வெற்றியின் விதிகள் – வில்லியம் ஃபாக்னர்

by கார்குழலி
0 comment

குன்றின் உச்சியில் இருந்தது அந்த மரத்தாலான வீடு. வீட்டில் இருந்த ஐவரும் ஜன்னலருகே நின்றிருந்தனர். குதிரையில் சவாரி செய்தபடி குன்றின்மேல் ஏறி வந்த புதியவர்களைக் கண்ணெடுக்காமல் பார்த்தனர். அவர்கள் ஒருவழியாகச் சேறும் சகதியுமாக இருந்த சரிவான பாதையில் ஏறி வாயில் கதவருகே வந்துசேர்ந்தனர். குதிரையை வழிநடத்தியவன்தான் முதலில் வந்தான். முகத்தை மறைக்கும் பெரிய அகன்ற தொப்பியும் இற்றுப்போன சாம்பல் நிற மேலங்கியும் அணிந்திருந்ததால் அவன் உடல் எந்த வடிவமுமின்றி இருப்பதைப் போலத் தோற்றமளித்தது. இடது கையை அங்கிக்கு வெளியே நீட்டி கடிவாளத்தைப் பிடித்திருந்தான்.

வெள்ளி முலாம் பூசப்பட்ட கடிவாளம். உயர்ரகச் செவளை நிறக் குதிரை, எலும்பும் தோலுமாக உடல் முழுவதும் சேறு அப்பி இருந்தது. சேணத்துக்குப் பதிலாகக் கருநீல நிற இராணுவ படுக்கை விரிப்பை மடித்து கயிற்றால் கட்டி இருந்தார்கள். இரண்டாவது குதிரை உடல் சிறுத்து தலை பெருத்து குட்டையாக இளம் பழுப்பும் சிவப்பும் கலந்த நிறத்தில் இருந்தது. அதன்மீதும் திட்டுத்திட்டாகச் சேறு தெரித்திருந்தது. கயிற்றாலும் கம்பியாலும் செய்யப்பட்ட கடிவாளத்தை அணிந்து இராணுவ சேணம் பூட்டி இருந்தது. அதன் மேலே குறுக்கிக்கொண்டு உட்கார்ந்திருந்த உருவம் ஒரு குழந்தையைவிடவும் சற்றே பெரிய அளவில் இருந்தது. குதிரையின் பக்கவாட்டில் தொங்கிய அங்கவடியை அதன் கால்கள் எட்டவில்லை. தூரத்தில் இருந்து பார்க்கையில் ஆடை அணியாதது போல இருந்தது அல்லது இதற்கு முன்னர் மனிதர்கள் பார்த்திராத ஆடையை அணிந்திருந்ததோ என்னவோ!

வீட்டுக்குள் இருந்த மூன்று ஆண்களில் ஒருவன் ஜன்னலை விட்டு எங்கோ வேகமாகப் போனான். தலையைத் திருப்பிப் பார்க்காமலே அவன் அறையைத் தாண்டிச் செல்வதையும் நீளக்குழல் துப்பாக்கியை எடுத்து வருவதையும் அவர்களால் கேட்க முடிந்தது. 

“வேண்டாம், அதைப் பயன்படுத்தக்கூடாது,” அங்கிருந்த ஆண்களில் வயதில் மூத்தவர் சொன்னார். 

“அந்த மேலங்கியை நீங்கள் கவனிக்கவில்லையா?” அங்கிருந்த இளையவர்களில் ஒருவன் கேட்டான். “அது கலகக்காரர்கள் அணியும் சீருடை.”

“நீ சொல்வதை ஒத்துக்கொள்ள மாட்டேன். அவர்கள் சரணடைந்து விட்டார்கள். நாங்கள் தோற்கடிக்கப்பட்டோம் என்று சொல்லிவிட்டார்கள்,” என்றார் மூத்தவர்.

குதிரைகள் வாயில் கதவருகே வந்து நின்றதை ஜன்னலின் வழியே பார்த்தனர். வீட்டின் வேலி, பள்ளத்தாக்கின் சரிவான பாறையாலானது. அதில் ஹிக்கரி மரத்தாலான கதவு பொருத்தப்பட்டு இருந்தது. அதைத் தாண்டி தொலைவில் தெரிந்த நீண்டு அகன்ற மலைத்தொடர்கள் கீழ்வானத்தோடு கலந்து மறைந்துபோயின.

இரண்டாவது குதிரையின் மேலே உட்கார்ந்திருந்த உருவம் கீழே இறங்கியது. உயர்ரகக் குதிரையின் இலகானை பிடித்திருந்தவனிடம் தன்னுடைய குதிரையின் இலகானையும் கொடுத்தது. பிறகு கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்து பாதையின் மேலேறி வந்தது. சிறிது நேரத்தில் ஜன்னலில் இருந்து பார்க்க முடியாத முன்வாயிலின் வளைவில் திரும்பி மறைந்து போனது. அது கதவைத் தட்டும் ஓசை கேட்டது. அவர்கள் ஒருவரும் நகராமல் அங்கேயே நின்றார்கள். மீண்டும் கதவைத் தட்டும் ஓசை கேட்டது. 

சிறிது நேரம் கழித்து மூத்தவர் தலையைத் திருப்பாமல், “யாரென்று போய்ப் பார்,” என்றார்.

அங்கே இருந்த பெண்களில் மூத்தவர் ஜன்னலை விட்டு நகர்ந்தார். தரை வெறுமையாக இருந்ததால் நடந்து போகும் ஓசை கேட்கவில்லை. கதவைத் திறந்ததும் ஏப்ரல் மாதப் பின்மதியத்தின் குளிர்ந்த ஈரமான ஒளி அவரின் சிறிய உருவத்தின்மீதும் சுருக்கம் நிறைந்த உணர்வுகளை வெளிப்படுத்தாத முகத்தின்மீதும் வடிவமற்ற சாம்பல் நிற ஆடையின்மீதும் விழுந்தது.

வாயில் கதவுக்கு வெளியே நின்ற உயிரினம் குரங்கைவிடப் பெரிதாக இருந்தது. அது அணிந்திருந்த ஃபெடரல் படையின் சீருடையான கருநீல மேலங்கி பூதாகரமாக இருந்தது. தலைக்கு மேலே கூடாரம் போலக் கூம்பாக கட்டியிருந்த மேலங்கி தோள்களின்மீது வழிந்தது. இராணுவப் பொருட்களை ஏற்றிச் செல்லும் வண்டியை மூடும் கித்தான் துணியில் இருந்து வெட்டி எடுத்த துண்டு. மேல் பகுதியில் இருந்த ஓட்டையின் வழியே கண் வெள்ளை முழியைத் தவிர வேறு எதுவும் தெரியவில்லை, அதுவும் ஒரே நொடிதான். பார்க்க பேயைப் போல இருந்தது. வெற்றுக் காலுடன் சாயம் மங்கிய ஆடையணிந்து நின்ற பெண்மணியையும் அவளுக்குப் பின்னால் வீட்டின் முன்னறை வெறுமையாக இருந்ததையும் உற்றுக் கவனித்தான் அந்தக் கறுப்பினத்தவன்.

“எஜமானர் மேஜர் சோஷே வேடல் தன்னுடைய வணக்கத்தைச் சொல்லி அனுப்பினார். அவருக்கும் அவருடைய உதவியாளனுக்கும் இரண்டு குதிரைகளுக்கும் இன்று இரவு தங்க இடம் வேண்டும் என்ற விண்ணப்பத்தைத் தெரிவித்தார்.” பெருமை பீற்றும் கிளியின் குரலில் பேசிய அவனை உற்றுப் பார்த்த அந்தப் பெண்மணியின் முகம் உணர்வற்ற முகமூடியாக இருந்தது. “நாங்கள் அங்கே போய் அந்த யாங்க்கி படைகளோடு சண்டையிட்டோம்,” என்றான் கறுப்பினத்தவன். “இப்போதைக்கு சண்டையை நிறுத்திவிட்டு வீடு திரும்புகிறோம்.” 

அவள் ஓர் உருவபொம்மை அல்லது ஓவியம் போலவும் அதற்குப் பின்னால் இருந்து அவள் குரல் மட்டும் கேட்பது போலவும் தொனித்தது. “அவரைக் கேட்க வேண்டும்.”

“பணம் கொடுத்துவிடுவோம்,” என்றான் கறுப்பினத்தவன். 

“பணமா?” என அவனை உற்றுப் பார்த்தாள். “இது ஒன்றும் தங்கும் விடுதியல்ல.” என்றாள்.

கைகளை அசைத்தும் நீட்டியும் விலாவாரியாகப் பேசினான் கறுப்பினத்தவன். “அதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. இதைவிடவும் மோசமான இடங்களில் தங்கி இருக்கிறோம். மார்ஷ் சாஷே வெடில் வந்திருக்கிறார் என்று மட்டும் சொல்லுங்கள்.” 

அவள் அவனுக்குப் பின்னால் பார்ப்பதைக் கவனித்தான். நைந்து போன சாம்பல் நிற அங்கியை அணித்திருந்தவன் இப்போது வேலிக் கதவில் இருந்து பாதி தூரம் வரையிலும் உள்ளே வந்திருந்தான், படியில் ஏறிக்கொண்டிருந்தான். கான்ஃபெடெரேட்டுகளின் அலுவலர் இலச்சினை பொறித்த தொப்பியை இடது கையால் கழற்றினான். கறுத்த முகமும் கரிய விழிகளும் தலைமுடியும் கொண்டவன். முகம் இறுகிப்போய் திமிர்பிடித்தவனைப் போலத் தோற்றமளித்தான். உயரமில்லை என்றாலும் கறுப்பினத்தவனை விடவும் ஐந்தாறு அங்குலம் அதிகம். அவனுடைய முக்காடு நைந்துபோய் தோள் பகுதியில் நிறம் மங்கியிருந்தது. கீழாடை நைந்து நூல்பிரிந்து சேரும் சகதியுமாக இருந்தது. ஆடையை மீண்டும் மீண்டும் ஒட்டுப்போட்டு மீண்டும் மீண்டும் துவைத்ததால் நூலெல்லாம் பிரிந்திருந்தது.

“வணக்கம் அம்மையீர். இன்று இரவு தங்க இடம் வேண்டும். எனக்கும் உதவியாளனுக்கும் எங்கள் குதிரைகளுக்கும் இடமிருக்குமா?”

அந்தப் பெண்மணி கண்கொட்டாமல் ஏதோ ஆவியைப் பார்ப்பது போன்ற ஆர்வத்தோடு அவனைப் பார்த்தாள்.

“கேட்டுத்தான் சொல்லமுடியும்,” என்றாள்.

“அதற்கான பணத்தை கொடுத்துவிடுகிறேன். இது எப்படிப்பட்ட காலமென்பது தெரியும்,” என்றான். 

“அவரைக் கேட்க வேண்டும்,” என்றபடி உள்ளே திரும்ப எத்தனித்தவள் அப்படியே நின்றாள். அவளுக்குப் பின்னால் அறையினுள் நுழைந்தார் அந்த மூத்த ஆண்மகன்.

பெரிய உருவம். ஜீன்ஸ் துணியாலான ஆடையை அணிந்திருந்தார். தலைமுடி நரைத்து கண்கள் வெளுத்திருந்தன. 

“என் பெயர் சாஸியர் வெடெல்,” என்றான் சாம்பல் நிற உடை அணிந்தவன். “வர்ஜினியாவில் இருந்து என்னுடைய மாகாணமான மிஸ்ஸிஸிப்பிக்குப் போகிறேன். இப்போது நான் இருப்பது டென்னெஸ்ஸிதானே?” எனக் கேட்டான். 

“இது டென்னெஸ்ஸிதான், ” என்றார் வீட்டுக்காரர். “உள்ளே வாருங்கள்.”

குதிரைகளை இலாயத்துக்கு இட்டுச் செல்லுமாறு கறுப்பினத்தவனிடம் சொன்னான் வெடெல். கறுப்பினத்தவன் வாயிலை நோக்கி நடந்தான். அவன் அணிந்திருந்த முக்காட்டினால் வடிவமே இல்லாதவனைப் போலத் தோற்றமளித்தான். வெற்றுக் காலோடு நின்ற பெண்மணியையும் வெறுமையான அறைகள் கொண்ட வீட்டையும் பார்த்த மாத்திரத்தில் ஆணவம் அவன் தலைக்கேறி இருந்தது. இலகான்களை இழுத்து குதிரைகளைப் பார்த்து தேவையில்லாமல் கத்தினான். அவையோ இதற்கெல்லாம் ஏற்கெனவே பழக்கப்பட்டவை போல அவனைச் சட்டைசெய்யவே இல்லை. சொல்லப்போனால் அவனுடைய குரலை அவனே சட்டைசெய்யவில்லை. குரலை உயர்த்திப் பேசியது குதிரைகளை இட்டுச்செல்வதோடு தொடர்புடைய செயலாக இருந்தது. மூச்சுவிடுவது போல இயல்பான செயலாகவும் அதைக் குதிரைகளும் கறுப்பினத்தவனும் ஒப்புக்கொண்டதால் முற்றிலும் மறந்துவிட்டதைப் போலவும் இருந்தது. 

II

புதிய மனிதர்களின் வருகையால் மகளைச் சமையலறைக்குள் துரத்தியிருந்தார் தந்தை. ஆனால் சுவர் வழியாகப் பக்கத்து அறையில் கூடியிருந்தவர்களின் குரல் கேட்டது. அவளுக்கு இருபது வயதிருக்கும். பளபளப்பான தலைமுடி, வழவழப்பான கைகள், பெரிய உருவம். காலணி இல்லை, மாவு மூட்டை துணியில் தைக்கப்பட்ட ஆடையை அணிந்திருந்தாள். சுவரோடு ஒட்டிக்கொண்டு அசையாமல் நின்று தலையைச் சாய்த்து கண்களை அகல விரித்து அடுத்த அறையில் அப்பாவும் அந்தப் புதிய மனிதனும் பேசுவதை உற்றுக்கேட்டாள்.

அந்த வீடு மரத்தாலானது. வீட்டின் சரிவான மரச்சுவரை ஒட்டி கட்டப்பட்டிருந்தது சமையலறை. அடுப்பின் சூட்டினால் சுவர்களுக்கு இடையே இருந்த களிமண் காய்ந்து ஆங்காங்கே பொடிந்து உதிர்ந்து போயிருந்தது. சத்தம் இல்லாமல் முன்னால் சாய்ந்து நின்று  சுவரில் இருந்த வெடிப்பின் வழியே கண்ணை அழுத்தினாள். அறையில் இருந்த மேசையின் மேல் களிமண் குடுவையும் யூ.எஸ். ஆர்மி என்று எழுதப்பட்ட தோட்டாக்கள் கொண்ட பெட்டியும் மட்டுமே இருந்தன. அவளுடைய சகோதரர்கள் இருவரும் நாற்காலியில் அமர்ந்திருந்தனர். இருவரில் இளையவன் கதவைப் பார்த்து உட்கார்ந்திருந்தான். அவளால் பார்க்க முடியவில்லை என்றாலும் அந்தப் புதியவனும் அறையில் இருப்பதை அறிவாள். அவளுடைய மூத்த சகோதரன் பெட்டிக்குள் இருந்த தோட்டாக்களை ஒவ்வொன்றாக வெளியே எடுத்து இராணுவப் படையின் அணிவகுப்பை போல அடுக்கி வைத்தான். அவன் முதுகுக்குப் பின்னால் இருந்த கதவருகே புதியவன் நிற்பதை அறிவாள். ஓசை எழுப்பாமல் மூச்சுவிட்டாள் . 

