பைத்தியம்

4 comments

ஒருவேளை பைத்தியமோ என்று யோசித்தேன். ஆனால் ஆளைப் பார்த்தால் அப்படியெல்லாம் தோன்றவில்லை. ஒரு பைத்தியம் இப்படித்தான் இருக்க வேண்டும் என வரையறை இருக்கிறதா என்றுகூட யோசித்தேன். இன்று பைத்தியம் எனச் சொல்வது சரியில்லை என்று என் தோழி ஒருத்தி சொல்கிறாள். அப்படிச் சொல்லும் லைசன்ஸ் மனநல மருத்துவர்களிடம் மாத்திரமே உள்ளது. அவர்களும் வேறு ஏதேதோ வாயில் நுழையாத வார்த்தைகளால் அதைச் சொல்லுகிறார்களே தவிர நேரடியாகப் பைத்தியம் என்று சொல்லுவதில்லை. முன்பு இப்படி இல்லை. பைத்தியம் என்கிற சொல் சர்வசாதாரணமாகப் புழங்கியது. பைத்தியங்கள் சர்வசாதாரணமாகப் புழங்கின. இப்போது கவிஞர்கள் மட்டுமே பைத்தியம் என்று அழைக்கப்படும்போது கோபப்படுவதில்லை.

அந்தப் பெண்ணின் கண்களைப் பார்த்தேன். ’’ஈ மெயில் போட்டிருந்தேன்’’ என்றாள். ’’வரச்சொல்லி பதில்கூட போட்டிருந்தீங்க.’’

நான் ‘’ஓ’’ என்றேன். என்னுடைய வழக்கமான சபலப்புத்தி கொண்டுவந்துவிட்ட பிரச்சினையோ இது? பொதுவாகவே எனக்கு வாசகிகள் அதிகம். இது சில சந்தோஷங்களையும் சில தொந்திரவுகளையும் கொண்டுவந்துவிடுகிறது. “உங்கள் கதைத்தலைப்புகளில் ஷ, ஸ, க்‌ஷ போன்ற மெல்லினங்கள் அதிகம் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்” என்று ஒரு மூத்த எழுத்தாளர் என்னிடம் உபதேசித்தார்.

‘’நீங்க என்ன பண்றீங்க?’’ என்று தொடர்பில்லாமல் கேட்டு வைத்தேன்.

அவள், ‘’மெயில்ல எழுதிருந்தேனே?’’ என்றாள். நான் தர்மசங்கடத்துடன் உள்ளே பார்த்தேன். மனைவி வழக்கத்துக்கும் அதிகமான சத்தத்துடன் காப்பி டம்ளர்களை உருட்டும் சத்தம் கேட்டது. என்னைத் தேடி வருகிறவர் ஆணா பெண்ணா, பிராயம் என்ன, அழகாய் இருக்கிறாரா இல்லையா, எப்படி ஆடை அணிந்திருக்கிறார் என்பதைப் பொறுத்து இந்த ‘ணங்’கென ஒலிக்கு நாதத்தின் ஓங்காரம் கூடும். அவளைச் சொல்லியும் குற்றம் உண்டா? இதே அவள் ஒரு எழுத்தாளராய் இருந்து வாரத்துக்கு நாலு தடியன்கள் அவளைத் தேடிக் காலையிலேயே வந்து கூடத்தில் அமர்ந்திருந்தால் நான் என்ன செய்திருப்பேன்? நான் பெண்ணியவாதி இல்லை. இருந்தாலும் ஓரளவு பட்சபாதம் இல்லாமல் சிந்திக்கக்கூடியவன்.

