அறிவும் உணர்வும் தடுமாறும் காதல்

3 comments

காதலில் தமக்கே தமக்கான கனவுக்கன்னியோ, கனவு நாயகனோ தேவை என்று பல எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கும் இளைஞர்கள் கூட்டம் அதிகம் என அறிவோம். இங்கு கனவுக்கன்னி, கனவு நாயகன் என்று அறியப்படுபவர்களின் அழகு, உடை, அவர்கள் விரும்பிச் சாப்பிடும் உணவு, உண்ணும் முறைகள், அவர்களுடைய உடல் எடை, அவர்கள் செய்யும் அலங்காரங்கள் ஆகியவற்றைத் தாமும் செய்து அந்த நபரை அப்படியே நகலெடுப்பார்கள். இப்படியாகத்தான் ஒவ்வொரு கனவு நாயகனும், கனவுக்கன்னியும் உருவாக்கப்படுகிறார்கள். தற்போதைய யூட்யூப் சமுகத்தில் அவர்களுக்கென்று மிகப்பெரிய ஒரு ரசிகப் பட்டாளத்தை உருவாக்கி வைத்தும் இருக்கிறார்கள்.

இவை எல்லாவற்றையும் மீறி தற்போதைய காலகட்டங்களில் இளைஞர்களில் ஒரு சாரார் காதலில் கொஞ்சம் மாற்றம் கொண்டுவரத் தொடங்கிவிட்டார்கள். இவர்கள் கனவுக்கன்னியாக, கனவுநாயகனாக அல்லாமல் அறிவில் சிறந்து விளங்கும் இண்டலெக்சுவல்கள் மீது காதல்கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள். இதில் அவர்கள் படிக்கும் புத்தகங்கள், அவர்கள் செய்யும் புராஜக்ட் வெற்றிகள், அதில் அவர்கள் கையாளும் யுக்திகள், அவர்களது முடிவெடுக்கும் திறன், எந்தச் சூழலிலும் புலம்பாமல், அடுத்து என்ன என்ற ரீதியில் வாழ்க்கையைக் கையாளும் விதம் என்று அவர்களுடைய ஆட்டிடியூடை முன்வைத்து காதல் செய்ய ஆரம்பிக்கிறார்கள். இதற்கு அவர்கள் சொல்லும் காரணம், உடல் அளவில் மட்டும் ஈர்ப்பு இல்லாமல், தங்களுடைய செக்ஸுவல் அப்பேரட்டஸ் பகுதி தங்களுடைய மூளைக்குள் இருந்து ஆரம்பிக்கிறது என்று சொல்கிறார்கள்.

இப்படி அறிவு சார்ந்து காதல் துணையைத் தேர்ந்தெடுக்கலாம் என்ற எண்ணம் வந்த பின், அதில் இக்காலத்தில் ஆணுக்கும் பெண்ணுக்குமான புரிதலில் உள்ள நிறை குறைகளை இக்கட்டுரையில் அலசப் போகிறேன்.

பெண்ணின் கல்வியறிவு பற்றியும் அவளது சுதந்திரம் பற்றியும் பேசும் இந்தச் சமூகம்தான், அவளது சிந்தனையின் வளர்ச்சியைப் பார்த்து பெரிய பயத்தையும், திமிரானவள் என்கிற பிம்பத்தையும் கட்டமைக்கிறது. “அறிவாளிப் பெண்” என்றாலே யாருடைய பேச்சையும் கேட்காமல் இருப்பவள் என்றும், அவளுடன் எது குறித்தும் எளிதாக உரையாட முடியாது என்றும் சமூகம் எல்லோரிடத்திலும் சொல்கிறது. தெளிவாகச் சிந்திக்கும் பெண்ணை ஆண், பெண் இருவரும் இயல்பாக அவரவர் வட்டத்தில் சேர்த்துக்கொள்ளத் தயங்குகின்றனர். என்னதான் தெளிவாக இருந்தாலும் இம்மாதிரியான செயல்கள் தொடரும்போது, அறிவாளியாகக் கருதப்படும் பெண்கள், தங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் உணர்வுரீதியாக நிலைகுலைந்து போகிறார்கள்.

