உலகை மாற்றிய ஆண்டு.
பரிணாம வளர்ச்சியில் ஏற்பட்ட மாபெரும் பிழை மனிதரில் தன்னுணர்வை உருவாக்கியதே. மனிதருடைய சுயமும் அறிவாண்மையும் அவர்தம் தேடலை வகுக்கிறது. அதனால் அவர்களால் தற்கணத்தில் தேங்கி நிற்க முடிவதில்லை. நிறைவுகொள்ள இயலுவதில்லை. நம்முடைய ஒவ்வொரு நாளும் பொழுதும் அடுத்த கணத்தைப் பற்றின எண்ணங்களால் நிரம்பியிருக்கிறது. அவற்றை முன்னிறுத்தியே நம் சிந்தனையோட்டம் தொழிற்படுகிறது. இங்கே சிந்தனை என்பது உலகை உய்த்தறிவதற்கான நுண்புலன் கருவியாக அல்லாமல் மனிதரின் வசதிகளைப் பெருக்கிப் பேணுவதற்கான பிழைப்பறிவாக எஞ்சிவிடுகிறது. அதன் பிறகு தம் உயிரியக்கத்தைத் தக்கவைக்கும் பொருட்டு மனிதர்கள் எந்த எல்லைக்கும் செல்லத் துணிகிறார்கள். உலகில் பேரழிவைக் கொண்டுவருகிறார்கள்.
மனிதரின் நிறைவின்மையே இயற்கையை அச்சுறுத்துகிறது. ஆறாவது புலனே இயற்கைக்கு எதிரான ஒற்றை ஆயுதமாகச் செயலாற்றுகிறது. ஏனெனில் மனிதன் தன் இருப்பைக் (existence) குறித்து மட்டுமே சிந்திக்கிறான். தன் இருப்புக்கான பொருளைத் தேடியே அல்லலுறுகிறான். கலைகளிலும் மெய்யியலிலும் ஈடுபடுகிறான். பாதுகாப்பான வருங்காலத்துக்காகப் போராடுகிறான், கவலைப்படுகிறான். இருத்தலியல் சிக்கல் அளவுக்கு நவீன மனங்களைப் பாதித்த மற்றொரு கோட்பாடு உண்டா? இங்ஙனம் தம்மை மையப்படுத்திச் சிந்திப்பதே மனிதரின் சாபம் என நினைக்கிறேன். மனிதர்கள் தன்னிருப்பைப் பொருட்டாகக் கருதாமல் என்றைக்கு உடனிருப்பையும் சார்புநிலையையும் (co-existence) கவனத்தில் கொள்கிறார்களோ அன்றுதான் சிந்தனை பரிணமித்ததன் நோக்கம் ஈடேறும். இயற்கையின் பிழை சரிசெய்யப்படும்.
இவ்வுலகிலிருந்து முற்றாக அழிந்துபோவதற்கு முழுத்தகுதியுடைய இனம் மனிதகுலம். The Year Earth Changed (2021) ஆவணப்படத்தைப் பார்த்தபோது அவ்வெண்ணம் மீண்டும் உறுதிப்பட்டது. டேவிட் அட்டன்பரோவின் குரல் மேவல், டாம் பேர்ட் இயக்கம். இப்படம் கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் உண்டான புவி கோள் மாற்றங்களைச் சுருக்கமாக விவரிக்கிறது. இருநூறு ஆண்டுகளாக நாம் பாழ்படுத்திய சூழியலை வெறும் ஓராண்டுக்குள் சீரமைத்துக்கொள்ளும் இயற்கைத் தகவமைப்பின் பேராற்றலைச் சிலிர்ப்பூட்டும் தருணங்களால் தொகுத்தளிக்கிறது.
தாழ்வரையிலிருந்து இருநூறு மைல் தொலைவிலிருக்கும் ஜலந்தர் நகரில் ஊர் முடக்கம் அமல்படுத்தப்பட்ட மூன்றாவது மாதத்திலேயே நேரடிக் கண்பார்வைக்கு இமய மலைத்தொடர் தெரியத் தொடங்குகிறது. ஒட்டுமொத்த நகர மக்களும் வீட்டு மாடிகளில் குழுமி இப்பரவசக் காட்சியை வியந்து வியந்து உவகையடைகிறார்கள். அப்போது இந்த அரிய காட்சியைப் படமெடுப்பவரின் முகம் ஒளிர்வதைப் பார்க்க வேண்டுமே! மனித நடமாட்டம் குறைந்து வளி மண்டலத்தின் மாசு கட்டுப்பட்டதும் தென்படும் தெய்வாம்சம். அதனை அவரது முகத்திலும் கண்டுகொள்ள முடிகிறது. அவரது மனம் பொங்குவதை உணர முடிகிறது.
