வஸ்திராபகரணம்

2 comments

ரயில் புறப்படுவதற்கு இன்னும் சில நிமிடங்கள் இருந்தன. வார விடுமுறைக்கு ஊருக்கு வந்து, சென்னைக்குத் திரும்பும் இளைஞர்கள் சிலர், பிளாட்பார்மில் இருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்து அலைபேசியைப் பார்த்துக்கொண்டிருந்தனர். மிளகாய்ப்பொடி தூவிக் கொண்டுவந்திருந்த இட்லிப் பொட்டலத்தைப் பிரித்து ஒரு நடுத்தர வயது பெண், தனது கணவனிடம் கொடுத்தார். அதிலிருந்து மிளகாய் காரத்துடன் கலந்த நல்லெண்ணெய் வாடை வீசியது. பின்புறம் நிற்கும் மூன்றாம் வகுப்புப் பெட்டியில் ஏறுவதற்கு ஒரு வயதான அம்மா வேகமாக நடக்க முயன்று, மூச்சு வாங்கினார். அவருக்குச் சிறிது தூரம் முன்பு சென்ற அந்தம்மாவின் கணவர், அவ்வபோது நின்று, பின்பக்கம் திரும்பி, ”வேகமா வாங்குறேன்.. ஆடி அசைஞ்சு வந்தா வண்டி போயிடும்” என்று மேலும் அந்தம்மாவைப் பதற்றத்துக்குள்ளாக்கினார். 

நான் ஏறவேண்டிய முதல் வகுப்புப் பெட்டியைப் புங்கை மரத்தடியில் நின்றுகொண்டு, ஜன்னல் வழியே பார்த்தேன். நான்கு பேருக்கான அந்த ஏஸி கோச்சில், எதிர்ப்பக்கம் இருவர் அமர்ந்திருப்பது தெரிந்தது. உள்ளே நுழைந்து, ரயிலில் படிக்கலாமென்று கொண்டுவந்திருந்த புத்தகத்தை எடுத்து மேலே வைத்துவிட்டு, பையை எனது இருக்கைக்குக் கீழே தள்ளிவிட்டேன். எதிர்படுக்கையில் அமர்ந்திருந்த கதர் சட்டைப் பெரியவர், தலையில் முண்டாசு போல் கட்டியிருந்த சிவப்பு ஸ்கார்பை சரிசெய்துகொண்டிருந்தார். கறுப்புக் கலர் சுடிதார் அணிந்த பெண், வெளியில் ஒட்டியிருந்த முதல் வகுப்புப் பெயர் பட்டியலை மறுபடியும் படித்து உறுதிசெய்துகொண்டு வந்தமர்ந்து, ”இந்த ஸீட்தான் தாத்தா” என்றாள். பெரியவர் அந்தப் பெண்ணை நிமிர்ந்து பார்த்து தலையசைத்துக்கொண்டார்.   

அந்தப் பெண் அழகான கரும்பச்சை வண்ணத்தில் சுடிதார் அணிந்திருந்தாள். கைகளில் மட்டும் சிவப்பு நிறத்தில் பட்டு பார்டர். மாநிற மெல்லிய தேகம். அழகாகக் கத்தரித்திருந்த முடியைக் கற்றையாக முகத்தில் விழும்படி எடுத்துவிட்டிருந்தாள். கண்களில் புத்திசாலித்தனம் தெரிந்தது. ஏர்பேக்கிலிருந்து பிளாஸ்க் எடுத்து வெந்நீர் ஊற்றி தாத்தாவுக்குக் கொடுத்தாள். அவர் அதில் பாதியை மட்டும் குடித்தார். ரயில் மெதுவாக நகர ஆரம்பித்தது. பெரியவர் அப்போதுதான் என்னைப் பார்த்தார்.

”வணக்கம். நா ராமச்சந்திரன். கேள்விப்பட்டிருப்பீங்களே, ராமச்சந்திரா மெடிக்கல்ஸ். ஒரு காலத்துலே தஞ்சாவூரூ ஜில்லா முழுக்க விளம்பரம் செய்வோமே, ராமச்சந்திரா மெடிக்கல்ஸ், ராமச்சந்திரா டெக்ஸ்டைல்ஸ், அதோட ஓனரு . தம்பிக்கு இந்த ஊருங்களா?” என்றார். 

