே வந்தவர்கள். ச்சே! பெண்கள் எல்லாம் நாசமாய்ப் போகட்டும்!”

’என்னுடைய இரட்டைக்குழல் துப்பாக்கிய எடுத்துக்கொண்டு ஒரு கோமிதாஜியாக மலைகளில் ஏறிச் சென்றேன். ஒருநாள் அந்தியில் ஒரு பல்கேரிய கிராமத்திற்குள் நுழைந்து, அங்கிருந்த குதிரைக் கொட்டிலில் ஒளிந்தேன். அது கருணையற்ற பல்கேரியப் போர்வீரனும் பாதிரியுமான ஒரு வெறியனுக்குச் சொந்தமானது. இரவில் அவர் தன் புனித வெள்ளையங்கியைக் கழற்றிவிட்டு, சிப்பாய்க்கான அங்கியை அணிந்து, தன் இரட்டைக்குழல் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு அருகில் இருக்கும் கிரேக்கக் கிராமங்களைத் தேடிச் செல்வார். விடிவதற்குள் உடலெங்கும் சேறும் குருதியுமாக வந்து சேர்வார். விரைந்து தயாராகிக் கடவுள் நம்பிக்கையைப் பறைசாற்றும் திருப்பலியை நிகழ்த்துவதற்காக மீண்டும் சாமியாராக உருமாறிச் சென்றுவிடுவார். சில நாட்களுக்கு முன்புதான் அவர் ஒரு கிரேக்க ஆசிரியரை அவரது படுக்கையிலேயே கொன்றிருந்தார். எனவே நான் இந்த ஆளின் குதிரைக் கொட்டிலுக்குச் சென்று ஒளிந்து காத்திருந்தேன். இரவில் தனது விலங்குகளுக்கு உணவளிக்கும் பொருட்டு அவர் குதிரைக் கொட்டிலுக்கு வந்தார். நான் அவர் மீது தாவி செம்மறி ஆட்டை அறுப்பதுபோல அவர் கழுத்தை அறுத்தேன். அவர் காதுகளைத் துண்டாக்கி என் பையில் திணித்தேன். அப்போது பல்கேரியக் காதுகளை சேகரித்து வைக்கும் பழக்கம் எனக்கு இருந்தது. புரிகிறதா? அதனால்தான் நான் அவர் காதையும் அறுத்து எடுத்துக்கொண்டேன்.

‘சில நாட்களுக்குப் பிறகு நான் மீண்டும் அதே ஊருக்குச் சென்றேன். நண்பர்களுடன். நான் தெருத்தெருவாக வியாபாரம் செய்தேன். என் ஆயுதங்களை மலையின் மீது விட்டுவிட்டு ரொட்டியும் உப்பும் பிறருக்குச் சப்பாத்துகளும் வாங்க உத்தேசித்து வந்திருந்தேன். ஒரு வீட்டின் வாயிலில் ஐந்து சிறிய பிள்ளைகள், மேற்சட்டை அணியாமல், வெற்றுக் கால்களுடன், ஒருவர் கையை மற்றொருவர் பற்றியபடி பிச்சை இரந்தனர். மூன்று பெண்பிள்ளைகள், இரண்டு ஆண்பிள்ளைகள். மூத்தவளுக்குப் பத்து வயதுக்கு மேல் இருக்காது. கடைப்பிள்ளை இன்னும் சிசுவாக இருந்தது. மூத்தவள் சிசுவைத் தூக்கி அழாதிருக்கும்படி முத்தமிட்டு, வருடித் தந்தபடி இருந்தாள். ஏனென்று எனக்குத் தெரியவில்லை – தெய்வச்செயலாக இருக்கலாம் – நேராக அவர்களிடம் சென்றேன். 

‘”யாருடைய பிள்ளைகள் நீங்கள்?” என்று பல்கேரிய மொழியில் கேட்டேன். 

 மூத்த பையன் தன் தலையை உயர்த்தினான்.

’“பாதிரியாரின் பிள்ளைகள். எங்கள் தந்தையின் கழுத்தை யாரோ குதிரைக்கொட்டிலில் அறுத்துப் போட்டுவிட்டார்கள்” என்று பதிலளித்தான்.

