கன்னிகை

0 comment

“எத்தான், நீங்க எதுக்கு ரொம்ப யோசிக்கியோ? ஒரே ஒரு தடவதான? போனா கெடைக்க பைசால கொஞ்ச நாள கழிக்கலாம்லா?” 

“நிறுத்துட்டி, என்ன கையாலாகாத்தவன்னு சொல்லுக என்னா? ஊர்ல எல்லாவனும் என்னப் பாத்து என்ன கேப்பான்? பிள்ளைய கோயிலுக்கு அனுப்பிப் பொழைக்கான்னு சொல்ல மாட்டானுவளா? அதுவும் பொம்பளப் புள்ளக்கிப் பதிலாட்டு. சீ.. ஊர்ல நா மொகங்காட்டி நடக்கது ஒனக்குக் கொள்ளலையா?”

“இல்லத்தான், நீங்க எதுக்கு அப்பிடிலாம் யோசிக்கியோ? நம்ம மட்டுமா பண்ணுகோம்? எல்லாருந்தான் பிள்ளேல அனுப்புகா? கொஞ்சம் மனசிலாக்குங்கோப்பா. பௌதியம்மைக்க பைசாதான?”

“அதுக்குப் பதிலா நாம் போயி அம்மைக்க கோயில்நடைல பிச்ச எடுத்துத் தாரம்ட்டி. ஒனக்கு பைசாதான முக்கியம்? நாம் போயி பிச்ச எடுக்கேன். எம்பிள்ள கோயில் நடையத் தொடக்கூடாது அவ்ளோதான்.”

“எத்தான், அப்பிடி நெலம வந்தா ஒங்களுக்கு முன்னாடி நாம் போயி நிப்பேன். நா எதுக்கு சொல்லுகேனு யோசிச்சுப் பாருங்கோ. பிள்ளக்கி நல்ல சாப்பாடு போட்டு எவ்ளோ நாளாச்சு? கடக்கரைல சீசனும் இல்ல. ஒரு ஈ காக்கா கெடையாது. பின்ன, கடைசியா எப்போ போட்டோ எடுத்தியோ சொல்லுங்கோ? நெதமும் போயி வெயில்ல நாயா அலையதுதான் மிச்சம். எத்தன நாளக்கி பக்கத்து வீடுகள்ல போயி நிக்க முடியும்? மேலத்தெரு கொமரியண்ணன்தான் எனட்ட சொன்னான். அவன்தான கோயில்ல இதுக்கு இன்-சார்ஜ் இப்போ. எல்லாம் நாம் பாத்துக்கிடுகேன் மக்ளே, நீ பிள்ளைய மட்டும் ரெடி பண்ணி அனுப்புன்னு சொன்னான். நம்ம பிள்ளைன்னு யாருக்கும் தெரியாம கூட்டிட்டுப் போயி கொண்டுவந்து விட்டுருவேன்னு சொன்னான். கொஞ்சம் யோசிச்சுப் பாருங்கோப்பா. செலவேரு ஆயிரம் ரெண்டாயிரம்னு கூட குடுப்பாளாம் தெரியுமா? முன்னாடிலாம் பத்தோ இருவதோ கெடைக்கும். அதுவே எங்களுக்கு பெருசாக்கும். ஆயிரம் ரூவா கெடச்சா பிள்ளைக்கி ஒரு மாசத்துக்கு ஆவும்லா?”

“நா என்னத்தச் சொல்லன்னு தெரில. நீ எப்பிடி இந்தளவுக்கு வந்துட்டன்னு… பச்சப் பிள்ள, மாட்டிக்கிட்டான்னு வையி. கேவலம்லா? அவனுக்கு என்ன தெரியும்? அம்மையும் அப்பனும் சேந்து பிள்ளைய பொம்பளப் பிள்ள வேசம்போட்டு அனுப்பி விட்டுட்டாவோன்னு சொல்லுவாவோ. ஊர்ல எல்லாவனும் கையப் புடிச்சி இழுப்பான். எம் பிள்ளக்கி இந்த நெலம வரணுமா? எனக்குச் சோறு போட முடியாம பொம்பளப்பிள்ள வேசம் போட்டு அனுப்புனவன்தான நீன்னு நாளக்கி அவனே கேட்டான்னு வையி. நா இல்லன்னு வச்சுக்கோ.”

“அதெல்லாம் ஒன்னும் ஆகாதுப்பா. பிள்ளைட்ட நான் சொல்லிப் புரிய வச்சிட்டேன். அவனே எப்பம்மா எப்பம்மான்னு கேட்டுட்டுக் கெடக்கான். பௌதியம்ம பாத்துக்குவாப்பா. நீங்க ஒன்னும் கவலப்படாதீங்கோ.”

அத்தான் சொல்கிற எல்லாமே சரிதான். அவரது தன்மானத்தை வைத்துத்தான் நான் இந்த ஆட்டம் ஆட வேண்டியிருக்கிறது. ஆனால், என் மகனுக்குக் கிடைக்கப் போவதென்ன சாதாரணமான விசயமா? 