அவர் ”வணக்கம்” என்று சொன்னபோது நாடகப் பாணியில் இரு கைகளையும் குவித்து கும்பிட்டுச் சொன்னது சுவாரஸ்யமாக இருந்தது. 

“ஆமா சார். இந்த ஊருதான்.”

“எங்க வீடு?”

தாத்தா என்னிடம் பேசுவதை அவர் பேத்தி இரசிக்கவில்லை என்று தோன்றியது. அவள் சங்கடமாகப் புன்னகைத்தாள். 

“கீழ வீதிலேதான் வீடு. நான் சென்னைலே இருக்கேன். எப்பவாது ஊருக்கு வருவேன்.”  

“கீழ வீதியா? அடடே, என்னோட பால்ய சினேகிதன் சந்தானம் அங்கதான் இருந்தான். சின்ன புள்ளேலே அவங்க வூட்டுக்கு அடிக்கடி வருவேன். அந்த தெருவுலேயே பெரிய வூடு.”

எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அப்பாவின் நண்பரா இவர்?

“சந்தான கிருஷ்ணன் பையன்தான் சார் நான். அப்பாவோட ப்ரெண்டா நீங்க.. ரொம்ப ஆச்சரியமா இருக்கு. இப்போ செத்த முன்னாடி என்னை ஏத்திவுட வந்தாரே, அப்பா..”

சன்னலுக்கு வெளியே பார்த்தேன். ரயில் வண்டி புறப்பட ஹாரன் அடித்ததால், அப்பா அப்போதே கிளம்பிவிட்டார். கொஞ்ச நேரம் முன்பு இவரைப் பார்த்திருந்தால், அப்பா மகிழ்ந்திருப்பாரே என்று தோன்றியது. அப்பாவின் பழைய நண்பர்கள் பலரும் மறைந்துவிட்டனர். உயிருடன் இருக்கும் ஓரிருவரும் உள்ளூரில் இல்லை. சிறு வயதில் அப்பாவைச் சந்திக்க தினமும் வரும் நண்பர்கள் இருந்தனர். மாலை ஆறு மணி ஆகிவிட்டால் ஒவ்வொருவராக வந்துசேர்வார்கள். திண்ணையில் அமர்ந்து மாலை தினசரிகளை வாசிப்பார்கள். அந்தச் சிறிய ஊரில் தினமும் பேசுவதற்கு இவ்வளவு விஷயங்கள் எப்படி நடக்குமென்று தோன்றுமளவுக்கு அவர்கள் ஒன்பது மணிவரை பேசிக்கொண்டிருப்பார்கள். எட்டு மணிக்கு மேல் வாசற்படி பக்கம் போனால், உள்ளே போகும்படி அப்பா அதட்டுவார் . திண்ணையில் மெலிதான மதுவாசம், வெற்றிலை, புகையிலை நெடியுடன் வீசும். கொஞ்சம் கொஞ்சமாக அதெல்லாம் நின்றன. சமீபநாட்களில் அப்பா தளர்ந்துவிட்டாரென்று தோன்றியது. தானே கார் ஓட்டுவது எல்லாம் நின்றுபோய் பல வருடங்களாகிவிட்டன. 

“சந்தானம் புள்ளையா நீங்க? சந்தானத்தை பார்த்து எவ்வளோ நாளாச்சி! எப்படி இருக்காரு? அவருக்கென்ன, ராஜா வீட்டு கண்ணுக்குட்டிலே.. நாங்க எல்லாம் நேஷனல் ஸ்கூல்லே ஒன்னாதான் படிச்சோம். உங்கப்பா, துரைகண்ணு செருமடார் எல்லாம் ஒரு செட்டு. இண்டர்வெல்லே போய் புகை ஊதிட்டு வரும். என்னையும் கூப்பிடுவாரு.. நான் என்ன நூறு வேலி பண்ணையா? கருத்தா படிச்சாதான் எங்கம்மாவுக்கு கூழ் ஊத்த முடியும் நீங்க போய்ட்டு வாங்கய்யான்னுடுவேன்…”