“வேட்ச் அப்போதே அவனைச் சுட்டிருப்பான்,” மூச்சுவிட்டபடியே முன்னே சாய்ந்தாள். “இனி  சுட்டுவிடுவான் என்று நினைக்கிறேன்.”

அவளுடைய தாய் சமையலறையை நோக்கி நடந்து வரும் ஓசை கேட்டது. சுவரைக் கடக்கும் போது தாயின் உருவம் அதிலிருந்த பிளவைச் சற்று நேரம் மறைத்தது. தாய் சமையல் அறைக்குள் நுழைந்த பிறகும் அவள் கொஞ்சமும் அசையவோ நகரவோ இல்லை. சீராக மூச்சு விட்டபடி முன்னால் சாய்ந்து பிளவின் வழியே பார்க்கத் தொடங்கினாள். அம்மா சட்டி பானையை உருட்டும் சத்தம் கேட்டது. அப்போதுதான் அந்தப் புதியவனைப் பார்த்தாள், தான் மூச்சுவிடக்கூட மறந்துவிட்டதை உணரவில்லை. நைந்துபோன மேலங்கியை அணிந்திருந்தான், இடது கையில் தொப்பியைப் பிடித்திருந்தான். 

வேட்ச் அவனை நிமிர்ந்து பார்க்கவில்லை.

“என் பெயர் சாஸியர் வெடெல்,” என்றான் புதியவன்.

“சோஷே வெடெல்.” பொடிந்து போன களிமண் நிறைந்த சுவரின் வழியே பெயரை முனகினாள் அந்தப் பெண். இப்போது அவனை முழுவதுமாக பார்க்க முடிந்தது. அவன் அணிந்திருந்த மேலங்கி கறை படிந்து பட்டியிடப்பட்டு நூல் பிரிந்து தொங்கியது. தலையை மேல் நோக்கிப் பிடித்திருந்தான். முகம் சோர்ந்துபோய் இறுக்கமாக இருந்தாலும் அகந்தையும் இறுமாப்பும் கொண்டவனைப் போலத் தோற்றமளித்தான். வேறொரு உலகத்தைச் சேர்ந்தவனைப் போலவும் முற்றிலும் மாறுபட்ட காற்றை சுவாசிப்பவனைப் போலவும் அவனுடைய நாளங்களில் ஓடுவது புதுவகையான இரத்தம் போலவும் நடந்துகொண்டான்.

“சோஷே வெடெல் ,” அவன் பெயரை மீண்டும் உச்சரித்தாள். 

“கொஞ்சம் விஸ்கி அருந்துங்கள்,” நாற்காலியைவிட்டு எழுந்திராமல் சொன்னான் வேட்ச்.

மூச்சுவிட மறந்ததைப் போலவே அவர்கள் பேசுவதையும் அவள் கேட்கவில்லை, அதைக் கேட்பது முக்கியமல்ல என உணர்ந்தாள். புதியவனின் வருகையால் உருவான சூழலில் ஆவலுக்கு இடமில்லை என்பது போலத் தோன்றியது. அந்தக் கணத்தில் அந்தச் சூழலில் தன்னையும் பொருத்திக்கொண்டாள். புதியவன் மேசையருகே நின்றபடி வேட்ச்சை பார்ப்பதைக் கவனித்தாள். கையில் தோட்டாவை வைத்திருந்த வேட்ச் திரும்பி புதியவனைப் பார்த்தான். ஓசையின்றி மூச்சுவிட்டபடி எல்லாவற்றையும் பிளவின் வழியே பார்த்தாள். பிளவின் வழியே கேட்ட குரல்களில் எரிச்சலோ உட்பொருளோ தொனிக்கவில்லை. இருண்மையும் வன்முறையும் கனன்றுகொண்டே இருக்கும் ஆண்களின் குழந்தைத்தனமான மமதையும்கூட இல்லை. “இவை என்னவென்று உனக்குத் தெரியும்தானே?”

“ஏன் தெரியாமல்? நாங்களும் இவற்றைப் பயன்படுத்தினோம். நாங்களே செய்வதற்கான நேரமோ வெடிமருந்தோ இல்லை. அதனால் அவ்வப்போது உங்களுடையதைப் பயன்படுத்த வேண்டியதாயிற்று. குறிப்பாக இறுதிக் கட்டத்தில் அதைத்தான் செய்தோம்.”

“இவற்றில் ஒன்று உன் முகத்தில் வெடித்தால் இன்னும் நன்றாகத் தெரிந்துகொள்வாயோ என்னவோ.”

“வேட்ச்.” ஒரு வழியாக வாயைத் திறந்து பேசிய தந்தையைப் பார்த்தாள். அவளுடைய தம்பி திறந்த வாயோடு நாற்காலியில் இருந்து மேலே எழுந்தான். அவனுக்குப் பதினேழு வயது இருக்கும். புதியவன் வேட்ச்சைப் பார்த்தபடியே நின்றான். தொப்பியை நைந்துபோன மேலங்கியின் மேலே அழுத்திப் பிடித்திருந்தான். முகத்தில் கர்வம் அசதி இவற்றோடு கேள்வியும் தொனித்தது.

“உன் இன்னொரு கையையும் காட்டலாம். கைத்துப்பாக்கியைப் பற்றிக்கொள்ளாமல் இருப்பது குறித்து பயப்படாதே,” என்றான் வேட்ச். 

“அதைக் காட்டுவதில் எனக்கொன்றும் பயமில்லை.”

“அப்படியென்றால் கொஞ்சம் விஸ்கி அருந்து,” அலட்சியமும் அவமதிப்பும் தொனிக்க குடுவையைத் தள்ளினான் வேட்ச். 

“நன்றி, ஆனால் வயிறு சரியில்லை. மூன்று ஆண்டுகளாக நடந்த போரின் போது என் வயிற்றிடம் மன்னிப்பு கேட்டேன். இப்போது போர் முடிந்து அமைதி நிலவும் போதோ வயிற்றுக்காக மன்னிப்பு கேட்க வேண்டியிருக்கிறது. என் உதவியாளனுக்கு மட்டும் ஒரு கோப்பை தரமுடியுமா? இங்கேயே நான்கு வருடங்களைக் கழித்த பின்னும் இந்தக் குளிரைப் பொறுத்துக்கொள்ள அவன் பழகவில்லை.”

“சோஷே வெடெல்,” பொடிந்து கிடந்த தூசியின் வழியே மிதந்து வந்த குரல்களைக் கேட்டு பெருமூச்சு விட்டாள். யாரும் குரல்களை உயர்த்தவில்லை என்றாலும் அவற்றுக்கிடையே தொனித்த வேறுபாடுகளை ஒருபோதும் களைய முடியாது, அவை எதிர்நோக்கி நிற்கும் அழிவையும் தடுக்க முடியாது என்பது புரிந்தது. ஒன்று பாதிப்புக்கு உள்ளான குருடனுடையது. மற்றது தண்டனையை நிறைவேற்றும் குருடனுடையது: “நீ திரும்புகையில் அது நன்றாகவே தெரியுமோ என்னவோ?”

“ஏய், வேட்ச்.”

“நிறுத்துங்கள் அப்பா. அவனும் ஒரு வருட காலம் இராணுவத்தில் இருந்திருக்கிறான். ஒரு முறையாவது ஓடியிருப்பான். ஒருவேளை வடக்கு வர்ஜினியாவின் படையை எதிர்த்திருந்தால் இன்னும் கூடுதலான தடவைகள் ஓடியிருப்பான்.”

“சோஷே வெடெல்,” இன்னும் குனிந்து நின்றபடியே பெருமூச்சுவிட்டாள். இப்போது வெடெல் அவளை நோக்கி நடந்து வருவதைப் போல இருந்தது. இடது கையில் கனமான கோப்பையைப் பிடித்திருந்தான், அதே கையின் கக்கத்தில் தொப்பியை இடுக்கி இருந்தான். 

“அந்தப் பக்கமில்லை,” என்று வேட்ச் சொன்னதும் புதியவன் திரும்பினான். “எங்கே போக வேண்டும்?” என்றான் வேட்ச்.

“இதை என் உதவியாளனிடம் கொடுக்க வேண்டும். இலாயத்துக்குப் போக வேண்டும். இதுதானே அங்கே செல்லும் கதவு?” இப்போது பக்கவாட்டில் தெரிந்த புதியவனின் முகத்தில் அசதி, அகந்தை இவற்றோடு கேள்வி கேட்பது போன்ற பாவனையும் தோன்றியது. இருந்த இடத்தைவிட்டு நகராமல் தலையைப் பின்னோக்கி ஆட்டினான் வேட்ச். “அந்தக் கதவருகே போகாதே.” 

புதியவன் நகரவில்லை, தலை மட்டும் அசைந்தது, பார்க்கும் திசை மாறியது.

“இப்போது அப்பாவைப் பார்க்கிறான்,” என்று பெருமூச்செறிந்தாள். “அப்பா ஏதேனும் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறான். வேட்ச்சிடம் அவனுக்குப் பயமில்லை. எனக்குத் தெரியும்.”

 “அந்தக் கதவருகே போகாதே. நாசமாகப் போன கறுப்பினத்தவனே,” என்றான் வேட்ச்.

“ஆக, என்னுடைய முகம்தான் எல்லாமே, சீருடை பொருட்டல்ல,” என்றான் புதியவன். 

“எங்களை விடுவிப்பதற்காக நான்கு வருடம் போராடினீர்கள் என நம்புகிறேன்.”

மீண்டும் தந்தையின் குரல் கேட்டது. “முன் வாசல் வழியாக வீட்டைச் சுற்றிக்கொண்டு போ.”

“சோஷே வெடெல்,” வாய்விட்டுச் சொன்னாள். அம்மா அடுப்படியில் வேலைசெய்யும் ஓசை கேட்டது. “சோஷே வெடெல்,” சத்தமாகச் சொல்லவில்லை. ஓசையின்றி அவசரமின்றி ஆழமாக மூச்சுவிட்டாள். “இசையைப் போல இருக்கிறது. பாடுவதைப் போலத் தொனிக்கிறது.”

III

களஞ்சியத்திற்குப் போகும் வழியில் உட்கார்ந்திருந்தான் கறுப்பினத்தவன். இடிந்து விழுந்த கொட்டில்களில் இரண்டைத் தவிர மற்றவை எல்லாம் காலியாக இருந்தன. அருகே சாக்கு மூட்டை திறந்து கிடந்தது. நடனமாடும் போது அணியும் காலணிகளுக்கு மெருகேற்றிக்கொண்டு இருந்தான். தகர டப்பியின் வாய்ப் பகுதியில் கொஞ்சமே கொஞ்சம் மெருகேற்றும் மெழுகு ஒட்டியிருந்தது. மெருகேற்றப்பட்ட காலணிகளில் ஒன்றின் மேல்பகுதி விரிசல் விட்டிருந்தது. அதன் அடிப்பகுதி சமீபத்தில்தான் ஆணியடித்து சீர்செய்யபட்டிருந்தது, பழக்கமற்றவனின் நேர்த்தியற்ற கைவேலை.

“நல்லவேளையாக காலணிகளின் அடிப்பகுதியை யாரும் பார்க்க முடியாது. இவர்களெல்லாம் மலையில் வசிக்கும் கீழ்த்தரமானவர்கள் என்பதற்கு ஆண்டவருக்கு நன்றி சொல். நீ இவற்றை அணிந்திருப்பதை யாங்கிக்கள் பார்ப்பதைக்கூட நான் விரும்பவில்லை.” கண்களை இடுக்கிக்கொண்டு காலணியைப் பார்த்தான், அதன்மேல் ஊதி தேய்த்தான். 

“இந்தா,” என்றபடி கோப்பையை நீட்டினான் வெடெல். அதனுள் ஏதோ நிறமற்ற திரவம் இருந்தது.

கறுப்பினத்தவன் காலணிக்கு மெருகேற்றுவதை நிறுத்தினான். 

“என்ன?” என்றபடி கோப்பையைப் பார்த்தான். “இது என்ன?” 

“இதைக் குடி,” என்றான் வெடெல். 

“தண்ணீர்தானே? எனக்கெதற்கு தண்ணீரைக் கொண்டுவந்தாய்?”

“வாங்கிக் குடி. அது தண்ணீரில்லை.”

யோசனையோடு மெதுவாகக் கோப்பையை வாங்கினான். அதனுள் கசப்பான நைட்ரோ கிளிசரின் மருந்து இருப்பது போன்ற பாவனையில் பிடித்தான், அதை உற்றுப்பார்த்து கண்ணைச் சிமிட்டினான். பிறகு மெல்ல முகர்ந்தான். மீண்டும் கண்ணைச் சிமிட்டியபடி  “இது எங்கே கிடைத்தது?” என்றான். வெடெல் பதில் சொல்லவில்லை. மெருகேற்றி முடித்திருந்த காலணியைக் கையில் எடுத்துப் பார்த்துக்கொண்டு இருந்தான். “மணம் நன்றாகத்தான் இருக்கிறது,” என்றான். “ஆனால் இதுவரை இப்படி எதையும் பார்த்ததில்லை. ஒருவேளை நமக்கு விஷம் வைக்கிறார்களோ?”

கோப்பையைச் சாய்த்து மெல்ல சப்பினான். மீண்டும் கண்ணைச் சிமிட்டினான். 

“நான் ஒரு வாய்கூட குடிக்கவில்லை,” என்றபடி காலணியைக் கீழே வைத்தான் வெடெல். 

“குடிக்காமல் விட்டதே நல்லது. இத்தனை வருடமாக உன்னைப் பத்திரமாக வீடு சேர்க்க வேண்டும் என்ற முனைப்போடு இருக்கிறேன். நீயானால் இந்த மனிதர்களின் களஞ்சியத்தில் வீடற்ற நாடோடி போல, தப்பித்து ஓடும் கறுப்பின அடிமை போல, உறங்குகிறாய்.”

கண்களை மூடி தலையைச் சாய்த்து ஒரே மடக்கில் விழுங்கி காலிக் கோப்பையை கீழே வைத்தான். “ஊஹ்ஹ்ஹ.” தலையை வேகமாக ஆட்டினான். “அதன் வாசமும் செய்யும் வேலையும் சரியாகத்தான் இருக்கிறது. ஆனால் பார்க்கச் சரியாக இருந்தது என்று சொல்ல மாட்டேன். நீ எப்போதும் போலவே அதைத் தொடாமல் இரு. குடிக்கச் சொல்லி வற்புறுத்தினால் அவர்களை என்னிடம் அனுப்பி வை. உனக்காக ஏற்கெனவே செய்தவற்றோடு இதையும் செய்வதில் எனக்குச் சிரமமொன்றும் இல்லை. எல்லாம் உன் வீட்டினருக்காக.”

மூட்டைக்குள் எட்டி பார்த்து “கைத்துப்பாக்கி வேண்டும்” என்றான் வெடெல்.

மெருகேற்றுவதை நிறுத்தினான் கறுப்பினத்தவன்.

“எதற்காக?” மர வீட்டுக்குப் போகும் சாய்வான மண் பாதையை எட்டிப் பார்த்தான். “இவர்கள் யாங்கிகளா?” என்று கிசுகிசுத்தான். 

