கண்ணகன் பற்றி அண்ணாச்சிக்கு… கண்ணகனுக்கும் எனக்கும் ஏறத்தாழ இருபது ஆண்டுகளுக்கும் மேலான நட்பு. மிளிரும் அவன் கண்களும் அடர்கரும் பெரிய தாடியும் ஒல்லி உடல்வாகும் எல்லாம் சேர்ந்து, அவன் உடல்மொழியிலும் முகபாவத்திலும் குழந்தை மையை ஏற்றி வைத்துக் கொண்டாடிக்கொண்டேயிருந்தன. மாநிறம் என்று வழங்கும் உடல் வண்ணம், தாராளமாக விட்டு வளர்த்த சிகை. அந்தப் பூரிக்கும் இளமையின் துள்ளலும் துடிப்பும் ஆர்ப்பரிப்புமெல்லாம் கவிதை மட்டுமாகத்தானிருந்தது. விவரிப்புக்கு அப்பாற்பட்ட மனிதநேயமாக இருந்தது. சொல்லிலும் செயலிலும் அவன் பேரற்புதமாகவே இறுதிவரை திகழ்ந்துகொண்டிருந்தான். அப்படியென்றால் அவன், வனாந்தரத்தில் இரகசியமாகப் பூத்திருக்கும் வண்ணாதிசயமும் வாசனையும் கொண்ட காட்டுப்பூவானவன், கோடிப் புனிதன். இப்படிச் சொல்வதுதான் அவனுக்குப் பொருத்தமானதாகவும் எனக்குச் சற்று இதம் தருவதாகவும் இருக்கிறது. அவன் கோடிப் புனிதன்.
என்னைச் சந்திப்பதற்கு முன்பே அவன் என் ‘ரத்த உறவுகள்’ நாவலைப் படித்திருந்தான். பல சந்திப்புகளில் அதை அவன் மனமாரப் பாராட்டத் தவறியதில்லை. தன் கதையும் இது போன்றதுதான் என்றும் தானும் ரத்த உறவுகளைப் போல ஒரு நாவல் எழுதவிருப்பதாகவும் அடிக்கடி ஆவேசமாகச் சொல்லிக்கொண்டிருப்பான். நானும் இயன்ற வரை உத்வேகப்படுத்துவேன். தான் எழுத உத்தேசிக்கும் நாவலில் வரக்கூடிய சம்பவங்களையெல்லாம் விவரித்திருக்கிறான். மிகவும் வலி தரக்கூடிய நினைவுத் தொகுப்புகள் அவை. எழுதப்போகும் நாவல் குறித்து மிகத் தீர்மானமாக, உறுதியாக இருந்தான். ரத்த உறவுகள் இப்படி ஒரு உத்வேகத்தை அவனிடம் ஏற்படுத்தியிருந்ததை உணர முடிந்தது. அதை எழுதி முடித்து அவன் வெளியிட்டிருந்தால், நாவல் இலக்கியத்தில் ஒரு அரிய சேர்க்கை நிகழ்ந்திருக்கும். அது நடக்காமல் போய்விட்டது. நம் மனமறியாது நடக்கும் பேரிழப்புகளில் அதுவும் ஒன்றாகிவிட்டது.
இதை நான் எழுதிக்கொண்டிருக்கும்போது, அவன் கன்னத்தில் அறைந்து, “எதற்கடா இப்படி வெறித்தனமாகக் குடித்துச் செத்தாய்?” என்று கேட்கவேண்டும் போலிருக்கிறது. “நீ அடிண்ணே, வேற யாருண்ணே என்னை அடிக்க முடியும், அடிண்ணே…” என்று சொல்லக்கூடியவன்தான்.
என் தம்பி, என் ஆன்மாவின் பகுதியானவன், கவிதையின் காளியாக இருந்தான். இந்தக் கவிதைக் காளியின் மூர்க்கமெல்லாம் பிரபஞ்சமணைந்த கவிதை வெளிப்பாடுகளே. அரிதினும் பேரரிய கவிதை உள்ளம் கொண்டவன் அவன். இதயத்தை இளக்கிப்போடும் தீரா நேசத்தின் பித்துநெறியில் நம் தோள் சேர்த்துக்கொண்டு செல்லும் கவிதைகளைப் படைப்பவன். மொழி தன் சாகரச் செல்வங்களை அவன் சேகரித்துக்கொள்ளட்டும் என்று மாபெரிய வலையை அவனுக்குக் கொடுத்திருந்தது. கவிதையின் தொடக்கப் புள்ளியில் படகோட்டிச் சென்றால் நிறைவின் கடைசி வார்த்தையின்போது பாரம் மிகுதியான படகு அலையின் ஒயிலாட்டத்தில் கொண்டாடித் திரும்பும். அவ்வளவு இளம் வயதிலேயே அவனிடம் செம்மச் செம்ம கவிதையின் திரு மண்டிக் கிடந்தது. புல்லுக்கும் பூவுக்கும் உபாசகன். மண்ணையும் மரத்தையும் ஆராதித்துக் களி நடனம் புரிபவன். அன்பிற்குரியோர்க்கெல்லாம் முத்தமான முத்தங்கள் கொடுத்து பாசங்கொண்டாடுபவன். நாளெல்லாம் தாயைப் பிரிந்து ஏக்கமுற்றிருந்த குழந்தை, அம்மா வந்ததும் செல்லச் சிணுங்களுடன் அவள் மடியிலமர்ந்து கேசத்தில் விரல் அலைவது போன்று கவிதை அவன் இதயத்திலமர்ந்து சகல பொழுதிலும் அவனைத் தழுவிச் சீராட்டிக்கொண்டிருந்தது. இந்த உறவுதான், காலந்தோறும் அதிநுண்மையில் கூர்பட்டுவந்து, அந்தப் புலனாகா முனை பட்டென்று பூ மலரும் ஒரு வெடிப்பு போன்று மறைந்துவிட்டது. அது காலத்தில் கரைந்து போயிற்று.
