அந்தத் தெருமுனையில் மிகவும் இருட்டாக இருந்தது. அங்கிருந்து பார்க்கையில் தெருவின் மத்தியில் மட்டும் மஞ்சளாகக் கொஞ்சம் வெளிச்சம் இருந்தது. தூசிகளை ஊடுருவியபடி தரையை நோக்கிக் கசியும் மங்கலான ஒளி மீதி இடங்களைப் புராதன காலத்தை நோக்கி நகர்த்திவிட்டிருந்தது. சாலையில் எப்போதாவது செல்லும் லாரிகளின் முகப்பு வெளிச்சம் தவிர வேறு அசைவில்லை. கனரக வாகனங்கள் செல்லும்போது தெரு இலேசாக முனகுவது போல இருக்கிறது. அவ்வளவு அலுப்பு. வாலைப்போல நீளும் தெரு தனது தலையைத் தூக்கி, எரிந்துகொண்டிருந்த மற்ற தெருவிளக்குகளை ஊதி அணைத்திருக்க வேண்டும். இப்படியான கற்பனை, தெருமுனையில் அந்தத் தெருவையும் பிரதான சாலையையும் பிரித்தபடி ஓடிக்கொண்டிருந்த வாய்க்கால் மதுகில் குந்தியிருந்த முரளிதரனைச் சிலிர்க்கச் செய்தது. சாலைக்கு இணையாக அதன் ஓரத்தில் ஓடிக்கொண்டிருக்கும் வாய்க்கால், அதோ தூரத்தில் பனி மூட்டமாகத் தெரியும் மலையில் எங்கிருந்தோ தொடங்குகிறது. ஒவ்வொரு தெருவின் முனையிலும் சிறிய சிமெண்ட் பாலமும் அதன் இருபுறமும் முட்டி வரை உயரமுள்ள அதைவிடச் சிறிய இரண்டு மதகுகளும் இருந்தன. அவற்றில் ஒன்றில்தான் முரளிதரன் உட்கார்ந்திருந்தான். 

எரியும் அந்த ஒற்றை விளக்கு ஒரே நேரத்தில் ஆசுவாசமாகவும் தொந்தரவாகவும் இருந்தது. அதுவும் அணைந்துவிட்டால் அப்பகுதி முழுக்கவும் இருட்டுதான். சில குடிசைகளும் தென்பட்டன. வீடுகளின் கட்டுமானத்திற்காகப் போடப்பட்ட தற்காலிகக் குடில்கள். மற்றவை அனைத்தும் வசதியான பெரிய வீடுகளாக இருந்தன. வீடுகளின் உள்ளே இருந்து வெளிச்சம் வெளியே கசியவில்லை. எதற்காக மதில் சுவர்களில் இருக்கும் விளக்குகளைக்கூட அணைத்து வைத்துவிடுகிறார்கள்? வீட்டின் உட்புறம் ஒரு இரவு விளக்கைக்கூட ஒளிரச் செய்யமாட்டார்களா என்ன? விளக்குகள் எரியக்கூடும். சன்னல்களை இறுக்கமாக மூடியிருப்பதால் வெளிச்சம் வெளியேறவில்லை. போதாததற்கு சன்னலில் தொங்கும் திரைச்சீலைகள் ஒவ்வொரு வீட்டையும் தனித் தனி தீவுகளாக்கி வைத்திருக்கின்றன. 

அந்த மதுகில் வந்து குந்துவதற்கு முன்பு தெருவின் கடைசிவரை நடந்து போய்விட்டு வந்திருந்தான் முரளிதரன். தெருக்கடைசியில் அமர  இடம் இருந்திருந்தால் அங்கேயே இருந்திருப்பான். இங்கு அவ்வப்போது கிளம்பும் வாகன இரைச்சலின் தொந்தரவிலிருந்து தற்காத்துக்கொண்டிருக்கலாம். ஆனால் இந்த இடர்பாடு மட்டும்தான் புற உலகோடு இவனைப் பிணைத்திருக்கும் கண்ணியாக இருக்கிறது. இல்லையென்றால் அந்தப் புராதனத்தில் இவனும் ஒரு சுவர் சித்திரமாகப் பதிந்து போயிருக்கக்கூடும். அந்தத் தெருவே ஒரு பெரிய கேன்வாஸில் வரையப்பட்ட ஓவியம் போலத்தான் இருக்கிறது. கரிய நிழல்கள் அந்த ஓவியத்தை அமானுஷ்யமாக மாற்றியிருந்தன. அந்த வண்ணங்களுக்கு மத்தியில் நிறைய உருவங்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது போலவும், இந்தக் கட்டிடங்கள் அவற்றின் மீது போர்த்தப்பட்டிருக்கும் பனிப்போர்வை போலவும் இருந்தன. தூரத்தில் தெரியும் மலையின் உட்புறம் அலையும் விலங்குகள் போல இங்கு சித்திரங்கள் தூங்கிக்கொண்டிருக்கின்றனவா? வீடுகளின் உள்ளே ஆட்கள் இருக்கிறார்களா? ஒளியைப் போலவே ஒலியும் கசியாமல் வீட்டின் சுவர்கள் அமைதியில் உறைந்திருந்தன.