“இல்லை,” என்றபடி சாக்கு மூட்டைக்குள் இருந்த பொருட்களை இடது கையால் கலைத்தான் வெடெல். கறுப்பினத்தவன் அவன் சொன்னதைக் கேட்டதாகத் தெரியவில்லை. 

“இது டென்னெஸ்ஸியா? மெம்ஃபிஸ் இருக்கும் டென்னெஸியில் நாம் இருப்பதாகவல்லவா சொன்னாய்? ஆனால் மெம்ஃபிஸ் இப்படி மேடும் இறக்கமுமான நிலப்பரப்பைக் கொண்டது என்பதை சொல்லவே இல்லை. உன் அப்பாவோடு நான் மெம்ஃபிஸ் போன சமயத்தில் இப்படி ஒருவரையும் பார்த்ததே இல்லை. ஆனால் இப்போது மெம்ஃபிஸ் மக்கள் யாங்கிகள் என்கிறாயே?”

“கைத்துப்பாக்கி எங்கே?” என்றான் வெடெல். 

“அப்படிச் செய்யாதே என்று அப்போதே சொன்னேனே? சீசருக்கு அயர்ச்சியாக இருக்குமென்று நீ நடந்து வந்ததை இந்த வீட்டைச் சேர்ந்தவர்கள் பார்த்துக்கொண்டு இருந்தார்கள். அது போதாது என்று என்னை உட்காரச் செய்து நீ நடந்து வந்தாய். எனக்கு நாற்பது உனக்கு இருபத்தெட்டு என்றாலும் உன்னை விடவும் நான் திடமானவன் என்பது உனக்கும் தெரியும். ஊருக்குப் போனதும் உன் அம்மாவிடம் இதைச் சொல்லப் போகிறேன். எல்லோரிடமும் சொல்லப் போகிறேன்.”

கைத்துப்பாக்கியைத் தேடி எடுத்துக்கொண்டு எழுந்தான் வெடெல். 

அதை ஒற்றைக் கையில் பிடித்தபடி விசையை இழுத்துப் பார்த்தான். யூனியன் படையின்  நீல நிறச் சீருடை அணிந்த கறுப்பினத்தவன் வாலில்லா குரங்கைப் போலக் குத்த வைத்து உட்கார்ந்து அவனையே பார்த்தான்.

“அதைக் கீழே வை. போர் முடிந்துவிட்டது. ஃபெர்கின்னியிலேயே சொன்னார்களே. இனி கைத்துப்பாக்கி தேவையில்லை. கீழே வை. நான் சொல்வது கேட்கிறதா?”

“குளிக்கப் போகிறேன். என்னுடைய சட்டை…” என்றான் வெடெல்.

“எங்கே குளிக்கப் போகிறாய்? எதில்? இவர்கள் குளியல் தொட்டியைப் பார்த்திருக்கவே வாய்ப்பில்லை.”

“கிணற்றடியில் குளிக்கிறேன். சட்டை தயாராக இருக்கிறதா?”

“துப்பாக்கியைக் கீழே வையுங்கள், எஜமானர் சோஷே. உன்னைப் பற்றி அம்மாவிடம் நிச்சயம் சொல்லப் போகிறேன். எல்லோரிடமும் சொல்லப் போகிறேன். எஜமானர் இப்போது இங்கே இருந்தால் நல்லது எனத் தோன்றுகிறது.”

“சமையலறைக்குப் போய் கிணற்றடியில் குளிக்க வேண்டும் என்பதைச் சொல். அந்த ஜன்னலை மூடச் சொல்.” கைத்துப்பாக்கியைச் சாம்பல் நிற மேலங்கிக்குள் ஒளித்தான். உயர்ரகக் குதிரை நின்ற கொட்டிலுக்கு சென்றான். 

குதிரை அவனை மூக்கால் முட்டியது, மென்மையாகப் பார்த்தது. அதை இடது கையினால் தட்டிக் கொடுத்தான், அதிக ஓசை எழுப்பாமல் கனைத்தது. அதன் சுவாசம் இனிமையும் வெப்பமும் கலந்ததாக இருந்தது.

IV

பின்பக்கம் வழியாகச் சமையலறைக்குள் நுழைந்தான் கறுப்பினத்தவன். முக்காடைக் கழற்றிவிட்டு நீல நிறத் தொப்பியை அணிந்திருந்தான். அளவு பெரியதாக இருந்ததால் அவன் தலைக்குப் பொருந்தவே இல்லை. அதன் முன்புற மடிப்பு வெளியே நீண்டு தனக்கெனத் தனி உயிர் இருப்பது போல அப்படியும் இப்படியும் அசைந்தது. அவன் உருவம் கண்ணுக்குப் புலப்படவே இல்லை, முகம் மாத்திரம் சாம்பல் படர்ந்த மண்டை ஓடு போல இருந்தது. வயதில் மூத்த பெண்மணி அடுப்படியில் எதையோ வறுக்கும் ஓசை கேட்டது. கறுப்பினத்தவன் உள்ளே நுழைந்ததை அவள் கவனிக்கவில்லை. இளையவள் அறையின் நடுவில் சும்மா நின்றாள். சமையலறைக்குள் நுழைந்தவனைக் கண்சிமிட்டாமல் குறுகுறுப்போடு பார்த்தாள். பயமே இல்லாமல் அறையின் குறுக்கே நடந்து போய் மரத்துண்டு ஒன்றை இழுத்துப்போட்டுக்கொண்டு உட்கார்ந்தான்.

“வருடம் முழுவதும் இந்தப் பகுதியில் வானிலை இப்படித்தான் இருக்குமா? அப்படியென்றால் யாங்கிகளே இந்த நிலத்தை வைத்துக்கொள்வதில் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை,” என்றபடியே மேலங்கியைக் கழற்றினான். அவன் கால்களும் பாதங்களும் அளவில் பெரிதாக வடிவமே இன்றி இருப்பதைக் கவனித்தாள். சேறு படிந்த ரோமம் அடர்ந்த ஏதோ ஒன்றால் போர்த்தப்பட்டிருந்தன. பார்ப்பதற்கு இரண்டு நாய்கள் தரையில் படுத்திருப்பதைப் போல இருந்தது. அருகே சென்றதும் மேலங்கியில் இருந்து வெட்டி எடுத்த துண்டுகளால் காலைச் சுற்றிக் கட்டியிருப்பது தெரிந்தது. “போதும் ஐயா. என்னை என்னுடைய ஊருக்குப் போகவிடுங்கள். மற்றதை எல்லாம் நீங்களே வைத்துக்கொள்ளுங்கள்,” என்றான்.

“உங்கள் ஊர் எது?” எனக் கேட்டாள். 

“மிஸ்ஸிஸிப்பி. கவுண்டிமேய்ஸன் என்று கேள்விப்பட்டு இருக்கிறாயா?”

“கவுண்டிமேய்ஸனா?”

“அதேதான். அவனுடைய தாத்தாதான் அந்தப் பெயரை வைத்தவர். ஒரு மாவட்டத்தை விடவும் பெரியது. எளிதில் கடந்துபோக முடியாத பரப்பளவு கொண்டது. காலையில் கோவேறு கழுதையின்மீது ஏறி பயணம் செய்தாலும் மாலைக்குள் கடந்துவிட முடியாது, அத்தனை பெரியது.” கைகளால் மெல்ல தொடையைத் தேய்த்தபடி முகத்தைத் திருப்பி அடுப்பைப் பார்த்து ஊதினான். ஏற்கெனவே சாம்பல் நிறத்தில் இருந்த முகம் இப்போது கறுப்பு நிறமானது. ஓயாத பயன்பாட்டினால் வாயைச் சுற்றிலும் இருந்த தசை தளர்ந்துபோன இரப்பர் பேண்டைப் போலத் தொங்கியது. சாப்பிட உதவும் தசை அல்ல, பேசப் பயன்படுபவை. “ஒரு வழியாக வீடு திரும்பிவிடுவோம் என்று நினைக்கிறேன். இனி எங்கள் ஊர் பன்றி இறைச்சியின் மணத்தை சுவாசிக்கலாம்.”

“கவுண்டிமேய்ஸன்” ஆச்சரியத்தோடு பெயரை உச்சரித்தாள் இளைய பெண். கறுப்பினத்தவனைக் கண்ணைச் சிமிட்டாமல் தீவிரமாகப் பார்த்தாள். பிறகு தலையைத் திருப்பி சுவரைப் பார்த்தவளின் முகம் சலனமற்று இருந்தது. அதில் தோன்றிய உணர்ச்சிகளை இனம்காண முடியவில்லை. அவசரம் ஏதுமின்றி நிதானமாகவும் தீர்க்கமாகவும் யோசனை செய்தாள்.

“அதேதான்,” என்றான். “கவுண்டிமேய்ஸனைப் பற்றியும் எஜமானர் பிரான்சிஸ் வெடெலைப் பற்றியும் யாங்கிகளுக்குகூடத் தெரியும். பிரதமர் மக்களை நடத்தும்விதம் பிடிக்கவில்லை என்பதை அவரிடமே நேரில் சொல்வதற்காக வாஷிங்டனுக்குச் செல்லும் வழியில் இந்த ஊரைக் கடந்து சென்றார். அப்போது அவரை நீங்கள் பார்த்திருக்கலாம். குதிரை வண்டியிலேயே வாஷிங்டன் வரையில் சென்றார். வண்டி ஓட்டவும் கால்களுக்கு வெப்பம் தர செங்கற்களைச் சூடேற்றவும் உதவிக்காக இரண்டு கறுப்பினத்தவர்கள் மட்டும்தான் உடன் வந்தார்கள். புதிய குதிரைகளை வண்டியில் பூட்டிக்கொண்டு கிளம்பிவிட்டார் அந்த மனிதர். முழுதாகத் தோலுரித்த இரண்டு கொழுத்த கரடிகளின் இறைச்சியையும் புகையில் வாட்டிய எட்டு மான்களின் கறியையும் பிரதமருக்குப் பரிசாக எடுத்துச் சென்றார். உங்கள் வீடு இருக்கும் பாதை வழியாகத்தான் போயிருப்பார். உன் அப்பாவோ அவருடைய அப்பாவோ எஜமானரைப் பார்த்திருக்கலாம்.”

தங்குதடையின்றி சரளமாகப் பேசிக்கொண்டே இருந்தான். கேட்பதற்குத் தாலாட்டைப் போல இருந்தது. அறையின் வெப்பத்தில் அவன் முகம் பளபளத்தது. தாய் அடுப்படியில் வேலையாக இருந்தார், மகளோ வெறுங்கால்களை மரத்துண்டின் மீது அழுத்தியபடி ஆடாமல் அசையாமல் உட்கார்ந்திருந்தாள். ஏதோ ஓர் உயிரினத்தின் தோலாலான மேலங்கியால் உடலைப் போர்த்தி இருந்தாள். கண்சிமிட்டாமல் வாயைப் பிளந்தபடி கறுப்பினத்தவனைப் பார்த்தாள்.

அவனோ கண்களை மூடியபடி முடிவேயில்லாமல் பெருமை பீற்றினான். இன்னும் சொந்த ஊரில் இருப்பது போலவும் போர் என்ற ஒன்று நடக்கவே நடக்காதது போலவும் விடுதலை, மாற்றம் போன்றவை குறித்த வதந்திகள் எதுவும் உலவாதது போலவும் நடந்துகொண்டான். குதிரையைப் பராமரிக்கும் எளிய பணியாளனான அவன், மாலை நேரத்தில் மற்ற பணியாளர்களுடன் கதைபேசி நேரத்தைக் கழிக்கிறோம் என நினைத்துக்கொண்டானோ? மூத்த பெண்மணி உணவோடு வெளியே செல்லும் ஓசை கேட்டு கண்ணைத் திறந்தவன் கதவைப் பார்த்துவிட்டு இளம்பெண்ணையும் பார்த்தான். சுவரையும் தாய் மூடிவிட்டுச் சென்ற கதவையும் பார்த்துக்கொண்டு இருந்தவளிடம் “அவர்களோடு சேர்ந்து உணவருந்த உனக்கு அனுமதி இல்லையா?” என்றான்.

அவளோ கண்கொட்டாமல் அவனைப் பார்த்து, “கவுண்டிமேய்ஸனா? அவனும் கறுப்பினத்தவன்தான் என்று வேட்ச் சொல்கிறானே,” என்றாள். 

“யார்? அவனா? கறுப்பினத்தவனா? எஜமானர் சோஷே வெடெல்லா? இவர்களில் யார் வேட்ச்?” என்றான். “நீங்கள் யாரும் இதுவரையில் எங்கேயும் போனதில்லை, எதையும் பார்த்ததில்லை என்பதால் ஏற்பட்ட குழப்பம் இது. இந்தப் பொட்டல் மலையில் உட்கார்ந்திருக்கும் உங்களால் புகையைக்கூடப் பார்க்க முடியாது. அவனா கறுப்பினத்தவன்? நீ சொன்னதை மாத்திரம் அவனுடைய அம்மா கேட்டிருக்க வேண்டும்,” என்றபடி சமையலறையை நோட்டமிட்டான். சுருக்கம் விழுந்த கண்களின் வெள்ளை முழி இப்படியும் அப்படியும் நிற்காமல் சுழன்றது. இளம்பெண் அவனையே பார்த்தாள்.

“அங்கே இருக்கும் பெண்கள் தினமும் காலணி அணிவார்களா?” என்றாள். 

கறுப்பினத்தவன் சமையலறையைக் கண்களால் துழாவினான். “டென்னெஸ்ஸியின் சுனை நீரை எங்கே வைத்திருப்பீர்கள்? இங்கே எங்காவது இருக்குமா?”

“சுனை நீரா?”

கண்ணை மெல்லச் சிமிட்டினான். “விளக்கு குடிக்குமே? அந்த கெரோசின்தான்.”

“கெரோசினா?”

“நீங்கள் எல்லோரும் குடிக்கிறீர்களே, அந்த வெளிர்நிற விளக்கு எண்ணெய். அதில் கொஞ்சம் இங்கே எங்காவது கிடைக்குமா?”

“ஓ, சோளத்தில் வடித்த மதுபானமா?” என்றபடி அறையின் மூலையில் நிலத்தை மூடியிருந்த பலகையை மேலே தூக்கினாள். உள்ளே இருந்த மண் குடுவையை எடுத்து அதில் இருந்ததைக் கனமான கோப்பையில் சரித்து அவனிடம் நீட்டினாள். அதைக் கண்ணை மூடிக்கொண்டு ஒரே மடக்கில் விழுங்கினான்.

“வ்வ்ஹ்ஹ்ஹ,” என ஓசை எழுப்பியபடி புறங்கையால் வாயைத் துடைத்தான். 

“என்னை ஏதோ கேட்டாயே.. என்னது?” என்றான். 

“கவுண்டிமேய்ஸனில் இருக்கும் பெண்கள் எல்லோரும் காலணி அணிவார்களா?”

“சீமாட்டிகள் எல்லோரும் அணிவார்கள். யாரிடமாவது இல்லையென்றால் உடனே நூறு கறுப்பினத்தவர்களை அனுப்பி வாங்கிவரச் சொல்லுவார் எஜமானர் சோஷே. இங்கே எஜமானர் சோஷேவைக் கறுப்பினத்தவன் என்று சொன்னது யார்?” 

இளம்பெண் அவனையே பார்த்தாள். “அவருக்குத் திருமணமாகிவிட்டதா?”