சோவியத் நாவலொன்றில் படித்த காட்சி. ஒரு சிறுவன், தன் வீட்டின் மேல் மாடியில் வெகுகாலமாகப் பூட்டப்பட்டுக் கிடக்கும் அறையொன்றை யாருக்கும் தெரியாமல் திறந்து பார்ப்பான். அங்கே கணிசமாகப் புத்தகங்கள் இருக்கும். எங்கும் தூசு, ஒட்டடை. மக்கல் நெடி. சுவரில் பெரியதொரு ஆயில் பெயிண்டிங். ஒரு மனிதரின் உருவப் படம். அந்தச் சமயத்தில் அது யாரென்று அவனுக்குத் தெரியாது. பிற்காலத்தில்தான் அவன், அவர் தன் தாத்தா என்றும் – காதலியைத் தேடி எங்கோ வெளிநாட்டுக்குச் செல்லும்போது இறந்துவிட்டார் என்றும் அறிந்துகொள்வான். என் நினைவிலிருந்து சித்தரிப்பது இது. அவர் இருக்கும்போது பயன்படுத்திய அறை புழங்காமல் அப்படியே பாதுகாக்கப்பட்டு வருவதாக உணர்வான் அந்தப் பையன். என் தம்பி கண்ணகனும் அப்படித்தான் கவிதையைத் தேடிச் சென்றான். அதையே தியானித்தான். அது கொடுத்த கண்களாலே உலகத்தைப் பார்த்தான். அதனாலேயே வாழ்ந்தவன் இறுதியில் கவிதையை மிகுபுணர்ந்து திளைத்துக் கிளர்ந்து விகசித்து, உறைந்த அந்த உச்சத்தில் நிலைத்தான்.
தஞ்சையில் ஒரு இலக்கியக் கூட்டம். நானும் அவனும் சென்றிருந்தோம். அங்கே ஒரு கவிஞர் மீது அன்பு மீதுற அவன் அவரை முத்தமிட விரும்பியிருக்கிறான். அவர் அதை ஏற்காமல் மறுத்துவிட்டார். இது குறித்து அவன் மிகவும் வேதனைப்பட்டு என்னிடம் சொன்னான்: “அவர் என் முத்தத்தை மறுத்துவிட்டார்…”
“சரி, விடு. அறிந்த நண்பர்களுக்கு நீ முத்தம் கொடுத்தால் அதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வார்கள். அறிமுகமற்றவர்களை நீ முத்தமிட விரும்பியிருக்கக்கூடாது” என்றேன். அவனுக்குத் தோன்றும் போதெல்லாம் என்னிடம் அலைபேசியில் தொடர்புகொள்வதுண்டு. பெரும்பாலும் போதையில்தான் பேசுவான். நான் எந்த வேலையில் இருந்தாலும் அவன் அழைப்பைத் தவிர்க்கமாட்டேன். பேசி முடிக்கும்போது சொல்வான், “அண்ணே, எனக்கொரு முத்தம் கொடுண்ணே!”
“உனக்கு என் ஆயிரம் முத்தங்களடா, தம்பி!” என்பேன்.
“என்னண்ணே இப்டிச் சொல்ற, நல்லா சத்தம் வரமாதிரி முத்தம் கொடுண்ணே!” என்று வற்புறுத்துவான் அவன்.
அப்படியான நேரங்களில் சில சமயம் என் மனைவி அருகிலிருப்பார் அல்லது ஒரு கூட்டத்தின் நடுவிலிருப்பேன். பேருந்தில் பயணித்துக்கொண்டிருப்பேன். அப்போதெல்லாம் அவன் கேட்டுக்கொண்டதுபோல என்னால் அவனை முத்தமிட இயன்றதில்லை. அவன் மீண்டும் மீண்டும் அந்த முத்த ஒலிக்காக வேண்டியபடியே இருப்பான். வேறு வழியின்றி தொடர்பைத் துண்டிக்க வேண்டியிருக்கும். இப்படிப் பலமுறை நடந்திருக்கிறது. அவனிடம் நீண்டநேரம் பேசிக் களைப்புற்று, “இதோ, சிக்னலைக் கடப்பதற்காகக் காத்திருக்கிறேன்” என்றோ, “வாசலில் பால்காரர் நிற்கிறார்” என்றோ, “கொஞ்சம் பொறு, நண்பரை வழியனுப்புவதற்காக அவருடன் சென்றுகொண்டிருக்கிறேன்…” என்பதாகவோ சொல்லி பேச்சை முடிப்பேன்.
இதேபோன்று நிறைந்த போதையில் பிரான்சிஸ் கிருபா பேசும்போதும் – அவனது குழறல் பேச்சை புரிந்துகொள்ளப் பிரயாசைப்பட்டு முடியாமல் – இந்த வகையில் ஏதாவது ஒன்றுசொல்லி நிறுத்துவது உண்டு. ஆனால் கிருபா என்னிடம் முத்தம் கேட்பதில்லை. அவனுக்குப் பிடித்த என் கவிதை வரிகளை ஆவேசமாகச் சொல்லி உரக்கச் சிரிப்பான் அல்லது எப்போதோ நடந்த ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டுப் பேசுவான். எனக்கு அது முற்றிலும் மறந்துபோயிருக்கும். அப்போது அவன் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருப்பதைத் தவிர வேறு வழியிருக்காது. தமிழினி பதிப்பகம் அண்ணாச்சி வசந்தகுமார் ஒருமுறை கிருபாவிடம், “தமிழில் ஜெயமோகனும் யூமாவும் நிறைய வேலை செய்துகொண்டிருக்கிறார்கள்” என்று சொல்லிவிட்டார் போலும். நான் அப்போது அதிகமான மொழிபெயர்ப்புகள் செய்துகொண்டிருந்ததால் அவர் அவ்வாறு குறிப்பிட்டிருக்கக்கூடும். இதை உறுதியாகப் பிடித்துக்கொண்டான் கிருபா. மிகை போதையில் பேசும்போது, “தமிழில் இரண்டு பேர்தான் இயங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்று அண்ணாச்சி சொன்னார்” என்று கேலியாகப் பெருஞ்சிரிப்பு சிரிப்பான். எப்போது பேசினாலும் இதைக் குறிப்பிட்டு ஒரு கிண்டல் சிரிப்பு சிரிக்காமல் அவனால் இருக்க முடியாது. எல்லாம் ஒரு செல்லம்.