“படிச்சா ரொம்ப நல்லா வருவ” என்பது போன்ற தன்னம்பிக்கையூட்டும் வரிகளைப் பின்பற்றி வெற்றிபெற்ற பெண்களை நோக்கி, இந்தச் சமூகம் விதிக்கும் கட்டுப்பாடுகள் அளப்பரியவை. அவள் சிந்தித்துப் பேசும் வார்த்தைகளுக்கும் இத்தகைய கட்டுப்பாடுகளுக்கும் இடையே மிகப்பெரிய முரணை யதார்த்த வாழ்க்கை கண் முன் விரிக்கிறது. ஒவ்வொரு பெண்ணிடமும் “நல்லா படித்து, தெளிவா முடிவெடுக்கத் தெரிந்தால் போதும், நீ நினைத்த அத்தனையும் உன் கைகளில் வந்துசேரும்” என்று சொல்லிக் கொடுக்கிறோம். ஆனால், இதையெல்லாம் யோசிக்கும்போது இந்த அறிவின் வளர்ச்சியால் ஆண், பெண் உறவில் நிகழும் வன்முறைகள்தான் அதிகமாக மாறி வருகின்றன என்று சொன்னால் மிகையாகாது.

இங்கே கல்வியறிவு என்பது சிந்தனையை மேம்படுத்தும் என்று எல்லாரும் புரிந்து வைத்திருக்கிறோம். ஆனால், இங்கு கல்வியறிவைக் கல்வித் தகுதியாக மாற்றி, அதன் மூலம் கிடைக்கும் பதவியும் வருமானமும் மட்டுமே சிந்தனையின் வளர்ச்சி என்ற கோணத்தில் பார்க்கவும் பழக்கப்பட்டு வருகிறோம்.

இதில் நாம் கவனிக்க வேண்டிய இடம் என்னவென்றால், conscientiousness-க்கும், Fluid intelligence-க்கும் உள்ள வேறுபாடு.

ஆண்களின் காதலில் உள்ள இண்டலக்சுவல் தன்மையில் எப்போதும் conscientiousness கலந்திருக்கும். அதாவது எத்தனை முற்போக்கு இருந்தாலும், அதில் சமூகம் சொல்லும் சாதி, மதம், வர்க்கம் எல்லாம் கலந்துதான் பேசுகிறார்கள். ஆனால் பெண்ணின் காதலில் இண்டலக்சுவல் என்ற அம்சம் புதிய மாற்றத்தை உருவாக்குகிறது. புதிதாகக் குடும்ப அமைப்பில் உள்ள மூடப்பழக்கங்களை உடைத்து அறிவின்பால் ஒரு குடும்பத்தை உருவாக்குவதாக அது இருக்கிறது.

இங்கு எல்லாமே பாகுபாடு கலந்துதான் பார்க்கப்படுகிறது என்று சொல்லும்போது, மனிதநேயம் மட்டும் அல்ல, அறிவின் வளர்ச்சிகூட பாகுபாடு கலந்துதான் பார்க்கப்படுகிறது. “அனைத்தும் சமம்” என்று சொல்பவர்களிடத்தில் எதுவும் சமம் இல்லை என்று சொல்வதைவிட “அனைத்தும் சமம்” என்பதை இங்கு யாருமே முறையாக வாழ்வியல் களத்தில் வாழ்ந்து காட்ட முன்வரவில்லை என்றுதான் கூற வேண்டும்.

அறிவின் வளர்ச்சியால் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே வரும் மோதல்கள் எல்லாமே “என்னைச் சமமாக நடத்து” என்பதே ஆகும். ஆனால் இங்கு ஆண் பார்க்கும் அறிவின் வளர்ச்சியும், பெண் பார்க்கும் அறிவின் வளர்ச்சியும் பெரியதொரு முரண்சுவரை உருவாக்கி வைத்திருக்கிறது. ஆணின் பார்வையில் பதவியும் வருமானமும்தான் அறிவின் வளர்ச்சி என்று பார்க்கப்படுகிறது. ஆனால் பெண்ணின் பார்வையில் பதவி, வருமானம் கடந்து, அவளுக்கான அங்கீகாரம், அவளுக்கான சுதந்திரம் என்று சொல்லிப் பேசவும், செயல்படவும் செய்கிறார்கள். இந்தச் செயல்கள் எல்லாம் ஆணின் மனதுக்குள் இருக்கும் பெண்ணின் பிம்பத்தை முற்றிலும் உடைத்துவிடுகின்றன. இந்தப் பிம்பம் உடைவதை ஆணால் ஏற்க முடியாமல், இருவரின் உறவுக்குள் விரிசலும் போராட்டமும் நடக்க ஆரம்பிக்கிறது.