கிட்டத்தட்ட இரண்டு இரவும் இரண்டு பகலும் பயணம்செய்து மூன்றாவது இரவின் நடுசாமத்தில் இந்தப் பகுதியைக் கடந்துகொண்டிருந்தான் முரளிதரன். லாரி ஓட்டுநருடன் நிகழ்ந்த சிறிய உரையாடல், இந்த மதுகில் இப்போது குந்த வைத்திருக்கிறது. 

“நீ இறங்கிக்க தம்பி, இதுக்கு மேல உன்னை கூட்டிட்டு போகமுடியாது” என்று சன்னமான குரலில் சொல்லிக்கொண்டே  வண்டியை ஓரம் கட்டினான் ஓட்டுநர்.

“என்னண்ணே இங்க இறங்க சொல்றீங்க, இது எந்த ஊர்னே தெரியல…”

“தெரிஞ்சா மட்டும்…?”

“ரொம்ப குளிருதுண்ணே…!”

சில விநாடிகள் அமைதி. லாரி ஓட்டுநர் ஸ்டியரிங்கைப் பிடித்தபடி இறுக்கமாகக் காத்திருந்தான்.

“இறங்கு…”

இப்போது மெல்லிய உறுமல் போல வெளிப்பட்டது அவனது குரல்.

முரளிதரன் கதவைத் திறந்து, உடலைத் திருப்பியபடி, பொந்தைப் போல இருந்த படியில் கால் வைத்துக் கீழே இறங்கினான். இறங்கி உறுதியாக நிற்பதற்குள் லாரி கிளம்பிவிட்டது. கையில் வைத்திருந்த பையைத் தலைக்கு மேலே இருந்த படுக்கையில் வைத்திருந்ததும், அதை எடுக்க மறந்ததும் வண்டி கண்ணைவிட்டு மறைந்த பிறகுதான் ஞாபகத்துக்கு வந்தது. அதில் கொஞ்சம் பணம் இருந்தது. சில சான்றிதழ்கள் இருந்தன. இரண்டு செட் மாற்று உடைகள் இருந்தன. பல் துலக்கும் ஒரு பிரஷும் பற்பசையும் இருந்தது. பிறகு இன்னும் பிரிக்காத ஒரு கடிதம் இருந்தது. 

இறங்கி நின்ற இடம் வெட்டவெளியாக இருந்தது. அப்படியே உட்கார்ந்து ஒன்றுக்கிருக்கையில் சாலையில் வந்த வாகனத்தின் ஒளியின் வீச்சில்தான் அது வயல்வெளி என்று தெரிந்தது. சாலையைக் கடந்து இந்தப் பக்கம் வரவும் இங்கு ஒரு தெரு இருப்பதும் அது மிகவும் நீண்டு உட்பக்கமாய் போவதும் தெரிந்தது. மதகைக் கடந்து நடந்தான். 

எங்கு போகிறோம் என்று தோன்றாமல் இல்லை. குறிப்பாகச் செய்ய எதுவுமில்லாதபோது நடப்பதற்கோ நிற்பதற்கோ இலக்கில்லை. பொறுமையாக நடந்து ஒவ்வொரு வீடாகப் பார்த்துக்கொண்டே போனான். ஐம்பதிற்கும் மேற்பட்ட வீடுகளைக் கடந்தபோது தெரு முடிந்தது. பிறகு நீண்ட வயல்வெளியாக இருந்தது. வெளிச்சம் இல்லாவிட்டாலும், இறங்கிய இடத்தில் உணர்ந்ததைப் போன்ற அதே வாசனை, இதுவும் வயலாகத்தான் இருக்கும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது. திரும்பி மீண்டும் நடந்து தெருவின் மத்தியில் எரிந்துகொண்டிருந்த ஒற்றை விளக்கு வெளிச்சத்தின் அடியில் கொஞ்ச நேரம் நின்றான். காலுக்கடியில் நீண்ட நிழல் விழுந்து இருட்டை நோக்கி நீண்டது. மண்டை சப்பட்டையாக நவீன ஓவியம் போலத் தெருவில் பதிந்தது. அந்த விளக்கு தெருவுக்கு இடதுபுறமாக இருந்தது. அதை ஒட்டி இருந்த வீட்டின் மதிற்சுவரில் பச்சை வர்ணம் பூசப்பட்டிருந்தது. பச்சைதானே அது? இந்த மஞ்சள் ஒளியில் நீலம் போலவும் கருப்பு போலவும் மாறி மாறித் தோற்றமளிக்கிறது. அதற்கு எதிர்ப்புற வீட்டில் மஞ்சள் வண்ண காம்பவுண்ட் சோம்பலாக ஒளிர்ந்தது. அண்டை வீடுகள் பாதி வெளியிலும் மீதி தண்ணீரிலுமாக அமிழ்த்தி வைக்கப்பட்டது போல இருந்தன. அதன் நடுவேதான் இவனது வளைந்த நிழல் தரையில் நெளிந்துகொண்டிருந்தது. அதை உற்று நோக்கியபடி கொஞ்ச நேரம் அங்கேயே நின்றான்.

