நான் அவனை ஜெர்மனியின் ‘ஸ்டட்கர்ட்’ நகரில் முதல்முறை பார்த்த அன்று, ‘க்ளோரா’ உணவகத்தில் அளவுக்கு அதிகமான மின்விளக்குகள் இரவின் கருமைக்கு வண்ணம் தீட்டியிருந்தன. உணவகத்தின் வாசலில் நெருக்கமாய் இடப்பட்டிருந்த சிறுசிறு வட்ட மேசைகளைச் சுற்றி குட்டையான மர ஸ்டூல்களிலும் உயரமான மூங்கில் நாற்காலிகளிலும் அமர்ந்து மக்கள் புகைப்பதும் மது அருந்துவதுமாய்ச் சத்தமாகச் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தனர்.
உணவகத்தின் மேல்தளத்து முற்றத்தின் அலங்காரச் செடிகளின் நடுவே பல வண்ண மின்விளக்குகள் பிரகாசித்தன. தூரத்தில் அவ்வப்போது வான வேடிக்கைகளும் செவிமடலைக் கிழிக்கும் எலக்ட்ரிக் கிடார் இசையுமாய் ஆண்டின் கடைசி இரவில் எல்லோரது பீர் கோப்பைகளும் மகிழ்ச்சியில் நிரம்பி வழிய, அவன் மட்டும் ஒரு விடுபட்ட சொல்லைப் போல் தனித்திருந்தான். பார்வை சற்றும் சிதறாமல் கையில் விரித்திருக்கும் புத்தகத்தினுள் ஆழமாய்ப் பயணம் செய்தபடி இருந்தது. அவனது காப்பிக் கோப்பை சூடாறிக்கொண்டிருந்தது.
தடித்த நீளமான மேலங்கியை மீறி திமிறித் தெரியும் என் வனப்பையும் வாளிப்பான உடற்கட்டையும் பற்றி எதிர்மேசையில் பீர் அருந்திக்கொண்டிருந்த சிலர் தங்களுக்குள் ஏதோ முணுமுணுத்துச் சிரிக்க, இவன் நொடிப்பொழுது என்னைப் பார்த்துவிட்டு மீண்டும் புத்தகத்திற்குள் தொலைந்துபோனான். முரண்பாடான அந்த அலட்சியப் போக்குதான் அன்று என்னை அவனிடம் முதன்முதலில் பேச வைத்திருக்க வேண்டும்.
“புத்தகத்துக்குள் மூழ்கிப் போகாமல் இருந்தால் சரிதான்…”
பரிச்சயமற்ற பெண்குரலைக் கேட்டு நிமிர்ந்து பார்த்தவன், சிலநொடி நிதானத்திற்குப் பிறகு, “கண்முன்னே ஒருவன் மூழ்கினால் காப்பாற்ற மாட்டீர்களா என்ன?” என்றான்.
அவனது ஜெர்மன் உச்சரிப்பு சரளமாக இருந்தாலும் அந்நியத்தன்மை துருத்தித் தெரிந்தது. தன் எதிரே காலியாகயிருந்த மூங்கில் நாற்காலியைக் காட்டி என்னை அமரச்சொன்னான். அவனது வட்டமுகத்தில் நீலநிறக் கண்கள் நேர்த்தியாய்ப் பொருந்தியிருந்தன.
“சுற்றிப் பாருங்கள்! உங்களையும் அந்தக் கிறிஸ்துமஸ் தாத்தா பொம்மையையும் தவிர எல்லாரும் கூச்சலும் கும்மாளமுமாய் பீர் அருந்திக்கொண்டிருக்கிறார்கள்…”
தன் பின்னால் முதுகில் பரிசு மூட்டையுடன் சிரித்தபடி நிற்கும் தடித்த அட்டையாலான கிறிஸ்துமஸ் தாத்தா பொம்மையை அப்போதுதான் கவனிப்பவன் போல் திரும்பிப் பார்த்தான். அடர்ந்த தாடியின் மறைவிலிருந்து புன்னகை சில நொடிகள் எட்டிப் பார்த்தது.
‘ஸ்டட்கர்ட்’ நகரில் ஆங்காங்கே தென்படும் அரபி முகம்தான் என்றாலும் ஏதோவொரு பிரத்யேக ஈர்ப்பைத் தன்னுள் மறைத்து வைத்திருந்தான். ஆனால் அவனது பார்வையில் இயல்பான விலகல் இருந்தது. அதற்கான காரணத்தை நான் அறிந்தேயிருந்தேன்.
“உங்களுக்குக் குடிக்க ஏதாவது?” எரிந்து முடித்த சிகரெட்டை ஆஷ் ட்ரேயில் தட்டியபடியே கேட்டான்.
நான் மட்டும் தனியாக மது அருந்த விருப்பமில்லாததால், “ப்ளாக் காபி…” என்றேன்.
“இப்போது பீர் அருந்தாத பட்டியலில் மூன்று பேர்” என்றான் சலனமற்ற புன்னகையோடு.
தன் கறுப்புநிற மேலங்கியைக் கழற்றி நாற்காலியின் பின்னால் விரித்துப் போட்டிருந்தான். அரைக்கை டீ ஷர்ட் உடல் இறுக்கத்தைக் கூட்டிக் காட்டியது. புறங்கை ரோமங்கள் குளிரில் விறைத்து நின்றன.
“குளிரவில்லையா என்ன?”
கண் சிமிட்டியபடியே, “புத்தாண்டு இரவின் கடற்கரைக் காற்றுக்கென்றே பிரத்யேக சுகம் இருக்கிறது” என்றான். வாசித்துக்கொண்டிருந்த புத்தகத்தை மேசைமீது வைத்தபோது அதன் அட்டைப்பட ஓவியத்தைக் கவனித்தேன்.
ஊதாநிறப் பின்னணியினூடே ஒரு சிறுவனின் கண்கள் மட்டும் வெளியே தெரிகிறது. பாதி மூடிய அவ்விழிகளைச் சுற்றி சுருள் சுருளாய் வெள்ளைக் கோடுகள்.
“முற்றுப்பெறாத ஒரு சிறுவனின் தேடலைப் பேசும் புத்தகமா?” எனக் கேட்டேன்.
“அருமைதான்! கிட்டத்தட்ட நெருங்கிவிட்டீர்கள்… காலச்சுழற்சியில் தன்னைத் தொலைத்துவிட்ட சிறுவர்களைப் பற்றிய தொகுப்பு.”
“ஒருவேளை ஊதா நிறத்தைக் கொஞ்சம் அடர்த்தியாகக் கையாண்டிருந்தால் சிறுவனின் முடிவற்ற தேடலின் சோகம் இன்னும் சிறப்பாக மேலெழுந்து வந்திருக்கலாம் எனத் தோன்றுகிறது. கற்பனையையும் தேடலையும் ஒன்றாகக் கிளறிவிடும் பிரத்யேகத்தன்மை ஊதா நிறத்துக்கு உண்டு” என நான் சொல்லவும் புருவங்களை வளைத்து தன் ஆச்சரியத்தை வெளிப்படுத்தினான்.
“முறையாக ஓவியம் பயிலும் மாணவிக்கு வண்ணங்களின் மௌனம் புரியாமலா இருக்கும்?” சிகரெட்டை பற்ற வைத்தபடி சொன்னேன்.
“புத்தாண்டு இரவில் இளம் ஓவியருடனான சந்திப்பை நான் எதிர்பார்த்திருக்கவில்லை. அருமைதான்.”
“ரூகன் கடற்கைரையில் தானியங்களை இறைத்துப் போட்டவளைப் போல் சூரிய ஒளியில் கண்கள் கிறங்கிப் படுத்திருக்கும் இளம்பெண்ணைச் சுற்றி கடற்பறவைகள் சிறகடிக்கும் மிகப்பழைய புகைப்படமொன்றைப் புது வண்ண ஓவியமாக இப்போது மீளுருவாக்கம் செய்துகொண்டிருக்கிறேன். நினைவுகளில் புதைந்துபோன பழைய கறுப்பு வெள்ளைப் புகைப்படங்களைச் சமகால வண்ண ஓவியமாக்குவதில்தான் எனக்கு ஆர்வம் அதிகம்.”
தனக்குள்ளே லேசாகப் புன்னகைத்தபடி, “ஏன் கறுப்பு வெள்ளை மீது இத்தனை கோபம்?” என்றான்.
“அப்படியெல்லாம் இல்லை. வண்ணங்கள்தானே ஓவியங்களின் மொழி?” சற்று சாய்ந்து அமர்ந்துகொண்டு புகைத்தபடி சொன்னேன்.
விநோதமான கூற்றைக் கேள்விப்பட்டதைப் போல் தலையசைத்தான். தன் மேலாடைப் பையிலிருந்து அவனும் மல்போரா சிகரெட் ஒன்றை எடுத்துப் பற்ற வைத்தான். “புகைப்பதில் மட்டும் எப்போதும் சலிப்பு ஏற்படுவதில்லை” எனக் கண்கள் மூடிப் புகைத்தபடி சொன்னான். “அதுவும் வாரயிறுதியில் நண்பர்களோடு ஹூக்கா புகைக்கத் தொடங்கினால் கேட்கவே வேண்டாம். நேரம் போவதே தெரியாது!”
காப்பிக் கோப்பை வந்தது. நான் என் பணப்பையை எடுக்கும் முன் இரண்டு யூரோ நாணயங்களைக் கொடுத்திருந்தான்.
“சாரி! என்னால் உங்கள் வாசிப்பு தடைபட்டுவிட்டது. சுவாரசியமான கதையா?” கையுறையைக் கழற்றி மேலங்கிக்குள் வைத்தபடி கேட்டேன்.