சென்னை ஆங்கிலோ இந்தியன் ஸ்கூலில் புத்தகக் காட்சி நடந்துகொண்டிருந்தது. அப்போது கும்பகோணத்திலிருந்து கண்ணகனும் வந்திருந்தான். கிருபாவும் வந்து சேர்ந்தான். மேலும் ஒன்றிரண்டு நண்பர்கள் இருந்தார்கள். அந்த இரவில் நாங்களெல்லாம் அருகிலிருந்த மதுக்கடைக்குக் குடிக்கச் சென்றோம். மதுச்சாலை என்பான் கண்ணகன். எல்லாம் நன்றாகத்தான் நடந்துகொண்டிருந்தது. அன்புப் பரிமாற்றங்கள், ஒருவர் குறித்து ஒருவருக்கான மகிழ்ச்சி வெளிப்பாடுகள், பாராட்டு மொழிகள்… வெளியே வந்தோம். அங்கும் வாசலில் புகைத்தபடி பேசிக்கொண்டிருந்தோம். அப்போது அந்த வழியே ஒரு போலீஸ்காரர் போனார். பெருத்துப் பொங்கிப் பீறிடும் அன்புணர்வை அடக்க மாட்டாமல் கண்ணகன், அந்தக் காவலரைக் கட்டிப்பிடித்து முத்தமிட்டான். அவர் வெட்கி நெளிந்து சிரித்தடியே அப்பால் சென்றார். எங்கள் பேச்சு பின்னரும் தழைத்துச் சென்றது. அந்தப் போதையின் பிரகாசத்தில் நாங்கள் துலங்கிக் கொண்டிருந்தபோது – யாரும் எதிர்பாராமல் திடீரென்று அது நடந்தது. நான்கைந்து போலீஸ்காரர்கள் எங்களை முற்றுகையிட்டு எங்கள் மீது தடியடிப் பிரயோகம் செய்ய ஆரம்பித்தார்கள். தாறுமாறான, வன்மம் மிகுந்த தாக்குதல். “போலீஸ்காரனுக்காடா முத்தம் கொடுக்குறீங்க!” என்று சொல்லிக்கொண்டே அடித்தார்கள். தங்கள் கடமையில் திருப்தியுற்று அவர்கள் திரும்பியபோது நாங்கள் சின்னாபின்னமாகியிருந்தோம். இதுபோன்ற அனுபவம் புதிது. மெல்ல நடந்து பிரதான சாலைக்கு வந்தோம். ஒருவரை ஒருவர் சமாதானப்படுத்திக்கொண்டோம். அப்போது கிருபா மிகுந்த கனிவுடன் எனக்கு ஐநூறு ரூபாய் கொடுத்தான். “கவலைப்படாதேண்ணே, ஏதோ எதிர்பாராமல் நடந்துடுச்சி…” என்றான்.
கவிதை, தனதினியன் என்று மாலையிட்டு சுபாஷ் சந்திர போஸைத் தேர்ந்திருந்தது. சுபாஷுக்கு கண்ணகன் என்று பெயர் சூட்டியது பிரான்சிஸ் கிருபா. 19/04/1981-இல் பிறந்த கண்ணகன் முப்பத்து ஒன்பது வயது நிறைவடையாத காலத்தில் 21/01/2020-இல் மறைந்தான். கும்பகோணம் அருகிலுள்ள பட்டீஸ்வரம்தான் அவன் ஊர். பட்டீஸ்வரத்தில் திருமலைராயன் ஆற்றுக்கும் முடிகொண்டான் ஆற்றுக்கும் இடையில் மரங்கள் அடர்ந்து சூழ்ந்த பசுங்கரையில் அவனது தோட்டக் குடில் இருந்தது. சுந்தரப்பெருமாள் கோயில் அரசு மேனிலைப் பள்ளியில் முதுகலைத் தமிழாசிரியராகப் பணிபுரிந்து வந்தான் கண்ணகன். ‘தமிழ் நவீன கவிதைகளின் செல்நெறிகள் – மார்க்சிய நோக்கு’ எனும் தலைப்பில் முனைவர்பட்ட ஆய்வைக் கும்பகோணம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் மேற்கொண்டிருந்தான். ஆய்வு நிறைவு பெறவில்லை. வேலை கிடைப்பதற்கு முன்பு நண்பர் ஒருவரின் ஸ்வீட் ஸ்டாலில் பகுதி நேரமாக வேலை செய்துவந்தான். அதில் கிடைக்கும் பணம் அவனது சிறு தேவைகளை நிறைவுசெய்தது. அப்போதும் அவன் நண்பர்களுக்கு உதவுவதில் மிகுந்த தீவிரமும் ஆர்வமும் கொண்டிருந்தான்.
ஒரு நேரம் நான் சென்னையில் வீடு மாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன். முன்பணம் கொடுக்கத் தொகை திகையவில்லை. இதை நான் யாரிடமோ சொல்லிக்கொண்டிருந்தேன். இது எப்படியோ கண்ணகன் செவிகளுக்கு வந்தடைந்துவிட்டது. அடுத்த நாளே அவன் என் வங்கிக் கணக்கு எண்ணைக் கேட்டு வாங்கி பத்தாயிரம் ரூபாய் அனுப்பி வைத்தான். யார் மூலமாகவோ என் சிரமத்தை அறிந்துகொண்டு உடனடியாக அவன் செய்த உதவி. பிறகு இந்தப் பணத்தை நான் கொடுக்க முற்பட்டபோது திடமாக மறுத்து, “இதை திரும்பப் பெற்றுக்கொள்வதற்காக நான் உனக்குக் கொடுக்கவில்லை” என்றான். இதுபோன்று மிகப் பலருக்கு கண்ணகன் உதவிகள் செய்திருக்கிறான்.
நான் சென்னையில் இருக்கும்போது கண்ணகன் அலைபேசியில் கேட்டான்: “அண்ணே, நான் வேலையில் சேர்ந்திருக்கிறேன். உனக்கு என்ன வேண்டும் சொல்.” அவனுக்கு அரசு ஆசிரியர் பணி கிடைத்திருந்த சமயம் அது. “எது வேண்டுமானாலும் கேள் அண்ணே, என்னிடம் பணமிருக்கிறது!” அவன் வலியுறுத்தல் கனத்தபோது நான், வைக்கம் முகம்மது பஷீரின் நினைவாக ஒரு சாய்வு நாற்காலியும் – ஓவியம் வரைவதற்கான தாங்கி ஒன்றும் கேட்டேன். உடனடியாக அவன் அங்குள்ள தச்சர் ஒருவரிடம் சொல்லி சில தினங்களில் அவற்றைச் செய்து வாங்கினான். அவற்றை ஒரு தள்ளுவண்டியில் வைத்து – சுவாமி மலையில், என் மாமியார் வீட்டில் கொண்டுவந்து இறக்கி வைத்துவிட்டுப் போனான். பிறகு கொஞ்சம் நாட்களுக்குப் பிறகு நான் அவற்றைச் சென்னைக்கு எடுத்து வந்தேன். இரண்டுக்கும் நானே வார்னீஷ் பூசி, சாய்வு நாற்காலியின் தலைப்பகுதியில், குரு நித்ய சைதன்ய யதியைக் குறிப்பிடும் வகையில், ‘நித்ய சைதன்யம்’ என்று எழுதி வைத்திருக்கிறேன். இன்று அந்தப் பொருட்கள் என்னுடன் பட்டுக்கோட்டையில் இருக்கின்றன. அநியாயமாக அற்பாயுளில் போன அவனை எப்போதும் என் மனதில் முன்னால் நிறுத்துகின்றன. அவனது முகபாவங்களையும் உடல்மொழியையும் உச்சரிப்புகளையும் புதுப்பித்துக்கொண்டிருக்கின்றன.