சில கணங்கள் அந்தத் தெருவின் பகுதி போலத் தானும் இருப்பதாகத் தோன்றியது. மனித நடமாட்டமே இல்லை. விசித்திரமாக அந்தப் பிராந்தியத்தில் நாய்கள்கூட இல்லை. எல்லாக் கதவுகளும் கொண்டி போட்டு அடைக்கப்பட்டிருப்பதால், அவை இந்தத் தெருவைத் துறந்து புதிய கட்டுமானங்கள் நடக்கும் கட்டிடத்தின் உள்ளே போய் ஏதாவது பலகையில் உடலைச் சுருட்டிக்கொண்டு படுத்திருக்கக்கூடும். திடீரென்று, கைவிடப்பட்ட வெறும் கட்டிடங்கள் மட்டும் இருக்கும் இடத்தில் நின்றுகொண்டிருக்கிறோம் எனும் நினைப்பு வந்தது. தலையை உதறினான். இவனது நிழலில் அசைவே இல்லை. சிறிய உதறல்களுக்கு நிழல் வினை புரிவதில்லை. காலின் அடியில் இருக்கும் நிழல் கொஞ்சமாவது அசைய வேண்டும் என்றால், உடலை அந்த இடத்திலிருந்து நகர்த்த வேண்டியிருக்கிறது. இரண்டு பங்கு அசைவையே ஒரு பங்கு நிழல் எதிரொலிக்கிறது. சோர்வாக இருந்தது. அண்ணாந்து, தெருவின் இரண்டு புறமும் அந்த விளக்கின் ஒளியில் தெரியும் வீடுகளின் மாடிகளைப் பார்த்தான். பிரமாண்டமான வீடுகள்தான். தரையில் படர்ந்திருந்த அளவுக்கு மாடிகளின் முகப்பைத் தெருவிளக்கின் ஒளி நிறைக்கவில்லை. குறிப்பிட்ட இரண்டு வீடுகளில் ஒவ்வொரு அறை மட்டும் கண்ணுக்குத் தெரிந்தது. அந்த அறைகளில் கண்ணாடிச் சன்னல்கள் இருந்தன. அதன் மீது தெருவிளக்கின் ஒளி படிவதால், அவ்வறைகள் கண்ணுக்குத் தெரிகின்றன. 

அந்தப் பிராந்தியத்தில் வேறு எதுவுமே இல்லாதது போல, அவ்விரண்டு அறைகளுக்கு மத்தியில் அந்த விளக்கு வெளிச்சத்தின் மத்தியில் தான் மட்டுமே நிற்பது போல, அந்த அறைகள் தனது தலைக்கு மேலே இருத்தி வைக்கப்பட்டிருப்பது போலத் தோன்றியது. குனிந்து பார்க்கையில் இவனது நிழல் மட்டுமே கால்களைத் தரையோடு பிணைத்திருக்கிறது. அமானுஷ்யமாக இருக்கிறது. கனவு போல இருக்கிறது.

தூரத்தில் தெரியும் சாலையில் இப்போது வாகனங்கள் எதுவும் செல்லவில்லை. ஒளி இல்லை. ஒலி இல்லை. நாய்களின் மூச்சிரைப்பில்லை. ரீங்காரமிடும் வண்டுகள் இல்லை. குளிர்கிறது. மேலிருந்து மஞ்சள் ஒளி தலைமீது கசிகிறது. தான் ஒரு இலையைப் போல எடையற்று மரத்தடியில் கிடப்பதான எண்ணம் வந்தபோது, இந்த நிழல் தொலைந்தால் தேவலை என்று இருந்தது. நிழல் கனத்தது. பிசினைப் போல நிலத்தோடு கால்களைப் பிணைக்கிறது. இரும்புக் குண்டுகளைப் போல அவை கனமாக இருக்கின்றன. நிழலை உதறுவதற்கு வாய்ப்பில்லை, அந்நிழலை அப்புறப்படுத்த வேண்டும் என்றால் தலைக்கு மேலே தெரியும் இந்த மஞ்சள் ஒளி, இரண்டு அறைகளின் கண்ணாடிப் பிரதிபலிப்பு எல்லாவற்றையும் இழக்க வேண்டியிருக்கும். யோசித்துக்கொண்டிருக்கையில் திடீரென்று நிழல் மறைந்தது. இரும்புக் குண்டுகளின் பளு குறைந்துவிட்டது. முழு இருட்டு கவிந்தது. தெரு விளக்கு அணைந்து போயிருந்தது. மிதப்பது போல இருக்கிறது. அதே சமயம், பற்றிக்கொண்டிருந்த பிடி சடாரென்று நழுவியது போலவும், அபூர்வமான ஒன்றை இழந்துவிட்டது போலவும் உடல் நடுங்கியது. 

