The White Ribbon: திரைக்கதை (பகுதி 5) – மைக்கேல் ஹனகே

0 comment
  1. முதல் பகுதி
  2. இரண்டாம் பகுதி
  3. மூன்றாம் பகுதி
  4. நான்காம் பகுதி

41. உள்ளே / இரவு: செவிலியின் இல்லம், கூடம்.

செவிலியும் மருத்துவரும் கலவி கொள்கின்றனர். இடைமறிப் பலகையைப் பற்றியபடி அவள் சற்று குனிந்து நிற்க பின்புறத்திலிருந்தபடி அவளைப் புணர்கிறார் மருத்துவர். இருவரும் முழுமையாக உடை அணிந்திருந்தனர். அவள் தன் பாவாடையை மட்டும் சற்று உயர்த்திவிட்டிருந்தாள். 

கலவி முடிந்ததும் அவரை நோக்கித் திரும்பியவள் தன் கைகளால் அவரைச் சுற்றி வளைக்கிறாள். அவளைத் தடுக்காமல் இருந்தவர் மெல்லிய புன்னகையுடன் அவளிடமிருந்து மெதுவாக விலகுகிறார். 

மருத்துவர்

கவனம்… என் கை…

(அவள் தன் ஏமாற்றத்தை மறைக்க முயல்கிறாள். அவர் எஞ்சிய உணவுப்பொருட்கள் வைக்கப்பட்டிருந்த மேசைக்கு முன் அமர்ந்ததும் அவளும் கூடவே அமர்கிறாள். அரைப் புன்னகையுடன் அவளுக்கு ஒரு குவளையை உயர்த்துகிறார். அவள் தன் குவளையால் மோதி ஆமோதித்துவிட்டு அருந்துகிறாள். அதைத் தொடர்ந்த சில நொடிகள் சொல்லின்றி இறுக்கமாக இருக்கின்றன. இறுதியாக மெளனத்தை உடைக்கிறாள்.)

செவிலி

நீங்கள் திரும்பி வந்தது மிக்க மகிழ்ச்சி. சரியான தருணத்தில்தான் வந்துசேர்ந்திருக்கிறீர்கள்.

மருத்துவர்

அப்படியும் சொல்லலாம்.

(அமைதி.)

செவிலி

நீங்கள் இல்லாமல் பிள்ளைகள்தான் மிகவும் சிரமப்பட்டார்கள்.

மருத்துவர்

ஆம். நான் அறிவேன்.

செவிலி

அவனுக்கு என்னைப் பிடிக்கவில்லை.

மருத்துவர்

யாருக்கு?

செவிலி

ரூடிக்கு.

மருத்துவர்

(சிறு அமைதிக்குப் பின்)

அவன் வயதில் இதெல்லாம் கொஞ்சம் சிரமமாகத்தான் இருக்கும்.

செவிலி

உண்மை அதுவல்ல.

(அமைதி. பிறகு உரையாடல் தொடர்கிறது.)

அவர்கள் எப்போதுமே எல்லாவற்றையும் சிரமாமகக் கருதும் வயதுடன் இருக்கிறார்கள்.

மருத்துவர்

(தனக்குள்ளேயே சிரிப்பதுபோல மங்கிய புன்னகையுடன்)

ஆம்.

(நீண்ட மெளனம்.)

செவிலி

நான் இல்லாதபோது என் நினைவே உங்களுக்கு வரவில்லை.

மருத்துவர்

அட! என்ன சொல்கிறாய்?

செவிலி

ஒன்றுமில்லை. அதுதான் உண்மை என்பதால் சொன்னேன்.

(மெளனம்.)

மருத்துவர்

சுயவெறுப்பைப் போல இன்னொரு போதை கிடையாது.

செவிலி

என்ன?

மருத்துவர்

ஒன்றுமில்லை. அதைவிடு.

(ஒரு இடைவெளிக்குப் பிறகு மேசையின் குறுக்கே கைநீட்டி அவரது கையைப் பற்றித் தன் கன்னங்களை அதில் வைத்துக்கொள்கிறாள். அவள் அப்படிச் செய்ய அனுமதித்தவர் சற்று நேரத்தில் தன் கையை எடுத்து அவள் தலைமுடியைக் கோதுகிறார்.)

42. வெளியே / பகல்: தேவாலயம்.

பனி பொழிகிறது. தேவாலயத்திலிருந்து குழந்தைகளின் தோத்திரப் பாடல்கள் ஒலிக்கிறது.

குழந்தைகள்

(சேர்ந்திசையாகப் பாடுகின்றனர்)

…எங்களைச் சூழ்ந்திருக்கும்

பாவங்களைக் களைந்து காப்பவர்

தீமையின் உருவினன் 

ஆணவம் கன்மத்தைக் கேடயமாய்க் கொண்டவன்

உலகில் யாரும் அவனைப் போலில்லை…

(பாடலை மீறி குரல் ஒலிக்கிறது.)