‘என் கண்களில் நீர் வழிந்தது. பூமி மைல்கல்லைப் போல ஆகித் தள்ளாடிச் சுழன்றது. சுவரில் சாய்ந்தேன். நின்றேன்.’

‘”இங்கே வாருங்கள் பிள்ளைகளே” என்று அழைத்தேன். “என்னருகே வாருங்கள்.”

‘என் பணமுடிப்பை எடுத்தேன். அது நிறைய துருக்கிய பவுண்டுகளும் மெஜெதிகளும் இருந்தன. மண்டியிட்டு அனைத்தையும் தரையில் கொட்டினேன்.  

‘”இதோ எடுத்துக்கொள்ளுங்கள்!” என்று அழுதேன். “எடுத்துக்கொள்ளுங்கள்! எடுத்துக்கொள்ளுங்கள்!”

‘குழந்தைகள் உடனே தரையில் விழுந்து அனைத்தையும் பொறுக்கிச் சேகரித்தார்கள்.’

‘”உங்களுக்குத்தான்! உங்களுக்குத்தான்!” அலறினேன். “அனைத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்.”

‘அதன் பிறகு நான் வைத்திருந்த கூடையை அவர்களிடம் தந்தேன்.

’”இவை அனைத்தும் உங்களுக்குத்தான்! வைத்துக்கொள்ளுங்கள்.”

‘அதன் பின் அவ்வூரிலிருந்து நீங்கினேன். பிறகு என் சட்டையைக் கழற்றி நான் பூந்தையலிட்ட புனித சோஃபியா சுருவத்தைக் கிழித்துத் தூக்கி எறிந்துவிட்டுச் செய்வதறியாது ஓடினேன்.

‘இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறேன்…’

சோர்பா சுவரில் சாய்ந்து என்னை நோக்கித் திரும்பினார். 

‘இவ்வாறுதான் நான் விடுதலை அடைந்தேன்’ என்றார்.

‘உங்கள் தேசத்திடமிருந்தா?’

‘ஆம் என் தேசத்தின் பிடியில் இருந்துதான்’ என்று தெளிந்த தீர்க்கமான தொனியில் சொன்னார். சில கணங்களுக்குப் பின் ‘என் தேசத்திடமிருந்தும் பாதிரிகளிடமிருந்தும் செல்வத்திலிருந்தும் விடுபட்டேன். நான் பொருட்களைச் சலித்துத் தள்ளினேன். மேலும் மேலும் தேவையற்றவற்றைக் கண்டறிந்து ஒதுக்கினேன். இவ்விதமாக என் பாரத்தைக் குறைத்தேன். எப்படிச் சொல்வது? நானே என் மீட்பர். ஒரு மனிதனாக ஆனேன்.’ 

சோர்பாவின் விழிகள் தீயென மின்னின. அவர் உதடுகள் திருப்தியுடன் புன்னகைத்தன. 

ஓரிரு நொடிகள் மெளனமாக இருந்துவிட்டு மீண்டும் தொடர்ந்தார். அவர் இதயம் சொற்களால் பெருக்கெடுத்து ஓடியது. அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை. 