இங்கு ஆண், பெண் காதல் என்ற உறவு என்றுமே ஒரு கற்பனையின் அடிப்படையில்தான் பேச ஆரம்பிக்கும். இதில் சினிமாவும், இலக்கியமும் அதை இன்னும் மெருகூட்டி வருகிறது. ஒரு காதலின் வெற்றி எது என்றால், ஆண் என்றுமே ஒரு பெண்ணை ராணி போல் பார்த்துக்கொள்வது, அல்லது எத்தனை பெரிய சாம்ராஜ்ஜியத்தையும் விட்டு வெளியே வந்து, அவளுக்காக, அவர்கள் காதலுக்காக ஒரு வாழ்க்கையை நடத்திக் காண்பிக்க வேண்டும் என்றாகிறது. இதுவே பெண் என்றால், கணவனுடைய ஆளுமையை வெற்றியடைய வைக்க, அவளின் திறமையை எல்லாம் பூட்டி வைத்து, குடும்பத்தை முறையாக, கௌரவமாக நடத்திக்காட்ட வேண்டும் என்பதே காதலின் நோக்கம் என்று 2022-இல் வாழ்கிற பெரும்பான்மையான மனிதர்கள் இன்னமும் நம்புகிறார்கள். இதுதான் காதலின் புனிதம் என்று பேச்சின் வழியே குறிப்பிடுகிறார்கள்.

ஓர் ஆண் தான் நேசித்த பெண்ணைத் திருமணம் வரை கொண்டுவந்ததே மிகப்பெரிய வெற்றி எனக் கருதுகிறார்கள். அதன்பின் அவர்கள் அந்தப் பெண்ணுக்காகப் பெரிதாக எதுவும் யோசிக்க மாட்டார்கள், யோசிக்கப் பழகியதும் இல்லை. வீட்டில் நடக்கும் வரவு, செலவுகளைப் பார்ப்பது, புதிதாகச் சொத்து சேர்ப்பது, ஆபரணங்கள் சேர்ப்பது, மருத்துவச் செலவுகளைப் பார்ப்பது என்று தன்னை நம்பி வந்த பெண்ணுக்குப் பொருளாதார ரீதியாக ஒரு நல்ல வாழ்க்கையைக் கொடுத்துவிட்டோம் என்கிற திருப்தியும் அதை நோக்கிய தேடலும் மட்டுமே போதும் – எத்தனை பெரிய அறிவின்பால் ஈர்ப்பில் வந்த காதலாக இருந்தாலும் – என்று இருக்கிறார்கள். பெண்ணைப் பற்றி வேறு எதுவும் தெரிந்துகொள்ள முயலவும் மாட்டார்கள்.

ஆனால் பெண்ணுக்கோ தான் நேசித்த ஆணிடம், திருமணம் கடந்து உணர்வுரீதியான பாதுகாப்பும் விடுதலையும் இருக்க வேண்டும். தன்னுடைய குடும்ப வாழ்க்கையில் இருவரும் கலந்து பேசி, முடிவெடுக்க வேண்டும் என்று சொல்வாள். அவளுடைய பதவி, வருமானம் கடந்து, அவளுக்குப் பிடித்த கனவுகளைத் துரத்த என்ன கற்க வேண்டுமோ அதைக் கற்றுக்கொள்ள முயல்வாள். அதற்கு வீட்டில் ஆண், பெண் இருவரின் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்று சொல்வாள். அவளது தொழிற்துறையில் எத்தனை நேரம் வேலை பார்க்க நேர்ந்தாலும் அதில் தேவையில்லாத குடும்ப செண்டிமெண்ட் கலக்காமல் இருக்க மெனக்கெடுவாள். ஆண் வேலை பார்க்கும்போது கிடைக்கும் சுதந்திரம், தான் வேலை பார்க்கும் போதும் இருக்க வேண்டும் என்றே ஆசைப்படுவாள்.