2

என் சிறு வயதில் முதல்முறையாக எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தபோது என்ன நடக்கிறது எனப் புரியாமல்தான் நானும் இருந்தேன். முதல் வீட்டு மாமிக்குத் தெரியாமல் என்னை மறைத்து அழைத்துப் போனாள் அம்மா. அக்ரஹாரத்து வீடுகளில் மூன்று என் பொறுப்பு. கூட்டிப் பெருக்குவது, பாத்திரங்களைத் தேய்த்துத் துடைத்து அடுக்குவது, துணிகளைத் துவைத்துக் காயவைத்து தேய்ப்புக் கடைக்குக் கொண்டுபோய் தேய்த்து வாங்கி வருவது, இதுபோக அவ்வப்போது மாமா மாமிகளுக்காகக் கடைக்குப் போய் வருவது, இதெல்லாம் முடித்து ஓட்டமும் நடையுமாக மலையாளப் பள்ளிக்கூடத்திற்குச் சென்று தாமதமாக வந்ததற்கான ஏச்சுகளை வாங்கிப் படித்தேன்.

படிப்பென்றால் எனக்குச் சாமி. அம்மா எந்த வயதில் அக்ரஹாரத்து வேலைக்குக் கொண்டுபோய் விட்டாளென நினைவில்லை. அவளுக்கு மச்சபுரத்துக் கோவில் மேனேஜர் புண்ணியத்தில் திருவிதாங்கூர் வங்கியில் உதவியாள் வேலை கிடைத்திருந்தது. அவளுடைய இடத்திற்கு நான் சென்றேன். வேலையெல்லாம் கடினமொன்றும் இல்லை. மாமாக்கள் வீட்டு அக்காக்களும் தம்பிகளும் என்னைத் தனியாக நடத்தவில்லை. ஒன்றாகச் சேர்ந்து விளையாடுவதும் கோவிலுக்குப் போவதுமென மகிழ்ச்சியாகத்தான் இருந்தேன். புறவாசல் நடையில் எனக்குச் சாப்பாடு போடுவாள் முதல் வீட்டு மாமி. அதொன்றும் பெரிய குறையாகத் தெரியவில்லை. அந்த மாமாவின் மூன்றாவது பையன் என் வகுப்பில்தான் இருந்தான், புரியாத கணக்குகளுக்கு என்னிடம்தான் வந்து நிற்பான். அவன் கொஞ்சம் மக்கு வேறு. அவனைக் கொஞ்சம் அலையவிட்டுதான் சொல்லிக் கொடுப்பேன். ஏன் அப்படிச் செய்தேன் என்றெல்லாம் அப்போது யோசிக்கவில்லை. சரி, இப்போது இதெல்லாம் எதற்கு? அம்மா வந்து என்னை அழைத்தபோது அன்றைய வேலையிலிருந்து விடுபட்ட ஆசுவாசம், கிடைக்கப் போகும் ராஜ மரியாதை குறித்த ஆர்வம்.

“யாரு என்ன கேட்டாலும் சிரிச்சிட்டே அழகா பதில் சொல்லணும், என்ன மக்ளே?”

“செரிம்மா. ஆனா, அவுங்கல்லாம் ஹிந்திலதான பேசுவாங்க?”

“நம்ம மேனேஜர் மாமா கூட இருப்பாருல்லாட்டி, அவரு சொல்லித் தருவாரு, நீ பதில் சொன்னாப் போறும். நல்லா சிரிக்க பிள்ளேலதான் அவங்களுக்குப் பிடிக்கும். அப்பதான் நெறைய கெடைக்கும், மனசிலாச்சா?”

“செரிம்மா. எனக்கு அழுகையா வருகு.”

“எதுக்கு மக்ளே? பௌதியம்ம மாதியாக்கும் ஒன்ன அவால்லாம் பாப்பா. அவங்க கிட்ட கணக்கில்லாம சொத்து இருக்கும். ஏதோ புண்ணியத்துக்கா சுட்டி இப்பிடித் தேடி வந்து செய்யா. பின்ன, அம்மைக்க அருள் கெடைச்சா சும்மாவா? தலையெழுத்தே மாறிப் போகும்லா?”

“நெதம் கோயிலுக்குதான போற, ஒனக்கு ஏம்மா தலையெழுத்து மாற மாட்டுக்கு?”

“வாயக் கொற கழுத. அங்க போயி எதாம் சொல்லிராத மக்ளே. அமைதியா நடக்கணும், அமைதியா பேசணும். நீதான் பௌதியம்மன்னு நெனைக்கணும், என்னா?”

“அப்போ எனக்கு மூக்குத்திலாம் போட்டு விடுவாங்களாம்மா?”

