ஆண்டுக்கணக்காக மஞ்சளும் சந்தனமும் பூசிப்பூசி மாட்டுவாலைப்போல மெழுகோடி விட்டிருந்த கொச்சைக்கயிற்றினால் பின்னப்பட்ட சாட்டையை வாசலில் நின்றபடி வீட்டினுள் எறிந்துவிட்டு நல்ல வெயிலில் சுருட்டை ஆவேசமாக இழுத்துக்கொள்ள ஆரம்பித்தார் குஜுலுவா சுப்பையர். குஜுலுவா அவர்களது குடும்பப் பெயர், சுப்பையர் என்கிற அய்யர் ஒட்டு சௌராஷ்டிரா சமூகங்களுக்கேயுரிய தாங்கள் பாதி பிராமணர்கள் என்கிற மனமயக்கத்தின் பொருட்டு ஒட்டிக்கொண்ட ஒன்று. சற்குணம் அவரைத் தாத்தா என்றுதான் அழைப்பான். நல்ல செவிடான அவருக்கு அந்த வாயசைவு மட்டும் எப்படியோ துல்லியமாக அர்த்தமாகிவிடும். தொடர்ந்தாற்போல அப்படிக் கூப்பிடும்போதெல்லாம் எரிச்சலாக முறைத்தவாறே உதட்டின் இரு விளிம்பிலும் வெள்ளையாகத் திரண்டிருந்த எச்சிலோ எதுவோ அதை விரல்களால் அழுத்தித் துடைப்பார். பற்கள் உதிர்ந்துவிட்ட வயோதிகத்தின் காரணமாக வாய் சதா நமட்டு மெல்லலில் இருப்பதால் திரண்டு வருகிற வெள்ளைப்படலம் அது. வெயிலுக்கு நடுவே சுருட்டின் காரமான நெடியில் ஒருமுறை உள்நாக்கில் எச்சில் சுரந்தது. கூட்டி விழுங்கிக்கொண்டான்.
ஓடுவேய்ந்த கூரைகள் தவங்கி இறங்கிவிட்ட வீடுகளாலான குறுகிய தெரு. சுண்ணாம்புக் காரைகள் உதிர்ந்துவிட்ட பல வீடுகள் முனைகள் தேய்ந்த செங்கல் பற்களோடு இளித்துக்கொண்டிருந்தன. தெருவை நிறைத்துச் செல்கின்ற சாக்கடை நீருக்கு மத்தியில் மதிய வெயிலை அனுபவித்தபடி உழன்று கிடக்கின்ற பன்றிக்குடும்பம். இந்தச் சிதிலங்களுக்கு நடுவே வானவில்லைப்போலத் தெருவின் ஒருமுனையிலிருந்து மறுமுனைவரை இழுத்துக் கட்டப்பட்ட நூலின் பாவு வரிசை. ஜவ்வுமிட்டாயிலிருந்து இழைத்து இழைத்து உருவப்பட்டதைப்போல ஜொலிக்கின்ற நூற்கற்றைகள் பொன்னிறத்திலும் அடிக்கின்ற சிவப்பு நிறத்திலும் மினுங்கியபடி நீண்டிருந்தன. அவற்றிலிருக்கும் சிக்கல்களை விரல்களால் தேடித்தேடி களைந்துகொண்டிருந்த நெசவாளிகளின் வரிசை ஒருமுறை தாத்தாவின் குரலுக்குத் தலையுயர்த்திப் பார்த்தது. பிறகு தங்களுக்குள் சிரித்தவாறே, சாக்கடையில் ஊறிக்கிடக்கின்ற பன்றியைக் கவனித்தபடி நூல்களின் வரிசைக்குத் திரும்பியது. இலயித்துக் கிடக்கின்ற பன்றிக்குட்டிகளைச் சலனப்படுத்தாமல் சிரிப்பதில் அவர்கள் இப்போது தேர்ந்திருந்தார்கள். சட்டெனச் சிறு குரலதிர்விற்கும் எழுந்துவிடுகின்ற பன்றிகள் ஓடுவதற்கு முன் சளசளவென உடம்பை ஒருமுறை சிலிர்த்துக்கொள்ளும். அப்படிச் சிலிர்க்கின்றபோது அவற்றின் மேலிருந்து விசிறியடிக்கப்படும் சாக்கடைத் துளிகள் நூலில் தெறித்துவிட்டால் வீட்டில் இரண்டு மாசத்திற்கு அடுப்பெரியாது.
சுப்பையருக்கு ஒடுங்கிய உடல்வாகு. அவரும் அவரது தம்பியும் சிறுவயதிலிருந்தே சந்நியாசிகளாகிவிட விரும்பி யோக தவத்தால் கொழுப்பை உருக்கி வற்றலாய் காய வைத்திருந்த உடம்பு அது. சுப்பையரின் தம்பி சொன்னதுபோலவே சந்நியாசியாகி குஜராத் பக்கம் சென்றுவிட்டார். பாதி சந்நியாசத்தில் இருந்தபோது எப்படியோ ஒரு கல்யாணம் கட்டி முதுமையின் தொடக்கத்தில், வயதுக்கு வந்த பிள்ளையை வீட்டில் வைத்திருக்கிறார். அவரது மூத்த மகன் சங்கரை யாரும் பொருட்படுத்துவதேயில்லை. அவன் பிறக்கும்போதே தகப்பனை வெறுப்பவனாகப் பிறந்து வளர்ந்தான். சந்நியாசத்தை ஏங்கியபடி சம்சாரியாக வாழுகின்ற அப்பனைக் கண்டபோது இன்னும் இரத்தம் கொதிக்க எப்போதும் காதுகூச நாலு வார்த்தை சண்டைபோட்டுவிட்டு காணாமல் போய்விடுபவனாக இருந்தான்.
நரைமுடிகள் படர்ந்த வயோதிக வயிறு நடுங்க சுப்பையர் வீதி நடுவே நின்றபடி எல்லோரையும் திட்டினார். அவர் திட்டத்திட்ட உதட்டினோரம் வெள்ளை திரண்டெழுந்தபடி இருந்தது. சைக்கிளை நாய்க்குட்டியைப்போல ஒரு கையில் பிடித்தபடி கிழவனையே பார்த்துக்கொண்டிருந்தான் சற்குணம். சைக்கிள் கேரியரில் பத்துதூண் சந்திலிருந்து வாங்கி வந்திருந்த நூல்கற்றைகள் பொதியாகக் கட்டப்பட்டிருந்தன. இரு கைகளிலும் மண்ணையள்ளி, நகரத் தொடங்கிவிட்ட மனிதர்களை நோக்கி வீசியெறிந்து சபித்தார் அவர்.
“எவ்வீட்டு அம்மணத்த நக்க வந்தவிங்களா.. அழிஞ்சு போங்கடா எல்லாரும்.”