“அப்படியெல்லாம் இல்லை. ஒரு விசித்திரமான கிளைக்கதையை வாசித்துக்கொண்டிருந்தேன். ஆனால் நிச்சயம் உங்களுக்குப் பிடிக்காது!”
நீலநிறக் கண்கள் விநோதமாக ஜொலித்தன. அவன் என்னிடம் ஏதோ சொல்ல விழைவதாகத் தோன்றவும் கேட்டேன், “அப்படி என்ன கதை அது?”
“நிறங்களுக்கும் ஒரு சிறுவனுக்குமான நெருக்கத்தைப் பற்றிப் பேசும் சிறு பகுதி.”
காப்பிக் கோப்பையின் முதல் மிடறைப் பருகியபடி, “நிறங்கள் பற்றி என்றால் நீங்கள் கட்டாயம் சொல்லித்தான் ஆகவேண்டும்.”
“சரி! உங்கள் விருப்பம்” எனப் புத்தகத்தை விரித்து வாசிக்கத் தொடங்கினான்…
“அந்தச் சிறுவனின் கால்கள் ஓரிடத்தில் நிற்காது. எப்போதும் எங்காவது திரிந்துகொண்டேதான் இருப்பான். சமையலறையில் அம்மா இருக்கும்போது வீட்டின் பின்னாலிருக்கும் அத்திமரத் தோட்டத்திற்குப் போய்விடுவான். அவள் தோட்டத்திற்குத் தேடி வந்தால் இவன் வீதிக்கு ஓடிவிடுவான். இவனைக் கவனிக்கவே ஒரு ஆள் தேவை. அன்று விட்டுவிட்டு மழை பெய்தவண்ணம் இருந்தது. வீட்டில் வேறு யாருமில்லை. தன் இஷ்டத்திற்குத் தோட்டத்தில் தனித்து உலாவிக்கொண்டிருந்தான். அப்போதுதான் முதல்முறை அந்த ஏணியைப் பார்த்தான். நம்பமுடியாத அளவிற்கு மிக உயரமான மூங்கில் ஏணி அது! பச்சை படர்ந்திருக்கும் சுவரில் சாய்ந்திருந்தது. அண்ணாந்து பார்த்த சிறுவனுக்கு ஏணியின் மறுமுனை தெரியவில்லை. குறுகுறுப்புடன் மெல்ல ஏறத் தொடங்கினான். ஏழெட்டு படிகள் ஏறியபின் மீண்டும் அண்ணாந்து பார்த்தான். இன்னமும் ஏணியின் மறுமுனை தெரிந்தபாடில்லை. யாரோ கூப்பிடும் குரல் கேட்கிறது. சிறுவன் இன்னும் வேகமாக ஏறுகிறான். ஏணியும் நீண்டுகொண்டே போகிறது. அடுத்தது என்ன என்ற குறுகுறுப்போடு ஏறிக்கொண்டே இருக்கிறான்… இப்போது கீழிருந்து கூப்பிட்ட குரலும் நின்றுவிட்டது. அடுத்த சில ஏணிப்படிகளில் கூட்டிற்குத் திரும்பும் பறவைகளைப் பார்க்கிறான். மேகங்களைத் தாண்டியும் ஏணி நீள்கிறது. முடிவில்லா ஏணியில் தான் அந்தரத்தில் நிற்பதாகத் தோன்றவும் முதல்முறை உள்ளூர லேசாக நடுக்கம் மேலிட கீழே குனிந்து பார்க்கிறான். ஏறிவந்த படிகள் மேகப் புகைமூட்டத்தில் மறைந்திருந்தன. ஆதியும் இல்லை அந்தமும் இல்லை. அச்சத்தில் அண்ணாந்து பார்த்து உரக்கக் கத்தியபோது எதேச்சையாக வானவில்லில் மோதிவிட்டான்.”
“வானவில்லிலா..?” கண்கள் விரிய ஆச்சரியமாய்க் கேட்டேன்.
“ஆம்! வானவில்லில்தான். ஏன் உங்களுக்கு வானவில் பிடிக்காதா?” வாசிக்கும் பக்கத்தில் புத்தகக்குறியை வைத்தபடி கேட்டான்.
“இல்லை. அப்படியொன்றும் இல்லை…” முகத்தில் விழுந்த முடிக்கற்றையைப் பின்னுக்குத் தள்ளிக்கொண்டே, “அப்புறம் என்ன நடந்தது?” எனக் கேட்டேன். மீதிக் கதையைத் தொடர்ந்தான்…
“வானவில்லில் மோதிய அதிர்ச்சியில் சிறுவன் பிடி நழுவி கீழே விழுகிறான். கண் திறந்து பார்க்கையில் பெரிதாய் விரிந்த அத்திமர இலைகள் அசைவது தெரிகிறது. அதிர்ச்சியோடு எதிரே பச்சை படர்ந்த சுவரைப் பார்க்கிறான். அவன் ஏறிய ஏணி இப்போது அங்கில்லை. தோட்டத்தில் தனியாகச் சுவரை வெறித்துக்கொண்டிருக்கும் மகனைத் தேடிப் பிடித்த தாய், சிறுவனின் வெளுத்த முகத்தில் திட்டுத்திட்டாய்ப் படிந்திருக்கும் வண்ணங்களைப் பார்த்து ஆச்சரியத்தோடு கேட்கிறாள், “எங்கிருந்து இத்தனை வண்ணங்களைப் பூசிக்கொண்டு வந்தாய்?” சிறுவனுக்குப் புரிந்துவிட்டது. மெல்ல சிரித்தபடி அண்ணாந்து வானவில்லைப் பார்க்கிறான்.
“இது சரியில்லை” என்று பாதியிலே இடைமறித்தேன். புத்தகத்தை மூடிவைத்துவிட்டு என்னைப் பார்த்தான்.
“சாரி! என்னால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. வானவில்லின் நிறங்கள் சிறுவனின் உடம்பில் உதிர்ந்துவிட்டால் நிறங்களற்ற வானவில்லை எந்தக் கண்கள்தான் விரும்பும்?”
“நான் சொன்னேன்தானே! இந்தக் கதையை நீங்கள் விரும்ப மாட்டீர்கள் என்று. வண்ணங்களை நேசிக்கும் ஒருத்தியால் எப்படிக் கறுப்பு வெள்ளை வானவில்லை ஏற்றுக்கொள்ள முடியும்? ஆனால் உண்மையில் நிறங்கள் என்பதே மூளையின் சித்து வேலைதானே!” என அவன் சொல்லிக்கொண்டிருந்தபோது திடீரென்று மின்விளக்குகள் மொத்தமாக அணைக்கப்பட்டன.
இசைக்கும் கை தட்டல்களுக்கும் பலவித ஆர்ப்பாட்டங்களுக்கும் மத்தியில் பத்திலிருந்து எண்கள் தலைகீழாய்ச் சத்தமாக எண்ணப்பட்டன. இருண்ட வானத்தைப் பார்த்தபடியே இருந்தோம்.
இன்னிசையின் மத்தியில் மீண்டும் வானில் வெளிச்சம் பிறந்தது. புத்தாண்டு வாழ்த்துகள்… என்று கைகுலுக்கிக்கொண்டோம். பல வண்ண வான வேடிக்கைகளால் இரவு மீண்டும் அலங்கரிக்கப்பட்டது. அப்பா ஃபோனில் அழைத்து புத்தாண்டு வாழ்த்துகள் சொன்னார். “நாளை மதிய உணவு உங்களோடுதான். எனக்குப் பிடித்த ஆய்ஸ்டர் உணவைத் தயார்செய்து வைக்க அம்மாவிடம் சொல்லிவிடுங்கள்.”
பேசி முடித்ததும் மீண்டும் கைபேசி காமிராவில் வான வேடிக்கைகளைப் புகைப்படம் எடுக்கத் தொடங்கினேன். அவன் வெறுமனே கைகளைக் கட்டிக்கொண்டு மேலே பார்த்துக்கொண்டிருந்தான்.
“நீங்கள் போட்டோ எடுக்கவில்லையா?”
“போட்டோ எடுக்கும் காட்சிகள் நினைவுகளில் தங்குவதில்லை. அதுவும் போக எனக்குப் பொதுவாக இந்த மாதிரியான வண்ணச் சிதறல்களில் ஆர்வம் கிடையாது. நான் நிறங்களை ரசிப்பதில்லை!”
“ஏன்?”
“எனக்கு நிறங்கள் தெரிவதில்லை…”
“ஜீசஸ்!” புகைப்படம் எடுப்பதை நிறுத்திவிட்டு அவனை ஆச்சரியமாய்ப் பார்த்தேன். “புரியவில்லை! நிறங்கள் தெரியாதா?”
“ஆமாம்! எனக்குக் கறுப்பு வெள்ளையைத் தவிர மற்ற நிறங்கள் தெரியாது. நீங்கள் எடுத்திருக்கும் புகைப்படங்களில் பிற நிறங்களை நீக்கிவிட்டால் தோன்றும் கறுப்பு வெள்ளைக் காட்சிதான் நான் எப்போதும் பார்ப்பது.”
அவன் சொல்வதை உள்வாங்குவதற்குச் சில விநாடிகள் தேவைப்பட்டன. பார்வை தெரியாதவர்கள் மீது இயல்பாய்த் தோன்றும் பரிவே முதலில் என்னுள் மேலிட்டது. ஆனால் அவனுக்குத்தான் பார்வை தெரியுமே! ஆனால் நிறங்கள் மட்டும் தெரியாதா? அப்படியென்றால் நான் தெரிகிறேனா? தெரிந்தால் எந்த நிறத்தில்?
