போர் – லூயிஜி பிராண்டெல்லோ

by எஸ்.கயல்
0 comment

அதிவிரைவு வண்டியொன்றில் ரோமைவிட்டுக் கிளம்பிய பயணிகள், சுலோமனாவுக்குச் செல்லும் சிறிய புராதான உள்ளூர் ரயிலுக்காக, ஃபேப்ரியோனாவின் சிறிய புகைவண்டி நிலையத்தில் விடியும்வரை காத்திருக்க வேண்டியிருந்தது. 

முந்தைய இரவு அந்த இரண்டாம் வகுப்புப் பெட்டியில் ஐந்து பேர் தங்கியிருந்தனர். அது இப்போது புழுக்கத்துடனும் புகைமூட்டத்துடனும் இருந்தது. கோணல்மாணலாக மூட்டையைப் போலிருந்த, துயரார்ந்த முகத்துடனிருந்த பருமனான ஒரு பெண்மணி அதில் இப்போது ஏறினாள். வாயிலிருந்து புகையை வெளியேற்றியபடி, அழுக்கான மெலிந்த உடலும் பலவீனமான தோற்றமும் கொண்ட அவளுடைய கணவன் அவளைப் பின்தொடர்ந்து வந்தான். துயரத்துடன் காணப்பட்ட அவனுடைய முகம் சவம் போன்று வெளிறிப்போயிருந்தது. அவனுடைய பிரகாசமான சிறிய கண்கள் கூச்சத்துடனும் அமைதியிழந்தும் காணப்பட்டன.

முண்டியடித்து எப்படியோ இடத்தைப் பிடித்து உட்கார்ந்ததும் அவன் தன்னுடைய மனைவி அமர்வதற்காக இடம்விட்டு உதவிய பயணிகளுக்குப் பணிவாக நன்றி கூறினான். தன் சட்டையைக் கீழே இழுத்துவிட்டபடியிருந்த மனைவியைப் பார்த்து மென்மையாக, “எல்லாம் சரிதானே? ஒன்றும் பிரச்சினை இல்லையே?’ என்று கேட்டான்.

முகத்தை மறைக்கும்படி தன் அங்கியின் பட்டையைக் கழுத்துவரை இழுத்துவிட்டுக்கொண்டு இருந்தாளே தவிர அவனுடைய கேள்விக்கு அவள் பதில் அளிக்கவில்லை. அவன் சோகமாகப் புன்னகைத்தபடி,”மோசமான உலகம்” என்று முணுமுணுத்தான்.

இருபது வயதுடைய அவளுடைய ஒற்றைப் பிள்ளையை யுத்தம் அவளிடமிருந்து பிரித்துக்கொண்டு செல்லப்போவதால், மற்றவர்கள் அவள் மீது இரக்கம் கொள்வதற்காக அவர்களிடம் அதை விளக்கிச் சொல்வது தன்னுடைய கடமை என்று அவன் நினைத்தான். தங்கள் மகனுக்காகத் தங்கள் முழு வாழ்க்கையையும் அவர்கள் அர்ப்பணித்திருந்தனர். சுல்மனாவில் இருந்த தங்கள் வீட்டைவிட்டு அவன் கல்வி பயின்ற ரோம் நகருக்கு அவர்களும் அவனுடனேயே சென்றனர். குறைந்தபட்சம் ஆறு மாதங்கள்வரை போர்முனைக்கு அனுப்பப்பட மாட்டான் என்ற வாக்குறுதியுடன் போருக்குச் செல்ல விரும்பிய தங்கள் மகனை அனுமதித்தனர். ஆனால் எதிர்பாராத விதமாக அவன் மூன்று நாட்களுக்குள் கிளம்ப வேண்டும் என்றும் அவனைச் சந்தித்து விடைதரச் சொல்லியும் அவர்களுக்கு அழைப்பு வந்தது. 