“நெத்திச் சுட்டி, வளையல், தோடு, ஆரம், எல்லாம் போட்டு விடுவா மக்ளே. எல்லாம் பித்தளதான். நமக்குக் குடுத்து வச்சா ஒன்னோ ரெண்டோ துண்டு தங்கமும் கெடைக்கும். அது அம்மைக்க ஆசி. பாப்போம்.”

ஆனால், பகவதி அம்மை எனக்குத் தங்கத்தைக் கையில் தராமல் எது தங்கமெனக் காட்டினாள்.

3

மச்சபுரத்துப் பகவதி அம்மையைத் தேடி வருபவர் கூட்டம் ஒருபோதும் அடங்கியதேயில்லை. நாடு முழுவதுமிருந்து வரும் எல்லோரும் தங்கள் குடும்பத்துக் குடிமூத்தப் பெண்ணைப் பார்த்து, தங்கள் மன பாரத்தை இறக்கி வைத்துச் செல்லும்போது மலர்ந்து செல்வது மச்சபுரத்து மகிமை. சிவனுக்காக ஆதிகாலத்தில் தொடங்கிய அவளது தவம் முடிவில்லா தவமாக நீடித்தது. பேசப்பட்ட கதைகள் ஒவ்வொன்றும் அவளது சிறப்பைப் பெருக்கிக்கொண்டிருந்தன. அவளைத் தேடி வரும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான அர்ப்பணிப்புகளைச் செய்வது வழக்கம். அவளுக்கான பட்டுப்பாவாடை சாற்றுவது, ஊர் கூட்டி அன்னதானம் செய்வது, திருக்கோவில் உளவாரப் பணிசெய்வது, தங்கள் தாலிகளை அர்ப்பணமாக கோயில் உண்டியலில் இடுவது, இன்னும் பல. அம்மா என்னை அழைத்துப் போனது அம்மாதிரி ஒரு சடங்கிற்காகத்தான். கன்னி தான பூஜை என்று சொல்லக் கேட்டிருந்தேன். பெரும் வசதி படைத்தவர்கள் தங்கள் வருகையை அறிவித்ததும் ஊரிலுள்ள பருவமெய்தாத சிறுமிகளைத் தயார்செய்வார்கள். தயார்செய்வது ஒரு தானத்திற்காக. அது வருபவரின் வாழ்க்கையைப் பொறுத்தது. எவ்வளவு பெரிய பிரச்சினையோ அவ்வளவு பெரிய தானம்.

“செனம் குளி மக்ளே. கால் பாதம் வெள்ளையா இருக்கணும் பாத்துக்கோ. அழுக்கு பிடிச்சிப் போயி கெடக்கு.”

“ஆமா, பொழக்கடைல கெடந்தா வெள்ளையா எப்பிடி இருக்கும்மா?”

“நம்ம பொழக்கடைல கெடக்கது நமக்குத்தான் தெரியும். வரவாளுக்கு அதெல்லாம் தெரியாதுலா? நீயே வந்து பாரு, புரியும்.”

“செரி, செரி, இன்னிக்கி மட்டும் சோப்புலாம் வாங்கிட்டு வந்திருக்க, செரியான ஆளாக்கும் நீ.”

“கடக்கார அண்ணன்ட்ட சொல்லி வாங்கிட்டு வந்தேன் மக்ளு. பின்ன, பூசைல கெடைக்கத வச்சிதான் பல கடன அடைக்க வேண்டியிருக்கு.”

“தலைய நல்லாத் தோத்தி விடும்மா, அன்னிக்கி இப்பிடிதான் ஓடிட்ட, தடுமம் புடிச்சிட்டு.”

“கொஞ்சம் வாய வச்சிட்டு சும்மாக் கெட, நேரமாச்சி. இந்தா, இந்த பாவாட சட்டயப் போடு.”

“இது யாருக்குள்ளது? அய்யே.”

“பல்ல ஒடச்சிருவம் பாத்துக்க. கெடச்சதே புண்ணியம். எத்தன கேள்வி கேக்காளுவோ ஒரு பாவாட சட்டயத் தரதுக்கு.”

பாவாடை சட்டை அணிந்ததும் என் கண்களில் மை தீட்டி விட்டாள் அம்மா. குங்குமத்தைக் குழைத்து நெற்றியில் சற்றுப் பெரிய பொட்டாக வைத்துவிட்டாள். ஒரு முழம் பிச்சிப்பூ. எனக்கு வெட்கமாகத்தான் இருந்தது. ஏனென்று தெரியாத ஒரு வெட்கம்.

கோயில் வாசலில் காத்திருந்த மேனேஜர் மாமா அம்மாவைப் பார்த்ததும் ஓடி வருமாறு சைகை செய்தார். என்னைப் பிடித்து இழுத்துக்கொண்டு ஓடினாள் அம்மா. அப்படி ஒரு பதற்றம். 

“இப்போ வந்திருவா அவ்வோ. மத்த பிள்ளையளெல்லாம் வந்தாச்சு. ஒனட்ட சீக்கிரம் வரணும்னு சொன்னேம்லா?”

