தமிழ்ச் சிறுகதை இன்று (பகுதி 13): வேறு நிலம், வேறு முகம், ஒன்றே வலி – கனகலதாவின் சீனலட்சுமி

0 comment

கோவையிலுள்ள கல்லூரி ஒன்றில் ‘சமகாலப் பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகள்’ குறித்து உரைநிகழ்த்தும்படி கேட்டுக்கொண்டதையடுத்து ஏற்கெனவே வாசித்த சில சிறுகதைகளையும் புதிய சிறுகதைகளையும் தேடிப் படிக்க வாய்த்தது. அயலகச் சிறுகதையாளர்கள் சிலரது கதைகளையும் இணையத்தின் வழியே தேடிப் படிக்க முயன்றேன். ‘அறை’ என்ற ஒரு சிறுகதை கண்ணில்பட்டது. வீட்டில் நிகழ்ந்திருக்கும் ஒரு மரணம் அங்கே தங்கியிருக்கும் பெண்ணுக்குள் ஏற்படுத்தும் மனவோட்டங்களை மையமாகக்கொண்டது அந்தக் கதை. சாவு வீட்டின் சூழலில் அதற்கு சற்றும் தொடர்பில்லாத ஒருவர் சந்திக்க நேரும் உளச்சிக்கல்களைத் திருத்தமாகச் சொல்லியிருந்தது. அகவயமாகவே கதையை நகர்த்தவேண்டிய அசாதாரணமான களம் வெகு சாமர்த்தியமாகக் கையாளப்பட்டிருந்தது. இணைய இதழ் ஒன்றில் வெளியான லதாவின் கதை அது. அதைத் தொடர்ந்து காலச்சுவடு வெளியிட்ட ‘நான் கொலை செய்த பெண்கள்’ என்ற சிறுகதைத் தொகுப்பைப் பெற்று படிக்க முயன்றேன். கிடைக்கவில்லை. ‘பாம்புக் காட்டில் ஒரு தாழை’ என்ற கவிதைத் தொகுப்பும் வெளியாகியுள்ளது.

‘சீனலட்சுமி’ என்ற தொகுப்பு அண்மையில் வெளிவந்துள்ளது. எட்டு கதைகளைக் கொண்டது. ஒரேயொரு கதையைத் தவிர பிற கதைகள் அனைத்தும் பெண்களின் கதைகள். அம்பை, ஆர்.சூடாமணியில் தொடங்கி உமாமகேஸ்வரி, சந்திரா, ஜா.தீபா வரையிலுமான பெண் எழுத்தாளர்களின் கதைகளில் ஒரு பொதுவான புள்ளியைக் கண்டடைய முயல்வோமானால் ‘பெண்களுக்கான இடம்’ என்பதாகவே அது இருக்கும். வரலாற்றில், சமூகத்தில், அன்றாட வாழ்வில் பெண்களுக்கான இடம் குறித்துக் கேள்வி எழுப்பும், விமர்சனம் செய்யும், வலியுறுத்தும் குரல்களை அந்தக் கதைகளில் கேட்க முடியும். லதாவின் கதைகளில் ஒலிக்கும் குரலும் அவ்வாறான இடத்தைக் கேள்வி கேட்கும் ஒன்றாகவே அமைந்திருக்கிறது. காலமும் களமும் வேறு என்றாலும் எழுப்பப்படும் கேள்வியும் அதற்கான காரணங்களும் உலகளாவியதாகவே உள்ளன. பெண்கள் பொதுவாக எல்லா இடங்களிலும் எல்லாக் காலத்திலும் அனுபவிக்க நேர்கிற தடைகளுடன் புறக்கணிப்புகளுடன் அடக்குமுறைகளுடன் சேர்ந்து, புலம்பெயர்ந்து வாழும் பெண்கள் அந்நிய நிலம், அந்நியமான கலாச்சாரம் போன்ற சில கூடுதல் காரணிகளையும் கடந்து சமாளிக்க வேண்டியுள்ளது.