சற்குணம் அவரையொட்டி மெதுவாகச் சைக்கிளை உருட்டிச்சென்று வீட்டுவாசலில் சுவரோடு சாய்த்து வைத்தான். அரக்கு நிற நூற்கற்றைகளில் காரைச்சுண்ணாம்பு உதிர்ந்து படிந்ததைப் பார்த்ததும் பதறியபடி சைக்கிளை மூச்சுவாங்க வலுபோட்டு ஸ்டாண்ட் போட்டு நிறுத்தினான். பிறகு, மெதுவாக வீட்டிற்குள் நுழைந்தான். கிழவன் வீசிய சாட்டை பாம்பைப்போலத் தரையில் கிடந்தது. அதைத் தொடக்கூடாதென மஞ்சு ஒருமுறை சொல்லியிருக்கிறாள். அது எப்போதும் கருப்பசாமி படத்திற்குமுன் தேங்காய்மீது சுருட்டியே வைக்கப்பட்டிருக்கும். அமாவாசை பௌர்ணமிகளில் அவர்கள் சாமி கும்பிடும்போது கருப்பு கிழவன் மீது ஏறும். அப்போது அவர் தன்னைச்சுற்றி அவலங்களாக நிற்கும் அவரது மனைவியையும் மஞ்சுவையும் பார்த்து ஏதோ அசரிரித்தபடி சவுக்கால் தன்னைத்தானே அடித்துக்கொள்வார். கிழவரின் மனைவிக்குள் என்ன ஓடிக்கொண்டிருக்கிறதென்றே எப்போதும் தெரியாது.
பெரும்பாலான நேரங்களில் அவள் அடுப்பங்கரைச் சுவரில் அப்பியிருக்கும் கரிந்த நிழலைப் பார்த்தபடியே யோசனையில் ஆழ்ந்திருப்பாள். கைகள் பாத்திரங்களைப் புழங்கியவாறு தானாகச் சமைத்துக்கொண்டிருக்கும். கிழவனுக்குக் கண்பார்வை குறைவு. இராட்டை சுற்றுவதற்குக்கூடத் திராணியற்ற அவரது பகல்கள் தெருவில் நீட்டப்பட்டிருக்கும் பாவு நூல் வரிசைகளை நெஞ்சுமுடிகளைச் சொறிந்தபடி பார்த்துக்கொண்டிருப்பவை மட்டுமே. உறைந்துவிட்ட இந்த வீட்டின் கடிகாரத்திற்குள் வினாடி முள்ளின் துடிப்போடு மஞ்சு மட்டும் சுற்றி வருவாள். ஆண்சட்டையும் பாவாடையுமாக தறியில் அமர்ந்து ஏதேனும் பாடலைச் சப்தமாகப் பாடியபடி அவள் ஒரு கையில் தறிக்கயிற்றைப் பிடித்து சேலைகளை நெய்யும்போது காட்டுக்குதிரையொன்றில் பயணம் செய்பவளைப் போலவே இருப்பாள். கால்மாற்றி மாற்றி அவள் தறிக்கட்டைகளை மிதிக்கும் இலாவகத்தில் குழைந்த ஜக்காட்பெட்டி சிறிய இசைக்கருவியைப்போலவே ஒத்திசைந்துகொண்டிருக்கும்.
கையில் நூல் பொதியோடு சற்குணம் வீட்டினுள் நுழைந்தான். வீட்டை நிறைத்து நின்றிருக்கும் தறிக்குக்கீழே மஞ்சு இன்னமும் கண்ணீரைத் துடைக்காமல் படுத்திருந்தாள். வர்ண நூல்களின் வரிசைக்கிரமமான அணிவகுப்புக்குக் கீழே அவள் நூல்சிறை ஒன்றிற்குள் இருப்பதைப் போலிருந்தது.
“இன்னிக்கு ராட்டை போட வேணாம்.”
மஞ்சுவின் அம்மா அடுப்பங்கரையிலிருந்து கூவினாள். அதன் அர்த்தம், “நீ உடனே கிளம்பு” என்பது சற்குணத்திற்குப் புரிந்தது. அதைப் பொருட்படுத்தாமல் தறிக்குக் கீழே குனிந்து, மஞ்சுவின் முகத்தைப் பார்த்தான். கலங்கி நின்றிருந்த அவளது கண்களில் சுறுசுறுவென புதிய நீர் ஊறி வழிந்தது. சற்குணம் அவளருகே போய் அமர்ந்துகொண்டான். காற்றில் அலைந்த அவளது முடிக்கற்றைகள் சற்குணத்தின் தொடைமீது படர்ந்து படர்ந்து விலகின.
“எங்க போன?”
நூற்கட்டுகளைத் தரையில் விரித்து வைத்தபடி யாருக்கும் கேட்காமல் சற்குணம் கேட்டான். அவளது கைகள் மிக இரகசியமாக ஊர்ந்து வந்து சற்குணத்தின் பேண்ட் துணியைத் தொட்டுப் பார்த்தன.
“என்னடா திடீர்னு?’
“ப்ச். பத்தாங்கிளாஸ்க்கு மேலே பேண்ட்டுதானாம். நேத்து வாங்கித் தந்துச்சு அம்மா.”
உதட்டு இரு விளிம்புகளையும் வலிந்து கீழிறக்கி கேலியும் பெருமிதமுமாய் பழித்தாள். சற்குணம் அதைப் பொருட்படுத்தாமல் மீண்டும் கேட்டான்.
சாட்டையால் விளாசியதால் முழங்கைப்பக்கம் தடமிட்டிருந்த செவ்வரிகளில் கொச்சைக்கயிற்றுத் துகள்கள் விரவியிருந்தன.
“இதெல்லாம் தேவையா?”
சற்குணத்திற்கு குரல் கட்டியிருந்தது. எதற்காக அப்படிக் கேட்டானென்றே அவனுக்குத் தெரியவில்லை. இரண்டு வருடங்களுக்கு முன்பு பாவு நீட்ட வருகின்ற ஜெயபாலனுடன் மஞ்சுவிற்கு முதல் தொடர்பு ஏற்பட்டு, இதேபோல அன்றும் சவுக்கடி பட்டு அவள் கிடந்தபோதும் அவன் இதே கேள்வியைக் கேட்டான். ஆனால் கண்களில் சிறிய அச்சமும், குரலில் அலுப்பும் மட்டுமே அப்போது இருந்தன. இந்த இறுகிவிட்ட குரலிற்குள் கசிகின்ற ஒரு விம்முதலை அவனே சட்டென அந்நியமாக உணர்ந்தான். அவள் பதில் சொல்லவில்லை. ஆனால் இவனது இந்தக் கேள்விக்கு நியாயமான பதிலாகத் தான் இந்த சிறு நாட்களில் அடைந்திருந்த மகிழ்வை மட்டும் கடத்திவிட எண்ணினாள். தனது மகிழ்ச்சியின் இறைச்சி வேகின்ற பக்கங்களை, தனது துயரங்களில் விடுதலைக்கான ஒரு வாசல் சலுகையாகக் கிடைப்பதுவரை சற்குணத்திடம் அவள் பெரும்பாலும் எதையும் மறைப்பதில்லை. எல்லாத் துயரத்திற்கும் முன்பாக அதன் வேர்க்கிழங்காக ஓர் இன்பம் ஒளிந்திருக்கும். துயரங்கள் காலத்தின் வெளிச்சத்தில் கருகி வீழ்பவை. வேர்க்கிழங்குகள் ஒருபோதும் அழிவதில்லை. மண்ணுக்குக்கீழே அவை உறங்கிக்கொண்டே இருக்கின்றன. துயர்களை மட்டுமே கேட்க வருபவர்களை மஞ்சு கதவிற்குப் பின்பாக இருந்தே சிறிய அழுகையோடு பதில் சொல்லி அனுப்புகிறாள். அதற்கு முன்னிருந்த அந்த மறைக்கமுடியாத கிழங்குகளைச் சற்குணத்திடம் மட்டும் தறிக்குக்கீழே அமர்ந்து இலேசான இருளில் எவ்வித தயக்கமுமின்றிக் கூறிச்செல்வாள். வண்ணநூல்களின் வழியே விழுந்து கம்பிகம்பிகளாக உடைகின்ற வெளிச்சத்தில் அவளது முகம் அப்போது யவ்வனம் கண்டிருக்கும்.