“பிள்ளைய மாமி வீட்ல போயி கூட்டிட்டு வாரம்னேன். வேலைக்குப் போறால்லா, பிள்ள ஒரு வாயி கஞ்சிகூட குடிக்கல்ல.”

“அதொன்னுமில்ல, பாயாசச் சாப்பாடுல்லா இன்னிக்கு. பின்ன, என்ன கெடைக்குன்னு பாப்போம்.”

வரிசையாக உட்கார்ந்திருந்த ஐந்து சிறுமிகளுடன் சேர்ந்து நானும் அமர்ந்தேன். ஒவ்வொருவர் முன்னும் ஒரு சிறு பலகை போடப்பட்டிருந்தது. அருகே ஒரு தாம்பாளம். ஒரு சிறு துணிப்பை. உடன் இருந்த சிறுமிகளெல்லாம் சுத்தமாக ஆடையுடுத்தி மை தீட்டி வந்திருந்தார்கள். ஒருத்தி என் பக்கத்துத் தெருக்காரி. என்னைப் பார்த்ததும் வாயைப் பொத்திக்கொண்டு சிரித்தாள். அவளைப் பார்த்து மேனேஜர் மாமா தலையாட்ட சிரிப்பைக் குறைத்து அமைதியாக உட்கார்ந்தாள். தூரத்தில் மெல்லிய மேளச் சத்தம். மாமா பரபரப்பானார். 

“அவாள் வரும்போ எல்லாரும் எந்திச்சி வணக்கம் சொல்லி கையச் சேத்து வச்சி நிக்கணும், என்ன மக்களு?” 

நாங்கள் இருந்த சுற்றுப் பிரகார முகப்பில் நுழைந்தது மேளச் சத்தம். நடுவில் பட்டு வேட்டியும் தங்கச் சங்கிலிகள் சொலிக்கும் வெற்று மேலுமாக ஒரு தாத்தா வந்தார். அவர் பின் சோகமாக ஏதோ பிரார்த்தனை சொல்லியபடி வந்தார் ஒரு பாட்டி. இதே போல் ஆறு சோடிகள் வந்தார்கள். வரிசையில் கடைசியாக உட்கார்ந்திருந்த என் முன் வந்துநின்றார் அந்தத் தாத்தா. பாட்டி என்னைப் பார்த்ததும், “மாதாஜி, மா, மாதாஜி,” என்றபடி அழ ஆரம்பித்துவிட்டார். மேனேஜர் மாமா என்னைப் பார்த்துச் சிரித்தபடி நின்றார். அந்தத் தாத்தா அப்பாட்டியின் கையைப் பிடித்துச் சமாதானப்படுத்துவதைப் போல ஏதோ சொன்னார். பெருமூச்செறிந்து அமைதியடைந்த பாட்டி தாத்தாவுடன் சேர்ந்து நின்றுகொண்டார். பலத்த மணி அடித்தது. சோடிகள் எங்கள் ஒவ்வொருவர் முன்னும் அமர்ந்து கைகூப்பி வணங்கினார்கள். மாமா சொல்லியபடி நாங்களும் வணக்கம் சொல்லிக் கைகூப்பி நின்றோம்.

“எல்லாரும் பலகைல ஏறி நில்லுங்க மக்களு. தாம்பாளத்துல, என்னா? பாத்து நிக்கணும்.”

தாத்தாவும் பாட்டியும் என் கால்களில் மஞ்சள் நீர் விட்டுக் கழுவினார்கள். பாட்டி அழுதுகொண்டே இருந்தார். ஒரு வில்லை சந்தனத்தை எடுத்துக் குழைத்து என் பாதங்களின் மேல் பொட்டு வைத்தார் தாத்தா. பாட்டி அதன் மீது குங்குமப் பொட்டு வைத்தார். பின் என் கைகளிலும் கன்னங்களிலும் அதைப் போலவே செய்தார்கள். எனக்கு ஒரே வெட்கம். அம்மா சொன்னபடி மெல்லிய சிரிப்புடனே நின்றேன். ஒரு பெரிய மல்லிப்பூ பந்தை எடுத்து நான்கைந்து முழம் வெட்டி என் தலையில் சுற்றிச் சூட்டினார் பாட்டி. சிறு துண்டுகளை என் கை மணிக்கட்டுகளிலும் கால் பாதங்களிலும் சுற்றிக் கட்டினாள். மாமா என்னருகே வந்து நின்று அவர்களுக்குக் கேட்கும்படி ஹிந்தியில் ஏதோ சொன்னார். தாத்தாவும் பாட்டியும் அவர் சொன்ன ஒவ்வொரு வாக்கியத்திற்கும் என்னைப் பார்த்துக் கைகூப்பி வணங்கினார்கள். அழுகையை மறந்து எனக்குச் சடங்கு செய்வதில் மூழ்கியிருந்தார் பாட்டி. தாத்தா கண்காட்ட தன் கைப்பையைத் திறந்து ஒரு சிறிய துணிப்பையை வெளியே எடுத்தார். மாமா என்னருகே வந்து நெருக்கமாக நின்றுகொண்டார். தாத்தா அந்தப் பையின் சுருக்கை இழுத்துத் திறந்தார். பாட்டி அதிலிருந்து ஒரு தங்கச் சங்கிலியை எடுத்து என் கழுத்தில் அணிவிக்க, சுற்றியிருந்தவர்கள், ‘அம்மே பகவதி, தேவி பகவதி’ என்று முழக்கமிட்டனர். அடுத்ததாக ஒரு தோடு, நெற்றிச்சுட்டி, பின் சிவப்புக்கல் பதித்த ஒரு வெள்ளி ஒட்டியாணம், வெள்ளிக் கொலுசு. எனக்கு வெட்கம், வெட்கத்தை மீறி ஏதோ வெப்ராளம். அம்மாவிடம் ஓடிவிட வேண்டும் போலிருந்தது. அவள் மடியில் புதைந்து கிடக்க வேண்டும். அவள் மடியைத் துளைத்து அந்த இருட்டுக்குள் மறைந்துவிட வேண்டும். ‘அம்மே பகவதி, தேவி பகவதி’

