ஒரு நொடிகூட மூச்சைக் கவனிக்க முடியவில்லை. இதயம் படபடவெனத் துடிக்கிறது. கண்ணை மூடினாலே பத்து, நூறு, ஆயிரம் முகங்களும் காட்சிகளும் வந்து குவிகின்றன. கைகளின் முத்திரைகள் தானாகவே மாறி நிற்கின்றன. இயல்பை மீறி உடல் அதிர்ந்துகொண்டேயிருக்கிறது. வடதிசை நோக்கி ஒரு நொடிகூட உட்கார முடியவில்லை. கால்கள் ஓரிடத்தில் நிலைக்காமல் பதறுகின்றன. இந்தக் குளிரை சிறிதும் தாங்க முடியவில்லை. எது நிஜம் எது கனவு என ஏதும் தெளிவில்லை. என்னுடல் இருக்கிறதா இல்லையா, சமாதி ஆகிவிட்டேனா, எப்படி உறுதிப்படுத்துவதெனத் தெரியவில்லை. கீழிறங்கு, கீழிறங்கு என ஒரு மெல்லிய குரல் இடையிடையே கேட்டுக்கொண்டிருக்கிறது. நீண்ட நாள் பழகிய குரல்தான். யாரெனவும் விளங்கவில்லை. இறங்கித்தான் ஆக வேண்டும். இல்லையென்றால் குழம்பி வெடித்துச் சிதறிவிடுவேன் போல.
பெரும் மலைகளிலிருந்து கீழிறங்கியவர்கள் பட்டியலில் இனி நானும். சரி, இறங்கிவிடுவது என்று எடுத்த முடிவு இறுதியாக இருக்கட்டும். நெடுநாள் பழக்கம் போல என்னுடன் ஒட்டிக்கொண்ட இந்த முடை நாற்றம் தீரக் குளிக்க வேண்டும். மண்ணிறமாகிவிட்ட இந்த ஆடையைப் பற்றியொன்றும் கவலையில்லை. அடிவாரத்துப் பாறை மேட்டில் காய வைத்துக் கிடந்தால் சரியாகிவிடும். யாரென்று தெரியாவிட்டாலும் பரவாயில்லை, குறைந்தபட்சம் ஒரு மனிதன் தான் என்றாவது புரிந்துகொள்ளும் உருவத்தோடு இறங்குவது நல்லது. சடை முடியோ, தாடியோ யாருக்கும் குழப்பமாக இருக்கப் போவதில்லை. எனக்கே அது கூடுதல் அனுகூலமாகக்கூட முடியும். ஒன்றிரு முறை இறங்கி ஏறிய போது தானாகவே வணங்கி நின்ற சிலரையும் பார்த்திருக்கிறேன். அதுவும் பெரிய விசயமில்லை. யாரும் அவ்வளவு சீக்கிரம் நெருங்கி வருவதில்லை. தன்னைப் போலன்றி மாறித் தோன்றும் எதையும் கேள்வியோடு தள்ளி நின்று பார்த்து பின் கடந்து போவான், இல்லையேல் நெருங்கிவந்து தொடர்பின்றி ஏதும் கேட்டு தனக்குக் கிடைத்த பதிலோடு திருப்தியடைந்து போவான். இதை மீறிச் சீண்டிப் பார்க்கும் தைரியம் உள்ள யாரையும் இத்தனை வருடத்தில் பார்த்ததில்லை. சரி, நேரம் விடிந்து தெளிவதற்குள் இறங்கிவிடுவது நல்லது. பிறகு நடப்பது பிறகு.
இந்தச் சுழற்சியான எண்ணங்களை எத்தனையோ முறை கடந்து தவிர்த்து வந்திருக்கிறேன். ஆனால், இன்று இதையும் எனது பயிற்சிகளில் ஒன்றாகச் செய்து பார்த்துவிடுவது என்று முடிவு. அதென்ன, எல்லாம் விட்டு வந்த பிறகு இங்கொன்றும் அங்கொன்றுமாக துருத்திக்கொண்டு நிற்பது? அந்தந்த நொடியிலேயே முளைகளைக் கிள்ளிவிட வேண்டும். இந்த அடிவாரக் கிராமத்தின் மீது எனக்கென்ன அப்படியொரு ஈர்ப்பு? இந்தப் பசும் மலைக்குன்றுகளையும் என் சுவாசம் தாங்கி நிற்கும் இக்குகையையும் விட்டு இறங்கிப் பார்ப்பதற்கு அப்படியென்னதான் இருக்க முடியும்? அல்லது, இக்கிராமத்தையும் தாண்டி வேறெங்கோ செல்வதற்கு அல்லது திரும்புவதற்கு நானாடும் ஆட்டம்தானா? அன்று, கழுத்தோடு முன்னங்கால் ஒன்றில் கயிற்றால் கட்டப்பட்டிருந்த அந்தப் பசுக்களைப் பார்த்ததும் நான் ஏன் அப்படி நடுங்கிப் போனேன்? தினமும்தான் அவற்றை மேய்க்க ஓட்டி வருகிறார்கள். அன்று மட்டும் என்ன அப்படி ஒரு பதைபதைப்பு? இன்னும் எங்கேனும் ஒளிந்துகொண்டு பிடிப்பு தேடி அலைகிறேனா என்ன? சரி, என்னவெல்லாம் எடுத்துக்கொள்ள? இறங்குகிறேனே, மீண்டும் திரும்பிவிடுவேனா? ஏன் இப்படி தடுமாறுகிறேன்?