கடற்கரையிலிருந்து வீதிக்குள் நுழைந்து சாலைகளில் தத்தித் தத்தி நடைபோடும் பெங்குயின்கள், சுற்றுலாப் பயணிகளின் வருகை இல்லாது பூட்டிக்கிடக்கும் உல்லாச விடுதியில் தனது ராஜாங்கத்தை அமைக்கும் சிறுத்தை, வீட்டுச் சுற்றுப்புறத்தில் உலவும் புதிய உயிரினத்தைக் கண்டு குழம்பிக் குலைக்கும் நாய்க்குட்டிகள் என ஐந்து கண்டங்களில் ஏற்பட்ட கானுயிர் வாழ்வின் உருமாற்றத்தைக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். சூழியல் விற்பன்னர்களின் தகவல்சார் ஆய்வுடன் பொருந்துகிற காட்சிகளைக் கச்சிதமாக இணைத்து பல்லுயிர் ஓம்பலின் அவசியத்தைத் தீர்க்கமாக வலியுறுத்துகிறார்கள்.
இந்த ஆவணப்படத்தில் இடம்பெற்றிருக்கும் இரண்டு பகுதிகள் என்னை மிகவும் கவர்ந்தன. இரண்டுமே உயிரியக்கத்தின் அடிப்படை உள்ளுணர்வு சார்ந்தவை. முதலாவது, ஜப்பானின் நாரா கோவிலிலுள்ள சிக்கா (Sika) மான்கள். அவை இயல்பிலேயே கூச்ச சுபாவமுடையவை. அந்நகரின் புனித விலங்குகளாகக் கருதப்படுபவை. நகரின் விரிவில், மக்கள் தொகை பெருக்கத்தில், அவற்றுக்கான வாழ்விடங்கள் சுருங்கிவிடுகின்றன. கோவிலுக்கு வரும் பக்தர்களும் பயணிகளும் அளிக்கும் அரிசிதான் அந்த மான்களுக்கான ஒரே உணவு. அதைப் பெறுவதற்காகத் தம் கூச்சத்தைத் துறந்து அவை மேற்கொள்ளும் சாகசங்கள்தான் எத்தனை எத்தனை! மனிதரின் உடல்மொழியைப் புரிந்துகொண்டு ஜப்பானிய முறைப்படி குனிந்து பயணிகளுக்குத் தலைவணங்குகின்றன, யாராவது அலைபேசியில் தற்படம் எடுக்க முயன்றால் தொடுதிரையைப் பார்த்து நேர்த்தியாகப் போஸ் கொடுக்கின்றன, அங்குள்ள உணவகங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் பாந்தமாக உறவாடுகின்றன.
தொற்றுப் பரவலை முன்னிட்டு திடீரெனக் கோவில் மூடப்படுகிறது. மனிதர்களைச் சார்ந்திருந்த மான்களின் வாழ்வாதாரம் இப்போது கேள்விக்குறியாகிவிடுகிறது. மான்மறிகள் துவண்டுபோகின்றன. செய்வதறியாது திகைக்கின்றன. ஆனால், பல்லாண்டுகாலப் பழக்கம் என்றாலும் அம்மான்களின் மரபணுத் தொடர்ச்சியில் அது சிறியதொரு இடையீடுதான். பிழைத்தலுக்கான வளைந்துகொடுத்தல்தான். குறுகிய காலத்திற்குள்ளாகவே அவ்வுயிர்களில் மனிதர் பதித்த தடம் மறைகிறது. அவற்றினுடைய உள்ளுணர்வு மேலெழும்புகிறது. மூத்த மான்கள் வழிநடத்திச் செல்ல, சிக்கா கூட்டம் கோவிலை விட்டு வெளியேறுகிறது. மேய்ச்சல் நிலம் தேடும் முனைப்பில் விடுதலையடைகிறது. ஆளரவமற்ற போக்குவரத்து சிக்னலில் சிகப்பு விளக்கு எரியும்போது அந்த மான்கள் பொறுமையாகக் காத்திருக்கின்றன. பச்சை விழுந்ததும் சாலைத் தடுப்புகளைத் தாவிக் கடக்கின்றன. இரண்டரை கி.மீ. தொலைவு பயணம் செய்து தங்களுக்கான பசும்புல் வெளியைக் கண்டடைகின்றன.
