எருக்கிலம்பற்றைக்குச் சில எட்டுகள் தள்ளி மடுவத்தில் தலைப்பூடம்

0 comment

கால்களைப் பவ்வியமாகக் கரையிலிருந்து தண்ணீருக்குள் நீட்டி வைத்துக்கொண்டான். புற்தரைக்களியிலிருந்து களப்புப்படுக்கை மணல் பிரியும் கோட்டில் குதிகாலை களியிலும் புல் வேரிலும் தண்ணீருக்குள் உராய்ந்து கொடுப்பது புதிதாய்த் தோன்றிய பித்த வெடிப்பு அரிப்புக்கு இதமாக இருந்தது. கெண்டைச்சதையில் மோதும் களப்பின் குற்றலைச்சூடு மெதுமெதுவாயிறங்கி விரல்களைத் தின்னும் குஞ்சு மீன் வழுவழுப்பில் சடுதியாக ஏறியது. ஐந்தாறு பனை மரங்களோடு சேர்த்தியாக களப்போரம் வாகாயிருந்த ஒற்றையடிப்பாதையில் அதை இழுத்து வந்து எருக்கிலம் பற்றைக்குப் பின்னால் போட்டு வைத்திருந்தான். பற்றையடியிலிருந்து வடியும் தண்ணீரைக் கண்டு சந்தேகம் வராதவாறு மண்ணை மூடி எச்சிலை காறித் துப்பியவாறு தொலைபேசியை எடுத்தான். 

“வாங்களெண்டா…”

“டைம் போய் நாறிச்சு எண்டா நாய் வந்திடும்…” 

“வாறியளா.. முபீஸிட மில்லுக் குள்ளால இறங்கி வந்தேளெண்டா குட்டிக்களப்பு பார் பின்னால நிக்கேன்…” 

எருக்கிலம் பிஞ்சு வெடிக்க கருவண்டுகள் கூட்டமாக வந்து அவன்  தலைமேல் சுற்றத் துவங்கின. ஆயுதப் பையிலிருந்த விசிறியை எடுத்து விரட்டிக் கொண்டிருந்த சிலநேரத்தில் யாரோ பார் மூலையிலிருந்து களப்பு ஓரமாக சைக்கிளை இறக்கும் சத்தம் கேட்க அவன் சுதாரித்துக் கொண்டான். களப்பின் மேல் நகாசு வேலைக்காகச் சீவிளியால் உதறிய சூரியத் துகள்களின் கதகதப்பில் கூசிக் கவ்விய கண்பார்வைக்கு சைக்கிள்கள் கிட்ட வரவர துலக்கமாகின.

“மாமா.. உனக்கெப்பிடித்தான் சாமான் அம்புடுதோ தெரியா…” 