பெரியவரை உற்றுப் பார்த்தேன். அப்பா செட்டு என்றால் எண்பதுக்கு மேல் வயதாகியிருக்க வேண்டும். அப்பாவைவிட இவர் அதிகம் தளர்ந்துவிட்டாரென்று தோன்றியது. சராசரியைவிட உயரமானவர். மார்பு வரைக்கும் வெள்ளைத் தாடி இருந்தது. குங்குமப் பொட்டு வைத்திருந்தார். கன்னங்கள் பழுத்த பரங்கிப்பழம் போல் உப்பிச் சிவந்திருந்தன. ஒவ்வொரு முறையும் பேசும்போது மட்டும் நிமிர்ந்து, உடனே கூன் போட்டு அமர்ந்துகொண்டார். நிமிரும்போது கழுத்தில் தங்கப்பூண் போட்ட உத்திராட்சம் தெரிந்தது. கண்களில் மட்டும் கம்பீரம் மீதமிருந்தது.  

வெள்ளைக் கலர் பேண்டும், கருநீலக் கோட்டும் அணிந்து, ஒரு எக்ஸாம் பேடு கையில் வைத்தபடி உள்ளே நுழைந்தார் டி.டி.ஆர். ஆதார் கார்டை நீட்டினேன். தலையாட்டியபடி திருப்பித் தந்தார். அடுத்ததாகப் பெரியவரின் கார்டை வாங்கிப் பார்த்தார். ”ராமச்சந்திரன், 84” என்று படித்தார். பெரியவர் பேத்தியைக் காண்பித்து, ”என் பேத்தி ரம்யா. எம்.பி.பி.எஸ், எம்.டி”, என்றார். ”இதெல்லாம் இப்போ கேட்டாங்களா தாத்தா?” என்றாள் ரம்யா. 

”இருக்கட்டும்மா, அய்யா வயசுக்கெல்லாம் நாம எப்படி இருப்போமோ? ஆசிர்வாதம் பண்ணுங்கய்யா” என்று பெரியவரின் காலில் குனிந்தார் டி.டி.ஆர்.  

டி.டி.ஆர் நகர்ந்ததும் படுக்கையைச் சரிசெய்யத் தொடங்கினாள் ரம்யா. பெரியவர் நிமிர்ந்து அப்போதுதான் என்னைப் புதிதாகப் பார்ப்பது போல் பார்த்தார். 

”வணக்கம், நான் ராமச்சந்திரன். கேள்விப்பட்டிருப்பீங்களே? ராமச்சந்திரா மெடிக்கல்ஸ், ராமச்சந்திரா டெக்ஸ்டைல்ஸ். அதோட ஓனரு. தம்பிக்கு இந்த ஊரா?” என்றார்.

”அய்யா, இப்போதானே பேசினோம்..” என்று தயங்கினேன். 

அவர் தொடர்ந்தார். “கோயில் உற்சவத்துக்கு வந்தேன். புன்னை வாகனம் நம்ம மண்டகபடி. வஸ்திராபகரணம்.. கோபாலன், குளிக்கிற கோபியரு துணியெல்லாம் எடுத்துட்டு மரத்திலே ஏறிடுவாரே.. அந்த அலங்காரம். கிருஷ்ணன் எடுக்குற அந்த துணியெல்லாம், அந்த காலத்துலே நம்ம கடைலேருந்துதான் போவும். தம்பிக்கு இந்த ஊருங்களா ?” என்று திரும்பவும் கேட்டார்.

”அய்யோ தாத்தா, இப்போதான் அவர் எல்லாம் சொன்னார். நீங்க மறந்துட்டிங்க” என்றாள் ரம்யா. ”சாரி, தாத்தாவுக்கு டிமென்சியா. இப்போ பேசறதெல்லாம் உடனே மறந்துடும். பழசெல்லாம் நல்லா ஞாபகம் இருக்கும். ஆனா பிரசண்ட்லே நடக்குறது மட்டும் ஞாபகத்தில் நிக்குறதில்லை” என்றாள் ரம்யா. 

”பரவாயில்லை” என்று புன்னகைத்தேன்.

பெரியவர் அலட்டிக்கொள்ளாமல், ரம்யாவைக் காட்டி, ”இது என் பொண்ணு வயத்து பேத்தி. எம்.பி.பி.எஸ், எம்.டி. வர்ற தை மாசம் கல்யாணம். பையனும் டாக்டருதான். கூட படிக்கிற பையனையே கட்டிக்கிறேனுச்சு. பொண்ணும் சரின்னுட்டா” என்றார். கண்களில் என்னைப் பற்றிய கேள்வி இன்னும் இருந்தது.