நேற்றிரவு பல வருடங்களுக்கு முன் என்னைக் கொடூரமாக வதைத்த கனவுகளில் ஒன்று மீண்டும் வந்தது. யாருமற்ற நெடும் சாலையின் ஓரமாய் நடந்துகொண்டிருக்கிறேன். தொலை தூரத்து ஒற்றைப் பனை மரத்தைத் தவிர கண்ணுக்கெட்டிய தூரத்தில் எதுவும் இல்லா நெடுமை. சுட்டெரிக்கும் வெயிலில் ஓரடி எடுத்து வைத்த கால் அடுத்த அடிக்கு தானாகவே தூக்கிக்கொண்டது. ஒவ்வொரு அடிக்கும் இடையிலான இடைவெளியின் ஆசுவாசம். அதையும் புறம் தள்ளு என்று வாய்விட்டுச் சொல்லியபடி செல்ல, தூரத்துப் பசுவொன்றின் அழைப்பு கேட்டதைப் போலிருந்தது. நின்று மெல்லத் திரும்பிய கணம், நடுச்சாலையில் இரத்தக் களரியில் கிடந்து துடித்துக்கொண்டிருந்தது ஒரு குழந்தை. படபடத்துப் பாய்ந்து சென்று அப்பிஞ்சைக் கையிலெடுத்த நொடி என்னையறியாமல் எனக்குள்ளிருந்து பீரிட்டுக்கொண்டு வெளிவந்த அழுகை. அந்தப் பிஞ்சு முகம் நன்கு தெரிந்த முகம். எங்கே பார்த்திருக்கிறேன்? யாராக இருக்கும்? எப்படி இப்படி நடந்தது? நான் கனவின் அடியாழத்தில் மாட்டிக்கொண்டிருக்கிறேனா? இந்த முகம், இதன் தொடுகை, இந்தக் கண்கள். சட்டென அவ்விடம் முழுதும் வெற்றிடமாக, அச்சாலையின் நடுவே நான் படுத்துக் கிடந்து அங்குமிங்கும் உருண்டுகொண்டிருந்தேன். அப்போது மீண்டும் அப்பசுவின் அழைப்பு. சட்டென, என் பெயரைச் சொல்லி ஒரு குரல் அழைக்க, அந்தக் குரலைக் கேட்டு, அலறியடித்துக்கொண்டு உறக்கத்திலிருந்து விழித்தேன். இத்தனை வருடம் என்னை விட்டுப் பிரிந்திருந்த கனவு மீண்டும் என்னை நாடி வர அவசியம்தான் என்ன? அக்கணம் முதல், எனக்குள் ஏன் இத்தனை தடுமாற்றம்? என் உடல் ஏன் பழைய உடலாக முறுக்கேறுகிறது? இக்கிராமத்தில் பெண்கள் யாரையும் நான் பார்த்ததேயில்லையே? அது ஏன் இப்போது எனக்குத் தோன்றுகிறது? போதும். கொஞ்சம் விலகி நிற்பது நல்லது. இறங்கிவிடு என்றால் இறங்கிவிடு.
முதல் முறை வந்தபோது ஏதோ கெட்ட கனவென்று கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டேன். என் குழந்தை பிறந்து சில மாதங்களே ஆகியிருந்த சமயம். அடுத்த முறை அக்கனவு என்னை இன்னும் மூர்க்கமாகத் தாக்கியது. கண் முன்னே மொத்த வீடும் நெருப்பில் எரிந்து சரிய ஒரு பிஞ்சுக் குழந்தை துடித்துத் துடித்து என்னை நோக்கி கைநீட்டி அழைத்தது. நின்ற இடத்திலேயே கட்டப்பட்டவனைப் போல நான் ஓரடிகூட எடுத்து வைக்க முடியாமல் கதறி நின்றேன். பின்னிருந்து ஒரு குரல் அப்பிஞ்சைச் சென்று காப்பாற்று என இறைஞ்சியது. மெல்லிய கைகள் என்னைப் பின்னிருந்து தள்ளிவிட்டன. நான் ஒரு சிறு அசைவுமின்றி அந்தச் சிறுவுடலின் கருகிய அழைப்பைக் கூர்ந்து பார்த்து நின்றேன். என் அழுகை நின்றிருந்தது. அந்த உடல் மொத்தமாகச் சாம்பலாகும் வரை அசைவற்று நின்றேன். சட்டென என்னைச் சுற்றியிருந்த அத்தனையும் அக்கொடும் நெருப்பில் பற்றிக்கொண்டன.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கொடூரக் கனவு. ஒரு நாள், பகலில் ஒரு பயணத்தில் இருந்தபோது திடீரென என் கண்முன் நிகழ்ந்த காட்சிகள் மாறி அக்கனவுகள் எல்லாம் சேர்ந்து நிகழ்ந்தன. சிறு சிறு குழந்தைகள். ஒவ்வொன்றும் என்னை நோக்கி கை நீட்டி கதறி அழுதன. ஒவ்வொன்றும் தீர்ந்து போகும் வரை நின்று அக்காட்சிகளைப் பார்த்துக்கொண்டிருந்தேன். உண்மையில் இரசித்துக்கொண்டிருந்தேன். என் முகத்தில் மெல்லிய புன்னகை. கனவுகளில் இருந்து தப்பிக்க என்னை நானே வேறு ஒருவனாக நினைக்கத் தொடங்கினேன். எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளவோ அல்லது எல்லாவற்றையும் விலக்கவோ முடியாத நிலையில், நான் இறுக்கமாகிக்கொண்டிருந்தேன். சட்டெனக் கோபங்கள், அடிக்க ஓங்கிய கைகள், வசைகள் என நானல்லாத இன்னொருவன் என் குடும்பத்தினுள் நுழைந்துவிட்டிருந்தான். மனைவியின் முகத்தில் எப்போதும் ஒருவித பயம். குழந்தையை நான் வைத்திருந்த போதெல்லாம் அடிக்கடி என்னிடம் வந்து ஏதாவது பேச்சுக் கொடுத்தபடியோ அடுக்களையிலிருந்து எட்டிப் பார்த்தபடியோ இருந்தாள்.