சைக்கிள்களைச் சாத்தி விட்டு பனைமரக் கருக்கில் சாவியைக் கொழுவி வைத்தபடி பற்றைக்குப் பின்னால் மூடியிருந்ததைத் திறந்து பார்த்தனர். வாலைத் தவிர முழுப்பகுதியும் உரப்பை ஒன்றினால் மூடப்பட்டதிலிருந்து தண்ணீர் இன்னமும் சொட்டிக்கொண்டிருந்தது. வந்த இருவரில் ஒருவன் ஆயுதப்பையை தாங்கலாகத் தூக்கிக் காகிதம் சுத்தியிருந்த கூரான முனை வாள்களை ஒன்றோடொன்று விசுக்கி உராய்ந்து கொண்டான். பையை விலத்தி கால் கழுத்தென கொத்தித் தனியாக எடுக்கவென பெரிய பிளாத்திக்கு பையைச் சரிபாதியாக கிழித்து கைப்பிடி நெகிழியை அக்குள் வழியே செருகி ஆடை அழுக்காகாது கசாப்புக்காரன் தோரணைக்கு இருவரும் வந்திருந்தனர். சுற்றிவர வடலிகள் மண்டியிருக்கும் மடுவுக்குள் சாமானை இழுத்து வர ரத்தம் சீறிப் பாய்ந்துவரும் கோடுகள் நாலாபுறமும் சிதறி இழுகி வந்தன. ஆள் உயர பெரிய மடுவிலிருந்து ஒற்றையடிப்பாதைக்கு நாப்பது அல்லது ஐம்பது எட்டுகள் வரை நடக்கலாம். கள்ள மாடுகளை இப்படி மறைவான இடங்களில் அறுத்து இறைச்சியெடுப்பதுண்டு. அதனால் எலும்பு கொத்தும் சத்தம் ஒற்றையடிப் பாதை வரை கேட்டாலும் ஆபத்தில்லை. அவன் இன்னும் எருக்கிலம் பற்றை வண்டுகளைத் துரத்தியபடி பாதையோரம் சாய்ந்து கிடந்தான். அழுக்குக் கால்சராயை கால்களோடு களப்பிலிருந்து வெளியே எடுத்து வெளிறிய விரல்களைக் காயவிட்டிருந்தான். வலது குதிரையென்பு முழங்காலில் துவங்கும் ஒரு பக்கத்தில் அந்தக் குறியீடு தெளிவாகத் தெரிந்தது. அக்கரைப்பற்றில் அவனொருத்தன் தான் கொங்கோவுக்கு வேலைக்குப் போனவன். அங்கே சில வருடங்கள் சிறையிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்டதாக ஊருக்குள் கதை உலவியது. சிறு வயதிலே சென்று விட்டதாலென்னவோ அவனுக்கு நணபர்களெனச் சொல்லிக் கொள்ள யாருமில்லை. இந்தப் பொடியன்களுக்கு எப்படியோ பழக்கமாகி விட்டிருந்தான். 

அவன் பேச்சு சிந்தனை எல்லாமே புதுசாக இருக்கும். அங்கிருந்து வந்த நாளிலிருந்து அவன் காலில் அந்தக் குறியீடு இருக்கும். அவ்வப்போது வெளியே தெரிவதைச் சாதுரியமாக மறைத்துச் சமாளித்து விடுவான். தப்பித் தவறி வெளியே தெரிந்தாலும் அது கின்சசாவின் ரவுடிகள் போட்டுக் கொள்ளும் மார்க் எனச் சிரிப்பான். கின்சசாவின் பாசைகள் அவனுக்கு அத்துப் படியாயிருந்தது. யாராவது தமிழில் எதையாவது சொல்லி அதை அந்த ஊர் பாசையில் மறுகூறச் சொல்லுவதுண்டு. அவனும் சலிப்பில்லாமல் சொல்லிக்கொண்டிருப்பான். அவன் சமைக்கிற கொங்கோ உணவுகள் கிறங்கடிக்கும். கருணைக் கிழங்கை இறைச்சி, வெந்தயம், புளி, வெங்காயம் பச்சை மிளகாயோடு அவித்துச் செய்கிற ம்பாலா எச்சிலேற்றும். 

“மாமோய்.. அனஸ் வரல்லியா இன்னும்..?”. 

பனை மரத்திலிருந்து வௌவால்கள் ஒவ்வொன்றாக பறக்கத் துவங்குகிற நேரம், மெதுவான குளிர் காற்று களப்பை நீவி வந்ததில் கொஞ்சம் இலயித்திருந்தான். எலும்புகளை புதைப்பதற்கென்று அந்த மடுவைத் தாண்டி ஒரு மடுவமிருக்கும்.  பகுதியாக புதைந்து மசியலாகிய மாட்டெலும்புகளிலிருந்து கடும் துர்வாடை ஏறி வரும். அந்த இடம் பாதுகாப்பானது தான். அங்கு ஏற்கனவே அவன் தோண்டி வைத்த சிறிய குழியில் மஞ்சளிட்ட தலை மாத்திரம் கவிழ்த்துக் கிடந்தது. எலும்புகளையும் வயிற்றுக்குடல் கழிவுகளையும் சரசரவெனப் போட்டு அவர்களிருவரும் குழியை மூடி மண் இறுகும் அதிர்வு கேட்டவுடன் அவன் அவசரப் படுத்தினான். 

“கறிப்பாட்டுக்கு ஒண்டு படுத்துங்கடா மக்காள்..”.

“அவன் ஆடிப்பாடி வரட்டும்..”. 