“நான் அணிந்திருக்கும் பழுப்புநிறக் குளிர் ஜாக்கெட் தெரிகிறதா?”
“தெரிகிறது. ஆனால் சாம்பல் மிகுந்த கறுப்பு நிறத்தில்!”
“என் ஸ்கர்ட்டின் சிவப்பு நிறம்?”
“இல்லை. நிழலின் அடர்கறுப்பு நிறம்.”
என் வட்டத் தொப்பியைக் கழற்றி கூந்தலைப் பறக்கவிட்டபடி கேட்டேன், “என் தங்கநிறக் கூந்தல்?”
“ஓ! என்னைப் பொறுத்தவரை உங்கள் கூந்தல் யானைத் தந்தத்தின் மங்கலான வெள்ளை நிறம்.”
“மங்கலான வெள்ளையா?”
“கறுப்பு வெள்ளை சாம்பல் நிறங்களுக்குள்ளேயே பல உட்பிரிவுகளை என்னால் நுணுக்கமாகச் சொல்லிவிட முடியும். கண்கள் அப்படியே பழகிவிட்டன.”
அபத்தமான பல கேள்விகளைத் தொடர்ந்து கேட்டபடி இருந்தேன். சாலையில் கடந்துபோகும் அடர்பச்சை ஆடி காரை காட்டி… கிறிஸ்துமஸ் மரத்தில் அணைந்து அணைந்து எரியும் சீரியல் விளக்குகளின் நிறங்களைப் பற்றி… தங்கநிறப் பீர் கண்ணாடிக் குப்பியைச் சுட்டிக்காட்டி…
என்னுடைய இலக்கற்ற கேள்விகளுக்கு முகம் சுழிக்காமல் அமைதியாகப் பதில் சொன்னான்.
“சாரி… என்னால் கேள்விகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை.”
“பரவாயில்லை. எல்லாருக்கும் ஏற்படும் அதிர்ச்சிதான். அதனால்தான் யாரிடமும் இதைப் பற்றிச் சொல்வதில்லை. ஆனால் புத்தாண்டு இரவில் உண்மையை மறைக்கவோ பொய் சொல்லவோ விருப்பம் இல்லை.”
அப்போதுதான் நினைவு வந்தது. நாங்கள் இதுவரை ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொள்ளவில்லை.
‘ஹன்னா’ முதுகலை கலைக்கல்லூரி மாணவி என்று கைகொடுத்தேன். பின் அரசு நிறுவனத்தில் வேலை பார்க்கும் அம்மா… ‘போர்ஷே’ கார் தொழிற்சாலையில் பணியாற்றும் அப்பா… மேற்கு ஸ்டட்கர்ட்டில் நாங்கள் வசிக்கும் கருங்காரை ஓடுகள் பதித்த வீடு, என்னுடைய யமஹா ‘கிராண்ட் பியானோ’ என்று என்னைப் பற்றி வரிசையாய் அடுக்கினேன்.
அவன் பெயர் ‘அகமது அரீஃப்’. தந்தைக்கு மிகவும் பிடித்த துருக்கிக் கவிஞனின் பெயரைத்தான் தனக்கு வைத்திருப்பதாகச் சொன்னான். தன் எட்டாவது வயதில் ஈராக்கிலிருந்து ஜெர்மனி வந்ததாகவும் கடந்த பதினேழு வருடங்களாக இங்கேயே இருப்பதால் தனக்கு ஜெர்மன் மொழி எழுதவும் வாசிக்கவும் நன்கு தெரியும் என்றான். அதைத் தாண்டி தன்னைப் பற்றி அவன் எதுவும் பெரிதாகச் சொல்லிக்கொள்ளவில்லை. கூச்ச சுபாவியாகத் தெரிந்தான். இந்த விஷயத்தில் எங்களது நடவடிக்கை நேரெதிராய் இருந்தது. அவன் ஒரு ஜெர்மானியனைப் போல புது நபரோடு அதிகம் பேச யோசித்தான். நானோ அவனது கறுப்பு வெள்ளைக் காட்சிகளைப் பற்றி விடாமல் கேட்டுக்கொண்டே இருந்தேன். கட்டுப்படுத்த முடியாத என் குறுகுறுப்பை அவனது நீலநிறக் கண்கள் ரசித்தபடி இருந்தன.
உலகப்போரின் வன்மத்தைச் சித்தரிக்கும் ‘ஓட்டோ டிக்ஸ்’-யின் ஓவியக் கண்காட்சியில்தான் அரீஃபை மறுபடியும் சந்தித்தேன்.
கைத்தடி ஊன்றி குனிந்து நடக்கும் சூனியக்காரியின் முதுகில் அமர்ந்திருக்கும் முகமூடி அணிந்த குழந்தையின் ஓவியத்தைக் கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தான். கைகளைக் கட்டிக்கொண்டு அவன் பின்னால் நிற்கும் என்னைக் கவனித்திருக்கவில்லை.
“வண்ண ஓவியக் கண்காட்சியைக் கறுப்பு வெள்ளையில் பார்த்த முதல் நபர் நீங்களாகத்தான் இருப்பீர்கள். பாவம் ஓட்டோ டிக்ஸ்! தன் ஓவியங்களுக்காகச் சிறைக்குச் சென்றவர்”. காக்கிநிறத் தோள்பையைச் சரிசெய்தபடி சொன்னேன். என் குரலைக் கேட்டுத் திரும்பிப் பார்த்தான்.
“இப்படி ஒருவன் பிற்காலத்தில் தன் ஓவியங்களை வெறும் கறுப்பு வெள்ளையில் மட்டுமே ரசிப்பான் என்று முன்னவே தெரிந்திருந்தால் சிறைக்கெல்லாம் சென்று கஷ்டப்பட்டிருக்க மாட்டார்!” என்று சொல்லிச் சிரித்தான்.
இறுக்கமான வெள்ளைநிறப் பேண்ட்டும் கறுப்புநிற டி-ஷர்ட்டும் அதே கறுப்பு வண்ணத்தில் தடித்த வெள்ளைப் புள்ளிகள் கொண்ட ஸ்கார்ப்பும் அணிந்திருந்தான். மேலங்கியும் கறுப்பு நிறம்! முழுக்க கறுப்பு வெள்ளையில் தெரிந்தான். இல்லை எனக்கும் அப்படித் தெரியத் தொடங்கிவிட்டதா? ஐயோ கடவுளே!
“கறுப்பு வெள்ளையில் இல்லாத அழகு வேறெந்த நிறத்தில் இருக்கிறது? உண்மையில் கண்களுக்குத் தெரிவது சிவப்பு, பச்சை, நீலம் ஆகிய மூன்று நிறங்கள் மட்டும்தானே! சொல்லப்போனால் உங்கள் கண்களையெல்லாம் மூளை ஏமாற்றுகிறது” என்றான். சுற்றியிருந்த எல்லாரும் எங்களை ஒரு நிமிடம் திரும்பிப் பார்க்க, இருவரும் சத்தமில்லாமல் புன்னகைத்தோம்.
அரீஃபை முதல்முறை பார்த்த அன்று அவனைப் பற்றி நான் யூகித்திருந்தது முற்றிலும் தவறாகத்தான் இருந்தது. எழுத்தாளன், கவிஞன், கல்லூரிப் பேராசிரியர், சுற்றுச்சூழல் ஆலோசகன்… இப்படி என்னென்னவோ… ஆனால் அரீஃப் ஒரு லைப்ரேரியன். ஸ்டட்கர்ட் பொது நூலகத்தில் பணியாற்றுவதாகச் சொன்னான்.
“அரீஃப்! உங்களுக்கு கறுப்பு வெள்ளைக் காட்சிகள் சலிப்பூட்டவில்லையா என்ன?”
“இன்னொரு சந்தர்ப்பத்தில் நாம் சந்திக்கும் போது சொல்கிறேன்…” என்றான்.
அந்த வாரயிறுதியில் பெற்றோருடனான இரவு உணவு, நண்பர்களோடு ஷாப்பிங் என முன்னரே நான் திட்டமிட்டிருந்ததால் திங்கட்கிழமை மாலை சந்திப்பதாகச் சொல்லி விடைபெற்றேன்.
உறுதிசெய்துகொண்டது போல் அரீஃபைச் சந்திக்க ஸ்டட்கர்ட் பொது நூலகத்திற்குச் சென்ற மாலை வேளையில் நீலம், வெளிர்பச்சை என இரட்டை நிறங்களில் நூலகம் ஒளி வீசிக்கொண்டிருந்தது. விஸ்தாரமான ஒன்பது அடுக்கு நூலகம்! சாலையினோரம் செங்குத்தாய் நிறுத்திவைக்கப்பட்ட பிரம்மாண்ட ரூபிக் புதிர் கனசதுரத்தைப் போன்றதொரு வடிவமைப்பு. பலதடவை கடந்து சென்றிருந்தாலும் அன்றுதான் முதல்முறை அந்த அழகிய நூலகத்திற்குள் சென்றேன்.
ஒளியூட்டப்பட்ட கண்ணாடி மேற்கூரையின் வழியே நடுக்கூடத்தில் வெளிச்சம் விரவிக் கிடந்தது. நூலகத்தின் கனச்சதுர உட்புறம் மொத்தமும் அசல் வெள்ளை நிறம்! மாபெரும் சர்க்கரை க்யூபிற்குள் நிற்பதைப் போல் உணர்ந்தேன். வெண்ணிற நீள்சதுர வாசிப்பு அறைகள். அதே நிறத்தில் படிக்கட்டுகள். அரீஃப்காகவே அந்த நூலகத்தின் உட்புறம் முழுவதும் வெள்ளை நிறத்திலேயே வடிவமைக்கப்பட்டதாய்த் தோன்றியது.