தனது மகிழ்ச்சியினை, தான் மகிழ்ந்ததைக் கூறும்போது முகங்களில் வந்துவிடுகின்ற அந்தக் கண்ணாடிபோன்ற தன்மையோடு, “தேவையில்லைன்னுதான் தோணுது. ஆனா எப்படியோ ஆயிடுதுடா” என்பாள்.
இன்று காலையில்தான் இவளை அநாதரவாக கள்ளந்திரி பஸ்ஸ்டாப் அருகே நிற்க வைத்துவிட்டு தனபால் ஓடி மறைந்திருந்தான். தூரத்து அழகர் கோவில் மலைப்பசுமைகளை வேடிக்கை பார்ப்பவளாக, பூட்டியிருந்த கடையின் வாசலில் அமர்ந்திருந்தவளைப் பிறகு யார் யாரோ விசாரித்து வீடுவந்து சேர்த்திருந்தார்கள்.
“கோவிலுக்குப் போலாம்னு சொல்லியிருந்தான்டா.”
மஞ்சு எப்போதாவது சேலை கட்டுவாள். இன்று கட்டியிருந்த அந்தச் சேலை அதே தினத்தில் சவுக்கடியும் வாங்கியிருந்தது. பெருங்களிப்போடு தொடங்கியிருந்த நாளின் வெளிச்சங்கள் உடைந்துகொண்டிருக்கின்ற அவளது இந்த அழுகைகூட விநோத அழகை அவளிடம் கொண்டுவந்திருந்தது.
“அம்மா இப்பல்லாம் இங்க வர்றதுக்கு திட்டுறாங்க.”
இந்தச் சொற்களின் வழியே அவளுக்குள் எழுகின்ற அதிர்ச்சியை இரசிக்க விரும்பியவனாக அவன் கூறினான். ஆனால் அவள் இன்னமும் தூரத்து நினைவின் களிம்புகளைத் தன்னிடமிருந்து அகற்றாதவளாக வெறும் செய்தியாக மட்டுமே இதைக் கேட்டாள். சற்குணத்திற்குள் எதுவோ உடைவது போலிருந்தது.
அமைதியாக இராட்டையை இழுத்து வைத்துக்கொண்டு நூற்பிரியை அதில் தழைத்துப் பொருத்திவிட்டு சுழற்றத் தொடங்கினான்.
சித்திரைத் திருவிழா முடிந்த நாட்களின் வெறுமை எங்கெங்கும் சூழத்தொடங்கியிருந்தது. கள்வெறி தீர ஆடிக்களைத்து ஆழ்ந்து உறங்குபவனின் பாதம் மட்டும் அசைந்துகொண்டிருப்பதைப் போல மதுரை முழுக்க திருவிழா அசதியோடு தீர்ந்துகொண்டிருக்க, கடைக்கோடி வண்டியூரில் மட்டும் அதன் மிச்சங்கள் இன்னும் மினுங்கிக்கொண்டிருந்தன. ஊர்வலத்தின் தாலாட்டு நடை நீங்கிய பல்லக்கில், வேகவேகமான கால்கள் ஓடியபடி தூக்கிச்செல்ல, பூக்கள் உதிர்ந்த நார்கழுத்து மாலையோடு அசிங்கமான பகல் வெளிச்சம் முகத்தில் விழ அழகர் ஊர் திரும்பிக்கொண்டிருந்தார். வண்டியூர் வைகைக்கு நடுவே தேனூர் கல்மண்டபத்தில் மண்டூகமுனி சாபவிமோசனம் வேண்டி, காலில் சணல்கயிறு கட்டப்பட்டு ஆற்றுமணல் சூட்டில் மயங்கிக்கிடக்கும் கொக்காக மாறி கிறங்கிக்கிடந்தார். போகிற வழியில் அழகர் நாட்டுத்துப்பாக்கியால் அந்தச் சணல்கயிறைச் சுட்டு முனிவரை விடுவித்துச் செல்கிற வைபவம்.
மலையை நோக்கித்திரும்பிச் செல்கின்ற அழகரை மூன்றுமாவடி வரை கூடவே போய், பச்சைக்கற்பூரமும் நாட்டுச்சக்கரையும் சேர்ந்து இளகும்படி வாழையிலையால் வாய் கட்டிய சிறிய செம்புகளில், நிறைக்க நிறைக்க சூடம் காட்டி மகிழ்ந்தபடி சௌராஷ்டிரா மக்களின் படை பல்லக்கைத் தொடர்ந்துகொண்டிருந்தது. ஊர் திரும்புகின்ற அழகர் அவர்கள் வீட்டு மனிதன். அழகரின் கண் மை அழகைப் பார்ப்பதற்காகவே தறியை விட்டிறங்கி வருகின்றவர்களும். ஈரமும் சகதியுமான ஆற்றோரங்களில் சிறிய பிளாஸ்டிக் பையைத் தரையில் விரித்து, புளியோதரைப் பாத்திரங்களைத் திறந்தபடி அமர்கின்ற முகங்களுமாக வைகையின் வடக்குக்கரை பரபரத்துக்கிடந்தது.
ஆற்றின் எதிர்க்கரையில் ஐராவதநல்லூர் ஏற்றத்தின் அருகே கருவேலங்காட்டுக்குள் தரையை ஒதுக்கி சாராயம் விற்றுக்கொண்டிருந்தார்கள். சகாயம் ஒரே மூச்சில் குடித்துவிட்ட டம்ளரைச் சட்டெனத் தரையில் ஊன்றி வைத்தவாறே நாக்கைச் சப்பி, முகத்தைச் சுருக்கி ஒட்டுமொத்தமாக அந்தப் புளிப்பின் சுவையை எச்சிலாகத் திரட்டித் தொண்டைக்குள் செலுத்திவிட்டு குனிந்தே இருந்தான். அவனுக்கு முன்பாகக் கிடந்த சிரட்டையில் பலரது விரல்கள் குழைத்தெடுத்த ஊறுகாய் பூஞ்சை படர இருந்தது. சற்குணம் அவனருகே அமர்ந்தவனாக ஆற்றின் எதிர்முனையில் நடைபெறுகின்ற திருவிழாவின் வர்ணத் துணுக்குகளைப் பார்த்துக்கொண்டிருந்தான். ஆங்காங்கே சிறிய கீறல்களுக்கு நடுவே சாக்கடையோடு கலந்து ஓடுகின்ற வைகைக்கு மத்தியில் வெயிலின் கானல் நிறைந்திருக்க, சப்தங்களே இல்லாத அந்தத் திருவிழா நகர்வுகள் கனவைப்போலப் புலப்பட்டன. அது ஒருவகையில் நிதானித்த மனதைத் தோற்றுவித்தது. வேறொரு இடத்தில் வேறொரு காலத்தில் நிகழ்ந்துகொண்டிருக்கின்ற அந்த வர்ணத்திட்டுகளின் கோலாகலமான அசைவுகளைப் பார்க்கப் பார்க்க இன்று காலையில் தான் கண்ட காட்சி துல்லியமாகிக்கொண்டே எழுந்து வந்தது.