பீடியொன்றை கொளுத்த நினைத்து வாயில் வைத்தவன் தொலைவிலிருந்து ஒரு இழை போல இசையும் பாங்கோசை முடியும் வரை காத்திருந்தான். அவ்வளவு உத்தமனெல்லாம் இல்லை அவன். இன்றைக்குப் பீடியைக் கொஞ்சம் தாமதமாகக் கொளுத்தலாம். அனஸ் இன்னும் சாவகாசமாக வரலாமென்றிருந்தது அவனுக்கு. நனைந்த கால்களில் படும் காற்றுக்கு உடம்பு கொஞ்சம் நடுங்கியது. காற்றுக்கு மட்டுமில்லை அந்த நடுக்கமென்பது உள்ளூரத் தெரிந்தது. கோடுகளாய் அலைமேலெழும்பி பசி வரி வரியாய் ஒட்டிக்கொள்ளும் நடுக்கமது.

*

தேநீர்க் கோப்பையிலிருந்து தீர்ந்த எறும்புகள் வரிசை அவன் படுத்திருந்த அக்குள் இடைவெளியினூடு சுவரைத் தொட்டது. வெயில் இறங்கியிருந்தும் அனல் தாவுகிற சுவரிலிருந்து பிசுபிசுத்த முதுகை அவ்வப்போது தொடும் காற்றின் இதத்தில் கொஞ்சம் தூங்கியிருந்தான். புடைத்த சுளகைக் கவிழ்த்துவிட்டு குளிக்கப் போயிருந்தாள் கிழவி. வாசலில் நின்ற நாக மரத்தோடு ஞெகிழிப்பூட்டோடு சாத்தியிருந்த சைக்கிளில் ஒரு செண்பகம் வந்தமர்ந்தது. அந்த நாக மரத்து  சருகையெல்லாம் தினமும் பெருக்குவதிலே கிழவியின் ஆயுசு ஏறக்குறைய முடிந்திருந்தது. வழக்கமாக உட்காரும் செண்பகத்துக்காக நாகமரத்தை வெட்டாமல் சைக்கிளைச் சாத்தி வைப்பான் அனஸ். 

“வாப்போய்… அனஸு..”. 

கிணற்றடியிலிருந்து நடுங்கும் குரல் தடித்து வந்தது. கிட்டத்தட்ட பாக்குத் தட்டின் வெண்கல அடி சரியும் போது கேட்கும் கிண்ணென்ற ஓசை. ஏறத்தாழ ஊரெல்லாம் பசியும் பஞ்சமும் மூண்ட பின் இளைத்துப் போன குரல்.

“வெச்ச சோறு காயுது.. ஒழும்பன் டா வாப்பா..”. 

சோறென்றால் முன்னரைப்போல சோறு வேறாக இரண்டு மூன்று கறி வேறாக என்றெல்லாம் இல்லை. இருப்பதை வேகவைத்து ஒன்றாகப் பிசைந்த உருண்டைகள்தான். கிழவிக்கு சில உருண்டைகள் போதுமானது. அதுவும் முழுப் பாக்கு போன்ற சிறிய உருண்டைகள். 

சுருதி மாறாத வெண்கல அதட்டலுக்கு எழும்பிச் சுருங்கி உட்கார்ந்து கொண்டான். சாச்சப்பாவின் ஞாபகம் வெறிச் என்ற தூக்க மஸ்து தெளியும் போது மெதுமெதுவாக ஒட்டத் துவங்கியது. 

“அந்தாள் ஊரெல்லாம் வாங்கிப் பொட்டு ஒளிச்சுக்குவான்..”.

“நான் விடிஞ்சொழும்பி கண்டவன்ட கத கேக்கனுமா..”. 

“அதான் மொகத்துலயே வெசலம் சென்ன..”. 

கீழே வழுகிய சாரத்தைச் சரிசெய்தபடி வாசலுக்கு வரும் போது கூட செண்பகம் அப்படியே குந்தியிருந்ததைப் பார்த்தபடி இருந்தான். நாக மரத்தின் பின்னால் புலிபோல பதுங்கும் ஒரு பூனை முன்னங்கால்களை ஊன்றித் தக்க தருணமொன்றுக்காக செண்பகத்தைக் குறிபார்த்த படியிருந்தது.