புலம்பெயர்ந்து சிங்கப்பூரில் வாழத் தலைப்பட்ட பெண்களின் வாழ்வியல் நிலைகளை, அனுபவங்களை வரலாற்றினூடாக கால வரிசையில் அணுகுவதாக அமைந்துள்ளன இந்தக் கதைகள். விடுதலை பெறும் கனவுடன் 1943ல் சுபாஷ் சந்திரபோஸின் ஐ.என்.ஏயில் சேர்ந்து பணியாற்றுவதற்கு முயலும் வேணியிலிருந்து தொடங்கி (தேக்காவில் ஒரு பாலம் இருந்தது) குழந்தைப் பேறுக்குப் பிறகான நாட்களில் தனக்கான இடத்தைத் தக்கவைத்துக்கொள்ளத் தவிக்கும் நீலமலர் (இளவெய்யில்) வரையிலுமாக இக்கதைகள் தரும் பெண்களின் வரிசையைக் கொண்ட வரைபடம் இதுவரையிலுமான மனிதகுல முன்னேற்றங்களையும் சாதனைகளையும் பெருமிதங்களையும் கசப்புடன் கேலிசெய்வதாக அமைந்திருக்கிறது. உலகியல் சார்ந்த புறவயமான பெருமளவிலான மாற்றங்களைச் சாத்தியப்படுத்தியிருக்கும் அத்தனை சாதனங்களும் கருவிகளும் மனிதனின், குறிப்பாக ஆணின், மன ஆழத்திலும் சிந்தனையிலும் செயல்பாடுகளிலும் பெண்களுக்கான இடத்தை அங்கீகரிப்பதில் அவனுக்குள்ள அக இயல்பில் சிறிய அளவிலான சலனத்தையும் ஏற்படுத்த இயலாதவையாக அமைந்திருப்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை.

வரலாற்றிலும் சமூகத்திலும் இயல்பாக, நியாயமாக அமைய வேண்டிய பெண்களுக்கான இடத்தை அவர்கள் அடைய முடியாமல் செய்யும் தடைகள் எவை என்ற கேள்விகளை இக்கதைகளின் வழியாக எழுப்பிக்கொள்ள முடியும். காலங்காலமாகத் தொடர்ந்து பெண்களுக்கென்று வகுக்கப்பட்டு வரையறைக்கப்பட்டிருக்கும் எல்லைகளை மீறும் முயற்சிகளும் போராட்டங்களும் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் தொடர்ந்துகொண்டுதான் உள்ளன என்பதையும் இக்கதைகள் அடிக்கோடிட்டுக் காட்ட மறக்கவில்லை.

‘தேசத்தின் விடுதலை’ என்ற ஒற்றை இலக்கின் கீழ் இனம், மொழி, பால், சாதி, பொருளாதாரம், இருப்பிடம் போன்ற பிற எல்லா மனமாச்சரியங்களும் வேறுபாடுகளும் பொருளற்றுப் போகும் என்பதே நம்பிக்கை. அப்படித்தான் வரலாறு கற்பித்துள்ளது. இந்தக் கற்பிதத்தை உடைத்து நொறுக்கும் உண்மைகள் தொடர்ந்து வெளிப்பட்டு வந்துள்ளன. சுபாஷ் சந்திர போசுடன் ஐ.என்.ஏவில் சேர்ந்து போராடும்போது சொந்த மண்ணுக்குத் திரும்பலாம், விடுதலை பெறலாம் என்ற கனவுடன் களத்துக்கு வரும் பெண்களை, படையணியில் உள்ள சக பெண்களே புறக்கணிப்பதற்கான காரணமாக அமைந்திருந்தது சாதி என்னும் உண்மை வரலாற்றில் சொல்லப்படாத ஒன்று. சாதி வேறுபாடுகளுக்கு முன்பு தேச விடுதலை, மானுட விடுதலை போன்ற லட்சியங்கள் பொருட்டல்ல என்ற மனப்பான்மையை ‘தேக்காவில் ஒரு பாலம் இருந்தது’ போன்ற கதைகளிலிருந்துதான் அடையாளம் காண முடிகிறது. சாதி மனப்பான்மைக்கு ஆட்படுவதில் ஆண், பெண் பேதமில்லை என்கிற கசப்பான யதார்த்தத்தையும் கண்டுகொள்ள முடிகிறது.

