அதிகாலை கருக்கிருட்டில் வீராயி புரண்டுப் புரண்டு முனகிக்கொண்டிருந்தாள். அவளுடைய தூக்கம் இப்படித்தான் – முணுக்கென்றாலும் விழித்துக்கொள்வாள்; வாசலுக்குப் போவாள்; அலங்கமலங்க நாலாதிசையையும் பார்ப்பாள்; சமயங்களில் முக்கத்து சோடியம் விளக்கு வரை நடப்பாள்; வளைந்தோ குந்தியோ எக்கியோ.. தூரத்தை நோட்டமிடுவாள்; வந்து படுத்துக்கொள்வாள். அரவமில்லாமலும் செய்யவராது. ரப்பர் குடங்களை உருட்டி, விலகிப் புரளும் உள்பாவாடையில் இடறிக்கொண்டு, தவிட்டுச் சல்லடையைத் தட்டிவிட்டு, கொண்டியில் ஒரு டமார்.. அவ்வளவுதான் – தங்கம் எழும்பிவிடுவான்.

“அய்யய்யய்ய.. ஓத்திரிய யெழவு இந்த பொம்பளயோட..” அவன் ஆள் சைசுக்கும் பேச்சுக்கும் சம்பந்தமே கிடையாது. “பொதயலா இருக்கு உள்ளாருக்க.. படுத்து தூங்கும்மா செத்த..”

வீராயி என்னவோ வாய்க்குள்ளேயே சொல்லிக்கொண்டுவந்து படுப்பாள். சற்று நேரத்தில் வயிறும் மாரும் சீராக ஏறியிறங்கும். கூரைப் பொத்தல் ஊடாக எட்டணா அளவு சூரியன் உள்ளே வந்தப் பிந்தியும் குறட்டையடித்துக்கொண்டிருப்பாள்.

தங்கத்துக்கு இன்னமும் கால்சட்டை நனைந்துகொண்டுதான் இருக்கிறது. இதனாலேயே வாரத்திற்கு ஓரிரு இரவாச்சும் அதிகாலையில் முழிப்பு தட்டிவிடுகிறது.

இன்று இரவிலும் தூக்கம் சரியில்லை. அம்மாக்காரியை வசவிக்கொண்டான். வடக்கில் போய் அலசிப்போட்டுவிட்டு திரும்பும்போது சாந்தியக்கா வந்துவிட்டது.

“என்ன பூசாரியய்யா.. காலேலையே மணியாட்டிக்கிட்டு கெளம்பீட்டீங்க..”

அவள் சொல்லி முடிப்பதற்குள் கையை வைத்துப் பொத்திக்கொண்டு வீட்டுக்குள் ஓடிவிட்டான். அடுப்படியையொட்டிய பத்தாயத்தில் கால் வைத்து ஏறி இடுக்கு வழியாகக் கொல்லையைப் பார்த்தான். ஒரு கை இன்னமும் பொத்தியவாக்கிலேயேதான் இருக்கிறது. சாந்தி பல்லுக்குக் குச்சி உடைத்துக்கொண்டிருக்கிறாள். வாய்க்குள்ளேயே ஏதும் இளிக்கிறாளா? – அப்படித் தெரியவில்லை – கன்னத்தசை வாடிப்போகிறது. இருட்டுக்குள் கால்சட்டைக்காகத் துழாவுகிறான். கயித்துக்கொடியில் கிட்டியவொன்றை இழுத்து மாட்டிக்கொண்டு மீண்டும் கொல்லைக்குப் போனான்.

சாந்தியக்கா ஏதாச்சும் அந்தப் பேச்சைத் தொடருமென எதிர்பார்த்தான். அவள் இவனைக் கவனிக்கக்கூட இல்லை.

“வம்மா எந்திச்சிட்டாளாடா..” கிழக்கே ரெண்டு வீடு தாண்டியிருந்து பாக்கியத்தம்மா குரல் கொடுத்தது. சலித்துக்கொண்டு பதிலேதும் சொல்லாமல் வீட்டுக்குள் போய்விட்டான். “வப்பன்னாட்டம் மண்டக்கிறுக்கு புடிச்ச பய..” பின்னாலிருந்து குரல் கேட்கிறது.

விவரம் தெரிய ஆரம்பித்த இந்த நாலைந்து வருடங்களில் இவ்வொப்பீடு விடாமல் விரட்டிக்கொண்டேயிருக்கிறது. எல்லாவாட்டியும் அது அவனைச் சீண்டிவிடுவதில்லை; பாதி நேரம் காதிலேயே போட்டுக்கொள்ள மாட்டான். இந்தக் காலையின் செவிட்டு அமைதி அப்படி லேசில் விடுவதாக இல்லை. வப்பன்னாட்டம் மண்டக்கிறுக்கு புடிச்ச பய.. அத்தோடு ஓயவில்லை – அப்பாராட்டமே நொட்டாங்கை, அப்பங்காரனப் போலயே குண்டிய அறச்ச நடைய பாரு.. வீராயியாட்டம் இல்ல பய.. திர்னாக்கரசாட்டமே நல்லா கலரு, கிருத்துருவம் ரத்தத்துலயே இருக்கு இவனுக்கு, அவனாட்டமே வலுவட்ட பய யிவன்.. ஆளுக்கொன்று; நிசமா பொய்யா தெரியாது – சட்டெனச் சொல்லிவிடுவார்கள். பார்த்து உருவப்படுத்திக்கொள்ள ஒரு புகைப்படம்கூட வீட்டில் கிடையாது. கல்யாண போட்டோகூடவா ஒருத்தி வைத்திருக்க மாட்டாள்! இன்னொன்றையும் கவனித்திருக்கிறான் – ஒருவாட்டிகூட வீராயி மட்டும் இப்படி எதுவுமே சொன்னதில்லை.