“இன்றுதான் இந்த நூலகத்துக்கு வருகிறீர்களா என்ன?” என் அலைபாயும் பார்வையிலிருந்து அவனாகவே தெரிந்துகொண்டான்.
“உங்களுக்குத்தான் ஒருவிதத்தில் நன்றி சொல்லவேண்டும். உலகின் ஒரு அழகிய நூலகத்திற்குள் நுழையாமலேயே என் வாழ்நாள் கழிந்திருக்கும்.”
“இதை உள்ளூர்ப் பெண் சொல்வது ஆச்சரியம்தான்.”
“லிஃப்ட்டில் போகலாமா?”
“நூலகத்தில் லிஃப்ட்டை பயன்படுத்துவது பாவச்செயல்.”
அவன் அப்படிச் சொன்னதன் காரணம் சீக்கிரமே விளங்கியது. ஒவ்வொரு தளமாக ஏறிச்சென்று தேடிவந்த ஓவியப் புத்தகத்தை எடுப்பதற்குள் சமகால அரசியல் புத்தகமொன்றும் நுண்கலைப் பற்றிய நூலொன்றும் எடுத்திருந்தேன். ஒழுங்கற்ற ரீதியில் அங்குமிங்குமாய் வடிவமைக்கப்பட்ட வெள்ளைப் படிக்கட்டுகளில் அடுத்தடுத்த தளத்திற்கு ஏறிச்சென்றோம். அரீஃப் சொன்ன முடிவற்ற ஏணியில் ஏறும் சிறுவனின் கதை நினைவுக்கு வந்தது.
எட்டாவது தளத்திலிருந்து கீழே பார்த்தேன். நான்கு பக்கமும் வெள்ளைச் சுவரின் வெளிப்புறமாய் புத்தகங்கள் அடுக்கப்பட்டிருந்தன. பல வண்ணக் கோடுகளாய்த் தெரிந்த அந்த நூல்களைப் பார்ப்பதற்கு அழகிய கேன்வாஸ் ஓவியம் போல் தோன்றியது.
நூலகத்தின் வாசிப்பு அறையில் நான் அமரவில்லை. எடுத்த புத்தகங்களோடு வரவேற்பறைக்குச் சென்று அரீஃப் பக்கம் குட்டையான ஸ்டூல் ஒன்றை எடுத்துப்போட்டு உட்கார்ந்தேன்.
“கிட்டத்தட்ட இந்த நூலகத்தில் இரண்டு லட்சத்து முப்பதாயிரம் நூல்கள் இருக்கின்றன!” என்றான் எதிரே கணினியைப் பார்த்தபடி, “ஆனால் என் குர்திஷ் மொழிப் புத்தகம் ஒன்றுகூட இல்லாதது எனக்கு வருத்தம்தான்.”
“ஓ! அரபி உங்களின் தாய்மொழி இல்லையா?”
“இல்லை. என் தாய்மொழி குர்திஷ். அரபி தெரியாதவர்கள் மேலோட்டமாய்ப் பார்க்கும்போது, இரண்டும் ஒரே மொழி போல் தோன்றும். ஆனால் அடிப்படையில் அரபி இனமும் குர்திஷ் இனமும் இருவேறு துருவங்கள்.”
அதன்பின் என் அட்டவணையில் அரீஃபுடனான சந்திப்பு முன்கூட்டியே எப்போதும் திட்டமிடப்பட்டிருக்கும். நாங்கள் அடிக்கடி சந்தித்துக்கொண்டோம். பொதுவாக நூலகத்தில்… அல்லது உணவகத்தில்… காப்பிக் கோப்பையோடோ, இல்லை வினிகரில் ஊற வைத்த மாட்டிறைச்சியைச் சுவைத்தபடியோ…
பொறுமையாக அவன் கொடுக்கும் விளக்கங்களும், வாசித்துக் காட்டும் கவிதைகளும், நீலநிறக் கண்களும், இவை எல்லாவற்றையும்விட அவனது கறுப்பு வெள்ளை உலகம்தான் என்னை ஒவ்வொரு முறையும் அதே குறுகுறுப்போடு அவனைச் சந்திக்க வைத்தது.
ஒருவிதத்தில் சமீபத்திய என் காதல் முறிவும்கூட இதற்குக் காரணம். அது விட்டுச்சென்ற வெறுமையை அரீஃபின் கறுப்பு வெள்ளை உலகத்தால் மெல்ல நிறைக்கத் தொடங்கினேன். கண்களை மூடிக்கொண்டு ஜாஸ் இசையைக் கேட்கும் பொழுதுகளில் தோன்றுவதுண்டு, இசைக்கு நிறம் என ஒன்றிருந்தால் நிச்சயம் அது கறுப்பு வெள்ளையாகத்தான் இருக்கும்.
உடம்பின் ஒவ்வொரு உறுப்புக்கும் அதனதன் ஆசை. ஓசைகள் செவிக்கென்றால் நிறங்கள்தானே கண்களின் ஆசை, தேடல் எல்லாம்… அரீஃபின் கண்களுக்கும் அந்த ஆசை இருக்கும்.
என் கல்லூரி வகுப்பு முடிந்த பின்னான மாலை வேளையில் சாலை விளக்கை ஒட்டிய கஃபேயில் சந்தித்துக்கொண்டோம். வெண்ணிலா ஐஸ்கிரீம் நிறைந்த கோல்ட் காப்பியை எனக்குச் சொன்னேன். ஆனால் அரீஃப் கோல்ட் காப்பியை விரும்புவதில்லை. “ஏற்கெனவே வெளியே குளிர்கிறது. உள்ளுக்குள்ளும் ஏன் குளிர வேண்டும்?” என மல்போரோ சிகரெட் பற்ற வைத்தபடி புத்தகத்தை விரித்தான்.
“உனக்கு ஏன் புத்தகங்களின் மீது இத்தனை ஆர்வம்?”
“இந்தக் குளிர்காலத்திலும் உனக்கு ஐஸ்க்ரீம் போட்ட காப்பி பிடித்திருப்பதைப் போல் எனக்கு ஏனோ புத்தகங்கள் பிடித்திருக்கிறது.”
கண்களை உருட்டி அவனை முறைப்பதைப் போல் பாவனை செய்தேன்.
“விளையாட்டுக்குச் சொன்னேன். என் புத்தகப்பசி அப்பாவிடமிருந்து வந்ததுதான். சொல்லப்போனால் என் அப்பா அம்மாவின் முதல் சந்திப்புக்கும் திருமணத்திற்கும் புத்தகங்கள்தான் காரணம். தொண்ணூறுகளில் எங்கள் குர்திஷ் இனத்தில் படித்த ஆண்களே குறைவு. பெண்கள் மிகச் சொற்பம். ஆறாயிர வருடம் பழமைவாய்ந்த நாகரீகம் செழித்த ஈராக் மண்ணுக்குத்தான் இந்த அவலநிலை!”
“எனக்கு இப்போது ஈராக் வரலாறைக் கேட்பதைவிட புத்தகங்கள் மீதான உன் பெற்றோரின் காதலைப் பற்றித் தெரிந்துகொள்வதில்தான் ஆர்வம்.”
“சரிதான்! வரலாறு என்றாலே எல்லாரும் ஒரு அடி பின்னால் போய்விடுவார்கள்.” என்னைக் கேலிசெய்வதைப் போல் உதட்டைச் சுழித்தான். பின் வழக்கமான புன்முறுவலோடு தொடர்ந்தான்…
“எங்கள் கிராமத்தின் மலையடிவாரத்துப் பள்ளியில் அப்பா வாத்தியாராக இருந்தார். அழித்தொழிப்புகளுக்கு இடைப்பட்ட சொற்ப நாட்களில்தான் அப்போது பள்ளிகள் இயங்கும். மற்ற நாட்களில் வீட்டிலிருந்தபடி அக்கம்பக்கத்துப் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக்கொடுப்பார். சந்தைக்குப் போய்வரும் கழுதையின் பொதிக்குள்தான் புத்தகங்களை மறைத்து வைத்துக் கொண்டுவருவார். உன்னால் மற்றவர்களுக்கும் ஆபத்து… என்று அப்பாவை ஊர்க்காரர்கள் கடிந்துகொள்ளும் போதெல்லாம், “உனக்கு அந்தப் பொதி சுமக்கும் கழுதையே மேல்!” என்று கடந்துவிடுவார். இரண்டு அறைகள் மட்டுமே கொண்ட வீட்டின் அலமாரி அடுக்குகளில் புத்தகங்களைச் சேகரித்து நூலகம் போன்ற ஒன்றை உருவாக்கினார். யாருக்கும் தெரியாமல் நடத்தப்பட்ட உலகின் மிகச்சிறிய நூலகம் அதுவாகத்தான் இருக்கும். அதுவும் எங்கள் சிறுபான்மை குர்திஷ் இனத்தின் மீது சதாமின் கொடூரம் உச்சத்தில் இருந்த சமயத்தில்! அப்போது ஈரான் ஈராக் போர் வேறு! இப்போது யோசித்துப் பார்த்தாலும் எனக்கே வியப்பாக இருக்கிறது.”
“புத்தகங்கள் வைத்திருப்பது அத்தனை பெரிய குற்றமா? இதற்கெல்லாம் ஏன் பயப்பட வேண்டும்?” குடித்துக்கொண்டிருந்த காப்பி கோப்பையை மேசை மீது வைத்துவிட்டுக் கேட்டேன்.