கதைசொல்லி

கூதற்காலம் அவ்வாண்டு விரைவாக வந்துவிட்டது. நவம்பர் முதல் ஞாயிறன்று சீர்திருத்த விழாவின்போது கிராமத்தைப் பனிப்போர்வை போர்த்தியிருந்தது. தன் குடும்பமின்றித் தனியாகத் திரும்பிய சீமான் விழாவில் கலந்துகொள்ளவில்லை. அது வழக்கத்திற்கு மாறாக இருந்தது… 

43. உள்ளே / நாள்: தேவாலயம்.

(காட்சிக்குத் திரும்புகிறோம்.)

ஊர்மக்கள் சீர்த்திருத்த நாளைக் கொண்டாடுகின்றனர். பள்ளியாசிரியர் குழந்தைகளின் சேர்ந்திசைப் பாடலை நிகழ்த்துகிறார். குழந்தைகள் ஆர்வத்துடன் பாடுகின்றனர். மேரியும் மார்டினும் தம் மணிக்கட்டுகளில் வெள்ளை நாடாவை அணிந்துள்ளனர். 

கதைசொல்லி

…கிராமத்தினர் அது அவரது சினத்தின் அறிகுறி என்று நினைத்தனர். சீமானின் கோரிக்கை பல்வேறு சந்தேகங்களைக் கிளப்பியபோதும், குற்றவாளி யார் என்பது குறித்து எந்தவொரு தடயமும் ஆதாரமும் கிடைக்கப்பெறாத நிலையில் பொருத்தமற்ற பல கண்டனங்கள் மேலெழும்பின. 

44. உள்ளே / நாள்: மேற்பார்வையாளர் இல்லம்.

அழுதுகொண்டிருந்த மேற்பார்வையாளரது குழந்தையை மருத்துவர் பரிசோதிக்கிறார். இறுதியாகப் பெற்றோரை நோக்கித் திரும்புகிறார். 

மருத்துவர்

ம்… இது நிச்சயம் நிமோனியா இல்லை. ஆனாலும் நீங்கள் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். குழந்தைக்கு உடற்சூடு அதிகரித்தால் உடனே என்னை அழையுங்கள். இப்போதைக்கு இந்தத் துளிகளை இரண்டு மணிக்கொருமுறை கொடுங்கள். அடுப்பு மீது சில வறண்ட துணிகளை இட்டுவையுங்கள். அது சுவாசத்திற்கு உதவும். 

(தாய் தன் குழந்தையை ஏணையில் போட்ட பிறகு மருத்துவரும் தந்தையும் படியில் இறங்கி கூடத்திற்குச் செல்கின்றனர்.)

மருத்துவர் 

(தொடர்ச்சி)

எவ்வளவு நேரமாகச் சாளரம் திறந்திருக்கிறது? 

மேற்பார்வையாளர்

சரியாகத் தெரியவில்லை. என் மனைவி ஒரு மணியளவில் பாலூட்டப் போனாள். அவள் திரும்பி வந்தபோது இரண்டரை ஆகியிருந்தது. அந்த நேரத்தில் அறையே பனிக்கட்டி போலக் குளிர்ந்திருந்தது. 

மருத்துவர்

அப்போது குழந்தை அழவில்லையா? 

மேற்பார்வையாளர்

இல்லை. மற்ற பிள்ளைகள் மாடியில் இருந்தனர். அவர்களுக்கும் எதுவும் கேட்கவும் இல்லை.

(கூடத்திற்குள் நுழைந்ததும் லீசல், ஜியார்ஜ், ஃபெர்டினாண்ட் மூவரும் மருத்துவரைப் பார்த்து எழுகின்றனர்.)

மருத்துவர்

(குழந்தைகளிடம்)

நிலைமையை வைத்துப் பார்த்தால் அவன் நன்றாக இருக்கிறான் என்றே சொல்ல வேண்டும். நாம் காத்திருக்க வேண்டும்.

(குழந்தைகள் வருத்தத்துடன் காட்சியளிக்கின்றனர். அவர்களைச் சமாதானப்படுத்தும் விதமாக மருத்துவர் மேலும் பேசுகிறார்.)

நாம் அமைதியாகக் காத்திருக்க வேண்டும். 

(மேற்பார்வையாளர் பலகைப் பிரிவின் மறுபுறம் செல்கிறார்.)

மேற்பார்வையாளர்

சூடாக ஏதேனும் தரட்டுமா?

மருத்துவர்

வேண்டாம். எனக்கு நிறைய பணி இருக்கிறது. ஒருவர் நெடுங்காலம் தள்ளி இருந்துவிட்டுப் பின் திரும்பினால்…

மேற்பார்வையாளர்

ஜியார்ஜ்!