சற்று நேரத்திற்கு என்ன நடந்ததென்று ஏதும் நினைவில்லை. மீண்டும் கண் மங்கித் திறந்தபோது, மாமா என் கைகளைப் பிடித்து உலுக்கிக்கொண்டிருந்தார். தாத்தாவும் பாட்டியும் முகம் மலர எனக்குத் தீபாராதனை செய்துகொண்டிருந்தார்கள். என் காலடியில் ஒரு நூறு ரூபாய் நோட்டுக்கட்டை வைத்தார்கள். ‘அம்மே பகவதி, தேவி பகவதி’ என்னிடமிருந்த வெட்கம் காணாமல் போயிருந்தது. என்னையறியாமல் நான் புன்னகை செய்தபடியிருந்தேன். ஆம், நன்றாக நினைவிருக்கிறது. அந்தப் புன்னகை! அது ஒரு தனி புன்னகை.

என்னை உட்கார வைத்து தலை வாழை இலை போட்டு, ஒன்பது கறிகளும், வடை பாயாசமும் என ஒவ்வொன்றாகப் பரிமாறிச் சாப்பிட வைத்தனர். அப்பாட்டி எனக்கு ஊட்டிவிட ஆசைப்பட்டு மாமாவிடம் கேட்க, மாமா சிரித்துக்கொண்டே தலையாட்டினார். 

வீட்டில் கொண்டுவிடும்போது அம்மாவிடம் ஒரு நூறு ரூபாய் நோட்டை நீட்டினார் மாமா.

“பெரிய எடமாக்கும் மக்களு. நூறு ரூவான்னா சும்மாவா? சவத்த ஒரு நகையாச்சும் தங்கத்துல போடுவானுன்னுலா பாத்தேன். அத்தனையும் பித்தள கேட்டியா? எப்பிடிதான் செய்வானுவளோ, தங்கம் மாதில்லா சொலிக்கு.”

அம்மா கண் நிறைந்து, “செரிண்ணே, ஒனக்குப் புண்ணியமாப் போட்டும். இனி வரும்போ சொல்லுண்ணே. எங்களுக்கு அம்மதான் கெதி பாத்துக்கோ,” என்றாள்.

“பின்ன, மொதல்ல ஒனட்டதான் சொல்லுவம் மக்ளே. செரி, வரட்டா, சோலி ஒருவாடு கெடக்கு” என்றபடி என் கன்னத்தைக் கிள்ளினார், “அதிர்ஷ்டக்காரியாக்கும், மாமா வரட்டா மக்ளே.” 

4

“எத்தான், பிள்ளைய எழுப்புங்கோ. நேரமாச்சி.”

“என்னமாம் செய்யி. என்ன விட்ரு.”

உறங்கிக்கொண்டிருந்தவனை ஆரத்தழுவி முத்தமிட்டு எழுப்பினேன். சலுவை வடித்த வாயுடன் மிரண்டு பார்த்தவன், “எம்மா, பெரிய வாகனம், எலுமிச்ச மால போட்டு சாமி வருகு,” என்றான். பகவதி அம்மையின் முகம் கண்ணில் தோன்ற, “ஆமா மக்களு, பரிவேட்டைக்குப் போனோம்லா, அதக் கனவு கண்டுருப்ப, எந்திரி, அம்ம சொன்னம்லா, வேசம் போட்டுட்டுக் கோயிலுக்குப் போணும்னு, எந்திரி” என்றேன்.

“ஐ, சூப்பர். எனக்கு அம்மன் வேசம், அம்மன் வேசம்..”

அவனைக் குளிப்பாட்டி, துடைத்து, சாம்பிராணிப் புகையிட்டேன் . 

“என்னம்மா, சாமிக்குப் போடது மாதி போடுக?”