“சாச்சப்பா தானே வாப்பா..”.

“இப்புடி கதக்குறயா. மூத்தாக்களுக்கு..”.

கிழவியின் சத்தத்தில் செண்பகம் பறந்த ஏமாற்றத்தைச் சைக்கிள் இருக்கை மீது பாய்ந்து தணித்துக் கொண்டது பூனை. இதற்கு முன்னரும் பலதடவை கிழவியின் சப்தத்தில் இரையைத் தவறவிட்டு மெலிந்திருந்தது.

“புள்ளயா குட்டியா, கொமர் நிறைவேத்தனுமா..”. 

“என்னத்துக்கு ஊராண்டய வாங்கிக்கு ஒளிச்சிக்கி திரியனும்..”.

கிழவி துவட்டிய துண்டை உதறியதும் பயந்தோடிய பூனையின் இடத்தை மெதுவாக கூரையிலிருந்து தாவித் தாவிப் பிடித்தது செண்பகம். 

“நெல்லடுக்கப் போறேன் எண்டு கெடந்த காசெல்லாம் அதுல கொட்டி இப்ப எல்லாம் கழுத்த இறுக்கிக்கி நிக்குது..”. 

சுளகோடு உள்ளே போன கிழவி மூடாத சோற்றுருண்டைப் பீங்கானைப் பாத்திரத்தால் மூடும் சத்தத்திற்குத் திரும்பியவனுக்கு தொலைபேசி ஞாபகம் வந்தது. வீட்டில் இருப்புக் கொள்ளவே முடியவில்லை. இந்த மனுசன் காணாமலாகி ஆறு மணிநேரத்தில் நான்கு பேர் வந்திருந்தனர். 

“வக்கில்லாட்டி ஏண்டா கடன் வாங்குறியள்..”.

“பேசாம நீங்களும் சுனாமியில மொத்தமா மாட்டியிருக்கலாம்..”. 

முகத்தில் ஒரு இடத்தில் அரும்பு தாடி சமச்சீரற்று வளர்ந்திருந்தது. சிறிய கத்தரிக்கோலால் மற்றைய அரும்புயரத்தை ஒட்டி ஒட்ட வெட்டிக் கொண்டான்.

“உனக்கு தாடி வரவே வராதா..”.

“சாச்சப்பா நெல்லுக்காரன் கிட்ட போயிருக்கார் யோசிக்காத மன..”. 

குரல்கள் கேட்டுக் கொண்டேயிருந்தன. பளபளக்கும் செண்பகக் கழுத்தாலான அசரீரியை குறிபார்க்கிற மெலிந்த பூனை அதட்டல்களும் அவற்றை கலைக்கும் பசிக்கிழவி மிரட்டல்களுமென உள்ளிருந்து தடிக்கும் கோபம், அழுகை, அழுந்தும் விரக்தி , எப்போதோ வயிறு நிரம்பிய பிரக்ஞை, கைகளிலிருந்து நழுவாத இயலாமையெல்லாம் குரல் வடிவில் இம்சித்தன. ஆன்மா சுருங்கிச் சூம்பியிருந்தது. அதை உசுப்பி உடல் முழுவதும் பரப்பித் தெம்பேற்றி விட்டால் என்ன வென்றிருந்தது அவனுக்கு. நெல்லடுக்குவது ஒன்றும் ஆபத்தான முதலீடில்லைதான். பெரிய அரிசி ஆலைகளிலோ வேறு களஞ்சியசாலைகளிலோ அறுவடைக்கு பின்னர் குறைவான விலைக்கு வாங்கப்படும் நெல்லு மூடைகள் அடுக்கப்பட்டு பாதுகாக்கப்படும். விலை கூடிய பின்னர் நாம் விரும்பினால் உடைத்து அச்சமயம் போகிற விலைக்கு மூட்டைகளை விற்றால் காயவைத்த செலவு களஞ்சிய செலவு போக பெரிய லாபம் கிட்டும். அரச கட்டுப்பாட்டு விலை, அதிகாரிகள் கெடுபிடியென கொஞ்சம் இடர் இல்லாமலில்லை. அவன் சாச்சப்பா நெல்லடுக்கிய அரிசி ஆலை முதலாளியின் பல களஞ்சியங்கள் முற்றுகையொன்றில் சீல் வைக்கப்பட்டிருந்தன. இதனால் அவரினது இக்கட்டான நிலையிலும் அடுக்கிய நெல்லை உடைத்து விற்க முடியாத சூழ்நிலை இருந்தது. களஞ்சியசாலையில் ஒருவர் அடுக்கிய நெல் மூடைகளை விற்பதற்காக மீள எடுப்பதை உடைத்தல் என்ற சொலவடையோடு சொல்வதுண்டு.