இரண்டாவது, அசாம் காடுகளின் யானைக் கூட்டம். தங்களது விளைச்சல் நிலங்களை நாசம் செய்யும் யானைகளை விரட்டுவதற்காகப் பட்டாசுகளைக் கொளுத்தி வேட்டு வைப்பதும் இரவெல்லாம் விழித்திருந்து டார்ச் அடித்தோ தீப்பந்தம் ஏந்தியோ கூச்சலிடுவதும் அந்தக் கிராமத்தினரின் வழக்கம். கோவிட் காரணமாக வெளியூரில் வேலை பார்த்துக்கொண்டிருந்த கணிசமான சதவிகித மக்கள் ஊர் திரும்பியிருக்கின்றனர். இந்தக் கூடுதல் மனித வளத்தை ஆக்கப்பூர்வமான செயல்களுக்குப் பயன்படுத்தலாம் எனும் யோசனை முன்வைக்கப்படுகிறது. காட்டு எல்லை அருகே அமைந்திருக்கும் வன்புலத்தைப் பண்படுத்தி, துரிதமாக வளரும் காட்டுப் பயிர்களைப் பயிரிட முடிவெடுக்கிறார்கள். யானைகளுக்கான உணவை விளைவித்துக் கொடுத்துவிட்டால் அவை ஊருக்குள் நுழைந்து அட்டகாசம் செய்யாது எனும் அனுமானமும் நன்னம்பிக்கையுமே இத்திட்டத்தை முன்னெடுப்பதற்கான காரணம்.
மாதங்கள் கழிகின்றன. அறுவடைக் காலம் நெருங்கிவிட்டது. காட்டுப் பயிர்கள் செழித்து வளர்ந்திருக்கின்றன. எந்த மக்கள் யானைகளைத் துரத்தியடிப்பதற்காகப் பட்டாசுகளை வெடித்துத் துன்புறுத்தினரோ அதே மக்கள் பூவும் பழமும் வைத்து யானைகளை வரவேற்று வழிபடுகின்றனர். ஊர் எல்லையருகே மங்கள மணியோசைகளை எழுப்புகின்றனர். யானைகள் ஊருக்குள் புகுந்து தங்களது பயிர்களை நாசம் செய்யுமா அல்லது காட்டுப் பயிரை உண்ட திருப்தியுடன் சாந்தமடையுமா என்கிற கலவையான திகில் மனநிலையுடன் வீடு திரும்புகிறார்கள். அவர்கள் சென்றதும் காட்டு மரங்கள் அசைகின்றன. அதுகாறும் இருளில் மறைந்திருந்த யானைக் கூட்டம் எட்டிப்பார்க்கிறது. மெல்ல கீழிறங்கி வந்து தங்களுக்காக அந்தக் கிராமத்தினர் விளைவித்த பயிர்களை மட்டும் உண்டு காட்டுக்குள் திரும்பிச் செல்கிறது. யானைகளை நீங்கள் விரும்பினால் யானைகளும் உங்களை விரும்பும் என்கிறார் அக்கிராமத்தில் பணியாற்றும் தன்னார்வலர் ஒருவர்.
யானைகளுக்கு அபாரமான நினைவாற்றல் உண்டு. அசாம் மக்களின் மேலான நோக்கத்தைப் புரிந்துகொள்ளும் யானைகள் அவர்களுடைய கடந்தகாலத் தவறுகளை மறந்தும் மன்னித்தும் ஏற்கின்றன என்றே பொருள். இதைவிட மகத்தான விஷயம் வேறென்ன இருக்க முடியும்? அவை நம்மைக் காட்டிலும் மேன்மையான உயிர்கள் என்றாகிவிடுகிறது அல்லவா? நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாலபாடமே சக உயிர்கள் மீது அக்கறை காட்டுவதுதான். உலகெலாம் ஓருயிர் என அறிவதுதான். இவ்வுலகம் பகிர்வதற்கானது என்றுணரும் போது மனிதனும் உய்வடைவான்.
*
கொரோனா தொற்று கண்டறியப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த போது “In the same breath” என்ற ஆவணப்படம் வெளியானது. பல்வேறு கட்டுப்பாடுகளுக்கிடையில் சீன அரசாங்கத்தின் கெடுபிடிகளுக்கு அஞ்சாது இயக்குநர் நன்ஃபூ வாங் இப்படத்தை எடுத்து முடித்திருக்கிறார்.