அக்கடைசி நாள், என் கைகளில் சுருண்டு கிடந்து உறங்கிக்கொண்டிருந்தாள் என் மகள், திறக்காத ஒரு சிறு மொட்டைப் போல. அவளைத் தாங்கியபடி முன்னும் பின்னும் நடந்துகொண்டிருந்தேன். திடீரென ஒரு கணம், என் கையில் நான் தாங்கியிருந்த குழந்தை எப்படி என் கையில் வந்தது, இது யாருடைய குழந்தை, இது ஏன் இவ்வளவு சூடாக இருக்கிறது, இப்போதே இதை ஓங்கி இந்தச் சுவரில் அடித்தால் எப்படி இருக்கும், இல்லையென்றால் என் கைகளை எதார்த்தமாக விரித்துவிட்டால் போதுமல்லவா, இப்படி ஒவ்வொரு அடியாக கொடூரத்தின் உச்சத்தை நோக்கி என் எண்ணங்கள் சென்றுகொண்டிருந்தன. என் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. உள்ளிருந்து ‘கைகளை விட்டுவிடு, கையை உதறித் தள்ளு, இத்தோடு முடியட்டும்’ எனக் குரல்கள். எவ்வளவு நேரம் அப்படி நின்றிருந்தேன் எனத் தெரியவில்லை. நினைவு வந்தபோது என் மனைவியின் கைகளில் குழந்தையைக் கொடுத்துவிட்டு அந்தப் பிஞ்சுக் கைகளில் முத்தமிட்டேன். வெளியேறிவிட்டேன்.
இன்று எனக்குள் அதே படபடப்பு. என் கைகளில் அதே வெம்மை. நான் உருவாக்கிய மந்திரத்தை வாய்விட்டு முணுமுணுத்தபடியே எனது மிகச் சிலத் தேவைகளை எடுத்து வைத்தேன். நீர் எடுக்க ஒரு மண்பானை, என் நீண்ட கழி, மேலுடலில் போர்த்திக்கொள்ள இருந்த ஒரு சமுக்காளம். அது ஊரிலிருந்து எடுத்து வந்ததுதானே? அப்படித்தான் இருக்க வேண்டும். மெல்ல என் குகையை விட்டு வெளியேறி ஒரு கணம் நின்றேன். கடைசியாக எப்போது இறங்கினேன் என்று நினைவில்லை. அன்றொரு நாள் ஏதோவோர் விலங்கின் அருகாமை உறுமலைக் கேட்டு உயிர் பயத்தில் உள்ளொடுங்கிக் கிடந்து அடுத்த நாள் குகையிலிருந்து வெளிவந்தபோது நான் உணர்ந்த ஆசுவாசம் இப்போதும் இருப்பதைப் போல உணர்ந்தேன். அந்தக் கொடிய மிருகத்தின் பசிக்கு என்னை நான் கொடுக்க முடியாமல் போனது, அந்த நடுங்கிய கணத்தில் எனக்குள் உருவான அந்த அருவருப்பான அவமானம், பிச்சையாகப் பிழைத்து நின்ற அடுத்த நாளைய என் உடல். பிச்சையாக இருப்பதன் ஆசுவாசம். பின் திரும்பிக் குகையைப் பார்த்தேன். கைகள் தானாக எழுந்து மார்போடு சேர்ந்து குவிந்தன. கண்களில் பெருக்கெடுத்து வழிந்த கண்ணீரைத் தவிர்த்து வான் பார்த்துப் பெருமூச்செறிந்தேன். என் கால்கள் சட்டென ஓட ஆரம்பித்தன. என் வாய் அந்த மந்திரத்தை சத்தமாகக் கத்த ஆரம்பித்தது. முன்னோக்கிச் செல்லச் செல்ல அந்தக் கத்தல் ஒரு பேரோலமாக இரைந்தது. மூன்று மலைகளைக் கடந்து வந்து சுக்குநாறிச் செடிகள் சூழ்ந்த அடிவாரத்துப் பாறை மீது நின்றேன்.