(தந்தையின் குறிப்பை அறிந்தவனாய் மருத்துவரின் மேற்சட்டையையும் தொப்பியையும் எடுத்துத்தர விரைந்து ஓடினான் ஜியார்ஜ். இதற்கிடையில் தந்தை மருத்துவரிடம் தொடர்ந்து பேசலானார்.)

உங்கள் கை எப்படி இருக்கிறது?

மருத்துவர்

அது நன்றாக இருக்கிறது. இரண்டு மூன்று வாரங்களில் முழுமையாக குணமாகிவிடும். 

மேற்பார்வையாளர்

கொடுமையானதாக இருக்குமென நினைக்கிறேன். கையைச் சரிவர பயன்படுத்த முடியாதபோது ஒருவர் தன்னை அரை மனிதனாகத்தான் உணரமுடியும் என்று நினைக்கிறேன்.

(ஜியார்ஜ் மேற்சட்டையையும் தொப்பியையும் கொண்டுவந்து மருத்துவரிடம் ஒப்படைக்கிறான்.)

மருத்துவர்

நன்றி.

(அவரது கை காயத்தின் பொருட்டு மேற்பார்வையாளர் மேற்சட்டையை அணிவித்துவிடுகிறார்.)

மருத்துவர்

(சிரிக்கிறார்)

தேவை உண்மையை அப்பட்டமாக நிகழ்த்திக் காட்டிவிடுகிறது. நன்றி. நல்லிரவு குழந்தைகளே!

குழந்தைகள்

நல்லிரவு மருத்துவரே!

மருத்துவர்

(கதவை மூடுவதற்கு முன் அதைப் பிடித்தபடி மேற்பார்வையாளரிடம் பேசுகிறார்)

ஒருவேளை உங்கள் மனைவி குழந்தையைப் பற்றி…

(படியிலிறங்கி கதவை மூடுகிறார் மேற்பார்வையாளர். அதனால் உரையாடலை அதற்கு மேல் நம்மால் கேட்க முடியவில்லை. குழந்தைகள் தனியாக நிற்கின்றனர். அமைதியாக இருக்கின்றனர். பிறகு…)

ஃபெர்டினாண்டு

அப்படியானால்…

ஜியார்ஜ்

என்ன சொல்ல வருகிறாய்? ‘அப்படியானால்…’ என்றால்?

ஃபெர்டினாண்டு

(பொருளற்ற கேள்வி என்பதைப் போல் சலித்துக்கொண்டு)

எல்லாம் சரி என்றேன்.

(மெளனம்.)

லீசல்

(ஃபெர்டினாண்டிடம்)

அப்பாவைப் பார்க்க அவரது அலுவலக அறைக்கு நீ எப்போது சென்றாய்?

ஃபெர்டினாண்டு

ஏன்?

லீசல்

சும்மா கேட்டேன்.

45. வெளியே / பகல்: பனி படர்ந்த கிராமச்சாலை.

பள்ளியாசிரியர் முதுகில் பையை மாட்டிக்கொண்டு பனிச்சாலையில் நடக்கிறார். அச்சாலையில் சில வண்டிகள் சென்ற தடத்தையன்றி வேறொரு தடமும் இல்லை. 

கதைசொல்லி 

ஒருவழியாக டிசம்பர் மத்தியில் ஏவாவிடமிருந்து எனக்குக் கடிதம் வந்து சேர்ந்தது. அவளுக்கு மாவட்ட தலைமையகத்தில் ஒரு வேலைக்கு ஏற்பாடு செய்திருந்தார் அவள் தந்தை. அவள் வரும் புத்தாண்டில் அந்தப் பணியில் சேர்ந்தாக வேண்டும். புகலிடம் தேடி அன்று அவள் பள்ளிக்கூடத்திற்கு வந்து நாங்கள் இருவரும் தத்தம் சிறிய வாழ்வின் கதைகளை விடியவிடிய பேசிப் பகிர்ந்தது; அதன்பிறகு அவளது வெளிறிய முகத்தையும் நாணமும் வெளிப்படைத்தன்மையும் ஒருங்கே கூடிய பண்பையும் செந்நிறக் கூந்தலையும் ஒருபோதும் என்னால் நினைவகற்ற முடியவில்லை. புத்தாண்டு காலை வரை பள்ளி விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கிறித்துமஸ் முடிந்து இரண்டு நாட்களில் வெயிலும் பனியுமாக இருந்த சூழ்நிலையில் ஏவாவின் பெற்றோரைச் சந்திப்பதற்காக ஓபர்ஸ்டார்ஃப் நோக்கி பயணத்தைத் தொடங்கினேன்.  

46. உள்ளே / பகல்: குதிரை வியாபாரி வீட்டுக் கூடம்.

கீழ் மத்திய வர்க்க தர அறை. 