“ரொம்ப சந்தோஷம் சார். நான் இந்த ஊருதான். உங்க ப்ரெண்டு சந்தானம் பையன்தான் நான்.”

 ”அடடா, சந்தானம் புள்ளையா நீங்க?” அதே ஆச்சரியத்துடன் அவரது கண்கள் விரிந்தன.  

”அப்பாவை பார்த்து எவ்வளோ நாள் ஆச்சு.. எப்படி இருக்காரு? அவருக்கென்ன, பெரிய மிராசுதாரு. நாங்க எல்லாம் ஒன்னா படிச்சோம். அவரு ஜாலி குரூப். பண்ணைலே.. நா அப்படியா? எங்கப்பா தென்கொண்டார் வூட்டுலே ஓட ஒடியாற இருந்தாரு. நாங்க ஆறு புள்ளைங்க.. நாளு கிழமைன்னு ஒரு நல்ல டிரஸூ போட்டுருப்போமா? தீபாவளி அன்னைக்கு அம்மா இட்லி சுடும். அதுக்காக காத்துட்டு இருப்போம். சொந்தக்காரங்க விசேசம்ன்னா, செய்முறை செய்ய முடியாது. எங்கப்பா யாராரு வூட்டு கல்யாணத்துலேயோ பந்தி பரிமாறுவாரு, தேங்காய் பை போடுவாரு. சாப்பாடு போட்டு, கை செலவுக்கு காசு கொடுத்தா போதுமேன்னு வெறும் கல்யாண பத்திரிகையை மட்டும் அனுப்பி வைச்சுடுவாங்க. உடனே பையை தூக்கிட்டு கெளம்பிடுவாரு. இதெல்லாம் பொழப்பாய்யான்னு இருக்கும். என்னைக்காவது சொந்தக்காரனுக முன்னாடி நாமளும் ஒரு மனுசனா நிக்கணுன்னுலே உழைச்சேன். கொஞ்சம் கொஞ்சமா மேல வந்தேன். கடைத்தெருலே சீட்டு புடிச்சி, சின்னதா மெடிக்கல்ஸ் வச்சு, அப்புறம் பெருசாகி அதே கடைத்தெருவுலே டெக்ஸ்டைல்ஸ் மூணு மாடிக்கு தொறந்தேன்.”

பெரியவர் பேசப் பேச, பிரமிப்பாக இருந்தது. சிறு வயதில் ராமச்சந்திரா டெக்ஸ்டைல்ஸ் என்கிற பெரிய போர்டைக் கடந்துசெல்லும் ஞாபகம் மெலிதாக இருந்தது. கோவிலிலிருந்து நீண்டிருக்கும் பெரிய கடைத்தெருவில் திறக்கப்படும் எல்லா வியாபாரமும் நீண்ட காலம் நீடிக்க ஆசைப்படுபவையே. ஆனால் முதல் மூன்று வருடங்களுக்குள் காணாமல் போகும் கடைகளே அதிகம். உழைப்பின்மையோ, திறமையின்மையோதான் அதற்குக் காரணமென்று கூறிவிட முடியாது. இவையெல்லாம் தாண்டி கண்ணுக்குத் தெரியாத காரணங்கள் இருக்கத்தான் செய்கின்றன. நகரத்தின் ஆன்மாவோடு ஏதோ ஒரு சூட்சுமப் புள்ளியில் இணையும் வியாபாரியே அங்கு ஜெயிக்கிறார். அப்படி ஜெயித்தவர் இவர். இன்றைக்கு நிறைய ஜவுளிக்கடைகள், அடுக்குமாடிக் கட்டிடங்களில் வந்துவிட்டன. ஆனால் முப்பது வருடங்களுக்கு முன்னால் அப்படி மூன்று மாடிகள் கொண்ட ஜவுளிக்கடை ராமச்சந்திரா டெக்ஸ்டைல்ஸ் மட்டும்தான்.  அந்தக் கடையின் வெளியே நிற்கும் வெளீர் பெண் பொம்மை அணிந்திருக்கும் சிவப்புக் கலர் பட்டுப் புடவையைக்கூட இப்போது நினைவில் எழுப்ப முடிகிறது. பேருந்தில் வெளியூர்களுக்குச் செல்கையில், வயல்வெளியில் தன்னந்தனியே நிற்கும் போர்செட்டு சுவர்களில் எல்லாம் ”ராமச்சந்திரா டெக்ஸ்டைல்ஸ் – தரம் என்றும் நிரந்தரம்” என்கிற விளம்பரம் எழுதப்பட்டிருக்கும். பிறகு என்ன ஆனது? அவ்வளவு பிரபலமான அந்தக் கடை சட்டென்று எப்படி கண்ணில் படாமல் மறைய முடியும்? அந்தக் கடை பற்றிய எந்த நினைவும் ஏன் இத்தனை வருடங்களாக இல்லாமல் போனது? கடையென்றால் அது வெறும் தொழிலா? அதற்குப் பின்னிருந்த மனிதர்கள், அந்த வாழ்க்கை எல்லாம் கனவென மறைய முடியுமா? இப்படி இந்த நகரம் உண்டு செரித்த மனிதர்கள், கடைகள், மாட மாளிகைகள்தான் எத்தனை!