கணவன், குழந்தை, குடும்பம் என எல்லாவற்றிலும் அறிவில் சிறந்து விளங்கும் பெண்களுக்கு, அவர்களுடைய வாழ்க்கையில் சுதந்திரமும் ஒரு பகுதியாகத்தான் அமைந்திருக்கும். அவளுக்கு அவள் மிக முக்கியம். அவளுக்கான வாழ்க்கையை அமைக்க, ஆசையை நிறைவேற்றத்தான் அவளுடைய பதவியும் வருமானமும் இருக்கிறது. எப்போதும் போல் வெற்றுக் குடும்ப நம்பிக்கைகளைச் சொல்லி, அவளிடம் செண்டிமெண்ட் டிராமாக்கள் நடப்பதை அவள் விரும்பவது இல்லை. இதைத்தான் அவள் காதல் திருமணத்தில் எதிர்பார்க்கிறாள்.

ஆனால் இந்தச் சினிமா, புனைவு இலக்கியங்களில் காண்பிக்கப்படும் காதலுக்கு நேர் எதிரான ஒரு சமூகக் கட்டமைப்பில்தான் நாம் வாழ்கிறோம். அதனால் இவர்கள் கற்பனை செய்த காதலுக்கும், நிஜ வாழ்வில் எதிர்ப்படும் காதலுக்கும் நிறைய வேறுபாடுகள் சவால்களாக இருக்கின்றன. அப்படியான ஒரு சம்பவம் பற்றிச் சொல்கிறேன்.

ஒரு பெண் மிகப்பெரிய கார்ப்பரேட் கம்பெனியின் வைஸ் பிரசிடெண்ட்டாக வேலை பார்க்கிறார். அதே கம்பெனியில் டீம் லீடராக ஒரு பையனும் வேலை பார்க்கிறார். இருவரும் பழக ஆரம்பிக்கும்போது, இருவரது எண்ணங்கள் ஒரே மாதிரி இருக்கின்றன. அறிவின் மூலம் ஈர்க்கப்படும் காதல் எல்லாமே தன்னுடைய செக்ஸூவல் அப்பேரட்டஸ் தலைக்குள் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என்று விருப்பப்படுவார்கள். அதன்படி எண்ணத்தின் வழியே காதலும் காமமும் செயல்படத் தொடங்கும்போது அதனைத் திருமண வாழ்க்கை வரை கொண்டுபோக முடிவு எடுக்கின்றனர். ஆனால் இருவரின் வீட்டிலோ சாதி பார்க்கின்றனர். இருவரும் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்களாக இருப்பதால், நண்பர்களாக இருந்துகொள்ளுங்கள், சம்பந்தி எல்லாம் ஆக முடியாது என்று வீட்டார் மறுத்துவிடுகிறார்கள்.

பொதுவாக ஒரு மனிதனைச் சக உயிராகப் பார்க்கக் கற்றுக்கொள் என்று சொல்லும் போது இந்த வார்த்தைகள் மனிதாபிமானத்தைப் பெயரளவில் குறிப்பதாக மட்டுமே இருக்கின்றன. காதல், திருமணம் என்று வரும்போது, சக உயிர் என்பதை எல்லாம் கடந்து, இருவரின் கல்வித் தகுதியும், பதவியும், வருமானமும் மட்டுமே மிக முக்கியமான அங்கமாக மாறி வருகிறது. அதில் ஏற்படும் பிரமிப்பால் ஒருவரை ஒருவர் விரும்பும் போது, சாதி வேறுபாடு, மத வேறுபாடு, வர்க்க வேறுபாடு எல்லாவற்றையும் கடந்து ஒரு புரட்சித் திருமணம் நடத்த விரும்புகின்றனர்.

அப்படியாக வைஸ் பிரசிடெண்ட் பெண்ணும், அந்த டீம் லீடர் பையனும் இறுதியில் வீட்டினர் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்கின்றனர். திருமண வாழ்க்கையும் ரொம்ப அழகாகப் போய்க்கொண்டிருந்தது. இவர்களிடையே பிரச்சினை எப்படி ஆரம்பமானது என்று பார்த்தால், குழந்தை பிறந்த பின்தான் இருவருக்குமிடையே மனக்கசப்பு ஏற்படுகிறது.