‘மனிதனைத் துருக்கியன், பல்கேரியன், கிரேக்கன் என்று நான் பிரித்தறிந்த காலம் ஒன்றுண்டு. நான் என்  நாட்டிற்காகச் செய்த பல விஷயங்களை நீங்கள் கேட்டால் உங்கள் மயிர்கள் செங்குத்தாக நிற்கும் தலைவா. அப்பாவி மக்களின் கழுத்தை அறுத்தேன். கிராமங்களை எரித்தேன். கொள்ளை, வன்புணர்வு, குடும்பத்தோடு கொலை எல்லாம் செய்தேன். எதற்காக? ஏனென்றால் அவர்கள் பல்கேரியர்கள் அல்லது துருக்கியர்கள் என்பதால் மட்டும். ”அடச்சீ! நாசமாய்ப் போவாய் பன்றியே!” என்று என்னை நானே அவ்வப்போது நிந்தித்ததுண்டு. “இப்போதே நீ நாசமாய்ப் போவாய், கழுதையே!” ஆனால் இந்நாட்களில், என்னை நானே ஒரு காலத்தில் பொறுக்கியாக இருந்த இவன் இன்று ஒரு நல்ல மனிதன் என்று சொல்கிறேன். அவர்கள் கிரேக்கராக, பல்கேரியராக, துருக்கியராக இருந்தால் எனக்கென்ன? அவன் நல்லவனா? கெட்டவனா? இப்போது அந்தக் கேள்வி மட்டும்தான் என்னுள் எழுகிறது. நான் மேலும் முதிர முதிர – நான் உண்ணும் கடைசிக் கவளத்தின் மீது ஆணையாகச் சொல்கிறேன் – அந்தக் கேள்வியையும் கேட்காமல் இருக்க வேண்டும் என்று விழைகிறேன்! நல்லவனோ கெட்டவனோ அவனுக்காக நான் பரிதாபம் கொள்கிறேன். அனைவருக்காகவும். ஒரு மனிதனைப் பார்த்தாலே என் உள்ளுறுப்புகள் இரங்குகின்றன. அவனை ஒரு பொருட்டாக நான் கருதவில்லை என்று நடித்தாலும் என்னால் பரிதாபம் கொள்ளாதிருக்க முடியவில்லை. இதோ பாவப்பட்ட சனியன், அவனும் உண்டு, அருந்தி, காதலித்து அஞ்சித் தொலைகிறான். அவன் யாராக இருந்தால் என்ன, அவனும் கடவுள் – சாத்தான் இணையால் பாதிக்கப்பட்டவன். எல்லாம் முடிந்த பிறகு பூமிக்கடியில் நீட்டிப் படுத்துப் புழுக்களுக்கு இரையாகப் போகிறவன்தானே! பாவப் பிறப்பு! நாம் அனைவரும் சகோதரர்களே! புழுவுக்கான உணவே!

‘அதுவே பெண்களாக இருந்தால்… ஐயகோ! என் விழிகள் பிதுங்கி விழும்வரை அழத் தோன்றுகிறது. உங்களைப் போன்ற உன்னதமானவர்கள் என்னை அளவுக்கதிகமாகப் பெண்பித்துக் கொண்டிருப்பவன் என்று பரிகசிப்பதை நான் கவனிக்கிறேன். ஏன் அவர்கள் மீது நான் தீராப்பற்று கொண்டிருக்கக்கூடாது என்று உண்மையாகவே எனக்குப் புரியவில்லை. அவர்கள் அனைவரும் வலுவற்ற உயிரிகள். தம் முலையை யாரேனும் பற்றிப் பிசைந்தால் அந்த இடத்திலேயே அவனிடம் சரணாகதி அடையக்கூடியவர்கள். 

‘ஒரு முறை நான் இன்னொரு பல்கேரிய கிராமத்திற்குச் சென்றேன். அங்கிருந்த ஒரு கிழட்டுப் பயல் என்னை அடையாளம் கண்டு அவர்களது ஆட்களிடம் சொல்ல, நான் தங்கியிருந்த இடத்தை அவர்கள் வளைத்தனர். நான் தப்பி உப்பரிகையில் ஏறி ஒவ்வொரு மாடமாகத் தாவி ஓடினேன். நிலவு மேலேறிய இரவில் பூனை போலத் தாவினேன். ஆயினும் என் நிழலின் அசைவை வைத்து என்னை நோக்கிச் சுடத் தொடங்கினர். நான் என்ன செய்வது? ஒரு முற்றத்தில் இறங்கி வீட்டிற்குள் நுழைந்தேன். அங்கு ஒரு பல்கேரியப் பெண் தன் இரவு உடையில் நின்றிருந்தாள். என்னைப் பார்த்து அஞ்சிக் கத்த முனைந்தவளிடம் கைவிரித்து மெல்லிய குரலில் “கருணை! கருணை காட்டுங்கள்! கத்தாதீர்கள்!” என்று கெஞ்சி அவள் முலைகள் மீது கைவைத்து அழுத்தினேன். அவள் வெளிறி, அரை மயக்க நிலைக்குச் சென்றாள்.