சற்று தொலைவில் கானல் நீராய்த் தெரிந்த காட்சியில் மனம் ஒரு கணம் அசையாது நின்றது. கழுத்துக் கட்டோடு பல மாடுகள், பத்து, இருபது, இல்லை, நூறுகூட இருக்கலாம். இடையிடையே குச்சிகளாய்த் தெரிந்த கறுத்த உருவங்கள். வழக்கமான காட்சிதான். ஆனால், இன்று ஏதோவொன்று வித்தியாசமாக இருக்கிறது. சற்று கூர்ந்து கவனித்தபோது ஒவ்வொரு மாடும் ஒரு மனிதனைத் தன்னோடு கட்டியிழுத்துச் சென்றுகொண்டிருந்தது. மாட்டின் உடலின் பக்கவாட்டில் கரிய கயிற்றால் இறுக்கிக் கட்டப்பட்டு உடலெங்கும் இரத்தம் கசியத் துடித்துக்கொண்டிருந்தான் ஒவ்வொரு மனிதனும். கூட்டத்தின் இடையே உயரமான கறுத்த பெரிய உருவங்கள். யார் இவர்கள்? பெண்களா? இதென்ன உடை? இத்தனை அகோரம்! தங்கள் கைகளில் பல விதமான சித்திரவதைக் கருவிகளைத் தாங்கி ஓங்கிச் சிரித்தபடி அம்மாடுகளை அடித்து ஓட்டிக்கொண்டிருந்தனர். கூட்டத்தினிடையே சில சிறுமிகள் அங்குமிங்கும் ஓடி அம்மாடுகளோடு கட்டப்பட்ட மனிதர்கள் மீது ஏதோ திரவத்தை ஊற்ற, அந்தவுடல்கள் கதறித் துள்ளின. தொலைவிலிருந்து என்னைப் பார்த்துவிட்ட அப்பெண்களின் முதல்வி என்னை நோக்கிக் கை நீட்டிக் கத்தினாள். சட்டென என் மீது ஒரு நெருப்புப் பந்து வந்து விழ, பற்றிக்கொண்டதைப் போலப் பதறித் துள்ளி விழுந்தேன்.
விழித்தெழுந்த போது ஒரு மரத்தடியில் கிடத்தப்பட்டிருந்தேன். கண்களைக் கசக்கியபோது முகமெங்குமிருந்து செதில்கள் பொரிந்து விழுந்தன. ஒவ்வொரு செதிலும் மண்ணில் விழுந்த கணம் உயிர்பெற்றுப் புழுவாகி நெளிந்தது. குமட்டிக்கொண்டு வர ஓங்கரித்து வாந்தியெடுத்தேன். என் பின்னால் வந்து நின்ற ஒரு சிறிய உருவம் குனிந்து என் முதுகைத் தடவிவிட்டது. அந்தத் தொடுகை அத்தனை சுகமாக இருந்தது.
“சாமி, அம்மா சொல்லிச்சி. வாந்தி எடுப்பீங்க, இத்தக் குடிக்கச் சொல்லுன்னு. இந்தாங்க, இதக் குடிங்க,” என்றது அக்குரல். ஒடுங்கிய முகம். ஒல்லிச் சரீரம். ஆடையற்ற மேலுடல். இடையில் பாதிக் கிழிந்த ஒரு துண்டு. கறை படிந்த மஞ்சள் பற்கள். சடை பிடித்த தலை.
“நீ எதுக்கு சட வளத்திருக்க?”
நான் கேட்டதும் சிரித்தபடி, “ஆங், நீங்களுந்தான் இந்தா தண்டிக்கி வளத்துருக்கீங்க, மொதல்ல இதக் குடிங்க சாமி. வேல கெடக்கு. எல்லாவனையும் ஓட்டிட்டு வரணும்,” என்றான்.
“யார? என்ன?”
“இவனுவோ கண்ண மறச்சிட்டு காட்டுக்குள்ள பறந்துருவானுவோ, களவாளிப் பயக்களாக்கும். இந்தா, வாரேன் சாமி,” என்றவன் சீழ்க்கையொலி எழுப்பியபடி பாய்ந்தோடினான். என்ன, ஒரு பத்து வயதுதான் இருக்கும். அவன் தந்ததைக் குடித்த போது முதலில் பெரும் கசப்பு, உள்ளே செல்லச் செல்ல, என் உடல் அதைக் கொதியோடு வேண்டியது. நாக்கில் எச்சில் ஊற, அதைக் குடித்தேன். வற்றாமல் பெருகி வரும் அமிர்தம் போல. அம்மா தினசரி மோரூற்றிக் கலந்து தரும் நீத்தண்ணி போல. எத்தனை வருட நினைவின் ருசி. அந்த நொடியில் அப்படியே என் நாவில் வந்து நின்றது. சில நொடிகளில் அப்படியொரு புத்துணர்வு. அப்போதுதான் சுற்றி என்னவெல்லாம் இருக்கிறதெனப் பார்க்க வேண்டும் என்று தோன்றியது.