“அப்போது பயத்திற்கும் தண்டனைக்கும் காரணங்கள் தேவைப்படவில்லை. குர்திஷ் இனத்தவனாய் உயிர் பிழைத்து வாழ்வதே சாதனையாக இருந்த காலத்தில் அப்பா அத்தனை புத்தகங்களை யாருக்கும் தெரியாமல் அக்கம்பக்கத்தில் விநியோகித்துக்கொண்டிருந்தார். அவரது நூலகத்தில் புத்தகம் எடுத்து வாசித்த ஒரே பெண் அம்மாதான். அதுவே இருவரும் இணைய காரணமாகவும் அமைந்துவிட்டது. சிறுவயதில் பார்த்திருக்கிறேன். எல்லா இரவுகளிலும் அம்மாவுக்கு தான் வாசித்த ஏதேனும் ஒரு புத்தகத்திலிருந்து அப்பா கதை சொல்லுவார். இல்லையென்றால் சத்தமாக வாசித்துக் காட்டுவார். அவர்களுக்குள் ஒரு ஒழுங்கு இருந்தது. ஒருநாள் அப்பா வாசித்துக்காட்டினால் அடுத்தநாள் அம்மா அதைத் தொடரவேண்டும். அம்மா வாசிக்கும்போது சூடான ரொட்டியைப் பிட்டு வாயில் போட்டபடியே அப்பா கதை கேட்பார். இருவரில் யாராவது ஒருவரை உறக்கம் அழுத்தும்வரை இது தொடரும். என்னை மடியில் கிடத்தியபடி இரவு முழுவதும் அம்மாவும் அப்பாவும் பேசிக்கொண்டிருப்பார்கள். புரிந்தும் புரியாமலும் அந்த வயதில் நானும் பல இரவுகள் கதை கேட்டதுண்டு. “கடைசிவரை என்னிடம் சொல்ல உங்களிடம் ஏதேனுமொரு கதை மிச்சமிருக்குமானால் எனக்குச் சம்மதம்” என்றுதான் அம்மா திருமணத்திற்கு ஒப்புக்கொண்டதாக அப்பா அடிக்கடி சொல்லுவார்.”
“ஆச்சரியம்தான்! பிற்படுத்தப்பட்ட மத்தியக் கிழக்குச் சமூகத்திலிருந்து இந்தளவு புத்தகங்களில் ஆர்வமிக்கப் பெண்ணா?”
இதைச் சொன்ன பிறகுதான் அதன் தாக்கத்தை உணர்ந்து நாக்கைக் கடித்துக்கொண்டேன். ஆர்வமாய்ப் பேசிக்கொண்டிருந்தவன் மௌனமானான். அரீஃப் முகம் சட்டெனப் பொலிவிழந்திருந்தது.
“நேரமாகிவிட்டது. போகலாம்” என்றான்.
அவன் காயப்பட்டிருப்பது வெளிப்படையாகத் தெரிந்தது. இருந்தும் மன்னிப்புக்கான ஒற்றை வார்த்தையை ஏனோ நான் சொல்லவில்லை. ஏதோவொன்று என்னை ஆக்கிரமித்து ஊமையாக்கியது. அன்று உணவகத்தைவிட்டுச் சீக்கிரமாகவே கிளம்பியிருந்தோம். போகும் வழியின் நீண்ட பாதையும் சாலையினோரம் மௌனமாய் நிற்கும் ஓக் மரங்களின் பாரமான அமைதியும் பயணத்தை மேலும் கனக்கச் செய்தது.
அன்றைய இரவு வீட்டுக்கு வந்ததும் என் படுக்கையறை விளக்கைச் சோர்வுடன் ஒளியூட்டினேன். மெல்லிய மின்னொளியில் என் சாய்வு வரைபலகை பளிச்சிட்டது. வெள்ளை மார்பிள் தரையில் பல வர்ணத் தூரிகைகள் அங்குமிங்குமாய்ச் சிதறியிருந்தன. கடலின் மீதிருக்கும் ப்ரியத்தில் என் படுக்கை விரிப்பு, தலையணை, தடியான குளிர்காலப் போர்வை எல்லாமும் நீல நிறத்தில்தான். படுக்கையில் கிடந்ததும் கடல் மேல் மிதப்பதைப் போன்று உணர்ந்தேன். ஜன்னல் கண்ணாடியினூடே சாலை மெர்க்குரி விளக்கின் மஞ்சள் வெளிச்சம் அறையை மெல்ல நிறைத்தது. நான் நிறங்களால் மூடப்பட்டேன்.
நள்ளிரவாகியிருந்தது. பேசாமல்விட்ட மௌனம் உறுத்தியது. இறுக்கத்தை உதறித்தள்ளி அரீஃபை அழைக்கலாம் என்று நினைத்த நொடியில், உறங்கியிருக்கக்கூடும் என்று எனக்கு நானே சமாதானம் சொல்லிக்கொண்டு அழைக்காதிருந்தேன். ஆசுவாசமான சொல்லோ மன்னிப்பைக் கோரும் ஒற்றைப் புன்னகையோகூடப் போதுமானதாக இருந்திருக்கும். எது என்னை அவனிடமிருந்து விலக்கி நிறுத்துகிறது? என்னை ஊமையாக்கும் அந்த உணர்வின் கசப்பை உள்ளூர உணர்ந்தேயிருந்தேன்.
அடுத்தநாள் அரீஃபைக் காண நூலகம் சென்றபோது நேற்றைய சம்பவத்தைப் பற்றி நானாக எதுவும் பேசிவிடக்கூடாது என்று முடிவெடுத்திருந்தேன். என்னைப் பார்த்ததும் அரீஃப் தன் கைக்கடிகாரத்தைக் காட்டி ‘ஏன் இன்று தாமதம்?’ என்று எப்போதும் போல் யதார்த்தமாகக் கேட்டான். நேற்றைய நிகழ்வின் எந்தவொரு சுவடும் அவனிடம் இல்லை. வழக்கமான நிதானத்தோடு பேசினான். நூலகத்தின் ஒன்பதாவது தளத்திலிருக்கும் கஃபேயில் இரண்டு காப்பி கோப்பைகளோடு நாங்கள் சிரித்துப் பேசிய பின்தான் முழுதாய் மீண்டிருந்தேன்.
“இது என் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் நெருக்கமான புத்தகம். வாசித்துப் பார்…” என்று ‘கில்கமெஷ்’ காப்பியத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பை என்னிடம் கொடுத்தபோது அரீஃப் முகத்தில் சலனமற்ற மென்மையான புன்னகை உறைந்திருந்தது.
தோழியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தையொட்டி விடுமுறை நாளின் பின்மாலை வேளையில் நண்பர்களோடு புறநகருக்குச் சென்றிருந்தேன். தேவைக்கு அதிகமான உணவும் மதுவும் மேசையில் பரத்திக் கிடந்தன. ஹோட்டலின் பெயர் பதித்த சிவப்பு வண்ண உடை அணிந்திருந்த சிப்பந்தி எங்களுக்கான உணவைச் செயற்கைப் புன்னகையோடு பரிமாறிக்கொண்டிருந்த போது எதிரே தொலைக்காட்சி திடீரென்று பரபரத்தது.
புலம்பெயர்ந்த அரபியர்கள் அதிகம் கூடும் கேளிக்கை ஹுக்கா பாரில் துப்பாக்கிச்சூடு என்ற அவசரச் செய்தி பெரிய சிவப்பு எழுத்துகளில் ஓடிக்கொண்டிருந்தது. சம்பவ இடத்திலேயே எட்டு பேர் உயிரிழந்துவிட்டனர். மேலும் சிலர் காயமடைந்துள்ளனர். கொலையாளி தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இறந்துவிட்டான். இந்நிகழ்விற்கு ஜெர்மன் அரசு தன் ஆழ்ந்த இரங்கலையும் கண்டனத்தையும் தெரிவித்திருப்பதாக எச்சரிக்கை வளையத்திற்கு வெளியே நிற்கும் நிருபர் நேரலை காணொளியில் படபடவெனப் பேசிக்கொண்டிருந்தார். பின்னால் ஆயுதமேந்திய கறுப்பு உடை போலீஸ்காரர்கள் நின்றிருந்தனர். ஆம்பலன்ஸ் சைரன் அலறிக்கொண்டிருந்தது.
என்னைத் தவிர யாரும் அச்செய்தியைப் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை. மதுவின் போதையில் நண்பர்கள் தங்களுக்குள் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தனர். உள்ளூர ஏதோ அனத்தியது. அரீஃப் எண்ணுக்கு அழைத்தேன். எடுக்கவில்லை. சுற்றி ஒலிக்கும் சிரிப்பொலிகளும் பேச்சரவமும் அதன் உதாசீனமும் மேலும் என்னைச் சஞ்சலப்படுத்தியது. சாந்தமாக இருப்பதாகப் பாவனை செய்ய முயன்றேன். இந்த முறையும் அழைப்பை எடுக்கவில்லை. நண்பர்களுடனான உரையாடலைத் துண்டித்துவிட்டு வெளியே சென்றேன். ஆயிரமாயிரம் எண்ணங்கள் மலையாய்க் குவிந்து அழுத்தின. நெஞ்சுக்குள் ஏதோ பாரமாக உணர்ந்தேன். முகத்தில் வழியும் வியர்வையைப் புறங்கையால் துடைத்துக்கொண்டு மீண்டும் அரீஃபை அழைத்தேன். அழைப்புமணி அடங்க இருந்த நொடியில் மறுமுனையில் அவனது குரல் ஒலித்ததும் பெருமூச்செறிந்தேன்.