முன்னடுக்குக்கு வந்தவனுக்கு மண்டை ஓயவில்லை. அம்மாக்காரியைப் பார்க்கிறான் – சீலையை அள்ளிச் சுருட்டிச் சுற்றிக்கொண்டு குத்தவைத்திருக்கிறாள். பார்க்கவே அருவருப்பாக இருக்கிறாள். பக்கத்தில் உட்காருகிறான். வாசலையே வெறித்துக்கொண்டிருப்பவள் இவனைக் கவனிக்கக்கூட இல்லை.. வறண்டு ஒட்டியிருக்கும் வாயைக் கொட்டாவிக்காகத் திறக்கிறாள். வீச்சம் இவனுக்குக் குடலைப் புரட்டுகிறது. 

“இன்னும் ச்சூத்துக்குள்ள கொண்டாந்து மூக்க வெய்யி..” முகத்தைக் கோணியவனைப் பார்த்துச் சலிப்புடன் சிடுசிடுத்தாள்.

யாரையோ சொல்லுவதைப் போல உட்கார்ந்திருந்தான். என்னவோ கேட்க வேண்டும் போல இருக்கிறது. இதுதான் உத்தேசித்திருந்த கேள்வியா எனத் தெரியவில்லை. ஆனால் இப்படித்தான் கேட்டான்.

“அந்தாளு எதுக்காண்டி ஒன்னய வுட்டுட்டு ஓடிப்போனான்?”  

2

“அந்த மேகலாக்குட்டிய கெட்டிப்புடணும்ன்னு நின்னான்.. நடக்காமப் போயிர்ச்சு..” புளிக்குத்தும்போது பாக்கியத்துக்கு நாலு வார்த்தை அடுத்தவளைக் குத்தினால்தான் மனசு லேசுப்படும். “அய்த்தமவ.. எப்புடியும் அதுதான் தெவயப்போதுன்னு இருந்தான்.. கடெசீல இப்புடியாவுமுன்னுட்டு யாரு கண்டா?”

வீராயிக்கு இந்தக் கதையெல்லாம் தெரியும்தான். கண்ணு காது மூக்கோடு பலமுறை கேட்டுச் சலித்ததுதான். “மூணு மாசமாயிருச்சு.. இன்னும் குளிச்சிட்டு இருக்கேங்குற..” இப்படி ஆரம்பித்ததைத்தான் மேகலாவில் கொண்டுவந்து முடிச்சுப்போடுகிறாள் பாக்கியம்.  

“சவுதியில இருந்தப்ப அவ அண்ணங்காரன வார்த்த முத்திப்போயி செருப்பெடுத்து அடிச்சுபுட்டான்.. கோரோசன புடிச்ச பய.. பதிலுக்கு பாஸ்ப்போட்ட புடிச்சுவெச்சி பெரிய லோல்பட்டுத்தான் வந்து சேந்தான்.. போச்சு எல்லாம்.. ச்சொந்தமாச்சும் மசுராச்சும்.. அத்துக்கிட்டானுக அத்தோட.. ஆனா அந்தக் குட்டிக்கு ஒன்னுங் கெட்டுப்போயிறல.. செலம்பாங்காட்டுல நல்ல குடும்போ அது.. பயலும் சூட்டிக்கான பய..” பாக்கியம் ஒரு வெட்டு நிறுத்தி பெருமூச்செடுத்தாள்.. “ஒனக்கு பாரு.. ப்ச்..”

சிதறிய புளிக்கொட்டைகளைக் கையால் வறண்டி ஒழுங்குசெய்தபடி குரலைத் தாழ்த்தினாள். “ஆனா இதெல்லாம் கொஞ்ச நாளிக்குத்தான்.. இப்புடியே திரியுவானுக.. கடேசில இதுக்குள்ளத்தான ச்சேரணும்.” முடிக்கும்போது தொனித்த குறும்பு அசிங்கமாக இருந்தது.

வீராயி இன்னும் சிரித்துச் சமாளிக்கப் பழகியிருக்கவில்லை. முகம் வெளிப்படையாகச் சுருங்குவதைப் பார்த்து பாக்கியமும் நிறுத்திக்கொள்பவளில்லை. “அவனுக வெடச்சுக்கிட்டு போனா புடிச்சு இலுக்க முடியாமலா கெடக்கு நம்பளுக்கு..”

மணமாகி வந்த மூன்று மாதங்களும் மூங்கித்தட்டிக்கு இந்தப் பக்கம் வந்து அவன் படுப்பது கிடையாது. களைத்து வருபவன் கோடுபோட்ட மாதிரி அடுப்படிக்கு நடப்பான்; தட்டை நிரப்பிக்கொள்வான்; நிலைப்படியையொட்டி சம்மணம் போட்டால் கடைசிப் பருக்கையை வறண்டிவிட்டுதான் நிமிருவான்; வாயின் ஈரம் காய்வதற்குள் சிசரைப் பற்றவைத்துக்கொள்வான்; ரேடியோவின் கரகரப்பு கசக்கும்வரை திருகல். எப்போது பாயை விரித்துக்கொண்டான் என்பதே தெரியாது. இவை அத்தனையிலும் குறுக்கும்நெடுக்குமாகப் பின்னும் இவளைச் சட்டையே செய்யமாட்டான்.  

