தகப்பன் அரூபன்

0 comment

அரேபியப் பாலைப் பிரதேசத்து அதி உயரமும் கம்பீரமும் கொண்ட தேகமாய் இருந்திருக்க வேண்டும். அசாதாரண நீளமிக்க சமாதி. அண்மைப்பட்டு அமர்கையில் நீண்டு விரிந்து மலையென மண்ணில் அமைந்த கல்லறை. கண்கவர் வண்ண மென் ஜரிகைத் துணியால் போர்த்தப்பட்டு மேலே ரோஜாவும் மல்லிகையுமாய் குவிந்து உதிரிதழ்கள் விரவிக் கிடக்கும் மேடு. சுற்றிலும் அலங்கார மரத்தடுப்பு. அறை பூராவும் ஊடேறும் சுகந்தம்; வாசனைகளின் ஆழ்ந்த கலப்பும் ஈர்ப்பும். உடலிலும் மனத்திலும் செறிவுற்ற ஆழ் மணத்தில் திளைத்து தானாகவே ஒன்றாகி அகத்தில் சுரந்து ஒளியாகி தன்னுணர்வைத் தகிக்க வைத்துக் கரைத்து மாயமாகி ஒன்றுமற்றதாய்ப் போய்விடுவதானதோர் இருப்பின் திளைப்பு.

எத்தேர்வுமற்று அப்படியே நீண்டது காலம், சுகந்தம் உள்ளார்ந்து பிறகு மழைவிட்டு ஓய்ந்தது போலானது உடலூற்றம். அடைக்கலப்பட்டு மறைத்துக்கொள்ள இடமற்று தலைக்குமேல் ஏதுமற்ற வானும் நிலமுமே மேலும் கீழுமாய் அமைந்த நீள் மணல் வெளியில் எதிர்பாரா பெருமழையில் நனைந்த முதுவிலங்கெனச் செய்வதேதும் அற்று குளிர் நீர் சொட்டச் சொட்டச் சகலமும் ஒடுங்கி முற்றாகத் திளைத்து அங்கேயே அப்படியே என அமர்ந்திருந்தது விழிப்பு.

வெளியூரிலிருந்து ஏழெட்டு யாத்திரீகர்கள் துணைக்கு ஒரு முல்லாவுடன் சமாதி அறைக்குள் நுழைந்தனர். மிக அலங்காரமான பூ வேலைப்பாடு செய்யப்பட்ட பட்டுப் போர்வையைக் கல்லறை மேல் பரப்பி மூடினர். முகப்பக்கம் மூடக்கூடாதென முல்லா கூற, தலைப்பக்கம் போர்வை கீழே இழுத்து விடப்பட்டது. முல்லா அரபியில் ஓதத் தொடங்கினார். நம்மை முழுமையாக ஆட்கொள்ளும் கமழ்ச்சி கொண்ட வாசனைத் திரவம் சிறு கண்ணாடிக் குப்பியிலிருந்து திறந்து கல்லறை மேல் ஊற்றப்பட்டது. போர்வை உள்வாங்கி அடர்ந்து நனைந்தது. உள்ளிருக்கும் மின் விசிறிகளின் சுழற்சியில் நொடிப்பொழுதில் சமாதி அறை இன்னும் அதீத சுகந்தத்தால் பூரித்தது. முல்லாவின் குரல் அறைக்குள் அதிர்ந்து பாறையாலான கூரையில் பட்டுத் திரும்பி வெளியே போக இடமின்றி ஒலியலை பன்மடங்காகப் பெருகிற்று.

வாசனை நாசி வழியேறி புலன்களை ஒன்று திரட்டிப் பொட்டலமிட்டு முடிந்து வைத்தது. ஒருவிதத்தில் வாசனை மனதை ஈர்க்கவும் எண்ணங்களைப் பிறப்பிக்கவும் கட்டிப் போடவும் அடிமைப்படுத்தவும் கூடும். அவரவருக்கான வாசனைகள் பிரத்தியேகமானவை. வாசனை ஒருவரின் தன்னடையாளம்; அதுதான் ‘தான்’ போலும். எவ்வாசனையும் அற்றுவிட்டால் பிறகு அப்படியான இருப்பின் பெயரென்ன? என்னவென்பது, வெறுமையா? சூன்யமா?