ரம்யா அவளது கைப்பையிலிருந்து மாத்திரைகளை எடுத்து பிரித்து வைத்தாள். வேறொரு பிளாஸ்க்கிலிருந்து சூடான பாலை எவர்சில்வர் டம்ளரில் ஊற்றி, தாத்தாவின் கையில் கொடுத்தாள். அவர் நிதானமாகக் குடித்தார். அவர் குடிக்கும்வரை அருகில் நின்றவள், கர்சீப்பால் அவரது தாடியைத் துடைத்தாள். அதுவரை கல்லூரி முடித்துவந்த இளம்பெண்ணாக இருந்தவள், கண்ணெதிரே சட்டெனத் தாயாகி இருந்தாள்.  

பெரியவர் பேச மறந்து, தூங்குவதற்காகத் தலையணையை எடுத்து சரி பார்த்துக்கொண்டிருந்தார். ரம்யா அவருக்கு மேலிருந்த படுக்கையில் ஏறி அமர்ந்து கைப்பேசியைப் பார்த்துக்கொண்டிருந்தாள். பிறகு என்னவானது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்று ஆர்வமாக இருந்தது. ரயில் சீரான ஓட்டத்தில் தஞ்சையைத் தாண்டியிருந்தது. அப்பாவுக்குப் போன்செய்து இவரைச் சந்தித்ததைச் சொன்னால் மகிழ்வார். அவரிடமே கேட்கலாமென்று தோன்றியது. சிறிய வயதில் அப்பாவுடன் எந்த நெருக்கமும் இருந்ததில்லை. எது வேண்டுமென்றாலும் அது அம்மா வழியாகவே நிகழும். உண்மையில் அவர் தனது நண்பர்களுடன் இருக்கும்போது மட்டுமே சிரித்துப் பேசுவார். வீட்டுக்குள் வந்ததும் இறுக்கத்தைச் சூடிக்கொள்வார். இப்போது யோசிக்கையில், அவரிடமிருக்கும் எந்தத் தவறான பழக்கமும் எனக்குத் தொற்றிவிடக்கூடாது என்பதில் பதற்றமாக இருந்தாரென்று தோன்றுகிறது. வயது ஏற ஏற அப்பா வேறு ஒருவராக மாறினார். சென்னையிலிருந்து இரவுகளில் அழைத்தால், பேச விரும்புபவராக, பழைய கதைகளைப் பேசினார். உண்மையில் அப்பாவுடனான நெருக்கம் என்பது என்னுடைய நாற்பது வயதுக்கு மேலேயே சாத்தியப்பட்டது. அவரை அழைக்கலாமென்று அலைபேசியைப் பார்த்தபோது மணி பதினொன்றைத் தாண்டியிருந்தது. இந்நேரம் அவர் தூங்கியிருக்கக்கூடும். 

”அய்யா, நான் கீழ வீதி சந்தானத்தோட பையன். உங்க வியாபாரமெல்லாம் ஊருலே ரொம்ப நல்லா நடந்துச்சே.. எப்ப சென்னைக்கு போனீங்க?” என்று கேட்டுவிட்டு ரம்யாவைப் பார்த்தேன். அவள் புன்னகைத்தாள். கொஞ்சம் சகஜமாகிவிட்டாள் என்று தோன்றியது.