‘காவடி எடுக்க உரிமையில்லை’, ‘படகிலேறி கடலில் மீன் பிடிக்கக்கூடாது’, ‘போர் முனையில் சண்டை போட அனுமதியில்லை’ போன்று வாழ்வின் எல்லாத் திசைகளிலும் வாய்ப்புகளிலும் தொடர்ந்து புதிது புதிதான தடைகளை விதிக்கும் ஆண்களின் ஆதிக்கப் போக்கே பெண்களின் முதன்மையான சவால்களாக அமைந்திருப்பதை எல்லாக் கதைகளும் உணர்த்துகின்றன. கடுமையான உடல் உழைப்பைத் தந்து குடும்பத்தைக் கட்டிக் காக்கும் பொறுப்புணர்வுடனும் இருந்தபோதிலும் ஆண்களின் அனுமதிக்காகக் காத்திருக்கும் நிலை மாறவில்லை. அம்மாவின் புற்றுநோய் சிகிச்சைக்காக உடனிருக்கும் பெண்ணின் மனநிலையைப் புரிந்துகொள்ளாமல், திருமண ஏற்பாடுகள் குறித்த நேரத்தில் நடப்பதில்லை, அழைக்கும்போது பேசுவதில்லை போன்ற காரணங்களுக்காகத் தொடர்பிலிருந்து விலகிச்செல்லும் மணமகனின் உளநிலையும் புறக்கணிப்பும் அந்தப் பெண்ணின் மீது அவன் செலுத்தும் உளவியல் வன்முறைதான்.

தடைகளையும் சவால்களையும் கடந்துசெல்ல முனையும்போது ஏற்கவேண்டிய வலிகளையும் இக்கதைகள் உணர்த்துகின்றன. நோய்மை வாழ்வின் ஒரு பகுதியாக மாறிவிடுகிறது. இரு கைகளையும் இழந்தவள் கணவனால் புறக்கணிக்கப்படுகிறாள். மகளையும் விட்டுத்தர நேர்கிறது. புற்றுநோய் வாதைகளைத் தாங்கிக்கொள்வதுடன் அன்றாடத் தேவைகளுக்குக்கூட இன்னொருவரின் உதவியை நாடவும் அதைச் சகித்துக்கொள்ளவும் வேண்டியுள்ளது. சருமத்தைத் துளைத்து வடுக்களை ஏற்படுத்தும் இன்சுலின் ஊசிகளைக் குத்திக்கொள்ள நேர்கிறது. இத்தகைய உடல் வலிகளுடன் புறக்கணிப்பின் அகவதையையும் சகித்துக்கொள்ள நேர்கிறது.