நான் அந்தப் பெண்ணின் மற்ற விவரங்களையும் கவனிக்க ஆரம்பித்தேன். வடிவாகத்தான் இருக்கிறாள். பைத்தியத்தின் எந்த இலட்சணமும் இல்லை. அம்மாகூட அப்படித்தானே? அவளிடம் பிரச்சினை இருந்தது என்று யாராலும் கண்டுபிடிக்கவே முடியவில்லை. ஏனோ பெண்களுக்குத்தான் அதிகமாகப் பைத்தியம் பிடிக்கிறது. அவர்கள் உடல் வாகோ மன வாகோ என்னவோ, பைத்தியம் தாவிப் பிடிப்பதற்கு ஏதுவாய் இருக்கிறது. அம்மாவின் பைத்தியம் அவளது கர்ப்பப்பையை எடுத்ததும் அடங்கிவிட்டது. ஆனால் அதன்பிறகு ஒரிஜினல் டாக்குமெண்டின் நூறாவது நகல் போலாகிவிட்டாள்.

ஆண்களுக்குத்தான் கர்ப்பப்பை இல்லையே? அவர்களுக்கு ஏன் பைத்தியம் பிடிக்கிறது? நான் முன்பு குறிப்பிட்டிருக்கும் தோழி கேட்பாள். ஆனால் அது எண்ணிக்கையில் குறைவுதானே? அவளுக்கு என்ன தெரியும்? ஒருநாள் அவளிடம் பைத்தியம் தொற்றுமா என்று கேட்டேன். தொற்றவே தொற்றாது எனச் சொல்லிவிட்டாள். ஆனால் எனக்கு நேரடியாகவே தெரியும். எனது கல்யாணமாகாத அத்தை ஒருத்திக்குப் பைத்தியம் பிடித்து இரவெல்லாம் கூ.. கூவென்று கத்திக்கொண்டே இருப்பாள். இரத்தச் சம்பந்தமில்லாத அவளது சினேகிதி மகள்தான் அவளைக் கடைசிவரை பார்த்துக்கொண்டாள். அவள் பேரில் ஊரின் முக்கியப் பகுதியில் ஒரு வீடு இருந்தது. அதற்காகத்தான் என்றால் குற்றமில்லை. ஆனால் அத்தை இறந்துபோன மறுநாள் அவளும் கூ.. கூவென்று கத்த ஆரம்பித்துவிட்டாள்.

நல்லவேளையாக மனைவி காப்பி கொண்டுவந்துவிட்டாள். டம்ளரை ஓரளவு சகிக்கத்தக்க ஒலி அளவுடன் வைத்தாள். அதன் பொருள், வந்திருக்கும் பெண்ணை அவள் அவ்வளவு அழகி என்றோ தனக்குப் போட்டியாளராக மாறக்கூடிய சாத்தியம் உள்ளவள் என்றோ கணிக்கவில்லை என்பதே.

வந்திருந்த பெண்ணிடம் ஏதோ குசலம் விசாரித்து எப்படியோ அனுப்பிவிட்டாள். ’’சாயங்காலம் வாங்களேன்.’’

அவள் போனபிறகும் நான் அப்படியே சோபாவில் அமர்ந்திருந்தேன். இதுதான் மிகவும் அபாயகரமான நேரம். மனைவியின் பைத்தியம் வெடிக்கும் நேரம். அவள் கிட்டே வந்து, ‘’என்ன.. ராத்திரி மாத்திரை போட்டீங்களா இல்லையா?’’ என்றாள்.

“என்ன மாத்திரை?” என்றேன்.

அவள் “சரிதான்” என்றாள்.

நான் சோர்வுடன், “டயர்டா இருக்கு. போய் படுத்துக்கிறேன்” என்றேன்.

அவள் “ஆயிடுமே” என்றாள்.

அவள் இப்படி வார்த்தைக்கு வார்த்தை என்னை வீழ்த்த முயன்றது எனக்குச் சோர்வை அளித்தது. அம்மாவும் இப்படித்தான். ஆனால் அம்மாவுக்குத்தான் இறுதியில் பைத்தியம் பிடித்தது. இங்கோ நான்.