குழந்தைக்கு யார் சாதியை அடையாளப்படுத்துவது என்ற கேள்வி வரும்போது பையன் தன் சாதியைப் பின்பற்றச் சொல்லிவிட்டார். அந்தப் பெண், “நாம் இருவரும் சேர்ந்து பேசி ஒரு முடிவுக்கு வருவோம். இன்னும் இதைப் பற்றி இருவரும் கலந்து பேசவில்லை” என்கிறார். ஆனால் கணவனோ எப்போதும் போலக் குடும்பத்தில் எல்லாரும் சொல்கிறார்கள், சமூகத்தில் கேள்வி கேட்பார்கள் என்ற வெகுஜன பதிலைச் சொல்கிறார்.

ஆணுக்கோ இக்குடும்பத்தில் தான் சொல்லும் முடிவு அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும், குடும்பத் தலைவனான தன் பேச்சை எதிர்கேள்வி கேட்பது பெரிய அவமானம் என்றும், எல்லாவற்றுக்கும் “சமூகம் வரையறுத்த ஆண்” என்ற பிம்பத்துக்குள் இருந்தே பதில் சொல்கிறான்.

ஆனால் பெண்ணோ இதில் யாருடைய தலையீடும் இல்லாமல், நாம் காதலித்து உருவாக்கிய குடும்பத்தின் அடையாளத்தை நாம் இருவரும் சேர்ந்து பேசி உருவாக்குவோம் என்கிறாள். ஆனால் ஆணும் குடும்பமும் சேர்ந்து அவளின் வார்த்தையைப் புறந்தள்ளுகிறார்கள்.

”இத்தனை பெரிய பதவியில் இருந்தும், குடும்பத்துக்குச் சம்பாதித்துக் கொடுத்தும் தனக்கு மரியாதை இல்லையா?” எனத் தன் சார்பில் எழுப்பப்படும் கேள்வியைக்கூட மதிக்கவில்லை, சுதந்திரமாகத் தன் வீட்டில், தான் நேசித்த ஆணிடம் பேசக்கூட ஓரிடம் இல்லை என்று வரும்போது, ஒரு பெரிய வெறுமையைக் கடக்கிறாள்.

நம் சமூகக் கட்டமைப்பில் எப்பவும் போல் எல்லா உறவினர்களும், “இதெல்லாம் ஒரு விசயமா?” என்று சொல்லி அவளைப் பேசவிடவில்லை, அவள் பேசுவதைக் கேட்கவும் தயாராக இல்லை. அப்புறம் என்ன காதல், கல்யாணம், அதுவும் சாதி மறுப்புத் திருமணம் என்ற அடையாளம் எதற்கு என்ற கேள்விகள் அவளுக்கு எழுகின்றன. அனைத்துமே ஒரு பிம்பமாகவும், கானல் நீராகவும் மட்டுமே நிஜ உலகில் பதிலாக வருகிறது.

இங்குதான் பெரும்பாலான ஆண்கள், நம் கல்வியறிவையும், சமூகத்தைச் சார்ந்து நாம் சிந்திக்கும் அறிவையும் குழப்பிக்கொள்கிறார்கள். ஆனால் அறிவு சார்ந்து செயல்படும் பெண்களோ கல்வியறிவு மூலம் தான் சிந்தித்த அனைத்தையும் சமூகத்திடம் எதிர்கேள்வி கேட்டு, அதற்கு முறையான பதிலையும் சொல்கிறார்கள்.

அதற்கு முக்கியக் காரணம் என்னவென்றால் பெண்கள் தன் சுயத்தைப் பற்றியும், தன் வாழ்க்கையில் நடக்கும் சரி, தவறுகள் பற்றியும் அவர்கள் உலகில் இருக்கும் ஆட்களுடன் பகிர்ந்துகொள்வார்கள், அதைப் பற்றி விவாதிப்பார்கள். அதில் அவர்கள் கற்கும் விசயங்களை வைத்துத் தன் சிந்தனைத் திறனை இன்னும் மேம்படுத்துவார்கள்.

ஆனால் ஆண்களோ, தன் சுயத்தைப் பற்றி, தன்னுடைய சொந்த வாழ்க்கையில் அவர்கள் செய்யும் சரி, தவறுகள் பற்றி குடும்ப நபர்களிடமோ, நண்பர்களிடமோ, வேலை பார்க்கும் இடத்திலோ எங்கேயும், எதுவும் பேசுவது இல்லை. அவர்களுடைய வெற்றிகள் பற்றியும், ஜாலியான விசயங்கள் பற்றியும், சமூக அரசியல், சினிமா இவைகளைப் பற்றி மட்டுமே அதிகமாகப் பேசுவார்கள். அதைத் தவிர்த்து தங்களைப் பற்றி வேறெதுவுமே பேச மாட்டார்கள். ஏனோ அது அவர்களுடைய “ஆண்மைக்கு இழுக்கு” என்றுதான் பல இடங்களில் சிந்திக்கிறார்கள். அதனால்தான் பலரால் பாராட்டப்பட்ட ஆண்கள்கூட தற்கொலை முயற்சியை நோக்கி நகர்கின்றனர்.