இவற்றிலிருந்து தம்மை விடுவித்துக்கொள்ளவும் ஆசுவாசப்படுத்திக்கொள்ளவும் பல்வேறு நம்பிக்கைகளைப் பற்றிக்கொள்ள நேர்கிறது. தைப்பூச விழாவின் போது ஈடுபாட்டுடன் காவடிகளைத் தயார்செய்கிறார்கள், தேசத்துக்காகப் போரிடத் தயாராகிறார்கள், தாத்தாவிடமிருந்து மீன் பிடிக்கும் நுட்பங்களைக் கற்றுக்கொள்கிறார்கள், மீன்களைக் கொண்டு விதவிதமாக சமைத்துப் பரிமாறுகிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வழி. அலுக்காமல் வரிசைகளில் நின்று சாதிக்க எண்ணுவதும்கூட அவ்வாறான ஒரு நம்பிக்கைதான். கைபேசி விளையாட்டுகளில் மூழ்குவதும் தற்படங்களை ஏற்றி நண்பர்களின் பாராட்டுக்களைப் பெற விழைவதும்கூட தங்களது நெருக்கடியிலிருந்து விலகி சற்றே நிதானித்துக்கொள்ளும் உத்திதான். பக்தி, பாசம், சமையல், தையல்வேலை, இசை, ஒப்பனை, விளையாட்டு என்று தங்களுக்கான வழிகளில் ஒன்றில் ஈடுபடுத்திக்கொள்வதன் வழியாகத்தான் கிடைக்காத இடத்தின், அங்கீகாரத்தின் வெறுமையை நிறைவு செய்துகொள்ள முடிகிறது.

இந்தக் கதைகளின் ஊடாகச் சில அபாரமான நுண் உணர்வுகளை மிக நுட்பமாகக் காட்டியிருக்கிறார் லதா. ‘நிர்வாணம்’ கதையில் திரண்டு அழகுறும் அம்மா-மகள் உறவை உதாரணமாகச் சொல்லலாம். அம்மா, மகள் என்ற உறவு நிலைக்கப்பால் இருவரும் இருவேறு பெண்கள். அவரவர் அந்தரங்கங்கள் வேறு. இன்னொருவரின் உதவியுடனே தன் அன்றாடங்களைக் கழிக்க நேரும் அம்மாவின் உளநிலையைப் புரிந்துகொள்ளும்போது மகளுக்கும் அவளுக்குமான நெருக்கம் கூடுகிறது. உடல் சார்ந்த கூச்சங்கள் மறைகின்றன. சிறுமியாக இருந்த காலத்தை இருவரும் எட்டும்போது உடலின் நிர்வாணம் பொருட்டாகத் தெரிவதில்லை. உடுத்தாத உடலை ‘கோகுல் சாண்டல்’ பவுடரின் வாசனையுடன் பின்னிருந்து கட்டிக்கொள்ளும் புள்ளியைத் தொடும்போது கதை முழுமையடைகிறது. சொற்களில் எளிதில் சிக்காத இந்த உணர்வுகளை இயல்பான சித்தரிப்பின் வழியாகக் கச்சிதமாகத் திரளச்செய்யும் பெரும் சவாலை லதா மிக அபாரமாகக் கையாண்டிருக்கிறார்.

எழுதப்பட்டுள்ள சொற்களால் உருவாகியிருக்கும் கதையினுள் நுட்பமான உணர்வுகளைப் பொதிந்து வைத்திருக்கும் புனைவுத்திக்கு இன்னொரு உதாரணம் ‘காவடி’. கதையின் நாயகியான ஆத்தா, தாத்தாவுக்கு மூன்றாவது மனைவி. நான்கு குழந்தைகள். தாத்தாவின் சொற்ப வருமானம் போதாத நிலையில் பிள்ளைகளின் பசிபோக்க கடுமையாக உழைத்தவள். உடலெங்கும் கன்றி காய்க்கும் அளவுக்குத் தாத்தாவிடம் அடி வாங்கியவள். தைப்பூசத்தின்போது அரிகண்ட காவடி எடுக்கும் தாத்தாவுக்கு உற்சாகத்துடன் உதவுபவள். காவடி ஊர்வலங்களில் சலிக்காமல் நடந்தவளுக்குக் காலில் பட்ட சிறுகாயம், நீரிழவின் காரணமாகக் குணமாகாமல் புரையோடி தசைகளைத் தின்றுவிட்டது. சிகிச்சைக்காகக் காத்திருக்கிறாள். நினைவிழந்தும் மீண்டும் படுக்கையில் கிடப்பவளின் எண்ணம் முழுக்கக் காவடி எடுத்துச்செல்லும் தைப்பூச விழாவினையே சுற்றி வருகிறது. பேத்தியிடம் தொடர்ந்து காவடிக் கதைகளைச் சொல்வதாக அமைந்துள்ள கதையின் உள்ளே வாழ்நாள் முழுக்க உடலிலும் மனத்திலும் அலகுகளைக் குத்தி எண்ணற்ற காவடிகளைச் சுமந்த அவளது நெஞ்சுரத்தை உணர்ந்துகொள்ள முடிகிறது. ‘ஊசி குத்தி குத்தி காயந்துக் கறுத்திருந்த அவரின் இடுப்புப் பகுதி அரிகண்டம் போடுபவர்களின் இடுப்பாகி இருந்தது’ எனும் கடைசி வாக்கியம் அதுவரையிலும் சொல்லப்பட்ட தாத்தாவின் கதையை மாற்றி ஆத்தாவின் கதையாக்கிவிடுகிறது.