“அது, அம்ம சொன்னேம்லா, வாரவோ நம்மகிட்ட இருக்கும்போ நாம சாமி மாதியாக்கும். சவரி மலைக்கு மால போடும்போ அப்பா இருப்பால்லா, அப்பிடியாக்கும்.”

“நெறைய பைசா கெடைக்குமாம்மா? எனக்கு ஸ்கூல் பேக் வாங்கித் தருவேன்னு சொல்லிருக்க, பாத்துக்கோ.”

“வாங்கித் தருவேன் மக்ளு. நீ ஒழுங்கா சொன்னதச் செய்யணும், என்னா? ஒம் பேரக் கேட்டா என்ன சொல்லுவ, சொல்லு பாப்பம்.”

“பௌதியம்மைதான? ஈசிம்மா, எம்பேரு பௌதியப்பன், ஆனா பௌதியம்மைன்னு பொய் சொல்லணும்.”

“கெட்டிக்காரன், மறந்துராத மக்ளே. அவாளுக்கு தமிழ் தெரியாது, ஆனாலும் சுத்தி எல்லாரும் நிப்பாவல்லா, மானக்கேடு ஆயிரக்கூடாது பாத்துக்கோ.”

“செரிம்மா, பௌதியம்மை, பௌதியம்மை..”

பட்டுப் பாவாடை சட்டை போட்டு, மையிட்டுப் பூச்சூட்டி விட்டபோது வெட்கத்தில் குழைந்து நின்றான் என் மகன். அவனாக நின்றது நான், நானேதான். எனக்குள் அந்த ‘அம்மே பகவதி, தேவி பகவதி’ முழக்கம். மேலத்தெரு கொமரியண்ணன் வந்து அவனை அழைத்துச் சென்ற பின் விளக்கின் அருகே அம்மையை நினைத்துக் கண்மூடிக் கிடந்தேன். என் உடல் அன்று போல் நடுங்கிக்கொண்டிருந்தது. 

5

“மக்களு, வீட்டுல உண்டுமா மக்களு,” என்றவாறு வீட்டு வாசலில் வந்துநின்றான் கொமரியண்ணன். அவனது குரல் மாதிரியே இல்லை. அத்தான் அவனைக் கண்டுகொள்ளாமல் திண்ணையில் தலைகுனிந்து உட்கார்ந்திருந்தார்.   

பதற்றமாக ஓடி வெளிவந்து நின்று, “என்னண்ணே ஆச்சி?” என்று கேட்டேன்.

“பெரும் கொழப்படி ஆயிருக்கப் பாத்து. ஒம்மவன் பண்ண காரியத்துனால. ஆனா, அப்பிடியும் சொல்லக் கூடாது, நம்ம கைல என்ன இருக்கு? ஆமா, ஆமா… ”

என் மகன் இறங்கி ஓடிவந்து என் சேலை நுனியைப் பிடித்துக்கொண்டான்.

“ஒன்னுல்ல மக்ளு, என்னாச்சி, பேர மாத்திச் சொல்லிட்டியோ?”

“பேரெல்லாம் அழகோல சொல்லிட்டானே. நானே பொம்பளப் புள்ளன்னுதான் நெனச்சேன். துளி வித்தியாசம் தெரிலயே.”

“பொறவு என்னண்ணே?”

கொமரியண்ணன் என் மகனது முகத்தைப் பார்ப்பதும் என் முகத்தைப் பார்ப்பதுமாக ஒன்றும் பேசாமல் நின்றான். 

“அண்ணே, என்ன பாக்க? என்னாச்சிண்ணே?”

எங்களைப் பார்ப்பதைத் தவிர்த்து, மெல்ல பேச ஆரம்பித்தான்.   

“எல்லாம் முடிஞ்சி அவ்வோ சாஷ்டாங்க நமஸ்காரம் பண்ணுகா, இவன் அசையாமத்தான் நின்னான். அவ்வோ எந்திச்சி கண்மூடி ஏதோ மந்திரம்லாம் சொல்லிட்டு இருக்கா. திடீர்னு, இவன ஆளக் காணல, எப்பிடித்தான் கண்ண தப்பிப் போனானோ தெரில.”

“என்னண்ணே சொல்லுக? எங்க போய்ட்டான்?”

“நான் கோயில் பூரா ஓடுகேன், எங்கயும் காணல. நல்லவேள அவ்வோ மந்திரம் சொல்லிட்டே இருந்தா. பயலத் தேடிக் காணாலயேன்னு திரும்பி வாரேன். கோயில் கெழக்கு நடைக்கப் பின்னால தென்ன மர மூட்டுல செல மாறி நிக்கான். எனக்கு உயிர் போய்ட்டு வந்தமாறி இருந்து. பக்கத்துல போயி பாக்கேன், அத எப்பிடிச் சொல்ல? பயலுக்கு என்னமோ எழுதியிருக்கு கேட்டியா?”