நான் பட்டுக்கோட்டைக்குக் குடிவந்தபோது அவன் சொன்னான்: “அண்ணே, நாம சென்னையிலேர்ந்து பட்டுக்கோட்டைக்கு வந்துட்டமே, என்ன செய்றதுன்னெல்லாம் எதுவும் யோசிக்காத. நான் பணம் கொடுக்கிறேன். நீ இங்கிருந்தே ஒரு பதிப்பகம் தொடங்கு. அதுதான் உனக்கு ஏற்றதாக இருக்கும். நீ விருப்பத்துடன் அதைச் செய்யலாம்” என்றான். நான் நடத்திவந்த, ‘குதிரை வீரன் பயணம்’ பத்திரிகையின் வெளியீடாகத்தான் தன் இரண்டாவது கவிதைத் தொகுப்பு வரவேண்டும் என்பதில் அவன் மிகவும் உறுதியுடன் இருந்தான். அவன் முதல் தொகுப்பு, ‘பறவைக்குள் அடையும் கூடு’ அன்னம் பதிப்பகத்தில் வெளியானது. இந்த முதல் தொகுப்பில் உள்ள கவிதைகளும், அதன் பிறகு அவன் இரண்டாவது தொகுப்புக்காக என்னிடம் கொடுத்திருந்த கவிதைகளும் சேர்ந்ததுதான் இந்த நூல். “என் கவிதைகளைப் பற்றி நீ முன்னுரை எழுதி புத்தகம் போடுண்ணே. வந்தா உன் முன்னுரையோடுதான் வரணும். நான் ரொம்ப எதிர்பார்க்கிறேன்” என்று பலமுறை சொன்னான். இதில் பெரும் ஆசை கொண்டிருந்தான்.
அண்ணாச்சி வசந்தகுமார், ‘கொங்குதேர் வாழ்க்கை’ (தேர்ந்தெடுத்த தமிழ்க் கவிதைகளின் பெருந்தொகுப்பு) இரண்டாம் பதிப்புக்கான பணியிலிருக்கும்போது நான் என்னிடமிருந்த கண்ணகன் கவிதைகளை அண்ணாச்சியின் பார்வைக்கு அனுப்பி வைத்தேன். அவற்றைப் படித்துச் சிலாகித்த அவர், நான் அனுப்பியதில் கணிசமான கவிதைகளைத் தொகுப்பில் பிரசுரித்தார். அப்போதுதான் கண்ணகனுக்கும் அண்ணாச்சிக்குமான தொடர்பு உருவானது. ஒரு கட்டத்தில், கண்ணகனின் இரண்டாவது கவிதை நூலைத் தான் வெளியிட விரும்புவதாகத் தெரிவித்தார் அண்ணாச்சி. அவர் இது விஷயமாக கண்ணகனிடம் பேசியபோது, “நான் என் கவிதைகளை யூமாவிடம் ஒப்படைத்துவிட்டேன், அண்ணாச்சி. அவர் பார்த்து என்ன செய்தாலும் சரிதான்” என்று அவருக்குப் பதில் சொன்னதாக கண்ணகன் என்னிடம் சொன்னான். “குதிரை வீரன் பயணத்தில் வெளியிடுவதைவிட தமிழினி பதிப்பகத்தில் இதை வெளியிட்டால் மிகச் சிறப்பாக இருக்கும். பரந்த அளவில் வாசகர்களைச் சென்று சேரும்” என்றேன் நான். “எதுவானாலும் நீயே முடிவு செய்துகொள். எப்படியிருந்தாலும் உன் முன்னுரையோடுதான் வரணும்!”
கவி பிரான்சிஸ் கிருபாவின் தாசானுதாசன் கண்ணகன். இரண்டு கவிஞர்களுக்கு இடையிலான இப்படியோர் மகத்துவமான உறவை நான் ஒருபோதும் கண்டதில்லை. கிருபாவுக்குச் சென்னையில் இடர்பாடுகள் வரும்போதெல்லாம் நேரில் சென்று கிருபாவை அழைத்துக்கொண்டு வந்து தன் தோட்டக் குடிலில் தங்க வைத்து ஆத்மார்த்தமாக உபசரிப்பவனாக கண்ணகன் இருந்தான். பள்ளி விட்டு வரும்போது கிருபாவுக்கு மது வாங்கி வருவது, கிருபாவுக்காகத் தானே சமைத்து அவனுக்கு ஊட்டுவது (போதையேறினால் கிருபா சாப்பிட மாட்டான். அதுபோன்ற நேரங்களில் அவனைச் சாப்பிட வைக்க தான் மேற்கொண்ட பிரயத்தனங்களையெல்லாம் கண்ணகன் சொல்வான்), கிருபாவின் உடைகளைத் துவைத்துத் தருவது என்றெல்லாமாயிருக்கும் அவன் பணிவிடைகள். கவிதையின் ஆகப்பெரும் கனிவின் உள்ளன்போடு கிருபாவின் கவிதைகள் முன்னே மண்டியிட்டிருந்தான் கண்ணகன். “அண்ணே, நீயுமில்லை, நானுமில்லை, பிரான்சிஸ்தான் கவிஞன்!” என்று சொல்லியிருக்கிறான். கும்பகோணம் பேருந்து நிலையம் அருகே வாரக்கணக்கில் விடுதியறையில் கிருபாவைத் தங்க வைத்து, அவனிடமிருந்து வரும் கவிதைகளை ஏந்திக்கொள்ள சிலிர்த்துச் சித்தமாயிருந்தான். நாள்தோறும் மாலையில் கிருபாவைச் சந்தித்து, அவன் எழுதியிருப்பதைப் படித்துப் பார்த்து, அவனுக்கான விஷயங்களை ஆயத்தம் செய்து வைத்து வீடு திரும்புவான். மீண்டும் மாலையில் சந்திப்பு நிகழும். இப்படியும் இருந்தது.