இவளும் சுணங்கவில்லை. சாயந்தரத்தில் போட்ட மறுகுளியல்களில், சீரில் வந்த அரை டஜன் லக்ஸைக் கரைத்திருந்தாள். பருத்தியில் மொடமொடப்பாக முந்தி வைத்தாள். கோகுல் சாண்டால் கூடுதலாக ஓரடுக்கு பூசப்பட்டது. கறிக்குழம்பில் காரத்தைச் சற்று தூக்கி வைத்தாள். இயல்பாகவேகூட அவளுக்கு வெட்கப்பட வந்தது. அத்தான் முறைக்காரனைப் பிடித்துப்போய்தானே கட்டிக்கொண்டு வந்தாள் – வசமாக்கக் கொஞ்சம் காலம் பிடித்தால் என்ன கெட்டுவிடப் போகிறது. வயசுக்குவந்த கொஞ்ச நாளில் வீரனார் கோயிலில் வைத்து அவனைப் பார்த்திருக்கிறாள். வெளிறிய மேனியில் நடுமாரில் மட்டும் சுருட்டையாக மயிர்ப்பத்தை. இரு முன்னங்கையிலும் சந்தனப்பூச்சு. அக்கினித்தட்டு அருகில் வந்ததுதான் போச்சு – நாக்கை மடக்கி வைத்துக்கொண்டு ‘உந்த்த்த்.. உந்த்த்த்.. ‘ கழுத்தை வெட்டிவெட்டித் தவ்வ ஆரம்பித்தான். பிடித்து நிறுத்த முடியாமல் சனம் முண்டியடித்தது. இவள் பயமும் சிரிப்புமாகப் பின்வரிசைக்குள் ஒளிந்து எட்டியெட்டிப் பார்த்துக்கொண்டாள்.

“அதுக்கென்ன இந்த வயசுலயே சாமி வருது..” போகும் வழியில் அம்மாவிடம் கேட்டாள்.

“வயசா இருக்கு அதுக்கெல்லாம்.. அவன் பெடிப்பயலா இருக்கும்போதே ச்சாமியாடுவான்..”

அக்கோவிலுக்குப் போகும் சமயமெல்லாம் அந்த நினைப்பு மீளும். அந்த நினைப்புக்காகக்கூட சிலமுறை அங்கு போயிருக்கிறாள்.

“என்னடி ச்சாமிய அப்புடி வுத்துவுத்து பாத்துக்கிட்டிருக்க..”

“வீரனாருக்கு ஒரு காலில்லன்னு சொன்ன? இந்தப் படத்துல ரெண்டு காலும் இருக்கு..”

“அதெல்லாம் ஒரு காலுதான்.. மொடமா வரஞ்சா நல்லாருக்காதுன்னுட்டு ஆட்டிஸ்ட்டுக்கிட்ட இப்படி வரய சொன்னது.. அந்தக் கால மறைக்கிற மாரி ஆய்தத்த வெச்சி வரஞ்சது..”

“எதாச்சும் கேட்டா கத வுடு நல்லா..” அம்மாவை லேசில் நம்புபவளில்லை. அதோடு இப்போது அவளுக்குச் சாமியும் அவனும் வேறுவேறல்ல.

“ஆளும் மண்டையும் பாரு.. இதுல என்னத்துக்குடி பொய்யி சொல்றன்..”

வீராயி கேலி பேசிக்கொண்டு முன்னே போனாள்.

“ஒரு நா பாத்தாத்தான் ஒனக்கு தெரியும்.. சாமத்துல ஒரு நா முன்னாடி வந்து நிக்கும் ஒனக்கு..”

“ஒனக்கு அப்புடி நின்னுச்சாக்கும்.. அப்பத்தான் ஒன் மொசலுக்கு மூணு காலுன்னு கண்டுபுடிச்சியா?” நிற்காமல் துள்ளி முன்னேறிக்கொண்டிருந்தாள்.

“வரும்.. ஒரு நட வந்துச்சுன்னா அப்பறம் நீயே கண்டுப்புடிச்சுக்குவ வர்றத..”

வீராயி நிறுத்தித் திரும்பிப் பார்த்தாள். மாட்டை இழுத்துக்கொண்டே இவள் கண்ணைப் பாராமல் அம்மா தொடர்ந்தாள்.

“குதுர ச்சத்தம் கேக்கும்.. கொளம்படி.. வலம் வந்திட்டிருக்குன்னு தட்டிரும்.. காத கூர்ப்பாக்கி கேட்டா கூடவே ஒரு கால்வடத்து சத்தமும் ஒரு கட்ட சத்தமும் மாத்தி மாத்தி கேக்கும்..”

“நீ கேட்டுருக்கியா அத..”

விலகி நகரும் மாட்டை இழுத்துப்பிடிப்பதில் அம்மா முனைப்பாக இருந்தாள்.

“பாத்தியா கண்ணால..”

இவள் தலையில் சிரித்தபடி தட்டினாலேயொழிய பதில் சொல்லவில்லை. இவளும் மேற்கொண்டு கேட்கவில்லை. மனசுக்குள் திருநாவு குதிரையில் வருவதாகவும் அவனுக்கு ஒரு கால் இல்லாததாகவும் யோசித்துப் பார்த்தாள். “சாமிய நானுந்தான் பாத்துருக்கேன்..” தயங்காமல் சொன்னாள். அம்மாவுக்கு என்ன புரிந்ததோ.. மறுவாட்டி தலையில் தட்டி நகர்த்திக்கொண்டு போனாள்.

இதையெல்லாம் யோசிக்கும்போது எங்கிருந்தோ ஒரு தெம்பு முட்டும். இன்னொருமுறை முகத்தை அலம்பிச் சிங்காரித்து, தோளைத் தாண்டி மல்லிச்சரத்தைச் சூடிக்கொண்டு வாசலுக்கு வந்து உட்காருவாள்.