‘”உள்ளே வா” என்று மெல்லிய குரலில் சொன்னாள். “யாரும் பார்ப்பதற்குள் உள்ளே வா…”

‘நான் உள்ளே சென்றதும் என் கைகளை இறுகப் பற்றினாள்: “நீ கிரேக்கனா?” என்றாள். “ஆம். கிரேக்கன். என்னைக் காட்டிக்கொடுக்காதீர்கள்.” அவள் இடையைப் பற்றினேன். அவள் ஒரு சொல்லும் சொல்லவில்லை. அவளுடன் படுக்கைக்குச் சென்றேன். என் இதயம் மகிழ்ச்சியால் ததும்பியது. “சோர்பா, நாயே இதோ பார்” உனக்கென ஒரு பெண் இருக்கிறாள். இதுதான் மனித வாழ்வின் சிறப்பு! அவள் யார்? பல்கேரியப் பெண்ணா? கிரேக்கக்காரியா? பபுவப் பெண்ணா? அது பொருட்டே இல்லை. அவள் ஒரு பெண். மனித உடலும் முத்தமிட வாயும் அழகிய முலைகளும் உடையவள். அவளால் கலவி செய்ய முடிகிறது. கொலைகாரனாக இருப்பதற்கு உனக்கு வெட்கமாக இல்லையா? அறிவுகெட்ட பன்றியே!” என்னிடம் நானே பேசினேன். 

‘அவ்வாறுதான் நான் அவளிடம் இருக்கும்போது – அவள் கதகதப்பைப் பகிர்ந்தபோது – நினைத்தேன். ஆனால் அந்தக் கொழுப்பெடுத்த நாய் – என் கிரேக்கம் – என்னை அமைதியாக அந்நிலையிலேயே இருக்கவிட்டாளா? மறுநாள் காலையிலேயே அந்தப் பல்கேரியப் பெண் தந்த உடைகளை அணிந்துகொண்டு அங்கிருந்து தப்பி ஓடினேன். அவள் ஒரு விதவை. நெடும்பேழையிலிருந்து தன் கணவனுடைய உடைகளை எடுத்து எனக்குத் தந்து என் காலில் விழுந்து மீண்டும் தன்னிடம் வந்துவிடும்படி மன்றாடினாள். 

‘ஆம். மறுநாள் இரவே நான் மீண்டும் அங்கே சென்றேன். ஆனால் தேசபக்தனாக! ஒரு வனவிலங்காக! ஒரு குவளை நிறைய பாரஃபினை எடுத்துச் சென்று அந்தக் கிராமத்தையே கொளுத்தினேன். அவளும் பிறரோடு சேர்ந்து அதில் கருகி இறந்திருக்கக்கூடும். பாவி. அவள் பெயர் லுட்மில்லா.’

சோர்பா பெருமூச்செறிந்தார். ஒரு சிகரெட்டைப் பற்றவைத்து இரண்டு முறை உள்ளிழுத்துவிட்டு அதைத் தூக்கி எறிந்தார். 

‘தாய்நாடு என்றா சொல்கிறீர்கள்? உங்கள் நூல் சொல்லும் அனைத்தையும் நீங்கள் நம்புகிறீர்களா? ஆனால் உண்மையில் நீங்கள் நம்ப வேண்டியது என் சொல்லைத்தான். நாடுகள் என்பது இருக்கும்வரை மனிதன் மிருகமாகவே இருப்பான். கொடூரமான மிருகம். ஆனால் நான் – கடவுளுக்கு மகிமை உண்டாகட்டும்! – அதிலிருந்து மீண்டுவிட்டேன். என்னைப் பொறுத்தவரை அது முடிந்த கதை. உங்களுக்கு?’

நான் பதிலளிக்கவில்லை. எனக்கு இம்மனிதனைப் பார்த்து அழுக்காறு. சண்டையிட்டு, கொலை செய்து, முத்தமிட்டு – நான் எதையெல்லாம் மசியிலும் பேனாவிலும் ஏடுகளிலும் கற்க நினைக்கிறேனோ அவற்றையெல்லாம் – குருதியும் சதையுமாக வாழ்ந்திருக்கிறார். இருக்கையில் ஒட்டிக்கொண்டதுபோல அமர்ந்து படிப்படியாக என் தனிமையில் நான் கண்டடைந்த ஞானங்களை எல்லாம் இந்த ஆள் தன் வாளுடன் இளங்காற்றைச் சுவாசித்தபடி மலைகளின் மேல் வாழ்ந்து அறிந்திருக்கிறார்.