கிருபா, கண்ணகனின் தோட்டக் குடிலில் தங்கியிருந்தபோது எழுதிய கவிதைகளையெல்லாம் கண்ணகன் தன் அழகான கையெழுத்தில் ஓரெழுத்தும் பிழையில்லாமல் பிரதியெடுத்து தொகுத்துக் கொடுத்தான். கிருபாவின் கவிதைகளைப் பிரதியெடுத்து ஒழுங்கு செய்வதில் அவனுக்கு அவ்வளவு மகிழ்ச்சி. அதுதான், ‘ஏழுவால் நட்சத்திரம்’ எனும் தலைப்பில் என்.சி.பி.எச். வெளியீடாக வந்தது. ஏழுவால் நட்சத்திரம் என்பது என் நெடுங்கவிதை ஒன்றின் தலைப்பு. அதன் மீதான பிரியத்தின் காரணத்தால் கிருபா தன் தொகுப்புக்கு இப்படிப் பெயர் சூட்டினான். இப்படியொரு நட்பு இருந்தது என்பதற்காக இதைக் குறிப்பிட வேண்டியிருக்கிறது.
உச்சமான போதையில் கிருபா எப்படிப் பேசுவான் என்று பேசிக் காட்டுவான் கண்ணகன். அத்தகைய நிலையில் கிருபாவின் ஏறச்செருகிய கண்கள், தலையாட்டம், அதீத குழறல், பேசியதையே மீண்டும் மீண்டும் சொல்வது, மெத்தனமான உடலசைவுகள் ஆகியவையெல்லாம் தத்ரூபமாக கண்ணகனிடத்தில் கூடுபாய்ந்திருக்கும். அந்தளவு, விவரிக்க முடியாத அன்பு அவனுக்கு கிருபா மீது. அவ்வளவு ஆன்ம ஈடுபாடு.
“கிருபாட்ட நான் என்ன சொல்றேன்னா அண்ணே, நீ பாட்டுக்கு இங்கே வந்து தங்கியிரு. உனக்கு இங்கே என்ன குறைச்சல். சமைச்சுப் போடுறேன், துவைச்சிப் போடுறேன், தினமும் மது வாங்கித் தரேன். நீ இங்க உட்காந்து எழுதிக்கிட்டிரு. போரடிச்சா அப்படியே பட்டீஸ்வரம் கோயிலுக்குப் போய் உட்கார்ந்து வேடிக்கை பாரு. நல்லாருக்கும். சாயந்திரம் நான் வந்து உன்னை அழைச்சிக்கிட்டு வரேன். இதாண்ணே விஷயம். இதைக் கேட்காம நீ ஏன் சென்னையில கிடந்து கஷ்டப்படணும்…”
கண்ணகனுக்கு முன்னால் கிருபா மறைந்திருந்தால், கண்ணகனின் நிலை என்னவாகியிருக்கும் என்று ஊகிக்கவும் முடியவில்லை.
கண்ணகனின் தோட்டக் குடிலில் நான் ஒருமுறை இரவு தங்கியிருக்கிறேன். மாலை நேரம். பேருந்திலிருந்து இறங்கி அவன் வீட்டுக்கு ஆற்றங்கரை வழியே செல்ல வேண்டும். மாலை வெயிலில் விம்மித் ததும்பும் அழகுடன் இருபுறமும் இயற்கை அருமை கொண்டிருந்தது. நான் பரவசப்பட்டு, சட்டைப் பையிலிருந்து ஒரு சிகரெட் எடுத்துப் பற்றவைக்க முற்பட்டேன். அவன் பட்டென்று தடுத்தான். “இங்கே பற்ற வைக்க வேண்டாம். உனக்கு நல்லதொரு இடம் காட்டுறேன், வா!” என்று சொல்லி முன்னே நடந்தான். நான் பின்தொடர்ந்தேன். சற்றுத் தொலைவு சென்ற பிறகு ஒரு இடத்தில் நின்றான். அற்புதமான விளையாட்டுப் பொருளொன்றைக் கண்டடைந்துவிட்ட குழந்தையின் ஆனந்தம் போன்று முகமெல்லாம் மினுமினுங்க அந்த இடத்தை நோட்டமிட்டான். மிகவும் அழகானதொரு இயற்கைச் சூழல் அந்த இடம். ஆற்றங்கரை, பெருவிருட்சங்கள், மண்டிக்கிடக்கும் கோரைப் புற்கள், நீரின் மெல்லிய சலசலப்பு, மீனோ – தவளையோ துள்ளி மூழ்கும்போதான ததும்பலோசை, இதமான காற்றில் கூடடைய வந்தமர்ந்திருக்கும் பறவைகளின் கீச்சொலிகள், தூரத்தில், இன்னும் சில நிமிடங்களில் மறைந்துவிடக்கூடிய பெரிய செஞ்சூரியன்…
“இப்போது நீ உன் சிகரெட்டைப் பற்ற வைக்கலாம்!” நான் புகைத்தேன். நெஞ்சிலோர் கற்சித்திரமாக நிலைத்துவிட்ட நேரம் அது.
அவன் குடிலுக்குச் சென்று இரவு நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டுப் படுத்தோம். “இங்க மயிலுக நிறைய இருக்குண்ணே. ராத்திரி கூரை மேல நடக்கும். நீ பயப்படாத” என்றான். அவனுக்குச் சட்டென்று தூக்கம் வந்துவிட்டது. எனக்கு அப்படியல்ல. வெகுநேரம் விழித்துக் கிடந்தேன். ஒரு கட்டத்தில், கூரையில் மயில்கள் நடமாடும் சரசரப்பு. அகவலொலி. நான் உறக்கத்திலாழும்வரை இதைச் செவிகூர்ந்திருந்தேன். காலையில் கண் விழித்தபோது கண்ணகன் எதிரே நின்று சிரித்துக்கொண்டிருந்தான். அவன் கைநிறைய மயிலிறகுகள். “நேத்து ராத்திரி நெறய மயிலுக வந்திருக்கும் போலருக்குண்ணே. தோட்டம் முழுக்க ஏராளமாக இறகு உதிர்ந்து கிடக்கு. எல்லாத்தையும் பொறுக்கிக்கொண்டு வந்தேன். உன் மகன்கிட்ட கொண்டுபோய்க் கொடு…” என்று கொடுத்தான். பிறகு தோட்டத்தில் அவன் வளர்க்கும் தாவரங்களை அறிமுகப்படுத்தினான். புதிதாக வளர்க்கத் தொடங்கியிருக்கும் மிளகுக்கொடிகள், வெற்றிலைக்கொடிகள் முதலியவற்றைப் பற்றி நிறையப் பேசினான். தாவரங்களைப் பற்றியும் அவற்றின் குணாதிசயங்களைப் பற்றியுமான அவனது பரந்த அறிவு ஜென்மசித்தி போன்றிருந்தது. “சில செடிகள நான் பரீட்சார்த்தமா வளக்கிறேண்ணே. நம்ம மண்ணுல பிடிக்குதான்னு தெரியல. நல்லா வந்துச்சின்னா உனக்கும் தரேன். உன் வீட்டில வளத்துக்க!” என்றான்.
