நனைந்த இரவு: லூயிஸ் மாலின் ஃபிரெஞ்சுத் திரைப்படம் ‘தி லவ்வர்ஸ்’

by எம்.கே.மணி
0 comment

முறை தவறிய உறவுகளைப் பற்றிச் சொல்ல வருகையில் அதில் இருக்கக்கூடிய ‘பிளஷர்’ கண்கூடானது. அதை வைத்து அணுகும்போது எந்தக் கலையிலும் எளிதாகக் கவனம் ஈர்த்துவிடக்கூடிய அனுகூலம் இருக்கிறது. ஒரு சமூகம் எந்த அளவில் ஒழுக்கத்திற்கு முதுகு வளைத்து பாவனை செய்கிறதோ, அந்த அளவில் இவ்விஷயங்கள் பதற்றப்படும். மானக்கேடான விஷயங்களைப் பேசுவதில்லை என்று ஒதுங்கிப் போவதன் குருட்டுத்தனம் எதற்கும் உதவாது என்பதால், இவைகளைப் பேசுவதற்கு அளவற்ற முதிர்ச்சியும் தகுதியும் தேவைப்படுகிறது என்று நினைக்கிறேன். தான் சொல்வதற்குத் தானே பொறுப்பேற்கிற அளவில் இருந்தாக வேண்டும். துணிவில்லாமல் கோழைத்தனம் செய்துவிடக் கூடாது. ‘தி லவ்வர்ஸ்’ (The Lovers, 1958) படத்தில் இயக்குநர் லூயிஸ் மால் (Louis Malle) எல்லாவற்றிற்கும் தயாராகியே இறங்கியிருக்கிறார். நான் இதைச் சொல்வேன்! அவருக்கு அதைப் பற்றின நிச்சயம் உண்டு.

யாரோ கொஞ்சம் தனி மனித பலவீனங்களை ஊதிப் பெருக்கி, மனித வாழ்வு இப்படியெல்லாம்தான் கடைத்தேறாமல் கிடக்கிறது என்கிற புலம்பல் பக்கமும் அவர் திரும்புவதற்கு வாய்ப்பில்லை. ஓர் ஆணும் பெண்ணும் இணையும்போது அதற்குப் பின்னால் ஒரு கூட்டமும், வாழ்க்கையும், கலாச்சார பின்னலும் உண்டு. அவர்கள் அந்த வட்டத்தைவிட்டு வெளியேறிச் செல்வார்கள் என்றால் அதற்கான அசைவுகளையும், அதிர்வுகளையும் எப்படித் தவிர்ப்பது? லூயிஸ் மால் மிகுந்த பிரக்ஞையுடன் கதை சொல்கிறார். நம்மைச் சுற்றிலும் பல்வேறு கோணங்களில் எழுப்பப்படுகிற சுவர்களை, பல்வேறு கோணங்களில் இடித்துத் தள்ளுகிறவர்களும் அவருடைய பார்வையில் முக்கியத்துவம் பெறுகிறார்கள். மக்கள் வாழ்க்கையுள்ள உலகப் பரப்பில் அத்தனை இடுக்குகளிலும் இனமோ, குலமோ, சாதியோ, அவற்றின் அடுக்குகளோ மனிதர்களைக் காபந்து செய்வதும், அதன் அழுத்தம் தாங்க முடியாதவர் திமிறுவதும் சகஜம் என்பது போல மழுப்பிக்கொள்ளலாம். ஆனால் மனித சுபாவத்தின் முன்னால் நிற்கிற முக்கியச் சவால் சுதந்திரம்தான். அதற்குத் தன்னை அறியாமல்கூடத் துழாவிப் பார்க்காதவர் இல்லை. அந்த விசை எப்போதும் நம்முடைய உடல் உறுப்பு போல கூடவே நடக்கும். ஒருவேளை அது பற்றி பலர் அறியாமல் இருக்கலாம். வரலாற்றின் பாடம் அப்படியே நமக்குப் போதிக்கிறது.

விடியா மூஞ்சி என்பார்கள். முகத்தசைகள் நெகிழ சிரிக்க முடியாமல் வலம்வருகிற பெண்ணாக இருக்கிறாள் ஜெனி. எல்லா வசதி வாய்ப்புகளும் தட்டினால் திறக்கக்கூடிய அளவில் அருகிலேயே இருக்கும்போது, அந்த வசதி பல கதவுகளை மூடியும் வைத்திருக்கும். சலிப்பான அன்றாடங்களில் கணவனும் காதலனும் எல்லாம் சடங்குகளாக மட்டுமே தங்களை நிரூபித்து வருகிறார்கள். தற்செயலாகத்தான் அவள் அவனைச் சந்திக்கிறாள்.