தெருவிற்குள் சைக்கிளில் திரும்பும்போதே மஞ்சுவின் அப்பாவும் அம்மாவும் கொக்கு சுடுவதைப் பார்க்கப் போய்க்கொண்டிருந்தார்கள். அவர்கள் மட்டுமல்ல, காரைபெயர்ந்து உப்பு அரித்த எல்லா ஓட்டுவீட்டு வாசிகளும் தீபாவளிக்கு எடுத்து திருவிழாவிற்கென வைத்திருக்கின்ற புத்தம் புதிய உடைகளோடு சென்றுகொண்டிருந்தனர். மிகவும் சிறிய குடியிருப்புப் பகுதிதான். என்றாலும் விசேஷங்களை ஒரு துளி விடாமல் கொண்டாட்டமும் கூத்துமாகத் தங்களுக்குள் ஏற்றிக் களிப்பதற்கு அவர்கள் தயங்கியதேயில்லை. எட்டணாவிற்கு வெல்லப்புட்டு விற்பவரிலிருந்து முப்பது ரூபாய் வாடகைக்குக் கல்யாணப் பெண்ணின் முழு அலங்கார கவரிங் நகையைக் கொடுப்பவர் வரை எல்லோரும் ஆட்டுப்புழுக்கைகளுக்குள்ளும் தெருவை மறித்து ஓடுகின்ற சாக்கடைக்குள்ளும் அனுசரித்து வாழுகின்ற பகுதி. தினசரி அறுபது ரூபாய் வருமானம் உள்ள மனிதர்களால் ஆன உலகு. ஆதலால்தானோ என்னவோ பச்சைப்பட்டும் தங்கக்குதிரையுமாக வைகையில் இறங்குகின்ற அழகரைவிட, அவமானப்பட்டு ஊர் திரும்புகின்ற இந்த அழகுமலையானை அவர்களுக்கு மிகவும் பிடித்துப்போயிருந்தது.
சற்குணம் வாசலில் சைக்கிளை நிறுத்தும்போது, மஞ்சுவின் வீட்டிற்குள்ளிருந்து ஊத்து களிமண்ணை மிதித்து மிதித்து நடந்த கால் தடங்கள் விரவி வெளியேவரை வந்திருந்தன. இரண்டு வாரமாக அவளது வீட்டில் கிணற்றுவாளி காற்றைத்தான் அள்ளி வந்துகொண்டிருந்தது. தூர்வாரி தூர்வாரி கிணற்று ஊற்றுமுகமே அழிந்துபோய், சுண்ணாம்புத் திட்டுகள் மறித்து எழ ஆரம்பித்துவிட்ட பழைய உறைகிணறு அது. நேற்று மதியம்போலத் தோண்ட ஆரம்பித்து வேலையை மிச்சம் வைத்துப் போயிருக்க வேண்டும். ஒருவேளை காலையில் ஊற்று தெளிந்தெழ ஆரம்பித்திருக்கும். கதவு சாத்தியிருந்தது. நாதங்கிக்குக் கீழே இருக்கும் சிறிய ஓட்டைக்குள் விரலை நுழைத்து உட்தாழ்ப்பாளை நெம்பி விலக்கினான். அம்மா இதற்காகவே ஒருமுறை உதைத்தாள். சொல்லிய மஞ்சுவே இவனைத் தொடைக்குள் கட்டியணைத்து அவளது அடிகளிலிருந்து காப்பாற்ற வேண்டி வந்தது. வீட்டை நிறைத்து அமர்ந்திருந்த தறியைப் பார்த்தபடி கொல்லைப்புறம் நோக்கிச் சென்றாள். அங்கே சிறிய பாத்திர அசைவுகள் கேட்டன. நடக்க நடக்க களிமண் காலடித்தடங்கள் பெருகிவந்தன.
பொன்னிறத்தில் புதிய கொச்சைக்கயிறும் கிரிஸ் வைக்கப்பட்ட கம்பியுமாக கிணற்றின் வசீகரம் கூடியிருப்பதைப் பார்த்தபடி வரும்போதே, கிணற்றுக்குள்ளிருந்து துவர்மண் குவியல் சுண்ணாம்பு சிதிலங்களோடும், காக்கைப்பொன் துகள்களோடும் ஈரம் வடிந்துகொண்டிருக்கும் குவியலாகக் கிணற்றருகே அள்ளி வைக்கப்பட்டிருந்தது. அதனருகே மஞ்சு கிணற்றைப் பற்றியபடி உள்ளே பார்த்துக்கொண்டிருந்தாள். சட்டென சற்குணத்தின் தோளைப்பிடித்து யாரோ நிறுத்தியதைப் போலிருந்தது. தனது உடைகளையெல்லாம் அவிழ்த்து துவைக்கும் கல்லருகே குவியலாக போட்டுவிட்டு, ஹேர்பின்னல்களுக்குள் இறுக்கப்பட்டிருந்த தலைமுடியின் மிதப்பை ஒரு விரலால் அவிழ்த்துவிட்டு, நீவி நீவி பொதும்பச் செய்தபடி ஆடைகளற்ற நிர்வாணத்தின் மீது முற்பகல் வெளிச்சம் தருகின்ற வெதுவெதுப்பை அனுபவித்தபடி அவள் நின்றாள். சற்குணம் மூச்சையடக்கியபடி புழக்கடை இருளுக்குள் நின்றான். துவர்மண் கரைசலின் மேல் விழுகின்ற வெயிலை காக்கைப்பொன் ஜ்வலித்துக்கொண்டிருக்க, அவிழ்ந்த தலைமுடிகள் சிறுநதியைப்போல உடலின்மீது படிந்துகொண்டிருக்க, வசீகர காட்டுவிலங்கின் திமிர்த்தனம் சுண்டுகிற உடலோடு மஞ்சு கிணற்றுக்குள் பார்ப்பதை நிறுத்திவிட்டு, ஏதோவொரு மாய அழைப்பைக் கேட்டவளைப்போல புழக்கடைப் பாதை நோக்கித் திரும்பினாள்.