ஏவாவுக்கும் அவளது சகோதர சகோதரிகளுக்கும் முன்பாகப் பள்ளியாசிரியர் அமர்ந்திருக்கிறார். ஆறிலிருந்து பதினான்கு வரை அகவையுள்ள ஆறு குழந்தைகள் அவ்வறையில் இருக்கின்றனர். அனைவரின் தலைமுடியும் ஏவாவைப் போல சிவந்திருந்தது. தயக்கத்துடன் கூடிய மெளனம். சிறு பிள்ளைகள் இரகசியமாக எதையோ பேசிக் கெக்கலிக்கின்றனர். உரையாடல் மெதுவாக நகர்கிறது. நெடிய மெளனத்திற்குப் பிறகு.

ஏவா

அப்புறம்… சிஜி?

பள்ளியாசிரியர்

எனக்குத் தெரியவில்லை. சீமாட்டி இன்னும் திரும்பி வரவே இல்லை.

ஏவா

சீமான் எப்படி இருக்கிறார்?

பள்ளியாசிரியர்

(தோளைக் குலுக்கி)

அவரைக் காணவே முடியவில்லை. யாரிடமும் அவர் பேசுவதும் இல்லை. ஒன்றும் தெரியவில்லை. அவர்கள் தெற்குப் பக்கமாகச் சென்றுவிட்டார்கள்… இத்தாலிக்கு.

ஏவா

இத்தாலிக்கா? நிஜமாகவா?

(மெளனம். இருவரின் தயக்கத்தைப் பார்த்த பிள்ளைகள் மீண்டும் கெக்கலித்துச் சிரிக்கின்றனர். பள்ளியாசிரியரும் ஏவாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்கின்றனர். ஏவா தன் விழிகளை விலக்கிக்கொள்கிறாள்.)

பள்ளியாசிரியர்

மர அறுப்பாலையை உடைத்து அழிக்க முடிவு செய்துவிட்டார்கள். அதனால் பெரிய பலனொன்றும் இல்லையாம். மேற்பார்வையாளர் அப்படித்தான் சொன்னார்.

(சரியாக அப்போது கதவு திறக்க ஏவாவின் பெற்றோர் உள்ளே வந்தனர். தாய் சென்று தந்தையை அழைத்து வந்திருந்தாள். நாற்பதுகளின் பிற்பகுதியில் சதைப்பிடிப்பாக இருந்த அவள், தன் தோளில் கம்பளிச் சால்வையைப் போர்த்தியிருந்தாள். ஏவாவின் தந்தை மேற்சட்டையும் தொப்பியும் அணிந்திருந்தார். தன் ஐம்பதுகளின் தொடக்கத்தில் இருந்த திடமான தேகத்தவர் அவர். உழவுக் குமுகத்தைச் சேர்ந்தவர். அநேகமாக, நேரடியாக மதுக்கூடத்திலிருந்து வந்திருக்கிறார். குடித்திருக்கக்கூடும். பள்ளியாசிரியர், ஏவா, பிள்ளைகள் எல்லோரும் எழுந்து நின்றனர். பள்ளியாசிரியர் வளைந்து குனிந்து வணங்கினார்.)

பள்ளியாசிரியர்

நற்காலை!

ஏவாவின் தந்தை

நற்காலை வணக்கம். இளைஞனே!

(இருவரும் கைக்குலுக்கினர்.)

ஏவாவின் தந்தை

தயவுசெய்து அமருங்கள். நாங்கள் ஆச்சாரம் பார்ப்பவர்கள் இல்லை.

(சிறு கையசைவின் மூலம் அமரச் சொன்னார்.)

(பிள்ளைகளை நோக்கி)

ஓடுங்கள்!

(தந்தை வந்ததிலிருந்து ஆடுபோல விழித்த பிள்ளைகள் எல்லோரும் அறையைவிட்டு வெளியேறினர். தந்தை மேற்சட்டையின் பொத்தான்களைக் கழற்றி தன் தொப்பியை மெத்தையமர்வில் வீசிவிட்டு அமர்ந்தார். தாய் தன் மார்சால்வையை அகற்றிவிட்டு பள்ளியாசிரியரிடம் கேட்டாள்.)

ஏவாவின் தாய்

உங்களுக்குக் குடிக்க என்ன வேண்டும்?

பள்ளியாசிரியர்

மிக்க நன்றி. எதுவும் வேண்டாம்.

ஏவாவின் தாய்

உண்மையாகவா?

பள்ளியாசிரியர்

ஆம். உண்மையாக. எதுவும் வேண்டாம் அம்மா.

(ஏவாவுக்கு அருகே அமர்ந்த தந்தை பள்ளியாசிரியரைப் பார்க்கிறார். விகற்பமாக உணர்ந்த ஏவா தயக்கத்துடன் மேசையைப் பார்க்கிறாள்.)

ஏவாவின் தந்தை

அப்படியானால் நீங்கள் ஒரு ஆசிரியர்?

பள்ளியாசிரியர்

ஆம்.

ஏவாவின் தந்தை

உங்களால் மனைவியை வைத்து சமாளிக்க முடியுமா?

(சிறு தயக்கத்துடனான மெளனம்.)