“வணக்கம், என்னோட பேர் ராமச்சந்திரன். அடடே.. சந்தானம் பையனா நீங்க? அப்பா எப்படிருக்காரு? நாங்க ஒன்னா படிச்சோம். நாங்கலாம் கூட்டுக்காரங்க. இரண்டு மூணு வருசத்துக்கொரு தடவை கோபாலன் உற்சவத்துக்கு வர்றேன். ஆனா அவரைப் பார்த்து முப்பது வருசமாச்சி..” என்றார். 

“இங்க ராமச்சந்திரா டெக்ஸ்டைல்ஸ் நல்லா நடந்துச்சே? அதை விட்டுட்டு சென்னைக்குப் போயிட்டீங்களே, அதைப் பத்தி கேட்டேன்?”

“ஆமா, பின்னே? ராமச்சந்திரா டெக்ஸ்டைல்ஸ் கொடிகட்டிலே பறந்துச்சு. தீவாளின்னா சவுக்குகம்பு கட்டிலே கூட்டத்தை உள்ளே வுடுவோம். லயன்ஸ் கிளப் பிரசிடெண்டு, கோயில் மண்டகபடி, காஸ்மோபாலிட்டன் கிளப்லே மெம்பரு இதெல்லாம் அவ்வளவு சல்லிசா வந்துடுமா? காசு பணம் சம்பாதிச்சுப்புடலாம். எந்த ஊருலே எங்கப்பா எடுபுடியா இருந்தாரோ, அதே ஊருலே மரியாதை தேடிக்கணும்லே? அதை ஒரே தலைமுறைலே செஞ்சுக்கிட்டேன்.” 

பெரியவர் எதையோ நினைப்பவர் போல்  மெளனமானார்.

ரம்யா லைட்டை அணைத்துவிட்டுப் படுத்துக்கொண்டாள். பேசியது போதுமென்ற சமிக்ஞை போல் பட்டது. 

“வஸ்திராபகரணத்துக்குத் துணி கொடுத்த குடும்பம், தம்பி. ஒட்டுத்துணியில்லாம கரிக்கட்டையா எரிஞ்சி கிடந்தானே என் ஒத்தபுள்ள. இந்த கையாலே கொண்டுபோய் திரும்பவும் கொள்ளி போட்டேனே? அதுக்குப்புறம் இந்த ஊருலே என்ன இருக்கு?”

கைகளை முகத்தில் பொத்திக்கொண்டு குலுங்கினார்.

“முப்பது வருசம், ஒவ்வொரு கல்லா சேத்து கட்டி வச்சத ஒரே நாள்லே உருவுறேன்னான். ஜவுளிக்கடைலே வேலை பார்க்கவந்த பொண்ணு ஜோதி. அவளைப் போய் கல்யாணம் கட்டிக்கிறேன்னான். ஒரே பையன்.. வாழ்க்கை முழுக்க உழைச்சு தேடின அந்தஸ்து, மரியாதை எல்லாம் போயிடும்டா.. வேணாம்டாண்ணே.. பிடியா நின்னான். அந்த கழுதையை வேலையைவிட்டு நிப்பாட்டிட்டேன். கொஞ்ச நாளாச்சுன்னா மாறி வந்துடுவான்னு நெனைச்சிட்டு இருந்தேன். அவனும் அப்படித்தான் தெரிஞ்சான். கண்ணை கட்டிபுட்டான். தீவாளிக்கு இரண்டு நாள் முன்ன, நான் முன்னாடி போறேன், கடைய கட்டிபுட்டு வாடான்னு போய் சோத்துலே கை வைக்கிறேன். கடைக்குள்ளே நெருப்பு எரியுதுன்னு வந்து கூப்பிடுறாங்க. போய் பார்த்தா, பத்த வைச்சிகிட்டான். கடைக்கு வெளியே உட்கார்ந்து தைக்குற டைலருங்க உள்ளே பூந்து அணைச்சுருக்காங்க. கரிக்கட்டையா கிடந்தான்.. உசுரு இருந்துச்சு. அப்பா, எரியுதுப்பான்னான். அவ்வளவுதான்.. எதுக்கும் அர்த்தமில்லாம போச்சு. அவன் போன கொஞ்ச நாள்லேயே விசாலமும் போய்சேர்ந்துட்டா. பொண்ணை கட்டிக்கொடுத்த ஊரோட நானும் போய்ட்டேன்.”