கண்மூடி தியானித்திருக்க மனம் ஒருமைப்பட்டு விழிப்பு உடலுக்குள் மூழ்கி மூழ்கி வெளி வந்தது. பின்னர் இன்னும் உள்ளேறியது. சட்டென ‘ஊவ்ம் ஊம் ஊவ்ம்’ என தொடர்ந்த உறுமல் முனகி நெருங்கிற்று. மெலிதாகக் கண் திறந்து பார்க்க நெற்றியில் திருநீறிட்டிருந்த இளைஞனொருவன் அறைக்குள் இழுத்து வரப்பட்டான். அவ்விளைஞன் முழு கால்சராயும் சட்டையும் அணிந்திருந்தான். வெள்ளை வேட்டியணிந்த முதியவர் அவனது வலது கையின் தோளோடு பிடித்திருக்க, அவன் அவர் மேல் அரைகுறையாகச் சாய்ந்தபடி சமாதியறைக்குள் வலிந்து தள்ளி வரப்பட்டான். அவ்விடம் அவனுக்குப் புதிதெனத் தோன்றிற்று. அறையை முழுதாக வெறித்துப் பார்த்தான். 

இந்த மாதிரி உறுமலும் ஓவென வெறிகொண்ட அலறலும் அவ்விடத்திற்கு இயல்பானது. அதுவே அத்தர்காவின் நிஜமான அடையாளம். அக்கொடுங் குரலொலியே அவ்விடத்தின் லட்சணம். ஏதோவொரு அமானுட குகைக்குள் நுழைந்தது மாதிரி உணர்வார்கள் போலும். சில நாட்களில், குறிப்பாக, அமாவாசை தினங்களில் நாலைந்து பேர்கள், ஆணும் பெண்ணுமாக, தமது வீட்டாரால் இழுத்து வரப்பட்டு ஓங்கி அலறுவார்கள். வனவிலங்கெனக் கத்துவார்கள். ஊளையிடுவார்கள். இதுகாறும் கேட்டிராத அனைத்து கெட்ட வார்த்தைகளையும் கூறி வீட்டாரைத் திட்டுவார்கள். திமிறி கையுதறி ஓடப் பார்ப்பார்கள்.

கிட்டத்தட்ட நானூறு வருடகால தர்கா வெளிபுறத்திலிருந்து பார்க்க சில கோபுரங்களுக்கு மத்தியில் பூமிப்பந்து போன்ற ஒரு பெரிய வட்டக் கூம்பு தலைக் கோபுரம் கொண்டு காணப்படும். உள்ளே நுழைய மூன்றடுக்காக அறைகள் இருந்தன. உள்ளறையில் சமாதி. நடு அறையில் பெண்களுக்கும் பொது மக்கள் அமரவுமான இடம். வெளி அறை நடைவழி. நுழைவு வாசலுக்கு நேரே நடைபாதை இருபுறமும் சின்னச் சின்னக் கடைகள். பூ, தேங்காய்த் தட்டு, மாலை, ஆரஞ்சு வண்ணப் பூந்தி மிட்டாய்த் தட்டு என்று பாபாவுக்கு அர்ச்சிக்கவும் காணிக்கையாகவும் கொடுக்கக் கிடைக்கும். பிறகு புர்கா கடை, பொம்மைக் கடை என நீளும். நடைபாதை தெருவைத் தொடும் முனையில் உணவு வண்டி, வடை, இட்லிக் கடைகள். வலது பக்கம் நடந்தால் திடுமென திருப்பத்தில் கடற்கரை வந்துவிடும். தெருவின் இருபக்கமும் சின்ன ஓட்டல்கள், யாத்ரிகர் தங்கும் அறைகள். வெளியூரிலிருந்து வந்து தங்கி பாபாவைத் தரிசிக்கும் ஓரிரண்டு குடும்பங்கள் வந்த வண்ணமே இருக்கும். எளியோரும் வேண்டுதலின் படியும் சிலர் வெளி நடைவழியிலும்கூடப் படுத்துக்கொள்வார்கள்.