விக்கலைப்போன்ற ஒரு குரலில், “கடவுளே” என்றபடி கைகளைக் குறுக்கே கட்டிக்கொண்டு கிணற்று மேட்டிலேயே அமர்ந்துவிட்டாள். சற்குணத்தின் கை கால்கள் நடுங்கின. உதடுகள் வினோதமாக நெளிந்து எதையோ உளற, சட்டென கண்கலங்கிவிட்டது. துவைக்கும் கல்லிற்கும் அவள் அமர்ந்திருக்கும் தூரத்திற்கும் நடுவே துவர்மண் குவியலின் நீர் கைகள் கைகளாக வளர்ந்துகொண்டிருக்க, சற்குணத்தை சிறிய எரிச்சலும் அவமானமுமாக ஏறிட்டாள். அவளது கண்களில் ஒரே ஒரு கணம் வந்துசென்ற அந்த யாரோ ஒருவனைப் போலப் பார்க்கின்ற பார்வையைச் சற்குணம் தனது திகைப்பினூடே ஆழமாக உள்வாங்கினான். யாரோ ஒருவன். கரும்பாலை பெட்டிக்கடையில் தனக்குப் பீடி எடுத்துத் தருகின்ற அம்மாவின் வயதிலிருக்கும் பெண்ணின் கண்களில் வருகின்ற அந்த யாரோ ஒருவன், தாத்தாவைப்போன்ற மனிதனொருவனைச் சாலையில் மோசமான கெட்ட வார்த்தை சொல்லிவிட்டு சைக்கிளில் ஏறி மிதித்துச் செல்லும்போது அந்த வயதானவனின் கண்கள் பார்க்கின்ற யாரோ ஒருவன், அய்யனார் தியேட்டரில் நீலப்படங்களைப் பார்க்கச் செல்லும்போது பயந்து வியர்த்துவிட்ட உள்ளங்கையில் நீட்டுகின்ற ரூபாயை எவ்வித பிரக்ஞையுமின்றிப் பெற்றுக்கொண்டு விலகிப்போடா கூதி எனச் சொல்லுகின்ற தன்னைவிட மூத்தவனின் கண்களில் வருகின்ற அந்த யாரோ ஒருவன்.
அந்த நேரங்களிலெல்லாம் சற்குணத்தின் முதுகுப்புறத்தில் அம்மாவின் கண்களால் தைக்கப்பட்டிருந்த எண்ணற்ற கொக்கிகள் ஒவ்வொன்றாகக் கழன்று விழுவதைப் புண்ணிலிருந்து சலம் வெளியேறுகின்ற மிருதுவான வேதனையைப்போல அவன் உணர்வான். அதன் கூடவே வந்துவிடுகின்ற என்னவோவொரு சுதந்திரம். அது தருகின்ற போதையில் விழித்துக்கொள்கின்ற உடல். நீரின் மீது கைகளை விரித்தபடி மிதக்கின்ற உணர்வு பரவும் அப்போது. மஞ்சு கண்ணீர் திரண்டுவிட்ட கண்களோடு அவனைப் பார்த்தாள். இன்னமும் அதிர்ச்சியாகக்கூட தலையைக் குனிந்து திரும்பாத அவனது முகத்தை, புழக்கடையின் பாதி இருளுக்குள் வியர்வை அரும்பத் தொடங்கிய முகத்தோடு அவளது திடுக்கிடலாலும் கடவுளே என்கின்ற சொல்லின் பதற்றத்தாலும் நிலைகுலையாமல் வெறுமனே பெண்ணுடலாக அவளை ஞாபகங்களில் ஒளிக்கத் தொடங்கிவிட்ட கண்களைக்கொண்ட ஒருவனைத் தயங்கியபடி பார்த்தாள். துவர்மண்ணின் சுண்ணாம்பு மணக்கும் நீர்க்கரம் அவனது காலைத் தீண்டியது.
ஆற்றின் எதிர்க்கரையில் நாதசுரம் எழத்தொடங்கியதன் ஒலி, வைகையின் வெற்றுமணல் திட்டுகளின் மீது துருப்பிடித்த குரலாக மாறி வந்தது. சகாயத்தின் தலை தொங்கிவிட்டது. அவன் ஆட்டுக்குட்டி போல எதையோ வாயில் மென்றபடி தலையைக் கவிழ்ந்து கிடந்தான். அவன் குடிக்கத் தொடங்கியபோது சற்குணம் மஞ்சுவை அப்படிப் பார்த்த நிகழ்வை தயங்கியபடி யோசித்து யோசித்துக் கூறிக்கொண்டிருந்தான். சகாயத்திற்கு இதுபோல நூறு கதைகள் தெரியுமென்பதால் சற்குணம் அதனைக் கூறுகின்ற வேளையில் அதனை இரசித்துக் கேட்பவனாகத் தன்னை வெளிப்படுத்திக்கொள்வதற்காகவே தனது குடிபொருட்களை நேர்த்தியாக விரித்துவைத்தபடி இருந்தான். தனது அனுபவத்தின் சுவைகோர்வையாக அந்த நேர்த்தியைச் சற்குணம் உணர்ந்தவாறு மேலும் மேலும் கூறிக்கொண்டிருந்தான். லேசாக போதையேறத் தொடங்கியதுமே அவன் சற்குணத்தைத் திட்ட ஆரம்பித்தான்.
“பார்த்ததும் கிணத்தோரமா வெச்சு சாய்க்காம.. இங்க வந்து பிட்டு படம் கணக்கா…”
சற்குணத்திற்குள் கொஞ்சம் அவமானமும் அதன்வழியாக மேலும் கொஞ்சம் மூர்க்கமும் எழுந்தது. அந்த நிமிடத்தில் தனது உடலுக்குள்ளிருந்து வெளிவரத் துடித்த ஏதோவொரு விசையின் மீது அச்சமும், இலேசான அருவருப்பும் இருந்ததை சகாயத்திடம் எப்படிச் சொல்வதெனத் தெரியாமல் வெறுமனே வேடிக்கை பார்க்கத் தொடங்கினான். சகாயம் மேலும் கொஞ்சம் போதையுற்றவுடன் பூஞ்சை படிந்த அந்த ஊறுகாய் சிரட்டையைச் சற்குணத்தின் பக்கம் நகர்த்தினான். அழுகிவிட்ட புண்ணைப்போன்ற அதன் தோற்றத்தில் ஒரு அருவருப்பு இருந்தது. அதனுள் ஆவேசமாகப் பதிந்தெழுந்த விரல்களின் கூட்டத்தால் அந்தப் புண்ணிற்கு நடுவே இளங்குருதி வழிய புத்தம்புது எலுமிச்சைத் துண்டங்கள் மேலெழுந்துகொண்டிருந்தன.
“எடு.. எடு…”
சற்குணம் அந்தப் பூஞ்சைகளின், அந்த அழுகிய மேற்பரப்புகளின் மேலே தனது கவனம் விழுவதை உள்ளுக்குள் எதனையோ உடைப்பதன் வழியே கடந்து செல்ல முயன்றான். சிறிய நடுக்கத்தோடு குழிந்த அந்த எலுமிச்சைத் துண்டுகளை விரலால் தோண்டி எடுத்தான். பிறகு கண்களைச் சுருக்கிக்கொண்டு நாவில் வைத்தான். சகாயம் இன்னமும் குனிந்தபடி தலையாட்டிக்கொண்டே இருந்தான். எதிர்க்கரையில் போர்வை ஒன்றை உதறியதைப்போல நாட்டுத்துப்பாக்கி வெடித்த ஒலி தாமதமான அதிர்ச்சியோடு வந்தடைந்தது. மண்டூகமுனி கயிற்றில் விடுபட்டு கொக்காக காற்றில் மிதக்க ஆரம்பித்திருந்தார்.