பள்ளியாசிரியர்

என் தந்தை கிரண்ட்பாக்கில் தையல்காரராக இருக்கிறார். என்னிடம் பட்டயப் படிப்புச் சான்றிதழ் இருக்கிறது. போதுமான அளவு சம்பாதித்து வருகிறேன் எனலாம்.

ஏவாவின் தந்தை

நீங்கள் உம் தந்தையின் தொழிலையே தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். அது அறிவான தேர்வாக இருந்திருக்கும்.

(சிறிய அமைதி.)

சரி. ஏன் இவள் மீது இத்தனை ஆர்வம்? அவள் வெறும் குழந்தைதான். நீரோ அவளுக்கு அப்பாவைப் போல் இருக்கிறீர்.

பள்ளியாசிரியர்

(சிரித்தபடி)

எனக்கு வயது முப்பத்தொன்றுதான்.

ஏவாவின் தந்தை

(ஏளனப் புன்னகையுடன்)

தேவையானதைச் செய்ய நிச்சயம் உன்னால் முடியும்.

ஏவாவின் தாய்

(தயக்கத்துடன்)

ஏவா அப்பா!

(ஏவாவுக்கும் பள்ளியாசிரியருக்கும் எங்கு தம் பார்வையை எங்கு செலுத்துவது வைப்பது என்று தெரியவில்லை.)

ஏவாவின் தந்தை

சரிy, இப்போது சற்று கவனத்துடன் பேசுவோம். அவளுக்குக் கல்யாணம் செய்ய விருப்பம் இருக்கிறதா இல்லையா என்று நீங்கள் அறிவீர்களா? அவள் இன்னும் சிறு பிள்ளைதான். அவளுக்கு உலகத்தைப் பற்றி எந்த அறிவும் கிடையாது.

(ஏவாவை நோக்கித் திரும்பி)

ஏதேனும் சொல்லேன். நீ இவனை விரும்புகிறாயா, என்ன?

(பூமி விரிந்து தன்னை விழுங்கினால் பரவாயில்லை என்று ஏவாவுக்குத் தோன்றுகிறது.)

ஏவாவின் தந்தை

மிகவும் அலட்டிக்கொள்ளாதே. புதுப்பனியில் இவ்வளவு தொலைவு கடந்து உனக்காகத்தானே அவன் வந்திருக்கிறான்.

ஏவாவின் தாய்

ஏன் அவளை இம்சிக்கிறீர்கள்? விடுங்கள். நிச்சயம் அவரை ஏவா விரும்புகிறாள்தான். பார்த்தாலே தெரியவில்லையா?

ஏவாவின் தந்தை

எனக்கெப்படி தெரியும்? அவள் வாயடைத்துக்கொண்டிருந்தால்…

(அவமானத்தால் அழுதுவிடக்கூடாது என்பதற்காக ஏவா அங்கிருந்து விலகி ஓடினாள். தந்தையின் செயலுக்குத் தலையசைத்துத் தன் ஒவ்வாமையை வெளிப்படுத்தியபடி ஏவாவைப் பின்தொடர்ந்து சென்றாள் அவள் தாய். ஏவா வெளியேறுவதைக் கண்ட பள்ளியாசிரியர் எழுந்து நின்றார். அவள் பின்னால் செல்லத் தோன்றினாலும் அவள் தந்தைக்கு மரியாதை அளிக்கும் விதமாக அதைத் தவிர்த்தார். தந்தை மெளனமாகப் பேச்சைத் தொடர்ந்தார்.)

ஏவாவின் தந்தை

அமருங்கள். பெண்களே இப்படித்தான். பெரும்பாலானோர் கொஞ்சம் பரபரவென்றுதான் நடந்துகொள்வார்கள். ஒருவிதத்தில் என் மகள் வீட்டிலிருந்து வெளியேறுவது எனக்கும் ஏற்புதான். நீங்களே பார்த்திருப்பீர்கள். நான் நிறைத்தாக வேண்டிய வயிறுகள் இங்கு ஏகப்பட்டவை. ஆனால் இன்னொரு கோணத்தில் இவையெல்லாம் மிக வேகமாக நடக்கிறது. எனக்கு உங்களை யாரெனத் தெரியாது. அதனால் உங்களை நான் வெறுக்கிறேன் என்று பொருளில்லை. ஆனாலும் உங்களைப் பற்றிய தகவல்களை நான் தெரிந்துகொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி நகரத்தின் சிகை அலங்காரப் பெண்மணி அவளை வேலைக்கு வைத்துக்கொள்ள சம்மதித்திருக்கிறாள். அந்த வகையில் ஏவா உலகின் சில சாதக பாதகங்களை அறிந்துகொள்ள வாய்ப்பும் கிடைக்கும். ஓராண்டு கழித்தும் இதே எண்ணத்துடன் அவள் இருப்பாளாயின் நாம் மீண்டும் இதைப் பற்றி பேசலாம். நீங்களும் உங்கள் மனத்தில் ஒரு தெளிவு பெறலாம். சரிதானே? 