“திருமணம் செய்துகொள்ள அவருக்கு எங்கே நேரம்? இத்தனை வருடமாக யாங்கிகளோடு போரிட்டோம். பல வருடமாகச் சொந்த ஊருக்குப் போகவே இல்லை. இப்போது திருமண வயதில் பெண்கள் யாரும் இருக்கிறார்களா என்பதே தெரியவில்லை” என்றபடியே அவளைப் பார்த்தான். வெள்ளை முழி இரத்தச் சிவப்பாக மாறி இருந்தது. தோல் பளபளத்தது. குளிர் காய்ந்ததில் அவனுடைய உருவம் கொஞ்சம் பெரிதாகி இருந்தது. “அவருக்குத் திருமணமாகிவிட்டதா இல்லையா என்பது பற்றி உனக்கென்ன கவலை?”

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். அவள் மூச்சுவிடும் ஓசையை அவனால் கேட்க முடிந்தது. அவள் அவனைப் பார்க்கவில்லை, கண்ணைச் சிமிட்டவோ தலையைத் திருப்பவோ இல்லை. “காலணிகூட அணியாத பெண்ணை அவன் திரும்பிப் பார்ப்பானா எனத் தெரியவில்லை” என்றாள். 

சுவரருகே சென்று பிளவின் வழியே எட்டிப் பார்த்தாள். கறுப்பினத்தவன் அவளையே பார்த்தான். உள்ளே வந்த அவள் தாய் இவர்கள் இருக்கும் பக்கம் திரும்பிக்கூடப் பார்க்காமல் இன்னொரு உணவுப் பாத்திரத்தை எடுத்துச் சென்றாள். 

V 

உணவருந்தும் மேசையில் நான்கு ஆண்கள் அமர்ந்திருந்தனர். சரியாகச் சொல்வதென்றால் மூன்று ஆண்களும் ஒரு சிறுவனும். குருணையாக உடைக்கப்பட்ட சோளம் கனமான தட்டில் பரிமாறப்பட்டது. கத்திகளும் முள்கரண்டிகளும் இரும்பில் செய்தவை. அந்தக் குடுவை இன்னமும் மேசையின்மீது இருந்தது. வெடெல் இப்போது மேலங்கியை அணிந்திருக்கவில்லை. முகத்தை மழித்து ஈரமான தலைமுடியைப் பின்னோக்கிச் சீவி இருந்தான். விளக்கொளியில் சட்டையின் முன்புறச் சுருக்கங்கள் அலைபோல மேலெழுந்தன. சட்டையின் வலது கை வெறுமையாக இருந்தது. மார்புக்குக் குறுக்கே மடித்து தங்க ஊசியால் குத்தி இருந்தான். மேசைக்குக் கீழே ஒரு ஜோடி உடைந்து சீராக்கப்பட்ட நடன காலணிகள், இரண்டு ஜோடி கடினமான கணுக்காலை மறைக்கும் காலணிகள், இவற்றோடு சிறுவனின் வளைந்த வெற்றுக் கால்கள் ஆகியவை தெரிந்தன.

“நீ கறுப்பினத்தவன் என்கிறான் வேட்ச்,” என்றார் தந்தை.

நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்தான் வெடெல். “இப்போது புரிகிறது,” என்றான். “பிறவியிலேயே கோபக்காரன் என்று நினைத்தேன், எப்போதும் வெற்றியாளனாக இருக்க வேண்டும் என்பதும்தான் போல.”

“நீ கறுப்பினத்தவனா?” என்றார் தந்தை. 

“இல்லை,” என்றபடியே ஆச்சரியத்தோடு சிறுவனைப் பார்த்த வெடெல்லின் முகம் போரினால் மூப்படைந்து இருந்தது. பின்கழுத்தில் படர்ந்திருந்த நீளமான முடியைத் துப்பாக்கி முனைக் கத்தியால் வெட்டி இருந்தான். ஆடாமல் அசையாமல் அவனையே பார்த்தான் சிறுவன். ‘என்னைப் பிசாசு என்று நினைக்கிறானோ? ஒருவேளை நான் பிசாசுதானோ என்னவோ,’ என நினைத்துக்கொண்டான் வெடெல்.

“இல்லை, நான் கறுப்பினத்தவன் இல்லை,” என்றான்.

“நீ யார்?” என்றார் தந்தை.

நாற்காலியில் பக்கவாட்டில் திரும்பி உட்கார்ந்தான் வெடெல். கையை மேசையின்மீது வைத்திருந்தான். “விருந்தினர்களை நீ யார் என்று கேட்பதுதான் டென்னெஸ்ஸியில் வழக்கமா?” குடுவையில் இருப்பதைக் கோப்பையில் ஊற்றினான் வேட்ச். தலையைக் கீழே குனிந்திருந்தான், கைகள் பெரிதாக கடினமாக இருந்தன, முகம் இறுக்கமாக இருந்தது. 

வெடெல் அவனைப் பார்த்தான். “உன் உணர்வைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஒரு காலத்தில் நானும் அப்படித்தான் உணர்ந்தேன். ஆனால் நான்கு வருடங்களாக ஒரே உணர்வை தக்கவைப்பது கடினம், எதையும் உணர்வதுகூட கடினம்.”

திடீரென கடுமையாக ஏதோ சொன்னான் வேட்ச். கோப்பையை மேசையின்மீது ஓங்கி அடித்தான். உள்ளே இருந்த பானம் மேசையில் தெறித்தது. பார்ப்பதற்குத் தண்ணீரைப் போல இருந்தாலும் கடுமையான மணத்தோடு இருந்தது. எளிதில் ஆவியாகும் தன்மை கொண்டதாக இருந்தது. மேசையின்மீது தெறித்த துளிகள் வெடெல்லின் நைந்து போனாலும் பளிச்சென்று இருந்த ஆடையை ஊடுருவி மார்பில் சில்லிட்டது.

“வேட்ச்!” என்றார் தந்தை.

வெடெல் நகரவில்லை. அவன் முகத்தில் அலட்சியமும் கேள்வியும் துயரமும் கலந்த உணர்வு வெளிப்பட்டது. “அவன் வேண்டுமென்றே செய்யவில்லை,” என்றான்.

“நான் செய்யும்போது அது விபத்தைப் போல இருக்காது,” என்றான் வேட்ச்.

வெடெல் வேட்ச்சைப் பார்த்தான். “நான் ஏற்கெனவே சொன்ன நினைவு. என் பெயர் சாஸியர் வெடெல். மிஸ்ஸிஸிப்பிக்காரன். கவுண்டிமேய்சன் என்ற ஊரில் வசிக்கிறேன். அதை உருவாக்கியதும் பெயர் வைத்ததும் என்னுடைய தந்தை. சாக்ட்டா இனத்தின் தலைவர், பெயர் பிரான்சிஸ் வெடெல். அவரைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். சாக்ட்டா இனப்பெண்ணுக்கும் மாவீரன் நெப்போலியனின் தளபதியும் பெருமைக்குரிய உயர்குடியைச் சேர்ந்தவனுமான பிரெஞ்சு நாட்டிலிருந்து நியூ ஆர்லியன்ஸில் குடியேறிய பிரான்சுவா விடலுக்கும் பிறந்தவர்.

“ஒருமுறை என் தந்தை அரசாங்கம் மக்களை நடத்தும் விதம் பற்றி பிரதமர் ஜாக்சனிடம் புகார் சொல்வதற்காகக் குதிரை வண்டியை ஓட்டியபடி வாஷிங்டன் வரையில் சென்றார். அதற்கு முன்னால் ஒரு பெரிய வண்டியில் புத்தம்புதிய வலுவான குதிரைகளைப் பூட்டி அதில் கால்நடைத் தீவனமும் பரிசுப்பொருட்களும் நிறைத்து அனுப்பினார். எந்தக் கலப்புமற்ற முழுமையான சாக்ட்டா இனத்தைச் சேர்ந்த அப்பாவின் உறவினர் அந்தக் குழுவுக்குத் தலைமை வகித்தார். பழங்காலத்தில் ‘மனிதன்’ என்பதுதான் எங்கள் இனத் தலைவரின் பட்டப்பெயராக விளங்கியது. ஆனால் வெள்ளைக்காரர்களைப் போலவே ஐரோப்பியர்களின் பழக்கவழக்கங்களை நாங்கள் பின்பற்றத் தொடங்கிய பிறகு அந்தப் பட்டத்தை வைத்துக்கொள்ளும் தகுதியை இழந்தோம். இனக்கலப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த எங்கள் இனத்தின் இன்னொரு குழுவுக்கு அது சொந்தமானது. ஆனால் நிலத்தையும் அடிமைகளையும் வைத்துக்கொள்ளும் உரிமையைத் தக்கவைத்துக்கொண்டோம். இப்போது ‘மனிதன்’ கறுப்பினத்தவர்களின் குடியிருப்பைவிடவும் கொஞ்சம் பெரிய அளவிலான மர வீடொன்றில் வசிக்கிறார், சிறிது மேல்நிலையில் இருக்கும் வேலைக்காரரைப் போல இருக்கிறார். என்னுடைய தந்தை வாஷிங்டனில் என் தாயைச் சந்தித்து மணம் செய்துகொண்டார். பிறகு மெக்சிகன் போரில் உயிரிழந்தார்.

“என் தாய் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால், 63-இல் நிமோனியா தொற்றால் மறைந்தார். ஃபெடெரல் இராணுவம் ஊருக்குள் நுழைவதற்கு முன்னர் வெள்ளிப் பொருட்களை புதைத்து வைக்கும் பணியை மேற்பார்வையிட்டார், கூடவே ஒவ்வாத உணவு எதையோ சாப்பிட்டார். ஆனால் அம்மா இறந்துபோனதை நம்ப மறுக்கிறான் என் உதவியாளன். அம்மா ஒவ்வொரு ஞாயிறு மதியமும் புதன் மாலையும் விரும்பிச் சாப்பிடும் மார்டினிக் காபியும் பிஸ்கோத்தும் வடக்கு மாகாணக்காரர்களால் தடைசெய்யப்பட்டதை இந்த நாடு அனுமதித்திருக்கக் கூடாது என்கிறான். அவருக்காக ஊரே கொந்தளித்து துப்பாக்கியை ஏந்தி இருக்க வேண்டும் என நினைக்கிறான். ஆனால் அவன் ஒரு கறுப்பின அடிமை, விடுதலை என்னும் பாரத்தைச் சுமப்பவன். தினமும் நான் செய்யும் தவறுகளின் பட்டியலை ஊருக்குப் போனதும் அம்மாவிடம் சொல்லப் போகிறேன் என்கிறான். நான் பிரான்ஸில் பள்ளிக்குச் சென்றேன், ஆனால் அதிகம் சிரமப்பட்டு படிக்கவில்லை. இரண்டு வாரங்களுக்கு முன்னால் வரை லாங்ஸ்ட்ரீட் என்பவரின் மிஸ்ஸிஸிப்பி படைத்தளபதியாகப் பணியாற்றினேன். அவரைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்.”

“ஆக, நீங்கள் ஓர் இராணுவ இடைநிலை அதிகாரி,” என்றான் வேட்ச்.

“ஆம். என் மேல் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு அதுதானே?”

“இதற்கு முன்னர் கிளர்ச்சியாளர்களின் இராணுவ அதிகாரியைப் பார்த்திருக்கிறேன். எங்கே என்பதைச் சொல்லட்டுமா?”

“சொல்,” என்றான் வெடெல்.

“ஒரு மரத்தின் கீழே படுத்திருந்தான். நாங்களும் ஓய்வெடுப்பதற்காக அங்கே நிற்க வேண்டி இருந்தது. “நண்பனே, தண்ணீர் இருக்கிறதா?” என்றான். “இருக்கிறது,” என்றேன். “நிறைய இருக்கிறது.” என்னால் எழுந்து நிற்க முடியவில்லை என்பதால் தவழ்ந்து சென்று அவனைத் தூக்கி மரத்தில் சாய்த்து உட்கார வைத்தேன். நேரே பார்க்கும்படி முகத்தைச் சரிசெய்தேன்.”

“உன் துப்பாக்கியில் கத்தி இல்லையா?” என்றான் வெடெல். “ஓ, மறந்துவிட்டது. உன்னால் எழுந்து நிற்க முடியவில்லை என்பதை மறந்துவிட்டேன்.”

“தவழ்ந்தபடியே பின்னால் சென்றேன். சுமார் முந்நூறு அடி சென்று அங்கே…”

“பின்னாலா?”

“மிகவும் நெருக்கத்தில் இருந்து சுடுவது சிரமமல்லவா? அதனால் பின்னால் சென்றேன். அந்த நாசமாய்ப்போன கைத்துப்பாக்கி…”

“நாசமாய்ப் போன துப்பாக்கியா?” என்றான் வெடெல். நாற்காலியில் பக்கவாட்டில் உட்கார்ந்து மேசையின் மேல் கையை ஊன்றியிருந்தான், முகத்தில் கேள்விக்குறியும் வெறுப்பும் தோன்றியது. 

“முதல்முறை குறி தவறிவிட்டது. அவன் முகத்தை நேரே திருப்பி வைத்து கண்கள் என்னைப் பார்க்கும்படி செய்திருந்தும் குறி தவறி தொண்டையில் சுட்டேன். அந்த நாசமாய்ப் போன கைத்துப்பாக்கியால் மீண்டும் சுட வேண்டியதாகியது.”

“வேட்ச்,” என்றார் அப்பா.

கைகளை மேசை மேலே வைத்திருந்தான் வேட்ச். தலையும் முகமும் தந்தையின் சாடையை ஒத்திருந்தது. ஆனாலும் அவரைப் போல நிதானமாக யோசிக்கும் தன்மை கொண்டவனாகத் தெரியவில்லை. முகம் உக்கிரமாக இருந்தது, என்ன செய்வானென்று உறுதியாகச் சொல்ல முடியவில்லை. 

“எல்லாவற்றுக்கும் காரணம் அந்த நாசமாய்ப் போன கைத்துப்பாக்கிதான். மூன்று முறை சுட வேண்டியதாயிற்று. அதனால் அவன் முகத்தில் ஒரே வரிசையில் மூன்று கண்கள் தோன்றின. மூன்றும் திறந்திருப்பது போலவும் என்னைப் பார்பபது போலவும் இருந்தது. அவன் நன்றாகப் பார்ப்பதற்காக இன்னொரு கண்ணைத் தந்தேன். அந்த நாசமாய்ப் போன துப்பாக்கியால் இரண்டு முறை கூடுதலாகச் சுடவேண்டியதாயிற்று.”

“ஏய், வேட்ச்,” என்றபடி எழுந்தார் தந்தை. உடல் இறுக்கமாக இருந்தது. மேசையின்மீது கையை அணைகொடுத்து நின்றார். 

“புதியவனே, வேட்ச் சொல்வதைக் கண்டுகொள்ள வேண்டாம். போர் முடிந்துவிட்டது.”

“நான் கண்டுகொள்ளவில்லை,” என்றபடியே நெஞ்சைத் தொட்டான் வெடெல். ஆடையின் மடிப்புக்குள் கையை நுழைத்தபடியே விழிப்புணர்வோடும் கேள்வியோடும் வெறுப்போடும் வேட்ச்சை உன்னிப்பாக கவனித்தான். “இத்தனை நாட்களில் இவனைப் போன்ற எத்தனையோ பேரைச் சந்தித்திருக்கிறேன். மேலும் ஒருவரைச் சந்திப்பதில் கவலையேதும் இல்லை,” என்றான் வெடெல்.

“கொஞ்சம் விஸ்கி அருந்துங்கள்,” என்றான் வேட்ச் . 