சென்னைக்கு வரும் நண்பர் ஒருவரிடம், எனக்கென்று சேகரித்து வைத்திருந்த மயிலிறகுகளை நல்ல விதமாக பேக் செய்து கொடுத்து, “யூமாண்ணன் வேலை செய்கிற ஆபீஸ்லதானே நீங்களும் இருக்கீங்க. அவரிட்ட இதக் கொடுத்திடுங்க” என்று சொல்லியிருக்கிறான் கண்ணகன். வந்துசேர்ந்த அவர் பல நாட்கள் அந்த மயிலிறகுகள் பற்றி என்னிடம் எதுவுமே சொல்லவில்லை. கண்ணகன் தினந்தோறும் கேட்டுக்கொண்டிருந்தான்: “மயிலிறகு வந்து சேர்ந்துச்சாண்ணே?”, “இல்லை, இது பற்றி எதுவும் சொல்லவில்லை” என்பேன் நான். இது பற்றி பல நேரங்களில் ஆதங்கத்துடனும் ஏமாற்றத்துடனும் அவன் பேசினான். அந்த நபர் நீண்ட நாட்கள் ஆன பிறகும் மயிலிறகு பற்றி எதுவுமே சொல்லவில்லை. அப்படி ஒன்று நடந்ததாகவே காட்டிக்கொள்ளவில்லை. எனக்கு அவர் மீது மிகுந்த வெறுப்பு. கோபம். “அவரிடம் இது பற்றி எதுவும் கேட்க வேண்டாம், மனஸ்தாபம் வரும்” என்றான் கண்ணகன். தான் நேசித்துப் பொறுக்கி எடுத்து பாதுகாத்துக் கொடுத்தனுப்பிய அந்த அருமையான மயிலிறகுளைச் சேர்ப்பிக்காமல் உதாசீனப்படுத்தியதில் அவனுக்கு மிகவும் வருத்தம். பல நாட்கள் இது குறித்துத் தன் வேதனையை வெளிப்படுத்தியிருக்கிறான். “அவர் எனக்கும் உனக்கும் நண்பர்தானேண்ணே. ரெண்டு பேரா வந்தாங்க, மது வாங்கிக் கொடுத்தேன். செலவுக்குக் காசும் கொடுத்தேன். சென்னைக்குத்தானே போறீங்க, அண்ணங்கிட்ட கொடுத்திடுங்கன்னு பையில போட்டுக் கொடுத்தேன். ஒன்னு ரெண்டா ரொம்ப நாள் பொறுக்கிச் சேர்த்ததுண்ணே. எல்லாம் ரொம்ப அழகாயிருக்கும். அது போல எப்போதும் கிடைக்காதுண்ணே…” என்றான். இதற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பார்களா என்று யாரும் வியப்பார்கள். ஆனால், மயிலிறகுகளை இழந்த கலக்கம் அவனுக்கு வெகுகாலம் இருந்தது. ஒரு நிலையில், “அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான். சரி, விடுண்ணே. நான் திரும்பவும் உனக்கு மயிலிறகு சேர்த்து வைக்கிறேன். அடுத்த முறை நீ நேரில் வரும்போது கையில் தர்றேன். அதுதான் பாதுகாப்பாக இருக்கும்” என்றான்.
கண்ணகன் அசைவம் சாப்பிடுவதில்லை. நான் வருடத்துக்கு மூன்று நான்கு முறையேனும் பட்டுக்கோட்டைக்கு வருவதுண்டு. அம்மாவையும் அக்காவையும் பார்த்துவிட்டு கும்பகோணம் சென்று கண்ணகனைப் பார்த்துவிட்டு சென்னை செல்வது வழக்கம். நான் புறப்படும்போது சில நேரங்களில் அக்கா மீன் வறுத்துக் கொடுத்துவிடுவதுண்டு. கண்ணகன் வந்து கும்பகோணம் பேருந்து நிலையத்தில் காத்திருப்பான். பிறகு நாங்கள் மது அருந்துவோம். முள் களைந்து மீன் துண்டுகளை நான் ஊட்டிவிடுவேன். அவன் மகிழ்ச்சியாகச் சாப்பிடுவான். “அசைவம் எனக்குப் பிடிப்பதில்லை, அண்ணே. நீ ஊட்டினால் உண்பேன்” என்பான். இப்படிக் கும்பகோணத்தில் நடந்த பல சந்திப்புகளில் நண்பர் விஷ்ணுபுரம் சரவணன், விஜயராஜ், இளங்கண்ணன் முதலியோர் இருந்திருக்கிறார்கள்.
நேரம் போவது தெரியாமல் பேசிப் பேசி, அவன் ஊருக்கான கடைசிப் பேருந்தும் சென்றிருக்கும். முத்தங்கள் கொடுத்து என்னைச் சென்னைக்குப் பேருந்து ஏற்றிவிட்ட பிறகு பேருந்து நிலையத்திலேயே விடியும்வரை உட்கார்ந்து காத்திருந்து, வரும் முதல் பேருந்தில் ஏறி வீட்டுக்குச் சென்றிருக்கிறான். சில நேரங்களில் எனக்கு அவனை விட்டுப் பிரிய மனமிருக்காது. அப்போது, பேருந்து நிலையத்தை ஒட்டியுள்ள விடுதியில் அறையெடுத்து பேசிக்கொண்டிருந்திருக்கிறோம்.
அவன் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று பலமுறை அவனிடம் வலியுறுத்திப் பேசியிருக்கிறேன். “நான் அதிகாலையில் கண்விழிக்கும்போது என் மனைவியானவள் தோட்டத்தில் அமர்ந்து வீணை வாசித்துப் பாட வேண்டும். அப்படிப்பட்ட பெண் இருந்தால் சொல், கல்யாணம் செய்துகொள்கிறேன்” என்று மிதமிஞ்சிய குறும்புடனும் அலட்சியத்துடனும் பதில் சொல்வான். அவன் திருமணப் பேச்சை எடுக்கும்போது சிலமுறை என்னைக் கடிந்துகொண்டும் இருக்கிறான். அதன் பிறகு நான் இது பற்றிப் பேசுவதில்லை.