தேற்றமுடியாத உணர்வில் என் விழிகளை மூடினேன்.

நொந்தவராக சோர்பா ‘உறங்கிவிட்டீர்களா தலைவா?’ எனக் கேட்டார். ‘இங்கே பாருங்கள். நான் முட்டாளைப் போலத் தனியாகப் பேசுகிறேன்.’

மனக்குறையுடன் முணுமுணுத்தவாறு படுத்தவரிடமிருந்து விரைவிலேயே குறட்டையொலி கேட்டது.

அவரால் இரவு முழுவதும் உறங்க முடியவில்லை. அன்றிரவு நாங்கள் முதல்முறை கேட்ட தேன்சிட்டின் பாடல் எங்கள் தனிமையை நிரப்ப, தாளமுடியாத துயரம் பெருகியது. என் கன்னத்தில் கண்ணீர் வழிவதை உணர்ந்தேன்.

எனக்கு மூச்சுத் திணறியது. விடிந்ததும் எழுந்து எங்கள் குடிசையின் கதவு நிலைப்படியில் நின்று கரையையும் ஆழியையும் பார்த்தேன். ஒரே இரவில் ஒட்டுமொத்த உலகும் உருமாறியதாக எனக்குத் தோன்றியது. எனக்கு எதிரில் மணலில் இருந்த முட்புதர், தனது மங்கிய நிறத்தைத் தொலைத்திருந்தது. அதில் இப்போது சிறு சிறு வண்ண முகைகள் அரும்பியிருந்தன. காற்றில் இனிய எலுமிச்சை மணமும் மலரரும்பிய ஆரஞ்சு மரங்களின் மணமும் சேர்ந்து வீசியது. சில அடிகள் நடந்தேன். என்றென்றும் தொடரும் இந்த அற்புதங்களைப் போதும் போதுமென என்னால் பார்த்துத் தீர்க்க முடியவில்லை.

சடுதியில் எனக்குப் பின்னால் மகிழ்ச்சியான ஒலி கேட்டது. சோர்பா எழுந்து அரை நிர்வாணமாகக் கதவருகே வந்து நின்றார். அவருக்குள்ளும் வசந்தத்தின் காட்சியால் பூரிப்பு எழுந்தது. 

அறியாதவராய் ‘என்ன அது?’ எனக் கேட்டார். ‘அங்கே அசையும் நீலம் ஒன்று அற்புதமாக இருக்கிறதே தலைவா. அதற்குப் பெயரென்ன? கடலா? கடலா? மலராலான பச்சை நிற மேற்சட்டை அணிந்திருக்கிறதே அது என்ன? நிலமா? இதை வடித்த கலைஞன் யார்? இப்போதுதான் முதல்முறை இதைப் பார்க்கிறேன் தலைவா! சத்தியமாக!’

அவர் விழிகள் விரிந்தன.

‘சோர்பா’ என்றழைத்து ‘உங்களுக்கு மூளை கழன்று விட்டதா?’ என்று கேட்டேன்.

’உங்களுக்கு ஏன் சிரிப்பு வருகிறது? உங்களுக்குத் தெரியவில்லையா? அவை அனைத்திற்கும் பின்னால் ஒரு மாயம் இருக்கிறது தலைவா.’

அவர் விரைந்து வெளியேறி, மணலில் ஆடிப்பாடி, புற்தரையில் விழுந்து குதிரைக் குட்டி போல உருண்டார்.

சூரியன் வெளிப்பட்டதும் நான் உள்ளங்கைகளை நீட்டிக் கதிர்களின் கணப்பை உணர்ந்தேன். வளரும் செடிகொடிகள். எழும் முலைகள். ஆன்மாவே மரத்தைப்போல வளர்கிறது. உடலும் ஆன்மாவும் ஒரே பொருளினால் செய்யப்பட்டவை என்பதை உணர முடிந்தது. 

சோர்பா மீண்டும் எழுந்து நின்றார். அவர் தலை முழுதும் பனித்துளியும் மண்ணும் ஒட்டியிருந்தன. 