தலையை உயர்த்திப் பார்த்தான். மாடியில் தெரிந்த அறைகளை இப்போது காணவில்லை. மறைந்துபோன ஒளி அவ்வறைகளைத் தன்னுடன் எடுத்துப்போயிருந்தது. தலையைத் தாழ்த்துவதற்கு மனமில்லாமல் அண்ணாந்தபடியே நின்றுகொண்டிருந்தான். அப்போதுதான் ஒரு அறை மெல்ல உருவாவது போலக் கண்ணுக்குப் புலப்படத் தொடங்கியது. சிறிய விளக்கு வெளிச்சம். உள்ளிருந்து யாரோ விளக்கைப் போடுகிறார்கள். சன்னல் கண்ணாடிகள் ஒளிர்ந்தன. துண்டு துண்டான நிறைய வண்ணங்கள் இருந்தன அந்தக் கண்ணாடியில். சன்னலின் ஒரு கதவு மட்டும் அசைகிறது. திரைச்சீலைக்குப் பின்னாலிருந்து ஒரு கரம் சன்னல் கதவைத் தள்ளுவது தெரிந்தது. திரைக்குப் பின்னே நிழலாக ஓர் உருவம். ஆனால் அவ்வுருவம் திரையை முழுவதுமாக விலக்கவில்லை. அக்காட்சி வரைந்த ஓவியத்தின் மீது வேறொரு வண்ணத்தை வைத்து ஒற்றியது போல இருந்தது. அறையிலிருந்து கசிந்த ஒளி தெருவை எட்டியதும், தெருவுக்கும் சன்னலுக்கும் தொடர்பு ஏற்பட்டது போல இருந்தது. உள்ளிருக்கும் ஆள் அந்த ஒளிக்கற்றையை ஒரு கயிறாகப் பாவித்து, கீழே கிடக்கும் வீதியைச் சன்னலை நோக்கி இழுப்பது போலவும் இருந்தது. கேன்வாஸாகத் தோற்றம்கொள்ளும் அந்தத் தெருவின் வரையப்பட்ட ஓவியம் எழுந்து நிற்பது போல ஓர் ஆள் அங்கு நிற்பது சன்னல் உருவத்திற்குத் தெரிந்திருக்க வேண்டும் என்று நினைத்தான் முரளிதரன்.

கண்களைக் குவித்து அந்தப் புதிய ஒளிச்சூழலுக்குப் பழக முயன்றான். குழப்பமாக இருந்தது. இப்போது அந்த ஓவியத்தின் பாத்திரங்கள் இடம் மாறியிருந்தன. குலைந்து போகாவிட்டாலும் அவை அடுக்கப்பட்டிருந்த விதத்தில் ஒரு சிறிய மாற்றம் இருக்கிறது. இந்தச் சன்னல் வெளிச்சம் ஓவியத்துக்குப் புதிய அர்த்தத்தைத் தருகிறது. சன்னல் விளக்கொளி இல்லாமல் ஆகவேண்டும் என்று நினைத்தான் முரளிதரன். நிலைபெற்றுவிட்ட ஓவியத்தின் உள்ளே வந்து ஒரு புதிய அர்த்தத்தை அது பதிய வைக்கிறது. தொந்தரவாக இருக்கிறது. ஒரே நேரத்தில் பல வண்ணங்கள் மாறி மாறி ஓவியத்தின் தன்மையைக் கலைத்துக் கலைத்து அடுக்குகின்றன. அதன் சாத்தியங்களை எல்லையற்று பெருகச் செய்வதால், அவை ஒவ்வொன்றையும் பின்பற்றிச் செல்ல முடியவில்லை. பல்வேறு வண்ணப்பூக்கள் கொண்ட பெரிய தோட்டத்தில், நிறைய வண்ணத்துப்பூச்சிகள் பெரிய பெரிய சிறகுகளுடன் பறந்து பூக்களில் மாறி மாறி அமர்வது போல. வானில் நிறைய நட்சத்திரங்கள் இருக்கின்றன. விசித்திரமான சூழலில் வெளிச்சமும் இருந்தால் எப்படி ஏகாந்தக் குழப்பம் வருமோ அப்படி இருந்தது முரளிதரனுக்கு. ஒவ்வொரு வண்ணத்துப் பூச்சியையும் ஒரு தனித்த ஓவியமாக, பிறகு அவற்றையொரு ஒற்றை ஓவியமாக உருவகிக்கையில் வானம் ஒரு பெரிய கேன்வாசைப் போல உருக்கொண்டது. அவ்வளவு வண்ணங்களையும் தலையில் ஏற்றுகையில் மண்டை கனத்தது. வண்ணங்களின் எடை கூடி தலையை அழுத்தின. அவற்றின் சுமையைத் தாளாமுடியாமல் முரளிதரனுக்குத் தள்ளாடியது.