நான் அந்தப் பெண் குறித்து யோசித்தேன். என் ஈ மெயிலைத் திறந்து பரிசோதித்தேன். ஆமாம், ஏதோவொரு பத்திரிகைக்காக இண்டர்வியூ கேட்டிருந்தாள். பெயர் வசீகரமாக இருந்தது. ஆள் அந்தளவுக்கு இல்லை. எனக்குச் சிரிப்பு வந்தது. வசீகரமாக இருந்தாலும் நான் என்ன செய்துவிடப் போகிறேன்?

என் நினைவுகள் அம்மாவின் பக்கம் மீண்டும் திரும்பின. அம்மா என் கையை இறுகப் பிடித்து இழுத்துக்கொண்டு டவுனில் ஒரு சந்துக்குள் போய்க்கொண்டிருக்கிறாள். அப்போது தண்ணீர்க் கஷ்டகாலம். வழியெங்கும் குடங்கள் அடிபம்புகளின் முன்பு பிரஜைகள் போல் வரிசையாகக் காத்திருந்தன. அந்த அடிபம்புதான் ராஜா. முன்னால் கம்பி போட்ட, ரேழி உள்ள வீட்டின் முன்பு நின்று, அம்மா வாசல் கொண்டியைத் தடதடவென்று ஆட்டினாள். கிருஷ்ணர் புல்லாங்குழல் வாசிக்கும் திரைச்சீலையை விலக்கிக்கொண்டு ஒரு சிறுமியின் முகம் எட்டிப் பார்த்தது. சட்டென்று மறைந்தது. உள்ளே கிசுகிசுக்கும் குரல்கள். கொஞ்ச நேரம் மௌனம். அம்மா கொண்டியை மீண்டும் லொடலொடவென்று தட்டினாள், பக்கத்து வீடுகளிலிருந்து எட்டிப் பார்த்தார்கள். எங்கோ அருகே சிலோன் ரேடியோ ஒன்று, “பொங்கும் பூம்புனல்” என்று மகிழ்ந்துகொண்டிருந்தது. நான் என் உள்ளங்கையில் அம்மாவின் கை வியர்வையை உணர்ந்தேன். மெல்ல விடுவித்துக்கொள்ள முயன்றேன். அவள் பிடி இன்னும் இறுகியது. உள்ளிருந்து இப்போது முண்டா பனியன் அணிந்த ஒருவர் எட்டிப் பார்த்தார். அவர் முகம் சிவந்திருந்தது. மீசை இல்லாது நன்கு மழுமழுவென்று சிரைக்கப்பட்ட முகம்.

“அம்மா, என்னம்மா நீங்க.. இப்படி வீட்டுக்கே வந்து தொந்திரவு பண்றீங்க? அன்னிக்கேதான் நான் ஆபீஸ்ல வச்சு விளக்கினேனேம்மா?”

அம்மா, “எனக்கு பேச்சு உங்க சம்சாரத்துக்கிட்டேதான். அவங்கதான் விளக்கணும்” என்றாள். ”நேத்து அவரு சட்டைப்பையில இந்த மல்லிகைப்பூ இருந்தது” என்று பர்சிலிருந்து எடுத்துக் காண்பித்தாள். ”இது உங்க சம்சாரத்தோடது இல்லன்னு அவங்க சொல்லட்டும்.”

“சிவராமா, அங்கே என்னடா பிரச்சினை?” மாடியிலிருந்து ஒரு குரல் கேட்க அம்மா பதில் சொல்வதற்குள் அவர் தடாலென்ற சத்தத்தோடு கதவைத் திறந்தார். ”உள்ளே வந்து பேசுங்கோ.. தலையெழுத்து… மானக்கேடு..”

அம்மா என்னையும் இழுத்துக்கொண்டு உள்ளே நுழைந்து அங்கிருந்த மர நாற்காலியில் அமர்ந்துகொண்டாள். “உங்க வீட்ல இருக்கிற பூஜை ரூம்ல சாமி முன்னாலே உங்க குழந்தை மேல ஒரு தடவை உங்க சம்சாரம் சத்தியம் பண்ணாப் போதும். நான் போயிடறேன். இனி வரமாட்டேன்.”