நான் அமர்ந்திருந்த மரத்தைச் சுற்றிலும் காய்ந்த வறண்ட பூமி. தூரத்து சிறு வெளிச்சப் புள்ளிகள். கூட்டம் கூட்டமாய் மாடுகளை ஓட்டிச்செல்லும் ஆண்களும் சிறுவர்களும். சற்று நேரத்தில் அத்தனை மாடுகளும் தூரத்துக் கொட்டகைகளில் அடைய, சிறுவர்கள் பாடியாடி கத்திக்கொண்டிருந்தனர். நீண்ட நிலத்தில் ஆங்காங்கே சிறு நெருப்புக் குண்டங்களைப் போல ஏதோ ஒளிர, மெல்ல எழுந்து அவற்றை நோக்கிச் சென்றேன். சற்று நெருங்கியபோது அலையாடிய நெருப்பைச் சுற்றி சிலர் ஆடிக்கொண்டிருந்ததைப் போலிருந்தது. ஏதேதோ கத்திப் பாடியது போலவும். இன்னும் நெருங்க, அந்தப் பாடல் முழுதும் வசை என விழுந்தது. நடன அசைவுகள் முழுக்கக் காமம். நெருப்புக் குண்டத்தின் மேலாக இருபுறமும் நடப்பட்டிருந்த கழிகளை இணைத்துச் சொருகப்பட்டிருந்த மூங்கில் குச்சியின் நடுவே தசைப் பிண்டமொன்று வெந்துகொண்டிருந்தது. நெருப்பின் பெரிய கருமுட்டை போல. சட்டென என் முகத்தில் அடித்தது அப்பிண வாடை. அடுத்த நொடி என்னையறியாமல் என் நாவில் எச்சில் ஊற, எனக்கான மந்திரத்தை ஓங்கிக் கத்தியபடி நின்றேன். அவர்களில் ஒருவன் என்னைப் பார்த்துக் கையசைத்து அழைத்தான். அவனது அழைப்பிற்காகக் காத்திருந்ததைப் போல ஓடிச்சென்றேன் நான். அக்கூட்டத்தின் அருகே சென்று பரபரத்து நின்றேன். என் கழி என்னைத் தாங்கி நின்று நடுங்கியது. கடைசியாக எப்போது உண்டேன் என்பது நினைவில் இல்லை. அவன் அச்சதைப் பிண்டத்தைத் தன் விரலால் குத்திப் பார்த்தான். சுட்டுவிட, விரலை உதறி வாய்க்குள் வைத்துச் சப்பியபடி என்னைப் பார்த்துச் சிரித்தான். இன்னொருவன் அவனை அலட்சியமாகப் பார்த்தபடி வந்து வெந்து வழிந்த கொழுப்போடு ஒரு பெரிய துண்டைப் பிய்த்து எடுத்துக்கொண்டு என்னை நோக்கி வந்தான்.
அதை கிட்டத்தட்ட அப்படியே விழுங்கிக்கொண்டிருந்தேன்.
“சாமி கடசியா எப்போ சாப்ட்டது? விட்டா எங்களையே முழுங்கீருவீரு போலயே?” என்றான் ஒருவன். மொத்தக் கூட்டமும் என்னைப் பார்த்துக் கைநீட்டிச் சிரித்தது.
“அடச் சும்மாக் கெடங்க சவத்து மூதியளா, அவரு எப்பேர்ப்பட்ட சித்தரு, நம்ம கொடுப்பின, இன்னிக்கி நம்ம கையால சாப்டுகாரு. சவத்துப் பயக்களுக்கு குடிச்சா ஆளு யாரு என்னன்னு ஒரு மயிரும் வெளங்காது,” என்று அதட்டினான் கூட்டத்தில் பெரியவன்.
ஒரு நொடி நின்றவன், அவர்களைப் பார்த்து, “ஏன் உங்க ஊர்ல பொம்பளைங்க யாருமே இல்ல?” என்று கேட்டு விழித்தேன்.
ஒருவரையொருவர் பார்த்து சைகையில் ஏதோ சொல்லிக்கொண்டார்கள். “அடேய், இருக்க எடம் குடுத்தியல்லா, இந்தா கெடைக்கு ரெண்டாடு கேக்குவு, போயி குட்டியள கூட்டியாருங்கல மயிரானுவலா, சாமியாம் சாமி, மண்ணாங்கட்டி,” என்று சொல்லிச் சிரித்தான் ஒருவன்.
“எலேய், மூக்க அடிச்சி ஒடச்சிருவம் பாத்துக்க, ஒங்கப்பனப் போலன்னு நெனச்சியோ? சாமிக்கப் பார்வ விழுந்துரப்புடாது மவனே. பொறவு ஒன்னும் வெளங்காது பாத்துக்க. ஒனக்கு ஏற்கெனவே அரச் சாமானம்..”
“ஏன்? ஏன் பொம்பளைங்க இல்ல? எல்லாரும் எங்க இருக்காங்க?”
கூட்டத்தில் பெரியவன் என்னருகே வந்து நின்றான். “சாமி, மொதல்ல உக்காரும். சாப்புடும்.”
“நல்லது. ஆனா, எங்க எல்லாரும்? நா என்னவோ பாத்தேனே? மாடுகளும் பெரிய பெரிய பொம்பளைங்களும். யாரு அவங்கெல்லாம்?”
“சாமி என்ன சொல்லுதியோ, ஒன்னும் வெளங்கல்ல. சரி, விடும். ஒம்ம பார்வ படாதான்னு நாங்க அலையாத எடமே இல்ல, இப்பிடித் திடீர்னு எங்க முன்னாடி வந்து நிக்கீரு. சரி, அதுவும் ஒரு கொடுப்பினதாம் போல. என்னன்னா, இங்க பொம்பளைங்க பெருசா வெளிய வர மாட்டாளுவோ. வூட்டுக்குள்ளதான் எல்லாமே.”
“அது, எதுக்கு? எதுக்கு?”
“எதுக்குன்னு சொன்னா.. அது, அவளுவோ அப்புடித்தான் இருக்காளுவோ. இங்கன அதாக்கும் பழக்கம். பின்ன, குட்டியள தூக்கிச் சொமக்கவும் குண்டி கழுவவும் சரியா இருக்கும்லா?”
இன்னொருவன் என்னருகே வந்து என் காலில் விழுந்தான். “சாமி, எனக்கு ஒறக்கமே வரமாட்டுக்கு சாமி. எதாம் செய்யும் சாமி. ஒறங்கி மாசக்கணக்காச்சி.”
“எலேய், தள்ளிப் போல அங்கண. ஒருத்தங் குடும்பத்த விட்டுருக்கியா நீ? மானங்கெட்டவனே, ஒறக்கம் எப்பிடில வரும் நாய்க்குப் பொறந்த பயல? தள்ளிப் போறியா, சமுட்டு வாங்குகியா?” என்று அதட்டினான் பெரியவன்.