3

“ஏஞ்சித்தி.. மோட்டாருக்கா வர்ற?” வாசலிலிருந்து சாந்தியக்காவின் குரல் கேட்டது. பயல் துள்ளியெழுந்தான்.

“அம்மா இல்லயா?” இவன் வெளியே வரவும் சாந்தி கேட்டாள்.

“மேலுக்கு முடியல.. படுத்துருக்கு..”

“என்னாச்சு அதுக்கு.. பைப்படி பக்கட்டும் வரல..”

“கைய கால வலிக்கிதுன்னுச்சு.. தூங்கிட்டிருக்கு..” விடிந்தும் விடியாமலும் அம்மாவிடம் அப்படிக் கேட்டிருக்க வேண்டாமென உள்ளுக்குள் நசநசத்தது. மண்டைக் குடைச்சலில் சட்டென வார்த்தையை விட்டுவிட்டான். அந்தக் கேள்வியின் தொனி தப்பெனத் தெரிகிறது. வேறு எப்படி கேட்டிருக்க வேண்டுமெனப் பிடிபடவில்லை. அறியாத வயதில் அப்பனைப் பற்றிக் கேட்டபோதெல்லாம் மழுப்பலாக எதையோ சொல்லி வாயடைப்பாள் – கரண்டு வேலைக்குப் போயிருக்கார், மெட்ராசுக்குப் போயிருக்கார், துபாயிக்குப் போயிருக்கார் – இவையெல்லாம் பொய்யெனப் புரிய ஆரம்பித்த வயதில், அக்கம்பக்கத்தார் சொல்லித்தான் ‘சண்டயடிச்சிட்டு போயிட்டான்’ என்பது விளங்கியது.

“ம்ம்.. நீ பேட்டடிக்க போலயா இன்னிக்கி?” திரும்பி நடக்க ஆரம்பித்திருந்தாள்.

அவசரமாக ஒரு துண்டைத் தேடியெடுத்துக்கொண்டு அவளோடு நடக்க ஆரம்பித்தான்.

“குளிக்கவா வர்ற.. கூட்டாளிக எவனும் இல்லயா.. ஏரிக்கில்ல போவ?”

எதுவும் சொல்லவில்லை; பின்னாலேயே போய்க்கொண்டிருந்தான்.

“சோத்த வடிச்சிதா இல்லயா மதியத்துக்கு..”

“பழயது கெடந்துச்சு..”

“கடிச்சுக்குற எதுமில்லாம தின்னியா.. கேக்குறதுக்கென்ன ஒனக்கு..”

யோசித்தவனாக நடந்தான். திரும்பிப் பார்த்தவளுக்குப் பத்து பதினொரு வயசுப் பயலைப் போல முகத்தளவில் இவன் இல்லை.

“என்னடா ராக்கெட்டா உடப்போற..”

வாயைத் திறக்கவில்லை.

மீண்டுமொரு முறை திரும்பிப் பார்த்துவிட்டு நடக்கிறாள். படலையெடுத்து ஓரமாகச் சாத்தி வைக்க அவளுக்கு ஒத்தாசை செய்கிறான். வரப்பிலேறி சற்று தூரம் போகும்போது, கேள்வியைத் திரட்டிவிட்டான்.

“எங்கப்பாரு ஏன் ஓடிப் போனாருன்னு ஒனக்கு தெரியுமா?”

சாந்தி பத்து பன்னிரண்டு தப்படி வரை எதுவும் சொல்லவில்லை.

“என்ன திடீர் வெசாரண.. அப்பார பத்தி..”

“ஒனக்கு தெரியுமாக்கா ஏன்னு..” குரல் நிர்பந்திக்கும் தொனியிலிருந்தது. “பத்து வருசத்துக்கு மேல ஆவுது.. இதுவும் அந்தாளு வருவான்னு நம்பிட்டிருக்கான்னு தெரில.. அப்பப்ப ஓடிப்போயி தெருவுல நின்னு பாக்குது..”

“நானும் பாத்துருக்கேன்.. போயி நின்னு பாக்கும்.. யாராச்சும் தேச்சு தேச்சு நடந்து போனா..”

“கேட்டா செவுடு மாதிரி ஒக்காந்துக்குது.. முன்னாடி எதாச்சும் சொல்லி ஏமாத்தும்.. மாமாகிட்ட கேட்டேன் ரெண்டுமூணு வாட்டி.. சண்டபோட்டு போயிட்டான்னு சொன்னாரு..”

“சண்டதான்.. வேற என்ன? ரெண்டு பேரும் மாத்தி மாத்தி வெஞ்சிக்கிட்டு.. சந்தியில அடிச்சிக்கிட்டு.. தல மயிரப்போட்டு இழுத்துக்கிட்டு..”

“எல்லாருந்தான அடிச்சுக்கிறோவ.. இந்தாளு மட்டும் ஏன் இப்புடி போனாரு..” பாலகனுக்கான ஏக்கத்துடன் அவனால் கேட்க முடிந்தது.

“எனக்கும் செரியால்லாம் தெரியல.. நா அப்ப ஒன்னாட்டம் இருப்பேன்..”

போர்செட்டுக்கு வந்து சேர்ந்திருந்தார்கள். சாந்தி அண்ணக்கூடையிலிருந்த துணிகளையெடுத்து அலச ஆரம்பித்தாள். இவன் நீருக்குள் இறங்காமல் நின்றுகொண்டிருந்தான்.

“அண்ணன் இப்பைக்கு வராது.. தொட்டிக்குள்ள எறங்கி குளிக்கிறியா?”