அந்தப் பெரிய அங்கிக்குள் அவள் வளைந்து நெளிந்துகொண்டு, காட்டு விலங்கைப் போன்று உறுமிக்கொண்டு இருந்தாள். எந்த விளக்கமும் அங்கிருந்த எவருக்கும் அவள் மீது துளியளவு இரக்கம்கூட வரவழைக்காது என்று அவளுக்கு நிச்சயமாகத் தெரியும். ஏனெனில் அவர்கள் அனைவருமே அதே போன்ற துயரமான நிலையில்தான் இருந்தார்கள். இவள் பேசுவதைக் கூர்ந்து கவனித்த ஒரு பெண், “உங்களுடைய மகன் இப்போதுதான் போர்முனைக்கே போகிறான் என்பதற்காக நீங்கள் கடவுளுக்கு நன்றி கூறவேண்டும். முதல் நாளே போருக்குச் சென்று இரண்டு முறை காயங்களுடன் திரும்பிவந்த என் மகன் மறுபடியும் போர்முனைக்கு அனுப்பப்பட்டுவிட்டான்” என்றாள்.

இப்போது இன்னொரு பயணி, “அப்படியானால் என் நிலையைப் பற்றி என்ன சொல்வீர்கள்? என் இரண்டு மகன்களும் என் சகோதர சகோதரிகளின் மூன்று மகன்களும் போர்முனையில் நிற்கின்றனர்” என்றாள்.  

“இருக்கலாம்… ஆனால் எங்களுக்கு இருப்பதோ ஒரே மகன்” என்று அவளுடைய கணவன் அவர்களுடைய  உரையாடலுக்கு இடையே புகுந்தான்.

“இதில் என்ன பெரிய வித்தியாசம் ஏற்பட்டுவிடப் போகிறது? ஒற்றைப் பிள்ளையானால் அவன் மீது அதீத கவனத்தைக் குவித்து அவனைக் கெடுத்துவிடும் வாய்ப்பிருக்கிறது. ஆனால் ஒருவேளை உங்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தால், மற்ற குழந்தைகளைவிட அதிகமாக அவன் மீது அன்பு செலுத்த முடியாது. பெற்றோரின் அன்பு என்பதொன்றும் குழந்தைகளுக்குச் சரிசமமாகப் பங்கிட்டுக் கொடுக்கும் பிரெட் இல்லை. ஒற்றைக் குழந்தையோ பத்து குழந்தைகளோ எதுவானாலும் சரி, ஒரு தகப்பன் தன் எல்லாக் குழந்தைகளின் மீதும் எந்த விதத்திலும் பாகுபாடு காட்டாமல் ஒரே விதமாகவே அன்பு செலுத்துகிறான். நான் இப்போது என்னுடைய இரண்டு மகன்களை எண்ணி வேதனைப்படுகிறேன் என்றால் அது ஒருவனுக்குப் பாதி வேதனை இன்னொருவனுக்கு அரை வேதனை எனும் விதத்தில் இல்லை. மாறாக இரட்டிப்பாக…” 

கூச்சமுற்றுப் பெருமூச்செறிந்து, “உண்மைதான்….. உண்மைதான்….” என்றவன், “ஆனால் ஒருவேளை, நிச்சயமாக இந்த நிலை உங்களுக்கு ஏற்படாது என்று நம்புகிறேன், ஒரு தகப்பனுடைய இரண்டு மகன்களும் போர்முனையில் இருந்து, அதில் ஒருவனை இழந்துவிட்டால் அவருக்கு ஆறுதல் தர மற்றொருவன் மிஞ்சி இருக்கிறானே… இதற்கிடையில்…” என்றான்.

இடையில் புகுந்த இன்னொரு பயணி, “ஆறுதல் அளிக்க ஒரு மகன் பிழைத்திருக்கிறான் எனில் அந்த மகனுக்காக அவர் வாழ வேண்டியிருக்கும். ஒற்றை மகனைப் பெற்றிருக்கும் ஒரு தந்தையின் மகன் இறந்துபோனால் தானும் இறந்து தன் வேதனைகளுக்கு முடிவு கட்டிவிடலாம். இவை இரண்டில் எது மோசமான நிலைமை? என் நிலைமை உங்களுடையதைவிட மோசமானது என்பது உங்களுக்குப் புரிகிறதா?” என்றான்.

தன் வெளிறிய சாம்பல் நிறக் கண்கள் இரத்தச் சிவப்பில் மாற, சினத்துச் சிவந்த  முகத்துடன் இடையில் குறுக்கிட்ட பருத்த உடலுடைய இன்னொரு பயணி, “அபத்தம்” என்றான்.