“அவன விடுங்க. ஏன் எல்லாரும் இப்பிடி இங்க உக்காந்து சாப்பிடுகீங்க? மொத்த கிராமமும் இங்கதான் இருக்கு.”
“ஓ, அதுவா சாமி. இன்னிக்கி எறச்சில்லா? அதாக்கும்.”
“எறச்சின்னா? அதனால என்ன?”
“நம்ம வீடுகள்ள எறச்சி எடுக்கதில்லல்லா சாமி. அதான் இங்கனயே சுட்டுத் திங்கது,” என்றபடி எனக்கு இன்னொரு துண்டைப் பிய்த்து வந்தான்.
“புரியல, வீட்டுல ஏன் எடுக்க மாட்டீங்க?”
“அது யாருக்குத் தெரியும் சாமி! அப்பன் தாத்தன் காலத்துலயே அப்புடித்தான். பொம்பளய பத்தியச் சாப்பாடு மட்டுந்தான திங்கணும்!”
“என்ன?”
“பொம்பளைங்க சைவம் மட்டுந்தான் சாமி திம்பாங்க.”
“ஏன்? ஏன்?”
“சாமிக்கு எல்லாம் புதுசு மாதில்லா கேக்காரு..” என்று சிரித்தான் இன்னொருவன்.
“சாமி, நம்ம பொம்பளைங்க சுத்த பத்தமாதான் இருக்கணும்னு வாக்கு. பகல்ல வெளிய வர மாட்டாளுவோ. எறச்சி வாசம்கூட புடிக்க மாட்டாளுவோ. வாசம் புடிச்சா சத்திச்சி சத்திச்சி படுத்துருவாளுவோ. ஏம்னு கேட்டா, அது அப்புடித்தான். அதாக்கும் நம்ம பயக்க வெளிய இப்பிடித் திரிஞ்சி எதையாம் புடிச்சி சுட்டுத் திங்கது. இன்னைக்கி இதான் மாட்டிச்சி. நல்ல சொடியுள்ள கொரங்காக்கும். பொறவு அனுமாருக்கு ஒரு பங்கு வச்சிக் கும்புடணும்.”
மொத்தக் குடலும் வெளியே வந்து விடுவதைப் போல ஓங்கரித்துக்கொண்டு வாந்தியெடுத்து மயங்கிச் சரிந்தேன். கைக்குழுவை மீனைத் துடிக்கத் துடிக்க வெட்டி அதன் மெல்லிய தோலை வாழை நார் போல உரித்தெடுத்தாள் அம்மா. சட்டி பத்த வச்ச அரைப்பின் சிவப்புக் கை. பொரிச்ச மீனின் மேலாக விழுந்த பொடி. வெள்ளரிக்காய்ப் புளிக்கேரி. பெரிய பெரிய உருண்டைகளாகப் பிடித்து என் உள்ளங்கையில் வைத்தாள். அதன் நடுவே ஒரு துண்டு பொரிச்ச மீன். உடல், மனம், முகம், சுவாசம் எங்கும் கைக்குழுவை மணம். அடுத்த உருண்டைக்குக் கைநீட்டியபோது கண்கலங்கியபடி என்னை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தாள் என் மனைவி.
மீண்டும் கண்விழித்த போது காலைச் சூரியனின் ஒளி என் முகத்தில் சுள்ளென அடித்தது. ஓர் ஒடமரத்தின் அடிநிழலில் கிடந்தேன். என்னைச் சுற்றிக் கிடந்த கயிற்றுச் சாக்கு அப்போது வெக்கையாக இருக்க, உதறித் தள்ளினேன்.
“என்ன சாமி, ஒரே பொலம்பல் ராவு பூரா? ஒடம்புக்குக் கொள்ளாமா?”
அருகே, ஒரு குடிசையின் முன் குத்தவைத்து துணிகளை ஒரு கல்லில் அடித்தபடிக் கேட்டாள் அப்பெண். கசங்கிய சிவப்புச் சேலை. செம்பட்டைத் தலை. அழுக்கேறிப் போய் நிறம் மங்கிய உடல். அவள் கால்களில் சிறிதும் பெரிதுமாக சில மங்கிய தழும்புகள். குடிசையின் திண்ணையில் இருந்தபடி சிறு கற்களை மேலே தூக்கிப் போட்டுப் பிடித்துக்கொண்டிருந்தாள் ஒரு சிறுமி.
“குடிக்க எதாம் வேணுமா சாமி? பசிச்சிருக்கும் லா?” என்று கேட்டபடி கைகளைக் கழுவினாள் அப்பெண்.
“நா, நா எப்டி இங்க வந்தேன்?”
ஒருகணம் என்னை ஏறிட்டுப் பார்த்தவள், “சாமி வெளையாட்டுக்கு அளவே இல்லன்னு எல்லாரும் சொல்லது சரிதாம் போல,” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றாள். அந்தச் சிறுமி என்னைத் திரும்பிப் பார்த்துச் சிரித்தாள். நான் அவளைக் கையசைத்து அருகே வர அழைத்தேன். எழுந்து கற்களையெல்லாம் ஒதுக்கி ஓரமாக வைத்துவிட்டு என்னை நோக்கி வந்தாள். அவளது முகம் மெல்ல மெல்லத் துலங்கி வந்தபோது, என் கண்கள் கண்ணீர் பெருக்கின. அந்த முகம் எங்கோ எனக்குள் ஒடுங்கியிருந்த முகம். யார், யார் என்று மனம் அடித்துக்கொண்டது. சிறுமி என்னருகே வந்து நின்று என்னைக் கூர்ந்து கவனித்தாள். அப்படியே என் குழந்தையை வார்த்தெடுத்த மாதிரி முகம்.