“குறிப்பாக எதையாவது சொல்ல நினைக்கிறாயா?”

“நாசமாய்ப்போன துப்பாக்கி,” என்றான் வேட்ச். “கொஞ்சம் விஸ்கி அருந்துங்கள்.”

கையை மீண்டும் மேசைமீது வைத்தான் வெடெல். குடுவையில் இருந்து கோப்பைக்குள் திரவத்தை ஊற்றாமல் வெறுமனே உயர்த்திப் பிடித்திருந்தான் வேட்ச். அவன் பார்வை வெடெலின் முதுகுக்குப் பின்னால்  சென்றது. வெடெல் திரும்பினான். இளம்பெண்ணும் அவள் தாயும் அறையின் வாசலில் நின்றார்கள். தரையிடம் பேசுவது போலக் கீழே பார்த்தபடி தாய் சொன்னாள். “நீங்கள் சொன்னது போலவே அவளை வரவேண்டாம் என்று சொன்னேன். ஆனால் ஓர் ஆணைப் போலவே வலிமையும் பிடிவாதமும் கொண்டவளாக இருக்கிறாள்.”

“உள்ளே போ,” என்றார் தந்தை. 

“என்னையா சொல்கிறீர்கள்?” என்று மீண்டும் தரையிடம் பேசினாள் தாய்.

பெயரை உச்சரித்தார் தந்தை. 

வெடெலுக்கு அவர் சொன்னது கேட்கவில்லை. கேட்கத் தவறியதைக்கூட அவன் அறியவில்லை. “உள்ளே போ.”

இளம்பெண் நகர்ந்தாள். அவர்கள் யாரையும் பார்க்காமல் கனத்த தோலால் ஆன வெடெலின் மேலங்கி கிடந்த நாற்காலியின் அருகே வந்தாள். அதை விரித்து அதன் உட்பகுதி கத்தியால் கிழிப்பட்டு இருந்ததை எல்லோரும் பார்க்கச் செய்தாள். வேட்ச் அவள் தோளைப் பற்றினான். அவளோ வெடெலைப் பார்த்து, “கறுப்பினத்தவன் காலில் சுற்றிக்கொள்வதற்கு இதை வெட்டிக் கொடுத்திருக்கிறீர்கள்,” என்றாள்.

இந்த முறை தந்தை வேட்ச்சின் தோளைப் பற்றினார். உடல் அசையாமல் முகத்தை மட்டும் திருப்பினான் வெடெல். சிறுவன் நாற்காலியின் கைப்பிடியில் கையை ஊன்றி மேலே எழுந்து விளக்கை நோக்கி முன்னால் சாய்ந்தான். வேட்ச்சும் அவன் தந்தையும் வெளியிட்ட மூச்சுக்காற்றைத் தவிர வேறெந்த ஓசையும் கேட்கவில்லை.

“இன்னமும் உன்னைவிடவும் நான்தான் வலிமையானவன்,” என்றார் தந்தை. “நல்ல மனிதனும்கூட.”

“உங்களால் எப்பொழுதும் அப்படியே இருக்க முடியாது,” என்றான் வேட்ச்.

தந்தை மகளைப் பார்த்தார். “உள்ளே போ.” அவள் முன்னறையை நோக்கி ஓசையின்றி நடந்தாள். தந்தை அவளைப் பெயர் சொல்லி அழைத்தார். வெடெல் இப்போதும் அதைக் கேட்கவில்லை. கேட்கத் தவறியதைக்கூட அவன் அறியவில்லை. அவள் கதவைக் கடந்தாள். தந்தை வெடெல்லைப் பார்த்தார். அவனுடைய போக்கில் எந்த மாற்றமும் இல்லை. கை மட்டும் மீண்டும் மார்புப் பகுதியில் மறைந்திருந்தது. இரு உணர்ச்சியற்ற முகங்களும் ஒன்றையொன்று பார்த்துக்கொண்டன. முதலாவது நோர்டிக் இனத்தின் தோற்ற இயல்புகளைக் கொண்ட முகம். இரண்டாவது, ஒரு பாதி கேல் இனம், மற்றொரு பாதி மொங்கோல் இனம் இரண்டின் தோற்ற இயல்புகளும் கலந்தது, மெலிந்த சோர்வுற்ற வெண்கலச் சிலை போல இருந்தது. அதில் இருந்த கண்களில் எதிர்காலத்தின் இலக்கு தெரியவில்லை என்றாலும் பார்வை இருந்தது. 

“குதிரைகளை எடுத்துக்கொண்டு புறப்படு,” என்றார் தந்தை.

VI

முன்னறை இருண்டு சில்லிட்டு இருந்தது. மலையகத்தின் ஏப்ரல் மாதத்துக் குளிர் நிலத்தின் வழியே அவளுடைய வெற்றுக்கால்களில் ஏறி ஒற்றை ஆடை அணிந்திருந்த உடலில்  படர்ந்தது. “மேலங்கியின் உள்வரித் துணியைக் கிழித்து கறுப்பினத்தவன் காலில் சுற்றிக்கொள்ள கொடுத்திருக்கிறான்,” என்றாள்.

“ஒரு கறுப்பினத்தவனுக்காக இதைச் செய்திருக்கிறன்.” அவளுக்குப் பின்னால் கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்த அந்த ஆண் உருவம் விளக்கொளியில் பெரிதாகத் தெரிந்தது. கதவு சாற்றபடும் ஓசை கேட்டது. “வேட்ச்சா அப்பாவா?” எனக் கேட்டாள். தோல் வார் ஒன்று அவள் முதுகைச் சுரீரென்று பதம் பார்த்தது. “வேட்ச்சாக இருக்குமோ என்று பயந்தேன்,” என்றாள். மீண்டும் அடி விழுந்தது.

“போய் தூங்கு,” என்றார் தந்தை.

“நீங்கள் என்னை அடிக்கலாம், அவனை அடிக்க முடியாது” என்றாள்.

மீண்டும் அடி விழுந்தது. முரட்டுத் துணியாலான ஆடையின் கீழே இருந்த சதையில் பட்டதும் தடிமனான தட்டையான சன்னமான ஓசை எழுந்தது.

VII

யாருமற்ற சமையலறையில்  கதவைப் பார்த்தபடியே அடுப்பருகே கிடந்த மரக்கட்டையின் மேல் கொஞ்ச நேரம் உட்கார்ந்து இருந்தான் கறுப்பினத்தவன். பிறகு ஒரு கையால் சுவரைப் பிடித்தபடி கவனமாக மேலே எழுந்தான். 

“ஸ்ஸ்ஸ்! இதைப் போன்ற ஒன்று நம்மூரிலும் இருந்தால் நன்றாக இருக்குமே.”

கதவைப் பார்த்து கண்ணைச் சிமிட்டியபடி உற்றுக் கேட்டான். பிறகு சுவரைப் பிடித்தபடி மெதுவாக நடந்தான். அவ்வப்போது கதவை உற்றுக் கவனித்தான். தடுமாறினாலும் எச்சரிக்கையோடு இருந்தான், எதையோ தந்திரமாகச் செய்வது போல இருந்தது. அறையின் மூலையில் தரையில் இருந்த பலகையை மேலே தூக்கினான். சுவரில் சாய்ந்து நின்றபடி கவனமாகக் குனிந்தான். குடுவையை வெளியே எடுக்கையில் தடுமாறி கீழே விழுந்தான், முகம் நிலத்தோடு உராய்ந்த போது வியப்பில் அவன் முகம் மாறியதைப் பார்க்க கோமாளித்தனமாக இருந்தது. பிறகு எழுந்து உட்கார்ந்து முட்டிக்கு இடையில் குடுவையைப் பத்திரமாக இடுக்கிக்கொண்டு குடித்தான். நீண்ட நேரம் குடித்தான்.

“ஸ்ஸ்ஸ்ஸ்… எங்கள் ஊரில் இதைப் பன்றிக்குத்தான் கொடுப்போம். இந்த மலையகத்தைச் சேர்ந்த குப்பைகள்…” என்றபடியே இன்னும் கொஞ்சம் குடித்தான். அவன் முகத்தில் கவலையும் பயமும் படர்ந்தது. குடுவையை வைத்துவிட்டு மேலே எழ முனைந்த போது கீழே விழுந்தான். இறுதியில் நேராக நிற்கமுடியாமல் ஆடினான், வாயில் எச்சில் ஒழுகியது. அவன் முகத்தில் கோபமும் பயமும் மண்டியது. மீண்டும் தரையில் பொத்தென நெடுஞ்சாண்கிடையாக விழுந்து குடுவையைக் கவிழ்த்தான்.

VIII

தந்தையும் மகனும் வெடெலும் மயங்கிக் கிடந்த கறுப்பினத்தவனின் அருகே நின்றிருந்தார்கள். சன்னமான குரலில் ஒருவரோடொருவர் பேசினார்கள். 

“எல்லோரும் சேர்ந்து தூக்க வேண்டும்,” என்றார் தந்தை.

எல்லோரும் சேர்ந்து தூக்கினார்கள். ஒற்றைக் கையால் அவன் தலையை அசைத்தான் வெடெல். “ஜுபல்!”

கறுப்பினத்தவன் ஒற்றைக் கையால் தட்டிவிட்டு. “அவர்களை விடு. அவர்களைப் போக விடு,” என்று முணுமுணுத்தான். 

“ஜுபல்!” மீண்டும் அழைத்தான் வெடெல்.

 கறுப்பினத்தவன் கையையும் காலையும் வேகமாகவும் வலிமையாகவும் உதைத்தான். “அவர்களை விட்டுத்தள்ளு. நான் ‘மனிதனிடம்’ சொல்லப் போகிறேன். எல்லாவற்றையும் சொல்லப் போகிறேன்.” கொஞ்சம் கொஞ்சமாக முணுமுணுப்பு அடங்கியது. “வயலில் வேலை செய்பவர்கள். வயலில் வேலைசெய்யும் கறுப்பினத்தவர்கள்.”

“எல்லோரும் சேர்ந்து தூக்க வேண்டும்,” என்றார் தந்தை.

“ஆமாம். இதற்காக வருத்தம் தெரிவிக்கிறேன். உங்களிடம் முன்னரே சொல்லியிருக்க வேண்டும். ஆனால் இன்னொரு குடுவை இருக்குமென்பதோ அதுவும் அவன் எளிதில் எடுக்கக்கூடிய இடத்தில் இருக்குமென்பதோ தெரியாமல் போனது.” கீழே குனிந்து கறுப்பினத்தவனின் தோளுக்குக் கீழே தன் ஒற்றைக் கையை நுழைத்தான். 

“நகர்ந்துகொள், நானும் ஹுலுமே இதைச் சமாளித்துவிடுவோம்.” அவரும் சிறுவனும் சேர்ந்து கறுப்பினத்தவனைத் தூக்கினார்கள். வெடெல் கதவைத் திறந்தான். 

இருள் சூழ்ந்த குளிருக்குள் நுழைந்தார்கள். கீழே களஞ்சியம் தெரிந்தது. சரிவான பாதையில் கறுப்பினத்தவனைத் தூக்கிக்கொண்டு நடந்தார்கள். “குதிரைகளை வெளியே கொண்டு வா ஹூல்,” என்றார் தந்தை.

“குதிரைகளா? அவனால் இப்போது பயணம்செய்ய முடியாது. குதிரையின் மேல் உட்கார முடியாது,” என்றான் வெடெல்.

இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். அந்தக் குளிரில், பனிபடர்ந்த அமைதியில் குரல்கள் வரும் திசையை மட்டுமே பார்க்க முடிந்தது. 

“நீ இப்போது கிளம்பப் போவதில்லையா?” கேட்டார் தந்தை.

“மன்னிக்கவும். இப்போது கிளம்பும் நிலையில் நானில்லை. விடியும் வரையில் அவன் தெளியும் வரையில் இங்கேதான் தங்கவேண்டும். அதற்குப் பிறகு கிளம்புகிறோம்.”

“அவனை இங்கே விட்டுவிட்டுப் போ. அவனுக்காக ஒரு குதிரையை விட்டுவிட்டு நீ கிளம்பு. அவனொரு கறுப்பினத்தவன்தானே?”

“மன்னிக்கவும். இந்த நான்கு வருட வாழ்க்கைக்குப் பிறகு என்னால் அதைச் செய்ய முடியாது.” அவன் குரலில் குழப்பமும் தீராத அயர்ச்சியும் இன்னதென்று உறுதியாகச் சொல்ல முடியாத ஏதோ ஒன்றும் தொனித்தது. “அவனோடு இத்தனை தூரம் வந்துவிட்டேன். அவனை வீடு சேர்ப்பதையும் செய்துவிடுகிறேன்.”

“உன்னை எச்சரித்துவிட்டேன்,” என்றார் தந்தை. 

“அதற்கு நன்றிக்கடன்பட்டிருக்கிறேன். விடிந்ததும் கிளம்பிவிடுவோம். அவனைப் பரணில் ஏற்றிப் படுக்க வைக்க ஹுல் உதவிசெய்தால் நல்லது.”

தந்தை பின்னால் நகர்ந்து, “அந்தக் கறுப்பினத்தவனைக் கீழே வை, ஹுல்” என்றார்.

“அவனை இங்கேயே விட்டால் குளிரில் விறைத்துப் போவான். அவனைப் பரணில் ஏற்றிப் படுக்க வைக்க வேண்டும்,” என்றான் வெடெல். கறுப்பினத்தவனைச் சுவரின்மீது சாய்த்து உட்கார வைத்தான். தளர்ந்து போயிருந்த உடலைத் தோளில் தூக்க முயன்றான். அதிக கனமில்லை என்றாலும் தந்தை மறுபடியும் பேசும் வரை ஏனென்ற காரணம் புரியவில்லை. “ஹுல், இங்கே வா.”

“நீ போ,” என்று அமைதியாகச் சொன்னான் வெடெல். “நானே ஏணியில் ஏற்றிக்கொள்கிறேன்.” சிறுவன் வேகவேகமாக மூச்சுவிட்டான், அந்த ஓசை இளமைத் துடிப்போடும் பரபரப்போடும் இருந்தது. என்ன ஏதென்ற ஆராய்ச்சியில் இறங்க விரும்பவில்லை வெடெல். சிறுவனின் குரலில் தொனித்த கொந்தளிப்பையும் கவனிக்கவில்லை.

“நான் உதவுகிறேன்,” என்று சிறுவன் சொன்னபோது வெடெல் மறுப்பு தெரிவிக்கவில்லை. கறுப்பினத்தவனின் கன்னத்தில் அறைந்து எழுப்பி, அவனுடைய கால்களை ஏணிப்படியில் எடுத்துவைத்தான். இருவரும் சேர்ந்து அவனை மேல்நோக்கி உந்தினார்கள். பாதி தூரம் ஏறியவன் கை காலை அசைத்து அவர்களை அடிக்க ஆரம்பித்தான். 

“அவர்களிடம் சொல்லப் போகிறேன். ‘மனிதனிடம்’ சொல்லப் போகிறேன். எஜமானி அம்மாளிடம் சொல்லப் போகிறேன். “வயலில் வேலை செய்பவர்கள். வயல்வெளியில் வேலைசெய்யும் கறுப்பினத்தவர்கள்.”