“ஒங்க வீட்ல அவரு போட்டோகீது எதாச்சும் இருக்குதா?”

“அவன் வந்துற போறான்.. எறங்கி குளிடா மொதல்ல.. போட்டோ வீட்ல இருந்தா எடுத்து குடுக்குறேன்..” 

பாசிக்கல்லில் கவனமாகக் கால் வைத்து தொட்டிக்குள் இறங்கப்போனான்.

“காச்சட்டய கெலட்டிக் குடுத்துட்டு எறங்கு.. நா அலசி வெக்குறேன்..”

இவனுக்கு வெட்கம் பிடுங்கித் தின்கிறது; கூடவே ஓர் உடனடி குதுகலம்.

“தொட்டிக்குள்ள போயிட்டு தர்றேன்..” சொல்லிவிட்டு வேகமாக ஏறப்போகிறான்.

“யெரும யெரும.. மூத்தர ட்ராயரோட அப்டியே எறங்கப் போவுது பாரு..” அடிக்கல்லையொட்டி குந்தியிருந்தவள் எழுந்துகொண்டாள். தொட்டியில் ஏறியவனைத் திட்டிலேயே நிறுத்திப் பிடித்து கால்சட்டையை உருவிக்கொண்டாள். தங்கம் வெட்கத்தில் சிரித்துக் கத்திக்கொண்டு தொட்டிக்குள் குதித்தான்.

“ஆமா.. அதிசயத்த ஒளிச்சு வெக்கிறான்..”

தங்கம் கிச்சுக்கிச்சு மூட்டப்பட்ட குழந்தையைப் போலப் பலமாகச் சிரித்துக்கொண்டே அவளை அசிங்கமாக ஏசினான். 

சாந்தி தன்போக்கில் துணிகளை அலச ஆரம்பித்தாள். தங்கம் விட்டுவிட்டு அடக்க முடியாமல் சிரித்துக்கொண்டிருந்தான். சாந்தியும் ஓரிரு முறை திரும்பிப் பார்த்து அவனை நையாண்டி செய்தாள்.

“வெளிய வந்துறாத.. திராச்ச பலமுன்னுட்டு காக்கா கொத்திறப் போவுது..”

தங்கத்துக்குச் சிரிப்பை நிறுத்திக்கொள்ள முடியவில்லை. அவன் வேறெதையோதான் சிரிப்பாக இறக்கிக்கொண்டிருக்கிறானெனச் சாந்திக்குப் பட்டது. சற்று நிறுத்தி யோசித்தவள், தொட்டியருகில் போய் குரலை இறக்கிக்கொண்டு சொன்னாள்.

“சித்திய அன்னிக்கு திர்னாக்கரசப்பா தள்ளியுட்டு மிதிமிதின்னு மிதிச்சாரு..” தங்கம் சிரிப்பை நிறுத்தினான். “நீ வயித்துப்புள்ள.. வயித்துலகூட மிதிச்சான் மனுசன்.. அப்ப ஒங்கம்மா ஒன்னு பண்ணுச்சு..”

கையைக் கொண்டு பொத்திக்கொள்ளாமல் தங்கம் மெல்ல எழுந்தான். உடல் குளிரில் நடுங்கியது.

“வேட்டிய மடிச்சு கட்டிக்கிட்டு மிதிச்சவன சடக்குன்னு எந்திரிச்சு ஒக்காந்து உள்ளார கையவுட்டு புடிச்சிருச்சு.. கால் மூட்ட வெச்சு மூஞ்சீல ஒரு எத்து எத்துனான்.. பலிக்கல.. இது மண்டி போட்டுக்கிட்டு புடிய கெட்டியாக்கிருச்சு.. துடிச்சு அப்புடியே கீழ வுலுந்தான் மனுசன்.. அதுல சின்னப்பட்டுப் போயிதான் கெளம்பிட்டாருன்னு நெனச்சுப்பேன்..”

தங்கம் இதுவரை யாரும் சொல்லாத புதுக் கதையைக் கேட்கிறான்.

“சுத்தியிருந்த ஆளுவ இது கைய புடிச்சு எடுத்துவுடறதுக்கு இலுத்துட்டு கெடந்ததுவ.. வெளக்கிவுட முடியல.. அந்தாளு மயக்கமே ஆயிட்டான்.. இது வெறிச்சுக்கிட்டு மூச்ச அலுத்தி அலுத்தி விட்டுக்கிட்டு இருந்துச்சு..”

பயலுக்குத் தொண்டை ஒருமுறை ஏறியிறங்கியது.

சாந்தி பின்னொட்டைச் சேர்த்தாள், “…சாமி வந்த மாரி..” 

4

பவுடரும் மல்லியும் என்றாவது பலித்துவிடுமென்ற நம்பிக்கை மெல்ல தேய்மானம் கண்டது. தட்டியை ஒட்டியாவது படுத்தவன் இப்போது வாசலில் கயித்துக்கட்டில் போட ஆரம்பித்துவிட்டான். வெக்கையடித்த ஓரிரவில் வீட்டுக்குள் பாய் விரித்தான். இவளும் கொஞ்சம் திட்டவட்டமாகியிருந்தாள். தலையணை துப்பட்டியோடு பக்கத்தில் போய் படுத்துக்கொண்டாள். விழித்துப் பார்த்தவன் இடத்திற்கு ஏதுசெய்வதைப் போல உடம்பைக் கொஞ்சம் அனுசரித்துக்கொண்டான். இவள் நெருங்கிப் படுத்ததற்கும் அவன் சலனப்படவே இல்லை. மெல்ல மேலே கையைப் போட்டாள். அவனது மார் குறுகியதன் விலகல் இவளுக்கு அப்பட்டமாகத் தெரிந்தது. தீர்மானத்தை விடவில்லை. மெல்ல அவ்விடத்தின் முடியை நீவினாள். அவனது காம்பில் கை வைத்தபோது தடுத்தான். விட்டுக்கொடுப்பதாக இல்லை. நிமிண்டினாள். அவன் தளரவில்லையெனினும் எதிர்ப்பை வலுவாக்கவுமில்லை. உடலை நெருக்கி அவனது கையை எடுத்து தன்னுடைய ரவிக்கை பித்தானுக்குக் கொண்டுவர முயன்றாள்.