வயிற்றுக்குள் சிறிய நூல்கற்றையைச் சுமந்தபடி தறியின் இடப்பக்கமும் வலப்பக்கமும் மாறி மாறிச்சென்று மரராக்கெட் முத்தமிட்டுக்கொண்டிருந்தது. ஒவ்வொரு சீறலுக்கும் அதன் வயிற்றிலிருந்த நூல் சேலையைத் துளித்துளியாக உருவாக்கிக்கொண்டிருந்தது. கிழவன் எதையோ எடுக்க உள்ளே வந்தவர், தறியின் பாவு மீது தன்னிச்சையாகப் பொம்மையைப்போலத் தறியடிக்கின்ற மஞ்சுவை ஓரக்கண்ணால் பார்த்தபடி சென்றார். அவள் எதையோ எண்ணிகொண்டிருக்கிறாள் என்பதை நளினமாகப் பாத மிதிக்கட்டைகளை விடுவித்து பின் பெருவிரலால் அழுத்திப் பிடிக்கின்ற பாதங்களும் மின்னல் வேகத்தில் இடமும் வலமுமாகச் செல்கின்ற மரராக்கெட்டை எதோ ஒரு வாசகம் போல வாசிக்கின்ற மனமும் எல்லாவற்றுக்கும் மேலாக மனமொற்றித் தறியடிக்கின்றபோது அந்த மொத்தத் தறி எந்திரமுமே ஒரு அடிமையென, நெய்கின்ற கைகளில் தஞ்சம் புகுந்து ஜக்காட் பெட்டியை அதன் உலோக ஒலியை மன உரையாடலுக்குப் பின்னணி இசையாக மாற்றிவிடுவதன் மூலம் காட்டிக்கொடுத்துவிடுவதும் உண்டு. மஞ்சுவால் இரகசியம் காக்க முடியாது. மகிழ்வோ அழுகையோ அதனை வெளிப்படுத்தும் அனுமதியை உதடுகளும் கண்களும் அவளிடம் கேட்பதேயில்லை.
வீடு முழுக்க மதிய நேரத்தின் இருள் இறங்கியிருந்தது. மஞ்சு தறியடித்தபடி தனக்கு முதுகுகாட்டி அமர்ந்து இராட்டை சுற்றும் சற்குணத்தைப் பார்த்தாள். அவனது கழுத்துப்பகுதி இவளது பார்வையை உள்வாங்கி கூசி தாழ்ந்தது. கிழவன் மஞ்சள் பூசிய தேங்காய் மீது சாட்டையைப் பாம்புபோலச் சுற்றி வைத்துக்கொண்டிருந்தான். சற்குணம் வாழ்வின் முதன்முதலாக ஒரு இரகசிய உரையாடலின் எடையை அங்கே உணர்ந்துகொண்டிருந்தான். அவனது சீரற்ற மூச்சொலிகள் அவன் உள்ளம் பதறுவதைச் சொற்களாக எதிரொலித்துக்கொண்டிருந்தன. எந்த இரகசியமும் இல்லாமல் இதற்குமுன் அங்கே திரிந்துகொண்டிருந்த சற்குணத்தை இப்போது எண்ணும்போது இறகைப்போல மென்மையான உணர்வெழுந்தது. மஞ்சுவின் கண்களை எதிர்கொள்வதைப் பற்றி எண்ணும்போதே அடிவயிறு கூசியது. ஆனால் அதே நேரத்தில் உடல் முழுவதும் இலக்கேயின்றி ஓடும்போது நிகழ்கின்ற திளைப்பு பொங்கிக்கொண்டேயிருந்தது. சிறிய குச்சிகளில் எச்சில்தொட்டு ஒட்ட வைக்கின்ற நூலின் முதல்முனையைப் போல மஞ்சுவின் நிர்வாணத்தின் மீதான ஞாபகங்களைத் திரும்பத் திரும்பத் திறக்கும்போதெல்லாம் மெல்லிய அச்சமும் குறுகுறுப்பும் சேர்ந்துகொள்கின்றன.
இரண்டு விரல்களுக்கு நடுவே மெல்லிய நூல் நீரைப்போல ஓடியபடி சிறிய குச்சியில் சுற்றிக்கொண்டிருந்தது. சற்குணம் அதையே பார்த்தான். சக்கரத்தின் சீரான சுழற்றலின் வழியே அந்த நூல்நதி குச்சியின் மீது சிட்டுக்குருவியின் உடலைப்போல ஊதிப்பெருத்தபடி வந்தது. அவனது முதுகுப்பரப்பில் மஞ்சுவின் கண்கள் நடந்துகொண்டிருப்பதை ஸ்தூலமாகவே உணர முடிந்தது. சட்டெனத் திரும்பி அவளை ஒருமுறை நேர்கொண்டு பார்த்துவிடலாம் என்கிற அவஸ்தையோடு, அப்படிப் பார்க்கும்போது அந்த மெல்லிய இருளுக்குள் நீரைப்போல ஜ்வலிக்கும் அவளது கண்கள் தன்னிடம் கூசக்கூச எங்கேயோ வருடாமல் விடாது என்பதையும் சேர்த்து நினைத்து, ஒவ்வொரு முறையும் வியர்வை பொங்கி நனைக்க தளர்ந்துபோய் அமர்ந்திருந்தான். பிடறி மயிர்க்கற்றைக்குள்ளிருந்து வழிகின்ற வியர்வைக்கோட்டைத் துல்லியமாகப் பார்த்தபடி தறி மிதித்தவாறே மீண்டும் புன்னகைத்துக்கொண்டாள் மஞ்சு. உடைகளுக்கு உள்ளே அவனது உடல் கங்கைப்போல மலர்ந்துகொண்டிருப்பது தெரிந்தது. அந்த முதல்கனல் அளிக்கின்ற சித்திரவதையைத் தாளாமல் அவனது முகம் மேலும் மேலும் அல்லாடுவதைக் காண விரும்பினாள்.
வெற்றிலைச்சாறு கோடு வழிகின்ற உதட்டு விளிம்பைத் துடைத்தவாறு கிழவன் வெளியே சென்று அமர்ந்துகொண்டார். நல்ல வெயிலில் உடம்பு முழுக்க எழுகின்ற அரிப்பு நமைச்சலைச் சொறிந்தபடி வெயிலைப் பார்த்தவாறே அமர்ந்திருப்பது கிழவனுக்குத் தியானம் போல. மஞ்சு இரண்டாவது தடவையாக வீட்டிற்கு இழைத்த அவமானத்தை இந்த வெயிலின் மௌனத்தைப் பார்த்துப் பார்த்துத்தான் கரைத்தார். வண்டல் மணலைப்போல மயிர்கள் மென்மையாக விரடிக்கிடந்த அடிவயிற்றைக் கைவிரல்கள் சொறிந்துகொண்டன.