“மருமோனேய்.. நல்ல சாமானொண்டு வந்திரிக்கி..”. 

மாமாதான் அவனுக்கு கொஞ்சம் ஆறுதலாயிருந்தார். அவ்வப்போது தூர்ந்து நடுங்கும் ஆன்மாவுக்கு மாமா போல எந்தச் சபலமும் இல்லாத சிநேகிதம் தேவையாயிருந்தது. செண்பகத்திற்கு பூனைத் தொந்தரவில்லாத இருக்கை போல அல்லது பூனைக்குக் கிழவிச்சத்தத்தில் பறக்காத செண்பகம் அல்லது அதற்கு முந்தைய இரைகள் போல அவனுக்கு மாமா இருந்தான். மாமா எதையும் தலைக்கெடுத்துக் கொள்வதில்லை. வந்து சில மாதங்களே ஆயின. அவன் உலகம் சராசரிக்குக் கொஞ்சம் மேலே வித்தியாசமாயிருந்தது. லெய்யரை விட்டால் வேறு போக்கிடம் இப்போதைக்கு இல்லை தான். லெய்யர் என்றால் தலைவரென்று ஆஃப்பிரிக்க மொழியில் அர்த்தமாம். வந்த சில நாட்களில் மாமா பழக்கி விட்டிருந்தான். நொட்டன்டெலே என்றால் நன்றி, ஒஸாலி மலாமு என்றால் எப்படி இருக்கிறாய் என ஏகப்பட்ட கொங்கோ வார்த்தைகள் புழக்கத்தில் இருந்தன. அவசரமாய் ஆடையைக் கொழுவி திறந்த பொத்தான்களோடு சைக்கிளைத் தள்ளினான். 

“அனஸு.. சாப்பிடாமப் போறியா மனேய்..” . 

வெண்கலக்கிழவித் தொல்லையைத் தாண்டியதும் மருங்கி இருட்டிய நேரத்தில் இரவுக்குளிருக்கு முதல் துடித்தெழும்பும் மெல்லிய வெக்கைக்கு பொத்தான்கள் திறந்தே இருக்கலாமென்றிருந்தது. சைக்கிள் சில்லு சுழலும் போது வீதி விளக்குகளுக்குக் கம்பிகளின் நிழல் விகாரமாவது போல சாச்சப்பா அவர் நினைவுகளோடு வந்து வந்து போனார். ஒவ்வொரு தடவையும் நினைவு மேலெழும்பும் போது பாதையோரம் சில்லுக்கம்பி நிழற்சுழலின் மேல் துப்பிக்கொண்டான். மெலிந்த உடலில் குரல் மட்டும் கம்பீரத் தோரணையோடு அவனுக்கு நினைவு தெரிந்த நாள் முதல் சாச்சப்பா தான் அவனுக்கு சகலமுமாக இருந்தார். அந்த உடல்வாகிலிருந்து இளைத்துப் போன எல்லாமும் அவனுக்காகவென்று அவனுக்கு தெரிந்திருந்தது. ஆங்காங்கே வீதிக்கு வந்த கிணற்றடி நீரில் அவன் குடும்பத்தோடு இன்னும் பல பிணங்கள் களப்போடு மிதப்பதைப் போலவிருந்தது. ஒவ்வொரு தலையாய் வெளியே எடுத்து உம்மோய் வாப்போய் என்று அலறுவது போலிருந்தது. கரைவலை மடியிழுப்பு போல எங்கோ சைக்கிளில் ஒரு காந்த ஈர்ப்பு இருப்பதாய் மிதிக்கத் தோன்றியது. தெருவெங்கும் பசி வார் அறுந்து கீழே விழப் பார்த்தது. இலங்கையில் பாதிக்கு மேல் ஒரு வேளைதான் வயிற்றை நனைக்கிறார்கள் என்று தெரிந்தது. 