‘வேகமாக வாருங்கள் தலைவா’ என்றார். ‘நாம் நன்றாக உடையணிந்து நாகரிகமாகத் தோற்றமளிக்க வேண்டும். இன்று நமக்கு ஆசீர்வாதம் கிடைக்கவிருக்கிறது. பாதிரியும் கிராமப் பெரியவர்களும் வரப் போகிறார்கள். நாம் இப்படி மணலிலும் புற்தரையிலும் புரளுவதைப் பார்த்தால் நம் நிறுவனத்திற்குக் கெட்ட பெயர்! எனவே உடனே சுருக்குத்தொங்கியும் கழுத்துப்பட்டையும் தேவை. தீவிர முகபாவனைகள் எல்லாம் பொருளற்றவை. உங்களுக்குத் தலையே இல்லை என்றாலும் நல்ல தொப்பி அணிந்தாக வேண்டும். இது ஒரு கிறுக்குத்தனமான உலகம்!’

நாங்கள் ஆடை அணிந்தோம். பணியாளர்கள் வந்தனர். அவர்களைத் தொடர்ந்து பெரியவர்களும் வந்தனர்.

‘மனத்தைத் தயாராக வைத்துக்கொள்ளுங்கள் தலைவா! இன்று யாரும் ஏமாறப்போவதில்லை! நாம் அபத்தமாகக் காட்சியளித்து விடக்கூடாது.’

தந்தை ஸ்டீபனோஸ் தனது ஆழமான பக்கவாட்டுப் பைகள் கொண்ட அழுக்கான புனித அங்கி அணிந்து நடந்து வந்தார். கால்கோள் விழா, ஈமச்சடங்குகள், திருமணங்கள், ஞானஸ்நானங்கள் என எந்த விழாவாக இருந்தாலும் இனிப்புருளைகள், வெண்ணைக்கட்டிகள், வெள்ளரி, உலர்திராட்சை, மாமிசத்துண்டங்கள், இனிப்புகள் எனத் தனக்குக் கிடைக்கும் எந்தப் பொருளையும் வாங்கி அந்த ஆழமான பைகளில் போட்டுக்கொள்வார். இரவில் அவரது மனைவி பாப்பாடியா தன் கண்ணாடியைப் போட்டுக்கொண்டு தோண்டித் துருவி அவற்றை வகை பிரிப்பாள். 

தந்தை ஸ்டீபனோஸைத் தொடர்ந்து ஊர்ப் பெரியவர்கள் வந்தனர். கேனியா வரை பயணித்து இளவரசர் ஜார்ஜை நேரில் பார்த்துவிட்டதால் தனக்கு உலகமே தெரியும் என்று கற்பனை செய்துகொண்ட காஃபியக உரிமையாளர் கோண்டோமனோலியோ வந்தார். அவரைத் தொடர்ந்து அமைதியான புன்னகையுடன் அனானோஸ்தி மாமா வந்தார். அவர் தளர்வான கைகள் கொண்ட கண்ணைப் பறிக்கும் வெள்ளை அங்கி அணிந்திருந்தார். பள்ளித் தலைமையாசிரியர் இறுகிய முகத்துடன் கையில் தடியுடன் மெல்ல நடந்து வந்தார். இறுதியில் தலையில் கருப்பு கைக்குட்டையும் கருப்பு சட்டையும் கருப்பு சப்பாத்தும் அணிந்திருந்த மாவ்ரண்டோனி வந்தார். அவர் எங்களைப் பார்த்துச் சொல்லின்றித் தலையசைத்து இறுக்கமாக முகமன் செய்தார். அவர் கசப்புடன் தனித்திருந்தார். அவர் தன் முதுகைக் கடலுக்குக் காட்டியபடி கூட்டத்திலிருந்து சற்றே தள்ளி நின்றார்.

சோர்பா ‘எல்லாம் வல்ல கிறித்துவின் பெயரால்!’ என்று தீர்க்கமான குரலில் உரைக்கத் தொடங்கினார். அவர் ஊர்வலத்தின் முன்னால் நடக்க அனைவரும் இந்தத் தெய்வபக்தியுள்ள பவனியில் பின்தொடர்ந்து அணிவகுத்து வந்தனர்.