“நீ குளிக்கவே மாட்டியா? அம்மா சொன்னா.”
நினைவிற்குத் திரும்பியவனாக, “ஆமாம்மா, ரொம்ப நாளாச்சு. இன்னிக்கு குளிச்சிருவேன், சரியா?” என்றேன்.
“எதுக்கு இவ்ளோ பெருசா முடி வளத்திருக்க? அசிங்கமா. உம் மொகமே தெரிய மாட்டுக்கு. பூச்சாண்டி, பூச்சாண்டி,” என்று சொல்லிச் சிரித்தாள். என் குழந்தையின் அதே குரல், அதே சிணுங்கல் சிரிப்பு. இப்போது அவள் எவ்வளவு வளர்ந்திருப்பாள்? எத்தனை வயதிருக்கும்? அச்சிறுமியின் கையைப் பிடித்து அவள் தலையைக் கோதிவிட்டேன். முதல் முறை என் குழந்தையைக் கைகளில் தாங்கிய போது உணர்ந்த வெம்மை சட்டென என்னைச் சூழ்ந்து கொண்டது. அதிலிருந்து வெளிவரும்படி என்னை நானே அடித்துக்கொண்டு உதறியபடி பின்னகர்ந்தேன். அச்சிறுமியின் சிரிப்பு என் முயற்சியிலிருந்து என்னைப் பிடித்திழுத்தது.
“என்ன, எங்க தாத்தா மாரி நீங்களும் செய்யீங்க?” என்று கேட்டாள். “தாத்தா இப்பிடித்தான் அடிச்சிட்டே இருக்கும், போ, போன்னு சொல்லிட்டு..”
நிதானம் திரும்பிய மாதிரி இருந்தது. தூரத்து மலையின் நிழல் என் காலடியில் வந்து நின்றதைப் போலிருந்தது. “அப்பா எங்கம்மா?”
“அப்பால்லாம் வர மாட்டாங்க.”
“ஏன்?”
“ஏன்னா, அப்பாக்குதான் இன்னொரு குட்டிப் பாப்பா பொறந்துருக்கே. அங்கதான் இருப்பாங்க. அம்மா சொன்னா.”
உள்ளிருந்து வெளிவந்த அப்பெண் ஒரு கலத்தில் எதையோ எடுத்து வந்தாள். என்னிடம் நீட்டியபடி, “குடிங்க சாமி, பொறவு எதாம் செஞ்சித் தாரேன். சாமிக்குக் கொடுக்கக்கூட கழியாத்தவளா ஆயிட்டேனே,” என்றபடித் தலை குனிந்தாள். மெல்ல விசும்பினாள்.
“அட, எனக்கெல்லாம் இதுவே போதும்மா. ஆமா, நீங்க தனியாவா இருக்கீங்க?”
கேட்ட நொடியில் சட்டென என் காலருகே விழுந்தவள் ஓவென ஆழ ஆரம்பித்தாள். ஏதேதோ சொல்லிப் புலம்பியபடி அடக்கி வைத்திருந்த மொத்த அழுகையையும் என்னை நோக்கி வீசி எறிந்தாள். என் கைகள் நடுங்கிக்கொண்டிருந்தன. அந்தச் சிறுமி அவளது அம்மாவின் அருகே சென்று நின்று அவளது கைகளைப் பிடித்துக்கொண்டாள். அவளைச் சமாதானப்படுத்துவதைப் போல அவளது காதுக்குள் ஏதோ சொன்னாள்.
“போட்டும், போட்டும். அழாதம்மா. எல்லாம் சரியாகும்,” என்றேன்.
அழுகை மெல்ல ஓய்ந்தது.
“ஆம்பளயாப் பொறந்திருக்கணும் சாமி. சரி, எனக்குத்தான் இப்படின்னா, வந்து பொறந்ததும் பொண்ணாப் போச்சு,” என்று சொன்னவள் சட்டென இல்லையெனத் தலையை ஆட்டியபடி என் கால்களைத் தொட்டுக் கண்ணில் ஒத்திக்கொண்டாள்.
“மன்னிச்சிருங்க சாமி. ஏதோ பொலம்பிட்டேன். நீங்க தந்த வரமாக்கும் இவ. இவளும் இல்லன்னா நா செத்துப் போயிருப்பேன். என்ன இருக்கு எனக்குன்னு?”
நான் குழப்பமாகப் பார்த்தேன்.