”தாத்தா, போதும் படுங்க. அப்புறம் மாத்திரை வேலை செய்யாது” என்று படுக்கையிலிருந்து ரம்யா சொன்னாள். தேவையில்லாது இதையெல்லாம் அவருக்கு நினைவூட்டி விட்டாய் என்று என்னைக் குற்றம்சொல்லும் தொனி அதில் இருந்தது. 

பெரியவர் சற்று நேரம், அப்படியே தலைகுனிந்து உட்கார்ந்திருந்தார். மடித்து வைத்திருந்த கைகளில் கண்ணீர் சொட்டியது. சற்று நேரம் கழித்து கண்களைத் துடைத்துக்கொண்டு அமைதியாகப் படுத்தார். எனக்குச் சங்கடமாக இருந்தது. விளக்கை அணைத்துவிட்டு நானும் போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டேன். 

நடு இரவில் ஏஸி குளிர் தாங்காமல் எழுந்து கழிவறைக்குப் போகும்போது கவனித்தேன். பெரியவர் தூக்கம் வராமல் எழுந்து உட்கார்ந்திருந்தார். ஆனால் கண்கள் மூடியிருந்தன. அவரிடம் பேசுவதற்குப் பயந்து படுத்துக்கொண்டேன். விழித்தபோது ரயில் தாம்பரத்தை நெருங்கியிருந்தது. எழுந்து பல் துலக்கிவிட்டு வரலாமென்று சிங்க் அருகே போனபோது பெரியவர் அங்கு நின்றிருந்தார்.

இரவு முழுவதும் மனதை உறுத்திக்கொண்டிருந்த அந்தக் கேள்வியை அவரிடம் மறுபடி எப்போதும் கேட்க முடியாமல் போய்விடலாமென்று தோன்றியது. இவருக்கு ஏன் இவ்வளவு அகங்காரம்? காதலித்த பெண்ணையே திருமணம் செய்துவைத்திருந்தால் பெரிதாக என்ன நடந்திருக்கும்? இவரே மகனைக் கொன்றுவிட்டாரே! பொறுக்க முடியாமல் கேட்டுவிட்டேன். 

“அய்யா, உங்க பையன் ஆசைப்பட்ட மாதிரி அந்த ஜோதியையே கல்யாணம் செஞ்சி வைச்சிருக்கலாமே? உங்ககிட்டே இல்லாத வசதியா? எல்லாத்தையும் சரி செஞ்சிருக்கலாமே?”

அவர் திரும்பி பார்த்தார். ”கீழ வீதிலே சந்தானம்ன்னு என்னோட கிளாஸ்மேட்டு இருந்தான். பெரிய மிராசுதாரு. அவன் அக்கரைலே வைச்சுட்டு இருந்த பொம்பளைக்கு பொறந்த பொண்ணுதான் ஜோதி. அந்த பொண்ண, எம்மவனுக்கு கட்டின பொறவு, அந்த ஊருலே நான் திரும்பவும் வெள்ளை வேட்டி கட்டி நடக்க முடியுமா?” என்றார்.

ஞாபகம் வந்ததுபோல் கேட்டார். “வணக்கம், நான் ராமச்சந்திரன். கேள்விப்பட்டிருப்பீங்களே, ராமச்சந்திரா மெடிக்கல்ஸ். ஒரு காலத்துலே தஞ்சாவூரூ ஜில்லா முழுக்க விளம்பரம் செய்வோமே, ராமச்சந்திரா மெடிக்கல்ஸ், ராமச்சந்திரா டெக்ஸ்டைல்ஸ், அதோட ஓனரு. தம்பிக்கு மெட்ராசுங்களா?”

2 comments

Ramakrishnan March 8, 2022 - 1:33 pm

Very nice story. The place resembles mannargudi. I remember people who were defeated in the business. Some known reasons and others by fate

Anbalagan April 19, 2022 - 11:25 pm

நீண்ட நாட்களுக்குப் பிறகு படித்த நல்ல ஒரு சிறுகதை. ஆனால் புகைவண்டியில் மூன்றாம் வகுப்பு என்று இன்னும் இருக்கிறதா?

Comments are closed.