இந்தக் குடியானவர்களின் நெஞ்சங்களில் நூற்றாண்டுப் பழமையான மாயச் சடங்குகள் சட்டென விழித்தன. அனைவருடைய விழிகளும் பாதிரியின் மீது பொருந்தின. விழிக்குப் புலப்படாத தீய சக்திகளைச் சமரிட்டுப் பிடித்து வெளியேற்றுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆயிரமாண்டுகளுக்கு முன்பு மந்திரவாதி தன் கைகளை உயர்த்தித் தன்னிடம் இருந்த புனிதக் குவளையின் தீர்த்தத்தைத் தெளித்து மர்மமான உச்சாடனங்களைச் சொல்லி அந்த ஆற்றல் மிக்க மந்திரத்தால் தீய சக்திகளையும் பேய்பிசாசுகளையும் துரத்தி நீர், நிலம், வளியிலிருந்து பிறந்து வந்த நல்ல ஆன்மாக்கள் மானுடத்தின் உய்வுக்கு உதவி செய்ய வழிசெய்தார்.

கடலுக்கு அருகில் எங்களது முதல் தூணை நடுவதற்காகத் தோண்டிய குழியருகே வந்தோம். தொழிலாளிகள் ஒரு பெரிய தேவதாரு மரத் தடியை அந்தக் குழியில் நிறுத்தி நிமிர்த்தினர். தந்தை ஸ்டீபனோஸ் தன் நாடாவை ஓரமாக வைத்துவிட்டுத் தூபக்காலை எடுத்து, மரத்தண்டையே பார்த்தபடி தீயசக்திகளை விரட்டத் தொடங்கினார்: ‘வன்மையான பாறையில் காணக்கிடைத்த இதை இனி காற்றும் நீரும் அசைக்க முடியாது. ஆமென்.’

தற்சிலுவையிட்டபடி சோர்பா ‘ஆமென்!’ என்று உறுமினார்.

ஊர்ப் பெரியவர்களும் ‘ஆமென்!’ என்று முணுமுணுத்தனர்.

இறுதியாகத் தொழிலாளிகள் ‘ஆமென்!’ என்றனர். 

கிராமத்தின் பாதிரியார் ‘கடவுள் உங்கள் தொழிலுக்கு ஆபிரகாமின் செல்வத்தையும் ஐசக்கின் வளத்தையும் கையளிப்பாராக!’ என்று வாழ்த்தினார். சோர்பா அவர் கையில் நூறு டிராச்மாக்களைத் திணித்தார். 

திருப்தியடைந்தவராய் ‘உமக்கு எல்லா நலன்களும் வாய்க்கட்டும்!’ என்று வாழ்த்தினார்.

நாங்கள் குடிசைக்குத் திரும்பினோம். சோர்பா அனைவருக்கும் ஒயினும், பசிதூண்டும் ரசமும் வறுத்த ஆக்டோபஸும், பொறித்த சிப்பியும் ஆலிவும் பீன்ஸும் நிறைந்த குழம்பும் தந்தார். நன்றாக விருந்து உண்ட பிறகு ஆட்கள் வீட்டிற்குத் திரும்பினார்கள். மந்திரிப்பு விழா முடிந்தது.

கைகளைத் தேய்த்தவாறு ‘இதைச் சரியான முறையில் செய்துவிட்டோம்’ என்று சோர்பா சொன்னார்.

உடை களைந்து, பணிக்கான உடைக்கு மாறினார். கையில் மண்வெட்டியை எடுத்தார். 

தொழிலாளிகளைப் பார்த்து ‘வாருங்கள்’ என்று அழைப்பு விடுத்தார். ‘சிலுவைக் குறியை இட்டுக்கொண்டு வேலையைத் தொடங்குங்கள்.’

அதன் பிறகு நாள் முழுவதும் அவர் தலையைத் தூக்கிப் பார்க்கவே இல்லை.

ஒவ்வொரு ஐம்பது அடிக்கும் தொழிலாளிகள் குழி தோண்டினர். ஒரு மரம் நட்டனர். ஒரு நேர்கோட்டில் மலையின் உச்சிவரை இந்த பணி தொடர்ந்தது. சோர்பா அளந்து, கணக்கிட்டு உரிய ஆணைகளைப் பிறப்பித்தபடி இருந்தார். அவர் உண்ணவில்லை, புகைக்கவில்லை, ஓய்வும் எடுக்கவில்லை. பணியில் முற்றாக ஈடுபட்டார். 