தஞ்சையில் நடந்த ஒரு எழுத்தாளரின் நூல் விமர்சனக் கூட்டத்தில், அவரது நூலைக் கடுமையாக விமர்சித்துப் பேசினான் கண்ணகன். சிறிது காலத்துக்குப் பிறகு அந்த நூலுக்கு தமிழ்நாடு அரசின் பரிசு அறிவிக்கப்பட்டது. இப்படிப்பட்ட புத்தகத்துக்கு எப்படிப் பரிசு கொடுத்தார்கள் என்று அவனுக்குக் குழப்பம். இது குறித்து தடுமாற்றத்துடன் என்னிடம் பேசினான். “உன் கருத்தில் நீ உறுதியாக இரு. பரிசு பெறுபவைகளில் எல்லாமுமா நல்ல புத்தகங்களாக இருந்துவிடுகின்றன” என்றேன்.
அவனுக்காகக் காத்திருந்து காத்திருந்து சலித்துப்போய் கடைசியில் அவன் வந்த பிறகு, “நான் உனக்காக வெகுநேரம் காத்திருந்தேன்” என்று எரிச்சலுடன் சொல்வேன். அதே தொனியிலேயே அவனும், “நான் உனக்காக வெகுதொலைவு பயணம் செய்து இங்கு வந்திருக்கிறேன்” என்பான்.
அதிகமாக அவனை வெள்ளைச் சட்டை – கறுப்புப் பேண்ட்டில் பார்த்திருக்கிறேன். அடர்ந்த கருந்தாடி எப்போதும் உண்டு. கண்களின் பிரகாசம் – உற்சாகம் எல்லாமெல்லாம்… ஒருபோதும் வண்ணச் சட்டையணிந்து பார்த்ததில்லை. தமிழ்நதி, இலக்குமிகுமாரன் ஞானதிரவியம், பொதியவெற்பன் முதலியோரைப் பற்றியெல்லாம் நேசத்தில் பூரித்த மனதுடன் பேசிக்கொண்டிருந்திருக்கிறான். தமிழ்நதி மீது அதிக மனஉருக்கம்.
ஒருநாள் அவன் ஆற்றில் குளிப்பதைப் பார்த்தேன். அந்த முழு ஆற்றையுமே அள்ளி அள்ளி தன் நெஞ்சுக்குள் திணித்து அடக்கிக்கொள்வதைப் போலிருந்தது அவன் ஆவேசம். ஆற்றின் பெருக்கும் அவன் உள்ளத்தின் கிளர்ச்சிப் பிரவாகமும் ஒன்றையொன்று பின்னி ஆடும் பேரானந்த நீர்த்தாண்டவமாயிருந்தது அது. நீரை எதிர்த்து நீந்தித் தொய்ந்து மல்லாந்தான். வீழ்ந்துபட்ட பெரும் பறவையொன்று படபடவென்று இறக்கைகளை அடித்துக்கொள்வது போலக் கைகளை அடித்துக்கொண்டு உருண்டான். முக்குளித்து முக்குளித்து நீர்ப்போக்கோடு போய் மீண்டான். நான் முன்னறிந்திராத பிள்ளைக் களிப்பு அது. “என் அம்மா இது! இந்த ஆறு என் அம்மா!” என்று நீரை விசிறியடித்து பித்தன்போல உரத்த குரலில் ஆர்ப்பரித்துச் சிரித்தான். என்ன காட்சி அது, அடடா!
பிற்காலத்தில் ஒருநாள், ஆறு நீரற்றுப்போன சமயத்தில், “ஆற்றில் வாழ்ந்த ஆமைகள் எல்லாம் கரையோரத்தில் மலம் தின்ன அலைகின்றன” என்று அழுதான்.
கனவுகள் அவனைச் சித்திரவதைப்படுத்தின. “மிகப் பயங்கரமா, கொடூரமா கனவு வருதுண்ணே! தினமும் இப்டித்தான் இருக்கு. தூங்க முடியல. குடியினாலதான் இப்டியாகுதுன்னு கொஞ்சம் நாள் குடிக்காம இருந்துபாத்தேன். அப்போதும் இப்டித்தான் கெட்ட கெட்ட கனவா வருது. சகிச்சுக்க முடியல. பாதி ராத்திரி பயத்துல எழுந்து உக்காந்துடுவேன்… ரொம்பப் பயமா, நிராதரவா இருக்கும்.” வருடக்கணக்காக இந்த கனவுத் தொல்லையால் மிகவும் அஞ்சித் துன்புற்றான். தான் கண்ட கனவுகள் பற்றி விவரிக்கும்போது அவன் கண்களில் தெரிந்த பீதியும் விரக்தியும் இப்போதும் மனதைக் கலங்கடிக்கின்றன.
அவன் கவிதைகளைப் படித்து நான் உளப்பூர்வமாகப் பாராட்டும்போது, கூசி நெளிந்து என் பேச்சைத் தவிர்க்கப் பார்ப்பான். “அப்படில்லாம் இல்லண்ணே…” என்று வெட்கப்படுவான். ஆயினும் ஒரு விருப்பத்தின் வெளிச்ச இழை அவனது கூச்சத்தில் காணக்கிடைக்கும்.
கும்பகோணத்தில் ஒருநாள் மதியக்காட்சியும் தொடர்ந்து மாலைக் காட்சியும் வெவ்வேறு திரையரங்குகளில் படம் பார்த்தோம். முடிந்ததும் மது அருந்தப்போனோம். மதுக்கடைப் பணியாளாக ஒரு பெண் இருந்தார். மிகவும் வறிய தோற்றமுடைய நடுத்தர வயதுப் பெண். வெளியே வந்து நான் அந்தப் பெண்ணின் நிலைக்காக அழுதேன். அந்த நேரத்தில் என்னால், குற்றேவல் புரிந்து குறுகிப் பதுங்கி நடக்கும் அவர் நிலையைப் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை. குமுறிப் பீறிடும் அழுகை. என்னைத் தேற்றுவதற்கு அவன் பாடுபட்டான். என்னைக் கட்டியணைத்து என் கண்ணீரில் முத்தங்கள் சொரிந்தான். பிறகு பேருந்து நிலையம் வந்து, “கவலப்படாம போண்ணே…” என்று வழியனுப்பி வைத்தான்.