அவர் சட்டென்று உள்ளே போனார். ”கமலம், ஏய் கமலம்..”

கமலம் வெளியே வரவில்லை.

அதட்டல்களும் விசும்பல்களும்தான் வெளியே வந்தன. அவர் குரலின் ஸ்தாயி கூடிக்கொண்டே போவது கேட்டது. நான் அந்தக் கமலம் மாமியைப் பார்க்க மிகவும் விரும்பினேன். ஆனால் அவள் வரவேயில்லை.

நேரமாக ஆக அம்மாவின் முகத்தில் பிரகாசமும் அமைதியும் கூடிக்கொண்டே போனது.

“அப்போ?” எனத் தனக்குத்தானே உரக்கக் கேட்டுக்கொண்டாள். ”நான் பைத்தியமில்லைதானே?”

யாரிடம் அந்தக் கேள்வியைக் கேட்டாள்? தெரியவில்லை.

எல்லோரது வீடுகளிலும் விளக்கு போட ஆரம்பித்துவிட்டார்கள். அம்மா புன்னகையுடன் எழுந்தாள். வெளியே சந்திப் பிள்ளையார் முக்குக்கு நடந்துவந்து பஸ் பிடித்தோம். அம்மா இப்போது உற்சாகமாக இருந்தாள். என் கையை விட்டுவிட்டாள்.

”உனக்கு என்னதாவது வேணுமாடா?” என்றாள். நான் “வேணாம்” என்றேன். இருந்தும் ஜங்ஷனில் இறங்கி லக்ஷ்மி விலாஸ் லாலா கடையில் எனக்குப் பிடித்த தடியங்காய் பர்பி, அரசன் கலர் பூந்தி எல்லாம் வாங்கினாள்.

அன்றிரவு அப்பா வரவில்லை. மறுநாள் காலையிலும் வரவில்லை. சாயங்காலம் வந்தார். சட்டையெல்லாம் அழுக்காகி, தலை வாராமல் குளிக்காமல், சிவந்த கண்களுடன் வந்தார்.

“செத்துப் போயிட்டாடீ!” என்று கதறினார். ”கெரசின் ஊத்திக் கொளுத்திக்கிட்டா! கொன்னுட்டடீ அவளை.. பாவீ!”

அம்மா அசரவில்லை. ”முதல்ல குளிங்க. சாவு வீட்டுக்குப் போனா குளிக்காம வரக்கூடாது!” என்றாள்.

அப்பா பேச்சின்றி அவளையே பார்த்தார்.

“காப்பி குடிக்கீகளா?” என்றாள் அவள்.

அப்பா அதன்பிறகு வெகுநாள் இருக்கவில்லை. பென்ஷன் பேப்பர்களுக்காக ஒரே ஒருமுறை அவர் அலுவலகத்துக்குப் போகவேண்டி இருந்தது. அதே அலுவலகத்தில்தான் கெரசின் ஊற்றி எரிந்துபோன கமலம் மாமியும் வேலை செய்துகொண்டிருந்தாள். எல்லோரும் அவளைப் பயத்துடன் பார்த்தார்கள்.

அம்மா அவர்களிடம் சொன்னாள். ”ஏன் பயப்படணும்? நான்தான் பைத்தியம் இல்லேன்னு ப்ரூவ் ஆயிட்டுதே?”

4 comments

manguni April 26, 2022 - 12:54 pm

வழக்கமான போகன் பாணி கதை. சட்டென்று உள்ளிலித்து கொண்டது.

PONNIAH April 26, 2022 - 2:21 pm

அரசன் கலர் பூந்தி அரசன்லேயே கிடைக்கமாட்டேங்குது. பைத்தியம் யார் என கேள்வி எழுப்பும் சிறுகதை.
அருமை சார்,

Anantharaja R May 1, 2022 - 7:54 pm

👌👌👌👍🙏.

Kasturi G May 1, 2022 - 8:11 pm

Nice story very well written. Greetings to Bhogan Shankar .
Thanks

Comments are closed.