நீள் நடைவழி கடந்து தர்காவின் நுழைவுக் கதவண்டை செருப்புகள் கழற்றி வைக்கப்பட்டிருக்கும். செருப்புகளைப் பாதுகாக்கும் கடைகளும் உண்டு. இடப்புறம் கை, கால் கழுவுவதற்குக் குழாய்கள் இருக்கும். வாசலில் பிச்சை கேட்போர் வரிசையாக இருபுறமும் உட்கார்ந்திருப்பார்கள். பெரும்பாலும் பெண்கள்தான். முதன்முதலில் அங்கு வந்தபோது கிழவி ஒருத்தி பிளாஸ்டிக் நாற்காலியில் உட்கார்ந்தபடி கையேந்தினாள். சட்டென கோபமுற்று வாய்க்கு வந்தபடி தரையிலிருந்த பெண்களைக் கண்டபடி ஏசினாள். ‘சே நீங்கள்ல்லாம் பொம்பிளைங்களா?’ என்று முடித்த கையோடு முகபாவம் மாற்றி மீண்டும் பிச்சை கேட்டுக் கையேந்தினாள். நடைவழியோரம் சுவரில் சாய்ந்தபடி தலைமுடி கலைந்து தாடியுடன் சட்டையும் நீளக் கால்சட்டையும் அணிந்த அழகிளம் வாலிபன் அவன் போக்கில் அமர்ந்திருந்தான். கையேந்தவோ, பேசவோ மாட்டான். யாரையும் நேராகக்கூடப் பார்க்காமல் வெறுமனே வெறுமை கொண்டு கிடப்பான். தேடிப்போய் காசு கொடுத்தாலும் அசட்டையோடே வாங்கிக்கொள்வான்.

‘இங்க எல்லா புதுசா இருக்கு… இங்க ஜனங்க சின்னச் சின்னதா, குட்டியா இருக்காங்க.’ இழுத்து வரப்பட்ட இளைஞன் மருண்டான். நிலைகொள்ளாது முரண்டான்.

அப்பிரதான சமாதிக்கு அருகில் இரண்டு சிறிய சமாதிகள் அமைந்திருந்தன. பாபாவினுடைய சீடர்களின் கல்லறைகளாக இருக்குமென்று ஊகித்தேன். சமாதி சலவைக்கல்லால் கட்டப்பட்டிருக்கும். சமாதிகளைச் சுற்றி இரண்டடித் தடுப்புச் சுவர் கட்டியிருக்கும். நான்கு மூலையில் சிறு மரத்தூண்கள் எழும்பி மேலே மரத்தாலான அலங்காரக் கூரை படர்ந்திருக்கும். ஒவ்வொன்றுக்கும் ஒளி விளக்குகள் பொருத்தப்பட்டு தூண்களின் மேலும் கூரையிலும் சீரியல் பல்புகள் ஒளிரும்.