“என்ன பாடு படுத்துனாங்க தெரியுமா சாமி. இவனுவளுக்கு ஆக்கிப் போடணும், படுக்கணும், பெத்துப் போடணும். அவனுவோ நல்லா ஊர் மேய்வானுவோ. ஒரு வார்த்த உரிமையா கேட்டுரக் கூடாது. மூஞ்சி மேலயே சமுட்டுவானுவோ. இவ வயித்துல இருக்கும்போ வயித்துலயே சமுட்டினான் அந்தக் கூய்வுள்ள. புள்ள பொழச்சதே பெருசு. இதுல கட்டிட்டு வந்த மொத வருசமே பெத்தும் போட்டுரணும். நமக்குன்னு ஒரு ஆச இருக்காதா சாமி? என்னெல்லாம் கனவு கண்டிருப்பேன். எல்லாத்தயும் இருட்டா ஆக்கிப் போட்டானே கட்டையில போறவன். என்ன மயித்துக்கு அப்பிடிக் கெட்டிக் கொண்டாரணும்னு கேக்கேன்? மொட்டப் பயலா சுத்தித் திரிய வேண்டியதான? சாரத்த அவுக்க மட்டும் கொஞ்சிக் கொஞ்சி வரணும். மானங்கெட்ட பய. இந்த லச்சணத்துல இவனுக்கு இன்னொருத்தி கேக்கு. அந்தக் கண்டாரோழிக்கும் வெவரம் வேண்டாமா? அவன் பெத்தப் பிள்ளயப் பாத்து எத்தன மாசமாச்சி தெரியுமா சாமி? நா ராவுல காட்டுல அளஞ்சி சுள்ளியும் மத்ததயும் பொறக்கிட்டுத் திரியேன். பின்ன, எம்புள்ளய நாந்தானப் பாக்கணும்?”
சற்று நேரம் மௌனமாக இருந்து மூச்செறிந்துகொண்டிருந்தாள்.
“ஏன் நீங்க யாரும் வெளிய வரதில்ல?”
“எல்லாவனும் பொணந்தின்னிப் பயக்கல்லா சாமி. பச்சப் பிள்ளயளக்கூட விட்டு வைக்க மாட்டானுவோ.”
“என்னம்மா இப்பிடிச் சொல்றீங்க?”
ஒன்றும் பேசாமல் கோவமாகத் தன் நகங்களைக் கடித்துத் துப்பிக்கொண்டிருந்தாள். சற்று நேரத்தில் அவளே பேச ஆரம்பித்தாள்.
“பின்ன என்ன சாமி, இந்தப் புள்ளக்கி என்ன வாழ்க்க இருக்கு? நாம் போய்ட்டன்னா என்ன ஆகும்? எவனாம் பத்திக்கொண்டு போவான். வெறும் சொயநலம் புடிச்ச சனம். மத்த உயிர மயிராத்தான் பாக்கும். கழுத்துக் கட்டு, கால் கட்டு, ஒரு மாதிரி நெரிச்சிக் கொல்லக் கொண்டு போறது மாதிரி இருக்கு சாமி, மூச்சு முட்டிட்டி வருகு. எல்லா உசுரும் ஒன்னுதான? பொறவு என்ன ஆளுக்கொரு சட்டம். எல்லாருந்தான் ஒடம்ப வருத்தி வேல செய்யுதோம். இதுல வெளிய வரப்படாது, எவன் கூடயும், ஏன் எவ கூடயும்கூட பேசப்படாது. பகல்ல நக போடப்படாது, எறச்சி திங்கப்படாது, சுத்த பத்தமாம? அப்பதான் பெருமாள் வீட்டுல இருப்பாராம? ஆனா, அவனுவோ வாயில மட்டும் நல்ல வாடையா வருகு? பொணம் தின்ன மாரிதான் வாடையடிக்கி.. அதையும் கொமட்டிக்கிட்டே தாங்கிக்கணும். எத்தன, எத்தன, வெளிய சொல்ல முடியாத்த நெறய இருக்கு சாமி. அன்னிக்கி ஒங்கள மட்டும் பாக்கலன்னா எத்தனையோ கொமருக மாதி நானும் மொட்டப் பாறையில ஏறி குதிச்சிருப்பேன். அதுக்குதான் வந்தேன். என் விதி, நீங்க பாத்தீங்க. சரி, அதனால ஒரு கொறவும் இல்ல. ஒங்க புண்ணியத்துல எனக்குன்னு இவளும் அவளுக்குன்னு நானும்னு ஆச்சி.”
நான் கண்களை இறுக்கமாக மூடியபடி என் மந்திரங்களை உச்சரிக்க ஆரம்பித்திருந்தேன். என் கால்கள் எக்கணமும் எழுந்து ஓடிவிடுவதைப் போலத் துடித்தன. குடிசைக்குள் சென்ற அச்சிறுமி எதையோ எடுத்துக்கொண்டு வந்தாள். அதைத் தன் கையால் துடைத்தபடி என் முன் நீட்டினாள். ஓரங்கள் கிழிந்து அரித்துப் போயிருந்த ஒரு புகைப்படம். நான் அதைப் பார்த்தபடி சில கணங்கள் அசைவற்று நின்றேன்.
“இது அப்பா, இது அம்மா, அம்மா கைல நானு,” என்று சுட்டிக் காட்டினாள் அச்சிறுமி. “அப்பா வரும்போ எனக்குப் புதுப் பாவாட சட்ட வாங்கிட்டு வருவாங்களே. அம்மா சொன்னா,” என்று சொல்லி மலர்ந்தாள்.
சட்டென அச்சிறுமியை அப்படியே வாரியணைத்து முத்தமிட்டேன். அவள் தலைமீது கைவைத்து என் மந்திரங்களைச் சொன்னேன். அப்பெண்ணும் என் காலில் விழுந்தாள். ஒரு சில நொடிகள் அப்படியே நின்றேன். மெல்ல அவர்களைத் தவிர்த்து வெளி நடந்து தென்திசை நோக்கி விரைந்து நடக்க ஆரம்பித்தேன்.
“சாமி, சாமி, ஒங்கக் கம்பும் பானையும் விட்டுட்டுப் போறீங்களே,” என தூரத்தில் கேட்டது ஒரு மெல்லிய குரல்.