“ப்ச்.. என்னடி இது..”

சட்டென இவளுக்கு ஏதோ உச்சியிலிருந்து தள்ளிவிட்டதைப் போலிருந்தது. பிடித்திருந்த கையை அப்படியே இறுக்கி மளார் மளாரெனத் தன் கன்னத்தில் அறைய வைத்தாள்.

“எட்டி.. கைய உட்றீ.. என்ன பண்ணிட்டிருக்க நீ யிப்ப..”

எழுந்து உட்கார்ந்து இரண்டு கைகளாலும் தலையில் அடித்துக்கொண்டவள் பல்லைக் கடித்துக்கொண்டு காத்துக் குரலில் கிறீச்சிட்டு ஏச ஆரம்பித்தாள்.

“என்ன பண்றனா.. என்ன பண்றேன்.. நோயப்போட்டு..” தொடையிரண்டையும் விரித்து ஆங்காரமாகக் குறுக்கே நாலுமுறை அறைந்துகொண்டாள்.

படுத்தவாக்கிலேயே தத்தியெழுந்தவன் அவள் தலையோடு சேர்த்து ஒரே அரைச்சலாகக் கொடுத்தான். எதிர்ப்பார்த்தே இருந்தவள் போல மறுமூச்சுகூட எடுக்காமல் பொரிந்தாள். “இதுல காட்டு ஒன்னோட ஆம்பளத்தனத்த.. நாலு மாசமாச்சு இந்தத் தாலிய கெட்டிக்கிட்டு.. போறவளும் வர்றவளும் பொடிவெச்சு கேட்டுட்டு போறா.. வீட்டுக்குள்ள ஆம்பளன்னு ஒருத்தன் இருந்தால்ல நா குளிக்கிறத நிறுத்த முடியும்..”

ஓடிவந்து வெரசாக மிதிக்கக் கால் ஓங்கியவன், சற்று நிறுத்தி வலுகொடுக்காமல் அவள் தோளில் உதைத்தான் – பூஞ்சை உடம்பைச் சாய்க்க அதுவே போதுமாக இருந்தது. தலையை அள்ளி முடிந்துகொண்டவள் வாய்விட்டுக் கத்த ஆரம்பித்தாள். “எம்பொறப்பு இப்புடியா விடியணும்.. இந்த மொட்டப்பயல கெட்டிட்டு வந்துட்டு இங்க மிதிய வாங்கிட்டிருக்கேன்..” சொல்லி முடிப்பதற்குள் மாரிலும் வயிற்றிலும் எத்தனை மிதி விழுந்ததெனத் தெரியவில்லை. மயங்கிச் சுருண்டு ஓரமாகச் சாய்ந்தாள். 

“அந்த மொவரயப் பாத்தா தோனணும்லடி.. பெரிய ரதிமுண்ட இவ.. என்னய மலட்டுப்பயங்குற.. வந்து புடிச்சு மோளு..” வேஷ்டியை விரித்துக்கொண்டு அவள் முகத்தருகில் போனான். தலையைத் திருப்பிச் சுவரோடு தன்னை அப்பிக்கொண்டாள். கதவு மடாரென அறையப்படுவது கேட்கிறது. எவ்வளவு நேரம் அப்படியே கிடந்தாளெனத் தெரியவில்லை. காது பொத்தினாற்போல அடைத்திருந்தது. சொல்ல முடியாத தினவு உடலெங்கும். அத்தனையையும் மீறி அது மண்டைக்குள்  ஒலித்துக்கொண்டேயிருந்தது – ‘மொவரயப் பாத்தா தோனணும்லடி..’

பல வாரங்களுக்கு அது ஒலித்தபடியேயிருந்தது.

கண்ணாடிமுன் நிற்பதற்குக்கூட அவளுக்குக் கூசியது. திருத்தமாக ஒருமுறை தன்னையே மேலிருந்து கீழாகப் பார்த்தாள். மாநிற முகம்; அகன்ற நெற்றி; விடைத்த காதுகள் – ஆமாம், அவை அப்படித்தான் இருக்கின்றன, அடர்ந்து சுருண்டு உயர்ந்த முடி, சிறிய கழுத்து, ரவிக்கையில் கொள்ளுமளவு மார்கள், தொப்பையுமில்லாத ஒடிசலுமில்லாத வயிறு.. அனிச்சையாக மேகலாவின் முகம் மனதில் வந்துபோகிறது. அவமட்டும் ரதியா என்ன.. என்ன இருந்தாலும் தோனணும்ல.. எதிர்ப்பாக இல்லாமல், உள்ளுக்குள் மக்கி மடிய ஆரம்பித்தாள். இல்லாத குறையை வலிந்து தன்மீதே சுமத்திக்கொண்டாள். சோறாக்கினாள்; பால் பீய்ச்சினாள்; சாணி மெழுகினாள்; பாக்கியத்தோடு உட்கார்ந்து புளிக்குத்தினாள். அவனும் கயித்துக்கட்டிலில் படுத்துக்கொண்டு ரேடியோவைத் திருகினான்.