இங்கு ஏன் இந்த மாதிரி தெளிவான ஆண்களில் பெரும்பான்மையோர் மிகுந்த மன அழுத்தத்துக்கும் தற்கொலை சார்ந்த எண்ணத்துக்கும் ஆளாகின்றனர் என்று பார்க்கலாம். 

பதவியில் இருக்கும் தெளிவான பெண்ணைப் பார்த்து காதல் கொள்ளும் ஆண், அவளுடைய காதலும் தெளிவாகத்தான் இருக்கும் என்று உணர்வதில்லை. இங்கு ஆணுக்குத் தொழிற்துறை சார்ந்த கனவுகள் எந்த அளவுக்கு முக்கியமோ, அதே போல் பெண்ணுக்கும் தொழிற்துறை சார்ந்த கனவுகள் முக்கியம். ஆனால் ஆணோ, திருமணமானவுடன் அவன் நினைக்கும் போதெல்லாம் சமைத்துக் கொடுக்கவும், அவன் நினைக்கும் போதெல்லாம் உடலுறவு வைக்கவும், அடிக்கடி ஃபோன் செய்து பேசுவதுமாகத் தன்னுடைய பார்வையில் எல்லாமே இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறான். மற்ற நேரத்தில் அவள் எத்தனை பிசியான வேலைகள் செய்தாலும், தன்னுடனான வாழ்வில் அவளால் எதுவும் தடைபடக் கூடாது என்று யோசிக்கிறான். அதற்காக ஆண், பாசம், அன்பு என்ற பெயரில் சில விசயங்களைச் செய்யும்போது, இம்மாதிரியான புத்திசாலிப் பெண்கள் எந்த அளவுக்கு காதல், அன்பு இருக்க வேண்டுமோ, அந்த அளவுக்கு இருந்தால் போதும் என்று சொல்லிவிடுவார்கள். அன்பின் பெயரால் தன்னுடைய தொழிற்துறை சார்ந்த கனவுகள் தொந்திரவு செய்யப்படுவதை அவள் விரும்புவதில்லை.

ஆண், பெண் உறவில் இப்படித்தான் காதல் இருக்கும் என்ற பிம்பத்தைப் பெண் உடைக்கும்போது, ஆணுக்குச் சந்தேகம் வருகிறது. தன் மீது ஈர்ப்பு குறைந்துவிட்டதா, தன் மீது அவளுக்குப் பாசம் இல்லையா என்று எல்லா நேரமும் பொசசிவ் என்ற பெயரில் அவர்கள் காதலை நிரூபிக்கக் கேட்கும் போது, பெண்கள் டயர்ட் ஆகிவிடுகிறார்கள். இது தொடரும்போது ஒரு கட்டத்துக்கு மேல், பெண் தன்னைச் சுதந்திரமாக வேலை பார்க்க விடு, வேறு எதுவும் வேண்டாம் என்று சொல்லும் போது, ஆண் தனக்குள் உடைந்து போகிறான்.

தன்னைப் பார்க்காமல், தன்னைப் பற்றிச் சிந்திக்காமல், தன்னைப் பற்றிப் பேசாமல் இருக்கும் தெளிவான பெண்ணின் மீது பயத்துடன், தன் பக்கம் அவள் கவனத்தைத் திரும்ப வைப்பதற்குச் சில வன்முறைகளைக் கையாளத் தொடங்குகிறான். அதையும் அந்தப் பெண் கண்டுகொள்ளவில்லை என்றால், தன் ஆண்மை மீது சுய சந்தேகம் வந்து, ஒரு பெண்ணுடன் வாழத் தெரியாத ஆண் என்கிற அடையாளம் வரக்கூடாது என்றெண்ணி, மரணத்தை நோக்கி அவன் நகரவும் கூடும்.