செவ்வக அறையின் மத்தியில் பச்சை வர்ணமடித்த மரத் தடுப்புகளுக்குள்ளே சமாதி அமைந்திருந்தது. மதீனாவைப் பூர்வீகமாகக் கொண்டு சிந்து பிரதேசத்தில் வாழ்ந்த ஞானி. நபிகளின் நேரடி மரபுவழி வந்தவர். ஹஸரத் தமீம் அன்சாரி பாபா. கடைசியாக வடமேற்குத் திசையில் அரச தளபதியாக வாழ்ந்து தவ ஆற்றலால் ஞானமும் அதீத சித்திகளும் வாய்க்கப் பெற்றவர். அவரது வேண்டுதலின்படி மரணத்திற்குள் நுழைந்த தன்னுடலைப் பத்திரப்படுத்தி ஒரு மரப்பெட்டிக்குள் காற்று புகாது அடைத்து அண்மைக் கடலுக்குள் அனுப்பி வைக்கப்பட்டது. அவரது முன்னறிதலில் குறிப்பிட்டபடியே அப்பெட்டி ஐந்தாண்டுகளில் பல கடல்கள் கடந்து இறுதியில் கிழக்குக் கடற்கரையில் அமைந்திருந்த கோவளத்தில் கரையொதுங்கி உள்ளது. 1740-களில் ஆற்காடு நவாப், முகமது சதாதுல்லா தலைமையில் கடற்கரையோரம் தர்கா அமைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டிருக்கிறது. நவாப்பின் கனவில் பாபாவின் பரிநிர்வாணப் பெட்டியைப் பற்றிய தகவல் கிடைக்கப் பெற்றதெனச் சொல்லப்படுகிறது அல்லது பாபா கடற்பயணத்தில் சமாதியடைந்து பின்னர் அப்பெட்டி கோவளத்தில் கரையொதுங்கியும் இருக்கலாம். அவர் வழி வந்த ஞானியரின் சமாதிகள் பின்னர் தர்காவில் அமையப் பெற்றிருக்கலாம்.

சுவரோரம் சமாதி வாசலில் உட்கார்ந்திருக்கும் பக்கீரிடம் அவசரமாகத் தாயத்தும் மந்திரித்த கயிறும் வாங்கிக்கொண்டு மக்கள் போனார்கள்.

‘வெளிய நிக்கிற கொடி மரத்துல கயிற கட்டுங்க. ஒரு வெளக்கேத்தி அவ கைல தாயத்த கட்டுங்க.’

இன்னொரு அம்மா, ‘பாய், வீட்ல ஒரே பிரச்சின. ஒரே சண்ட.’

‘இந்தாம்மா, இந்த தேங்காய வீட்டு வாசல்ல கட்டுங்க’.

அவ்விளைஞன் பதறினான். முதன்முதலில் எனக்கும் பதற்றமாகத்தான் இருந்தது. பரிச்சயமில்லாத இடமென்பதால் விழி விரித்து அறையை முழுதுமாக நோட்டமிட்டபடி நடந்து வந்தான். எனது இடது பக்கம் அம்முதியவரின் தோளில் சாய்ந்து ஒரு காலை மடக்கி மறுகாலை நீட்டியிருந்தான். இருவருக்கும் ஒரு போராட்டம் தொடங்கிற்று.

‘அல்லா, அல்லா, அல்லா சொல்லு’ என்று அவசரப்படுத்தினார் முதியவர். 

‘லா, லா, லா ….’

‘ஸலாம் அலைக்கும், சொல்லு.’

‘லா, லா, லா ….’

‘சரியாம நேரா ஒக்காரு.’ அவன் நிமிர்ந்து உட்கார்ந்தான்.

‘கால மடக்கு.’ அவனது காலை ஓங்கித் தட்டினார்.

இரண்டு காலையும் மடக்கி உட்கார அவனால் முடியவில்லை. ஒரு பக்கம் கையூன்றி உட்கார்ந்தான். உளறினான்.

‘இல்ல, தல சுத்துது, தல சுத்துது … யாரு இது?’

‘சமாதி, பாபா சமாதி.’ 

‘அப்டீன்னா என்னா, பாபான்னா?’

‘அடக்கம் பண்ணியிருக்காங்க.’

‘அடக்கம்னா?’

‘உள்ள தூங்குறாங்க.’

‘இல்ல, சின்னச் சின்ன ஆளுங்க பொட்டிக்குள்ள… சின்னச் சின்னதா..’