அவனுக்கு மூச்சிரைத்தது. கட்டுக்கடங்காத ஆற்றல் பொருந்திய உள்மனத்தின் வன்முறை, பிதுங்கிய அவன் கண்களின் வழியே பீறிட்டுத் தெறிப்பதைப் பலவீனமான அவனுடைய உடலால் சிறிதும் தாங்கிக்கொள்ள இயலாதது போலிருந்தது. மற்ற பயணிகள் துயரத்துடன் அவனை வெறித்துப் பார்த்தனர். போர் தொடங்கிய முதல் நாளிலேயே தன் மகனைப் போர்முனைக்கு அனுப்பிய அந்தத் தந்தை பெருமூச்சுடன், “நீங்கள் சொல்வது சரிதான். நம் குழந்தைகள் நமக்குச் சொந்தமானவர்கள் இல்லை. அவர்கள் நம் நாட்டுக்கு உரியவர்கள்….”

அடுத்த நொடியே, “முட்டாள்தனம்! நாம் நம் குழந்தைகளைப் பெற்றெடுக்கையில் நாட்டைப் பற்றிச் சிந்திக்கிறோமோ என்ன? நம் மகன்கள் ஏன் பிறந்தார்கள் என்றால்.. அதாவது… அவர்கள் பிறக்க வேண்டியிருந்தது. அவர்கள் உயிர் பெற்றதுமே நம்முடைய சொந்த உயிரைத் தங்கள் உயிருடன் பிணைத்துவிடுகிறார்கள் என்பதுதான் உண்மை. நாம் அவர்களுக்குச் சொந்தமேயொழிய அவர்கள் நமக்குச் சொந்தமானவர்கள் இல்லை. அத்துடன் அவர்களுக்கு இருபது வயதாகும்போது அந்த வயதில் நாம் எப்படி இருந்தோமோ அதே போல் அவர்களும் ஆகிவிடுகின்றனர். நமக்கும் ஒரு தாய் தந்தை இருந்தனர். ஆனால் பெண்கள், சிகரெட்டுகள், மாயைகள், புதிய கழுத்துப் பட்டைகள் எனப் பல விஷயங்கள் இருந்தன. நம் இருபதாவது வயதில் நாடு நம்மை அழைத்திருந்தால் அப்பாவும் அம்மாவும் தடுத்திருந்தாலும் நாம் நிச்சயமாகப் போருக்குச் சென்றிருப்போம். இப்போது, இந்த வயதில், நாட்டின் மீதான அன்பு பெருமளவுக்கு இருந்தாலும் பிள்ளைகளின் மீதான பாசம் அதைவிட வலிமையாக இருக்கிறது. ‘உன் மகனுக்குப் பதிலாகப் போர்முனைக்கு நீ போகலாம்’ என்கிற நிலை ஏற்பட்டால் இங்கிருக்கும் நாம் ஒவ்வொருவருமே மகிழ்ச்சியுடன் போருக்குப் போக மாட்டோமா என்ன?” என்று பருத்த உடலுடைய பயணி வேகமாக மறுத்தான்.

இப்போது அங்கு அமைதி நிலவியது. அனைவரும் ஆம் என்பதாகத் தலையசைத்தனர்.