அவனால் அவளைச் சிரிக்க வைக்க முடிகிறது.

அந்தச் சிரிப்பை இயக்குநர் எப்படி கையாண்டிருக்கிறார் என்பதில் அதன் தீவிரத்தைப் புரிந்துகொள்ள முடியும். அது அந்த மாதிரி, அவளை இளக்கிவிடுகிற ஒன்று. ஒரு பெரிய முடிச்சை அவிழ்த்து விட்டுக்கொள்ள அவளுக்கு அது பயன்பட்டிருக்கிறது. அதைப் பார்த்துக்கொண்டிருக்கிற யாருடைய இயல்பையும் அது சிதறடித்துவிடவும் செய்யும். சொல்லப்போனால், அந்தச் சிரிப்பு விபரீதமானது, திரைக்கதையின் முன்னறிவிப்பு போன்றது. கணவனும் காதலனும் பரஸ்பரம் வஞ்சம் மறைத்து கண்ணியம் தவறாமல் உரசிக்கொள்கிற நெருக்கடிக்கு நடுவேதான் அந்த விருந்தாளி அங்கே இரவு தங்குகிறான். அவளுமேகூட இரவு வணக்கம் சொல்லி படுக்கப் போயாயிற்று. அப்புறம்தான் மிகவும் நிதானமாகத் தொடங்குகிறது நாம் எடுத்துக்கொண்டிருக்கிற இரவு.

அது விஷயம் தெரிந்த ஒரு சினிமா படைப்பாளியால் திட்டமிடப்பட்டு கட்டமைக்கப்பட்ட ஒன்று. ஆக்கம் என்பது அதன் கடைசிச் சொட்டு ரத்தம் சுண்டும் வரை உழைப்பைப் பிடுங்கியிருக்க வேண்டும். ஓட்டமும் ஓய்வுமாக இருளும் ஒளியுமாக இந்திரஜாலம் நிகழ்த்தி இயக்குநர் அவர்களுடைய காதலை நிறுவுகிறார். இதைச் சொல்லும்போது முக்கியமான ஒன்றைத் தனியாகச் சொல்லியாக வேண்டும். திரைக்கதை அவர்களுக்கு முட்டுக்கொடுக்காமல் விலகி நின்று அவர்களுடைய உணர்ச்சிப் பெருக்கை மட்டுமே எடுத்துரைக்கிறது. முதலில் மேம்போக்காகத் தனது உரிமையில் கண்டிப்பாக இருந்த ஜெனி, ஒரு சிறிய திருப்பத்தில் வழுக்கிக்கொண்டு இறங்கி, தன்னை முழுவதுமாக ஒப்படைக்கிற பதற்றத்தைக் காணகிறோம் என்பது வழக்கமான காதல் படங்களில் நாம் கவனித்திராத சிறப்பு. கனிந்து, கசிந்து, கண்ணீர் பெருகும் ஒரு தத்தளிப்பு. அவள் அவனை முழுவதுமாக அளக்கிறாள், அள்ளுகிறாள், உட்கொள்ளுகிறாள். உண்மையில் சந்தோஷத்தின் படபடப்பை அவளால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. அவனுக்குத் தன்னை வழங்கி, அவனை நிறைவுசெய்து மெய் மறந்த பின்னரும் அது நீடிக்கிறது. அதை அவளால் இழக்கவே முடியாது.

படம் பார்க்கிற நமக்கு இதன் காரணங்கள் தெரியும். அவள் ஆழத்தின் ஆழத்தில் எப்படி ஒரு கருங்கல் போல இறுகிக் கிடந்தாள் என்பது சொல்லப்பட்டதுதானே? அவள் உடைத்துக்கொண்டிருக்கிறாள் என்பதும், உடைந்துகொண்டிருக்கிறாள் என்பதும் ஆற்றின் சீரான ஒழுக்கு போல நகர்கிறது.