‘கும்புடு.’ அவனது இரண்டு கையையும் ஒட்டிப் பிடித்தார் அம்முதியவர்.

‘புதுசா இருக்கு, யார் யாரோ இருக்காங்க…’

‘சரி.. கண்ணமூடி ஒக்காரு.’

‘வாட வருது… சின்ன ஆளு பொட்டிக்குள்ள, தல வலிக்குது, சுத்துது… போலாம்.’

வாசலில் சமாதியின் தலைமாட்டில் பக்கீர் மயில்தோகைக் கொத்துடன் உட்கார்ந்திருந்தார். 

தியானத்தில் மீண்டும் ஆழம் கொள்ள முதுகிற்குப் பின்னால் ஒரு குழந்தையின் ஓயாத அழுகையொலி. ஏன் தொடர்ந்து அழுகிறது? இப்படி எப்போதுமே தர்காவில் ஏதேனும் ஒரு குழந்தையின் ஓலம் கேட்டுக்கொண்டேதான் இருக்கும். ஒரே மாதிரியான தொண்டையை அறுப்பது போன்ற அழுகுரல். ஓயாது கேட்கும். கூடவே அவ்வப்போது கொடிமேடையிலிருந்து சேவல் கூவும். தர்காவிற்கென நேர்ந்து விட்டிருந்த வெள்ளாடுகள் கத்தும்.

‘பொம்ளைங்கோ இங்கியே நில்லுங்கோ. ஆம்ளைங்க தாம்மா உள்ள போகலாம்.’

‘சரிங்க. வீட்ல ஒரே பெரச்சனைங்க.’

‘பாபாகிட்ட மந்திரிச்ச இந்த எலுமிச்சத்த வீட்டு வாசல் கதவுல கட்டுங்க. முப்பது ரூபா. இல்லாட்டி இதோ இந்த தேங்காகூட கட்லாம்.’

‘தேங்கா?’

‘ஐம்பது ரூபா.’

மெல்லிய பச்சைத் துணியால் சுற்றப்பட்டு மஞ்சள் ஜரிகை இழைகளால் அலங்கரிக்கப்பட்ட தேங்காய் வீட்டு வாசலில் தொங்கவிட மந்திரித்து விற்கப்பட்டது.

‘தாயத்து…?’

‘அதோ அங்க போவணும், அவருகிட்ட…’

கை காட்டிய திசையின் பக்கம் மக்கள் வேகமாக நடந்தார்கள்.

‘நெறையா பூட்டு இருக்கு..?’ 

‘……’

‘எதுக்கு இவ்ளோ பூட்டு?’

‘வேண்டுதல்…’

‘சாவி எல்லா எங்க?’

‘……’

சமாதியைச் சுற்றிலுமுள்ள மரத்தடுப்பிலும் அறையைச் சுற்றியுள்ள சாளரத்துக் கம்பித் தடுப்புகளிலும் ஏகப்பட்ட பூட்டுகள் தொங்கிக்கொண்டிருந்தன, நேர்த்திக் கடனாக! அத்தனை பேரின் ஏக்கங்களும் பிரார்த்தனைகளும் அவதிகளுமென ஏராளமாகப் பூட்டுகள். நிறைவேறிய வேண்டுதல்களினால் அப்பூட்டுகள் திறக்கப்படுமா என்று தெரியவில்லை.

உட்சமாதி அறையைச் சுற்றி அடுத்த சுற்று பெரிய அகலமான நடைவழியாகச் சதுரமாக நீண்டது. மக்கள் அங்கேயும் அமர்ந்து பிரார்த்தனையும் தியானமும் ஆற்றினர். அந்த நடைவழி வரையில்தான் முக்காடிட்ட, புர்கா அணிந்த பெண்கள், பிற பெண்கள் நெருங்க முடியும். அங்கிருந்தே கதவிடுக்கில் வழியாகவும் பூவேலைப்பாடு கொண்ட சாளரம் வழியாகவும் பெண்கள் பாபாவை வணங்கிப் போவார்கள். தியானித்து விழிக்கையில் சில நேரங்களில் அச்சாளர இடுக்கின் வழியாக விழிகள் சமாதியை நோக்கியிருக்கும். மை விழிகளில் சோகங்களும் கண்ணீருமாய் வழியும். கையேந்தி விரல்கள் கேட்டு நிற்கும்.