5

பள்ளிக்கூடம் முடிந்துவந்தவனுக்கு வீட்டின் முன்பு கூடியிருக்கும் சனத்தைப் பார்க்க குழப்பமாக இருந்தது. முக்கத்துக் கடையிலிருந்தே ஓட்டம் பிடித்தான். இளைக்க இளைக்க வாசலுக்கு வந்து நின்றவனைப் பார்த்து, “இந்தா.. தங்கம்பய வந்துட்டான்..” என்றது ஒரு குரல்.

இரண்டு வாரத் தாடியுடன் பூசிய பருவிழுந்த கன்னமும் சிவந்து வெடித்த உதடுமாக இருந்த மனிதனிடம் இவனைச் சுட்டிக்காட்டினார்கள். இவனுக்குக் கொஞ்சம் புரிந்துவிட்டதைப் போலிருந்தது. 

என்ன சொல்லிக் கூப்பிடுவதென்று தெரியவில்லை. வீராயியைத்தான் தேடினான். கூட்டத்துக்குள் தட்டுப்படவில்லை. வந்திருப்பவன் தன்னையே பார்த்துக்கொண்டிருப்பது இவனுக்குத் தெரிந்தது. பார்வையை அப்பக்கம் திருப்பவே தடுமாறிக்கொண்டிருந்தான். ஒரு கணம் ‘இந்த ஆள் ஏன் வந்தான்?’ என்றுகூடத் தோன்றியது. ‘இவனாக வந்தானா? அம்மா போய் எங்கும் கண்டு இழுத்துக்கொண்டு வந்திருக்கிறாளா?’

ஏதோவொரு கை இவனை இழுத்துக்கொண்டுபோய் அவனருகில் நிறுத்தியது. கிடைக்குள் செலுத்தப்படும் வெள்ளாட்டுக்குட்டியைப் போல நிலைகொள்ளாமல் தடுமாறினான். திரும்பி ஓடிவிடலாமென இருந்தது. கால்கள் முன்னும்பின்னுமாக முண்டியடித்தன. அவன் ஏதோ கேட்க முயல்வதாகத் தெரிய முன்னே சற்று வளைகிறான்.

“பேரென்னய்யா?”

இவன் பதில் சொல்லாமல் நிற்க, பக்கத்திலிருப்பவர்கள் இவனை உற்சாகப்படுத்துவதைப் போல.. “பேரு.. பேர கேக்குறான் ஒங்கப்பன்.. ச்சொல்லு..” எனக் கூச்சலிடுகிறார்கள்.

வீராயி உள்ளேயிருந்து அடித்தொண்டையில் ஓலமிடுகிறாள்.

6

கொட்டொலி அடங்கும்போது இவள்மீது வியர்த்துச் சரிகிறான். முந்தைய அரைமணி நேரம் என்ன நடந்ததென்பதை அவளால் கிரகித்துக்கொள்ள முடியவில்லை. மதியத்திலே குடித்து வாந்தியெடுத்துவிட்டுச் சுருண்டு கிடந்தவனுக்கு எப்படிச் சாத்தியப்பட்டது இந்த வெறியாட்டம் எனப் புரியவில்லை.

அடுக்களையில் இருந்தவளுக்கு அனத்தலும் முனகலும்தான் கேட்டுக்கொண்டிருந்தன. தட்டியருகில் அலங்கோலமாகப் படுத்திருந்தவன் தலைமாட்டிலேயே கக்கி வைத்திருந்தான். 

ஊரடங்கியிருந்த அந்த நேரத்தில் கோயிலிலிருந்து கொட்டொலி கேட்க ஆரம்பித்தது. ஏதோ கிடாவெட்டு விசேஷமெனப் பாக்கியம் சொல்லியிருந்தாள். கல்யாணத்துக்குப் பிறகு அந்த மஞ்சள் வேட்டியைக் கட்டவேயில்லை. இவளுக்கும் சாமி நாட்டமெல்லாம் சலிப்பாகிப் போய்விட்டது. கோயில் பக்கம் காலடி படுவதில்லை – சாமிய கும்புட்டுச்சு.. சந்தியில போனுச்சு.. பொளிச்சென இல்லாத எச்சிலைத் த்த்தூ என்பாள்.

கொட்டு மெல்ல மெல்ல உரக்க ஆரம்பிக்க, உடுக்கை தெறிக்க ஆரம்பித்தது. எப்போதுமில்லாத அதிர்வும் அச்சுறுத்தலும் அவ்வொலியில் – தணிவின் அறிகுறியே இல்லாமல் ஏறிக்கொண்டே போன இரைச்சலின் நடுவில், வீராயிக்கு வீட்டுக்குள் வேறொரு சத்தம் கேட்டது. செவியைக் கூர்ந்தாள் – ‘உந்த்த்த்.. உந்த்த்த்.. உந்த்த்த்..’

பதறியடித்து வெளியே வந்தவள் அப்படியே உறைந்துபோனாள். தரையில் திருநாவு முறுக்கிக்கொண்டு கிடந்தான். நாக்கு மடிந்து கண்கள் அகலவிரிந்து மூச்சு ஏறியிறங்கி.. ‘உந்த்த்..உந்த்த்.. உந்த்த்த்த்த்..’ வாயில் நுரைத்த எச்சிலில் ரத்தத்திட்டுகள் தெறித்தன. முறுக்கிய உடம்பு வில்லென வளைந்தெழுந்தது. இரண்டு பலமான வெட்டுகள். தண்ணீர்க் குவளை எட்டிப் பறந்தது. கால்கள் பின்னிக்கொண்டன. நாவைத் துண்டாக்கிவிடுவான் போலிருந்தது. வெட்டிய வெட்டுக்கு மூர்ச்சையானால்கூட ஆச்சரியமில்லை.