IX

பரணில் வைக்கோல் இல்லை. மேலங்கியையும் சேணத்தின் மேல் கிடந்த போர்வைகளையும் போர்த்திக்கொண்டு அருகருகே படுத்திருந்தார்கள் இருவரும். கறுப்பினத்தவன் குறட்டை விட்டுத் தூங்கினான். அவன் மூச்சு துர்நற்றத்தோடு இரைச்சலாக இருந்தது. கீழே இருந்த இலாயத்தில் உயர்ரகக் குதிரை அவ்வப்போது குளம்பை தரையில் ஓங்கி அடித்தது. வெடெல் மல்லாந்து படுத்திருந்தான். கையை மார்பின் குறுக்கே போட்டு வெட்டுண்ட கையின் எஞ்சிய பகுதியைப் பிடித்திருந்தான். கூரையில் இருந்த பிளவுகளின் வழியே கறுத்த, குளிர்ந்த, கனத்த வானம் தெரிந்தது. நாளை தொடங்கி அவர்கள் அந்த மலையகத்தை விட்டு முற்றிலும் அகலும் நாள் வரையில் பொழியவிருக்கும் அடர் மழையைச் சுட்டுவதாக இருந்தது. “இந்த மலையகத்தைவிட்டு நான் செல்லும் வரையில்,” என்று ஓசையெழுப்பாமல் வாய்விட்டுச் சொன்னான். இன்னமும் கூரையைப் பார்த்தபடி படுத்திருந்தான். பக்கத்தில் கறுப்பினத்தவன் குறட்டைவிடும் ஒலி கேட்டது. “எனக்குக் கவலையாக இருந்தது. எல்லாம் முடிந்துபோனது, அச்சப்படும் உரிமைப்பேறு அற்றுப்போனது என்று நினைத்தேன். இல்லையென்பது தெரிய வந்ததால் மகிழ்ச்சியாகவே இருக்கிறேன்.” அந்தக் குளிர்ந்த இருட்டில் விறைப்பாகப் படுத்தபடி வீட்டை நினைவுகூர்ந்தான்.

“கவுண்டிமேய்சன். நம் வாழ்க்கையை ஓசைகளில் அடக்கி முக்கியத்துவம் வாய்ந்ததாகச் செய்துவிடலாம். வெற்றி. தோல்வி. அமைதி. வீடு. அதனால்தான் ஒவ்வொரு ஓசைக்கும் ஒரு பொருளைக் கண்டுப்பிடிக்க வேண்டியிருக்கிறது. குறிப்பாக நீங்கள் வெற்றியை எட்டிப்பிடித்த துரதிர்ஷ்டசாலியாக இருந்தால் அதற்கேற்ற அளவு அதிகமாக கண்டுபிடிக்க வேண்டும். சாட்டையடி வாங்குவது நன்றாக இருக்கிறது; சாட்டையடி வாங்கிவிட்டு சிதைந்த கூரைக்குக் கீழே படுத்தபடி வீட்டை நினைப்பது இன்னும் நன்றாக இருக்கிறது.”

கறுப்பினத்தவன் குறட்டைவிட்டான். “அதற்கேற்ற அளவு அதிகமாக” என்ற சொற்கள் இருட்டில் உருக்கொள்வதைப் பார்த்தபடி படுத்திருந்தான் வெடெல். 

“மெம்ஃபிஸின் கயோஸோவில் வரவேற்புக் கூடத்தில் இருக்கும் மனிதன் உரக்கச் சிரித்தால் என்ன நடக்கும்? ஆனால் நான் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறேன்…” ஏணியின் மேலே யாரோ ஏறிவரும் ஓசை சன்னமாகக் கேட்டது. உன்னிப்பாகக் கேட்டபடி அசையாமல் படுத்திருந்தான். வெட்டுப்பட்ட வலது கையின் கீழே இருந்த கைத்துப்பாக்கியின் முனையை மற்றொரு கை பற்றியிருந்தது. சிறிய கதவின் வழியே உள்ளே ஊடுருவிய மங்கலான ஒளியை முழுவதுமாக அந்த உருவம் மறைக்கும் வரை நகராமல் படுத்திருந்தான். “அசையாமல் நில்,” என்றான்.

“நான்தான்,” என்றது சிறுவனின் குரல். மூச்சை அடக்கிக்கொண்டு வேகமாகப் பேசும் குரல். இப்போதும்கூட அந்தக் குரலை கிளர்ச்சியுற்றது என்றோ வேறு ஏதாவது சொல்லாலோ விவரிக்கவில்லை வெடெல். 

கைகளையும் முட்டியையும் நிலத்தில் ஊன்றித் தவழ்ந்தபடி “ஏன் நிறுத்தினாய், சுடு,” என்றான் சிறுவன். 

ஆழ்ந்து மூச்சு வாங்கியபடி வெடெலுக்கு நேர் மேலே நின்றான். “நான் செத்துப் போயிருக்கலாம். அதைத்தான் விரும்புகிறேன். நாம் இருவரும் செத்துப் போயிருக்கலாம். வேட்ச்சைப் போலவே என் விருப்பங்களை எல்லாம் தெரிவிக்க முடிந்தால் நன்றாக இருக்கும். நீங்கள் ஏன் இங்கே வந்தீர்கள்?” 

வெடெல்லிடம் சலனமேதும் இல்லை. “எதற்காக நான் இறக்க வேண்டும் என்று வேட்ச் நினைக்கிறான்?”

“ஏனென்றால் நீங்கள் கத்தும் ஓசை அவனுக்கு இன்னமும் கேட்கிறது. நான் அவனுடன்தான் படுத்துக்கொள்வேன். இரவு நேரத்தில் தூக்கத்தில் இருந்து விழித்துக்கொள்வான், வேர்த்து ஊற்றும். ஒருமுறை என் கழுத்தை நெரிக்கப் பார்த்தான். அப்பா வந்து தடுத்து நிறுத்தினார். உங்களின் அலறும் குரல்கள் அவனுக்கு இன்னமும் கேட்கின்றன. குண்டுகளற்ற துப்பாக்கிகளைத் தவிர வேறு ஏதும் இல்லாததால் சோளக்கொல்லை பொம்மைகளைப் போலச் சோளக்காட்டில் அலறியபடி ஓடியதாகச் சொன்னான் வேட்ச்.”

சிறுவன் இப்போது ஓசையின்றி அழுதான். “நீ நாசமாய்ப் போக. நீ நரகத்துக்குப் போக!”

“ஆமாம்,” என்றான் வெடெல். “நானே அவற்றைக் கேட்டிருக்கிறேன். ஆனால் நீ இறந்துபோக வேண்டுமென்று விரும்புகிறாயே, எதனால்?” என்றான்.

“ஏனென்றால் அவளே வரவேண்டும் என்று முயன்றாள். அவளே வந்திருக்க வேண்டும்.” 

“யாரந்த அவள்? உன் சகோதரியா?”

“… அறையின் வழியாகத்தான் வெளியே வரமுடியும். அப்பா விழித்திருந்தார். “அந்தக் கதவைத் தாண்டி வெளியே போனால் திரும்ப உள்ளே வராதே,” என்றார். “திரும்பி வரும் எண்ணமில்லை,” என்று அவள் சொன்னாள். வேட்ச்சும் விழித்திருந்தான். “அவனை விரைவில் திருமணம் செய்துகொள். ஏனெனில் விடிந்ததும் விதவையாகப் போகிறாய்,” என்றான். அவள் உள்ளே வந்து என்னிடம் சொன்னாள். நானும் விழித்துக்கொண்டுதான் இருந்தேன். உங்களிடம் சொல்லச் சொன்னாள்.”

“என்ன சொல்லச் சொன்னாள்?” என்று வெடெல் கேட்டதும் சிறுவன் சத்தமின்றி அழுதான். பொறுமையினால் உண்டான முழுமையான விரக்தியினால் அழுதான்.

“நீங்கள் கறுப்பினத்தவனாக இருந்தால், அவள் சொன்னதைச் செய்திருந்தால் நான்…”

“எதைச் செய்தால்? அவள் எதைச் செய்திருந்தால்? என்னிடம் என்ன சொல்லச் சொன்னாள்?”

“நானும் அவளும் படுக்கும் மேலறையில் இருக்கும் ஜன்னலைப் பற்றி. அங்கே ஓர் ஏணி இருக்கும். இரவில் வேட்டையாடப் போய்விட்டு வருகையில் நான் பயன்படுத்துவது. நீங்கள் உள்ளே வருவதற்காக விட்டுவைத்தேன். ஆனால் நீங்கள் கறுப்பினத்தவனாக இருந்தால், அவள் சொன்னதைச் செய்திருந்தால் நான்…”

“இங்கே பார். தெளிவாக யோசித்துப் பேசு. உனக்கு நினைவில்லையா? அறைக்குள் வந்தபோது உன் தந்தை வெளியே அனுப்பினாரே, அந்த ஒரு முறை தவிர வேறு எப்போதும் அவளை நான் பார்த்ததே இல்லை.”

“ஆனால் அப்போது அவளைப் பார்த்தீர்களே? அவளும் உங்களைப் பார்த்தாளே?”

“இல்லை,” என்றான் வெடெல்.

சிறுவன் அழுவதை நிறுத்தினான். இன்னமும் வெடெலுக்கு மேலே அசையாமல் நின்றான்.

“என்ன இல்லை?”

“நான் அதைச் செய்யமாட்டேன். உன் ஏணியில் ஏறி வரமாட்டேன்.”

அவனுக்கு மேலே நின்றபடி சிறிது நேரம் அசையாமல் ஓசையில்லாமல் மெதுவாக மூச்சுவிட்டான் சிறுவன். கனவில் பேசுபவன் போலப் பேசினான். “நான் உன்னை எளிதாகக் கொல்ல முடியும். என்னைவிடவும் பெரியவனென்றாலும் உனக்கு ஒரு கை மட்டுமே இருக்கிறது…” நம்பமுடியாத வேகத்தோடு திடீரென நகர்ந்து வெடெலின் கழுத்தைத் தன்னுடைய பெரிய கடினமான கைகளால் நெறித்தான். வெடெல் நகரவில்லை. “உன்னை எளிதாகக் கொன்றுவிடுவேன். அதைப் பொருட்படுத்தவும் யாருமில்லை.”

“ஷ்ஷ்ஷ்ஷ்ஷ், சத்தமாகப் பேசாதே,” என்றான் வெடெல்.

“யாரும் பொருட்படுத்த மாட்டார்கள்.” வெடெலின் கழுத்தைச் சிரமத்தோடு இறுக்கிப் பிடித்திருந்தான். சிறுவனின் ஆற்றல் கைகளை வந்தடைவதற்கு முன்னரே அவனுடைய தோள்பட்டை, முன்கை ஆகிய பகுதிகளில் சிதறுவதை வெடெல்லால் உணர முடிந்தது. அவன் மூளைக்கும் கைகளுக்கும் இடையே இருக்கும் தொடர்பு முற்றுப்பெறாதது போலத் தோன்றியது. “யாரும் பொருட்படுத்த மாட்டார்கள். வேட்ச் மட்டும் கோபப்படுவான்.”

“என்னிடம் கைத்துப்பாக்கி இருக்கிறது,” என்றான் வெடெல் .

“அப்படியானால் என்னைச் சுடு.”

“வேண்டாம்.”

“ஏன் வேண்டாம்?”

“நான் முன்னரே சொன்னேனே?”

“செய்யமாட்டேன் என்று சத்தியம் செய்வாயா?”

“ஒரு நொடி நான் சொல்வதைக் கேள்,” என்றான் வெடெல். இப்போது சிறுவனுக்கு அமைதியூட்டும் குரலில் பேசினான். ஒற்றை ஓசைச் சொற்களில் ஒரு குழந்தையிடம் பேசுவது போலப் பேசினான். “நான் வீடு போய்ச் சேரவேண்டும். அவ்வளவுதான். வீட்டை விட்டு வந்து நான்கு வருடமாகிவிட்டது. அதனால் என் ஆசையெல்லாம் வீட்டுக்குப் போக வேண்டும் என்பது மட்டுமே. உனக்கே அது தெரியுமே? அங்கே நான் விட்டுவந்ததை எல்லாம் நான்கு வருடம் கழித்துப் பார்க்க வேண்டும்.”

“அங்கே என்ன செய்தாய்?” வெடெல்லின் கழுத்தைப் பற்றிய சிறுவனின் பிடி இளகியது, மீண்டும் கடினமானது. அவனுடைய கைகள் விறைப்பாக இருந்தன. “சவாரி செய்ய குதிரையும் ஏவிய வேலையைச் செய்ய கறுப்பினத்தவர்களும் இருப்பதால் நாள் முழுவதும் வேட்டையாடுவாயா? பிடித்திருந்தால் இரவிலும் அதையே செய்வாயா?  உன் காலணிக்கு மெருகேற்றவும் குதிரைக்குச் சேணம் பூட்டவும் பணியாட்கள் இருப்பதால் மீண்டும் வேட்டையாடப் போகும் வரையிலும் மேசையில் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டே இருப்பாயா?”

“அதைத்தான் எதிர்பார்க்கிறேன். ஆனால் வீட்டை விட்டு வந்து நான்கு வருடமாகிவிட்டது. அதனால் எதுவும் தெளிவாகத் தெரியவில்லை.”

“என்னையும் கூட்டிப்போ.”

“அங்கே என்ன இருக்கிறதென்று எனக்கே தெரியாது. அங்கே சவாரி செய்ய குதிரைகளோ வேட்டையாட உயிரினங்களோ, எதுவுமே இல்லாமல் போகலாம். அங்கேயும் யாங்கிகள் வந்தார்கள். அதற்கடுத்து என் அம்மா இறந்துபோனாள். நான் போய் பார்க்கும் வரையில் அங்கே என்ன நிலைமை என்பது தெரியாது.”

“நான் வேலை செய்வேன். இருவரும் வேலை செய்வோம். நீங்கள் மேய்ஸ்ஃபீல்டில் திருமணம் செய்துகொள்ளலாம். பக்கத்தில்தான் இருக்கிறது.”

“திருமணமா? ஓ.. உன்னுடைய… அதுதானே பார்த்தேன்! எனக்கு ஏற்கெனவே மணமாகவில்லை என்பது உனக்கு எப்படித் தெரியும்?” சிறுவனின் பிடி இறுகியது. அவனை உலுக்கினான். “நிறுத்து!” 

“உனக்கு மனைவி இருக்கிறாள் என்று சொன்னால் கொன்றே விடுவேன்,” என்றான் சிறுவன்.

“இல்லை, எனக்கு மணமாகவில்லை.”

“அந்த ஏணியில் ஏறும் எண்ணமில்லையா?”

“அவளை ஒரேயொரு முறைதான் பார்த்தேன். மீண்டும் பார்த்தால் அடையாளம் தெரியுமா என்றுகூடத் தெரியவில்லை.”

“அவள் வேறுமாதிரி சொல்கிறாள். உன்னை நம்பமாட்டேன். பொய் சொல்கிறாய்.”

“இல்லை,” என்றான் வெடெல்.

“நீ பயப்படுவதால் அப்படிச் சொல்கிறாயா?”

“ஆமாம். அதேதான்.”

“வேட்ச்சைப் பார்த்தா?” 