அக்கதவின் உட்புறம் சமாதிக்குள் அமர இரண்டடி அகல வழிதான் சுற்றி இருந்தது. நெருக்கியடித்துதான் உள்ளே நுழைய முடியும். அது ஒருவழிப்பாதை வேறு. மீண்டும் அதே வழியில்தான் திரும்பி தலைவாசல் வழி வெளியே சுற்று நடைபாதைக்கு வந்து தெற்கு வாசல் வழி வெளியே வரலாம். மிகக் குறுகலான அறைக்குள் அவ்விளைஞன் அச்சத்தால் தத்தளித்தான்.

எப்போதும் மிகச் சிறிய குறுகலான சமாதி அறைக்குள் காலடி எடுத்து வைத்து நிற்கையிலேயே உடல் ஆட்டம் காணத் தொடங்கிவிடும். இடுப்பு, வால்முனை, மூலாதாரம் தேகத்தை மேலே தூக்கி எழுப்பும். நிற்க முடியாமல் அப்படியே கிறங்கி தரையில் கால் மடக்கி அமர வைக்கும். உடல் உலுக்கம் கொண்டு சமன்பட முடியாமல் அசைந்தது. மூச்சு வயிற்றுக்குள் சுருண்டுகொண்டது. பின் முதுகு எழும்பி புஜம் விரிந்து பேரலையில் சிக்கிய மரக்கலமாய் தத்தளித்தது. புரளலையோடு தள்ளாட்டம் கூடி அந்தரமாய் நிலைப்பதாக உணர்த்தியது. அமைதி, ஆழமைதி. கபாலத்திற்குள் நீரோட்டமாய் சுழன்றது. விழிக்குள், செவிக்குள், நாசிக்குள் என நவதுவாரமும் பொங்கி நாளமில்லாச் சுரப்புகளின் உயிர்வேதிப் பிரவாகச் சுனையூறும் அகப்பூரிப்பு.

மீண்டும் அவன் முதியவரிடம் முனகினான்.

‘வீட்டுக்கு போலாம்…’

‘சும்மா சும்மா பேசக்கூடாது.’

‘வீட்டுக்கு போலாம்.’ எழ முயன்றான்.

‘கும்புடு.’ இரண்டு கைகளையும் பிடித்து கூப்ப வைத்தார்.

‘அப்பாவ கும்புடு.’

‘அப்பா யாரு?’ சுற்றுமுற்றும் பார்த்தான்.

‘அப்பா யாரு…?’

‘தூங்கறாரு.’

‘எங்க?’ 

‘உள்ள, கீழ பூமிக்குள்ள…’

அவன் சமாதியை உட்கார்ந்தபடியே எட்டிப் பார்த்தான்.

‘அப்பா உள்ள… அப்பா உள்ள.’ அவன் முதியவர் மடியில் அப்படியே சரிந்து புதைந்தான். ‘தல சுத்துது… முடியல…’

கால் மடக்கித் தியானப் பெருக்கின் பேராற்றல் பரப்பில் மீண்டுமாகத் திளைக்கத் தொடங்கினேன். பூமியின் அடி ஆழத்துள் தவ வழி ஊணுடல் ஊறி அமிழ்ந்திருந்த கணம். முதியவரின் குரல் கேட்டது.

‘பாபா சொல்லு… பாபா சொல்லு’. முகத்தை மடியில் புதைத்தபடியே அவன் முனகினான், ‘பாபா…. அப்பா … பாபா… அப்பா…!’