பள்ளியாசிரியர்

நான் உண்மையில்…. என்ன நினைத்தேன் எனில்…

ஏவாவின் தந்தை

(இடைமறித்து)

புரிகிறது. புரிகிறது. இது ஒரு வாய்ப்பு. வேண்டாமெனில் வேறு பேச்சே இல்லை. 

பள்ளியாசிரியர்

(சிறிய அமைதிக்குப் பின்)

நீங்கள் கட்டாயமாகச் சொன்னால்… சரிதான்.

ஏவாவின் தந்தை

என் நிபந்தனை மாறாது.

(சிறு தயக்கத்திற்குப் பிறகு நிபந்தனையை ஏற்ற பள்ளியாசிரியருக்குத் தன் கையை நீட்டுகிறார் ஏவாவின் தந்தை.)

ஏவாவின் தந்தை

அவ்வளவுதான். எனக்கு மகிழ்ச்சி. எனக்கு வேலை காத்திருக்கிறது. விடுமுறை நாளில்கூட ஓய்வில்லை. என் மகளை மீண்டும் இங்கு வரச்சொல்கிறேன். நீங்கள் அவளுக்கு விடைசொல்லிக் கிளம்பலாம். ஓராண்டு விரைவாக ஓடிவிடும். உலகம் ஒன்றும் சிதைந்து சிதறிவிடாது. உங்கள் விடுமுறைகளிலும் அவளை வந்து பார்க்கலாம். நன்றி. வருகிறேன். 

(அவர் அறையை விட்டு அகல்கிறார். பள்ளியாசிரியர் நடந்தவற்றால் சமநிலை இழக்கிறார். எழுந்து ஓரிரு அடிகள் நடக்கிறார். பின் மீண்டும் அமர்ந்து சிந்திக்கிறார். இறுதியில் கதவு திறந்து ஏவா உள்ளே நுழைகிறாள். அவளுக்கு உண்மையில் என்ன செய்வதென்றே தெரியவில்லை. பள்ளியாசிரியரும் குழம்பி நிற்கிறார். அவள் வந்ததும் எழுந்து நிற்கிறார். பள்ளியாசிரியரும் அமர்கிறார். இருவரும் கணப்பார்வைகளையும் சிறு புன்னகைகளையும் பரிமாறிக்கொள்கின்றனர். மெளனம்.)

பள்ளியாசிரியர்

உன் தந்தை சொன்னாரா?

ஏவா

ஆமாம்.

(மெளனம்.)

பள்ளியாசிரியர்

உனக்கு சம்மதம்தானா?

(மெளனம்.)

ஏவா

உங்களுக்குச் சம்மதமா… ஐயா?

பள்ளியாசிரியர்

(சிரித்தபடி)

என்னிடம் இத்தனை மரியாதை தேவையில்லை.

ஏவா நிமிர்ந்து பார்க்கிறாள். அவர்களது விழிகள் சந்தித்துக்கொள்கின்றன. அதன்பிறகு அவள் கையை ஏந்துகிறார். ஒரு சொல்லுமின்றி அவர்கள் அமர்ந்திருந்தனர்.

47. உள்ளே / இரவு: போதகர் இல்லம்: சிறுவர்களது படுக்கையறை.

இருட்டாக இருக்கிறது. முதல் பார்வையில் படுக்கையில் படுத்திருப்பவர்களை நம்மால் கண்டறிய முடியவில்லை. பின்னர் மார்டின், ஆண்டன், ஃப்ளோரியன் மூவரும் தெரிகிறார்கள். சாளரத்தின் வழியே செந்நிறப் பிழம்பு மெல்ல மெல்லச் செறிவடைவது தெரிகிறது. 

சடுதியில்..

மார்டின்

(குரல் மட்டும் கேட்கிறது)

டோனி விழித்திருக்கிறாயா? டோனி….

ஆண்டன்

(அரை உறக்கக் குரலில்)

என்னாயிற்று?

மார்டின்

அதைப் பார்…

ஆண்டன்

என்ன நடந்தது?!

மார்டின்

என்ன நடக்கிறது என்று வெளியே பார்.

(ஆண்டன் மெதுவாக எழுந்தமர்ந்து தன் கண்களைக் கசக்கிக்கொள்கிறான்.)

ஆண்டன்

கடவுளே, உனக்கு என்னதான் வேண்டும்?

மார்டின்

அங்கே பார். சாளரத்தின் வழியாக வெளியே பார்.

(ஆண்டன் சாளரத்தை நோக்கித் திரும்பி செந்நிற ஜொலிப்பைப் பார்க்கிறான். படுக்கையில் இருந்து இறங்கி சாளரத்தை நோக்கிச் செல்கிறான். சடுதியில் அவன் உறக்கம் தொலைத்தவனாய் முழுமையாக விழித்து வியக்கிறான்.)