ஆனால் இதே ஆண்களிடம் முரணான குணாதிசயங்களைச் சமூகத்தில் பார்க்க முடியும். அறிவில் சிறந்து விளங்கும் பெண்ணை நாட்டின் பிரதமராகத் தேர்ந்தெடுப்பார்கள், முதலமைச்சராகத் தேர்ந்தெடுப்பார்கள், சிறந்த தொழில் முனைவோர் என்று சொல்லி பாராட்டுவார்கள், தயக்கம் இல்லாமல் பெண்களைக் கொண்டாடுவார்கள். இம்மாதிரி பெண்களை உதாரணமாக எடுத்துக்காட்டி தங்கள் வீட்டுப் பெண்களுக்கு உதவி செய்வதாகட்டும், அலுவலகங்களில் பெண் ஊழியர்களுக்கு உதவி செய்வதாகட்டும் என்று பெண்கள் ரசிக்கும் ஆணாக இருப்பார்கள். ஆனால் இவை எல்லாமே தோழிகளுக்கும் மகள்களுக்கும் சகோதரிகளுக்கும் மட்டும்தான்.

இப்படியாக ஓர் ஆணுக்குப் பெண்களின் உணர்வுகளையும் திறமைகளையும் புரிந்துகொள்ளும் திறன் இருக்கும்போது, எங்கு அந்த “ஆண்” என்கிற நெடில் அடையாளம் வருகிறது என்றால், அது திருமணப் பந்தத்தில் மட்டுமே. இன்னும் மாறாத பழைய சிந்தனையுடன்தான் திருமண உறவில் ஆண்கள் பங்கேற்கிறார்கள்.

தெளிவான பார்வையோடு திருமணம் செய்யும் பெண்கள் ‘equal partnership’ என்ற இடத்தைப் பற்றிப் பேசவும் எதிர்பார்க்கவும் தொடங்கிவிட்டார்கள். ஆனால், இங்கு நம் சமுகத்தில் திருமண உறவில் பழைய சிந்தனையை அழிக்க முடியாமல், புதிய சிந்தனைக்கு வழிவிடத் தெரியாமல், எதை எதிர்க்கிறோம் என்று தெரியாமலேயே உறவுகளைப் பற்றிய அபத்தமான புரிதலுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

மனைவியோ, காதலியோ, அவர்களிடம் கொஞ்சம் தலைக்கனத்துடன் நடந்துகொண்டால் மட்டுமே மதிப்பிருக்கும் என்று ஆண்களின் மரபில் ஊறிவிட்டது. அதனால்தான் இங்கு திருமணமான பலரும் “கல்யாணம் பண்ணாதீங்க” என்று சொல்கிறார்கள்.

இந்த எண்ணப்போக்கு மாற வேண்டும். இங்கு பலருக்கும் புதிய சிந்தனை மாற்றம் புரிந்தாலும், பழமைவாத ஆண், பெண்ணின் ஈகோவை விடமுடியாமல் இருக்கிறது. இங்கு எல்லாருக்குமே ரோல் மாடல் சொல்லிப் பேசினால் எளிதாக மக்களிடம் ஒரு புதிய விசயத்தைக் கொண்டுசேர்க்க முடியும். அதனால் தெளிவான பார்வையில் குடும்ப வாழ்க்கையிலும் தொழிற்துறையிலும் சேர்ந்து வெற்றிபெறும் தம்பதிகள் மனம் திறந்து தங்களது வாழ்க்கையைச் சமூகத்தில் தொடர்ந்து வெளிப்படுத்தியும், அதில் வரும் சிக்கல்களை எப்படிக் கையாண்டனர் எனத் தத்தம் அனுபவங்களைப் பகிரும்போதும், அறிவில் சிறந்து விளங்கும் பெண்கள் திருமண வாழ்க்கையில் எந்த அளவுக்குச் சிறப்பாக இருக்கிறார்கள் என்பது ஆண்களுக்குப் புரிய வரும். அதற்குப் பல தம்பதிகள் தொடர்ந்து தங்களுக்குள்ளும் உரையாடிக்கொள்ள வேண்டும்.