ஆழ்ந்த உறக்கத்திலிருந்து விழித்தவன் போல் பேசினான். என் பேச்சில் தொனித்த திணறல் அவனையும் பதற்றமடையச் செய்திருக்கும். மெல்லியப் பதற்றத்தோடு என்ன விஷயம் என்று கேட்டான். தவிப்பு மட்டுப்பட்ட குரலில் ஒன்றுமில்லை என்றேன்.
“இதேபோன்ற நிகழ்வுகள் இப்போது சகஜமாகிவிட்டன…” என்று மறுநாள் அரீஃப் சொன்னபோது நான் பதிலேதும் சொல்லவில்லை. தோளில் ஆதரவாய்த் தட்டினேன்.
பொதுவாக நான் அணியும் வட்டத்தொப்பியும் கணுக்காலைத் தாண்டிய நீளமான பூட்ஸூம் குளிர்கால ஸ்கார்பும் தோள்பையும் ஒரே நிறத்தில் இருக்கும்படி பார்த்துக்கொள்வேன். இப்போது அந்தப் பழக்கம் என்னையே அறியாமல் மாறிவிட்டது. அரீஃபின் கறுப்பு வெள்ளைக் கண்களுக்காகவே ஒவ்வொன்றும் மற்றொன்றோடு பொருந்தாத வெவ்வேறு நிறங்களில் அணியத் தொடங்கினேன். தினமும் வெவ்வேறு வண்ண ஆடைகள். நித்தம் பல வண்ணங்களை என் உருவில் கூட்டாக அவனுக்குக் காட்சிப்படுத்த நினைத்தேன். ஆனால் அவனது கறுப்பு வெள்ளை உலகம் என்றுமே அதைப் பெரிதாய்ப் பொருட்படுத்தியதில்லை.
ஸ்டட்கர்ட் ஒபேராவில் மாலை நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு அரங்கத்திற்கு வெளியே வந்தோம். நான் அணிந்திருந்த அடர்நீலத்தில் சிறுசிறு வெள்ளைப் புள்ளிகள் கொண்ட பினாஃபோர் ஸ்கர்ட்டை, இரு கைகளால் விரித்துக்காட்டி, “இது என்ன நிறம்? பார்க்க எப்படி இருக்கிறேன்?” என்ற வழக்கமான கேள்வியைக் கேட்டேன்.
அவனும் எப்போதும் போல், “கறுப்பு வெள்ளைக் கோட்டோவியம் போல்” என்றான். புன்னகைத்தேன். அரீஃப் கையைப் பற்றியபடி நடைபாதையில் சென்றுகொண்டிருந்த போது, சாலையின் எதிர் மருங்கில் அகதிகளுக்கெதிரான ஊர்வலம் போய்க்கொண்டிருந்தது. நான் அந்த இடத்தைவிட்டு அரீஃபை வேகமாகக் கூட்டிச்செல்ல நினைத்தேன். எங்களைக் கடந்து சென்ற டாக்சியை நிறுத்த முயன்றேன். ஆனால் நான் எதிர்பார்க்கவில்லை. டாக்சி ஓட்டுனர் அரீஃபைப் பார்த்து வசைமொழிந்துவிட்டு காரை நிறுத்தாமல் சென்றான்.
‘அகதிகள் நாட்டின் பொருளாதார கரையான்கள்’, ‘புலம்பெயர்ந்தவர்கள் நாட்டைவிட்டு அப்புறப்படுத்தப்பட வேண்டியவர்கள்’ என்ற பதாகைகளைச் சுமந்தபடி ஊர்வலம் சென்றது. அரீஃப் என் தோளைத் தட்டி என்னை ஊர்வலத்திற்கு வழிவிட்டு நிற்கும்படி சொன்னான்.
புஜத்தில் அபாயக் குறியைப் பச்சை குத்தியிருந்தவன் அரீஃபை நோக்கி உரக்கக் கத்தினான். “வேசிமகனே, நாட்டைவிட்டுப் போ! நீங்கள் எல்லாரும் கும்பலாக விரட்டப்பட வேண்டியவர்கள்! இல்லை சுட்டுக் கொல்லப்பட வேண்டியவர்கள்!”
போலீஸ் ஊர்வலத்தை ஒழுங்குபடுத்தியது. கூட்டம் எங்களைப் பார்த்துக் கத்தியபடியும் கோபமாய் வசை மொழிந்தபடியும் ஒற்றை விரலை உயர்த்திக் காட்டியும் கடந்துசென்றது. நான் அரீஃப் கைகளை மேலும் இறுகப்பற்றி அனிச்சையாக, “மன்னித்துவிடு…” என்றேன்.
“எதுக்கு?” நிச்சலனமான கண்கள் ஆச்சரியத்தோடு என்னைப் பார்த்தன.
“அவர்களது சார்பில்.”
“பாவம்! அவர்களுக்கு மறந்திருக்கும். முப்பது வருடங்கள் முன் கிழக்கு ஜெர்மனியிலிருந்து மேற்கு ஜெர்மனி வந்தவன்கூட அகதிதான்! வரலாற்று அகராதியில் ‘அகதி’ என்ற வார்த்தைக்கு மட்டும் பொருள் எப்போதும் மாறிக்கொண்டேதான் இருக்கும்”. என் கைகளை அனுகூலமாகப் பற்றிக்கொண்டான்.
புருவங்களில் வளையம் மாட்டியிருந்தவன் கூட்டத்திலிருந்து திரும்பி நின்று என்னைப் பார்த்துக் கத்தினான். “அந்த அரபிக்காரனோடு உனக்கு என்ன நெருக்கம்? உன்னைப் போன்றவர்களையும் சேர்த்தே நாடு கடத்துவோம்!”
உடல்முழுவதும் நெருக்கமாய்க் கரும்பச்சை டாட்டூ பொறித்திருந்த மேலும் இருவர், “ஆமாம், நாடு கடத்துவோம்!” என்று உரக்கக் கத்தினர்.
பிறந்த நகரின் பழக்கப்பட்ட வீதியில் முதல்முறை அஞ்சி அந்நியன் என்று சொல்லப்பட்டவனின் பின்னால் ஒளிந்துகொண்டேன். மாலைநேரக் குளிரைக் காட்டிலும் அவர்கள் விட்டுச்சென்ற வெறுப்பின் குரோதத்தால் உடல் நடுங்கியது. என் பதற்றத்தை நான் சாய்ந்திருந்த தோள்கள் அறிந்திருந்தன.
“ஹன்னா! அவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை இல்லையா… என்னைப் பொறுத்தவரையில் ஜெர்மனியின் மூவர்ணக் கொடியும் ஈராக்கின் மூவர்ணக் கொடியும் இரண்டுமே கறுப்பு வெள்ளைதானே!” என் தோளைத் தட்டி உற்சாகப்படுத்தினான்.
“சரிவா ஹன்னா, இன்று என் வீட்டுக்குப் போகலாம். இன்றைய நம் மாலைநேர உணவை நானே தயார்செய்கிறேன். மாட்டிறைச்சியும் வேகவைத்த உருளைக்கிழங்கு சாலட்டும் என வழக்கமாய் ரெஸ்டாரண்ட்டில் சாப்பிட்டு சாப்பிட்டு என் நாக்கு வறண்டுவிட்டது.”
போகும் வழியில், “எத்தனை நாட்கள்தான் வெறும் காப்பியைக் கொடுத்தே உன்னை ஏமாற்ற முடியும்?” என ஃபிரெஞ்சு வைன் வாங்கிக்கொண்டான்.
காரை வெளியே நிறுத்திவிட்டு வீட்டிற்குள் நுழைந்தநேரம் மழை அடித்துப் பெய்யத் தொடங்கியது. அவன் என்னைச் சமையலறைக்குள் அனுமதிக்கவில்லை. தன் மேலாடையில் சாம்பல்நிற மேலுடுப்பை முன்புறம் கட்டி பின்பக்கமாய் முடிச்சுப் போட்டுக்கொண்டான். தலையில் சமையல்காரக் குல்லா வேறு.
“நீ மிகப்பெரிய செஃப் என்று இத்தனை நாட்கள் எனக்குத் தெரியாமல் போய்விட்டது.”
“நீ தப்பித்தாய் என்று சந்தோஷப்பட்டுக்கொள்…”
நடுவறையில் மின்விசிறியைப் போட்டுவிட்டு நான் அமர்ந்துகொள்ள, காற்றில் படபடத்த ‘போரும் அமைதியும்’ புத்தகத்தை மூடி வைத்தேன். சமைத்து முடித்த உணவுகளை மேசையில் பரத்தினான்.
“இது அரபி பிரட். ‘குபுஸ்’ என்று சொல்வோம்.”
வெள்ளை பீங்கான் தட்டில் அந்தப் பிரெட்டை நான்கு ஐந்து துண்டுகளாகப் பிய்த்துப் போட்டுக் கொடுத்தான். இன்னொரு கிண்ணத்தில் சூடான கொண்டைக்கடலை சேர்த்த மட்டன் சூப்பை ஊற்றினான்.
“இதுதான் இருப்பதிலேயே எங்களின் எளிய உணவு. இதுவே ஈராக்காக இருந்திருந்தால், முழு ஆட்டிறைச்சியில் மசாலா இட்டு ஒருநாள் முழுவதும் பாலைவனச் சூட்டில் நன்கு வாட்டி, வறுத்த முந்திரியும் காய்ந்த திராட்சையும் சேர்த்துச் சமைத்துக் கொடுத்திருப்பேன்.”