2020ம் ஆண்டு வூஹான் மாகாணத்தில் நடைபெற்ற புத்தாண்டுக் கொண்டாட்டங்களைக் காட்டி படம் தொடங்குகிறது. தேசப்பற்று குறித்தும் இடதுசாரியாக வாழ்வதிலுள்ள பெருமிதம் குறித்தும் சீன அதிபர் ஜின்பிங் உரையாற்றுகிறார். அது நாடு முழுவதும் ஒளிபரப்பப்படுகிறது. அன்று மதியமே இன்னொரு கவனிக்கப்பட வேண்டிய செய்தி வெளியாகி இக்கொண்டாட்டத்தின் கூச்சல், பரபரப்புக்கிடையில் அமுங்கிவிடுகிறது. பின்னர் அச்செய்தியை மீண்டும் ஒளிபரப்புவதற்குத் தடை விதித்து மேலிடத்து உத்தரவு வருகிறது. மர்மமான நிமோனியா காய்ச்சல் குறித்து “வதந்திகளைப்” பரப்பியதற்காக வூஹான் காவல்துறையினர் எட்டு ஆட்களைக் கைதுசெய்து சிறையில் அடைத்திருக்கும் செய்திதான் அது. இதன் முக்கியத்துவத்தை உணராமல் ஆயிரக்கணக்கானோர் வீதிகளிலும் விமான நிலையங்களிலும் கூடியிருக்கிறார்கள். பட்டாசுகளை வெடித்து மகிழ்கிறார்கள். தாங்கள் “கிருமிக்கடத்திகள்” என்பது தெரியாமல் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து அன்பை வெளிப்படுத்துகிறார்கள். தங்களது “இயல்பு வாழ்க்கையின்” கடைசி நாள் அது என்பதை இன்னும் சில நாட்களில் அம்மக்கள் பீதியுடன் நினைவுகூர்வார்கள்.
கிருமித்தொற்று பற்றின முதல் தகவல் கிடைத்து மூன்று மாதங்களுக்குப் பிறகே வூஹான் மாகாணத்தில் முழு ஊரடங்கை அமல்படுத்துகிறார்கள். இந்த இடைப்பட்ட காலத்தில் வைரஸ் பரவல் குறித்த உண்மைத்தன்மையை மறைக்க முயன்று சீன அரசாங்கம் செய்ததெல்லாம் அப்பட்டமான மனித உரிமை மீறல்கள். அவை கிட்டத்தட்ட படுகொலைகள். கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை பற்றின இரகசியங்களைக் காக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். அதை மீறி மனிதாபிமானத்துடன் செயல்படும் மருத்துவர்கள் காணாமலாக்கப்படுகிறார்கள். மருந்துகள் போதவில்லை, என்ன மாதிரியான சிகிச்சையை அளிப்பது என்பது குறித்து சக மருத்துவர்களுடன் கலந்தாலோசிப்பதற்குச் சுதந்திரமில்லை, படுக்கைகள் இல்லை என ஏகப்பட்ட குளறுபடிகள் நடந்து வீதிகளிலும் பேருந்துகளிலும் மக்கள் மயங்கி விழுந்து செத்துப்போகிறார்கள். யாராவது உதவ முன்வர மாட்டார்களா என்கிற எதிர்பார்ப்புடன் கையறுநிலையின் விளிம்பில் தவிக்கும் குடிமக்கள், தங்களது சுய விவரங்களையும் மருத்துவ ஆவணங்களையும் சமூக ஊடகங்களில் பதிவேற்றத் தொடங்குகிறார்கள். சீன அரசாங்கத்தின் ஐடி விங் அவற்றைக் கண்காணித்து உடனுக்குடன் நீக்குகிறது. இதுபோன்ற தேச விரோதச் செயல்களில் ஈடுபடுவோர் தண்டிக்கப்படுவார்கள் என எச்சரிக்கிறது.