அண்ணன் சொல்லட்டும் எனக் கூர்ந்து நின்றேன். எனக்குத் தெரியாதது என்ன சொல்லிவிடப் போகிறான்!

“கொஞ்சம் தண்ணி கொண்டா மக்களே.” கொமரியண்ணன் படபடத்து முகம் வியர்க்க நின்றான். மீண்டும் என் முகத்தைப் பார்த்தவன் என் மகனைத் திரும்பிப் பார்த்தான். எங்கள் இருவர் முகங்களில் பார்த்தது அவனுக்குப் புரிந்ததோ என்னமோ!

“இத்தன வருசத்துல இப்படி ஒன்னு நடந்ததேயில்ல மக்களு. எனக்கே ஒடம்பு நடுங்கிட்டு. தென்ன மரத்தடில நிக்கான் பிள்ள. ஒரு அனக்கம் இல்ல. கண்ணு முழிச்சிதான் இருக்கு. அம்மைக்க சந்நிதிய அப்பிடி ஒரு பார்வ. ஒரு சிரியும்கூட. நாம் போயி நிக்கதுகூட அவனுக்குத் தெரியல பாத்துக்கோ. அப்போதான் பாத்தேன், பிள்ள அவன அறியாமலே ஒன்னுக்குப் போய்ட்டான். பாவாட பூரா ஈரம். அதோடயே நிக்கான். நான் கூப்ட்டு பாக்கேன், சொட்டு அசையல்லயே. பொறவு என்ன செய்ய? அம்மைய நெனச்சிட்டு பிள்ளயத் தூக்கி என் தோள்ல வச்சிட்டு ஓடுறேன்.”

கொமரியண்ணன் பெருமூச்சு ஓயாமல் கண்கலங்கி நின்றார்.

“சத்தியமா  சொல்லுகேன் மக்களு. இந்த மாறி பூச நடந்தாதான் எங்களுக்கும் பைசா. பிள்ளேலுக்கு எதாம் சேத்து வைக்கணும்னா எவனோ ஹிந்திக்காரன் கொண்டாந்து கொட்டுனாதான் உண்டும். கூட்டிட்டுப் போற பிள்ளேலுக்க அம்ம மாருக்கு ஐநூறோ ஆயிரமோ குடுத்தாப் போறும். தங்கமே கெடச்சாலும் கவரிங்னுதான சொல்லுவோம். அவ்வோ கையெடுத்துக் கும்புடும்போ மனசு குறுகுறுப்பாதான் இருக்கும்… அது… நம்ம….“ என்று முடிக்க முடியாமல் ஆழ ஆரம்பித்தார். அத்தான் எழுந்து வந்து அவர் அருகே நின்றார்.

மகன் என் சேலைக்குள்ளாக மறைந்து நின்றான். அவனுடல் நடுங்கிக்கொண்டிருந்தது.

“இது அவனுக்கு வந்து சேந்தது மக்களு. என்னால இதத் தொட முடியல பாத்துக்கோ” என்று சொல்லி ஒரு துணிப்பையை நீட்டினார். அத்தான் சலித்தபடி எழுந்து புறவாசலுக்குச் சென்றார்.

துணிப்பையை வாங்கி அதனுள் கைவிட்டுக் கிடைத்ததை அள்ளி கொமரியண்ணனிடம் நீட்டினேன். அவன் இல்லை, இல்லையெனத் தலையாட்டினான்.

“எண்ணே, நாம்லா தாரேன், வாங்கிட்டுப் போ,” என்றேன்.

பணிந்து கை தாழ்த்தி வாங்கிச் சென்றான்.

6

“இன்னியோட போட்டும், இனி மேலாட்டு இப்பிடி செய்யலாம்னு நெனைக்கக்கூட செய்யாத, பாத்துக்கோ.”

“நா எதுக்குப்பா இனி செய்யப்போறேன். எனக்கு வேண்டியது கெடச்சாச்சி, போறும்.”

“சீ, வெறும் ஆயிரம் ரூவாக்கா வேண்டி… எம்புள்ளய என்னல்லாம் செய்ய வச்சிட்ட நீ? அந்தப் பையத் தூக்கி வெளிய எறிட்டி மொதல்ல.”

“வெறும் ஆயிரமா? அந்தப் பைக்குள்ள என்ன இருக்குன்னு தெரியுமா? இரிங்கோ, பிள்ள ஒறங்கிட்டானான்னு பாத்துட்டு வாரேன்.”

மகன் நிமிர்ந்து உறங்கிக்கொண்டிருந்தான். அவன் முகத்தில் மாறாது நிலைகொண்ட ஒரு புன்னகை. கைகளும் கால்களும் மெல்ல நடுங்கிக்கொண்டிருந்தன. அவனை எடுத்து என் மடியில் கிடத்தி, வாய்விட்டு, ‘அம்மே பகவதி, தேவி பகவதி’ என்றேன். அத்தான் முறைத்துப் பார்த்தபடி எதிரே வந்து நின்றார்.