“அத்தனை கஷ்டம் உனக்கும் அந்த ஆட்டுக்கும் கொடுக்க வேண்டாமே என்று நினைத்தேன்.”
அலமாரியில் தலைகீழாய் வைக்கப்பட்டிருந்த கண்ணாடிக் கோப்பைகளில் இரண்டை எடுத்து வைத்தான். என் காலிக் கோப்பையில் ஃபிரெஞ்சு ஒயினை நிரப்பினான். அவனது கண்ணாடிக் கோப்பையில் தண்ணீரை ஊற்றிக்கொண்டான்.
கோப்பைகளை மேலே உயர்த்தி சியர்ஸ் என்று சொல்லிவிட்டு முதல் மிடறைப் பருகினோம். காரமும் மசாலாவும் உப்பும் அதிகம் சேர்க்காத ஜெர்மானிய உணவையே சாப்பிட்டுப் பழகிய என் நாவிற்கு இந்தக் கலவையான சுவை சற்று விநோதமாக இருந்தது. பல நாட்களாய்க் கேட்க நினைத்த கேள்வியைக் கேட்டேன்.
“நீ ஏன் மது அருந்துவதில்லை? மதத்தின் பேராலா?”
அரீஃப் உடனே பதிலேதும் சொல்லவில்லை. நான் மீண்டும் மீண்டும் அதையே அழுத்திக் கேட்கவும் உற்சாகமற்ற குரலில், “மது பழைய நினைவுகளைக் கிளறிவிடும்” என்றான்.
“அதுவொரு நல்ல தருணம்தானே?”
“அது நினைவுகளைப் பொறுத்தது. என் சிறுவயது நினைவுகள் நிறங்களாலானவை. நான் மறக்க நினைப்பவை…” அசௌகரியமான சலனம் முகத்தில் நெளிந்தது.
வெளியே மழை வலுவிழந்து தூறிக்கொண்டிருந்தது. தன் கீழாடைப் பையிலிருந்து மேலும் ஒரு மல்போரோ சிகரெட் எடுத்துப் பற்ற வைத்தான். என் ஆதரவான வார்த்தைகளுக்காக அவன் காத்திருப்பதாகத் தோன்றியது.
“தனிமையில்தான் நினைவுகள் அச்சுறுத்தும். நான் உன்னோடு இருக்கிறேன். தயங்காமல் சொல்… உனக்கு எப்போது நிறங்கள் மறையத் தொடங்கின?”
எப்போதும் சிரித்தபடி உடனே பதில் சொல்பவன் சில விநாடிகள் மௌனம் காத்தான். நீண்டதொரு உரையாடலுக்குத் தன்னைத் தயார்படுத்திக்கொள்கிறான் எனப் புரிந்தது. கைகள் இரண்டையும் மேசை மீது நீட்டிவைத்து பேசத் தொடங்கினான்…
“அன்றைய இரவின் எல்லா நிறங்களும் இன்றும் நினைவிருக்கிறது. சூடான ஈராக்கிய ரொட்டியின் பழுப்பு நிறம், நீல நிறத் தேநீர்க் குடுவை, அப்பா அணிந்திருந்த கறுப்புத் தலைப்பாகையின் சிவப்புப் புள்ளிகள், அவர் வாசித்துக்கொண்டிருந்த ‘கில்கேமேஷ் காப்பியத்தின்’ பழுப்புநிற அட்டை, அம்மா அணிந்திருந்த பச்சை ஹிஜாப், வானில் மிக அருகாமையில் ஜொலித்த ஹெலிகாப்டர்களின் சிவப்பு விளக்குகள், இரவின் கறுப்பைக் கீறியபடி விழுந்த ராக்கெட் குண்டுகள்! அப்போது எனக்கு எட்டு வயது. அமெரிக்கா ஈராக் மீது போர் தொடுத்திருந்தது. அப்பா அன்று எனக்காக கில்கமெஷ் கதையை அரபியில் வாசித்துக்கொண்டிருந்தார். உலகளவில் எழுதப்பட்ட முதல் புனைவுக்கதை என்று அப்பா பலமுறை அக்கதையை எனக்குச் சொல்லியிருக்கிறார். அப்பாவால் அரபிக் கவிதைகளை அதன் நயம் மாறாமல் வாசித்துக்காட்டி குர்திஷில் விளக்கம் சொல்ல முடியும். சில நாட்கள் அக்காவியத்தில் வரும் கவிதை வரிகளைப் பாடிக் காட்டுவார். அப்போதெல்லாம் அப்பாவின் குரலைக் கேலிசெய்து ஹிஜாப் சரிந்து விழுமளவு அம்மா சிரிப்பாள். ஆனால் அன்று அப்பா அக்கதையைச் சுருக்கமாக வாசிக்க, நான் அம்மாவின் மடியில் படுத்தபடியே கேட்டுக்கொண்டிருந்தேன்…
“தான் ஆளும் மக்களை வதைக்கும் வலிமைமிக்க கொடூர அரசனான கில்கமெஷின் ஆணவத்தை ஒடுக்க இறைவன் அவனுக்கு நிகரான என்கிடுவை களிமண்ணில் உருவாக்கி பூமிக்கு அனுப்புகிறார். இருவருக்குமிடையே உக்கிரமான போர் மூள்கிறது. கிட்டத்தட்ட அமெரிக்காவும் சதாமும் இப்போது அப்படித்தான் மோதிக்கொண்டிருக்கிறார்கள்…” என்று அப்பா இடையில் சொன்னது இப்போதும் நினைவிருக்கிறது. கில்கமெஷும் என்கிடுவும் மற்றவரது வீரத்தை வியந்து போரை நிறுத்திக்கொள்கின்றனர். ஆத்திரமடைந்த இறைவன் இருவருக்கெதிராகப் பொன்னிற இறக்கைகள் படைத்த காட்டெருமையை ஏவிவிடுகிறார்” என அப்பா வாசித்துக் கொண்டிருந்தபோது வானில் சிறகுகள் படபடக்கும் ராட்சசப் பட்சிகளின் சப்தம் கேட்டது.
“புத்தகத்தை அம்மாவிடம் கொடுத்துவிட்டு அப்பா வெளியே போய்ப் பார்த்தார். வானில் ஹெலிகாப்டர்கள் பிணந்தின்னி பருந்துகளாய் வட்டமடித்துக்கொண்டிருந்தன. அப்பாவின் பழுப்புநிறக் குர்தாவின் பின்னால் ஒளிந்துகொண்டேன். எல்லாரும் பயந்து பொதுவெளியில் கூடிய நேரத்தில் ஹெலிகாப்டர்கள் குண்டுமழை பொழியத் தொங்கின. சுற்றிலும் சிமெண்ட்டும் புழுதியும் கலந்த சாம்பல் புகைமூட்டம். அப்பா என் கையைப் பிடித்திழுத்து ஓடத் தொடங்கினார். கால் இடறிவிடும் புர்காவைத் தூக்கிப்பிடித்தபடி அம்மாவும் பின்னால் ஓடிவந்தாள்.
“கண் இமைக்கும் நேரத்தில் எல்லாம் நடந்து முடிந்தது. ராக்கெட் குண்டுகளுக்கு எங்கள் வீடு முற்றிலும் தீக்கிரையானது. அப்பாவின் வாழ்நாள் சேகரிப்புகளைப் பற்றி எரிந்த நெருப்பு நொடிப்பொழுதில் எல்லாவற்றையும் வாசித்துத் தீர்த்தது. மிக நெருக்கத்தில் அடுத்த குண்டு விழவும் நானும் அப்பாவும் தூக்கி வீசப்பட்டோம். சிதிலமடைந்த கட்டிடத்தின் சுவரில் மோதி விழுந்தேன். கடைசியாய் நான் பார்த்த நிறம், என் அப்பா உடலின் ரத்தச் சிவப்பு. கொட்டகைக்குள் இயங்கிய தற்காலிக அவசர மருத்துவனையில் நான் கண் திறந்து பார்த்தபோது கறுப்பு வெள்ளையில் உருவங்கள் அங்குமிங்கும் நடந்துகொண்டிருந்தன. மருந்துநெடியும் ரத்தவாடையும் நிறைந்த நாற்றம். அம்மா கட்டிலினோரம் தலைசாய்ந்து அழுதுகொண்டிருந்தாள்.
“அக்காட்சியை எப்போது நினைத்துப்பார்த்தாலும் என்னுள் இந்தக் கேள்வி எழும். அந்நேரம் ஒரு பெண் இறந்துபோன கணவனுக்காக அழுவாளா? இல்லை, நினைவின்றி கிடக்கும் மகனுக்காக இறைவனிடம் மன்றாடுவாளா? இல்லை, நொடிப்பொழுதில் சூனியமாய்ப் போன தன் எதிர்காலத்தை நினைத்து தனக்குள் ஒடுங்கிக்கொள்வாளா? ஆனால் போர்க்காலத்தில் கேள்வி பதில்களுக்கெல்லாம் நேரம் கிடையாது.”
கண்ணாடி கிளாசில் தண்ணீர் ஊற்றிப் பருகிக்கொண்டான். அரீஃப் எதிரே அமர்ந்திருந்த நான், அவன் அருகில் போய் அமர்ந்து கைகளை ஆதரவாய்ப் பற்றினேன். ஆழ்ந்த பெருமூச்சுக்குப் பின் மீண்டும் சொல்லத் தொடங்கினான்.