மஞ்சு தறியடிப்பதை நிறுத்தினாள். சட்டென திடுக்கிடும்படியான நிசப்தம் வீடு முழுக்க நிறைந்தது. ஜக்காட்பெட்டியின் கடைசி அதிர்வு வெண்கலக்குடத்து நீரில் இன்னமும் மெல்லிய வளையங்களாக அவிழ்ந்துகொண்டிருந்தது. சற்குணம் மேலும் ஒடுங்கியவனாக இராட்டைச் சக்கரத்தின் பிடியை இறுகப்பற்றிச் சுழற்றிக்கொண்டிருந்தான். மஞ்சுவிற்குத் தறியை, அந்த ஆயிரக்கணக்கான போக்ஸ் கம்பிகளால் இசைக்கப்படுகின்ற இசைப்பெட்டியை இப்படிச் சட்டென நிறுத்தி, அந்த சப்தத்திற்குள் உறங்கிக்கிடக்கின்ற அந்தரங்கமானவைகளை அமைதியின் வெளிச்சத்திற்கு இழுத்து வருவது மிகப்பிடிக்கும். சதா சப்தங்களுக்குள் ஊர்ந்து வாழப் பழகிவிட்ட கிழவனையோ அம்மாவையோ எதற்கேனும் திட்ட விரும்பும்போதெல்லாம் அவள் தறியை நிறுத்திவிடுவாள். சட்டென உலகமே தலைகுனிந்து அவர்களை உன்னித்துப் பார்ப்பதைப்போன்ற பிரமை அந்த நிசப்தத்திற்கு உண்டு. அதில் நீண்டநேரம் நிற்க அஞ்சியபடி மஞ்சுவின் எல்லாச் சொற்களுக்கும் தலையாட்டிவிட்டு அவர்கள் சென்றுவிடுவதுண்டு. இருளுக்குள் சிறிய வெளிச்ச முகங்களைப்போல பாத்திரங்கள் உறைந்திருந்தன. மஞ்சு செம்பில் அள்ளிய நீரைப் பருகுவதற்கு முன்பாக, கதவோரமாக அமர்ந்தபடி தன்பக்கம் முகம் திருப்பாத சற்குணத்தையே அளவிட்டாள். இன்னும் ஒன்றிரண்டு கோடுகள். பறவைக்குஞ்சு தன் முட்டையைத் தானே உடைத்து வெளிவருவதைப் போல சற்குணம் தனக்குள்ளாகவே நடந்து வெளிவர வேண்டிய பாதைகள் மிச்சமிருப்பது அவளுக்குத் தெரியும். அதன் முடிவில் வருகின்ற இறுக்கமும் விரிசல்களுமான சதுப்புநிலத்தில் அவள் கையில் செம்போடு நின்றுகொண்டிருக்கிறாள்.
சக்கரம் சுழற்றுகின்ற தனது கையில் உடைகளின் விளிம்புகள் உரச நடந்தபடி புழக்கடைக்குச் செல்கின்ற மஞ்சுவை நிமிர அஞ்சினான் சற்குணம். நினைக்கும்போதே மூச்சடைக்கச் செய்கின்ற மாபெரும் விளையாட்டிற்குள் தனது முதுகைப் பிடித்து யாரோ தள்ளுவதுபோல ஒரு பதற்றம். புழக்கடைக்குச் செல்கின்ற பாதை முழுவதும் திரண்டிருந்த இருட்டிற்குள் நடந்து சென்றுகொண்டிருந்தாள். உடைகளின் நிறம்கூட தெரியாத இருட்டிற்குள் அவளது உடலை இன்னும் துல்லியமாக யோசிக்க முடிந்தது சற்குணத்திற்கு. ஒருமுறை நிர்வாணம் கண்டபிறகு உடை என்பது சம்பிரதாயக் கதவு. புழக்கடை கிணற்றடியில் போய் சேருமிடத்தில் நல்ல வெளிச்சம் இருந்தது. இருட்டுக்குள் நடந்து அவள் வெளிச்சத்திற்குள் நுழைகையில் ஏதோ வேறு ஊரில் நிற்பவளைப் போலிருந்தாள். சித்திரைத் திருவிழாவிற்கு வந்திருந்த சங்கர், முகக்கண்ணாடியைச் சுவர் ஆணியில் தொங்கவிட்டபடி, தனது இளநரைகளைத் தேடித்தேடி வெட்டிக்கொண்டிருந்தான். சங்கர் முடியைக் கத்தரித்தபடி அவளிடம் ஏதோ வினவினான்.
எப்போதாவது வீட்டிற்கு வருபவர்களுக்கு மட்டுமே சட்டென அந்த வீட்டில் இவ்வளவு நாள் யாராலும் கவனிக்கப்படாமல், படுபச்சையாகத் திறந்துகிடக்கும் பிழைகள் கண்ணிற்குப் படும். சங்கர் சற்குணத்திற்குக் கேட்காத குரலில் மஞ்சுவிடம் சௌராஷ்டிரா பாஷையில் உறுமினான், “இவனுக்கு இன்னமும் ராட்டை சுத்தற ஆசை போகலியா? வயசு என்னாச்சு! ஊர் பேசற கதையெல்லாம் போதாதுன்னு இவன் வேறயா?”
மஞ்சு தலைமுடியில் வாடிப்போய் சிக்கியிருந்த கனகாம்பரத்தை ஹேர்பின்னோடு அவஸ்தையாக இழுத்தபடி, “ஆயிரம் பேசுவானுக. ஒவ்வொருவாட்டியும் அவனுகளுக்காக ஒவ்வொன்னயா நெருப்புல போட முடியாது.”
“உனக்கு விளையாட்டாத் தெரியுது. உங்கதை பத்து தூண் சந்துல புட்டா விக்குற ஒவ்வொரு கடையா சிரிக்குது தெரியுமா?”
“எதைத்தான் பேசலை அவனுக. பீ வண்டுகணக்கா உருட்ட எதுனாச்சும் வேணும்ல..”
கத்தரிப்பதை நிறுத்திய விரலோடு, முகக்கண்ணாடி வழியே அவளைப்பார்த்தான் சங்கர்.
“நீ யோக்கியமாக்கும்?”
இந்தக் குரலைக் கேட்டவுடன் சங்கரின் முதுகுப்பரப்பை இலேசான அதிர்ச்சியும் அழுகையுமாக ஏறிட்டாள். இதைக் கேட்கும்போது அவனது முகம் எப்படியிருக்கின்றது என்பதை அறிய விரும்புகின்ற வெறி கிளம்பியது. சட்டென முகக்கண்ணாடிக்குள் அவனது கண்களைப் பார்த்தாள். ஒரு சிறிய தடுப்பைப்போல முகக்கண்ணாடி இருவருக்கும் நடுவே இருந்தது.
“நா யோக்கியந்தான். அவனுகதான் இல்ல.”