தன்னிடம் படிக்கும் பிள்ளைகள் பற்றி பெரும் வாஞ்சையுடன் பேசுவான் கண்ணகன். பள்ளியில், இறகுகள் சேகரித்து வரும்படி பிள்ளைகளிடம் சொல்லியிருக்கிறான். மறுநாள் காலையில் அவர்கள் கொண்டுவந்த பறவையிறகுகளின் அபூர்வ அழகைப் பற்றிச் சொல்லி வியந்தான். பிள்ளைகளைப் பற்றிப் பேசும்போது சத்தியமாகவே அவன் உள்ளமெல்லாம் பூக்கும் வாசனையை நாம் துல்லியமாக உணர முடியும். பள்ளியில் பிள்ளைகளுடன் உனக்கு ஏற்படும் அனுபவங்களையெல்லாம் எழுதும்படி, முடிந்தவரை அழுத்தமாக அவன் மனதில் பதிக்க முயல்வேன். அவன் அதைப் பொருட்படுத்தவில்லை. அவன் தன் பள்ளி அனுபவங்களை எழுதியிருந்தால் குழந்தைகள் உளவியல் பற்றியும் கற்பித்தல் பற்றியும் கவித்துவமான நூலொன்று கிடைத்திருக்கும். அதுவும் போயிற்று. பொதுவாகவே, குழந்தைகளின் மீது கனிவின் உருக்கம் ததும்பி வழியும் அவனுக்கு. அவன் கொஞ்சிச் சீராட்டிய குழந்தை ஒன்றுக்கு, என் அம்மா என் மகனுக்கென்று வண்ண நூல்களால் பின்னித் தந்த அழகிய தொப்பியைப் பரிசளித்தது எனக்கு நினைவிருக்கிறது.
கண்ணகன் போன்ற மனிதர்களை இந்தப் பூமியில் பார்ப்பது அபூர்வம். இந்தப் பிரபஞ்சத்தின் குழந்தையைப் போன்றவன் அவன். உழைக்கும்போது வியர்வை வழிவதைப்போல, துக்கத்தின்போது கண்ணீர் பெருக்கெடுப்பதைப்போல அவன் இதயத்தில் எப்போதும் எக்கணமும் மாசற்ற அன்பு சுரந்துகொண்டிருக்கும். அவனுடன் இருக்கும்போது என்னை நான், வெயிலில் பளிச்சிடும் பச்சை வயலில் மகிழ்ந்து அலைந்துகொண்டிருக்கும் வண்ணத்துப்பூச்சியைப் போல உணர்வேன். அவனுடைய நட்பு என் வாழ்க்கையை மணமிக்கதாக்கும் மூலிகை மலர் போன்றிருந்தது.
கண்ணகன் ஒரு சமயம் கடுமையாக நோவுபட்டான். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை. கோலம் குலைந்து நலிந்து மீண்டான். அது பற்றிப் பேசும்போது அவன், “அண்ணே, கொஞ்சம் காசு சேர்த்து வை. சேமிப்பு இருந்தா அவசர ஆபத்துக்கு உதவும். சிகிச்சைக்கு காசில்லாம ரொம்பக் கஷ்டப்பட்டுட்டேன். அதான் சொல்றேன்…” பணத்தைப் பற்றி அவன் அக்கறையாகப் பேசியது அந்த ஒருமுறைதான்.
சில காலத்துக்குப் பிறகு அவனுக்கு மீண்டும் உடல்நிலை மோசமானது. அவனுக்கு மிக நெருங்கிய நண்பன் இளங்கண்ணனின் ஆலோசனைப்படி நான் கண்ணகனிடம் பேசினேன். “தம்பி, நீ தஞ்சைக்கு வா. நானும் வரேன். இளங்கண்ணன் வேலை செய்யும் ஆஸ்பத்திரிக்குப் போவோம். அந்த டாக்டர் மிகவும் சிரத்தையாகப் பார்ப்பார் என்று இளங்கண்ணன் மீண்டும் மீண்டும் சொல்கிறான். உடம்புக்கு என்ன ஏது என்று சரியாகத் தெரிந்துகொண்டுவிட்டால் நமக்கு நல்லதுதானே. நீ தவறாமல் வந்துவிடு!”
அவன் உற்சாகமாகவும் மகிழ்ச்சியுடனும் ஏற்றுக்கொண்டான். ஆனால் தஞ்சையில் சந்திப்பதாகக் குறித்த நாளில் நான் அலைபேசியில் அழைக்கும்போது அவன் பேசவில்லை. தவிர்த்தான். பலமுறை தொடர்ந்து அலைபேசியில் முயன்று, கடைசியில் இளங்கண்ணனிடம் தகவல் தெரிவித்தேன், கண்ணகன் வரமாட்டான் என்று.
அவன் இறந்தபோது சென்றிருந்தேன். முப்பத்தொன்பது வயதுதான். எனக்கென்ன என்று படுத்துக் கிடந்தான். தோற்றம் வெகுவாக மாறியிருந்தது. அவன் தந்தை என்னை அணைத்துக்கொண்டு அழுதார்: “ஐயா, என் மகன் எழுதுன கவிதைகளை பத்திரமா எடுத்து வைச்சிருக்கேன். அதையெல்லாம் நீங்கதான் புத்தகமா கொண்டு வரணும். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் செய்யுங்கள். அப்பத்தான் அவன் ஆன்மா சாந்தியடையும்” என்றார்.
மயானத்துக்குச் செல்லும் ஊர்தியில் கண்ணகன் அருகே நின்றேன். ஆற்றாமையும் அழுகையும் பொங்கித் திணற, வறண்டு மெலிந்து தட்டைக் குச்சுகள் போன்றிருந்த அவன் கைகளைத் தொட்டுத் தொட்டுப் பார்த்துக்கொண்டிருந்தேன். விரல்களை நீவினேன். காலத்தில் முடிவற்றுப் பயணிக்கும் கவிதைகளை எழுதிய பெருமகனின் கைகள்.
எரியூட்டுவதற்கு அவனைச் சிதையில் வைத்தபோது, பக்கத்திலிருந்த நண்பர் என் தோளைத் தொட்டுத் திருப்பிச் சொன்னார். “அங்கே பார்க்காதீர்கள்…”
நான் மீண்டும் அவனையே பார்த்துக்கொண்டிருந்தேன். எரியூட்டுபவர் சட்டென்று அவன் கைகளை முறித்தார். நொடியில் திரும்பிக்கொண்டேன்…
அந்தக் கைகள்…
உனக்கு ஆயிரம் முத்தங்களடா, என் செல்லமே…
1 comment
என்றும் உன் நினைவில் வாழும் உனது மாப்பிள்ளை வீரமணி தமிழாசிரியர் இரும்புலிக்குறிச்சி அரியலூர் மாவட்டம் நமது கல்லூரியில் பிடித்த புகைப்படங்களையே மீண்டும் மீண்டும். பார்த்துக்கொண்டிருக்கிறேனடா மீண்டும் அதே பெஞ்சில் அமர்ந்து முதுகலை தமிழ் இலக்கியம் படிப்போமா வாடா மாப்பிள்ளை
Comments are closed.