இந்த ஆவணப்படத்தைப் பார்த்தபோது, சீனா மட்டுமின்றி, உலகெங்குமுள்ள எல்லா அடிப்படைவாத அரசாங்கங்களும் கொரோனா பரவலை ஒரே மாதிரியாகத்தான் கையாண்டிருக்கிறார்கள் என்பது புலனானது. முதல் சில வாரங்களுக்கு “எல்லாம் நல்லபடியாகப் போய்க்கொண்டிருக்கிறது” என நம்பிக்கையூட்டும் விதமாகவோ “எங்களது அரசாங்கம் இதைத் தனது முழுக்கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது” எனத் தங்களது வலிமையைப் பறைசாற்றும் வகையிலோ பிரச்சாரம் செய்ய மட்டுமே கொரோனாவைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
இயக்குநர் வாங் நேரடியாகவே இதைச் சுட்டிக்காட்டுகிறார். நோயாளிகளைப் பேட்டியெடுப்பதற்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்படும் போது அரசுத் தரப்பில் சொல்லப்படுகிற காரணம், “இதுபோன்ற இக்கட்டான நிலைமையில் “பாசிட்டிவ் எனர்ஜியை”ப் பரப்ப வேண்டுமே தவிர நமது பலவீனங்களை அல்ல” என்பதுதான். இன்னும் ஒரே படி மேலே சென்று, “உண்மை நிலை குறித்த செய்திகள் வெளியாகுமானால் சர்வதேச அரங்கில் சீனாவின் பிம்பத்திற்குச் சரிவு ஏற்படும். அது முதலாளித்துவ நாடுகளுக்குச் சாதகமாக அமைந்து கம்யூனிசத்திற்கு இழுக்கைக் கொண்டுவரும். தேசப்பற்றுள்ள எந்தச் சீனக் குடிமகனும் அதற்குத் துணைபோக மாட்டான்” எனக் காரணங்களை அடுக்கி பழியிலிருந்து தந்திரமாகத் தப்பித்துக்கொள்ளும் அரசாங்கம், குற்றவுணர்ச்சியை மட்டும் மக்கள் மீது ஏற்றிவைத்து தனது கையாலாகாத்தனத்தைத் திசைதிருப்புகிறது.
சீனாவிலுள்ள எல்லா ஊடகங்களும் தங்களது அரசாங்கத்தின் நிலைப்பாட்டையே கிளிப்பிள்ளை போலத் திரும்பத் திரும்ப ஒப்பிக்கின்றன. ஒவ்வொரு செய்தியின் முடிவிலும் “நாம் எப்பேர்ப்பட்ட வலுவான தலைமையின் கீழ் அணிதிரண்டிருக்கிறோம்” என்கிற வாசகம் தவறாது இடம்பெறுகிறது.
சீன நாட்டின் மந்திரிகளும் சுகாதாரத் துறை விற்பன்னர்களும் எப்படியெல்லாம் பல்டியடித்திருக்கிறார்கள் என்பதைத் தகுந்த ஆதாரங்களுடன் இயக்குநர் வாங் காட்சிப்படுத்தியிருக்கிறார். ஜனவரி முதல் வாரத்தில் “இது மனிதர்களுக்கிடையே பரவும் தொற்று நோய் அல்ல” என்கிறார்கள். அரசாங்கத்தின் பேச்சை நம்பி எந்தவிதமான தற்காப்பு நடவடிக்கையையும் மேற்கொள்ளாமல் இலட்சக்கணக்கான மக்கள் வீதிகளில் அலைகிறார்கள். சீனா போன்ற மக்கட்தொகை மிகுந்த நாட்டில் ஏற்படக்கூடிய கூட்ட நெரிசலைக் கற்பனை செய்துகொள்ளலாம். ஜனவரி மூன்றாம் வாரத்தில், “இது தொற்று நோய்தான். ஆனால் இப்போது கட்டுப்படுத்தி விட்டோம். இதனை முழுமையாகக் குணப்படுத்த முடியும் என்பதனால் ஒருவர்கூட பலியாகவில்லை” என்கிறார்கள். இதற்கு அடுத்த நாள் வூஹான் மாகாணத்தில் மட்டும் பதினான்காயிரம் ஆட்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகிறார்கள். எங்கும் இட வசதி இல்லாமல் போகிறது.
இந்தச் சமயத்தில் அரசாங்கத்தின் “propaganda” குழு களத்தில் இறங்குகிறது. மருத்துவப் பணியாளர்களைத் தூய தேவதைகளாகச் சித்தரிக்கும் புனைவுக் கதைகள் வெளியாகின்றன. ஆயிரக்கணக்கானோர் மடிந்துகொண்டிருக்கும் வேளையில் எங்கோ எவரோ குணமாகி வீடு திரும்பிய செய்தி தேசிய அளவில் பரப்புரை செய்யப்படுகிறது. இருபக்கமும் வரிசையில் நின்று மருத்துவர்களுக்கும் செவிலிகளுக்கும் மாணவ மாணவியர்கள் பூமாலை தூவும் காணொளிகள் புல்லரிப்போடு பகிரப்படுகின்றன. எங்கும் சுபிட்சம் நிலவுவது போலக் கட்டமைக்கப்படுகிறது. மக்கள் வீதிகளுக்கு வந்து இதனைக் கைதட்டி ஆர்ப்பரிக்குமாறு கட்டளையிடப்படுகிறது. சீன தேசியக் கீதம் உணர்ச்சிப்பெருக்குடன் இசைக்கப்படுகிறது. (தேஜாவூ மாதிரி இருக்கிறதா?)