அவர் அடிக்கடி என்னிடம் ‘அரைகுறையாக ஒரு காரியத்தில் ஈடுபடுவதால்தான்… சொல்ல வந்ததை அரைகுறையாகச் சொல்வதால்தான், அரைகுறை நல்லவனாக இருப்பதால்தான், இன்றைய உலகம் குழப்பங்களின் கூடாரமாக உள்ளது. எதைச் செய்தாலும் முழுமையாகச் செய்ய வேண்டும். ஒவ்வொரு ஆணிக்கும் ஒரு சரியான சம்மட்டி அடி போதும் வெற்றி பெறுவதற்கு! சாத்தானை விட அரைகுறைச் சாத்தானைக் கடவுள் பத்துமடங்கு வெறுக்கிறார்’ என்று என்னிடம் சொல்வார்.

அன்று மாலை அவர் பணியை முடிந்து வந்தபோது மணலில் களைத்துப் படுத்தார்.

‘இங்கேயே உறங்கப் போகிறேன்’ என்றார். ‘விடியலுக்காகக் காத்திருந்து மீண்டும் பணிபுரிய வேண்டும். இரவு நேரப் பணிக்கான திட்டங்களையும் தொடங்கலாம் என உத்தேசிக்கிறேன்.’

‘ஏன் இத்தனை அவசரம் சோர்பா?’

அவர் ஒரு கணம் தயங்கினார்.

‘ஏனென்றா கேட்கிறீர்கள்? நான் கம்பிவடத் தடத்தின் சாய்வைச் சரியாகக் கணக்கிட்டிருக்கிறேனா இல்லையா என்று பார்த்தாக வேண்டும். ஒருவேளை சரியாகக் கணக்கிடவில்லையெனில் நாம் ஒழிந்தோம். புரிகிறதா தலைவா? எத்தனை சீக்கிரம் நாம் ஒழிந்தோமா இல்லையா என்பதை அறிந்துகொள்கிறோமோ அது நமக்கு நல்லது.’

அவர் அவசர அவசரமாகப் பெரும்பசியுடன் உண்டார். விரைவில் அவருடைய குறட்டையொலியைக் கடற்கரை எதிரொலித்தது. நானோ நெடுநேரம் உறங்காமல் விழித்திருந்து, விண்மீன்கள் வானத்தில் அலைவதைப் பார்த்திருந்தேன். ஒட்டுமொத்த விண்மீன்களும் இடம்பெயர்ந்தன. தொலைநோக்கிக் கூடத்தின் குவிமாடத்தைப் போன்ற என் மண்டையோடும் ஒரு உடுக்கூட்டத்தோடு சேர்ந்து இடம் மாறியது. ’விண்மீன்களின் இடப்பெயர்வை உற்று நோக்கியபடி நீங்களும் இடம்பெயருங்கள்.’ மார்கஸ் அரேலியஸின் மேற்கோள் என் நெஞ்சில் நிறைந்து மெளனத்தோடு ஒத்திசைந்தது.

*

நீகாஸ் கசந்த்சாகீஸின் “Zorba, the Greek” நாவலின் மொழியாக்கமான “சோர்பா என்ற கிரேக்கன்” நூலிலிருந்து ஒரு பகுதி. தமிழினி வெளியீடு.

2 comments

Mu.இராம சுப்ரமணிய ன் January 31, 2022 - 3:30 pm

அருமை.சில வார்த்தைகள் தமிழ் நாட்டுக்கும் ஈழதிற்கும் வேறுபடும்.இங்கே நடுவதற்கு என்பார்கள்.அங்கே நாட்டுவதற்கு.ஒரு இடத்தில் ஆழி என்றும் பிற இடங்களில் கடல் என்றும்
இதெல்லாம் தங்களது மொழிபெயர்ப்பு சிறப்பான ஒன்று என்பதால் உரிமையுடன் சொல்கின்றேன்.ஆங்கிலத்தில் படித்த பொழுது இவ்வளவு மனம் ஒன்றி படிக்க முடியவில்லை.தாய் மொழி தாய் மொழிதான்.நன்றி.முழு புத்தகத்திற்கு ஆவலுடன்.அன்புடன் தங்கள்.

Sathish February 1, 2022 - 11:11 am

Waiting more than a year for this tamil translation

Comments are closed.