இப்படித் தம்பதிகள் பேசுவதால், அவர்களுக்கு இடையே இருக்கும் புரிதலும் அதற்காக அவர்கள் செய்யும் விசயங்களும் வெளிப்படையாகத் தெரிய வரும். வீட்டில் உதவிசெய்வது, பிள்ளைகளைப் பார்த்துக்கொள்வது, யாருக்கு மீட்டிங், வேலை இருந்தாலும், வீட்டை எப்படிக் கையாண்டார்கள், எதனால் அவர்கள் காதல் வாழ்க்கையும், தொழிற்துறை வாழ்க்கையும் ஆரோக்கியமாக இருக்கிறது என்பதைப் பரவலாகப் பார்க்க முடியும். வெறுமனே புனிதப்படுத்தி, ரொமாண்டிசைஸ் செய்யாமல், இயல்பாக ஒருவருக்கு ஒருவர் காதலுடனும் சுதந்திரத்துடனும் வாழ முடியும் என்ற நம்பிக்கை திருமண உறவில் ஏற்படும். இனிவரும் காலங்களில் இப்படியாகத்தான் திருமண வாழ்க்கையை இருவரும் எதிர்பார்ப்பார்கள். அவர்களுக்கு நாம் முன்மாதிரியான தம்பதிகளைக் கண்டறிந்து பாராட்டி, அந்த இணையரைச் சமூக அங்கீகாரத்துடன் கொண்டாட வேண்டும்.

இப்படியெல்லாம் செய்யும் போதுதான், தற்போது அறிவின் அடிப்படையில் ஈர்க்கப்பட்டு திருமண வாழ்வில் ஈடுபட்டிருக்கும் தம்பதிகள், அதிலுள்ள குறைகளைச் சரிசெய்ய முயற்சி எடுப்பார்கள். இதைப் பார்க்கும் அடுத்தத் தலைமுறையினர் பாடம் கற்றுக்கொள்வார்கள். இந்த மாதிரியான துணையைத் தேர்ந்தெடுப்பவர்கள் இன்னும் விசாலமான பார்வையுடன் பழக ஆரம்பிப்பார்கள். இருவரும் பழகும்போது அதில் இரண்டு குடும்பங்களை எங்கே நிறுத்த வேண்டும், எதில் எல்லாம் அனுமதிக்க வேண்டும் என்ற தெளிவுடன் காதல் வாழ்க்கையை மேம்படுத்துவார்கள்.

அதனால் தற்போதுள்ள தம்பதிகளின் பிரச்சினைகளைப் பற்றியோ, அவர்களின் அறிவு சார்ந்த ஈர்ப்பு பற்றியோ குடும்பமும் நண்பர்களும் பேசும் கேலி கிண்டல்களைக் கையாள, ஒரு தனிப்பட்ட வெளியைத் தம்பதிகள் உருவாக்கிக்கொள்ள வேண்டும். என்ன நடந்தாலும், அதில் வரும் குறைகளை எந்த அளவுக்கு முடியுமோ, அந்த அளவுக்குச் சரிசெய்ய முயல வேண்டும். 

இந்தக் காலக்கட்டத்தில் அறிவு சார்ந்த உளவியலில் ஒரு மிகப்பெரிய மைண்ட் கேம் எல்லாருக்குள்ளும் நடக்கிறது. அதைக் கற்றுக்கொள்ளும் காலமாகத்தான் ஆண், பெண் காதலைத் தற்போது பார்க்கிறோம். இவையே இன்றைய திருமணப் பந்தத்தில் ஒரு பெரிய மாற்றத்தை நம்மிடம் உருவாக்க ஆரம்பிக்கும். நாம் காதலர்கள் போல் புதிதாகப் பழக ஆரம்பிப்போம்.

3 comments

Priya July 25, 2022 - 8:53 pm

பொதுவாகவே ஆண்கள் space வேணும் என்று சொன்னால் என்னை விட்டு விலக நினைக்கிரால் என்று தான் புரிந்து கொள்வார்கள் …working space …private space எல்லாம் சொன்னால் சண்டையில் வீடு 2 ஆகும்…. இந்த article la intelectual women’s ah epdi purinjikanum …society epdi treat பண்ணுவது என்று நல்லா சொல்லி இருக்காங்க ..

LiakathAli.K July 26, 2022 - 8:36 pm

An advanced femenist point of view….
Please write more….

Sivasankar July 28, 2022 - 11:41 am

Now I am understanding why people are saying don’t get married. You explained many things.

Yet to understand more things on this.

This is awesome☺️
Thank You.

Comments are closed.