சீனா போன்ற கம்யூனிச சர்வாதிகார நாட்டில் மட்டுமல்லாது அமெரிக்கா மாதிரியான ஜனநாயக நாட்டின் செயல்பாடுகளிலும் பெரிய வேறுபாடில்லை என்கிறார் வாங். “America is at low risk” என்பதை டொனால்டு ட்ரம்ப் முதல் மாகாண ஆளுநர் வரை எல்லோரும் மார்ச் மாதம் வரைக்குமே உறுதியாகச் சொல்கிறார்கள். “பயப்பட வேண்டாம்” என்றோ “இது ஃப்ளூ மாதிரியான சாதாரண காய்ச்சல்தான்” என்றோ தவறான வழிகாட்டுதலை அளிக்கிறார்கள். மறுபக்கம், கொரோனா பரவலை “conspiracy theory” என மடத்தனமாக மறுதலிக்கும் போக்கும் அதிகரிக்கிறது.
ஒரு வருட முடிவில் கொரோனா தொற்றால் சீனாவில் மூவாயிரம் ஆட்கள் மாண்டிருக்கிறார்கள் எனும் அறிக்கை வெளியாகிறது. இன்று வரைக்குமே இதுதான் சீனாவின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு. ஆனால், உண்மைக்கும் இதற்கும் பாரதூரமான வேறுபாடு இருக்கிறது. வூஹான் மாகாணத்தின் பிரபலமான மீன் சந்தை அருகே மட்டும் இருபதாயிரம் முதல் முப்பதாயிரம் பிணங்கள் வரை எரிக்கப்பட்டதாக அங்குள்ள மயானத்தின் ஊழியர் வாங்-கிடம் அநாமதேயமாக ஒப்புக்கொள்கிறார். கொரோனா பணியில் ஈடுபட்ட அனைவரது அலைபேசிகளும் தற்சமயம் வரை கண்காணிக்கப்படுவதாகவும் எதையும் பகிரங்கமாக ஒப்புக்கொண்டு “காணாமல்” போவதற்குத் தனக்கு விருப்பமில்லை என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
இறுதியில், கொரோனா பரவலைக் கையாண்ட விதமானது சீன இடதுசாரி அரசாங்கத்திற்குக் கிடைத்த வெற்றியாக முன்னிறுத்தப்படுகிறது. கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் அமெரிக்கா போன்ற லிபரல் நாடுகள் தோல்வியையே தழுவியிருக்கின்றன என்றும் இடதுசாரி சித்தாந்தமே உலகை உய்விக்கக்கூடியது (China’s superior system) என்றும் பிரச்சாரம் செய்யப்படுகிறது. இந்தக் கோஷங்களை எழுப்பி ஊர்வலங்கள் செல்கிறார்கள். சீனக் கொடியைக் கர்வத்துடன் அசைக்கிறார்கள். ஜின்பிங் போன்ற இரும்பு மனிதராலேயே இது சாத்தியமானது என உளமார நம்பத் தொடங்குகிறார்கள். இந்தக் கருதுகோளை நிறுவும் பொருட்டு மாநாடுகள் நடத்துகிறார்கள். ஜின்பிங்குக்கு சீன மக்கள் எவ்வாறு நன்றிக்கடன்பட்டிருக்கிறார்கள் என்பது குறித்து ஆராய்ச்சிகள் பல செய்து உரையாற்றுகிறார்கள்.
கொரோனாவை வெற்றிகொண்ட கொண்டாட்டங்கள் ஓய்ந்த பின்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்களுக்கும் நூறு யுவான்கள் இழப்பீடாக வழங்கப்படுகிறது. “சீனாவில் பிறந்ததற்குப் பெருமையடைகிறேன்” என்பதை எல்லோரும் ஒருமனதாக ஏற்றுக்கொள்கிறார்கள்.
சுபம்.