“இல்லை, வேட்ச்சைப் பார்த்து அல்ல. என்னுடைய அதிர்ஷ்டம் தீர்ந்துபோய் விட்டதென்று நினைக்கிறேன். அதுகுறித்து அச்சப்படுகிறேன். நீண்ட காலம் தாக்குப்பிடித்து விட்டேன். அச்சப்படுவது எப்படி என்பதை மறந்துவிட்டேனோ என்று தோன்றுகிறது. அதனால் அந்த இடரை எதிர்நோக்க விரும்பவில்லை. உண்மையோடு எனக்கிருக்கும் உறவு அற்றுவிட்டது என்பதை எதிர்கொள்ளும் திராணியில்லை. நான் ஜுபலைப் போல அல்ல. நான் இன்னமும் அவனுக்குத்தான் சொந்தம் என்று நினைக்கிறான்; அதனால் நான் விடுதலை பெற்றதை அவனால் நம்பமுடியாது. அவனிடம் அதைச் சொல்லக்கூட அனுமதிக்க மாட்டான். உண்மையைத் தெரிந்துகொள்ளும் அவசியம் அவனுக்கு இல்லை, புரிகிறதா?”

“நாங்கள் வேலைசெய்வோம். அவள் பார்ப்பதற்கு எந்நேரமும் காலணிகளை அணிந்துகொண்டிருக்கும் மிஸ்ஸிஸிப்பி பெண்களைப் போல இருக்க மாட்டாள். ஆனால் எல்லாவற்றையும் கற்றுக்கொள்வோம். அவர்களின் முன்னால் உனக்கு அவமானம் ஏற்படும் வகையில் நடக்கமாட்டோம்.”

“இல்லை, என்னால் முடியாது,” என்றான் வெடெல்.

“உன் வழியில் போய்விடு. இப்போதே கிளம்பு.”

“எப்படிப் போக முடியும்? அவனால் குதிரைமீது உட்காரவோ ஓட்டவோ முடியாது என்பதை நீயே பார்க்கிறாயே.” சிறுவன் உடனடியாகப் பதிலளிக்கவில்லை. ஒரு நொடி கடந்ததும் அவனுக்குள் ஏற்பட்ட பதற்றத்தையும் எதையும் செய்ய முடியாமல் திணறுவதையும் வெடெல்லால் உணர முடிந்தது. ஓசையேதும் கேட்கவில்லை என்றாலும் தரையில் மண்டியிட்டபடியே மூச்சை உள்ளிழுத்துக்கொண்டு ஏணியைப் பார்ப்பதை உணர முடிந்தது.

“யார்?” முணுமுணுப்பாகக் கேட்டான் வெடெல். 

“அப்பா.”

“நான் போய் பார்க்கிறேன். நீ இங்கேயே இரு. என்னுடைய கைத்துப்பாக்கியை வைத்துக்கொள்.”

X

அத்தனை உயரத்தில் அந்த இருண்மையான சூழலில் காற்று ஈரமாகவும் குளிர்ச்சியாகவும் இருந்தது. கண்ணுக்குப் புலப்படாத இருளுக்குள் முழுகிக் கிடந்தது பள்ளத்தாக்கு. எதிரே இருந்த மலைத்தொடர் குளிர்ச்சியாகவும் கருமையாகவும் இருந்தது, அது இருப்பதே கண்ணுக்குத் தெரியவில்லை.

“கிளம்பு,” என்றார் அந்தத் தந்தை.

“போர் முடிந்துவிட்டது. வேட்ச்சின் வெற்றி என் பிரச்சினையல்ல,” என்றான் வெடெல்.

“குதிரைகளையும் கறுப்பினத்தவனையும் கூட்டிக்கொண்டு கிளம்பு.”

“இது உங்கள் மகளைக் குறித்தது என்றால் அவளை ஒருமுறை மட்டுமே பார்த்தேன். இனி அவளைப் பார்க்கும் எண்ணம் இல்லை.”

“கிளம்பு. உன்னுடையவற்றை எடுத்துக்கொண்டு கிளம்பிப் போ,” என்றார் தந்தை.

“முடியாது.” இருட்டில் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு நின்றார்கள். “நான்கு வருடங்களுக்குப் பிறகு தப்பியோடுவதில் இருந்து விடுதலை பெற்றிருக்கிறேன்.”

“விடியும் வரையில் அவகாசம் இருக்கிறது.”

“கடந்த நான்கு வருடங்களில் வர்ஜினியாவில் இதைக் காட்டிலும் குறைவாகவே இருந்தது. இது டென்னெஸ்ஸி ஆயிற்றே.” தந்தை அங்கிருந்து நகர்ந்து சரிவான பாதையில் நடந்தார், கொஞ்ச நேரத்தில் இருட்டுக்குள் மறைந்தார். வெடெல் இலாயத்துக்குள் நுழைந்து ஏணியில் ஏறினான். குறட்டை விட்டுக்கொண்டு இருந்த கறுப்பினத்தவனுக்கு அருகே அசைவின்றி உட்கார்ந்திருந்தான் சிறுவன். 

“அவனை இங்கேயே விட்டுப்போ. கறுப்பினத்தவன்தானே? அவன் இருக்கட்டும், நீ கிளம்பு.”

“மாட்டேன்,” என்றான் வெடெல்.

சிறுவன் வெடெல்லை நேருக்கு நேர் பார்க்கவில்லை என்றாலும் இருவருக்குமிடையே நிலவிய அமைதியில் மரங்களடர்ந்த நிலம் இருந்தது, வெடிக்கும் துப்பாக்கியின் ஓசை இருந்தது, முன்னங்கால்களை வானில் உதைத்து மேலெழும் குதிரை எழுப்பும் வலிமையான இடியோசை இருந்தது, சுருண்டெழும் புகை இருந்தது. “பள்ளத்தாக்கிற்குப் போகும் குறுக்கு வழியைக் காண்பிக்கிறேன். இங்கிருந்து இரண்டு மணிநேரத்தில் போய்ச் சேர்ந்துவிடலாம். விடிவதற்குள் பத்து மைல் தூரத்தைக் கடந்திருப்பாய்.” 

“முடியாது. அவனும் வீட்டுக்குப் போக வேண்டும் என்று ஆசைப்படுகிறான். அவனையும் அழைத்துப் போக வேண்டும்.” கீழே குனிந்து கறுப்பினத்தவன் போர்த்தி இருந்த மேலங்கியை ஒற்றைக் கையால் நேர் செய்தான். சிறுவன் அங்கிருந்து தவழ்ந்து செல்லும் ஓசை கேட்டது, ஆனாலும் பார்க்கவில்லை. சிறிது நேரத்தில் கறுப்பினத்தவனை உலுக்கினான். “ஜுபல்.” கறுப்பினத்தவன் முனகியபடி திரும்பிப் படுத்துத் தூங்கினான். சிறுவனைப் போலவே அவனருகே குத்துக்காலிட்டு உட்கார்ந்தான் வெடெல். “எல்லாவற்றையும் முற்றிலும் இழந்துவிட்டேன் என்று நினைத்தேன்; அமைதியையும் மௌனத்தையும் அச்சப்படுவதற்கான ஆற்றலையும் என அனைத்தையும்,” என்றான்.

XI

அந்தக் குளிர்கால விடியலில் இரண்டு குதிரைகளும் இடிந்துபோன வாயில்கதவு வழியாகச் சாலைக்குள் நுழைந்தபோது அந்த வீடு இறுக்கமாகவும் வெறுமையாகவும் இருந்தது. கறுப்பினத்தவன் உயர்ரகக் குதிரையிலும் வெடெல் பெண் குதிரையிலும் சவாரி செய்தனர். கறுப்பினத்தவன் குளிரில் நடுங்கினான். கூன் போட்டுக்கொண்டு முட்டியை மேலே மடக்கி குத்த வைத்திருந்தான். மேலங்கியின் முக்காடு அவன் முகத்தை முழுவதும் மறைத்தது.

“அந்தத் திரவத்தைக் குடிக்கவைத்து நம்மைப் பழிவாங்குகிறார்கள் என்று சொன்னேனே? மலையகத்து முரடர்கள். அவர்கள் என்னை மயக்கமுற வைப்பதற்கு நீயும் உடந்தையாய் இருந்தாய். உன் கையால் எனக்கு அதைக் கொடுத்தாய். கடவுளே! கடவுளே! வீடு போய் சேருவோமா?”

பின்னால் திரும்பி வீட்டைப் பார்த்தான். அந்த இடிந்துபோன வெறுமையான வீட்டில் யாரும் இருப்பது போலவே தெரியவில்லை. புகைகூட எழும்பவில்லை. 

“அவளுக்கென இளைஞன் ஒருவன் இருக்கிறான். காதலனாக இருக்கலாம்.” ஆச்சரியமும் யோசனையும் மேலிட உரத்த குரலில் பேசினான். “அந்தச் சிறுவன் ஹுல். சாலை மறையும் இடத்தில் வட்ட வடிவில் மரங்கள் அமைந்திருக்கும் பகுதியை அடைந்தவுடன் இடது பக்கம் திரும்பச் சொன்னான். அந்த மரமடர்ந்த பகுதியை கடக்கவேண்டாம் என்றான்.”

“யார் என்ன சொன்னது?” கேட்டான் கறுப்பினத்தவன். “நான் எங்கேயும் வரவில்லை. மீண்டும் பரணில் ஏறிப் படுத்துக்கொள்ளப் போகிறேன்.”

“சரி, கீழே இறங்கு,” என்றான் வெடெல். 

“கீழே இறங்கவா?”

“எனக்கு இரண்டு குதிரைகளும் தேவை. தூக்கம் கலைந்த பிறகு நீ நடந்து வா.”

“உன் அம்மாவிடம் சொல்லப் போகிறேன். எல்லோரிடமும் சொல்லப் போகிறேன். நான்கு வருடங்களான பிறகும் யாங்கியைப் பார்த்தால் அடையாளம் கண்டுகொள்ளும் அளவு புத்தியில்லை என்பதைச் சொல்லப் போகிறேன். ஓர் இரவு முழுவதையும் யாங்கியின் வீட்டில் கழித்து, உன் கறுப்பினத்தவனை அவர்கள் தொலைத்துக்கட்ட அனுமதித்தாய் என்று சொல்லப் போகிறேன். 

“நீ இங்கேயே தங்கப் போகிறாய் என்றல்லவா நினைத்தேன்?” என்றான் வெடெல். இப்போது அவனும் நடுங்க ஆரம்பித்தான். “இருந்தாலும் எனக்குக் குளிரவில்லை,” என்றான். “எனக்குக் குளிரவில்லை.”

“இங்கேயே தங்குவதா? நான் இல்லாமல் எப்படி வீடு போய்ச் சேர்வாய்? நீ இல்லாமல் நான் வீட்டுக்குப் போனால் எஜமானியம்மாளின் கேள்விக்கு என்ன பதில் சொல்வேன்?”

“வா,” என்றபடி குதிரையை முடிக்கிவிட்டான் வெடெல்.

பின்னால் திரும்பி எதுவும் சொல்லாமல் வீட்டைப் பார்த்தான். அங்கிருந்து நகர ஆரம்பித்தான். அவனுக்குப் பின்னால் உயர்ரகக் குதிரையில் இருந்த கறுப்பினத்தவன் தனக்குத்தானே எதையோ முணுமுணுத்தான். அது சோகப் பாடலைப் போல ஒலித்தது. நேற்று சிரமப்பட்டு ஏறி வந்த சாலை இன்று கீழ்நோக்கி இறங்கியது. சேறும் சகதியுமாக இருந்த சாலையில் அங்குமிங்கும் பாறைகள் கிடந்தன. மேடும் பள்ளமுமாக இருந்த வெறுமையான பாதை தொடுவானத்தோடு கலந்து மறைந்தது. கரடுமுரடாகப் பயணப்பட்ட சாலை திடீரென பைன் மரங்கள் அடர்ந்த பகுதியைச் சென்று சேர்ந்தது. அந்த இடத்தில் இருந்து கொஞ்ச தூரத்தில் பார்வையில் இருந்து மறைந்தது வீடு. 

“ஆக, நான் ஓடிப்போகிறேன்,” என்றான் வெடெல். “வீடு போய்ச் சேர்ந்ததும் இது குறித்து பெருமைபடக்கூட முடியாது. ஆமாம், இது குறித்துப் பேசுவேன். நான் உயிரோடு இருக்கிறேன் என்று பொருள் அல்லவா? அச்சத்தையும் ஆசையையும் உணர முடிவதால் உயிரோடு இருக்கிறேன். வாழ்க்கை கடந்த காலத்தை உறுதிசெய்கிறது, எதிர்காலம் குறித்த நம்பிக்கையை அளிக்கிறது. அதனால் இன்னும் உயிரோடு இருக்கிறேன். ஆஹ்.” லாரல் மரங்கள் அடர்ந்த பகுதியை அடைந்தார்கள்.

சுமார் அறுநூறு அடிக்கு முன்னால் எந்த முன்னறிவிப்புமின்றி ஈரப்பதம் நிறைந்த வானத்தின் நடுவே தோன்றிய அதிசயமான விஷயம் போல இருந்தது அது. முக்காடால் மூடிய முகத்துடன் உட்கார்ந்திருந்த கறுப்பினத்தவன் அவனையும் அறியாமல் திடீரென இலகானை வேகமாக இழுத்ததும் குறிப்பிட்ட தூரத்துக்கு மேலாகப் பயணப்பட்ட உயர்ரகக் குதிரை தானாகவே நின்றது.

“எந்தப் பாதையும் தெரியவில்லையே…” என்று வெடெல் சொல்லச் சொல்ல மரங்களுக்கு பின்னால் இருந்து ஓர் உருவம் அவர்களை நோக்கி ஓடி வந்தது. இலகான் கயிற்றைத் தொடை இடுக்கில் சொருகிக்கொண்டு கையை மேலங்கிக்குள் நுழைத்தான் வெடெல். அப்போதுதான் சிறுவனை அடையாளம் தெரிந்தது. வேகமாக ஓடி வந்தான். முகம் வெளிறிப்போய் சோர்வுற்று இருந்தது. கண்கள் துயரச் சாயலைப் பூசியிருந்தன. 

“அதோ அந்தப் பக்கம் இருக்கிறது,” என்றான். 

“நன்றி. நாங்களே கண்டுபிடித்திருப்போம் என்றாலும் நேரில் வந்து காண்பித்தமைக்கு நன்றி.”

“ஆமாம்,” என்று அவன் சொன்னதைக் கேட்காதது போலப் பேசினான் சிறுவன். பெண் குதிரையின் கடிவாளத்தைப் பிடித்திருந்தான். “புதருக்கு நேர் பின்னே இருக்கிறது. பக்கத்தில் போகும் வரையில் கண்ணுக்குத் தெரியாது,” என்றான். 

“என்னது? எல்லோரிடமும் சொல்லப் போகிறேன். நான்கு வருடங்களான பிறகும் உனக்குக் கொஞ்சமும் அறிவில்லை என்று…” படபடத்தான் கறுப்பினத்தவன்.

“ஷ்ஷ்ஷ்ஷ்,” என்றான் வெடெல். “உனக்கு நன்றிக்கடன்பட்டிருக்கிறேன். அதைவிடச் சிறந்தது எதுவுமில்லை என்பதால் அதை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். வீட்டுக்குத் திரும்பிப் போ. நாங்கள் பாதையைக் கண்டுபிடித்துவிடுவோம். இனி நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்.”

“அவர்களுக்கும் இந்தப் பாதை தெரியும்,” என்றான் சிறுவன். குதிரையை வழிநடத்தியபடி முன்னால் சென்றான். “வாருங்கள்.”

“பொறு,” என்றபடி குதிரையை நிறுத்தினான் வெடெல். முன்னால் தெரிந்த மரங்களைப் பார்த்தபடியே சிறுவன் கடிவாளத்தைப் பிடித்து இழுத்தான். “நாம் ஒருமுறையும் அவர்கள் ஒருமுறையும் ஊகம் செய்யலாம். அப்படித்தானே?”