அவன் தனியன். நிறுவனங்களுக்குள் பொருந்த மறுக்கிறவன். நிறுவனமாக இருக்கிற சகல அமைப்புகளையும் வெறுக்கிறவன். அங்கிருந்து வெளியேறிச் செல்ல அவன் நினைக்கும்போதே அவளும் அதற்குச் சமமாக புறப்படுகிறாள். அயர்ந்து தூங்கிக்கொண்டிருக்கிற தன்னுடைய மகளை முத்தமிட்டு நகரும்போதும் அவளுடைய தீர்மானத்தில் மாற்றமில்லை. முன்னேறி நடந்தவாறு இருக்கிறார்கள். இரவு ஏறக்குறைய முடிந்துவிட்டது. பொழுது விடியப்போகிற நேரம். தூங்கி எழுந்த கணவனும் காதலனும் அவர்கள் நடக்கிற வழியில்தான் இருக்கிறார்கள். அவர்கள் பக்கமாக ஏறிட்டுகூடப் பாராமல் இருவரும் சென்றுகொண்டேயிருக்கிறார்கள்.

என்ன நடக்கிறது என்பதை அவளைச் சுற்றியிருந்தோர் எல்லாம் புரிந்துகொள்வதற்கு முன், அவர்கள் ஏறிச்சென்ற கார் மறைந்தே போகிறது.

இதை ஒரு ஓடுகாலியின் கதை என்பதாகக்கூடச் சுருக்க முடியும்.

அப்படித்தானா?

இல்லை.

வெறுமனே அவர்களுடைய உணர்ச்சிகளின் சாட்சியாக மட்டுமே நின்று கொடுக்கிற இயக்குநர் அப்படியாகப் படம் எடுக்க முனையவில்லை என்பதற்குப் படத்தின் ஒவ்வொரு ஷாட்டும் உதாரணம். பார்வையாளர் கிளர்ச்சி கொள்வதற்குத் தோதான திரைமொழியில், கவனம் கோருகிற ஒரு கிளோஸ்-அப்கூட அவர் நாயகிக்கு வைக்கவில்லை. கதை அதன் ஒவ்வொரு துண்டுகளையும் வெட்டுகளையும் சமநிலை செய்து செல்லுகிறது. அப்புறம், படத்தின் பின்னணி விவரணையாகச் சொல்லப்படுகிற சொற்களில் காட்சிகளை நறுக்கென முடிக்கிற சாதுர்யம்.

அடிப்படையில் இதுவொரு சிறிய கதை மட்டுமே. ஆனால் அடக்கம் இல்லாதது.

ஆனால் அதை ஆற்றுப்படுத்தின திரைக்கதை!

மூச்சு விட்டுக்கொள்ள நேரம் இல்லாதது போன்ற பிரமை. ஃபிரெஞ்சுப் படங்களின் வேகம் பற்றி எவ்வளவு அறிந்திருந்தாலும், இந்தத் திரைக்கதையின் வேகம் பற்றி எப்போதுமே மறக்க முடியாமல் இருந்திருக்கிறேன். படத்தில் என்னுடைய முதல் கவனமாக அதுதான் இருந்திருக்கிறது. காட்சிப்படி, ஜெனி எவ்வளவோ வாய்விட்டுப் பேசியவாறு இருந்திருக்க வேண்டும். ஆனால் அவள் கொண்ட காதல் அவளை உளற மட்டுமே வைக்கிறது. அது பொருத்தப்பட்டு படத்தில் அமருவதற்குப் படத்தின் திரைக்கதையே முக்கியக் காரணம். இப்படிப் பல விஷயங்களைச் சொல்லிக்கொண்டே போக முடியும். எழுத்தில் அவளுடைய கணவனைப் பற்றியோ, காதலன் பற்றியோ என்ன இருக்கிறது? அது எல்லாம் போகட்டும், அவளை இழுத்துக்கொண்டு ஓடுகிற வாலிபனைப் பற்றிக்கூடப் பெரிய விவரிப்புகள் இல்லை. ஆம், அனைத்துமே சிறிய சிறிய இழுப்புகள் மட்டுமே. ஆனால் அவர்களுடைய சித்திரம் நமக்குள் முழுமை பெற்றிருக்கும். இயக்குநர் அடுக்கி வைக்கிற பொறிகள் அப்படிப்பட்டவை.