சொல்லும்போதே அவளுக்குள் உறுதியும் அழுகையும் கூடிவந்தது.
அந்த அழுகையைக் கண்டவுடன் சங்கரின் முகத்தில் நிம்மதியான ஒரு புன்னகை வந்தது.
அம்மா ஊருக்குப் போயிருந்தாள். இரண்டு நாட்கள் கிழவன் வீட்டில்தான் சற்குணத்திற்குச் சாப்பாடு தூக்கம் எல்லாமும். தறிக்குக் கீழே துண்டு அகல இடத்தில் எல்லோரும் உறங்கிக்கொண்டிருந்தனர். ஜன்னலின் ஒற்றைக்கதவின் வழியே விழுந்த தெரு வெளிச்சத்தில் தறியின் நூற்கற்றைகள் இருளுக்குள்ளிருந்து வண்ணத்திற்குச் சென்றுகொண்டிருந்தன. வெளியே சச்சாளியின் நீர்ப்பெருக்கின்மீது பன்றிகள் மகிழ்ந்து உழல்கின்ற சப்தங்கள். குறைவான சப்தத்தில் ரேடியோ இன்னமும் பாடிக்கொண்டிருந்தது. மஞ்சு கண்களை மென்மையாக மூடியபடி நெற்றியைச் சுருக்கிக்கொண்டு அந்தப் பாடலின் ராகத்தினைத் தொண்டைக்குள் அமைதியாக ஒத்திசைந்து நிகழ்த்திக்கொண்டிருந்தாள். ஒரு புகையைப்போலத் தன்னுடைய ஞாபகத்தை எங்கெங்கோ அவள் கரைத்துக்கொண்டிருக்க வேண்டும். சற்குணத்தின் அருகே படுத்திருந்த சங்கரின் இடம் காலியாக இருந்தது. அவன் சிகரெட் தேடி பஸ் ஸ்டாப்பிற்குச் சென்றிருந்தான். அவனது தலையணையின் மீது மஞ்சுவின் வலது கை சாயமிழந்த வளையல்களோடு வெறுமனே கிடந்தது.
தறியடிக்கும் கைகளுக்கேயுரிய காய்ப்புகளைத் தனக்குள் திக்கித்திக்கி வாங்கிக்கொண்டிருக்கும் அந்தக் கையின் மீது அவள் கண்களை மூடிப்பாடுகின்ற பாடலின் மகிழ்ச்சி ஒரு நடனக்காரியைக் கொண்டுவந்திருந்தது. சற்குணம் அதிசயத்தைப்போல அந்த விரல்களின் நடனத்தைத் தலையுயர்த்திப் பார்த்தபடி இருந்தான். எப்போதும் சாதாரணமாகத் தோன்றும் ஒருத்தியின் உடலசைவுகள் கொஞ்சம் இரகசியம் பூசிக்கொள்ளும்போது எவ்வளவு வசீகரம் கொண்டுவிடுகின்றன! எதையோ உணர்ந்தவளாகச் சட்டென கண்விழித்தாள். அவளது மகிழ்ச்சியின் கடைசித்துளி இன்னமும் விரல்களில் நளினிப்பதைப் பார்த்தாள். கூடவே தலையணைக்குள் புதைந்தபடி அந்த விரல்களை, உன்னிக்கின்ற கண்களை, நிர்வாணத்தின் மீச்சிறு துண்டுகளாக இருளுக்குள் ஜ்வலிக்கின்ற அந்த விரல்களின் வெண்மையை, ஒரு அழைப்பைப்போல அவை நிகழ்த்துகின்ற நடனத்தை, வியர்வை ததும்பப் பார்த்த சற்குணத்தின் கண்களில் மயக்கத்தின் கருப்பு மின்னல்கள் தோன்றி மறைந்தபடியிருந்தன.
கண்ணுக்குத் தெரியாத சாட்டையொன்றினால் கணந்தோறும் அடிபட்டுக்கொண்டே இருக்கும் அவனது வியர்வை பொங்குகின்ற உடலைப் பார்த்தாள்; ஒரு உலைதுருத்தியின் பதற்றத்தோடு அது மூச்சுத் திணறிக்கொண்டிருப்பதன் சித்திரவதையையும். அவனது கைகள் சப்தமின்றி கதவைத் திறப்பதற்கான பாவனைகளோடு அவளைப் பற்றின. மஞ்சு அவனது கண்களில் அதனைக் கண்டாள். இருளுக்குள் மறைகின்ற முடிவுகொண்ட படிக்கட்டுகளின் வழியே முதல் அடி எடுத்துவைக்கின்ற ஒருவனது கண்களில் வருகின்ற அந்த அச்சத்தை, இரகசியத்தை. அந்தக் கண்களின் வழியே அவள் எங்கெங்கோ சரிந்துகொண்டிருந்தாள். விறகை வெளியே இழுத்தாற்போலச் சட்டென அவளுடம்பு தணியத் தொடங்கியது. இவ்வளவு நேரம் அவள் எதன் கதகதப்பில் நின்றாளென்பதே அவளுக்குப் புரியவில்லை. சற்குணத்தின் விழிகளுக்குள் திரண்டெழுந்துகொண்டிருக்கும் யார் யாருடைய சாயைகளையோ அவள் திகைத்தவளாகப் பார்த்தபடியிருந்தாள். எக்கி மேலேற தன்னையறியாமல் கிளர்ந்தெழுந்த சற்குணத்தின் தோளைப் பற்றியவள் கண்ணீர் திரண்டுவிட்ட கண்களோடு, “தெய்வமே… போடா” என்றாள். வாசலில் இருளுக்குள் சங்கர் வந்தமரும் ஓசையும் அவன் உரசிக்கிழித்த தீக்குச்சியின் பெரும்பிழம்பொன்று மெல்ல மெல்ல ஒரு துளியாகி வடிகின்ற வெளிச்சமும் கதவிடுக்கில் சேர்ந்து விழுந்தது.
3 comments
Beautifully written reflecting on the local community of weavers and their everyday trials and tribulations and aspirations in a society deeply soaked in past cultural idioms .
Thanks .
பா. திருச்செந்தாழை யின் கதையில் இது ஒரு பெரும் பாய்ச்சல். வர்ணனை அற்புதம்
” வர்ண நூல்களின் வரிசைக்கிரமமான அணிவகுப்புக்குக் கீழே அவள் நூல்சிறை ஒன்றிற்குள் இருப்பதைப் போலிருந்தது. ”
மதுரை என் ஊரும் என்பதால், இந்த கதையில் வருகிற பின் புலம் துல்லியமாக காண முடிகிறது. இதை போன்ற பல வீடுகளுக்கு நான் சென்ருறிக்கிறேன். முடிவு அபாரம்.
ஒவ்வொரு முறையும் பொன் அன்றே மஞ்சு ஆண்களை அணுகுகிறாள். ஒவ்வொரு முறையும் அவர்கள் தான் காக்கைப்பொன் என்பதை நிரூபிக்கிறார்கள். காக்கை பொன்னில் புரட்டி எடுத்தாலும் பொன் பொன்னே. மஞ்சு மனதால் பொன்னே !!!
Comments are closed.