ஆண்டன்

அதோ, பண்ணை வீட்டில் ஏதோ ஒன்று எரிகிறது.

மார்டின்

என் கைக்கட்டைக் கழற்றிவிடு.

(ஆண்டன் மார்டினைத் திரும்பி பார்த்துவிட்டுத் தயங்குகிறான்.)

மார்டின்

வா! வந்து கழற்றிவிடு!

(ஆண்டன் செய்வதறியாது திகைக்கிறான். சாளரத்தைத் திரும்பிப் பார்த்துவிட்டு மீண்டும் மார்டினைப் பார்க்கிறான். பின்னவன் சினத்தில் கத்துகிறான்.)

மார்டின்

உன்னைத்தான் சொன்னேன். என்னைக் கழற்றிவிடுடா!

ஆண்டன்

என்ன செய்வதென்று எனக்குப் புரியவில்லையே.

மார்டின்

இப்ப என் கையைக் கழற்றி விடவில்லையென்றால் உன்னைக் காட்டுத்தனமாக அடிப்பேன். 

(இந்தப் பெருஞ்சத்தம் ஃப்ளோரியனையும் எழுப்பிவிட்டது. அரை மயக்கக் குரலில் அவன் பேசினான்.)

ஃப்ளோரியன்

என்ன நடக்கிறது? ஏன் உங்களால் அமைதியாக இருக்க முடியாதா?

மார்டின்

ஃப்ளோரி, வா என்னருகே வந்து என் கட்டை அவிழ்த்துவிடு.

ஃப்ளோரியன்

என்ன நடக்கிறது?

மார்டின்

டேய்! என்னைக் கழற்றி விடுங்கடா! தீப்பிடித்து எரிகிறதடா முட்டாள்களா!

ஃப்ளோரியன்

எரிகிறதா?

(ஃப்ளோரியன் எழுந்து நின்று சாளரத்தில் எட்டிப் பார்க்கிறான். வெளியே பார்த்து வியப்புடன் கூடிய குரலில்..)

ஃப்ளோரியன்

ஐயோ! தீப்பற்றி எரிகிறது.

மார்டின்

(அவனைப் பழிக்கும் தொனியில்)

வவ்வவ்வே… தீப்பற்றி எரிகிறது. சரிதான். இப்போது என் கையைக் கழற்றிவிடு.

(ஃப்ளோரியன் ஆண்டனை வினா விழிகளுடன் பார்த்துவிட்டு மார்டினிடம் சொல்கிறான்.)

ஃப்ளோரியன்

அப்பா கழற்ற அனுமதிக்கவில்லையே.

(சிறுவர்களின் பார்வையில் திருப்புக்கோணம். சாளரத்தில் இருந்து மார்டினைக் காண்கிறோம். முதலில் முன்பகுதியில் இருந்து பார்க்கிறோம். அவனது மணிக்கட்டுகள் கட்டிலின் இடவலப்புறங்களில் உள்ல மரச்சட்டங்களில் கட்டப்பட்டிருக்கிறது. எழுந்து உட்கார முயன்றபடி தன் கட்டுகளை வெறித்தனமாக இழுக்கிறான் மார்டின்.)

மார்டின்

(வெறியுடன்)

எதோ ஆபத்தாக இருக்கப்போகிறது மடையர்களா! யாராவது அவர்களை எச்சரிக்க வேண்டும். (சத்தமாக ஒலியெழுப்பிக் கத்துகிறான்.) அப்பா.. அம்மா… அப்பா!

(இந்தப் பெருங்கூச்சலால் பதறியவனாய் அவனருகே சென்று கைக்கட்டுகளை அவிழ்த்துவிடுகிறான் ஆண்டன்.)

ஆண்டன்

கத்துவதை நிறுத்து. அவிழ்த்துவிடுகிறேன்.

ஃப்ளோரியன்

நான் அம்மாவை அழைக்கட்டுமா?

அதற்குள் தடதடவெனப் படிக்கட்டுகளில் யாரோ ஏறிவருவதைக் கேட்க முடிகிறது. கதவு திறக்க இரவுடையில் இருந்த அம்மா உள்ளே நுழைகிறாள்.

தாய்

இங்கே என்ன கூச்சல் குழப்பம்?

(மார்டின் கைகள் அப்போதுதான் விடுதலையடைந்திருந்தன.)

மார்டின்

தீப்பற்றி எரிகிறது.

தாய்

தெரியும். உங்கள் தந்தை ஏற்கெனவே கிளம்பிப் போயிருக்கிறார். 

(அம்மாவைப் பின்தொடர்ந்து பெண் பிள்ளைகளும் கதவு வழியே நுழைந்தனர். கூச்சலால் அங்கு வந்திருந்தனர். அம்மா அவர்களை நோக்கித் திரும்பிச் சொன்னாள்.)