ஒரே கதையின் இரண்டு பகுதிகள்போல் அமைந்திருக்கும் ‘அலிசா’வும் ‘வலி’யும் இரு முகங்களைக் கொண்ட ஒரே பெண்ணின் கதையைத்தான் சொல்கின்றன. சிங்கப்பூருக்கு அப்பால் உள்ள உபின் தீவில் வளரும் அலிசா மீன் பிடிக்கும் நுட்பங்களைத் தாத்தாவிடம் கற்றுக்கொள்வது கதை. இதற்குள் வெவ்வேறு தரவுகளும் உணர்வுகளும் செறிவாக அடுக்கப்பட்டுள்ளன. வாழ்வின் பல்வேறு முன்பறியாத சூழல்களுக்கும் அனுபவங்களுக்கும் அலிசா தன்னைத் தயார்படுத்திக்கொள்ளும் விதமாகவே கதையின் சம்பவங்கள் அடுக்கப்பட்டுள்ளன. ‘வலி’ கதையை இதன் தொடர்ச்சியாக அணுக முடியும். விதவிதமாக மீன் சமைப்பதில் தேர்ச்சிபெற்றவள், கைகளை இழந்து தொட்டி மீன்களைக் கொண்டு தன்னைத் திருப்திபடுத்திக்கொள்ளும் அவலத்தையும் அப்படியே ஏற்றுக்கொள்கிறாள். கைவிடப்படுவதன் துயரத்தில் அவர்கள் இருவரும் மூழ்கிவிடுவதில்லை. அலிசா துணிச்சலுடன் மீன் பிடிக்கக் கடலுக்குச் செல்கிறாள். கைகளை இழந்தவளோ மகளின் வருகைக்காக மீன் தொட்டியுடன் தயாராகிறாள்.

லதாவின் இக்கதைகள் வலுவான புதிய பெண் கதாபாத்திரங்களைத் தமிழ்ச் சூழலுக்கு அறிமுகப்படுத்தியுள்ளன. எல்லாப் பெண்களுக்குமான வலியையும் தடைகளையும் சந்திப்பவர்கள்தான் என்றாலும் அவற்றைக் கடந்துசெல்லும் விதங்களே அவர்களைத் தனித்துவப்படுத்துகின்றன. இவர்களது உலகில் ஆண்கள் முக்கியமற்றவர்கள் என்றாலும் இவர்களுக்கான இடத்தையும் உரிமைகளையும் தீர்மானிப்பவர்கள் அவர்கள்தான் என்பதையும் கவனிக்க முடிகிறது. கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் அடையாளம் சொல்லும் அளவுக்குக் கனபரிமாணங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளன.