*

இருளில் தூமமாய் கிளம்பும் பனங்காட்டில் அரவமற்ற வெளி அவ்வப்போது ஊளையிடும் நாய்களால் லேசாகக் கதிகலங்கிக் கொண்டிருந்தது. மடுவத்திலிருந்து வடக்காக பதினைந்து எட்டுகளில் மூன்று கற்கள் மேல் கொதிக்கிற கறியில் ஊறும் மிளகின் காரத்தைக் குபுகுபுவென எரியும் பனம்பாளை விறகின் நமைச்சலுக்குள் அடிக்கடி திறந்து சுவைத்துச் சரிபார்த்தனர். 

“இன்னம் ரெண்டு கொதி கொதிச்சா சரி…” 

“இந்தக் கறிக்கு சோறு தான் சரி.. இந்த மாமா தான் பாண் பாணெண்டு ஒத்தக்கால்ல நிக்கான் மனிசன்…” 

“சோத்த கொழைய வெச்சு ஃப்ப்ஃப்…”

அவர்கள் சலித்துக்கொண்டனர். லெய்யரை மீறி எதுவும் செய்யக்கூடாதென்பது தான் முக்கிய விதியாயிருந்தது. தலை விசயத்திலும் லெய்யர் மாத்திரமே பூசை செய்யலாம்.  மடுவத்தில் கிழக்கு மேற்காக தோண்டப்பட்ட குழியிலே தலைப்பூடம் மறுபக்கம் சாய்த்து வைக்கப்படும். மஞ்சள், குங்குமம், இலவங்கப்பட்டை, ஓமவள்ளி கப்பாத்தும் பையெல்லாம் வைத்து ஒரு வகை பூசை செய்வான் மாமா. பூசையில் கத்தரித்த நாய்வாலையோ மாட்டுவாலையோ உடலோடு சுருட்டி வைப்பான். 

“மாமோய்.. எல்லாஞ்சரி, எதுக்கு வால் வெக்கிற..? “. 

“மருமோனே.. சும்மா மனிசனத்திங்குற எண்டா மனம் ஒத்துக்குமா.. “.

“மாடு மனிசனெல்லாம் ஒண்டு தான் டோய்.. அதக்காட்டுறதுக்குத்தான் வாலு..”. 

உலகத்தில் தடைசெய்யப்பட்ட எத்தனையோ சமாச்சாரங்களை இலகுவாக மனிதனால் அறமின்றி மீற முடிகிறது. ஆனால் நரமாமிசம் மட்டுமே அதற்கு விதிவிலக்காயிருக்கிறது. மனிதனை மனிதன் கொல்லும் போது வராத பதட்டமும் அருவருப்பும் மனிதனை மனிதன் சாப்பிடும் போது மட்டும் எப்படி வரும்? அசைவம் உண்ணுபவனுக்கு ஒரு உயிரை முடித்து வைக்கிற அதிகாரம் கிட்டுகிறது. மாட்டின் ஆன்மாவை மனிதனின் கைகளாலே முடித்து வைக்கிற வல்லமையிருக்கிறது. அதைப் பற்றிய குற்றவுணர்ச்சி இல்லாமலே வாட்டி அதைப் புசிக்கிற மனோதிடமும் இருக்கிறது. மனிதனின் உணவுக்காக மனித உடலைக் கிழிப்பது மட்டும் எப்படி பெருந்துயரமாகும்..?. மாமாவின் கவர்ச்சிகரமான வாதங்கள் மருமகன்களைக் கட்டிப் போட்டிருந்தன. தின்னப்படும் ஆன்மாவின் அசுரபலம் நொந்து போன வாழ்வில் இழுகிப் போராடுவதிலிருந்து நிமிர்ந்து நின்று சண்டை செய்யக் கைகொடுக்குமென அவர்கள் நம்பினர். 