தாய்

நீங்கள் இங்கே என்ன செய்கிறீர்கள்? உடனே படுக்கைக்குச் செல்லுங்கள். ஒன்றுமில்லை. பண்ணை வீட்டில் தீப்பிடித்திருக்கிறது. நீங்கள் அஞ்சத் தேவையில்லை. படுக்கைக்குச் சென்று உறங்குங்கள். மேரி இங்கே வா. உன் தங்கைகளை அழைத்துக்கொண்டு உன் அறைக்குப் போ. இல்லாவிடில் நீர்க்கோவை பிடித்துக்கொள்ளும். 

(பெண் பிள்ளைகள் சென்றதும் அம்மா மார்டினை நோக்கித் திரும்புகிறாள்.)

ஏன் இத்தனைக் கூச்சல் எழுப்புகிறாய்? எல்லோர் தூக்கத்தையும் கெடுத்துவிட்டாய்.

(என்ன பதில் சொல்வதென அறியாதவனாய் மன்னிப்பு கோரும் தொனியில் மார்டின் பேசினான்.)

மார்டின்

ஆபத்து என்று பயந்துவிட்டேன். 

ஆண்டன்

(தயக்கத்துடன்)

நான்தான் கைக்கட்டை அவிழ்த்தேன்.

தாய்

(அவர்களைச் சாந்தப்படுத்தியவாறு)

சரி. இப்போது எல்லாம் சரியாகிவிட்டது. நாளை தந்தை விரிவாகச் சொல்வார். சரியா? இப்போது அனைவரும் படுக்கைக்குச் செல்லுங்கள். நீங்கள் படுக்கும் வரை நான் காத்திருப்பேன். வெளியே கடுமையாகக் குளிர்கிறது. 

(மூன்று சிறுவர்களும் படுக்கச் செல்கிறார்கள். மார்டின் கைகளை ஆண்டன் மீண்டும் இழுத்துக் கட்டுகிறான். தன் அண்ணன் மீது போர்வையைப் படர விடுகிறான். அதன் பிறகு அனைவரும் தத்தம் போர்வைக்குள் புகுந்துகொள்கின்றனர்.)

தாய்

நல்லிரவு. நல்லுறக்கம்!

மார்டின், ஆண்டன், ஃப்ளோரியன்

நல்லிரவு அம்மா!

அம்மா கதவை மூடுகிறாள். வெளியில் இருந்து தீச்சுவாலை செறிந்து பெருகுவதைக் காண முடிகிறது.

48. வெளியே / இரவு: நிறுவுக் காட்சிகள்.

களஞ்சியம் கொழுந்துவிட்டெரிகிறது. தீயின் இரைச்சல்.

அது பின்புலம் அமைக்க ஒளிர் நிழலாக நாம் சீமான், மேற்பார்வையாளரும் அவர் மனைவியும், போதகர், இன்னும் பலர் என ஒரு திரளைக் காண்கிறோம். அனைவரும் களஞ்சியத்தைக் காக்க முடியாமல் திகைத்து நிற்கின்றனர்.

49. உள்ளே / இரவு: மேற்பார்வையாளர் இல்லம்

குழந்தைகளின் படுக்கையறையில் அருகில் இருந்து வரும் தீப்பிழம்பின் ஒளியால் நாம் லீசல், ஜியார்ஜ், ஃபெர்டினாண்டு மூவரையும் காண்கிறோம். அவர்கள் சாளரத்தில் நின்றபடி தீயுமிழ்வைக் காண்கின்றனர். 

50. வெளியே / நாள்: பண்ணைக் கட்டடங்கள்.

பன்றிக்கொட்டிலில் இறந்துபோன தன் தந்தையைக் கண்டுகொள்கிறான் பவுல். சுவரில் இருந்த ஆணியில் கயிற்றைக் கட்டி தூக்கிட்டு தொங்கியிருக்கிறார் உழவர். உதைக்கப்பட்ட முக்காலி அவரது தொங்கி ஆடும் கால்களுக்குக் கீழேயே கிடந்தது. 

பவுல் கொட்டிலில் இருந்து ஓடி வெளியேறினான். நின்றான்.

நுனிக்காலில் எக்கி கொட்டில் கதவைப் பார்த்தான். கதவைத் தொட்டபடி நின்றான். மீண்டும் உள்ளே செல்வதற்கான மனோதிடம் அவனிடம் இல்லை. மெல்ல வீட்டின் கூடத்தை நோக்கிச் சென்றான். அங்கு கூடியிருந்த பிள்ளைகள் யாரும் அவனைப் பொருட்படுத்தவில்லை. சமைத்துக்கொண்டிருந்த லெனி அவனைச் சற்றே நிமிர்ந்து பார்த்தாள். பவுல் அமர்வு பலகையில் அமர்ந்து சுவரில் சாய்ந்தான். அங்கு இருட்டாக இருந்தது.

-தொடரும்.