இப்போது சாலை விளக்குக்கு உயிர் வந்துவிட்டது. இவனது நிழல் மீண்டும் அதே அளவில் சாலையில் படர்கிறது. அண்ணாந்து பார்த்தான். தெரு விளக்கின் ஒளி வரட்டும் என்று காத்திருந்தது போல அந்தக் கரம் நீண்டு சன்னல் கதவை மூடிக்கொண்டது. அம்மஞ்சள் வெளிச்சத்தில் அந்தக் கைகளை முரளிதரன் பார்த்தான். பெண்ணின் கைகள்தான். வளையல்கள் ஒளிர்ந்தன. சில வினாடிகளில் கதவு மூடப்பட்டு விளக்கு அணைக்கப்பட்டது. சன்னலின் வெளிப்புறக் கண்ணாடி மங்கலான வெள்ளையில் ஒளிரத் தொடங்கியிருந்தது. முரளிதரன்  நடந்து வந்து மீண்டும் மதகில் உட்கார்ந்தான். இரண்டு கால்களுக்கிடையில் ஒரு கையைத் தொங்கவிட்டு, இன்னொரு கையால் மோவாயில் முட்டுக்கொடுத்தபடி மெல்லிய நடுக்கத்துடன் உட்கார்ந்திருந்தான். குளிர், அழுத்தமான நிழலைப் போல கவிந்து இறுக்கியது. இவனையும் அமிழ்த்த முயன்றது.

தெரு விளக்கு நின்றதும் எப்படி மாடி அறையின் விளக்கு உடனே ஒளிர்ந்தது? தெருவிளக்கின் ஒளியைப் பருகியபடி நடமாட்டமே இல்லாத அத்தெருவை நோக்கி அந்த அறையில் ஒரு பெண் உட்கார்ந்திருக்கிறாளா? முரளிதரனுக்குக் குழப்பமாக இருந்தது. தர்க்கங்கள் ஒன்றின் மீது ஒன்றாக வந்து அமர்ந்தன. துலக்கமான விவாதங்கள் எழுந்தன. ஆனால் தர்க்கங்கள் இவ்வளவு விரைவாகத் தோன்றுவதும், இது கேள்வி, இதற்கான பதில் இதுதான் என்ற ஒழுங்குடன் அவை வெளிப்படுவதும் இவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. இப்படி ஒன்றுடன் ஒன்று தொடர்புறுத்தி யோசிப்பதை மறந்து எத்தனை வருடங்கள் இருக்கும்? மூன்றா, ஐந்தா, இன்னும் அதிக வருடங்களா…? மேகலா இறந்த பிறகுதான் இந்தச் சிதறல். “இதற்கு மேல் உன்னைச் சகிக்க இயலாது” என்று அம்மா, அப்பா, அண்ணன் என ஒவ்வொருவராக விலகிக்கொண்ட பின்புதான் தானும் தர்க்கங்களிலிருந்து வெளியேறியதாக முரளிதரன் நினைத்தான். 

இப்போது மெலிதாகக் காற்றடிக்கிறது. மல்லிகையை ஒத்த துண்டு துண்டான பனிக்கட்டிகளைக் கொண்டுவந்து சரீரத்தின் மீது தூவுவது போல குளிர் உடலில் மோதுகிறது. பற்கள் நடுங்கின. அதே சமயம் மனதின் ஓரத்தில் வெம்மை பரவுகிறது. அண்ணன் வந்து பைபாஸ் ரோட்டில் ஒரு லாரியில் ஏற்றிவிட்டு ஓட்டுநரிடம் கொஞ்சம் பணமும் தன்னிடம் கைப்பையில் கொஞ்சம் பணமும் வைத்துவிட்டு லாரி கிளம்புவதற்கு முன்னால் பைக்கை எடுத்துக்கொண்டு அவ்விடத்தை  விட்டு நீங்கியது நினைவுக்கு வந்தது. பனி படர்ந்த கண்ணாடியை உலர்ந்த ஆடையால் துடைப்பது போலப் பளிச்சென்று இருக்கிறது. ஒன்றை இன்னொன்றோடு தொடர்புபடுத்திக் கோர்வையாக யோசிக்க முடிகிறது. இதைத்தான் சில வருடங்கள் செய்யாமல் விட்டுவிட்டேனா? மறந்துவிட்டேனா? அதனால்தான் அதிருப்தியடைந்தார்களா? குழம்பிவிட்டார்களா? அண்ணன் கொண்டுவந்து லாரியில் ஏற்றிவிட்ட போதுகூட, அவனை ஒரு ஓவியத்தின் பாத்திரமாகவே மனது கணக்கு வைத்தது. அது அந்தி கவியும் நேரமாக இருந்தது. 