களப்பின் மறு ஓரமாய் இறால் பிடிக்கும் திட்டுகளிலிருந்த சிம்னி விளக்குகள் மங்கிய புள்ளிகளாய் அவ்வப்போது சிமிட்டிக் கொண்டன. கரையேறும் வள்ளங்களின் வயிற்றில் துடுப்பு அடிபடும் சத்தம் நீரின் குற்றலையோடு மிதந்து வந்தது. களப்பின் மேம்பாலத்திலிருந்த மின்விளக்குகளின் விம்பம் கோடுகளாய் களப்பின் மிசை கிடத்தினாற்போல் நீர்த்தழும்பலில் நெளிந்தது. 

“வாடோய்.. அனஸு…”

“மருமோனே. ஒரு வாழயெலயப்பாத்து குந்து மகன்…” 

சைக்கிளைச் சாத்திச் சட்டையை உருவிக் கொழுவிய பின் களப்பினோரத்தில் தெளிவான தண்ணீரில் கை கால் கழுவிக்கொண்டான். அப்போதும் செண்பகக்கண்களாய் சிம்னி விளக்குகள் தள்ளாடிக் கொண்டிருந்தன. அப்போது வள்ளங்களிலிருந்து ஐசுப் பெட்டிகளை ஏற்றுவது இருண்ட மறுகரையில் தெளிவாகத் தெரிந்தது. களப்பு நீரின் கவிச்சையை உதறி விட்டு இலையில் எல்லோரும் குந்தியிருந்தனர். இலை நடுவே கறிக்குவியலின் ஆவிப்பறப்புக்கு நடுவே குழம்பு இலையோரத்திலிருந்து மண்மீது சொட்டாமல் உயர்த்தி பிடித்தபடியிருந்தனர். ஆளுக்கொரு பாணைப் பிய்த்து கறியோடு இறைச்சியை மெல்லும் போது மாமா வானத்தை அண்ணாந்து பார்த்தபடியிருந்தான். அவன் காலிலிருந்த குறி தெளிவாகத் தெரிந்தது. மண்டையோட்டின் கீழ் ஒரு முள்ளுக் கரண்டியும் தேக்கரண்டியும் குறுக்காக வரையப்பட்டிருந்தது. சாப்பிடச் சாப்பிட மார்பிலும் உடற் தசைகளிலும் இனம்புரியாத வலுவேறுவதாக அவர்கள் நம்பினர். இப்போது பசி தீர்ந்துவிடுமென்று கண்டிப்பாக ஒத்துக்கொண்டனர். ஒரு துயரத்தின் முடிவிலிருப்பதாக இலை முடியும் வரை சுகித்துப் புசித்தனர். ஆன்மா இரட்டிப்பு பலங்கொண்டாற்போல் பதகளித்துக் கூவினர். 

“மாமோய்.. நெருப்பு சாமானா இருந்திச்சோய்..”. 

“ஆரு மாமா நீ எங்க கெடந்து வந்தாய். இப்பிடித் திண்டு எம்பெட்டு நாளோய்..”.

“லெய்யரோய்.. நொட்டொண்டலே…”

சைக்கிளைத் தள்ளி கூப்பாடுகளோடு வெளியேறும் போது அனஸை சாச்சப்பாவின் நினைவு மீண்டும் பீடித்துக்கொண்டது. மடுவத்திலிருந்து முப்பத்தியாறு முப்பத்தியேழென எட்டுகள் தாண்டும்போது தலைப்பூடத்திலிருந்து காந்தம் போல கால்களை ஈர்ப்பது போலிருந்தது. நாய் ஊளைகளடங்கிய பெருவமைதியில் சிம்னி விளக்குகள் நூர்ந்த களப்பு சிங்காரமாய்ப் படுத்திருந்தது. களப்பிலிருந்து மிதந்து வந்த உடல் மூடியிருந்த சட்டைப் பையிலிருந்து விழுந்த உடைக்கப்படாத நெல்லடுக்கிய ரசீது இன்னேரத்திற்கு எருக்கிலம் பற்றைக்குப் பின்னால் உலர்ந்திருக்கும்.