அவன் கையை அழுத்தித் தரையோடு பிடிக்க முயன்றாள். பதைப்பில் அடுப்புச்சாம்பலை ஒருபிடி அள்ளி நெற்றியில் பூசிவிட்டாள். பக்கவாட்டில் மண்டியிட்டு உட்கார்ந்து தோளை வலுகொண்டு அழுத்திச் சமனப்படுத்தினாள். திமிறியெழுந்தவன் அவளைத் தன் கட்டுக்குள் ஒரே வினாடியில் சுருட்டியிருந்தான். மூச்சு மெல்ல இளகியபோது, அவனை இறுக்கமாக அணைத்துக்கொண்டாள். அதிலிருந்து சோர்ந்து துவளும்வரை இவள் முற்றிலுமாக அவனது இயக்கத்தில் சரணடைந்திருந்தாள்.

7

தங்கத்துக்குத் தூக்கம் இம்மியளவும் பொருந்தவில்லை. இன்றென இல்லை; தன் அப்பன் வீட்டுக்கு வந்த நான்கு நாட்களுமே இப்படித்தான். வீரமணி வாத்தியாரு கேக்குறான் – என்னடா அப்பன் வந்த குசியான்னு.. ஒப்புக்குக்கூட இளிக்க முடியவில்லை. பெரியப்பா சாய்ந்தரம் பேசிக்கொண்டிருந்தார், சாந்தியக்கா தோளில் சாய்ந்துகொண்டு இவன் கேட்டுக்கொண்டிருந்தான் – “அப்பன்னு இந்தப் பயலுக்கு அவன் என்ன பண்ணிருக்கான்.. அந்த சிறுக்கியும் கீலாவாட்டம் திரிஞ்சுகிட்டு இருந்தா.. பயல அப்டியே விட்டோவ.. வர்றான் இப்ப.. மொவர மசுரும் அவனும்.. மருவத்தூர்ல இருந்தானாம், வடக்க எங்கயோ மலைக்கு போனானாம்.. வெக்கங்கெட்டப்பய..”

நடுவீட்டில் உறங்கிக்கொண்டிருக்கும் அவ்வுருவத்தைப் பார்க்கவே இவனுக்குக் கூசுகிறது. ‘வெக்கங்கெட்டப்பய’ – மனசுக்குள் சொல்லிக்கொண்டான்.

திடீரென வாசலிலிருந்த ரப்பர் குடம் உருளும் சத்தம் கேட்க திடுக்கிட்டு எழுகிறான். தலையைத் தூக்கிப் பார்த்தவனுக்கு, வீராயி தெருவுக்குப் போவது தெரிகிறது. எழுந்துகொண்டான். எப்போதும்போல சத்தம்போட்டு அவளை ஏச மனமில்லை. இவனும் வாசலுக்கு வந்து பின்னாலிருந்து அவளைப் பார்த்துக்கொண்டிருக்கிறான். தெருக்கோடியை வெறித்தபடி அப்படியே நிற்கிறாள். நாலைந்து அடி முன்னெடுத்து வைத்தவள் மறுபடி அசையவில்லை. இரண்டு நிமிடங்கள் பிடித்திருக்கும். சாந்தப்பட்டவளைப் போல வீட்டை நோக்கித் திரும்பும்போது, இவன் நிற்கிறான்.

“அதான் வந்துட்டாருலம்மா.. இன்னும் என்னத்துக்கு இங்குன வந்து பாத்துட்டிருக்க..”

அவள் புடவைத்தலைப்பை இழுத்துச்சுற்றி கைகளை இறுகக் கட்டிக்கொண்டு வீட்டுக்குள் போகத் தலைபடுகிறாள்.

“தூங்கித் தொலயமாட்டியா நீயி..” ஏக்கமாகத்தான் கேட்டான்.

சிலையாட்டமே நின்றவள், தூரத்துத் தெருக்கோடியைப் பார்த்தபடி சொன்னாள். 

“கொளம்படி சத்தம் கேட்டுச்சு.. ஒங்க அப்பன் வருவான்.. அதான் பாக்கலாம்ன்னுட்டு வந்தேன்..”

1 comment

AnuradhaPrasanna July 25, 2022 - 1:07 pm

அல்ட்ரா மாடர்ன் மக்களை எழுதும் அதே ஆள் கடைக்கோடி கிராமத்து உணர்வுகளையும் அந்த இயல்பான பேச்சில் எழுதிவிடுவது ஆச்சர்யமாக இருக்கிறது. உங்களுடைய எல்லாக்கதைகளிலும் உளவியல் சார்ந்த அணுகுமுறை உள்ளதாக உணர்கிறேன். சன்னதம் என்ற சொல் இருபொருள் படும். ஒன்று நடன முத்திரை. மற்றது உங்கள் கதையில் வரும் அருள் கொண்ட சன்னதநிலை.
மனதில் வரித்துக் கொண்ட ஆளுக்கும், அவனது நிஜ உருவத்துக்கும் அவளைப் பொருத்தவரை எட்டாத தூரம். வறண்ட வாழ்வின் கதைக்களம். சிறப்பான எழுத்து. வாழ்த்துகள்.
விரசம் என்பதன் அளவுகோல் வாசிப்பவரின் மனது மட்டுமே. அந்தவகையில் பேச்சுவழக்கில் உள்ள சொற்கள் மிகையான விரசமாக தோன்றவில்லை.

Comments are closed.