கரிய தார்ச்சாலை. தூரத்தில் ஒரு லாரி தென்படும்போது அதுவொரு மஞ்சள் பொட்டு போலவே முதலில் தோன்றுகிறது. பிறகு மஞ்சள் வளர்கிறது. கரிய சாலை சுருங்கச் சுருங்க மஞ்சள் அதன் மீது பெரிதாகப் பரவுகிறது. அதன் பின்புலத்தில் ஆரஞ்சு வண்ணம். மீதி இடமெல்லாம் படரத் தொடங்கியிருக்கும் ராத்திரியின் இருட்டு. மணமில்லாத கரும்புகையைப் போன்ற அலையும் இருட்டு. மனதில் விரியும் அந்தக் கேன்வாஸில் தன்னையும் அண்ணனையும் பொருத்தி வைத்து அது பொருட்படுத்த முடியாத அளவுக்கு எவ்வளவு சிறிதாக இருக்கிறது என்று சைகையில் அவனிடம் சொல்ல முயன்றான். அவன் திரும்பிப் பார்க்கவில்லை. இப்போது தோன்றும் அத்தனையையும் சொற்களே இல்லாமல் சொன்னால் எப்படிப் புரியும்? அதனால்தான் யாருக்கும் புரியவில்லையோ என்னவோ! “எல்லாவற்றையும் ஓவியமாகப் பார்க்கும் ஒரு பைத்தியக்காரனை வைத்துக்கொண்டு என்ன செய்யமுடியும்?” என்றுதான் இந்த லாரியில் ஏற்றி விட்டிருக்கவேண்டும்.

“எங்காவது கண்காணாத தேசத்தில் இவனை இறக்கிவிட்டு விடுங்கள்” என்று அவன் ஓட்டுநரிடம் சொல்லியிருக்க வேண்டும். ஆனால் இந்த லாரி ஒரு பெரிய கேன்வாஸில் ஊர்ந்துகொண்டிருக்கும் ஒரு எறும்பு மட்டுமே என்று முரளிதரன் உணர்ந்ததை அந்த ஓட்டுநரிடம் சொல்லியிருக்க வேண்டியதில்லை. அது எப்போது வேண்டுமானாலும் அந்த ஓவியத்திலிருந்து உதிர்ந்து கீழே விழுந்துவிடும் என்று சொன்னதை, விபத்தில் அவன் இறந்துவிடுவான் என்று சொன்னதாக அவன் புரிந்துகொண்டுவிட்டான். தீய சகுனம் என்று நினைத்து அவன் பதறியதால்தான் வண்டியை உடனே ஓரங்கட்டி நிறுத்தினான் போல. இரண்டு இரவுகள் இரண்டு பகல்கள் ஒரு வார்த்தைகூடப் பேசாமல் புறத்தே வெறித்துப் பார்த்துக்கொண்டே வரும் ஒருவன் எதற்காக நம்மை எறும்பு என்கிறான், உதிர்ந்துவிடுவாய் என்கிறான் என்பது அவனைப் பீதியுறச் செய்திருக்கிறது. இவனிடம் எதோ அமானுஷ்யம் இருக்கிறது என்று அவன் பயந்திருக்க வேண்டும். எல்லாவற்றையும் ஓவியமாகப் பார்க்கையில், பயணம் செய்துகொண்டே இருக்கையில், ஒரே கேன்வாஸ் மீண்டும் வேறு இடத்தில் வெளிப்படுவது போலத் தோன்றுகிறது. 

ஒவ்வொன்றும் தனித்தனியானது இல்லையா? இல்லை. நிறைய கேன்வாஸ்கள் இருக்கின்றன. அனால் ஒத்த கேன்வாஸ்கள் அதன் நடுவே இடம் மாற்றி வைக்கப்பட்டிருக்கின்றன. பயணத்தின் போது மட்டுமே அது புரிகிறது. இரண்டு மலைகளை, பல ஆறுகளை, சில சமவெளிகளைக் கடந்து வந்தபிறகு, தான் தேடிக்கொண்டிருந்த கேன்வாசைக் கண்டுகொண்டோமோ என்று முரளிதரன் நினைத்தான். அதுதான் ஓட்டுநரிடம் அப்படிப் பேச வைத்ததா? மனதில் தோன்றுவதைச் சொற்களால் வெளிப்படுத்தி எத்தனை ஆண்டுகளாகிறது! மேகலா சிதையில் எரியும்போதும் இப்படித்தான் அந்தியாக இருந்தது. சிதையைச் சுற்றி வந்து தட்டில் இருந்த சூடத்தை அவள் மீது அடுக்கப்பட்டிருந்த வரட்டியில் போட்டபோது இப்படித்தான் மஞ்சளாக அது எரிந்தது. அப்போதும் ஆரஞ்சு வண்ண வானம்தான் சிதைக்குப் பின்னால் இருந்தது. பக்கத்தில் ஓடிய ஆற்றில் மூழ்கி எழுந்ததால் இப்படித்தான் அப்போதும் குளிர் வாட்டியது. மேகலா இறந்துபோனது எனக்கும் வருத்தம்தான் என்பதை யாரும் நம்பவில்லை. அவள் தற்கொலை செய்துகொள்ளாமல் இருந்திருந்தால், ஏதேனும் நோயில் இறந்திருந்தால், நான் அவளைக் காதலித்தேன் என்பதை எல்லாரும் நம்பியிருப்பார்கள்.