காதலர்கள் யாராக இருந்த போதும், படத்தில் கூறப்பட்ட இரவு ஒன்று அமையும் எனில், அது ஒரு நற்பேறு. ஒரு வாழ்நாள் முழுக்கப் பொக்கிஷம் போல மனதில் பொத்தி வைத்துப் போஷிக்க அருகதை நிரம்பியது. என்றாலும், அந்த இரவு முடியவே செய்கிறது. விடிகிறது. பயணத்தின் நடுவே சில்லறை விஷயங்கள்தான் பேசுகிறார்கள். சாப்பிடுகிறார்கள். சூரியன் வர எங்கே போவது என்பதெல்லாம் முக்கியம் இல்லை என்பதாகப் புறப்படுகிறார்கள். அந்தப் பயணம், ஒரு முழுமையான வாழ்வை நோக்கித்தான் செல்லுகிறதா?

இரவின் மயக்கங்கள் அப்பட்டமான பகலில் செல்லுபடியாகுமா?

அவனாக இருந்தாலும், அவளாக இருந்தாலும் சந்தர்ப்பத்தில் தரிக்க வேண்டி வந்த முகங்கள் நிரந்தரத்தில் நின்று நிலைப்பது எப்படிச் சாத்தியம்? யார் முதலில் தலை திரும்பப் போகிறவர்? இவர்கள் கொண்டாடுகிற சுதந்திரத்தின் அடியில் தனிமையும் நடுக்கமும் இருக்கும் அல்லவா, அதன் தாக்குதலில் இருந்து இவர்கள் விடுதலை பெறுவது எவ்வாறு?      

இதற்குப் பதில் ஏதுமில்லை. அவர்கள் இருவருக்கும் வாழ்வைப் பற்றின, எதிர்காலத்தைப் பற்றின நம்பிக்கை இருக்கிறது என்பதைக் காண்கிறோம்.

ஒருவேளை பாதுகாப்புடன் இருந்துகொள்ளுவது பற்றி சர்வசதா நேரமும் எச்சரிக்கை கொண்டவர்கள் எட்ட ஆகாத புத்தம் புதிய வாழ்வேகூட அவர்களுக்கு நேர்ந்துவிடக்கூடும்.

வெற்றி தோல்வி என்று சொல்லப்படக்கூடிய நடைமுறைகள் வாழ்வைப் புதுமையாக வைத்துக்கொள்ளக்கூடிய சாத்தியங்களை மறுப்பவை.

முதல்முறையாக நான் இந்தப் படம் பார்த்தது இருபது வருடங்களுக்கு முன்பாக இருக்கலாம். பெரிதாக ஒன்றும் கேள்விப்பட்டிருக்கவில்லை. அந்த நேரத்தில் மிகவும் துணுக்குற்று, மலைத்துப் போனது மறக்கவில்லை. நண்பர்கள் பலரிடமும் சொல்லியவாறு இருந்தேன். படம் பற்றி அவ்வளவாக ஏன் பலரும் பேசுவதில்லை போன்ற கோபமெல்லாம்கூட இருந்தது. தியேட்டரில் படங்களை அறிமுகம் செய்து பேச வந்தவர்கூடப் பெரிதாக எதையும் சுட்டிக்காட்டவில்லை. அப்புறம் இயக்குநரின் மொத்தத் தொகுப்புகளையும் டி.வி.டியாக வாங்கி அவற்றைப் பார்த்து முடித்தபோது ஒரு வியப்பு. எனக்கு இந்தப் படத்தின் பரிமாணம் வேறு ஒன்றாக இருந்தது. அது தனியாக இருந்தது. அதாவது ஒவ்வொரு படத்தின் கதைக்கும் அவர் தேர்ந்துகொள்கிற வெளிப்பாடுகளின் விதி பிடிபட்டது போல இருந்தது. வேறென்ன, இந்தப் படத்தின் வழியாக நான் லூயிஸ் மாலை முழுமையாகப் புரிந்துகொண்டதாக நினைத்தேன். அவரைப் பற்றிப் படிக்க சில புத்தகங்களும் கிடைத்தன. இந்தக் கட்டுரை எழுத வேண்டி இம்முறை பார்க்கும்போது, வேறு பல அடுக்குகள் புலப்பட்டன. ஒரு நல்ல படம் அப்படியாகத் தனது சிறகுகளை மேலும் மேலும் வளர்த்துக்கொண்டிருக்கும், இல்லையா? திரைப்படம் பார்க்கிற அடங்காத தாகத்தை, அல்லது வெறியை, சரிதானா என்று பார்த்துக் கொள்ளும்போது, இவைகள்தானே அவற்றிற்கு அர்த்தம் வழங்குகின்றன?

எனக்குப் பிடித்த படம். யாருக்குமே சிபாரிசு செய்ய முடியும்.