“எத்தான், என்ன சொன்னியோ, வெறும் ஆயிரம்னா? அந்தப் பைல இருக்கது பூரா தங்கமாக்கும்.”

“என்னட்டி சொல்லுக? நெசமாவா? தங்கமா?…. அதுக்கு என்ன! அடுத்தவன்…”

“இருங்கப்பா, அதெல்லாம் அம்மைக்கா சுட்டி செஞ்சு கொண்டு வந்திருப்பாவோ. ஆனா, பைசாக்கும் தங்கத்துக்குமா எம் புள்ளைய அனுப்புனேன்னு நெனச்சியோ?”

“பின்ன?”

“நான் மொத தடவ போகும்போ ஏழு வயசுன்னு நெனைக்கேன். எச்சிப் பாத்திரம் கழுவுற வேலக்காரி தானப்பா? ஆனா, அன்னிக்கி அந்த பூஜ நடந்தப்போ என்னல்லாம் நடந்து தெரியுமா? நகையெல்லாம் சுத்தத் தங்கம், தகதன்னு எரியுது. ஆனா, என் ஒடம்பு அதையும் மீறி சொலிச்சுது பாக்கணுமே. கை, கால், என்னச் சுத்தி ஒரே வெக்க, ஆனா எனக்கு உள்ளுக்குள்ள குளுகுளுன்னும் இருக்கு. நான் என்னன்னு யோசிக்கேன், ஒன்னும் மனசிலாவல. நெத்தில அந்தப் பாட்டி குங்குமப் பொட்டு வச்சி விடுகா, நா அப்பிடியே மெதக்கேன். திடீர்னு நிமிர்ந்து வளந்து பெருசாய்ட்டே இருக்கேன். அவா என் முன்னாடி இருந்து ஒரே அழுக. காலப் புடிச்சிட்டு விட மாட்டுக்கா. நான் அவளத் தூக்கி என் மடில கெடத்தி, ‘போட்டும் மக்ளே, போட்டும்’னு சொல்லுகேன். அவ என் சொந்தப் பிள்ளன்னு, சுத்தி நின்ன எல்லாருமே எனக்கப் பிள்ளயன்னு, அம்மான்னு கூப்புடுக எல்லாரும் எனக்கப் பிள்ளயன்னு, எல்லா உசிருவளும் எனக்கப் பிள்ளயன்னு, என்னெல்லாமோ எனக்குள்ள நடந்தது. இவ்வோல்லாம் எதுக்கு என்னத் தேடி வரணும்? அப்போ நாந்தான எல்லாத்தயும் பாத்துக்கணும்? அப்பிடியே அவளக் கெட்டிப் புடிச்சு உச்சில முத்துகேன். அவ அழுக நின்னு சிரிக்கா. பொங்கிப் பொங்கிச் சிரிக்கா. என் மேல பூப்பூவா தூக்கிப் போட்டு பாடுகா. நா கடல் நடுல ஒரு பாறைக்க மேல நிக்கேன். கண் மூடி அப்படி ஒரு நெலைப்பு. அப்படி ஒரு தவம். அவ போடுக பூவெல்லாம் என் காலுல வந்து விழுகு. தீயா எரிஞ்சி நிக்க என் முன்னாடி அவ்வோ ரெண்டு பேரோட கண்ணீர் அபிசேகமா வழியுது. நெறஞ்சுப் போயி நான் ‘போட்டும் மக்ளே, போட்டும் மக்ளே’ன்னு சொல்லிட்டே கண் மூடி நிக்கேன். சடங்கு முடியும்போ பாக்கேன், ரெண்டு வேரும் சாஷ்டாங்கமா எம் முன்னாடி விழுந்து கெடக்கா. சும்மா ஒன்னும் அப்பிடி விழுந்துற முடியாது பாத்துக்கோங்கோ. பெருசாகிட்டே இருந்த நா அந்த நொடில கரஞ்சு காணாமப் போய்ட்டேன். என் கை, கால், நகை, பொட்டு, எதையும் காணல. வெக்க, குளிர்ச்சி எதயும் காணல. நான் எங்க இருக்கேன்னே தெரில, ஆனா, எங்கும் இருக்கேன்னு தோணிச்சு. கண்ணத் தொறந்து பாக்கேன், எங்க அம்மைக்க மடில கெடக்கேன். என்னிக்கும் இல்லாத மாதி அன்னிக்கி எங்கம்ம என்னப் பாத்து பயந்துபோய் இருந்தமாதி இருந்தா. அதோட சரி, அன்னிக்கி தொட்டு கடைசி வர எங்கம்ம எம் மொகத்தப் பாத்து பேசுனதேயில்ல…”

அத்தான் அசைவின்றி என் கண்களை உற்றுப் பார்த்திருக்க, மகன் நான் சொன்னதையெல்லாம் கேட்டதைப் போல அதே நீங்காப் புன்னகையுடன் உடல் நடுங்க என் மடியில் கிடந்தான்.