ஆனால் அவளை நான் ஒரு வண்ணமாக உருவகித்து வைத்திருந்தேன். காலை வெளியில் ஒரு வண்ணமாகவும், அந்தி மயங்குகையில் இன்னொரு வண்ணமாகவும் மாற்றி மாற்றி அவளைக் கற்பனை செய்துகொண்டிருந்தேன். ஆனால் விளக்குகள் அணைந்த இருட்டில், எங்கள் தனியறையில் நான் அவளை இருட்டின் வண்ணமாக நினைத்து மறந்துவிட்டேன். அவளது இருப்பை இருட்டின் இருப்பாக, வண்ணமின்மையின் இருப்பாக மாற்றிச் சமைத்துவிட்டேன். அவள் கொழுந்துவிட்டு எரிந்திருக்க வேண்டும். இருளின் கரிய ஜ்வாலை. அந்த அறை தனலால் நிறைந்திருக்க வேண்டும். நான் என் வண்ணங்களின் சாந்தில் சிக்கிக்கொண்டு கிடக்கையில் அவள் தன்னை எரித்துக்கொண்டிருக்க வேண்டும். இந்த வண்ணங்களின் சிறையில் இருந்து என்னை மீட்பதற்குத்தான் அவள் தன்னை எரித்துக்கொண்டாளா? அவளது சிதை ஒரு விசித்திர ஓவியமாக இருந்தது. அவளது நெற்றியில் இருந்த பொட்டு ஒளிரும் சிவப்பாகச் சூரியனின் ஆரஞ்சு வண்ணத்தைப் போலிருந்தது. 

எல்லோரும் கூடியிருந்த ஒரு நாள் இந்த வண்ணச் சேர்க்கையின் அழகை நான் பரவசத்துடன் சொன்னேன். என் முகம் நெருப்பைப் போல ஒளிர்வது எனக்கே தெரியும் அளவுக்கு நான் ஒளியோடு இருந்தேன். என் கைகளின் அசைவில் கூத்தின் பாவம் கூடியது. அப்போதுதான் அவர்கள் என்னை லாரியில் ஏற்றி கண்காணாத இடத்துக்கு அனுப்பிவிடுவது பற்றித் தீர்மானித்திருக்கவேண்டும். 

முரளிதரன் இப்போது ஒரு புதிய வண்ணத்தின் முன்னால் நின்றிருந்தான். எந்தக் குழப்பமும் இல்லை. கருப்புக்கும் வெள்ளைக்கும் வேறுபாடு இல்லை. வண்ணம். அது மட்டுமே. இந்த மதகில் குந்திக்கொண்டு தெருவை உற்று நோக்குகையில், எல்லா விளக்குகளும் எரிவது போல, எல்லா வீட்டிலும் வெளிச்சம் இருப்பது போலக் கண் கூசியது. ஆழத்தில் இருட்டாக இருப்பது போல இருந்தது. ஆனால் அங்கு ஒன்றும் மாறியிருக்கவில்லை. மனதில்தான் இப்படி மின்னலும் இருட்டும் மாறி மாறி அடித்து ஏதோ ஒன்றை மாற்றிப் போடுகிறது. எழுந்து நின்று வேட்டியை இறுக்கமாகக் கட்டிக்கொண்டான். 

தெரு சற்று முன்பு பார்த்தது போலவே இருந்தது. அந்த விசித்திரத்தில் ஒரு துளியும் குறைவில்லை. தெருவின் உள்ளே நடந்தான். புராதனக் குகைக்குள், மலைப்பாதைக்குள், நீண்ட சமவெளியின் சரிவில் நடப்பது போல இருந்தது. குளிரில் தன்னந்தனியாக எரிந்துகொண்டிருக்கும் ஒற்றைத் தெரு விளக்குக்கு ஏதோ பொருள் இருப்பது போல இருந்தது. அந்த விளக்கின் அடியில் கொஞ்ச நேரம் நின்றுகொண்டிருந்தான். அண்ணாந்து அந்தச் சன்னலை மீண்டும் பார்த்தான். அங்கு எந்த அணுக்கமும் இல்லை. ஆனால் அங்கு ஒருத்தி இருக்கிறாள் என்று தோன்றியது. எதற்காகவோ காத்துக்கொண்டிருக்கும் ஒருத்தியாக அவள் இருக்கிறாள் என்று மனம் அடித்துக்கொண்டது. அப்படி என்ன நிச்சயம்? இல்லை அது அப்படித்தான். அது அப்படித்தான் இருக்க முடியும். அங்கேயே உறைந்துவிட்டவன் போல நின்றுகொண்டிருந்த முரளிதரன், அந்த மஞ்சள் வெளிச்சத்திலிருந்து விலகி தெருவின் மறுமுனையை நோக்கி நடந்தான். வீடுகள் முடிவடைந்து வயல்வெளி தொடங்கிய இடத்தை மீண்டும் வந்தடைந்தான். 