“போரில் இறந்தவர்களை அடக்கம்செய்யும் பொதுத்திடலில் என் அப்பாவின் நல்லடக்கம் முடிந்த கையோடு என்னைப் பார்த்துக்கொள்ள அம்மா மருத்துவமனைக்குத் திரும்பியிருந்தாள். எனக்குப் பின்னந்தலையில் அடிபட்டிருந்தது. மூளையில் ரத்தம் கட்டியிருப்பதாக டாக்டர் சொல்லியிருந்தார். பழைய நினைவுகளையும் பார்வையில் நிறங்களையும் தொலைத்திருந்தேன். இடது கை, காலிலும் கொஞ்ச நாட்களுக்கு அசைவில்லை. ‘மூளையின் சில நரம்புகள் பாதிக்கப்பட்டிருக்கிறது. அதுபோக, தூக்கி வீசப்பட்ட அதிர்ச்சி வேறு. சில மாதங்களில் நினைவுகளும் நிறங்களும் மீண்டு வரலாம் இல்லை வராமலும் போகலாம். அடுத்து கொடுக்கப்படும் மருத்துவ உதவியைப் பொறுத்தது’ என்று டாக்டர் கூறினார். ஆனால் அவர் சொன்ன அடுத்தகட்ட சிகிச்சை அளிக்கத் தோதான மருத்துவமனை அங்கில்லை. இரும்புக் குண்டுகளுக்குத் தப்பித்த ஒன்றிரண்டு மருத்துவமனைகளும் நிரம்பி வழிந்தன. உயிருக்குப் போராடும் பலர் படுக்கைகூடக் கிடைக்காமல் தரையில் கிடத்தப்பட்டிருக்க, நினைவு திரும்பாத சிறுவனுக்கு மாதக்கணக்கில் தனிப்படுக்கையை ஒதுக்க வேண்டும் என்ற எண்ணமே பேராசைதான்.
“போர் முடிந்து இரண்டு வாரங்களுக்குப் பிறகு பாக்தாத்தில் இருக்கும் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டேன். உடல் சற்று தேறியிருந்தது. கை, கால் அசைவுகளை மீட்டிருந்தேன். ஆனால் நினைவுகள் முழுதாய் மீண்டிருக்கவில்லை. அப்போதுதான் ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் அடுத்தகட்ட மருத்துவச் சிகிச்சைகாக ஜெர்மனி வர அனுமதி கிடைத்தது. எல்லாருக்கும் அப்படி அமைவதில்லை. உயிரைப் பணயம் வைத்து பெரும் பணம் செலவழித்து சட்டத்திற்குப் புறம்பாகவே பெரும்பாலானவர்கள் ஐரோப்பா எல்லையைக் கடக்கிறார்கள். அந்த விஷயத்தில் எனக்கு மட்டும் ஏனோ கடவுளின் கிருபை இருந்திருக்கிறது. நான் அம்மாவோடு ஜெர்மனி வந்த சில மாதங்களில் இங்கு எடுத்துக்கொண்ட மருத்துவ சிகிச்சைக்குப் பின் நினைவுகளை முழுதும் மீட்டுவிட்டேன். ஆனால் நிறங்கள் திரும்பவில்லை. ஏனோ என் மீது நிறங்களுக்குக் கோபம். காலப்போக்கில் எனக்கும் பழகிவிட்டது”.
பலவந்தமாகச் சிரிக்க முயன்றான்.
அரீஃப் நிறமற்றவன், புத்தகத்திற்குள் வாழ்பவன் என்ற வரையில் மட்டுமே அவனைப் பற்றி இத்தனை நாட்கள் மனதில் சித்தரித்து வைத்திருந்த எனக்கும் சில விநாடிகள் தேவைபட்டன.
“உன் அம்மா?”
“உடல்நிலை சரியில்லாமல் நான்கு வருடங்கள் முன்பு இறந்துவிட்டாள். மூன்று நாட்களாக அவளும் மரணத்தோடு போராடியபடி இருந்தாள். மருத்துவர்கள் கை விரித்திருந்தனர். ஆனால் அவள் எதையோ வேண்டி உயிரை விடாமல் பிடித்திருப்பதாகத் தோன்றியது. அப்பாவின் நினைவாய் ஈராக்கிலிருந்து அவள் எடுத்து வந்தது அந்தப் பழுப்புநிற கில்கமெஷ் புத்தகம் மட்டும்தான். அப்பா இறந்த பிற்பாடு அவள் வாசிப்பதை நிறுத்திவிட்டாள். என்னையும் வாசிக்கச் சொன்னதில்லை. பக்கங்கள் பழுப்படைந்து போன அந்தப் புழுதியப்பிய கில்கமெஷ் புத்தகத்தை மருத்துவமனைக்கு எடுத்துச்சென்றேன். குண்டுவெடிப்பின் போது அப்பா எனக்கு வாசித்துக் காட்டிய பகுதியிலிருந்து தொடர்ந்தேன்.
“சுவர்க்கத்து எருமையைக் கொன்ற என்கிடு கடவுள்களின் சாபத்தால் நோய்வாய்ப்பட்டு இறந்துவிடுகிறான். கில்கமெஷ் முதல்முறை மரணத்தைக் கண்டு அஞ்சுகிறான். கடலுக்கடியில் சாகாவரம் தரும் மாயச்செடியைக் கண்டுபிடிக்கிறான். நாட்டிற்குக் கொண்டுசெல்லும் வழியில் மாயச்செடியைக் கொடிய சர்ப்பம் தின்றுவிடுகிறது. மாபெரும் வலிமைமிக்க கில்கமெஷும் மரணத்தின் முன் தோற்றுவிடுகிறான்!” என்று நான் வாசித்துக்கொண்டிருந்த போது அம்மா என்னைப் பக்கத்தில் வரச்சொன்னாள். ‘அஹ்மத்…’ என்று சொல்லி என் நெற்றியில் முத்தமிட்டாள்.
“வீட்டில் உன்னை அஹ்மத் என்றா கூப்பிடுவார்கள்?”
“இல்லை! அஹ்மத் என் அப்பாவின் பெயர். என்னுடைய குரலில் அப்பா அவளுக்கான கடைசி கதையையும் வாசித்து முடித்திருந்தார். “மரணத்தின் முகத்தை யாராலும் பார்க்க முடியாது… அதன் குரலை யாராலும் கேட்க முடியாது…” என்ற வரிகளை நான் வாசித்தபோது பல வருடங்களுக்குப் பின் அம்மாவின் புன்னகையில் உயிர்ப்பிருந்தது. அந்தப் புன்னகை மறையும்முன் இறந்து போனாள். ஸ்டட்கர்ட் மத்திய மசூதியில் அம்மாவை அடக்கம் செய்தேன். அந்தக் கில்கமெஷ் புத்தகத்தையும் அவளோடு சேர்த்துப் புதைத்தேன். மறுமையில் அப்பா அவளுக்குத் திரும்பவும் அதை வாசித்துக் காட்டுவார்.”
நினைவுகளை உதிர்த்துவிட முயல்பவனைப் போல் தலையை வேகமாக ஆட்டினான். அரீஃப் கரங்கள் லேசாக நடுங்கவும் உள்ளங்கைக்குள் ஏந்திக்கொண்டேன். மழைநின்று வெளுத்திருந்த வானத்தைப் பார்த்தபடி சில விநாடிகள் மௌனத்திருந்தவன் தயக்கத்தோடு மெல்லச் சொன்னான்…
“ஹன்னா, உன்னிடம் ஒரு உண்மையைச் சொல்ல வேண்டும்.” நீலக்கண்கள் என்னை உற்றுப் பார்த்தன.
“தைரியமாகச் சொல்.”
“வானவில்லில் மோதிய சிறுவனின் கதையை உனக்கு அன்று வாசித்துக் காட்டினேனே, நினைவிருக்கிறதா?”
“நம் முதல் சந்திப்பை எப்படி என்னால் மறக்க முடியும்?”
“வானவில்லில் மோதி நிறங்களைத் தன் உடலில் அப்பிக்கொள்ளும் சிறுவன். அப்படியொரு கதை அந்தப் புத்தகத்தில் இல்லை! அது என் பலநாள் கற்பனைதான்! ஒரு மழைநாளில் நானும் வானவில்லைத் தொட்டு அதன் வண்ணங்களை என் உடல் முழுவதும் பூசிக்கொள்வேன்…”
அரீஃப்பின் குரல் உலர்ந்துபோய் கரகரப்பாக ஒலித்தது. என் சுயத்தை இழந்திருந்தேன். விடாப்பிடியாய் நிறுத்தி வைத்திருந்த கண்ணீர் கட்டுப்பாட்டை மீறியது. அன்றைய இரவு நான் அவனை விட்டுப் பிரியவில்லை. இனி பிரியும் எண்ணமும் இல்லை. அவனை முத்தமிட்டு நெஞ்சோடு இறுக அணைத்துக்கொண்டேன். என் அரவணைப்புக்கு முழுதாய் தன்னை ஒப்புக்கொடுத்தான். உடல் படபடக்கத் தனக்குள் முணுமுணுத்தவன் கொஞ்சம் கொஞ்சமாக அமைதியானான். இருவரும் கண்மூடிக் கிடந்தோம். விழித்துப் பார்த்தபோது சாளரத்தின் வெளியே சூரிய ஒளிர்கதிர்கள் மின்ன அழகிய வானவில் பூத்திருந்தது. விருப்பமான ஓவியத்தை இமைக்காமல் காண்பதைப் போல் கண்கள் விரியப் பார்த்தோம். சப்தமின்றி மேலெழும் ஒரு பெயர் தெரியா பறவையின் சிறகடிப்பைப் போன்றதொரு மௌனத்தின் இதம் இருவரையும் நிறைத்தது.