லதாவின் கதைமொழி எளிமையானது. சிடுக்குகள் இல்லாதது. தனித்துவமானது. இயல்பாக உரையாடுவது போலக் கதை தொடங்குகிறது. தெளிவுடன் நகர்கிறது. சொல்ல வேண்டியவற்றை மட்டும் சிக்கனமாகச் சொல்கிறது. கதையின் உள்ளடுக்குகளைப் குறித்த சுட்டிகளை மட்டும் அங்கங்கே மிகக் குறைந்த சொற்களில் சொல்லிவிட்டு நகர்ந்துவிடுகிறது. பெரும்பாலான கதைகள் உரையாடல்களால் அமைந்தவையே. அக மோதல்களையும் உணர்வுகளின் பல்வேறு ஏற்றத்தாழ்வுகளையும் அடங்கிய தொனியில் அழுத்தமாகக் காட்டிவிடுகின்றன.

சம்பவங்களையும் திருப்பங்களையும் கொண்டு கதைசொல்லும் உத்திக்கு மாறாக மன உணர்வுகளைத் தொட்டுக் காட்டுவதன் மூலமாக மட்டுமே முழுமையான அனுபவ உலகத்தை உருவாக்க முனைந்திருக்கும் விதத்தில் தனித்துவம் பெறுகின்றன லதாவின் கதைகள். உரையாடல்களின் வழியாகச் சிக்கனமான சொற்களின் மூலமாக ஆங்காங்கே கசியும் வெளிச்சத்தைக் கொண்டு கண்ணுக்குத் தெரியாத பகுதியை அனுமானிக்க வேண்டிய சவால்களைக் கொண்டிருக்கின்றன. பெண்களுக்கான இடம் மறுக்கப்படுவதைக் கேள்விக்குள்ளாக்கும் கதைகள் என்றபோதும் எந்த இடத்திலும் அரசியல் குரல் வலுத்தோ ஓங்கியோ ஒலிக்கவில்லை என்பதும் இந்தக் கதைகளுக்கான இயல்புகளில் ஒன்று.

அயல்நிலத்துக்கான துலக்கமான அடையாளங்களுடன், தனித்துவமிக்க குணாம்சங்கள் கொண்ட கதாபாத்திரங்களின் வழியாக உலகளாவிய அளவில் தொடர்ந்து விவாதிக்கப்படும் பிரச்சினை குறித்த தீவிரமான கேள்விகளை எழுப்புகின்றன என்கிற வகையில் இவை அடர்த்தியானவை, அழுத்தமானவை.

*

முந்தைய பகுதிகள்:

  1. தந்தையர்களும் தனயர்களும் – தூயனின் சிறுகதைகள்
  2. அன்னையின் சித்திரங்களும் சாதியின் முகங்களும் – சுரேஷ் பிரதீப் சிறுகதைகள்
  3. நடுவில் இருக்கும் கடல் – சித்துராஜ் பொன்ராஜ் கதைகள் 
  4. உழைக்கும் சிறுவர்களின் துயர உலகம் – ராம் தங்கம் கதைகள்
  5. கலையும் வண்ணங்களும் மறையும் காட்சிகளும் – கிருஷ்ணமூர்த்தியின் கதைகள் 
  6. போரும் காமமும் – அனோஜன் பாலகிருஷ்ணன் கதைகள்
  7. இருண்ட வானில் ஒளிரும் நட்சத்திரங்கள் – கார்த்திக் பாலசுப்ரமணியத்தின் கதைகள்
  8. புனைவெழுத்தின் புதிய சாத்தியங்கள் – சுனில் கிருஷ்ணனின் கதைகள்
  9. அகத்தின் ஆழம் தேடி – மயிலன் ஜி.சின்னப்பனின் கதைகள்
  10. கதை சொல்லாத கதைகள் – கமல தேவியின் கதைகள்
  11. துலா முள்ளின் அசைவுகள் – பா.திருச்செந்தாழையின் கதைகள்
  12. நிலமும் திரையும் – செந்தில் ஜெகன்நாதனின் மழைக்கண்