“நீ நரகத்துக்குத்தான் போவாய். வா!” என்று கொஞ்சம் பரபரப்போடு சொன்னான் சிறுவன். “எனக்கு உடம்பு சரியில்லாதது போல ஏதோ செய்கிறது. என்னவோ போல இருக்கிறது.”

தன்னைச் சுற்றிலும் பார்த்தான் வெடெல். அவன் முகம் இறுக்கமாகவும் அயர்ச்சியோடும் இருந்தது. என்ன நடக்கிறது என்ற குழப்பமும் வெறுப்பும் இழையோடியது. “ஆனால் இங்கிருந்து சென்றாக வேண்டும். தங்குவதற்கு வீடு இருந்தாலும் தலைக்கு மேலே கூரை இருந்தாலும் இங்கே இருக்க முடியாது. மூன்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த அதிகப்படியான தெரிவுதான் மனிதனைக் குழப்புகிறது. இரண்டில் ஒன்றைத் தவறாகத் தேர்ந்தெடுப்பதுதான் வாழ்க்கை என்பதை உணரத் தொடங்கும்போது மூன்றாவதாக ஒன்று வந்துசேர்கிறது. நீ வீட்டுக்குப் போ.”

சிறுவன் தலையை உயர்த்தி அவனைப் பார்த்தான். “நாங்கள் வேலை செய்வோம். இப்போது நாம் வீட்டுக்குப் போகலாம். அப்பாவும் வேட்ச்சும்… நாம் மலையிலிருந்து கீழே இறங்கலாம். இரண்டிரண்டு பேராகக் குதிரைகளில் சவாரி செய்யலாம். பள்ளத்தாக்கை அடைந்ததும் மேய்ஸ்ஃபீல்டில் திருமணத்தை நடத்தலாம். நாங்கள் உங்களை அவமானப்படுத்த மாட்டோம்.”

“அவளுக்கென ஒருவன் இருக்கிறான் அல்லவா? ஒவ்வொரு ஞாயிறன்றும் தேவாலயத்தில் அவளுக்காகக் காத்திருந்து வீடு வரை துணை வரவும் இரவு உணவுக்கு அழைத்துச் செல்லவும் மற்ற இளைஞர்களிடம் சண்டையிடவும் ஒருவன் இருக்கிறான் அல்லவா?”

“எங்களை அழைத்துச் செல்ல மாட்டீர்கள், அப்படித்தானே?”

“இல்லை, நீ திரும்பிப் போ.”

சிறுவன் முகத்தைத் தாழ்த்தி, கடிவாளத்தைப் பிடித்தபடி, சிறிது நேரம் அங்கேயே நின்றிருந்தான். பிறகு சன்னமான குரலில், “வாருங்கள், சீக்கிரமாகப் போக வேண்டும்,” என்றான்.

“பொறு, என்ன செய்யப் போகிறாய்?” என்றான் வெடெல். 

“உங்களோடு சமாதானமாகிவிட்டேன். வாருங்கள்.” குதிரையை இழுத்தபடி சாலையின் ஓரத்துக்குச் சென்றான்.

“இரு, நீ வீட்டுக்குத் திரும்பிப் போ. போர் முடிந்துவிட்டது. வேட்ச்சுக்கும் அது தெரியும்.”

சிறுவன் பதில் பேசவில்லை. குதிரையைப் புதருக்குள் இட்டுச்சென்றான். உயர்ரகக் குதிரை இருந்த இடத்திலேயே நின்றது. 

“ஏய், சீசர்!” என்றான் கறுப்பினத்தவன். “இருங்கள், மாஸ்டர் சோஷே. நான் அங்கே வரப்போவதில்லை…. இல்லை…”

சிறுவன் நிற்காமல் திரும்பிப் பார்த்துச் சொன்னான். “நீ அங்கேயே இரு. இருக்கும் இடத்திலேயே இரு.”

மெலிதான வடுவை போல இருந்தது பாதை. புதரைச் சுற்றிலும் வளைந்து நெளிந்து சென்றது. “எனக்குத் தெரிகிறது. நீ திரும்பிப் போ,” என்றான் வெடெல்.

“நானும் வருகிறேன்,” என்று மிகவும் தாழ்வான குரலில் சொன்னான் சிறுவன். அவன் அமைதியாகப் பேசுவதைக் கவனித்தான் வெடெல். மூச்சை இழுத்துப் பிடித்துக்கொண்டு விறைப்பாகவும் அழுத்தத்தோடு கூடிய விழிப்புணர்வோடும் பேசுவதை உணர்ந்தான். மீண்டும் மூச்சை வெளியிட்ட போது குதிரை மெலிதாக அதிர்ந்தது. 

“என்ன முட்டாள்தனம்! இன்னும் ஐந்து நிமிடத்தில் என்னையும் ஓர் இந்தியனைப் போல நடந்துகொள்ளச் செய்வான். அச்சத்தை உணரும் ஆற்றலை மீண்டும் பெறவேண்டும் என்று நினைத்தேன். ஆனால்  எதிர்பார்த்ததுக்கும் மேலாக எல்லாம் நடந்துவிட்டது.” பாதை விரிந்தது. உயர்ரகக் குதிரை பக்கவாட்டில் வந்தது. இரண்டுக்கும் நடுவில் நடந்த சிறுவன் நிமிர்ந்து கறுப்பினத்தவனைப் பார்த்தான்.

“நீ பின்னால் வா என்று சொன்னேன் அல்லவா?” என்றான்.

“எதற்காகப் பின்னால் வரவேண்டும்?” கேட்டான் வெடெல். சிறுவனின் முகம் வெளுத்துப் போயிருந்ததைக் கவனித்தான். ‘நானும் இந்தியனைப் போல நடந்துகொள்கிறேனா என்பது தெரியவில்லை’ என நினைத்தான். பிறகு, “அவன் ஏன் பின்னால் வரவேண்டும்?” என உரக்கக் கேட்டான்.

சிறுவன் வெடெல்லைப் பார்த்தான். குதிரையின் கடிவாளத்தை இழுத்துப் பிடித்து நிறுத்தினான். “நாங்கள் எல்லா வேலையும் செய்வோம். உன்னை அவமானப்படுத்த மாட்டோம்,” என்றான். 

சிறுவனின் முகத்தைப் போலவே வெடெல்லின் முகமும் அமைதியாக இருந்தது. இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். “தவறாக ஊகித்துவிட்டோமா? நாம் ஊகிக்க வேண்டியிருந்தது. மூன்றில் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டியிருந்தது.”

அவன் சொன்னது சிறுவனின் காதில் விழுந்தது போலவே தெரியவில்லை. “அது நானில்லை என நம்புகிறாயா? சத்தியம் செய்து சொல்வாயா?”

“ஆம், சத்தியமாக.” சிறுவனைப் பார்த்தபடியே அமைதியாகச் சொன்னான் வெடெல். இருவரும் பேசுவதைப் பார்த்தால் இரண்டு வளர்ந்த ஆண்கள் அல்லது இரண்டு சின்னக் குழந்தைகள் பேசுவது போல இருந்தது. “நாம் இப்போது என்ன செய்யவேண்டும்?”

“திரும்பிப் போகலாம். அவர்கள் இப்போது போயிருப்பார்கள். நாம்…” கடிவாளத்தைப் பிடித்து இழுத்தான். உயர்ரகக் குதிரை பக்கவாட்டில் தாண்டிச் சென்றது.

“இங்கே எங்காவது இருக்கும் என்கிறாயா?” என்றான் வெடெல். திடீரென குதிரையை வேகமாகச் செலுத்தினான். அதைப் பிடித்துக்கொண்டிருந்த சிறுவன் விசையால் உந்தி இழுக்கப்பட்டான். “விடு,” என்றான் வெடெல். 

சிறுவன் கடிவாளத்தை விடாமல் பிடித்திருந்ததால் முன்னோக்கி இழுக்கப்பட்டான். இரண்டு குதிரைகளும் ஒன்றாக நடந்தன. உயர்ரகக் குதிரையில் குத்துக்காலிட்டு அமர்ந்திருந்த கறுப்பினத்தவன் இன்னமும் பேசிக்கொண்டு இருந்தான். நடந்து நடந்து தேய்ந்துபோன காலணியைப் போல ஓயாமல் பேசிப் பேசி அவன் வாய் நைந்து தொங்கிப்போனது போலத் தோற்றமளித்தது. 

“அவனிடம் நான் சொல்லி மாளவில்லை,” என்றான் கறுப்பினத்தவன்.

“கையை எடு,” என்றபடியே குதிரையை வேகமாகச் செலுத்தினான் வெடெல். சிறுவனின் தோளில் குதிரை இடித்தது. “கையை எடு!”

“திரும்பி வரமாட்டாயா?” என்றான் சிறுவன். “வரமாட்டாயா?”

“கையை எடு!” என்ற வெடெல்லின் பல் மீசைக்குக் கீழே தெரிந்தது. காலணியால் குதிரையை உந்தி மேலெழும்பச் செய்தான். கடிவாளத்தை விடுவித்த சிறுவன் உயர்ரகக் குதிரையின் கழுத்துக்குக் கீழே வேகமாக ஒளிந்துகொண்டான். தன் குதிரை முன்னால் தாவும்போது பின்னால் திரும்பிய வெடெல் உயர்ரகக் குதிரையின் முதுகில் சிறுவன் ஏறுவதையும் அதில் அமர்ந்திருந்த கறுப்பினத்தவனைக் கீழே தள்ளுவதையும் அவன் கீழே உருண்டு மறைந்துபோவதையும் கவனித்தான்.

“நல்ல குதிரையை நீ ஓட்டிவருவாய் என்று எண்ணினார்கள்,” என்று மூச்சிரைத்தபடியே சன்னமான குரலில் சொன்னான் சிறுவன். “நீ மலையில் இருந்து கீழே போகும் பாதையில் செல்வாய் என்று சொல்லி இருந்தேன்!” உயர்ரகக் குதிரை அவனை வேகமாகத் தாண்டிச் சென்றது. “குதிரை தப்பித்துவிடும். பாதையில் இருந்து விலகு. அதில் இருந்து விலகு…” வெடெல் தன் குதிரையை வேகமாகச் செலுத்தினான். இரண்டு குதிரைகளும் ஒன்றாகப் பயணம் செய்து பாதை இரண்டாக மடிந்து லாரல் மரங்களும் ரோடோடென்ரன் புதர்களும் அடர்த்தியாக வளர்ந்திருந்த பகுதிக்குள் சென்றன. சிறுவன் திரும்பிப் பார்த்தான்.

“பின்னாலேயே இரு. பாதையை விட்டு விலகு!” என்று கத்தினான். வெடெல் குதிரையை உந்தினான். எரிச்சலும் கோபமும் மெல்லிய திரையாக அவன் முகத்தில் படர்ந்ததைப் பார்க்கையில் புன்னகைப்பது போல இருந்தது. 

உயிரற்ற அவன் முகம் நிலத்தில் மோதிய போதும் அந்தப் புன்னகை அப்படியே இருந்தது. அவன் கால் இன்னமும் குதிரையின் அங்கவடியில் சிக்கி இருந்தது. ஓசை கேட்டு தாவிக் குதித்த குதிரை வெடெல்லைப் பாதையின் ஓரத்துக்கு இழுத்துச் சென்றது. அங்கே நின்றபடி ஒரு சுற்றுச் சுற்றி மூச்சை வேகமாக வெளியிட்டு புல் மேயத் தொடங்கியது. உயர்ரகக் குதிரையோ வளைவை நோக்கி ஓடி அதைச் சுற்றிவிட்டு வந்த வழியே திரும்பியது. போர்வை வயிற்றுப் புறத்தில் சுருண்டிருந்தது. அது கண்களை உருட்டியபடி பாதையில் கிடந்த சிறுவனின் உடலைத் தாண்டிக் குதித்ததைப் பார்ப்பதற்குப் பாவாடையை உயர்த்திப் பிடித்தபடி தேங்கி நிற்கும் தண்ணீரைத் தாண்டும் பெண்ணொருத்தியைப் போல இருந்தது. சிறுவனின் முகம் பக்கவாட்டில் திரும்பி பாறையில் இடித்திருந்தது. கைகள் பின்புறமாகத் திரும்பி உள்ளங்கைகள் விரிந்து கிடந்தன. பிறகு இன்னும் ஒரு சுற்று சுற்றி வெடெலின் உடலுக்கு மேலே நின்றது. கனைத்தபடியே தலையை ஆட்டியது. தூரத்தில் தெரிந்த லாரல் மரத் தோப்பையும் காற்றில் கலந்து மறையும் வெடிமருந்தின் கரும்புகையையும் பார்த்தது.

அந்த இருவரும் தோப்பில் இருந்து வெளியே வரும்போது கறுப்பினத்தவன் தவழ்ந்துகொண்டு இருந்தான். இருவரில் ஒருவன் முன்னால் ஓடி வந்தான். அழுகையை நிறுத்தாமல் தன்னைத் தாண்டிச் செல்வதைப் பார்த்தான் கறுப்பினத்தவன். “முழு முட்டாள்! முழு முட்டாள்! முழு முட்டாள்!” என்றபடியே கையில் இருந்த துப்பாக்கியைக் கீழே போட்டுவிட்டுத் தரையில் உட்கார்ந்தான். அசையாமல் கல் போல உட்கார்ந்து சிறுவனின் உடலை அதிர்ச்சியோடு பார்த்தான். கனவில் நடப்பதைப் பார்ப்பவன் போலத் தோன்றினான். 

இன்னொருவனைப் பார்த்தான் கறுப்பினத்தவன். ஒரு நொடி நிதானித்து நின்றபடியே துப்பாக்கியைத் தூக்கிப் பிடித்து அதற்குள் ரவைகளைப் போட்டான். கறுப்பினத்தவன் அசையவில்லை. தரையில் முட்டி போட்ட நிலையில் இருந்தபடியே அந்த இரண்டு வெள்ளைக்காரர்களின் செயல்களையும் கவனித்தான். அவனுடைய கண்கள் சிவந்திருந்தன, கருவிழிகள் அப்படியும் இப்படியும் வேகமாகச் சுழன்றன.

முட்டி போட்டபடியே நகர்ந்து குதிரையின் கீழே கிடந்த வெடெலின் அருகே சென்றான். வெடெல்லின் பக்கத்தில் மண்டிபோட்டபடி உட்கார்ந்திருந்தபோது இரண்டாமவன் துப்பாக்கியோடு மெல்ல பின்னால் நகர்வதைக் கவனித்தான். அவன் அசையாமல் நிற்பதைப் பார்த்தும் கண்களை மூடவில்லை, வேறு பக்கம் பார்க்கவில்லை. துப்பாக்கியின் குழல் மேலே உயர்ந்து கீழே இறங்கி வேட்ச்சின் வெள்ளை முகத்தில் வெள்ளைத் தாளில் வைத்த கரும்புள்ளியைப் போல மாறியதைக் கவனித்தான். மண்டியிட்ட நிலையில் இருந்த கறுப்பினத்தவனின் சிவந்த கண்கள் வேக வேகமாகச் சுழன்று பிறகு அசையாமல் நின்றன, பிடிபட்ட விலங்கின் கண்களைப் போல. 

*

ஆங்கில மூலம்: Mountain Victory by William Faulkner, Published in “The Uncollected Stories of William Faulkner”, Vintage International, 1997 Edition.