“அப்படியானால் நம் இருபது வயதுப் பிள்ளைகளின் உணர்வுகளை நாம் ஏன் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்? இந்த இளம் வயதில் அவர்கள் நம் மீது வைத்துள்ள அன்பைவிட அவர்களுக்குத் தம் நாட்டின் மீதான பிடிப்பே அதிகமாக இருக்க வேண்டும் என்பதுதானே இயற்கை, இல்லையா? அதாவது நான் சொல்வது நன்னடத்தையுடைய இளைஞர்களைப் பற்றி. அது அவ்வாறு இருப்பது இயற்கையான விஷயம் எனில், இருக்கும் இடத்தைவிட்டு அசைய முடியாத கிழவர்கள், ஆகவே வீட்டிலேயே கிடக்க வேண்டியவர்கள் என்றுதானே நம்மைப் பற்றி அவர்கள் நினைப்பார்கள்? பசியில் செத்துப் போகாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, நாம் ஒவ்வொருவரும் தினமும் உண்ணும் பிரெட்டைப் போல, நாடு நமக்கு அத்தியாவசியமான இயற்கைத் தேவை என்று தோன்றினால், நாம் யாராவது சென்று அதனைப் பாதுகாக்க வேண்டும். இருபது வயதான நம் மகன்கள் போருக்குச் செல்கிறார்களே, அவர்களுக்காக நாம் கண்ணீர் சிந்த வேண்டியதில்லை. ஏனெனில் ஒருவேளை அவர்கள் இறந்துவிட்டாலும்கூட, காயத்தால் அழற்சியுற்ற உடலுடன் மகிழ்ச்சியாகவும்தான் இறக்கிறார்கள். அத்துடன் நான் பேசிக்கொண்டிருப்பது நல்ல ஒழுக்கநெறியுடைய இளைஞர்களைப் பற்றி. ஒருவன் வாழ்க்கையின் அசிங்கமான பக்கங்களை, அதன் சலிப்புகளை, சிறுமைகளை, மாயைகளினால் ஏற்படும் கசப்புகளைப் பார்க்காமல், இளமையாக மகிழ்ச்சியுடன் இருக்கும்போதே இறந்துவிட முடியுமெனில் அவனுக்காக அதைவிடச் சிறந்ததாக நாம் வேறெதைக் கேட்டுவிட முடியும்? எல்லோரும் அழுகையை நிறுத்துங்கள். எல்லோரும் என்னைப் போல் சிரியுங்கள்.. அல்லது என்னைப் போல் கடவுளுக்கு நன்றியாவது சொல்லுங்கள். ஏனெனில் இறப்பதற்கு முன் என் மகன் எனக்கொரு செய்தி அனுப்பியிருந்தான். அதில், ‘மனம் விரும்பியபடி மிகச் சிறப்பான முறையில் வாழ்வை முடித்துக்கொள்வதற்கான வாய்ப்பிருப்பதை எண்ணி திருப்தியுடன் மரிப்பேன்’ என்று அவன் குறிப்பிட்டிருந்தான். ஆகவேதான், நான் துக்க ஆடையைக்கூட அணியவில்லை பாருங்கள்…” என்றான் பருத்த உடல்கொண்ட பயணி.

துக்க ஆடை அணியாததை அவர்களுக்கு நிரூபிப்பது போலத் தன் வெளிர் மஞ்சள் அங்கியை முன்னும் பின்னுமாக இழுத்துக் காண்பித்தான். ஓட்டையாக இருந்த அவனுடைய பல்லின் மேல் அவனது உதடுகள் உணர்ச்சி வேகத்தில் நடுங்கின. கண்கள் நீர் நிறைந்து அசைவற்றுக் கிடந்தன. பிறகு சிறிது நேரத்தில் பேரொலியுடன் அவன் சிரித்த சிரிப்பு இறுதியில் தேம்பலாக முடிந்தது.

“நிச்சயமாக, நிச்சயமாக” என மற்றவர்கள் இதை ஆமோதித்தனர்.

தன்னுடைய அங்கியின் மீதமர்ந்து ஒரு மூட்டையைப் போல மூலையில் சுருண்டுகிடந்த அந்தப் பெண் இவையனைத்தையும் கவனித்துக்கொண்டிருந்தாள். கடந்த மூன்று மாதங்களாகத் தனது கணவனுடைய பேச்சின் மூலமாகவும் நண்பர்களுடைய பேச்சின் மூலமாகவும் தன் ஆழ்ந்த துயரத்திலிருந்து எப்படியாவது ஆறுதல் பெற்றுவிடவும், ஒரு தாயாகத் தன் மகனைப் போருக்காகப் பிரியநேர்வதை – அவன் மரிக்கப் போகிறான் என்றாலும் பரவாயில்லை, அபாயத்துடன் வாழப் போகிறான் என்பதை – எப்படி மறுக்காமல் ஏற்றுக்கொள்வது என்பதையும் அறிந்துகொள்ள அவள் முயன்றுகொண்டிருந்தாள். ஆனால் அவளிடம் கூறப்பட்ட எத்தனையோ சொற்களில் ஒரு சொல்கூட அவளைச் சென்றடையவில்லை. அவள் நினைத்திருந்ததற்கு மாறாக யாராலுமே அவளுடைய உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ள முடியவில்லை என்பது அவள் வேதனையை இன்னும் அதிகமாக்கியது.