சாலையோரம் ஒரு பூவரச மரம் இருந்தது. வயல்வெளியில் இருந்து வரும் காற்று இன்னும் குளிராக இருந்தது. வேட்டி காற்றில் பறந்து பறந்து அடங்கியது. அந்த மரத்தடியில் அமர்ந்து அதன் சொரசொரப்பான உடலில் முதுகைச் சாய்த்துக்கொண்டான். தெரு, உரித்துப் போட்ட நீண்ட மரப்பட்டையைப் போலக் கிடந்தது.

இப்போது தெருவின் மத்தியில் கிடைக்கும் அந்த மஞ்சள் ஒளித்துண்டு மீது ஒரு உருவம் தெரிகிறது. யாரோ தாம் நின்ற அதே இடத்தில் நிற்கிறார்கள். ஆனால் அது அச்சமூட்டுவதாக இல்லை. உடலில் இலகுத்தன்மையும் அமைதியும் வந்தது முரளிதரனுக்கு. நீண்ட காலமாகக் காத்திருந்த ஏதோ ஒன்று நிகழப்போவது போல, அது தமக்கு முன்பே தெரியும் என்பது போல இவன் அந்த மரத்தடியில் சமைந்திருந்தான். சன்னலுக்கு வெளியே கையை நீட்டியவள் அவள்தான். அவள் முரளிதரன் இருக்கும் பக்கமாகத்தான் இப்போது நடக்கிறாள். இங்குதான் வருகிறாள். அவள் வருவாள் என்று உறுதியாகத் தெரிந்தவன் போலக் காத்திருக்கும் தனது மனதின் விசித்திரம் குறித்து முரளிதரனுக்கு ஆச்சரியமாக இல்லை. நீண்ட, வெண்மையான, வளைக்கரங்களுடன் அருகில் வந்தவள் அந்தப் பூவரச மரத்தை நெருங்கி அப்படியே இவனைத் தழுவிக்கொண்டாள். தலை மீது முக்காடிட்டிருந்தாள். நீண்ட தோடுகள். ஒளிரும் மூக்குத்தி. அவளது புடவையில் பதிக்கப்பட்டிருந்த கண்ணாடிகள் மின்னின. அவளது உடல் வெதுவெதுப்பாக இருந்தது. 

ஏதோ ஏற்கெனவே திட்டமிட்டிருந்தது போல, அந்த மரத்தடியில் இருவரும் சாய்ந்து உட்கார்ந்தார்கள். இவ்வளவு விரைவாக உடைகளைக் களைய முடியுமா? களைந்த பின்னும் அவளது உடலில் திரவியத்தின் வாசனை இருந்தது. அவள் முத்தமிட்டபோது முரளிதரனின் உடல் இறுகி மீண்டது. நறுமணம். அவளது சுவாசத்தில், முனகலில், எல்லாவற்றிலும் சுகந்தமான நறுமணம். உடலின் இயக்கத்தை அவள் மேலும் மேலும் தூண்டினாள். இருவரும் வெற்றுடம்புடன் வானத்தைப் பார்த்தபடி நீண்ட நேரம் அந்த மரத்தடியில் படுத்திருந்தபோது, சில்வண்டுகளின் ஒலி முரளிதரனுக்குக் கேட்கத் தொடங்கியது. இவன் எழுந்துகொண்ட பிறகும் அவள் அங்கேயே படுத்திருந்தாள். சில விநாடிகள் அவளுக்காகக் காத்திருந்தான். அவள் எழுவதன் சுவடு இல்லை. எதற்காகவோ காத்திருந்தவள், அதை அடைந்துவிட்டவள் போல நிழலாக அந்தப் புல்தரையில் கிடந்தாள். முரளிதரன் பிரதான சாலையை நோக்கி நடந்தான். அந்த மதகில் வந்து மீண்டும் உட்கார்ந்தான். தாம் செல்ல வேண்டிய வாகனத்திற்காகக் காத்திருந்தான்.

1 comment

கலியபெருமாள் April 4, 2022 - 9:03 am

அதீதமன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு பெருளியில் வாழ்வில் ஈடுபட முடியாதவர்கள் , நுண்ணுணர்வு அதிகமுள்ளேரின் இம்சை பொறுக்க முடியாமல் வெளியூர் கொண்டு விட்டு விட்டு இவர்கள் என்ன செய்ய போகிறார்கள்
காட்சி விவரிப்பும் தெருவை ஒற்றை விளக்கொளியில் கண் முன்னே கொண்டு வந்த மொழி நடைக்கும் நன்றி.

Comments are closed.