ஆனால் இந்தப் பயணியின் சொற்கள் அவளைப் பெரு வியப்புக்குள்ளாக்கின. அவள் திகைத்துப்போனாள் என்றே சொல்லலாம். தவறு மற்றவர்கள் மீது இல்லை என்றும், யாராலும் தன்னைப் புரிந்துகொள்ள முடியவில்லை என்று தான் நினைத்ததே தவறு என்றும் உணர்ந்தாள். தம் மகன்களுடைய பிரிவில், ஏன் இறப்பில்கூட, அழாமல் அதனை மறுப்பின்றி ஏற்றுக்கொள்ள விரும்பும் இத்தகைய பெற்றோரின் உன்னதமான உயரத்தை எட்டமுடியாத தன்னிடத்தில்தான் தவறு என்பதை அவள் அந்த நொடியில் புரிந்துகொண்டாள். அரசருக்காவும் நாட்டுக்காகவும் போரில் தன் மகன் ஒரு வீரனாக மகிழ்ச்சியுடன் வீழ்ந்துபட்டதை எந்தவிதமான வருத்தமும் இன்றி அங்கிருந்த மற்ற பயணிகளிடம் அந்தப் பருத்த ஆள் விவரித்துக்கொண்டிருந்த தகவல்களைத் தன் தலையை உயர்த்தி, தான் அமர்ந்திருந்த இடத்திலிருந்து உடலை வளைத்துக் கூர்ந்து கவனிக்க முயன்றாள். அவள் தன் கனவிலும் நினைத்திராத, இதுவரை அறிந்திராத ஒரு உலகத்தின் மீது காலிடறி விழுந்துவிட்டதாக அவளுக்குத் தோன்றியது. துயரத்தை மறைத்துக்கொண்டு உணர்ச்சியற்ற கல்லைப் போல மகனுடைய இறப்பைப் பற்றி பேசிக்கொண்டிருந்த வீரம் மிக்க அந்தத் தந்தையை எல்லோரும் வாழ்த்துவதைக் கேட்டு அவள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தாள்.

இதுவரை அவன் பேசிய எதையுமே காதில் வாங்காதது போலவும், கனவு கண்டு விழித்தெழுந்தது போலவும், அந்தக் கிழவனைப் பார்த்து, “அப்படியானால்…. உங்கள் மகன் உண்மையிலேயே இறந்துவிட்டானா?” என்று திடீரென்று கேட்டாள்.

எல்லோரும் அவளை முறைத்துப் பார்த்தனர். அந்தக் கிழவன் அவளை நோக்கித் திரும்பினான். பிதுங்கிக்கொண்டிருந்த கண்களால் அவளை வெறித்துப் பார்த்தான். அவனுடைய சிறிய சாம்பல் நிறக் கண்கள் நீர் நிறைந்தும் அச்சுறுத்தும்படியும் இருந்தன. பதில் கூறுவதற்குச் சில நொடிகள் முயன்றும் அவனால் பேசமுடியவில்லை. அவன் அவளை நீண்ட நேரம் பார்த்துக்கொண்டே இருந்தான். அந்தப் பார்வை, ஏதோ அப்போதுதான், அந்த முட்டாள்தனமான, சூழலுக்குச் சற்றும் பொருந்தாத அந்தக் கேள்வியினால்தான், தன் மகன் உண்மையிலேயே இறந்துவிட்டதை, நிரந்தரமாக, எப்போதைக்குமாகத் தன்னைப் பிரிந்துவிட்டதை அவன் உணர்ந்துகொண்டது போலிருந்தது. முதலில் சுருங்கிய அவனுடைய முகம், பயங்கரமான விதத்தில் விநோதமாக மாறியது. பிறகு தன் சட்டைப் பையிலிருந்து அவசரமாக ஒரு கைக்குட்டையை எடுத்தான். சுற்றியிருந்த அனைவரையும் திகைப்படையச் செய்யும்விதமாக, நெஞ்சைப் பிழிகிற துயரார்ந்த குரலில், கட்டுப்படுத்த முடியாமல் தேம்பி அழத் தொடங்கினான். 

*

ஆங்கில மூலம்: War by Luigi Pirandello, Published in “7 Best Short Stories – War”, Tacet Books (12 May 2020).